பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது சடசடவென மழை வந்ததை நினைக்கும் போது ராதாவிற்கு சந்தோஷமாய் இருந்தது. மழை அவளுக்காகவே காத்திருந்து பெய்கிற மாதிரி தோன்றியது, கைபிடித்து வீடு வரை விட்டபிறகு பெய்ய ஆரம்பித்தது மாதிரியும் தோன்றியது. நெற்றியில் வழிந்த ஒற்றைத் துளி வழிந்து கண் இமையில் நின்று சொட்டியது. பைக்கட்டை, உள்ளறையில் இருக்கும் மேசை மீது வைத்து விட்டு, துப்பட்டாவை நீவி சரிசெய்து கொண்டு மழையைப் பார்க்கலாம் என்று தோன்றியவுடன், அடுப்படியில் கிடந்த முக்காலியை எடுத்துக்கொண்டு ஜன்னலுக்கு நேராக போட்டுக் கொண்டாள். பெரிய மழையாய் இல்லையென்றாலும், பெரிய பெரிய துளிகள் நிமிடத்தில் நனைத்து விட்டிருக்கும். நனையலாம் தான், ஆனால் இந்த யூனிபார்ம் சல்வாரில் நனைவது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
அவளுக்கு வத்சலாவின் ஞாபகம் வந்தது, இவளுக்குப் பின்னால் தான் அவளும் வந்தாள். நல்ல நெருக்கமான சிநேகிதி வத்சலா. போன ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு வத்சலாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். வத்சலா பேச முயன்றபோதெல்லாம் இவள் விலகிப் போனாள். சிலசமயம் இவள் பாதையில் மறித்துக் கொண்டு நின்ற போதும் கண்டு கொள்ளாத மாதிரி சென்று விட்டாள். விலகிப் போவது போல முறைப்பு காட்டியதும், அவளுடன் பேசுவது சுத்தமாய் நின்று விட்டது. உள்ளுக்குள்ளே கோபம் இருந்தாலும் அவள் மேலான பிரியம் குறைவில்லாமல் இருந்தது. இந்த கோபமும் ஒருமாதிரி நல்லாயிருந்தது என்று ராதாவிற்குத் தோன்றியது.
வத்சலா வீட்டிற்கு இவள் வீட்டை கடந்து இரண்டு தெருக்கள் போக வேண்டும். அய்யோ! நனைந்திருப்பாளோ என்று தோன்றியது. ஒருவேளை லிங்கம்மா கடை வாசலில் ஒதுங்கியிருக்கலாம். ஒதுங்கியிருந்தால் நனையாமல் தப்பிக்கலாம். ஆனாலும் கொஞ்சமாவது நனைந்திருப்பாள். லிங்கம்மாவின் பையன் ரவியிருந்தால் வத்சலாவை முறைத்து முறைத்துப் பார்ப்பான், அது ராதாவிற்கு சுத்தமாப் பிடிக்காது. வத்சலாவிற்கும் அது சங்கடமாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். இதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு கொஞ்சம் பதைபதைப்பாயும் இருந்தது.
இவள் ஜன்னலுக்கருகே உட்கார்ந்து கொண்டு கை கூப்பியிருப்பதை பார்த்ததும் அவளுடைய அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. சாமிகிட்ட வேண்டிட்டிருக்கியோ? மழை வேண்டாமுண்டு! என்று சிரித்தாள். இல்லைம்மா, வத்சலா மழைல நனையாம போயிருக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்! நான் வீட்டுக்குள்ளே வரும்போதே மழை ஆரம்பிச்சுடுச்சு, அதான் கவலையா இருந்தது என்றாள்.
குடையக் கொடுத்திருக்க வேண்டியது தானே? அதக்குடுக்காம, கன்னத்துல கைய வச்சு, கப்பலே கவுந்தா மாதிரி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கே! சரி, காப்பி குடிக்கிறியா? என்று கேட்டவள், இவளின் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்று காப்பி போட போய்விட்டாள். மழை என்று நிதானிக்குமுன்னெ மழை பெரிதாகிவிட்டது. இதையெல்லாம் யோசிக்கமுடியவில்லை. அப்படியே கொடுத்தாலும் அவளுடன் பேசாமல் இருப்பதால், குடையை வாங்காமல் வீம்புக்கு நனைந்து கொண்டே போவாள் என்பது ராதாவுக்குத் தெரியும். எட்டிப் பார்த்தாள், அம்மா உள்ளே சென்றுவிட்டாள் என்று தோன்றியது.
