Thursday, December 31, 2009

நல்வாக்கு...

அன்பு நிறை எல்லோருக்கும்...

இந்த வருஷம் இன்னும் முடிய சில பொன் தருணங்கள் மிச்சமிருக்கிறது... நிறைய கொடுத்து விட்டு செல்கிறது... உன்னத உறவுகள், பகிர்வுகள் என்று இந்த  வருஷம்  முழுக்க முழுக்க நல்லதனங்களில் நிறைந்திருந்தது... இருக்கிறது.

எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததும் ஒரு மிக பெரிய சந்தோசம்... வீடை கட்டி இரண்டு வருடங்களாக பூட்டி வைத்து வாழ கொடுத்து வைக்க முடியாமல் மனசுக்குள் புழுங்கி போன நாட்களை இன்று நினைக்க... கண் நிறைகிறது... வீடென்று எதனை சொல்வீர்னு மாலன் சொல்றது மாதிரி என் பெங்களூர் வீடு எங்கள் முதல் கனவு வீடாய், ஆசையையும் இழக்க விரும்பா தருணங்களையும் போட்டு கட்டியது... என் மனைவியின் அழகுணர்ச்சியை, உபயோக மதிப்பை சேர்த்து பிசைந்து வனைந்த சிற்பமாய் நிற்கிறது இப்போது... இன்னும் பர்னிஷிங் பண்ணவில்லை... ஆனாலும் வாழ்க்கை அதன் உயர் தரங்களுடன் எங்களிடையே பரிமளிக்கிறது நாங்கள் முதன் முதலாய் சந்தித்த நிமிடத்தின் மொத்த தொகுப்பாய்...

புரைக்கேற்றிய மனிதர்கள் என்று பாரா போல எனக்கு எழுத வரவில்லை... ஆனால் இந்த வருஷம் அதன் கடைசி துளிவரை எனக்கு மிக நல்ல நண்பர்களை சேகரித்து கொடுத்து உள்ளது... காமராஜ் வழியாக உள் புகுந்து மாதுவை தொட்டு, பாரா, நவாஸ், நேசமித்திரன், இன்று அம்பிகா என்று வளர்ந்து கொண்டிருக்கிறது இடைவெளிகளை, தூரங்களை இட்டு நிரப்பிக் கொண்டே ஒரு உறவுப்பாலம்.   என்னை மேலும் பாதித்து இன்னும் தொடர்பே இல்லாமல் இருக்கும் சில பெயர்களில்... இராகவன், அமிர்தவர்ஷிணி, கும்க்கி என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.  வரபோகிற வருஷம் இதை எனக்கு நிச்சயமாக்கி தரும் என்று நிறைய நம்புகிறேன்...

காமராஜின் சாமக்கோடங்கியின் நடை என்னை பாதித்த அளவு யாரும் இன்று வரை என்னை பாதிக்க வில்லை... என்னை எழுத தூண்டியர்களில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் காமராஜ், மாது மற்றும் பாரா என்கின்ற இந்த முப்பரிமாணம் முதன்மையாய் இருக்கும், இருக்கிறது.  எல்லோருக்கும் மிக பெரிய அன்பும் நன்றியும்.  

நிறைய நல்ல விஷயங்கள், எதிர்பார்ப்புகள், வேண்டுதல்கள், கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் சிறு சிறு முயற்சிகளில்

பிரியத்தின் வழி எல்லோருக்கும் என் புது வருஷ வாழ்த்துக்கள்...

அன்பும், ஆயிரம் நன்றிகளுடனும்,
ராகவன்

Wednesday, December 30, 2009

மாயாழிகள்...

இரவு தின்று
மிச்சமான
விளக்கு வெளிச்சம்
போதுமானதாய்
இருக்கிறது...

