Wednesday, January 25, 2012

ஊஞ்சல் விழுது . . .

வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போல இருந்ததும் சட்டென்று முழிப்பு வந்தது அவனுக்கு.  கட்டிலைவிட்டு தடக்கென்று எழுந்ததில் தலையணை அடியில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. கைலியைத் தேடினான், போர்வையுடன் சுருண்டு கிடந்தது. எடுத்து தலை வழியாக உள்ளே நுழைத்து, சாத்தியிருந்த கதவைத் திறந்தான்.   

நல்லதண்ணீர் குழாய் அருகில் தண்ணீருக்காய் சண்டையும் வாக்குவாதங்களும் பரஸ்பர வசை பிரயோகங்களும் நடந்து கொண்டிருந்தது.  புடவையையும், பாவாடையும் ஒருசேர முழங்காலுக்கு தூக்கிச் சொருகி சண்டை போட்டுக் கொண்டு இருந்தவர்கள், அவனைப் பார்த்ததும், சத்தத்தைக் குறைத்துக் கொண்டு, ஏதேதோ முனுமுனுத்தபடியே அமைதி ஆனார்கள்.  அதில் ஒருத்தி, புடவையை கீழே இறக்கிவிட்டு காலிக்குடத்தை எடுத்துக் கொண்டு, பக்கத்துக் காம்பவுண்டுக்குள் நுழைந்து விட்டாள்.  இன்னொருத்தி, குடத்தை சரியாக வைத்து, ஒன்றுமே நடக்கவில்லை என்பது மாதிரி அடிபம்பை மும்முரமாய் அடிக்கத் தொடங்கினாள். விஸ்விஸென்று சத்தம் போட்டபடியே. அங்கே கூடியிருந்தவர்கள் கொஞ்சம் தைரியமாக வேறு எங்கோ பார்ப்பது போல பாவனை செய்தபடி இருந்தார்கள். ஏதோ கெட்டவார்த்தையை முனங்கியபடி வீட்டினுள் நுழைந்தான்.

சத்தத்தில் எழுந்ததாலா அல்லது நேற்று அடித்த சரக்கினாலா என்று தெரியாத வகைக்கு, அவனுக்கு தலையை வலித்தது.  நெற்றியைப் பிளந்து வலியை யாரோ உள்ளே சொருகியது போல இருந்தது. எப்போதும் காய்ச்சுமிடத்தில் இருந்து வாங்குவது தான் வழக்கம். எங்கு கிடைக்கும் என்று வழியெல்லாம் சொல்லி முன் வீட்டில் குடியிருக்கும் ஒரு சௌராஷ்ட்ரா பையனை தான் அனுப்பினான். அங்கிருந்து வாங்கி வந்ததாகத் தான் அவனும் சொன்னான். குடித்து முடித்ததும், அப்போதே அவனுக்கு வாந்தி வருவது போலிருந்தது. புரோட்டாவைத் தின்றதில் இன்னும் தள்ளிக் கொண்டு வந்தது.  காம்பவுண்டின் முன்னால் இருந்த வாராங்காலில் தான் முழுதும் வாயில் எடுத்தான். அந்த இடம் இப்போது கழுவி விடப்பட்டிருந்தது. ருபீனா தான் செய்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டான். 

கட்டிலில் கிடந்த படுக்கையை அப்படியே ஒரு ஓரமாய் தள்ளிவிட்டு, கீழே விழுந்திருந்த கத்தியை எடுத்து, அதை லேசாய் விரலால் பதம் பார்ப்பது போல தடவினான்.  ஒன்றரை அடிக்கு மேலாய் இருக்கும் அந்தக் கத்தி, மரப்பிடியில், இரும்பு பூண் போடப்பட்டிருந்தது. பிடிக்கத் தோதாய் இருந்தது. கையில் எடுத்தவன்,  முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு, அதனை காற்றில் விஸ்க் விஸ்க்கென்று வீசிப் பார்த்தான். பிறகு தானாய் சிரித்துக் கொண்டு, இல்லாத எதிரியைத் நெட்டி கீழே தள்ளி, நாக்கைத் துருத்தி வைதான். திரும்பவும் அதை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு, ஜட்டியை மட்டும் போட்டுக் கொண்டு, கைலியை அப்படியே தரையில் விட்டான். அடுப்படியில் வைத்திருந்த டம்பிள்ஸையும், கர்லாக்கட்டையையும் எடுத்து கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய முயன்றான், முடியவில்லை. கதவு திறந்தே இருந்தது. அவனுக்கு தலைவலி விடுவதாய் இல்லை, கொஞ்சம் சூடாய் காஃபி குடித்தால் தேவலாம் என்று தோன்றியது. அப்படியே ஜட்டியோடு வெளியே வந்து முன் வீட்டு கதவைத் தட்டினான். சத்தமே இல்லை.

ரேடியோவில் ஏதோ பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.  கதவை இப்போது ஓங்கித் தட்டினான். கடைசி வீட்டில் இருந்து ஒரு ஆள் இரும்பு வாளியைத் தூக்கிக் கொண்டு கிணற்று பக்கம் போனவர், இவன் ஜட்டியோடு நிற்பதை பார்த்தார். முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டு கவனிப்பதை பார்த்தவன், 

“ம்மாளக்க! இங்க என்ன பார்வை, போடா! ஜோலிப் பு... யை பார்த்துட்டு!” என்று கையை மடக்கி ஓங்க, அவர் விழுந்தடித்து கிணற்றடிக்கு ஓடினார்.  கதவு திறக்கும் சத்தம் கேட்டது. 

‘என்ன?’ என்று கதவைத் திறந்தவள் கேட்டாள்

“ஒரு கடுங்காப்பி தர்றியா, தலைவலி உயிர் போகுது? நேத்து இந்த பவ்வுப்பய வாங்கி வந்த சரக்கு சரியில்ல போல”

‘அதுக்கு இப்படியே வரணுமா, கைலிய மாட்டிட்டு வரவேண்டியது தான? மானம் போகுது உன்னால!’

“உள்ள போடீக்...கண்டார....!, பெரிய மானத்தைக் கண்டவ, ஊருக்குத் தெரியாதா ஒம்பவுசி? போ... போயி காப்பியக் கொண்டா!” என்று கீழ்க்குரலில் சிரித்துக் கொண்டே சொன்னான்.

‘சரி போ, நான் கொண்டு வரேன்!’ என்று அவன் நகரவும், அடுப்படிக்குள் நுழைந்தாள்.

பால் பாத்திரத்தில், தண்ணீரை ஊற்றி கொதிக்குக் காத்திருந்தாள். அடுப்படியில் காற்றோட்டமே இல்லை. புகைக்கூண்டு வழியா வர வெளிச்சத்தத் தவிர வேற வெளிச்சம் இல்லை. பத்துவீடுகள் இருக்கிற காம்பவுண்ட் இது.  ‘ப’ னா போல இருக்கும் வீடுகளில் இரண்டு பக்கமும், நான்கு வீடுகள், முன் வாசல்பக்கம் இரண்டு வீடுகள்.  மொத்தம் பத்து.  இரண்டு பக்க வரிசையையும் இணைக்கும் கிணற்றடி, நாலு கக்கூஸ்கள் மற்றும் இரண்டு பாத்ரூம்கள், இரண்டு கிணறுகள்.  இரண்டு கிணற்றிலும் தண்ணீர் இருந்தது. கீழே இறங்கியிருந்தாலும், ஊறிக் கொண்டேயிருக்கிறது. குடிக்கத் தண்ணீர், வெளியே நல்லதண்ணீர் குழாய் இருக்கிறது. 

காம்பவுண்டின் முதல் வீடு அவளுடையது.  அதற்கு இரண்டு வாசல், முன் பக்கம் தெருப்பக்கமாய் ஒரு வாசலும், காம்பவுண்ட் வரிசையில் ஒன்றும் என. தெருவைப் பார்த்த கதவு எப்போதும் மூடியே கிடக்கும். புழக்கம் எல்லாம், காம்பவுண்ட் உள்ளே இருக்கும் மற்றொரு வாசலில் தான். அவள் இந்த காம்பவுண்டிற்கு வந்து இரண்டு வருஷம் ஆகிவிட்டிருந்தது. அவளுக்கு திருமணம் முடிந்த கையோடு இங்கே கொண்டு வந்து குடி வைத்தார், அவளுடைய அப்பா.  மதுரை தான் எல்லாவற்றிற்கும் வசதி, அதிலும், ருபீனாக்கு பழக்கம் உள்ள ஊர் என்று அவர் தான் பிடிவாதமாய் இங்கு குடிவைத்தார்.