ராதா உள்ளறைக்கு சென்று சல்வாரில் இருந்து பாவாடையும் அவள் அண்ணனின் சட்டையையும் மாற்றிக் கொண்டாள். மேசையில் விட்டிருந்த, பைக்கட்டை எடுத்து புத்தகங்களுக்கு இடையே இருந்த மயிலிறகையும், ஒரு புகைப்படத்தையும் எடுத்தாள். அதில் இவளும் வத்சலாவும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு கன்னத்தோடு கன்னம் இழைத்த மாதிரி ஒரு படம் இருந்தது. அதை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வத்சலாவிற்கு, ராதா மாதிரி இல்லாமல் நல்ல நீளமான முடி. அதை லூசாகப் பின்னி முன்பக்கம் விட்டிருந்தாள். நீலப்பூ பாவாடையும், மஞ்சள் கலர் சட்டையுமாய் அழகாய் இருந்தாள். வத்சலா தன்னை விட அழகு என்று ஏனோ அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்தப் படம் இவர்கள் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி முடித்ததும், போன மஹாபலிபுரம் பிக்னிக்கின் போது எடுத்தது. இந்தப்படம் இவளுக்கு ரொம்ப பிடிக்கும். ராதா, வத்சலாவை விட நிறமாய் இருப்பாள், ஆனாலும் வத்சலா தான் திருத்தமா இருப்பாள். ராதாவின் அம்மாவே இதை சொல்லியிருக்காள், எப்படி இருக்கா பாரு பதுமை கணக்கா? என்பாள்.
இரண்டு பேருமே ஏறக்குறைய ஒரே உயரம். ராதா கொஞ்சம் பூசுனமாதிரி உடம்போட இருப்பாள். வத்சலா, ஒல்லியா இருப்பாள். பெரிய நீளமான கண்கள் வத்சலாவிற்கு, மையிட்டவிதம் இன்னும் பெரிதாய் பளபளப்பாய்க் காட்டும். ராதாவிற்கு அவள் அப்பாவைப் போல சிறிய கண்கள், நீளமான மூக்கு. மெலிதான மேலுதடும், அழுத்தமாய் குழிவான கீழுதடும் அப்பாவினுடையது. நிறமும், முகவடிவும் அம்மாவைப் போல. வத்சலா அப்படியே அவள் அம்மாவைப் போல. இரண்டு பேருக்கும் அப்படி ஒரு நெருக்கம், எப்போதும் கைபிடித்துக் கொண்டோ, தோளோடு தோள் சேர்த்துக் கொண்டோ திரிவார்கள். இரண்டு வீட்டின் விசேஷ தினங்களிலும் இரண்டு பேரும் ஒன்றாகவே இருப்பார்கள். இரண்டு வீட்டின் உறவுக்காரர்களுக்கும், இவர்களின் சினேகம் பற்றித் தெரியும். இருவரின் பெற்றோர்களிடையேயும் உறவு பலப்பட்டதற்கு இவர்களின் நட்பே காரணம்.
மஹாபலிபுரத்திலும் பிக்னிக் போயிருந்த போதும் இது போல மழை பெய்தது. இருவருமே நனைந்து விட்டார்கள். பைக்கட்டு, புஸ்தகங்கள் ஏதும் இல்லாததால், இரண்டு பேருக்குமே நணைவதில் விருப்பமிருந்தது. யூனிபார்ம் சல்வார் இல்லாதது வசதியாய் இருந்தது. வெறும் பாவாடை சட்டை மட்டுமே போட்டிருந்தார்கள் இருவரும். கையைப் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்தார்கள். பிலோமினா டீச்சர் வந்து சத்தம் போட்டதும், இரண்டு பேரும் அறைக்குள் ஓடினார்கள்.
