Monday, October 26, 2009

குரல் குடித்தனம்

என்னங்க எப்படி இருக்கீங்க!

குரலில் அன்பும் பிரியமும்
அம்மாவைக் கொண்டிருந்தாள்!

நல்லாயிருக்கேன்!
நீயும் குழந்தைகளும்?
ராசாவுக்கு வாக்கப்பட்டேன்
பெத்ததும் அவருக்குத் தானே!
சேமம் தான்! உற்சாகக்குரலில்
சப்பர ஊர்வலமாய் பெருகினாள்

எப்போ வர்றீக!
உரத்த குரலில் பேசினாள்,
சித்திரமாய் வந்து போகிறாள்
இருபக்கமும் மகவிரண்டை
கைபற்றி!
என் பதில் ஒரு ஒற்றைத் தந்தி
நாதமென அதிர்வுகளை அனுப்பியது போலும்!
சிறு விசும்பல் சத்தம்,
குழந்தைகள்
தூங்கியிருக்க வேண்டும்,
பிரிவின் கண்ணீரில் குழந்தைகளை
நனைத்ததில்லை ஒருபோதும்

புவனாவுக்கு மாப்ள
வந்திருக்கு!
கோன வாத்தியார் சொல்லியனுப்பினாரு!
என்ஜீனியர் பையனாம்
நகை நட்டு வேனாம்னுட்டாக!
நம்ம போடறத போட்டா போதும்னு
சொல்றாக!
ஒத்தபிள்ளயாம்!
மாமனாரு மாத்திரம் தான்...
ஜாதகமும் பொருந்தியிருக்காம்
லெட்டர் மேல லெட்டர் போட்டு
நீங்க எப்ப வருவீகன்னு கேக்கிறாக!
என்ன சொல்லனும்!

நானே போய் ஒரு நட
பார்த்துட்டு வரவா?
போட்டாவ வாங்கிட்டு
வந்தா உங்களுக்கு அனுப்பலாம்
புவனாவுக்கும் பிடிக்குதான்னு கேட்டுக்கலாம்
உங்க தம்பி வீட்டுல
யாருக்கும் நேரமில்லைபோல
எப்ப கேட்டாலும் வேலையா இருக்கிறாப்ல!
ஊருக்குத் திரும்பி வருகையில்
உறவுகள் மொய்க்க
கடைவிரிக்கும் பொருட்களில் நானும் இருப்பேன்
அவர்கள் முன் குத்தவைத்து கொள்வாரில்லாமல்

நீங்க வர்றதானா
கொஞ்சம் விசாரிக்கலாம் குடும்பம்
எப்படின்னு, என் கூறுக்கு
நான் என்னத்த தெரிஞ்சுக்கப் போறேன்!
காசெல்லாம் இருக்கு!
முடிஞ்சா சீக்கிரமா வாங்க!
ஆறேழு மாசம்னா ஜாஸ்திதான்
அவுகள கேட்டு பாக்குதேன்!

சின்னவனா? நல்லா படிக்கான்!
லெட்டர் எங்க போடுதான்
உள்ள பள்ளியோட வேலையவே
பாக்க மாட்டேங்கான்
லெட்டர் எங்க போடப்போறான்
புவனாவ எழுதச் சொல்லுதேன்
வச்சுடுதேன், அம்புட்டுதான்

உடம்ப பாத்துக்கிடுங்க!
வெயில்ல ரொம்ப சுத்தாதீக!
தூரதேசம் மனைவியைத்
அம்மையாக்கி விடுகிறது, குரலில்
முலை முளைத்து பால் கசிந்தது

சன்முகம் அண்ணாச்சிய
விசாரிச்சதா சொல்லுங்க!
அவருக்கு பேத்திதானுங்க
இப்ப பொறந்தது, போய் பார்த்தாரா?
ஒரு வருஷமாச்சா?
அவுக வீட்ல எம்புட்டு
விசனப்பட்டு இருப்பாக!
சரி நீங்க சீக்கரமா வந்து சேருங்க!
புவனாவுக்கு கலியாணம் முடிஞ்சிட்டா
கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்

குரல்வழி பெருவாழ்வு
எப்போது தொலையும் இந்த எரிபடுகை!

19 comments:

இராகவன் நைஜிரியா said...

// குரல்வழி பெருவாழ்வு
எப்போது தொலையும் இந்த எரிபடுகை!//

ம்.. அருமையான வரிகள். அற்புதம் ஐயா.. அற்புதம்.

