Wednesday, February 23, 2011

யட்சகாயகன்...

"இந்த பதிவு எழுதுவதற்கு முதற்காரணம் ராஜசுந்தரராஜன் அண்ணன்தான், அவர் தான் இசை பற்றி எழுத மீண்டும் தூண்டியது... இந்த பாடல் பற்றி எழுதியது அவருக்காக..., நியாயம் செஞ்சிருக்கேனான்னு தெரியலை..."

வனங்கள் சுழன்றெரியும் தீமழை பெய்யும் மேகங்களின் முலைக்காம்புகளில் இருந்து விஞ்சிய துளிகளில் செரிவு சேர்த்து குழைத்த மசியில், ரேகைகள் வரைந்து வரிகள் போர்த்திய உடல் உய்ய நட்சத்திரங்கள் எறியும் செருகளத்தின் மேற்கில் சிவந்த வானத்தின் அடிவயிற்றில் செருகியிருக்கும் பஞ்சாக்னி. அம்புகள், வேல்களின் கூர்முனைகளை மழுங்கச்செய்த பிட்ட சூரியனின் போர்ப்பரணி, உந்திச்சுழி முளைத்தவனின் ஏடுகள் தவறவிடட இசைக்குறிப்புகள். நாதவிந்துவாய் வெண்கமலத்து விரல்கள் எங்கும் ஓடி, கம்பிகளில் அதிர்ந்து, காற்றின் பையில் துளையிடக் கொட்டிய மத்தள கொட்டு இசையில் நெய்யப்பட்ட முகப்படாமில் தொங்கும் ரத்தினங்கள். பரணியும், பக்தியும் பிசைந்து வனைந்ததில் ஜனித்த  நீர்க்குழந்தை சல நாட்டை. மணிகளும் ஒலிகளும் திரண்டு பெருக்கும் சிற்பங்களின் விரைகளில் இருந்து பெருகிய உயிர்களின் நாடித்துடிப்பும்,  நீர்க்குழந்தை தவழ்ந்த 36வது சப்த மண்டலங்கள் பிளந்து ஜனித்ததில் தெறித்து விழுந்த மகரந்த துளிகளில் எழுந்து நிற்கும் பேருரு இந்த நாட்டை.

வளரவும், தேயவும் சபித்தவனின் முன்செல்லும் துளைவிழுந்த கதிர, மூங்கில் மரங்கள் வீசும் காற்று சுமந்து செல்லும் மல்லாரியில் மிதந்து பயணிக்கும் கரிமுகனின் தண்டைகளில் புகுந்து கொள்ளும் மத்தளம். அவனும் இவனும் என இருவிழி நோக்கில் சங்கமிக்கும் சங்கரநாராயணனைப் போல தோற்றமயக்கம் காட்டும், இந்த ராகம். நாட்டையா அல்லது தைவதத்தை தவறவிட்ட வடக்கத்தியர்களின் ஜோக் ராகமா என்ற குழப்பமும், மயக்கமும் தரும். ரவீந்திரனின் இசை, மலையாள மொழியின் சினேகமான வார்த்தைகளுள் பொதிந்து இருக்கும் இசையை சிரமமில்லாமல் எடுத்தாண்டவர் ரவீந்திரன் மாஸ்டர். வி.தக்‌ஷினாமூர்த்தி, எம்.பி.ஸ்ரீனிவாஸ் இவர்களுக்குப் பிறகு, கர்நாடக சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்த பாடல்கள் அனேகம்.  அதில் குறிப்பாய், தென்னிந்திய ரசிகர்கள் எல்லோருக்கும் பரிச்சயமான பாடல், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவில் வந்த “பிரமதவனம் வீண்டும்என்ற ஏசுதாஸின் குரல். பாடலை எழுதியவரும் இசையில் தேர்ச்சி பெற்ற நையாத்திங்கர வாசுதேவன் என்று நினைக்கிறேன். 

ஆலாபனையில் ஹிந்துஸ்தானியின் ஜோக் ராகத்தின் சாயலில் இருக்கும் இந்தப்பாடல், பல்லவியிலும் அப்படியே தொடர்கிறது.  அதன் பிறகு சரணங்களில் நம்ம ஊரு நாட்டையின் வேகமும், அடுக்கும் வருகிறது.  நாட்டை ஒரு ஜன்ய ராகம், முப்பத்தியாறாவது மேளகர்த்தா ராகமான சல நாட்டையில் இருந்து பிறந்தது.  சலநாட்டை ஒரு சம்பூர்ண ராகம், நாட்டையில் தைவதம் கிடையாது. ஆனால் வடக்கத்திய ராகமான ஜோக்கில் ரிஷபமும் கிடையாது.  இந்தப் பாடலில் சில இடங்களில் ரிஷபம் இல்லாதது போலத் தெரியும், சில இடங்களில் ரிஷபம் இருப்பது போலவும் தெரியும்.  இந்த ராகத்தில் ஸ்வரங்களுக்கு இடையேயான இடைவெளிகள் குறைவாய் இருப்பதால், இது பக்திக்கு உகந்ததாகத் தெரிகிறது, மெய்மறக்கச் செய்யும் ஸ்வரக்கட்டு.  இதே சுவரக்கட்டு கொஞ்சம் துரித காலத்தில் இருக்கும்போது, மல்லாரியாக நாதஸ்வரத்தில் வாசிக்கப்படுகிறது.  கொஞ்சம் மாறுதல்களுடன், கம்பீரநாட்டையாகவும் மாறிவிடும் ராகம் இது.


ஏசுதாஸுக்கு தேசிய விருது வாங்கித்தந்த பாடல்களில் முக்கியமானது இது. அந்த தேவகந்தர்வனின் குரலில் இருக்கும் கனமும், குழைவும், இசை விமர்சகர்களின் நீளும் விரல்களை சிகரெட் துண்டுகள் என நசுக்கி விடுகிறது.  ஆலாபனை ஆரம்பிக்கும் போது இருக்கும் அதன் அசைவுகள், உங்களை உள்ளே இழுத்துச் செல்லும்.  அதன்பின் கொண்டு செல்லும் உயரங்கள் அபாரமானவை.  ஏசுதாஸின் குரல் மாறும் உச்சம் அது.  பந்துவராளியில் கல்பனாஸ்வரம் பாடும் போது அவரின் குரல் இது போல ஆவதைக் கேட்டிருக்கேன்.  இந்த பாடலின் ஆலாபனையின் போது அது நாட்டையாய்த் தெரியாது, பல்லவியிலும் அஃதே.  சரணங்கள் மட்டுமே நாட்டையின் சாயலில்.  உருவ ஒற்றுமை இருந்தாலும், இரட்டையர்களிடம் வித்யாசம் உண்டு என்பது போல, மிக உன்னிப்பான வேறுபாடுகள்.  ரவீந்தரன் மாஸ்டர் ஒரு பெருந்தச்சன், மிகநுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பறவைகள் அடையும் தேர்கள் செய்யும் தச்சன். மோஹன்லால், இந்த படத்தின் பாடல்கள் பற்றி பேசும் போது, நல்ல பாட்டுகள் உண்டாக வேண்டும் என் ஆக்ரஹம் கொண்டிருந்ததாய்ச் சொல்வார். அது முழுக்க முழுக்க உண்மை. சங்கீதம் அறியுந்தோறும் அகலம் கூடும்ன ஒரு மஹாசமுத்திரம் என்று ஒரு வரி வரும் அது சத்தியம்.

ரவீந்திரன் மாஸ்டரின் இசையில் ஏசுதாஸ் என்ற யட்சகன் பாடிய அனேக பாடல்கள் பிரபலமானவை மட்டுமல்லாது, நல்ல பாடல்களும் கூட... கோபாலக பாஹிமாம், மதுரம் ஜீவாம்ருத பிந்து, ஹரி முரளி ரவம், ஸ்ரீ லதிககள், கோபாங்கனே, ராமகதா கானலயம், அழகே நின் மிழிநீர்மணியில், ஏழு சுவரங்களும் தொழுதுனரும் ஒரு கானம் என்று இது பெரிய பட்டியல் அடங்காப்பட்டியல்.  இசையை அருந்தி உயிர் வாழ்கிறது சாதகபட்சிகள் என்று யாராவது சொன்னால், சத்தியமென நம்புகிறேன்.

Sunday, February 20, 2011

சோப்புக்குமிழ்...


                                                              
திடீரென்று வந்து நின்றான் காலங்காலையிலே, முருகேசன். என்னடா என்று கேட்ட போது ஒன்றும் சொல்லாமல் நமுட்டு சிரிப்பு சிரித்தான். ஏதாவது கள்ளத்தனம் இருக்கும் போது மட்டும் தான் இது போல சிரிப்பான். கடந்த முறை, அவனுடைய அப்பா அம்மா ஊருக்கு போன பின்பு, கள்ளத்தனமாக சிரித்து கொண்டே இது போல வந்து நின்றான். என் அப்பாவிடம் சொல்லி, குரூப் ஸ்டடி என்று சொல்ல என் அப்பாவும், அப்பாவியாய் பிள்ளைகளோட படிப்பு ஆர்வத்தை பாராட்டி, கையில் கொஞ்சம் காசு கொடுத்து, ஏலே, ரவைக்கு வச்சுக்கிடுங்க, ரொம்ப நேரம் கண் முழிச்சு படிக்க வேணாம் என்று சொல்லி அனுப்பினார் பாவம். வெளியே வந்தது ஜோல்னா பையில் வைத்திருந்த வீடியோ கேசெட்டை காண்பித்து, பர்ருன்னு சிரிச்சான். அன்னைக்கு ராத்திரி முழிச்சு முழிச்சு படித்த கதை அப்பாவுக்கு கேள்வி கேட்காமல் நம்ப முடிந்தது. தூக்கம் இல்லாத கண்களும், தளர்ந்த நடையும். ஏ புள்ள! பயகளுக்கு எலும்பு சூப்பு வச்சு குடு... ராத்திரியெல்லாம் முழிச்சிருக்கானுங்க... குளிர குளிர சூப்பு குடிக்கட்டும் என்றார்.

