அம்மா கொடுத்த காப்பியை முடித்துவிட்டு, காலை பேப்பரில் புகுந்து கொண்டேன். பேப்பரில் ஒன்றும் பெரிதாக இருப்பதாகப்படவில்லை. பேப்பரை மடித்துவிட்டு, கண் மீண்டும் ஒருமுறை நிலைக்கு மேலே மாட்டியிருக்கும் கடிகாரத்திற்கும், வாசலுக்கும் சென்று மீண்டது. என்ன இவனை இன்னும் காணலையே? என்று நினைத்துபடியே, மடித்த பேப்பரில் கண்களை வெறுமனே ஓட்டிக் கொண்டு இருந்தேன். சலனத்தின் மழைத்துளி மாதிரி சைக்கிள் மணிச்சத்தம் விழுந்தது. அவனாகத்தான் இருக்கும் என்று வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். அவன் தான். வாசலில் போட்டிருந்த கோலத்தை தவிர்த்து, சைக்கிளை சர்ரென்று கொண்டு வந்து பிரேக் போட்டு நிறுத்தி, ஒரு கால் ஊன்றி சிரித்தான்.
ரகுவுக்கு அவனுடைய இந்த புன்னகை, வசீகரமான முகம் ரெண்டும் பெரிய வரம் அல்லது வேறு ஒரு பார்வையில் ஆயுதம் என்று நினைத்துக் கொண்டேன். என் சனிக்கிழமை காலை இவனுக்கென்று ஒதுக்குவதற்கு இவன் புன்னகை ஒரு காரணமாக இருக்கத்தான் வேண்டும் என்று தோன்றியது. நான் பெங்களூர் போவதற்கு முன்னால் நினைத்த பொழுதெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பில் வந்து நிற்பான். வேலை கிடைத்து நான் பெங்களூர் சென்றவுடன் வாரம் தவறாமல் சனிக்கிழமை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு போய்விட்டு நேராய் இங்கு வருவது வழக்கமாகி விட்டது.
கையில் வழக்கம் போல இரண்டு புத்தகங்கள். வரும்போதெ, ‘நான் போட்ட லட்டர் கிடைச்சுதா உனக்கு?’ என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான். வாரம் ஒருமுறை தவறாமல் சந்தித்த போதிலும், கடிதம் எழுதுவதில் குறைவில்லை எங்களுக்குள். பேசிக்கொள்ள அத்தனை இருந்தது, விஜய் தான் கிண்டல் செய்வான் அப்படி என்னதான் பேசிக்குவீங்க? என்று. புத்தகங்கள், சினிமா என்று பேசிக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி ஒரு உறவு முறை சார்ந்த சம்பாஷனைகளும் எங்களுக்கிடையே இருந்தது
எந்த லட்டரைப்பற்றி குறிப்பிடுகிறான் என்று தெரியாதது போல, எந்த லட்டர்? என்றேன், பேசத் தயாராக உட்கார்ந்து கொண்டே. முன்னறை மாடிப்படியில் இயல்பாக உட்கார்ந்து கொண்டான். அவனுடைய வழக்கமான இடம் அது. இந்த மாடிப்படி எங்க போகுது என்று ஒருமுறை கேட்டிருக்கான்? அதற்கு சிரித்திருக்கேன். மேலே அறைகள் ஏதும் இல்லாத மொட்டை மாடி. மாடிப்படியின் முடிவில் கவிந்திருக்கும் மரத்தின் கிளைகள், அங்கு ஏதோ பூட்டிய அறை இருப்பது போலத் தோற்றம் தரும். என்னை கேள்வியாய் பார்த்தவன், திரும்பவும் தொடர்ந்தான். “நெறைய எழுதியிருந்தேன் வித்யா! சே! நீ படிச்சிருப்பேன்னு நினைச்சேன் என்றான் லேசான வருத்தத்துடன். அதை படித்ததை சொல்லியிருந்தால் அவனுடைய கண்களில் ஒரு மினுக்கென்ற வெளிச்சம் தெரிந்திருக்கும்.
அவன் வருத்தத்தை ரசித்தவாறே, படிச்சேன், படிச்சேன்! ”மீனா மாமி பத்தி வரிஞ்சு கட்டி எழுதியிருந்தயே?” என்றேன் கண் சிமிட்டலுடன். அவன் அதில் தொங்கிக் கொண்டிருந்த கிண்டலை கவனிக்கவில்லை அல்லது கவனிக்காத மாதிரி நடிக்கிறான் என்று தோன்றியது.
