Monday, January 18, 2010

பலகனியின் தொட்டிவிருட்சம்

லெட்டர் வந்திருக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து... என்ற அனன்யாவின் குரலில் இருந்த உற்சாகம் அம்மாவுக்கும், பாட்டிக்கும் கூட தொற்றிக் கொண்டது கடிதத்தை படித்தவுடன்... அம்பிகாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது, அவனிடம் தனியாக பேசியபோது தன்னை பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லி பிறகும் அவர்களின் சம்மதம், இவளுக்கு நம்பும் படியாக இல்லை. தனது அறையில் இருந்து கூடத்தில் கடித்ததை கையில் வைத்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருந்தவளிடம் இருந்து பிடுங்கிய கடிதத்தின் வாசகங்கள் அவளால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அம்மாவை பார்த்த போது அவள் கடையோர சிரிப்பை பூத்து ஒன்றும் சொல்லாமல் சமயக்கட்டிற்குள் நுழைந்து கொண்டாள்...


மீண்டும் விரல்கள் நடுங்க படித்து பார்த்தாள். குண்டு குண்டான கையெழுத்தில் ஒரே சீராக இவ்வளவு அழகா தமிழ் எழுதுவானா என்று ஆச்சரியமாய் இருந்தது அவனுடைய தோற்றத்தையும் கடிதம் எழுதியிருந்த விதத்தையும் பார்த்த போது...

அநேக நமஸ்காரங்களுடன் ராம் எழுதிக்கொள்வது. அத்தை, எனக்கு அம்பிகாவை ரொம்ப பிடித்திருக்கிறது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் உங்கள் குடும்பத்தையும், அம்பிகாவையும் பார்த்தவுடன் அவர்கள் சம்மதத்தை சொல்லிவிட்டார்கள். அப்பா தான் என்னை ஒரு கடிதம் போட்டு இதை தெரிவிக்கச் சொன்னார். அம்மாவும் பாட்டியிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள். அம்பிகாவின் அப்பா பற்றி என் அப்பாவிடம் மட்டுமே கூறியிருக்கிறேன். அம்மாவுக்கும், பாட்டிக்கும் விஷயத்தை சொல்லவில்லை, அப்பா தேவைஇல்லை என்று சொல்லிவிட்டார், எனக்கும் அது சரியென்றே படுகிறது. கல்யாணத்திற்கு மட்டும் அவர் வந்தால் போதும். அதற்க்கு மட்டும் ஏற்பாடு செய்யவும்... முடிந்தால் நான் போய் அவரை பார்த்து பேசுகிறேன்... உங்களுக்கு சம்மதம் என்றால்... நான் என்னுடைய அலுவலக நம்பரை கொடுத்திருக்கிறேன்...எனக்கு தகவல் சொல்லவும்... என்று கடிதத்தில் கடைக்கோடியில் அவருடைய அன்புக்கு கீழே தொலை பேசி எண் இறைந்து கிடந்தது... படித்து முடிக்கும் போது அவளுக்கு அப்பாவை நினைத்து அழுகை வந்தது...