அது போல தான் இன்னைக்கும் வந்திருக்கான், இப்போ கொஞ்சம் பெரியவங்களா ஆயிட்டோம் ரெண்டு பேரும், காலேஜ் முடிச்சிட்டு வேலை பார்க்குறோம், இங்க வந்து மூணு வருஷம் ஆச்சு. அவனுக்கு எழுநூத்தி அம்பது சம்பளம்(ஈடிபி இன்சார்ஜ்), எனக்கு அறுநூறு தான்(அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட்), ரெண்டு பேரும் ஒரே இடத்தில வேலை பார்த்தா உருப்படும்? ஈடிபி ரூமுக்குள்ள அடிச்ச கூத்தெல்லாம் எழுத முடியாது. படிக்கிற நிறைய பேரு வருத்த படுவாங்க. சரி அவன் வந்து நமுத்தலா  சிரிச்சதுக்கு காரணம் மலர். நாங்க ரெண்டு பேரும் ஏதோ தத்தி தத்தி ஒரு டிகிரி முடிச்சிட்டு வேலைக்கு வந்திருக்க, மலர் மெட்ராஸ் யுனிவெர்சிட்டில எம்.பி.ஏ. படிச்சிட்டு வந்ததா சொல்லிட்டு, சென்னையில பிரிட்டிஷ் லைப்ரரியில வேலை பார்த்ததாவும், அங்க வர்ற வெள்ளைக்காரங்க எல்லாம், இவ பேசுற இங்கிலீஷ பார்த்து மயங்கி, லண்டன் வந்துடறியா என்று கேட்டார்களாம். இவங்க அப்பா, மலேசியா போயிட்டதால, காரைக்குடில இருக்குற சொந்த வீட்டுக்கே வந்து விட்டார்களாம்.

இங்கிலீஷ் பேசுனா எது சொன்னாலும் நம்பி தானே ஆகணும், நம்ம ஊருல அதான வழக்கம். ஒண்ணு பாஷை புரியாது, இன்னொன்னு  இங்கிலீஷ் பேசுறவங்க எது சொன்னாலும் நம்பிக்கை வந்துடும். இவ எல்லாமே இங்கிலீஷ்லேயே சொன்னா, சரி தானே!

மலர் அத்தனை ஒன்றும் அழகில்லை. மாநிறம், உயரமா இருப்பாள், நாங்க ரெண்டு பேரும் கூட உயரம் தான். முன் பல் ரெண்டு மட்டும் பெருசா... போனி டெயில், நல்ல உடம்பு. கையில் இருக்கும் மெல்லிய ரோமக்கட்டும், வசீகரமாய் இருக்கும். எல்லாத்தையும் விட அவளுடைய குரலில் இருக்கும் அந்த அழைப்பு, அத்தனை வசீகரம், போட்டது போட்ட படியே ஓடத்தோணும். ஆனால் அவள் மேல எல்லாருக்கும் ஈடுபாடு வந்ததுக்கு பெரிய காரணம், அவ பேசுற முறை. எல்லோரையும் தொட்டு தொட்டு தான் பேசுவா... அதுவும், மூச்சு மேல படுற மாதிரி.  மேனேஜரா வந்த பெருசு கூட மலர் என்றால், பேசுவது ஒரு மாதிரி தான் இருக்கும். ரெண்டும் இங்கிலீஷ் பேசுறத பாக்கணுமே... வயிறு எரியும், நாமளும் இது போல இங்கிலீஷ் கத்துக்கணும்னு நானும், முருகேசனும் முடிவு பண்ணி ஆங்கில படமா பார்த்தோம்.

இங்கிலீஷ் இஸ் எ லேங்குவேஜ் டு பி காட்... னு சொன்னது தான் நாங்க ஆங்கில படங்கள் பார்த்த காரணம். லோடட் கன்ஸ்ல உர்சுலா ஆண்ட்ரூசை பார்த்துட்டு... பாஷை  முக்கியமில்லை என தெளிந்தோம். இத்தனைக்கும் காரணமான மலர், முருகேசு மேல ஒரு கண் வச்சிருக்கான்னு, வேலை பார்க்குறவங்களுக்கும், ஏன் எனக்கு கூட தோனுச்சு. அவன்கூட பேச ஆரம்பிச்சதுல இருந்து மத்தவுங்களோட பேசுறதும், தொடுறதும், உராசுறதும் குறைஞ்சு போச்சு.

ஏற்கனவே ராதா என்ற பொண்ணுக்கு நூல் விட்டுட்டு இருந்தவன், இவ வந்ததும் அவளை விட்டுட்டான். மாப்பிளை! இந்த ஜாரி தோதுப்படாதுடா நமக்கு, கல்யாணம் அது இதுன்னு பேசிட்டு இருக்கு. அழகர்சாமி நாயுடுக்கு தெரிஞ்சா அம்புட்டு தான், தோலை உரிச்சுடுவாரு. எங்க அம்மாவும் சொல்லும் மாப்பிள்ளை, அவிங்க ஆளுகள கட்டினா தரித்திரம்னு... என்பான். அடப்பாவி என்று தோன்றியது எனக்கு, அழகர் கோவிலுக்கு, கூட்டிட்டு போயி, தீர்த்த தொட்டிக்கு மேல போயி டிபன் சாப்பிட்டது எல்லாம். அதெல்லாம் சகஜம் மாப்பிள, அவளும் தான வந்தா. கிவ் அண்ட் டேக். எவ்வளவு மோசமான ஆளு  இவன்,  பொண்ணுங்கள வெறும் உடம்பா நினைக்கிறானே... சரி! ஒழியுது என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். ஆனாலும், நமக்கு இது மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையலேன்னு ஒரு வருத்தமும் இருந்தது...

முருகேசன் வந்ததன் காரணம் அவனை காரைக்குடிக்கு, அவள் வீட்டுக்கு வரச்சொன்னது தான். அதுவும் அவள் குறிப்பிட்டதில், வீட்டுல யாரும் இருக்கமாட்டாங்க  வா.. பேசிட்டு இருக்கலாம், என்பதில் ஒரு அழுத்தம் இருந்ததாக அவன் சொன்னான் நம்பத்தான் தோன்றியது. ஒருத்தனை மதுரையில இருந்து காரைக்குடிக்கு பேசுறதுக்காக மட்டும் வரச்சொல்ற அந்த பெண்ணோட நட்பு எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. முருகேசனுக்கு, தனியா போக பயம், அழகர் கோயில், விரகனூர் டேம், வண்டியூர் மாதிரி எடம்னா பரவாயில்லை, ஆனா தெரியாத ஊரு அதுவும், தனியா இருக்கா, இவனை வரவும் சொல்லியிருக்கா.. பயலுக்கு... ஆசையோட சேர்த்து பயமும் வந்து அக்குளில் காய்ச்சல் அடித்திருக்க வேண்டும். அதனால துணைக்கு ஆள் தேடுறான் போல என்று எனக்கு தோன்றியது. அவன் தனியா கூப்பிட்டு இந்த விஷயத்தை சொன்னதும், எனக்கும் அவனை விட ஆர்வம் இருந்தாலும், நமக்கு இதில என்ன ரோலு ன்னு யோசனையா இருந்தது.

பயமும் இருந்ததற்கு காரணம், சமீபத்தில் பார்த்த படமாகவும் இருக்கலாம். தனியாய் இருந்த ஆசை நாயகி ஹோட்டல் ரூமுக்கு அழைக்க, போய் சேர்ந்தான், கதாநாயகன். இடது மார்பில் கத்தியில் குத்தி, நீளமான கத்தி போல, இறந்து கிடந்ததை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் சுத்தி முத்தி பார்த்து விட்டு, வழக்கம் போல கத்தியாய் எடுத்து கையில் வைத்திருக்கும் போது வந்த போலீஸ் அவனை பிடித்ததை பார்த்த ஞாபகம் வந்தது. அப்படி ஏதாவது நடந்தா கூட கத்திய கையில எடுக்குற தப்ப மட்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். வழக்கம் போல அப்பாவிடம் ஒரு பொய்யை சொல்லிவிட்டு போக வேண்டும். என்ன ஏது என்று பெரிதாக ஆராய்வது இல்லை என்றாலும், சந்தேகம் வராத படிக்கு ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.


முருகேசனுக்கு இது போல விஷயங்களுக்கு எல்லாம், நல்லா காரணம் சொல்ல முடியும் என்ன சொல்வதுடா!  என்று கேட்டேன். சிறிது யோசித்தவன், ஆபிஸ்ல வேலை பார்க்குறவனுக்கு கல்யாணம்னு சொல்லலாமா, என்றவன், வேண்டாம் வேற சொல்லலாம் என்று சொன்னான். ஆபிஸ்ல வேலை பார்க்குறவனோட அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம், போக வேணாம்னு நெனைச்சிருந்தோம், நேத்து, அவங்க அப்பாவே, நீயும் சந்துருவும் அவசியம் வரணும்னு சொல்லிட்டாரு என்று அண்டப்புளுகினான். அப்பா, "அப்படியா, சரி பத்திரமா போயிட்டு வாங்கப்பா, என்று ரொம்பவும் அப்பாவியாய் நம்பினார். பெரியவங்க கிட்ட அவங்க அறுபதாம் கல்யாணத்தின் போது, ஆசீர்வாதம் வாங்குவது ரொம்ப புண்ணியம்  என்று கையெடுத்து மேலே பார்த்து கும்பிட்டு கொண்டார். அவங்க வீட்டுல என்ன சொன்னானோ? ரெண்டு பெருசுங்களும் பார்த்துக்காம இருக்கணும்.
 
