Tuesday, December 13, 2011

புனரபி ஜனனம்...


இந்த கனவு என்னை துரத்துகிறதுகொடுங்கனவு என்பார்களே அது போல ஒரு கனவு என்னை துரத்துகிறது. துரத்துகிறது என்று ஏன் சொல்ல வேண்டும் என்றால், அதுக்கு காரணம் இருக்கிறது. கனவில் இருந்து விழித்து திரும்பவும் தூக்கத்தை தொடர கனவும் தொடர்கிறது, விட்ட இடத்தில் இருந்து. அடுத்த நாளும் தொடர்கிறது சிலசமயம். ஆனால் கையில் ஆயுதம் வைத்து தாக்குபவர்களும், அவர்கள் கையில் பிடித்திருக்கும் ஆயுதங்கள் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தாக்குதல் நிற்கவில்லை. சரமாரியான வெட்டோ அல்லது இதுவரை பார்த்திராத ஆயுதங்கள் மூலம் குத்தியோ, அறுத்தோ என்னை கொல்ல முயன்று கொண்டே இருக்கிறார்கள்இறந்துவிட்டாலாவது நிம்மதியாய் இருக்கலாம் என்று பார்த்தால், இறந்து போகாமல் வலி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கையிலே கோடரி வைத்திருந்தவன் குறிபார்த்து நெஞ்சில் வீச திடுக்கென்று விழித்துக் கொண்டேன்அதிகம் வியர்த்திருந்தது, குளிரூட்டப்பட்ட அறையாய் இருந்தும், அவளுக்கு குளிரவே, இரவில் அணைத்துவிட்டது ஞாபகம் வந்ததுபடுக்கையின் இடதுபுறத்தில் இருந்த செல்போனில் மணி பார்த்தபோது ஐந்து மணி. விழித்துக் கொண்ட பின்பு தான் ஓட்டல் அறையில் இருக்கிறோம் என்ற நினைப்பு வந்தது. கதவின் இடுக்கு வழி நேற்றைய செய்திகளை தினிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம், என்ன செய்வது அதுவரை என்று தெரியவில்லை.  சுற்றும்முற்றும் பார்த்தேன். வெங்கட்சாமி ரோட்டில் இருக்கும் தியாகு லெண்டிங்க் லைப்ரரியில் இருந்து பழைய விலைக்கு வாங்கி வந்த புத்தகங்கள் அடுக்கியிருந்தது அந்த டீப்பாயில்.  அதைப் படிக்கலாம் என்று தோன்றியவுடன், படுக்கையைவிட்டு எழுந்து டீப்பாயில் இருந்த முதல் புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தில் ஏனோ மனசு ஒட்டவில்லை.

ஓட்டல் அறையின் விஸ்தாரம் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.  குறைந்த வாடகையில் கிடைக்கும் ஓட்டல் அறைகளில் இருக்கும் இறுக்கம் இந்த ஓட்டலின் அறைகளில் இல்லை.  நாப்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் அந்த ஓட்டலின், கட்டில் மற்றும் இதர பர்னிச்சர்களில் ஒரு பழமை ஒட்டிக் கொண்டு இருக்கும்தேக்கு மரத்திலோ அல்லது ரோஸ்வுட்டிலோ செய்யப்பட்டிருக்க வேண்டும்பழமைத்தூசியை அழுந்த துடைத்த துணி மாதிரி இருந்தது, அங்கு இனைக்கப்பட்டிருக்கும், கெய்சர், டெலிபோன், ப்ரிட்ஜ், டிவி மற்றும் வை.ஃபை வசதிகளும். பால்கனியின் தள்ளுகதவை திறந்த போது, கண்ணில் தெரியும் மேற்கு தொடர்ச்சி மலை நீள்கர்ப்ப சர்ப்பமென கிடந்தது மாதிரிபட்டது. கட்டடங்கள் பசுமையை தின்றிருந்தது, அனேக இடங்களில். ஆனாலும் அங்கங்கே பசுமை கொஞ்சம் மிச்சமிருந்தது.

எழுந்து கண்ணாடிக் கதவைத் தள்ளிய போது சில்லென்ற காற்று உடலைத் தொட, சிலிர்ப்பாய் இருந்தது. தடக்கென்று உரைத்துத் திரும்பியபோது தூங்கிக் கொண்டிருந்தாள் கொஞ்சமும் கலையாமல், இரவு வெகு நேரம் தூங்காமல் இருந்தவளின் கண்கள் மூடியிருந்தது ஆசுவாசமாய் இருந்தது. திரும்பவும் டீப்பாய்க்கு அருகே இருந்த சேரில் உட்கார்ந்து கொள்கிறேன்.  இங்கு உட்கார்ந்திருக்கையில், அவளையும் பார்க்க முடியும்.

கழுத்து வரை போர்த்து தூங்கும் அவளின் முடிக்கற்றைகளை கலைக்கும் மின் விசிறி காற்று, ப்யூலாவின் முக அழகை இன்னும் கூடுதலாக்கியது. யாராவது நம்புவார்களா என்று தெரியவில்லை, நாற்பது வயதில் இத்தனை அழகாய் இருக்கும் இவளின் வயது யாருக்கும் தெரிவதில்லை.  எத்தனை எதிர்ப்பை மீறி இவளை திருமணம் செய்தோம் என்று ஏனோ நினைவுக்கு வந்தது.  எதிர்ப்பு, என் வீட்டில் மட்டும் தான், அவர்களின் அப்பாவும் அம்மாவும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவளின் அண்ணன் கென்னி தான் உடனிருந்தான் கல்யாணத்தின் எல்லாக் காரியங்களிலும். கென்னிக்கு அப்போதே திருமணமாகி விட்டது, அவன் மனைவியுடன் ஹைதராபாத்தில் இருந்தான் அப்போது.  அதன் பிறகு அவன்  எங்களுடைய திருமணம் முடிந்து இரண்டாம் வருடத்திலேயே, கனடாவுக்கு இமிகிரேஷன் கிடைத்து குடும்பத்துடன் போய் செட்டில் ஆகி விட்டான். 