அன்று அவர்கள் பெண் பார்க்க வந்த போது பெரிதாக ஒன்றும் உடுத்திக்கொள்ளவில்லை அவள், சாதாரண காட்டன் சல்வாரில் எந்த அலங்காரங்களுமே இல்லாமல் இருந்தாள். அம்மாவும் பாட்டியும் செய்த தொந்தரவு தாங்காமல் வெறும் பத்து இனுக்கு பூ மட்டுமே வைத்துக் கொண்டாள். அதுவே அவளை அழகாய் காட்டியது. அப்பா சொல்வார் எப்போதும் லாசரா சொல்ற மாதிரி திகுதிகுன்னு ஒரு சுடர் போல இருப்பா, அவளுக்கென்ன என்று. அப்பா இன்று இருந்தால் நன்றாக இருக்கும். வேலையில் இருந்து வரும் போதே, அம்மா சொன்னதால் கொஞ்சம் ஸ்வீட்சும் பழங்களும் வாங்கிக்கொண்டாள்... ரெண்டு அவர் பெர்மிஷன் கேட்ட போதும் அவளோட மேலதிகாரி ஒன்றும் சொல்லவில்லை. இதுமாதிரி ரெண்டு அவர் பெர்மிஷன் போட்ட அவருக்கு காரணம், தெரியலாம் அவருக்கும் இரண்டு பெண்கள் இருக்கும் தகப்பன் மனசு. ஆபிசில் யாரிடமும் சொல்லவில்லை... சொன்னால் இது எத்தனாவது தடவன்னு கிண்டல் பண்ணுவாள் ஸ்ரீலட்சுமியும் சேர்ந்து கொண்டு பெரிய வனஜாவும் பல்லால் குத்த வருவது போல சிரிப்பாள். அவர்களுடன் இவளுக்கு பிரத்யேக ச்நேஹம் இல்லாவிட்டாலும் சாப்பாட்டுக்கு போகும்போது கூட போற நேரம் இப்படி ஒரு உறவு தேவையா இருக்கு.

செருப்பை முன்னால் உதறி விட்டு உள்ளே வந்த போது, அம்மா கூடத்தில உட்கார்ந்து வாழைக்காய் சீசுக்கிட்டு இருந்தா. அம்மா என்னம்மா இது... உனக்கு ஏதாவது சாக்கு வேணும் பஜ்ஜி போட.. வந்தவன் தின்னுட்டு ஆஹா உங்க கைமணம், அப்படின்னு புறங்கைய நக்கிட்டு போகணும்...நீ உத்தரத்துக்கு ஏறனும் அது தானே உனக்கு வேணும்.. இந்த ஸ்வீட்ஸ் கருமாந்திரம் எல்லாம் நான் தான் வாங்கிட்டு வர்றேனே, உனக்கு எதுக்கு இந்த பம்மாத்து எல்லாம்...என்ற அம்பிகாவின் வெறுப்பு கலந்த கோபம் அவளை ஒன்றும் செய்யவில்லை.. அவள் பாட்டுக்கு வேலைய பாத்துக்கிட்டே அம்பிகாவிடம் முகம் கொடுக்காமல், உன்ன மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா, வர்றவுங்க இதெல்லாம் கூட செய்யலேன்னா என்ன நினைப்பாங்க...புரோக்கர் வேற இது வசதியான குடும்பம், அமைஞ்சா யோகம்னு சொல்றாரு, நம்ம செய்ய வேண்டியத செஞ்சிட்டு அதிர்ஷ்டத்த குறை பட்டா சரி அதுல ஒரு அர்த்தம் இருக்கு... ஒண்ணுமே செய்யாமா, ஐயோன்னு மூலைல ஒக்காந்து அழுதுக்கிட்டு இருந்தா... உங்க அப்பனா வந்து ஒன் கல்யாணத்தை நட்டமா நிப்பாட்ட போறான்... என்று அப்பாவை இழுத்தால் வம்புக்கு.

அந்த மனுஷன் காசு கொடுக்கலேன்னா உன் புருஷங்காரன் விட்டுட்டு போன காசுல எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துடுவ..! என் அப்பாவப்பத்தி புரியாதவன் எவனும் எனக்கு வேண்டாம்... நீயே

கட்டி அழு அவனை.. இந்தா இருக்காள்ல அவளை கொண்டு போய் தள்ளிட்டு வா... இவ தான் ஒன் இழுப்புகெல்லாம் வருவா... குடும்பத்தை நீ தான் தாங்கிறேன்னு அலுத்துக்காத.. அவர் வீட்டில இருக்கோம், மாசாமாசம் பணம் அனுப்புறாரு... முடியிற போதெல்லாம் வந்துட்டு போறாரு... அனன்யா ஒம்பிள்ளைன்னு ஒன்னும் செய்யிறது இல்லையா...அவ மேல பாசமா இருக்கிறது இல்லையா, அவ கிட்ட பிரியமா இருக்கிறது இல்லையா.... ஏண்டீ... அப்பா உன் மேல பிரியமா இருப்பாரா இல்லையா... அவள் அம்மாவையும் இவளையும் பார்த்துவிட்டு மெதுவாக தலையாட்டினாள் ஆமோதிப்பாய்... நீ போய்ட்டா கூட எங்க ரெண்டு பேரையும் பாத்துப்பாரு... எப்ப பார்த்தாலும் அந்த மனுஷனை தின்னு துப்புறதே உனக்கு வேலையாபோச்சு... அதுனால தான் அவரு உன்கூட பேசுறது கூட இல்லை... எல்லாரையும் கட்டி நேசிக்க பெரிய மனசு வேணும், வெல்லக்கட்டி மனுஷன்.

