Thursday, December 31, 2009

நல்வாக்கு...

அன்பு நிறை எல்லோருக்கும்...

இந்த வருஷம் இன்னும் முடிய சில பொன் தருணங்கள் மிச்சமிருக்கிறது... நிறைய கொடுத்து விட்டு செல்கிறது... உன்னத உறவுகள், பகிர்வுகள் என்று இந்த  வருஷம்  முழுக்க முழுக்க நல்லதனங்களில் நிறைந்திருந்தது... இருக்கிறது.

எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததும் ஒரு மிக பெரிய சந்தோசம்... வீடை கட்டி இரண்டு வருடங்களாக பூட்டி வைத்து வாழ கொடுத்து வைக்க முடியாமல் மனசுக்குள் புழுங்கி போன நாட்களை இன்று நினைக்க... கண் நிறைகிறது... வீடென்று எதனை சொல்வீர்னு மாலன் சொல்றது மாதிரி என் பெங்களூர் வீடு எங்கள் முதல் கனவு வீடாய், ஆசையையும் இழக்க விரும்பா தருணங்களையும் போட்டு கட்டியது... என் மனைவியின் அழகுணர்ச்சியை, உபயோக மதிப்பை சேர்த்து பிசைந்து வனைந்த சிற்பமாய் நிற்கிறது இப்போது... இன்னும் பர்னிஷிங் பண்ணவில்லை... ஆனாலும் வாழ்க்கை அதன் உயர் தரங்களுடன் எங்களிடையே பரிமளிக்கிறது நாங்கள் முதன் முதலாய் சந்தித்த நிமிடத்தின் மொத்த தொகுப்பாய்...

புரைக்கேற்றிய மனிதர்கள் என்று பாரா போல எனக்கு எழுத வரவில்லை... ஆனால் இந்த வருஷம் அதன் கடைசி துளிவரை எனக்கு மிக நல்ல நண்பர்களை சேகரித்து கொடுத்து உள்ளது... காமராஜ் வழியாக உள் புகுந்து மாதுவை தொட்டு, பாரா, நவாஸ், நேசமித்திரன், இன்று அம்பிகா என்று வளர்ந்து கொண்டிருக்கிறது இடைவெளிகளை, தூரங்களை இட்டு நிரப்பிக் கொண்டே ஒரு உறவுப்பாலம்.   என்னை மேலும் பாதித்து இன்னும் தொடர்பே இல்லாமல் இருக்கும் சில பெயர்களில்... இராகவன், அமிர்தவர்ஷிணி, கும்க்கி என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.  வரபோகிற வருஷம் இதை எனக்கு நிச்சயமாக்கி தரும் என்று நிறைய நம்புகிறேன்...

காமராஜின் சாமக்கோடங்கியின் நடை என்னை பாதித்த அளவு யாரும் இன்று வரை என்னை பாதிக்க வில்லை... என்னை எழுத தூண்டியர்களில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் காமராஜ், மாது மற்றும் பாரா என்கின்ற இந்த முப்பரிமாணம் முதன்மையாய் இருக்கும், இருக்கிறது.  எல்லோருக்கும் மிக பெரிய அன்பும் நன்றியும்.  

நிறைய நல்ல விஷயங்கள், எதிர்பார்ப்புகள், வேண்டுதல்கள், கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் சிறு சிறு முயற்சிகளில்

பிரியத்தின் வழி எல்லோருக்கும் என் புது வருஷ வாழ்த்துக்கள்...

அன்பும், ஆயிரம் நன்றிகளுடனும்,
ராகவன்

Wednesday, December 30, 2009

மாயாழிகள்...

இரவு தின்று
மிச்சமான
விளக்கு வெளிச்சம்
போதுமானதாய்
இருக்கிறது...

நீ படுத்திருக்கும்
திசையில் வாகாய்
காலை நீட்டி
உன் கொலுசை
கிளுக்கி எழுப்ப

கொஞ்சம்
சுவரதெரிப்பில்
புரண்டு படுக்கிறாய்
உன் கனவின்
துளையில் நுழைவதற்கு
தோதாய்

கைகளை மட்டும்
அனுப்பி
உன் உடம்பில்
பரத்தியிருக்கும்
வெப்ப பூக்களை
பறிக்கிறேன்
சில அமிலத்துளிகள்
தரையில் சிந்தி
கொப்பளிக்கிறது

மேசைக்காற்றாடி
மகுடிக்க
ஆடிய முடிக்கற்றைகள்
கருத்த நாகங்களுக்கு
ஒப்பாய்
உடலெங்கும் தீண்டி
உயிர் ஒழுக
பொத்தலாக்குகிறது

ஒவ்வொரு
பொத்தல்களில் இருந்தும்
வடிந்த உயிர்த்துளிகளில்
மிதந்து கரையேருகிறது

இரண்டு
புகைக்ச்சிற்பங்களுடன்
ஒரு
பெயரறியாப்படகு

தனிமை சமன்பாட்டில்..

தொலை தூர பயணங்களின்
இருக்கைகளில் தனிமை
கால் பரப்பி உட்கார்ந்திருக்கிறது...

இடையில் ஏறியவர்கள்
இருக்கைகளை ஆக்கிரமிக்கிறார்கள்
அது இப்போது
ஒடுங்கிக் கொண்டு
உட்கார்ந்திருக்கிறது
மழையில் நனைந்த
பாதையோர சிறுமி மாதிரி

தன் இடத்தை யாருக்கும்
தராமல் என்னை கொட்டக் கொட்ட
பார்த்து கொண்டிருக்கிறது
ஒரு ஒற்றை விண்மீனாய்..

எந்த இடத்தில் இறங்கும்
அது தெரியவில்லை
 பயண தூரத்தை அது
நீட்டிக் கொண்டே இருக்கிறது

விரட்ட எத்தனிக்கையில்
சுற்றி சுற்றி வந்து 
போக்கு காட்டுகிறது...

பள்ளி நிறுத்தத்தில் ஏறிய
குழந்தையின் புத்தகப்பொதியின்
கணத்தில் இருக்கை நிறைந்தது

தனிமை, பயண ஜன்னலில்
இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டது...

ஒரு கவிதையை பிரசவித்து...

Monday, December 28, 2009

யுத்தமும் சில ஆயத்தங்களும்...

விருப்பப்புள்ளியில்
இருந்து விலகியதாய்,
ஆயுதக்கிடங்கில் தளவாடங்கள்
சேர்க்கிறாய்

வெஞ்சின சமரில்
தோற்றதாய் புழுங்கி
யானைகளையும், குதிரைகளையும்
உரமாக்குகிறாய்

வர்ணங்களில்
ஆர்வமாய் சிவப்பை
அணிந்தும் பூசியும் கொள்கிறாய்

வனவெளி நெருப்பை
கண்களில் நிறுத்தி
விரிசடை சிலுப்பி
நாவின் முனையை
சானை பிடிக்கிறாய்

வெறுப்பின் நகங்கள்
வளர்த்து பிரியம் கிழிக்க
காத்திருக்கிறாய்

அதற்குள்
நான் தயாராக வேண்டும்....

கொஞ்சம்
அன்பு
மெல்லிய
புன்னகை
இன்னும்
பூக்களுடன்

Wednesday, December 23, 2009

பிரிக்கபடாத கடிதம்...

உள்ளங்கையில் மசி
படர்த்தி
உன் இருப்பை
காட்டி
மீள்கிறது
நிலைக்கண்ணாடி
மேசையில்
கிடக்கும்
அந்த கடிதம்

சுழன்றடிக்கும்
மாயக்காற்று
தார்சாலில்
நீ சொருகிய
ஒலைக்காற்றடியின்
நுரையீரல்
சுவர்களை
முட்டித்
திறக்கிறது
சரிகிறது
மூச்சு முட்டிய
விளையாட்டு
பொழுதுகள்

உதட்டு
மடிப்புகளுக்குள்
உறங்கி
மறைந்திருக்கும்
முத்தங்களில்
இன்னும்
மிச்சமிருக்கிறது
களவு,
பிளவில்
பெருகுகிறது
ஒரு ப்ரிய
ஊற்றுக்கண்

உதிர்ந்து
விழும்
புகைகூண்டு
சுவர்கள்
நாம்
ஒதுங்கிய
நிழலை
உதறி எடுத்தது
சிதறி விழுந்தோம்
தனி
தனியாக..

நடுங்கும்
என் விரல்
ரேகைகளை
கடிதத்தில்
பதிக்க அஞ்சுகிறேன்
உன் உதட்டு
ரேகைகளில்
இடறி விழ
அவசியம் இல்லாமல்
கடிதம் இன்னும்
பிரிக்கப்படாமலே.....




 

Tuesday, December 22, 2009

ஒரு கடவுளும் இரண்டு காலி மதுக்கோப்பைகளும்...

இரண்டு
காலி மதுகோப்பைகளாய்
நீயும் நானும்
அந்த அணிவறையில்.

இட்டு நிரப்புவார்கள்
யாராவது
என்று காத்திருக்கிறோம்
எனக்கு பொறுமை
குறைந்து கொண்டே
வருகிறது
யாரையும் காணோம்

வெறுமையில் நிரம்பி
வழிகிறேன் நான்
நீ இன்னும்
அரவமற்ற பொழுதுகளை
எண்ணி கொண்டிருக்கிறாய்
உன் காத்திருப்பு
எனக்கு அசதியாய் இருக்கிறது
வழிந்த வெறுமையில்
நிறைகிறது அந்த அணிவறை

யாரோ வருவது
போல் இருக்கிறது
வந்தவர் தலையில்
ஏதோ வட்டமாய்
சுழல்கிறது
நான்கு கரங்களுடைய
அவர்
உன்னையும் என்னையும்
எதையோ ஊற்றி நிரப்புகிறார்
கணம் தாங்காமல்
நான் விரிசல் விடுகிறேன்
உன்னை கையில் ஏந்தி
குடித்து விட்டு
என்னையும் கையில்
எடுக்கிறார்
விரிசல் கையை கிழிக்க
உதறி விட்டு
ஓடுகிறார் உதிரம் வடிய...

அப்பா என்னும் வரம் ...1

வரம் கொடு தேவதையே என்ற ஒரு தொடர் பதிவில் பா.ரா. வின் வரம் வேண்டும் அந்த பத்து தருணங்களை படித்ததும் எனக்கு மூளை நம நமன்னு அரிக்க ஆரம்பிச்சுடுச்சு.. நம்மள யாருமே  தொடர் பதிவுக்கு அழைத்ததில்லை... ஆனாலும் அழையா விருந்தாளியாய் என் முதல் காதல் தேவதையின் திருமண மண்டபத்தில்  நுழைவது போல நுழைகிறேன், ஓரமாய் நின்று காட்சிகளை ரசிக்கிறேன், தேவதை துலாவும் கண்களில் நான் இடறி இங்கு விழுந்து விட்டேன், வேறு வழியில்லை உங்களுக்கும்

இழந்த எல்லாமே வரமாய் வேணும் எல்லோருக்கும், பட்டியலை மீறுகிறது வரங்கள் புது வெள்ளம் வழிந்தோடும் வாய்க்கா மாதிரி...

பதினொரு வீடுகள் இருக்கும் ஒரு காம்பவுண்டில் அனேக வீடுகளில் பெண் பிள்ளைகளே இருந்த நாட்களின் இறுதியில்  ஏழு வருஷம் கழிச்சு நான் பொறந்தேன் ஒரு வரமாய்.  எல்லோரும் கொண்டாட ஒரு ஆயர்பாடி கிருஷ்ணன் போல, ஷ்ய்மள வண்ணத்தில்.  பெண் பிள்ளைகளுடன் மட்டுமே புழங்கி வந்த நாட்களில் சொட்டாங்கல், பாண்டி, பல்லாங்குழி, தாயம் என்று என் விளையாடல்கள் தொடர்ந்து நிறைய பெண் தன்மைகளை கொண்டிருந்த காலத்தில், அப்பாவின் ஆண்களுக்கான விளையாட்டு உலகம்  அறிமுகம் ஆனது, திடீரென்று கபடி, ஹாக்கி, கால்பந்து என்று என் விளையாட்டு உலகத்தில் சில பந்துகளை உருட்டினார். நானும் அவைகளை விரைகளாய் பதுக்கி வைத்தேன். என் உலகம் வேறு வர்ணத்தில் சுழல ஆரம்பித்தது.

அப்பாவை நான் வாசனைகளில் உணர ஆரம்பித்தேன். விடைத்த நாசியின் வழி எல்லோரும், எல்லாமும் அவருக்கு வாசனை தான்.  ரத்தினம் பட்டணம் பொடியில் சோலைமலை மாமாவையும், வில்ஸ் நேவி கட்டில் பிச்சம் நாயுடுவையும், மெலிதான சந்தனத்தில் பாங்க பார்த்தசாரதியையும், அடையாளம் வைத்திருப்பார்.  வாசனைகள் குறியீடுகள்  அப்பாவுக்கு எப்போதும், தாயம்மா கிழவியின் போயிலை, இடித்த தெக்கம்  பாக்கு, வெற்றிலையில் அரைபடும் போது வரும் வாசனை அநேக கதைகள் சொல்லும் அப்பாவுக்கு.  மீசைக்காரன் கடை தொடைக்கறி குழம்பின் வாசனை அப்பாவின் விருந்தோம்பலை சொல்லும்.  திருசூர்ணத்தின் வாசம் அப்பாவின் பக்தியை.  ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டைக்கடையின் ஹல்வாவின் வாசனை அப்பாவின் பாசத்தில் தெரியும்.

அப்பாவின் வாசத்தை விநோதமாய் உணர ஆரம்பித்தேன் சில நாட்களில்.  மஞ்சள், பவுடர், மாதவிடாய், எண்ணெய் எல்லாம் கலந்த பெண்களில் உலகத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது அந்த அப்பாவின் வாசம்.  அப்பா புகைப்பதில்லை, குடிப்பதில்லை, பொடி மட்டும் எப்போதாவது போடுவார், அதுவும் சோலைமலை மாமா வரும்போது மாத்திரம் ஓசி பொடி காட்டம் அவரை கிலேசப்படுத்தும். அம்மாவிடம் இருந்த விலகி அப்பாவுடன் உறங்க ஆரம்பித்தேன், நாங்கள் படுத்துறங்கும் நார்க்கட்டிலின் மனம், அப்பாவின் வியர்வை, விபூதி கலந்த வாசம் எனக்கு ஒரு விதமான கிறக்கத்தை தந்தது.  அப்பா எல்லாக்காலங்களிலும் 5 மணிக்கே எழுந்து விடுவார், ராமேஸ்வரம் பாசஞ்சர் சுப்ரமணியபுரம் ரயில்வே கிராசை கடப்பது எங்கள் வீட்டில் கேட்கும்.  சத்தங்கள் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் பயணித்த காலம் அது. ஐந்து மணிக்கு எழுந்தவுடன் குளிக்க கிளம்பி விடுவார். எந்த சிதோஷ்ண காலமாய் இருந்தாலும் குளிப்பதற்கு கிணற்று நீரே சாசுவதம் அவருக்கு.  கிணற்று நீரும் வெய்யில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும் அப்பா போலவே.  கோபால் என்று பெயர் பொறித்த ஒரு  இரும்பு வாளியில் நீர் சேந்தி குளிர குளிர குளிப்பார்.  அப்பாவின் தலையில் சோப்பு நுரை தனியாக தெரியாது, அப்பாவுக்கு சோப்பு நுரை மாதிரியே இருக்கும் முடியில் வித்யாசம் தெரியாது. என்னையும்  குளிப்பாட்டுவார்.  சந்திரிகா சோப்பின் மனம் எதிர் காம்பௌண்டில் நவநீதம் மாமாவை  அவர் மீசையை தாண்டி, கயிறு கட்டி இழுத்து வரும்.  என்ன ஓய்! நாளெல்லாம் மனக்குறீரு!  என்ன சோப்பு போட்டாலும் ஒம்ம பையன் செவக்க மாட்டேன்கிறான் ஓய்!  அப்பா பேசாமல் சிரிப்பார்.  அப்பாவுக்கு தெரியும் யாரிடம் பதில் பேசணும் பேசக்கூடாதுன்னு!

சனிக்கிழமை தவறாமல் என்னை பெருமாள் கோவிலுக்கு கூட்டி செல்வார் அப்பா. மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும் கோவிலுக்கு நடந்து செல்வது தான் வழக்கம். நடந்து செல்வதால் ஒரு ஆதாயம், குரு விலாஸ் பஜ்ஜியோ அல்லது அம்பீஸ் கபே தோசையோ நிச்சயமாய் இருக்கும்.  அப்பாவுக்கு சைக்கிள் ஓட்டுவதில் அத்தனை பிரியம் இல்லை. டபுள்ஸ் ஓட்டுவது அவருக்கு எப்போதும் பிரயத்தனமான விஷயம். ஒருமுறை ஜெயாத்தை இறந்த போது அப்பாவும், ராஜ் ஆசாரியும், ஏட்டு வீட்டிற்கு தகவல் சொல்ல செல்லும் போது அப்பாவின் டபுள்ஸ் முயற்சி சில பல காயங்களில் முடிந்தது.  அதனால் பெரும்பாலும் சைக்கிள் ஒட்டும் போது தனியாகவே செல்வார் மற்ற சமயங்களில் நடந்து தான் அவரின் பயணங்கள் எல்லாம்.  அப்பாவுடன் கோவிலுக்கு செல்வது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.  எல்லோரையும் அப்பாவுக்கு தெரியும், எல்லோருக்கும் அப்பாவை தெரியும். எல்லோரையும் அவரவர் தொழிலுக்கு ஏற்ப முகமன் செய்வார்.  செருப்பு கடைக்காரனும், கோவில் மண்டபத்தின் காரிய தரிசியும் அப்பாவுடன் நெருங்கிய சிநேககாரர்கள்.   உள்ளே நுழையும் போதே வாசலை தொட்டு வணங்கி துவஜச்தம்பத்தை நோக்கி ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார் என்னையும் கிழே விழுந்து கும்பிட்டு எழ பணிப்பார்.  கீழே விழுந்து நமச்கரிக்கும் போது உன் அகங்காரம் அழியும், நான் ஒன்னும் இல்லடான்னு தோணும் என்பார் அடிக்கடி.  அப்பா தன்னை அடிக்கடி இழப்பார் பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தில்.

அப்பா என்னும் வரம் தொடரும் இன்னும்.....

Monday, December 21, 2009

நீர்ச்சக்கரம்

மறுபடி நிகழ்கிறது
ஒரு இடப்பெயர்ச்சி
நிற்காமல் சுழல்கிறது
கிரக வாழ்க்கை

அட்டைபெட்டிக்குள் அடுக்கி
குவித்ததில் கொள்ளாமல்
திமிறி வழிகிறது
எடுத்துச் செல்லமுடியாத
உறவுகள் சில

எல்லா காலங்களிலும்
பொருட்கள் சேர்ந்து கொண்டு இருக்கிறது
அதன் தேவையே இல்லாது
விலைக்கும் போகாது
உபயோகமும் புரியாது
கழிக்கவும் முடியாது

இரண்டு பேருக்கு
இவ்வளவு
சாமான் ரொம்ப ஜாஸ்தி!
மாற்றலுக்கு உதவிக்கு வந்த
அலுவலக சிப்பந்தி
சிரித்துக் கொண்டே புலம்பினான்
பொதித்து வைத்த
இருவருக்குமான ரகசியங்கள்
புடைத்து பெருகுகிறது
அவனுக்கு புரியாது...
ஏதாவது விட்டு விட்டோமா?


மாடி வீட்டு குழந்தை  ருஜிதா
எங்கள் இருவரையும்
அவளுடன் சேர்த்து வரைந்த
அந்த ஓவியத்தையும்
மறக்காமல் எடுத்து கொண்டேன் 

இரவல் கொடுத்த
ஜி.நாகராஜனின் படைப்புகளை
திருப்பி கொடுக்க தயங்கி
கொடுத்தவரிடம் சொல்லாமல்
கிளம்பினேன் கடைசியாய்
கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடனும்

Saturday, December 19, 2009

அம்மா அறிந்த பாத்திரம்

வயித்த வலிக்கி என்று கைகளைத் தாங்கி மடங்கி உட்காருகிறாள், தோட்டிச்சி சோனையம்மாவின் பேத்தி, வயசுக்கு வந்திருப்பாளா இருக்கும் என்ற என் அம்மா கரிசனையில் விசாரித்ததில் பதினோரு வயதே என்றாள்.

காலையில இருந்து ஒன்னும் தின்னாம கிடக்கா முட்டாச்சிறுக்கி! என் கூட வந்தா இங்க கொடுக்கிற பழையதுல, ஏதாவது பலகாரம் கிடைக்காதான்னு தான் என்கூடவே ஒட்டிட்டு இருக்கா... எம்மா நேத்து வச்ச இட்லி தோச ஏதாவது இருந்தா கொடும்மா இவளுக்கு.. கொஞ்சம் பூசனம் பிடித்திருந்தாலும் பரவாயில்ல என்றாள்... காலையில பள்ளிக்கூடம் கிளம்பும் போது பொங்கல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த என் தம்பி முழுத் தட்டையும் அவளுக்கு தூக்கி நீட்டினான். அவள் தயங்கிக்கொண்டே கதவோரம் நின்றாள். சோனையம்மாவும் அவள் போலவே என் அம்மா முகத்தையும், தம்பியின் தட்டில் இருந்த பொங்கலையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். பேத்திக்கும் சோனையம்மாளுக்கும் பெரிதாக ஒரு வித்யாசம் இருந்த மாதிரி தெரியலை. அவ பேத்திக்கு இட்லி மாதிரி இவளுக்கு என்னவோ?