உங்க வீட்டுல என்னடா சொன்ன என்று நான் கேட்க,  பழைய வாத்தியார் வீட்டுக்கு போறேன், சோழவந்தான் வரைன்னு சொல்லியிருக்கான்.  நல்ல வேலை இங்க அப்பாகிட்ட எந்த ஊருன்னு சொல்லலை. ரெண்டையும் சேத்துக்கலாம் என்று தோன்றியதால், சமாளித்து விடலாம் என்று நிம்மதியாய் இருந்தது.  
 
கிளம்பிட்டோம். பஸ் எங்க இருந்து கிளம்பும் என்று அவனிடம் கேட்ட போது, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டான்ட் என்று முருகேசன் சொன்னான்.  என்னடா செய்ய போறோம் அங்க போயி? என்று கேட்ட போது, தனியா இருக்கா, ஆசையா வரச்சொல்லி இருக்கா என்ன வேண்ணா செய்யாலம்டா! என்று அவன் சொல்ல எனக்கு லேசா அடிவயிறு கலக்க ஆரம்பிச்சது.  ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன், கக்கூசுக்கு போக வேண்டும் போல தோன்றியது.   காரைக்குடி பஸ் எதுவும் ரெடியா இல்லை, நல்ல வேளை பஸ் ரெடியா இருந்தா இப்பவே ஏற சொல்லி இருப்பான்.   அவஸ்தையாகி இருக்கும்.  அவனிடம் சொல்லிவிட்டு,  கட்டண கழிப்பிடம் போனேன்.  பொதுக் கழிப்பிடத்துக்கும், இதுக்கும் பெருசா வித்யாசம் இல்லை.  அங்க நிறைய பேரு பார்ப்பானுங்க, இங்க ஒருத்தன் காசு வாங்கிட்டு பார்க்குறான் என்று தோன்றியது.  தண்ணீ கிடையாது, ஒரு தூரில்லாத வாளி, அதுல தொட்டியில இருந்து எடுத்துட்டு வரதுக்குள்ள காலியாயிடும். எல்லாம் நேரம், பேசாம வீட்டுக்கு போயிடலாமா, இவனுக்கு தெரியாம என்று தோன்றியது.    ஆனாலும் ஆசை, ஆர்வம் எல்லாம் உந்தி தள்ள முடித்து விட்டு  வெளியே வந்தேன். 
 
வாடா சீக்கிரமா, வண்டி கிளம்ப போகுது என்றான்.   கண்டக்டரிடம் கேட்ட போது,  இன்னும் அரை மணி ஆகும் தம்பி என்று தம் அடிக்கப்போய்  விட்டார்.  முருகேசனுக்கு, டேய் நாமளும் தம் அடிக்கலாமா என்றான். ஏன்டா  ஒத்தையா  ஒரு தப்பு செஞ்சா ஆகாதா என்று கேட்க,  மாப்ள! நீயே தப்பு தப்புன்னா எப்படிரா, உனக்கு இஷ்டம் இல்லேன்னா போயிடலாம் என்றான்.  எனக்கு அய்யய்யோ, வேணான்னு திரும்பிடுவானோ என்று பயம் வந்தது லேசா.  என்னை இழுத்து கொண்டு வாடா, மெடிக்கல் ஷாப் வரை போயிட்டு போகலாம், என்றான். 
 
எதுக்குடா, மேலுக்கு ஏதும் முடியலையா? என்று திரும்பி விடுவானோ என்று பதைபதைப்பில் திரும்பவும் கேட்டேன்.  பேசாம வாடா மாப்பிளை, என்று மெடிக்கல் ஷாப்பில், அண்ணே! கோஹினூர் ரெண்டு கொடுங்கண்ணே... என்றான்.  அண்ணன் ரெண்டு பேரையும், ஏற இறங்க பார்த்துட்டு, என்ன கலர் வேணும்னு கேட்டார். ஆணுறையா? என்னடா செய்ய போற என்று அவன் கையை அழுத்த, கைய புடுங்கிட்டு, சும்மா இரு என்று கையை கீழாக காட்டினான்.  ரெண்டு வாங்குறானே, நமக்கும் ஒன்னொன்னு நினைச்சிட்டு, ஒரு மாதிரி சிலிர்ப்பா  இருந்தது. ஏதோ ஒண்ணு கொடுங்கண்ணே என்று கண்ணடித்தான் அவரை பார்த்து.  அவர் மூஞ்சிய கடுகடுன்னு வச்சிட்டு, காச வாங்கி கல்லால போட்டுட்டு எங்க முதுகில், பக்கத்தில் இருந்த ஆளிடம், ஏதோ சொல்லி சிரிப்பது மாதிரி இருந்தது. எனக்கு அவமானமாய் இருந்தது, அவனிடம் சொன்ன போது, கண்டுக்காதே மாப்பிள, இவன்  எல்லாம் பாக்காமையா வந்திருப்பான் என்று சொல்லிவிட்டு சிரித்தான்.
 
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகும் எனக்கு என்னமோ மாதிரி இருந்தது.  அவன் விசிலடிச்சிகிட்டே வந்தான், ஏதோ ஒரு விரகத்தில் தவிக்கும் பெண்ணின், டி. ராஜேந்தரின் பாட்டு.  சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி தான் எல்லாமே பண்ணுவான் போல, முருகேசனோட நடை உடை பாவனை எல்லாம், பெரிய மனுஷன் போல மாறியதாய் தோன்றியது.  பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த உடன், டிரைவர் சீட்டுக்கு மேலே இருந்த கண்ணாடியை பார்த்தேன்,  பெரிய மனுஷ தோரணை இருக்கான்னு. இன்னும் சரியா முளைக்காத மீசை வேதனையை இருந்தது.  எச்சிய எடுத்து, மீசையில் இழுவிய போது லேசாய் மீசை இருப்பது தெரிந்தது.  முருகேசனுக்கு நல்ல கரு கருன்னு மீசை.  சின்ன வயசிலேயே வழிச்சு வழிச்சு அடர்த்தியா வளர்ந்துட்டதுன்னு நினைக்கிறேன்.
 
காரைக்குடி வந்து இறங்குன போது சரியா காலையில பதினோரு மணி.  வெயில் ரொம்ப ஜாஸ்தியாய் இருந்தது.   வேர்த்துக் கொட்டியது, இவனுக்கு, வெயிலாகவும் இருக்கலாம், பயத்தினாலும் இருக்கலாம்.   கழுத்தை தொட்டு பார்த்ததில் சூடாய் இருப்பது தெரிந்தது.  அவன் ஜாலியா, அட்ரச கையில வச்சிக்கிட்டு, விசாரிச்சிட்டு இருந்தான்.  ஒரு ரிக்ஷாக்காரர்,  தெருவைச் சொல்ல, ஆரு வீடு தம்பின்னு கேட்டார்.   மெய்யப்பன் சார் வீட்டுக்கு என்றதும், நீங்க ஆரு, அவுக ஆரும் வீட்டுல இல்லையே... அந்த பொண்ணு மாத்திரம் தான் இருக்கு என்றார்.  என்னடா இவ்வளவு விஷயம் சொல்றாரே, வெனையா போச்சேன்னு தோணியது எனக்கு.  அவன் உங்களுக்கு தெரியுமாண்ணே என்று கேட்டான். தெரியும் தெரியும், அந்த தெருவிலேயே ஆறு வீடு தான் இருக்கு. மெய்யப்பன் வீடு தான் இருக்கிறதிலேயே சின்ன வீடு என்றார்.  அது சரி,  நீங்க ஆரு என்று திரும்பவும் கேட்டார்.  நான்  தேவகோட்டைல இருந்து வாரேன், இது என்னோட பெரியம்மா பையன் என்று என்னையும் அறிமுக படுத்தினான்.
 
மெய்யப்பன் எங்க மாமா தான் என்று புதிதாய் கதை சொன்னான்.  சரி உட்காருங்க என்று செக்காலை ரோடை தாண்டி,  இடது பக்கம் திரும்பியவர், ஒரு சின்ன சந்தில் திரும்பினார்.  சந்து முனை வந்ததும்,  பெரிதாய் விரிந்த தெருவில், ஆள் நடமாட்டம் இல்லாமல், கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.  ஒரு அழிக்கதவு போட்ட வீட்டின் முன்னால் இறக்கிவிட்டு இது தான் என்று, அவரே அழைப்பு மணியை அழுத்தினார்.
 
யாரும் வருவதை தெரியவில்லை.  அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன்.  சில்லென்று இருந்தது வெயிலுக்கு இதமாக இருந்தது.  துணியெல்லாம் கழட்டி போட்டு அதுல உருளனும் போல தோன்றியது எனக்கு.  ரிக்ஷாக்காரர், கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு என்ன நினைச்சாரோ, காச வாங்கிட்டு கிளம்பிட்டார்.  தெரு முனை போனதும் திரும்பி ஒரு முறை சந்தேகமாய் பார்த்து விட்டு போனார்.  ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், இந்த ஆள் சுத்தமா அடையாளம் சொல்லிடுவாருன்னு தோன்றியது எனக்கு.   கதவை தட்டினான்.  சத்தத்தை காணோம், அழிகம்பியின் வழி, மேல் தாழ்ப்பாளை நீக்க, கதவு மளாரென்று திறந்தது. 
 
