Tuesday, March 29, 2011

அரிசி தின்னும் மயிலிறகு...


பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது சடசடவென மழை வந்ததை நினைக்கும் போது ராதாவிற்கு சந்தோஷமாய் இருந்தது.  மழை அவளுக்காகவே காத்திருந்து பெய்கிற மாதிரி தோன்றியது, கைபிடித்து வீடு வரை விட்டபிறகு பெய்ய ஆரம்பித்தது மாதிரியும் தோன்றியது. நெற்றியில் வழிந்த ஒற்றைத் துளி வழிந்து கண் இமையில் நின்று சொட்டியது.  பைக்கட்டை, உள்ளறையில் இருக்கும் மேசை மீது வைத்து விட்டு, துப்பட்டாவை நீவி சரிசெய்து கொண்டு மழையைப் பார்க்கலாம் என்று தோன்றியவுடன், அடுப்படியில் கிடந்த முக்காலியை எடுத்துக்கொண்டு ஜன்னலுக்கு நேராக போட்டுக் கொண்டாள்.  பெரிய மழையாய் இல்லையென்றாலும், பெரிய பெரிய துளிகள் நிமிடத்தில் நனைத்து விட்டிருக்கும்.  நனையலாம் தான், ஆனால் இந்த யூனிபார்ம் சல்வாரில் நனைவது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.

அவளுக்கு வத்சலாவின் ஞாபகம் வந்தது, இவளுக்குப் பின்னால் தான் அவளும் வந்தாள்.  நல்ல நெருக்கமான சிநேகிதி வத்சலா. போன ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு வத்சலாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். வத்சலா பேச முயன்றபோதெல்லாம் இவள் விலகிப் போனாள். சிலசமயம் இவள் பாதையில் மறித்துக் கொண்டு நின்ற போதும் கண்டு கொள்ளாத மாதிரி சென்று விட்டாள்.  விலகிப் போவது போல முறைப்பு காட்டியதும், அவளுடன் பேசுவது சுத்தமாய் நின்று விட்டது. உள்ளுக்குள்ளே கோபம் இருந்தாலும் அவள் மேலான பிரியம் குறைவில்லாமல் இருந்தது. இந்த கோபமும் ஒருமாதிரி நல்லாயிருந்தது என்று ராதாவிற்குத் தோன்றியது.

வத்சலா வீட்டிற்கு இவள் வீட்டை கடந்து இரண்டு தெருக்கள் போக வேண்டும்.  அய்யோ! நனைந்திருப்பாளோ என்று தோன்றியது.  ஒருவேளை லிங்கம்மா கடை வாசலில் ஒதுங்கியிருக்கலாம். ஒதுங்கியிருந்தால்  நனையாமல் தப்பிக்கலாம்.  ஆனாலும் கொஞ்சமாவது நனைந்திருப்பாள்.  லிங்கம்மாவின் பையன் ரவியிருந்தால் வத்சலாவை முறைத்து முறைத்துப் பார்ப்பான், அது ராதாவிற்கு சுத்தமாப் பிடிக்காது. வத்சலாவிற்கும் அது சங்கடமாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.  இதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு கொஞ்சம் பதைபதைப்பாயும் இருந்தது. 

இவள் ஜன்னலுக்கருகே உட்கார்ந்து கொண்டு கை கூப்பியிருப்பதை பார்த்ததும் அவளுடைய அம்மாவுக்கு சிரிப்பு வந்தது.  சாமிகிட்ட வேண்டிட்டிருக்கியோ? மழை வேண்டாமுண்டு! என்று சிரித்தாள்.  இல்லைம்மா, வத்சலா மழைல நனையாம போயிருக்கணும்னு  நினைச்சுக்கிட்டிருந்தேன்!  நான் வீட்டுக்குள்ளே வரும்போதே மழை ஆரம்பிச்சுடுச்சு, அதான் கவலையா இருந்தது என்றாள்.

குடையக் கொடுத்திருக்க வேண்டியது தானே? அதக்குடுக்காம, கன்னத்துல கைய வச்சு, கப்பலே கவுந்தா மாதிரி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கே! சரி, காப்பி குடிக்கிறியா? என்று கேட்டவள், இவளின் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்று காப்பி போட போய்விட்டாள். மழை என்று நிதானிக்குமுன்னெ மழை பெரிதாகிவிட்டது. இதையெல்லாம் யோசிக்கமுடியவில்லை. அப்படியே கொடுத்தாலும் அவளுடன் பேசாமல் இருப்பதால், குடையை வாங்காமல் வீம்புக்கு நனைந்து கொண்டே போவாள் என்பது ராதாவுக்குத் தெரியும். எட்டிப் பார்த்தாள், அம்மா உள்ளே சென்றுவிட்டாள் என்று தோன்றியது.

ராதா உள்ளறைக்கு சென்று சல்வாரில் இருந்து பாவாடையும் அவள் அண்ணனின் சட்டையையும் மாற்றிக் கொண்டாள். மேசையில் விட்டிருந்த, பைக்கட்டை எடுத்து புத்தகங்களுக்கு இடையே இருந்த மயிலிறகையும், ஒரு புகைப்படத்தையும் எடுத்தாள். அதில் இவளும் வத்சலாவும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு கன்னத்தோடு கன்னம் இழைத்த மாதிரி ஒரு படம் இருந்தது.  அதை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  வத்சலாவிற்கு, ராதா மாதிரி இல்லாமல் நல்ல நீளமான முடி. அதை லூசாகப் பின்னி முன்பக்கம் விட்டிருந்தாள்.  நீலப்பூ பாவாடையும், மஞ்சள் கலர் சட்டையுமாய் அழகாய் இருந்தாள். வத்சலா தன்னை விட அழகு என்று ஏனோ அவளுக்கு நினைவுக்கு வந்தது.  இந்தப் படம் இவர்கள் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி முடித்ததும், போன மஹாபலிபுரம் பிக்னிக்கின் போது எடுத்தது. இந்தப்படம் இவளுக்கு ரொம்ப பிடிக்கும். ராதா, வத்சலாவை விட நிறமாய் இருப்பாள், ஆனாலும் வத்சலா தான் திருத்தமா இருப்பாள். ராதாவின் அம்மாவே இதை சொல்லியிருக்காள், எப்படி இருக்கா பாரு பதுமை கணக்கா? என்பாள். 

இரண்டு பேருமே ஏறக்குறைய ஒரே உயரம். ராதா கொஞ்சம் பூசுனமாதிரி உடம்போட இருப்பாள். வத்சலா, ஒல்லியா இருப்பாள். பெரிய நீளமான கண்கள் வத்சலாவிற்கு, மையிட்டவிதம் இன்னும் பெரிதாய் பளபளப்பாய்க் காட்டும். ராதாவிற்கு அவள் அப்பாவைப் போல சிறிய கண்கள், நீளமான மூக்கு.  மெலிதான மேலுதடும், அழுத்தமாய் குழிவான கீழுதடும் அப்பாவினுடையது.  நிறமும், முகவடிவும் அம்மாவைப் போல. வத்சலா அப்படியே அவள் அம்மாவைப் போல. இரண்டு பேருக்கும் அப்படி ஒரு நெருக்கம், எப்போதும் கைபிடித்துக் கொண்டோ, தோளோடு தோள் சேர்த்துக் கொண்டோ திரிவார்கள்.  இரண்டு வீட்டின் விசேஷ தினங்களிலும் இரண்டு பேரும் ஒன்றாகவே இருப்பார்கள். இரண்டு வீட்டின் உறவுக்காரர்களுக்கும், இவர்களின் சினேகம் பற்றித் தெரியும். இருவரின் பெற்றோர்களிடையேயும் உறவு பலப்பட்டதற்கு இவர்களின் நட்பே காரணம்.

மஹாபலிபுரத்திலும் பிக்னிக் போயிருந்த போதும் இது போல மழை பெய்தது. இருவருமே   நனைந்து விட்டார்கள். பைக்கட்டு, புஸ்தகங்கள் ஏதும் இல்லாததால், இரண்டு பேருக்குமே நணைவதில் விருப்பமிருந்தது. யூனிபார்ம் சல்வார் இல்லாதது வசதியாய் இருந்தது. வெறும் பாவாடை சட்டை மட்டுமே போட்டிருந்தார்கள் இருவரும். கையைப் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்தார்கள்.  பிலோமினா டீச்சர் வந்து சத்தம் போட்டதும், இரண்டு பேரும் அறைக்குள் ஓடினார்கள்.

வத்சலாவின் அப்பா பிக்னிக்கிற்கு விடுவதாய் இல்லை, முதலில். சென்னைக்கு போறதெல்லாம் ஆவாது! பேசாம வீட்ல இருந்துகிட்டு, அடுத்து என்ன பண்றதுன்னு யோசி! என்று அடக்கிவிட்டார்.  இதை வத்சலா வந்து சொல்லும் போது அழுதுவிட்டாள். அவளுக்கு ராதாவுடன் வரவேண்டும் என்று ஆசையாய் இருந்தது.  ராதா தன் அம்மாவையும் கூட்டிக் கொண்டு, வத்சலா அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி சம்மதம் வாங்கினாள்.  வத்சலாவின் அப்பா சம்மதம் தெரிவித்ததும், வத்சலாவிற்கு சந்தோஷம் தாங்காமல், ராதாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.  ராதாவுக்கு ஒரு மாதிரி நல்லாயிருந்தது. அதன் பிறகு ராதாவிற்கு வத்சலா வித்யாசமாய் தெரிந்தாள். வத்சலாவை எல்லா விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது போல ராதாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருந்தன. ராதாவிற்கும் வத்சலாவிற்கும் இது போன்ற இனம் புரியாத உறவு பிடித்திருந்தது.

நனைந்தவாறே உள்ளே வந்தபோது டார்மெட்டரியில் இருந்த ஆறு பாத்ரூமும் மூடியிருந்ததால், இரண்டு பேரும் தலையை மாற்றி மாற்றி துவட்டிக் கொண்டு காத்திருந்தனர்.  ஒரே பாத்ரூம் திறந்த போது, வேறு வழியில்லாமல் இரண்டு பேரும், ஒன்றாகவே உள்ளே நுழைந்த, உடை மாற்றிக் கொண்டனர். ராதாவிற்கு வத்சலாவைப் பார்க்கையில் சிலிர்ப்பாய் இருந்தது.  வத்சலா, ராதாவை பார்த்து என்னடீ! என்றாள். இருவருக்கும் ஏனோ சிரிப்பு வந்தது.  அன்று இரவு எல்லோருக்கும் உணவு ஏற்பாடு செய்துவிட்டு, பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடானது.  பிலோமினா டீச்சரும், மார்த்தா சிஸ்டரும் தான் பைபிள் ரீடிங்கும், பாடல்களும் பாடினார்கள். எல்லாம் முடிய ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.  இரவு சாப்பாடை முடித்ததும், உடன் வந்த பிள்ளைகள் பாதிபேருக்கும் மேலே முன் வராண்டாவில் உட்கார்ந்து பாட்டுக்குப் பாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

டார்மெட்டரியில் விளக்கை அணைத்துவிட்டு சில பிள்ளைகள் படுக்கத் தொடங்கினார்கள்.  மொத்தம் இருபத்திரண்டு படுக்கைகள் இருந்தது, அந்த டார்மெட்டரியில், பிலோமினா டீச்சரும், மார்த்தா சிஸ்டரும் ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். மற்ற பிள்ளைகளுக்கு, ஒரு கட்டிலுக்கு இரண்டு பேர் என்ற விகிதம் நாற்பது பேருக்கு போதுமான படுக்கைகள் இருந்தது. எப்போதும் ராதாவும், வத்சலாவும் ஒண்ணாகவே திரிவதால், அவர்கள் இருவருக்கும் ஒரே படுக்கை என்று ஒதுக்கியிருந்தார்கள். அவர்களின் படுக்கை சரியாக நடுவில் இருந்தது. டார்மெட்டரியின் கூரையில் மேலே கண்ணாடி பதித்திருந்ததால், நிலா வெளிச்சம் கண்ணாடியின் ஊடாகப் பரவி படர்ந்திருந்தது. விளக்கை அணைத்தாலும் கொஞ்சம் வெளிச்சம் மிச்சமிருந்தது.  ராதாவும், வத்சலாவும் பாட்டுக்குப்பாட்டில் கலந்து கொண்டார்கள்.  ராதாவின் சினிமாப் பாட்டு ஞானமும், குரலும் வத்சலாவிற்கு வசீகரமாய் இருந்தது.  தூக்கம் வருபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து படுக்கைக்குப் போகத் தொடங்கினர்.