அம்மா, இரு நான் கொண்டு வர்ரேன் என்று உள்ளே போய் கொஞ்சம் பொங்கலும், நேற்றைக்கு மிச்சமாகிப்போன இட்லியும் கொண்டு வந்து அவள் வைத்திருந்த ஒரு பழைய அலுமினியப் பாத்திரத்தில் பட்டு விடாமல் போட்டாள். சோனையம்மாவின் பேத்தி பொங்கலை விட்டு நேற்றைய இட்லியை எடுத்துக் கொண்டாள். இட்லினா தான் அழையுறா தாயி! பொங்கலை நானே எடுத்துக்குறேன் என்றவள். எதிர் வீட்டில் கொடுத்த பழைய சாதமும், கத்திரிக்காய் புளிக்குழம்பும் இருந்த இடத்திலேயே, பொங்கலையும் கொட்டினாள். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒரு புதுவிதமான வாசனையுடன் இருந்தது, எல்லாவற்றையும் ஏந்தி நின்றது பசி என்ற அந்த சொட்டையான அலுமினிய பாத்திரம்.

சோனையம்மாவின் பேத்தி போலவே நாங்க காம்பவுண்டு வீட்ட விட்டு காலி பண்ணிட்டு சொந்த வீட்டுக்கு வந்த போது அங்கு அம்மி கொத்த வந்தவள் இருந்தாள். சோனையம்மாவின் பேத்தி தான் என்று அம்மாவுக்கு சந்தேகம், ஏன்டீ! நீ சோனையம்மா பேத்தி வசந்தா தானே, அவ பேரு வசந்தான்னு அப்ப தான் எனக்குத் தெரிஞ்சது. அவளின் அம்மா, அவ்வா போல என் அம்மாவை அம்மாவென்றோ, தாயி என்றோ அழைக்கவில்லை. ஆமாக்கா! நீங்க குமாரியக்கா தானேன்னு அவளும் வாய் நிறைய பல்லாய் கேட்டாள். இதான் பெரியண்ணனா, என்று என்னைப் பார்த்தும் சிரித்தாள். என்னடீ! அம்மிக் கொத்த கிளம்பிட்ட! உங்க அவ்வா, அம்மா பாத்த வேலைய பாத்தா, ஒரு இடத்தில இருந்து வேலை பார்க்கலாம், கொஞ்சம் காசு கிடைக்கும். வயித்து நோவு இல்லாம வேளாவேளைக்கு சாப்பாடும் கிடைக்கும், அத விட்டுட்டு இப்படி வேகாத வெயில்ல பிள்ளையையும் தூக்கிட்டு என்று கேட்க. யக்கா! எங்க அவ்வாவும், ஆத்தாவும் பீ அள்ளுனது போதும்னு தான்க்கா நான் இந்த வேலை செஞ்சுட்டு இருக்கேன். அது கூட இப்போ கொஞ்ச நாளாதான். இல்லேன்னா வீட்ல தான் இருப்பேன்.

அவள் புருஷன்காரன் கார்ப்பரேஷனில் எண்ணம்மாரா வேலை பாக்குறானாம், இந்த பிள்ள பிறந்த ஒரு வருஷம் கூட ஆகலை, சரியா கொஞ்சினது கூட கிடையாது, கார்ப்பரேஷன் ஆபிஸில் தண்ணி வைக்கிற ஒரு முண்டச்சியோட சேந்துக்கிட்டு, வீட்டுக்கே வர்றது இல்லை. ஆறேழு மாசமாச்சு, அதான் எங்க ரெண்டு பேருக்காவது கஞ்சிக்கு ஆகுமேன்னு இத பண்ணிக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாள்லயே தாமரை போடுறது, யானை போடுறது, பெரிய கோலமா போடுறது கத்துக்கிட்டேன். ரெண்டு மூனு தடவை சுத்தியல கொண்டு கையில போட்டுக்கிட்டேன். இப்போ நல்லா பழகிப்போச்சு, சைக்கிள் கத்துக்குற போது விழுகிற மாதிரிதான் என்னக்கா! நான் சொல்றது சரிதானேன்னு பதிலுக்கு காத்திருக்காமல். முதுகு மூட்டையில் தொங்கிய பிள்ளையை லாவகமாக இறக்கினாள். அது ஏதோ பேசிக்கிட்டு கைய நீட்டிக்கிட்டே வீட்டின் முன் உள்ள கேட்டைப் பிடிச்சுட்டு ஆட்டிக்கிட்டு இருந்தது. டேய்! அங்கெலாம போகக் கூடாது! இங்க வா! என்று கையப்பிடித்து இழுத்தாள், அது அழுது கொண்டே தரையில் விழுந்தது.

அம்மா இருவருக்கும் சேர்த்து உள்ளே இருந்து சாப்பாடு கொண்டு வந்தாள். அன்று செய்த சோற்றையும், கத்திரிக்கா, மொச்சக்கொட்ட, எலும்பு போட்டு வச்ச குழம்பையும் கொண்டு வந்து அவள் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டாள். என்னக்கா வாசமே ஜம்முன்னு இருக்கு, கறிக்குழம்பாக்கா! அம்மி கொத்திட்டு சாப்பாடு வாங்கிக்கிறேனே என்றாள். அம்மா, பரவாயில்லை அம்மிக் கொத்த இன்னொரு நாள் வா, என் வீட்டுக்காரரு வர்ற நேரமாச்சு என்றாள். கையில் இருந்த இரண்டு ரூபாயும் கொடுத்து, பிள்ளையை தொடாமல் கொஞ்சி அனுப்பி வைத்தாள். கஷ்டப் படுறா பாவம், அந்த குழந்த என்ன லட்சனமா இருக்குல்ல, இந்த பிள்ளய விட்டுட்டு போயிட்டானே அவங்க அப்பன். அவளுக்கு அம்மிக்கொத்தாமல், காசு கொடுத்தது ஏன் என்று கேட்ட போது, அம்மிக் கொத்த அவ வீட்டுக்குள்ள வரனும்டா அதான் அப்பா வரப் போறார்னு சொல்லி தட்டி கழிச்சுட்டேன் என்றாள். எனக்கு அம்மா மேல் கோபம் வந்தது.

விரியச் சுருங்கும் உறவு...

மூனுமுறை சொல்லியாச்சு
தைமாசம் நாலாம் தேதி
அவுக போன திதி

வந்து திவசம் பண்ண
வணங்கவில்லை பயகளுக்கு

அக்கர சீமை போயி
ஆண்ட துரைமாருங்க
எப்போது வருவாய்ங்கன்னு
வாசலெங்கும், வழியெங்கும்
கண் நட்டு
காத்திருக்கு  தும்பைபூ
பூத்த காடு!

உசுரோட இருக்கும்போதே,
வராதவனுங்க
செத்தா திதியாவது திவசமாது!

அனாதப் பொனமாத்தான்
அவுசாரி நான் போவேன்!

உசுர பீய்ச்சிக் குடுத்த
பாசப் பெருமுலைச்சி
உள்ளுக்குள்ளே
அழுத மிச்சம்
ஊரெங்கும் கேவலாச்சு!

Friday, December 18, 2009

கேள்விகளின் பதிலி

(1 )
அலுவலகத்திற்கு விரையும்
வழியில்
காரை மறித்து காசு கேட்கும்
திருநங்கை இரண்டு நாட்களாக
காணவில்லை
மூன்றாம் நாளில்
ஒரு நாளிதழின்
கழிவிரக்கக் கோடியில்
தனியார் பேரூந்து மோதி
”அழகிய இளம் பெண் மரணம்”
பெட்டிச்செய்தியில் சிரித்த
அவளுக்கு காரணம் இருக்குதானே!

(2 )

தன் பிரிய தோழியிடம்
என்னை அறிமுகப்படுத்தினாள்
’என்னோட அப்பா’ என்று
கேள்வியாய் பார்த்தவளை
ஆமாம் என்று
என் கையைப் பிடித்துக்கொண்டாள்

இவளை என் மணைவிக்கு
எப்படி அறிமுகப்படுத்துவது?
காதலின் மிச்சமென்றா?

(3)

மழை முனைப்புடன்
தொடர் கம்பிகளாய் விழ
எத்தனிக்கிறது
ஒவ்வொரு முறையும்

வீழும் மழையின்
கம்பிச் சரடுகளை பிடித்து
ஏற முற்படுகிறேன்
அறுந்து  விழுகிறது
ஒவ்வொரு முறையும்

அயர்ந்து போய்
வேடிக்கை பார்ப்பதோடு
நிறுத்திக் கொள்கிறேன்

முடிவிலி..

இந்த முறை
தூக்கில் தொங்குவது
என்று உறுதி செய்து கொண்டேன்

தங்கையா நாடார் கடையில்
இரண்டு வகை கயிற்றில்
விலை அதிகமுள்ள உறுதியான
கயிற்றை வாங்க நினைத்தேன்

என்னத்துக்கு அண்ணாச்சி!
காரணம் சொன்னா
அதுக்கேத்த பொருளா தாரேன்!

என் பளுவைத் தாங்கனும்
அதுக்கேத்த மாதிரி ஒன்னு கொடுங்க!

ஊஞ்சல் கட்டி ஆட போகுதீகளா?
ஆமா! என்று
அவருக்கு காரணம் புரியாததை
நினைத்து சிரித்துக் கொண்டேன்

முடி போடுவது எப்படி என்று
யாரிடம் கேட்பது என்று
யோசித்து ரகசிய பகிர்வு
உசிதம் இல்லை என்று
நானே முயன்றேன், பிடிபட்டு விட்டது

அய்யய்யே! என்ன
பாத்துக்கிட்டு   இருக்கீங்க!
தொட்டில்லையே ஒன்னுக்கு
போய்ட்டான்! தூக்குங்க!
என்று கை வேலையாய் இருந்தவள்
கத்தினாள்

தொட்டிலைத் தாங்கும்
கயிற்றின் இரு நுனிகளும்
முருகனும், வள்ளியுமாய்
என்னை பார்த்து சிரித்தன!
இப்போது தூக்க மாத்திரைகள்
சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்!

Tuesday, December 01, 2009

மூன்று கவிதைகள் - ஒரு மீள்பதிவு

 நவீன விருட்சத்தில் பிரசுரமான கவிதைகள்:

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை
திருடி
என் அலமாரிக்குள்
ஒளித்து வைக்கிறேன்

காணாது
தவிக்கும்
கடவுள்
மூளைக்குள்
விஷமேறி துடிக்கிறார்

ஜோதிமயமான
கடவுள்
காற்றுவெளியில்
சில்லிட்டுப்போய்
கருத்துப்போனார்

ஒளித்து வைத்த
கடவுளின்
கனவை
எடுத்துப்பார்க்கிறேன்

கடவுளின்
கடைவாயில்
பற்கள் முளைத்து
கோரக்குருதி
வழிகிறது

மீண்டும்
அலமாரிக்குள்
வைத்து
பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)

பத்து
வருடங்களுக்குப் பிறகு
கடிதம்
வந்தது
உன்னிடம் இருந்து
நிறைய
எழுதியிருந்தாய்...

நீயும் நானும்
விளையாடிய,
கதை பேசிய, கனவு விதைத்த
பொழுதுகளை...

 நாம் தொடர்பற்று
இருந்த
நாட்களின்
சிறு குறிப்பும்
இல்லை
உன் கடிதத்தில்

மடித்து வைக்கிறேன்
உனக்கு பதிலாய்
நம் பழங்கதைகள் பேச...


கவிதை (3)

சொந்தமாய்
வீடு வாங்கி
குடிபுகுந்தேன்
ஒரு நகர அடுக்ககத்தில்..!

அப்பா
வந்திருந்தார் வீட்டுக்கு...
என் மகனிடம்
உங்க அப்பா
சின்ன குழந்தையாய்
இருந்த போது
சூரிய, சந்திர,
நட்சத்திரங்களுடன்
வானம் இருந்தது...
புழுதி அப்பிய
மண்ணும் இருந்தது...
மழை நனைக்கும்
தாழ்வாரம்
இருந்தது...

ஆனால்
சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு
சொந்த வீடு
இருக்கிறது....

பொய்யாய்
பழங்கதையாய்....

Monday, November 23, 2009

பகலறியாப் புணர்வு

ஒரு முத்தத்தில்
விடிகிறது
புலர்காலை
பொழுது ஒன்று

உடலெங்கும்
குமிழ்கள் அழுந்தி
திறக்கிறது

நகக்கண்களின்
விழிப்பில்
ஒரு அரூபம்
திடப்படுகிறது

செவியோரம்
புருபுருக்கும்
மயிரிழைகள்
கூச்ச சங்கீதத்தை
சுரம் தப்பி
வாசிக்கிறது
நாணற்ற
இசைக்கருவி
மீட்டி

வெளிச்சப்பந்துகளை
இனைத்து பிண்ணிய
மாயகம்பளத்தில்
ஒத்தி எடுத்த
உதட்டு ரேகை வழி
புகுந்து கிளம்புகிறது
ஒரு நினைவறியாப்பயணம்
கீழே விரைந்து
கொண்டிருந்தது
மலைகளும்
பள்ளத்தாக்குகளும்

உந்திச்சுழி
உரோமக்கோட்டில்
வியர்வை
வழிந்த தடம்
மறந்து
வெப்பத்தில்
ஆவியாகும்

ஒரு
திசை
தொலைந்த
மழை ஞாயிறு
உள்ளங்கைகளுக்குள்
வசிக்க வரும்

தொடர்பற்ற
பெருவெளியில்
மிதக்கும்
உடல்களின் மீது
ஒற்றை இறகு
கொண்டு
ஏதோ ஒரு
பெயரறியா
வாசனையை
வரைய முற்படுகிறது
புணர்வறியாத
பகல் ஒன்று

Sunday, November 22, 2009

மரண அறிவித்தலும்....கொலைக்கான ஆயத்தங்களும்

வால் நீண்ட குருவி

நெகிழும் உறவின் தருனம்
இருள் தனிமை
ஒற்றை நிலா அல்லது மரம்
இப்படி ஏதாவது
ஒரு பாடுபொருளை
வீம்பாய் பிடித்துக் கொண்டு
எழுத முற்படும்போது
கவிதை மல்லாந்து விழுந்து
வாய் பிளந்து
மூச்சை விடுகிறது

கை பிசைந்து நிற்கிறேன்
சில நிமிடம்
பிறகு
நல்ல ஒரு தேர்ந்த தச்சனைக் கொண்டு
அலங்கார வேலைப்பாடுடன் கூடிய
ஒரு சவப்பெட்டி செய்கிறேன்

இறந்த கவிதையை
அதில் கிடத்தி
சீரிய உடுப்பு உடுத்தி
பூக்களைக்கொண்டு சுற்றி
அலங்கரிக்கிறேன்

முகத்தை மட்டும் விட்டு
முழுதாய் மூடுகிறேன்
எல்லோருக்கும்
தகவல் அனுப்புகிறேன்

சிலர் அனுதாபங்களுடன்
பூங்கொத்துக்களுடனும்
இன்னும் சிலர்
மலர்வளையங்களையும் வைத்து
சுற்றி வருகிறார்கள்

ஏதாவது தங்களுக்கு
தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்கள்
மோவாய் தாங்கி
என்னை உறுத்து நோக்குகிறார்கள்
சிலநேரம்
ஒன்றும் சொல்லாமல்
மௌனித்திருக்கிறார்கள்

நாற்றம் எடுக்காமல் இருக்க
யூடிகோலன் அடிக்கிறேன்
பிரேதத்தின் மீது

சமயம் வந்ததும் புதைத்து
விட்டு வருகிறேன்

உங்கள் ஆறுதல்களில் தேறி
அடுத்த கொலைக்கு
ஆயத்தமாகிறேன்....

ஜாக்கிரதை
சிக்குவது நீங்களாகவும் இருக்கலாம்

Friday, November 20, 2009

அரணெனப்படுவது யாதெனின்....

முகப்பில்
தோட்டத்திற்காய்
இடம் விட்டு
கட்டிய சிறு வீடு
உள்ளிருந்தனர்
செட்டைக்குள் குஞ்சுகளாய்
என் இஷ்ட பந்துக்கள்

காய்கறிகளும், கனிகளும்,
பூக்களுமாய் கொல்லையும்
சிரித்தது
செழுமை ஊற
கிணறும் உண்டு

காபந்து பண்ணவேண்டி
சுற்றி சுவராய் எழு(ம்)ப்பினேன்
உள்ளே செடி, கொடிகளும்
அடை பறவைகளும்
விருத்திப் பெருகின

நாளாக
செடிகள், மரங்களாயின
சுவர் தாண்டி கிளைபரப்பி
வேர் நெடுகி
சுவர் அசைத்தன

சுவர் விரிந்து இடம்
கொடுத்தது
சுவரில் விழுந்த விதைகள்
முளைத்தன
சுவர் மேலும் நெகிழ்ந்தது

தோல் கழண்டு, எலும்பு
துருத்தி
தொட்டவுடன் உதிர்ந்தது
புறம்,
தேய்ந்து நலிந்தது சுவர்

பிள்ளைகள் வளர
சுவர் முழங்காலுக்குக்
குறுகியது

தாண்டுதல், தாவுதல்
எளிதானது

சுவரின் ஒளிவட்டத்தில்
நீர் ஊற்றி
அனைத்தது
விரைத்து கிடந்தது
அப்புறம்
ஒரு நாள்
இல்லாமல் போனது

மற்றொரு சுவர்
இன்னும் வலுவாய் கட்ட
ஆயத்தங்கள் நடந்தது.

Thursday, November 19, 2009

ஒரு கவிதை

எனக்கு
முன்பே
அறிமுகமானவர்
போல இருந்தவர்
எதிரில் வந்து கொண்டிருந்தார்

என்னை பார்த்ததும்
சிரிக்க நினைத்து
கையையும் உயர்த்தினார்
நானும்
சிரிக்க எத்தனித்து
கன்னச் சதையை
சிறிது தளர்த்தினேன்
கையையும் தூக்க
நினைத்தேன்

இதற்குள்
அவர் என்னை
கடந்து விட்டிருந்தார்
நானும்.

நல்லவேளை!
எந்த முகமனும்
தேவை இல்லாமல்
போய் விட்டது இருவருக்கும்.

Monday, November 16, 2009

கிளி என்பது நானும்

வருவோரை எல்லாம்

வணக்கம் சொல்லி
வரவேற்கும்

மாரி பிஸ்கெட்டும்
சோளக்கருதும் தின்ன
பழகிவிட்டது

தொலைபேசி
மணிச்சத்தத்தையும்
அழைப்பு
மணிச்சத்தத்தையும்
எழுப்பி
ஏமாற்று வேலை பழகும்

கள்ளமாய் சிரிக்கவும்
கற்றுக்கொண்டு விட்டது

வேலைக்காரியை
வீட்டுக்காரியைப் போலவே
திட்டும்

ஹோம்வொர்க்
செய்யாத மகனை
முட்டாப்பய மகனே
என்று ஏசவும் செய்யும்

பூணையைக் கண்டால்
மட்டும்
குரலைப் பூட்டும்

தற்கொலைக்கு
முயன்ற கிளி
கயிற்றுத் தடம்
கழுத்தில்
அடிமை சோகம்
சொல்லும்

வருங்காலம்
சீட்டில் உணர்த்தும்
வகையும் மறந்த கதை

கூண்டு விட்டு கூண்டு
பாயும் குறக்களி வித்தையில்
என்னை ஜெயிக்கும்

வேலைக்காரி மீதான
சபலத்தை
மறைத்து
கிளி பற்றி
பயம் பழகும் என்
பிறன்மனை நோக்கா
பேராண்மை

Thursday, November 12, 2009

வாடகைக்கு....

இடமாறும்
கருப்பையில்
குறியைத்
தூக்கி போடும்
முன்னேற்பாடு
இல்லா
புணர்வு
கடனாய்
வழியும்
திமிறித் தெறியும்
விந்தில்
அப்பா, அம்மை
பாட்டனை
முதலாய்
சூல் வளர
ஊடு பிரியம்
உயிரைத்
திருப்பும்
மனசைக் கீறி
விதையைத்
தூவ
நன்னிலம்
புரண்டு படுக்கும்
அங்கம் குறை
அகழியில்
பேறு
அமிலத்தில்
உழலும்
ஜாமங்கள்
பிறாண்டும்
கழிவிரக்கம்
கண்களை
கவ்வும்
பிளவு வயிறு
துளிர்
தளிர்
உறவென்று….

