Friday, January 01, 2010

அப்பா என்னும் வரம் - 2

அப்பாவின் வழியாக எனக்குள் நுழைந்தது திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும்.  காலையில் எங்களை உசுப்பும் போதே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி ன்னு தான் உசுப்புவார். மார்கழியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அவருக்கு.  எல்லா மாதங்களும் அவருக்கு மார்கழி தான். பெருமாள், ஆண்டாள், சடாரி, துளசி தீர்த்தம், கோயில் யானை, விஸ்வரூப தரிசனம் என்று எல்லா காலங்களிலும் பெருமாளை கொண்டாடியவர்.  பிற கடவுளர்களிடம் விரோதம் ஏதுமில்லை அவருக்கு.  புரட்டாசி மாசம் வந்துட்டா என்னையும் எல்லா சனிக்கிழமையும் தவறாமல் கூடலழகர் கோவிலுக்கு கூட்டி செல்வார்.  அதிகாலை 4 மணிக்கே எழுந்து விஸ்வரூப தரிசனம் பார்க்கலாம் என்று.  நானும் கொஞ்சம் பெயர்க்காரணம் புரிந்த பிறகு விஸ்வரூப தரிசனம் என்றால் ஏதோ மூலவர் பெரிசா ஆயிடுவார் போல என்று நினைத்து கொண்டு இருந்தேன்... ஆனால் நேரில் பார்க்கும் போது கடவுள் என்ற கற்பனை போலவே அவரின் விஸ்வரூப தரிசனமும் ஒரு கற்பனையான ஒரு விஷயம் என்று புரிந்தது. 

கூடலழகர் கோவிலில் நாலரை மணிக்கே போய் விடுவோம் அங்கு விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் கோவில் பிரசாதமாக அடைப்ரதமன், தோசை, புளியோதரை இப்படி தளிகை செய்பவர்களின் வசதிக்கேற்ப ஏதாவது இருக்கும்.  அப்பா அதை கொஞ்சம் கூடுதலாக காசு கொடுத்து நிறைய வாங்கி கொள்வார்.  எதுக்குப்பா என்றால் வா சொல்றேன் என்று கூட்டி கொண்டு போய், கோயில் யானை, ஆண்டாள் சந்நிதியின் பின்னால் பிருந்தாவனத்தை பார்த்துக் கொள்ளும் முதியவர், கோவில் கூடவே பிறந்து வளர்ந்தவர் மாதிரி இருப்பார், வாசலில் இருக்கும் வயோதிகர்கள் என்று எல்லோருக்கும் பிட்டு கொடுப்பார்.  கொஞ்சம் சில்லறைக் காசுகள் நான் உண்டியலில் போடுவதற்காகவும், சனீஸ்வரனுக்கு எள் விளக்கு சாற்றுவதர்க்காகவும் தனியாக கொண்டு வருவார்.  நீலாஞ்சனா சமாபாசம் என்று சில சுலோகங்களை எனக்கு ராகத்துடன் கற்றுத் தருவார்.  மூலவரை பார்த்துவிட்டு வந்த பிறகு சன்னதியில் இருந்து கீழே இறங்கும் படிக்கட்டின் இருபக்கமும் இருக்கும் கல்யானையில் உட்கார வைத்து கதைகள் சொல்வார். பெரும்பாலும் யானை சம்பந்த பட்ட கதைகளாய் தான் இருக்கும்.  சில சமயம் திருவிளையாடல்  புராணத்தில் இருந்தும் அவர் செவி வழி கேட்ட கதைகளையும் சொல்வார். அப்பாவின் கதை சொல்லும் திறன் அலாதியானது.  இயல்பான எனக்கு புரிகிற வார்த்தை பிரயோகங்களுடன், உடற்மொழி கலவையுடன் கதை கேட்க கோவிலுக்கு வந்த நிறைய சிறுவர்கள் வந்து எங்களுடன் உட்கார்ந்து விடும் வகையில் சொல்வதுண்டு.   கல்யானை பக்கத்திலேயே, நிஜ யானையையும் கட்டி வைத்திருப்பார்கள்... அது சதா ஆடிக் கொண்டே இருக்கும், போகிற வருகிற குழந்தைகளை இழுப்பது போல துதிக்கையை தூக்கி நீட்டிக் கொண்டே இருக்கும்.  அப்பா யானையிடம் அதிக ச்நேஹமாய் இருப்பார், யானை பாகனும் ரொம்ப பரிச்சயமாய் இருந்தார்.  அதனால் எனக்கு காசு ஏதும் கொடுக்காமலே யானை ஆசீர்வாதம் செய்யும்.  அப்பாவின் தோசையோ அல்லது மிச்சமிருக்கும்  அடைபிரதமனோ கொடுக்க ஆவலாய் கை நீட்டி வாங்கி கொள்ளும்.  புளியோதரை மட்டும் கொடுக்க மாட்டார்.  ஏன்னு தெரியலை!