நீ படுத்திருக்கும்
திசையில் வாகாய்
காலை நீட்டி
உன் கொலுசை
கிளுக்கி எழுப்ப

கொஞ்சம்
சுவரதெரிப்பில்
புரண்டு படுக்கிறாய்
உன் கனவின்
துளையில் நுழைவதற்கு
தோதாய்

கைகளை மட்டும்
அனுப்பி
உன் உடம்பில்
பரத்தியிருக்கும்
வெப்ப பூக்களை
பறிக்கிறேன்
சில அமிலத்துளிகள்
தரையில் சிந்தி
கொப்பளிக்கிறது

மேசைக்காற்றாடி
மகுடிக்க
ஆடிய முடிக்கற்றைகள்
கருத்த நாகங்களுக்கு
ஒப்பாய்
உடலெங்கும் தீண்டி
உயிர் ஒழுக
பொத்தலாக்குகிறது

ஒவ்வொரு
பொத்தல்களில் இருந்தும்
வடிந்த உயிர்த்துளிகளில்
மிதந்து கரையேருகிறது

இரண்டு
புகைக்ச்சிற்பங்களுடன்
ஒரு
பெயரறியாப்படகு

தனிமை சமன்பாட்டில்..

தொலை தூர பயணங்களின்
இருக்கைகளில் தனிமை
கால் பரப்பி உட்கார்ந்திருக்கிறது...

இடையில் ஏறியவர்கள்
இருக்கைகளை ஆக்கிரமிக்கிறார்கள்
அது இப்போது
ஒடுங்கிக் கொண்டு
உட்கார்ந்திருக்கிறது
மழையில் நனைந்த
பாதையோர சிறுமி மாதிரி

தன் இடத்தை யாருக்கும்
தராமல் என்னை கொட்டக் கொட்ட
பார்த்து கொண்டிருக்கிறது
ஒரு ஒற்றை விண்மீனாய்..

எந்த இடத்தில் இறங்கும்
அது தெரியவில்லை
 பயண தூரத்தை அது
நீட்டிக் கொண்டே இருக்கிறது

விரட்ட எத்தனிக்கையில்
சுற்றி சுற்றி வந்து 
போக்கு காட்டுகிறது...

பள்ளி நிறுத்தத்தில் ஏறிய
குழந்தையின் புத்தகப்பொதியின்
கணத்தில் இருக்கை நிறைந்தது

தனிமை, பயண ஜன்னலில்
இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டது...

ஒரு கவிதையை பிரசவித்து...

Monday, December 28, 2009

யுத்தமும் சில ஆயத்தங்களும்...

விருப்பப்புள்ளியில்
இருந்து விலகியதாய்,
ஆயுதக்கிடங்கில் தளவாடங்கள்
சேர்க்கிறாய்

வெஞ்சின சமரில்
தோற்றதாய் புழுங்கி
யானைகளையும், குதிரைகளையும்
உரமாக்குகிறாய்

வர்ணங்களில்
ஆர்வமாய் சிவப்பை
அணிந்தும் பூசியும் கொள்கிறாய்

வனவெளி நெருப்பை
கண்களில் நிறுத்தி
விரிசடை சிலுப்பி
நாவின் முனையை
சானை பிடிக்கிறாய்

வெறுப்பின் நகங்கள்
வளர்த்து பிரியம் கிழிக்க
காத்திருக்கிறாய்

அதற்குள்
நான் தயாராக வேண்டும்....

கொஞ்சம்
அன்பு
மெல்லிய
புன்னகை
இன்னும்
பூக்களுடன்

Wednesday, December 23, 2009

பிரிக்கபடாத கடிதம்...

உள்ளங்கையில் மசி
படர்த்தி
உன் இருப்பை
காட்டி
மீள்கிறது
நிலைக்கண்ணாடி
மேசையில்
கிடக்கும்
அந்த கடிதம்

சுழன்றடிக்கும்
மாயக்காற்று
தார்சாலில்
நீ சொருகிய
ஒலைக்காற்றடியின்
நுரையீரல்
சுவர்களை
முட்டித்
திறக்கிறது
சரிகிறது
மூச்சு முட்டிய
விளையாட்டு
பொழுதுகள்

உதட்டு
மடிப்புகளுக்குள்
உறங்கி
மறைந்திருக்கும்
முத்தங்களில்
இன்னும்
மிச்சமிருக்கிறது
களவு,
பிளவில்
பெருகுகிறது
ஒரு ப்ரிய
ஊற்றுக்கண்

உதிர்ந்து
விழும்
புகைகூண்டு
சுவர்கள்
நாம்
ஒதுங்கிய
நிழலை
உதறி எடுத்தது
சிதறி விழுந்தோம்
தனி
தனியாக..

நடுங்கும்
என் விரல்
ரேகைகளை
கடிதத்தில்
பதிக்க அஞ்சுகிறேன்
உன் உதட்டு
ரேகைகளில்
இடறி விழ
அவசியம் இல்லாமல்
கடிதம் இன்னும்
பிரிக்கப்படாமலே.....