Monday, November 09, 2009

உதிர்ந்த பூவும், நாளும்

மழை ஒரு நாளை

உதிர்ந்திருந்தது
ஒரு பூவையும்
அந்த ஒற்றைப் பூவையும்
நாளையும்
கையில் எடுக்கிறேன்,
நாள் நழுவி விழுந்து
கொண்டே இருந்தது

பூவை மட்டும் கையில் ஏந்தி
வண்ணத்துப்பூச்சியின்
இறகுகளுக்கு
ஒப்பான அதன்
வர்ணங்களை எடுத்து
என் மீது அப்பிக் கொள்கிறேன்
இப்போது அந்த பூ
ஒரு எழுதாத காகிதம் போல்
இருக்கிறது

மீண்டும் அதை செடியில்
பொருத்திப் பார்க்கிறேன்
பொருந்திக் கொள்கிறது
வர்ணத்தை தொலைத்திருந்தாலும்
பூவின் அடையாளம் செடிக்குள்

எங்கிருந்தோ வந்த
பறவை ஒன்று
உதிர்ந்து கிடந்த நாளின் மீது
உட்கார்ந்தது
அந்த நாளை அதன் அலகால் கவ்வி
நாளைக்குள் எடுத்து
போட்டு விட்டு
பறந்தது

உதிர்ந்த பூவும், நாளும்
இன்னும் மிச்சமிருக்கிறது நாளைக்கும்

Sunday, November 08, 2009

மைதிலியின் தலைப்பிரசவம்

தலைப்பிரசவத்திற்கு
அம்மா வீடு
வந்தவள்
எங்க வீட்ல எல்லாம்
என்று
எதைப்பார்த்தாலும்,
கேட்டாலும், தொட்டாலும்
நீட்டி முழக்கினாள்

அடுக்குமல்லி மணக்கும்
புழக்கடை
அத்தைப் பிரியம்
அம்மாவை விஞ்சும்
மாமனார்
உள்ளங்கை அன்புத்தெப்பம்
மச்சினர் குழந்தைபோல
சிரிக்க, சிரிக்கப்பேசுவார்
பொழுது போறதே தெரியாது
இந்த புழுக்கம் அங்க இல்ல
கிணற்றடிப் பக்கம்
சிலுசிலுன்னு காத்து
வாசலில்
வண்டிச்சத்தம் இல்லை
தூசு இல்லை, புகை இல்லை
காலையில் தார்சால்
குருவி, மைனாக்களின்
கீச்கீச்சில் விடியும்
பெரிய மரத்தடியில் வீடு
வீட்டுக்குள் மரக்கன்றுகள்
சின்னதும் பெரிசுமா
வாசல தாண்டினா கோயில்
வருஷமெல்லாம் திருவிழா
சொல்லி சொல்லி
கதைகள் வளர்த்துக் கொண்டே
இருந்தாள்

ரசம் சாதம்,
பருப்புத்துவையல், சுட்ட அப்பளம்
அம்மா எடுத்து வைக்க
பிசைந்து உண்ணும்
மைதிலியின் தட்டில்
கொஞ்சம் கண்ணீர் துளிகளும்

Tuesday, November 03, 2009

பறவை எழுதிய இறகு

புதிதாய்த் தெரிந்தது
அந்தப் பறவை
ஒரு பிடிகருனை அளவே
இருந்தது
இரண்டே வர்ணங்களில்
கருப்பும் வெள்ளையும்
உடலில் பூசி
கருப்பும் வெள்ளையும்
வர்ணங்கள் என்பதில்
உடன்பாடு தானே உங்களுக்கு!

நீண்ட அலகுடனும்
நீண்ட காலுடனும்
நீர் நிலை சார்ந்த
பறவையாய் இருக்கக்கூடும்
தரையில் வால் அடித்து
அடித்து தத்தியது
முன்னே நகர்ந்து பறக்காமல்
ஊர்ந்த பூச்சிகளை
லபக்கியது
என்ன பெயராய் இருக்கும்?
மீன் கொத்தி, கருங்கொக்கு,
மரங்கொத்தி?
எதுவோ என் பட்டியலில் இல்லை

என்னை கடந்து
சென்றவர்களைக் கேட்டேன்
அவர்களும் ஏதோ
பெயர் சொல்லி ஒரு கதையும்
சொன்னார்கள்,
பைரி என்றும்,
கல் நாரை என்றும் விதவிதமாய்
வலையில் தேடி,
புத்தகங்களில் தேடி
சலித்தேன் சிக்கவில்லை
அதன் சாயலில்
இல்லை
எந்த பறவையும்

இந்த கவிதைக்குள்ளும்
சிக்காமல் பறந்தது
ஒரு இறகை உதிர்த்து

கையில் எடுத்தேன்
இறகை
பச்சை, மஞ்சள், இளஞ்சிகப்பு,
நீலம் என வர்ணங்கள்
மாறிக்கொண்டே இருந்தது
இந்த கவிதை முடிந்த பின்னும் கூட.

இப்போது பறவை
என்ற அடையாளம்
போதுமானதாய் இருந்தது
எனக்கும் என் கவிதைக்கும்.

Monday, November 02, 2009

ராஜாராணியும் அக்பர்ஷா சிகரெட்டுகளும் (ஒரு மீள் பதிவு)

ஏலேய் வெங்கிடு! என்று தட்டியில் கட்டிய முன் கதவை லொடக்கென்று தள்ளி முன் வாசல் வந்து நின்றான் ராஜாராம். வெங்கிடுவின் மணிக்கட்டை பிடித்து இழுத்து, தன் உள்ளங்கையைப் பிரித்துக் காட்டினான்.


வெங்கிடுசாமிக்கு ராஜாராம் கையில் இருந்த பொருளைப் பார்த்தவுடன் ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் முதுகுத்தண்டு சில்லென்று ஆனது. அம்மா பார்க்குமுன் அவனை அப்படியே நெட்டித் தள்ளி கொண்டு தண்ணீர் தொட்டிக்கு அருகே வந்து, எப்படிரா மாப்ள கிடைச்சுது? என்று ஆச்சரியம் குறையாமல் கேட்டான். ஒன்றுமே சொல்லாமல், முன் வாசற்படியையே பார்த்துக் கொண்டு வெங்கிடுவைப் பார்த்து நமுத்தலாய் சிரித்து கண் அடித்தான் ராஜாராம். ராஜாராமுக்கு எப்பவுமே இப்படி ஒரு பழக்கம், வெங்டுவையும், உப்பிலியையும் வியப்பில் ஆழ்த்த இது போல் ஒரு காரியத்தை செய்து விட்டு அதை மேலும் சிறப்பாக்க இது போல கண்ணடித்து அதை ஒரு சாதனை அந்தஸ்திற்கு உயர்த்துவான். அவன் கையில் இருந்தது இரண்டு அக்பர்ஷா சிகரெட்டுகள், திருவண்ணாமலையில் தண்ணீர் தூக்கியதற்கு கிடைத்த காசில் தங்கையாவிடம் சொல்லி வைத்து வாங்கியதாகச் சொன்னான். திருவண்ணாமலை ஒரு மலை மேலுள்ள பெருமாள் கோவில், சரியாக செதுக்காத படிக்கட்டுகளில் செங்குத்தாக இருக்கும், சனிக்கிழமை தோறும் பக்தர்களின் வரவு அதிகம் இருப்பதால், அவர்களின் புழக்கத்திற்கு ஊரில் இருக்கும் இளந்தாரிகள் தண்ணீர் குடங்களில் தூக்கி சுமப்பவர்களுக்கு புளியோதரையுடன் கொஞ்சம் சில்லறையும் கொடுப்பது வழக்கம். ராஜாராம் அப்படி சம்பாதித்த காசில் தான் இந்த சிகரெட்டுகளை வாங்கியிருக்கிறான். அவன் உள்ளங்கை பிசுபிசுப்பில் கொஞ்சம் கசங்கி, புகையிலைத் துனுக்குகள் பிதுங்கி ரகசியமாக வெங்கிடுவைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

வெங்கிடசாமியும், ராஜாராமும், உப்பிலியும் தான் உயிருக்குயிரான கூட்டாளிகள். ஓரே தெருவில் வசிக்கும் இவர்கள் மூவர் மட்டும் வேறு எந்த கூட்டாளிகளுடனும் சேராமல், எல்லா நல்லது, கெட்டதுகளிலும் தப்பாமல் பங்கு கொண்டு, அதில் கிடைக்கும் சந்தோஷ துக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள்  . மூவரும் ஒரு வகையில் சொந்தம் கூட, வெங்கிடுவும் உப்பிலியும் பங்காளிகள், ராஜாராம் மட்டும் சம்பந்தகாரர் வகை, வெங்கிடுவும் உப்பிலியும் ராஜாராமை மாப்ள! என்று தான் அழைப்பது வழக்கம். இதில் ராஜாராம் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் சின்ன பத்து படித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனாலும் இவர்களின் வயது தான் அவனுக்கு. ஒரு வருசம் அவனுக்கு சின்ன அம்மை வந்தபோது பள்ளிக்கு வராமல் இருந்து அப்படியே ஒரு வருசம் கழிஞ்சு போச்சு. இவர்கள் மூவருமே சி.எம்.எஸ். என்ற ஒரு கிறித்துவப் பள்ளிக்கூடத்தில் தான் படித்துக் கொண்டு இருந்தார்கள். பள்ளிக்கூடத்தில் யூனிஃபாரம் வெள்ளைச்சட்டையும், நீலக்கலர் டவுசரும் தான். ஆனால் ராஜாராம் பெரும்பாலான சமயங்களில் 4 முழ வேட்டிதான் கட்டி வருவான். வாரத்தில் 3 நாள் யூனிஃபாரம் கட்டாயம் போட்டு வரவேண்டும். அவங்க அப்பா அவனுக்கு எடுத்துக் குடுத்த டவுசரு கிழிஞ்சுட்டதால, அடுத்த வருசம் வாங்கி தர்ரேன்னு சொல்லிட்டார், வேற வழியில்லாம வேட்டி கட்டிதான் வந்து கொண்டிருந்தான். ஆனா ஹெட்மாஸ்டர் ஆரோக்கியசாமி சார் அவனை யூனிஃபாரம் போடாம கண்ணுல படும்போதெல்லாம் அடிப்பார், அதுவும் அவருடைய அறைக்கு கூட்டிட்டுப் போயி, கையை மணிக்கட்டோடு பிடித்து கொண்டு கையை லூசா விடச்சொல்வார். லூசா விட்டவுடன், புறங்கை மொலிகளில் படுமாறு கையை அவருடைய மேசை முனையில் அடிப்பார், உயிர் போயிட்டு வரும். இது தாங்க முடியாம அவன் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்க, அவன் அப்பா வந்து பேசிப்பார்த்தும் அவரு ஒத்துக்கல. வெங்கிடுவுக்கும், உப்பிலிக்கும் ரொம்ப பாவமா இருக்கும், ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கூட ஒரே ஒரு டவுசர் தான் இருந்தது, அதுலயும் பித்தான் போயி, அண்ணாக்கயிறைத் தான் தூக்கி போட்டு, கிழிசலை மறைக்கும் ஒட்டுத்துணியில், (யூனிஃபாரமுக்கு ஒவ்வாத சிகப்பு கலரில்) கிழிசலை மறைத்து சமாளிக்கிறார்கள். ஒரு வழியா குசு வாத்தியார் தான் அவனுக்கு ஒரு டவுசர் வாங்கி குடுத்தார்.

குசு வாத்தியார் தான் எங்கள் பள்ளிக்கூட டிராயிங் மாஸ்டர். குசு வாத்தியாருக்கு அந்தப்பெயர் வந்ததற்கு வேறு எந்தவிதமான சொல்லமுடியாத அல்லது நகைப்புக்குரிய காரணங்கள் எதுவும் இல்லை. அவருடைய பெயர் தான் அதற்கு காரணம், கு. சுந்தரமூர்த்தி என்கிற அவர் பெயர் சுருங்கி குசு என்றானது. அதுக்கு அவர், பிள்ளைகளின் டிராயிங் நோட்டுகளில் குசு என்று கையெழுத்திடுவதும் ஒரு காரணம். கடைசி வரை அவர் அதை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவருக்கு ராஜாராமை ரொம்பப் பிடிக்கும். அதற்கு காரணம் அவனுடைய ஓவியம் வரையும் திறமை. யாரைப்பார்த்தாலும் அச்சு அசலா வரைவான்.. அவன் வீட்டில், அவன் வரைந்த தாகூர், ராட்டையில் நூல் கோர்க்கிற மாதிரி காந்தி, காமாட்சி அம்மன் கோயில் கோபுரம், குளிர் மாமலை வேங்கடவான்னு அடிக்கடி புலம்பும் கிழவி, காரவடை சுப்பு, டெய்லர் சித்தப்பா (முறுக்கிய மீசையும் தாடியுமாக), ஆராய்ச்சிப்பட்டித் தெருவில் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் குளிப்பாட்ட வரும் தாயம்மாக்கிழவி, ராணி டீச்சர் என்று கையில் சிக்கும் எல்லோரையும் வரைந்து தள்ளுவான். ராஜாராமை பக்கத்து ஊர் பள்ளிக்கூடங்களில் நடக்கும் ஓவியப்போட்டிகளுக்கு எல்லாம் கூட்டிச் சென்று, அவனும் அவ்வப்போது பரிசுகள் வாங்கி வருவதனால் அவனுக்கு எது வேண்டுமானாலும் செய்வார். பார்த்தீங்களாடா! நா வளர்த்த பய! இவன் தாம்லே நம்ம வாரிசு! என்று பெருமையாகச் சொல்வார்.

மூவரும் மேலும் நெருக்கமானதற்கு இன்னொரு முக்கிய காரணம், கபடி தான்.. மூவருமே கபடி டீமில் இளையவர் பிரிவில் இருந்தார்கள். நிறைய ஊர்களுக்கு போட்டிகளுக்காகவும், பக்கத்து ஊர் திருவிழாக்களில் நடக்கும் கபடி போட்டிகளுக்காகவும், அவங்களோட பி.டி. வாத்தியார் அவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். இருதயராஜ் வாத்தியார் தான் கபடிக்கும், ஹாக்கிக்கும் சிறப்பு பயிற்சி கொடுப்பவர். இருதயராஜ் வாத்தியாரை, எல்லோரும் அண்ணே! என்று தான் கூப்பிடுவார்கள். அவருக்கும் அது தான் பிடிக்கும். பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் அங்கு மாலை உடற்பயிற்சிக்காக வருவதுண்டு, அவர்கள் படிக்கிற காலத்தில் இருதயராஜ் வாத்தியார் இதே பள்ளிக்கூடத்தில் சீனியராகப் படித்ததால் அவர்கள் அண்ணே என்று கூப்பிட அதன் பிறகு எல்லோருமே அப்படியே கூப்பிட ஆரம்பித்தார்கள். அவரை அண்ணே! என்றால் தான் பல பேருக்குத் தெரியும் பள்ளியில். இருதயராஜ் அண்ணன் சினிமா நடிகர் எஸ்.வி.ரங்காராவ் மாதிரி சிறிது முன் வழுக்கையுடன், உள்ளடங்கிய வாயுமாக, உயரமாக சிரித்த முகத்துடன் தான் எப்போதும் இருப்பார். அவர் குரல் ரொம்ப வசீகரமாக இருக்கும். நன்றாக பாடவும் செய்வார். திருச்சி லோகநாதன் போலவே பாடுவார். மந்திரிகுமாரியில் வரும் வாராய் நீ வாராய் பாடல் அவரின் பிரத்யேகப்பாடல். அவர் பாடும் போது சில இடங்களில் திருச்சி லோகநாதன் போலவே இருக்கும். ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே என்ற பாடல் கணக்கு டீச்சர் ரமாதேவி கடந்து போகும் போது, மிகத் தனிவான குரலில் கிசுகிசுப்பாகப் பாடுவார். ரமாதேவி டீச்சரின் வீடும், இருதயராஜ் அண்ணன் வீடும் குலாலர் தெருவில் அடுத்தடுத்து இருந்தது. ரமாதேவி டீச்சரின் கணவர் தாயில்பட்டி அரசுப் பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியாராக இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மாத்திரமே ஸ்ரீவில்லிக்கு வருவது வழக்கம். ரமாதேவி டீச்சருக்கு ஜெயந்தி என்றொரு மகள் இருக்கிறாள், குலாலர் தெருவிலேயே இருக்கும் ஒரு பள்ளியில் படிக்கிறதாக, அதே தெருவில் வசிக்கும் சுப்புராஜ் சொல்வதுண்டு. இருதயராஜ் அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, அவர் வீட்டில் அவருடைய அம்மாவும் அவரும் மாத்திரமே, அவங்க அப்பா பனையேறி, ஒரு முறை பனை மரத்தில் அவர் ஏறியிருந்த போது மின்னல் அடித்து மரத்தோடு கருகி விட்டார். அந்த இடம் மொட்டப்பத்தான் கிணறுக்கு போகும் வழியில் தான் இருக்கு ஒரு முறை கூட்டாளிகளுடன் சென்பகத்தோப்பு போகும்போது சுப்புராஜ் தான் காட்டினான். நாலைந்து மரங்கள் அதனுடன் சேர்ந்து எரிந்து போயிருந்தது. இருதயராஜ் அண்ணன் வீட்டிற்கும் ரமாதேவி டீச்சர் வீட்டிற்கும் ஒரு முழம் தான் இடைவெளி இருக்கும். அதிகாலையில் இருதயராஜ் அண்ணன் மொட்டை மாடியில் நின்று கர்லாக்கட்டை சுத்துவதாகவும், பஸ்கி எடுப்பதாகவும், புரிந்தும் புரியாததுமான கதைகளை சுப்புராஜ் சொல்வதுண்டு, அவனுடைய வீடு ரமாதேவி டீச்சரின் வீட்டுக்கெதிரே இருந்ததால் எங்களால் அதை நம்ப போதுமான நியாயம் இருந்ததாகவே பட்டது.

முதலில் வெங்கிடுவுக்குத் தான் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. எங்க வகுப்பில் படிக்கும் பொட்டலம் பெருசு தான் அவனுடைய ஆசைக்கு தூண்டுகோலாய் இருந்தான். பொட்டலம் பெரிசின் நிஜப்பெயர் சங்கரன். அவனுடைய வீடும் வெங்கிடுவின் தெருவில் மகாலிங்கம் அண்ணாச்சி கடைப்பக்கத்தில் தான் இருந்தது. வெங்கிடுவுக்கு அவனை சுத்தமாய்ப் பிடிக்காது, இவர்கள் எல்லோரையும் விட உயரமா, தாட்டியா ஒரு பெரிய ஆம்பிள போல இருப்பான். வகுப்பிலேயே 3 வருசமாக இருக்கான், கடேசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இருப்பான். அவன் வரலேன்னாக்கூட யாரும் அவன் இடத்தில் உட்காருவது கிடையாது அவனோட கூட்டாளிகள் எல்லாம் ஊருனிப்பட்டித் தெருவில் இருக்கும் பயலுக தான். இவன் எப்போதும் பெரிய பத்து படிக்கிற ராஜு, மாடசாமியுடனே தான் சுற்றுவான். வகுப்பில் இருக்கும் மீனாட்சி சுந்தரம் தான் அவன் கூட இருப்பான் கடேசி பெஞ்சில். எப்பப் பார்த்தாலும் அவனை அடிச்சுட்டு, கைய முறுக்கிட்டே இருப்பான். அவன் வாங்கி குடுக்கிற தீனிக்காகத் தான் அவன் எவ்வளவு அடிச்சாலும் அவன் கூடவே இருப்பான். அவனுக்கு பொட்டலம் பெருசுன்னு பேர் வந்ததுக்கு காரணம் அவன் எப்பப்பார்த்தாலும் டவுசர் பாக்கெட்டுக்குள்ளயே கைய விட்டு நோண்டிக்கிட்டே இருப்பானாம். அதனால சிதம்பரம்னு அப்போ அவனுக்கு ஏழாம் வகுப்பு வாத்தியாரா இருந்தவர், இவன் பன்றதப் பார்த்து தான் அவனுக்கு பொட்டலம் பெருசுன்னு பேர் வைச்சதா பெரிய கிளாஸ் பசங்க சொல்ல கேட்டிருக்கேன். ஒரு சண்டியர் மாதிரித்தான் திரிவான் எப்போதும், அவங்க அப்பாவையே போட்டு அடிச்சிருக்கான் ஒரு முறை.

அவன் இப்படி சண்டியர் மாதிரி திரியிறதுக்கு அவங்க அப்பா கூட ஒரு காரணம் என்று வெங்கிடுவின் அம்மா சொல்ல கேட்டிருக்கிறான். அவனுடைய அப்பா மதுரையில் அப்போ டிவிஎஸ் பஸ்ஸில் டிரைவராக ஓடிக்கொண்டிருந்தார். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ரெண்டு முறையோ தான் வருவார்.. பொட்டலம் பெருசின் தாய் மாமா, அவன் அம்மாவின் தம்பி நாகராஜன், இவர்கள் வீட்டில் இருந்து தான் வேலைக்கு போய் வந்தான். அவன் தங்கநகை வேலை செய்து வந்தான். சில வேலைகளுக்கு உள்ளூரில் வசதி இல்லாததால், மதுரையில் குடுத்து வேலையை முடித்து கொண்டு வருவது அவன் வழக்கம். அப்படி ஒரு அமாவாசை நாளில் அவன் மதுரைக்கு போக வேண்டியிருந்தது. அன்று அவன் மதுரைக்கு போனபோது அவனுடைய மாமாவும் இன்னொரு சிவத்த பொம்பிளையுடனும், குழந்தையுடனும் பாண்டி கோயில் பஸ்ஸில் ஏறுவதற்கு நின்றபோது அந்த பெண் குழந்தை அவன் மாமாவை அப்பா என்றது. நாகராஜன் இதை இன்னும் விசாரிக்க இரண்டு நாள் தங்கி முழு விவரத்தையும் அறிந்த போது தான், அவனுடைய மாமாவுக்கு மதுரையில் ஒரு குடும்பம் இருப்பது தெரிய வந்தது. அவர் ஊருக்கு வந்தபோது பெரிய பிரச்னையாகி, பொட்டலம் பெருசும் அவனுடைய அப்பாவை அடித்து அவரும் அந்த நாளில் இருந்து ஊருக்கு வருவதே இல்லை. நாகராஜன் தான் தன் அக்காவின் குடும்பத்தை பார்த்துக் கொள்வது. பொட்டலம் பெருசும் கொஞ்ச நாளில் தங்க நகை வேலைக்கும் சென்று விடுவான் என்பதால் தான் அவன் படிப்பைப் பற்றியோ, அவனுடைய பெரிய மனுஷ நடவடிக்கைகளோ யாருக்கும் ஒரு பொருட்டாய் இருந்ததில்லை. ஒரு நாள் அவன் பள்ளிக்கூட மைதானத்திற்கு பின்னால் இருக்கும் ஊருனிக்கு அருகே இருக்கும் ஒரு முள்ளு முருங்க மரம் பக்கத்துல, செல்லப்பன் அண்ணனுடன் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்தான் வெங்கிடு. அவன் இடது கையில் சிகரெட் பிடித்துக் கொண்டு, சிகரெட்டுக்கு வலிக்காமல் ஒரு சிநேகமாய் தட்டி, மேல் நோக்கி புகைவிடுவது ரொம்ப அழகாக இருந்தது. செல்லப்பன் அண்ணன் அவ்வளவு ஈடுபாடுடன் சிகரெட் பிடிக்கவில்லை, அவர் தீவரமாக அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பொட்டலம் பெருசு இவனைப் பார்த்து அங்கிருந்த படியே சிகரெட்டை இவனை நோக்கி நீட்டினான். இவனும் ஆசையுடன் வேண்டாமென்று ஓடி வந்து விட்டான். அன்று சாயந்திரமே வெங்கிடு இதை உப்பிலியிடமும், ராஜாராமிடமும் சொல்லி, எப்படியாவது சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற இவனுடைய ஆசையையும் கூறினான்.

