Thursday, November 25, 2010

பிட் நோட்டீஸ்...

போர் இல்லை
குருதி கலந்த ஆறு
இங்கு ஓட இல்லை
ஷெல் என்பது யாருக்கும் தெரியாது
கற்பழிப்பு, வன்புணர்ச்சி
பெரிதாய் இல்லை
யாரும் பிய்த்து எறியவில்லை
பூமாலையை
புத்தகத்தில் அரிப்பவனுக்கு
காகிதத்தில் சொரிபவன்
எழுதும் தாள்களில்
பிணங்களின் நாற்றம்

*****
 
பூனையா அல்லது
காந்தாரியா
குறியீடு எது?

*****
 
உதிரும் நாளின்
கணக்கு வைத்திருக்கும்
உலர்ந்த மணித்துளி

*****
 
விரல்களின் நுனி
வடக்கு நோக்கும்
பயணம் பல திசைகளில்

*****
 
கொய்த கைகளில்
வைத்திருக்க முடியவில்லை
விரல்களற்ற காற்று...

*****
 
மூடிய திரைக்குள்
காட்சிபெட்டகங்கள்
திறந்து பார்க்க  ஒன்றுமில்லை

****

உதட்டில் வைத்து
எச்சரிக்க ஓராயிரம் விரல்கள்
கேட்பாரில்லை
மரங்கள்

*****

பரண்களில் வரங்களும்
கொலை ஆயுதங்களும்
எலிப்பொறிக்கம்பியில்
செருகப்பட்ட கடவுள்

*****
உரசிச்செல்லும் மேகங்களின்
வழி உறிஞ்சத்தெரியாமல்
வேர் விட்டு நீர் தேடும்
மரங்கள்

*****
 
துண்டு பீடியின்
நாறிய முனை பற்றத்
தயங்கி விரையும் விரல்கள்

*****

Friday, November 19, 2010

பூங்கதவின் மணிக்குமிழ்...

கதிர மரங்களை குடைந்து செதுக்கிய ஒற்றை ஸ்தனக்காரியின் பெருமூச்சுகள் அடர்ந்து பெருகும் துளையிடப்பட்ட மூங்கில் காடுகளை கடக்கும் ஒலி புகா இலைகள் வேய ஆரம்பித்து, கிழக்கின் மடியில் கிடந்த சந்தியின் குருதியில் தோய்ந்த ஜனனத்தின் ஓசையை என்திசையும் எதிரொலிக்க அடுக்கடுக்காய் தேய்ந்து வளர்ந்து என்திசை சமுத்திர வெளிகளில் ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓலத்தில், ஆழாழியின் தாலாட்டில் பொதிந்து இருக்கும் பதினைந்தாம் இலக்கமிடப்பட்ட இரத்னப்பேழை திறந்தபோது தெறித்து ஓடிய பரல்களின் சிரிப்பில்,சினுங்கலில், ஒப்பாரியில் பழங்கள்ளாய் ஊறும் தோல் போர்த்த சப்தங்கள் மயக்கத்தின் உள்ளங்கைக்குள் இருக்கிறது இன்னும் பிரிந்து பிரிந்து ஊர்ந்து கொண்டிருக்கும் ரேகைகளாய் வளைந்து நெளிந்து மயிலிறகு ஜன்யங்கள் பல. மாயாமாளவகௌளை... அரிச்சுவடி...வித்யாப்யாஸம்... கண் திறந்து பார்த்த போது உச்சிமோந்து, முடிகோதி, விரல் பிரித்து நீவி, மனசு தடவி, அணைத்துக் கொண்ட உடம்பெங்கும் பால் ஊறும் எட்டுமுலைக்காரி...


சுடுநீர் பொசுக்கிய தடங்களை பீலிகள் அணிந்த விரல்களால் துடைக்கும், பெருமுலைக்காரியின் நாபியின் துளையில் தொடுத்திருக்கும் ஒற்றை நரம்பு தீண்ட தீண்ட வர்ணம் மாறி திறக்கும் சப்த மண்டலங்களின் கதவுகள், மணி பூண்ட குமிழ்கள் திருக திருக, முறுக்கேறிய பிருடைகளின் விடைப்பில் பற்றி எரியும் தீ நாக்குகள் சுழன்று சுழன்று எரிக்கும் கற்பூரமாய் நாறும் கமலக்கண்ணனின் வாயமுதம் தோற்கும் சுகந்தங்களின் பேருருவாய் எழுந்த நீர்விழ்ச்சியென நீரெழுச்சியென இரண்டு தோற்றம் தரும் இந்த பாடல்... மாயாமாளவகௌளையில் கொஞ்சம் பிருந்தாவன சாரங்காவின் தீற்றல்கள் தெரியும் காந்தார மயக்கம். மறுபடியும் ஒரு பழகிய வனவிலங்காய் வால் குழைத்து உருமாறும் சாதகபட்சியென, இளையராஜா விரல்கள் மேவிட... அடைத்த காற்று ஊதி கம்பிகளை அதிர வைத்து நிரப்பும் காற்றுப்பைகளில் இருந்து சிதறும் கொலுசு மணிகளின் சினுங்கலென குளிர் நீர்த்தாரைகளின் ஊற்றுக்கண்கள் விழித்து கிடக்கும் பொய்கையில் மிதக்கும் தெப்பம், நிழல்களில் வரும் இந்த பாடல், புதிதான குரல்... இசைவழி வந்தவன் பொறுக்கிக் கொண்டு வந்து தேர்ந்த சுவரமுத்துக்களை கோர்த்து பழகிய பயிற்சி.