அவளுடைய கணவன், குவைத்தில் வேலை பார்க்கிறான். சாதிக் அலி குவைத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்ப்பதால், கை நிறைய சம்பளம், குடும்பப் பொறுப்புள்ள ஆள் என்று அவனை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்து அவன் குவைத்திற்கு சென்றபிறகு அவனுடைய அம்மாவும் உடன் இருந்தாள் சிறிது காலத்திற்கு. அவளுக்கு ஏனோ மதுரை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அது அவள் புலம்புவதில் இருந்து ருபீனாக்கு தெரிந்தே இருந்தது. கொஞ்ச நாட்களிலேயே அவளுக்கு மாமியாருடன் சில விஷயங்களில் சண்டை, சச்சரவுகள் வர, அவள் புளியங்குடிக்கே போய் விட்டாள்.  திருமணத்தின் போது ஒரு மாத லீவில் வந்தவன், அடுத்து வர ரெண்டு வருஷம் ஆகும் என்பதால் தான், அவனுடைய அம்மாவையும் அவளுக்குத் துணையாக விட்டுச் சென்றான். ஆனால் அவளுடைய மாமியார், எந்த ஒத்தாசையும் செய்வதில்லை. ருபீனாக்கு, சமைப்பதில், வீட்டு வேலை பார்ப்பதில் சிரமம் இல்லாதிருந்தாலும், வெளியே கடைக்குப் போய்வர சிரமமாய் இருக்கும். ஆனால் அவளுடைய மாமியார் அதை கண்டு கொண்டதே இல்லை. இதை நினைக்கும் போதெல்லாம், தன் சித்தப்பா மகனை வேண்டாமென்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வரும். அவனை திருமணம் செய்திருந்தால், இத்தனை வசதியாய் இருந்திருக்க முடியாது என்று தன்னையே தேற்றிக் கொள்வாள். 

குவைத்தில்  இருந்து மாதாமாதம் வரும்  பணமும், வீட்டிலேயே கூடை பின்னுவதில்  வரும் பணமும், அவள் ஒருத்திக்கு  தாராளமாய் இருந்தது. போஸ்டாபீசிலும் கொஞ்சம் பணம் சேர்க்க முடிந்தது.  

ருபீனாவின் அம்மா, அவளுடைய சின்ன வயதிலேயே இறந்து விட்டதால், அவளுடைய அப்பா தான் அவளை வளர்த்தது எல்லாம். ஒரே பெண் அவள். அவர் டிவிஎஸ்சில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார், ஓய்வு பெற்ற பிறகும் சும்மா இருக்க முடியாமல் விராலிமலையில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் கிளார்க்காக வேலை பார்த்து அங்கேயே தங்கிவிட்டார்.  எப்போதாவது வருவதோடு சரி.  

தண்ணீர் கொதித்து வர, காப்பிப் பொடியை போட்டாள். பொங்கி வர, ஸ்டவ்வை இறக்கினாள். பால் பாத்திரத்தை கீழே இறக்கி, ஜீனியைப் போட்டு கொஞ்சமாய் ஆற்றி ஒரு தட்டை எடுத்து மூடி வைத்தாள். இட்லிக்கு அரைத்து, கரைத்து வைத்திருந்த மாவு அப்படியே பொங்கி தட்டு மாவுக்கு மேலே நின்றது. அதை எடுத்து, கரண்டியால் மாவை அடிப்பது போல கிண்ட, இறங்கியது. தட்டைக் கழுவி திரும்பவும் மூடி வைத்தாள்.  காப்பி கொஞ்சமாய் தெளிய ஆரம்பித்தது.  காப்பி மண்டி இருந்தால், அதற்கும் கத்துவான் என்று தோன்ற, ஊதி ஊதி, மேலாக ஊற்றினாள்.  காப்பியை ருசித்துப் பார்த்தாள், ஜீனி சரியாய் இருந்தது.

காஃபியை எடுத்துக் கொண்டு, அவன் வீட்டிற்கு வந்தாள். திறந்திருந்த கதவு வழியே பார்த்தாள். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இந்த நேரத்தில் எப்போதும் எதாவது உடற்பயிற்சி செய்பவன், இப்படி உட்கார்ந்திருப்பது புதிதாய் இருந்தது அவளுக்கு.

***

அவர்கள் குடிவந்த போது, விஜி அங்கு வந்திருக்கவில்லை. ஆறேழு மாதத்திற்கு பிறகு தான் அவன் குடிவந்தான். விஜி ஆறடிக்கு மேல். பலகை மாதிரி முதுகு. தலை நிறைய முடி.  முதுகில் நிறைய காயங்களோட தழும்புகள் இருக்கும், வலது மார்பிலும் ஒன்று. வீட்டில் இருக்கும் போது எப்போதும் சட்டை போடுவது இல்லை. இரண்டு மார்புகளின் மத்தியில் கொஞ்சம் முடி. சின்ன கண்கள், பெரிய நெற்றி, விடைத்த  நீளமான மூக்கு, ரெண்டு பக்கம் வடிந்த மீசை. கருப்பேறிப் போன உதடுகள். அத்தனை அழுத்தமான கீழுதடு. அதன் கீழ் பிளவாய்த் தாடை.  கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு.  அத்தனை சிவப்பில்லை அவன், ஆனால் மாநிறத்தைவிட கொஞ்சம் வெளுப்பு. நல்ல பேண்ட் சட்டை போட்டிருக்கும் போது, அவன் பழைய நடிகர் சுமன் மாதிரி இருப்பான். 

அவனை அவள் முதன் முதலாய்ப் பார்த்தபோது கீரீம் கலர் சஃபாரியில் இருந்தான். சுப்பக்கா வீட்டில் இருக்கும் போது தான் பார்த்தாள். இவர்கள் இருக்கும் காம்பவுண்டின் எதிர் காம்பவுண்ட் தான் சுப்பக்காவின் காம்பவுண்ட். சுப்பக்காவுக்கும் புளியங்குடி தான் சொந்த ஊர். ரூபினாவின் கணவன் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி தான் அவர்கள் வீடும். அங்கும் இது போல பத்து குடித்தனங்கள் இருந்தது.  சுப்பக்காவின் பேரில் தான் அந்த காம்பவுண்ட் இருந்தது.  அவர்கள் வீட்டில் மட்டும் தான் அப்போது டிவி இருந்ததால், செவ்வாய்க்கிழமை போடும் நாடகத்திற்காய் அங்கே போவது வழக்கம்.  சுப்பக்காவின் மகள் கலாவிற்கும், ருபீனாக்கும் ஒரே வயசு. அவள் திருமணம் ஆகிப்போனாலும் கூட, சுப்பக்காவின் வீட்டில் உள்ள அனைவருக்கும் ருபீனாவை பிடிக்கும். அதனால் அவள் எந்த நேரத்திலும், அங்கு வந்து போகத் தடையில்லை. அன்றைக்கு போயிருந்த போது, சுப்பக்கா வீட்டில் நிறைய கூட்டம் இருந்தது. வாசல் தாண்டியும் காம்பவுண்டில் இருக்கும் சின்னப்பிள்ளைகள் நின்று எக்கி எக்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  டிவியில் ஏதோ, படம் போடுகிறார்கள் போல என்று நினைத்தவள், பிள்ளைகளை விலக்கி உள்ளே நுழைந்த போது தான் அவனைப் பார்த்தாள்.  வயர் பின்னிய சோஃபாவில் உட்கார்ந்திருந்தான் ஒரு பக்கமாய் சாய்ந்து ஒரு தோரணையாய்.  பறக்கும் யானைக்காது காலர்கள் வைத்த  அந்த க்ரீம்கலர் சஃபாரி அவனுக்குப் பொருத்தமாய் இருந்தது. 

உள்ளே நுழைந்தவளை ஒரு கணம் பார்த்துவிட்டு, திரும்பவும் சுப்பக்கா பக்கம் திரும்பினான். 

சுப்பக்கா, இவளைப் பார்த்து, ‘ஏ ருபீனா, விஜித்தம்பி, உன் காம்பவுண்டுக்கு தான் வரப்போறாப்ல, உன் வீட்டுக்கு அடுத்த வீடு, நம்ம வீட்ல தான் கேட்டாப்ல, இங்க எதுவும் காலியில்லையேண்ணு, உங்க வீட்டு ஓனர்ட்ட  நான் தான் சொல்லி, சலீம் இருந்த வீடு காலி தானேண்ணு தரச்சொன்னேன், விஜித்தம்பியும் போய் பேசியிருக்கு, ஒத்துக்கிட்டாராம்!’

விஜி என்கிற ஆறடிக்கு மேல் வளர்ந்த தம்பி அவளைப் பார்த்து லேசாய் சிரித்தான்.  அவள் பதிலுக்கு சிரிக்கும் போது உதடு இழுத்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதன் பிறகு ஒரு மழை நாளில் பைக் ஓட்டி சர்க்கஸ் வேலைகள் செய்தது, வாசத்திண்ணையில் உட்கார்ந்து போவோர், வருவோரிடம் வம்பிழுப்பது, அவர்கள் இவனுக்கு பயப்படுவது எல்லாம் பார்க்க, பார்க்க அவளுக்கு புரிந்தது, அவன் அந்த ஏரியா ரவுடி என்பது.  சில வருஷங்களுக்கு முன்னால் அதே தெருவில் இருக்கும் தங்கராஜண்ணன் காம்பவுண்டில் குடியிருந்தபோது, அவன் எம்.கெ.புரத்தில் அழகர் என்ற சகரவுடியை கொன்றதற்காய் ஜெயிலுக்குப் போய்விட, வீட்டை அவர் வேறு ஒரு ஆளுக்கு வாடகை கொடுத்து விட்டார். அதனால் வேறு வீடு பார்க்க வேண்டிய கட்டாயம் வர, அவள் இருக்கும் காம்பவுண்டில் வீடு எடுத்திருக்கிறான் என்று பின்னாளில் சுப்பக்கா சொல்லித் தெரிந்தது. 