உப்பிலி கொஞ்ச நேரம் யோசிப்பது போல் பாவனை செய்து ஒரு யோசனை சொன்னான். பப்பாளிக்குச்சியும், ஆமனக்கு குச்சியும் பத்தவைச்சு இழுத்தா சிகரெட் போலவே புகை வரும் என்றும் இதை வக்கீல் குமாஸ்தா கணேசன் சொன்னதாகக் கூறினான். அதை செயல்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தான் தோதாய் இருக்கும். எப்போதும் சனி, ஞாயிறுகளில் ஒரு வேப்பங்குச்சியையோ அல்லது அரிசி மில் கருக்கையோ எடுத்துக்கொண்டு, ஒரு துண்டை தோளில் மாட்டிக்கொண்டு கொல்லைக்கு போய்விட்டு அப்படியே மொட்டப்பத்தான் கிணற்றில் குளித்து விட்டு வருவது எங்களுடைய வாடிக்கை. இனிமேல் மொட்டப்பத்தான் கிணற்றிற்கு போகிற வழியில் இருக்கும் தேரியப்ப நாடார் ரோஜாத்தோட்டத்திற்கு அருகில் இருக்கும் ஆமனக்கு தோட்டத்தில் இருந்து குச்சிகளை பொறுக்கி புகைக்க தீர்மானித்து, உடனே செயல்படுத்தவும் செய்தார்கள். முதலில் நிறைய இருமலும், புகையும் வந்தது கொஞ்சம் கொஞ்சமாக இருமாமல் புகைக்கப் பழகியது. ஆனாலும் இதில் என்ன அப்படி சுவாரசியம் இருக்கிறது மூவருக்குமே விளங்கவில்லை. யாரிடமும் கேட்கவும் பயம், அதனால் சிகரெட் பிடித்தே ஆகவேண்டும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள, அதன் ருசி அறிய நாளுக்கு நாள் ஆசை அதிகமானது. இதைப்பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதும், ஆத்துக்கடையில் சிகரெட் பிடிப்பவர்களை ரகசியமாக பார்த்து ரசிப்பது என்று ஆசையை அது இன்னும் வளர்த்து விட்டது.

அப்போது தான் ராஜாராம் கையிலிருந்த சிகரெட்டுகள் வெங்கிடுவுக்குள் ஒரு விவரிக்க முடியாத பயத்துடன் கூடிய சந்தோஷத்தைக் கொடுத்தது. இதை உப்பிலியிடம் சொல்லிட்டயா என்று கேட்டதற்கு அவன், அம்மாவுடன் இடைய பொட்டல் தெருவில் இருக்கும் வனராஜா தீப்பெட்டி ஆஃபீஸ் சென்றுள்ளதாகக் கூறினான். முதலில் அவன் அங்கு தான் போயிருக்க முடியும், வேண்டும். உப்பிலியின் வீட்டை தாண்டி தான் ராஜாராம் இவன் வீட்டிற்கு வரவேண்டும், அதனால் அங்கு தான் முதலில் சென்றிருப்பான். தெருவில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் தீப்பெட்டி ஒட்டுவதிலும், ஊதுபத்தி உருட்டுவதிலும் தங்களுடைய நேரத்தை கழிப்பதுடன் ஓரளவு காசும் சம்பாதிக்கவும், கணவன்களுக்கு, அப்பா, அண்ணன்களுக்கு தெரியாமல் காசு சேர்ப்பதிலும் ரொம்பவும் கருத்தாய் இருப்பார்கள். ஏதாவது ஒரு வீட்டில் ஒரு 10 பேர் வரை கூடி மொத்தமாக கட்டுகள் வாங்கி தீப்பெட்டி ஒட்டி பணத்தை பிரித்துக் கொள்வார்கள். வாரம் ஒரு முறை நோட்டில் எழுதியிருக்கும் கணக்கின்படி காசு வாங்கிக் கொள்வார்கள். ஊதுபத்தி உருட்டுவதில் பெரும்பாண்மை இல்லாவிட்டாலும், குறைந்த அளவு பெண்கள் ஈடுபட்டு இருந்தார்கள். தீப்பெட்டி ஒட்டுவதில் வரும் அளவு இதில் காசு இல்லை என்றாலும், இவ்வளவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், ஊதுபத்தி உருட்டுவதும் நடக்கிறது அங்கங்கே! இந்த சேமிப்பில் இருந்து தான் அவர்களின் சினிமா செலவுக்கும், பண்டிகை, திருவிழா சமயங்களில் அலங்கார பொருட்கள், குஞ்சலங்கள், வளையல், கொலுசு என்று வாங்கவும், சீட்டுப்போடுவதிலும், சந்தா கட்டுவதிலும் செலவு செய்வார்கள். உப்பிலியும் சனிக்கிழமை சாயந்திரங்களில் அவன் அம்மாவுடன் எப்போதாவது செல்வதுண்டு. அங்கு அவனுடைய வனஜா சின்னம்மா வீடு இருக்கிறது, அவங்க அம்மா அவனை அங்க கூட்டிப்போயிட்டா என்ன செய்வது என்று இவனுடைய பயத்தைச் சொன்னதும். ராஜாராம், நான் போய் கூட்டிட்டு வந்துடறேன்! என்று நம்பிக்கை அளித்தான். மூன்று பேரும் சொந்தம் என்றாலும், உப்பிலியும், வெங்கிடுவும் ஒரே குலசாமி கும்பிடறதால அவங்க அப்பாவும், இவனோட அப்பாவும் இவர்களைப்போலவே கூட்டாளிகள். அதனால் ஒரு வேளை எக்குத்தப்பா மாட்டிகிட்டா கொஞ்சம் பிரச்னையின் தீவிரம் குறையலாம் என்ற நம்பிக்கையில் உப்பிலியின் கூட்டு அவசியமாய் இருந்தது வெங்கிடுவுக்கு.

ராஜாராம் அவனுடைய திட்டத்தைக் கூறினான். அதாவது மூவரும் அரசமரம் பிள்ளையார் கோவிலில் 5 மணிக்கு மேல சந்தித்து அங்கிருந்து கனபதி டாக்கீஸில் படம் பார்த்துக் கொண்டே இதை முடிச்சிடலாம்னு சொன்னதில் இவனுக்கு சம்மதம் இல்லை. தேரியப்ப நாடார் ரோஜாத்தோட்டத்துக்கே போய் விடலாம் என்று சொல்ல அதை ராஜாராம் மறுத்துவிட்டான். ரொம்ப இருட்டாயிடும் இப்பவே 4 மணிக்கு மேல ஆயிட்டிருக்கும், இன்னும் உப்பிலியும் வர அரைமணி நேரமாயிடும். இருட்டுல சிகரெட் பத்தவைச்சா தான் எல்லாருக்கும் தெளிவாத் தெரியும், யாரோ திருட்டுதனம் செய்வது மாதிரி. கொட்டாயி தான் வசதி, தரை டிக்கெட்ல போய் ஒக்காந்துட்டா நிறைய பேர்ல நம்மளும் இருப்போம். அதனால் தனியா யாருக்கும் தெரியாதுன்னு சொல்லி தைரியம் சொன்னான். அவன் சொல்வதில் நியாயம் இருந்ததாகவே பட்டது வெங்கிடுவுக்கு. என்ன இருந்தாலும் சிகரெட் கொண்டு வந்தவன் எங்க போய் அதப்பிடிக்கனும்னு சொல்றது வாஸ்தவமாகத் தான் பட்டது, அவனுக்கு அந்த உரிமை இருக்கு என்று சமாதானம் சொல்லிக் கொண்டான் வெங்கிடு.

சொன்னமாதிரி உப்பிலியை அழைத்துக் கொண்டு, ராஜாராம் அரசமரம் பிள்ளையார் கோவிலுக்கு வந்து விட்டான். இவனைப்பார்த்தவுடனே..
ஏலேய் வெங்கிடு! பாத்தியா மாப்ள சாதிச்சுட்டான்னு என்னை கட்டி பிடிச்சுக்கிட்டான். இன்று வழக்கத்திற்கு அதிகமாக மூவருக்குள்ளும் ஒரு பிரியம் வழிந்தது. மூவருமே ஆத்துக்குள்ள இருக்கும் டீக்கடையில் கோஸ் போண்டா வாங்கிக் கொண்டு தியேட்டரை நோக்கி விரைந்தார்கள். டிக்கெட்டுக்கு உப்பிலி காசு கொடுப்பதாகச் சொன்னதால், வெங்கிடு வச்சிருந்த காசில் கோஸ் போண்டா வாங்கிக் கொண்டார்கள். ராஜாராம் சிகரெட் கொண்டுவந்ததால் அவனை ஏதும் செலவு செய்ய விடவில்லை இவர்கள் இருவரும். கனபதி டாக்கீஸில் என்ன படம் என்று கூடத் தெரியாது, ராஜாராமிடம் இவன் கேட்ட போது ராஜாராணி என்ற சிவாஜி கணேஷனின் படம், கருணாநிதி வசனத்தில் வந்த படம். சிவாஜி கணேசன் சாம்ராட் அசோகனாய் பேசிய வசனம் படத்தின் சிறப்பம்சம். வெங்கிடுவுக்கு எம்.ஜி.ஆர் தான் பிடிக்கும், ஆனால் உப்பிலிக்கும், ராஜாராமிற்கும் சிவாஜி என்றால் உயிர். ஒரு ரசிகர் பேரவையில் உறுப்பினர்கள் கூட. ஆக கனபதி டாக்கீஸை தவறுக்கு முதல் களமாய்ப்போனதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. 3 தரை டிக்கெட் எடுத்துக் கொண்டு மூன்று பேரும் கொட்டாயிக்குள் நுழைந்தார்கள். ஏற்கனவே நல்ல இருட்டு தட்டி விட்டது.

உள்ளே நுழைந்தவுடன் மணலை அள்ளி குமித்து ஒரு திட்டு போல செய்து கொண்டான் இவன். இவனை விட அவர்கள் இருவரும் கொஞ்சம் உயரம் என்பதால் அவர்களுக்கு மண் மேடு தேவைப்படவில்லை. ஒரு அரை மணி நேரம் போகட்டும் அப்புறம் பத்தவைக்கலாம் என்று, உப்பிலி சொல்ல, ராஜாராம் இவனை நோக்கி தீப்பெட்டி கொண்டு வந்தியான்னு கேட்க இவனுக்கு அப்போது தான் தீப்பெட்டி கொண்டு வரச்சொன்னது ஞாபகம் வந்தது. கொண்டு வர மறந்துட்டேன்னு தலையைச் சொரிய, என்னடா இவண்ட்ட போய் சொல்லிருக்கே! இவ சரியான குண்டி மறந்த பய நக்கலடித்தான் உப்பிலி. தீப்பெட்டி கொண்டு வராததால் இவனையே போய் முன்னால் பீடி குடித்துக் கொண்டிருந்த ஆளிடம் கேட்கச் சொன்னார்கள். உப்பிலி இதை ரகசியமாக அடிக்குரலில் கேளுடான்னு இவனை விலாவில் இடித்தான். இவனுக்கு முன்னாடி குற்றாலத்துண்டில் முக்காடு போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாரசியமாக பீடி பிடித்துக் கொண்டு இருந்த அவரின் தோளைத் தொட்டு “அண்ணாச்சி கொஞ்சம் தீப்பெட்டி குடுக்குகீகளா? என்றதும் முழுதும் திரும்பாமல் கையை மட்டும் பின்னால் நீட்டி தீப்பெட்டியைக் கொடுத்தார் அந்த அண்ணாச்சி. தீப்பெட்டியை வாங்கியதும் ஒரு குச்சி மட்டும் இருப்பதைக்கண்டு, அண்ணாச்சி ஒரு குச்சி தான் இருக்குன்னு சொல்ல, அதுக்கு அவரு, என்னலே கொட்டாயவா கொளுத்தபோறீக! அது போதாதா என்று எரிந்து விழுந்தார், சிவாஜி கணேசனின் வசனத்தை கவனிக்க விடாத கடுப்பில். குரல் பரிச்சயமானதாக இருப்பதை இவன் யோசிப்பதற்குள், உப்பிலி தீப்பெட்டியை, குடுலே! நான் கொளுத்துதேன்னு பிடுங்கி கொண்டான். அணுபவமின்மையும், ஆர்வக்கோளாறும் சிகரெட்டைப் பற்ற வைக்கும்முன் அனைந்து விட, ஏகக் கடுப்பான ராஜாராம் உப்பிலியின் பொடனியில் பட்டென அடித்தான். என்னலே பன்றது…சிகரெட்ட கையில வைச்சு உருட்டிகிட்டு ஈரமாக்கிட்ட அதனால தான் என்னால கொளுத்தமுடியலன்னு அவனும் எகிற..வேறு வழியில்லாமல் தீப்பெட்டி தந்த பெரிசிடமே நெருப்பு கேட்கலாம் என்று கேட்க, அவரும் தாராளமாக திரும்பி பீடியைக் கடைசி இழு இழுத்துவிட்டுக் குடுத்தார். வாங்கின நெருப்பு இவனுக்கு கொள்ளியாகப் போனது உரைக்கும் முன்னே,முக்காடு போட்ட, தீப்பெட்டி குடுத்த பெருசு இவனைத் தெளிவாக வெங்கிடுசாமி! என்று அடையாளம் கண்டு கொள்ள, அந்த குழப்பக்குரல் அடையாளம் இவன் மாமாவாகிப் போக, வெளிச்சத்தில் மூவரையும் வெளியே வரவைத்து, உப்பிலி, ராஜாராமை சுத்தமாக அடையாளம் கண்டுகொண்டு, சினிமா பார்க்காமலே வீட்டுக்கு அனுப்பி விட்டார் இல்லை ஓடுங்கடா வீட்டுக்குன்னு துரத்திவிட்டார், சிகரெட்டுகளை பிடுங்கிக் கொண்டு. இவனும் இதுக்குதான் கொட்டாயிக்கெல்லாம் வேண்டாம்னு நினைச்சேன், மடவார்வளாகத்திற்கு எதிராக இருக்கும் மண்டபம் தான் நல்ல இடம்னு என்று ஏதோ உளறி வைத்தான். அப்பாவின் கையில் திருக்கை மீன் முள்ளும், புளிய விளாறும் ஞாபகத்தில் மிரட்ட, உப்பிலியும், ராஜாராமும் எதை நினைத்து மிரண்டு நின்றார்களோ, இவனுக்கு அழுகை வந்து விட்டது, இவனைப்பார்த்து அவர்கள் இரண்டு பேரும் அழுது விட்டார்கள். எதுக்கு அழுகை வந்தது பயத்திலா அல்லது சிகரெட் பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தினாலா என்று தெரியவில்லை இன்றுவரை.

மாமா இதை யார் வீட்டிலும் ஏன் சொல்லவில்லை என்று அவர் சாவுக்கு போயிருந்த போது கேட்க வேண்டும் என்று தோன்றியது வெங்கிடுவுக்கு.

Saturday, October 31, 2009

பிள்ளைக்கலி....

காத்திருந்த வராண்டாவில்
ஆஸ்பத்திரி வாசம்
என் இருக்கைக்கு அருகே
அமர்ந்திருக்கும் ஒரு
நிறைசூலியாய் நகராமல்

குழந்தைப்பேறு வேண்டி
அரசமரமும் ஆஸ்பத்திரியும்
சுற்றியவர்கள்
அடிவயிற்றைத் தொட்டுக்
கொள்வார்கள்
எதிரில் தொங்கும்
படங்களின் குழந்தைகளை,
சிசுக்களை மானசீகமாய்
சுமந்து, பெற்று…

உடன் வந்த
உறவுகள் மற்றும் ஏனையோர்
தங்கள் பேற்றுக்கான
பிரத்யேகக்கதைகள் பேசி
விரோதம் வளர்ப்பர்
நுழைவாயில் விநாயகரைத்
தொழுது
பூக்களும், திருநீறும் கொடுத்து
அக்கறையாய்
அரிதாரம் பூசுவர் சிலர்

ஏனைய வார்டுகளுக்கு
குழந்தையுடன் வந்தவர்
பெருமூச்சுடன் பரிதாபமாய்
பார்த்து தத்தமது
குழந்தைகளை
கொஞ்ச, கண்டிக்க
என்று வேடிக்கைக் காட்டுவர்

புத்தகத்திலும், மடிக்கனினியிலும்
புதைந்து போய்
பெயர் அழைக்க,
புழுதியுடன் வெளிவருவர்
அவரவர் தாழியிலிருந்து.
ஆஃபிஸ் பெர்மிஷன்
விடுப்பாய் போக
சலித்துக்கொண்டு
மேலதிகாரியை திட்டுவதாய்
பொய் பேசித் திரிவார்கள்
கணவர்கள்

மாமியாரும், கணவரும்
தனியாகப் பேச
பேதலித்து மறுமணம்
பற்றியதாய் இருக்குமோ
என்று உள்ளே அழுவார்கள்
சார்நிலை மனைவிகள்

கலியாணம் ஆகி
எத்தனை வருஷம் ஆச்சும்மா
என்று அன்பாய்
நெருப்பிடுவாள் சிதையில்
மருமகளை டாக்டர் அறையில்
விட்டுத் திரும்பிய
யாரோ மாமியார்க்காரி

செயற்கை முறையில்
கருத்தரிக்க, முட்டைகள் கடன் வாங்க,
என் சிசுவை பிறர் சுமக்க
எதுவும் ஏதுவில்லை

கருப்பை வளர்ந்து
பெரிதானது
கை ஏந்தும், கண் விரியும்,
தெரு நெடுகித் திரியும், எச்சில்
கழுவும், ஏவல் பனியும்,
குழந்தைகள் தூக்கி சுமக்க…..

Friday, October 30, 2009

பசி





அலுமினியத் தட்டில்
சத்தமெழுப்பி அழும்
சங்கீதத்தில்
ஒற்றை சுவரங்கள்
உயிர் உருக்கி எழும்பும்

இட்ட விதை
தளிராய் பிளக்க
நடுநிசித்
தட்டும் கைகளில்
மகரந்தம் சேர்க்கும்
உலர்ந்த பூ பூப்பெய்தும்

செத்த உடலைத் தின்னும்
செந்நரிக் கூட்டங்களின்
பற்களில் விஞ்சும்
சதைத்துனுக்கை பிட்டு
சாதத்தில் குழைக்கும் அம்மை

அடங்காப்பசிக்கு
அம்மையைத் தின்று
அழும் குழந்தைகள்
அப்பனைக் கழித்து
அம்மையை எதுக்களிக்கும்

Thursday, October 29, 2009

பின்னூட்டக் கவிதை

பா.ரா.வின் ஒரு கவிதைக்கு பின்னூட்டமாய் எழுதியது. பா.ரா. அறிவுறுத்தியதற்கு இணங்க அதை இங்கே பதிவு செய்கிறேன்.  இது ஒரு நெகிழ்வு தானே ஒழிய கவிதை என அறுதியிட முடியாது.  அன்புக்கு நன்றி பா.ரா.

மகளின் பிறந்த நாளுக்காய்
பரிசாய்
இரண்டு மரக்கன்றுகளை
கொடுக்கிறேன்

பாலிதீன் பைகளில்
கன்றாய் அடங்கியிருக்கும்
ஒரு வீர்ய விருட்சம்
குறியீடாய் நிமிர்கிறது

எதற்கு
இதக்குடுத்த!
இத நா எங்க
நட்டு வளப்பேன்

கேள்வியில்
ஒடுங்குகிறது
பரிதாபமாய்
அதன் வேர்கள்

வாசலைக்காட்டுகிறேன்
சாலையின் ஓரத்தில் நடு
நீர் வார், காபந்து செய்

வருங்காலத்திற்காய்
நிழற்குடை
கனிதரா மரங்களும்
உயிர் தரும்
உன் அப்பாவைப் போல!

கைபிடித்து அழும்
மகளை புரியுதா எனக்கு?

Wednesday, October 28, 2009

ரகசியப்புத்தகங்கள்...

உன் ஞாபகங்களை

புத்தகமாய் தொகுக்கிறேன்
நல்ல கனமான காலிக்கோ
அட்டையுடன்
கவர்ச்சி இல்லாத ஒரு
பொருளாய்ச் செய்கிறேன்

யார் கவனத்தையும்
ஈர்த்து விடாதபடிக்கு
அதன் வசீகரத்தைக் குறைத்து
அதை ஒளித்து வைக்கிறேன்
அவ்வப்போது
ரகசியமாய் புரட்டுகிறேன்

இது போன்ற கவர்ச்சியற்ற
ஒரு கனமான புத்தகத்தை
அவளும் புரட்டிக் கொண்டிருக்கிறாள்
என்னை விநோதமாய் பார்த்து
புத்தகத்தை மறைக்கிறாள்!

