Wednesday, January 27, 2010

தூரக்கிழக்கு...

கொல்லனின்
துருத்தி ஊத
பொறி கங்குகளாய்
பறக்கும்
மினுக்கட்டாம் பூச்சிகளென
மின்னி ஏய்ப்பு
காட்டுகிறது 
நம்பிக்கை
தூக்கணாங்குருவியின் 
சாமர்த்தியமாய்
மினுக்கட்டாம் பூச்சிகளை
களிமண்ணில்
நிரந்தரமாய் பொதிக்க
பிரயத்தனப்படும் முயற்சிகள்
கண் சிமிட்டி
மறைகிறது
கடைசி வெளிச்சத்தை
உமிழ்ந்தபடி

கை நழுவிப்போகும்
வாய்ப்புகளின்
விலாங்கு சேட்டை,
கை விரல்களை
நொந்து
முனை கருக்குகிறது
ஈவின்றி.

சலனங்களின்
முடிச்சில்
தொங்க எத்தனிக்கிறது
ஒரு சந்தர்ப்பம்
காணாத
கொலைபொழுது
வசீகரத்துடன்

இன்னும் எழுத
இருக்கிறதென 
முடியாத கவிதை
காற்புள்ளியுடன்
காத்திருக்கிறது
சிதறுண்ட
சொற்களுடன்

6 comments:

மாதவராஜ் said...

நேற்று இரவு இந்தக் கவிதையை படித்தேன். கலங்க வைத்தது. எதுவும் சொல்ல முடியாமல் நின்றேன். உங்களுடன் பேசியது எல்லாம் நிழலாடின.

நம்பிக்கை, மின்வெட்டாம் பூச்சியாகவா இருக்க வேண்டும்?

முடியாத கவிதைதானே நம்மையெல்லாம் முன்னுக்கு இழுத்துக்கொண்டு இருக்கின்றன.

அருமை நண்பா!

நேசமித்ரன் said...

சொற்களின் தசையில் திரளும் உதிரமாய் இருக்கிறது நம்பிக்கை

கொல்லன் -பொறி- பூச்சி

அருமை ராகவன் சொல் கட்டுமானத்தில் செறிவான மாற்றம்

காமராஜ் said...

ராகவன்
இது நல்ல
நங்கூர உறுதி.
நம்பிக்கை
முன்னுக்கு
இழுத்துக்கொண்டு இருக்கிறது.
கவிதை அருமையாக இருக்கிறது.

Kumky said...

என்ன சொல்வதென தோன்றவில்லை என் தோழரே....

அர்த்தங்களின் புரிதலில் அனேகம் தோன்றுகிறது...

அவரவர் வாழ்வுக்கேற்றபடி...

தொடர் வாசிப்பில் ஏதேனும் பற்று கிடக்கலாம்...தொடர்ந்து வாசித்தபடி...

உயிரோடை said...

ந‌ல்ல‌ க‌விதை ராக‌வ‌ன்

Thenammai Lakshmanan said...

arumaiyaana kavithai Raaagavan
manam nekiznththu vitathu ..