அம்மா சமையக்கட்டில் இருந்து எட்டிபார்த்து என்கிட்டே வாயாடி உங்க அப்பனை தூக்கி பல்லாக்கில ஏத்தினது போதும்... போய் தயாராகு வந்துடுவாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில! என்று மாவுக்கையுடன் வந்து சைகையில் அனன்யாவிடம் போயட்டாலான்னு கேட்டு தலையில் அடித்துக் கொண்டே திரும்பவும் சமையக்கட்டிர்க்குள் நுழைந்தாள். அம்மாவுக்கு அப்பா என்ன செய்தாலும் பத்தாது. அம்பிகா உள்ளிருந்த படியே அனன்யாவை கூப்பிட்டு வீட்டை பெருக்கி இருக்கிற ஸ்டீல் சேர்களை ஒழுங்காகப் போட்டு, ஜமுக்காளத்தை விரிக்க சொன்னாள்.

ஆறரை மணி ஆனவுடன் வாசலுக்கு அருகே ஏதோ கார் சத்தம் கேட்டது, அவர்களாய் இருக்கலாம். கார் இவர்கள் வீடு இருக்கும் சந்திற்குள் நுழைய முடியாமல் தெருமுக்கிலேயே நின்று விட்டது... இவர்கள் இருக்கும் வீடு சிறு சந்தில் இருப்பதால் கார் உள்ளே வருவதற்கு தோதில்லை. சந்தின் மறுமுனை கொஞ்சம் அகலமாக இருப்பதால் சுத்தி வர முடியும் போல தோனும் பார்ப்பவர்களுக்கு, ஆனா முனை சந்தின் ஆரம்பமும் இது போல குறுகியே இருக்கும்.

காரில் இருந்து இறங்கிய ஆள் சுத்தி வர முடியுமாவென, வாசலில் இருக்கும் அனன்யாவை கேட்க, முடியாது என்ற பதிலில் திருப்தி இல்லாமல், தெரு அந்தப்பக்கம் அகலமா இருக்கே வேற ஏதாவது பாதை இருக்கும் யாராவது பெரியவுங்க கிட்ட கேட்டு வந்து சொல்லுங்க... என்றான் அந்த ஆள். அம்பிகா என்று அவள் வாசலில் இருந்து கத்திய குரலுக்கு, வெளியே வந்தவள் இவனாத்தான் இருக்கும் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு, என்ன என்பது போல் பார்த்தாள், அவன் கார உள்ள கொண்டு வர முடியுமா... என்றதிற்கு முடியாது, அங்கேயே நிப்பாட்டிட்டு வாங்க என்றாள்.

சிகப்பாக, பளீரென்ற நீல சட்டை அணிந்திருந்தான், டக் இன் செய்து மெருகேற்றிய ஷூவும், அடர் நீல கால்சராயில் அழகாய்த் தான் தெரிந்தான். தலையில் எண்ணெய் தடவியது போல ஜெல் தடவி யிருக்க வேண்டும், படிய வாரி அப்படியே நின்றது போல இருந்தது. கண்களும், உதடுகளும் பெண் தண்மையுடன் இருந்தது, மூக்கும், மீசையும் அவனை ஆணென்று உறுதி செய்தது. இவளுக்கு அவனை பார்த்தவுடன் பிடித்துவிட்டது, இவன் அவனாய் இருக்க வேண்டும். இவன் அவனாகவெ இருந்தான் என்பது அவனுடன் வந்த ஐம்பதுகளில் இருக்கும் தம்பதிகள் உறுதி செய்தனர்.