இருவருக்கும் இன்னும் கொஞ்ச நேரம் நிலாவைப் பார்த்தபடி உட்காரலாம் என்று தோன்றியது. ஆனாலும் பிலோமினா டீச்சர் தனியாக இருக்க வேண்டாம் என்று சொன்னது ஞாபகம் வந்ததும், ராதா, நாமளும் போகலாம் வத்சலா என்று அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.  படுக்கையை நீவி தலைகாணியை திருத்தி, போர்வையை உதறி ஒருபக்கமாய் விரித்தாள் ராதா. வத்சலா, தூக்க கலக்கத்துடன், நின்று அவள் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். படுக்கை விரிப்பை சரிசெய்ததும், தொப்பென விழுந்தாள் வத்சலா. ராதாவுக்கு, அவளைப் பார்த்தபோது வாஞ்சையாய் இருந்தது.  வத்சலா படுத்தவுடன் உறங்கியதைப் பார்த்தபோது, இவளுக்கு என்னமோ போல இருந்தது. 

மஹாபலிபுரம் சென்று வந்தபிறகு, இது போல சந்தர்ப்பம் அவர்களுக்கு அமையவில்லை. அது ராதாவிற்கு மறக்கமுடியாத விஷயமாகவும், நினைத்து நினைத்து சந்தோஷிக்கிற விஷயமாகவும் ஆகிவிட்டது.  வாரவிடுமுறையின் போதும், பரீட்சை நேரங்களின் போதும் வத்சலாவுடனான நெருக்கம் மேலும், மேலும் அதிகமானது. ராதாவிற்கு உணர்வுரீதியான நெருக்கமாகவும், உடல் ரீதியான நெருக்கமாகவும் மாறிக் கொண்டே வருவதாய்ப்பட்டது. வத்சலா யாரிடம் பேசினாலும் அவளுக்கு கோபம் வந்தது. வத்சலாவிற்கு அது சிலசமயம் எரிச்சலாய் இருந்தாலும், சிலசமயங்களில் எதிர்த்த போதிலும், பெரும்பாலான சமயங்களில் நெருக்கமாகவே இருந்தாள்.

போன ஞாயிற்றுக்கிழமை, வத்சலா படிக்க வராததால், ராதாவே வத்சலா வீட்டிற்கு போயிருந்தாள். கதவை படக்கென்று திறந்தவள், ராதாவை பார்த்ததும் உள்ள வா என்று உள்ளே திரும்பி நடந்தாள்.  வத்சலாவின் முகத்தில் பழைய உற்சாகம் இல்லாதது போல இருந்தது. வத்சலா வீட்டில் யாருமில்லை அப்போது, அவளின் பெற்றோர்கள் திருமணத்திற்குச் சென்றுவிட்டிருந்தனர். வத்சலாவின் அக்காவும் கல்லூரித் தோழிகளுடன் எங்கோ வெளியே சென்றுவிட்டாள் என்று சொன்னாள்.  வத்சலாவிற்கு, ராதா வீட்டிற்கு வந்தது பிடிக்கவில்லை, அவள் இப்போது தனியாக இருக்கவே விரும்பினாள்.  அதைச்சொன்னால் ராதாவுக்குப் புரியாது என்ன செய்து இவளை வீட்டுக்கு அனுப்பலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். 

ராதாவிற்கு வத்சலாவின் போக்கு மாறிவிட்டதாகத் தோன்றியது. முன்பு போல அவள் ஒட்டுவதில்லை இவளிடம்.  அந்த நெருக்கம் குறைந்தது போன்ற ஒரு முள் நெருடிக் கொண்டே இருந்தது.  அதை இன்று சரி செய்து விட வேண்டும் என்று தோன்றியது. முன் முடிக்கற்றையில் ஒன்று நெற்றியின் வியர்வையில் ஒட்டி அழகாய்த் தெரிந்தாள் வத்சலா.  ராதாவுக்கு இதை என்ன மாதிரியான உறவு என்று வகைப்படுத்த முடியவில்லை. முன்னறை சோஃபாவில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவளின் நினைப்பை அருகில் வந்து அமர்ந்தவள் கலைத்தாள்

வேலை நிறைய இருக்குது ராதா! அடைக்கு ஊற வச்சுட்டு போயிருக்காங்க அம்மா! ஆட்டி வைக்கணும், துணி வேற ஒரு வண்டி கிடக்கு அதையும் தொவைக்கணும்!  என்று ஊறவைத்திருந்த அரிசி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை, ஆட்டுக்கல்லில் இட்டாள். கொஞ்சம் வத்தலும், பெருங்காயமும், உப்பையும் போட்டு தண்ணியை தெளித்து சுத்த ஆரம்பித்தாள்.  நான் சாயங்காலமா வர்றேனே உன் வீட்டுக்கு! என்று கெஞ்சுவது போல கேட்டாள்.  ஏன்டீ தொரத்துற?  நீ மாவாட்டு நான் தள்ளிவுடுறேன்! என்று ராதா ரெண்டு பக்கமும் பாவாடையை வழித்துக் கொண்டு ஒரு மனைப்பலகையை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.  அவள் காலின் மெல்லிய ரோமங்களைப் பார்த்தாள் வத்சலா. 

நீ இருந்தா எனக்கு வேலையே ஓடாது ராதா! நீ கெளம்பு, நான் சாயங்காலமா கட்டாயம் வர்றேன்.  அம்மாவுக்கு வேற உடம்புக்கு முடியலை, வேலையெல்லாம் செய்யாம விட்டா, அது வந்து கஷ்டப்படும்.  பொம்பிளப்புள்ளைய பெத்தும் பிரயோசனம் இல்லை என்று புலம்பும்! என்று அவளை தள்ளாத குறையாய் வெளியே அணுப்பினாள்.  சாயங்காலம் வந்துடு! இல்லேன்னா ஒங்கூட ஜென்மத்துக்கும் பேசவே மாட்டேன்! என்று சொல்லிவிட்டு விருப்பமே இல்லாமல் வீட்டுக்கு புறப்பட்டாள்.  வெளியே வந்து தெருமுக்கைத் தாண்டும் போது, லிங்கம்மாவின் மகன் ரவி வத்சலா இருக்கும் தெருவுக்குள் திரும்பினான்.  ராதாவைப் பார்த்ததும் சிரித்தான், அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் வீடு இங்கே இல்லையே என்று தோன்றியது, எங்கே போறான்னு திரும்பி பார்த்தால், அவனைத் தான் பாக்குறோம்னு நினைப்பு வந்துடும் என்று நினைத்தவள் பேசாமல் நடையை எட்டிப் போட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

அன்று சாயங்காலம், வத்சலா ராதாவின் வீட்டுக்கு வரவில்லை, அவளுடன் இனிமே பேசவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். இந்த மழை நாளோடு நாலு நாட்களாகிவிட்டது.

Monday, March 21, 2011

கடிவாளம்...

சாயங்காலம் வந்துடுவியா? இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா? என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன்! ஆமா! என்று உலை அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றி பானையில் போட்டவாறே வெளம் வந்தது போல கத்தினாள் மிளகி.

வந்துடுதேன்... புள்ள! சோலியா போகையில... மணி குறிச்சிட்டா வரமுடியும், ஆபீஸர் உத்யோகமா பாக்குறேன்... முன்னபின்னா ஆனா என்ன கெட்டுப் போகுதாம்? என்று இழுத்தவாறே, கைலியில் சுற்றி சொருகியிருந்த பீடிக்கட்டில் கடைசிப் பீடியை எடுத்துக் கொண்டு, பேப்பரை கசக்கி அடுப்பில் அங்கிருந்தவாறே எறிந்தான். அது அடுப்பில் விழாமல், நீட்டிக்கொண்டிருந்த விறகு முனையில் பட்டு அங்கேயே விழுந்தது.  திரும்பி அவனை முறைத்தாள் மிளகி. மிளகியின் கணவன். அவளின் தாய்மாமன், அவளுக்கும், அவனுக்கும் பதினாலு வருஷ வித்யாசம்.  சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்றெல்லாம் இல்லை, இவ தான் அழகர் மாமனைத்தேன் கட்டுவேணுண்டு, கட்டிக்கிட்டா! சிலசமயம்,  ஏன்டா அப்படி கிறுக்குப் பிடிச்சு அலைஞ்சோம்?னு அவளுக்குத் தோணும்.

கசக்கி எறிந்த பேப்பர், முன்னாடியே விழுந்தது, அவளுக்கு எரிச்சலாய் இருந்தது.  எதைப்பாத்தாலும் இப்படித்தான் தூக்கி எறியறது!  கையில கொடுக்குறது தானே! நட்டமா நிண்ணு எறியாட்டி தான் என்ன? என்றவள், அதை எடுத்து அடுப்பினுள் எறிந்தாள். பொசுக்கென்று எரிந்து கருகியது.

கொஞ்சம் கொள்ளிக்கட்டைய உருவு... பீடி பத்தவச்சுட்டுத் தாரேன்! என்றவன் குனிந்தவாறே அவள் முதுகில் வழியும் வேர்வையப் பார்த்தான்.  கருப்புத் தோலுக்கும் அதுக்கும் மினுங்கியது முதுகுத்தோல். வேக்காடாய் இருந்ததால், மிளகி, முந்தானை பிரிபோல ஆக்கி கழுத்தில் சுத்தி முன்பக்கம் போட்டிருந்தாள்.  அரக்கு சிவப்பு ரவுக்கையும், அவ முதுகும் ஒண்ணோடொண்ணு ஒட்டிப்போயி ஒரே மாதிரி தெரிந்தது.  பின்பக்கம் தளர்ந்திருந்த புடவை மடிப்பு உள்ளே போகும் முதுகுத் தண்டு, திரண்டிருந்த முதுகுப்புறத்தின் குழிவுக்குள் மறைந்திருந்தது.  புட்டம் ரெண்டையும் கிள்ள வேண்டும் போலத் தோன்றியது அவனுக்கு. அடக்கிக் கொண்டான். அவளுக்கு வேண்டாம் எனும்போது தொட்டால், அவளுக்கு கோபம் வரும். 

மிளகிக்கும் இவனுக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. மிளகி என்றால் அழகருக்கு  நிறைந்து நிறைந்து தளும்பும் பிரியம்.  மிளகி பதுக்கு பதுக்குண்ணு ஒரு மாதிரியான அழகு.  வெயில்ல கொள்ளைத்தொலவு இருந்து பார்த்தாலே, மினுக்குன்னு இருக்கிற கருப்பு. அழகரின் பெரிய அக்காவோட ஒரே பொண்ணு. அக்கா போல நெறம் இல்லேன்னாலும், களையான முகம். ரெண்டு மூக்கும் குத்தி, கோஸ் மூக்குத்தி போட்டிருப்பாள்.  காதில வெறும் வேப்பங்குச்சி, அல்லது வெளக்கமாத்து குச்சி. சன்னமா ஒரு சங்கிலியும் மஞ்சக்கயிறும் பாம்பு மாதிரி பிண்ணிக்கிடக்குற கழுத்து. காதோரமும், பிடரியிலும், கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்ட மயிர். தூக்கி சொருகிய கொண்டையில் பிரிபிரியாய் சிலும்பி நிற்பதை பார்க்க பார்க்க அழகாய்த் தெரிந்தாள் மிளகி.


