Saturday, February 27, 2010

கன்னிமைப் பொழுதுகள்...

நகர இருட்டில்
தொலைந்து போன
ஒடுங்கிய சந்து போல
ஏக்கங்களை ஒளித்து
வைத்திருக்கிறது
பலுவனம்மாவின் கோயில்

பங்குனி மாச பகலில்
மட்டுமே வரும் அங்காளி
பங்காளிகளுக்காய்
காத்திருப்பாள்
ஒரு முதிர் கன்னியாய்

பலிக்கு ஏங்கும் பீடத்தில்
காய்ந்த ரத்தத்துளிகள்
பலுவனம்மாவின்
பயத்துக்கு
துணையாய்
குத்தவைத்துக் கிடக்கும்

கழித்த
கோழி இறகுகளும்
ஆட்டின் கொம்பும்,
குளம்பும்
அவளின் படையல்
ஞாபகங்களில்
பந்தி வைக்கும்

காய்ந்த பனைமரங்களின்
உறுமி மேளத்தின் 
திருவிழாக்கனவில்
மீண்டு திரும்பும்
அவளின் யவ்வனம்

அடிக்காத மணி
அந்தரத்தில்
ஒற்றை நாதக்கனவுகளில்
உறங்கி கழிக்கும்

மூணு வேளை அலங்காரம்
அபிஷேகம், ஆராதனைகள்
எல்லாம்
சந்தன காப்பு
வெடிச்சு விரிசல் விடும்
கன்னிச்சூடு தாங்காமல்

Friday, February 26, 2010

விளம்பரத்தில் மூடும் ஜன்னல் கதவுகள்...

உறங்காத விழிகளில்
அடைகாத்த கனவுகளின்
குவிமையம்
ஒரு ராஜகுமாரனாய்...

புரவியின்
குளம்பொலியும்
பறக்கும் புழுதியும்
மாய யதார்த்தமாய்
என்னை ராஜகுமாரியாய்
மாற்றும்

நீண்டு முளைக்கும்
உப்பரிகை
திண்ணையை கடந்து
நிற்கும் 
கொடிகள், மலர்கள் என்று
உடலை கிளர்ந்து பரவும்

களைத்த புரவி
நுரை தப்பி அண்ணாந்து பார்க்கும்
ராஜகுமாரனுடன்  
முன்காலை தூக்கி செருமும்
கை நீட்டி அழைப்பவனின்
மின்னும் நிறத்தில்
என் வெட்கம் மங்கும்

குதித்து இறங்க வாகாய்
கொடியை இழுத்து
மேலே தூக்கும் பாவாடை
தளர்த்தி இறங்கினேன்
அவன் என் தொடைகளை
கவனித்ததை
அலட்சியபடுத்தி
இறங்கிக் கொண்டே இருந்தேன்
குதிரையும் ராஜகுமாரனும்
தொடுவானமாய்... 

அடச்சே விளம்பர இடைவேளை...!!

Monday, February 22, 2010

பூனைக்கு அவனென்று பெயர்...

வீட்டில் ஒரு
பூனை வளர்த்தோம்
இந்த  பூனைக்கு
பெயரும் உண்டு
கிஷ்மோ!

அலுவலகத்தில் இருந்து
திரும்பியதும்
காலில் வந்து உரசி
ஏதோ சொல்லும்

தனக்கென்று இருக்கும்
மீன் கறியை
எடுக்க குளிர் சாதன பெட்டியை
நோக்கி இழுக்கும்

தட்டில் வைத்ததும்
தின்று விட்டு,
பால்கனியில் இருக்கும்
கொஞ்சம் மணலில் குழி தோண்டி
கக்கா போகும் பின் மூடும்
சுற்றி முற்றி
பார்த்து கொள்ளும்

திரைச்சீலைகளை ஏறி கடக்க
முற்பட்டு
பிரி பிரியாய் கிழிக்கும்

திரும்ப வந்து
சாக்கில் படுத்துகொண்டு
உடம்பெல்லாம் நக்கும்
எழுந்து வந்து
அலமாரி மேல் ஓசைப்படாமல்
தவ்வி படுத்துக கொள்ளும்

இரவில் மதில் மேல்
நின்று கொண்டு
பச்சை குழந்தையின்
கதறலாய் விரகம் பழகும்
பூனைகளுக்கு இருக்கிறது
ஒரு தினசரி தொடர் வாழ்க்கை

மென் பாதங்களில்
அடுக்களை புகும்
கள்ளப்பூனைக்கு இப்போது 
நான் என்றும் பெயர்

Friday, February 19, 2010

நதிவழி...