இதையெல்லாம் கேள்விப்பட்ட போது தான் அவளுக்கு தெரிந்தது, எதற்காக சுப்பக்கா வீட்டில் அத்தனை ஜனங்கள் கூடியிருந்தார்கள் அவனை வேடிக்கை பார்க்க என்று. அதன் பிறகு சுப்பக்கா அவன் வீர, தீர சாகசங்களைச் சொல்ல அவளுக்கு கொஞ்சம் பயம் வரத் தொடங்கியது.  ஆனால் அவன் மூலமாய் எந்த தொந்தரவும் வந்ததில்லை, காம்பவுண்டில் இருந்தவர்களுக்கு.  எப்போதாவது நிறைய குடித்து விட்டு, யாரையோ கெட்ட வார்த்தைகளில் சரமாரியாகத் திட்டுவதோடு சரி.  

திடீரென்று ஒரு நாள் ஒரு அல்சேஷன் நாயைக் கொண்டு வந்தான். அது அவன் சொல்படியெல்லாம் கேட்டது, மதிய சாப்பாட்டிற்கு பிறகு அதனைக் கொஞ்சிக் கொண்டு இருப்பது தான் அவன் வேலை. தெருவில் நின்று கொண்டு, ஒரு பந்தை வைத்துக் கொண்டு அவனும் அந்த நாயும் மாற்றி மாற்றிக் கொஞ்சி விளையாடுவது அத்தனை அழகாய் இருக்கும்.  இந்த தெருவுக்கே அது நாள் வரை தெரிந்திருந்தது ஒரு நாய் தான், அது சுப்பக்கா காம்பவுண்டில் இருக்கும் சவுராஸ்ட்ரா வீட்டில் இருக்கும் மோதி என்ற நாய். அதுக்கு ஒரு கண்ணில் பூ விழுந்து ரொம்பவும் பலகீனமாய், பயந்து போய் இருக்கும். அவர்கள் வீட்டிலே அதற்கு சாப்பாடு போடுவார்களோ இல்லையோ, தெருவில் இருக்கும் எல்லார் வீட்டிற்கும், மதிய உணவுக்கு சென்று விடும். இந்த அல்சேஷன் வந்த பிறகு, அதுவும் போச்சு, மோதி வெளியே வருவதே இல்லை. அவனுடைய நாயை தப்பித்தவறிப் பார்த்தாலே, அது பம்மிக் கொண்டு வாலைக் குழைக்கும். அல்சேஷன் அதைக் கண்டுகொள்வதே இல்லை. 

அத்தனை வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், இது போன்ற பெரிய நாயை வைத்திருப்பது எத்தனை சிரமம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், அதை யாரும் காட்டிக் கொண்டதில்லை. அதுவும் அதை வெளியே கட்டிப் போட்டிருக்கும் போது கிணற்றைத் தாண்டி மறுபக்கமாய் சுற்றி செல்பவர்கள், தங்களுக்குள் புலம்பிக் கொள்வதோடு சரி, அதைப் பற்றி பேசவோ, அந்த நாயைக் கொஞ்சவோ யாருக்கும் தைர்யம் இல்லை.  அவன் வீட்டைத்தாண்டும் போது, நாய்க்கு பயந்ததினாலோ அல்லது அவனுக்கு பயந்ததினாலோ எதிர் சுவற்றை ஒட்டியபடியே நடப்பதினால், சுவற்றின் காரை முழுவதுமாக உதிர்ந்து குறிப்பிட்ட உயரத்தில், பள்ளமாய்ப் போனது. 

எல்லோரும் பயப்படும், எல்லோரையும் பயமுறுத்தும் விஜி ஒரு நாள் அழுதது தான், ருபீனாக்கு ஆச்சரியமான விஷயமாய் இருந்தது.  அத்தனை கேவி கேவி அழுதான் அன்று முழுதும், எங்குமே போகாமல், வீட்டினுள்ளேயே, யாரையோ திட்டிக் கொண்டு அவன் அழுது புலம்புவது அனேகமாய் எல்லோருக்கும் கேட்டிருக்கும். என்ன காரணம் என்று தெரியவில்லை.  ருபீனாக்கு ரொம்பவும் வேதனையாய் இருந்தது அவன் அழுதது. அவளுடைய மாமியாரும், விஜி குடிவந்து ஒரு மாதத்திலேயே மகள் வீட்டுக்கு சென்று விட்டாள். அவள் இருந்தாலாவது போய் பார்த்துவிட்டு வரச்சொல்லலாம், என்ன ஆச்சு என்று கேட்கச் சொல்லலாம். 

கொஞ்சம் நேரம் யோசித்தவள், வீட்டை விட்டு இறங்கி, அவன் வீட்டுக்கு சென்று சாத்தியிருந்த கதவை லேசாய் திறந்து, நாய் இருக்கிறதா என்று பார்த்தவள், நாய் இல்லை என்றதும், நன்றாகத் திறந்தாள். ருபீனாயைப் பார்த்ததும், வேகமாய் எழுந்து வாசலுக்கு வந்து, “போடீ!” என்று கத்திவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டான்.  திரும்பவும் வீட்டிற்கு போனவளை எதிர் காம்பவுண்ட் வாசலில் நின்றவர், ‘உனக்கு ஏம்மா தலையெழுத்து!’ என்று சொல்லி உள்ளே வீட்டிற்குள் போகச்சொல்லி ஜாடை காட்டினார். அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது வீட்டினுள் நுழைந்து கொண்டாள். 

அன்று மாலையே ருபீனாயின் வீட்டுக்கு வந்தான். அவள் அப்போது கூடைச்சேரில் உட்கார்ந்து ஆனந்தவிகடனில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள், பிரபஞ்சனின் ‘காதலெனும் ஏணியிலே’. இவனைப் பார்த்ததும், புத்தகத்தை கட்டிலில் போட்டு விட்டு எழுந்து நின்றாள்.  என்ன செய்யப்போகிறானோ என்று பயம் வந்தது அவளுக்கு.

“காஃபி  கிடைக்குமா, தொண்டையெல்லாம் காஞ்சு போய்கிடக்கு, அதான்!”  என்று நிதானமாய் மூக்கை உறிஞ்சிக்கொண்டே பேசினான்.

‘உட்காருங்க தரேன்’ என்றவள், அடுப்படியில் நுழைந்து, சட்டியில் பால் இருக்கிறதா என்று பார்த்தாள். மதியம் சாப்பாடு முடித்ததும், காஃபிக்கு கலந்தது ஞாபகம் வந்தது.

‘கொஞ்சம்  இருக்கீங்களா? கோமதியக்காகிட்ட  பால் வாங்கிட்டு வந்துடறேன்’

“கடுங்காப்பியே  கொடுங்க, பால் வேண்டாம்!”  என்று சொல்லிக் கொண்டே கட்டிலில்  உட்கார்ந்து, அவள் கட்டிலில்  போட்டிருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.

அவன் அங்கே  இருக்கும் போது, அடுப்படியில் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அடுப்படியில் காஃபி போடுவது, அவளுக்கு சங்கடமாக இருந்தது. அவனிடம், வீட்டில் போய் இருக்கச் சொல்வது எப்படி என்று தெரியாமல், காஃபி கலந்தாள்.  அங்கே இங்கே சிந்தி, ஒரு வழியாய் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.

காஃபியை கையில் வாங்க புத்தகத்தில் இருந்து நிமிர்ந்தவனின் கண்களில் கண்ணீர் இருந்தது மாதிரி இருந்தது.  'அய்யோ  அழறானோ?' என்று யோசித்தவாறே  நின்றாள்.

“என்னோட டைகரைக் கொன்னுட்டாய்ங்கங்க, எவனோ சோத்துல வெஷம் வச்சிருக்கான், கறிச்சோறுங்கிறதால, தெரியாம சாப்ட்டிருச்சு போல.  விடியக்காலைல பார்த்தா, பேப்பர் மேல கொஞ்சம் சாப்பாடு மிச்சம் இருக்கு, ரோஸ் கலர்ல, அதுக்கு பக்கத்துல டைகர் நாக்கு தள்ளி செத்துப் போயிக்கெடக்கு! தூக்கிப் பார்த்தா ஒண்ணுமே இல்லை. எந்த தேவிடியா மகென் வெஷம் வச்சான்னு தெரிஞ்சதுன்னா, அவனை பொலி போட்டுருவேன்.  எவ்வளவு ஆசைஆசையா வளர்த்தேன் தெரியுங்களா, எங்க அண்ணன் வீட்ல இருந்தத நான் தான், துணைக்கு வச்சுக்கலாம்னு கொண்டு வந்தேன், அங்கேயே விட்டிருக்கலாம், அநியாயமா இங்க வந்து செத்து போயிடுச்சு” என்று திரும்பவும் அழுதான்.

காஃபியை கையில் வைத்துக் கொண்டு என்னவோ, பேசிக் கொண்டிருந்தான், அவளுக்கு அது எதுவும் காதில் விழவில்லை.  இப்படி சின்னப்புள்ள மாதிரி அழறானேன்னு தோன்றியதும், அவளுக்கு ரொம்பவும் விசனமாய் போய்விட்டது.  