கிடைச்சுடுச்சா? என்றான் ஒரு திருப்தியுடனும், பளீர் புன்னகையுடனும். “பக்கத்து வீட்ல இருக்காங்க வித்யா! தெளிவான நிஷ்களங்கமில்லா முகம், பெரிய கண்கள், லேசா இந்த பூசினா மாதிரின்னு சொல்வாங்களே அந்த மாதிரி இருப்பாங்க” என்று ஆரம்பித்தான். யாரையாவது பற்றி சொல்லும்போது, அவனுடைய எழுத்தார்வம், எழுத்து என்பதை விட, அவனுடைய கவித்துவமான உணர்வு வெளிப்பாடு, ஒரு ஸ்ப்ரவுட் மாதிரி வெளியே வரும் தளுக்கலாய். அவனுடைய வர்ணனைகள் கண் முன்னே அவன் சொல்ல வருகிற பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்திவிடும். எனக்கு மீனா மாமியை நன்றாகவே தெரியும் என்பது போல் இருந்தது.
ஒரு நடுத்தரவயது திருமணமான பெண், குழந்தைகளை ஸ்கூலிற்கு அணுப்பிவிட்டு, கணவனை வேலைக்கு அணுப்பிவிட்டு அலுப்புடன், வேலையின் மிச்சங்களை முந்தானையில் துடைத்தபடியே பின்காலை வேளையில் வீட்டு வாசலில் வந்து நிற்பது போன்ற ஒரு பெண் உருவம் என் கண் முன்னே நின்றது.
”அவங்களுக்கு கர்னாடிக் மியூசிக்னா ரொம்ப பிடிக்குமாம் வித்யா! நல்ல கேள்வி ஞானம், நல்லாவே பாடறாங்க. ஸ்ரீமந்நாராயணா, பௌளில பாடுனப்போ அப்படியே அசந்து போயி உட்கார்ந்துட்டேன் தெரியுமா? கமலப்ரியா கமலேசனா” ன்னு பாடும் போது நெக்குருகிப் போச்சு. அவங்களோட புருஷனப் பாத்திருக்கேன் நான், ரொம்ப சுமாரா இருப்பான். சுமார் அப்படிங்கிறத விட, அவங்களோட மென்னுணர்வுகள மதிக்கிற மாதிரியே இருக்காது” அவன் பார்வையும், அவங்கட்ட பேசுற விதமும், என்றான் அவன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு.
இப்போ இத எங்க கொண்டு போற? என்றேன் அவனுடைய கண்களில் மாறும் பாவங்களை ரசித்துக் கொண்டே. இதே போல, நடுத்தர வயதுள்ள... இல்லை, பெண்களுடனான இவனுடைய சினேகம் எத்தனை. கர்னாடிக் ம்யூசிக், பாலகுமாரன், பாலசந்தர் என்று இவன் அடிக்கும் ஜல்லி பற்றி நினைத்துக் கொண்ட போது எனக்கு சிரிப்பாய் வந்தது.
எங்க கொண்டு போறது? ரொம்ப ஆத்தாமையா இருக்கு. இது போல ஒரு பெண்ணோட உள்ளுணர்வுகள புரிஞ்சுக்கிறத்துக்கு என்னை மாதிரி ஆட்களும் இருக்காங்கங்கறது அவங்களுக்கு தெரிய வேண்டாமா” தேவைப்படும் போது ஒரு சினேகிதனா இருப்பேன்னு அவங்க புரிஞ்சுக்க வேண்டாமா? பெண்களை மனசாவும், சகமனுஷியாகவும் நேசிக்கிறவங்களும் இருக்காங்கங்கறது அவங்களுக்கு தெரிய வேண்டாமா? அவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்க வேண்டாமா? என்று அவன் அடுக்கிய கேள்விகளில் இருந்த தீவிரம், எனக்கு இதற்கு ’ஸ்ரீவில்லிபுத்தூர் சிண்ட்ரோம்’ என்று பெயரிடத்தோன்றியது.
என்ன நினைத்தானோ, திரும்பவும் தொடர்ந்தான். நான் நேத்து சாயங்காலம் காபி ராகத்துல ஆலாபனை பன்றத, கேட்டதும் எவ்வளவு ரசிச்சாங்க தெரியுமா? என்றான். கண்ணமூடி கேக்கும் போது ஏசுதாஸ் மாதிரி இருந்ததா சொன்னாங்க! எனக்கு அப்படியே மூளையில் இனித்தது அப்படின்னு தி.ஜா.வின் பாயசம் குடிச்சா மாதிரி சொல்வான்.
சிரிப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. அதிலிருந்து அப்போதைக்கு பேச்சு பாலகுமாரனின் புத்தகங்களுக்கும், சமீபத்தில் வந்திருந்த ஆசை படத்திற்கும் தாவி விட்டாலும், நடுநடுவே மீனா மாமி தென்பட்டாள்.
