அலுவலத்தின் அருகே
இருந்த அரசு பள்ளியின்
சாப்பாட்டு மணி அடிக்கிறது
வேப்பமரத்தின் நிழலில்
சத்துணவு அண்டாவின்
முனை பற்றி
எரிகிறது பசி பெருந்தீ
நீண்ட வால் போல
தள்ளு முள்ளு வரிசையில்
கடைசியாய் நின்றவனின்
கால்சட்டை நழுவப் பார்க்கிறது
ஒருகையில் இழுத்துக்கொண்டே
வரிசையின் நகர்வை
உன்னிப்பாய் கவனிக்கிறான்
பாத்திரத்தில் கரண்டி படும்
ஓசையின் தொனி மாறிக் கொண்டே
வருவது, அவனுக்கு
மிரட்சியாய் இருக்கிறது
வரிசையையும்,
சத்துணவு அண்டாவையும்
பார்த்துக் கொண்டே நகர்கிறான்
கடைசியில் நின்ற
மூன்று பேருக்கு எதிர்பார்த்த மாதிரியே
சத்துணவு இல்லை
மரத்தடியில் வைத்த பைக்கட்டில்
அலுமினிய தட்டை
திணித்துக் கொண்டு
வெளியே ஓடினான்
ஒடிந்த திருகாணியை
ஊதப்போனவனிடம்
அண்ண வெளிய போயிருக்கார்
அண்ணே!
பட்டறையில் இருந்தவன்
கண்களில் ஒளி இருந்தது!
சத்துணவு தவற விட்ட
பையனாய் தெரியவில்லை
18 comments:
சத்தான கவிதை!
சின்ன வயசுல முண்டியடிச்சு சத்துணவு சாப்பிட்டதுல்லாம் ஞாபகம் வருதுங்க... எனக்குபின்னாடி எத்தனப்பேரு நீங்க சொன்னமாதிரி நின்னுகிட்டிருந்திருப்பாங்கன்னு இப்பதாங்க உணர்றேன்...
நல்ல கவிதை.....
படித்து முடித்ததும் மெல்லிய சோகம் பரவுகிறது..அருமை
ithu ponru saththunavu thavara vitta anubavam enakku undu. kavithai arumai.
உஞ்ச விருத்தி தெரியும்,
இதென்ன பஞ்சவிருத்தி என நினைத்துக் கொண்டே படித்தேன்.
நிஜமாவே பஞ்சவிருத்திதான்.
பசிவந்திட பத்தும் போம் என்பார்கள். இங்கே எதுவுமே போகவில்லை. பசியும் பழகிவிட்டது போலும்.
அபாரம்.
கவிதையை மிக ஆழமாய்,அழகாய் விமர்சனம் செய்திருக்கிறார்கள் அம்பிகா.பிறகு நான் யார்?
ராகவன்
இது ராகவனின் இன்னொரு விஸ்வரூபம்.
திக் திகென எழுத்து கூட்டிவிடுகிறது நாடித்துடிப்பை.
கடைசிப்பையனுக்கு பின்னாளே நிற்கவைக்கிறது வாசகனை.
இரண்டு உனிவர்சல் தீம் உண்டு ஒன்று காதல்,மற்றது பசி.
இந்த இரண்டுமே கால மற்றங்களைச்சுவீகரித்துக்கொண்டு
எழுத்துக்கு தீனி போடும் நிஜம்.
இங்கு மட்டுமே இரண்டுக்குமே கூடுதல் வண்ணம் உண்டு.
ராகவன் லேட் அட்டெண்டன்சுக்கு வருந்திகிறேன்.
அபாரம்,.
அற்புதமான சொற்சித்திரம்.
இன்னொரு ராகவன் இது, காமராஜ் சொன்னது போல.
ஏனோ, வலிக்கிறது ரொம்ப.
கவிதை என்பதிலும் சிறுகதை போன்ற... பாவம் அந்த பிள்ளை என்ற நினைவு வரும் வண்ணம், சிறப்பாக எழுதி இருக்கின்றீர்கள். சின்ன வயசில் வீட்டில் வித விதமாக அம்மா செய்து அனுப்பினாலும் பள்ளியில் மத்திய உணவின் போது கோதுமை குருணையில் செய்யப்படும் உப்புமா போன்ற ஒன்றை வாங்கி உண்பேன். மிக பிடிக்கும் எனக்கு அது. என்னால் ஒரு குழந்தைக்கு உணவு கிடைக்காமல் போயிருக்குமோ? வருந்துகிறேன்.