மிளகிக்கு, சின்ன பொய் சொன்னாலும் பிடிக்காது, தெரிஞ்சுட்டா திங்குதிங்குன்னு குதிப்பா. அதுக்கப்புறம் ரெண்டு நாளைக்குப் பேசமாட்டாள், சாப்பாடு வைக்கிற தட்டு, கிண்ணம் எல்லாம் அவளுக்கு பதிலா சத்தமாப் பேசும். தன் மேல இவ வச்சிருக்கிற பிரியம்தான் தான் யோக்கியமா இருப்பதற்கு காரணம் என்று நினைத்துக் கொள்வான் அடிக்கடி.  ஆனாலும் இப்ப உள்ள நடைமுறைக்கு பொய்யோ, சின்ன பித்தலாட்டமோ இல்லாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை.


கொள்ளிக்கட்டைய கையில் தராமல், இந்தா! குனிஞ்சு பத்த வைச்சுக்கோ! என்று நீட்டினாள், அவனின் முகத்துக்கு நேராக. எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை, போ வா பொட்டக்கண்ணா தான்.  நுனிக்கங்கில் பீடியை பத்தவச்சு, பல்லில் கடித்தபடி ரெண்டு இழு இழுத்தவன், போதும் புள்ள! என்று வெளியே கிளம்பினான்.  இந்த பீடி சனியனைத் தான் குடிக்காம இருந்தா என்ன? பக்கத்துல வரும்போதே நாத்தம் குடலை பிரட்டும் அவளுக்கு.  அவளோட அப்பா கூட சுருட்டு குடிப்பார், சேவல் மார்க் சுருட்டு. இவ தான் வாங்கிக் கொடுப்பா, வாயே குப்பைத்தொட்டி மாதிரி நாறும். இத எப்படித் தான் பிடிக்கிறாய்ங்களோ என்று நினைத்துக் கொண்டாள். அதிலும் குடிச்சிட்டு இல்லைன்னா பொய் சொல்லைல தான் ஆத்திரம் ஆத்திரமா வரும் அவளுக்கு. மிளகிக்கு, அவனோட வளப்புதான் சரியில்லை என்று தோன்றும் அனேக நேரங்களில்.


தெருவில் இறங்கி யோசித்துக் கொண்டே நடந்தான் அழகர். இன்னைக்கு ரெண்டு மூணு வெள்ளாட்டங்குட்டிய பிடிச்சாரணும்.  ஆறுமுகக்கோனார் கொட்டிலு பூரா செம்மறிக்குட்டிக தான் இருக்கு. வெள்ளாட்டங்குட்டின்னாத்தான் வெரசாத்தீரும். அதுலயும் தலையும், நுரையீரலும் மிஞ்சிப் போகும். தினம் நுரையீரலும், குடலும் சாப்பிட்டே அவனுக்கு அலுத்துப் போச்சு. அழகருக்கு தலைக்கறி தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் மிளகி வைக்கிற மணத்துக்கும், ருசிக்கும் அவ கால் மாட்டிலேயே கிடக்கலாம்னு தோணும்.  பக்குவமா அடுப்புல வாட்டி, அவ பண்ற குழம்பு, கொண்டா கொண்டான்னு இழுக்கும் அழகருக்கு,   கூட ரெண்டு தட்டு உள்ள போகும்.

சிலசமயம் கறி வியாபாரம் சுத்தமா இருக்காது, புரட்டாசி மாசமும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளும் பொதுவாகவே கறி வியாபாரம் மந்தமாத்தான் இருக்கும்.  மிஞ்சுற கறியை, அப்படியே உப்புக் கண்டமாப் போட்டு, வீடெங்கும் கட்டி விட்டு தோரணமாய் தொங்கும் அது. கறி காய்ந்ததும், எடை குறைஞ்சு போகும்.  நாலஞ்சு கிலோ போட்டாத்தான், ஒரு கிலோ உப்புக்கண்டம் தேறும்.  அதனாலேயே அது வெலை கிராம் கணக்கில தான். பழைய சாதத்துக்கு, லேசா எண்ணெய் விட்டு வதக்கினா போதும், சட்டி திங்கலாம் என்று நினைக்கும் போதே அவனுக்கு எச்சில் ஊறியது.

அழகர் முழுநேர கறிக்கடைக்காரன் கிடையாது.  ஞாயிற்றுக்கிழம மட்டும் தான் கடை போடுறது வழக்கம். முந்தி அவனோட அப்பா, சித்தப்பாங்க எல்லாம் ஒண்ணா இருந்தப்போ, சொந்தமாவே ஆட்டு மந்தை இருந்தது. இருநூறு முன்னூறு ஆடுகளுக்கு மேல் இருந்தது. பெரும்பாலும் வெள்ளாட்டங்குட்டிக தான், அதுவும் உசிலம்பட்டில இருந்து பிடிச்சுட்டு வந்தது.  தெரிஞ்சவுங்களுக்காக மட்டுமே அறுக்க ஆரம்பிச்சு, அப்புறம் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் கடைபோடுறது ஒரு பழக்கமாயிடுச்சு, அவங்க அப்பா காலத்திலேர்ந்தே.  வெள்ளாட்டங்குட்டி எல்லாத்தையும் வித்து திண்ண பின்னாடி கூட, சந்தையில வாங்கி விக்கிற பழக்கம் வந்துடுச்சு. ஒரு நாள்ல ஐந்நூறு ரூவா வரைக்கும் கிடைக்குங்குறதால, தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்கான் அழகர். 

கூலிக்குத் தனியா ஆள் வைக்காததால, மிஞ்சுறது எல்லாம் அவனுக்குத் தான்.  மிளகியிடம் எப்போதும் முழுப்பணத்தைக் கொடுப்பதில்லை.  இவனுக்கு என்று ஒரு கால்வாசிப்பணத்தை ஒதுக்கிவிடுவது வழக்கம், அதை அவளிடம் சொல்வது கிடையாது. குடிக்கிறதுக்கும், சீட்டு விளையாடுறதுக்கும் தனியா எடுத்து வச்சுக்கிறது அவளுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், ரெண்டா பொளந்துறுவா, ஆனாலும் இவன் கேக்கும்போது அவள் காசு தருவதில்லை. அதனால இந்த குட்டி அறுக்குறத அவன் விடவில்லை.

அழகருக்கு தொழில்னு பாத்தா பால் பண்ணைக்கு கறவைக்குப் போறது தான், அங்க தினக்கூலி முப்பது ரூவா, தினமும் வேலையிருக்கும்.  ஈரோட்டில மெஷின் வச்சு தான் கறக்குறதாம், பண்ணையில.  இவன் வேலை பாக்குற பண்ணையிலேயும் கொண்டு வரப்போறதா சொல்றாங்க என்று கேள்விப்பட்டதில் இருந்து இவனுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. மெஷின் வந்துட்டா வேலை இருக்காது, இவனைப் போன்ற ஆட்களுக்கு.  ஒரு வேளைக்கு குறைஞ்சது இருபது மாடாவது கறக்கணும்.  இவனோட கறவை மட்டுமே நூறு லிட்டருக்கு மேல வரும். காலையில வந்து கறந்துட்டு, கொட்டில சுத்தம் செய்துட்டு, மாடக் குளிப்பாட்டிவிட்டுட்டு போகணும். அப்புறம், சாப்பாடு முடிஞ்சதும் ஒரு ரெண்டு மணிக்கு வந்து திரும்ப கறக்கணும். கட்டை விரலை மடக்கி, விளக்கெண்ணெய் தடவின காம்புகளை இழுக்கும் போது ஒண்ணும் தெரியாது. ஆனா சாயங்காலம் வீட்டுக்கு போகையில, குத்தவைச்சு உட்கார்ந்த முழங்காலும், கணுக்காலும், மடக்கி கறந்த கட்டை விரலும் வின்வின்னுன்னு தெறிக்கிற வலியில் உயிர் போகும்.  அதனால தான் அப்பைக்கப்போ அவன் குடிப்பதே, அதுவே கூடாது மிளகிக்கு.

அழகர் மாதிரி பால் பண்ணையில் பத்து பேருக்கு மேல வேலை பார்க்கிறார்கள்.  பால் பண்ணையில இருந்து பெரும்பாலும், இது ஓட்டல்களுக்கு தான் ரெகுலர் சப்ளை.  அது போக பக்கத்துல இருக்கிற வீடுகள்ல இருந்து வர்ற சில்லறை கிராக்கிங்க!. அதிலிருந்து தான் இவனுக்கு அரை லிட்டர் போல கிடைக்கும்.  சேதுராமன் தான் போய் ஓட்டலுக்கெல்லாம் போடுறான்.  அவனுக்கும் ஓட்டல் சரக்கு மாஸ்டருங்களுக்கும் ஏதோ கணக்கு வழக்கு ஓடிட்டு இருக்குகிறது என்று பிறர் சொல்ல கேட்டிருக்கான். நிறைய காசு அடிக்கலாம், பொய்யா பால் கணக்கு எழுதி, கிடைக்கிற காசுல ஆளுக்கு பப்பாதி என்று பிரித்துக் கொள்வார்களாம்.  எப்படி இப்படி ஏமாத்துறத்துக்கு மனசு வருது என்று தோன்றும்.  ஆனாலும் இது போல பால் வினியோகம் செய்தால், கூடுதல் காசு கிடைப்பது எத்தனை உதவியாய் இருக்கும் என்பதை யோசிக்காமல் இல்லை அவன்.

சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, மத்தியான கறவைக்காக உள்ளே நுழைந்தான்.  பட்டியக்கல் போட்ட தரையில் தண்ணித்தொட்டி, கஞ்சித்தொட்டி என்று இரண்டு வாய்க்கால்கள் போல கட்டி விடப்பட்டிருக்கும்.  தரையில் ஆழப்பதித்த கம்பிகள், மாடுகளின் எண்ணத்திற்கு தக்க இருக்கும். இது போல பனிரெண்டு வரிசைகள்.  உள்ளே நுழைந்ததும், சாணமும், மூத்திரமும், பால் கவிச்சியும் கலந்து ஒரு வாடை அடிக்கும்.  இது தான் பால் பண்ணையின் அடையாளம் என்று தோன்றும் அவனுக்கு.  முதலாளி மாதத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ தான் வருவார்.  ஒரு மேனேஜர் அப்புறம் கணக்கு வழக்கு இத்யாதிகள் பார்க்கிறதுக்கு ஒரு ஆள், அது தான் ஆபீஸ்.  ரெண்டு மேஜை நாலு சேர், ஒரு மண்பானைத்தண்ணீர், ஒரு பீரோ, கொஞ்சம் கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள், சில பில் புத்தகங்கள், ஒரு டேபிள் பேன் இது தான் ஆபீஸ்.  மேனேஜர் பெரும்பாலான சமயங்களில் இருக்க மாட்டார்.  கணக்குப்புள்ள மட்டும் தான்.

உள்ளே நுழைந்து, கணக்கப்பிள்ளையைப் பார்த்து, வணக்கம் அண்ணாச்சி! என்று சலாம் வைத்தான். பதிலுக்கு வணக்கம், சொல்லாமல்,

இன்னைக்கு நீ கறக்க வேண்டாம்.  போயி, கிருஷ்ணவிலாஸுக்கும், அம்பீஸ் கபேக்கு மட்டும் பால் கொடுத்துட்டு வந்துடு. மத்த ஓட்டல்காரனுங்க அவனுங்களே ஆளணுப்பி வாங்கிக்கிறாங்களாம். “இன்னைக்கு சேதுராமனுக்கு உடம்புக்கு முடியலையாம், அவன் பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போச்சு! என்று முடித்தார்.

