Tuesday, November 03, 2009

பறவை எழுதிய இறகு

புதிதாய்த் தெரிந்தது
அந்தப் பறவை
ஒரு பிடிகருனை அளவே
இருந்தது
இரண்டே வர்ணங்களில்
கருப்பும் வெள்ளையும்
உடலில் பூசி
கருப்பும் வெள்ளையும்
வர்ணங்கள் என்பதில்
உடன்பாடு தானே உங்களுக்கு!

நீண்ட அலகுடனும்
நீண்ட காலுடனும்
நீர் நிலை சார்ந்த
பறவையாய் இருக்கக்கூடும்
தரையில் வால் அடித்து
அடித்து தத்தியது
முன்னே நகர்ந்து பறக்காமல்
ஊர்ந்த பூச்சிகளை
லபக்கியது
என்ன பெயராய் இருக்கும்?
மீன் கொத்தி, கருங்கொக்கு,
மரங்கொத்தி?
எதுவோ என் பட்டியலில் இல்லை

என்னை கடந்து
சென்றவர்களைக் கேட்டேன்
அவர்களும் ஏதோ
பெயர் சொல்லி ஒரு கதையும்
சொன்னார்கள்,
பைரி என்றும்,
கல் நாரை என்றும் விதவிதமாய்
வலையில் தேடி,
புத்தகங்களில் தேடி
சலித்தேன் சிக்கவில்லை
அதன் சாயலில்
இல்லை
எந்த பறவையும்

இந்த கவிதைக்குள்ளும்
சிக்காமல் பறந்தது
ஒரு இறகை உதிர்த்து

கையில் எடுத்தேன்
இறகை
பச்சை, மஞ்சள், இளஞ்சிகப்பு,
நீலம் என வர்ணங்கள்
மாறிக்கொண்டே இருந்தது
இந்த கவிதை முடிந்த பின்னும் கூட.

இப்போது பறவை
என்ற அடையாளம்
போதுமானதாய் இருந்தது
எனக்கும் என் கவிதைக்கும்.

15 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

மனிதனே தன் அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் நிலையினை குறிப்பாக்கிச் சொல்கிறது வரிகள். மிக அருமை ராகவ்ன்

S.A. நவாஸுதீன் said...

நிகழ்வுகளில் தொலைந்தவை தொலைத்தவனை தேடியதுபோல் உணர்வு.

நல்லா இருக்கு ராகவன்

மண்குதிரை said...

What a coincidence!

பா.ராஜாராம் said...

அப்பா...அருமையாய் வந்திருக்கு ராகவன்!

//ஒரு பிடிகருனை அளவே
இருந்தது//

எவ்வளவு காட்சிபடுத்துகிற ஒப்பீடு!


//கருப்பும் வெள்ளையும்
வர்ணங்கள் என்பதில்
உடன்பாடு தானே உங்களுக்கு!//

beutiful intraction!

//இந்த கவிதைக்குள்ளும்
சிக்காமல் பறந்தது
ஒரு இறகை உதிர்த்து..//

// இப்போது பறவை
என்ற அடையாளம்
போதுமானதாய் இருந்தது
எனக்கும் என் கவிதைக்கும்.//

ரொம்ப பிடிச்சுருக்கு ராகவன்,கவிதைக்குள் இருக்கிற பறவை,பறவைக்குள் இருக்கிற ராகவன்,ராகவனுக்குள் இருக்கிற இக்கவிதை!

velji said...

பறவைதான் கவிதை.கவிதையை பிறரிடம் பகிரும்போது ஏற்படும் தவிப்பும்.விளைவும் பறவை பற்றி பேசுகையில் இருக்கிறது.கவிதைக்கு தலைப்பெதற்கு...பிள்ளையை, மகளே என்றழைப்பது போதுமே.

மாதவராஜ் said...

அடேயப்பா....!
அற்புதமாக இருக்கிறது கவிதை...
நேரடியாகவும், எளிமையாகவும், அர்த்தங்களோடும் விரியும் இதுபோன்ற கவிதைகள் மிகவும் பிடித்துப் போகிறது.
//இப்போது பறவை
என்ற அடையாளம்
போதுமானதாய் இருந்தது
எனக்கும் என் கவிதைக்கும்//
எவ்வளவு சொல்லி விட்டீர்கள் இந்த இடத்தில்!