அம்மா உள்ளே இருந்ததால், இவள் தான் அவர்களை அழைத்து வந்து கூடத்தில் உட்கார வைத்தாள். எதிர்பார்த்தபடியே அவன் (ராம் என்று ஞாபகம்) ஸ்டீல் சேரில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய அப்பாவும், அம்மாவும் விரித்திருந்த ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டார். அம்மா சமையக்கட்டில் இருந்து வேக வேகமாக வந்தாள், வேறு யாரிடமும் சொல்லாததால், இரண்டு குடும்பங்களின் சந்திப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. அனன்யாவின் அப்பாவைப் பற்றி அவர்கள் ஏதும் கேட்கவில்லை. ராமிடம் அப்பா பற்றிய விபரங்களை சொல்லிவிட வேண்டும். சொல்லாமல் விட்டால் நல்லாயிருக்காது என்று நினைத்துக் கொண்டாள். மாத்தி மாத்தி ஏதோ பேசி, டெலி சீரியல் எல்லாம் தொட்டு, எதற்காக வந்தார்கள் என்ற சந்தேகம் வந்தது அம்பிகாவிற்கு. ஒரு வழியாக எங்களுக்கு பிடிச்சிருக்கு, ஊர்ல போய் சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் பேசி ஒரு முடிவு சொல்றேன், எங்க அண்ணன் தான் எங்க வீட்ல பெரிய ஆள் அவர்ட்டயும் பேசிட்டு சொல்றேன் என்று ராமின் அப்பா பேசினார், அம்மாவும் சரிங்க என்று ஒற்றையாய் தலையாட்டினாள்.

அவனாகவே அம்பிகாவிடம் தனியா பேசனும் என்றான், அவன் சொல்லலேன்னா இவளே கேட்க வேண்டும் என்று இருந்தாள். அப்பாவைப் பற்றி பேசி விட வேண்டும். அவனை அழைத்துக் கொண்டு பின்பக்கம் சென்றாள். ரொம்ப சின்ன புழக்கடை அது, கிணறு இருந்த தடம் மறைத்து அந்த இடத்தில் போர் பம்பு இருந்தது இப்போது. போர் போடும் போது அம்பிகாவின் அப்பா கூடவே இருந்து தண்ணீர் வந்தபின் தான் போனார், அம்மா கறிக்குழம்பு வைத்திருந்தாள், அவருக்கு பிடிக்கும் ஆனால் அவரு சாப்பிடாம போயிட்டார். அதற்கு பிறகு கிணற்றை மூடிவிட ஏற்பாடும் செய்து விட்டார். துவைக்கிற கல்லை ஒட்டி ஒரு துளசிச் செடியும் இருந்தது. அம்பிகாவின் அப்பாவுக்கு துளசிச் செடி ரொம்ப பிடிக்கும். அப்பா இவளை உட்கார வைத்து ”துளசி தல முல சே” தியாகராஜர் கிருதி பாடும் போது ஒரு மாதிரி புழக்கடையே நிறைந்து அமிர்ததாரையாய் வழியும் அவரின் குரல். அவனை அழைத்து துவைக்கிற கல்லில் உட்காரச் சொன்னாள், சிரித்துக் கொண்டே உட்கார்ந்து தடக்கென்று எழுந்தான் சூடா இருக்கு என்று சிரித்தான். அழகாய் இருந்தது அவன் சிரிப்பு. என்னங்க எங்களப் பிடிச்சிருக்கா, என்னை, என் அப்பா, அம்மாவை, வெளிப்படையா இருங்க, மனசுல பட்டத பேசுங்க! என்று சொல்லிக்கொண்டே சுவற்றில் ஒரு காலை தூக்கி வைத்து சாய்ந்து நின்று கொண்டான்.

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்.

எங்க அப்பா உங்களை பார்க்க வேண்டும், அவரு ஓகே சொல்லிட்டா எனக்கும் ஓகே.