எனக்கு பயம் பிடித்துக்கொண்டது
விரைந்து சென்று அலமாரியைக் குடைகிறேன்
என் புத்தகம் பத்திரமாய் இருக்கிறது
பிரதி எடுத்திருக்க வாய்ப்புண்டு
என்பதை நிராகரிக்கிறேன்

எல்லோரும் புத்தகம் போட
ஏதுவிருக்கும் உலகு.

Monday, October 26, 2009

குரல் குடித்தனம்

என்னங்க எப்படி இருக்கீங்க!

குரலில் அன்பும் பிரியமும்
அம்மாவைக் கொண்டிருந்தாள்!

நல்லாயிருக்கேன்!
நீயும் குழந்தைகளும்?
ராசாவுக்கு வாக்கப்பட்டேன்
பெத்ததும் அவருக்குத் தானே!
சேமம் தான்! உற்சாகக்குரலில்
சப்பர ஊர்வலமாய் பெருகினாள்

எப்போ வர்றீக!
உரத்த குரலில் பேசினாள்,
சித்திரமாய் வந்து போகிறாள்
இருபக்கமும் மகவிரண்டை
கைபற்றி!
என் பதில் ஒரு ஒற்றைத் தந்தி
நாதமென அதிர்வுகளை அனுப்பியது போலும்!
சிறு விசும்பல் சத்தம்,
குழந்தைகள்
தூங்கியிருக்க வேண்டும்,
பிரிவின் கண்ணீரில் குழந்தைகளை
நனைத்ததில்லை ஒருபோதும்

புவனாவுக்கு மாப்ள
வந்திருக்கு!
கோன வாத்தியார் சொல்லியனுப்பினாரு!
என்ஜீனியர் பையனாம்
நகை நட்டு வேனாம்னுட்டாக!
நம்ம போடறத போட்டா போதும்னு
சொல்றாக!
ஒத்தபிள்ளயாம்!
மாமனாரு மாத்திரம் தான்...
ஜாதகமும் பொருந்தியிருக்காம்
லெட்டர் மேல லெட்டர் போட்டு
நீங்க எப்ப வருவீகன்னு கேக்கிறாக!
என்ன சொல்லனும்!

நானே போய் ஒரு நட
பார்த்துட்டு வரவா?
போட்டாவ வாங்கிட்டு
வந்தா உங்களுக்கு அனுப்பலாம்
புவனாவுக்கும் பிடிக்குதான்னு கேட்டுக்கலாம்
உங்க தம்பி வீட்டுல
யாருக்கும் நேரமில்லைபோல
எப்ப கேட்டாலும் வேலையா இருக்கிறாப்ல!
ஊருக்குத் திரும்பி வருகையில்
உறவுகள் மொய்க்க
கடைவிரிக்கும் பொருட்களில் நானும் இருப்பேன்
அவர்கள் முன் குத்தவைத்து கொள்வாரில்லாமல்

நீங்க வர்றதானா
கொஞ்சம் விசாரிக்கலாம் குடும்பம்
எப்படின்னு, என் கூறுக்கு
நான் என்னத்த தெரிஞ்சுக்கப் போறேன்!
காசெல்லாம் இருக்கு!
முடிஞ்சா சீக்கிரமா வாங்க!
ஆறேழு மாசம்னா ஜாஸ்திதான்
அவுகள கேட்டு பாக்குதேன்!

சின்னவனா? நல்லா படிக்கான்!
லெட்டர் எங்க போடுதான்
உள்ள பள்ளியோட வேலையவே
பாக்க மாட்டேங்கான்
லெட்டர் எங்க போடப்போறான்
புவனாவ எழுதச் சொல்லுதேன்
வச்சுடுதேன், அம்புட்டுதான்

உடம்ப பாத்துக்கிடுங்க!
வெயில்ல ரொம்ப சுத்தாதீக!
தூரதேசம் மனைவியைத்
அம்மையாக்கி விடுகிறது, குரலில்
முலை முளைத்து பால் கசிந்தது

சன்முகம் அண்ணாச்சிய
விசாரிச்சதா சொல்லுங்க!
அவருக்கு பேத்திதானுங்க
இப்ப பொறந்தது, போய் பார்த்தாரா?
ஒரு வருஷமாச்சா?
அவுக வீட்ல எம்புட்டு
விசனப்பட்டு இருப்பாக!
சரி நீங்க சீக்கரமா வந்து சேருங்க!
புவனாவுக்கு கலியாணம் முடிஞ்சிட்டா
கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்

குரல்வழி பெருவாழ்வு
எப்போது தொலையும் இந்த எரிபடுகை!

Sunday, October 25, 2009

கால(ன்) மயக்கம்

உயிர்ச்சன்னலின்
அருகில் ஒட்டிக்கொண்டிருக்கும்
மரணப்பல்லி
தனது இருப்பை
அவ்வப்போது சத்தமிட்டு
கட்டியம் சொல்லும்

இடைவெளி சந்தில்
வழியும்
வெளிச்ச ரேகைகள்
உடலெங்கும்  வலைபின்னி
உயிர்நிலையை
சிலந்தியில் நிறுத்தும்

பல்லி நெருங்க
தூரம்
நடுங்கி கொண்டே
சுருங்கும்
வாய் பிளந்த
பல்லி,
சிலந்தியை
விழுங்க எத்தனிக்கும்

அறுந்து
துடிப்படங்கும் வால்
பல்லி மீதம்
இருக்கும் சிலந்தியின் கடைவாயில்.

Saturday, October 24, 2009

ஒரு க(வி)தை!

ரகசியத் தோழி
குடுத்த துண்டுச்சீட்டைக் காட்டி
என்னையும்
உடன் அழைக்கிறாய்!

எதற்கும்
இருக்கட்டுமென்று
ஒன்றுக்கு கூடுதலாகவே
ஆணுறைகளை வாங்கி கொண்டாய்

தொலை தூரப் பயணத்
தேவைகளை
நீயே பார்த்து கொண்டாய்
உன் கனவுகளின்
ஆடைகளை களைந்து
எனக்கு முயங்க கொடுத்தாய்

தோழி வீட்டை
அடைந்து
தடதடக்கும்
கதவின் தாழ் நீக்கி
அவளைத் தொடுகிறாய்!

இரண்டாய் பிளக்கிறாள்
இரு வேறு நிறங்களில்
நீலம் எனக்கென்றாய்
வெளிர் மஞ்சள்
நீ எடுத்துக்கொண்டாய்!

நைச்சிய நிறங்கள்
பூசி சுடலைமாடன் ஆனேன்!

Wednesday, October 21, 2009

குறும்பா..

பிரிவுகளைச் சொல்ல
ஒரு மயிற்பீலி போதும்

உறவுகளைச் சொல்ல
குத்தீட்டிகள்
தேவைப்படுகிறது

என்னில் வழியும்
குருதியில் ஜனிக்கிறது
ஒரு ஒற்றைக்  கவிதை

பாடுபொருளாய் நீ!

Friday, October 16, 2009

அம்மா என்னும் வேம்பு

பாட்டி வீட்டில்
இருந்து படிக்க
மல்லாங்கிணறுக்கு
அனுப்பப்பட்டேன்

மதுரையில் இருந்து
பிரிந்த தோழிகளையும்,
தோழர்களையும்
கண்ணீருக்குள் நிறுத்தி

எல்லாத்துக்கும்
காரணம் என்று
பெரியப்பாவை
கெட்ட வார்த்தைகளில்
திட்டினேன்

அக்காவின்
கூழாங்கற்களையும்
சோழிகளையும்
வாய்க்காலில் எறிந்தேன்
அவள்
ஜியாமெட்ரி நோட்டில்
கண்டபடி
கிறுக்கி வைத்தேன்

போலீஸ்கார அப்பாவின்
சாக்ஸ்களை கிழித்து
பிராஸோவில்
மண்ணைக்கொட்டினேன்
ஷூ பாலீஸை
தண்ணித் தொட்டிக்குள் போட்டேன்

அம்மாவிடம்
போய் அழுதேன்
அம்மா
ஒரு வேப்பங்கன்றைக்
கொடுத்தாள்
பாட்டி வீட்டில் எங்கு
நட்டு வளர்க்க வேண்டும்
என்று சொன்னாள்

வேப்பமரம்
கிளை பரப்பி வளர்ந்தது
என்னுள்
கசப்புகளை மீறி…

Thursday, October 15, 2009

மீட்சி...

உறுப்புகள்
சுருங்கத் தொடங்குகிறது

உரோமங்கள்
உள்புகுகின்றன

தோல் வெளுத்து
மிருதுவாகிறது

எலும்புகள்
குறுகி இளக்கமாகிறது

உடலில் இருந்து
பிசுபிசுப்பாய் திரவம் சுரக்கிறது

தொப்பூளில் இருந்து
கொடி வளர்கிறது

உடலைச்சுற்றி
சவ்வு பரவி மூடுகிறது

இருள் சுவர்களில்
நீர் நிறைந்து
மிதக்கிறது நான்

உந்தித் தள்ளி
வெளி வர உரம் வளர்க்கிறேன்.

Monday, October 12, 2009

நுன்மாண் நுழைபுலம்... (இரண்டாம் பதிவு(ப்பு))

கார்லின்ஸ் அப்பல்லோ, பெயர் போலவே ஒரு வித்யாசமான நண்பன். அவனுடைய பெயர் பற்றிய நிறைய கேள்விகள் இருந்தாலும், பெயர்க்காரணம் பற்றி கூட ஒரு விரிவான கலந்துரையாடல் எங்களிடையே இருந்ததில்லை. அவனுடைய பெயர் எனக்கு நீல் ஆர்ம்ஸ்டராங், நெப்போலியன் போனபார்ட், மார்ட்டின் லூதர் கிங் போன்ற சரித்திர புருஷர்களையும், சாதனையாளர்களையும் ஞாபகப்படுத்தும். அவனிடம் இதைப்பற்றி சொல்லும்போது மிகச் சிறிதாய் சிரிப்பான். சீராய் கீழிறங்கும் மூக்கு, சற்றே துருத்திய பல் வரிசை, வெளியே வந்து எப்போதும் விழலாம் என்பது போன்ற பெரிய பளபளக்கும் கண்கள், ஒடிசலான உடம்பு, இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி பின்னுக்குத் தள்ளி நெஞ்சை முன் தள்ளி ஒரே தாள கதியில் ஹவாய் செருப்பில் நடக்கும் ஒரு எங்கும் சந்திக்கக் கூடிய மிகச் சாதாரணமான தோற்றத்தில் அசாதாரணமான நண்பன். மிக ஏழ்மையான வீடு அவனுடையது, விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்ல தேர்ந்த படிப்பாளி. எங்கள் பள்ளியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில், தூரம் வந்த பெண்ணைப்போல் ஒதுங்கிய ஒரு சிறிய கிராமத்தில், அவன் வீட்டைப் போல ஒரு இருபது முப்பது வீடுகள் மட்டுமே இருக்கும் ஊர் தான் ஆலம்பட்டி.


தெருவில் இருந்து பார்த்தாலே வீடு மொத்தமும் தெரிவது போல் ஒரு வீடு. ஒரு பெரிய வேப்பமரத்தின் நிழலில், ஒரு வேப்பங்கன்றாய் குளிர்ந்து நின்றிருக்கும் அவன் வீடு. எதிரில் ஒரு புளிய மரம், சம்பந்தகாரர்களின் செய்முறையாய் தன் பங்கிற்கு நீண்டு தண்ணீர் பந்தலாய் நிழல் விரித்திருந்தது. அவனுடைய பெயர் அவனின் வீடு பற்றி வேறு விதமான ஒரு நினைப்பைக் கொடுத்திருந்தது, அந்த நினைப்பை அப்படியே புரட்டிபோட்டது போல இருந்தது அவன் வீடும், அவனுடைய அப்பாவும் அம்மாவும். கார்லின்ஸ் என்று அவனை அழைக்க அந்த இடத்திற்கே அந்த பெயர் அந்நியமாகப்பட்டது போல் இருந்தது. அவனுடைய அப்பா, கார்லின்ஸ் இரண்டு பேரும் அந்த சிறு வீட்டினுள் இருந்து வந்தார்கள். கார்லின்ஸ் எங்களைக் கண்டதும் பெரிதாக சிரித்தான், அவன் சிரிக்கும் போது அவனுடைய உதட்டை வைத்து பற்களை மூட முயல்வது அழகாக இருக்கும். அவன் அப்பா அவனின் சில பென்சில் திருத்தங்களுடன் இருந்தார். அவனின் உடன் பிறந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியாது எனக்கு. அவசியமாகப்பட்டதும் இல்லை. அவன் வீடு இருந்த அந்தத் தெருவில் (வ.உ.சி தெரு என்று ஞாபகம்) இடது பக்கத்தில் முதல் வீடு அவனுடையது… வழியெங்கும் விரவி இருக்கும் நெருஞ்சி முட்செடிகளும், தொட்டாச்சினுங்கிகளும், பெயர் தெரியாத வெள்ளை, மஞ்சள் பூக்கள் தரையில் படர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், யாருக்காகப்பூக்கிறோம் என்ற எந்தவித கேள்விகளும் இல்லாமல் இயல்பாய் அவனை அடையாளம் காட்டுவது போல் இருந்தது. அவனை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்றது, அது தான் முதல் முறை. அவன் வீட்டிற்குள் போகாமல் வெளியே நின்று ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, அவன் அம்மா உள்ளே அழைத்தபோதும், வெளியிலேயே நின்று எதிரில் புளியமரம் விரித்திருந்த குளிர் நிழலில் கதைகள் பேசி சுவாரசியக் குறைபாடுகள் ஏதுமின்றி சினிமா, கவிதை என்று தின்று செரிக்க முடியாமல் திரும்பினோம். ஒரு தேர்ந்த, முதிர்ந்த நட்பு எங்களுக்குள் ஒரு மெல்லிய சூல் மேகமாய் நின்று பொழிந்துவிட்டுச் சென்றது. பேசியவற்றில் விஷயங்கள் குறைவாக இருந்தாலும், உணர்வுகள் பகிர்ந்து கொண்டது, கைபிடித்துக் கொண்டது அவனுடைய வெம்மையைக் காட்டியது. நான் யாரிடமாவது அல்லது யார் மீதாவது ஒரு அதிகாலை சூரியன் போல் இதமாய் இருந்திருக்கிறேனா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்லத் தோன்றும்.

ஆறாம் வகுப்பில் இருந்து அவனும் நானும் ஒன்றாக படித்திருந்தாலும் எங்களிடையே ஒரு நெருக்கம் வந்தது.. பத்தாவது படிக்கும் போதுதான். நான் மதுரை டவுனில் இருந்து ஒரு ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகமலையில் அமைந்துள்ள ஜெயராஜ் நாடர் மேல் நிலை பள்ளியில் படித்துக் கழித்தேன் என்னுடைய பள்ளி வாழ்க்கை முழுதும்... எப்போதும் ஒரு சப்ஜெக்ட் இரண்டு சப்ஜெக்ட் பெயில் ஆகும் எனக்கு, நல்ல ரேங்க் வாங்கும் கார்லின்ஸ் மிக தூரமாய் போனதில் ஆச்சரியம் இல்லை.. எங்களுக்கு ஒரு மிக பெரிய பாலமாய் இருந்தது... எஸ் கே பிரபு தான் என்று நினைக்கிறேன்... ஏதேச்சையாக ஒரு வைரமுத்துவின் பாடலில் ஏற்பட்ட சந்தேகம்.. கார்லின்ஸ்ஐ என் பக்கம் திருப்பியது...இளமை வயலில் அமுத மழை விழ...யார் எழுதியது என்ற கேள்வி எனக்கு திசை திருப்பப்பட்டது... நான் அந்தப்பாடலின் முழு ஜாதகத்தையும் சொல்ல, கார்லின்ஸ் என்னுடன் நெருக்கமானான் அல்லது நான் அவனை நெருக்கமாய் உணர ஆரம்பித்தேன்.. எனக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட் பேச, என்னை பிரதானப்படுத்த கிடைத்த அந்த வாய்ப்பை நான் நழுவ விடவில்லை.... கொஞ்சம் கொஞ்சமாக...வைரமுத்து, பாலகுமாரன், மு.மேத்தா, அப்துல் ரஹ்மான், வாலி, கண்ணதாசன் என்று சினிமா பாடல்களில் கவிதை என்ற கடை விரித்து புது உலகம் அறிமுகம் செய்தேன் அவனுக்கு... என்னுடைய அம்மாவிடம் இருந்து வந்த சினிமா அறிவும், சிலோன் ரேடியோவும் எனக்கு புது அங்கீகாரங்களை தேடி கொடுக்கும் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. மிக நெருக்கமாய் உணர ஆரம்பித்த ஒரு வருட காலத்தில் அவனுடைய அந்த எளிமையான, இயல்பான ஒரு சிநேகம்.. எனக்கு மழை நேரம் கிடைத்த தாழ்வாரமாய் அமைந்தது.

கார்லின்ஸ் ஒரு மஹாகலைஞன், அவன் கைப்படும் பொருட்கள் எல்லாம் கலையாய் மாறும், அவன் புத்தகங்களில், நோட்டில், ப்ராக்டிகல் வரைபடங்களில் அவனுடைய முத்திரை, அவனுடைய பெயர் எழுதி இருக்கும் விதமே அவனை ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாய் காட்டும்... மிக சிறந்த பிரபலம் இல்லாத ஓவியன்...என் பள்ளியில் நடக்கும் ஓவியப்போட்டிகளில், கையெழுத்துப்போட்டிகளில் பரிசு பெற முழுத்தகுதி கொண்டிருந்தும் அதைப்பற்றி அவன் எப்போதும் கண்டுகொண்டதில்லை. நல்ல ஒரு கவிஞன்...அவனின் சந்தகவிதைகள் எல்லா அடிப்படை இலக்கன விதிகளுக்கும் உட்பட்டு ஒரு சீசாவுக்குள் உறங்கும் மாயப்பிசாசாய் உருமாறும் ரகசியம் இன்று வரை எனக்கு வாய்க்கவே இல்லை. நான் அவனை ஏன் பெரிதாக உற்சாகப்படுத்தவில்லை என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் பாரதியின் மேலான ஈர்ப்பு ஒரே வகையானது. அவருடைய பக்தி, காதல், அன்பு என்று மாறி மாறி பயணிக்கும் பாடல்கள் எங்களுக்கு மிகப்பிடித்தமானவை. அவருக்குள்ளே இருக்கும் ஒரு முரன் எங்களை பாரதியின் பால் மேலும் கொண்டு சென்றது. இருவருமே பாரதியின் பாதிப்பில் கவிதை எழுத ஆரம்பித்தோம். எத்தனையோ முயன்றும் அவனின் கற்பனைத்திறன் எனக்கு வாய்த்தே இல்லை. அதுவும் அவனுடைய கையெழுத்து அதை இன்னும் அழகாக்கும். கண்ணம்மா என் காதலி போல அவன் எழுதிய கண்மணி என் காதலி என்ற காதல் வழியும் பாடல்கள் படிக்கிற எல்லோரையும் காதலுறச்செய்யும். அவனுக்கு அந்த வயதில், பதினாறு வயதில் காதல் இருந்திருக்க வேண்டும், அதை அவனிடம் கேட்டு அவனை கேலி செய்யக்கூட தோன்றாது யாருக்கும். ஒரு புனல் நீராய் சுனை நீராய் சுத்தமாய், தித்திப்பாய் இருந்திருக்கிறான். யாரையும் நோகாமல் தன் கருத்துக்களை வைக்கும் ஒரு உன்னத ரசிகன், விமர்சகன், நிறைய பேர் ராஜமார்த்தாண்டன் இறந்தபோது அவருடைய விமர்சிக்கும் பண்பை மிக சிலாக்கியமாய் சொல்லியிருந்தார்கள், அதைப்படிக்கும் போது எனக்கு கார்லின்ஸ் என்ற நண்பனின் உன்னத குணங்களில் ஒரு வியப்பு தான் மிஞ்சியது. மிக சிறந்த மனிதன்... ரொம்பவும் நல்லவன்... ஒரு கிறித்துவன் நல்லவனாய் இருப்பது விசேஷம் இல்லை... ஏசுவாக இருப்பது மிக அரிது... அவன் ஏசுவாய் தெரிந்தான் எனக்கு… அல்லது அவன் ஏசுவின் தண்மையைக் கொண்டிருந்தான். எத்தனையோ விதமான மனக்குறளிகளை தன்னுடைய நல்லதனத்தினால் சொஸ்தபடுத்தி இருக்கிறான். என்னை விட எல்லா விதத்திலும் சிறந்த அவனை பார்த்து எனக்கு கிஞ்சித்தும் பொறாமை ஏற்பட்டதில்லை... அவனுடைய நல்லதனம் என் பொறாமை, பொச்சரிப்பு எல்லாவற்றையும் பொசுக்கி விட்டது போல.....

