எதிரில் வந்தவருக்கு
என் சாயல் தான் இருந்தது
கையில் என்னுடைய
முகவரியைத்தான் வைத்துக்கொண்டு
வருவோர் போவோரிடம்
எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்
வாங்கி பார்த்தவர்கள்
எல்லாம் பழக்கமான இடமாகத்
தான் தெரிகிறது நபரும்
ஆனாலும் சரியாக சொல்ல
முடியவில்லை என்று
சென்றுவிட்டார்கள்
இப்போது அவர் என்னை நோக்கி
வருகிறார்
நான் ஒரு கிண்டலுடன்
நான் தான்யா அது
என்று சொல்ல தயாரானேன்
வந்தவர் விலகி
வேறு பக்கம் சென்றுவிட்டார்
******
அப்பா வந்ததும்
சொல்லிவிடவேண்டும்
உமிக்கார லட்சுமியக்கா மகன் குமார்
என்னை அடிச்சதை
தொடையே சிவந்து போறமாதிரி
கிள்ளினதை
அம்மாவிடம் சொன்னபோது
நீ என்ன பன்னின
ஒன்னும் பன்னாமலே
அவென் அடிச்சானா என்று
என்னையே குத்தம் சொல்லும்
அப்பாட்ட சொன்னாதான் சரி
அப்பா வர தாமதமாக
உறங்கியவனை எழுப்பி
லாலாக்கடை அல்வாவும்
பாலும் குடித்து தூங்க வைக்க
கனவில் அல்வா தின்ற
கதையை
உமிக்கார லட்சுமியக்கா மகன்
குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்
மறுநாள் காலை
4 comments:
அழகான இரண்டு கவிதைகள் ராகவன் ..
கனவில் அல்வா தின்பது எத்துணை இன்பம் ..திகட்ட திகட்ட
என்னவெல்லாம் கவிதையாகிறது உங்களுக்கு !
வேறு பக்கம் சென்றவுடன் சட்டேன்று உணரும் சுயம் ..
பா.ரா நினைவுக்கு வருகிறார். இரண்டாவது கவிதையில்....
இரண்டு கவிதைகளும் அருமையாக இருந்தன!
நல்ல கவிதைகள் ராகவன்
Post a Comment