அவரு எங்க இருக்கார்?

உங்க ஊர்ல தான் இருக்கார், ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீனிவாசராகவன் தெருவில் இருக்கார். உங்களை ஆபிஸில் வந்து பார்க்க சொல்றேன், அவரு வீட்டுக்கு வருவாரான்னு தெரியலை, கேட்டுப் பார்க்கிறேன் என்றாள்

அவன் ஒன்றுமே சொல்லாமல் பேசாமல் இருந்தான். என்னோட அப்பா ரொம்ப பிரியமான மனுஷன், அவருக்கு கோவையில் ஒரு குடும்பம் இருக்கு, சொல்லப்போனா அதுதான் அவரோட குடும்பம். என்னோட அம்மாவும் அப்பாவும், படிக்கிற காலத்தில் காதலித்தார்கள், கொஞ்சம் வரம்பு மீறிய சினேகத்தின் கற்பதிவு தான் நான். என் அம்மாவின் வீட்டில் அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள், எந்தவிதமான பிரயத்தனங்களும் இல்லாமல் எல்லாமே இயல்பாய் நடந்தது போல இருந்தது என்று சொல்வாள் அம்மா. அம்மாவும் அப்பாவும் அவர்கள் காதல் பற்றியோ, திருமணம் பற்றியோ யாரிடமும் பேசவில்லை என்று தான் பாட்டி சொல்லியிருக்கிறாள். என் அம்மாவிற்கு அனன்யாவின் அப்பாவுடன் திருமணம் ஆகி ஒன்பதாவது மாதம் நானும் பிறந்தேன். 6 வருஷம் கழிச்சு அனன்யா பிறந்தாள், அவள் பிறந்து ஒரு வருஷத்தில் அனன்யாவின் அப்பா இறந்து விட்டார். அதன் பிறகு நாங்கள் அம்மாபாட்டி வீட்டிலேயே இருந்து விட்டோம். அனன்யாவின் தாத்தா, பாட்டி யாரும் இப்போது வருவதில்லை, அம்மாவும் கவலைப்படுவதில்லை.

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தான் அப்பாவை முதன் முதலா பார்த்தேன், என் பாட்டி தான் சொன்னாள், அவர் தான் என் அப்பா என்று, எனக்கு என்னமோ மாதிரி இருந்தது, அவர் வந்து என் கையைப் பிடித்த போது, தோளில் சாய்ந்து கொண்டேன், அவர் என்னை அனைத்துக் கொண்டார். என் உயரமும், மூக்கும், கால் விரல்களும், காதும் அப்பாவைக் கொண்டிருந்தது. இத்தனை நாளும் அதன் சாயலை நான் ஏன் தேடவில்லை என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.
இதமாய்ப் பேசினார், ஒரு மாதிரி கனமான கீழ்ஸ்தாயியில் கம்பீரமாய் இருந்தது. எப்படிமா இருக்க! என்ற போது பென்சில் முனை மனசு மளுக்கென்று உடைந்து கண்ணில் பெருகியது. அப்பா தொடர்ந்து வர மேலும் இறுக்கமானார்.

அம்மா ஒரு வார்த்தை பேசவில்லை. அதற்கு பிறகு எங்களை சென்னையில் ஒரு வீடு பார்த்து குடி வைத்தார், அம்மா ஒன்றுமே சொல்லாமல், என்னை தான் முன்னே தள்ளுவாள். அப்பா எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், அவர் செய்து விட்ட ஒரே தப்புக்காக. நான் பிறந்திருக்கேன் என்பதால் அது தப்பில்லை தவம் என்பார் சில சமயம். படித்தோம், வளர்ந்தோம், இப்போ அனன்யா என்ஜீனியரிங் படிக்கிறா, நானும் டிகிரி படித்து இப்போ வேலை பார்க்கிறேன். இதோ உங்களுக்கு ஓகேன்னா கல்யாணமும் ஆயிடும். எங்க பக்க சொந்தக்காரங்கன்னு யாரும் பெரிசா கல்யாணத்திற்கு வரமாட்டாங்க, அதனால் பெரிசா எங்க சைடுல இருந்து பிரச்னை வராது. உங்களுக்கு எப்படியோ, யோசிச்சு முடிவு சொல்லுங்க, அவசியம் சம்மதிக்கனும்னு இல்ல. ஆனால் சொல்லாம இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டேன். என்று முழுதாக பேசிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவன் மாறாத குறுஞ்சிரிப்புடனே இருந்தான்.