வகுப்பின் இடைவேளை சமயங்களில் எங்களுக்குள் ஒரு விளையாட்டு நடக்கும், பார்வையாளர்களாக அண்ணாதுரை, குரு இருப்பது வழக்கம், வகுப்பில் இருக்கும் கரும்பலகையில் நான் அல்லது அவன் எதாவது ஒரு சினிமா பாடலின் நடுவில் இருந்து ஒரு வரியை எழுதுவோம் அதை மற்றவர் கண்டு பிடிக்க வேண்டும்... என் கையெழுத்து திருந்தியதற்கு இந்த ஒரு விளையாட்டு ஒரு காரணம். ஒருமுறை எழுதியதில் அழிக்காமல் விட்டுச்சென்ற ஒரு வைரமுத்துவின் ஒரு பாடல் வரி….சேலைப்பூக்களில் தேனைத் திருடுது பொன்வண்டு… எங்களுக்கு ஆங்கிலம் எடுக்கும் ரெங்கசாமி என்ற வாத்தியார் பார்த்து எங்களை கடிந்தது அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. நான் நிறைய படிக்க, எழுத உதவிய ஒரு கிரியாஉக்கியாக இருந்திருக்கிறான். என்னுடைய இன்றைக்கும் இருக்கும் எழுத்து ஆர்வம், வாசிப்பு மேம்பட்டதிற்கு ஒரு மிகப்பெரிய காரணகர்த்தா அவன்…. அநேதமாக எல்லா பிரபல பாடல்களும் எனக்கு பரிச்சயமாய் இருந்தாலும் அவனின் தேர்வுகள் நிறைய வித்யாசமாய் இருக்கும்... ஆட்டோ ராஜா என்ற படத்தில் இருந்து வரும் ஒரு பாடல்... மலரே என்னென்ன கோலம்... கடலில் அலைகள் பொங்கும்... ஒரு ராகம் பாடலோடு.... சித்திரை செவ்வானம்... ராஜாமகள், மஞ்சள் நிலாவுக்கு, ஜெய்சந்தரனின் தீவிர ரசிகனனான கார்லின்ஸ் என்னை அவன் பால் ஈர்த்ததற்கு ஒரு மிக முக்கிய காரணம் அவனுடைய மேலான ரசனை என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் (பரவை என்று ஞாபகம்) ஒரு இடிபட்ட அல்லது இடிக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் கரும்பலகை இருக்கும் சுவர் மாத்திரம் தனித்து நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து அழிக்காமல் விட்ட கையெழுத்தில் பாரதியின் கவிதை எனக்கு மீண்டும் கார்லின்ஸை ஞாபகப்படுத்தியது. இது போன்ற பள்ளியில் என்னைப்போல் கார்லின்ஸ் போல் சினிமா பாடல்களை கவிதை அந்தஸ்திற்கு உயர்த்திய குழந்தைகள் இருந்திருக்கலாம். அந்த குழந்தைகள் இப்போது வேறு ஏற்பாடாக வேறு ஒரு பள்ளிக்கோ அல்லது இந்த பள்ளியே வேறு ஒரு இடத்திற்கு பெயர்ந்திருக்கலாம். அங்கும் கார்லின்ஸ் போன்ற நண்பர்கள், என் போன்றவர்களுக்கு அமைந்திருக்கலாம், அவர்களும் கதை பேசி, கதை சொல்லி, உணர்வு பகிர்ந்து, உணர்வெழுதி வாழ்ந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம்.

அவன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி எஞ்சினியரிங் படிக்கச் சென்றதாக வந்த கடைசித் தகவல் போதுமானதாக இல்லை அவனை அடையாளம் காண… நல்ல கவிமனமும் கொண்ட அவன் இப்போது எப்படி இருப்பான், அவனுள் இருக்கும் அந்த மண்பாண்டக் கலைஞன் இன்னும் உயிரோடு இருப்பானா? அவனின் மரபடையாளங்கள் இன்னும் யாரிடமாவது மிச்சம் இருக்குமா…?. வாழ்க்கை தனது ஓட்டத்தில் இவனை இடறிச்சென்றிருக்குமா அல்லது புதிய சப்பாத்துகளை கொடுத்திருக்குமா? தொடர்பற்ற வெளியில் சமூக வலைகள் பின்னிக்கிடக்கிறது எங்கும், உறவு தேடி அலைகிறோம் காற்றில். ஒரு கட்டியக்காரணாய் அலைகிறேன் அவனைப்பற்றிய நினைவுகளுடன், சிலிக்கன் பெருவெளியில் தொலந்து போனவர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லாதிருக்கட்டும்… இந்தமுறை மதுரை செல்லும்போது அவனைப்போய் பார்க்க வேண்டும் என்று பிரபுவிடம் சொல்லி வைத்திருந்தேன். எனக்காக அவனும் கடையை கடைப்பையனை பார்க்க சொல்லிவிட்டு என்னுடன் கிளம்பினான்.

ஒரு ஞாயிறு முன்பகலில் கார்லின்ஸை சந்திக்கும், அவன் இருந்த ஊரைப் பார்க்கும் அந்த விசேஷ தருனத்திற்காக ஆலம்பட்டி நோக்கி விரைந்தோம்….. நம்பிக்கையுடன்.

(என் பதிவுலகை இப்போது வாசிப்பவர்கள் நான் இதை ஆரம்பித்த போது எழுதியதை படித்திருக்க மாட்டார்கள் என்பதால், இதை மறுமுறை பதிகிறேன்.. ஏற்கனவே படித்தவர்கள் மன்னிக்கவும்)

Saturday, October 10, 2009

மரமாகு பெயர்

ஒரு தவிட்டுக்குருவி
சுள்ளிகளை குச்சிகளை
வாயில் கவ்வியபடி
கூடு கட்ட இடம்
தேடி கொண்டிருந்தது

தார்சாலின்
இடுக்கில் ஒரு இடம்
காண்பிக்கிறேன்
பரணுக்கு மேலே
ஒரு இடத்தையும்

அந்த இடங்கள்
அதற்கு
பிடித்தமானதாய் இல்லை
போலும்

எங்கு வேண்டுமோ
கட்டிக்கொள் என்றேன்

என் தோளில் அமர்ந்து
தலையில் குச்சிகளை சொருகி
கூடு கட்ட எத்தனித்தது
நான் மரமாகி போனேன்m

Thursday, October 08, 2009

இரண்டு கவிதைகள்

கவிதை (1)

( நவீன விருட்சம் வலை இதழில் பிரசுரமாகியுள்ளது, கவிதை (1), நவீன விருட்சத்திற்கு நன்றிகள் பல...)
அலுவலகம்
செல்லும் வழியில்
அடிபட்டு
இறந்திருந்தது ஒரு செவலை நாய்

விரையும் வாகனங்களின்
குழப்பத்தில் சிக்கி
இறக்க நேரிட்டிருக்கலாம்

நாலைந்து நாட்களில்
தேய்ந்து கரைந்தது
இறந்த நாயின் உடல்

காக்கைகள் கொத்தி தின்ன
ஏதுவில்லை
வாகனங்கள்
நெடுகித் தொலையும்
பெருவழிச்சாலையில்

எப்போதும்
பிறரின் மரணங்கள்
ஒட்டியிருக்கிறது
நமது பயணத்தடங்களில்.

கவிதை (2)

உனக்கு பிடிப்பது
எனக்கு பிடிப்பதில்லை
எனக்கு பிடிப்பது
உனக்கும் அப்படியே
நமக்கு பிடித்திருந்தால்
மற்றவர்களுக்கு
பிடிப்பதில்லை எப்போதும்
எல்லோருக்கும்
பிடித்தது என்று
எதுவும் இல்லை

ஆனாலும்
நகர்கிறது
பிடிப்புடன் வாழ்க்கை

Tuesday, October 06, 2009

காமராஜுக்கு சில கடிதங்கள் (பின்னூட்டங்கள்)

மண்மாதிரிகள் என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்


அன்பு காமராஜ்,

மனிதர்களுக்கு ஐம்பூதங்களையும் அடக்கி ஆள ஆசை. வான், நீர், நெருப்பு, காற்று, மண் என்று தனது ராஜ்ஜியங்களை விரிவு படுத்த பிரயாசைப்படும் ஒரு விபரீத கோட்பாடு எல்லாரிடத்திலும், நான் உட்பட இருக்கிறது. ஆள ஆசைப்படும் எதைப்பற்றியும் அறிவு இல்லை நமக்கு.

எத்தனை அறைகூவல்கள் கிரீன் எர்த், மதர் எர்த்,க்ளோபல் வார்மிங், ஓசோன், மாசில்லா காற்று, மாசற்ற நீர், வருங்காலத்திற்கு மிச்சம் இருக்கட்டும் நீ அனுபவித்தது, அனுபவிப்பது என்று சமண்பாடில்லாத இரைச்சல்கள்.

மலைகளின் முலைகளில் வடிகிறது விஷப்பேரருவி, வருங்காலம் நுழைய மறுக்கும் பூமியின் யோனி பெருங்கதவுகள், மரங்களின் நுரையீரல்கள் திரட்டும் கரியமிலப் பைகள், விந்தின்றி தொங்குகிறது மேகத்தின் விரைப்பைகள், வன்புணர்ச்சியில் லயிக்கிறது ஒரு எழும்பாத, நித்ய மரண இசை எல்லோர் எழவிலும். உன், என் உடல் கருகுகிறது நெருப்பில்லாமல், புகைதானே என்ற அலட்சியம் எல்லோரிடத்திலும்.

மண் மாத்திரம் இல்லை காமராஜ், எல்லா பூதங்களையும் சீசாவில் அடைக்கும் செப்படி வித்தைக்காரர்களாய் உலவ ஆசைப்படுகிறோம்.
உனக்கு ரேடியோ ஒக்குடத் தெரியுமா? தெரியும், ரேடியோ புதுசா செய்யத்தெரியுமா? தெரியாது, இதன் நீட்சிதான் நாம் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நிற்பது எல்லாம்.

அறியாமையின் குழந்தைகள் தான் நாம் இன்னும், மாற்றங்கள் பற்றி பேசுவோரின் மார்தட்டல்கள் தொப்பு, தொப்பென்று வெறும் காற்றுக் குடுவையில் அறைகிறது, போர் பிரகடனங்கள் என வேஷம் கட்டிக்கொண்டு.

 அழகு வேலைப்பாடுள்ள கல்லறைகளுக்குள்ளே தானே நீங்களும், நானும். கல்லறைக்குள் இருந்து கொண்டே கல்லறையை பார்க்கிறோம் நாம். நரகலில் வாழும் நமக்கு பீ வாசம் தனியாக தெரிகிறதா என்ன? அகண்ட காவிரி அகத்திய கமண்டலத்தில் நிறுத்தியதைப்போல ஒரு மூட்டை மண்ணில் நமது தேசம், தூக்கிக் கொண்டு அலைகிறார் பிரகதீசுவரன், தோள் கொடுக்க ஆட்கள் உண்டு நம்மிடையே.

என்னை எங்கெங்கோ கொண்டு சென்று விட்டது உங்களின் இந்த பதிவு. கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டதற்கு வருந்துகிறேன், உள்ள இருக்கிறது வெளியே.

அன்புடன்

ராகவன்.

ரசனை வித்தியாசமானது, அறிவு விசாலமானது என்ற பதிவின் பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

அகமிளிரும் அழகு மிகுந்த ரசனைக்குண்டானது. எனக்கு சுசீலா என்றொரு தோழி இருந்தாள். சிவந்த நீள் முகத்தில் பருக்கள் அடர்ந்து, முன் துருத்திய பற்களும், சமணில்லா உடம்புடனும், யாருக்கும் ஈர்ப்பில்லாமலே அழகாய் இருந்தாள், கொஞ்சம் மெனக்கெட்டால், அவளை சில பென்சில் திருத்தங்களுடன் புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் ஓரளவு அழகாய் காட்ட முடியும், ஆனால் அவள் அதுபோன்ற எந்தவித பிரயத்தனங்களும் நான் பழகிய நாட்கள் வரை செய்ததில்லை.

என் தங்கை (உடன் பிறவா) ஐஏஎஸ் கோச்சிங் படிப்பதற்காக, மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி வளாகத்தில் தங்கி பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு இருந்த போது, அவளின் அறைத்தோழியாக சுசீலா எனக்கு அறிமுகமானாள், என் தங்கை அவளை அறிமுகம் செய்யும்போதே, உன் போன்ற ரசனைகள் உள்ள பெண் என்ற போது எனக்கு அவளுடன் பேசுவதற்கான ஈடுபாடு எந்தவித முஸ்தீபுகளும் இல்லாமல் ஏற்பட்டது. பேச, பேச கடல் போல விரிந்த அவளுடைய நாலேட்ஜ் பேஸ் என்னை வியக்க வைத்தது. ராம கிருஷ்னர், விவேகானந்தர், பிங்பாங்க் தியரி, குவாண்டம் தியரி, ராமானுஜர், ஜேகே என்ற என்னுடைய எல்லா வாசல்களையும் திறந்துவிட்டாள் அவள்.

எனக்கு அதிகபட்சமாக 68 பக்கங்களில் கடிதம் எழுதியிருக்கிறாள், வரிக்கு வரி சீனு, சீனு என்று. ஒரு முறை என்னை பார்க்க வீட்டிற்கு வந்தாள், வழக்கத்திற்கு விரோதமாய் ஒரு சரசரக்கும் பனாரஸ், ஆரஞ்சு கலர் புடவையில் தகதகவென்று ஒரு பெரிய சுடர் போல, சுடருக்கு முகமுண்டா,இல்லை அவளின் புறத்தோற்றத்தை பொசுக்கிய ஒரு பெரிய ஜுவாலாமுகியாய் அகப்பிரகாசத்துடன், சீனு என்று உள் நுழைந்தாள். என் அம்மாவுக்கு அவளின் புறத்தோற்றம் ஒரு முகசுழிப்பைத் தந்தது, என்னடா இப்படி இருக்கா, என்று கேட்டாள். அம்மாவை அடக்கி உள் அனுப்பினேன், அவள் என்னுடன் பேசாமலே, விஷயப் பகிர்வு இல்லாமல் இருந்திருந்தால் எனக்கும் அவளுடைய புறத்தோற்றம் கவலை கொள்ளச் செய்திருக்கும். என்னுடன் வெளியே போக வேண்டும் என்றாள், நான் அவளை அழைத்துக் கொண்டு கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சென்றேன், இரண்டு பேரின் பெயருக்கும் அர்ச்சனை செய்தாள், மணிக்கணக்காய் பேசினாள், நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன், என்னை நோக்கி நீயும் பெருமாள் மாதிரி என்ன சொன்னாலும் இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பாய், அதனால் தான் எனக்கு கடவுள் என்கிற கேட்பாளரை ரொம்ப பிடிக்கும், he is a good listener, like you. என்ற அவளின் சின்ன சின்ன சித்தாந்தங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

உடன் நடக்க ஆசைப்பட்டு இங்கே இருந்து பழங்கா நத்தத்திற்கு நடக்கலாமா, உன் கைய பிடிச்சுக்கவா? என்று என்னை கேட்கும்போதே கையை பிடித்துக் கொண்டாள். அங்கே இருந்து திரும்பவும் பேசிக்கொண்டே நடந்தாள் என்னை வழி நடத்தி. சீனு கொஞ்சம் பூ வாங்கித் தரயா? எனக்கு கனகாம்பரம் ரொம்ப பிடிக்கும், தோற்றப்பொலிவோ, வாசனையோ இல்லாமல் எளிமையாய் பூ என்கின்ற அடையாளத்துடன் மட்டும் என்று ஞாபக அடுக்குகளில் மலர்களை செருகிக் கொண்டே நடந்தாள். அவள் காதலிக்கும் எதிர்வீட்டு மரக்கடைக்காரன் மகனைப்பற்றி முதல் முறையாக பேச ஆரம்பித்தாள், தன் ஒரு பக்கக் காதலை இன்னும் அவனிடம் சொல்லவில்லை என்றும், அவன் பார்க்க கருப்பா அழகா இருப்பவன் என்றும் கூறினாள், அவன் பார்க்காத போது இவள் அவனைப்பார்க்கும் தருனங்களை அவள் விவரித்தது எந்தவித வரையறைக்குள்ளும் அடங்காமல், காற்றில் பறக்கும் முன் நெற்றி மயிராய் வாளிப்பாய் இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளிடம் இருந்து கடிதம் வந்தது. அவளுடைய கணவன் மெடிக்கல் ரெப் வேலை செய்வதாகவும், அபினயா என்று ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அது அவரைப்போலவே அழகாய் இருக்கிறது என்றும் கூறினாள். அவளின் மிகப்பெரிய அழகு அவள் மற்றவரை நேசிக்கும் விதம், எந்தவித நிஷ்களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் நகர்கிறது அவளின் காதற் பெருவாழ்வு.

you kindled me...

அன்புடன்

ராகவன்


புதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும், ஒரு பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

உங்களின் கோபம் அழகாய் இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் எனக்கு இல்லை. எழுத்தில் இவ்வளவு தீவிரமாக இயங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கோபத்திற்கான காரணங்கள்...
புதுவிசையின் இலக்கிய முகம் பற்றிய கேள்விகள்,
உங்களின் குறுக்கீட்டை கண்டு கொள்ளாமல் போனது
உங்கள் பதிவைப் பற்றிய சிலாகிப்பு இல்லாதது
பிரபலமானவர்களின் ஒளியில் மற்ற படைப்பாளிகள் மங்கிப் போவது
பேச்சு சுகம், கேட்பாளர்கள் இல்லாதது

மேற்கூறிய எல்லாமே உங்கள் கோபத்திற்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

எனக்குப் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் ஒன்று நிச்சயம், உங்கள் கோபம் அழகாய் இருக்கிறது.

அன்புடன்,

ராகவன்

கமல் ஒரு காமன் மேன் இல்லை பதிவின் பின்னூட்டம்.

அன்பு காமராஜ்,
உன்னைப் போல் ஒருவனை எல்லோரும் பேசுகிறார்கள் பதிவுலகில், அவரவர் வசதிக்கேற்ப தங்கள் மறுதலிப்புகளை, ஒவ்வாமையை தங்களால் இயன்றவரை பதிவிட நினைக்கிறார்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு, உங்கள் கருத்தை முன் வைக்கிறீர்கள். கமலின் தவிர்க்கமுடியாத ஒரு குணக்கேடுகளில் ஒன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளமுயல்வது, என் அடையாளங்கள் தெரியாவிட்டால் என்னை படைப்பாளி என்று யார் சொல்வார்கள் என்கிற தன்முனைப்பு. ஒரு சிறந்த நடிகன், தன்னை பல்கலை வித்தகனாய், எல்லாவற்றிலும் தன் முத்திரைகளை இட்டு நிரப்பும் ஒரு இடைநிரவியாய் காண முற்படும்போது நிகழும் அவஸ்தைகளில் ஒன்று, ஒரு தேர்ந்த நடிகன் தொலந்து போவது. காமன் மேன் இல்லாமல் போனது கமலின் ஸ்டார் அந்தஸ்து காரணம் என்று நினைக்கிறேன், எந்த படத்தில் நீங்கள் கமலைப் பார்க்காமல், கதாபாத்திரத்தை பார்த்தீர்கள் சமீபமாய். நாம் கமலுக்கு கொடுத்திருக்கும் ஒரு தண்டனை இது, ஒரு நசுரூதின் ஷா, ஓம்புரி போல பொது ஜனமாய் வருவது கமலால் முடியாது, நாமும் ஏற்றுக்கொள்வோமா என்பது தெரியாது.

துரோக்கால், குருதிப்புனல் ஆனபோது ஒரிஜினல விட நல்லா இருந்தது என்று கோவிந்த் நிஹ்லானியே சொன்னார் என்று கமல் ஏதோ பேட்டியில் சொன்னார், ஆனால் துரோக்காலில் ஓம்புரியின் நடிப்பு ஒப்பிடமுடியாததாய் இருக்கும்.

தமிழில் உள்ள இரண்டு பெரிய ஸ்டார்களில் ஒருவர் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடும்போது, கமலால் தன் கவசகுண்டலங்களை கழட்டி வைக்க முடியாமல் போய் விடுகிறது. கதை புதிது, களம் புதிது, இசை, தொழில் நுட்பம் எல்லாம் புதிது, மொந்தை பழைய கள்ளாய் கமல் என்ன செய்வது எல்லாக் கோனங்களிலும் கமல் தெரிகிறார். நதாசா புகைபிடிப்பது போல காட்டுவதால் என்ன கெட்டு விட்டது, நீங்கள் புகைபிடிக்கும் பெண்களைப் பார்த்தது இல்லையா, இது எனக்கு தெரிந்து ஒரு கலாச்சார அதிர்ச்சிக்காக சேர்த்த மாதிரி தெரியவில்லை, அது ஒரு கதாபாத்திரம் அது மாத்திரமே, எதையும் எதாவது என்று நினைத்து எப்போதும் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் எல்லோருமே.

காமராஜ் எனக்கு இந்த படத்தை நீங்கள் முழுமையாக அனுகவில்லை என்றே தோன்றுகிறது ஒரு அரைகுறையான முயற்சி என்று படுகிறது.

என் கருத்து என் கருத்து மாத்திரமே, நான் யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த இதை எழுதவில்லை.

அன்புடன்

ராகவன்

சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும் – ஒரு பின்னூட்டம்

அன்புள்ள காமராஜ்,

நலமா, நீங்கள் தந்தித்தெரு ராகவனா என்ற உங்கள் கேள்விக்குப் பிறகு உங்களை காணோம், உங்களின் பதிவுகளிலும். மீண்டும் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். மீண்டு வந்ததற்கு வந்தனங்கள் பல. உங்களின் இதற்கு முந்திய இரு பதிவுகளில் எனக்கு ஏனோ நீங்கள் இல்லாதது போல இருந்தது. சம்பாரி மேளத்தின் சத்தத்தை மீறி உங்கள் குரல் கேட்கிறது.

”பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு” ரொம்ப நிஜமான வார்த்தைகள்.

திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வருவதற்குள் சில இடங்களில் கதை நொண்டி அடிப்பதாகத் தோன்றுகிறது.

”ஓவியர்களின் .... கேட்கலாம்” இந்த வரிகள் எனக்கு ஏதோ தொடர்பில்லாமல் ஒரு கன்னி (Link) தொலைந்தது போல் தோன்றுகிறது.

”பிரியமானவர்களின் பரிகசிப்பும் கேலியும்கூட மனிதர்களின் சந்தோசங்களை ஆழ வேர்விடச் செய்கிறது". நெகிழ்வான, செரிவான வார்த்தைகள், பிரியமுள்ளவர்கள் எது செய்தாலும் அழகாய் இருக்கிறது, வசைமொழிந்தாலும் வாழ்த்துகள் தான்.