”நான் அவங்களுக்கு பிடிச்ச எம்எல்வி கேசட்ட டவுன்ஹால் ரோடு போய் கீஷ்டு கானத்துல வாங்கிட்டு வந்தேன் வித்யா! அவங்களுக்கு தாங்கமுடியாத சந்தோஷம் தெரியுமா? இந்த சந்தோஷத்துக்காக என்னமும் செய்யலாம் வித்யா என்றான். அவன் கண்களை பார்த்தேன் அதில் ஒரு குழந்தையின் சந்தோஷம் தெரிந்தது. இந்த கண்கள், இவன் பேசுகிற வார்த்தைகளுக்கு எத்தனை ஒத்துழைக்கிறது என்று தோன்றியது.
”நேத்து புது சாரி கட்டிட்டு வந்து என்கிட்ட எப்படி இருக்குண்ணு கேட்டாங்க” சும்மா சொல்லக்கூடாது வித்யா, அவங்க நிறத்துக்கு அரக்கு பார்டர் வச்ச மாம்பழக் கலர் புடவை அவ்வளவு எடுப்பா, அழகா இருந்தது என்றான்.
அவங்க புருஷனுக்கு அவங்க என் கூட பேசறது பிடிக்கல, ஒரு மாதிரி நீ என்ன பண்ற, வேலைக்கு போலையான்னு கேட்டான்?” என்றான். எனக்கு பொசுபொசுன்னு வந்துச்சு... அப்படியே அறையலாம்போல என்றான். ஏதோ முன்யோசனையாய் இருந்தவன், வழக்கத்தை விட சீக்கிரமாகவே கிளம்பி போய்விட்டான், கடிதம் எழுதுகிறேன் என்று. எனக்கு கொஞ்சம் கவலையா இருந்தது.
மறுநாள் டிரெயின் பிடித்து பெங்களூர் வந்த என்னை, பின் தொடர்ந்த புதன்கிழமை கடிதத்தில் கூட மீனா மாமி இடம் பிடித்திருந்தாள். ”கோவிலில் பாடும்போது ...கான நீலா.. ஏல நீ தயராது பாடினப்போ அவங்க, நிச்சயமா சொல்றேன், வித்யா! என்ன ஒரு கணம் பாத்தாங்க, அந்த கூட்டத்தில கூட. ரொம்பவே சந்தோஷமா இருந்தது. சிரிப்பு வந்தது...அவனுக்கு. அவளோ பாதிச்சிருக்கேனா? என்றான்.
அடுத்த ஒன்றிரண்டு சனிக்கிழமை, பெரிதாக அந்த உறவில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், தவறாமல் மீனா மாமி அவனிடம் நடந்து கொள்வதை பற்றி ஏதாவது இருக்கத்தான் இருந்தது.
ஒரு முறை, அவங்க என்னை பார்க்குறதுல இருக்கிற சந்தோஷம் ஜாஸ்தியாவே இருக்குல்ல எனக்கு? நான் கொஞ்சம் அவங்களை எக்ஸ்பிளாய்ட் பண்றனோ? என்றான்.
ரகுவை எனக்கு இதனால் தான் பிடித்தது. இப்படி ஆச்சரியமான, யோக்கியமான பேச்சு சுலபமாக வரும்.
இந்த கேள்விய வேற யார்கிட்டயாவது கேப்பியா? என்றேன் ஒரு க்யுரியாசிட்டியில்.
தெரியல வித்யா! என்றான்
எல்லா கதைக்கும் முடிவு போல, இரண்டு மாதத்தில் மீனா மாமி வீட்டுக்காரருக்கு டிரான்ஸ்பர் ஆகி, அவர்கள் வீடு காலி பண்ணுவதால், ஒரு சனிக்கிழமை என்னை பார்க்க வரவில்லை.
என் கையில் முகம் புதைத்து அழுதாள், என்னை புரிஞ்ச ஒரு நண்பனையும் இழக்கிறேன்” என்று வெள்ளிக்கிழமை நாளை பார்க்க வரமுடியாது என்று எழுதியிருந்த கடிதத்தில் முடித்திருந்தான். அவளுக்கு பிடித்த சில கேசட்டும், சில புத்தகங்களும் வாங்குவதற்கும், அவளுக்கு உதவி பண்ணுவதற்கும், நாளை பொழுது போய்விடும். என்ற வரிகளை படிக்கையில் எனக்கு அவன் சொன்ன வார்த்தை நினைவிற்கு வந்தது. யார், யாரை... என்பதில் தான் எனக்கு குழப்பம் மிஞ்சியது.
20 comments:
அற்புதமான கேரக்டரைசேஷன் இது... ராகவன்.
உன்னை எனக்கு இப்படித்தான் தெரியும்... உன் கதைகளும் உன்னுடைய பெண் சிநேகிதிகளும்...