தானே பேசிக்கொண்டு
நடக்கும் ஒரு பைத்தியக்காரியை
போல
தனியே நடந்து கொண்டிருந்தது
நதி

மனசுக்குள் வந்து போகும்
சில சமயம் அவளுக்கு
இரண்டு கரையிலும் அகட்டிக் கொண்டு
ஓடியது

நிறைய சொந்தங்கள் உண்டு
இரண்டு பக்கங்களும்
எல்லாத் தேவைகளும் தீர்ந்து
போகும் வரை
அம்மா போல உண்டா...
தெய்வமா படியளக்குறா
என்ற கதை அவளுக்கு
எப்போதும் சிறிய சிரிப்பை
நிரந்தரமாக்கி இருக்கலாம்

குழந்தைகள், கொண்டவன்
என்ற ஞாபகங்கள் தேக்கி
சில இடங்களில்
குறுகி ஓடுகிறாள் கூச்சத்துடன் 

தனக்கென கொண்ட சொத்தை
பெயரறியா பொருட்களை
தூக்கி கொண்டு அலைகிறாள்
ரகசியங்கள்
தக்கைகள் அல்ல என்பது
அவளுக்கு தெரியும்

எது எப்படியோ
என் கால் தொடுகையில்
சில்லென்று
மூளைக்குள் குளிர் நிரப்புகிறாள்

கடைவாயில் எச்சில் ஒழுக
கையேந்தும் அவள்
நதிஎன்னும் பைத்தியக்காரி
நதியான பைத்தியக்காரி 

Wednesday, February 17, 2010

வீடென்று எதனை சொல்வீர்...

மறுபடியும் நிகழ்ந்து விட்டது
ஒரு மரணம்
குறையும் எண்ணிக்கைகளில்
காவல் பாராவின்
குரைப்பு ஒலிகள்  குறைந்து
சன்னமாய் ஹீனமாய் ஒலிக்கிறது
வீட்டு நாய்களுக்கு
ரோட்டு சாமர்த்தியக் குறைவு
பயத்தில் அலறும் அவை  

மெல்ல அதிர்ந்து
அடங்குகிறது சுற்றுச்சுவர்
தனது பலகீனத்தின் பெருமூச்சில்
இடையறாது பெருகும்
சீழ்க்கை ஒலியிலும்
முரட்டு சப்பாத்துகளின்
கர்ரக் ஒலியிலும் சமாதானம் கொள்கிறது  
அவப்பெயர் வந்து விடாதென

உடம்பெங்கும் நரம்புகள்
பூத்த வீட்டின் சுவர்களில்
ஒடுங்கும் பல்லிகள்
குறி சொல்ல
கேட்பாரின்றி ஆயுள் குன்றும்

ரகசியங்கள் உடைந்து
சங்குக்குள் சிக்கிய காற்றாய்
ஓங்காரமிடும்
பெரியவர்களின் சம்பாசனையை
திரும்ப திரும்ப சொல்லும்
ஒரு பிள்ளைகள் இல்லா பெருவீடு

Monday, February 15, 2010

சில்லறை...

”காதலில் கிறங்கி கிடந்த விடலை பருவத்தின் சில்லறைக்காசுகள் கீழே கிடக்கிறது, குனிந்து எடுக்க முற்படும் போது இடுப்பு பிடித்துக் கொண்டுவிடும் வயது வந்து விட்டது.  ஆனாலும் யாருக்குத்தான் இல்லை பேராசை மறுபடியும், வாழவும், சாகவும், காதலிக்கவும்”.

குடைராட்டினத்தில்
சுற்றும் போது குழந்தையாகிறேன்
உன் ஜிமிக்கிகள்

மூக்கிற்கு எதுவும்
தேவையில்லை ஒற்றை மரு
வைரம் தோற்கும்

ஸ்டிக்கர் பொட்டு
ஒட்டிய நிலைக்கண்ணாடி
நீயாய் சமையும்

கழற்றி வைத்த வளையல்
இசை மிச்சம் இன்னும்
உன் கை வீச்சில்

செருப்புகளில் பூக்கள்
நீ கால் நுழைத்த பிறகு
மலர்ந்தன

சிந்திய மழைத்துளிகள்
உன் கொலுசுமணிகள்
குளிர்வாகவும் இசையாகவும்

வியர்வைத்துளியில் ஒட்டிய
உன் ஒற்றை இழை மயிர்
என் இதயத்தில் ஹேர்லைன் கிராக்

வானம் பார்த்து கிடப்பேன்
வானம் என்னுடன் கிடக்கும்
பைத்தியம்!!

Saturday, February 13, 2010

பஞ்சவிருத்தி...

அலுவலத்தின் அருகே
இருந்த அரசு பள்ளியின்
சாப்பாட்டு மணி அடிக்கிறது

வேப்பமரத்தின் நிழலில்
சத்துணவு அண்டாவின்
முனை பற்றி
எரிகிறது பசி பெருந்தீ
நீண்ட வால் போல

தள்ளு முள்ளு வரிசையில்
கடைசியாய் நின்றவனின்
கால்சட்டை நழுவப் பார்க்கிறது
ஒருகையில் இழுத்துக்கொண்டே
வரிசையின் நகர்வை
உன்னிப்பாய் கவனிக்கிறான்

பாத்திரத்தில் கரண்டி படும்
ஓசையின் தொனி மாறிக் கொண்டே
வருவது, அவனுக்கு
மிரட்சியாய் இருக்கிறது
வரிசையையும்,
சத்துணவு அண்டாவையும்
பார்த்துக் கொண்டே நகர்கிறான்

