வரம் கொடு தேவதையே என்ற ஒரு தொடர் பதிவில் பா.ரா. வின் வரம் வேண்டும் அந்த பத்து தருணங்களை படித்ததும் எனக்கு மூளை நம நமன்னு அரிக்க ஆரம்பிச்சுடுச்சு.. நம்மள யாருமே தொடர் பதிவுக்கு அழைத்ததில்லை... ஆனாலும் அழையா விருந்தாளியாய் என் முதல் காதல் தேவதையின் திருமண மண்டபத்தில் நுழைவது போல நுழைகிறேன், ஓரமாய் நின்று காட்சிகளை ரசிக்கிறேன், தேவதை துலாவும் கண்களில் நான் இடறி இங்கு விழுந்து விட்டேன், வேறு வழியில்லை உங்களுக்கும்
இழந்த எல்லாமே வரமாய் வேணும் எல்லோருக்கும், பட்டியலை மீறுகிறது வரங்கள் புது வெள்ளம் வழிந்தோடும் வாய்க்கா மாதிரி...
பதினொரு வீடுகள் இருக்கும் ஒரு காம்பவுண்டில் அனேக வீடுகளில் பெண் பிள்ளைகளே இருந்த நாட்களின் இறுதியில் ஏழு வருஷம் கழிச்சு நான் பொறந்தேன் ஒரு வரமாய். எல்லோரும் கொண்டாட ஒரு ஆயர்பாடி கிருஷ்ணன் போல, ஷ்ய்மள வண்ணத்தில். பெண் பிள்ளைகளுடன் மட்டுமே புழங்கி வந்த நாட்களில் சொட்டாங்கல், பாண்டி, பல்லாங்குழி, தாயம் என்று என் விளையாடல்கள் தொடர்ந்து நிறைய பெண் தன்மைகளை கொண்டிருந்த காலத்தில், அப்பாவின் ஆண்களுக்கான விளையாட்டு உலகம் அறிமுகம் ஆனது, திடீரென்று கபடி, ஹாக்கி, கால்பந்து என்று என் விளையாட்டு உலகத்தில் சில பந்துகளை உருட்டினார். நானும் அவைகளை விரைகளாய் பதுக்கி வைத்தேன். என் உலகம் வேறு வர்ணத்தில் சுழல ஆரம்பித்தது.
அப்பாவை நான் வாசனைகளில் உணர ஆரம்பித்தேன். விடைத்த நாசியின் வழி எல்லோரும், எல்லாமும் அவருக்கு வாசனை தான். ரத்தினம் பட்டணம் பொடியில் சோலைமலை மாமாவையும், வில்ஸ் நேவி கட்டில் பிச்சம் நாயுடுவையும், மெலிதான சந்தனத்தில் பாங்க பார்த்தசாரதியையும், அடையாளம் வைத்திருப்பார். வாசனைகள் குறியீடுகள் அப்பாவுக்கு எப்போதும், தாயம்மா கிழவியின் போயிலை, இடித்த தெக்கம் பாக்கு, வெற்றிலையில் அரைபடும் போது வரும் வாசனை அநேக கதைகள் சொல்லும் அப்பாவுக்கு. மீசைக்காரன் கடை தொடைக்கறி குழம்பின் வாசனை அப்பாவின் விருந்தோம்பலை சொல்லும். திருசூர்ணத்தின் வாசம் அப்பாவின் பக்தியை. ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டைக்கடையின் ஹல்வாவின் வாசனை அப்பாவின் பாசத்தில் தெரியும்.
அப்பாவின் வாசத்தை விநோதமாய் உணர ஆரம்பித்தேன் சில நாட்களில். மஞ்சள், பவுடர், மாதவிடாய், எண்ணெய் எல்லாம் கலந்த பெண்களில் உலகத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது அந்த அப்பாவின் வாசம். அப்பா புகைப்பதில்லை, குடிப்பதில்லை, பொடி மட்டும் எப்போதாவது போடுவார், அதுவும் சோலைமலை மாமா வரும்போது மாத்திரம் ஓசி பொடி காட்டம் அவரை கிலேசப்படுத்தும். அம்மாவிடம் இருந்த விலகி அப்பாவுடன் உறங்க ஆரம்பித்தேன், நாங்கள் படுத்துறங்கும் நார்க்கட்டிலின் மனம், அப்பாவின் வியர்வை, விபூதி கலந்த வாசம் எனக்கு ஒரு விதமான கிறக்கத்தை தந்தது. அப்பா எல்லாக்காலங்களிலும் 5 மணிக்கே எழுந்து விடுவார், ராமேஸ்வரம் பாசஞ்சர் சுப்ரமணியபுரம் ரயில்வே கிராசை கடப்பது எங்கள் வீட்டில் கேட்கும். சத்தங்கள் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் பயணித்த காலம் அது. ஐந்து மணிக்கு எழுந்தவுடன் குளிக்க கிளம்பி விடுவார். எந்த சிதோஷ்ண காலமாய் இருந்தாலும் குளிப்பதற்கு கிணற்று நீரே சாசுவதம் அவருக்கு. கிணற்று நீரும் வெய்யில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும் அப்பா போலவே. கோபால் என்று பெயர் பொறித்த ஒரு இரும்பு வாளியில் நீர் சேந்தி குளிர குளிர குளிப்பார். அப்பாவின் தலையில் சோப்பு நுரை தனியாக தெரியாது, அப்பாவுக்கு சோப்பு நுரை மாதிரியே இருக்கும் முடியில் வித்யாசம் தெரியாது. என்னையும் குளிப்பாட்டுவார். சந்திரிகா சோப்பின் மனம் எதிர் காம்பௌண்டில் நவநீதம் மாமாவை அவர் மீசையை தாண்டி, கயிறு கட்டி இழுத்து வரும். என்ன ஓய்! நாளெல்லாம் மனக்குறீரு! என்ன சோப்பு போட்டாலும் ஒம்ம பையன் செவக்க மாட்டேன்கிறான் ஓய்! அப்பா பேசாமல் சிரிப்பார். அப்பாவுக்கு தெரியும் யாரிடம் பதில் பேசணும் பேசக்கூடாதுன்னு!