தீபன் சக்ரவர்த்தி, உமாரமணன் இருவரின் குரலும் ஒரு மஹோன்னதமான ஒலிக்கலவை... செம்புல பெயல் நீர்... போல இரண்டும் இனைந்து, கலவியில் ஆடும் கூத்து  சர்ப்பங்கள் நிமிர்ந்து உயர்வது போல ரம்மியமாய், ஆச்சரியமாய் இருந்திருக்கிறது ஒவ்வொரு முறை கேட்கும்போதும்... பாடலில் ஆரம்பத்திலிருந்து உள்ளே நுழையும் போது அர்த்த மண்டபத்தின் இருட்டுக்குள் அழைத்து செல்லும், வழிநடத்தும் ஸ்வரங்களில் வேய்ந்த பந்தல் அது. பாரம்பரிய இசையின் அங்க லட்சனங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு சீரிய அப்பழுக்கற்ற ஒலி ஓவியங்கள்... ரவி வர்மாவின் ஓவியங்களில் இருக்கும் தைலங்களின் புராதனம் கலந்தது போல தூரிகைகளால் அல்லாது திமிறு, மத்தகம், தந்திகள், நரம்புகள் கொண்டு  வரையப்பட்ட அரூப ஓவியங்கள்... இசையும் இசைப்பவனும் வேறு வேறு என்று சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்... இசையும், இசைப்பவனும், கேட்பவனும் கூட ஒன்றாகி விடும் ஒரு மூக்கூடல் இது... இண்டர்லூடாய் வரும் இசை வயலினில் ஆரம்பித்து, புல்லாங்குழல் வந்து, நாதசுவரத்தில் தொடரும் ஒற்றைச் சங்கிலியில் கோர்த்த மழை நீர், சுனை நீர், இளனீர், பதனீர் போல அடுக்கடுக்காய் சுவை சேர்க்கும் இந்த பாடல், இளையராஜாவின் மிகமுக்கிய பாடல்.

இந்த பாடலின் தனித்தன்மைகள் அனேகம், குரல்கள், ஒலிக்கலவை, வரிசைக்கிரமம், கட்டுமானம் என்று இது இளையராஜாவின் ஏனைய பாடல்களில் இருந்து தனித்து நிற்கிறது. இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிக முக்கியமான இடத்துக்கு உயர்ந்தார். அபத்தமாக இருக்கும் பாடல்களின் காட்சி அமைப்பு இந்த பாடலை எந்த விதத்திலும் களங்கப்படுத்த முடியாமல் ஒரு ஜுவாலாமுகியாய் இருந்திருக்கிறது பெரும்பாலான நேரங்களில். இளையராஜாவை மிகவும் ரசிப்பவர்கள், வியப்பவர்கள், துதிபாடுபவர்கள் இந்தப் பாடலை குறிப்பிடாமல் இருப்பதில்லை தங்கள் சம்பாஷனைகளில்.

கதிர, ஒதிய, மூங்கில், ஆச்ச மரங்கள் அடர்ந்த தோப்பில் வெயில் வராது, எப்போதும் குளிர், அடர்ந்த மரங்களின் செழிப்பில் சொருகியிருக்கும் பெயரறியா பறவைகளின் கீச்சொலிகள் என ஒரு வனராஜனாய் எனக்குத் தெரியும் இளையராஜாவின் இந்த பாடல்.



அந்த பாடலின் லிங்க்:http://www.youtube.com/watch?v=mab2DPwCu9Y

Wednesday, November 17, 2010

குறுமணல்...

முயங்காத இரவுகளின்
தனிமையில்
அம்மை கொப்பளங்களாய்
முளைத்த நட்சத்திரங்கள்

****

பரனில் இருந்து இறக்கிய
அப்பாவின் மரப்பெட்டியில்
பழைய புகைப்படம் ஒன்றில்
சிரிக்கும் அம்மா அல்லாத யாரோ

****

அடுக்களையில் ஒழுகும் நீர்
பிடிக்க வைத்த பாத்திரத்தில்
ஒரு பருக்கையை
இழுத்துக்கொண்டிருக்கும் எறும்புகள்

****

தடித்த உதடுகளில்
பொருந்தி எரிகிற சிகரெட்
குறுநகையில் செருகியிருக்கும் வன்மம்


****

கொலைபுரிந்தவனின்
உறக்கத்தில் செருகியது
இறைஞ்சும் விழிகள்


****

கைவிடப்பட்ட வீட்டின்
சிமெண்ட் தரையில்
பதிந்திருந்த காலடித்தடம்

****

ஆற்று மணலை அள்ளும்
உலோகக் கைகளில் சிக்கும்
நவமக்கள் தாழிகள்

****

Tuesday, November 16, 2010

நோக்கு...

பெயரில்லாமல்

முகப்பு இல்லாத சந்து ஒன்று
யாரும் தராது
தானேத் தேடி புசிக்கும்
நாய் போல
மெலிந்து கிடந்தது
யாரும் அடையாளப்படுத்தாமல்
தெரிந்து கொள்ளமுடியாது
நீண்டு நெளிந்து செல்லும்
அதன் தன்மையில்
எங்கிருந்தோ
ஆரம்பித்து
எங்கோ
கொண்டு செல்லும்
நோக்கம் இருந்தது
அல்லது
பெருவழியில் கலக்கும் அது
பயணங்களை நீட்டுவிக்கும்
குணத்தை கொண்டிருந்தது
மிதித்து கடந்த பாதங்கள்
உடைக்க உடைக்க
குமிழ்கள் திறந்து
பெருகி வழியும் சீழில்
எல்லோரும் கழித்துச்
சென்ற புண்களின் வீச்சம்

மோஹனப்புன்னகை ஊர்வலமே...

அகண்ட தெருக்களில் உருளும் தேர்ச்சக்கரங்களின் மசி அப்பிய கடையாணிகளென தாங்கி நிற்கும் சப்தகதிகள் பதுமைகள் மேல் நின்று கொண்டிருக்கும் மண்டபத்தேர் தாண்டி நீண்டு கொண்டிருக்கும் ஒற்றைத் தந்தியின் ஸ்ருதி வளர்த்த வடம் பற்றி இழுக்க நகராமல் நின்ற தேர்சக்கரங்களின் மரக்கால்களில் துளிர்விட்ட இலைகளில் இருந்து உதிர்ந்த ஒற்றை சருகு அடியில் இருந்து அகற்ற நகர்ந்த கதையை பாடியவர்களின் பக்தியில் இல்லாத கடவுள், முயங்கி களைத்த நிமிடங்களின் ஆசுவாசத்திற்கு அழைக்கும் பாட்டில் மட்டும் உறைவானோ அல்லது முக்கண்ணனின் சிரம், கரம் பற்றிக் கொள்ள தன்னுள் சேர்த்துக் கொண்டவனை தன்னை ரட்சிக்க அழைத்தவனை ஆரத்தழுவி தேற்றுவானோ என்ற சந்தேகங்களின் ஈக்கள் மொய்க்கின்ற பறிக்கப்பட்ட தடாக மலர்களின் விழியில் இருந்து சொட்டுவது தண்டுகள் உறிஞ்சி வைத்து துப்பும் நீரா அல்லது தேனா என்று தெளிவதன் முன்னம் சிந்தை குளிர்ந்த கடவுள் இரங்கி அளித்த வரங்களில், சொல்ப குறைவுடன் முழுமை தந்த சுநாதங்களின் மாத்திரை அளவில் ஏறி இறங்கும் பயணங்களின் இறுதியில் அடைவது வைகுந்தனின் பாதகமலங்கள் தானோ.