அவனுக்கு சந்தோஷம் தாங்கலை.  கறக்க வேணாம் என்பது நிம்மதியாய் இருந்தது. அதும்போக ஓட்டலுக்கு பால் கொண்டு போகும் போது, சரக்கு மாஸ்டரிடம் பேசி, கொஞ்ச கமிஷன் நகர்த்த வேணும் என்று நினைத்துக் கொண்டான்.  கையில கொஞ்சம் அதிகம் காசு கிடைச்சா நல்லது தான். இவனோட கைச்செலவுக்கு ஆகும், மிளகிக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம், ஆனா, ஏது என்னன்னு கேட்டு உயிர வாங்கிடுவா, அதனால் அவளுக்குத் தெரியாமல் இருப்பது தான் நல்லது.  கேனுக்கு அஞ்சுலிட்டர் அதிகமாச் சொன்னாலும், இருபது கேனுக்கு,  நூறு லிட்டர் ஆச்சு. லிட்டருக்கு பத்து ரூபாய்னாக் கூட ஆயிரம் ரூபாய், அதுல பாதி கிடச்சாலும் ஐந்நூறு ரூபாய் என்று விரல் விட்டு கணக்குப் பார்த்த போது சந்தோஷமாய் இருந்தது.  மிளகிக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம். அவளுக்குத் தெரிஞ்சு போய் கேட்டா என்ன பண்றது என்று யோசனை வேறு வந்தது அவனுக்கு.  சமாளிச்சுக்கலாம் என்று இன்னோரு புறம் தோன்றியது.

கிருஷ்ணா விலாஸ் ஓட்டலுக்குப் போன போது ஓட்டலின் சைடில் இருந்த கதவை திறந்து விட்டார்கள், உள்ளே போய் கேனை இறக்க ஆளிருக்கிறதா என்று பார்த்தான்.  அங்கு வயதானவராய், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேஷ்டி கட்டி, தோளில் துண்டு போட்டிருந்தவரைப் பார்த்து, அண்ணே சன்முகம் அண்ணாச்சி இருக்காரா? என்றான்.  ஆரும்லே நீயு? என்றார் அவர். கோதா பால் பண்ணையில் இருந்து வருவதாய் சொன்னது, சேதுராமனுக்கு என்னாச்சுலே? என்றார். மேலுக்கு முடியலையாம், அவம்பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போனதா, கணக்கப்பிள்ளை சொன்னாரு என்றான்.  பையனுங்க யாரையாவது அணுப்புங்க! கேன, உள்ள கொண்டார என்று அவரைப் பார்த்தான். பார்க்கவே கொஞ்சம் சிடுசிடுன்னு விழற ஆள் மாதிரி தான் இருந்தார் அவர். வெள்ளையும் சொள்ளையுமா இருந்தாலும், குரலும், பார்வையும் தடிச்சு இருந்தது.

உள்ளே கிரைண்டரில் ஏதோ மாவாட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ஏலே! போய் ஆறுமுகத்த வரச்சொல்லு என்று வருவான்! என்று இவனைப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.  மாவாட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, ஆருண்ணே இது? என்று கேட்க இவரு தாம்லே சம்முவ அண்ணாச்சி என்றான்.  அடப்பாவி, சேதுராமன் சொல்றதப் பாத்தா, ஏதோ தோள்ல கைபோட்டு பேசுற சேக்காளி மாதிரி சொல்வான், இவரு என்னடான்னா நம்மள மிரட்டுற மாதிரி பேசுறாரு என்று நினைத்துக் கொண்டான்.  கேன் தூக்க வந்தவன், கிரைண்டரில் மாவு அள்ளிக் கொண்டிருப்பவனைப் பார்த்து என்னலே கூப்பிட்ட? என்றான். மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், இவன் பக்கம் கையக்காட்டி, பால் கேனைத் தூக்கிட்டு வந்திரு! என்றான். கையை ஆட்டி ஆட்டிப்பேசியதில் மாவு புள்ளி புள்ளியாய் கீழே விழுந்தது.  வந்தவன் சடைச்சுக்கிட்டே இவனைப் பார்த்து, எங்க? என்று கண்ணாலேயே கேட்டான். ரோட்டின் முன்னாடி நின்ற வண்டியைக் காட்டினான். எடுத்து உள்ளே வைத்தவுடன், சன்முக அண்ணாச்சியப் பாக்கணும் என்றான், கமிஷன் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையுடன்.


வந்தவர், என்னலே, சோலி முடிஞ்சிட்டா? கிளம்பும்! என்று சொல்லிவிட்டு திரும்பவும் உள்ளே போய்விட்டார். இவனுக்கு ஏனோ அந்த ஆள் இவனை அவமானப்படுத்தியது போல இருந்தது. மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், எதற்கோ சிரித்தான், தன்னைத் தான் கிண்டல் பண்ணுகிறானோ என்று தோன்றியது. ஒன்றுமே சொல்லாமல் வெளியே வந்துவிட்டான். திரும்பவும் வண்டியைத் தள்ளிக் கொண்டு அம்பீஸ் கபே போகலாம், அங்கேயாவது ஏதாவது தேறுதா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே வண்டியை மிதித்தான்.

அங்கே ராமனாதன் தான் சரக்கு மாஸ்டர், பால் பண்ணைக்கு வந்திருக்கும் போது இவனும் பார்த்தது உண்டு.  நல்லா சிரிச்ச முகம், அணுசரனையா பேசுவார். அங்கு இவனை பாலை இறக்கி வைத்தான், வந்தவர், நீங்க எதுக்கு தம்பி இதெல்லாம் தூக்குறீங்க? எப்படி இருக்கீங்க தம்பி? காப்பி ஏதாவது சாப்பிடுறீயளா? என்று சொன்னதோடு நிற்காமல், சமையக்கட்டுக்குள் நுழைந்து ஒரு காப்பியை எடுத்துக் கொண்டு வந்தார்.  பில்டர் காப்பி போல நல்ல மணமாய் இருந்தது, ஆனா காப்பி எதுக்கு இப்போ என்று தோன்றியது.  ஒவ்வொரு கேனையும் மூடியைத் திறந்து பார்த்தவர்.  என்னவோ நினைத்துக் கொண்டு தலையை ஆட்டினார்.  இவன் காப்பியை உறிந்து கொண்டே அவரைப் பார்த்தபடி நின்றான். சரி தம்பி நான் வாரேன், ஜோலி கிடக்கு என்றார்.  அண்ணாச்சி... என்று இழுத்தான்.  இந்தா வச்சுக்கோ என்று கையில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

இன்னைக்கு பொழப்பு இப்படி ஆச்சே? கேவலப்பட்டு போயாச்சே? என்று தலையைத் தொங்கப்போட்டபடி வீடு வந்து சேர்ந்தான். அப்போது தான் ஞாபகம் வந்தது வெள்ளாட்டங்குட்டிகள பிடிக்காம வந்துட்டமே? என்று.  வாசலோரம் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான்.  வாசலில் கட்டியிருந்த அகத்திக் கீரைக்கட்டுகளைப் பார்த்தான். மண்டையடியா இருக்கு கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரீயா? என்றான்.  இன்னைக்கு கறவை இல்லை புள்ள! கிருஷ்ணவிலாஸ் ஹோட்டல்,  பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குல அங்கயும், அம்பீஸ் கபே லயும் போய் பால் கொடுத்துட்டு வர்றேன் என்று சொல்லிக் கொண்டே, வாசலுக்கு முன்னால் தெரியும் சக்கரத்தைக் காட்டினான்.  பாலுக்கு பொய்க் கணக்கக் கொடுத்துட்டு, கமிஷன் அடிக்கிறான் சேதுராமன், ஓட்டல் சரக்கு மாஸ்டர்களோட சேர்ந்துக்கிட்டு! என்று மிளகியிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் அழகர்.  அவனுக்கு அதைச் சொல்லும்போது ஏனோ ஒரு மாதிரியான நிம்மதி இருந்தது போலத்தோன்றியது.

Thursday, March 17, 2011

புனல்பெருவழி...


செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள்.  செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார், மாப்ள, மாப்ள என்று வாய் நிறைய அழைத்திருக்கிறார் நிறைய சமயங்களில். ஆனால் அவரிருக்கும் நிலையில் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.  செல்வியின் மகளுக்கு என்னைத் தெரியாது, உறவுமுறை சொன்னால், ஓ! என்று கேட்டுக்கொள்ளலாம். என்ன செய்வது என்று தெரியாமல், வரும்போது முக்கில் பார்த்த டீக்கடை ஞாபகம் வந்தது, ஒரு டீயும், சிகரெட்டும், சில நிமடங்களை சாம்பலாய் உதிர்க்கும் என்று தோன்றியதால், அவளிடம் சொல்லிவிட்டு நகர முற்பட்டேன்.

செல்வியின் மகள், அம்மா வந்தா என்ன சொல்லணும் அண்ணா? என்றாள். அண்ணனா? என்று சிரித்துக் கொண்டேன்.  நானே வந்து சொல்லிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் அங்கிருந்து.  டீயைச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். அது என்னவோ எந்த டீக்கடைக்கு போனாலும், காபி சாப்பிட மனம் வருவதில்லை. டீதான் எப்போதும், டீ மற்ற நேரங்களில் குடிக்கவில்லை என்றாலும்.  டீயும் சிகரெட்டும் பிரிக்க முடியாத விஷயமாகி விடுகிறது. 

கிங்க்ஸ் இல்லேண்ணா, பில்டர் தரவா என்றான் கடைக்காரன். அவனுக்கும் அண்ணா நான். நான் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தேன், சிகரெட்டை நீட்டினான். அனிச்சையாய் கை நீண்டு சிகரெட்டை வாங்கிக் கொண்டது. பற்றவைக்க தொங்கிய கொச்சைக்கயிற்றின் முனையில் கனன்று கொண்டிருந்த நெருப்பை இழுத்து, சிகரெட்டின் முனைகளை பொசுக்கினேன்.  பற்றி இழுத்துக் கொண்டிருக்கும் போதே டீயும் வந்தது.

செல்வி என்னுடைய சித்தியின் பெண், என்னைவிட இரண்டு வயது பெரியவள்.  மூன்றும் பெண்களாய்ப் போன வீட்டில், ஆண்பிள்ளை நான் செல்லப்பிள்ளை ஆனேன். செல்வியின் மீது ப்ரியம் வேர்பிடிக்க மற்றுமொரு காரணம் செல்வியின் தோழிகள்.  சாய்ராபானுவும், மீனாவும் என்னைக் கொண்டாடுவது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பத்தாவது படித்து முடித்ததும், செல்வியை பள்ளிக்கூடம் போகவிடாமல் நிறுத்தி விட்டார்கள். செல்வியின் அப்பா, வயித்து வலிக்காரர், தங்க நகை வேலை பார்ப்பவர், வளையல் மட்டுமே செய்வார், அதுவும் கல்வைச்ச வளையல். யாரு இப்போது அதைப் போடுகிறார்கள்? வேலை ரொம்ப சுமார் என்பதால், அட்டையில் லாட்டரி சீட்டு வைத்துக் கொண்டு மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப் பிராகாரங்களில் விற்றுக் கொண்டு இருப்பார்.

செல்விக்கு அடுத்து, கமலாவும், ராணியும் அவர்கள் இன்னும் படித்துக் கொண்டிருந்தார்கள், கமலா பத்தாவது வர குறைந்தது இரண்டு வருடம் இருந்தது அப்போது. கமலா நல்லாவே படிப்பாள், எல்லோருமே நீச்சத்தொட்டி ஸ்கூலில் தான் படித்தார்கள் அப்போது. செல்வி படிப்பை நிறுத்தியதும் தான், நான் சித்தி வீட்டுக்கு அதிகம் போக ஆரம்பித்தேன். செல்வி அழகாய் இருப்பாள், அப்போது.  ராணி, ராணிமுத்து, மாலைமதி என்று அவளின் பொழுதுகளில் காதலும், துரோகமும், களவும் மலிந்திருந்தன.  எல்லோரையும் போல அவளுக்கும் ராஜகுமார கனவுகள் இருந்தன என்பதில் சந்தேகம் இல்லாமல் இருந்தது. அவளின் செருகிய கண்களும், சுழித்த சிரிப்பும் அதற்கு கட்டியம்.