சனிக்கிழமை தவறாமல் என்னை பெருமாள் கோவிலுக்கு கூட்டி செல்வார் அப்பா. மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும் கோவிலுக்கு நடந்து செல்வது தான் வழக்கம். நடந்து செல்வதால் ஒரு ஆதாயம், குரு விலாஸ் பஜ்ஜியோ அல்லது அம்பீஸ் கபே தோசையோ நிச்சயமாய் இருக்கும். அப்பாவுக்கு சைக்கிள் ஓட்டுவதில் அத்தனை பிரியம் இல்லை. டபுள்ஸ் ஓட்டுவது அவருக்கு எப்போதும் பிரயத்தனமான விஷயம். ஒருமுறை ஜெயாத்தை இறந்த போது அப்பாவும், ராஜ் ஆசாரியும், ஏட்டு வீட்டிற்கு தகவல் சொல்ல செல்லும் போது அப்பாவின் டபுள்ஸ் முயற்சி சில பல காயங்களில் முடிந்தது. அதனால் பெரும்பாலும் சைக்கிள் ஒட்டும் போது தனியாகவே செல்வார் மற்ற சமயங்களில் நடந்து தான் அவரின் பயணங்கள் எல்லாம். அப்பாவுடன் கோவிலுக்கு செல்வது சுவாரஸ்யமான ஒரு விஷயம். எல்லோரையும் அப்பாவுக்கு தெரியும், எல்லோருக்கும் அப்பாவை தெரியும். எல்லோரையும் அவரவர் தொழிலுக்கு ஏற்ப முகமன் செய்வார். செருப்பு கடைக்காரனும், கோவில் மண்டபத்தின் காரிய தரிசியும் அப்பாவுடன் நெருங்கிய சிநேககாரர்கள். உள்ளே நுழையும் போதே வாசலை தொட்டு வணங்கி துவஜச்தம்பத்தை நோக்கி ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார் என்னையும் கிழே விழுந்து கும்பிட்டு எழ பணிப்பார். கீழே விழுந்து நமச்கரிக்கும் போது உன் அகங்காரம் அழியும், நான் ஒன்னும் இல்லடான்னு தோணும் என்பார் அடிக்கடி. அப்பா தன்னை அடிக்கடி இழப்பார் பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தில்.
அப்பா என்னும் வரம் தொடரும் இன்னும்.....
5 comments:
///அப்பாவுடன் உறங்க ஆரம்பித்தேன், நாங்கள் படுத்துறங்கும் நார்க்கட்டிலின் மனம், அப்பாவின் வியர்வை, விபூதி கலந்த வாசம் எனக்கு ஒரு விதமான கிறக்கத்தை தந்தது.////
நெகிழ்ச்சியாவும், சந்தோசமாவும் இருக்கு ராகவன்.
பிறந்ததும், மயக்கம் தெளிந்த
அன்னையின் கைகள் அடைகாக்கும் முன்னே அப்பாவின் கைகளில் கிடைப்பதன்றோ ஆனந்தமாய் முதல் ஸ்பரிசம்.
தெருவில் விளையாடிவிட்டு வந்து அப்படியே அப்பாவின் நெஞ்சில்
சரிந்து கிடக்கும்போது அலாதியான பனியனின் மனமும், களைந்து கிடக்கும்
புளுதியடைந்த தலையின் முடி திருத்தும்
அவரின் விரல்கள்.........
என்னையும் எங்க அப்பாவின் நினைவுகளில் மூழ்கடித்துவிட்டீர்கள் ராகவன்.
ராகவன்..
சுழன்று ததும்புகிறது.தொடர்ச்சியாய் இதை கேட்கணும் போல் இருக்கு.
தமிழ் மணம்,தமிலிஷ்- இல் பதிந்து விட்டீர்களா?ஆம் எனில் ஏன் ஓட்டு பட்டை காணோம்?பின் புலமாக தம்பியும் நண்பரும் இருப்பதால் இது குறித்த கவலை தெரியாமல் இருக்கிறது எனக்கு..இது குறித்தான விபரங்கள் தெரியுமானால் உடன் செயல் படுத்தவும்.
இந்த எழுத்து நாலு பேர் வாசிக்கட்டும்.
மேலும்,ஒவ்வொரு பதிவிற்கும் போதிய இடைவெளி விடவும்.(இரண்டு அல்லது மூன்று நாள்)ஒன்றை ஜீரணித்து ஒன்றை எடுக்கட்டும்.
இதை எல்லாம் எதிர்பார்ப்புகள் அற்று செய்யவும்.உடன்..
அப்பாவின் நினவலைகள் அருமை. அதிலும் அவரை பற்றி சொல்லியது..
// எல்லோரையும் அப்பாவுக்கு தெரியும், எல்லோருக்கும் அப்பாவை தெரியும். //
// அப்பாவுக்கு தெரியும் யாரிடம் பதில் பேசணும் பேசக்கூடாதுன்னு!//
ராகவன் கொடுத்து வைத்தவர். தந்தையின் அணைப்பு கிடைக்க அரும் தவம் செய்து இருக்க வேண்டும்.
தொடருங்கள் ... தொடர்கின்றேன்.
உள்ளத்தை தொடும் நடை, அப்பா என்னும் வரம் தொடரட்டும்..
Post a Comment