நீ போய் பார்த்துட்டு வா, நான் இங்கே இருக்கேன் என்று சொல்லிவிட்டேன்.  தேவைன்னா ஓடுறதுக்கு வசதியா அங்கேயே உட்கார்ந்து கொண்டேன்.  உள்ளே போனவன், ரொம்ப நேரமா ஆளை காணோம், என்ன ஆச்சோ தெரியலை.  எதேச்சையாய் பையை தொட்டு பார்க்க, இரண்டு கோஹினூர் பாக்கெட்டும் என்னிடம் இருந்தது.  அட இத விட்டுட்டு போயிட்டானே என்று யோசனை வந்தது.  பொறுமையை   இழந்து கொண்டு இருந்த போது, கதவைத தள்ளிக் கொண்டு, வந்தவள் குளித்து கொண்டு இருந்தாள் போல.   தலையில் ஈரத்துண்டும், பாவாடை தாவணியில் என்னை பார்த்ததும், வா சந்துரு!   உள்ள வா என்றாள்.
 
உள்ளே ஒரு நீளமான மரப்பெட்டி மாதிரி இருந்தது, உட்கார வசதியாய் ஒரு பெஞ்சு  போல இருந்தது.  அதன்  மேலே துணி விரித்திருந்தது.  அதில்  முருகேசு உட்கார்த்திருந்தான்.  இரு வர்றேன் என்று ஒரு அறையின் திரையை விளக்கி கொண்டு உள்ளே போனாள்.  அந்த அறையில் ஒரு டேபிள் அதில் மலரின் போட்டோ, சில புத்தகங்களும் இருந்தது.  பக்கவாட்டு சுவரில், சில புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்க பட்டிருந்தது. உயரமான கூரை போன்ற சீலிங்.  மரச்சட்டங்களில், ஓடு வேய்ந்திருந்தது.  உள்ளே டைனிங் டேபிளுக்கு முன்பாக இரண்டு தூண்கள், ஹாலையும், டைனிங் ஹாலையும் பிரித்தது.  எதிர்த்த மாதிரி நடையில் நுழைந்து இடது பக்கம் திரும்பினால், அடுப்பங்கரையாய் இருக்கும் என்று தோன்றியது.   வீடு அத்தனை வெளிச்சமாய் இல்லை.  இதான் வசதி என்று விட்டு விட்டாள்  போல.  ஜன்னல்கள் நிறைய இருந்த மாதிரி தான் இருந்தது, ஆனால் ஏனோ  திறக்கப்படவில்லை. 
 
நான் முருகேசை பார்த்து, பேன்ட் பையை தொட்டு காட்டி கோஹினூர் இருப்பதை உணர்த்தினேன். அவன் சும்மா இரு கொஞ்ச நேரம் என்றான்.  தலையை முடிந்து,  சிரித்து கொண்டே வந்தாள் மலர்.  அழகாய் தெரிந்தாள்  இன்று.  என்ன சாப்பிடுறீங்க என்ற போது ஒண்ணும் வேண்டாம், வெறும் தண்ணீ மட்டும் போதும் என்ற போது, ஒரு நடுத்தரவயதுள்ள பெண்மணி, மலரின் பென்சில் திருத்தங்களுடன் வந்தாள்.  இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க! மதியம் சாப்பிட்டு தான் போகணும் என்றாள். 
 
சரி என்றோம் ரெண்டு பேரும்  மையமாய்.    

Saturday, February 19, 2011

கழுத்துப்புண்...


நாகு வந்து சொன்னபிறகு தான் தெரிந்தது, ஜோதிக்கு. பதினொரு குடும்பம் இருக்கும் காம்பவுண்டில் இது போல நடந்தால், யார் தான் பொறுத்துக் கொள்வார்கள். வீட்டுக்காரக் கிழவியும் வந்து சத்தம் போட்டுக் கொண்டு இருந்தது. வீட்டுக்காரக் கிழவிக்கு தயவு தாட்சன்யமே கிடையாது, காம்பவுண்டில் ஒரு சின்ன சேதாரம் நேர்ந்து விட்டாலும், அது பேசுவது கேட்க முடியாது.  ஆனால் இது சின்ன தவறென்று சொல்ல முடியாது, பெரிய பிரச்னை தான்.  ஜோதிக்கு கையை ஊணி எழுந்திரிக்க முடியவில்லை, அனவாய் சுவரையும் பிடித்துக் கொண்டு எழுந்த போது மூச்சு வாங்கியது, எட்டு மாசம் தான் என்றாலும், வயிறு பெரிசாகி ரொம்ப சிரமமாய் இருந்தது. ரெட்டைப்பிள்ளை பிறந்து விடுமோ என்று பயமாகவும் இருந்தது.  இத்தனை சிரமத்திலும், வீட்டுக்காரர் வேலைக்கு போக ஏற்பாடுகள் செய்து,  முரளியை ஸ்கூலுக்கு அணுப்பி விட்டு வந்து விட்டாள்.  வந்த பிறகு தான் தெரிந்தது இத்தனை பிரச்னையும்.

வீட்டுக்காரக் கிழவி இவளைப் பார்த்ததும் சண்டைக்கு வருவது போல கூடியிருந்தவர்களை தள்ளிக் கொண்டு வந்து வசை மாரி பொழிந்தாள். அவள் வைறதைக் கேட்டு முசுமுசுன்னு அழுகை தான் வந்தது இவளுக்கு. நிறுத்த முடியலை அதுவும் நிறுத்தின பாடாய் இல்லை. எல்லாரும் மன்னிச்சுக்கிடுங்க, நான் வந்து சுத்தம் பண்ணித்தாரேன்! என்று கையெடுத்து கும்பிட்டவாறே கெஞ்சுவது போல பேசினாள். பக்கத்து வீட்டில் குடி இருக்கும் நாகு வெளியே வந்து, சரித்தா, ஜோதியக்கா சுத்தம் பண்ணிடும், அது என்ன செய்யும் பாவம், அவுக அத்தை பண்ண கூத்துக்கு என்று இவளுக்கு வக்காலத்து வாங்கி, வீட்டுக்காரக் கிழவியை அணுப்பி வைத்தாள்.

அளுகாதீங்கக்கா! அது கிடக்கு!  அத்தையை, உங்க வொதுனை வீட்டுக்கு அணுப்பிடுக்கா! அங்க அது பாட்டுக்கு எங்கிட்டு திரிஞ்சாலும் குத்தமில்ல, அது தான் வசதி கூட. சின்ன ஊரு, சுத்தி சொந்தக்காரவுஹ வேற இருப்பாக? வயித்த வேற தள்ளிக்கிட்டு, இத்தனை லோல் படணுமாக்கா! அண்ணன்கிட்ட பேசறது தானே! அண்ணன் புரிஞ்சுக்கிட மாட்டாரா என்ன? என்று தேறுதல் சொல்லிவிட்டு நகர்ந்தாள். நாகு போனவுடன், கதவை மூடி விட்டு அடுப்படியில் உட்கார்ந்து அழுதாள், இயலாமையில் அழுகை தவிர ஆறுதல் இல்லை. அம்மா இல்லாதது எவ்வளவு பெரிய குறை என்று தோன்றியது அவளுக்கு.

கோமதி அம்மாள் தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். ஜோதியின் மாமியார்.  மாமனார், முரளி பிறந்த ஒரு வருஷத்திலேயே இறந்துவிட்டார்.  தண்ணி கொண்டு வா! என்று நெஞ்சை பிடித்தவர், நொடிகளில் தண்ணீர் குடிக்காமலே இறந்து விட்டார். அவம்பொறந்த நேரந்தான், மகராசன் போயி சேந்துட்டாருன்னு எப்போதும் புலம்புவாள் ஜோதியோட மாமியார்.  அதனால முரளியக் கண்டாலே பிடிக்காது, ஒரு வெறுப்பு. அவன் பக்கத்துல போனாலே சிடு சிடு என்பாள். தலைல கல்லப் போடலாமா என்று மனசுக்குள் தோன்றும். என்ன மனுஷி இவ, எட்டு பத்து பிள்ளைய பெத்தும், குழந்தையக் கண்டா ஒரு பிரியம் இல்லையே என்று தோன்றியது. ஜோதியின் மாமியாருக்கு, மாமனாரை விட இரண்டு வயது அதிகம். சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று, மாமியாருக்கு பதினாறு வயது இருக்கும்போதே திருமணம் செய்து வைத்து விட்டார்கள் போல.

ஆறேழு வருஷம் கழிச்சு வரிசையா பத்து அல்லது பதினொரு பிள்ளைகள்.  இன்னைக்கும் இருப்பது மூணு மாத்திரம் தான். அதிகம் போனா எழுபது வயசு தான் இருக்கும்.  மாமனார் இறந்து பதினாறாம் நாள் காரியம் முடிந்தது, ரவிக்கை போடுவதை நிறுத்திவிட்டாள். வெறும் சுங்கடிச் சேலை, இல்லேன்னா, ஒன்பது கெஜம் சொசைட்டி சேலை. காலையில், குளிச்சிட்டு, சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு நெத்தி நிறைய துன்னூரைப் பூசிட்டு வந்து உட்கார்ந்ததுக்கு அப்புறம் தான் காஃபியே குடிப்பாள். அப்படி ஒரு சுத்தபத்தமான ஆளாகக் காட்டிக் கொள்வாள் எப்போதும்.