ரொம்ப நல்லா வந்திருக்கு... இது ஒரு சிறுகதை என்று பார்த்தால் ஒன்றும் இல்லை... ஒரு கேரக்டர் ஸ்டடியாய் பார்த்தால்... உட்புகுந்து வெளிவந்திருக்கிறது...
கொஞ்சம் இடைவெளிகள் இருக்கிறது... வர்ண்க்குழைவோ... வர்ணக்குறையோ தெரியவில்லை.
மருதாணி களைந்த பின் அடுத்த நாள் காலை, லேசாக தேங்காய் எண்ணெய் தடவுவது உண்டு... அது மருதாணியின் வாசனையுடன் கலந்து ஒரு வாசம்... கைகளை முகத்தில் அழுத்தமாய் பதித்துக் கொண்டு, ஆழமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் மூச்சில் நிறைகிறது... பல நினைவுகள்
யாரென்று கண்டுபிடி... என் பெயர் சொல்கிறேன்
அன்பு அனானி,
சந்தோஷம். நீங்கள்??? அல்லது நீ???
“யாரென்று கண்டுபிடி! என் பெயர் சொல்கிறேன்!”
வினோதமாய் இருக்கிறது! யார் என்பதில் பெயரில்லையா? அல்லது பெயர் என்பது வேறு ஏதாவது... கண்ணாமுச்சி ரே ரே...
ஆனாலும் ஒரு சந்தோஷம்... கேரக்டரைசேஷன் நல்லாயிருக்கு என்று சொன்னதில்... என்னை அதிகம் தெரிந்த ஒரு ஆள் நீ! என்று மட்டும் தெரிகிறது.
அன்புடன்
ராகவன்
இது இந்தக் கதைக்கான விமர்சனம் அல்ல... உங்கள் படைப்புலகம் மீதான பார்வை.குறை மட்டுமே பேசுகிற பார்வை .விருப்பமில்லையெனில் அழித்து விடுவதில் ஆட்சேபம் இல்லை தோழர்!
வர்ணனைகளில் இருந்தும் வண்ணதாசனில் இருந்தும் வெளியேறுவது
சமஸ்கிருதச் சொற்கள்/கொஞ்சம் நோபிள் பீயிங் இமேஜுடனே பாத்திரங்களை படைக்காமலிருப்பது
உலகம் உன்னதமான மனிதர்களாலும் அசந்தர்ப்பங்களால் நிரப்பப்படுவதுமாய் இருக்கிறது என்ற கதைமாதிரிகள்
நெகிழ்வும், குழைவும்,பெண் தன்மையும் ,மெல்லியல்பான கட்டமைவுகளுடன் ,மயிலிறகு,வண்ணத்துப் பூச்சி,புல்லாங்குழல் இத்யாதி....
கடந்து வெளிப்படுவதும்
80,90 களின் கதைக்காரர்கள் அவர்களின் பால்யத்தை பேசிய அதே மொழிநடையில் உத்திகளில்... இதெல்லாம் கூட ஏற்புடையதே ஆனால் பெண்/இருப்பின் மாற்றங்கள்/முன் விழைவுகள் ,ஆண்/நிலைப்பாடுகளின் நூதனம்/ஒடுக்கம்
அகவிழிப்பு மற்றும் புற-பாசாங்குகள் என்று பேசத்தான் எவ்வளவு
உங்கள் நீண்ட வாக்கியங்கள் கடந்து உரையாடல்களின் தீவிரத்திற்குள் நுழைவதற்குள்ளாக ஒரு வித ஆயாசம் வந்துவிடக் கூடாதன்றோ வாசகன் ?!
எல்லாக் கதாபாத்திரமும் ராகவனின் குரலிலேயே பேசுகின்றன.இதில் என்ன தவறு என்று கேட்கத் தோன்றலாம்.... ? ஒரு நீண்ட நாவலை பிய்த்துப் பிய்த்து வாசிக்கும் பாவனை வந்து விடலாகாது அன்றோ ...
உங்களின் நீண்ட பயணத்திற்கு எமதன்பும் இணக்கமும்
நன்றி!
நல்ல பதிவு.
Srivilliputtur Syndrome என்றால் என்ன? எனக்கு புரியவில்லை.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
விபத்தை எதிர் பார்த்து (கதை) பயனிக்கப்பட்டு சிறு காயங்களுடன் தப்பித்தல் போன்று முடிக்கப்பட்டு விட்டது ..ரொம்ப safe வா travel பண்ணுகிறீர்களோ ..சில ரசனைகள் சாகாமல் இருபதற்கும் கணவன் மார்களே காரணம்.. எப்பவும் ஊமைகாயங்களோடு வாழ்வதற்கு பதில் ..பரஸ்பரம் காது கொடுத்து கேட்டால் தான் என்ன கொறஞ்சு விடபோகுது ...சில கமாகளுடணும் கேள்விகளுடனும் பயணிக்கிறது வாழ்க்கை .இதுவும் கடந்து போகும் ..