என்னோட அப்பாட்ட பேசிட்டு சொல்றேன், மனசு விட்டு பேசுனதுக்கு ரொம்ப நன்றி, அப்பாவுக்கு பிடிக்கலேன்னா நம்ம நண்பர்களாகவே இருப்போம் என்று கை நீட்டினான், இதமாக பிடித்து குலுக்கினான். இவன் வேண்டுமே, அப்பா மாதிரியே இருக்கானே என்று மனசுக்குள் வேண்டினாள். ஒரு வாரம் அதைப்பற்றிய நினைவுகள் அவ்வப்போது வந்து நகம் கடிக்க வைத்தது. அம்மாவிடம் அவள் அப்பாவைப்பற்றி ராமிடம் பேசியதை சொல்லிவிட்டாள், அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இதற்காகத் தான் என்பது அம்மாவுக்குப் புரியும் இல்லேன்னா ஏதாவது புலம்பிகிட்டே இருப்பா. இதோ இப்போது இந்த கடிதம் வந்துள்ளது.

அப்பாவிடம் பேசினேன், அவனை ஆபிஸில் போய் பார்ப்பதாய்க் கூறினார், இவளுக்கு பிடித்திருக்கிறதா என்று திரும்ப திரும்ப கேட்டார், அவரைப் பற்றி ராமிடம் சொல்லியதையும், அவருக்கும் அப்பாவை சந்திக்க ஆவல் இருப்பதைச் சொன்னதும், ரொம்ப சந்தோஷப்பட்டார், போன் ரிசீவர் அவரின் அன்பு போல ஒரு இதமான சூட்டுடன் இருந்தது.

அப்பா நிச்சயதார்த்தத்திற்கும், கல்யாணத்திற்க்கும் ஆபீஸ் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு வந்து விடுவதாகக்கூறினார்.

ஜன்னலில் தெரிந்த மெலிதான தூறல் அப்பாவை ஒத்திருந்தது.

பின்குறிப்பு:
சிறுகதைங்கிற பேர்ல ஏதோ எழுதியிருக்கேன்...சரியா இல்லேன்னா கிழிச்சுத் தொங்கவிடவும்.

6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

கொஞ்சம் குழப்புது சார் இல்ல எனக்கு புரிஞ்சிகிடதெரியலையான்னு தெரில

எதும் பின்நவீனத்துவ கதையா சார்?

Karthick said...

என் தொடர் கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
http://eluthuvathukarthick.wordpress.com/

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு ராகவன். கதையின் நீளம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மாதவராஜ் said...

ஒங்க கவிதையில் இருக்கிற அடர்த்தி சிறுகதையில இல்லன்னுதான் படுது. பெண்பார்ப்பது,பெண்ணிடம் தனியாக பேசுவது போன்ற சம்பவங்கள் நிறைந்த எழுத்துக்களும், காட்சிகளும் நிறைய அறிந்து வைத்திருக்கும் வாசகனுக்கு அதைத்தாண்டி சொல்ல எத்தனிக்கலாமே!

Thenammai Lakshmanan said...

அருமையா இருக்கு ராகவன் ஆனா நீளம்தான்கொஞ்சம் அதிகம்

பா.ராஜாராம் said...

எனக்கு இந்த சிறுகதை முன்பே பிடிச்சிருந்தது ராகவன்.பத்திகளை இன்னும் சிறுசாக உடைத்திருக்கணும்.பெரிசு என நம் நண்பர்கள் உணர வாய்த்திருக்காது.மாது சொல்வதையும் கேளுங்கள்.he is gem in that!

என் வரையில் பிடிச்சிருந்தது,ராகவன்.