 

Tuesday, December 22, 2009

ஒரு கடவுளும் இரண்டு காலி மதுக்கோப்பைகளும்...

இரண்டு
காலி மதுகோப்பைகளாய்
நீயும் நானும்
அந்த அணிவறையில்.

இட்டு நிரப்புவார்கள்
யாராவது
என்று காத்திருக்கிறோம்
எனக்கு பொறுமை
குறைந்து கொண்டே
வருகிறது
யாரையும் காணோம்

வெறுமையில் நிரம்பி
வழிகிறேன் நான்
நீ இன்னும்
அரவமற்ற பொழுதுகளை
எண்ணி கொண்டிருக்கிறாய்
உன் காத்திருப்பு
எனக்கு அசதியாய் இருக்கிறது
வழிந்த வெறுமையில்
நிறைகிறது அந்த அணிவறை

யாரோ வருவது
போல் இருக்கிறது
வந்தவர் தலையில்
ஏதோ வட்டமாய்
சுழல்கிறது
நான்கு கரங்களுடைய
அவர்
உன்னையும் என்னையும்
எதையோ ஊற்றி நிரப்புகிறார்
கணம் தாங்காமல்
நான் விரிசல் விடுகிறேன்
உன்னை கையில் ஏந்தி
குடித்து விட்டு
என்னையும் கையில்
எடுக்கிறார்
விரிசல் கையை கிழிக்க
உதறி விட்டு
ஓடுகிறார் உதிரம் வடிய...

அப்பா என்னும் வரம் ...1

வரம் கொடு தேவதையே என்ற ஒரு தொடர் பதிவில் பா.ரா. வின் வரம் வேண்டும் அந்த பத்து தருணங்களை படித்ததும் எனக்கு மூளை நம நமன்னு அரிக்க ஆரம்பிச்சுடுச்சு.. நம்மள யாருமே  தொடர் பதிவுக்கு அழைத்ததில்லை... ஆனாலும் அழையா விருந்தாளியாய் என் முதல் காதல் தேவதையின் திருமண மண்டபத்தில்  நுழைவது போல நுழைகிறேன், ஓரமாய் நின்று காட்சிகளை ரசிக்கிறேன், தேவதை துலாவும் கண்களில் நான் இடறி இங்கு விழுந்து விட்டேன், வேறு வழியில்லை உங்களுக்கும்

இழந்த எல்லாமே வரமாய் வேணும் எல்லோருக்கும், பட்டியலை மீறுகிறது வரங்கள் புது வெள்ளம் வழிந்தோடும் வாய்க்கா மாதிரி...

பதினொரு வீடுகள் இருக்கும் ஒரு காம்பவுண்டில் அனேக வீடுகளில் பெண் பிள்ளைகளே இருந்த நாட்களின் இறுதியில்  ஏழு வருஷம் கழிச்சு நான் பொறந்தேன் ஒரு வரமாய்.  எல்லோரும் கொண்டாட ஒரு ஆயர்பாடி கிருஷ்ணன் போல, ஷ்ய்மள வண்ணத்தில்.  பெண் பிள்ளைகளுடன் மட்டுமே புழங்கி வந்த நாட்களில் சொட்டாங்கல், பாண்டி, பல்லாங்குழி, தாயம் என்று என் விளையாடல்கள் தொடர்ந்து நிறைய பெண் தன்மைகளை கொண்டிருந்த காலத்தில், அப்பாவின் ஆண்களுக்கான விளையாட்டு உலகம்  அறிமுகம் ஆனது, திடீரென்று கபடி, ஹாக்கி, கால்பந்து என்று என் விளையாட்டு உலகத்தில் சில பந்துகளை உருட்டினார். நானும் அவைகளை விரைகளாய் பதுக்கி வைத்தேன். என் உலகம் வேறு வர்ணத்தில் சுழல ஆரம்பித்தது.

