Friday, November 02, 2012

பகடை...


“ நேத்து என் அப்பாட்ட இருந்து ஃபோன் வந்ததுப்பா? உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆஃபிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன்! உன்னை நேரம் கிடைக்கும் போது பேசச்சொன்னார்! ”


‘ நேத்தே சொல்லியிருக்கலாம்ல, சாயங்காலமே வந்துட்டேனே? ’


 “ சுத்தமா  மறந்து போச்சு, திரும்பவும்  கூப்பிட்டாரு, நாந்தான் எடுக்கலை, உன்னை பேசச்சொல்லத்தான் இருக்கும், அதான் விட்டுட்டேன்! ”

 ‘ என்ன விஷயம்னு கேட்டியா? ஏதாவது அவசரமா இல்லாம இத்தனை வாட்டி கூப்ட மாட்டாரே?! ’

 “ அவருக்கு பொண்ணுகிட்ட சொல்ல முடியலை  போல, மருமகங்கிட்ட தான் சொல்லனும்  போல, அப்படி என்ன சீமையில  இல்லாத ரகசியம் பேசப்போறாரோ? ”

 ‘ சும்மா சொல்லாத, உன்ட்ட சொல்லியிருப்பாரு, நீ என்ட்ட சொல்லமுடியாம, அவர்ட்டயே  கேக்க சொல்லுற! தெரியாதா எனக்கு? நீயும் உங்கப்பாவும் போடுற நாடகம்? ’

 “ அறிவுகெட்ட தனமா பேசாதீங்க, ஒங்ககிட்ட எதை மறைச்சிருக்கேன்? உங்களப்போல பத்து வருஷத்துக்கு குடும்பமா சேர்ந்து ஒரு பொய்யை மறைச்சிட்டு, மாட்டிக்கிட்ட பெறகு ரொம்ப யோக்கியன் மாதிரி நடிக்கிற புத்தியெல்லாம், எங்க வீட்ல யாருக்குமில்லை! ”

 ‘ எதுக்கு  எல்லாத்தியும் இழுக்குற இப்போ? அதைப்பத்தி எதுவும்  பேச வேணாம்னு முடிவு பண்ணம்-ந்தானே? அப்புறமெதுக்கு இப்ப அதப்பத்தின பேச்சு? ’

 “ அதென்ன ஒங்கபேச்சுன்னா ஒரு நியாயம், என் பேச்சுன்னா ஒரு நியாயம்? ”

 ‘ அப்ப, உங்கப்பா ஏதோ சொல்லியிருக்காரு, சரியா? அதுக்கு ஏன் எதையெதையோ இழுக்கணும்? நேரடியா சொல்லிட்டு போயிரலாம்ல? ’

 “ ஒங்க குத்தமெல்லாம் ஒன்னுந்தெரியாது  ஒங்க வீட்டுக்கு, ஒருத்தி  வாழ்க்கைய இப்படி பாழாக்கிட்டானே! ஒரு பொண்ணோட வாழ்க்கை சீரழிஞ்சு  கெடக்கேன்னு, அந்த பொம்பிளைக்கு தெரியலை, சும்மா ஒண்ணுமில்லாததுக்கு வந்து ஏறுராரு இப்போ! நீ பேசுறதுன்னா பேசு இல்லேன்னா  விட்டுடு, எந்தலைய உருட்டாதீங்க ரெண்டு பேரும்! ”

  " எங்கம்மாவ  எதுக்கு இங்க கொண்டு வர்ற, கல்யாணம் பண்ணவ கிட்ட அதைச்  சொன்னா, பையனோட வாழ்க்கை கெட்டுப்போகுமேன்னு அவங்க நினைச்சிருக்கலாம்ல? ’

 “ஆமா  உங்கம்மா செஞ்சுட்டா, ஒந்தொம்பிங்க செஞ்சா அது குத்தமில்ல, நான் எங்க அப்பா என்ன பேசினாருன்னு சொல்லலேன்னா குத்தமாயிடும், எந்த ஊரு நியாயமோ இதெல்லாம்! எனக்கு ஒரு போக்கிருந்தா, போடான்னு போயிக்கிட்டே இருந்திருப்பேன், வக்கத்து போயி தானே உங்கள தொன்னாந்துகிட்டு இருக்கேன்!”