கடைசியில் நின்ற
மூன்று பேருக்கு எதிர்பார்த்த மாதிரியே
சத்துணவு இல்லை
மரத்தடியில் வைத்த பைக்கட்டில்
அலுமினிய தட்டை
திணித்துக் கொண்டு
வெளியே ஓடினான்

ஒடிந்த திருகாணியை
ஊதப்போனவனிடம்
அண்ண வெளிய போயிருக்கார்
அண்ணே!
பட்டறையில் இருந்தவன்
கண்களில் ஒளி இருந்தது!
சத்துணவு தவற விட்ட
பையனாய் தெரியவில்லை

Thursday, February 11, 2010

இஷ்டாத்வைதம்

முதலில் காதலை
சொன்னது நான் தான்
சொல்ல வைத்து விட்டாள்
ஆனாலும்
"ஐ லவ் யூ சொல்லவில்லை,
காதலை சொல்ல தெரியுதா?
ரெண்டு மூணு நாளு பேசுனதுக்குள்ள
ராத்திரி போன் பண்ணி
உன்ன கல்யாணம் பண்ணிக்க
ஆசைபடுறேன்னு
காதல சொன்ன லட்சணம்"

தலையில் அடித்து கொண்டு
முகத்தை நொடிப்பவளை
மெதுவா அனைத்து
காதில் சொன்னேன் அன்று
ஐ லவ் யூ என்று,
வாங்க ஓடிப்போகலாம்!!
எங்கம்மா?  என்னையும் கூட்டிட்டு போம்மா!!
என்றவளை இடுப்பில் இடுக்கிக கொண்டு
சிரித்தவள் மேல்
காதல்  இன்னும் மிச்சமிருக்கிறது
அறியாத பெருரகசியமாய்!
  

Monday, February 08, 2010

கூத்தனின் அடவுகள் - 3

தமருவின் ஒலியின்
அதிர்வுகளில்
இரண்டாய் பிளக்கிறது
நான் போலவும்
நானல்லாததை போலவும்

மூன்றாம் கண்ணில்
வழியும் ஊழிபெருந்தீ
பெயரறியா காமத்தை
பொசுக்கி மீள்கிறது
மூன்றாம் முலைச்சியை
விரக வெடிப்புக்குள்
நுழைக்கிறது

புணரவேண்டி கருகி,
தோல் உரித்து
இழுத்து கட்டுகிறது
அரையில்
பிளிறி அலறுகிறது
ஊனம்
உறைந்த உயிர்ப்பில்
பிறவி தொலைத்து
வெற்றாய்
வானம் பார்க்கிறது
குறியீடொன்று

தலையில் தண்ணீர்
குளிர் நிலா
மருந்தென  வில்வம்
உறைபனி
உறைவிடம்
கனன்று எரியும்
கொதி நெருப்பில்
கூத்தனும் தான்
என் செய்வான்?

Thursday, February 04, 2010

கூத்தனின் அடவுகள் - 2

பிரிபிரியாய்
விரிசடை சிலுப்பி
தண்டைகள் அதிர
ஆடிய பாதங்களில்
நசுங்கி பிதுங்குகிறது
தப்ப வழியில்லாது
ஒரு குறிச்சொல்

அலர் தாமரையாய்
சிதையில்
இதழ் விரிக்கும்
தீ நாக்குகள்
தின்ன தொடங்கியதில்
எப்படியோ
மிஞ்சுகிறது
அன்றைய
வரமும் சாபமும்

சாம்பல் பூத்த
மயான அமைதியில்
புரண்டு எழுந்தவனின்
உடலில்
கோர்த்து தொங்கிய
சலங்கைகள், 
பித்ருக்களின்
பிண்டங்களால்
நிறைக்கிறது
வசை நிறை வாழ்வை

வெளிச்ச 
பொத்தல்களுடன் கிழிந்து
தொங்கும்
ஜாமங்களின்
நிசப்தத்தை
திறக்கிறது...

நல்ல காலம் பிறக்குது...!
குறிசொல்லி போகும்
ஒரு அரூபம்

Tuesday, February 02, 2010

கூத்தனின் அடவுகள் - 1

அடர் இருள்
போர்த்தி
அரவமில்லாமல்
களவை
சுமந்து கடந்தது
அந்த தெரு

சாத்திய
கதவு
முனகி அழைத்த
விரக வாசலின்
கோலங்கள்
ஊர்கிறது
விஷ சர்ப்பங்களாய்

விரிகூந்தலிலிருந்து
வழிந்த சுகந்தம்
பூதகணங்களாய்
வளர்ந்து
நிலைப்படிகளில் தொங்கி
இழுக்கிறது

மெல்லிய
வெளிச்சம் சிமிட்டும்
சுடரின் சலனங்களில்
புணர்வு பெருக்கு,
காற்று
பொங்கி ததும்புகிறது
பிறை முடி மீறி
வெண்ணீர் ஊற்றுகளாய்

கடவுளின்
திருமஞ்சத்தில் புரளும்
பரத்தையர் வசிக்கும்
தெருவில்
நிற்காமல் ஓடும்
உற்சவமூர்த்தி