‘அழுகாதீங்கண்ணு சொல்றதத்தவிர எனக்கு வேற  ஒண்ணும் சொல்லத் தெரியலைங்க!’  என்று கொஞ்சமாய் தைர்யம்  வந்து கூடைச்சேரில் உட்கார்ந்தாள்.  

அவன் காஃபியைக்  குடித்துவிட்டு, டம்ப்ளரை நீட்டினான், வாங்கிக் கொண்டாள்.

“வெளிய  போக மனசுக்கு கஷ்டமா இருக்கு, ராத்திரி உங்க வீட்ல ஏதாவது செஞ்சு தர்றீங்களா? காசு கொடுத்துறேன்?”

‘காசு வேணாங்க, எனக்கு என்ன சமைக்குறனோ அதயே ஒங்களுக்கு சேத்து செய்யிறேன்’ என்றாள். அன்று அவன் சமையலை விரும்பி சாப்பிட்டதில் இருந்து, எது விசேஷமாய் செய்தாலும், அவனுக்கு சேர்த்து செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.

***

காஃபியைக் கொடுத்தாள் கட்டிலின் முனையில் வைக்கச் சொன்னான்.  வைக்கும் போது அவளை அப்படியே இழுத்து பக்கத்தில் உட்காரச் சொன்னான்.  

உட்கார்ந்தாள். அப்படியே காதோரமாய் பிடரியில் முடியை விலக்கி முத்தமிட்டான்.

அவளுக்கு கூச்சமாயும் சுகமாயும் இருந்தது. அடுத்து அப்படியே கழுத்தைக் கடிப்பான், அப்புறம் தோள்வழியாக கைகளை கொண்டு சென்று, இரண்டு மார்புகளுக்கு நடுவே கை வைத்தபடியே அணைத்து இழுப்பான், என்று அவன் பக்கமாய் லேசாய் சாய்ந்தாள். அவன் காஃபியை கையில் எடுத்திருந்தான், அவள் சாய, லேசாய் சிந்தியது காஃபி தரையில், அப்படியே தொடையில் இணுங்கிவிட்டான். அவளுக்கு கண்ணில் நீர்முட்டிக் கொண்டு வந்தது. இன்னும் ஜட்டியோடே இருந்தான், பதிலுக்கு அவளுக்கும் அவன் தொடையில் கிள்ள வேண்டும் என்று தோன்றியது.  ஆனால் செய்யவில்லை, தொடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். பருத்த தொடை இல்லை,  இறுகியிருக்கும் தொடை. ஆனால் அவள் நினைத்தபடி அவன் ஏதும் செய்யவில்லை.

அவன் காஃபியை குடித்து முடித்ததும், அதை வாங்கிக் கொண்டு எழுந்திருக்க முற்பட்டாள்.

“இருடி போவ!  கொஞ்சம் தலையப்பிடிச்சு விடு” என்று அப்படியே கட்டிலில் சாய்ந்தான். 

கீழே தரையில் கிடந்த கைலியை எடுத்து அவன் இடுப்புக்கு கீழே போர்த்தியது போல போட்டாள்.  கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது இவனுக்கு என்று நினைத்துக் கொண்டாள். எழுந்து மரஅலமாரியைத் திறந்து தைலத்தை எடுத்தாள். வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. கீழ்த்தட்டில் அவனுடைய உடைகளும், சில படங்களும் இருந்தது, துணிகளுக்கு அடியில் ஏதோ குழாய் முனை போல் நீட்டிக் கொண்டிருக்க, துணியைத் தூக்கிப் பார்க்க அது ஒரு கைத்துப்பாக்கி. அதை உருவி, கையில் எடுக்க, கனமாய் இருந்தது. ஏதோ படபடவென்று வர, எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.

அவனருகே வந்து அவன் தலையில் தைலத்தை தடவினாள்.  இரண்டு பொட்டிலும் லேசாக விரல்களால், அழுத்தி சுற்றுவது போல் செய்ய அவனுக்கு கிறக்கமாய் இருந்திருக்க வேண்டும். கண்களை மூடிக்கிடந்தான். அவனை பார்ப்பது போல உட்கார்ந்திருந்தவள், அவன் நெற்றியின் மத்தியிலும் தடவினாள். இடது கையால், அவன் தலைமுடியைக் கோதுவது போல செய்தாள்.  

“காலையில என்ன பலகாரம்?”

‘இட்லி’

“ரெண்டு தோசை ஊத்திக்குடு, தோசை சாப்பிடணும் இன்னிக்கு! அப்படியே முட்டை வாங்கிட்டு வந்து மேலே ஊத்து, முட்டை தோசையா சாப்பிடுறேன், அப்புறம் ஒரு கடுங்காப்பி”

'சரி! முட்ட இல்லை, போய் வாங்கணும்!'

“நீ போகாத அந்த முன்வீட்டுப் பயலைக் கூப்பிடு, நான் சொல்றேன்!” 

அலமாரியில் பார்த்த துப்பாக்கி பற்றி அவளுக்குக் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

'துப்பாக்கியப் பாத்தேன்!'

“என்ன? அதான் அப்பப்போ பாக்குறியே, இன்னைக்கு என்ன புதுசா?” என்று படுத்தவாறே குனிந்து பார்த்து சிரித்தான்.

'சீ! நான் சொன்னது அலமாரில இருக்குறத!

'“தைலத்தை எடுக்கப்போனா, அத மட்டும் செய்ய வேண்டியது தானே? கண்டதையும் எதுக்கு நோண்ட்ற?” என்று கத்தினான்.

'அத எனக்கு எடுத்துக்காட்டேன்! எப்படி இருக்குண்ணு பார்க்குறேன்!'
திரும்பவும் கையைக் கீழே கொண்டு போனவன், அவள் தலையில் அடித்தபடி எழுந்திருக்க அவளது கையைப் பற்றி இழுத்தான்.  கருப்பு கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தவளின் கை, அப்படியே சிவந்தது.  

“இந்தக் கலருக்கு தாம்புள்ள, விழுந்துட்டேன்!, சரி மெதுவா எடுத்துட்டு வா, லோடாயிருக்கு” 

ஒரு சிரிப்புடன் அலமாரியை திறந்து துப்பாக்கியை எடுத்தாள்.  அதனின் கனம் அவளுக்கு ஒருவிதமான சந்தோஷத்தைக் கொடுத்தது, அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.  பத்திரமாக அவன் கையில் கொடுத்தாள்.

கையில்  வாங்கியவன், சிலிண்டரை திறந்து அதில் இருந்த தோட்டாக்களில்  ஒன்றை உருவினான்.  அவள் கையில் கொடுத்தான், அவளுக்கு அதைப் பார்க்கும் போது ஏனோ  சிரிப்பு வந்தது.

பித்தளை உடம்பின் முனையில், ஏதோ வெள்ளை உலோகத்தில் ஒரு மொட்டு போன்ற  முனையைத் தொட்டுப் பார்த்தாள்.  அதன் பின்னால், ஆணியை அறைந்திருந்தது  போல ஒரு கருப்பு வட்டம் இருந்தது. இது எப்படி ஒரு  ஆளைக் கொல்லுது என்று அவளுக்கு அதைப் பார்த்த போது விளங்கவில்லை.

எல்லாத்தோட்டாக்களையும்  அதிலிருந்து உருவி, கீழே வைத்துவிட்டு, சிலிண்டரை  சுற்றிக் காட்டினான்.  டிரிக்கரை இழுக்கையில், மேலே இருக்கும் சுத்தி தோட்டாவில் இருக்கும் பின்னை தொட்டு, நெருப்பை உண்டு பண்ண, நெருப்பு தோட்டாவின் உள்ளே இருக்கும், எரிமருந்தை பற்றவைத்து, உள்ளே வெப்பக் காற்று அழுத்தமாகி தோட்டாவை பாரல் வழியாய் சுழன்ற படியே துப்பும். பாரல், தோட்டாவை சுழலவும், நேராய் போவதற்கும் உதவுகிறது, என்று துப்பாக்கி செயல்படுவதைப் பற்றி சொல்லிக் கொண்டே போனான்.  

“இது டபுள்  ஆக்சன் ரிவால்வர், ஒரு தோட்டா வெளியே போனதும், இந்த சிலிண்டர் லேசாய் சுற்றி, அடுத்தது பொசிஷனுக்கு வந்துடும், இது சும்மா ஆசையா தெரிஞ்சுக்கிட்டது” என்று கண்களை விரித்து ஒரு குழந்தையைப் போல ஆர்வமாய் சொல்வது அவளுக்கு வியப்பாய் இருந்தது. 

“சரி எடுத்த எடத்திலேயே வச்சுடு!” என்று  தோட்டாவை திரும்பவும் லோட் செய்து அவள் கையில் கொடுத்தான்.

ருபீனாக்கு அது அத்தனை கவர்ச்சியாய் இருப்பது போலத்தோன்றியது.  எடுத்து அவனுடைய துணிகளுக்கு அடியில் வைத்தாள்.

‘நான் தோசை ஊத்திக் கொண்டு வரேன், நீ குளிச்சுட்டு வந்துடு’ என்று  அங்கிருந்து நகர்ந்தாள்.

