மறுபடி நிகழ்கிறது
ஒரு இடப்பெயர்ச்சி
நிற்காமல் சுழல்கிறது
கிரக வாழ்க்கை
அட்டைபெட்டிக்குள் அடுக்கி
குவித்ததில் கொள்ளாமல்
திமிறி வழிகிறது
எடுத்துச் செல்லமுடியாத
உறவுகள் சில
எல்லா காலங்களிலும்
பொருட்கள் சேர்ந்து கொண்டு இருக்கிறது
அதன் தேவையே இல்லாது
விலைக்கும் போகாது
உபயோகமும் புரியாது
கழிக்கவும் முடியாது
இரண்டு பேருக்கு
இவ்வளவு
சாமான் ரொம்ப ஜாஸ்தி!
மாற்றலுக்கு உதவிக்கு வந்த
அலுவலக சிப்பந்தி
சிரித்துக் கொண்டே புலம்பினான்
பொதித்து வைத்த
இருவருக்குமான ரகசியங்கள்
புடைத்து பெருகுகிறது
அவனுக்கு புரியாது...
ஏதாவது விட்டு விட்டோமா?
மாடி வீட்டு குழந்தை ருஜிதா
எங்கள் இருவரையும்
அவளுடன் சேர்த்து வரைந்த
அந்த ஓவியத்தையும்
மறக்காமல் எடுத்து கொண்டேன்
இரவல் கொடுத்த
ஜி.நாகராஜனின் படைப்புகளை
திருப்பி கொடுக்க தயங்கி
கொடுத்தவரிடம் சொல்லாமல்
கிளம்பினேன் கடைசியாய்
கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடனும்
5 comments:
அருமையான கவிதை..
ரொம்ப நல்லா இருக்கு ராகவன்
பொசு பொசுவெனப் பச்சையாய் அடர்ந்துகிடக்கும் நாற்றங்காலில் இருந்து பிடுங்கும் நேரம் மண்ணுக்கும் வேருக்குமான உறவு முறியும் சத்தம் கேட்கிறது உங்கள் கவிதையில். பக்கத்துவீட்டுக் குழந்தையின் வரை படம்
நெஞ்சை அழுத்துகிறது. நட்ட இடத்தில் வேர் பற்றிக்கொள்ளும் வரை பழைய மண்ணின் நினைவுகள் தான் சாப்பாடும் சத்தும்.
ரொம்ப அசதியாக இருக்கிறது ராகவன் அதிகாரத்தின் போதை, போதை இல்லை,மமதை, ஆணவம்
மிகக் கொடூரமாக இருக்கிறது. அங்கிருந்து மீளமுடியவில்லை. நவம்பர் மத்தியில் இருந்து வலையைப்பார்க்கக்கூட முடியவில்லை.
இதுவும் கடந்துபோகும். பார்ப்போம்.
கவிதை நன்று.
'//பொதித்து வைத்த
இருவருக்குமான ரகசியங்கள்
புடைத்து பெருகுகிறது//',
ரொம்ப நல்லா இருக்கு, உஙகள் உணர்வுகள் புரியுது..
Post a Comment