கதவின் அடியில் நியூஸ் பேப்பர் சொருகும் சத்தத்தில் யோசனை அறுபட்டது. கையில் பேப்பரை எடுத்தேன், இலவச இணைப்பாய் ராசிமலர் கீழே விழுந்தது. ராசி பலன் பார்க்க ஏனோ மனமில்லை. இன்றோடு இரண்டு வாரங்களாகி விட்டது இங்கு வந்து.  இங்கு தான் எப்போது கோயம்புத்தூர் வந்தாலும் தங்குவது என்றாலும், இத்தனை நாட்கள் தொடர்ந்து தங்கியதில்லை. ஓட்டலில் இருப்பவர்களுக்கு என்ன இத்தனை நாள் தங்குகிறார்கள் என்ற ஆச்சரியமாய்க் கூட இருக்கலாம், ஆனாலும் அங்கு வரும் சிப்பந்திகளும், பணியாளர்களும் அடிக்கடி வருவதால், சிநேஹமாகி விட்டார்கள்.  நாங்கள் வரும்போதெல்லாம் பிரத்யேக கவனிப்புகள். தங்கும் அறையில் வைத்திருந்த சிறு ஃப்ரிட்ஜில் எப்போதும் கொஞ்சம் பழங்கள் வைத்திருக்கிறார்கள். யாருக்கும் தொடர்ந்து இலவசமாய் வைப்பதில்லை. இது எங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை. உபசரிப்பின் அடையாளமாய் அல்லது ஒரு அங்கீகாரமாய் இருந்தது அவர்களின் கவனிப்பும், அன்பும்.

இந்த ஓட்டலில் இருக்கும் சிப்பந்திகளின் சீருடையும், சிரித்த முகமும் கூட ஒரு உபசாரத்தின் ஒரு அடையாளம் என்று எனக்குத் தோன்றும். அதிலும் முழுதாய் தலை நரைத்த ஒரு பெரியவர், என் மனைவியிடம் மிக வாஞ்சையாய் ஒரு மகள் போல நடத்துவது கூடுதல் ஒட்டுதலை ஏற்படுத்திவிட்டது.   எந்த காரணத்திற்கு வந்தோம், அது சம்பந்தமான கவலைகள் எதுவும் பெரிதாய் தோன்றாததற்கு இந்த விடுதியும், இந்த மனிதர்களும் ஒரு காரணம்.  

லேசாய் அசங்குகிறாள், படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை வைத்துவிட்டு, அவள் அருகே சென்று பார்க்கிறேன், மறுபடி உறக்கத்தில் விழுகிறாள்.  தூங்கட்டும், பரவாயில்லை என்று தோன்றியதுநேற்று இரவெல்லாம் அழுது கொண்டிருந்தாள், ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்த பேச்சு, வளர்ந்து கொடியென இறுக்கிவிட்டது. அதிகாலை தான் தூங்க ஆரம்பித்திருப்பாள்

நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வருவதற்கே சாயங்காலம் ஆகிவிட்டிருந்தது. டாக்டர் எழுதி கொடுத்த டெஸ்ட் எல்லாம் முடிப்பதற்கு. இன்று காலை திரும்பவும் பதினோரு மணிக்குச் செல்லவேண்டும். காரிலேயே கோயம்புத்தூர் வந்துவிட்டது வசதியாய் இருந்தது, ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதற்கு. சிகிச்சைக்கு வந்ததற்கான எந்தவித சாயலும் இல்லாது, சுற்றுலாப்பயணம் வந்தது மாதிரி இருக்கிறது நினைத்துப் பார்க்கும் போதுஅவளை அழைத்துக் கொண்டு மாலை வேளைகளில் நடப்பது ஒரு வாடிக்கையாகி விட்டது.

எப்போதும் உடன் நடக்கையில், வலது முழங்கைக்கு மேலே, முழுக்கையின் சட்டைக்குள்ளே கை நுழைத்து பிடித்துக் கொண்டு தான் நடப்பாள். சில கடைகளைக் கடக்கும் போது பிடித்திருந்த கையால் மெதுவாய் அழுத்துவாள். அதைத் தெரிந்து கொண்டு அவளை கடைக்கு அழைத்துச் செல்லும் போது அத்தனை சந்தோஷமாய் முகம் பார்த்து சிரிப்பாள். என் அம்மாவுக்கு புடவைகளின் மீது இருக்கும் ஈடுபாட்டை விட, இவளின் செருப்புகள் மீதான ஆர்வம் மிக அதிகம்

செருப்புக்கடையை பார்க்கும் போது மட்டும், தன்னிடம் இருக்கும்  ஏதோ ஒரு செருப்பு பெருவிரல் நுழையும் இடத்தை அழுத்துவதாகவோ அல்லது அதைப் போட்டு நடப்பதால், உள்ளங்கால் குதி வலிப்பதாகவோ சொல்வாள். எனக்கு அதை அனேக நேரங்களில் நினைவு படுத்தமுடிவதில்லை. அவளின் இருபது ஜோடி செருப்புக்களில் எதைச் சொல்கிறாள் என்று எப்படி கண்டுபிடிப்பது?. ஆனாலும் ஆமோதிப்பேன், வாங்கிவிடுவோம் மெட்ரோவில்இதுபோல செலவு செய்யும் போது, கிரடிட் கார்டு தான், தேய்ப்பது வழக்கம்.  கையில் வைத்திருந்த பணமெல்லாம் காலியாகி இருக்கும் பெரும்பாலான சமயங்களில். ஒண்ணாம் தேதி திரும்பிப் போய் வேலையை ஆரம்பித்தால் தான், கம்பெனியில் இருந்து பாதி சம்பளமாவது வரும்.