கோமதி அம்மாளுக்கு. ஞாபகமறதி அதிகம் வருகிறது இப்போதெல்லாம். ஞாபகமறதின்னா, வச்ச பொருள் எங்கேங்கிற மாதிரி இல்லை.  புள்ளையவே மறக்குற மறதி...  வீட்டோட வழி மறக்குற மாதிரி... சாப்பிட்டுக் கொஞ்ச நேரத்துலேயே... இவ ஒண்ணும் குடுக்க மாட்டிங்கா! என்று குற்றம் சொல்வது மாதிரி. இட்லிய அவிச்சு அவிச்சு இறக்குறா, இவ்வளவு நேரமாச்சு இன்னும் பலகாரம் கொடுக்கல்ல! இதுக்கு சின்னவன் வீட்டுக்கே போயிடலாம், ரெண்டு வசவோட பழையதாவது ஊத்துவா! என்று வீட்டுக்காரக் கிழவியிடமும், காட்டூரணி ரேணுகாவிடமும் புலம்புவாள்.  கடைசி வீட்டு ரஞ்சிதத்துக்கு, சொல்லவே வேணாம், மத்தவுகளாவது, அடி ஆத்தின்னு கேட்டுட்டு விட்டுடுவாக. ரஞ்சிதம் இன்னும் கூடுதலாய், அடிப் பாதகத்தி என்ற அளவுக்கு ஈரப் பேனாக்கி பேன பெருமாளாக்கிடுவா.

இன்று காலைல எழுந்து வழக்கமா கக்கூஸில் போவதை விட்டு, கிணத்தடியிலேயே போய்விட்டாள் ஜோதியின் மாமியார்.  பதினொரு வீடுகள் இருக்கிற காம்ப்வுண்டில் இது போல செய்தால்?. அதோட நிற்காமல், வெளியவே போயிட்டது தப்புண்ணு தோனி, அதை சுத்தம் செய்வதாய் நினைத்து கையில் எடுத்து கக்கூஸில் போட நினைத்திருக்கிறாள் போல. எடுத்து வழியெல்லாம் சிந்தி,  வழித்து திரும்ப அள்ளி, கையெல்லாம், சீலைத்துணியெல்லாம்  நரகல். அதோடு நிற்காமல் வாரி அலசி விட நினைத்து, கிணற்றில் நீர் சேந்த ஆரம்பித்திருக்கிறாள்.  ராட்டினக்கயிறு, ராட்டினம், கிணற்று மேல் உறை எல்லாம்  நரகல். இதைப் பார்த்ததும் தான் வீட்டுக்கார கிழவி கத்த ஆரம்பித்து விட்டாள் போல.  இதை எப்படி சுத்தம் பண்ணுவது என்று நினைக்கும் போதே அவளுக்கு குமட்டியது.  அவரிடம் எது சொன்னாலும் எடுபடாது, கொஞ்ச நாளைக்கு இருக்குமா? அணுசரிச்சுக்கோ என்று சொல்லிவிடுவார். நாகு சொல்வது போல, ஜோதியின் கணவர் புரிந்து கொள்கிற ஆளில்லை. இதுபற்றி அவள் பேசியபோதெல்லாம், முடியாதென்று மறுத்து தான் இருக்கிறார். 

அங்கெல்லாம் அணுப்பமுடியாது ஜோதி! எங்க அக்கா புருஷன் ஒழுங்கா பாத்துக்க மாட்டாரு. வாசத்திண்ணையில கிடத்திடுவார், அது பாட்டுக்கு, சீந்து வாரில்லாம கிடக்கும்.  இதப்பத்தி பேசுனாலே போ, மாசாமாசம் முன்னூறு நானூறு ரூவா அணுப்பச் சொல்லுவார், நம்மால முடியாது.  அதுக்கு இங்கேயே வச்சுட்டு சிரமத்தோட சிரமமா நாம பாத்துக்குறது தான் தேவலை என்று முற்றிலும் மறுத்து விட்டார்.  அவருடைய அக்கா பொண்ணை வந்து பாத்துக்கொள்ள  சொன்னபோதும் அணுப்பவில்லை.   நாத்தனார் வீட்டிலிருந்து, ஒத்தாசைக்கு யாரும் இல்லாம கஷ்டப்படும் போது உதவிக்கு ஒரு வாரம் சமைஞ்ச குமரிகள்ல ஒண்ணை அணுப்பிச்சா என்ன குறைந்து விடப்போகிறார்கள் என்று தோன்றும். ஆனால் பேசிப் பலனில்லை. இரும்பு வாளியை தண்ணீரோடு தூக்கிக் கொண்டு நடந்தாள்.  நாகு வீட்டைத் தாண்டும் போது, மேலும் தூக்க முடியாமல் நங்கென்று அங்கேயே வைத்துவிட்டாள்.  நாகு! என்று குரல் கொடுத்தாள்.  நாகு கிணற்றடி வரை வாளியைத் தூக்கி வந்து கொடுத்தாள்.

நான் தண்ணீ ஊத்துறேன்க்கா, நீங்க கழுவுங்கக்கா என்று ஊற்றினாள்.  ராட்டினக்கயிற்றை முழுதும் இழுத்து வெளியே விட்டுக் கழுவினாள்.  புழங்கிய இடத்தில் எல்லாம் நீர் வாரி ஊற்றியதில் இடுப்பு பிடித்துக் கொண்டது மாதிரி இருந்தது.  இரவில் வெந்நீர் வைத்து ஊற்ற வேண்டும் இடுப்பிலும் என்று நினைத்துக் கொண்டாள். நாகுவின் உதவி கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது.  மொத்தமும் கழுவி நிமிர்ந்து, முரளிக்கு சாப்பாடு கொண்டு போக வேண்டும் என்று அவசரமாக முடித்து விட்டு, நாகுவின் கையைப் பிடித்துக் கொண்டு  நன்றியாய் பார்த்து சிரித்தாள். நாகுவைத் தவிர வேறு யாரும் பெரிதாய் உதவிக்கு வருவதில்லை இந்த காம்பவுண்டில். ஆனால் உச் கொட்டி கதை கேட்க ஆட்கள் அனேகம் உண்டு.

வாளியையும் தென்னமாரையும் கழுவி விட்டு, வீட்டிற்கு திரும்பினாள்.  எலும்பு சூப்பை தூக்குச்சட்டியில் ஊற்றிக்கொண்டு, பருப்பும், நெய்யும் சேர்த்து பிசைந்த சாதத்தையும், மிளகுக்கறியையும் எடுத்து வயர்கூடையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள், முரளிக்கு சாப்பாடு கொடுக்க.

வாசலைக் கடந்து தெருவில் காலை வைத்தபோது, மாணிக்கம் கடையின் முன்னால், கோமதி அம்மாள், அவளைக் கடந்து போகும் யாரோ ஒருவரிடம், காசு கேட்டுக்கொண்டிருந்தாள். ஜோதிக்கு அவமானமாயிருந்தது, எத்தனை செய்தாலும், போய் மற்றவரிடம் கையேந்துவது கண்டு கலக்கமாய் இருந்தது.  முரளிக்கு ஏதாவது வாங்கி வரும்போது, கோமதி அம்மாளுக்கும் ஒரு பங்கு நிச்சயம் இருக்கும்.  கையில் செலவுக்கு மட்டும் சில்லறை கொடுப்பது இல்லை. கொஞ்சம் சில்லறை கொடுத்தால், காசி கடையில் போய் சுருட்டு வாங்கிப் பிடிப்பாள் என்பதால், சில்லறை கொடுப்பதில்லை. அதனால தான் தெருவில் போகிற வருகிறவரிடம் காசு கேட்க ஆரம்பித்து விட்டாள் போல. 

முரளிக்கு அவனுடைய பாட்டியைக் கண்டாலே பிடிக்கவில்லை.  பாட்டியால் அம்மா அழுவது, அவனுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கிவிட்டது போல. சாப்பாடை மாணிக்கத்திடம் சொல்லி, அவன் கடையில் வேலை பார்க்கும் பையனிடம் கொடுத்துக் கொடுக்கச் சொல்லிவிட்டு, கோமதி அம்மாளை இழுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். ஒவ்வொரு நாளு ஒவ்வொரு பிரச்னை, இதெல்லாம் வேலை முடிந்து இரவில் வருபவரிடம் சொன்னால் அவருக்கு கேட்கக் கூட நேரமிருக்காது.

ஒருமுறை தெருவில் நின்று கொண்டு முழுச்சீலையையும் உருவி கீழே போட்டுவிட்டு, திரும்ப எடுத்து கட்ட முயற்சித்துக் கொண்டிருந்த மாதிரி தான் தெரிந்தது. என்னதான் வயதானவள் என்றாலும், துணியில்லாமல் ஒருத்தி தெருவில் நிற்பது சகிக்கமுடியுமா என்ன?  மீசைக்கார நவநீதன், முரளியிடம் டேய்! உங்க அம்மாகிட்ட வந்து கூட்டிட்டு போகச் சொல்லு, என்று தலையில் அடித்துக் கொண்டார் போல. அதைப் பார்த்த போது, முரளிக்கு கோவம் வந்து விட்டது, ஜோதியிடம் வந்து சொல்லிவிட்டு, அம்மா! இந்த பாட்டி நமக்கு வேண்டாமா? எங்கேயாவது போயி விட்டுடலாம்மா என்று அழ ஆரம்பித்தான்.  ஜோதி போயி இழுத்து வந்து அவளைத் திட்டிய போது, சீலை சரியா இல்ல, அதான் கட்டிட்டு இருந்தேன், அதுக்கு போயி கத்துற... என்று ஏதோ கெட்ட வார்த்தையிலும் திட்டினாள். 