புதிய வார்ப்புகள் பாக்யராஜ், நிறம் மாறாத பூக்கள் சுதாகர் என்று பேசிப் பேசி காதலில் கொப்பளித்தாள் செல்வி. செல்வி மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், படித்து என்னிடம் விளக்கங்கள் சொல்வாள்.  மு.மேத்தா தான் உலகின் சிறந்த கவிஞன் என்று நம்பினாள். அவளுக்கு சுஜாதாவை அறவே பிடிக்காது. இந்துமதியும், சிவசங்கரியும், லக்‌ஷ்மியும் அவளுக்கு பிடித்த எழுத்தாளர்கள்.

செல்விக்கு இன்னொரு பிடித்தமான விஷயம் என்னுடைய தூரத்து மாமன் பாஸ்கரன். செல்வியைப் பார்க்கவே அடிக்கடி வருவான். அவனிடம் அப்போது சுவேகா என்றொரு மொபட் இருந்தது. சுவேகா கொஞ்சம் பருத்த சைக்கிள் மாதிரி இருக்கும்.  வீட்டுக்கார கிழவி மாதிரி சத்தம் போடும், புகையும் விடும். பாஸ்கர் எப்போதும் செல்வி மாவாட்ட உட்கார்ந்திருக்கும் நேரம் தான் வருவான். சாய்ந்தும் சாயாத வெயிலில், வந்தவன் சித்தியிடம் அக்கா, அக்கா என்று பிரியம் வழிய பேசுவான். சொந்த தம்பியே சீந்துறதில்லே, இந்த பய பாரு எவ்வளவு பிரியமா இருக்கான் என்று மெச்சிக் கொள்வாள் சித்தி. இடையிடையே அவனிடம் செலவுக்கு கொஞ்சம் பணமும் வாங்கிக் கொள்வாள். 

செல்வி மாவாட்டும் போது, எதிரில் இருக்கும் மாடிப்படியில் உட்கார்ந்து கொள்வான் பாஸ்கரன். வெயில் ஒரு பிரமிடு போல நிழல் பரத்தியிருக்கும். அதில் உட்கார்ந்து கொண்டு, சுவரில்லாத சித்த்ரங்கள் படத்தைப் பற்றி பேசினான். மீனாட்சி டாக்கீஸீல் போன வாரம் பார்த்துவிட்ட வந்ததன் பிறகு அதைப்பற்றி அதிகம் பேசினான். சக்தி தியேட்டரில், கன்னி பருவத்திலே அவனிடம் கதை கேட்கும் போது, அவளுக்கு வெட்கம் வரும்.  வெட்கத்தில் குருனையாய் அள்ளுவாள் மாவை. உளுந்து அரைத்து பொங்கிய பின், மாவை அள்ளிப் போடும் போது ஒரு சத்தம் வருமே, “தொளப்என்று அதை திரும்ப திரும்ப செய்யச் சொல்லி சிரிப்பான்.  செல்விக்கு இவனின் வினோத ஆசைகள், ரசனைக்குரியதாய் இருக்கும்.

செல்வியின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே வர ஆரம்பித்தான் பாஸ்கரன்.  செல்வி அவனைப் பற்றி பேசும்போதெல்லாம், எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும்.  அவன் மொபட்டில் காத்தப் புடுங்கிவிடவேண்டும் என்று தோன்றும், ஆனால் ஒருபோதும் செய்யத் துணிந்ததில்லை. ஒரு கட்டத்துக்குமேல்  செல்வியிடம் பேச ஆரம்பித்தாலே, பாஸ்கரன் பற்றி மட்டுமே பேச ஆரம்பித்தாள்.  எனக்கு மிளகாய் அரைச்ச அம்மில வெறுமனே உட்கார்ந்த மாதிரி காந்தும்.

ஒருமுறை வயித்துவலிக்கார சித்தப்பாவிற்கு வலி அதிகமாகி, ஆஸ்பத்திரில சேக்குறமாதிரி ஆகிவிட்டது.  தர்மாஸ்பத்திரி தான் என்றாலும், போக்குவரத்துக்கும், சத்துள்ள ஆகாரத்திற்கும் கொஞ்சம் காசு தேவையாயிருந்தது.  தர்மாஸ்பத்திரில கொடுக்குற கோதுமை ரொட்டி ஒரு மாதிரி நாறுது என்று தொடவில்லையாம் அவர். பர்மாக்காரன் கடையில இடியாப்பம் வாங்கிக் கொடுங்க! வயித்துக்கு இதமா இருக்கும்என்று பக்கத்து பெட்ல படுத்துக்கிடந்த பாட்டி சொல்ல, கீழவாசல் வரை போகணும், காசு வேற வேணுமே என்று சித்திக்கு தோன்றியிருக்க வேண்டும்.  முதலில் அம்மாவிடம் காசு வாங்கிவா என்று நான் பார்க்க போயிருந்த போது சொன்னவள், பிள்ளைக எல்லாம் அங்க தான் சாப்பிடுதுங்க என்று தோன்ற, காசு வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

அப்போது தான் அவளுக்கு பாஸ்கரன்கிட்ட கேட்டுப்பாக்கலாமே என்று யோசனை வந்தது. அவன் சாயங்காலம் வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தாள் போல.  மதியம் சாப்பாடு வாங்கிவர எங்க வீட்டுக்கு வந்தாள்.  அம்மா அவளுக்கு சாப்பாடு போட்டுவிட்டு, எப்படிறீ இருக்காரு உங்க வீட்டுக்காரரு? என்று கேட்டாள்.  நீ  தர்மாஸ்பத்திரிக்கு வந்து பாப்பியா, உனக்கு கீரிடம் எறங்கிடாது? என்று முணுமுணுத்தபடியே சாப்பிட்டாள். 

கைப்பிள்ளைய வச்சுக்கிட்டு நான் எப்படிறீ வருவேன்? புத்தியில்லாம பேசுற! உன் வீட்டுக்காரன் கொழுப்பெடுத்துப்போய் விஜயா மெஸ்ல அயிர மீன் கொழம்பு சாப்பிட்டா, வவுத்து வலி வராம என்ன செய்யும்? அதுவும் ஜேபி கூட சேர்ந்து! அதான் வயித்துக்கு எதுவுமே ஒத்துக்காம, பயத்தப்பயிறா சாப்பிடுற? இந்த லட்சணத்துல எதுக்கு அயிர மீன் குழம்பு வளைச்சு, வளைச்சு திங்கணும்? அப்படி என்ன நாக்கு கேக்குது, இழுத்து வச்சு அறுக்க மாட்டாம? என்று சொல்லிவிட்டு சித்தியின் மூஞ்சியைப் பார்த்தாள் அம்மா. சித்தியின் முகம் போன போக்கே ஒருமாதிரி இருந்தது. ஏதோ நடக்கப்போவது உறுதியாய் தெரிந்தது.

சித்திக்கு அம்மா, அவள் புருஷன் பற்றி சொன்னது பிடிக்கவில்லை போல. அந்தமாட்டுல நிப்பாட்டு, நீ எங்களுக்கு கஞ்சி ஊத்தறதும் போதும், நாங்க வாரிக்கட்டிக்கிட்டதும் போதும் என்று சாப்பிட்டவரை வைத்துவிட்டு, பிள்ளைகளயும் வரச்சொல்லிவிட்டு கிளம்பினாள். செல்வி மட்டும் ஏம்மா உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? பெரியம்மா நமக்கு எவ்வளவு செய்யுது? என்றாள். நீ பொத்து எனக்குத்தெரியும்! என்று மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.  நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் சித்திக்கு கோபம் குறையலை.

சித்தி எங்கள் வீட்டுக்கு வருவதற்கான மிகப்பெரிய காரணம் அப்பா தான். அப்பா முதலில் கட்ட ஆசைப்பட்டது சித்தியைத்தான்.  ஆனால், அம்மாவின் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அவசர அவசரமாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும், அம்மாவுக்கும். ஆனால் அம்மா அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாள், அப்பாவுக்கும் அம்மா மேல் அலாதியான பிரியம் வளர்ந்து விட்டது போகப்போக.  இந்த சண்டையைக் காரணமாய் வைத்து சித்தி அம்மாவிடமும், எங்களிடம் கூட பேசாமல் இருந்தாள்.  ஏதாவது விசேஷத்தில், செல்வியைப் பார்த்தால், பெரிம்மா! என்று ஆவலாய் அம்மாவிடம் ஓடி வருவாள்.

செல்வியின் கல்யாணத்திற்கு கூட சித்தி கூப்பிடலை.  ஆனா, சித்தி சம்பந்தம் பண்ணவர்கள் என்னோட அப்பாவழி சொந்தங்கிறதால, கல்யாணத்திற்குப் பிறகு திரும்பவும் ஒரு தொடர்பு வந்துவிட்டது. பாஸ்கரன் என்ன ஆனான் என்ற தகவல் தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வமாய் இருந்தது. கொஞ்ச நாள் செல்வி வீட்டோட போக்குவரத்து இருந்தது. செல்வி புருஷனும், தங்கவேலை தான் பார்த்தான், அவனோட தம்பியோட சேர்ந்து. நிறைய சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவான், அப்போதே.  

பார்க்க நல்லாயிருந்தாலும், ஒரு விஷயத்தை ரெண்டு தடவைக் கேட்பான், ஒண்ணும் புரியலையே என்று கடைசியாய்த் தலையைச் சொறிவான். அவன் வீட்டில் யாரும் அவனை மதிக்கிற மாதிரி தெரியவில்லை. அவங்க வீட்ல செல்விக்கு எவ்வளவு மரியாதை இருக்கும் என்று நினைக்கும் போதே எனக்கு கவலையாய் இருந்தது. செல்வி மாமியார் வீட்ல தான் இருந்தாள், தம்பி, அவன் குடும்பம் என்று எல்லாம் ஒன்றாகத் தானிருந்தார்கள். செல்வியின் புருஷனுடைய தம்பிக்கு முன்னாடியே திருமணமாகி ஒரு குழந்தை வேறு இருந்தது. அப்பவாவது யோசித்திருக்க வேண்டும், ஏந்தம்பிக்கு முதல்ல கல்யாணம் செஞ்சாங்கண்ணு!

செல்வியின் புருஷனுக்கு கல்யாணம் ஆகும்போது, முப்பத்தி நாலு என்று யாரோ சொன்னார்கள்.  செல்விக்கு பதினெட்டோ, பத்தொம்பதோ தான். சித்திக்கு வேறு வழி தெரிந்திருக்காது, சித்தப்பா இன்னும் வயித்தப் பிடிச்சுக்கிட்டு தான் இருக்காரு என்று செல்வி சொன்னாள் ஒரு முறை. சித்தியை நினைத்தால் எனக்கு பரிதாபமாய் இருந்தது.

அதன் பிறகு நாங்க எல்லோரும் என் அப்பாவின் பணிமாற்றம் காரணமாக ஸ்ரீரங்கம் போய்விட்டோம்.  அதன்பிறகு முற்றாய் தொடர்பு விட்டுப்போனது. படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தே இப்போது  பத்து வருஷம் ஆகிவிட்டது. கல்யாணமாகி பெங்களூரில் செட்டிலாயாச்சு. என்னுடைய அலுவல் காரணமா கோயம்புத்தூர் வந்த எனக்கு, இன்னொரு சித்தி மகன் தான் சொன்னான், செல்வி இங்க தான் கோயம்புத்தூர் கருப்பக்கவுண்டர் வீதில இருக்கான்னு.  கருப்பக்கவுண்டர் வீதி, காந்தி பார்க் போனா பக்கம் என்று ஞாபகம் இருந்தது.

