Sunday, November 08, 2009

மைதிலியின் தலைப்பிரசவம்

தலைப்பிரசவத்திற்கு
அம்மா வீடு
வந்தவள்
எங்க வீட்ல எல்லாம்
என்று
எதைப்பார்த்தாலும்,
கேட்டாலும், தொட்டாலும்
நீட்டி முழக்கினாள்

அடுக்குமல்லி மணக்கும்
புழக்கடை
அத்தைப் பிரியம்
அம்மாவை விஞ்சும்
மாமனார்
உள்ளங்கை அன்புத்தெப்பம்
மச்சினர் குழந்தைபோல
சிரிக்க, சிரிக்கப்பேசுவார்
பொழுது போறதே தெரியாது
இந்த புழுக்கம் அங்க இல்ல
கிணற்றடிப் பக்கம்
சிலுசிலுன்னு காத்து
வாசலில்
வண்டிச்சத்தம் இல்லை
தூசு இல்லை, புகை இல்லை
காலையில் தார்சால்
குருவி, மைனாக்களின்
கீச்கீச்சில் விடியும்
பெரிய மரத்தடியில் வீடு
வீட்டுக்குள் மரக்கன்றுகள்
சின்னதும் பெரிசுமா
வாசல தாண்டினா கோயில்
வருஷமெல்லாம் திருவிழா
சொல்லி சொல்லி
கதைகள் வளர்த்துக் கொண்டே
இருந்தாள்

ரசம் சாதம்,
பருப்புத்துவையல், சுட்ட அப்பளம்
அம்மா எடுத்து வைக்க
பிசைந்து உண்ணும்
மைதிலியின் தட்டில்
கொஞ்சம் கண்ணீர் துளிகளும்

14 comments:

ஈரோடு கதிர் said...

அது சரி...

அங்க எப்படி கண்ணீர் வரும்
அது ஆனந்தமாக இருந்தாலும், இல்லை அடக்குமுறையாக இருந்தாலும்

ராகவன் said...

அன்பு கதிர்,

எனக்கு தெரியலை, திரும்ப படிங்களேன், நானும் படிச்சுப் பார்க்கிறேன்.

அன்புடன்
ராகவன்

S.A. நவாஸுதீன் said...

//ரசம் சாதம்,
பருப்புத்துவையல், சுட்ட அப்பளம்
அம்மா எடுத்து வைக்க
பிசைந்து உண்ணும்
மைதிலியின் தட்டில்
கொஞ்சம் கண்ணீர் துளிகளும்//

பெத்தவங்க கவலைப்படக்கூடாதுன்னு அங்கே சந்தோசமாத்தான் இருக்கேன்னு பொய் சொன்னாங்களோ. இல்ல நாந்தான் வேறமாதிரி புரிஞ்சுகிட்டேனா?

Unknown said...

Mr. Nawas naanum appadi than purindhu konden.

ராகவன் said...

அன்பு நவாஸ்,
அன்பு தேவி,
அவர்களுக்கு பெரிதாக எந்த அர்த்தத்திலும் இதை எழுதவில்லை. இது நேரடியாக நடந்த ஒரு விஷயம், மைதிலி என்ற பெயரிலேயே ஒளிந்திருக்கும் ஒருவருடனான செயலைப் பார்த்தேன், பார்த்ததை எழுதினேன்.
ரசம் சாதமும், பருப்புத்துவையலும், சுட்ட அப்பளமும் எதையாவது உணர்த்தவில்லையா? அவள் அம்மா வீட்டுக்கு தலைப்பிரசவத்திற்கு வந்திருப்பவளுக்கு இது மட்டுமே கொடுக்கும் ஒரு குடும்பத்தின் நிலையை இது சொல்லவில்லையா? இதை எங்கும் சொல்லாத, அறியப்படுத்தாத ஒன்றை எழுதியதற்கு வருந்துகிறேன். இன்னும் கவிதை கைவரவில்லை போலும். மீண்டும் முயல்கிறேன் தொடர்ந்து, விடுவதாயில்லை யாரையும்.

அன்புடன்
ராகவன்

S.A. நவாஸுதீன் said...

//இன்னும் கவிதை கைவரவில்லை போலும். மீண்டும் முயல்கிறேன் தொடர்ந்து, விடுவதாயில்லை யாரையும்.//

நானும் உங்களை விடுவதாயில்லை. கவிதை புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு வரும்வரை.

பா.ராஜாராம் said...

இல்லை ராகவன்.இது நேரிடையான அருமையான கவிதைதான்.பின்னூட்டம் வந்த பிறகே..உங்கள் பார்வை அறிகிறேன்.நான் இந்த கவிதையை பழைய,.. வாசனை நிரம்பிய உணவாக ஏற்கிறாள் எனவும் நவாஸ் உணர்ந்ததையும் நானும் உணருபடியே கவிதை என்னையும் இழுத்து சென்றது.எழுதுபவனின் பார்வையை வாசிக்கிறவன் பார்க்க வேணுமா என்ன?பிறகு பன்முக சுவை ஏது?கவிதையை வாசித்து நிறையும் போது ஒரு மௌனம் சூழ்கிறது.இனம் புரியாத சோகம் நிறைந்த மௌனம்!...என்னை பொருத்த வரையில் கவிதை வெற்றி அடைந்திருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள் மக்கா.