வத்சலாவின் அப்பா பிக்னிக்கிற்கு விடுவதாய் இல்லை, முதலில். சென்னைக்கு போறதெல்லாம் ஆவாது! பேசாம வீட்ல இருந்துகிட்டு, அடுத்து என்ன பண்றதுன்னு யோசி! என்று அடக்கிவிட்டார். இதை வத்சலா வந்து சொல்லும் போது அழுதுவிட்டாள். அவளுக்கு ராதாவுடன் வரவேண்டும் என்று ஆசையாய் இருந்தது. ராதா தன் அம்மாவையும் கூட்டிக் கொண்டு, வத்சலா அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி சம்மதம் வாங்கினாள். வத்சலாவின் அப்பா சம்மதம் தெரிவித்ததும், வத்சலாவிற்கு சந்தோஷம் தாங்காமல், ராதாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். ராதாவுக்கு ஒரு மாதிரி நல்லாயிருந்தது. அதன் பிறகு ராதாவிற்கு வத்சலா வித்யாசமாய் தெரிந்தாள். வத்சலாவை எல்லா விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது போல ராதாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருந்தன. ராதாவிற்கும் வத்சலாவிற்கும் இது போன்ற இனம் புரியாத உறவு பிடித்திருந்தது.
நனைந்தவாறே உள்ளே வந்தபோது டார்மெட்டரியில் இருந்த ஆறு பாத்ரூமும் மூடியிருந்ததால், இரண்டு பேரும் தலையை மாற்றி மாற்றி துவட்டிக் கொண்டு காத்திருந்தனர். ஒரே பாத்ரூம் திறந்த போது, வேறு வழியில்லாமல் இரண்டு பேரும், ஒன்றாகவே உள்ளே நுழைந்த, உடை மாற்றிக் கொண்டனர். ராதாவிற்கு வத்சலாவைப் பார்க்கையில் சிலிர்ப்பாய் இருந்தது. வத்சலா, ராதாவை பார்த்து என்னடீ! என்றாள். இருவருக்கும் ஏனோ சிரிப்பு வந்தது. அன்று இரவு எல்லோருக்கும் உணவு ஏற்பாடு செய்துவிட்டு, பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடானது. பிலோமினா டீச்சரும், மார்த்தா சிஸ்டரும் தான் பைபிள் ரீடிங்கும், பாடல்களும் பாடினார்கள். எல்லாம் முடிய ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இரவு சாப்பாடை முடித்ததும், உடன் வந்த பிள்ளைகள் பாதிபேருக்கும் மேலே முன் வராண்டாவில் உட்கார்ந்து பாட்டுக்குப் பாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
டார்மெட்டரியில் விளக்கை அணைத்துவிட்டு சில பிள்ளைகள் படுக்கத் தொடங்கினார்கள். மொத்தம் இருபத்திரண்டு படுக்கைகள் இருந்தது, அந்த டார்மெட்டரியில், பிலோமினா டீச்சரும், மார்த்தா சிஸ்டரும் ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். மற்ற பிள்ளைகளுக்கு, ஒரு கட்டிலுக்கு இரண்டு பேர் என்ற விகிதம் நாற்பது பேருக்கு போதுமான படுக்கைகள் இருந்தது. எப்போதும் ராதாவும், வத்சலாவும் ஒண்ணாகவே திரிவதால், அவர்கள் இருவருக்கும் ஒரே படுக்கை என்று ஒதுக்கியிருந்தார்கள். அவர்களின் படுக்கை சரியாக நடுவில் இருந்தது. டார்மெட்டரியின் கூரையில் மேலே கண்ணாடி பதித்திருந்ததால், நிலா வெளிச்சம் கண்ணாடியின் ஊடாகப் பரவி படர்ந்திருந்தது. விளக்கை அணைத்தாலும் கொஞ்சம் வெளிச்சம் மிச்சமிருந்தது. ராதாவும், வத்சலாவும் பாட்டுக்குப்பாட்டில் கலந்து கொண்டார்கள். ராதாவின் சினிமாப் பாட்டு ஞானமும், குரலும் வத்சலாவிற்கு வசீகரமாய் இருந்தது. தூக்கம் வருபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து படுக்கைக்குப் போகத் தொடங்கினர்.
இருவருக்கும் இன்னும் கொஞ்ச நேரம் நிலாவைப் பார்த்தபடி உட்காரலாம் என்று தோன்றியது. ஆனாலும் பிலோமினா டீச்சர் தனியாக இருக்க வேண்டாம் என்று சொன்னது ஞாபகம் வந்ததும், ராதா, நாமளும் போகலாம் வத்சலா என்று அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். படுக்கையை நீவி தலைகாணியை திருத்தி, போர்வையை உதறி ஒருபக்கமாய் விரித்தாள் ராதா. வத்சலா, தூக்க கலக்கத்துடன், நின்று அவள் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். படுக்கை விரிப்பை சரிசெய்ததும், தொப்பென விழுந்தாள் வத்சலா. ராதாவுக்கு, அவளைப் பார்த்தபோது வாஞ்சையாய் இருந்தது. வத்சலா படுத்தவுடன் உறங்கியதைப் பார்த்தபோது, இவளுக்கு என்னமோ போல இருந்தது.