என்னுடைய கம்பெனியில் இத்தனை நாட்கள் லீவு கொடுப்பது பெரிய கொடுப்பினை என்று தோன்றியது. மேனேஜிங் டைரக்டருக்கும் இதே போல ஆறு வருடங்கள் குழந்தை இல்லாது போனதால், அவர் புரிந்து கொள்கிறார். சொல்லப்போனால், இது அவர் பரிந்துரை செய்த டாக்டரம்மா தான். கையில் எப்போதும் தூக்கிக் கொண்டே திரியும் லாப்டாப்பில் முடிந்த அளவு வேலைகளை முடித்துவிட்டாலும், ஒரு ஆள் அலுவலகத்திற்கு வரவில்லை என்பது மற்றவர்களுக்கு உறுத்தலாக இருக்கலாம். இருந்தும் வெளிப்படையாக யாரும் அதை ஒரு குறையாய் சொன்னதில்லை, கேட்டதில்லை.

ஆஸ்பத்திரிக்கு கிளம்ப வேண்டும், கெய்சர் ஆன் செய்து விட்டு, அவளுக்கு பிளாக் காஃபியும் எனக்கு, பாலுடன் காஃபியும் ஆர்டர் செய்தேன். காம்ப்ளிமெண்ட்ரி காலை உணவின் போது, காஃபி கிடைக்கும், ஆனால் கிளம்பும் நேரம் வரை போய் சாப்பிட முடியாது. அவளுக்கு எழுந்தவுடன் காஃபி வேண்டும். அதனால் எப்போதும் எழுந்தவுடன் காஃபி சொல்லிவிடுவது வழக்கமாகிவிட்டது.


ஆஸ்பத்திரியில் டாக்டர் எழுதி கொடுத்த டெஸ்ட் எல்லாம் செய்து முடித்து, ரிப்போர்ட் எல்லாம் வாங்கியாகி விட்டது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக, ரெக்ககான் இஞ்செக்ஷன் தொடையில் போட்டுக் கொண்டிருக்கிறாள் கருமுட்டை வளர்வதற்காக. இது போக டயமெட், இன்சுலின் மருந்துகளும் கருமுட்டை வளர்வதை ஊக்கப்படுத்த அல்லது உதவ. பாலி சிஸ்டிக் ஓவரியன் சீர்கேட்டினால், அவளுடைய கருமுட்டைகள் 10 மிமீ மேல் வளர்வது இல்லை.  அது குறைந்த்து 20 மிமீ வளர்ந்து, ரப்சர் ஆகும் போது தான், கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.  அதற்காக ஒவ்வொரு மாதமும், அவளின் மருந்தூக்க விடாய் காலத்தின் மூன்றாம் நாளிலிருந்து பத்து நாட்களுக்கு இஞ்செக்ஷன் போட வேண்டும். இஞ்செக்ஷனை விட கொடுமையானது, அந்த ஊக்க மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள். ஹார்மோனல் இம்பாலன்சினால் உடல் வீங்குவதும், முடி கொட்டுவதும் தவிர அவளின் ஹிஸ்டீரிகல் பிஹேவியர் பார்க்கும் போது குழந்தையே வேண்டாம் என்று தோன்றும்.  இத்தனை கஷ்டங்கள் இருந்தும் ஏதோ பெயரறியா ஒன்று எங்களை சிகிச்சை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே என்னுடைய விந்தை சேகரித்து வைத்திருக்கிறார்கள். அவளுடைய கருமுட்டை போதுமான அளவு வளர்ந்து ரப்சர் ஆகிற பட்சத்தில், விந்தை அவளுடைய கருப்பைக்குள் செலுத்திவிடுவார்கள். முப்பதில் இருந்து நாற்பது சதவிகிதம் இந்த முறையில் குழந்தை உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக மருத்துவர் சொல்லியிருந்தார்.  இது போல நிறைய பரிசோதனைகள் செய்தாயிற்று. செயற்கை முறை கருத்தரிப்பும் முயன்றாயிற்று. மருத்துவ கைங்கர்யங்கள் போக, மருத்துவரின் கைராசியும், தெரிந்த வட்டத்தில் கிடைத்த புள்ளிவிபரங்களும் கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்து புதுப்புது மருத்துவரை நாட வைக்கிறது. ஆனால் நிறைய மருத்துவர்களை இதே நம்பிக்கையுடன் பார்த்தாயிற்று, இந்த மருத்துவர் அதில்  ஐந்தாவது, இந்த பத்து வருட காலத்தில். ஒரு குழந்தைக்காக இத்தனை மெனக்கெட வேண்டுமா என்று அடிக்கடித் தோன்றும்.  போதும் இந்த அவஸ்தைகள் என்று தோன்றும். நம்பிக்கையின் கூர் மழுங்கும் வரை முயன்று கொண்டிருக்கிறோம், காயங்கள் தான் மிஞ்சுகிறது.