 ‘ எத்தனை தடவை இதையே பேசுவ நீ, மிச்சம்  இருக்கிற கொஞ்ச நஞ்ச ப்ரியத்தையும்  கெடுத்துக்கிட்டு சீப்படனுமா வாழ்க்கை முழுக்க? ’

 “ நாஞ்சொன்னேன்ல, ஒன்னப்பாக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு எல்லாம்  சொன்னேன்ல, அப்பக்கூட நீ ஒண்ணும் சொல்லலையே, அப்படின்னா, அப்படியே சாவுற வரைக்கும் மறைச்சிடலாம்னு தானே நினைச்சிருக்கே? எம்புட்டு நெஞ்சுத்தைரியம் இருந்திருக்கனும் ஒனக்கு? அப்படியே குடும்பமா சேந்து மறச்சிட்டீங்கள்ல? ”

 ‘ எத்தனை தடவடீ சொல்றது? ஏன் சொல்லலைன்னு? நீ சொன்னா என்னை ஏத்துக்க மாட்டியோன்னு தான் சொல்லைன்னு  ’


“அப்போ  ஒங்குடும்பத்துக்கு எங்க போச்சு புத்தி? என்னைப் பத்தி  எல்லாம் விசாரிச்சாள்ல, அந்த பொம்பள, உங்கம்மா? அதே நான் பண்ணியிருந்தா, அப்பவே உன் வண்டவாளமெல்லாம் தெரிஞ்சிருக்கும்ல? செஞ்சிருக்கணும்டா விட்டுட்டேன் , எந்தலையில நானே மண்ண வாரி போட்டுக்கிட்டேன்! என் ஃப்ரண்ட் ஒருத்தன் சொன்னான் , நீ காசுக்காகத் தான் என்னை கல்யாணம் பண்றேன்னு , என்னத்த கண்டேனோ ஒன்ட்ட , கண்ணை மறச்சிருச்சு!”

 ‘ காசுக்காக  கல்யாணம் பண்ணலேன்னு ஒனக்குத் தெரியாதா? தெரிஞ்சிருந்தும் நடிக்காத! ’

 “ நான் நடிக்கிறேனா, நெஞ்சுல கைவச்சு  சொல்லு, நான் நடிக்கிறேனுன்னு ! நீ பேசுனதுலயும், நீ நடந்துக்குறதுலயும் ரொம்ப நல்லவனாட்டம் இருக்கானேன்னு  நினைச்சேம் பாரு எம்புத்திய செருப்பால அடிக்கணும் ! மொதத்தடவ கூட்டிட்டுப் போனியே ஒன்  வீட்டுக்கு அப்பவே என்னமோ தோணுச்சு, அந்த பொம்பளயோட  பார்வையும், நடத்தையும்! எதுடா  சாக்குன்னு தானே இருந்திருக்கா இத்தனை நாள்வரை!  சந்தர்ப்பம் கிடைச்சதும் என்னமா திட்டம் போடுறீங்கடா நீங்கள்லாம்.  கிரிமினலுங்கடா எல்லாம், செத்துப் போயிடலாம் ஒங்கூட இருக்குறதுக்கு, எனக்கொரு சாவு வரமாட்டேங்குது! ”

 ‘ இதையே சொல்லாத, சொத்துக்கு ஆசப்பட்டு நடிக்கிறவென், பத்து வருஷமா நடிப்பானா ப்ரியம் இருக்கிற மாதிரி? ’

 “ அதான்  வெளுத்துப் போச்சுல்ல, ஒஞ்சாயம்! பத்து வருஷம் ப்ரியமா இருந்தானாம், போவேன் போய் போஸ்டர் அடிச்சு  ஒட்டு ஊரெல்லாம்! ஊருல உலகத்துல இல்லாதத இவ ஒருத்தந்தான் செய்றா மாதிரி ”

 ‘ இங்க பாரு, சொத்து மயிரு எல்லாம் எனக்கே வேணும்னு நினைச்சேன்னா, வீட்டை முழுக்க உம்பேருக்கு மாத்துவனா? வாடகையெல்லாம் உனக்கே வந்து சேருற மாதிரி செய்வனா? கொஞ்சமாவது யோசிச்சு பாரு! ’

 “ ஆமா, எங்கப்பன்கிட்ட இருந்தே  காசு வாங்கி, வீட்டைக் கட்டி, அத எனக்கே குடுத்துட்டாராம்ல? ரொம்ப நியாயமாத்தான் பேசுற! இன்னும் வீட்டுக்கு வாங்குன  கடனையும் அடைக்கல, வீடு தாராராம்... வச்சுக்கோ வீட்டை நீயே, பத்து  வருஷத்தை திருப்பிக் குடுக்கமுடியுமா? பேசுறான் பேசமாட்டாம? ”

 ‘ நானா கேட்டேன் ஒங்கப்பாகிட்ட, அவராக் கொடுத்தாரு, அதுவும் நீ தான் கொடுக்குறப்பவே வாங்கிக்கண்ணு  கம்பெல் பண்ண! ஒன் பேச்சக்கேட்டு  தானே வாங்குனேன், அதுவும், அவரு கொடுத்த காசமட்டும் வச்சு, இந்த வீட்டக் கட்டிருக்க முடியுமா? எடத்தை மட்டும்  வாங்கிட்டு சும்மா போட்டிருக்க  வேண்டியது தான், அதுலயும் பாதி லோன் போட்டு வாங்கியிருக்கு! ’