மஹாபலிபுரம் சென்று வந்தபிறகு, இது போல சந்தர்ப்பம் அவர்களுக்கு அமையவில்லை. அது ராதாவிற்கு மறக்கமுடியாத விஷயமாகவும், நினைத்து நினைத்து சந்தோஷிக்கிற விஷயமாகவும் ஆகிவிட்டது. வாரவிடுமுறையின் போதும், பரீட்சை நேரங்களின் போதும் வத்சலாவுடனான நெருக்கம் மேலும், மேலும் அதிகமானது. ராதாவிற்கு உணர்வுரீதியான நெருக்கமாகவும், உடல் ரீதியான நெருக்கமாகவும் மாறிக் கொண்டே வருவதாய்ப்பட்டது. வத்சலா யாரிடம் பேசினாலும் அவளுக்கு கோபம் வந்தது. வத்சலாவிற்கு அது சிலசமயம் எரிச்சலாய் இருந்தாலும், சிலசமயங்களில் எதிர்த்த போதிலும், பெரும்பாலான சமயங்களில் நெருக்கமாகவே இருந்தாள்.
போன ஞாயிற்றுக்கிழமை, வத்சலா படிக்க வராததால், ராதாவே வத்சலா வீட்டிற்கு போயிருந்தாள். கதவை படக்கென்று திறந்தவள், ராதாவை பார்த்ததும் உள்ள வா என்று உள்ளே திரும்பி நடந்தாள். வத்சலாவின் முகத்தில் பழைய உற்சாகம் இல்லாதது போல இருந்தது. வத்சலா வீட்டில் யாருமில்லை அப்போது, அவளின் பெற்றோர்கள் திருமணத்திற்குச் சென்றுவிட்டிருந்தனர். வத்சலாவின் அக்காவும் கல்லூரித் தோழிகளுடன் எங்கோ வெளியே சென்றுவிட்டாள் என்று சொன்னாள். வத்சலாவிற்கு, ராதா வீட்டிற்கு வந்தது பிடிக்கவில்லை, அவள் இப்போது தனியாக இருக்கவே விரும்பினாள். அதைச்சொன்னால் ராதாவுக்குப் புரியாது என்ன செய்து இவளை வீட்டுக்கு அனுப்பலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.
ராதாவிற்கு வத்சலாவின் போக்கு மாறிவிட்டதாகத் தோன்றியது. முன்பு போல அவள் ஒட்டுவதில்லை இவளிடம். அந்த நெருக்கம் குறைந்தது போன்ற ஒரு முள் நெருடிக் கொண்டே இருந்தது. அதை இன்று சரி செய்து விட வேண்டும் என்று தோன்றியது. முன் முடிக்கற்றையில் ஒன்று நெற்றியின் வியர்வையில் ஒட்டி அழகாய்த் தெரிந்தாள் வத்சலா. ராதாவுக்கு இதை என்ன மாதிரியான உறவு என்று வகைப்படுத்த முடியவில்லை. முன்னறை சோஃபாவில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவளின் நினைப்பை அருகில் வந்து அமர்ந்தவள் கலைத்தாள்
வேலை நிறைய இருக்குது ராதா! அடைக்கு ஊற வச்சுட்டு போயிருக்காங்க அம்மா! ஆட்டி வைக்கணும், துணி வேற ஒரு வண்டி கிடக்கு அதையும் தொவைக்கணும்! என்று ஊறவைத்திருந்த அரிசி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை, ஆட்டுக்கல்லில் இட்டாள். கொஞ்சம் வத்தலும், பெருங்காயமும், உப்பையும் போட்டு தண்ணியை தெளித்து சுத்த ஆரம்பித்தாள். நான் சாயங்காலமா வர்றேனே உன் வீட்டுக்கு! என்று கெஞ்சுவது போல கேட்டாள். ஏன்டீ தொரத்துற? நீ மாவாட்டு நான் தள்ளிவுடுறேன்! என்று ராதா ரெண்டு பக்கமும் பாவாடையை வழித்துக் கொண்டு ஒரு மனைப்பலகையை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள். அவள் காலின் மெல்லிய ரோமங்களைப் பார்த்தாள் வத்சலா.