ஜோதிக்கு பதில் பேசவே வரலை, என்ன கருமத்துக்கு இதெல்லாம் கேட்கணும் என்று அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.  பாத்துக் கொண்டிருந்த முரளி, கையில் கிடைத்த கிளியாஞ்சட்டியை எடுத்துப் பாட்டியின் தலையில் அடிக்க,  நல்லா அடிபட்டு ரத்தம் வந்து விட்டது.  ஒரு கையில் தலையைப் பிடித்துக் கொண்டு, ஒரு கையால் தூத்தி வாரிக் கொண்டிருந்தாள். தூமியக்குடிக்கி, தூமச்சீலை என்று ஏதேதோ திட்ட ஆரம்பித்தாள். ஜோதி கதவப்பூட்டிட்டு, முரளியையும் அழைத்துக் கொண்டு, மீனாட்சி அக்கா வீட்டிற்கு போய், அந்த அக்காவிடம் எல்லாவற்றையும் சொல்லி சொல்லி அழ ஆரம்பித்தாள் மீனாட்சி அக்காவுக்கும் எப்படி இவளைத் தேற்றுவது என்று தெரியவில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட்டு, அதுவும் கொஞ்சம் அழுததும், இவளுக்கு மேலும் சங்கட்டமாக போயிவிட்டது.

பேசிக்கொண்டிருக்கும் போதே தடாரென்று சத்தம் கேட்டது.  பதறிப்போய் வெளியே வந்தபோது, சீலை காயவைக்க மாடி ஏற முயற்சித்த கோமதி அம்மாள், கீழே கிடந்தாள், தலையெல்லாம் ரத்தம் வழிய, படிகளைத் தாண்டி.  ஜோதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மாமியாரை பார்த்த படியே நின்றாள்.  மற்ற வீடுகளில் இருந்து பாகீரதி அம்மாளைச் சுற்றி கூட ஆரம்பித்தார்கள்

Monday, February 07, 2011

நுழைபுலம்...


பால் பூத்திற்கருகில் வந்தபோது தான் கவனித்தான் ஒரு யானை பால் பூத்திற்கு குறுக்காக நின்று கொண்டிருப்பதை.  முட்டுசந்தின் “ட னா முனையில் அமைந்திருந்த பால் பூத்தின் மறுபக்கம் ஒரு லாரி நின்றிருந்தது.  லோடு கொண்டு வந்த லாரியாய் இருக்கலாம்.  பால் பூத்தை நெருங்கும்போது பால் கவிச்சி வாடை ஒரு மாதிரி குமட்டியது அவனுக்கு.  யானையும், லாரியும் பால் பூத்தை மறைத்துக் கொண்டு நின்றதால், அவனுக்கு பால் பூத்திற்கு போக வழியில்லாமல் அடைபட்டு கிடந்தது.  கொஞ்சம் நேரம் பாகனைத்தேடியவன், காணாமல் போகவே, நின்று கொண்டிருந்த யானைக்கு அடியில் இடம் இருப்பது தெரிந்து தவழ்ந்து போய்விடலாம் என்று முடிவு செய்தான். கைலியை தூக்கிக் கட்டிக் கொண்டு, யானைக்கு அடியில் போக குனிந்து உள்ளே நுழைந்தான். என்ன நினைத்ததோ, யானை திடீரென்று உட்கார்ந்து விட்டது. மூச்சுத்திணறி, கண்கள் பிதுங்க, கையையும், காலையும் ஆட்டியபடியே வெளியே உடம்பை இழுத்தபோது தரையின் குளுமை உடலில் பட. படக்கென்று முழித்தான். டைம்பீஸை பார்த்தபோது ரேடியம் தடவிய முட்கள் மணி விடிகாலை மூணே முக்கால் என்றது.  எழுந்தவன், நாலு மணிக்கு வைத்திருந்த அலாரத்தை அமர்த்தினான்.

உடல் முழுதும் நணைய தொப்பலாய் வேர்த்திருந்தான், கரண்ட் போய்விட்டிருந்தது தெரிந்தது.  என்ன மாதிரியெல்லாம் கனவு வருது, அவகிட்ட சொன்னா சிரிப்பா! எதுக்கெடுத்தாலும் எளக்காரம் தான், அதுவும் இவன் விஷயம் என்றால் இன்னும் அதிகம். எப்படித்தான் இப்படில்லாம் கனவு வருதோ உங்களுக்கிண்டு? புஷ்பத்துக்கு எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்.  கல்யாணத்தன்று கூட, சங்கத்துப் பெரியவர் திருக்குறள் படித்து தாலியெடுத்து தரும்போது அவர் தெற்றுப்பல்லைப் பார்த்து சிரித்து விட்டாள். மைக்கிற்கு முன்னால், தெற்றியப்பற்களுக்கிடையே காத்தும் வார்த்தையும் கலந்து ஒரு விசில் மாதிரி வர, அதுக்கும் சிரிப்பு.  இவனுக்கு மேடையில இருக்குறவுங்க என்ன நினைப்பாங்களோ கவலையா இருந்தது. மஹாஜன சங்கத்தில் இருந்து பெரிய ஆட்களெல்லாம் வந்திருந்தார்கள்.

சிரிக்கும்போது கண்கள் சுருங்கி பார்க்க வசீகரமாய் இருப்பாள் புஷ்பம்.  பொடியா முத்துவைச்ச மூக்குத்தியும், காதை ஒட்டிய இலைத்தோடும், அவளுக்கு அத்தனை பாந்தமாய் இருக்கும். அவள் சிரிக்கும்போது சுருக்கிய மூக்குத்தியும் சிரிப்பது போலிருக்கும் அவனுக்கு. சேர்மக்கனிக்கு நல்ல யோகந்தான்லே! என்று எல்லோரும் சொன்னது, இவனுக்கு பெருமையா இருந்தது.  புஷ்பத்தோட அப்பா சுப்ரமணியபுரம் மார்க்கெட்ல தேங்காக்கடை வச்சிருக்கார், நாலு பெண்கள், இவ தான் மூத்தவ. அவளோட அம்மாவின் நிறம் அப்படியே, நல்லா கழுவி ஊற வச்ச வெந்தயம் மாதிரி அப்படி ஒரு நிறம். இவனுக்கு.

குழந்தையும், புஷ்பமும் டிவி ஸ்டாண்ட் ஓரத்தில் வளைந்த மாதிரி உறங்கிக் கொண்டிருந்தார்கள்.  புஷ்பம் படுத்திருந்த கோணத்தையும், அக்குளில் வியர்வைப்பூத்து, முன்பக்கமாய் வழிந்திருந்த முந்தானையின் ஊடாய் ரவிக்கை தப்பிய வெளுத்த மார்பின் வழி பிரண்டு கிடக்கும், தாலியையும் பார்க்க கிறக்கமாய் இருந்தது சேர்மக்கனிக்கு. அவளின் மார்போடு ஒட்டிக்கொண்டு உறங்கும், பிசுபிசுத்த வாய் பிளந்து உறங்கும் குழந்தையைப் பார்க்க பார்க்க ஆசையாய் இருந்தது. திரும்பவும் அவர்களை கட்டிக் கொண்டு படுக்க வேண்டும்போலத் தோன்றியது, ஆனால் முடியாது.  இப்போது கிளம்பி யானைக்கல்லுக்கும், சந்தைக்கும், கீழவாசல், தெற்குவாசல் கமிஷன் கடைகளுக்கும் போகவில்லை என்றால், கடைய ஆறுமணிக்கு திறக்கமுடியாது.

காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, கக்கூஸில் கிடந்த  நடுவே துளையிட்ட மரஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு குளிரக் குளிர கிணற்றுத்தண்ணீரில் குளித்தான். ஈரத்துண்டோடு அவன் அப்பா, அம்மாவின் படத்தின் முன்னால் வந்து நின்று சாமி கும்பிட்டுவிட்டு, சூடத்தட்டில் இருந்த விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டான், இன்னைக்குப் பொழுது நல்லா இருக்கணும் மகமாயி என்று வேண்டிக் கொண்டான்.

அடுப்படியில் நுழைந்து காப்பிக்கு டிகாக்‌ஷன் கலந்து வைத்துவிட்டு, இவனுக்கு மட்டும் கொஞ்சம் கருப்பட்டி போட்டு கருப்பட்டி காப்பி செய்துகொண்டான். அவளை எழுப்பாமல், கதவைத் திறந்தவன், சீட்டின் அடியில் சொருகியிருந்த துணியை எடுத்து சைக்கிளைத் துடைத்தான். அது சைக்கிள் வாடகைக்கு விடற கடையில இருந்து வாங்குனது. சிறுவர்களுக்கான சைக்கிள் அது.  பெரிய சைக்கிளில் இப்போது கால் எட்டுவதில்லை. சைக்கிளுக்கு வியர்த்ததுபோல முத்துமுத்தாய் பனி இருந்தது, பனியைத் துடைத்து காரியரை விரித்து, அதில் சுற்றியிருந்த பிரித்து மறுபடி கயிறை சீராக சுற்றிக்கொண்டான்.  கதவை ஓசைப்படாது மூடி, வெளிப்பக்கமாக தாழிட்டான். புஷ்பம் பின்பக்கக் கதவைத் திறந்து முன்வாசல் வந்து விடுவாள், காலையில்.