//உலகம் உன்னதமான மனிதர்களாலும் அசந்தர்ப்பங்களால் நிரப்பப்படுவதுமாய் இருக்கிறது என்ற கதைமாதிரிகள்" இதை நானும் ஏற்கிறேன்...எதார்த்தமாகவும் எதிர்பாரா விதமாகவும் எழுதப்பட்டால் தான் என்ன ?
ஆனாலும் ஏதோ ஒன்று நன்றாகவும் ஏதோ ஒன்று இல்லாத மாதிரியும் ...தலைப்புக்கான பாராட்டை பிடியுங்கள்
வாழ்த்துக்களுடன்
Prajna
Anbu Anani,
ungal karuththukkalai muzhuthaaga etru kolkiren...
enakke therikiradhu... ithu pola ezhuthuvadhu... ithai thaandi veliye varavendum thaan...
ungal peyarai kurippittirukkalaam... en ananiyaai irukka vendum... thayavu seithu ungal peyarai sollungal...
ungalukku en anbum... nandrikalum...
anbudan
ragavan
Anbu Rathnavel avarkalukku,
Srivilliputtur Syndrome... enbathai vilakkukiren... santharppam varumpodhu...
matrapadi ungal anbukku...en nandrikalum anbum
ragavan
Anbu Pragna,
Kathaiyin alladhu oru characterization-in adi natham sariyaai sollavillai endru ninaikkiren...
ithai eppadi vilakkuvadhu endru enakku theriyavillai...
ithil ellaarume nallavarkal endru ithai ezhuthiyavarkal sollave illai... ithil vaarththaikalukku oode irukkum oru character en sarivara purindhu kollappadavillai, ithai padiththavarkalaal enbadhu ezhuthiyavarkalin tholviye...
ungal karuththukkum anbukkum nandrikal pala.
anbudan
ragavan
Anbu Anani avarkalukku...
ungalin vimarsanappaarvai... enakku migavum uthaviyaai irukkum...
ithai kathai endru naan solla maatten... ithai ezhuthiyavarkalum solla maattaarkal... indha raguvai paarththavarkal... ithu raguvinai patriya oru azhagana aazhamaana velippaadu endru avasiyam solvaarkal...
ithu ellorukkum porundhippogum endru solla mudiyaadhu...
aanal ungal karuththu en padaippulagam patriyadhu enbadhu... neengal ennai thodarndhu vaasikkireerkal enbathai kaattukiradhu... atharkku rombavum nandri...anbu...
ungalai therindu kolla avalaai irukkiren...
ragavansam@gmail.com...
enakku thani madal anuppungalen... neengal sonnathil enakku endha vidhaththilum maatru karuththu illai.
anbudan
ragavan
அன்பின் ராகவன்
தங்கள் தளத்திலேயே தொடர்ந்து கருத்துரைக்க விருப்பம்.உங்கள் கவித்துவமான பின்னூட்டங்கள்,உரைநடையின் செறிவுள்ள கவிதைகள் என வெகுகாலம் வாசித்து வரும் வாசகன் நான்.பா.ராஜாராம்,காமராஜ்,மாதவராஜ்,க.பாலாசி,திரைப் பாடலாசிரியர் ஏக்நாத்,செ.சரவணக்குமார் என் மண் சார்ந்த படைப்பாளிகளின் ரசிகன் .தனிமடல் உங்களின் நட்பை வழங்கும் என்ற போதும் உங்கள் படைப்புகளை வரவழைத்துக் கொண்ட கரிசனத்துடனே விமர்சிக்கும்,வாசிக்கும் நிலையை... விரும்பாத நிலையிலேயே இருக்கிறது மனது.
தொடர்ந்து அணுகாது விலகாது தீக்காயும் தூரத்தில் இருந்து படைப்புகள் சார்ந்து உரையாடுவோம்
உங்கள் பிரதியன்புக்கு நெகிழ்வு.
மீண்டும் வாழ்த்துகள்
அன்பு நண்பர் அனானி அவர்களுக்கு,
உங்கள் பின்னூட்டம்... சந்தோஷம் எனக்கு.
உங்கள் வார்த்தைகள் நிஜமானவை... ஒரு கரிசனத்துடனே விமர்சிக்கும், வாசிக்கும் மனநிலையை... நானும் விரும்பமாட்டேன்... இப்படியே தொடரலாம், பழுதில்லை.
இதற்கு முன்னாலும் சில நண்பர்கள் விக்ரமன் படம் பார்க்குற மாதிரி இருக்கு... அனேக நேரங்களில் என்றும்...
