Wednesday, October 27, 2010

இரண்டு கவிதைகள்...

கலெய்டாஸ்கோப்

வனாந்தரங்களில் அலையும்
நட்சத்திரங்கள் பூத்த
தேவதையாய் இருக்கிறாள் அவள்
பூக்கள் நிறைந்த தோட்டங்களின் மத்தியில்
தோழிகளாய் விர்ருக்கும் சிறிய பறவைகளுடன்
சம்பாஷிக்கிறாள்
கண் விரித்து கதை கேட்கும் பறவைகள்
அவை பறக்கும் பிற தேசங்களில் அவள் கதைகளை
பிறருக்கு சொல்கின்றன
தடாகத்தில் நீர் அருந்த வரும் விலங்குகளுடன்
விளையாடவும் செய்கிறாள்
ஒரு நாள் வசீகரமாய் இருந்த ஒளி உமிழும் குகைக்குள்
அம்மாவின் எச்சரிக்கையை மறந்து
செல்கிறாள்
கொடிகளும் இலைகளும் இருந்த
சுவரில் பதிந்திருந்த நாதங்கியை தொடுகிறாள்
ஓசையுடன் நகர்ந்தது பெருங்கதவு ஒன்று
திடீரென்று கூட்டமாய் விருட்டென்று
பறந்து வெளியேறியது கண்ணாடித் தும்பிகளும்
வண்ணத்துப்பூச்சிகளும்.

ஒட்டகச்சவாரி

உலோகப்பறவையின்

நிழலில் மிரண்டு நகரும்
கோழிக்குஞ்சு மேகங்களின்
கீழே உறங்காத
விழிகளில் நீலம் பாரித்து
கிடந்த பெருங்கடல்
துண்டாக்கிய நிலசதுப்புகளில்
தொடங்கிய பயணத்தின்
இறுதியில்
காற்றுக்குடுவைகள்
மோதி உடையுபோது
மணலென உதிரும்
நம்பிக்கையில்
கருத்தமசி எண்ணெய்
பூசிய கரன்சி
மையிட்ட வெத்திலையாய்
காட்டும்
கடன்காரர்களின்
முகங்களின் நடுவே
மனைவியும் குழந்தைகளும்
மங்கலாய்...

5 comments:

க ரா said...

ராகவன் இரண்டும் மிக அற்புதம். இரண்டாவது என் மனதில் ஆழப் பதிந்தது..

மாதவராஜ் said...

பறவைகள், விருட்சங்களை சுமப்பதை அறிந்திருக்கிறேன். கதைகளையும் பிற தேசங்களுக்கு கொண்டு செல்வதில் இருக்கும் பெரும் வெளி அற்புதமானது. நீங்களும் அப்படி ஒரு பறவைதானோ!:-)))

உங்கள் கவிதைகளில் செடிகள் அடர்ந்திருக்கும் பாழடைந்த கட்டிடங்கள், அனாதிவெளியில் தனித்திருக்கும் குலக்கோயில்கள் அடிக்கடி காணக் கிடைக்கின்றன. இதிலும்.

இரண்டாவது கவிதை வாட்டுகிறது. விமானங்களின் கிழே எவ்வளவு இருக்கிறது. :-((((

ரிஷபன் said...

மையிட்ட வெத்திலையாய்
காட்டும்
கடன்காரர்களின்
முகங்களின் நடுவே
மனைவியும் குழந்தைகளும்
மங்கலாய்...

அது நிஜமா.. பொய்யா தெரியாது. ஆனால் மையிட்ட வெற்றிலையில் ஒரு சிறுமி பார்த்துச் சொன்ன தகவல் தொலைந்து போன ஒரு உறவினரைக் கண்டு பிடிக்க உதவிய அனுபவம் இந்தக் கவிதையால் மனசில் கிளர்ந்தது.

உயிரோடை said...

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குங்க ராகவன்

மதுரை சரவணன் said...

kavithaikal arumai. வாழ்த்துக்கள்