அப்பாவை நான் வாசனைகளில் உணர ஆரம்பித்தேன். விடைத்த நாசியின் வழி எல்லோரும், எல்லாமும் அவருக்கு வாசனை தான்.  ரத்தினம் பட்டணம் பொடியில் சோலைமலை மாமாவையும், வில்ஸ் நேவி கட்டில் பிச்சம் நாயுடுவையும், மெலிதான சந்தனத்தில் பாங்க பார்த்தசாரதியையும், அடையாளம் வைத்திருப்பார்.  வாசனைகள் குறியீடுகள்  அப்பாவுக்கு எப்போதும், தாயம்மா கிழவியின் போயிலை, இடித்த தெக்கம்  பாக்கு, வெற்றிலையில் அரைபடும் போது வரும் வாசனை அநேக கதைகள் சொல்லும் அப்பாவுக்கு.  மீசைக்காரன் கடை தொடைக்கறி குழம்பின் வாசனை அப்பாவின் விருந்தோம்பலை சொல்லும்.  திருசூர்ணத்தின் வாசம் அப்பாவின் பக்தியை.  ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டைக்கடையின் ஹல்வாவின் வாசனை அப்பாவின் பாசத்தில் தெரியும்.

அப்பாவின் வாசத்தை விநோதமாய் உணர ஆரம்பித்தேன் சில நாட்களில்.  மஞ்சள், பவுடர், மாதவிடாய், எண்ணெய் எல்லாம் கலந்த பெண்களில் உலகத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது அந்த அப்பாவின் வாசம்.  அப்பா புகைப்பதில்லை, குடிப்பதில்லை, பொடி மட்டும் எப்போதாவது போடுவார், அதுவும் சோலைமலை மாமா வரும்போது மாத்திரம் ஓசி பொடி காட்டம் அவரை கிலேசப்படுத்தும். அம்மாவிடம் இருந்த விலகி அப்பாவுடன் உறங்க ஆரம்பித்தேன், நாங்கள் படுத்துறங்கும் நார்க்கட்டிலின் மனம், அப்பாவின் வியர்வை, விபூதி கலந்த வாசம் எனக்கு ஒரு விதமான கிறக்கத்தை தந்தது.  அப்பா எல்லாக்காலங்களிலும் 5 மணிக்கே எழுந்து விடுவார், ராமேஸ்வரம் பாசஞ்சர் சுப்ரமணியபுரம் ரயில்வே கிராசை கடப்பது எங்கள் வீட்டில் கேட்கும்.  சத்தங்கள் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் பயணித்த காலம் அது. ஐந்து மணிக்கு எழுந்தவுடன் குளிக்க கிளம்பி விடுவார். எந்த சிதோஷ்ண காலமாய் இருந்தாலும் குளிப்பதற்கு கிணற்று நீரே சாசுவதம் அவருக்கு.  கிணற்று நீரும் வெய்யில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும் அப்பா போலவே.  கோபால் என்று பெயர் பொறித்த ஒரு  இரும்பு வாளியில் நீர் சேந்தி குளிர குளிர குளிப்பார்.  அப்பாவின் தலையில் சோப்பு நுரை தனியாக தெரியாது, அப்பாவுக்கு சோப்பு நுரை மாதிரியே இருக்கும் முடியில் வித்யாசம் தெரியாது. என்னையும்  குளிப்பாட்டுவார்.  சந்திரிகா சோப்பின் மனம் எதிர் காம்பௌண்டில் நவநீதம் மாமாவை  அவர் மீசையை தாண்டி, கயிறு கட்டி இழுத்து வரும்.  என்ன ஓய்! நாளெல்லாம் மனக்குறீரு!  என்ன சோப்பு போட்டாலும் ஒம்ம பையன் செவக்க மாட்டேன்கிறான் ஓய்!  அப்பா பேசாமல் சிரிப்பார்.  அப்பாவுக்கு தெரியும் யாரிடம் பதில் பேசணும் பேசக்கூடாதுன்னு!