சந்தையில் காய்கறிகளும், கீழவாசல், தெற்கு வாசல் கமிஷன் கடைகளிலும், பருப்புகள், கருப்பட்டி, வெல்லம், எண்ணெய் எல்லாம் வாங்கிக் கொண்டான்.  சைக்கிளில் ஏற்றமுடியாத சரக்குகளை ஒரு டிரைசைக்கிள் வாடகைக்குப் பிடித்து  அனுப்பினான். வழக்கமாய் வருபவன் என்பதால், அவனே கடைக்கு போய்விடுவான், இவன் போக சிறிது லேட்டாய் ஆனாலும், அவன் காத்திருப்பான். சாயங்காலமாய் போய் ரேஷன் கடை தயாளனைப் பார்க்க வேண்டும், அரைமூடை ஜீனியும், இருபது லிட்டர் மண்ணெண்ணெய்யும் எடுத்து வைக்கச் சொல்லணும். புஷ்பத்தைப் போகச்சொன்னா, அந்தாளு ஒரு மாதிரியா பாக்கான் மாமா! அவ மூஞ்சியும் எச்சி வடிஞ்சா மாதிரி மீசையும் நான் போகமாட்டேஞ்சாமின்னு! சொல்லிடுவா, இவந்தான் போகணும். வாஸ்தவந்தான், அவன் பொம்பளங்கன்னாலே தனிக்கவனமாத்தான் இருப்பான் எப்போதும் என்று நினைத்துக் கொண்டான்.

மீதமிருந்த காசில் கடலை எண்ணெய்யும், ஊமைச்செட்டியார் செக்கில் தும்பை எண்ணெய்யும் வாங்கிக் கொண்டு சைக்கிளை மிதித்தவனின் வலது கெண்டைக்காலில் இருந்து நீர் கசிந்து, வழிந்து ரப்பர் செருப்பில் ஒட்டியது. வழிந்தது தெரியவில்லை.  ஆனா முன்பை விட இப்போது வலி மட்டும் அதிகமாய் இருப்பதாய்ப்பட்டது.  சைக்கிளில் அதிகம் கனமில்லை சில்லறைச் சாமான் கொட்டானும், வத்தல் மூடைமட்டும் தான் இருந்தது. எண்ணெய் டின் இரண்டும் சைக்கிள் ட்யூப்பில் கட்டி இரண்டு பக்கமும் தொங்க விட்டிருந்தது. முன்பெல்லாம் இதை விட அதிகம் கனமான பொருளெல்லாம் சைக்கிளிலேயே தூக்கிவந்திருக்கிறான் சேர்மக்கனி, காலில் அடிபட்ட பிறகு இது எதுவும் முடியவில்லை. 

சின்னையாபுரத்துக்கு குடும்பத்துடன் குலசாமி கும்பிட போயிட்டு எல்லாருமா திரும்பி வரும்போது நடந்த ஆக்சிடெண்ட்ல இரண்டு காலிலேயும் கெண்டைக்கால் எலும்பு ரெண்டு உடைஞ்சு போயி ரொம்பவே சிரமப்பட்டான்,  இன்னும் படுகிறான். அஞ்சு மாசத்துக்கு மேல கடையத் தொறக்கமுடியலை. அவனோட மாமனார் தான் முழுக்க முழுக்க பாத்துக்கிட்டார். சேர்மக்கனியின் பெரியய்யாவுக்கு, முதுகெலும்பு உடைஞ்சு, போன மாதம் வரை உயிரோடு இருந்தவர், போனவாரம் இறந்து போனார். அதுக்கு வேற ஊருக்குப் போகணும்.  இந்தக் காலை வச்சுட்டு எங்கேயும் போக முடியறதில்லே, சொன்னாப் புரியாது என்ன கருமத்துக்கு சொந்தம்பந்தமெல்லாம் என்று தனக்குத்தானே வாய் விட்டு சொல்லிக் கொண்டான்.

கடையை அடைந்தவுடன் அண்ட்ராயரில் போட்டிருந்த சாவியைத் துழாவி, அடிதண்டாவில் இருக்கும் பூட்டுக்களை முதலில் திறந்து, கதவை ஒவ்வொன்றாக பிரித்து ஒதுக்கி வைத்தான்.  முன்னால் தார்சாலில் தொங்கிக் கொண்டிருந்த சாக்குப்படுதாவை லேசாக இறக்கிவிட்டான். கடைக்குள் கை விட்டு தென்னமாரை எடுத்துப் முன்வாசலை பெருக்கினான். டிரைசைக்களில் சாமான்கள் கொண்டு வந்தவன், கடைக்குள் இறக்கிவிட்டு, தலைப்பாகையில் இருந்து எடுத்த பீடியைப் பத்தவைத்துக் கொண்டான். 

அண்ணே! எப்படிண்ணே யாவாரமெல்லாம், போயிக்கிட்டு இருக்கு? என்றான் வந்தவன், பல்லில் பீடியின் நுனியைக் கடித்துக் கொண்டே. 

நீதான் பாக்குறேல்ல பாண்டி! சாமான் எவ்வளவு வாங்கிட்டு வந்தேன்னு! இந்த அரிசியும் பருப்பும், ஒரு மாசத்துக்கு ஓடும்!  பலசரக்குக் கடை மாதிரியா இருக்கு! ஸ்டிக்கர், லக்கிபிரைஸ், வாடகை சைக்கிள், சின்னப்புள்ளைகளுக்கு தீப்பெட்டிப்படம், பாட்டுபுஸ்தகம், பிளாஸ்டிக் சாமான் இது தான் அதிகமா ஓடுது.  பலசரக்கு மட்டுமேன்னு இருந்திருந்தா அவ்வளவு தான்! இந்த லட்சணத்தில கடஞ்சொல்ற கிராக்கி தான் நிறைய்ய இந்த தெருவுல.  அதே எங்க மொதலாளி தங்கராஜண்ணே கடைக்குப் போய்ப் பாரு, ஒரு பய கடஞ்சொல்லமாட்டான்.  நமக்கு வர்றவன் போயிடக்கூடாதேன்னு பயம்.  சரி ஒங்கிட்ட பொலம்பி என்ன பண்ண? எவ்வளவு ஆச்சு என்று பேசி அவனிடம் கூலியைக் கொடுத்து அணுப்பி வைத்தான்.

கடையைத் திறந்ததும் முதலில் ஒரு தேங்காயை எடுத்து உடைப்பான்.  முதல்ல உடைக்கிற தேங்காய்த் தண்ணீரை அப்படியே தரையில் விட்டுவிடுவது தான் வழக்கம். அவங்க அய்யாகிட்ட இருந்து இப்ப அவனும் அதையே பழகிவிட்டான்.  உடைத்த தேங்காய் மிச்சமிருந்தாலும், புதிதாய் தேங்காய் உடைக்கவேண்டும். மற்ற நேரங்களில் சிறு பிள்ளைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களை அழைத்து சிரட்டையில் தேங்காய்த் தண்ணீர் தருவது சேர்மக்கனிக்கு வழக்கம்.  தேங்காய் உடைத்தபிறகு, பத்தி கொளுத்தி வைத்து, தராசுத் தட்டில் சூடம் ஏற்றி, அவன் அப்பா, அம்மா படத்திற்கு, சின்னய்யாபுரம் பேச்சிக்கு எல்லாம் காட்டி பயபக்தியாய் சாமி கும்பிட்டான். 

வாங்கிவந்த காய்கறிகளை சரிபார்த்தவன், முன்னால் வைத்திருக்கும் கூடைகளிலும், கொட்டான்களிலும் பரப்பி வைத்தான். உள்ளிருந்து வாடகைக்கு விடும் சைக்கிள்களை வெளியே நிறுத்தினான், லக்கிபிரைஸ் அட்டைகளையும் வெளியே எடுத்து மாட்டினான் கடைக்குள் நுழைந்து சின்ன மரஸ்டூலை இழுத்து, கால்களை நீட்டி உட்கார்ந்தான்.  கால் புண்களில் வழிந்த நீரை, அப்போது தான் கவனித்தான். அங்கிருந்த பேப்பரை கிழித்து துடைத்தான், பிறகு வேறொன்றை எடுத்து ஒட்டியது போல வைத்தான்.  ஈக்களுக்கு எப்படித்தான் தெரியுமோ, உடனே கால்களில் வந்து மொய்க்க ஆரம்பித்து விட்டது. ஈ ஒண்ணொன்னும் மாட்டு ஈ கணக்கா பெரிசா இருந்தது. அது புண்ணில் உட்காரும்போது வலி மண்டைக்குள்ள ஏறும் தாங்க முடியாது. கடை ஒண்ணும் பெரிசு இல்லை, வெறும் ஆறுக்கு நாலு தான், அதனால தாராளமா ஒண்ணும் நீட்டமுடியாது. இருப்பதற்குள்ளேயே சமாளிக்கணும். உள்ள வச்ச பிளேட்ட எப்ப எடுக்குறதுன்னு தெரியலை.

காந்தியக்கா மகன் டவுசரில் அண்ணாக்கயிற்றை ஏத்திக்கிட்டே வந்தான்.  அண்ணாச்சி! சைக்கிள் குடுக்கீயளா? அப்பாவுக்கு டீ வாங்கியாறனும்னு, கையில் இருந்த தூக்குவாளிய ஆட்டிக்கிட்டே கேட்டான்.  காசு எவ்வளவுடா வச்சிருக்கே? எட்டணா என்றவனிடம் இருந்து காசை வாங்கிக் கொண்டு போயிட்டு பெரிய முள்ளு ரெண்டுக்கு வரும்போது வந்துடணும் என்று கடிகாரத்தைக் காட்டினான். வாங்கிக் கொண்டு பறந்தான் காந்தியக்கா மகன். புஷ்பம் வந்தாள், முகம் கழுவி புதிதாய் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாள். அவள் கையில் தூக்குப்போணி இருந்தது.  காலையில் ஏழு மணிபோல சரியா வந்துடுவாள் டீத்தண்ணிய எடுத்துக்கிட்டு. கழுத்தை முந்தானையில் துடைத்தபடியே தலைசாய்த்து சிரித்தபடியே வந்தாள். எவ்வளவு அழகு நம்ம பொண்டாட்டி என்று நினைத்துக் கொண்டான்.