 “ ஆமா  நாந்தான் சொன்னேன், ஒனக்கெங்க  போச்சு அறிவு? எழுதற பெரிய  எழுத்தாளர் புடுங்கின்னு பீத்திக்கிற? எனக்கு எதும்  வேணாம்னு சொல்லியிருக்கனும், அம்புட்டு ரோஷக்காரன்னா! ஊர்ல, எவனுக்கோ, எவளுக்கோ பிரச்னையாம், அதுக்கு வடிக்கிறாராம்  கண்ணீரு, இங்க ரத்தம் வழியுது  அது கண்ணுக்கு தெரியல, பொசகெட்ட பய! இந்தாபாரு! கைய்யகிய்யத் தூக்குனா அம்புட்டு தான் பாத்துக்க! மருந்தக் குடிச்சுட்டு, நீயும் ஒங்குடும்பமும் தான் காரணம்னு எல்லாத்தியும் எழுதி வச்சுட்டு செத்துப் போயிடுவேன், அப்புறம் சீரழிஞ்சு போயிடுவீங்க ”

 ‘ நாங்கள்லாம்  ஜெயிலுக்கு போயிட்டா, உனக்கு நிம்மதி வந்துடுமா? ’

 “ நிம்மதி  வராது, அதத்தான் குழி தோண்டி பொதைச்சுட்டியே? ஆத்திரம் தீரும்ல, நான் படுற வேதனை  ஒங்களுக்கெல்லாம் அப்பனாச்சும் புரியும்ல? ”


" என்னைய, என்ன வேணும்னாலும் செய் ஒம்மனம்  போல, என் குடும்பத்த உள்ள இழுக்காத, நான் பண்ண அலும்புக்கெல்லாம், நான் அனுபவிக்கிறென், அவங்க என்ன பண்ணுவாங்க! ’


“ எது  எப்படி போனா என்ன? உனக்கு நீயும் ஒங்குடும்பமும் நல்லாயிருக்கணும், எப்படியோ போய்த் தொலைங்க, நாஞ்சாவுறேன்! ரெஸ்டில்ல எடுத்து எங்க வச்சிருக்க? குடு ஒரேடியா போயிடுறேன்! இந்த கருமத்தை பேசவேண்டியதில்ல, ஒன் மொகரக்கட்டையிலையும் முழிக்க வேணாம்ல, கர்சீப்ப எடுத்துக் கொடுத்துட்டு நீ வெளியே போ, நான் கதவ மூடணும்! எங்கப்பங்கிட்டயும் பேசிடு, இல்லேன்னா என் உயிர வாங்கித்தொலப்பாரு! ”

****


“ ஹலோ  மாமா!  எப்படி இருக்கீங்க? ”

 ‘ நல்லாயிருக்கேன், ஜெயச்சந்திரன்! நீ எப்படி இருக்க? ஒங்கூட பேசணும்னு நினைச்சேன், ஒன் நம்பர எங்கேயோ விட்டுட்டேன், ஒன்னோட பழைய நம்பர் தான் இருந்தது! ’

 “ டெய்ஸி சொன்னா மாமா, நேத்து வீட்டுக்கு வரவே லேட்டாயிடுச்சு, அதான்  கூப்பிடமுடியலை, டைம் டிஃபரண்ஸ் வேற இருக்கா, லேட்டாயிருக்கும் படுத்திருப்பீங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்! அத்த எப்படி இருக்காங்க? ”

 ‘ அதுக்குத்  தான் கூப்பிட்டேன், எங்க ரெண்டு பேருக்கும் வயசாகிக் கிட்டே போகுது, ஒடம்புக்கு வேற அடிக்கடி முடியறதில்ல, முந்தா நாள் கூட காண்ஸ்டிபேஷன் சிவியராகி, பாத்ரூம்லேயே மயங்கி விழுந்துட்டேன், ஜெயா! அப்புறம் அத்தையும், சார்லியுந்தான் தூக்கி படுக்க வச்சாங்க?’ வீட்டுக்கு எப்பவும் வர டாக்டர் வந்து பார்த்துட்டு, ரொம்ப பயமுறுத்திட்டாரு!’

 “என்ன மாமா சொன்னாரு? ”

 ‘ என்ன சொல்வாரு, அவரு வருமானத்தேவைக்கு தக்கன ஏதாவது சொல்லிட்டுப் போவாரு, ஆஸ்பத்திரிக்கு வாங்க  ஒரு ஸ்கேன் எடுக்கலாம் அது, இதுன்னு சொல்றாரு! அப்புறம் லக்ஸ்டிவ் மாத்திரைகளை  கொஞ்சம் எழுதி கொடுத்திருக்காரு! உனக்கு தான் தெரியுமே, பத்து  பர்கோலக்ஸ் போடனும் கொஞ்சம்  போக! அதுலயும் இப்ப கான்ஸ்டிபேஷன்  பயத்துனால, சரியாவும் சாப்பிடுறது  இல்லை, கைகாலுல ஒவ்வொரு  மொலியும் வலிக்குது, வண்டி  ஓட்ட முடியலை, சார்லிக்கு லைசன்ஸ்  வாங்குனதால, வண்டி ஓட்ட வேண்டியதில்ல, அவென் பார்த்துப்பான். ஆனாலும் சில சமயம் வீட்டு வேலையும் பார்த்துட்டு அவனால் பார்க்க முடியறதில்லை, அவனால் முடியலேன்னா , கருப்பசாமிய கூப்புட்டுக்குறது வண்டி ஓட்ட! ’

