Monday, February 08, 2010

கூத்தனின் அடவுகள் - 3

தமருவின் ஒலியின்
அதிர்வுகளில்
இரண்டாய் பிளக்கிறது
நான் போலவும்
நானல்லாததை போலவும்

மூன்றாம் கண்ணில்
வழியும் ஊழிபெருந்தீ
பெயரறியா காமத்தை
பொசுக்கி மீள்கிறது
மூன்றாம் முலைச்சியை
விரக வெடிப்புக்குள்
நுழைக்கிறது

புணரவேண்டி கருகி,
தோல் உரித்து
இழுத்து கட்டுகிறது
அரையில்
பிளிறி அலறுகிறது
ஊனம்
உறைந்த உயிர்ப்பில்
பிறவி தொலைத்து
வெற்றாய்
வானம் பார்க்கிறது
குறியீடொன்று

தலையில் தண்ணீர்
குளிர் நிலா
மருந்தென  வில்வம்
உறைபனி
உறைவிடம்
கனன்று எரியும்
கொதி நெருப்பில்
கூத்தனும் தான்
என் செய்வான்?

7 comments:

Thenammai Lakshmanan said...

//தலையில் தண்ணீர்
குளிர் நிலா
மருந்தென வில்வம்
உறைபனி
உறைவிடம்
கனன்று எரியும்
கொதி நெருப்பில்
கூத்தனும் தான்/


அட ரொம்ப அற்புதம் ராகவன்

நேசமித்ரன் said...

மேலே மேலே உயர உயர இழுத்துப் பறந்தபடி இருக்கிறது அடவுகள்

”டம் டம் டம் டமரு கான” லிங்காஷ்டக வரிகளைக் கொண்டு துவங்கி மூன்றாம் முலைச்சி என மீனாட்சியை தொட்டு பாகீரதியை உச்சியில் வைத்து அடவு கட்டி ஆடுகிறது கவிதை

மனுஷ்ய புத்திரனின் கவிதை வரிகளில் தட்டச்சுப் பிழைகள் சரி பாருங்க தலைவரே

:)

மாதவராஜ் said...

உடுக்கையின் அதிர்வுகளா வரிகள் ஒலிக்கின்றன.
//தலையில் தண்ணீர்
குளிர் நிலா
மருந்தென வில்வம்
உறைபனி
உறைவிடம்
கனன்று எரியும்
கொதி நெருப்பில்
கூத்தனும் தான்
என் செய்வான்? //

அடேயப்பா!

எழுத்தாளர் உதயஷங்கர் அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பில் இருக்கும் சின்னக் கருப்பனும் கூடவே வருகிறான்.

அம்பிகா said...

//தலையில் தண்ணீர்
குளிர் நிலா
மருந்தென வில்வம்
உறைபனி
உறைவிடம்
கனன்று எரியும்
கொதி நெருப்பில்
கூத்தனும் தான்//
:}}}}
அன்பு ராகவன்,
டீனேஜ் டைரி என சந்தனமுல்லை தொடங்கிய தொடர்பதிவுக்கு நான் உங்களை தொடர அழைத்திருக்கிறேன்.
விருப்பமிருந்தால் உங்கள் பால்ய நினைவுகளை பகிருங்களேன்.

காமராஜ் said...

ஹா.....
என்ன அருமையான கவிதை இது.
கடைசி வரிகள் சொன்ன சேதியை சொல்லாமல் சொல்லுகிறது.
க்ளாஸ்.

பா.ராஜாராம் said...

மூன்றையும் ஒரே மூச்சில் வாசித்தேன் ராகன்.

நடராஜ பெருமாளின் கால் தூக்கிய சிலை பார்த்தது போலான ஒரு தட்டல்.

அடச்சீ எந்திரி என்பதான மூதாதையர் உசுப்பல்.

என்னவாக இருக்கும் ராகவன்?

கண்டிப்பா உங்களுக்கும் தட்டி இருக்கணும்.

:-)

உயிரோடை said...

//இரண்டாய் பிளக்கிறது
நான் போலவும்
நானல்லாததை போலவும் //

வித்தியாச‌ம்