அழைப்பு மணி அடித்தது, அவள் தன்னை இப்போது முழுதும் போர்த்திக் கொண்டாள். திறந்தவனின் கையில், காஃபியும், பில்லும் இருந்த்து.  வந்தவன், பரிச்சய நிமித்தம், ‘பால் இன்னும் கொஞ்சம் வேணும்னா சொல்லுங்க சார், கொண்டு வரேன்!’ என்றான். கையெழுத்து போட்டுவிட்டு, அவனுக்கு பத்து ரூபாய் கொடுக்க சட்டையைத் துளாவினேன்.  அகப்பட்டதை கொடுத்து விட்டு கதவை மூடினேன். 

நிறைய செலவாகி விட்டது இந்தமுறை. கையில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கி விட்டது.  ஹோட்டல் பில்லுக்கு, கிரெடிட் கார்டை தான் தேய்க்க வேண்டும்.   லீவ் பேலன்ஸ் இல்லாததால், இந்த மாதம் பாதி சம்பளம் தான் வரும். அவள் வரும்போது, தன் அம்மாவின் தங்கச் சங்கிலியை கொண்டு வந்திருந்தாள். இங்கு தெரிந்தவர் ஒருவர் தெலுங்கு வீதியில் சிலுவானக்கடை வைத்திருக்கிறார், அவரிடம் விற்றுவிடலாம். ஏற்கனவே அவரிடம் விற்றிருப்பதால், பழக்கம் உண்டு. இன்னும் என்ன மிச்சமிருக்கு விற்பதற்கு என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. டாக்டர் இன்னும் முடிவை சொல்லாதது மேலும் வருத்தமளித்தது. 

பணம் பற்றிய கவலைகளை அவளிடம் எப்போதும் சொல்வதில்லை, உறங்கும் போது அவளுக்கு இருக்கும் அந்த அமைதி விழிப்பிலும் இருக்க வேண்டும் என்று மனசு வேண்டிக்கொள்கிறது.  வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள், அவள் அப்பாவைப் போல தேவையானதை எல்லாம் கொடுக்க முடியாமல் போனாலும், ஓரளவு வசதியாகத்தான் வைத்திருக்கிறேன். அவளுக்கான வசதிகளில் பெரிதாய் குறைகள் இல்லை.

சந்துரு! என்ற குரலின்  தொடுதலில் திரும்பிய போது சிரித்து கொண்டே கையை நீட்டினாள். 

படுத்த வாக்கிலேயே கட்டிக்கொள்ள வேண்டும், அதற்கு பிறகு தான் அவளை தூக்க வேண்டும் அணைத்தபடியே!. குழந்தை! என்று தோன்றும்.  கட்டிலின்  ஓரத்தில் அமர்ந்து  முதுகை  ஒருபக்கமாய் வளைத்து, சிரமமான அணைப்பு அது, ஆனாலும் மெத்தென  மேலே பட அவளுக்கு பிடித்தமாய் இருக்கலாம்.  எழுந்தவுடன், அவளுக்கு தைரோனார்ம் கொடுக்க வேண்டும், வெறும் வயிற்றில்.  சைட் டேபிளில் இருந்த மாத்திரைப் பாட்டிலை எடுத்து அவளுக்கு இரண்டு மாத்திரைகளை எடுத்து தண்ணீரையும் கொடுத்தேன்.  மாத்திரை முடித்த்தும், கருப்பு காஃபியும் குடித்தாள், பால் சேர்ப்பதே இல்லை அவள்.  பாலுக்காக பசுக்களும் எருமைகளும் வதைக்கப்படுவதால் நிறுத்திவிட்டேன் என்பாள்.  சீஸ் எதிலிருந்து வருகிறது என்று கேட்டால், கோபம் வந்துவிடும். 

“விமன் நீட் கால்சியம், யூ நோ? தட் டூ அட் தர் ஃபாட்டீஸ்” என்று பதில் சொல்வாள். அது ஒரு சின்ன சண்டையாய் மாறிவிடும் அபாயம் இருப்பதால், அதை வளர்த்து வியாக்யானங்கள் கொடுப்பதில்லை.

குளித்து தயாராகி கிளம்பிவிட்டோம், விடுதியின் இரண்டாம் தளத்தில் இருந்த உணவகத்தில் போய் சிற்றுண்டியை முடித்தாயிற்று.  இங்கிருந்து அவினாசி ரோட்டில் இருக்கும் ஆஸ்பத்திரியை அடைய அரைமணி நேரம் ஆகிவிடும்.  போக்குவரத்து நெரிசலில் கொஞ்சம் தாமதம் அடைந்தாலும் ஒன்பது மணிக்குப் போய்விடலாம்.  பார்க்கிங் ஏரியாவில் இருந்த செக்யூரிட்டி, காரை கழுவி வைத்திருந்தான்.  பளபளவென்று இருந்த்து. வைப்பர்கள் தூக்கியபடியே இருந்தது. அதை இறக்கிவிட்டு, செக்யூரிட்டிக்கு ஒரு அம்பது ரூபாயைக் கொடுத்ததும், சந்தோஷமாய் வாங்கிக் கொண்டு கதவைத் திறந்து கொடுத்தான்.  போக்குவரத்தையும் எங்களுக்காக கொஞ்சம் ஒழுங்கு செய்தான். 

காரைக் கிளப்பிக் கொண்டு, அவினாசி ரோட்டில் விரைந்த போது என் செல்போன் அடித்த்து.  அவளிடம் கொடுக்காமல், ஓரமாய் வண்டியை நிறுத்தி பேசிய போது வந்த தகவல், பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. நான் போனில் பேசியவரிடம் மேலும் அதிர்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்க, வார்த்தைகளில் இருந்து மொத்தமும் புரியாவிட்டாலும், முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவளுக்கு ஏதோ துக்க செய்தி தான் என்று தெரிந்திருக்கும்.  ஆனாலும் நான் பேசிமுடிகிறவரை காத்துக் கொண்டிருந்தாள். அவர் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, இதை எப்படி அவளிடம் சொல்வது என்று குழப்பமாய் இருந்தது.  அவள் என்னை கேள்வியாய்ப் பார்த்தாள். ஒன்றும் சொல்லாமலும், காரை கிளப்பாமலும் இருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.