 “ மாமா, எனக்கு புரியுது மாமா, நான் சொல்றத கேப்பீங்கன்னா நான் சொல்றேன்! ”

 ‘ சொல்லு, சொன்னாதானே தெரியும்? ’

 “ முதல்ல சிட்டிக்கிட்ட ஏதாவது வீடு வாடகைக்கு  எடுத்துட்டு  வந்துடுங்க, ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஏதாவது ஒண்ணுன்னா ஓடமுடியுமா?, அப்புறம் தோட்டம், தொரவுன்னு இருக்கிற எல்லாத்தியும் ஏறக்கட்டிடுங்க, இல்லேன்னா யாருக்காவது குத்தகைக்குக் கொடுத்துடுங்க! வேலை குறைஞ்சு ஓய்வா இருந்தாலே, சரியாயிடுவீங்க! அப்புறம்  ரெகுலரா வெளக்கெண்ணெய் குடிச்சுப் பாருங்க! ”

 ‘ எனக்கு இந்த வீட்ட விட்டு வரமுடியாது, சிட்டில எங்க பார்த்தாலும், டிராஃபிக், வண்டிகள்னு ஒரே  இரைச்சல். அதும்போக தூசி வேற. இங்க மாதிரி வராது, இதுவே  வண்டி போக்குவரத்து அதிகமா இருக்குன்னு இன்னும் தள்ளிப்போகலாமான்னு இருக்கேன். அப்புறம் யாரும் நம்மள மாதிரி பாத்துக்க மாட்டாங்க, எல்லாம் வீணாப் போயிடும்!! ’

 “உங்க உடம்புக்கு ஒண்ணுன்னு பேசுறப்போ, மத்ததெல்லாம் எப்படி மாமா, முக்கியமாப்படும் எனக்கு? அதான் சொன்னேன்!”


‘ அது  ஒன்னப்பொருத்தவர சரிதான்  ஆனா, என்னால இத விட்டுட்டு வரமுடியாது! அதுக்கு தான் ஒன்கூட பேசணும்னு நெனச்சேன்! நீயும், டெய்சியும் இங்கேயே வந்துடுங்க! எனக்கு பென்ஷன்ல வர வருமானமும், பாங்க்ல கிடைக்கிற வட்டி மட்டுமே போதும், புதுசா வாங்கின காரும் இருக்கு, நீயே யூஸ் பண்ணிக்கோ! நீ வீடு கட்டுறதுக்காக வாங்கின காசையும் தரவேண்டாம்.  இங்க வந்து, என்னோட இன்வெஸ்ட்மெண்ட்ஸ், அப்புறம் நிலத்தையெல்லாத்தையும், மத்த வரவு செலவையும் பாத்துக்கோ! நீ இங்க வந்து பொறுப்பெடுத்துக்கிட்டா இன்னும் கொஞ்ச நாளு உயிரோட இருப்பேன்! என்ன சொல்ற? ”

“ எதுக்கு  மாமா அப்படியெல்லாம் பேசணும், நான் இங்க இருந்து வேலைய  விட்டு வரதப்பத்தி பிரச்னையில்லை, ஆனா அங்க வந்து வேலை பாக்காம  இருக்க முடியாது மாமா! அதுவும் சிட்டிய விட்டு அத்தன தூரத்துல இருந்தா வேலைக்குப் போயி வரது கஷ்டம் மாமா ”

 ‘ சரி, டெய்ஸி இப்போ எப்படி இருக்குறா? உன் கூட சரியா பேசுறாளா? ஒம்மேல கோவம் குறைஞ்சிருக்கா? நாளாக ஆக சரியாயிடுவா தானே? ’


“ நான் எவ்வளவோ சொல்லிட்டேன் மாமா, நான் அவளை விட்டுப் போகப்போறதில்லே, கடைசி வரைக்கும் அவ தான் எனக்கு எல்லாம்னும் சொல்லிப் பாத்துட்டேன்! கொஞ்சம் கூட  நம்ப மாட்டேங்கிறா? என்ன செய்றதுன்னு  தெரியலை! எல்லாத்திலையும்  நம்பிக்கை போயிடுச்சுன்னு அடிக்கடி சொல்றா! ”


‘ சரியாயிடுவா  போகப்போக, நீ கொஞ்சம் அனுசரனையாவே  இரு எப்பவும்! அத்தைகிட்ட பேசுறியா? ’