கடவுளை மெய்பிக்க வந்த உண்மைகளில் பக்தியும், காதலும், காமமும் தெளிதாயின. அலங்கார கட்டுக்களில் இருந்து சற்றே விலகி, மோன நிலைச்சமன்கள் இட்டு நிரப்பிய கோப்பையில் வழியும் இசை சார்ந்த அளபெடைகளின் மேலே நகர்ந்தும் ஊர்ந்தும் செல்லும் சர்ப்பமென வளர்ந்து மின்னும் பளபளப்பில் கிறங்கி அதனுள் வழுக்கிச்செல்லும் 72 அடுக்கு மாளிகைகளுக்குள் எந்த அறையில் ஒளிந்து இருக்கும் பெயரறியா சப்தங்களும், மோனங்களும்? ஏறவும் இறங்கவும் ஆறு படிகளை கொண்ட பாதையில், தத்திச் செல்லவும், தாண்டிச் செல்லவும், ஓடிச்செல்லவும், எல்லாம் வகையிருக்கும் அதன் கைப்பிடிக்கட்டைகளின் 18 எண்ணம், தொட்டு தடவி உணர்ந்த விழியற்றவனின் தொடுபுணர்தலில் இருந்து ஜனித்த குழந்தை பேரழகியென குழிவயிறும், குவி ஸ்தனங்களும், கோபுர முலைகளுமாய் நெற்றித்தடத்தில் கீற்று நிலாவுமாய் சிறு நகை, பெருவிழி, துளை நாசியென தொன்மங்களின் படிம நிலைகள் கடந்து அதே சுகந்தத்தில் இழுவும் மயிற்பீலியின் வர்ணங்கள் இட்டு நிரப்பிய கிண்ணங்களில் நிறைந்து, வழிந்து, தெறிக்கும் சுத்த சப்தங்கள் முனகிச் செல்லும் பாட்டில் ஸ ரி க ப த ஸ வும் ஸ த ப க ரி ஸ வும் சீண்டிச் செல்லும் கம்பிகளில் விழுந்த காதல், இளையராஜாவின் கையில் பட்டு இப்படியானது. “ஒரு ராகம் பாடலோடு காதில்”

ஆனந்தராகம் படத்தில் அமைந்த இந்த இருகுரலிசையில் இருக்கும் குரல்கள், பிரபஞ்சம் பதுக்கி வைத்த பேரழகிகளின் மேல் கொண்ட காமமும், காதலும் இன்னும் மிச்சமிருக்கிற ஆத்ம மோகத்தில் இருந்து மீட்கப்பட்ட நரம்புகளினால் கட்டப்பட்ட வாத்தியங்களில் தோன்றிய மென்பரவல்கள் இந்த இசை. ஏசுதாஸின் குரலும், ஜானகியின் குரலும் ஓலைக்கொட்டானில் பொத்திவைத்த சில்லுக்கருப்பட்டியில், கொஞ்சம் தினைமாவும், கொம்புத் தேனும் கலந்தது போன்ற வழுக்கும், மயக்கும் மெட்டு. காதலும், மெல்லிய பாலாடை காமமும் மிதந்து பறக்கும் இறகென மனசுக்குள் வந்து அமரும் இடங்கள் அனேகம். மோஹனம் பக்தி, காதல் என்ற இரண்டும் சமநிலையில் நிறுத்த பிரகடனிக்கப்பட்ட முதல் தண்டோரா இந்த மோகனம். எல்லோரும் சுலபமாய் கையாண்ட ஒரு ராகம், எல்லோரையும் மயக்கிய ராகம்... கேவிஎம், எம்எஸ்வி என்று தேய்த்து தேய்த்து பார்க்க பூதங்களை அல்லாது தேவதைகளை பிரசவித்த விளக்கு இந்த மோகனம், அதனால் தானோ என்னவோ மோஹனத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் காதலும், பக்தியும், காமமும் சங்கமிக்கும் திரிவேணியாய் இருக்கிறது எப்போதும்.

இளையராஜாவின் மிக இனிமையான பாடல்கள், அதன் ஸ்வரகட்டுமானங்களில் உள்ள நவீன கையாள்தலிலும், ஆர்க்கிடெக்சரிலும் தான் இருக்கிறது. பாடத் தெரிந்தவர்கள் அல்லது ஆசைப்படுபவர்கள்... ஒரு ராகம் பாடலைப் பாடி பார்க்கலாம்... அதன் சங்கிலித் தொடர் போல ஆரம்பிக்கும் பல்லவி நம்மை புதுவிதமான இசை அனுபவத்தைத் தரும். மெய்யாகவே சொல்கிறேன்... இந்த பாடலில் சிவக்குமாரின் சின்ன அசட்டுத்தனமும்... ராதாவின் அலட்சிய அழகும்... மீண்டும் மீண்டும் கேட்க, பார்க்கத் தூண்டிய பாடல்... பாலாவிற்கு மிகவும் பிடித்த இந்த பாடலை என்னை திரும்ப திரும்ப பாடச் சொல்லி மெருகேற்றுவாள் என் ரசனையை. ” நனுபாலிம்ப நடசி வொச்சிதீவோ” என்று ராமனை அழைத்த தியாகராஜரின் கதியில் இருந்து சற்றும் குறைவில்லாத ரசனையும், காதலும், மென்காமமும் நிறைந்த இந்த பாடல் மோஹனப் பந்தல் விரிக்கும் குளிர் நிழல்.

Tuesday, November 09, 2010

ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ்ஸ்டாண்ட்....