சனிக்கிழமை தவறாமல் என்னை பெருமாள் கோவிலுக்கு கூட்டி செல்வார் அப்பா. மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும் கோவிலுக்கு நடந்து செல்வது தான் வழக்கம். நடந்து செல்வதால் ஒரு ஆதாயம், குரு விலாஸ் பஜ்ஜியோ அல்லது அம்பீஸ் கபே தோசையோ நிச்சயமாய் இருக்கும்.  அப்பாவுக்கு சைக்கிள் ஓட்டுவதில் அத்தனை பிரியம் இல்லை. டபுள்ஸ் ஓட்டுவது அவருக்கு எப்போதும் பிரயத்தனமான விஷயம். ஒருமுறை ஜெயாத்தை இறந்த போது அப்பாவும், ராஜ் ஆசாரியும், ஏட்டு வீட்டிற்கு தகவல் சொல்ல செல்லும் போது அப்பாவின் டபுள்ஸ் முயற்சி சில பல காயங்களில் முடிந்தது.  அதனால் பெரும்பாலும் சைக்கிள் ஒட்டும் போது தனியாகவே செல்வார் மற்ற சமயங்களில் நடந்து தான் அவரின் பயணங்கள் எல்லாம்.  அப்பாவுடன் கோவிலுக்கு செல்வது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.  எல்லோரையும் அப்பாவுக்கு தெரியும், எல்லோருக்கும் அப்பாவை தெரியும். எல்லோரையும் அவரவர் தொழிலுக்கு ஏற்ப முகமன் செய்வார்.  செருப்பு கடைக்காரனும், கோவில் மண்டபத்தின் காரிய தரிசியும் அப்பாவுடன் நெருங்கிய சிநேககாரர்கள்.   உள்ளே நுழையும் போதே வாசலை தொட்டு வணங்கி துவஜச்தம்பத்தை நோக்கி ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார் என்னையும் கிழே விழுந்து கும்பிட்டு எழ பணிப்பார்.  கீழே விழுந்து நமச்கரிக்கும் போது உன் அகங்காரம் அழியும், நான் ஒன்னும் இல்லடான்னு தோணும் என்பார் அடிக்கடி.  அப்பா தன்னை அடிக்கடி இழப்பார் பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தில்.

அப்பா என்னும் வரம் தொடரும் இன்னும்.....

Monday, December 21, 2009

நீர்ச்சக்கரம்

மறுபடி நிகழ்கிறது
ஒரு இடப்பெயர்ச்சி
நிற்காமல் சுழல்கிறது
கிரக வாழ்க்கை

அட்டைபெட்டிக்குள் அடுக்கி
குவித்ததில் கொள்ளாமல்
திமிறி வழிகிறது
எடுத்துச் செல்லமுடியாத
உறவுகள் சில

எல்லா காலங்களிலும்
பொருட்கள் சேர்ந்து கொண்டு இருக்கிறது
அதன் தேவையே இல்லாது
விலைக்கும் போகாது
உபயோகமும் புரியாது
கழிக்கவும் முடியாது

இரண்டு பேருக்கு
இவ்வளவு
சாமான் ரொம்ப ஜாஸ்தி!
மாற்றலுக்கு உதவிக்கு வந்த
அலுவலக சிப்பந்தி
சிரித்துக் கொண்டே புலம்பினான்
பொதித்து வைத்த
இருவருக்குமான ரகசியங்கள்
புடைத்து பெருகுகிறது
அவனுக்கு புரியாது...
ஏதாவது விட்டு விட்டோமா?


மாடி வீட்டு குழந்தை  ருஜிதா
எங்கள் இருவரையும்
அவளுடன் சேர்த்து வரைந்த
அந்த ஓவியத்தையும்
மறக்காமல் எடுத்து கொண்டேன் 

இரவல் கொடுத்த
ஜி.நாகராஜனின் படைப்புகளை
திருப்பி கொடுக்க தயங்கி
கொடுத்தவரிடம் சொல்லாமல்
கிளம்பினேன் கடைசியாய்
கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடனும்

Saturday, December 19, 2009

அம்மா அறிந்த பாத்திரம்

வயித்த வலிக்கி என்று கைகளைத் தாங்கி மடங்கி உட்காருகிறாள், தோட்டிச்சி சோனையம்மாவின் பேத்தி, வயசுக்கு வந்திருப்பாளா இருக்கும் என்ற என் அம்மா கரிசனையில் விசாரித்ததில் பதினோரு வயதே என்றாள்.

காலையில இருந்து ஒன்னும் தின்னாம கிடக்கா முட்டாச்சிறுக்கி! என் கூட வந்தா இங்க கொடுக்கிற பழையதுல, ஏதாவது பலகாரம் கிடைக்காதான்னு தான் என்கூடவே ஒட்டிட்டு இருக்கா... எம்மா நேத்து வச்ச இட்லி தோச ஏதாவது இருந்தா கொடும்மா இவளுக்கு.. கொஞ்சம் பூசனம் பிடித்திருந்தாலும் பரவாயில்ல என்றாள்... காலையில பள்ளிக்கூடம் கிளம்பும் போது பொங்கல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த என் தம்பி முழுத் தட்டையும் அவளுக்கு தூக்கி நீட்டினான். அவள் தயங்கிக்கொண்டே கதவோரம் நின்றாள். சோனையம்மாவும் அவள் போலவே என் அம்மா முகத்தையும், தம்பியின் தட்டில் இருந்த பொங்கலையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். பேத்திக்கும் சோனையம்மாளுக்கும் பெரிதாக ஒரு வித்யாசம் இருந்த மாதிரி தெரியலை. அவ பேத்திக்கு இட்லி மாதிரி இவளுக்கு என்னவோ?