 “ இல்ல, மாமா கேட்டதா சொல்லிடுங்க, எனக்கு வெளிய போகனும், இன்னொரு  நாள் பேசுறேன் மாமா! ”

*****

  “ என்னங்க  சொல்றான்! ”


‘ உங்கிட்ட இன்னொரு நாள் பேசுறானாம்! ’

 “ பேசமாட்டான்ல, பயம் அவனுக்கு, நாக்கப்புடுங்கிக்கிற மாதிரி கேட்டுடுவேன்ல! எடுபட்ட  பய, என் பொண்ணோட வாழ்க்கைய  சீரழிச்சுப்புட்டான்ல! ”

 ‘ நீயும் ஏண்டி உன் மக மாதிரியே பேசுற! எப்பவோ நடந்த விஷயத்தை இன்னமும் தூக்கிட்டு அலையுறா, நீ என்னவோ அதையே பிடிச்சுட்டு தொங்குற! ’


“ப்ரியப்பட்டு கட்டிக்கிட்டவன், உண்மையா  இருக்க வேண்டாம் ? கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தா என்ன? மறைக்கணும்னு தோணியிருக்குல்லா, அது தான வெசனப்படுத்துது! மறந்து போகிற மாதிரி காரியமா அது, அதுவும் சாட்சியா வளந்து நிக்குதே, அதை என்ன பண்றது? அவனுக்கு நீங்க வக்காலத்து! ஒங்களையும் நோண்டினா தான் தெரியும், என்ன கத இருக்குன்னு பின்னாடி! ”

 ‘ அதையே  ஏண்டி திரும்ப திரும்ப  சொல்றீங்க, அம்மாவும், மகளும்!  கல்யாணமானதில இருந்து எந்நேரமும் அவ கூடயே தான் இருக்கான்.  அங்கயும் தொடர்பே இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரியும்! இத்தன சம்பாதிக்கும் போதும், டெய்ஸிக்குத் தவிர வேற எதுவும், யாருக்கும் செய்யல, அப்புறம் எப்படி திடீர்னு, அங்க ஓடிப்பொயிருவான்னு  நினைக்கிறது எல்லாம்? ’

 “ நீங்க  என்ன சத்தியம் வாங்கியிருக்கீங்களா  அவெங்கிட்ட?  நம்ம ரெண்டு பேரு காலத்துக்கு பின்னாடி, எல்லாத்தியும் சுருட்டிட்டு, டெய்சிய விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவீங்க? இல்லேன்னா அவங்க ரெண்டு பேரும் அதுக்கப்புறம் பிரிஞ்சா சொத்தெல்லாம் பாதிப்பாதியா பிரிச்சா? இது எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு தானே? ”

 ‘ எனக்கு நம்பிக்கை இருக்கு, அவன்  அந்த மாதிரி செய்யமாட்டான், அப்படி செய்றவன், அவன் பேரில  இருக்கிறத, அவ பேருக்கு மாத்துவானா? அவன் பேரிலே தனியா பாங்க் அக்கவுண்ட் கூட கிடையாது தெரியுமா உனக்கு? எல்லாமே  ஜாயிண்ட் அக்கவுண்ட் தான்! அவனுக்கே தேவையின்னா, அவகிட்ட  தான் போயி நிக்கனும்! ’

 “ பெரிசா வாரிச் சுருட்ட தான் ஏதோ திட்டம் வச்சிருக்கா மாதிரி தெரியுது! இதுல அவங்கிட்ட எல்லாத்தியும் கொடுத்திடலாம்னு நீங்க சொல்றது எனக்கு என்னமோ பயமா இருக்கு! ”

 ‘ ஒண்ணு  தெரிஞ்சிக்கோ! அவன் இருக்கிற வேலைய விட்டு இங்க வந்தான்னா  தான் எல்லா பொறுப்பையும் கொடுக்கப்போறேன்! ஆனாலும்  எல்லாமே டெய்ஸி பேர்ல தான் இருக்கப்போகுது! ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இங்க வந்து  இருந்து, பொறுப்பெல்லாம் எடுத்துக்கிட்டான்னா போதும், வெளிய போய் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லைன்னு புரிஞ்சிடும், அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் அவன் டெய்ஸியை தான் சார்ந்திருக்கணும்! இது தான், அவனை டெய்ஸியோடவே இருத்தி வைக்கும்! என்ன சொல்ற! ’

“ அப்படியென்ன  மயித்துக்கு டெய்ஸி அவங்கூட  இருந்தே ஆகணும்? ”

24 comments:

க ரா said...

உங்கள அப்படியே பார்த்துட்டே இருக்கனும் போலயிருக்கு.. நல்லா எழுதிருக்கீங்கண்ணா.. அருமை.

பெம்மு குட்டி said...

நல்லாயிருக்கு ... படிக்கும் போது கோவம் வந்தாலும் .. அவரவர் நியாயங்கள் அவரவர்க்ககு அப்படின்னு நினைச்சா may be correct ...