செல்வம் சொன்னபடியே சரியாக கண்டு பிடிக்கமுடிந்தது. அவன் வழி சொன்னதும் வீட்டைப் பற்றிய விவரிப்பும் எதிரில் இருக்கும், கரிக்கடையும் போதுமானதாய் இருந்தது எனக்கு வீட்டை கண்டுபிடிக்க.  வந்து பார்த்தால், இவளைக் காணோம், ஏதோ ஒரு சூடக்கம்பெனில தான் வேலை பார்க்குறதா சொல்லியிருந்தான் செல்வம். செல்வியோட மககிட்ட கேட்டாத்தெரியும், சரி அவளை கம்பெனில போயி பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

செல்வியின் மகளைக் காணோம் முன்பக்கம்.  அப்போது அந்த வீட்டை கவனித்தேன். முன் வராந்தாவிலேயே ஒரு கட்டில் கிடந்தது. சுருங்கிக் கிடந்த ஒரு விரிப்பும், வகையின்றி கிடந்த தலைகாணி, ஒரு துண்டு அப்புறம் செல்வியின் புருஷன். எங்கோ பார்த்தபடி இருந்தான், நான் மாமா என்று கூப்பிட, யாரு என்று வந்தவன்.  என்னை தெரிந்துகொண்டது போல ஒரு பத்து ரூபா கொடேன் என்றான். என் பையில் பத்து ரூபாயே இல்லை, அம்பதைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவன், கீர்த்தனா என்று உள்ளே பார்த்து கத்திவிட்டு, வேகமாக வெளியே ஓடினான்.  எனக்கு அது வித்யாசமாய் இருந்தது.

கீர்த்தனா, செல்வியின் மகள் வந்தாள் வெளியே.  என்னண்ணா? என்றாள்.  உங்க அம்மா வேலை பாக்குற கம்பெனி எங்க இருக்கு என்றேன்.  அது தெலுங்கு வீதில இருக்குண்ணா, ஆனா அம்மா இப்போ சாப்பாட்டுக்கு வந்திடுவாங்க! நீங்க யாருண்ணா என்றாள்.  ரொம்பவும் ஒல்லியாய் இருந்தாள், மூங்கிலின் தப்பைக்குச்சி போல தட்டையான கைகள், ரெண்டு ரப்பர் வளையல்கள், கம்மலில்லாமல் குச்சி சொருகிய காது மடல்கள், கலைந்த தலைமுடி, பழைய சல்வாரில் பாவமாய் இருந்தாள்.  அழுகை வருவது மாதிரி இருந்தது. அவளிடம் நான் தான் உன் அம்மாவோட பெரியம்மவோட பையன் என்று முடிப்பதற்குள், சீனு மாமா என்று கட்டிக் கொண்டாள். எனக்கு இப்போது அழுகை உத்திரவாதமாய் வந்தது. 

உட்காருங்க மாமா, அப்பா எங்க போயிட்டாரு தெரியலையே! டீ போடவா மாமா? என்று அவள் அம்மாவைப் போலவே பரபரத்தாள். கட்டிலில் உட்கார்ந்தேன். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டாள்.  என்னென்ன சொன்னாளோ செல்வி என்று நினைத்துக் கொண்டேன்.  பத்தாவது படிக்கிறாள், ராஜவீதில பெண்கள் மாநகராட்சிப் பள்ளியில். நல்லாப் படிக்கிறாளாம். கல்லூரி போகும் கனவுகளைப் பற்றி பேசினாள். பாலில்லாத டீ ஒன்று கொடுத்தாள், சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய அம்மா! செல்வி வந்து சேர்ந்தாள். என்னைப் பார்த்ததும் ஓவென்று அழுதாள். எனக்கும் அழுகை வந்தது, பேசாமல் நின்றேன். கையில் வைத்திருக்கிறதை வாங்கிக் கொண்டு, ஏண்டீ கருப்பு டீ கொடுத்தே என்று சொல்லிவிட்டு கடைக்கு ஓடிப்போய் ஏதோ ஒரு குளிர்பானம் கொண்டு வந்தாள்.

உங்க அப்பா எங்கடீ? என்று கேட்டாள். அவளுக்கு தெரியாததால், எனக்குத் தெரியலைம்மா, மாமா முதல்ல வந்துட்டு போனபிறகு நான் உள்ள போயிட்டேன். ரெண்டாவது தடவை மாமா வரும்போது வெளியே வந்தேன் அப்பாவை காணோம் என்றாள்.  நான் செல்வியிடம், காசு கேட்டாரு கொஞ்சம் கொடுத்தேன், வாங்கிட்டு எங்கேயோ அவசரமா ஓடிப்போயிட்டார் என்றேன். போயிட்டானா? என்று கொஞ்சம் கெட்ட வார்த்தையில் திட்டினாள் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது அவள் அப்படி பேசியது.

இந்த மனுஷனுக்கு புத்தி பேதலிச்சு போச்சுடா, என்னென்னமோ பேசுறாருடா அது பத்தாதுன்னு தெருவில போறவன வர்றவண்ட்ட எல்லாம் போய் காசு கேக்குறாரு? போனமாசம் திடீர்னு ஆளைக்காணோம் ஒரு வாரமிருக்கும், போலீஸ்ல எல்லாம் தகவல் கொடுத்தாச்சு. ஒரு பிரயோஜனம் இல்லை, யாரோ வந்து சொல்றாங்க, மருதமலைல உட்கார்ந்து பிச்சை எடுத்திக்கிட்டு இருக்காரு. எனக்கு ஈரக்குலையே அறுந்து போச்சு! 

“வேலைக்குண்ணு போயி பத்துவருஷம் இருக்கும்.  இவ இத்துனூண்டு பிள்ளை அப்போ, இடைவாருப் பையில வச்சிருந்த உருப்படிய எல்லாம எவனோ உருவிட்டு விட்டுட்டானுங்க, அதுல இருந்து அவந்தம்பி பட்டறையில உட்காரக்கூடாதுன்னு சொல்லிட்டான். அன்னைல இருந்து தான் சூடக்கம்பெனில வேலை பார்க்குறேன்.  ரெண்டு வேளைக்கும் குறையாம கஞ்சி ஊத்துறேன், வாடகை கொடுக்குறேன். இவளைப் படிக்க வைக்கிறேன், அதும் பத்தாவதோடு நிறுத்திடப்போறேன். ஏதோ என் மாமியாரு அப்பப்போ வந்து உதவி பண்றாங்க, ஆனா இந்த மாதிரி தெருவெல்லாம் போய் கை நீட்டறவற என்ன பண்றது சொல்லு! என்று என்னைப் பார்த்தாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பேசிக் கொண்டிருக்கும் போதே வந்தான் செல்வியின் புருஷன். என்னைப் பார்த்து தம்பி யாரு? என்று கண்ணை சுருக்கிக் கேட்டான். அம்மா அப்பா வர்றாரு என்று கீர்த்தனா, சமையக்கட்டில் இருந்த செல்வியிடம் சொன்னாள். வேகமாக வெளியே வந்து உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றாள், செல்வி.  யாரும் கவனிப்பதற்கு முன்பாக கையில் வைத்திருந்த விறகுக்குச்சியால், அவள் புருஷனை சாத்து சாத்தென்று சாத்திவிட்டு, தலையைப் பிடித்தபடி சுவற்றின் மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

Tuesday, March 15, 2011

பலுகே பங்காரமாயனா...


வக்ரபேதங்கள் துளைத்த இரவின் சல்லடைக்கண்களென பிரதிபலிக்கும் நீர்த்துளிகள் நில்லாது ஆடும் தாமரை இலைகளில் பளிங்கு தளும்புகள் வைரமணி கோர்த்த தடாகங்கள் கொப்பளித்த பூக்களின் மகரந்தப்பொடிகளை விரவிக் கடத்தும் கால்களின் தடங்களில் முளைத்த அந்நியச் சுவடுகளில் அப்பியிருக்கும் வர்ணங்கள் பிழிந்து கரைத்து கிறுக்கிய திரைச்சீலை ஓவியங்களின்  நிலைப்பாடற்ற குழப்ப ரேகைகள் படர்ந்து பரத்தும் முகங்களில் தீர்க்கம் குறைந்த ஆயுள் நிஷாதத்தில் நில்லாமல் பறக்கும் பறவையின் இறகுகளை ஒத்து, வானத்தில் வரையும் அரூப ஒலிகள் மிதக்கும் வெளியை கடந்து நுழைந்ததில் அந்தகாரமென ப்ரதிஷ்டையாகும் குறி தொழுதவனை வரக்கேட்டவன் பிறந்த நெற்களஞ்சிய பூமியின் வெடிப்பில் முளைவிட்ட விழுதுகள் தாங்கிய விருட்சங்கள் நிறுத்தும் பறவைகளின் சுருதிபிசகா கீச்சுக்களில், துண்டு துண்டாகும் இசையின் நரம்புகள் இழுத்துக் கட்டிய வாத்தியங்களின் குரல்வளைகள், பழகும் காலப்புழுதி அப்பிய கண்ணாடி மீட்டுத்தரும் ஒளி பட்டுத் துலங்கும் பிம்பங்களில் அம்மையையும், அப்பனையும், மன்னனையும் தொழும் கரங்கள், பற்றியிருந்த சாகித்யங்களின் வரிசை மாறிய ஸ்வரங்கள் பேரண்டம் சிதற இடம் மாறியது கால் மாற்றி ஆடியவனின் லயத்திற்கேற்ப.

நடக்கும்போது குடை, உட்கார இருக்கை, நின்றால் செருப்பு, படுக்கையில் தெப்பம், இரவில் போர்வை, தலையணை, இரவின் முனையில் வாயின் முன்குதப்பும் ரத்தின ஒளி என்று சயனத்தின் விழுதுகளில் விசுப்பலகையென ஆட்டும் வாசுகியின் மினுக்கும் தோலின் வெளிச்சம் திறந்த பாற்கடல் அலைகள் நெருக்கி  அழைத்த கரிக்குரல் அழுத்தி திறந்த நாதங்கியினுள்ளே பேரருள் கடற்படுக்கை மேல் சயனித்தவனின் வாயமுதம் தெறித்து விழுந்த கிண்ணங்கள் நிரம்பி வழியும் சங்கம் உற்பவிக்கும் இசை ஆனந்தபைரவியை ஒத்திருக்கிறது.  கற்பகவிருட்சம் வளர்த்த கருத்தகுழல்காரியின் பொற்பதங்களில் இட்ட மருதாணியின் பிசுக்கு ஒட்டும் விரல்கள் மீட்ட முழவும், துந்துபியும் அதிரும் ஒலிப்பிரவாகம் நணைக்கும் பூமியில் கரும்பு விளையும் நற்சாற்றுக்களி, சுமக்கும் ஜடையும், முடியும், காஷாயமும் வேஷமென அழுது, தொழுத செஞ்சாந்து குழைத்து பூசியவளின் கண்களின் கசிந்த மையின் தெள்ளிய ஊற்றுக்கண் ஜலதாரைகளாய் குமிழியிடும் அந்தரகாந்தாரமும், காகளி நிஷாதமும், சதுஸ்ருதி தைவதமும். முக்காலத்திலும் ஓடும் நித்யகன்னியாய் ஆனந்தபைரவி ஒரு வக்ரபிரயோக ராகம்.  தெத்துப்பல் சிரிப்பென காற்றுடன் கலந்த இசை, கதிர மரங்களை, மூங்கில் மரங்களை, ஒதிய மரங்களை ரணமாக்கி சுககளிம்பு பூசும்.