உலத்துல ஒரு சில்லு அளவு கூட இது போல இல்லை என்பது தான் நிஜம் என்று கவிஞர் ராஜசுந்தரராஜன் அண்ணன் இதற்கு முன்னே நிறைய குட்டியிருக்கிறார். உங்களுடைய கருத்துக்கும் அவருடைய கருத்துக்கும் நிறைய வித்யாசங்கள் இல்லை... குரலில் மாற்றம் இல்லை.
முடிந்த அளவு மாற்றத் தான் முயற்சிக்கிறேன். பார்க்கலாம். தொடர்ந்து எழுதுவேனா என்பது நிச்சயமில்லை... ஆனால் எழுதும்வரை... என்னுடைய எழுதும் துவனியை மாற்றிக் கொள்ள முயல்கிறேன்... இது எனக்கே தெரிகிற குறை தான் தோழரே! மேற்சென்று இடித்துச் சொல்வது பூரண நட்பு என்பது எனக்குத் தெரியும் தோழரே!
உங்கள் அன்புக்கு நன்றிகள் பல...
அன்புடன்
ராகவன்
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
இது ஒரு ரசமான திறனாய்வு... திறனாய்வுன்னு சொல்லிக்கிட ஒண்ணுமில்லை தான். இருந்தாலும், இந்தப் பதிவாய் இல்லாமல், ராகவனின் எல்லா பதிவுகளும் பற்றிய ஒரு திறனாய்வில்... என்னுடைய திருந்தாத் தனங்கள் என்று சில பட்டியல் இட்டிருக்கிறார் ஒரு அனானி நண்பர்... முகம் தெரியாத சிநேகிதர்...
அவரின் நேர்மையான அணுகுமுறை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நானே எனக்குச் சொல்லிக் கொண்டது போல இருந்தது... மண்டையில் குட்டுவது... இது தான் இப்படித்தான் என்று நான் பெரிதாய் திட்ட்மிட்டு எழுதுவதில்லை... எழுத ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுவேன்... அல்லது ஏதாவது வேலை வந்துவிட்டால், அடுத்த நாள் விட்ட இடத்தில் இருந்து தொடர்வது உண்டு. மற்றபடி எந்தவித மெனக்கெடுதலும் பெரும்பாலும் இல்லை.
சிலரின் கருத்து பாதிக்கும் போது அல்லது ஒரு இன்ஸ்பிரேஷனைக் கொடுக்கும் போது, கொஞ்சம் அதில் கவனம் செலுத்துவேனே அல்லாது, திட்டமிட்டு செய்வது இல்லை. இயல்பான மொழி நடையில் கொஞ்சம் எப்போதாவது காட்சி வியத்தலின் அதிகப்படியான அழகில்... வர்ணனைகளில் தினிக்க எத்தனிப்பது உண்டு... அது பெரும்பாலும், கதையின் ஓட்டத்திற்கு உதவாமல் ஒட்டாமலே இருக்கும்.
இந்தப் பதிவை போட்டபிறகு எனக்கு வந்த பின்னூட்டங்கள் அனானிகளாய் இரண்டு அமைந்துவிட்டது ஆச்சரியம்... இது போல அனானிகள் வருவது நான் இதுவரை கண்டதில்லை குறைந்தது என் தளத்தில். அது எனக்கு யோசிக்கக்கூடிய ஒரு விஷயமாய் இருந்தது.
சில சமயம் எழுத்து நம்மையே அறியாமல் அதன் போக்கில் இழுத்துச் செல்கிறது. எந்தவித மெனக்கெடலும் இல்லாமல், பற்றுதலும் இல்லாமல் அதிலேயே லயித்துப் போய்... அதன் போக்கிலேயே செல்வது உண்டு. அதை நிறுத்தி ஒரு கட்டுதிட்டத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்பது நான் கொஞ்சம் உழைத்து பெற வேண்டியது...உழைக்கணும்
நிறைய பின்னூட்டம் வரலை என்பதால், நானே எழுதுவதும் எனக்கு கேலியாய் இருக்கிறது. ஆனாலும் பிடிக்கிறது.
அன்புடன்
ராகவன்
பின்னூட்டம் ஒன்றும் வருவதற்கு முன்பே வாசித்து விட்டிருந்தேன். விட்டது ஏனென்றால் இது ஒரு விடலைத்தனமான விசயம், அது கூட ஒரு சிராய்ப்பும் பட்டிராத மினுக்குத்தோல்/ மிதப்புமன விசயம் என்று.
இன்று, நேரம் கிட்டியதால், இம் ‘மருதானிச் சித்திரங்கள் - 1’ என்ன வகையான பின்னூட்டங்களைப் பெற்றிருக்கும் என்று அறிய விரும்பி வந்தேன். வியப்புதான்! ஒரு பெயரிலி, அல்ல அல்ல, இரண்டு பெயரிலிகள் களமிறங்கி இருக்க, அவர்களை நேரிட்டு ராகவன் பட்டுள்ள பாடுகளும், ஏனை ப்ரக்ஞா, ரத்னவேல் இவர்களின் பின்னூட்டங்களும் வாசிக்கச் சுவை கூட்டின.
