Wednesday, July 14, 2010

புறநகர் வீடு...

இரவுகளின் இசையை
பழகிக்கொண்டிருக்கிறது
தெருவென மாறிக்கொண்டிருக்கும்
ஒற்றைவழிப்பாதை

வயல்களில்
வர்த்தகப்பயிர் என
முளைக்கத் தொடங்கியிருந்தது
அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள்
குடிகாரனின் பாதச்சுவடுகள் என

பகலின் தனிமையில்
இரவுக்கான அடர்த்தி மசி
அப்பபட்டிருந்தன
புதிதாய்
குடிவந்தவர்களின் கண்களில்

இரைச்சலில் இருந்து
வந்தவர்களின் செவிகளில்
கேளா ஓசைகள்
காத்துக்கருப்புகளாய்
ஓலமிட்டு பயமுறுத்தின

எஞ்சிய கருவ மரங்களும்
பிளவு பட்ட பூமியும்
நீர்மை
மரணக்குழிக்குள்
இருப்பதை சொல்கின்றன

புதிதாய் வர்ணமடித்த
சுவர்களின் வெம்மையில்
கடன் வாங்கி கட்டிய
சொந்த வீடு பெருமை
ஆவியாகும்

8 comments:

'பரிவை' சே.குமார் said...

//வயல்களில்
வர்த்தகப்பயிர் என
முளைக்கத் தொடங்கியிருந்தது
அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள்//

nitharsana varigal.

க ரா said...

ரொம்ப யதார்த்தம் ராகவன்.

ரிஷபன் said...

கவிதை முழுமையுமே அப்படியே புற நகர் வீட்டைப் படம் பிடித்துக் காட்டியது. நண்பனின் வீட்டில் மழை நேரத்தில் காவிரி நீர் சூழ்ந்து திணறிய போது தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது நினைவில் வந்தது.

காமராஜ் said...

ராகவன்...

எந்த வரியும் லேசில்லை.

குடிகாரனின் பதச்சுவடுபோல,

பகலின் அமைதி,

மரணக்குழியில் நீர்மை,

இப்படி ஏர்க்கால்களுக்குப்பின்னால் நடக்கும் சன்னாசித்தாத்தாவின் பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் அகப்பட்டுப்பிதுங்கி விழும் விதைகளைப்போல சரமாரியாக விழுகிறது.
புறநகர் எள்ளலும் விவரணையும்.
ரொம்ப அழகு ராகவன்.

உயிரோடை said...

//வர்த்தகப்பயிர்//
என வீடுகள்
//குடிகாரனின் பாதச்சுவடுகள்//
மிக கவர்ந்த வரிகள்

அம்பிகா said...

\\கவிதை முழுமையுமே அப்படியே புற நகர் வீட்டைப் படம் பிடித்துக் காட்டியது.\\
அருமை.

பாலா said...

கொஞ்சம் லேட்டாதான் வந்துருக்கேன் அண்ணே ,
"எஞ்சிய கருவ மரங்களும்பிளவு பட்ட பூமியும்நீர்மைமரணக்குழிக்குள் இருப்பதை சொல்கின்றன"
வார்த்தைகளை குழைவு வன்மமாய் பீறிடுகிறது எனக்கு ...

'பரிவை' சே.குமார் said...

ennanga maranthachchaaaa.......


namma valaikku varavey illai

http://www.vayalaan.blogspot.com