அம்மா, இரு நான் கொண்டு வர்ரேன் என்று உள்ளே போய் கொஞ்சம் பொங்கலும், நேற்றைக்கு மிச்சமாகிப்போன இட்லியும் கொண்டு வந்து அவள் வைத்திருந்த ஒரு பழைய அலுமினியப் பாத்திரத்தில் பட்டு விடாமல் போட்டாள். சோனையம்மாவின் பேத்தி பொங்கலை விட்டு நேற்றைய இட்லியை எடுத்துக் கொண்டாள். இட்லினா தான் அழையுறா தாயி! பொங்கலை நானே எடுத்துக்குறேன் என்றவள். எதிர் வீட்டில் கொடுத்த பழைய சாதமும், கத்திரிக்காய் புளிக்குழம்பும் இருந்த இடத்திலேயே, பொங்கலையும் கொட்டினாள். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒரு புதுவிதமான வாசனையுடன் இருந்தது, எல்லாவற்றையும் ஏந்தி நின்றது பசி என்ற அந்த சொட்டையான அலுமினிய பாத்திரம்.

சோனையம்மாவின் பேத்தி போலவே நாங்க காம்பவுண்டு வீட்ட விட்டு காலி பண்ணிட்டு சொந்த வீட்டுக்கு வந்த போது அங்கு அம்மி கொத்த வந்தவள் இருந்தாள். சோனையம்மாவின் பேத்தி தான் என்று அம்மாவுக்கு சந்தேகம், ஏன்டீ! நீ சோனையம்மா பேத்தி வசந்தா தானே, அவ பேரு வசந்தான்னு அப்ப தான் எனக்குத் தெரிஞ்சது. அவளின் அம்மா, அவ்வா போல என் அம்மாவை அம்மாவென்றோ, தாயி என்றோ அழைக்கவில்லை. ஆமாக்கா! நீங்க குமாரியக்கா தானேன்னு அவளும் வாய் நிறைய பல்லாய் கேட்டாள். இதான் பெரியண்ணனா, என்று என்னைப் பார்த்தும் சிரித்தாள். என்னடீ! அம்மிக் கொத்த கிளம்பிட்ட! உங்க அவ்வா, அம்மா பாத்த வேலைய பாத்தா, ஒரு இடத்தில இருந்து வேலை பார்க்கலாம், கொஞ்சம் காசு கிடைக்கும். வயித்து நோவு இல்லாம வேளாவேளைக்கு சாப்பாடும் கிடைக்கும், அத விட்டுட்டு இப்படி வேகாத வெயில்ல பிள்ளையையும் தூக்கிட்டு என்று கேட்க. யக்கா! எங்க அவ்வாவும், ஆத்தாவும் பீ அள்ளுனது போதும்னு தான்க்கா நான் இந்த வேலை செஞ்சுட்டு இருக்கேன். அது கூட இப்போ கொஞ்ச நாளாதான். இல்லேன்னா வீட்ல தான் இருப்பேன்.