“என்னாச்சுப்பா? யாரு போன்ல?” என்றாள் குரலில் இருந்த அதிர்வில் அவளின் பயம் தெரிந்தது எனக்கு. 

‘அருளப்பன் அங்கிள்!’ என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் சொல்லமுடியாமல் எனக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.

“அருளப்பனா? கனடாவுல இருந்தா?”  அவளுக்கு பயம் வரத் தொடங்கியிருக்க வேண்டும். 

அருளப்பன் பாஸ்டர், கனடாவில் ஜீசஸ் கால்ஸில் வேலை செய்கிறார்.  அவளுடைய அண்ணனின் வீட்டிற்கு அருகில் இருப்பவர்.  தமிழ் மக்கள், அதிலும் கிறித்துவர்கள் என்பதால் அதிக நெருக்கமுள்ளது இருவரின் குடும்பங்களுக்கும்.  அவர் இது போல எங்களுக்கு போன் செய்கிறவர் இல்லை.  மெயிலில் விசாரிப்பதோடு சரி. முதல்முறையாக அதுவும் இது போல அகால நேரத்தில் (கனடாவில்) போன் வருவது தான், அவளின் பயத்துக்கான காரணம்.

‘கென்னி இறந்துட்டானாம், ப்யூலா!’ என்று அவளின் கையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டேன். அவர்களுடைய அப்பாவும், அம்மாவும் பணி நிமித்தமாய் ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் சென்னையிலேயே வீடெடுத்து படித்து வந்தனர். அதனால், பெற்றோர்களை விட இருவருக்கும் ஒருவரை ஒருவர் அத்தனை இஷ்டம்.  அத்தனை அதிகமாய் நேசித்தார்கள் பரஸ்பரம். அவன் இறந்த்து, ப்யூலாவுக்கு  ஒரு பெரிய அதிர்ச்சியான விஷயம் தான்.

எப்படி தாங்கப்போகிறாள்? அதுவும் இன்றைக்கு, அவளின் கருமுட்டை வளர்ந்திருக்குமேயானால், மேல் சிகிச்சைக்கு அவள் அனுமதிக்கப்படவேண்டும்.  மனதளவில் அதிர்வாயிருப்பவளின் உடல் மாற்றங்களில், இந்த சிகிச்சை பலனில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று எனக்கு குழப்பமாய் இருந்தது.

“என்னப்பா சொல்றீங்க? கென்னி எப்படிப்பா செத்துப்போவான்?” என்று அழுகையின் ஊடே கேட்டாள்.

‘சிவியர் பேக் பெய்ன் வந்திருக்குண்ணு சொல்லியிருக்கான்’, முதுகுல ஏதோ பெய்ன் பாம் தடவி விட்டிருக்கா, மார்த்தா! குப்புறப்படுத்திருக்கான். திரும்பவும் எழுந்திருக்கலை போல. அன்கான்சியஸ் ஆனவுடன், மார்த்தா 911 க்கு போன் செய்திருக்கா, சிபிஆர் செய்யச் சொல்லி அட்வைஸ் பண்ணி இருக்காங்க, அவளும் ஏதோ முயற்சி செய்திருக்கா ஆனா பிரயோஜனமில்லை, ஆம்புலன்ஸ் வருவதற்குள் இறந்துட்டானாம் ப்யூலா!’ என்று சொல்லி முடித்தேன்.

கண்களில் நீர் வழியக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஏதோ முடிவுக்கு வந்தவளாய்,

“வாங்க ஆஸ்பத்திரிக்கு போகலாம், இந்தமுறை கண்டிப்பா நமக்கு ஆண் குழந்தை பிறக்கும்பா!” என்றாள்
Wednesday, December 07, 2011

தொட்டி விருட்சம்...


யாரையோ தேடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது, திண்ணையில் அமர்ந்து கொண்டு ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருந்த பொன்னுத்தாயைப் பார்த்துக் கொண்டிருந்த போதுஇது போல ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் அல்ல, இவள். எப்போதும் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருப்பவளுக்கு என்ன ஆகிவிட்டது இப்போதெல்லாம். என்னவாய் இருக்கும் என்று பட்டாசாலில் இருந்த கோனேரிக்குத் தெரியவில்லைகூப்பிடலாமா என்று யோசித்தவர், வேண்டாமென்று தனக்குத்தானே தலையை பலமாய் ஆட்டிக் கொண்டார். கடையிலிருந்து வந்ததில் இருந்து அவள், அவரை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. கொஞ்சம் உற்று நோக்கியதில் அவள் யாருடனோ பேசுவது போலவும் தோன்றியதுகைகளை அசைத்தவாறே அவள் பேசும்போது, மொழி பரிச்சயம் இல்லாதவனுக்கும் புரிந்துவிடும். ஆனால் கைகளை திண்ணையில் ஊன்றியபடியே அவள் வாய் மட்டும் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது.

