Monday, November 23, 2009

பகலறியாப் புணர்வு

ஒரு முத்தத்தில்
விடிகிறது
புலர்காலை
பொழுது ஒன்று

உடலெங்கும்
குமிழ்கள் அழுந்தி
திறக்கிறது

நகக்கண்களின்
விழிப்பில்
ஒரு அரூபம்
திடப்படுகிறது

செவியோரம்
புருபுருக்கும்
மயிரிழைகள்
கூச்ச சங்கீதத்தை
சுரம் தப்பி
வாசிக்கிறது
நாணற்ற
இசைக்கருவி
மீட்டி

வெளிச்சப்பந்துகளை
இனைத்து பிண்ணிய
மாயகம்பளத்தில்
ஒத்தி எடுத்த
உதட்டு ரேகை வழி
புகுந்து கிளம்புகிறது
ஒரு நினைவறியாப்பயணம்
கீழே விரைந்து
கொண்டிருந்தது
மலைகளும்
பள்ளத்தாக்குகளும்

உந்திச்சுழி
உரோமக்கோட்டில்
வியர்வை
வழிந்த தடம்
மறந்து
வெப்பத்தில்
ஆவியாகும்

ஒரு
திசை
தொலைந்த
மழை ஞாயிறு
உள்ளங்கைகளுக்குள்
வசிக்க வரும்

தொடர்பற்ற
பெருவெளியில்
மிதக்கும்
உடல்களின் மீது
ஒற்றை இறகு
கொண்டு
ஏதோ ஒரு
பெயரறியா
வாசனையை
வரைய முற்படுகிறது
புணர்வறியாத
பகல் ஒன்று

6 comments:

S.A. நவாஸுதீன் said...

தொடர்பற்ற
பெருவெளியில்
மிதக்கும்
உடல்களின் மீது
ஒற்றை இறகு
கொண்டு
ஏதோ ஒரு
பெயரறியா
வாசனையை
வரைய முற்படுகிறது
புணர்வறியாத
பகல் ஒன்று//

பின்றீங்களே ராகவன்.

காமராஜ் said...

//ஒரு
திசை
தொலைந்த
மழை ஞாயிறு
உள்ளங்கைகளுக்குள்
வசிக்க வரும்//


அசத்துறீங்க ராகவன்
மழை நாட்கள் உற்பத்திசெய்த இன்னொரு கவிதை இது.

செ.சரவணக்குமார் said...

அருமையான கவிதை ராகவன் சார்.

velji said...

திசை அறியா ஞாயிற்றில் சிக்கும் வரை வார்த்தைகள்...அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்.

மேஜிக் ஜர்னி!

பா.ராஜாராம் said...

அதேதான்..magic journy-தான்!

அருமையான மனநிலை/மழைநிலை சார்ந்த கவிதை ராகவன்!

உங்கள் ஒவ்வொரு கவிதையிலும் உங்கள் மனநிலையை வாசிக்கவும் தருகிறீர்கள்.இப்படி மனசை திறப்பா வச்சுக்கிற இடம் அழகாய் இருக்கிறது,ராகவன்.

ராகவன் said...

அன்பு நவாஸ்,
அன்பு வேல்ஜி,
அன்பு காமராஜ்,
அன்பு செ.சரவணக்குமார்,
அன்பு பாரா,

உங்கள் அன்புக்கு நன்றி!

நான் ஒரு பணி மாற்றல் காரணமாக பெங்களூருக்கும் கரூருக்கும் அல்லாடுவதால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இது இன்னும் 10 நாட்களுக்காவது தொடரும் என்று நினைக்கிறேன்.

அன்புக்கு ஆயிரம் நன்றிகள்!

ராகவன்