அனல் பூக்கள் பிடுங்கப்பட்ட
இரவின் விளிம்பில் கிடந்தது அந்த வீதி
முழுதாய் எடுத்துவைத்தும்
எடுத்து வைக்காமலும் கிடக்கும் தேனீர் கடை
பெஞ்சுகளில், நாளை சம்பாஷிக்கப்படும்
வார்த்தைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது
பரோட்டாக்கடை வாசலின் முகப்பில் காத்திருந்த
பூனையை ஏய்த்து உறங்கிய எலிகளின்
கனவுகளில் முன்கையில் நீண்ட நகங்களுடன்
பிராண்டும் வறட்டொலி
முடிதிருத்தகம் கழித்த முடிகளின் உதிரியில்
எழுதப்பட்டிருக்கும் மரபணுவில்
மிஞ்சியிருக்கும் தொன்மையின் அடையாளங்கள்
நீர்த்து போய் கிடக்கும்
நிறுத்தத்தில் உறங்குபவரின் உறக்கத்தின் மீது
ஏறி இறங்கும் பேருந்தின் சத்தம்
ஜன்னலோர இருக்கைகளில் உறங்காமல்
விழித்திருப்பவரின் விழிகள்
கொண்டு வந்த கனவுகளின்
எண்ணெய் இடாத பற்சக்கரம்
பொடித்து நிற்கிறது
கழிவறையில் முயக்க முனகல்களின் வீச்சம்
கடன் சொல்லிப்போறவனை
ஜன்மம் வரை துரத்தும்
எல்லாம் உறுத்து நோக்கி கொண்டிருக்கும்
குற்றவிழிகளுடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ்ஸ்டாண்ட்

Monday, November 08, 2010

மனுஷிகள்...

தலதீபாவளிக்கு
மாப்பிள்ளைக்கு ஒரு பவுன் சங்கிலியாவது
போட வேணாம்?! என்றாள் சுந்தரிபெரிம்மா
பிசையும் கையை பிடித்துக்கொண்டாள்
இப்போ காத்துளையெல்லாம்
புண்ணாப்போச்சு என்று
வேப்பங்குச்சி சொருகி கொள்கிறாள் பெரிம்மா!!

***
ரெண்டு நாளா கஞ்சியே
குடிக்கலையாம்ல இந்த பய
என்று பதறிய அப்பத்தா
பழய சோத்த பிழிஞ்சுவச்சு
பச்ச வெங்காயம் கொடுத்தவ
இந்தா வாரேன்னு போயி
கொண்டு வந்த பனஒலைக்குள்
நுங்கும் இருந்துச்சு

***

ஏடி என்னடி பன்னுதே
சின்னவனுக்கு காயுதாமே உடம்பு
ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகலியா
கசாயம் வச்சுக் கொடுத்தியா
புரியாமல் முழித்தவளை விட்டு
குழந்தையை தூக்கிகொண்டு
இருக்கிற ஒன்றிரண்டு
பாத்திரங்களில் தேடினாள்
ஒத்தவிளக்கு முனீஸ்வரன் கோயில்
போயி துன்னூறு கொண்டு வா
உடம்பெல்லாம் பூசிவிட்டா
காலைல எல்லாம் சரியாப்போவும்

***

Saturday, November 06, 2010

அப்பா என்பது குணம்...

அன்று வெளிச்சம் குறைவாய் இருந்தது, காலையில் மணி எத்தனை என்று பார்த்த போது தான் உரைத்தது, எட்டரை மணி... தூங்கி எழுந்து காபி குடித்து விட்டு மறுபடியும் தூங்கியது ஞாபகம் வந்தது, யாரும் உசுப்பவும் இல்லை... பாஸ்கர் காலையிலேயே எங்கெயோ போயிட்டான் போல, காணவில்லை... நேற்று இரவு வந்தவுடன் நிறைய கதைகளை பேசிவிட்டு தூங்க ஆரம்பித்த போது மணி பன்னிரெண்டு தாண்டியிருக்கும்.

அப்பா, அம்மா, நாங்க ரெண்டு பேரும், ஹரியும் ஒரே ஹால் ல தான் படுப்பதே. அப்பா இப்போ இருந்தா, டேய் படுக்க வேண்டியது தானே, கண்ணு முழிச்சு ஒடம்ப கெடுத்துக்காதீங்கடா, எனக்கெல்லாம்  பசினாலே தூக்கமே வராம கெடந்திருக்கேன், உங்களுக்கு என்னடா நிம்மதியா சாமிய கும்பிட்டு படுத்து தூங்க முடியாம கெடக்குறீங்க நான் பட்ட  கஷ்டம்லாம் உங்களுக்கு கிடையாது, அதெல்லாம் யாம் பாடவும் கூடாது,   அதை எல்லாம்  சொல்லி முடியாது, ஆனா ஒன்னுடா அறியேன்னு மதுரைக்கு வந்தேன்... ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும்  இப்போ நல்லா இருக்கேன்,  கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு வந்து குடும்பத்தோட இந்த மீனாச்சி என்னயும் ஒரு வழிக்கு கொண்டு வந்து, வயித்துக்கு ஒரு குறையில்லன்னு வச்சிருக்கா... என்ன நினைப்பாரோ என்னவோ, எங்க பக்கம் திரும்பி , யார் உதவியும் இல்லாம நானே என் கைய ஊனி கர்ணம் பாஞ்சேன்!  இது அப்பா அடிக்கடி தொடர்பில்லாமல் சொல்லிக்கிட்டே இருக்கும்  வார்த்தைகள் ...பேசிக் கொண்டே இருக்கும்போதே  உறங்கியும் விடுவார், குறட்டை சத்தம் வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.  இப்போ அப்பா இல்லாததால, அம்மாவுக்கு நாங்கள் பேசிக்கொண்டிருந்தது பெரிய பிரச்னையாய் இல்லை...ரொம்ப நாள்  கழிச்சு பார்க்கிற பயலுக பேசிட்டு இருக்கட்டும் என்று பேசாம இருண்டு விடுவாள்,  ரொம்ப சின்னவயதில் நாங்க ரெண்டு சண்டை போட்டு கட்டி உருள்வதையும் இப்போ ஒட்டிக்கிட்டு இருக்கிறதையும்  அப்பப்போ சொல்லி சிரிப்பாள்...  ஹரி  நேற்று பெரியப்பா வீட்டிலேயே படுத்துவிட்டான் போல இருக்கு ஆளக்காணோம்.