பட்டாசாலில் இருந்து எழுந்து வந்தவர், வாசலில் வந்து நின்று தெரு முழுக்க நோட்டமிட்டார். யாரும் தட்டுப்படவில்லை. எதிர் வீட்டு ஜன்னலும் மூடியிருந்தது. இப்போது அவள் பேசுவது போலவும் இருந்தது, ஆனால் என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை. அப்போதும் பொன்னுத்தாய் கவனித்ததாய் தெரியவில்லை. வாசக்காலிலேயே நின்றவர், அவளைக் கவனிக்காதது போல, தொண்டையைச் செருமினார். பொன்னுத்தாயிடம் இருந்து ஒரு அசைவில்லை, ஏதோ திக்கில் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்தாள். யசோதை என்று அவளுடைய அக்காவின் பெயர் அவளின் ஏகாந்த சம்பாஷனையின் ஊடே காதில் விழுந்தமாதிரி இருந்தது. யசோதையைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  சுபத்ரா இங்கு வந்துவிட்டால், ஓரளவு சரியாகிவிடுவாள் என்று தோன்றியது.  எப்போதும் இப்படி இருப்பவள் இல்லை, கடையில் இருந்து வந்ததும், என்ன வேலையில் இருந்தாலும், அதன் மிச்சத்துடனே வந்து என்ன ஆச்சு, வியாபாரம் எப்படி என்று கேட்பவள், இப்படி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

கோனேரி பித்தளை பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். அவரின் பாத்திரக்கடை, புதுமண்டபத்தில் இருக்கிறது.  மதுரையை சுற்றியிருக்கும் பட்டறைகளில் இருந்து பித்தளைப் பாத்திரங்களும், எவர்சில்வர் பாத்திரங்களும், மொத்தமாய் கொள்முதல் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.  பித்தளை விளக்குகள் நாச்சியார் கோயிலில் இருந்தும், அரியக்குடியில் இருந்து யானை விளக்குகள் மற்றும் சிறு உலோகச்சிலைகளும் வாங்கி விற்பனை செய்வதும் உண்டு.  மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், விளக்குகளிலும், சின்ன உலோகச்சிலைகளிலும் அதிகம் வாங்கிச் செல்வது உண்டு.  எவர்சில்வர் சும்மா பேருக்கு தான், பெரும்பாலும், அண்டாக்களும், சருவச்சட்டிகளும், சொம்புகளும், தாம்பாளங்களும் அடுக்கியது அடுக்கிய படியே இருக்கும்.  அவருடைய அப்பா காலத்தில் இருந்து இதே வியாபாரம் தான். அவர்களின் உறவுக்காரர்களில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் ரொம்பவும் கம்மி.


பொன்னுத்தாயி, கோனேரியின் தாய்மாமன் மகள். கோனேரியை விட பத்து வயது சின்னவள். கோனேரியின் உயர்ததிற்கும், உடம்பிற்கும், அவள் சித்துப் பெண் போல இருப்பாள்.  மாநிறமாய் இருந்தாலும், அவளின் மூக்குத்திப் பொட்டும், கண்களும் அவள் முகத்தில் அத்தனை கவர்ச்சியைக் கொடுத்திருந்தது. வாசலில் உட்கார்ந்திருந்தவள் சரியாக தலைவாராது, புடவைத்தலைப்பையும் சரியாகப் போடாது உட்கார்ந்திருப்பது கோனேரிக்கு ஒரு பயத்தைக் கொடுத்தது.  எங்கோ ஒரு திசையில் வெறித்தபடி, ஏதோ சிந்தனை வசப்பட்டது மாதிரி, எதையோ பறிகொடுத்தவள் மாதிரி, தனக்குத் தானே பேசிக்கொள்வது எல்லாம் மிகச்சமீபத்தில் தான்.    யசோதை இறந்த இந்த இரண்டு மாதங்களில் தான் இது போல இருக்கிறாளோ என்று யோசித்த போது, அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.

யசோதை பொன்னுத்தாயின் மூத்த சகோதரி. யசோதையிடம் அத்தனை ப்ரியமாய், ஒட்டுதலாய் இருப்பவள். அக்கா, தங்கை என்பது போலவே இருக்காது. சிநேகிதக்காரிகள் போலதான் இருக்கும் அவர்கள் பேசுகிறதும், எதற்கெடுத்தாலும் சிரிக்கிறதும். யசோதை, பொன்னுத்தாயியை விட நிறமாய், உயரமாய் இருப்பாள். கோனேரியின் தோளைத்தாண்டி காதுவரை வளர்த்தி அவள்.


யசோதை மதுரைக்கு வந்து தங்கும் போதெல்லாம் சிங்காரித்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் இருவரும், கோயிலுக்கும், பஜாருக்கும். அப்படியே கடைப்பக்கமும் வந்துவிட்டு, கோனேரியுடனே கிளம்பி, மாடர்ன் ரெஸ்டாரண்டில் தோசை காபி என்று டிபன் வாங்கிக் கொடுத்து அனுப்பி விடுவார். 

யசோதை இல்லாத சமயங்களில், பொன்னுத்தாய் தனியாக எங்கும் போவது இல்லை.  அவள் இறந்தது பெரிய இழப்பு தான் என்றாலும், அது பொன்னுத்தாயிக்கு இவ்வளவு பெரிய மனச்சிக்கலைக் கொடுக்கும் என்று அவர் நினைத்துக் கூட பார்த்ததில்லை. பொதுவாகவே மனதில் தோன்றுவதை பேசிவிடுபவள் தான். சின்ன சின்ன பொய்களுக்குக் கூட அதிகமாய் கோவித்து கொள்வாள்.  இது போல மனதுக்குள்ளேயே சந்தோஷத்தையோ, துக்கத்தையோ வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. குழந்தையில்லை என்ற பெருங்கவலை ஒன்று தான் அவள் மனதை அழுத்தும் விஷயம் கோனேரிக்கு தெரிந்து.