முன்வீட்டில்  இருக்கும் பையனை அழைத்து  அவன் கூப்பிடுவதாய் சொல்லிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தாள்.  கொஞ்சம் சின்ன வெங்காயத்தை உரித்து, தக்காளி, உளுத்தம்பருப்பை எடுத்து, காய்ந்த மிளகாயையும் சேர்த்து லேசாய் எண்ணெய் விட்டு வதக்கினாள். கொஞ்சம் பெருங்காயம் கலந்து அம்மியில் நகட்டி, மிளகாய் சட்னியை தயார் செய்தாள்.

சாதிக்கிற்கு  தோசையும், மிளகாய்ச் சட்னியும்  ரொம்பவும் பிடிக்கும் என்று  நினைவுக்கு வந்தது. கல்யாணத்திற்கு ஜூபிடரில் எடுத்த போட்டோ தொங்கிக் கொண்டிருந்த சுவரை  ஏனோ பார்க்கத் தோன்றியது.  சாதிக்கின் நினைவு வரும்போதெல்லாம், இந்த போட்டோவைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வது  போல இருந்தது அவளுக்கு.

விஜியை  அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சாதிக்கை நினைக்கும் போது பாவமாய் இருந்தாலும், அவன் மேல் தனக்கு காதலோ, ப்ரியமோ வர சாத்தியங்களே இல்லை என்று நம்பத்தொடங்கியிருந்தாள்.

31 comments:

பொன். வாசுதேவன் said...

ம்ம். வழக்கம் போலவே அருமை.

ராகவன் said...

கார்த்திகை பாண்டியனிடம் இருந்து...


ராகவன்.. வழக்கம் போலத் தலைப்புல அடிக்கிறீங்க.. ரொம்ப இயல்பான மெனக்கெடாத கதை. சில நேரங்கள்ல உங்களப் பாத்தா பொறாமையா இருக்கு தலைவரே. எனக்கு காற்றில் ஆடும்.. விட இது ரொம்பப் பிடிச்சிருக்கு. அலைகளே இல்லாத கடல் மாதிரி, மேலோட்டமா எளிமமையா.. உள்ளே போகும்போது இரண்டு மனுசங்களோட வெவ்வேறு குணாதிசயங்கள் விரிஞ்சு போறதப் பேசிக்கிட்டு.. நல்லா வந்திருக்கு.

வாழ்த்துகள்..:-))

Anonymous said...

போகன் சொன்னது:

அற்புதமாக இருக்கிறது.ஆனால் சிறுகதை?ஒரு நல்ல நாவலின் தொடக்கமாக இருக்கக் கூடுமே..ஏன் தொடரக் கூடாது?

க ரா said...

அற்புதம்..

க ரா said...

கொஞ்சம் கொஞ்சமா உங்க பாணிலேந்து வெளில வர மாதிரி தெரியுதுண்ணே எனக்கு. கதைக் களனும் புதுசா இருக்கற உணர்வு. ரொம்ப புடிச்சிருக்கு.

சசிகலா said...

அவன் மேல் தனக்கு காதலோ, ப்ரியமோ வர சாத்தியங்களே இல்லை என்று நம்பத்தொடங்கியிருந்தாள்.
மிகவும் அருமை முடித்த விதம்

ராகவன் said...

அம்பையிடமிருந்து...

ராகவன்,

நல்ல கதை. நல்ல தலைப்பு. தலைப்புக்கான காரணங்களைச் சொல்லுங்களேன். நான் யூகிப்பதும் நீங்கள் நினைப்பதும் பொருந்துகிறதா என்று பார்க்கத்தான். சில எழுத்துப் பிழைகள் உள்ளன. நீக்கி விடுங்களேன்.

அன்புடன்,

அம்பை

rajasundararajan said...

ஒரு பாமர வாசிப்புக்கு, சம்பவங்கள் அதிகம் இல்லாத ஒரு கதையாகத் தோன்றியது:

ஒரு ரவுடி ஒரு நாயைக் கொண்டுவந்து வளர்க்கிறான். அது கொல்லப் படுகிறது. ரவுடி மேல் அக்கறை/ இரக்கம் காட்டிய வழி, கணவன் தொலைவிலகிய நிலையினள் ஒருத்திக்கும் அந்த ரவுடிக்கும் தொடுப்பு வருகிறது.

ராகவன், ஆனால், இப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் தரத்தில் எழுதக் கூடிய ஆளா என்ன?

வாசித்து வருகையில், //அதுக்கு ஒரு கண்ணில் பூ விழுந்து ரொம்பவும் பலகீனமாய், பயந்து போய் இருக்கும். அவர்கள் வீட்டிலே அதற்கு சாப்பாடு போடுவார்களோ இல்லையோ, தெருவில் இருக்கும் எல்லார் வீட்டிற்கும், மதிய உணவுக்கு சென்று விடும்.// என்று குஜராத்தி (சௌராஷ்ட்ரா) வீட்டுநாயைப் பற்றிய வர்ணனை என்னை நிதானிக்கச் செய்தது. //மோதி என்ற நாய்.// என்று வேறு அதற்குப் பெயர்.

அவ்வளவுதான், விளங்கிவிட்டது வெற்றிச்செல்வியை.

'விஜி'க்கு //முதுகில் நிறைய காயங்களோட தழும்புகள் இருக்கும், வலது மார்பிலும் ஒன்று.// என்பதில் இடதுசாரி 'அட்டாக்'கும் கணக்கில் வருகிறது. //எம்.கெ.புரத்தில் அழகர் என்ற சக ரவுடியை கொன்றதற்காய்// என்பதில் விஜியின் சற்றிப்போதைய வெற்றியும் விளங்கிவிட்டது.

கதை மாந்தர்களின் பெயர்களைக் கூட அர்த்தம் பொதியத் தேர்ந்தெடுப்பாரே என்று 'ரூபினா' என்றால் 'அருவி', 'அன்பின் அருள்'; 'சாதிக்' என்றால் 'உண்மையுள்ளவன்' என்றெல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தேனா, "இவ்வளவு ஹோம் ஒர்க் என்னத்துக்கு?" என்று 'டைட்டானிக்' படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்து கிச்சுக்கிச்சியது:

அப் படத்தின் நாயகி யூதர்களின் அடையாளமாக வருபவள். நாயகன் கடவுளின் குறியீடு. கடவுள் யூதர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார் என்று உணர்த்த, அவர்கள் இருவரும் கலவியில் ஈடுபடுவதாய்க் காட்டப் படும்.

விஜி ரூபினாவோடு.. புரிகிறதுதானே?

இருவருக்கும் துப்பாக்கிமேல் உள்ள/ உருவாகும் காதல்... ஓ!

//நல்லதண்ணீர்க் குழாய் அருகில் தண்ணீருக்காய் சண்டையும் வாக்குவாதங்களும் பரஸ்பர வசை பிரயோகங்களும் நடந்து கொண்டிருந்தது. புடவையையும், பாவாடையும் ஒருசேர முழங்காலுக்கு தூக்கிச் சொருகி சண்டை போட்டுக் கொண்டு இருந்தவர்கள், அவனைப் பார்த்ததும், சத்தத்தைக் குறைத்துக் கொண்டு, ஏதேதோ முனுமுனுத்தபடியே அமைதி ஆனார்கள்.//

புரிதலுக்குப் பின் இது நகைச்சுவை ஆயிற்று.

//தோட்டாக்களில் ஒன்றை உருவினான். அவள் கையில் கொடுத்தான், அவளுக்கு அதைப் பார்க்கும் போது ஏனோ சிரிப்பு வந்தது. பித்தளை உடம்பின் முனையில், ஏதோ வெள்ளை உலோகத்தில் ஒரு மொட்டு போன்ற முனையைத் தொட்டுப் பார்த்தாள்.//

இதுவும்.

ஆனால் இக் கதையை இப்படிப் புரியக் கொண்டதில் எனக்குச் சிரிப்பு வந்ததா டெர்ரர் வந்ததா என்று சொல்லத் தெரியவில்லை.

Mahi_Granny said...

உங்கள் கதைகளின் தலைப்புக்களை மட்டும் வைத்து உங்களின் கதைகளை யாரேனும் Ph.D செய்யக் கூடும். அத்தனை அழகும் பொருத்தமானதும் கூட. நல்ல கதைசொல்லி நீங்கள். வாழ்த்துக்கள் ராகவன்

ராகவன் said...

அன்பு வாசு,

ரொம்ப சந்தோஷம்... நீங்கள் என் வலைதளத்திற்கு வந்து தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று தெரிகிறது உங்கள் கருத்தில் இருந்து... ரொம்பவும் சந்தோஷம்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு காபா,

உங்களுக்கு இந்த கதை பிடித்திருப்பது மகிழ்ச்சி... ரொம்ப இயல்பான கதை என்பது நிஜம் தான், ஆனால் மேலோட்டமான கதையா என்று சொல்லமுடியவில்லை.

இந்தக்கதையில் சில புதிதாய் முயற்சி செய்திருக்கிறேன்... கொஞ்சம் நகையுணர்வும், மெலிதான அரசியலும் கலந்திருக்கிறது என்று நான் நினைத்தேன்... அது சரியாய் சொல்லவில்லை போல...