நேரடியா சொல்லாம குறிப்பால் உணர்த்துவதும் அருமை

rajasundararajan said...

//நீயும் ஏண்டி உன் மக மாதிரியே பேசுற! எப்பவோ நடந்த விஷயத்தை இன்னமும் தூக்கிட்டு அலையுறா,//

//அதையே ஏண்டி திரும்ப திரும்ப சொல்றீங்க, அம்மாவும், மகளும்!//

இவை டெய்சிக்கு அம்மாவின் பேச்சில் வராமல் அமைக்க முடிந்தால், தாயும் மகளும் ஒரே வார்ப்புதான் என்கிற சுவாரஸ்யம் கிடைக்கும். இப்போது, இவை மிகைபடக் கூறல்.

'பகடை' என்று ஒருமையில்தானே வரவேண்டும்? நுவலுநனைத் தவிர மற்ற எல்லாரும் ஆட்டக் காரர்களாகத்தானே தெரிகிறார்கள்?

'பகடை' என்றால், ராமநாதபுர வழக்கில், சக்கிலியன் என்றும் ஓர் அர்த்தமுண்டு அறிவீர்களோ?

ராகவன் said...

அண்ணே!

மாத்திட்டேன்! பகடை ஒருமையில் தான் வரவேண்டும்... என்று சந்தேகம் இருந்தது...

பகடையின் ராமநாதபுர வழக்கு எனக்கு தெரியாது அண்ணே!

அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

மணிஜி said...

வழமை போல் ...அருமை ராகவன்...!!

க.பாலாசி said...

அருமை ராகவாண்ணா... படபடன்னு பொம்பளைங்க பொறியறது அப்படியே எழுத்தில்... அருமை...

'பரிவை' சே.குமார் said...

Excellent ANNA...

Yaathoramani.blogspot.com said...

நிகழ்வை ஒரு வார்த்தைவிடாமல்
அதே உணர்வுடன் பதிவிட்டிருந்தது போல இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

saravanan said...

i feel it.because i am very close this story.

நிலாமகள் said...

அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அவ்வ‌ள‌வு ஆவேச‌ம் இதில் ஏன் என்ப‌து பெண்மன‌சுக்கு விள‌ங்கும். எத்த‌னை க‌த்தினாலும் குப்பை கொட்டியாக‌ வேண்டிய‌ நிர்ப‌ந்த‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ப் போவ‌தில்லை. இன‌ம் இன‌த்தை காக்குமென்ப‌தாயிருக்கிற‌து அப்பாவின் செய‌ல். மீண்டுவ‌ந்தாலும் புதைசேற்றின் க‌றை நீக்க‌ முடியாத‌தாக‌...அவ‌ர‌வ‌ர் போக்கில் அவ‌ர‌வ‌ர் நியாய‌ம். கொந்த‌ளிப்பு என்ன‌வோ கால‌கால‌த்துக்கும்.

Anonymous said...

நல்லா இருக்கு ராகவன் பகடை . உங்களுக்குனு தலைப்பு சிக்குது பாருங்க ! எனக்கு டயலாக்ஸ் வராது .. கதைசொல்வதிலே கதை முடிஞ்சி போகுதுனு சொன்னவரா நீங்க ? டயலாக்ஸ்லயே அட்டகாசமா கதை சொல்லிட்டீங்களே ! வண்ணதாசனோட "அடங்குதல் " ( தலைப்ப சரியா சொல்றேனா ?) மாதிரி , சுஜாதா கூட --- பேர் மறந்து போச்சு ! நல்ல ஒரு டெக்னிக் இது ... கதை எழுதறவங்களுக்கு தெரியும் இதுல இருக்கற சிரமம் ..

வழக்கமா போல இல்லாமல ..இந்த கதைல எனக்கு கொஞ்சம் மொரண்டுற அம்சம் இருக்கு ... அதென்ன ? ஆம்பளைங்க ரெண்டு பேருமே என்னமோ பெரும்போக்கான ஆளுங்க , ரொம்ப நல்லவய்ங்க மாதிரியும் பெண்கள் ரெண்டு பேரும் பிடாரிங்க மாதிரியுமான சித்தரிப்பு ? கடைசி பத்தில ஒரு பெரிய வலை விரிச்சு காத்திருக்கற மாமனார் பத்தி லேசனா வில்லன் எஃபெக்ட் குடுத்திருக்கீங்க தான்னாலும் கூட .. அப்ப ஜெயச்சந்திரன் ஹீரோ ? இல்லயா ? எப்பவும் நியாயப்படுத்த மாட்டீங்களே ? ஆனா மடமடன்னு கதைய படிக்க வச்சிட்டீங்க , சுவாரஸ்யமான கதைசொல்லும் விதம் நல்லா இருக்கு ...

முடிவு சரியான பஞ்ச் .. கதைல ரொம்ப பிடிச்சது இந்த அம்சம் தான் ..

