Thursday, February 04, 2010

கூத்தனின் அடவுகள் - 2

பிரிபிரியாய்
விரிசடை சிலுப்பி
தண்டைகள் அதிர
ஆடிய பாதங்களில்
நசுங்கி பிதுங்குகிறது
தப்ப வழியில்லாது
ஒரு குறிச்சொல்

அலர் தாமரையாய்
சிதையில்
இதழ் விரிக்கும்
தீ நாக்குகள்
தின்ன தொடங்கியதில்
எப்படியோ
மிஞ்சுகிறது
அன்றைய
வரமும் சாபமும்

சாம்பல் பூத்த
மயான அமைதியில்
புரண்டு எழுந்தவனின்
உடலில்
கோர்த்து தொங்கிய
சலங்கைகள், 
பித்ருக்களின்
பிண்டங்களால்
நிறைக்கிறது
வசை நிறை வாழ்வை

வெளிச்ச 
பொத்தல்களுடன் கிழிந்து
தொங்கும்
ஜாமங்களின்
நிசப்தத்தை
திறக்கிறது...

நல்ல காலம் பிறக்குது...!
குறிசொல்லி போகும்
ஒரு அரூபம்

12 comments:

நேசமித்ரன் said...

ராகவன்

கைகளைப் பற்றிக் கொண்டு இந்தக் கவிதையின் நிரகரிக்கப்பட்ட சொற்களையும் ஏந்திக் கொள்ள தோன்றுகிறது. அப்படி ஓர் அனுபவத்தை கொடுத்த கவிதை இது

காமராஜ் said...

ராகவன்
கூத்தனின் தொடரா இது ?
நடக்கட்டும்.

விரிசடை,
அலர்தாமரை,
முடிசலங்கை

என அதட்டி நிறுத்துகிறது உடுக்கின் ஒலி.
கேட்காமல் யாரும் நகர இயலாத லயம்.

அருமை ராகவன்

உயிரோடை said...

//வெளிச்ச
பொத்தல்களுடன் கிழிந்து
தொங்கும்
ஜாமங்களின்
நிசப்தத்தை
திறக்கிறது...//

கவிதை நன்றாக இருக்கின்றது ராகவன்.
வாழ்த்துகள்

Thenammai Lakshmanan said...

நிஜமாவே பிரம்மிப்பாய் இருக்கு ராகவன் மயானக் கரை பார்த்த மாதிரி

ராகவன் said...

அன்பு நேசன்,

ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது நேசன். கைகளை கரைகடந்து அனுப்புகிறேன், உங்களைப் பற்றிக் கொள்ள...

ஆயிரம் நன்றிகளும், கொஞ்சம் அன்பும்,
ராகவன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இந்த கவிதையை பதிவிட ரொம்ப யோசனையாய் இருந்தது. ஆனால் மாதவராஜ் பேசும் போது கூத்தனின் அடவுகள்-1ன்னு போட்டு நிக்குதே அதுக்கப்புறம் ஒன்னும் போடலையா, என்று கேட்ட போது எழுதிவிடலாம் என்று தோன்றி எழுதியது.

உங்கள் சிலாகிப்பு நிஜமாய் சந்தோஷமாய் இருக்கிறது. உடுக்கை நான் இன்னும் தொடவில்லை, பரத நாட்டிய அடவுகளில் நிறைய வகைகள் உண்டு, நடை, நிலை, தோள், கண் அசைவுகள், கால்களின் போக்கு, வீச்சு என்று நிறைய உண்டு, எல்லாவற்றையும் தொட ஆசை தான். உங்கள் அனைவரின் ஊக்குவிப்பு என்னை மேலும் தொடரச் சொல்கிறது.

அன்புக்கு நன்றியும்
ராகவன்

ராகவன் said...

அன்பு லாவண்யா,

உங்களின் தொடர் அன்புக்கு நன்றி. வலையில் படிப்பது இப்போது அதிகமாகி விட்டது, நிறைய பேரின் எழுத்து நடை, தொனி இப்போது பழக்கமாகி விட்டது.
பின்னூட்டம் போட முடியாவிட்டாலும் படிப்பதில் தீவிரம் இருக்கிறது இப்போது.
என்னை படிக்கத்தூண்டும், எழுதத்தூண்டும் உங்கள் அன்புக்கு பதிலாய் அன்பும்
ராகவன்

ராகவன் said...

அன்பு தேனம்மை அவர்களுக்கு,

உங்கள் பின்னூட்டங்கள் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. பாராவிடம் பேசும்போது நீங்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகக் கூறினார்.

உங்கள் பிரியத்திற்கு வந்தனங்கள் பல

ராகவன்

மாதவராஜ் said...

அடவுகள் வைத்து, ஆடித் தீர்க்கிறீர்கள்!
அருமை ராகவன். மதியம் பேசி முடித்தவுடன் எழுதிவிட்டீர்களோ. வேகம் தெரிகிறது...

அம்பிகா said...

ராகவன்,
உங்கள் எல்லா கவிதைகளையும் படித்தாலும், சரியான படி பின்னூட்டம் எழுத முடியவில்லை.

\\மாதவராஜ் said...
அடவுகள் வைத்து, ஆடித் தீர்க்கிறீர்கள்!\\

அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

அன்புடன் அருணா said...

புதுவிதமான வாசிப்பனுபவம்.!

சந்தான சங்கர் said...

வெளிச்ச
பொத்தல்களுடன் கிழிந்து
தொங்கும்
ஜாமங்களின்
நிசப்தத்தை
திறக்கிறது...

நல்ல காலம் பிறக்குது...!
குறிசொல்லி போகும்
ஒரு அரூபம்//

மிகவும் அருமையாக
வந்திருக்கு தோழரே
குறி சொல்லும் கரு
கனத்து வந்திருக்கின்றது
மயானத்தில்...

தொடருங்கள்..