பொறாமைப் படும் அளவு நான் எழுத நான் இன்னும் முயலவேண்டும் என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்துக்கும் அன்புக்கும்

என் அன்பும் நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு போகன் அவர்களுக்கு,

உங்கள் கவிதைகளையும், ஒரு சில கதைகளையும் படித்து நான் வியந்திருக்கிறேன்... சொல்முறையும், கட்டுமானமும் அத்தனை நேர்த்தி உங்களிடம். உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பதும் எனக்கு சந்தோஷம் தருகிறது.

என் கதைகள் ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல, கொஞ்சம் திறப்பானவை... அதை நீட்டிக்க படிப்பவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பிருக்கிறது... ஆனால் தொடர்கதையோ அல்லது நாவலாகவோ விரிக்க நிறைய எழுதவும், நிறைய மெனக்கெடவும் வேண்டும், தற்போது நேரத்தின் காரணமாய் என்னால் முடியவில்லை... ஆனால் எழுதுவேன்... சொல்லப்போனால் ஒரு நாவல் எழுத ஆரம்பித்து விட்டேன்... பார்க்கலாம்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராம்,

உன் கருத்துக்கும், தொடர்ந்த வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சசிகலா,

உங்களை இப்போது தான் என் வலைதளத்தில் பார்க்கிறேன்... உங்கள் கருத்துக்கு என் அன்பும் நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அம்பை,

ரொம்பவும் சந்தோஷம், நீங்கள் இதை படிக்க நிகழ்ந்ததும், அதைப் பற்றி குறிப்பிட்டதும், மகிழ்ச்சியைத் தருகிறது.

எழுத்துப்பிழைகள் தெரிந்த வரையில் சரிசெய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராஜா அண்ணன் அவர்களுக்கு,

இது ஆச்சரியமான, அங்கீகாரமான ஒரு விஷயம்.

நீங்கள் நான் எழுதுவதை முழுக்க பார்த்திருப்பதாய் உங்கள் கருத்தைப் படிக்கும் போதே எனக்குத் தோன்றியது. நாயைப் பற்றிய குறிப்பும், மோதி என்ற பெயரும்... அதன் பின்னணியும் உங்களுக்கு மட்டுமே புரிந்திருக்கிறது.

கொஞ்சம் அரசியல் ஷேடுடன் எழுதியதை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை எனக்கு இல்லை... இப்போது.

என் கதைக்கு இது போல, நீங்கள் வந்து கருத்து சொல்வது படிக்கிற எல்லோருக்கும் ஒரு புதிய திறப்பைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

துப்பாக்கியைப் பற்றி பேசியதும் அவ்வாறே... சிலிண்டரும்... தோட்டாக்களும்... அதைப் பற்றிய குறிப்புகளையும் நீங்கள் புரிந்து கொண்டது ரொம்பவே பிடித்திருந்தது...

ருபீனாவின் பெயரை யோசித்து தான் வைத்தேன்.. ஆனால் சாதிக்கின் கதாபாத்திரத்தைச் சொல்ல எனக்கு சரியான பெயர் அமையவில்லை என்பதே நிஜம். ஆயிரம் கண்கள் அண்ணே உங்களுக்கு...

அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ப்ரோட்டோ அம்மா அவர்களுக்கு,

தலைப்புல யாரு பி.எச்.டி பண்ணப்போறாங்க? இது ஒரு சாதாரண தலைப்பு தான் என்று நினைக்கிறேன்... கதையின் ஓட்டத்தை அல்லது அதை வாசிப்பவர் புரிந்து கொள்ள ஏதுவாய் நிறைய புரிதல்களுக்கு இடம் கொடுப்பது மாதிரி ஒரு தலைப்பு அவ்வளவே!

ஊஞ்சல் விழுதை நான் புரிந்து கொண்டவிதமும், நீங்கள் பொருத்திக் கொள்வது ஒன்றாய் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை...

உங்கள் கருத்துக்கும் வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ஆர். விஜயராகவன் said...

ரொம்பவே இயல்பான கதை போக்கு... யோசிக்கத் தேவைப் படல..அதுக்கு முன்னரே கதை பிடிச்சு போயிருச்சு ராகவன்..வாழ்த்துக்கள்..திருப்பி படிக்க படிக்க பல நகாசு வேலைகள், மெனக்கெடல் தெரியுது. எழுத்தாளுமை நிறையவே வந்துருச்சு. KEEP IT UP.

shri Prajna said...

நல்லா இருந்தது ராகவன்.சமீபத்திய உங்க கதைகளில் நல்லதொரு முதிர்ச்சி தெரியறது.(a good change, both in ur writting style and the subject which u r choosing for writting)மனசு தானே காரணமாகிப்போகிறது எல்லாத்துக்குமே.சிலருக்கு பிடிக்காதவங்க கூட வேற யாரவதுக்கு தேவையாயிருக்காங்க இல்லையா? பணமே எல்லாமுமாகிவிட்றதில்லை.மனசு தான் மாற்றங்களின் காரணி..

நிலாமகள் said...

என் கதைக்கு இது போல, நீங்கள் வந்து கருத்து சொல்வது படிக்கிற எல்லோருக்கும் ஒரு புதிய திறப்பைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...//

ரொம்ப‌ ச‌ரி! அத‌னால்தான் முத‌ல்த‌ட‌வை வாசித்து விட்டு க‌ருத்து சொல்லாம‌ல் போன‌து.

ராகவன் said...

அன்பு விஜய்,

சந்தோஷம்... உன் கருத்துக்கள் நிஜமாகவே எனக்கு உற்சாகம் தருகிறது... நீ சொன்னது போன்ற எளிமையான கதை தான்...

நகாசு செய்திருக்கிறேனா?என்னால் அப்படி சொல்ல முடியாது... எழுதும் போதே இயல்பாய் அமைந்து விடுகிறதோ என்னமோ... சலங்கை கட்டிய மனசும் புத்தியும்.. என்ன பண்றது?

எழுத்தாளுமை வந்துடுச்சா? தெரியலை... முதல்ல அப்படின்னா என்னண்ணு தெரியலை...

அன்பும் நன்றியும்...

ராகவன்

ராகவன் said...

அன்பு ஸ்ரீப்ரஜ்னா,

உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் என் அன்பும் நன்றியும்...

எடுத்துக் கொண்ட களங்கள் வேறாய் இருந்தாலும், நான் பேச முற்படுவது எப்போதுமே ஒரு ஆண் பெண் உறவாய் மட்டுமே இருக்கிறது...அதில் வெவ்வேறு வர்னபேதம் காட்டுகிறேனே ஒழிய வேறு இல்லை... நான் பார்த்ததை மட்டுமே தான் நான் எழுதுகிறேன் இன்று வரை.

எழுத்தில் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு தானே... ப்ரஜ்னா? அது உங்களுக்கு முதிர்ச்சியாய் தெரிகிறது... நான் கற்றுக் கொள்ளுகிற நிலையில் தான் இருக்கிறேன் இன்று வரை...

அன்பும் நன்றிகளும்

ராகவன்

ராகவன் said...

அன்பு நிலாமகள்,

இது சத்தியமான உண்மை... நிறைய பேருக்கு அவர் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்... நிறைய பேருக்கு திறப்பாய் இருக்கிறார் அவர்.

அவருக்கு ஆயிரம் கண்கள் என்று சொன்னது அத்தனை நிஜம்...

அன்புடன்
ராகவன்

Anonymous said...

Raghavan Sir,

1. Intha mathiri kathai balakumaran romba-ve eluthi vittar. Try some thing new. Your story opening scene similar to one balakumaran short storie (cinema stunt assistant is the hero & house owner ask him to vacate the house)
2.Gun vachirukka rowdi enn sir nife thalai mattula vachu padukka poran. May be Gun only for showing to ladies!!!!!
3. Raju sundarrajan sir eppadi ungalala intha kathai-yi paratti eluda mudiyuthu! Wrong appreciation may spoil the good writer.
4. Ponnungal na le sex thaan ungalukku theriyuma sir. Husband illama evalo ponnungal thanimiyil nalla irukkangal sir.

Anonymous said...