சுற்று பிரகாரத்தில், சுவர் வழியில் நிறைய கதைகளை சொல்லி நகரும் ஓவியங்களில் உள்ள ஊர்களை பற்றி ஏதாவது பேசிக் கொண்டே வருவார்.  வாய் விட்டு பிரார்த்திப்பார் அப்பா.  என்னையும் சத்தமா சொல்லு அப்பா தான் உன்னோட குரல் அவருக்கு தனியா தெரியும் என்பார். கேள்வி ஏதும் கேட்காமலே அப்பாவை நம்புவேன் எப்போதும்... குலம் தரும் செல்வந்தந்திடும்... என்று பாசுரங்களில் வழி பெருமாள் மீது ஒரு தீவிரமான காதல் வைத்திருந்தார், பாசுரங்கள் எழுதாத ஒரு ஆழ்வாராய் தெரிவார் எங்க அப்பா.  ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற வைணவ தலத்தில் பிறந்ததாலோ என்னவோ அப்பாவின் கதைகள் பெரும்பாலும், பெருமாள், ஆண்டாள், ஆழ்வார்கள் என்பதை சுற்றியே இருக்கும்.  நிறைய கதை கேட்டு, கதை சொல்லி வளந்த ஊர் அவருடையது.   பெரும்பாலும் சிறு வயதில் பஜனை மேடம் அல்லது சிஎம் எஸ் கிரவுண்டில் தான் இருப்பார்.  பசியை மறக்க விளையாட்டு, பசியை போக்க பஜனை மேடம், புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் அவசியம் உண்டு.  அவருக்கு செவிக்கும், வயிற்றிற்கும்  ஒரு வேளை உணவு நிச்சயமாய் கிடைத்தது.  திருவண்ணாமலை என்ற பெருமாள் கோயில் மலை மேலுள்ளது... அங்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதிக்காக அப்பா மாதிரி இளவட்ட பசங்க கீழிருந்து தண்ணீர் சுமப்பது வழக்கம், அதுவும் பக்த சேவையை தாண்டி சுய தேவையாத்தான் இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் போது அப்பா என்னை திருவண்ணமலைக்கு அழைத்து செல்வது வழக்கம்...  சீரற்ற படிக்கட்டுகளில் அறுநூரை கடந்ததும் பெருமாள் தரிசனம்.., நல்ல மொட்டை வெயிலாய் இருக்கும், இளைப்பாற இடம் இருக்காது...  பாதி தூரம் கடந்ததும் ஒரு கருப்பண்ண சாமி கோயில் இருக்கும், அங்கு சபரி மாதிரி ஒரு பாட்டி வருகிற பக்தர்களுக்கெல்லாம் திருசூர்ணம் இட்டு விடும், அவர்கள் கொடுக்கிற, சில்லறைகளில் தன் தேவைகளை ஓரளவு பார்த்துக் கொள்ளும்.  அப்பா அந்த பாட்டியிடம் தவறாமல் கூட்டிக்கொண்டு போவார்.  திருசூர்ணம் இட்டதும் கையில் வைத்திருக்கும் தேங்காய் பழங்களையும், நிறைய சில்லறைகளையும் தருவார்.  அவரின் குடும்பத்தை பற்றி விசாரிப்பதுடன் என்னைப்பற்றியும் பெருமையாய் பேசுவார்.  எனக்கு ஆச்சரிமாய் இருக்கும், எத்தனை மரியாதையாய் பவ்யமாய் பேசுகிறார் அப்பா என்று தோன்றும்.  மனிதர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் நேசிக்க கற்றுக் கொண்டது அப்போது தான் என்று எண்ணம்.