உங்கள் எழுத்து நடை உங்களின் மிகப்பெரிய பலம் காமராஜ், அதுவும் அதன் ஒய்யாரம், அழகர் கோயில் மலைக்கோயிலில் இருந்து விறகு சுமந்து இறங்கும் பெண்ணின் ஒரே தாளகதி நடை.

வாழ்த்துக்கள்... நம்ம பக்கமும் வந்து ஏதாவது சொல்லிட்டு போறது!!

அன்புடன்



ராகவன்

Saturday, October 03, 2009

அப்பன் தாலாட்டு

கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு
பொன்னுமணி உறங்கு - உங்கப்பன்
பொழ்சாய வருவாக
வின்னுமணி முளைக்க - உங்கப்பன்
வீதியில் வருவாக
கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு

வண்டி மணியோசை - உங்கப்பன்
வாராக வெள்ளைத்துர
காளையார் கோயில் ரதம் - உங்கப்பன்
கண்ணு படும் நடையும்
தாயப் போல் பாட்டுபாடி - உங்கப்பனை
தாலாட்டி தூங்க வைப்பேன்
உன்ன போல் ஒரு புள்ள - உங்கப்பன்
ஊருக்கு மகராசன்

ஊஞ்சலில் ஒக்காத்தி - உங்கப்பன்
ஊருக்கத சொல்லுவான்
ஊவுன்னு கொட்டாட்டி - உங்கப்பன்
உச்சந்தலை தட்டுவான்
மெல்ல விடியுதங்கே - உங்கப்பன்
மேலாக்க தேடி தந்தான்
அள்ளி சொருகிடுவேன் - உங்கப்பன்
ஆயுச சேர்த்து இங்கே

ராசாவே கண்ணுறங்கு - உங்கப்பன்
ராவுல வந்துடுவான்
ராத்திரி முழிக்கொனும் - உன்னைப்போல்
ராசாவே பெக்கோனும்
தேனே நீ கண்ணுறங்கு - தெவிட்டா
தெள்ளமுதே உறங்கு
மானே நீ கண்ணுறங்கு  - மாடத்து
மதி போல நீயுறங்கு

ஆராரோ ஆரிராரோ  - ஆராரோ
ஆரிரி ராரிராரோ
ஆரிரி ராரிராரோ - ஆராரோ
ஆராரி ஆரிராரோ

(இருபது வருஷத்துக்கு முன்னாடி எழுதிய ஒரு பாடல், எனக்கு அப்போ பதினெட்டு வயசு இருக்கலாம், தீர்த்தக்கரையினிலே படத்தில் பஞ்சாயத்து சீனில் வரும் ஒரு பாடலின் மெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, எழுதிய ஒரு தாலாட்டு பாட்டு. தனது காதற்கணவனைப் பற்றிய ரகசியப் பெருமை செரி நிலைகளை, விபரம் புரியாத குழந்தையிடம், பாடி குதூகலிக்கும் ஒரு காதற்தாய்!! அய்யோ கொல்றானே!)

மன்னிக்கவும் ஒரு தயக்கத்துடன் தான் பதிவிடுகிறேன்...

Sunday, September 27, 2009

காட்சி மயக்கம்

அருவி
தேநீர் குவளை
விளிம்பு
கிடைக்காமல்
குடிக்காமல் திரும்பினேன்

Friday, September 25, 2009

கவிதை ஒன்று...


புணர்ந்து எறிந்த
பாலிதீன் பைகள்
பூமியின்
சுவாசத் துளைகள் அடைக்கும்

சுருங்கிய தூரம்
அடர் குளிர், வாகனப்புகை
காற்றில் விஷம் தடவி
விருந்து சமைக்கும்

உடைகளில் கதறும்
வர்ணங்கள்
ரத்த நாளங்களில்
அமிலம் ஏற்றும்

சுரண்டிய படுகைகள்
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட்டில்
வருங்காலத்தை புதைக்கும்

சமூக அக்கறைக்
கவிதைகள் பக்கம் பக்கமாய்...
காகிதங்களில்
தூக்கிலிட்டு தொங்கும்
மரங்கள்!

Thursday, September 24, 2009

இல், அறவாழ்வு










உன்
மௌனத்தையும்
காதல் பொதிந்த
வார்த்தைகளையும் நிராகரிக்கிறேன்

உன்
கவிதைகளையும்
காதோர கிசுகிசுப்பையும்
இடங்கையால் புறந்தள்ளுகிறேன்

உன்
பிடரி மயிர் ஒதுக்கி
பின்னங்கழுத்தில் இடும்
முத்தங்களில்
திராவகம் ஊற்றி பொசுக்குகிறேன்

உன்
தேநீர் ரசனைகளையும்
ஜன்னலோர நிலவுகளையும்
விழுங்கி சபிக்கிறேன்

உன்
வாழ்த்துக்களையும்
மலர்கொத்துக்களையும்
பாழ்வெளியில் எறிகிறேன்

நீ எப்போதாவது வீசும்
வசைசொற்க்களையும்
தகிக்கின்ற பார்வையையும்
எனது கேடயங்களாய் தரிக்கிறேன்

நீ மறந்த
பிறந்த தினங்களையும்
பரிசு பொருட்களையும்
திரட்டி கூராய் தீட்டி 
கொலை ஆயுதங்கள் ஆக்குகிறேன்

நீ ஓரிருமுறை
படுக்கையில் விலகி படுத்ததையும்
பார்ட்டியில் குடித்ததையும்
விஷமாக்கி கூர் ஈட்டிமுனை தடவுகிறேன்

வன்மம் வளர்த்து
போருக்கு சிலுப்பி
பூமியில் அறைகிறேன் எக்காளத்துடன் 

நீண்டு வளர்கிறது ஒரு நெடுங்கனவு....

Tuesday, September 22, 2009

களிநடைக்காலம் மறந்து...



கௌசல்யா அக்காவை முதன் முதலில் புலிகுத்தி கோயிலில் தான் பார்த்தேன். சிவராத்திரிக்கு குலசாமி கோயிலுக்கு போவது எங்கள் வீட்டில் வருஷாவருஷம் தவறாமல் போகும் வழக்கம் ஏதும் இல்லை. இந்த முறை கட்டாயம் வர்றம்னு, எங்க கோயில் பூசாரி தலைக்கட்டு வசூல் பண்ண வந்த போது சொல்லிட்டதால நாலு வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. நாங்க எங்க குடும்பத்தோட மதுரையில இருந்து கார எடுத்துக்கிட்டு சிவராத்திரிக்கு ரெண்டு நாள் முன்னாடியே போய் சேர்ந்துட்டோம். அப்போ எங்க காம்பௌண்டில் குடியிருந்த சஞ்சீவி மாமா அவரோட ஒர்க்சாப்பில இருந்து ஒரு வெள்ளை அம்பாசிடர் காரை எடுத்து வந்திருந்தார். டீசலும், மூணு நாளைக்கு சாப்பாடும், வெத்தில பாக்கு போயிலைக்கு காசு கொடுத்துட்ட போதும் சஞ்சீவி மாமாவுக்கு. வண்டி ஓனரிடம் என்ன சொல்லிட்டு கார எடுத்துட்டு வந்தாரோ தெரியலை. மதுரைல இருந்து அறுவது கிலோமீட்டர்ல துலுக்கப்பட்டி சிமென்ட் பாக்டரி வரும் அதத்தாண்டி ஒரு வலது பக்க வளைவுக்குள் ஆறாவது மைலில் இருக்கிறது புலிக்குத்தி கிராமம். நிறைய ஜாதிக்காரங்களோட குலசாமிகளும் அங்கே தான் இருக்கு. எந்த சாமியும் ஒன்னோடோன்னு சண்ட சச்சரவு ஏதும் இல்லாம ஆண்டு வந்தனர்.

சிவராத்திரி நேரத்தில புலிக்குத்தி கிராமமே ஒரு புது வண்ணத்தில புரளும். செம்மண் கலரெல்லாம் போயிட்டு மஞ்ச கலரும், பச்சை கலரும் ஜாஸ்தியான மாதிரி தெரியும். பக்கத்து ஊர்கள்ல இருந்து நிறைய யாவாரிங்க கடை போடுறத்துக்கு வந்துடுவாங்க. இந்த வாட்டியும் நிறைய கடையா இருந்துச்சு கிராமத்துக்குள்ள நுழையும் போதே. குழந்தைங்க, பெரியவங்கன்னு எல்லாருக்கும் தேவையான எல்லா கடைகளும் புதுசா முளைச்சிருந்தது. விளையாட்டு சாமான் கடைங்க, டீக்கடைங்க, பஜ்ஜி, போண்டா கடைங்க, இளநீர், பதநீர், நொங்கு, குஞ்சலம், ரிப்பன், மைடப்பா, கேர்ப்பின், சீப்பு, சோப்பு டப்பா, சாந்து பொட்டு விக்கும் கடைங்க, சவ்வு மிட்டாய், ஐஸ் வண்டிங்க, பலூன்காரங்க, சாமிக்கு தேவையான, பூசைக்கு தேவையான சாமான், பூக்கடைங்கன்னு களை கட்டி இருந்துச்சு புலிக்குத்தியே. எல்லாருமே இங்க வாங்க, இங்க வாங்கன்னு கூப்பிட்டு தத்தமது வியாபாரத்தை பார்த்து கொண்டு இருந்தார்கள். எங்க போறதுன்னு தெரியாம சனங்கள் பெரும்பாலும் குமரிகளும், சிறுவர்களும் தான், எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, பேருக்கு இது என்ன விலை, இது என்ன விலைன்னு கேட்டுக்கிட்டே திரிஞ்சாங்க. இந்த கிராமத்தை ஒட்டி ஒரு சின்ன ஆறு ஓடி கொண்டு இருந்தது, கன்னிசேரி என்ற பெயரில், எதன் கிளையாறோ தெரியலை, அப்பாவை கேட்டா சொல்வார், அநேகமா தாமிரவருனியா இருக்கணும். ஆத்துல தண்ணீர் இல்லாத சமயங்கள்ல, ஆத்துமணலில் ஊத்து பறிச்சுக்கிட்டு, வாளி வச்சு ஊத்தை வாடகைக்கு விட்டு இந்த கிராமத்தின் மிச்சமான ஊர்காரங்க காசு சம்பாதிப்பார்கள். மருதமலை மாமணியே, கற்பூர நாயகியே, விநாயகனே, ஆத்தாடி மாரியம்மா ன்னு தனக்கு விருப்பமான சாமியை குழாய் கட்டி கூப்பிட்டு கொண்டு இருந்தார்கள். தவில், தப்பு, உறுமி என்று மாடுகளையும், ஆடுகளையும், உடும்புகளையும் தோலாய் கட்டி அடித்து நாயனங்களையும், ஒத்துக்களையும் காற்றில் பரப்பினர். விரிதலையும், வேப்பிலையும், குலவை சத்தமும் பதினெட்டாம் படி கருப்பையும், சுடலைமாடனையும், முனிஸ்வரனையும், வீர சின்னம்மாளையும், முனிபைரவரையும் பலிக்கு ஏங்க வைத்து பந்திக்கு அழைத்தன. எல்லா கோயிலையும் ஏதாவது ஒரு சாமி ஏறி நின்னு குறி சொல்ல வாய் பொத்தி பக்த பங்காளிகள், சாமிக்கே என்ன வேணும்னு கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

கௌஸல்யா அக்காவின் குடும்பமும், ஏனைய தாயாதிகளின் குடும்பங்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மெட்டடொர் சரக்கு வேனில் வந்து எங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருந்தனர். தாயாதிகளின் பாசமாகவும், நேசமாகவும் பந்தல் வேய்ந்து சிறுசிறு பங்காளி கசப்புகளை மறைத்து பந்தலில் வெயில், பொத்தல்களாய் விரவிக் கிடந்தது.  வெளிச்சப் புள்ளிகள் கோலமிடும் விரல்கள் தேடி பந்தலின் முகப்பு வரை பரவலாகி இருந்தது.  சிவராத்திரிக்கு முதன் நாளில் தான் ஆற்றில் இருந்து மண் எடுத்து வந்து எங்க குலசாமி அம்மனுக்கு முகவடிவு செய்து பூஜை செய்வார்கள். அதுக்கு இன்னும் ஒரு நாள் இருந்தது, சிவராத்திரி அன்றைக்குத்தான் எல்லா தலைக்கட்டுகாரர்களும் ஒன்றாக சேர்ந்து பெரிய பூஜையாப்போடுவார்கள். மறு நாள் கிடாவெட்டு நடந்து கறிசோறு போடும் சம்பிரதாயம். அதுவும் தாயாதிகளின் கோயிலுக்கு சம்பந்தகாரர்கள் வந்துவிட்டால் எல்லா பங்காளி பெருசுகளும், இளவட்டங்களும் சேர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதற்கான மரியாதை, கரும்பு, பூ, பழம் எல்லாம் வைத்து வரவேற்க வேண்டும் என்பது ஒரு ஏற்பாடு. அவர்கள் கோயிலுக்கு நாங்கள் போகும்போதும் இது போல செய்வதுண்டு.

கௌஸல்யா அக்கா எனக்கு பெரியம்மா மகளாக இருந்தாலும், எங்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் பெரிதாய் பழக்கவழக்கமில்லை. அவங்கப்பா பாம்பேல ஒரு சேட் கிட்ட டிரைவரா வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்து சொந்தமாய் காரைவீடு கட்டி வாழ்ந்தவங்க, அந்த காலத்திலேயே. (எங்க அப்பா கைய ஊனி கரணம் பாயற வரை, நாங்க வாழ்ந்தது சின்ன கூரைவேய்ந்த வீடு தான் என்று எப்போதும் சொல்வார் ஆக காரைவீடு அதிசயமான விஷயம் அப்போது). அவரை பாம்பே பெருமாள்னு சொன்னாதான் ஊருக்குள்ள தெரியும். அவரும் அப்படி தான் அறிமுகம் செய்து கொள்வார். அவரோட மூத்தமகனுக்குக் கூட பாம்பே கண்ணன்னு தான் பேரு, அவரும் பாம்பேல கோத்தாரி மில்ஸ் முதலாளிகிட்டதான் டிரைவரா இருக்கார். மத்ததெல்லாம் பொட்டப் பிள்ளையா போயிடுச்சேன்னு அவருக்கு கவலை, இல்லேன்னா எல்லாரையும் பாம்பேல டிரைவரா ஆக்கி சாரதி பரம்பரையாய் மாற்றியிருப்பார்னு ஊருக்குள்ள பேசிக்குவாங்க. கௌசல்யா அக்கா, பாம்பே பெருமாளுக்கு ரெண்டாவது பொண்ணு, மூத்தவங்க கலாக்கான்னு, சாத்தூர்ல கட்டிக் குடுத்திருக்காங்க, அவங்க வீட்டுக்காரரு பேனா நிப்பு கம்பெனி வச்சிருக்கார். அவங்களுக்கு அடுத்தவ தான் கௌஸல்யா அக்கா. அவளுக்கு அடுத்து மோகனா மற்றும் கல்யாணி என்ற விவரங்கள் பின்னால் கௌஸல்யா அக்காவே சொல்லியது. கார விட்டு இறங்கி, நாங்க எல்லோரும், சஞ்சீவி மாமா தவிர்த்து, எங்க தாயாதிகளின் பந்தலுக்கு நுழையும்போதே ஏகப்பட்ட விசாரிப்புகள், என்னப்பா வெங்கிடுசாமி! எத்தனை வருசம் ஆச்சு உனக்கு வீரசின்னம்மாள பார்க்க வர்றதுக்கு. இவந்தான் பெரியவனா என்று என்னைப்பார்த்து கேட்க, ஆமா அண்ணெ, இவன் தான் இங்கிலீஷ் மீடியத்தில படிக்கான். அப்படியா? விச் கிளாஸ் ஆர் யூ ரீடிங்னு அவரு கேட்க, நானும் செவன்த் என்று பதில் சொல்ல, அட்ராசக்கை, இவன கலெக்டரா ஆக்கிடு வெங்கிடுசாமி! பய சூட்டிகையா இருக்கானே! என்று வியப்பைக் காட்டினார். நான் இது வரைக்கும் எல்லா சப்ஜெக்டுகளும் பாஸானதே இல்லை என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பாஸும், ஹரியும் (என் சகோதரர்கள்) பந்தலுக்குள் இருந்த இரண்டு பெண் குழந்தைகளுடன் அதற்குள் சிநேகமாகி விளையாட போய் விட்டார்கள். எங்க அப்பாவும், அவர் வயதொத்த பழைய கூட்டாளிகளை பார்த்தவுடன் அவர்களுடன் பேசச் சென்று விட்டார். அம்மா எங்க துணிமணிகள் கொண்டு வந்த பைகளையும், ஒரு தோல் பேக்கையும் என்னிடம் தந்து, கௌசல்யா அக்கா இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இடம் இருப்பதை சுட்டிக்காட்டி, அங்க போயி இரு, இந்தா நான் வாரேன். அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்களின் குலசாமி கோயிலும் இங்கேயே இருப்பதால், அவளுடைய உடன் பிறவா பிறப்புகளைப் பார்க்க கிளம்பி விட்டாள். எனக்கு எல்லோருமே என்னை தனியா விட்ட மாதிரி இருந்தது. அங்க என் வயசு பசங்களே இல்லாத மாதிரி இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்த கௌஸல்யா அக்கா, தன்னை நோக்கி வரும்படி என்னை அழைத்தாள். எனக்கு பார்த்தவுடனே கௌஸல்யா அக்காவை பிடித்துப்போனது. நானும் எல்லா சுமையையும் தூக்கிகிட்டு அவளுக்கு அருகே போனேன். கீழே விரித்திருந்த தார்ப்பாலினை சீராக நீவிவிட்டு, மண்ணை விலக்கி என் கையைப்பிடிச்சு, அருகே இருக்க வைத்தாள். எங்க பைகளுக்கும், தோல் பைக்கும் தோதா ஒரு இடம் பார்த்து வைக்கச் சொன்னாள். நான் அவ சொல்றத எதையுமே மறுக்காம செஞ்சிட்டு, அடுத்து என்ன என்பது போல பார்த்தேன்.

அப்போதான் நான் கௌஸல்யா அக்காவை முதன் முதலாப்பார்த்தேன். நீள முகத்தில், மாநிறமாய், மெலிதான தெத்துப்பல், முன் முடியை குட்டையாக வெட்டி விட்டு, முன்னால் நெளித்து விட்டு ஸ்டைல் பண்ணியிருந்தாள். நீலத் தாவனியும், பச்சைக்கலர் பாவாடையும், அதற்கேற்றாற் போல ரவிக்கையும் அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரு கருப்புக் கயிற்றில் ஒரு முத்து போன்ற ஒரு டாலர் கோர்த்திருந்தது. அவளுடைய உடைக்கு பொருத்தமான கலரில் கண்ணாடி வளையல்கள் அவ்வப்போது சப்திக்க அணிந்திருந்தாள். அப்போதான் என் பெயரைக் கேட்டாள், நான் சொல்லும் முன்பாகவே, சீனு தானே! எனக்குத் தெரியும், ரவி, சேதுவின் தாய் மாமா பையன், கரெக்டா! என்று என்னை வியக்க வைத்தாள். நான் உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டப்பா, ரகசியம்னு கண் அடித்து சிரித்தாள் மேல் நோக்கி. என்னை இதுவரை யாருமே சீனுன்னு கூப்பிட்டதில்லை, சீனி என்று பள்ளியிலும், என் வீட்டிலும், கருவாப்பையலே என்று பெத்த நாயினாவும், கருவண்டு என்று பிச்சம் நாயுடுவும், ஜெயாத்தையும் கூப்பிடுவார்கள். கௌசல்யா அக்காதான் முதன் முறையாக என்னை சீனு என்று கூப்பிட்டது, அதுவும் அவளின் நுனி நாக்கு, பல்லில் பட்டு காற்றுடன் சீனு என்று சொல்வது அழகாகவும், சந்தோஸமாகவும் இருந்தது. அவளுடன் இருந்த மற்றவர்களையும் அறிமுகப்படுத்தினாள், இது மோகனா, இது பெரிய சாந்தி, இது குட்டி சாந்தி, இது கலா, இது கல்யாணி, இது கோவில்பட்டிங்கிற செல்வம், எல்லோரும் என்னை வேற்று கிரகத்து மனுசனை பார்ப்பது போல பார்த்தார்கள். நான் எல்லோரையும் பார்த்து சிரித்தேன். கோவில்பட்டி தான் முதல்ல ஒட்டிக்கிட்டான்.