நீ இருந்தா எனக்கு வேலையே ஓடாது ராதா! நீ கெளம்பு, நான் சாயங்காலமா கட்டாயம் வர்றேன். அம்மாவுக்கு வேற உடம்புக்கு முடியலை, வேலையெல்லாம் செய்யாம விட்டா, அது வந்து கஷ்டப்படும். பொம்பிளப்புள்ளைய பெத்தும் பிரயோசனம் இல்லை என்று புலம்பும்! என்று அவளை தள்ளாத குறையாய் வெளியே அணுப்பினாள். சாயங்காலம் வந்துடு! இல்லேன்னா ஒங்கூட ஜென்மத்துக்கும் பேசவே மாட்டேன்! என்று சொல்லிவிட்டு விருப்பமே இல்லாமல் வீட்டுக்கு புறப்பட்டாள். வெளியே வந்து தெருமுக்கைத் தாண்டும் போது, லிங்கம்மாவின் மகன் ரவி வத்சலா இருக்கும் தெருவுக்குள் திரும்பினான். ராதாவைப் பார்த்ததும் சிரித்தான், அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் வீடு இங்கே இல்லையே என்று தோன்றியது, எங்கே போறான்னு திரும்பி பார்த்தால், அவனைத் தான் பாக்குறோம்னு நினைப்பு வந்துடும் என்று நினைத்தவள் பேசாமல் நடையை எட்டிப் போட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
அன்று சாயங்காலம், வத்சலா ராதாவின் வீட்டுக்கு வரவில்லை, அவளுடன் இனிமே பேசவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். இந்த மழை நாளோடு நாலு நாட்களாகிவிட்டது.
18 comments:
பருவத்தில் இயல்பாகத் தோன்றி மறையும் சில பிறழ்வுகள்... அழகாகக் கையாண்டு இருக்கிறீர்கள். நல்ல கதை.
பருவ பிழைகள் ! நல்ல ரைட்டிங்ணா...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ராகவன்...
"அரிசி தின்னாதே, சீக்கிரம் வயசுக்கு வந்திடுவே," என்பார்கள் எங்கள் ஊர்த் திக்கம். (நம்ம ஊர்த் திக்கம் என்று சொல்ல வேண்டுமோ?) அரிசி, வயசுக்கு வந்த பருவத்தினது; மயிலிறகு அறியாத வயசுக்கு உரியது.
'அரிசி தின்னும் மயிலிறகு' இன்ன வாக்கிய அமைப்பு, தமிழுக்கே உரியதொரு சிறப்பு. (வேறு மொழிகளிலும் உண்டா தெரியவில்லை). 1. 'அரிசியைத் தின்னும் மயிலிறகு' என்றும், 2. 'மையிலிறகைத் தின்னும் அரிசி' என்றும், எழுவாய் செயப்படுபொருள் தலைமாறிப் பொருள் கொடுக்கும். 1-இல், பால்குடி மாறாப் பல், இறைச்சியைக் கடித்தாலெனச் செரிமானக் கோளாறு தோற்றுமொரு பதைபதைப்பும்; 2-இல், குழந்தமை காவுபடும் ஒரு சோகமும் உணர்வுலுக்கப் பெறுகிறோம்.
//லிங்கம்மாவின் பையன் ரவியிருந்தால் வத்சலாவை முறைத்து முறைத்துப் பார்ப்பான், அது ராதாவிற்கு சுத்தமாப் பிடிக்காது. வத்சலாவிற்கும் அது சங்கடமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.// இது,
//லிங்கம்மாவின் மகன் ரவி வத்சலா இருக்கும் தெருவுக்குள் திரும்பினான். ... அவன் வீடு இங்கே இல்லையே என்று தோன்றியது,// இதனோடு ஒவ்வாமையால் வழுவுகிறது.
||ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின்... முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே ஒப்பக் கூறல். (தொல்.பொருள்.மரபு 112)||
மற்றபடி, பெண்மனசுக்குள் புகுந்துகொண்டு எழுதும் உங்கள் ஏனைய படைப்புகள் போலவே இதுவும் சிறப்பாக அமைந்திருக்கிறது (மகாபலிபுரத்து 'மழைக்குப்பின் நிலவு' கூட்டுமே அக் குளிர்ச்சி எழுதியுணர்த்தப் படாத போதிலும்).