அவள் புருஷன்காரன் கார்ப்பரேஷனில் எண்ணம்மாரா வேலை பாக்குறானாம், இந்த பிள்ள பிறந்த ஒரு வருஷம் கூட ஆகலை, சரியா கொஞ்சினது கூட கிடையாது, கார்ப்பரேஷன் ஆபிஸில் தண்ணி வைக்கிற ஒரு முண்டச்சியோட சேந்துக்கிட்டு, வீட்டுக்கே வர்றது இல்லை. ஆறேழு மாசமாச்சு, அதான் எங்க ரெண்டு பேருக்காவது கஞ்சிக்கு ஆகுமேன்னு இத பண்ணிக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாள்லயே தாமரை போடுறது, யானை போடுறது, பெரிய கோலமா போடுறது கத்துக்கிட்டேன். ரெண்டு மூனு தடவை சுத்தியல கொண்டு கையில போட்டுக்கிட்டேன். இப்போ நல்லா பழகிப்போச்சு, சைக்கிள் கத்துக்குற போது விழுகிற மாதிரிதான் என்னக்கா! நான் சொல்றது சரிதானேன்னு பதிலுக்கு காத்திருக்காமல். முதுகு மூட்டையில் தொங்கிய பிள்ளையை லாவகமாக இறக்கினாள். அது ஏதோ பேசிக்கிட்டு கைய நீட்டிக்கிட்டே வீட்டின் முன் உள்ள கேட்டைப் பிடிச்சுட்டு ஆட்டிக்கிட்டு இருந்தது. டேய்! அங்கெலாம போகக் கூடாது! இங்க வா! என்று கையப்பிடித்து இழுத்தாள், அது அழுது கொண்டே தரையில் விழுந்தது.

அம்மா இருவருக்கும் சேர்த்து உள்ளே இருந்து சாப்பாடு கொண்டு வந்தாள். அன்று செய்த சோற்றையும், கத்திரிக்கா, மொச்சக்கொட்ட, எலும்பு போட்டு வச்ச குழம்பையும் கொண்டு வந்து அவள் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டாள். என்னக்கா வாசமே ஜம்முன்னு இருக்கு, கறிக்குழம்பாக்கா! அம்மி கொத்திட்டு சாப்பாடு வாங்கிக்கிறேனே என்றாள். அம்மா, பரவாயில்லை அம்மிக் கொத்த இன்னொரு நாள் வா, என் வீட்டுக்காரரு வர்ற நேரமாச்சு என்றாள். கையில் இருந்த இரண்டு ரூபாயும் கொடுத்து, பிள்ளையை தொடாமல் கொஞ்சி அனுப்பி வைத்தாள். கஷ்டப் படுறா பாவம், அந்த குழந்த என்ன லட்சனமா இருக்குல்ல, இந்த பிள்ளய விட்டுட்டு போயிட்டானே அவங்க அப்பன். அவளுக்கு அம்மிக்கொத்தாமல், காசு கொடுத்தது ஏன் என்று கேட்ட போது, அம்மிக் கொத்த அவ வீட்டுக்குள்ள வரனும்டா அதான் அப்பா வரப் போறார்னு சொல்லி தட்டி கழிச்சுட்டேன் என்றாள். எனக்கு அம்மா மேல் கோபம் வந்தது.

விரியச் சுருங்கும் உறவு...

மூனுமுறை சொல்லியாச்சு
தைமாசம் நாலாம் தேதி
அவுக போன திதி

வந்து திவசம் பண்ண
வணங்கவில்லை பயகளுக்கு

அக்கர சீமை போயி
ஆண்ட துரைமாருங்க
எப்போது வருவாய்ங்கன்னு
வாசலெங்கும், வழியெங்கும்
கண் நட்டு
காத்திருக்கு  தும்பைபூ
பூத்த காடு!

உசுரோட இருக்கும்போதே,
வராதவனுங்க
செத்தா திதியாவது திவசமாது!

அனாதப் பொனமாத்தான்
அவுசாரி நான் போவேன்!

உசுர பீய்ச்சிக் குடுத்த
பாசப் பெருமுலைச்சி
உள்ளுக்குள்ளே
அழுத மிச்சம்
ஊரெங்கும் கேவலாச்சு!

Friday, December 18, 2009

கேள்விகளின் பதிலி

(1 )
அலுவலகத்திற்கு விரையும்
வழியில்
காரை மறித்து காசு கேட்கும்
திருநங்கை இரண்டு நாட்களாக
காணவில்லை
மூன்றாம் நாளில்
ஒரு நாளிதழின்
கழிவிரக்கக் கோடியில்
தனியார் பேரூந்து மோதி
”அழகிய இளம் பெண் மரணம்”
பெட்டிச்செய்தியில் சிரித்த
அவளுக்கு காரணம் இருக்குதானே!

(2 )

தன் பிரிய தோழியிடம்
என்னை அறிமுகப்படுத்தினாள்
’என்னோட அப்பா’ என்று
கேள்வியாய் பார்த்தவளை
ஆமாம் என்று
என் கையைப் பிடித்துக்கொண்டாள்

இவளை என் மணைவிக்கு
எப்படி அறிமுகப்படுத்துவது?
காதலின் மிச்சமென்றா?