வெயில் அதிகமாக இருந்தது, காற்றும் இல்லாமல் பந்தலே புழுங்கியது, தாகமாகவும் இருந்தது, வீட்டில் இருந்து பாட்டிலில் எடுத்து வந்த தண்ணீரைத் தேடி எடுத்து குடித்து விட்டு என்னையே பார்த்துக் கொண்டு, ரொம்ப தண்ணீத் தாகமா இருக்கா, சிவராத்திரி அன்னைக்கு ராத்திரி மழ பெய்யும், அப்புறமா சூடு தனிஞ்சுரும், என்று பரிவாய், இறகு வருடலாய் பேசினாள்.  இந்த விநோத மௌனத்தில் ஆழ்ந்து  இருந்தவர்களை கலைப்பதற்காக, கௌசல்யா அக்கா, வாங்க எல்லோரும் போய் வெயிலுக்கு இதமா சேமியா போட்ட ஐஸ் வாங்கி சாப்பிடலாம், என்கிட்ட காசு இல்லக்கான்னு நான் சொல்ல பரவாயில்ல எண்ட்ட இருக்கு. என்று என்னுடன் அந்த குட்டி பட்டாளத்தையும் கூட்டிக்கொண்டு வெளியே கோயிலை நோக்கிச் சென்றாள். அவள் எனக்கு ஐஸ் வாங்கி குடுப்பதற்காகவே எல்லோரையும் கூட்டிச்செல்வதாகப் பட்டது. அப்பா, இன்னும் யாருடனோ, ஒரு வேப்பமரத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தாள். அம்மாவைக்கானோம், ஹரியும், பாஸ்கரும் என்னை ஐஸ் வண்டி பக்கத்தில் பார்த்ததும், அவர்களுடைய பிரிய தோழிகளை விட்டுவிட்டு ஓடிவந்து விட்டார்கள், சீனி எனக்கும் ஐஸ் வாங்கிக்கொடுன்னு, ரெண்டு பேரும், நான் என்கிட்ட காசு இல்லடா, இந்த அக்கா தான் வாங்கிக் குடுக்குறாங்கன்னு சொல்ல கேட்கிறமாதிரி தெரியலை, ஹரி அழவே ஆரம்பிச்சுட்டான். கௌசல்யா அக்கா, எல்லாருக்கும் நான் வாங்கித் தரேன்னு என்னைப் பார்த்து குனிந்து, கண்ணத்தை பிடித்து சொன்னாள். எனக்கு அவளைக் காலோடு கட்டிக் கொள்ளத்தோன்றியது, கையை மட்டும் பிடித்துக் கொண்டு, சேமியா ஐஸ், சவ்வரிசி ஐஸ் என்றும், அவரவருக்கு பிடித்த கலரில் ஐஸ் வாங்கிக் கொண்டோம், கௌசல்யா அக்காவும், பெரிய சாந்தி அக்காவும், எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை, அக்கா உங்களுக்குன்னு கேட்டப்ப, நாங்க இப்பதாண்டா ஐஸ் சாப்பிட்டோம், என்ன சாந்தி! என்றாள் எனக்கு நம்பிக்கையில்லாததை கண்டு, நாக்கை நீட்டி பார்த்தியா, ரோஸ் கலர்ல இருக்கு என்று சமாதானம் சொன்னாள். எனக்கு என்னவோ, கூட ரெண்டு டிக்கெட் சேந்துட்டதால தான் அவங்க ரெண்டு பேருக்கும் ஐஸ் இல்லாம போச்சுன்னு தோன்றியது. அப்பாட்ட காசு கேட்டு அக்காவுக்கு ஐஸ் வாங்கித் தரனும்னு நினைத்துக் கொண்டேன்.

கௌஸல்யா அக்கா என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு குனிந்து கொஞ்ச நேரம் ஏதாவது விளையாடலாமான்னு கேட்க, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று எல்லோரையும் கேட்டாள். கல்லா, மண்ணா, கள்ளன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்கா, கண்ணாமுச்சி ரே ரே, நொண்டி, ஸ்கிப்பிங் என்று ஆளுக்காள் ஒவ்வொரு விளையாட்டா சொல்ல, கடைசியில் கல்லா, மண்ணா விளையாடிவிட்டு அப்புறமா, நொண்டி விளையாடலாம்னு கௌஸல்யா அக்கா சொல்ல, எல்லோரும் தலைவர் வார்த்தைக்கு கட்டுப்பட்ட தொண்டர்களாய், சரிக்கா என்று ஒரே குரலில் சொன்னோம், பாஸ்கர் மட்டும் ஸ்கிப்பிங்கும் விளையாடலாங்க்கான்னு கெஞ்சுவது போல கேட்க, கௌஸல்யா அக்கா என்னை பார்த்து ஸ்கிப்பிங் விளையாடலாமான்னு கேட்க நானும் சரியென்று சொன்னேன். எங்களையெல்லாம், கோயிலுக்கு பின்னால் உள்ள பொட்டலுக்கு அழைத்துச் சென்றாள் கௌஸல்யா அக்கா, அங்கு ஒரு பெரிய ஆலமரம், நிறைய விழுதுகளுடன், ஊஞ்சல் ஆடுவதற்கு வசதியாகவும் இருந்தது. யாரோ அதில் வாகாக கயிறு கட்டி ஒரு துண்டு மரத்தை ஊஞ்சலின் அமைப்பில் கட்டியிருந்தார்கள்.  குட்டி பட்டாளம் அதைப்பார்த்தவுடன் அதில் விளையாட போய் விட்டது.   மற்ற எல்லோரும் நான் உட்பட அக்காவின் உத்தரவுக்காக காத்திருந்தோம்.  அந்த ஆலமரத்திற்கும் பின்னால், இந்த வெயில் காலத்திலும் வற்றாமல் ஒரு ஊருனி நிறைய தண்ணீருடன் இருந்தது, களக், களக் என குதிக்கும் மீன்களுடன். இரண்டு பக்கங்கள் மட்டும் படித்துறை போல் அமைப்பு இருந்தது, ஆலமரத்தின் வலதுபக்கத்தின் எதிரே, ஒரு படித்துறையில் நிறைய பேர், குளித்துக் கொண்டும், துவைத்துக் கொண்டும் இருந்தனர்,  ஆலமரத்தின் பின்னால் இருந்த படித்துறையில் யாரும் இல்லை, ஒரே ஒரு கிழவியைத் தவிர.  ஊருனியைச் சுற்றி அங்கங்கே இடைவெளி விட்டு மரங்கள் இருந்தன, பெரும்பாலும் புளியமரங்கள், நம்பர் போட்டு, இரண்டு நவ்வாப்பழ மரமும், சில புங்க மரங்களும் இருந்தன, எனக்கு புளிய மரத்தைத் தவிர வேறு எந்த மரமும் சரியாக தெரியவில்லை, கௌஸல்யா அக்கா தான் என்னென்ன மரங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். புளிய மரங்களைப் பார்த்ததும், ரேணுகாக்கா சொல்லிய பேய் கதைகள் ஞாபகம் வந்தது.  கௌஸல்யா அக்காவிடம் என் பயத்தைப் பற்றி சொன்ன போது, அவள் குலதெய்வம் வீரசின்னம்மா இருக்கிற எடத்தில எந்த பேய் பிசாசும் வராது பயப்படாதே என்று சொன்னாள் ஒரு தேவதையாய். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, கல்லா, மண்ணா விளையாட அது தோதாய் இருக்காது என்று, ரொம்ப ரொம்ப தூரத்தில் தான் சில மண்டபங்களில் படிக்கற்கள் இருந்ததால், கல்லா மண்ணாவை கைவிட்டு, நொண்டி விளையாட முடிவு செய்தாள் அக்கா, எனக்கு நொண்டி விளையாடுவது பிடிக்கும், நாங்க எங்க காம்பவுண்டில் லீவு நாட்களின் போது, இது போல நொண்டியும், சொட்டாங்கல்லும் தான் விளையாடுவோம், எப்போதாவது, தாயமும் விளையாடுவது உண்டு. திடீரென்று ஜெயந்தியின் ஞாபகம் வந்தது, அவளும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும், ஆனா அவங்க மாமா தான் அவளை விட மாட்டேன்னு சொல்லிட்டார்.  அதுவும் நல்லது தான் இல்லாட்டி, கௌஸல்யா அக்கா கூட பழகி இருக்கவே முடியாது. ஜெயந்தி அவ கூடவே இல்லேன்னா அப்புறமா பேசவே மாட்டா, காம்பவுண்டில் எனக்கு ஜெயந்தி தான் உற்ற தோழி, புத்தகங்கள் படிப்பதும், அதற்காக சண்டையிடுவதும் அவளுடன் தான். போன வருஷம் நாங்கள் சித்திரை திருவிழா, பூப்பல்லக்கின் போது, அவளுடன் ராட்டினம் சுற்றியதும், நின்றிருந்த டிராக்டர் டிரைலரில் மறைவாய் விளையாடியதும் ஏனோ ஞாபகம் ரசமாய் வழிந்தது. இந்த அக்கா எவ்வளவு பாசமா இருக்காங்க, இவங்கள மதுரைக்கு நம்ப வீட்டுக்கு லீவுக்கு வரச்சொல்லணும்.

எல்லோரும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, கோயிலைத்தாண்டி மீண்டும் பந்தலுக்கே வந்துவிட்டோம். அப்பா இன்னும் வந்திருக்கவில்லை, அம்மா, எங்களின் பைகள் வைத்திருந்த இடத்திற்கு அருகில் உட்கார்ந்து, சுப்பு சின்னம்மா, முனியம்மாவுடனும் பேசிக்கொண்டு இருந்தாள். எங்களைப்பார்த்ததும் எங்கடா போயிட்டு வர்றீங்க. கௌசல்யா அக்காகூட போய் விளையாடிட்டு அப்படியே ஐஸ் தின்னுட்டு வர்ரோம். யாரு வாங்கிக்குடுத்தா, நான் தான் சின்னம்மா வாங்கிக் குடுத்தேன், நான் தீப்பெட்டி ஒட்டி சேர்த்த காசுல தான் வாங்கிக்குடுத்தேன்னு நெஞ்சில் கை வைத்து பெருமையாய்ச் சொன்னாள் அக்கா.  உடனே என்னோட அம்மா, அவளுடைய பர்ஸிலிருந்து காசு எடுத்துக் குடுத்தபோது அவள் வாங்கிக் கொள்ளவில்லை. என் தம்பிங்களுக்கு தானே வாங்கிக் குடுத்தென், பரவாயில்ல சின்னம்மா, என்று என் தலைமுடியைக் கோதிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். இவ எனக்கு அக்காவா பொறந்திருக்க கூடாதான்னு யோசிச்சுக் கொண்டிருந்தேன். சிவராத்திரி முடியும் வரை கௌஸல்யா அக்காவுடன் தான் இருந்தேன், அவளும் எங்கே போனாலும் என்னை உடன் அழைத்துச்சென்றாள். ஆத்துக்கு குளிக்கப் போகும்போது, கோயிலுக்கு அம்மனின் முகவடிவு கொண்டு செல்லும்போது, முளப்பாரி எடுத்துச்செல்லும்போது, பெரிய பூஜை நடக்கும்போது, மூக்கம்மா சின்னம்மாக்கு சாமி வந்து புருஷன போடா, வாடான்னு மரியாதையில்லாமா ஆத்தாவா வைஞ்சபோது, ராஜலச்சுமி மயினி மேல மாரியம்மா ஏறி வந்து கல்யாண ஆகாத பெரிய சாந்திக்கு, கிழக்க இருந்து சம்பந்தம் வரும்னு துன்னூரை அள்ளி மூஞ்சில எறிஞ்சபோதுன்னு எல்லா நேரத்திலும் நான் அக்கா கூடவும், அக்கா எங்கூடவும் தான் இருந்தோம். எனக்கு அவங்களுக்கு சாமி வரும்போதெல்லாம் பயமா இருக்கும், அக்காவை இறுக்கி பிடிச்சுக்குவேன், அவளும் பயப்படாத சீனு, இது சாமி தான், பேய் வந்தாலும் இப்படி தான் ஆடுவாங்க, ஜெயாத்தைக்கு பேய் பிடிச்ச போது அவங்க இப்படி தான் ஆடினாங்க, மந்திரவாதியெலாம் வந்து பூஜை பண்ணாதான் அடங்கும் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன். கௌஸல்யா அக்கா அதற்கு, கோயில்ல சாமி இருக்கிறதுனால பேய் வராதுன்னு சொன்னேன்ல,  வந்தா அது சாமி தான்னு எளிமையாக விளக்கினாள், அதுக்கப்புறம் எனக்கு பேய்ப் பயம் வரலை, சில சமயம் சாமி வந்து வேப்பிலை வச்சு அடுத்தவங்கள் அடிக்கும்போது மட்டும் சிரிப்பா வந்துச்சு, அப்டியெல்லாம் சிரிக்ககூடாது, சாமிக்கு கோவம் வந்துடும் என்று கண் விரிய அவங்க ஊரில் நடந்த மாரியம்மாவின் கோபக்கதையெல்லாம் சொல்வாள்.

சிவராத்திரி முடிஞ்ச பிறகு ஊருக்கு கௌஸல்யா அக்காவை பிரிஞ்சு போகனுமேன்னு நினைக்கும்போதே அழுகை வர்றமாதிரி இருந்தது. அக்காவை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாமுன்னு அப்பாட்ட கேட்டுப் பார்க்கலாமான்னு எனக்கு தோனிச்சு, அப்பாட்ட கேட்டபோது நம்ம கட்டில்ல எடம் பத்தாதேடான்னு சொன்னார். நான் வேனா கட்டிலுக்கு அடியில படுத்துக்குறேன்னு சொன்னேன். அவங்கம்மா அப்பா விடனும்ல, அதும்போல அது வீட்ல இருந்து தீப்பெட்டி ஒட்டி சம்பாதிக்கிற பிள்ளை, மதுரைல தீப்பெட்டி ஒட்டுற வேலை செய்ய முடியாதே, அவ வீட்ல இருந்தா அவங்கம்மாவுக்கு உதவியா, ரெண்டு காசு சம்பாதிச்சுட்டு இருப்பா, அத கெடுக்கனுமா உனக்கு. நீ ஊருக்கு போகும்போது அவங்க வீட்டுக்கே போய் இரு, விளையாடு என்று சமாதானம் சொன்னார். எனக்கு சீட்டுக்கட்டுல கழுதை விளையாட்டு, ரம்மி விளையாட்டு என்று இந்த மூன்று நாட்களில் கற்றுக்கொடுத்துவிட்டாள். கோவில்பட்டி மாத்திரம் கொஞ்சம் பொறாமையா பாப்பான், ஏலே கொடுத்து வச்சவம்ல நீ…. கௌசல்யா அக்கா உனக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டே இருக்கு என்று புலம்புவான். கௌஸல்யா அக்காக்கும் என்னைப் பிரிவது சங்கடப்படுத்தி இருக்க வேண்டும், ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது என் வீட்டிற்கு வரவேண்டும், நீ வரலேன்னா, அவ்வளவு தான் பாத்துக்கோ, நான் உன்கூட பேசவே மாட்டேன், அத்தனை அழகாக, நுனி நாக்கை பல்லில் தட்டி தட்டி அவள் பேசியது, தலை சாய்த்து என்னை பார்த்தது, எனக்கு மேலும் அழுகை வர வைத்தது. கௌஸல்யா அக்கா எல்லாமுமாய் நிறைந்து நின்றாள், என் அப்பாவிடமும், சித்தப்பா, சீனுவை பரீட்சை லீவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி விட்டுடனும் என்று உறுதி வாங்கி கொண்டாள். அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டிய மெட்டடோர் சரக்கு வேன் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பத் தயாரானது. கௌஸல்யா வேனில் பிடித்துக் கொள்ள தொங்கிய கயிற்றைப் பிடித்துகொண்டே, சீனு லட்டர் எழுது, 113, ஆராய்ச்சிபட்டி பிள்ளையார் கோயில் தெரு, ஸ்ரீவி என்று அட்ரஸ் சொல்ல நானும் மனதில் குறித்துக்கொண்டேன், ரவியும் அதே தெருவில் இருப்பதால், டோர் நம்பர் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், இலகுவாய்ப் போனது, எனக்கு அழுகையாய் வந்தது, கௌஸல்யா அக்காவின் வெம்மை, ப்ரியம், ஒரு மெல்லிய பாசிப்பயறும், சோப்பும் கலந்த வாசம் என்று என்னைச் சுற்றி ஒரு கௌஸல்யா பற்றிப் பெருகியிருந்தாள்.

கல்லூரி முதலாம் இரண்டாவது வருஷம் படிக்கும்போது கௌஸல்யா அக்காவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது. கௌஸல்யா அக்காவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து கல்யாணப்பத்திரிக்கை கொடுத்ததாங்க, அம்மா சொன்னாள். கௌஸல்யா அக்காவின் ஒன்று அல்லது இரண்டு விட்ட தாய்மாமனை கல்யாணம் செய்து கொண்டாள். கௌஸல்யா அக்கா. அவருக்கு அவளை விட அதிகம் வயசாய்த் தெரிந்ததாகச் சொன்னாள், திருத்தங்கலில் கார் டிரைவராக (அவருமா?) இருப்பதாகவும், சொந்தமாக இன்னும் கொஞ்ச நாட்களில் கார் வாங்கி விடுவதாகவும் கல்யாணத்திற்கு சென்றிருந்த என் அம்மாவிடம் கூறியிருக்கிறாள். உன்னைப்பத்தி தான் ஓயாம கேட்டா, நான் தான் உனக்கு செமஸ்டர் அது, இதுன்னு சொல்லி சமாளிச்சேன், அவ மாப்பிள்ளைட்ட கூட உன்னைப்பத்தி சொல்லிக்கிட்டே இருந்தாள், நீ வந்திருக்கலாம்டா, பாவம் ரொம்ப ஏமாந்து போயிருப்பா, மணமேடைவிட்டுட்டு என்னை கவனிக்க வர்றா, எனக்கு தான் ஒரு மாதிரியா இருந்தது, என்று அம்மா, கௌஸல்யாவின் கல்யாணத்தில் இருந்து வந்ததில் இருந்து அம்மா அவளைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள். எனக்கு கல்யாணத்திற்கு நான் ஏன் போகாமல் இருந்தேன் என்று புரியவில்லை. மதுரையில் இருக்கும் அவள் தாய்மாமன் வீட்டுக்கு வரும்போது என்னைப் பார்க்க வந்திருக்கிறாள், வழக்கம்போல நான் இல்லாதது, அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது போலும். எனக்கும் அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. எப்படி இருந்தாள் என்று அம்மாவிடம் கேட்டதற்கு, எப்பவும் போல தான், துறுதுறுன்னு, நாக்க நீட்டி நீட்டி பேசிக்கிட்டு, சின்னம்மா, திருத்தங்கலுக்கு வாங்க, சீனுவ கூட்டிக்கிட்டு, நாங்க கார்ல தான் வந்திருக்கோம், சீனு சீக்கரமா வந்துட்டா, எங்க மாமாவீட்டுக்கு வரச்சொல்லுங்க சின்னம்மான்னு, ஒரு சூறாவளிபோல வந்தா, போயிட்டா, நீ கொஞ்சம் சீக்கிரமா வந்திருந்தா, அவ மாமா வீட்டுக்காவது போயி பார்த்திருக்கலாம், இப்படி விளக்கு வச்சு வந்தேனா, அவ இன்னேரம் போயிருப்பா, கௌஸல்யா அக்கா, கௌஸல்யா அக்கான்னு சொல்லிக்கிட்டே இருப்ப, இப்ப என்னடா ஆச்சு, அவள பார்க்கக்கூட போக மாட்டேங்கிற, நான் சொல்றதையும் அக்கறையா கேட்க மாட்டேங்கிற! என்று சலித்துக் கொண்டாள்.

பாஸ்கர், சொந்தத்திலேயே என் மாமன் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டான். அவன் கல்யாணத்திற்கு வந்திருந்தாள் கௌஸல்யா அக்கா, அவள் மகன் சீனுவுடன், என்னைப்பார்த்ததும், ஓடி வந்தாள், பார்த்தியாடா, 10 வருசம் கழிச்சு ஒன்னப்பிடிச்சிட்டேன், எப்படி இருக்கடா தங்கம், ஒன் மிஸ்ஸஸ் எங்க? ஜம்முன்னு இருக்கியேடா, அழகான்னு, திருஷ்டி வழித்தாள். டேய் மாமாவப் பார்த்தியா, மாமாவுக்கு ஒன் பேர் தாண்டா, என்று அவள் பையனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தாள். மாமா மாதிரி நல்லா படிச்சேன்னா, மாமா அவனை மாதிரியே ஒரு வேலை வாங்கி குடுப்பான், குடுப்பதானே என்று என்னிடம் உறுதி செய்து கொண்டாள். ஒன்னப் பார்க்கத்தான்டா வந்தேன், பாஸ்கர் கல்யாணம் ஒரு சாக்கு, பாஸ்கர் கல்யாணத்திற்கு வந்தேன்னு தான நினச்ச, அவன் வந்து பத்திரிக்கை வைக்கும்போதே சொல்லிட்டேன், சீனு வருவானான்னு, என்று என்னை ஒரு கையால் அனைத்தபடி பேசிக்கொண்டே இருந்தாள், சீனு என்கிற அவளுடைய பையனும், நானும் அவள் பேசுவதைக்கேட்டுக் கொண்டே இருந்தோம். திருத்தங்கல் பற்றியும், மாமாவையும் பற்றியும், விறகுக்கடை பரமசிவம், நாங்கள் புலிக்குத்தியில் சுற்றியதையும் என்று சம்பந்தமில்லாமல் கதைகள் பேசிக்கொண்டே இருந்தாள். என் மனைவி வந்து தோள் தொட்டழைக்க, கௌஸல்யா அக்காவை அறிமுகம் செய்தேன், என்னோட பெரியம்மா பொண்ணு, நம்ம கல்யாணத்துக்கு ஏன் வரலை என்று அசந்தர்ப்பமாக கேட்டாள். சீனுவுக்கு என் மேல ஏதோ கோபம், அதான் அவன் எனக்கு பத்திரிக்கையே அனுப்பவில்லை என்று கௌஸல்யா அக்கா முகத்தை பாவமாய் அழகு காட்டினாள். எக்ஸ்க்யூஸ் மீ என்று என் மனைவி கௌஸல்யா அக்காவிடம் தொந்தரவுக்கு வருந்தி அழைக்க, போயிட்டு வா சீனு, நான் சாயந்தரம் வரை இருப்பேன், என்று வழி அனுப்பினாள் கண் கலங்கிய படியே! எனக்கும் அழுகை வந்தது, என் மனைவிக்குப் புரியவில்லை.