இராகவன் நைஜிரியா said...

சாதாரணமாக பிறந்த வீட்டு பெருமையைத்தான் எல்லா தாய் குலங்களும் பேசுவார்கள். ஆனால் இங்கு புகுந்த வீட்டு பெருமையைப் பேசுவது புதுமையாக இருந்தது.

சுட்ட அப்பளம், ரசம் சாதம் என்று படித்த போது, பிறந்த வீட்டின் இயலாமையைச் சொல்ல வருகின்றீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

கடைசி வரியில் கண்ணீர் துளிகளும் என்ற வரியைப் படித்த போது, பிறந்த வீட்டின் வறுமையை நினைத்து, கண்ணீர் உகுக்கின்றாள் என்றும் எடுத்துக் கொண்ட்டேன்.

உங்கள் பின்னூட்டங்களைப் படித்த போது, அது இன்னும் நன்கு விளங்கியது.

அழகாக இருக்கின்றது ... வாழ்த்துகள்.

காமராஜ் said...

இழப்புகளைச்சரி செய்ய இருப்பை அலங்கரிக்கவேண்டிய நிர்ப்பந்த வாழ்விது.
என்றாலும் அடியில் கிடக்கிற நினைவுகளை எதுகொண்டும் அணையிடத்துப்பில்லை.
அன்பு,காதல்,நட்பில் கிடைக்கிற பாசப்பெருக்கு.

கருவை பாலாஜி said...

ஒரு சிறந்த கவிதைக்கு ஒரு பொருள் மட்டும் இருப்பதில்லை. பின்னூட்டங்கள் இதை உணர்த்தின. .

velji said...

வாசிப்பனின் சூழ்நிலையும் கவிதையை தீர்மானிக்கிறது.அதுவும் தொடர்ந்த மாறுதலுக்கு உட்பட்டது எனும்போது தீர்க்கமாய் சொல்லமுயலும் சூத்திரம் எதற்கு.அப்படியானால் அது நல்ல அனுபவமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
எங்களுக்கு வாசித்துணர்வதற்கு நிறைய தாருங்கள் நண்பரே.

உயிரோடை said...
This comment has been removed by the author.
உயிரோடை said...

ராக‌வ‌ன்,

க‌விதைக்கான‌ த‌ள‌ம் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து. என‌க்கென்ன‌வோ க‌டைசி ப‌த்தியில் சொன்ன‌து நிஜ‌மெனில் முத‌ல் ப‌த்திக‌ளில் கூட‌ மைதிலி அடக்கி தான் வாசிப்பாள் என்று நினைக்கிறேன். ஒருவேளை தான் பேசும் வார்த்தை பிறந்த‌ வீட்டின் வ‌றுமையை உண‌ர்த்திவிடுமோ என்றே எண்ணுவாள்.

க‌விதையில் என‌க்கு புரிந்த‌து என்ன‌ தான் வாழும் வீடு த‌ன‌க்கு உக‌ந்தாக‌ இருந்தாலும் தாய் கைச்சோறு அது ப‌ருப்பு துவைய‌ல் ர‌ச‌மென்றாலும் அது அங்கே கிடைப்ப‌தில்லை என்ப‌தே. தாய் கைச்சோறும் த‌னி ப‌டுக்கையும் தாய் வீட்டில் ம‌ட்டும் தான் கிடைக்கும் என்று என் தோழியின் அம்மா சொல்லுவாங்க‌ என்று தோழி அடிக்க‌டி சொன்ன‌து தான் நினைவுக்கு வ‌ந்த‌து. அம்மா வீடு ஒரு ஆன‌ந்த‌ம‌ய‌மான‌ சொர்க‌ம். க‌ண‌வ‌ன் வீட்டு உற‌வுக‌ள் எல்லாம் என்னை கையில் தாங்குவார்க‌ள். எல்லா வ‌சதியும் எங்க‌ வீட்டில் இருக்கு ஆனாலும் அம்மா வீடுன்னா அது... ம்ம்ம் உல‌க‌த்தில் மிக‌ பிடித்த‌மான‌ இட‌ம் அன்னைவீடு தான். இந்த‌ க‌விதைக்கு இப்ப‌டியான‌ விள‌க்க‌ம் தான் அழ‌கு

உயிரோடை லாவ‌ண்யா.

Unknown said...

எனக்கு ரொம்ப பிடிச்சுது இந்த கவிதை...ஆனா அத விட புடிச்சது "இழப்புகளைச்சரி செய்ய இருப்பை அலங்கரிக்கவேண்டிய நிர்ப்பந்த வாழ்விது" அப்படீங்கற உங்க நண்பரோட விளக்கம்.....ஒவ்வொரு பெண்ணோட கண்நீருக்குள்ளையும் இந்த மாதிரி அழகான அர்த்தம் இருக்கறத புரிஞ்சுகிட்ட கவிஞர் மனசுக்கு ஒரு பெண்ணா என்னோட நன்றி.......நெறையா எழுதுங்க.....ரசிக்க நாங்க இருக்கோம்.......