பாஸ்கர் எங்கள் வீட்டை விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போய் பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு அடுத்து பிறந்தவன், நான் படித்துக் கொண்டிருக்கும்போது அவன் சம்பாதிக்க தொடங்கி விட்டான். இது எப்படி ஆரம்பித்தது, அவனுக்கு படிப்பை நிறுத்திவிட வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று இன்றுவரை புரியவில்லை. குட்டியின் திருமணம் வரை மதுரையில் படித்துக் கொண்டிருந்தவன், ஒரு வாரமாக பள்ளிக்கூடம் போகாமல் இருந்து விட்டு, அதன் பிறகு படிக்கப்போகலை, நான் பட்டறைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டான். என் அப்பாவின் அக்கா மகன்கள் சேது ரவி இருவரும், தங்கவேலை செய்யும் பட்டறை வைத்திருந்தார்கள், என் அப்பா வழி தாத்தாவும், என் அம்மா வழி தாத்தாவும் இதே தொழில் தான் செய்து வந்தார்கள். என் அத்தை மகன்கள் வரும்போதும் போகும்போதும் தடபுடலாய் செலவு செய்வது, ஹோட்டலிலேயே சாப்பிடுவது, கைசெயின், மோதிரம் என்று வலம் வருவது பாஸ்கரை அசைத்திருக்கலாம், திடீரென்று ஒரு நாள் என் அத்தை மகன் சேது வந்திருக்கும்போது நான் படிக்கலை, பட்டறைக்கு போறேன், எனக்கு படிப்பு வரலை என்று எதேதோ சொல்லிவிட்டான்.


அப்பாவுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை, அப்போது அவன் அரைப்பரீச்சையில் வாங்கிய பத்து மார்க் அவரை இந்த முடிவு எடுக்க உதவியிருக்கலாம். ஆனால் நான் ரெண்டு மார்க் வாங்கியிருக்கேன், அப்போது அதைப்பற்றி அவர் யோசிக்கவில்லை. ஏதோ கிரகம் நானும் சரின்னு சொல்லிட்டேன், இப்போ நினச்சா கஷ்டமாத்தான் இருக்கு... அப்போ வரும்படி வேற கம்மி, ஒரு ஆளு குறையறது, கொஞ்சம் பணமும் வரும்னு புத்தி பேதலிச்சு போச்சு என்று அடிக்கடி கண்ணீர் விட்டு புலம்புவார் அப்பா, கேட்கும் போது சங்கடமா இருக்கும். இப்போ மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரையில் இருந்து எழுபத்தி மூன்றாம் கிலோமீட்டரில் இருக்கு, ஜெயவிலாஸ்ல ஏறுனா ஒன்னே கால் மணி நேரத்துல போய் விட்டுடுவான், இதுக்குபோய் என்னங்காணும் புலம்புறீர்னு என்று என் அப்பாவை தேற்றுவார், என் அத்தையின் கணவர், வக்கீல் குமாஸ்தாவா இருந்தவர், வக்கீல் மாதிரி சட்டம் பேசுவார் எல்லா நேரத்திலும், சமூக நாட்டாமை அவர் அப்போ. நீங்க முத மூனு பிள்ளைகள படிக்க வச்சு ஒரு வழியா அரசாங்க உத்தியோகம் பார்க்குறாய்ங்க, கடைசி ரெண்டு பிள்ளக தானே தங்க வேலைக்கு போகுதுக... பெரியவன் படிச்சுட்டு இருக்கான், இன்னும் தலை எடுக்கல இவனை படிக்க வைக்காம வேலைக்கு அனுப்புறோமே என்ற அப்பாவின் வார்த்தையை முடிக்க விடமாட்டார் மாமா. எந்த புள்ள உதவியா இருந்தா என்ன வோய்... கவலப்படாதீரும்...அவன் நல்லா வருவான் பாரும் என்ற தேறுதல் அவரை தேற்றவே இல்லை, கடைசிவரை.


ஏதாவது முக்கியமான வேலைக்கு மதுரைக்கோ அல்லது கோவைக்கோ தான் வரவேண்டும், மெஷின் கட்டிங் அல்லது பட்டற சாமான் வாங்குறது அல்லது கசை இழுக்கறதுன்னாலே இங்க வந்துடுவான் அவன் ஒரு நாள், ரெண்டு நாள் இருந்து வேலைய முடிச்சுட்டு தான் போவான். பாஸ் பய வந்தாலே, அம்மாவுக்கு தாங்காது... என் புள்ள அவக வீட்ல என்ன சாப்பிடுதோ, என்ன ருசிமசியா செய்றாகளோ இல்லையோ, என்று தலைக்கறி எடுக்கவும், குடல் கொழம்பு வைக்கவும் கிடந்து அலையும்... அப்பாவும் ஆமா, கழுதய என்ன சமைக்கிறா, என் அக்காவோட மருமகக்காரி உப்பில்ல சப்பில்ல... ஒரு நாள் போயி சாப்டுட்டு அப்படியே கண்ணு கலங்கி போச்சு புள்ள எனக்கு, அய்யோ இவன இப்படி கொண்டு வந்து விட்டுட்டமேன்னு... இரு நான் சிலிப்புக்கொடலு வாங்கியாரேன், அப்படி மஞ்ச, சீரகம் போட்டு பிரட்டுனாப்புல கொடு என்பார் அப்பா... அப்படியே எலும்பும் வாங்கிட்டு வாங்க... சூப்பு வச்சும் கொடுத்துடலாம்... என்பாள் அவள் பங்குக்கு.