என் அருமைப் பறவையே....!
எட்டுத்திக்கும் பற...

சந்தான சங்கர் said...

//இந்த கவிதைக்குள்ளும்
சிக்காமல் பறந்தது
ஒரு இறகை உதிர்த்து //

மனச்சிறகடித்தும்
பறக்கவியலாமல் போனது,
ஓர் இறகு உதிர்த்து
என் எண்ணங்களை
வண்ணங்களாக்கி,
உன்னை அடையாளம் காண நினைத்த
என்னை அடையாளப்படுத்திவிட்டாய்

Anonymous said...

அருமை :-)

Anonymous said...

aiyo thanga mudiyavillai.
ritheesh movie partha pola irukku sir.

Unknown said...

matra nanbarkal pola enaku kavathaiyai identity tholaithadagha oppittu kolla mudiyavillai ennal .

It is Good . Nam pondra , Mudhumaikkullum muludhaai kai thaangi oondra mudiyaamal , Ilamaikkul inaindhoada mudiyamal, naduvil sikki kondu , panam serka vendume, paadhi tholaindhu pona vaalkaiyil karuppu vellai mattume ninaivil irukka, meedham vaazhkaiyai thedi oodikkonde, palaiya vannangalai asai poda thavari vidukirom allava . . . Adhanudan oppitten . . . Porundhukiradhe . . . Hello mr. anonymous, Cho maadhiri , Gnaani maadhiri aahidaatheerkal. appuram alagaana rose a partha kooda vijayakanth maadhiri statistics solla thonum . . . Ushaar . . . !!!

ராகவன் said...

அன்பு
ஆரூரன் விசுவநாதன்
நவாஸுதின்
மண்குதிரை
பா.ரா.
வேல்ஜி
மாதவராஜ்
சந்தானசங்கர்
புனிதா
அனானி
தேவி

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் (அனானியின் வசைக்கும்) நன்றிகள் பல!

தொடருங்கள் உங்கள் வருகையை!

அன்புடன்
ராகவன்

கருவை பாலாஜி said...

அருமையா இருக்கு கவிதை நளை விவாதிப்போம்

காமராஜ் said...

படிமமான கவிதைகளுக்குள் என்னை மெல்ல மெல்ல இழுத்துச் செல்லும் இந்தப்பறவையை நேசிக்கிறேன்.
தாமதமாக வந்தாலும் பறைவை பார்த்தல் இனிது.

ராகவன் said...

அன்பு பாலாஜி,

வாழ்த்துக்களுக்கு நன்றி! வாருங்கள் விவாதிப்போம்.

தொடரவும் உங்கள் வருகையை!

அன்புடன்,
ராகவன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்லவேளை நான் புதிதாய் எதுவும் பதிவிடவில்லை. இல்லையென்றால் உங்கள் வாசிப்பு அனுபவப்பகிர்வு எனக்கு கிட்டாமலே போயிருக்கும்.

இது வேறு இதிகாசம் பார்க்கப் பெற்றேன்! என்னை உலுக்கி விட்டது, இதைப் பற்றிய போதுமான புள்ளிவிபரங்களும், நாளேடுகளில் வெளியான செய்திகளும் பரிச்சயமிருந்தும், இது பார்வைக்கு கிடைத்ததன் மூலம் இதன் புதிய பரிமாணங்களை பார்க்க முடிந்தது. சில இடங்களில் கேள்வி கேட்கும் உங்கள் குரலும், மாதவராஜின் குரலும் மாத்திரமே எனக்கு பரிச்சயமான ஒன்றாக இருந்தது. அதில் என் கேட்பு சக்திக்கு அப்பாற்பட்ட ஓலங்கள் என்னை கதற வைத்தன. எவ்வளவு ஒருங்கினைப்பு தேவைப்பட்டிருக்கும். ச.தமிழ்செல்வனின் குரலும், சு.வெங்கடேஷின் பார்வையும் எனக்கு விடை தெரியாத பல கேள்வி கொக்கிகளை மாட்டி விட்டிருக்கிறது என் புத்தியெங்கும், உணர்வெங்கும்.

நிறைய எழுத ஒரு பதிவு போடவேண்டும். எழுதுகிறேன் விரைவில்.

அன்புடன்
ராகவன்