அருமையாய் இருக்கு ராகவன்! :-)
தேர்ந்தெடுக்கும் களங்கள், அண்ணன் சொல்வது போல பெண் மனசுக்குள் பூந்து வெளிவரும் லாவகம் ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது!
வணக்கம் நண்பரே!!!! இன்று தான் முதல் முறை உங்கள் வலைப்பூவிற்குள் நுழைகிறேன். இந்த அரிசி தின்னும் மயிலிறகில் எல்லாரும் கடந்து வரும் உணர்வுகளை மிக அழகாய் பதித்திருப்பது அருமை உங்கள் மற்ற கதைகளையும் படிக்க ஆர்வமாயுள்ளேன் படித்து பின்னூட்டம் இடுகிறேன்..... nandri
"அரிசி தின்னும் மயிலிறகு "உங்க மற்றைய தலைப்புகளை போலவே இதுவும் வித்தியாசமாய் ... காதல் ஒன்று தனிமையை விரும்பும் அல்லது
காதலை மட்டும் அனுமதிக்கும் ..அந்த தோழிகளிடம் உள்ள friendhip...பின் அதில் தோன்றும் முரண்பாடுகள்.. உங்கள் கவிதைகள் போல் கனமாய் இல்லாமல் எளிமையா நன்றாய் உள்ளது...
அன்பு தீபா,
உங்ககூட பேசிட்டு இருக்கும்போது நீங்க கொடுத்த தைரியம் தான், கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது.
இது பெண்ணின் மனதுற்குள் புகுந்து புறப்பட்டு எழுதுவது மாதிரி இருக்கு... என்று மற்றவர்கள் சொல்லிய போது... என்னுடைய ஒரு தோழி மட்டும், இது அப்பட்டமான ஆண் பார்வை... அதுவும் மாவாட்டுவதைப் பற்றி சொன்னது, ஆண் பார்வை தான் என்று உறுதி செய்தது என்றாள். அட... என்று தோன்றியது.
சந்தோஷம் உங்கள் கருத்துக்கு தீபா!
அன்புடன்
ராகவன்
அன்பு ராம்,
எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு உங்க கூட பேசி!
உன்னோட கருத்துக்கு ரொம்பவும் நன்றி ராம்...
அன்புடன்
ராகவன்
அன்பு சுகிர்தா,
சந்தோஷம் சுகிர்தா... அழகியல் எழுத்தும், பார்வையும் உள்ள உங்கள் கருத்து எனக்கு சந்தோஷம்...
அன்புடன்
ராகவன்
அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,
வருவீங்களோ வரமாட்டீங்களோன்னு தோணுச்சு... படிச்சுட்டு பிடிக்காமத் தான் ஏதும் எழுதலையோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். வந்துட்டீங்கங்கறது பெரிய சந்தோஷம் எனக்கு.
தலைப்பு பற்றி நீங்கள் எழுதியது எனக்கு பயங்கர சந்தோஷமாய் இருந்தது. இது மாதிரி யாருண்ணே சொல்லப் போறாங்க! எவ்வளவு கத்துக்கிட்டிருக்கேண்ணு, இதெல்லாம் படிச்சுட்டு என்பது எனக்கே ஆச்சரியமான விஷயம். மக்குப்பய என்று பேரு எனக்கு.
ஆமாண்ணே நீங்க சொன்னமாதிரி... முந்து மொழிந்தததன் தவறு எனக்கும் நீங்கள் சொன்னபிறகு புரிந்தது... திரும்பவும் வாசித்தேன். சரி செய்து கொள்கிறேன்.
மழை நாள் இரவு நிலவு.
அன்புடன்
ராகவன்
அன்பு பாரா,
உங்கள் அன்புக்கு அன்பும் நன்றிகளும் பாரா... உங்க மாதிரி என்னைக்கு எழுதப்போறேன் பாரா...
உங்க கவிதை விரிக்கும் கதைகளையும் உங்களிடம் கேட்டு கதையாய் எழுத ஆர்வமாய் இருக்கிறேன்... உங்களுக்கு ஓகே என்றால்...
அன்புடன்
ராகவன்
அன்பு வெங்கட்ராமன்
உங்க அன்புக்கும், வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...
அன்புடன்
ராகவன்
அன்பு ஸ்ரீபிரக்ஞா,
சந்தோஷம் பிரக்ஞா. உங்கள் வாசிப்புக்கு என் அன்பும் நன்றிகளும். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்
அன்புடன்
ராகவன்
சரி, 'பெண்மனசுக்குள் புகுந்துகொண்டு எழுத முயலும்' என்று மாற்றிக் கொள்கிறோம்.