(3)

மழை முனைப்புடன்
தொடர் கம்பிகளாய் விழ
எத்தனிக்கிறது
ஒவ்வொரு முறையும்

வீழும் மழையின்
கம்பிச் சரடுகளை பிடித்து
ஏற முற்படுகிறேன்
அறுந்து  விழுகிறது
ஒவ்வொரு முறையும்

அயர்ந்து போய்
வேடிக்கை பார்ப்பதோடு
நிறுத்திக் கொள்கிறேன்

முடிவிலி..

இந்த முறை
தூக்கில் தொங்குவது
என்று உறுதி செய்து கொண்டேன்

தங்கையா நாடார் கடையில்
இரண்டு வகை கயிற்றில்
விலை அதிகமுள்ள உறுதியான
கயிற்றை வாங்க நினைத்தேன்

என்னத்துக்கு அண்ணாச்சி!
காரணம் சொன்னா
அதுக்கேத்த பொருளா தாரேன்!

என் பளுவைத் தாங்கனும்
அதுக்கேத்த மாதிரி ஒன்னு கொடுங்க!

ஊஞ்சல் கட்டி ஆட போகுதீகளா?
ஆமா! என்று
அவருக்கு காரணம் புரியாததை
நினைத்து சிரித்துக் கொண்டேன்

முடி போடுவது எப்படி என்று
யாரிடம் கேட்பது என்று
யோசித்து ரகசிய பகிர்வு
உசிதம் இல்லை என்று
நானே முயன்றேன், பிடிபட்டு விட்டது

அய்யய்யே! என்ன
பாத்துக்கிட்டு   இருக்கீங்க!
தொட்டில்லையே ஒன்னுக்கு
போய்ட்டான்! தூக்குங்க!
என்று கை வேலையாய் இருந்தவள்
கத்தினாள்

தொட்டிலைத் தாங்கும்
கயிற்றின் இரு நுனிகளும்
முருகனும், வள்ளியுமாய்
என்னை பார்த்து சிரித்தன!
இப்போது தூக்க மாத்திரைகள்
சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்!

Tuesday, December 01, 2009

மூன்று கவிதைகள் - ஒரு மீள்பதிவு

 நவீன விருட்சத்தில் பிரசுரமான கவிதைகள்:

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை
திருடி
என் அலமாரிக்குள்
ஒளித்து வைக்கிறேன்

காணாது
தவிக்கும்
கடவுள்
மூளைக்குள்
விஷமேறி துடிக்கிறார்

ஜோதிமயமான
கடவுள்
காற்றுவெளியில்
சில்லிட்டுப்போய்
கருத்துப்போனார்

ஒளித்து வைத்த
கடவுளின்
கனவை
எடுத்துப்பார்க்கிறேன்

கடவுளின்
கடைவாயில்
பற்கள் முளைத்து
கோரக்குருதி
வழிகிறது

மீண்டும்
அலமாரிக்குள்
வைத்து
பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)

பத்து
வருடங்களுக்குப் பிறகு
கடிதம்
வந்தது
உன்னிடம் இருந்து
நிறைய
எழுதியிருந்தாய்...

நீயும் நானும்
விளையாடிய,
கதை பேசிய, கனவு விதைத்த
பொழுதுகளை...

 நாம் தொடர்பற்று
இருந்த
நாட்களின்
சிறு குறிப்பும்
இல்லை
உன் கடிதத்தில்

மடித்து வைக்கிறேன்
உனக்கு பதிலாய்
நம் பழங்கதைகள் பேச...


கவிதை (3)

சொந்தமாய்
வீடு வாங்கி
குடிபுகுந்தேன்
ஒரு நகர அடுக்ககத்தில்..!

அப்பா
வந்திருந்தார் வீட்டுக்கு...
என் மகனிடம்
உங்க அப்பா
சின்ன குழந்தையாய்
இருந்த போது
சூரிய, சந்திர,
நட்சத்திரங்களுடன்
வானம் இருந்தது...
புழுதி அப்பிய
மண்ணும் இருந்தது...
மழை நனைக்கும்
தாழ்வாரம்
இருந்தது...

ஆனால்
சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு
சொந்த வீடு
இருக்கிறது....

பொய்யாய்
பழங்கதையாய்....