கல்யாணம் ஆகி பத்து வருடங்களுக்கு மேலாக குழந்தைகளில்லாத கோனேரி, பொன்னுத்தாய் தம்பதிகளுக்கு, யசோதையின் குழந்தைகளே, அவர்கள் குழந்தைகள். நிறைய இடங்களில் குழந்தைப் பேற்றுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்தும் பலனில்லை. அதிலும் கோனேரிக்கு பிரச்னை இல்லை கோயம்புத்தூர் டாக்டர் சொல்லிவிட, அதுவே பொன்னுத்தாயிக்கு பெரிய கவலையாய் இருந்தது. இருந்தாலும், யசோதையின் குழந்தைகளை பார்த்துக் கொள்வதில் அந்த கவலைகளை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்திருந்தாள்.

பண்டிகைக் காலங்களில் எல்லோரையும் மதுரைக்கு வரச்சொல்லி அவர்களுடன் விசேஷ நாட்களைக் கொண்டாடுவதில் தான் விருப்பம் அவளுக்கு. கோனேரியிடம் வற்புறுத்தி அவர்களுக்கு புதுத்துணிகள் வாங்கிக் கொடுப்பாள்.  அதிலும் அவளுக்கு, கடைசியாய் பிறந்த பெண் குழந்தை சுபத்ரா என்றால் அத்தனைப் ப்ரியம் அவளுக்கு.


சுபத்ராவும் சிறு குழந்தையாய் இருந்ததில் இருந்து ஒட்டிக் கொண்டாள் இருவரிடமும். ஜென்ம ஜென்மமாய் உறவில் இருந்தவள் மாதிரி உருகுவாள் பொன்னுத்தாய். கோனேரிக்கும் சுபத்ராவின் மீது தனியான வாஞ்சை உண்டு, ஆனால் பொன்னுத்தாயிடம் பிரத்யேகமாக அதைப்பற்றி சொல்வதோ அல்லது பேசுவதோ இல்லை, அவளை அது காயப்படுத்திவிடலாம் என்று நினைத்துக் கொள்வார்.

சுபத்ரா பிறந்து கொஞ்ச நாட்களிலேயே, யசோதையின் கணவர் இறந்துவிட்டார்.  அவர் கொட்டாம்பட்டியிலேயே சிலம்பம் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடம் வைத்திருந்தார் அப்போது.  அது போக கறவை மாடுகளும், சொந்த வீடும்.  வருமானத்துக்கொன்றும் குறைவில்லை.  

முதல் இரண்டும் ஆண் குழந்தைகளாய் போய்விட, பெண் குழந்தை ஆசை யசோதைக்கு ரொம்ப காலத்திற்கு இருந்தது. பத்து வருஷங்களுக்கு பிறகு சுபத்ரா பிறந்ததில் அத்தனை சந்தோஷம்.

“இப்பதான் பவுனு, வீடே நிறஞ்ச மாதிரி இருக்கு!” என்று யசோதா பொன்னுத்தாயிடம் சொன்னாள். அப்படிச்சொன்னவள் தான், அவளுடைய கணவர் இறந்து ஒரு வருஷத்திற்குள்ளாகவே சுபத்ராவை கொண்டு வந்து பொன்னுத்தாயிடம் கொடுத்துவிட்டாள்.

“வளர்ற குழந்தைக்கு அப்பாவும் அம்மாவும் வேணும் பவுனு!, நீங்க ரெண்டு பேரும் இருக்கையில, அவ இங்க வளரட்டும், அது தான் சரி!” என்று சுபத்ராவை இடுப்பில் இருந்து, கோனேரியின் தோளுக்கு மாற்றினாள். 

யசோதை, பொன்னுத்தாயின் கண்களுக்கு ஒரு தேவதையாய் தெரிந்தாள். யசோதையின் மேல் அவளுக்கு பிரியமும், மதிப்பும் பன்மடங்கானது. அது அவளை விழுந்து விழுந்து உபசரிப்பதிலேயே தெரியும்.  கோனேரிக்கு, பொன்னுத்தாய் முழுக்கவும் மாறிவிட்டதாய்த் தோன்றும். சித்துப் பெண்ணாய் இருந்தவள் திடீரென்று பெரியவளாய் ஆகிவிட்டது போல.  அப்படி அவளைப் பார்ப்பதில் அவருக்கு அத்தனை சந்தோஷமாய் இருந்தது. 

சுபத்ராவுக்கு ஆறுவயதிருக்கும் போது பொன்னுத்தாயிக்கு அக்குளிலும், இடது மார்பிலும் கட்டிகள் மாதிரி வந்ததும், என்ன என்று புரியாமல், பக்கத்தில் இருந்த டாக்டரம்மாவிடம் காட்டிய போது, மார்பு புற்றுநோய் என்று தெரியவந்ததும், அவளுக்கு எல்லாவற்றையும் இழந்தது போலத் தோன்றியது.  கோனேரிக்கு அவளைத்தேற்ற வழியே தெரியவில்லை.  தகவல் தெரிந்ததும் யசோதையும் வந்துவிட்டாள்.  கூடவே இருந்தாள், யசோதை இருந்ததால், கோனேரியால் நிம்மதியாய் கடைக்கு போய் வியாபாரத்தையும் கவனிக்க முடிந்தது. பொன்னுத்தாயிக்கும் அந்த அதிர்வுகளில் இருந்து மீண்டு வர யசோதையின் அருகாமையும், கவனிப்பும் தேவையாய் இருந்தது. சுபத்ரா, பொன்னுத்தாயை ஒட்டிக் கொண்டே இருந்தாள் எப்போதும்போல். பொன்னுத்தாயின் மருத்துவ சிகிச்சையின் போது யசோதையால் ஆஸ்பத்திரியில் உடனிருக்க முடியவில்லை.   சுபத்ராவை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதுடன் மற்ற வேலைகளையும் அவளே செய்ய வேண்டியதாயிருந்தது. கோனேரி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போகவர பார்த்துக் கொண்டார்.   கடையில் இருக்கும் நம்பிக்கையான வேலையாட்களால், அது ஒரு பிரச்னையாய் இல்லை.