அப்பா ஸ்ரீவில்லிபுத்தூர்ல பொறந்து, பெருமாளுக்கு, ஆண்டாளுக்கு சேவுகம் செஞ்சு பெரிய பழுத்த வைணவர் மாதிரி ஆச்சாரமா இருப்பார்... அதனால எங்க வீட்ல எப்பவுமே சனிக்கிழமை ஆட்டுக்கறியோ, கோழியோ எடுப்பதில்லை... அதிலும் முதப்புள்ள நான் சனிக்கிழமை பிறந்ததாலே, இந்த பழக்கம் ரொம்ப நாளா இருந்துச்சு... ஆனா இப்போ புள்ளக மேல இருக்கிற பிரியத்தால, அது கிடக்கு, இவ வாரதே ஒரு நாளோ ரெண்டு நாளோ... இதெல்லாம் பாக்கமுடியுமா... புள்ளகளுக்கு மேலயா சாமி என்பார்... பெருமாளே!ன்னு கண்ணத்திலயும் போட்டுக்குவார். அப்பாவிற்கு பெரிதாய் எந்த கொள்கையும் கிடையாது... மனுஷனுக்கு மிஞ்சி எதுவுமே கிடையாது... ஒரு பொருள் தொலைஞ்சு போச்சா, உடைஞ்சு போச்சா, கொடுத்த காச யாரும் திருப்பித் தரலையா... அவருக்கு கஷ்டமே இல்லை... அம்மா தொந்தரவு செஞ்சாலும் அவரு, எப்படி கேக்கிறது இதப்போய்... அவனுக்கு முடியறபோது கொடுக்குறான் இல்லாட்டி போகுது போ... பழக்கத்துக்குத் தானே கொடுத்தோம் என்பார். அவரு ஏதோ தப்பு செஞ்சுட்ட மாதிரியே மருகுவாரு எப்போதும், அதனாலேயே கூடுதல் கவனிப்பும், பிரியமும் அவம்மேல... பாஸ்கர சேதுபதி என்றும் துரை என்றும் கூப்பிடுவார் எப்போதும்...


இப்போ பாஸ்கர் வந்திருக்கான், ஜெயவிலாஸ் பஸ் பிடித்து வருவதில்லை, கார் எடுத்துக்கொண்டு வருகிறான்... கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் நல்லா வசதியா இருக்கான்... வீட்டுக்கு வரும்போதெல்லாம் வரும் அப்பாவின் நினைவு... எல்லா பேச்சிலும் அப்பா இருப்பார்... அவரின் சில கோமாளித்தனங்களையும் சொல்லி சொல்லி சிரிப்போம்... அப்பாவுக்கு ஒரு பழக்கம்... பேசும்போது அவருடைய உடல்மொழி பிரமாதமா இருக்கும்... உறவுகளில அவருக்கு... சிவாஜி தோத்தாருடா உங்கப்பாகிட்ட என்று சொல்பவர் இன்னும் இருக்கிறார்கள். கைய ஆட்டிக்கிட்டு, கண்ண உருட்டிக்கிட்டு பேசும்போது, அவ்வளவு சொல்வார், உடலிலும், பேச்சிலும் இதெல்லாம் மனசில் இருந்து வரும்... குரலை உயர்த்தி எங்கிருந்தாலும் கைய ஆட்டி, கண்ண சிமிட்டி நடிப்பு பாவணை பண்ணுவார் அவர். எழுந்தவுடன் பல் தேய்த்து குளித்து பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று நினைத்த போது, பாஸ்கர் திரும்பி வந்தான், கையில் துளசியுடன், குங்குமம், மஞ்சளுடன், நீ தூங்கிகிட்டிருந்தயா, அதான் கோயிலுக்கு போயிட்டு அப்படியே குணவிலாஸ் வெங்காய பஜ்ஜியும் வாங்கிட்டு வந்தேன், உனக்கு பிடிக்கும்னு... என்றவன் என் தம்பியாய் இல்லாமல் அப்பாவாய் தெரிந்தான். என்ன பார்க்கிற என்று சொல்லிவிட்டு பல்ல விளக்கிட்டு சாப்பிடு என்றான்... விரித்த பொட்டலத்தில், வாழை இலை சுற்றிய பஜ்ஜியின் வாசம் மனசெங்கும் பரவியது.

Thursday, November 04, 2010

சிவரஞ்சனி என்பது ராகம் மட்டுமல்ல...

அவளின் பெரிய விழிகளும், சற்றே மேடேறிய நெற்றியும், அந்த நெற்றியில் வைப்பர் போல இரண்டு பக்கமும் துடைக்க யத்தனிக்கும் முடியும், அவள் அணிந்திருந்த கருப்பு ரவிக்கை, தாவனியும், முன் நெற்றியில் புருவத்தின் மத்தியை மெலிதாய் தாண்டிய ஸ்டிக்கர் பொட்டும், கழுத்தை ஒட்டி அணிந்திருந்த கருப்பும், சிவப்பும் கலந்த மணிகள் கோர்த்த பாசியின் மத்தியில் தொங்கும் மனசு. தடதடவென்று எல்லாம் மாறி மனசுக்குள் சிம்மாசனம் போட்டு என்னை ஒரு ராஜகுமாரனாய் இருத்தும் வெளி.  

ஏழு மணிக்கு மேல் நான் ஏறிக் கடக்க நினைந்து கிடக்கும் மொட்டை மாடி படிகள் அவளின் வீட்டின் பின் கதவை திறந்து வந்தால் நுழையும் வெளிச்சத்தில் முட்டும். மொட்டை மாடி படிக்கூடுக்கும், அவளின் வீட்டு பின் கதவு சுவரின் இடையே தெரியும் கீத்து நிலா, தண்ணீர் பிடித்து வைத்திருந்த தொட்டி, பக்கெட் என்று எல்லா நிர் நிலையிலும் நிலவையும் அவளையும் பிரதிபலிக்கும். பின் வாசலில் நின்று கொண்டு என்ன என்பது போல பார்ப்பவளின் பார்வையில் கொதிக்கும் நிலா, பக்கெட்டில் வைத்திருந்த தண்ணீர் எல்லாம் சேர்ந்து, காய்ச்சல் கண்டவன் போல, சோர்வாய் இருக்கும். சிரித்து விட்டு உள்ளே செல்வாள், கதவை திறந்து வைத்திருந்தால், யாருமில்லை உள்ளே வா என்ற அர்த்ததின் படி நானும் நிலவும் நுழைகையில், மெத்தென உள்ளங்கை பிடித்து இழுப்பவளின் ஆசையில், காமத்தில், காதலில் அல்லது நேசத்தில் பிறக்கும் இதுவரை உணராத்தொரு சங்கீதம் மாதிரி இருக்கும் இளையராஜாவின் அந்தப் பாடல். அந்த பதின் பருவத்தில் அவளின் சினேகமும், இளையராஜாவின் பாடல்களும் ஒரே கிறக்கம் எனக்கு.