அனானியா எழுதுவோம்னு வந்தேன் ! அனானி பாஸ் நமக்கு முன்னாடியே எழுதிட்டார் ..( நான் அனானி 2 னு வச்சுக்குவோம் )
1.ஏன் பாஸ் " the one who does not gets impressed cannot create an impression " ன்னு ஸ்கூல்ல படிச்சத மறந்துட்டீங்களா ? அப்புடியே பாலகுமாரன வச்சு தான் ராகவன் எழுதியிருந்தாலும் இந்தக் கத உங்கள எவ்ளோ இம்ப்ரெஸ் பண்ணியிருந்தா இவ்ளோ நோட் பண்ணியிருப்பீங்க ?பாஸ இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க ராகவன் வாழ்த்துக்கள் !
2. ஏன் பாஸ் கன் வச்சிருந்தா கத்தி வச்சுக்கக் கூடாதா ? ரெண்டுமே வச்சிருந்தா தான் அவன் ரவுடி ! இப்போ நமக்கு கூட தான் பேர் இருக்கு ? நாம அனானியா வரலியா ? ராகவன் கதை தரத்துல ஒரு கால்வாசில ஒரு கத, ஒண்ணே ஒண்ணு எழுதிட்டு நாம ரெண்டு பேரும் தைரியமா ஒரிஜினல் பேர் போட்டு பின்னூட்டம் இடலாம் ஏன் பாஸ் ?
3. அட ராஜாசாரையும் வம்புல இழுத்துட்டீங்களா ? ராகவன் கதைல குறை சொல்லும் அளவுக்கு தகுதி உள்ளவரும் அவர் தான் .நிறைகளோட குறைகளையும் பட்டுனு சொல்றவரும் அவர் தான் ! ஏன் பாஸ் நமக்கு இவ்ளோ ---------?
4. இதுக்கு என்ன சொல்றது ? புருஷன் கூட இருந்தும் , பொண்டாட்டி அருகில் இருந்தும்னு லாம் கூட அடுக்கிட்டே போக வேண்டியது தான் ! இதெல்லாம் ஒரு விஷயம்னு கண்டுபிடிச்சிருக்கீங்க பாருங்க ! அங்க நிக்கிறீங்க பாஸ் ! நான் ஒரு 6 தரம் படிச்சேன் கதைய கொறையே தெரியல ..நுணுக்கம் தான் தெரிஞ்சுது ! நீங்க எத்தன தரம் படிச்சிருந்தா இத்தன அழகா என்னடா கொற சொல்லலாம்னு சொல்லுவீங்க ! ஹாட்ஸ் ஆஃப் ! பாட்டெழுதிப் பேர் வாங்கும்---- குற்றம்கண்டு பிடித்தே ---- இப்டி ஒரு வசனம் வருமே ஏனோ இப்ப அது ஞாபகம் வருதே ? ஆமா நீங்க பாட்டு எழுதறது (?)இல்ல தான்..சரி டென்ஷன் ஆகாதீங்க பாஸ் !

தலைப்பு அவ்வளவு அழகு ராகவன் ! ஒரு குழந்தைமை , அழகு , கவித்துவம் எல்லாமும் ஆன உறவு அது இல்லையா ? நிலையானதோ அது அற்றதோ ..

முதலில் பாலில்லாமல் கடுங்காப்பி தரப்போய் அதுவே வழக்கம் ஆகிடுது ?,

"அவள் பதிலுக்கு சிரிக்கும் போது உதடு இழுத்தது அவளுக்கு ஞாபகம் வந்தது". ஏனோ இந்த வரி ரொம்பப் பிடிச்சிது எனக்கு !

திருமணத்துக்காக ஒரு மாத லீவில் வரது இந்த சமூகத்துக்கே உள்ள ஒரு மோசமான வழக்கம் ! ஏதோ கடமைக்கு கல்யாணம் கட்டி விட்டுட்டுப் போயிடறது ! இந்தப்பொண்ணுங்க வீட்டுக்குள்ள அடஞ்சு நொந்து சாகுங்க ! இந்தப் பசங்க போறது சவுதியா இருந்தா ஒழுக்கம் காத்து தான் ஆகணும் ! அல்லாம வேற ஊரா இருந்தா ? அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல ! அவ செஞ்சது சரி , தப்புன்னு சொல்லல - இந்த வழக்கம் கொடூரமானது , துணைக்காக ஏங்கறது ஆண் , பெண் இருவருக்கும் பொதுவான ஒரு உணர்வு அவ்வளவு தான் !
“இது டபுள் ஆக்சன் ரிவால்வர், ஒரு தோட்டா வெளியே போனதும், இந்த சிலிண்டர் லேசாய் சுற்றி, அடுத்தது பொசிஷனுக்கு வந்துடும்" -அவ்வளவு தான் ! இது தான் வாழ்க்கையின் அப்பட்டமான உண்மை ! மேலும் மெல்லிய ஒரு கோடா நகைச்சுவை , ஒரு காதல் , கொஞ்சம் அரசியல்னு அழகான ஒரு கதை ! ராஜசுந்தரம் சார் பின்னூட்டம் ஒரு மதிப்புரை மாதிரி மேலும் அருமை சேக்குது !

"பித்தளை உடம்பின் முனையில், ஏதோ வெள்ளை உலோகத்தில் ஒரு மொட்டு போன்ற முனையைத் தொட்டுப் பார்த்தாள். அதன் பின்னால், ஆணியை அறைந்திருந்தது போல ஒரு கருப்பு வட்டம் இருந்தது. "
இது கொஞ்சம் வில்லங்கம் ராகவன் ! ராஜா சாருக்கு அதான் டெரர் வந்துடுச்சு போல !
பிரமாதப்படுத்திட்டீங்க -உழைப்பு அருமையான பலன் குடுத்திருக்கு வாழ்த்துக்கள் !

rajasundararajan said...

ராகவனோட இதுக்கு முந்துன கதையில என்னெப் பத்தி ஓரளவுக்குத் திறந்து சொல்லிட்டேன். அப்பறமும் அநாமி-1 என்னெ வம்புக்கு இழுக்குறாங்க. நான் பாவம் இல்லீங்களா?

/Husband illama evalo ponnungal thanimiyil nalla irukkangal/

நல்லாவே இருக்கட்டும். ஒய்ஃப் இருந்தும் நான் தனிமையில் இருக்கேன், என்ன சொல்ல? ஆணுங்க மேலயும் இரக்கம் வேண்டாமோ, அநாமி?

இன்னிக்கு ஒரு சினிமா ஹால்ல படம் பார்த்துக்கிட்டு இருந்தேன். உறவுக்காரர் ஒருவர் தொலைவிளித்தார். படம் போனாப் போகுதுன்னு வெளியே வந்து அவர் பேசக் கேட்டேன்.

"தம்பீ, 'நாடோடித் தடம்' வாசிச்சேன்ப்பு. ஒரு தண்ணி வெந்நீ வெச்சுக் கொடுக்கக் கூட ஆள் இல்லாம நீ இருக்கேன்னு நெனைக்கிறப்போ..."

"அண்ணே, இப்பப் பாருங்க, நீங்க வீட்டு லேண்ட் லைன்ல இருந்து பேசுறீங்க; நான் ஊர் சுத்திக்கிட்டு இருக்கேன். ஒங்களுக்கு அது சொகம்; எனக்கு இது."

"என்ன இருந்தாலும் பொம்பளைன்னு ஒருத்தி..."

"காலைலேயே சரிதா வந்துட்டாண்ணே. திருப்பி அனுப்பிச்சுட்டேன். ஏன்னா, பாப்பாவுக்கு டான்ஸ் க்ளாஸ், ம்யூஸிக் க்ளாஸ்னு கூட்டிட்டுப் போக வேண்டி இருந்துச்சு. அது வளர்ச்சி முக்கியமா, நம்ம சொகமாண்ணே? சொந்தக்காரங்க படிச்சுப் புரிஞ்சுக்கிற மாதிரியான புத்தகம் இல்லண்ணே 'நாடோடித் தடம்'. இருந்தாலும் புத்தக முடிவெ இன்னொரு தரம் வாசிச்சுப் பாருங்க!"

அப்படி, 'தண்ணி வெந்நீ' சுதந்திரத்துலதான் இருக்கோம், இன்னும்.

'பாப்பியோன் (Papillon)' படத்துல ஒரு காட்சி வரும். சாகடிக்கப் படுறதுக்காக சோறு தண்ணி இல்லாம இருட்டு நிலவறைக்குள்ள அடைக்கப் படுற பாப்பியோன் (ஸ்டீவ் மெக்வீன்) பாச்சா பல்லிகளைப் பிடிச்சுத் தின்னு ஆறே அடி நடைப் பயிற்சியில உடம்பெப் பேணி, ஆறுமாசம் கழிச்சுத் திறக்கிறப்போ உயிரோட வருவான். வெளிச்சத்துல கண்ணு கூசி நடக்கையில, ஆறு எட்டு முடிஞ்சு ஏழாவது எட்டு வைக்கிறப்போ விழுந்துடுவான். நம்ப முடியாமை.

நமக்கும் விடுதலை அப்படித்தான்.

துரியோதனனோட பொறாமையால இல்ல, துரியோதனாதிகளின் மனைவிமாரோட பொறாமையால்தான் பாரதப்போர் நேர்ந்திருக்க வேணும். பின்னே, ஒருத்திக்கு அஞ்சு புருஷனா? யம்மாடியோவ்!

பாமர வாசிப்புல, எனக்கும் 'ஊஞ்சல் விழுது' சாதாரணமாத்தான் தோணுச்சு. ஆனா பாலகுமாரன் அளவுக்குப் பவுடர்பூச்சாத் தெரியலை.

ரெண்டாவது வாசிப்புலதான் sub-text பிடிபட்டுச்சு.

/Your story opening scene similar to one balakumaran short storie (cinema stunt assistant is the hero & house owner ask him to vacate the house)/

இதுல எங்கெ ஹவுஸ் ஓனர் வெக்கேட் பண்ணச் சொல்றாரு? இதன் ஓப்பனிங் 'தண்ணீர்ப் பிரச்சனை' இல்லையோ?

