செவிலிகளின்
பராமரிப்பில் விட்ட
அம்மாவின் உடல்நிலையில்
சீரிய முன்னேற்றம் இருப்பதாக
அவளே சொல்கிறாள்
இந்த இடம் அவளுக்கும் எங்களுக்கும்
வசதியாய் இருக்கிறது
சுற்றி மரங்களும் பசுமை போர்த்த
புல்வெளிகளும் பறவைகளின்
கீச்சொலியும்
அவளின் முனகல்களை
பொட்டலம் கட்டி வைத்திருக்கிறது
படுக்கை தின்ற உடம்பில்
வழியும் சீழை
தினம் ஒரு முறை சுத்தம்
செய்கிறார்கள்
வீட்டில் இருந்த போது
செய்த தொந்தரவுகள்
ஏதும் இருப்பதாக சொல்லவில்லை
யாரும்
வாரம் ஒரு முறை
துவாலை குளியலில்
மணத்து கிடக்கிறாள் அம்மா
மனைவிக்கும் இப்போது
போதுமான நேரம் இருக்கிறது
பெண்ணுக்கு வீட்டுப்பாடம்
சொல்லிக்கொடுக்கவும்
கதைகள் சொல்லி உறங்க வைக்கவும்
காலை ஒருமுறையும் மாலை ஒருமுறையும்
போய் பார்த்துவிட்டு வருவது
கொஞ்சம் சிரமமாய் இருந்தாலும்
பரவாயில்லை என்று தோன்றுகிறது
அம்மாவுக்கு இப்போது
சாவைப்பற்றிய பயம் இல்லை
வந்து பார்க்கும் உறவினர்களிடம்
அவசியம் உங்க மக கல்யாணத்திற்குள்
சரியாகி விடுவேன் என்று
நம்பிக்கையை சிரிக்கிறாள்
வழியும் கோழையுடன்
இப்போதே பதிவு
செய்து விட்டேன்
ஈமச்சடங்குகள் செய்யும்
நிறுவனத்துடன்
இறந்ததும் சொந்த ஊருக்கே
கொண்டு செல்ல வேண்டும்
உறவினர்கள் இங்கே வருவது
உசிதம் இல்லை
அம்மாவின் நம்பிக்கைக்கும்
என் நம்பிக்கைக்கும்
இடையில்
தேதி குறிக்கப்படாத மரணம்
ஒரு பெண்டுலமாய் அசைகிறது
9 comments:
நம்பிக்கை தானே வாழ்க்கை. அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் .
//வாரம் ஒரு முறை
துவாலை குளியலில்
மணத்து கிடக்கிறாள் அம்மா//
அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் .
அருமையான கவிதை ராகவன்...
வலியையும் நம்பிக்கையையும் ஒருசேர புரிய வச்சிருக்கீங்க!
நட்புடன்,
பாலாஜி
நீண்ட விவரிப்பில் ஒரு வெண்கலத்தில் தட்டிய நடுக்கம் குடிகொள்ளவைக்கிறீர். இறுதியில் சுண்டிவிட்ட வார்த்தைகள் அலற வைக்கிறது. பயமாயிருந்தாலும் வாழ்க்கை.அந்திமமாயிருந்தும் கவிதை.
//அம்மாவின் நம்பிக்கைக்கும்
என் நம்பிக்கைக்கும்
இடையில்
தேதி குறிக்கப்படாத மரணம்
ஒரு பெண்டுலமாய் அசைகிறது //
கைகுடுங்க ராகவன். க்ளாஸ்.
கண்களில் ஈரம் கசிய, படித்து முடித்தேன், ராகவன். ஒவ்வொரு எழுத்தும், வார்த்தையும், வரியும் என்னைச் சுற்றி வந்துகொண்டு இருக்கின்றன.
இனம் புரியா தேடல் வந்துவிட்டது நண்பா, உங்க கவிதையைப் படிச்சு முடிக்கையிலே.!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,
இன்று காலை என் உடன் பணிபுரிபவன் தன் அம்மாவை ஆஸ்பைஷ் ஹோமில் சேர்த்திருப்பதை சொல்லி, பேசி கொண்டிருந்தான் அதனை அதிர்வு என்னை பாடாய் படுத்தியது... இப்போது அம்மாவும் அவனும் நிம்மதியாய் இருப்பதாய் சொன்னவுடன் தான் இதை ஒரு பத்தியை எழுத தோன்றியது, என்னமோ வரிசைகிரமங்களை மாற்றி கவிதையாய் போய் விட்டது... அது இத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தியது எனக்கு ஆச்சரியம் தான். உங்கள் அன்புக்கு நன்றியும் பதிலாய் அன்பும்
அன்புடன்
ராகவன்
வாழ்வின் நிஜத்தை கடைசி காலத்தில் ஏற்றுக் கொள்வதற்கு பெரிய மனது வேண்டும்.
உங்கள் எழுத்துக்களும் பின்னூட்டங்களும் ஒரு தமிழோவியம் தான். But this one brings in tears.
//இப்போதே பதிவு
செய்து விட்டேன்
ஈமச்சடங்குகள் செய்யும்
நிறுவனத்துடன் //
ராகவன் இதை எப்படி எடுத்துகறதுன்னு தெரியலை. என்னவோ செய்யுது இந்த வரிகள்
Post a Comment