மாமா இந்தாங்க டீ! ஜீனி தீந்து போச்சு, கடையில இருக்கிறது எடுத்துப் போட்டுக்கிடுங்க என்றாள்.  கடையின் எதிரில் இருக்கும் காம்பவுண்டை அப்பப்போ பார்த்துக் கொண்டாள். இவனுக்கு எரிச்சலாய் இருந்தது, டீயக் கொடுக்க வந்தவ, கொடுத்துட்டு வீட்டுக்குப் போகணும் இல்லேன்னா, கடைக்குள்ள வரணும், ரெண்டுமில்லாம அங்க என்ன வேடிக்கை வேண்டிக்கிடக்கு? என்று தோன்ற, அவனேயறியாமல், தாடை எலும்புகள் விடைத்தது.  இவ வர்ற நேரம்பாத்து கரெக்டா அவனும் வந்துடுவான், ஊர்ல இருந்தா. வந்துட்டான்!  பூப்போட்ட லுங்கி, ஒரு சிகப்புக் கலர் முண்டாபணியன், கழுத்தில ஒரு கருப்புக்கயிறு தாயத்து, வழியிற மீசை, சப்பையா ஒரு மூஞ்சி, கோரை முடி பாக்க சகிக்கமாட்டான், அவன் நிறத்தைத் தவிர வேற ஒண்ணும் கிடையாது. அவன் கூட நின்னு மணிக்கணக்கா பேசுவா!

அண்ணே கத்திரி சிகரெட் பாக்கெட் ஒண்ணு கொடுங்க அண்ணே என்று சொன்னவன், இவளைப் பார்த்து நமக்கெல்லாம் டீ கெடையாதா? என்று ஒருவகையா இழுத்தமாதிரி உரிமையுடன் கேட்பது போல கேட்டான். ம்... எதுல பிடிப்பீக, உங்க லுங்கியிலயா? என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.  இவன் கத்திரி சிகரெட் இல்லை பரமா? என்றான். இவனிடம் இருக்கு, கொடுத்தா, பிடிச்சுக்கிட்டு இங்கேயே நிப்பான், அவளும் அவம்போகிற வரை போகமாட்டா! இதெல்லாம் பாத்துட்டு நிக்கணுமா? என்று தோன்றியது அவனுக்கு. 

Saturday, February 05, 2011

நனுபாலிம்ப...

அகண்ட தெருக்களில் உருளும் தேர்ச்சக்கரங்களின் மசி அப்பிய கடையாணிகளென தாங்கி நிற்கும் சப்தகதிகள் பதுமைகள் மேல் நின்று கொண்டிருக்கும் மண்டபத்தேர் தாண்டி நீண்டு கொண்டிருக்கும் ஒற்றைத் தந்தியின் ஸ்ருதி வளர்த்த வடம் பற்றி இழுக்க நகராமல் நின்ற தேர்சக்கரங்களின் மரக்கால்களில் துளிர்விட்ட இலைகளில் இருந்து உதிர்ந்த ஒற்றை சருகு அடியில் இருந்து அகற்ற நகர்ந்த கதையை பாடியவர்களின் பக்தியில் இல்லாத கடவுள், முயங்கி களைத்த நிமிடங்களின் ஆசுவாசத்திற்கு அழைக்கும் பாட்டில் மட்டும் உறைவானோ அல்லது முக்கண்ணனின் சிரம், கரம் பற்றிக் கொள்ள தன்னுள் சேர்த்துக் கொண்டவனை தன்னை ரட்சிக்க அழைத்தவனை ஆரத்தழுவி தேற்றுவானோ என்ற சந்தேகங்களின் ஈக்கள் மொய்க்கின்ற பறிக்கப்பட்ட தடாக மலர்களின் விழியில் இருந்து சொட்டுவது தண்டுகள் உறிஞ்சி வைத்து துப்பும் நீரா அல்லது தேனா என்று தெளிவதன் முன்னம் சிந்தை குளிர்ந்த கடவுள் இரங்கி அளித்த வரங்களில், சொல்ப குறைவுடன் முழுமை தந்த சுநாதங்களின் மாத்திரை அளவில் ஏறி இறங்கும் பயணங்களின் இறுதியில் அடைவது வைகுந்தனின் பாதகமலங்கள் தானோ.

கடவுளை மெய்பிக்க வந்த உண்மைகளில் பக்தியும், காதலும், காமமும் தெளிதாயின. அலங்கார கட்டுக்களில் இருந்து சற்றே விலகி, மோன நிலைச்சமன்கள் இட்டு நிரப்பிய கோப்பையில் வழியும் இசை சார்ந்த அளபெடைகளின் மேலே நகர்ந்தும் ஊர்ந்தும் செல்லும் சர்ப்பமென வளர்ந்து மின்னும் பளபளப்பில் கிறங்கி அதனுள் வழுக்கிச்செல்லும் 72 அடுக்கு மாளிகைகளுக்குள் எந்த அறையில் ஒளிந்து இருக்கும் பெயரறியா சப்தங்களும், மோனங்களும்? ஏறவும் இறங்கவும் ஆறு படிகளை கொண்ட பாதையில், தத்திச் செல்லவும், தாண்டிச் செல்லவும், ஓடிச்செல்லவும், எல்லாம் வகையிருக்கும் அதன் கைப்பிடிக்கட்டைகளின் 18 எண்ணம், தொட்டு தடவி உணர்ந்த விழியற்றவனின் தொடுபுணர்தலில் இருந்து ஜனித்த குழந்தை பேரழகியென குழிவயிறும், குவி ஸ்தனங்களும், கோபுர முலைகளுமாய் நெற்றித்தடத்தில் கீற்று நிலாவுமாய் சிறு நகை, பெருவிழி, துளை நாசியென தொன்மங்களின் படிம நிலைகள் கடந்து அதே சுகந்தத்தில் இழுவும் மயிற்பீலியின் வர்ணங்கள் இட்டு நிரப்பிய கிண்ணங்களில் நிறைந்து, வழிந்து, தெறிக்கும் சுத்த சப்தங்கள் முனகிச் செல்லும் பாட்டில் ஸ ரி க ப த ஸ வும் ஸ த ப க ரி ஸ வும் சீண்டிச் செல்லும் கம்பிகளில் விழுந்த காதல், இளையராஜாவின் கையில் பட்டு இப்படியானது. “ஒரு ராகம் பாடலோடு காதில்”

ஆனந்தராகம் படத்தில் அமைந்த இந்த இருகுரலிசையில் இருக்கும் குரல்கள், பிரபஞ்சம் பதுக்கி வைத்த பேரழகிகளின் மேல் கொண்ட காமமும், காதலும் இன்னும் மிச்சமிருக்கிற ஆத்ம மோகத்தில் இருந்து மீட்கப்பட்ட நரம்புகளினால் கட்டப்பட்ட வாத்தியங்களில் தோன்றிய மென்பரவல்கள் இந்த இசை. ஏசுதாஸின் குரலும், ஜானகியின் குரலும் ஓலைக்கொட்டானில் பொத்திவைத்த சில்லுக்கருப்பட்டியில், கொஞ்சம் தினைமாவும், கொம்புத் தேனும் கலந்தது போன்ற வழுக்கும், மயக்கும் மெட்டு. காதலும், மெல்லிய பாலாடை காமமும் மிதந்து பறக்கும் இறகென மனசுக்குள் வந்து அமரும் இடங்கள் அனேகம். மோஹனம் பக்தி, காதல் என்ற இரண்டும் சமநிலையில் நிறுத்த பிரகடனிக்கப்பட்ட முதல் தண்டோரா இந்த மோகனம். எல்லோரும் சுலபமாய் கையாண்ட ஒரு ராகம், எல்லோரையும் மயக்கிய ராகம்... கேவிஎம், எம்எஸ்வி என்று தேய்த்து தேய்த்து பார்க்க பூதங்களை அல்லாது தேவதைகளை பிரசவித்த விளக்கு இந்த மோகனம், அதனால் தானோ என்னவோ மோஹனத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் காதலும், பக்தியும், காமமும் சங்கமிக்கும் திரிவேணியாய் இருக்கிறது எப்போதும்.

இளையராஜாவின் மிக இனிமையான பாடல்கள், அதன் ஸ்வரகட்டுமானங்களில் உள்ள நவீன கையாள்தலிலும், ஆர்க்கிடெக்சரிலும் தான் இருக்கிறது. பாடத் தெரிந்தவர்கள் அல்லது ஆசைப்படுபவர்கள்... ஒரு ராகம் பாடலைப் பாடி பார்க்கலாம்... அதன் சங்கிலித் தொடர் போல ஆரம்பிக்கும் பல்லவி நம்மை புதுவிதமான இசை அனுபவத்தைத் தரும். மெய்யாகவே சொல்கிறேன்... இந்த பாடலில் சிவக்குமாரின் சின்ன அசட்டுத்தனமும்... ராதாவின் அலட்சிய அழகும்... மீண்டும் மீண்டும் கேட்க, பார்க்கத் தூண்டிய பாடல்... பாலாவிற்கு மிகவும் பிடித்த இந்த பாடலை என்னை திரும்ப திரும்ப பாடச் சொல்லி மெருகேற்றுவாள் என் ரசனையை. ”நனுபாலிம்ப நடசி வொச்சிதீவோ” என்று ராமனை அழைத்த தியாகராஜரின் கதியில் இருந்து சற்றும் குறைவில்லாத ரசனையும், காதலும், மென்காமமும் நிறைந்த இந்த பாடல் மோஹனப் பந்தல் விரிக்கும் குளிர் நிழல்.

http://www.youtube.com/watch?v=GGekCjufNWY