அந்நிய ஸ்வரங்கள் ஊறும் பாஷாங்கம், 20வது அல்லது 22வது மேளகர்த்தா ராகங்களான நடபைரவி அல்லது கரகரப்பிரியாவில் ஜன்யமான ஒரு சம்பூர்ணராகம்.  ரீதிகௌளையின் சாயலில் இருக்கும் சில இடங்கள், உருமாறி பாவனை காட்டும் ஆனந்தபைரவி.  உச்சரிக்கும் போதே வந்து தொற்றிக் கொள்ளும் இதன் தண்மை, ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் ப்ரியராகம். எத்தனையோ கிருதிகள், ஸ்வரஜதிகள் என்று ஆனந்தபைரவியில் நெய்தவை நிறைய.  தியாகராஜர் அதிகம் ஆனந்தபைரவியை தொடவில்லை, இரண்டு, மூன்று கிருதிகள் இருக்கலாம். ஆனால் ஷ்யாமா சாஸ்திரிகளும், முத்துசாமி தீட்சிதரும் ஆனந்தபைரவியில் களிநடனம் ஆடியிருக்கிறார்கள்.

மிகக்குறைந்த இசையமைப்பாளர்கள் மாத்திரமே இதை சினிமாவிலும் பயன்படுத்தினார்கள், அத்தனை பரவலான ராகம் இல்லை இது. ஆனால் அதன் காரண்ம் தான் தெரியவில்லை.  கே.வி.மஹாதேவன், விஸ்வநாதன், இளையராஜா, தேவா (காப்பி அடித்த மூலம் மணிசித்திரதாழ்..ரவீந்திரன் பழந்தமிழ் பாட்டிழையும்), ரவீந்திரன், ராஜேஸ்வரராவ், ரஹ்மான் என்று மிகக்குறைந்த பேர்களே ஆனந்தபைரவியை கையாண்டிருக்கிறார்கள்.  எனக்கு பிடித்தபாடல் இது, பத்ராசலம் ராமதாசரின் கீர்த்தனை, தெலுங்கில் சங்கராபரணம் படத்தில் வரும் இந்தப்பாடலைப் பாடியது வாணிஜெயராம்.  அருமையான குரலாளுமை உள்ள ஒரு பாடகர், ஒருமுறை அவரை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் ஒரு கடையில் பார்த்த போது கொஞ்சம் பேசினார் இசைபற்றி.  இத்தனை பேசுவாரா என்பதே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.  பேசுவதற்கும், பாடுவதற்குமான குரலில் வார்த்தை உச்சரிப்பில் எத்தனை வித்யாசம்.   

“பலுகே பங்காரமாயனா..., கோதண்டபானி  ராமனை பேச அழைக்கும் பத்ராசலம் ராமதாசர் கூட இத்தனை மயக்கத்துடன் பக்தியுடன் அழைத்திருக்க மாட்டார்.  பாடல் முடிந்த பிறகு ராமன் மணிகணக்காய் பேசியிருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை.  அற்புதமான பாடல் இது. ராமன் மீது ஏன் வாக்கேயக்காரர்கள் இத்தனைப் பக்தியாய், காதலாய் இருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.  ராமா... அட்சரசுத்தமாக ஸ்வரவிகுதிகள் மீது உட்காருவது காரணமாய் இருக்கலாம். எதுவாய் இருந்தாலும் “இறைவனை வழிபடவே முன்னோர்கள் இசையே சிறந்ததென கண்டார்கள்என்பது உண்மையான வாக்கு.  ஒருவிதமான நெறிபடுத்தப்பட்ட மயக்கம் தேவைப்பட பற்றிக் கொண்டார்கள் எல்லோரும் பற்றற்றான் பற்றையும், இசையையும். 

Thursday, March 03, 2011

வாய்ப்பச் செயல்...

சுந்தரி அம்மாவிற்கு இடுப்பெல்லாம் குடைந்தது. கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொண்டது போல ஒரு வலி.  நேற்று வேலை அதிகமாகி விட்டது, தையலுக்கு உடம்புக்கு முடியாமல் போனதால், நேற்று சுட்ட முறுக்கையும், அதிரசத்தையும், சுந்தரி அம்மாவே எடுத்துக் கொண்டு போய் விற்க வேண்டியிருந்தது.  அவர் இருக்கும் போது, சீடையும், தட்டையும் சேர்த்துப் போட முடிந்தது, சைக்கிளில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து விட்டு வருவார்.  அவர் இறந்தபிறகு வயதுக்கு வந்த பிள்ளையைத் தான் அணுப்ப வேண்டியிருக்கிறது. 

என்னன்னே தெரியவில்லை, ரெண்டு நாளாக தையலுக்கு கடுமையான காய்ச்சலும், தடுமமும் பிடித்துக் கொண்டு, அடித்துப் போட்ட மாதிரி கிடக்கிறாள். ரவைக்கெல்லாம் தூங்காம சொரிஞ்சிகிட்டு கிடக்கா சில சமயம். முகமெல்லாம் வாடிப்போய் இருந்தது. அதோடு முந்தாநாள், அவளே மீனாட்சி அம்மன் கோயில் ஆடிவீதியில் முறுக்கும் அதிரசமும் எடுத்துப் போய் விற்று விட்டு வந்தாள்.  முறுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாய் விற்றது, அதிரசம் அவ்வளவாக விற்கவில்லை. அதிரசம் விற்கவில்லை என்றாலும் பாதகமில்லை, ஒரு வாரத்துப்புறம் மாவு இடிச்சா போதும் என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி அம்மா.


முன்பெல்லாம் தெருவே மணப்பதாக எல்லோரும் சொல்வதுண்டு. இவர்கள் இப்போது இருக்கும் இந்த காம்பவுண்ட் இவர்களுக்கு சொந்தமாக இருந்தது. கிணற்றடிக்கு மேற்கே மண்ணிலேயே பெரிய அடுப்பு போட்டு, விதவிதமாய் பலகாரம் செய்யமுடிந்தது.  கல்யாணம், வளைகாப்பு என்று விசேஷங்களுக்கென தனியாக ஆர்டர் பிடித்து வருவார். மூன்று, நான்கு பேர் அப்போது அவர்களிடம் வேலை பார்த்து வந்தார்கள். தினமும் திருவிழா போல அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும்.  சுட்டுக்கொண்டே இருப்பது மாதிரியும் இருக்கும், அருவாகிக் கொண்டு இருப்பது மாதிரியும் இருக்கும்.  இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று தோன்றியது சுந்தரி அம்மாவிற்கு. 

பெரியவள் தில்லைக்கு கல்யாணம் முடிவானதும், தையல் அப்பாவை பிடிக்க முடியவில்லை.  நல்ல சம்பந்தம் என்று பெருமையாய் இருந்தார்.  தில்லையின் கல்யாணத்திற்கென்று பிரத்யேக சேமிப்பு இல்லையென்றாலும், கையில் இருந்ததையும், சுந்தரி அம்மாவின் நகைகளில் பெரும்பாலானவற்றையும் விற்று, பெருஞ்சீர் கொடுத்து கல்யாணம் செய்து வைத்தார், திருநெல்வேலி டவுனில் ஹோட்டல் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு. இதே போல வியாபாரமும், விருத்தியும் எப்போதும் இருக்கும் போது என்ன கவலை என்ற எண்ணம் அவருக்கு. ரொம்ப நல்ல மனுஷன், கெட்ட பழக்கம்னு ஏதுமில்லை, பொடி போடுறதத் தவிர. தில்லைக்கு கல்யாணம் ஆகி முதல் பொண்ணு பிறந்து, வருஷம் ஒண்ணு ஆகுறதுக்குள்ள, மஞ்சள் காமாலை வந்து பத்து நாளு கூட இருக்காது போயிச் சேர்ந்துட்டார்.

அவர் இறந்த பிறகு நிறைய நடந்துவிட்டது. முன் போல வியாபாரம் செய்ய ஆளில்லை.  கூலிக்கு ஆள்வைத்து பலகாரம் செய்ய முடியவில்லை. வேற வழியேதும் தோன்றாமல், வீட்டை விற்க முடிவு செய்தாள். 

தில்லை வீட்டில் இப்போது பழைய மாதிரி வசதியாக இல்லையென்றாலும், இவர்கள் போல கஷ்டப்படவில்லை.  கொடுத்து உதவமுடியாது தான், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள், மாமியார், மாமனார், தம்பி குடும்பம் எல்லாம் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த ஹோட்டல் தான் ஒரே வருமானம்.  குடும்பம் பெருத்த அளவு, வருமானம் பெருக்கவில்லை அவர்களுக்கு.  முன்னாடி இருந்த போக்குவரத்து இப்போது சுத்தமாய் இல்லை. அதுவும், சுந்தரி அம்மா ஆறு வீடுகள் இருக்கும் காம்ப்வுண்டை விற்ற போது, தன் பங்கு கேட்டு சண்டையிட்ட தில்லையிடம், அதோடு அறுந்துவிட்டது எல்லாம்.  வீட்டில் குடியிருந்த வீராச்சாமியே வாங்கிக் கொள்வதாய் சொல்ல, பெரிசா பேரம் பேச முடியலை.  தில்லையோட புருஷன் வந்து விற்றதில் பாதியை சரியா வாங்கிட்டு போயிட்டான்.

விற்ற பணத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச கடனை அடைத்த பிறகு, போஸ்டாபீஸில் போட்ட பணமும், பேங்கில் போட்ட மிச்ச பணமும் இவர்களின் துணையான துணை.  சொந்த வீடு வாடகை வீடாகிவிட்டது.  காம்பவுண்டிலேயே போட்டிருந்த மண் அடுப்புக்களை எடுக்க வேண்டும் என்று வீராச்சாமி சொல்லியதும் தட்டமுடியவில்லை. அதனால், வீட்டிற்குள்ளேயே அடுப்புகள் வைத்து, பலகாரம் செய்ய வேண்டியதாயிருந்தது.

சுந்தரி அம்மாவால் தனியாக இந்தத் தொழிலை நடத்த முடியவில்லை.  முழுக்க விட்டுவிடுவதாய் இருந்ததை, தையல் கொடுத்த தைரியத்தில், சின்ன அளவில் நடத்த முடிந்தது.  கையில் எடுத்துப் போய் விற்பதை விட, கடைகளுக்குப் போட்டால், நிரந்தர வருமானம் வர வாய்ப்பிருக்கிறது என்று தான் தோன்றியது. அதையும் செய்து பார்த்தாள்.  ஆர்டர் கொடுத்ததை விட குறைவாகவே எடுத்துக் கொண்டார்கள்.  அதுவும் சரக்கு போட்டுவிட்டு பணம் வர ஒரு மாதத்திற்கு மேலாய் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் பணமே வராது.  கல்யாணத்திற்கும், விசேஷங்களுக்கும் செய்ய முடியவில்லை. கூலியாட்கள் வேலைக்கு வரமாட்டார்கள், வந்தாலும் அவர்கள் போக்கிலேயே வேலை செய்வதால், தரமாய் செய்ய முடியவில்லை.

அதிரசமாவு வைச்சிருந்த சட்டியை நகர்த்தமுடியவில்லை.  தரையில் ஏதோ பாகு கொட்டிப் போச்சு போல, தரையோடு ஒட்டிக் கொண்டது. வேறு வழியில்லாமல், எழுந்து அசைத்து அசைத்து தூக்கினாள். அதிரசம் சரியாக விற்காததால், நேற்று சுட்டதே போதுமென்று நினைத்தாள்.  மாவுச்சட்டியின் மீது மெலிதான துணியைக் கட்டி, எரவானத்தில் இருந்து தொங்கு பலகை மீது வைத்தாள். தையல் குளிர் தாங்காம முனகுவதைப் பார்க்கையில முசு முசுன்னு அழுகையா வந்தது சுந்தரி அம்மாவிற்கு.  லேசுப்பட்ட குடும்பம் இல்ல, சுந்தரி அம்மாவினுடையது.  பாளையங்கோட்டையில் பெரிய வீடு, அவர்களுடையது, பெரிய திண்ணை வைத்து, அழிக்கம்பி போட்ட வீடு.  முன்னாடி பெரிய தோட்டம் போல எலுமிச்சையும், செவ்வரளியும் சேர்ந்து கிறங்கவைக்கிற மாதிரியான வீடு.  பரம்பரை பரம்பரையா சமையல் தொழில் செய்யிற குடும்பம்.  ஆறுமுகம்பிள்ளைன்னு சொன்னா தெரியாத ஆட்களே கிடையாது அப்போ.  தையலோட அப்பாவுக்கு வாக்கப்பட்டு மதுரை வந்தும் நல்லாதான் இருந்தார்கள், அவர் இருக்கிறவரை.