முதற் பெயரிலி (ஒரு பெண்ணாகவும் இருக்கக் கூடும். ராகவனுக்கே தெளிவில்லை என்றால் நமக்கெங்கே?) அவருடைய பின்னூட்டம் to the point என்போமே அப்படி இருக்கிறது. அவரது நயம் (ரசனை) வாழக!
இரண்டாவது பெயரிலி (ஓர் ஆண் என்று தோன்றுகிறது - இடது சாய்வின் ஒருவர் போலவும்) அவருடைய பின்னூட்டம், ராகவனே சொல்லியிருப்பது போல, என்னைப் போன்றோரும் சுட்டிக்காட்டிய ராகவனின் மென்புல மெனக்கெடல் பற்றியது. இரண்டாமவரது நயமும் வாழ்க!
பெயரிலியாக வந்து ஏசித் தொலைக்கிற பதிவுலகில், இப்படி அக்கறையோடு கூடிய ஆட்களைப் பெற்றிருக்கிற ராகவனுக்கு வாழ்த்துகள்.
•
அது என்ன, ’ஸ்ரீவில்லிபுத்தூர் சிண்ட்ரோம்’? ஸ்ரீவில்லிப்புத்தூர், எனக்குத் தெரிந்து, பால்(கோவா) வாசனையினாலும்; என் அறிவுக்குத் தெரிந்து,
குத்து விளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயில்எழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவுஏல்ஓர் எம்பாவாய்!
என்று இன்னொருவர் துணை காமுற்ற ஆண்டாளின் வேட்கையினாலும் ஆனது.
•
இக் கதையின் நுவலுநர் ஒரு பெண் என்பது, “நெறைய எழுதியிருந்தேன், வித்யா...” என்னும் பேச்சு வரும் இடத்தில்தான் தெளிவாகிறது. போகட்டும், ஆனால் அந்த நுவலுநர்க்கும் ஒரு மனம் உண்டு என்பது, //யார் யாரை என்பதில்தான் எனக்குக் குழப்பம் மிஞ்சியது// என்னும் இறுதி அடியில்தான் தெளிகிறது.
எழுத்தாளர், வித்யாவோடா அல்லது ரகுவோடா, எவரோடு தன்னை அடையாளப் படுத்துகிறார் என்னும் தடுமாற்றம் உள்ளது காரணமாகலாம், வித்யாவில் வரவேண்டிய conflict நேரத்தோடே வராமல் கதை இறுதி வரை சுணங்கியது.
அன்பு ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,
இதற்குத் தான் காத்துக்கிடந்தேன்... ரெங்கான்னு... மனசு குவிச்சு கூவத்தோணுது...
இந்த பெயரிலிகளின் குரல்கள் இரண்டும் இரண்டு தளத்தில் இயங்குகிறது என்பது நிச்சயம். இரண்டு பெயரிலிகளும் பரிச்சயமுள்ளவராய் இருக்கிறார்கள். முதலாமவர் என்னோடு, இரண்டாமவர் என் எழுத்தோடு என்று தோன்றுகிறது... யார் இவர்கள் என்ற ஆர்வம் மேலிடுவதில் ஆச்சரியம் இருக்காது யாருக்கும் என்று நம்புகிறேன். எனக்கும் அப்படியே படிச்சுட்டு யாருன்னு தெரியற ஆர்வம் தான் அதிகமாயிருந்தது. ‘THINKER AND THE THOUGHT ARE DIFFERENT’ அப்படின்னு இருக்க முடியலை... என்ன சொன்னாங்க என்பது தான் முக்கியம் என்பது போல இருக்க முடியலை... நிஜமாகவே என்னை பாடாய் படுத்திவிட்டது இரண்டு பின்னூட்டங்களும்... இப்போதுவரை.
ஸ்ரீவில்லிபுத்தூர் சிண்ட்ரோம்... நாச்சியார் திருமொழி... நல்ல ஒரு தொடர்பு நிலையில் இயங்குகிறது...
மருதாணி சித்திரங்கள் ஒரு தொடராய் எழுதப்போகிறேன் என்று வித்யா என்று இங்கு பெயரிடப்பட்ட என் தோழி சொன்ன போது எனக்கு சந்தோஷமாய் இருந்தது. இது நான் எழுதவில்லை... இதை எழுதியவள் என் பிரிய சினேகிதி... நான் இதை என் பாணிக்கு அதன் சாரம் மாறாமல் மாற்றினேன்...