மிக நெருக்கமாய் அந்த பாடல், காதுக்குள் வந்து புசுபுசுவென்று வெம்மையாய் மூச்சு விடும் ஒரு பிரிய சங்கீதம்... பிடரி மயிர் விலக்கி, முளைத்தும் முளைக்காமலும் இருந்த மயிர் அரும்புகளில் படிந்து விட்டிருந்த அன்றைக்கான மஞ்சளும், கிறக்கமான பவுடரும், வியர்வையும் கலந்த ஒரு வாசனையை உணரும் எல்லாமும் தாங்கி நிற்கும் நெருக்கம் அந்த பாடலை கேட்கும்போது ஏற்படுகிறது. இசையும் பாடலும் ஒரு இடைவெளி இல்லாது பின்னுதல் போலே ஒன்றோடொன்று பினைந்திருந்தது. முதலாய் இந்த பாடல் எங்கு கேட்டேனென்று இப்போதும் ஞாபகம் இல்லை, யார் அறிமுகத்தில் வந்திருக்கும் என்று யோசித்தால் அனேகமாய் ராஜேஷாய் இருக்கலாம் என்று வந்து நின்றது. படமாக்கப்பட்ட விதமும், நடிகர்களின் இயல்பான, கவித்துவமான நடிப்பும், பாடல்களின் வரிகளும் நம்மை விடாது துரத்தி ஊழ்வினையாய் வதைக்கிறது.

மிகப்பெரிதாய் பேசப்பட்ட கமல்ஹாசனின் படத்தில் அமைந்த பாடல் இது. படம் கமலஹாசனின் முதல் தயாரிப்பு... இசை இழை இழையாய் சேர்த்து நெய்து பிலிமில் கலந்த ஒலி பிரிக்கமுடியாததாய் இருக்கிறது, படம் முழுக்க ராஜாவின் ராஜபாட்டையில் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவின் புதிய அத்யாயங்களை அவசரமாக எழுதத் தோன்றியது. வைரமுத்துவின் பொன் மாலை பொழுது என்ற நிழல்கள் படத்தில் வரும் பாடலை கேட்டு வானம் எனக்கொரு போதிமரம் என்ற வரியில் லயித்த கமல் விரும்பி கேட்ட கவிஞன் புழுதியில் அனல் பறக்கும் தெருக்களில் இருந்து வந்த வைரமுத்துவின் முதல் வரியே கமல் என்னும் கலைஞனை, கவிஞனை கட்டிப்போடுகிறது. அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற பாடல் சிலிர்க்க வைக்கிறது எல்லோரையும்... இளையராஜா, கமல், பாரதி என்று எல்லோரும் பாராட்ட புதிதாய் மீசை வளர்க்க ஆரம்பித்த கவிஞனுக்கு பெருமிதம்.

என்னை கிறங்க வைத்த பாடல் அந்தி மழை இல்லை, இன்னும் ஒரு விசேஷமான பாடல்... கொலைகார கண்களின் மாதவி, கமலுக்கு பார்வையில்லாததால், தன் பங்குக்கும் கண்கள் வேண்டும் என்று நீள்விழி அழகி மாதவியை தெரிவு செய்தார்கள் என்று நினைக்கிறேன். மாதவி இதைவிட அழகாய் வேறு எந்த படத்திலும் காண்பிக்கப்படவில்லை என்றால் நீங்கள் நம்ப வேண்டும். ஏக் துஜே கேலியே விலும் கூட இத்தனை அழகில்லை அவள். ஓவியம் பழகும் பார்வைத் திறன் இல்லாத கமலிடம் தன்னை தொட்டுணர்ந்து வரைய பழக்கும் பாடல்... அழகில் அழகு தேவதை... என்று தேவகந்தர்வனின் குரலில் மயக்கும் பாடல் கேட்கும் சுகம் அலாதியானது.

குருடர்கள் யானையை பார்த்து சொன்ன கதை எத்தனை மூடத்தனமானது, எவ்வளவு சுவாரசியங்கள் உணரும் விரல்கள், நகக்கண்கள் கூட விழித்துக் கொள்ளும் அதிசயம் நிகழும். தலையில் இருந்து தொடத்தொடங்கியவன் முதலில் தொடுவது கூந்தல், இங்க சறுக்க ஆரம்பித்த வைரமுத்து என்ற கவிஞன் கடைசி வரை சறுக்குகிறான், பாடல் வரிகளில் குறையே இல்லை என்றாலும், பாடல் கண் தெரியாத ஒருவன் தொட்டுணரும் போது வண்ணம் எப்படி தெரியும்...மின்னுவது எப்படி தெரியும்... ஆனால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றினால் மிகச்சிறந்த கவிதையாகும் இந்த திரைப்பாடல். இதில் மிகக்குறிப்பான விஷயம் பிண்ணனியில் வரும், புல்லாங்குழலும், வயலினும் உபயோகிப்படும் இடங்கள், நம்மை கிறங்க செய்துவிடுவது உறுதி. படமாக்கப்பட்ட விதத்தில் கமல் எங்கோ போய் விடுவார்... இந்த படம் சிங்கிதம் சீனிவாசராவினால் இயக்கபட்டது... படத்தின் அவுட்லைனை சொல்லி, திரைக்கதை எழுதி அல்லது எழுத துனையிருந்து முடித்த படத்தின் பெருமையை நாம் எப்படி சிங்கிதம் அவர்களுக்கு தாரைவார்க்க முடியும்... கமலின் பங்கு அதில் நிறைந்தே இருக்கும்...