தையலு... மேலுக்குத் தான் முடியலையே அதோட, எதுக்கு போயி தண்ணி எடுக்கணும்? வாடக்காத்துல வெளிய போனது தான் வெனையே! இன்னைக்கு ஒரு பொழுது சுதாரனமா புழங்கிக்கிட்டா போகுது! என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.  அவளிடம் இருந்து பதிலே இல்லை. லேசான காய்ச்சல் மாதிரி தான் தெரியுது, ஆனாலும் இந்த முனக்கம் நிக்கலையே! கம்பவுண்டர்ட்டயாவது போனா தேவலை. 

தையலை லேசாக அசக்கி, தையலு! வாறியா? கம்பவுண்டர்கிட்ட போயிட்ட வரலாம்! அவரு ஒரு ஊசி போட்டா சரியாப்போயிடும்! என்று கேட்டாள். கேட்டவாறே இடுப்பில் சொருகியிருந்த சுருக்கப்பையில், இருந்த காசை எண்ணிப் பார்த்தாள். காசைத்தேடும், அங்காளம்மன் கோயில் திருநீறும், குங்குமப்பொட்டல்மும் கையில் அகப்பட்டது. அதை எடுத்தவள், பயபக்தியாய் மேலே பார்த்து கும்பிட்டு விட்டு, தன் தலையிலும் கொஞ்சம் போட்டுக் கொண்டு, தையலுக்கு பூசியும் விட்டாள். அங்காளம்மா, பரமேஸ்வரி தாயே, எம்புள்ளக்கு நல்ல தேக ஆரோக்கியத்த கொடு தாயீ என்று உடம்பெல்லாம் திருநீற்றை பூசி விட்டாள்.  இவள் மேலுக்கு சரியாயிட்டா, அவ பாத்துப்பா, நம்ம போக வேண்டியதிருக்காது என்று நினைத்துக் கொண்டாள். மொத்தமாய் எண்ணிப்பார்த்ததில் பனிரெண்டு ரூபாய் இருந்தது. போதும், அவரு ஆறு ரூபாய் தான் வாங்கிக்குவார் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

தையல் இன்னும் எழுந்தபாடாய் தெரியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்திருந்தது.  அழுதிருப்பாளோ? என்று நினைத்தாள்.  சுக்குத் தண்ணீ கொடுத்து பாக்கலாமா? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.  எருவாட்டிய எடுத்து நாலுபங்கா உடைத்து ஒன்றில் சீமத்தண்ணியக் கொஞ்சம் ஊத்தி பற்ற வைத்த பிறகு ரெண்டு கருவ மரக்குச்சிகளை மேலே வைத்தாள். கருவமரம் வெரசா எரியாது. பொகையாத் தள்ளியது.  அப்படியே விட்டு வெளியே வந்து தொட்டிப் பக்கத்துல இருந்த காய்ந்த பனைஓலைகளையும், கொட்டாங்குச்சியையும் எடுத்தாள். அடுப்பில் பனை ஓலையை ஒடித்துப் போட்டு, மேலே கொட்டாங்குச்சிகளை, உதாங்குளையால் உடைத்து உள்ளே போட்டாள். புசு புசுவென்று எரிந்தது அடுப்பு. புகை கொஞ்சம் குறைஞ்சா மாதிரி தெரிந்தது.

கருப்பட்டியும், சுக்கையும், கொத்தமல்லியையும் அம்மியில் வைத்து நகட்டிய பிறகு, கொதிக்கிற தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தாள். மணமாய் பெருகியது.  பால் இல்லை, கோமதிக்கு முப்பது ரூபாய்க்கு மேல பாக்கி, போக சங்கடமா இருந்தது.  கோமதி குடுக்கும்தான் ஆனாலும் வேண்டாம், காய்ச்சகாரிக்கு, பாலப்போட்டு சுக்கு காஃபி கொடுத்தா வாந்தி வந்துடப்போகுது என்று நினைத்துக்கொண்டாள்.  காஃபி கொதித்ததும், இறக்கி, இட்லிக் கொப்பரையில இருந்து துணிய எடுத்து வடிகட்டினாள்.  நுனி நாக்கில் டம்ளரை சாய்த்து, இனிப்பு சரியா இருக்கான்னு பார்த்ததும், மீண்டும் தையலை உசுப்பினாள். எழுந்திரிக்க முடியாமல் முனகிக் கொண்டே படுத்திருந்தவளைப் பார்க்க வேதனையாகவும், பயமாகவும் இருந்தது, சுந்தரி அம்மாவிற்கு.

ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போனா தேவலை. கம்பவுண்டர் நல்லா கைராசிக்காரரு, தில்லைய பெத்தப்போ, இவளுக்கு டைபாயிடு வந்த போது காப்பாற்றிய நன்றி பக்தியாய் போனது அவளுக்கு.  காமாலையில் புருஷன் இறந்த போதும் இவர் தானே பார்த்தார் என்பது மறந்துவிட்டது அவளுக்கு, வேற யாரு இவ்வள கம்மியா காசு வாங்குறா என்று கேட்டுக் கொள்வாள். கம்பவுண்டரிடம் போவது அவளுக்கு கோயிலுக்கு போயி வேண்டிக்கொள்வது போல ஒரு சடங்கு.  சுக்குத்தண்ணீ காப்பியை அவளை எழுப்பி புகட்டிவிட்டு, தானும் ஒரு மடக்கு குடித்துவிட்டு, ரிக்‌ஷா பிடித்து வர ஓடினாள். வீட்டுக்கார வீராச்சாமிக்கு சொந்தமாய் ஆட்டோ இருக்கு, அவசரத்துக்கு கேட்டாலும் தரமாட்டான்.

வேறு வழியில்லாமல், நாகரத்தினம் புருஷனப்போயி கூட்டிட்டு வந்து, அவன் ரிக்‌ஷால தூக்கிப் போட்டு ஓடினாள் பயத்தில்.  அந்த ஆசுபத்திரியை அடைந்த போது, கம்பவுண்டர் வந்திருக்கவில்லை.

தையல் வெடவெடவென நடுங்கிக்கொண்டே, கண்கள் செருகிக் கிடந்தாள்.  ஆசுபத்திரி படியேறும் போது சிரமப்பட்டுக் கொண்டே ஏறிவிட்டாள். இப்போது ஆசுபத்திரி பெஞ்சில், காலை தூக்கி வைத்துக் கொண்டு முகத்தை விட்டு முழுதாய் போர்த்தியிருந்தாள். ஆசுபத்திரியில், பெரிய பெரிய வெங்கடாசலபதி படங்கள் நிறைந்திருந்தது. சுப்ரபாதமோ என்னமோ பாடிக் கொண்டிருந்தது, பத்தி வாசனையும், தசாங்க வாசனையும் கலந்து பெருமாள் கோவிலுக்குள்ள போனது போல ஒரு பிரமிப்பு இருந்தது சுந்தரி அம்மாவிற்கு.  கம்பவுண்டர்கிட்ட வேலைப்பார்க்குற பொண்ணு தான் இருந்துச்சு. என்னம்மா காய்ச்சலா? என்று கேட்டுக்கொண்டே வந்தவள், தையலின் வாயத்தொறக்கச் சொன்னாள்.

அவளுக்கு ரெண்டு உதடுகளும் ஒட்டிக் கொண்டு இருப்பது போல சிரமபட்டு தான் வாயைத் திறந்தாள்.  நாக்கு வெள்ளையா இருந்தது. நாக்கின் அடியில் தர்மாமீட்டரைச் சொருகியவள்.  வாட்சை பார்த்துக் கொண்டாள்.  அந்த நிமிடத்தை வீனாக்க வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ? எத்தனை நாளா இருக்கு? என்ன சாப்பிட கொடுத்தீங்க? என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். இவ எதுக்கு இம்புட்டு கேள்வி கேக்கா? பெரிய டாக்டர் கணக்கா? என்று நினைத்துக் கொண்டாள். 

வந்து சேர்ந்தார் கம்பவுண்டர். கம்பவுண்டர் ஒரு வயர் கூடையும், சின்ன சாக்குப் பையும் கொண்டு வந்தார்.  வந்தவுடன், பைகளை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.  அவள் வாங்கி வைக்கும் போது, பாட்டில் கிளங் என்று சத்தம் வந்தது.  பெரியாஸ்பத்திரில இருந்து கொண்டு வாராரு போல, நல்ல மருந்தாத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

வந்தவர் காய்ச்சல் எவ்வளவு இருக்கு? என்று தையலின் கையை எடுத்துக் கொண்டு  நாடி பார்த்தார். கழுத்தில் போட்டிருந்த ஸ்டெத்தை எடுத்து நெஞ்சிலும், முதுகிலும் வைத்து, வழக்கம் போல இழுத்து மூச்சு விடச் சொன்னார். தையலால் இழுத்து மூச்சுவிடவே முடியலை. 

சரி மருந்து எழுதித் தரேன்! மூணு நாள்ல சரியாயிடும், இல்லேன்னா, திரும்பவும் வாங்க, என்னன்னு பார்க்கலாம்! என்று ஏதோ எழுதி மெடிக்கல் ஷாப்பில் வாங்கிக்கச் சொன்னார். மாத்திரை ஏதாவது நீங்களே சாப்பிட்டிங்களா? தையல் மெதுவாக இப்போது தான் பேசினாள்.

ஆமா சார், லேசா காய்ச்சலும், மண்டையடிமா இருந்துச்சு முந்தா நாள்! அதான், போன தடவை நீங்க கொடுத்த மாத்திரை இருந்துச்சு அத சாப்ப்ட்டேன் என்றாள்.  அத சாப்பிட்டதில இருந்து தான் ரொம்ப ஜாஸ்தியான மாதிரி இருக்கு!

என்ன மருந்து தெரியுமா? என்றார்.
ஒண்ணு வெள்ளை மாத்திரை, இன்னொன்னு டீயூப் மாத்திரை, மஞ்சளும், சிவப்புமா! இது பேசுவதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கியது.  சுந்தரி அம்மா, தையலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த முறை வேற மாத்திரை தர்றேன்! வெள்ளை மாத்திரையும், மஞ்ள் மாத்திரையுமாய் இருந்தது இந்த பொட்டலத்தில். மூணு வேளை சாப்பாடுக்கு அப்புறமா? என்று பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார்.  அவர் கொண்டு வந்த மருந்து பாட்டிலில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீரில் கலந்து கொடுக்கச் சொன்னார். 

நல்லா ரோஸ் கலரில், கிளாஸ் டம்ளரில் பாக்கவே அழகாய் இருந்தது.   தொடையிலும், அக்குளிலும் ரெண்டு நாளாய் படை மாதிரி வந்திருப்பதை தையலுக்கு சொல்ல சங்கடமாக இருந்தது. கண்களிலும் நமைச்சலும், சிவந்தும் இருந்தது, வாய் முழுக்க புண்ணா இருப்பது பற்றியும், சாப்பாடு சாப்பிட முடியாததையும் தையல் சொல்லவில்லை. இவரு முதல்ல கொடுத்த மருந்து சாப்பிட்ட பிறகு தான் ஆச்சு, என்று சொன்னால், கம்பவுண்டர் சத்தம் போடுவாரோ என்று பேசாமல் விட்டு விட்டாள். வீட்டுக்கு வருவதற்குள் உடம்பெல்லாம்  நமச்சல் எடுக்க ஆரம்பித்து விட்டது.  மேல்தோல் (ம்யூகஸ்) சொரியும் போது நகத்தில் உரிந்து கொண்டு வருவது அவளுக்கு தெரியவில்லை.

கம்பவுண்டருக்கும் ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.