அவளின் ஸ்ரீவில்லிபுத்தூர் சிண்ட்ரோம் என்ற கான்செப்சுவலைசேஷன்... அதற்கான வரைவிலக்கணம் எனக்கு ஒப்புமையாய் இருந்தது... ரகு என்பது இங்கு என்னைத் தவிர வேறு யாராய் இருக்க முடியும்... இன்னும் சில அத்தியாயங்கள் வரும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சிண்ட்ரோம் என்பது என்ன என்று தெரியவரும்... இது ஒரு சஸ்பென்ஸ் மெட்டீரியல் அல்ல... இது கதையில் விரவியிருக்கும் ஒருவிதமான முயுச்சுவலி எக்ஸ்க்ளூசிவ் என்பது மாதிரியான விஷயம். அதைப் பற்றிய குறிப்புகள் இருக்கத்தான் இருக்கு கதையில்.
நிஜமாகவே அண்ணே! இது மாதிரி முகம் தெரியாத மனிதர்களின் அக்கறை வாய்க்கப் பெற்றது என்னுடைய பாக்கியம் என்று தான் நினைக்கிறேன். இது போல அக்கறையுடன் பேசுபவர்கள், மிகக்குறைவு தான். இரண்டாம் பெயரிலி கூறியது போல ஒரு கரிசனத்துடன் பார்ப்பவர்கள் தான் அதிகம். அய்யோ ராகவனை காயப்படுத்திவிடும்... அதனால் சிலாகிக்க வேண்டிய வரிகளை மாத்திரம் சொல்லிவிட்டு போயிடலாம் என்பவர்கள் தான் அதிகம்.
நுவலுநர் ஒரு பெண்பால் என்பது தெளிவானது வித்யா என்று பெயர் குறிப்பிடும் போது தான் என்பது ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் நான். ஆனால் இது போல காத்திருத்தல்... எதிர் பாலினரை எதிர்நோக்கும் போது மட்டும் தான் நிகழ்கிறது என்று நினைக்கிறேன்... விழி நட்ட வழித்தடங்கள்... சைக்கிளை விட்டு இறங்கும் போது அவன் என்ற குறிப்பிலேயே காத்திருப்பது ஒரு பெண் என்று விளங்கிக் கொள்ள முடியும் என்ற என் கருத்து இங்கு செல்லுபடியாகாது. கதை சுணக்கமாகவே இருந்தது, என்பது வாஸ்தவம் தான். அடுத்த அத்தியாயம் இன்னும் கூர்மையாய் இருக்கும் என்பது நிச்சயம்.
“யார் யாரை என்பதில் தான் குழப்பம் மிஞ்சுகிறது” என்ற இறுதி அடியில் தெளிவதை குறிப்பிட்டது, நீங்கள் ஒருவர் தான்.
அன்புடன்
ராகவன்
/யார், யாரை... என்பதில் தான் எனக்கு குழப்பம் மிஞ்சியது./
ரொம்ப நேரம் வதைத்தது இந்த வார்த்தைகள்!
அன்பு அருணா,
உங்கள் கருத்துக்கு ரொம்பவும் நன்றி... தொடர்ந்து வந்து வாசித்து உங்கள் கருத்தைச் சொல்வதற்கு என் அன்பும்
அன்புடன்
ராகவன்
"ரகு என்பது இங்கு என்னைத் தவிர வேறு யாராய் இருக்க முடியும்... " ரகு நீங்கள் தானோ என்று படிக்கும் போது (ஏனோ) தோன்றியது ..
நேரமில்லைன்னு சொன்னா நம்புவிங்களான்னு தெரியலை? இருந்தாலும் சொல்றேன் படித்துவிட்டேன் ஆனால் பின்னூட்டமிட நேரமில்லை, என் பதிவுகளின் பக்கம் வந்தே 10 நாட்களுக்கு மேல் ஆகிறது.
மருதாணிப்பூ வாசம் என்றிருந்தால் இது ஆண்மொழி என்று சொல்லலாம், மருதாணி சித்திரங்கள் என்ற போதே இது ஒரு பெண்ணின் கையிலிருந்து உதிர்ந்த சித்திரமாகத்தான் இருக்குமென்பது சொல்லாமலே புரியும் தலைப்புக்கவிதை.
ஸ்ரீவில்லிப்புத்தூர் சிண்ட்ரோம்// :-) ராகவன் இன்ஸ்டிங்க்ட் மாதிரி.....
இதுவரை ராகவன் மாதிரி எழுத முடியவில்லையேன்னுதான் பொறாமை பட்டிருக்கேன், இப்போ ராகவனாக இருக்க முடியவில்லையேன்னு மாறிப்போச்சு... :-)
எல்லோருக்கும் பொதுவாய் சித்திரங்கள் தொடரட்டும்....
Post a Comment