சிவரஞ்சனியின் சாயலில் இருக்கும் இந்த பாடல், இளையராஜாவின் முற்போக்கினாலோ அல்லது யேசுதாஸின் புரிதலாலோ... கொஞ்சம் வேறு ராகத்தின் சாயலும் இருக்கும் இந்த பாடல்... யேசுதாஸின் குரலில் நம்மை பித்து பிடிக்க வைத்துவிடும், எத்தனை முறை ஒரே நாளில் கேட்க வைத்திருக்கிறது. இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே-வில் வரும் அந்த குழைவு, காத்திரம் இளையராஜா, யேசுதாஸினால் மட்டுமே முடிந்த ஒன்று. ஒரு முறை நான் நாக்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, போர்க் லிப்ட் ஓட்டும் முருகன், இரவில் ஒரு நாள் நல்ல சுதியில் பாடிய இந்த பாடல் என்னை என்னவோ செய்தது. இத்தனைக்கும் அவன் சரியான சுதியில் பாடவில்லை, தாளக்கட்டும் சரியில்லை, ஆனால் அவன் கனத்த குரலில் உடைந்து உடைந்து வந்த சிவரஞ்சனி ராகம் அல்லது இந்த பாடல் ரம்மியமாய் இருந்தது. ஒரு அங்கம் கைகள் அறியாதது என்று பக்கத்துல இருந்து பலசரக்கு கடைக்காரனின் மனைவியைப் பார்த்து சிரித்தவனின் சேட்டையையும் மீறி இனிமையாய் இருந்தது. சிவரஞ்சனியில் அமைந்த எல்லாப்பாடல்களும் சுகமானவையா என்றால் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த பாடல் எந்தவித ஒப்பீடும் இல்லாத ஒரு பாடல் என்றால் அது சும்மா இல்லை.

கொலுசும் அவளும்...

சினுங்கும் பாதம்

 கழன்ற கொலுசு அறியவில்லை

இவள் பாதம் படும் இடங்களில்
தண்ணீர் நிரப்பியிருக்கும்
கிண்ணங்களென தெறித்த இசை
திரண்டு 72 மேளகர்த்தா ராகங்களையும்
நிரவியது

வழியெங்கும் விழுந்து கிடந்த
ஸ்வரங்களின் முனைகள்
மேலும் நகாசித்து
மின்ன ஆரம்பித்தன

படுக்கையறையில் இருந்து
கிளம்பிய இசை தவழ்ந்து
ஊர்ந்து பட்டாசால் வரை
நீண்டது

அவள் குளித்த போது
குளியலறையில் இருந்து
பெருக்கெடுத்து ஒடியது இசை
மனசெங்கும் வெள்ளக்காடு...
****

தவறிய ஒற்றைமணி
வாசிக்காத இசை
கொலுசில் மிச்சமிருக்கும்
****

புதுக்கொலுசு மாயகம்பளம்
பறந்து திரிவாள்
மனவெளியெங்கும்
****

பூக்களில் நெய்த மணிகள்
அணிந்தவள்
சிரிப்பில் இருந்து பொறுக்கிய
பரல்கள் கோர்த்து இசைத்தது கொலுசு
****

Wednesday, November 03, 2010

புதைந்த நகரத்தின் பின்மாலை...

இறந்த நகரத்தின்
கோபுரங்கள் வெளியே
துருத்திக்கொண்டு இருந்தன
விரைத்த உடல்களைப் போல
அடுக்கப்பட்டிருக்கும்
சிதிலங்களின் மேல்
நிராசைகளின் துர்வாடை
கசிந்து கொண்டிருந்தன
அகழிகளும், அரண்களும்
பாதுகாத்த வாழ்விடங்கள்
புதைகுழிகளாயின
பெயரற்று பறக்கும் வட்டமிடும்
பறவைகளின்
அந்தகார ஓலம்
ஊழியின் முன்பான
பேரிடியில் பொருந்தின
செவிகிழிக்கும் பேரமைதியில்
அறுந்த ஞாயிறு
குருதிக்கொப்பளிக்க கிடந்தது
பின்மாலையின் அடியில்

Tuesday, November 02, 2010

அம்மாவின் சீலைகள்...

மாமா தீவாளிக்கு
சீலை எடுத்து தரமாட்டீயலா 
அக்காவுக்கு மட்டும் தானா?
சீலையா இல்ல மாமனா?
என்றவரை தாண்டி
தங்கையை முறைக்கும்
அம்மாவின் காதல்
***
சீலையா  அடுக்கி
வச்சிருக்கிறேனாம் பீரோல...
கூடப்பொறந்தவனுக்கே பொறுக்கல!
அவன்கெடக்கான்
தீவாளிக்கு ரெண்டு சீலையா
வாங்கிக்கோ என்பார் அப்பா 
***
நேர்ச்சைக்கு
அம்மனுக்கு சார்த்த
எடுத்த பச்சைச்சீலையில்  
அழகாய் தெரிந்தாள் அம்மா!
***
அம்மாவின்
பழஞ்சீலைகள்  
தேன்சிட்டுக்களின் உதிர்ந்த
இறகுகளில் நெய்யப்பட்டவை
விரல்கள் முளைத்து 
கிறங்க  தலைகோதும் 
மழை நேர தேநீராய் 
மூளை தொடும் நினைவுகளில்
கை சூம்பி உறங்கும் நான்  
 ***

Monday, November 01, 2010

இரண்டு கவிதைகள்...

எதிரில் வந்தவருக்கு

என் சாயல் தான் இருந்தது
கையில் என்னுடைய
முகவரியைத்தான் வைத்துக்கொண்டு
வருவோர் போவோரிடம்
எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்
வாங்கி பார்த்தவர்கள்
எல்லாம் பழக்கமான இடமாகத்
தான் தெரிகிறது நபரும்
ஆனாலும் சரியாக சொல்ல
முடியவில்லை என்று
சென்றுவிட்டார்கள்
இப்போது அவர் என்னை நோக்கி
வருகிறார்
நான் ஒரு கிண்டலுடன்
நான் தான்யா அது
என்று சொல்ல தயாரானேன்
வந்தவர் விலகி
வேறு பக்கம் சென்றுவிட்டார்
******
அப்பா வந்ததும்

சொல்லிவிடவேண்டும்
உமிக்கார லட்சுமியக்கா மகன் குமார்
என்னை அடிச்சதை
தொடையே சிவந்து போறமாதிரி
கிள்ளினதை
அம்மாவிடம் சொன்னபோது
நீ என்ன பன்னின
ஒன்னும் பன்னாமலே
அவென் அடிச்சானா என்று
என்னையே குத்தம் சொல்லும்
அப்பாட்ட சொன்னாதான் சரி
அப்பா வர தாமதமாக
உறங்கியவனை எழுப்பி
லாலாக்கடை அல்வாவும்
பாலும் குடித்து தூங்க வைக்க
கனவில் அல்வா தின்ற
கதையை
உமிக்கார லட்சுமியக்கா மகன்
குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்
மறுநாள் காலை