அப்புறமும் இதுல வர்ற ஆணுங்க ஆணுங்களும் பெண்ணுங்க பெண்ணுங்களும் இல்ல. அதனால ஒழுக்கப் பேச்சுக்கும் இடம் இல்ல.

அநாமி-2 அவர்களுக்கு: புல்லட் வர்ணனை எனக்கு வில்லங்கமாப் படலை. பயங்கரவாதம் சாமான்யம் (I mean 'familiar') ஆக்கப்படுற நகைசுவையாகவே பட்டது.

எனக்கு ஏன் டெர்ரர்ன்னு சொல்லாம விட்டதுதான் வில்லங்கம்னு இப்பத் தோணுது. அது Milk teaching Meat teaching சம்பந்தப் பட்டது.

வண்ணதாசனை முன்னுதாரணமா எடுத்துக்கிட்டுக் கதை எழுதுறவங்களெப் பால்குடி மாறாப் பாலகர்கள்னு நெனைக்கிறது என்னோட வழக்கம்.

I have fed you with milk, and not with meat: for hitherto ye were not able to bear it, neither yet now are ye able. (1 Cor 3:2)

ராகவன் வண்ணதாசனைப் போல மென்மையான அணுகலை விரும்புறவர்ங்கிற முடிவுலதாங்க இருந்தேன்.

But he said unto them, I have meat to eat that ye know not of. ... Jesus saith unto them, My meat is to do the will of him that sent me, and to finish his work. (John 4:32,34)

டெர்ரரா இருக்குமா இல்லையா?

Anonymous said...

Annony1:
Dear Raghavan,

Ungal kathai romba arumai. Ennoda pamara vachipula athoda nunukkangal innum puri padala. Pamara vachippu & Arivu jeevikal vachippu nu rendu irukku pola.(Raju sir sonna unmaiyai thaan irukkum).
Pasuvaiya kavithai: Un kavithai-yi neeye eluthu, atharku vakkillai endral ennidam vanthu ketkathe un kavithai naan enn eluthavillai endru.
Ithu ennakkum porundum sir.

Thanks

Anonymous said...

Dear Annony 2,

Ragavan enna manapada potti-ya vaika poraru kathai-yai six times padikkarathukku.
Arivi jeevi aaganumna ore kathai-yi niraya tharam padikkanum pola.

rajasundararajan said...

அனாமி-1 அவர்களுக்கு:

விமர்சகர்கள்/ ரசிகர்கள் விசயங்களைப் personal-ஆ எடுத்துக் கொள்ளலாமா? அப்புறம் அது என்ன விமர்சனம்?

'என்னுடைய பாமர வாசிப்பு' என்றுதான் சொன்னேன். அது இன்னது என்று எனது முதல் பின்னூட்டத்தில் சுருக்கித் தந்தும் இருக்கிறேன்.

அது ஏன் பாமர வாசிப்பு ஆகிறது என்றால், அப்படி வாசிக்கையில் கதை, அவள் ஏன் இஸ்லாமியப் பெண்ணாக இருக்க வேண்டும்? ஹிந்து, கிருஸ்துவப் பெண்ணாக இருக்கக் கூடாதா? எல்லா மதத்தவரில் இருந்தும் மனைவியைப் பிரிந்து வளைகுடா நாடுகளில் பிழைக்கிறவர்கள் உண்டுதானே? என்கிற வம்புக்கெல்லாம் இழுத்துச் செல்கிறது.

உள்ளுறை (subtext) வாசிப்பில், 'ரூபினா' நீர்வீழ்ச்சி என்னும் பொருளில் தலைகுப்புற விழுகிறாள் ('அருவி' என்று நான் பொருள்கொள்ளவில்லை கவனியுங்கள்). அதே போல 'சாதிக் அலி' என்னும் பெயரை யோசித்து வைக்கவில்லை என்று ராகவன் சொன்னாலும், அது 'உண்மையுள்ள கனவான்' என்று பொருள்படுவதால் அப்படியே நான் பாடம் கொண்டேன். இப்படி வாசிக்கையில் எனக்கு இக் கதை மொத்த இஸ்லாமியர்களையும் அல்ல, வெற்றிச்செல்வியோடு உடன்படிக்கை கொண்ட ஒரு குழுவை மட்டுமே நக்கல் செய்கிறது என்னும் புரிதல் கிட்டியது. 'வெற்றிச்செல்வியோடு உடன்படிக்கை செய்துகொண்டது நகைப்புக்கு உரியது இல்லையே' என்று ஒரு கருத்து முன்வைக்கப் பட்டால் அது வேறு விசயம். அதை நானும் ஏற்றுக்கொள்வேன்.

பசுவைய்யாவின் தவறானதொரு கவிதையை மேற்கோள் காட்டுகிறீர்கள்:

'நந்தலாலா' படத்தில், நெஞ்சை அறுக்கும் ஒரு விளைவுக்காக, பின்னணி இசையில் ஒரு வெஸ்ட்டர்ன் reed instrument பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இளையராஜா இந்திய வாத்தியத்தைப் பயன்படுத்தி இருக்கலாமே (அப்படி ஒருவர் எழுதியிருந்தார்) என்று சொன்னால் அது சொன்னவருடைய கருத்து. ஆனால் இளையராஜா இடைவெட்டி, "ஏய், உன் வாத்தியத்தை நீ வாசி; நான் ஏன் வாசிக்கலைன்னு கேட்காதே!" என்றால், அது 'அவரவர் கைச்சமையல்' கருத்துக்கு இட்டுச் செல்லாதோ? வனவாழ்க்கையில் கூட சிங்கம் அடித்த இரை, ஏனைச் சிறு விலங்குகளுக்கும் சேரும்தானே? " "இந்தச் சிங்கம் எருமைக்குப் பதிலா ஒரு மானை அடிச்சிருக்கலாம்" என்று ஒரு நரி எண்ணுவது நகைப்புக்கு உரியதாகலாம்; கூடாதது ஆகாதே?

Be and feel free!

ராகவன் said...

அன்பு நண்பர் அனானி 1 அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்கு ரொம்பவும் அன்பும் நன்றிகளும்...

பாலகுமாரனை ஞாபகப்படுத்தியது என் தவறில்லை...

ராஜசுந்தரராஜன், என்னை ஒரு வீக் ரைட்டர் என்று தான் சொல்லியிருக்கிறார். இது நாள் வரை அவர் குட்டத்தான் செய்திருக்கிறார் நிறைய இடங்களில்... அவர் வாசிப்பணுபவத்தை பகிரும்போது தனக்கு பிடித்ததை சொல்வது என்னை எப்போதும் பாராட்டுகிறார் என்று அர்த்தம் ஆகாது.

என்னுடையது நல்ல எழுத்து, மேம்பட்ட எழுத்து என்று நான் எப்போதும் கூறவில்லை... இப்போது எழுதும் சிலரின் எழுத்து போல என்னுடையது இல்லை என்று எனக்கு வருத்தம் கூட உண்டு என் மேல்...

நீங்கள் குறைகளை நேரடியாக சொல்லலாம்... கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் சமரிடும் பாவனையைப் பார்த்ததும், உங்களுக்கு பாலகுமாரன் ஞாபகம் வந்திருந்தால் நான் என்ன செய்யமுடியும்...

காலையில் இருந்து மனசு சரியில்லை... அலுவலகத்தில் வந்ததில் இருந்து வேலையே ஓடவில்லை... என்ற விவரிப்பு மாத்திரம் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமாய் எத்தனை கதைகளில் நான் படிச்சிருக்கேன்... அது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்று நான் சொல்லாமல் போவது எப்படி சரியென்று ஆகும்...

உங்கள் வாசிப்பும், மேற்கோள்களும் பாராட்டப்படவேண்டியது... ஆனால் தனிமனித தாக்குதல் போல், எழுதியவனை அல்லது எழுத்தை நோகாமல், அதை வாசிப்பவர்களை அவர்களின் கருத்தை கிண்டல் செய்வது எப்படி சரியாகும்... அதுவும்... உங்களுக்கு பகடி சரியாக வரவில்லை... ரொம்பவும் ட்ரை ஆக இருந்தது.

நான் படிச்சது, பார்த்தது, கேட்டது கள் பற்றி மட்டுமே என்னால் எழுத முடியும்... அனானி 1.

கல்யாண்ஜி சொல்வது போல, நான் அமிழ்கிற ஆறு ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது... என்கிறது போலவும் சொல்லலாம்...

நீ நேற்று குளித்த ஆறு இன்று இல்லை இது வேறு என்ற பார்வையிலும், தர்க்கரீதியிலும் வேறுபடுத்தியும் காட்டலாம்...

பொண்ணுங்கன்னா செக்ஸ் மட்டும்னு நான் எங்க சொல்றேன் அனானி 1, அது உங்களுக்குத் தானே தெரியுது... உங்க மூன்றாம் கண் தான் பழுது அனானி 1.

துப்பாக்கி வச்சிருந்தா, கத்தி வச்சுக்க கூடாதா என்ன? தலைக்கு அடியில் அவன் வசதிப்படி அல்லது தேவைப்படி அவன் வச்சிருக்கான்... அதை ஏன் மத்தவங்க முடிவு பண்ணனும்...


அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அனானி 2, ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,

எப்போதும் என் அன்பும் நன்றிகளும்

அன்புடன்
ராகவன்