அப்பறம் ...
" இவை டெய்சிக்கு அம்மாவின் பேச்சில் வராமல் அமைக்க முடிந்தால், தாயும் மகளும் ஒரே வார்ப்புதான் என்கிற சுவாரஸ்யம் கிடைக்கும். பகடை' என்று ஒருமையில்தானே வரவேண்டும்?பகடை' என்றால், ராமநாதபுர வழக்கில், சக்கிலியன் என்றும் ஓர் அர்த்தமுண்டு"

இதுக்கு தான் ராஜா சார் வேணும்கிறது !

ஆனா இதே மாதிரி கரா பத்தி சொல்ல வரல ! :) ... அதென்ன உங்க எழுத்துல நீங்க தெரியறீங்களாமா ? :)

ராகவன் said...

அன்பு ராம்,

உன்னுடைய வாசிப்பிற்கும், அன்பிற்கும் என் அன்பும் நன்றிகளும்...

நீ ஜி+ பகிர்ந்ததும் நெகிழ்வு.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பெம்முக்குட்டி,

உங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்... உங்களை முதல்முறையாய் என் வலைதளத்தில் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன்... தொடர்ந்து வாசித்து நிறைகுறைகளைச் சொல்லுங்கள்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மணிஜி அவர்களுக்கு,

அன்பும் நன்றிகளும்...

ராகவன்

ராகவன் said...

அன்பு க.பாலாசி,

உங்களுடைய வாசிப்பிற்கும் கருத்திற்கும் எப்போதும் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சே.குமார்,

அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரமணி அவர்களுக்கு,

உங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சரவணன்,

எப்படி இருக்கு உன் தோள்பட்டை வலி...?

உனக்கு இதை எழுதுவதற்கு முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்... அதனால் இதை மிகச் சமீபமாய் உன்னால் பார்க்கமுடிகிறது... கருத்திற்கும் வாசிப்பிற்கும் அன்பும், நன்றிகளும்.

ராகவன்

ராகவன் said...

அன்பு நிலாமகள்,

இது ஒரு சூழல்... அல்லது ஒரு வாழ்வு நிலை... இது வெவ்வேறான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமாய் இருக்கிறது...அல்லது ஒரே மாதிரி தோற்றம் அளிக்கிறது. எல்லாருக்கும் தன் முடிவின் நியாயங்களை முன் வைக்கத் தோன்றுகிறது... முன் வைக்கிறார்கள். இதில் இங்கிருந்தே தான் குப்பை கொட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சொல்லப்படவில்லை... இது நாயகியின் பதிலாய் சொல்லப்பட்டாலும்... பொதுவாகவே... ஒரு கதையை உரையாடல் கொண்டு மட்டுமே நகர்த்தும் போது அதை அப்படியே உரையாடலின் படியே எடுத்துக் கொள்ளமுடியாது என்பது தான் உன்மை. இதில் இருக்கும் தனிமனிதக் கணக்குகளும், கூட்டுக்கணக்குகளும் உரையாடலின் இடையே இருப்பதாய்ப் படுகிறது எனக்கு... இதில் இனம் இனத்தைக் காப்பதாய் தெரிகிறதென்றால்... நான் எழுதியதில் தான் பிசகு...

வாசிப்பிற்கும், கருத்திற்கும்

அன்பும் நன்றிகளும்

ராகவன்

ராகவன் said...

அன்பு ஷஹி,

பகடைகள் என்று ஆரம்பத்தில் தலைப்பு வைத்திருந்தேன்... யாரும் இங்கு ஆடவில்லை... என்ற அர்த்தத்தில்... எல்லாருமே ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில்...அல்லது நம் கையில் எதுவுமில்லை என்ற அர்த்தத்தில். பகடகள் என்று பன்மையில், மலையாளத்தில் பிரயோகம் உண்டு. தமிழிலும் படுத்தலாம் என்று நினைத்து தான் எழுதினேன்... தமிழில் ஒருமையில் தான் வருமென்று என்று தோன்றியதை, தள்ளி வைத்து பகடைகள் என்று பெயரிட்டேன்... ஆனால், ராஜா அண்ணன் வந்து சொன்ன பிறகு, சொற்குற்றம், பொருட்குற்றமாய் ஆகிவிடக்கூடாது என்பதனால் மாற்றிவிட்டேன்... மாற்றியபிறகு திருப்தியாய் இருந்தது.

தலைப்பு வைப்பது எனக்கு அத்தனை உடன்பாடான விஷயம் கிடையாது... அதனுடைய வீச்சு குறைந்துவிடும் என்று தோன்றும்... பன்முகவாசிப்பை முடக்கிவிடும்... அதனால் பெரும்பாலும் கவிதை என்று நான் எழுதுவதில் தலைப்பு வைக்க ரொம்பவும் யோசிப்பேன்... ஏனோ படிக்கிறவர்களின் மன நிலையை ஒத்திருக்கும் போது, தலைப்பு பிரதானப்படுத்தப்படுகிறது... பகடை என்பது இங்கே நிகழ்தகவாய் கூட இருக்கலாம்... சூதாய் இருக்கலாம்...