பா.ராஜாராம் said...

ராகவன்,இந்த கவிதைக்குள் நான் இருந்தேன் ராகவன்.இவளும் இருந்தாள்.அப்படியப்படியே யாவும் இருந்தது.இல்லாமல் இருந்தேன்.இருந்தாள்.இருந்தது.இருந்து கொண்டும் இருக்கு...இல்லாமல்.

velji said...

வெளிதேசத்தில் பிழைப்பவர்களின் நிலை ஊருக்கு வரும் போது அவர்களிடம் காணப்படும் மலர்ச்சியையும்,கொண்டு வரும் பொருட்களாலும் தவறாகவே உணரப்படுகிறது.அவர்களின் இழப்புகள் பேசப்ப்டுவதில்லை.

நீங்கள் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.அதன் வலிகளோடு.

காமராஜ் said...

அட அற்புதமப்பா..

இது கதையா, கவிதையா, பிரிவாற்றாமையின் மீது படந்த நினைவுக்கிலேசமா,
உடைப்பெடுக்கக் காத்திருக்கும் மேலதிக நீர்வரத்தை சீண்டிவிடும் புலம்பெயர்ந்
தோருக்கான எல்லையா, ஆணும் பென்னுமா,
இல்லை நடந்தபாதையில் ஒட்டித்தெறித்த புழுதிவாசமா.
நிச்சயம் ஊற்றி வைத்த மதுக்கோப்பையிலிருந்து நுறைத்து வழியும் அன்பெனவே
பொங்கச் செய்யும். எங்கள் அன்புப் பாரா வின் பின்னூட்டம் இன்னும் உலுக்குகிறது.
பிரியப் பிரிய முறுக்கேறும் அன்பின் வயப்பட்ட காதல்.
நிலம்கடந்த எல்லோருக்கும் ஆதூரமான பிரியம் சொல்லும்.

ராகவன் அசத்துகிறீர்கள்.

ராகவன் said...

அன்பு இராகவன்,

சந்தோஷமாய் இருக்கிறது இராகவனிடம் இருந்து ராகவனுக்கு வாழ்த்துக்கள்!

பொக்கிஷப் படுத்துகிறேன். அன்புக்கு நன்றிகள் பல!

அன்பைத் தொடருங்கள்!

அன்புடன்,
ராகவன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீங்கள் என் வலையத்தைத் தொடர்ந்ததால் , உங்கள் படைப்புகளைப் பார்க்கலாம் என வருகை தந்தேன்.அருமையான படைப்பு. ஒவ்வொரு வரியிலும் உயிர்த் துடிப்பைக் கண்டேன். வாழ்த்துக்கள் ராகவன்.

ராகவன் said...

அன்பு பாரா,

நன்றிகள் பல. பாரா, இதன் மூலம் நீங்கள் தான் என்று உங்களுக்குத் தெரியுமா? வாழ்த்துக்களில் வளர்கிறேன்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

”பிரியப் பிரிய முறுக்கேறும் அன்பின் வயப்பட்ட காதல்.
நிலம்கடந்த எல்லோருக்கும் ஆதூரமான பிரியம் சொல்லும்”

நான் எதுக்கு காமராஜ் எழுதனும், அதை சரியாச் செய்றத்துக்கு நீங்கள் எல்லாம் இருக்கும்போதுன்னு தோனுது. மூளியை அலங்காரியாய் ஆக்குகிறது உங்கள் வரிகள்! நன்றிகள் பல காமராஜ்!

பிரியம் ததும்பும் நிலாமுற்றம் நீங்கள் மூவரும் எனக்கு.. மாதவராஜ் மற்றும் பாரா என்ற மற்ற இருவரும் சேர்த்து.

அன்புடன்

ராகவன்

ராகவன் said...

அன்பு வேல்ஜி,

மேலும் நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு. அவர்களின் இழப்புகள் பேசப்படுவதில்லை, மௌனமும் கொஞ்சம் கண்ணீரும் எத்தனை சொல்லியிருக்கும் வேல்ஜி!

அழகான பார்வை உங்களுடையது, உங்களைப்போல் சுருங்கச் சொல்லி விளங்கப் பண்ண வாய்ப்பதே இல்லை எனக்கு.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ஜெஸ்வந்தி,

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ஆயிரம் நன்றிகள்!

பா.ராஜாராம் எங்கோ குறிப்பிட்டதை படித்து உங்கள் பதிவுலகில் புகுந்தேன். மேலும் தொடர்ந்து வருகிறேன்.