திருவண்ணாமலையில் ஒரு விசேஷ பழக்கம் உண்டு, கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றும் இடத்தின் ஒரு மூலையில் பெரிய அளவிலான செருப்புகள், கிட்டத்தட்ட  இருபதாம் நம்பர் சைசுக்கு இருக்கும்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொள்வது ஒரு பழக்கம்... அது பெருமாளின் திருவடிகள் எனவும், அவர் பாதம் படும் போது நம்முடைய முன் ஜென்ம வினைகள் மற்றும் இதர பாவங்களும் மறைந்து போகும் என்று ஒரு நம்பிக்கை...  ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வருபவர்கள் கூட அடித்துக் கொள்வதுண்டு, பாவங்களை தொடர்ந்து செய்வது போல, எனக்கு வேடிக்கையாய் இருக்கும், அப்பா அதைப்பற்றியும் கதைகள் சொல்வதுண்டு... பெரியாழ்வாரும் ஆண்டாளும், பிருந்தாவனமும் எனக்கு இன்னும்  நினைவில் இருக்கும் விஷயங்கள்.  அப்பாவின் நினைவு நாளன்று திவசம் இட வேண்டும் என்ற என் அம்மாவை, கஷ்ட படுறவங்களுக்கு எதாவது உதவலாம் என்று மாற்றியது இன்னமும் தொடர்கிறது...

பணிவை கற்றுக் கொடுக்க அப்பா சொல்லும் பழமொழிகளில் ஒன்று... வளைஞ்ச வில்லு தாண்ட தைக்குங்கிறது எனக்கு இன்னும் பொருந்துற விஷயம்... பைபிளில் இருந்து கூட அப்பா குறிப்பிடுவது " எவன் தன்னை தானே தாழ்த்தி கொள்கிறானோ, அவனே உயர்த்தபடுவான்... அப்பா எங்கள் எல்லோருடைய மனசிலும் உயர்ந்து இருப்பதற்க்கான காரணங்கள் எங்களுக்கு மெதுவாக தான் புரிய தொடங்கி இருக்கிறது....

அப்பாவின் வரம் இன்னும் தொடரும்...

15 comments:

மாதவராஜ் said...

ராகவன்!
உங்கள் வரிகளின் வழியாக நானும் கூடவே வருகிறேன். தந்தையின் வாசம் எனக்கு கோயில் பிரகாரத்து மணமாய் தெரிகிறது. கற்சுவர்களுக்குள் இருக்கும் குளுமையை முழுவதுமாய் உணர்கிறேன். எல்லோரையும் நேசிக்கச் செய்யும் உங்கள் எழுத்துக்களில் வாழ்வின் அர்த்தங்களை அறிகிறேன்.போதும் ராகவன், இது போதும் எனவேத் தோன்றுகிறது.

அம்பிகா said...

கூடலழகர் கோயில் பிரகாரம், விஸ்வரூப தரிசனம், பிரசாதம் என கோயிலையே தரிசித்த உணர்வு.

கேள்வி ஏதும் கேட்காமலே அப்பாவை நம்புவேன் எப்போதும்...

அப்பாவின் மீதான பக்தி வெளிப்படுகிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

திருசூர்ணம் என்பது சிதறு தேங்காய் உடைப்பதை குறிக்குமா சார்?

கட்டுரையில் கூடழலகர் கோவிலுக்கு திரும்ப சென்று வந்த உணர்வு...

பிரசாத வாசம் வீசுகிறது சார்...!

இராகவன் நைஜிரியா said...