அன்பு ரிஷபன்,
அன்பும் நன்றியும், உங்களுக்கு. தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களைச் சொல்ல அழைக்கிறேன்.
அன்புடன்
ராகவன்
அன்பு க.பாலாசி,
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை என் பதிவுகளின் பின்னூட்டத்தில் பார்க்கிறேன்.
நான் நின்றிருக்கிறேன், சத்துணவு வரிசையில், ஒரு வாதாம் மரத்தின் கீழே மனம் பரப்பும் சாம்பாரும், முழித்து முழித்து பார்க்கும் கொட்டை அரிசியில் ஒட்டாமல் கலக்கும் சாம்பாரை உறிஞ்சு குடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. சாப்பாடு கிடைக்காமல் போனதில்லை, ஆனால் சாப்பாடு கிடைக்காமல் போன நண்பர்களும் இருக்கிறார்கள், திருப்பதி, பிரபு (பேரில் எத்தனை வளமை பாருங்கள்) இவர்களுடன் கிடைத்த சாப்பாட்டை பங்கு போட்டது எல்லாம் இன்னும் வழிகிறது புறங்கையில்.
உங்கள் அன்புக்கு நன்றிகள் பல.
அன்புடன்
ராகவன்
அன்பு வினாயகமுருகன்,
முதல் முறையாக என் பக்கம் வந்திருக்கிறீர்கள். தக்கவைத்து கொள்ள மனசு ஆலாய் பறக்கிறது. உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
அன்புடன்
ராகவன்
அன்பு மதுரை சரவணன்,
வரிசையின் கடைசியில் நீங்களும் நின்றது எனக்கு உணர முடிகிறது. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. என்னை லேசாய் பாதித்த விஷயங்களின் அனுபவ செறிவில் பிறரின் பருக்கைகளும் இருப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. மட்டை ஊறுகாய் மட்டும் கொண்டு வந்து சத்துணவுக்கு தொட்டுக்கொண்டது இன்னும் மிச்சமிருக்கிறது. வாழ்க்கை முழுதும் இருக்கும் இந்த மட்டை ஊறுகாயும் சத்துணவு தினங்களும்
அன்புடன்
ராகவன்
அன்பு சகோதரி அம்பிகாவிற்கு,
அன்பும், நன்றியும்.
எழுதும் போதே தோன்றிவிடுகிறது, பஞ்சவிருத்தி போன்ற தலைப்புகள், த்லைப்பு கவிதைக்கு ஏதும் சேர்க்குமா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த சொல்லில் தொக்கி நிற்கும் பசியும், ஏக்கமும் மட்டுமே போதும் என்று தோன்றியது.
அன்பும், நன்றியும்,
ராகவன்
அன்பு நண்பர்கள் மூவருக்கும்,
தனித்தனியாக எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.
என்ன சொல்லிவிடப்போகிறேன் மேலும் அன்பையும், நன்றியும் தவிர.
அன்புடன்
ராகவன்
அன்பு லாவண்யா,
சந்தோஷமாய் இருக்கிறது லாவண்யா உங்கள் பின்னூட்டங்களை பார்க்கும்போது.
ஒவ்வொரு பருக்கையிலும் உங்கள் பெயர் இருக்கும் என்பது போல கோதுமை குருனையிலும் பெயர்கள் எழுதியிருக்கும் போல. ஒரு குழந்தைக்கு கிடைக்காமல் போயிருக்காது, கிடைக்காமல் ஏங்கும் குழந்தையை உங்களால் பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா, யாரும் தவறவிடவில்லை ( நான் உட்பட) லாவண்யா அன்று எல்லோருக்கும் கிடைத்தது, மனசு நிறைய கோதுமை குருனை உப்புமா!
அன்பும் நன்றியும்,
ராகவன்
கோதுமை உப்புமாவும், சர்க்கரையும் வாங்கி எனக்கு பிடித்த இனிப்பு கொடுத்த நண்பன் நினைவிற்கு வருகிறான் ராகவன்!
பள்ளியில் சத்துணவு சாப்பிட்டது நினைவுக்கு வருகிருது..கவிதையின் கடைசி வரிகள் அருமை..
Post a Comment