அன்புடன்
ராகவன்

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை, பொருள் வயிற்பிரிவு ரொம்ப கொடுமைங்க

ISR Selvakumar said...

//
குரல்வழி பெருவாழ்வு
//

மிக அருமையான வரிகள். எனக்குத் தெரிந்து முதல் முறையாக இப்படி ஒரு வரியை வாசிக்கின்றேன்.

மாதவராஜ் said...

தொண்டை அடைக்கிறது. இரண்டு நாள் முன்பு நாம் தொலைபேசியில் பேசிக்கொண்ட விஷயங்களில் ஒற்றை இழை சுருதி கூட்டியிருக்கிறது. பிரிவு மனிதர்களை எப்படி கட்டிப் போட்டு விடுகிறது. வரிகளில் எத்தனை பெண்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. வற்றாத பிரியத்தோடு நிறைய எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களுக்கும் முலைகள் முளைத்து பால் கசிகிறது நண்பனே!

ராகவன் said...

அன்பு யாத்ரா,
முதலாய் என் பதிவிற்குள் நுழைந்து உங்கள் வாழ்த்துக்களை சொன்னதற்கு நன்றிகள் பல.

தொடர்ந்து வாருங்கள், உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

அன்புடன்
ராகவன்

அன்பு R.Selvakumar,

உங்கள் அன்புக்கு நன்றி! நிறைய படிக்கும் உங்களை போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கள் கோடியுறும். உங்கள் வருகைக்கு நன்றி!

தொடர்ந்து எழுத ஊக்கம் தொடர்ந்து தாருங்கள்

அன்புடன்
ராகவன்

அன்புத் தோழர் மாதவராஜ்,

ப்ரியங்களின் பெயர்க்காரணன். சந்தோஷமாய் இருந்தது, உள்ளுக்குள் ஒரு விதமான பயம் கலந்த எதிர்பார்ப்பு, என்ன இன்னும் காணுமே, ஒருவேளை வராம போய்டுவாரோ, நம்ம கவிதைங்கிற பேர்ல செய்ற லேகிய விற்பனை பிடிக்கலையோன்னு ஒரே குழப்பம் மாதவராஜ்! அதிகாலை 3 மணிக்கு எழுந்து பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது, ரொம்ப நேரமா புழுங்கி திடீர்னு கரண்ட் வந்தா மாதிரி!

அன்புக்கு நன்றிகளும் வந்தனங்களும்
ராகவன்

பா.ராஜாராம் said...

உங்களின் இந்த பின்னூட்டங்களுக்கான பதில் அசத்துது ராகவன்...முக்கியமாய்,மாதவனுக்கு சொன்ன பதில் மிக யாதார்த்தமும் மனசுமாய் இருக்கு...போய் கொண்டிருங்கள்.

மண்குதிரை said...

wow romba nalla irukku

pa ra avarkalkal solvathupola

S.A. நவாஸுதீன் said...

இது கவிதையா இல்லை குரல் காவியமா. உள்நுழைந்தவனை வெளியேரவிடாமல் வருடியும் வாட்டியும் எடுக்கிறது.

”குரலில் முலை முளைத்து பால் கசிந்தது”

என்ன வரிகளைய்யா இது. மனுஷனை மூச்சு முட்ட வைக்குது. சும்மா நல்லா இருக்கு, பாராட்டுக்கள்னு சொல்லிட்டு போக முடியலை ராகவன். எனக்கு நானே என்னத்த சொல்லிக்கிறது

Thenammai Lakshmanan said...

//உடம்ப பாத்துக்கிடுங்க!
வெயில்ல ரொம்ப சுத்தாதீக!
தூரதேசம் மனைவியைத்
அம்மையாக்கி விடுகிறது, குரலில்
முலை முளைத்து பால் கசிந்தது//

Excellent Raagavan

ராகவன் said...

அன்பு மண்குதிரை,
அன்பு நவாஸுதின்,
அன்பு தேனம்மை,

உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல! இராகவன், நைஜீரியா பின்னூட்டத்தில் என் பெயரையும் இனைத்ததால், வந்து சேர்ந்த தேனம்மைக்கும் நன்றி!

உங்கள் அன்பும், வாழ்த்தும் என்னை மேலும் முனைப்பாய் செயல்பட கிரியாஉக்கிகள்!

அன்புடன்
ராகவன்