உரையாடலாய் ஒரு கதையை நகர்த்தியதற்கான காரணமே, நுவலுனரின் பார்வையோ அல்லது நியாயப்படுத்தலோ வந்துவிடும் என்று நினைத்ததினால் தான்... ஆனால் கொஞ்சம் விவரனைகள் மூலம்... சூழ் நிலைகளை இன்னும் வேறு மாதிரி, உடல்மொழியையும், இடைவெளிகளையும் சொல்லியிருக்க முடியும் தான்... ஆனாலும் வேண்டாம் என்று தவிர்த்தேன்.

இதில் எந்த வித நியாயத்தையும் நான் தூக்கிப் பிடிக்க நினைக்கவில்லை... இதில் என்ன தவறு என்றும் எந்த காலகட்டத்தில் நடந்தது என்றும் மறைகுறிப்புகள் இருப்பது போல பார்த்துக் கொண்டேன். இது ஒரு வெளியாளாய் தான் பார்க்க நினைத்தேன்... ஆனால் கொஞ்சம் உள்ளே புகுந்து வெளியே வரவேண்டியதாயிற்று, சில உரையாடல் தேர்வுக்காக... அப்புறமும் ஜெயச்சந்திரனுடைய உரையாடலில் ஒரு தோற்ற நிதானத்தை வைத்தேன்... அது ஒருவிதமான கயமைத்தனம் அந்த பாத்திரத்துக்கு கொடுக்கும் என்று நினைத்தேன்... அது கைகூடி வரவில்லை போல... எப்பவுமே என்னுடைய இயல்பு இது சரி தப்பு என்று அறுதியிடுவது கிடையாது... வலதா இடதா என்ற குழப்பம் எனக்கு எப்போதுமே உண்டு... என்னுடைய மைதானம் எப்போதுமே சாம்பல் நிறத்தினது... அந்த யோக்யதை எனக்கு எப்போதுமே இருந்ததாய் நான் நினைத்தது இல்லை...

அதனால் எதையும் நியாயப்படுத்த முனைவதே இல்லை... இதில் தடுமாறி இருப்பதாய் நீங்கள் சொல்வது என் இயல்புக்கு மாறியதாய்ப்படுகிறது. என் எழுத்துல நான் தெரியறேனான்னு எனக்குத் தெரியாது... தெரியலாம், ராகவன் நு ஒரு இலக்கமிடாமல் படித்தாலும் ராகவன் தெரிவேனா என்பது நிச்சயமில்லை...

ஆக... இன்னும் எழுதலாம்... என்றாவது என் எழுத்து நேர்படலாம்... சீர்படலாம்... பார்க்கலாம்... எழுதுவதை விட எழுதாமல் இருப்பது சிரமம்... அதனால் எளிமையான காரியத்தையே எப்போதும் செய்ய விரும்புகிறென்.

அன்புடன்
ராகவன்

நிலாமகள் said...

என‌து புரித‌லின் ல‌ட்ச‌ண‌ம் தான் க‌ருத்துரையாகின்ற‌ன‌வேய‌ன்றி, த‌ராசு தூக்க‌வோ, க‌ல் பொறுக்க‌வோ என‌து விழைவுக‌ளில்லை.அத‌ற்கான‌ த‌குதியும் என‌க்கில்லை அண்ணா, உங்க‌ளின் ம‌ன‌ப்பாங்கும் கைத்திற‌னும் வாசிப்பின் வ‌ழி அநேக‌ முறை உண‌ர்ந்திருக்கிறேன். பேச‌ப் ப‌ழ‌கும் சிறுபிள்ளை உள‌ற‌லாய் என்னைக் கொள்க‌. என் அனுப‌வ‌த்தின் ஊடாக‌ சில‌வ‌ற்றைக் காண்ப‌து ம‌ஞ்ச‌ள் க‌ண்ணாடிய‌ணிந்த‌ பார்வைய‌ல்ல‌வா.

ராகவன் said...

அன்பு நிலாமகள்,

எல்லாருமே மஞ்சள் கண்ணாடி அணிந்து தான் பார்க்கிறோம்... அனுபவத்தின் ஊடாய் தான் எந்த ஒரு விஷயத்தையும் நாம் அனுகமுடியும், பார்க்கமுடியும்... உங்கள் புரிதல்கள் எல்லாமே சரியே... நான் என் பக்க கருத்தை மட்டுமே சொன்னேன்... அண்ணா என்ற விளித்தல் அழகு.

அன்புடன்
ராகவன்

Dino LA said...

அருமை

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான உரையாடல்கள் மூலமாக கதையை ரசனையுடன் நகர்த்தி கடைசியில் வலையுடன் காத்திருக்கும் மாமனார் .. அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..