அப்பா - மறக்க முடியாமல் நானும் தவிக்கின்றேன். நீங்களும் அவர் நினைவுகளில் மூழ்கிவிட்டீர்கள்.

S.A. நவாஸுதீன் said...

உங்க நடை கூடவே அப்படியே கட்டி இழுத்துச் செல்கிறது ராகவன். அப்பா மீது கொண்ட உங்கள் அன்பும், பாசமும், மரியாதையும் இயல்பாயினும் போற்றுதலுக்குறியது.

பா.ராஜாராம் said...

ராகவன்,

கண்ணில் இருந்து சொட்டிக் கொண்டே இருந்தது.முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் பெரிய விஸ்வரூபம்!

மணி மணியாக சொல்ல வந்ததை சொல்லிக் கொண்டே போகிறது."எங்கய்யா இருந்தீங்க நீங்கல்லாம்"என்று என்னவோ கேட்க்க தோனுகிறது.

வரையுங்கள் ராகவா..

(ராகவனைவிட ராகவாதான் இப்போ,கூப்பிட விரும்புகிறது.)

Anonymous said...

ப்ரியமுடன் .....வசந்த்,

திருசூர்ணம் என்பது நெற்றியில் இட்டுக் கொள்வது. மஞ்சள், சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

அன்புடன்
திருமலை முரளி

Anonymous said...

ராகவன்,

மனதை மெல்லிய மயில் இறகு கொண்டு வருடி விட்டது போல் இருந்தது உங்களின் பதிப்பு. என்னுடைய அப்பாவை இதில் பொருத்தி பார்க்க வைத்து விட்டீர்கள். நன்றி.

அன்புடன்
திருமலை முரளி

பா.ராஜாராம் said...

ஆகா!

ரொம்ப நன்றி முரளி.

வசந்திற்கு விளக்கம் தர டைப் அடிச்சு வந்து பார்த்தால் நீங்களே வந்துவிட்டீர்கள். அப்பா வந்தது போல்.அதுவும் திருமலையில் இருந்து.முரளியா நீங்கள் மூர்த்தியா?

ஆர்வா said...

வரிகளாக இல்லாமல், ஒரு வாழ்க்கையாக இருக்கிறது உங்கள் பதிவு. அருமை

ராகவன் said...

அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,

நன்றியும் பதிலுக்கு அன்பும்.

ஸ்ரீசூர்னம், திருசூர்னம் என்பது நிறைய பேருக்குப் புரியாமல் திரும்பவும் கேட்டார்கள் எல்லோரையும் திருமலை முரளியின் பின்னூட்டத்தைப்படிக்க சொன்னேன்.

நன்றிகள் முரளி!

நாமம்னு சொல்லியிருந்தா இன்னும் சுலபமாக புரிந்திருக்கலாம்.

மாதவராஜ் போதும் ராகவன் போதும்னு சொல்றது, தாங்க முடியலை போதும்னு சொல்றா மாதிரி இல்ல தானே!



அன்புடன்
ராகவன்

கருவை பாலாஜி said...

உங்கள் தயவால் அடிக்கடி மதுரைக்கு சென்று வருகிரேன், உங்கள் படைப்புகள் வாயிலாக..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு. திருவண்ணாமலை ஏறி இறங்கி வந்தால் போல் உணர்வு. உங்கள் பதிவை தேடி தேடி பிடித்து எழுதுகிறேன்.
வாழ்த்துக்கள்.

அன்பேசிவம் said...

அடுத்தடுத்தாய் அப்பாவின் வரம் பெற ஆசை... :-) எனக்கு இப்படி கோவிலை கற்றுக்கொடுத்தது பாட்டி..
ஆனா என்ன சின்ன வயசுல எனக்கு பாட்டி எப்படியோ, அதுபோலதான் இப்போ அப்பாவும்..
பாட்டியா இருந்தாலும் அப்பாவா இருந்தாலும் மத்ததெல்லாம் ஒண்ணுதான். :-)

மார்கழி குளிர், குரு...:-)

Mahi_Granny said...

அப்பாவுக்கு ராகவனும் ஒரு வரம் தான் என்பேன்