//ராதா ரெண்டு பக்கமும் பாவாடையை வழித்துக் கொண்டு ஒரு மனைப்பலகையை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள். அவள் காலின் மெல்லிய ரோமங்களைப் பார்த்தாள் வத்சலா. நீ இருந்தா எனக்கு வேலையே ஓடாது ராதா! நீ கெளம்பு!//
'கால் கைகளில் மயிர் மிக உள்ள பெண் கலவி வேட்கை மிக்கவள்' என்பது ஊர்நாட்டில் வழங்கும் ஒரு மூடச் சொல்வழக்கு. இது ஆண்பார்வையோ பெண்பார்வயோ - என்னத்தெக் கண்டோம்.
இக் கதையில், வத்சலா என்னும் பெயரே அவள் குழந்தைத்தனமானவள் என்னும் குறிப்பிலும், ராதா என்னும் பெயர் அவள் ஒருதலைக் காதல் உள்ளவள் என்னும் குறிப்பிலும் இடப்பட்டதாக வாசிக்கிறேன்.
//படுக்கை விரிப்பை சரிசெய்ததும், தொப்பென விழுந்தாள் வத்சலா. ராதாவுக்கு, அவளைப் பார்த்தபோது வாஞ்சையாய் இருந்தது. வத்சலா படுத்தவுடன் உறங்கியதைப் பார்த்தபோது, இவளுக்கு என்னமோ போல இருந்தது.//
ராதாவுக்கு ஒரு lesbian கோணல் இருப்பதுபோல் தோற்றம் இருக்கிறது என்றாலும், வத்சலாவைப் புரக்கும் அக்கறையில் ராதா ஒர் ஓங்கு-கை நிலை எடுக்கிறாள் என்றே வாசித்தேன். //வத்சலாவை எல்லா விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது போல ராதாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்தது.//
போகட்டும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று வழக்கடித்து என்ன பயன் - அதுவும் நரைத்துவிட்ட மீசையில்? பிறகும் ஒரு பெண் முன்வந்து சொல்லிவிட்ட பிறகு?
Lesbian inclination உள்ளதுபோல் தோற்றம் தருவதும், முந்திய பதிவுக்கு என் பின்னூட்டத்தில் பேசியதைப் போல, ஒரு tone & shade தாம். இருக்கட்டும்.
அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,
உங்கள் பார்வை தான்ணே எல்லாருக்கும் வேணும் படிக்கிறவனுக்கெல்லாம் வேணும்... உங்கள் புரிதலில் இம்மியளவும் அப்படி இப்படி இல்லை... அப்படியே நேர்கோட்டில் இருக்கு. லெஸ்பியன் இன்கிலினேஷன் இருக்கிறது என்பதில் மாற்றமே இல்லை அண்ணே.
ராதா என்ற பெயர், ஆண்சட்டை அணிவதில் இருந்து, சிறிய கண்கள், அப்பாவைப் போன்ற அழுத்தமான உதடுகள், மெல்லிய ரோமம் இருக்கிற கால் வரை எல்லாமே... ராதாவின் தன் இன ஈடுபாட்டை காட்டத்தான் எழுதினேன்.
வத்சலா என்கிற பெயரும் நீங்க சொன்னது போல ஒரு குழந்தைதனமானவள் என்பதையும் சித்தரிக்கத் தான் வைத்தேன்.
இவ்வளவு ஆய்ந்து ஆராய்ந்து உரக்க படிக்கும் உங்களைப் பெற்றது பாக்கியம் தான்ணே!
குரல் கேக்கணும் போல இருக்கு... உங்க வசதி எப்படியோ தெரியலை!
அன்புடன்
ராகவன்
ராகவன்,
உங்கள் கதைகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் வியப்பு, எப்படி பெண்மன உணர்வுகளை இத்தனை நுட்பமாக கொண்டு வருகிறீர்கள் என்பது தான்.
இந்த கதையும் அட! போட வைக்கிறது.
ராகவன்,
கதையின் முடிவு எனக்கு அவ்வளவா புரியலை. ஏன்னூ எனக்குத் தெரியலை. சரியா முடிக்கலையோன்னு ஒரு ஃபீல்.
என்றும் அன்புடன்
என்.உலகநாதன்
Post a Comment