பொன்னுத்தாய்க்கு இடது மார்பை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு நாளிலேயே ஒற்றை மார்பை இழந்துவிட்டு அழுதபடியே இருந்தாள். கட்டிலின் முனையில் அமர்ந்து அவளின் வலது கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள்ளும் வைத்துக் கொண்டார் கோனேரி. அழுது கண் ரப்பைகள் வீங்கி, கண்கள் சிவந்திருந்தது. கண்ணீர் இருபக்கமும் வழிந்து தலையணையை நனைத்து இருந்தது. அவளுடைய நிலைமையைப் பார்த்த போது கோனேரிக்கும் தாங்க முடியாமல் அழுகை வந்தது.

‘நமக்கு மட்டும் ஏங்க இத்தனைக் கஷ்டம்? நாம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்?’ என்று அவள் அழுது புலம்பும்போது, கோனேரிக்கு பார்க்க சகிக்கவில்லை.  ஒரு வாரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள்.

வீடு திரும்பியதும் முதல் காரியமாய், சுபத்ராவை இனி வளர்ப்பது தன்னால் இயலாது என்ற முடிவுக்கு வந்தாள் பொன்னுத்தாய். கோனேரியிடம் அதைப் பற்றி ஏதும் யோசனை கேட்கவில்லை.  கோனேரி எத்தனை சொல்லியும்,  அவள் மறுத்தபடியே இருந்தாள். கோனேரிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சம்மதித்தார்.  யசோதைக்கு இந்த முடிவில் சம்மதமில்லை.

“ஒரு வருஷம் வேணுன்னா என்ட்ட இருக்கட்டும் பவுனு, அப்புறமா இங்க கொண்டாந்து விட்டுடறேன், அதுக்குள்ள நீ சுகமாயிடுவ! அதுக்கு சரின்னு சொல்லு, இப்பவே கூட்டிட்டுப் போறேன்! அத விட்டுட்டு, ஒரேடியா கூட்டிட்டு போயிடுன்னா என்னால முடியாது பவுனு!”

“உன்ட்ட இருந்தும், அவர்ட்ட இருந்தும் குழந்தையப் பிரிக்கிற பாவத்தை நான் செய்யமாட்டேன் பவுனு! அந்த மனுஷனும், குழந்தை மேல உசுரையே வச்சிருக்காரு! உசுரைப்புடுங்குறது போல தூக்கிட்டு போங்கியே! உனக்கே சரின்னு படுதா? கொடுத்துட்டு புடுங்கச் சொல்றியேடீ!” என்று அதற்குமேல் ஏதும் சொல்லாமல் பெரிதாய் அழத்தொடங்கினாள்.

பொன்னுத்தாய் கேட்பதாய் இல்லை, ரொம்பவும் வைராக்கியமாய் முடியாது என்றிருந்தாள். யசோதைக்கு  வேறு வழி தெரியவில்லை, கோனேரியின் முகத்தை பார்த்தாள், அவர் ஒன்றும் சொல்லாமல் சுபத்ராவையே பார்த்துக் கொண்டிருந்தார். சுபத்ராவை அழைத்துக் கொண்டு போவதாய் சொல்லிவிட்டாள். பொன்னுத்தாய் லேசாய் சிரித்தாள், வலியினூடே. 

சுபத்ரா தன்னைப் பற்றி தான் இத்தனை பேச்சும் நடக்கிறது என்று தெரியாமல், செப்புகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். சுபத்ராவைப் பொறுத்தவரையில், பொன்னுத்தாயும், கோனேரியும் தான் அவளின் அம்மா, அப்பா. அவளின் துணிமணிகளையும், விளையாடிக் கொண்டிருந்த செப்புகளையும் எடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் திணித்துக் கொண்டாள். கொஞ்ச நாளில் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடலாம் என்று நம்பிக்கையில், கையில் அகப்பட்டதை மட்டுமே எடுத்துக் கொண்டாள்.

சுபத்ரா, எதற்காக அம்மா, அப்பாவை விட்டுட்டு பெரியம்மா வீட்டிற்கு போகிறோம் என்று புரியாமல் தான் கொட்டாம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதன் பிறகு, யசோதை ஒவ்வொரு முறை வரும்போதும், குழந்தையை அழைத்துக் கொண்டு வரத்தவறியதில்லை. அவளுக்கு விபரம் தெரிந்த பிறகும் கூட, யசோதையை பெரியம்மா என்று தான் அழைத்து வந்தாள். அதைத்தான் யசோதையும் விரும்பினாள்.

அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம், சுபத்ராவை மதுரைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தாள் யசோதை.  சுபத்ரா மதுரை வந்திருந்து ஒரு நாளில் வயதுக்கு வந்துவிட, ஊரையே அழைத்து விமரிசையாக பூப்புனித நீராட்டு விழா நடத்தினார், கோனேரி. அத்தனை பெருமிதமாய் அதைச் செய்தார். அப்போதும் சுபத்ராவை மதுரையில் இருந்து படிக்க வைக்கலாம் என்ற யசோதையின் முயற்சி வீனானது. 

பொன்னுத்தாயிக்கு நோய் தீவிரமடைந்து வலது மார்பிலும் பரவி, வலது மார்பையும் எடுக்க வேண்டியதாயிற்று.

யசோதைக்கு, பெரிய மகனின் திருமணம் ஆனபிறகு, சுபத்ராவை அந்த வீட்டிலேயே வைத்துக்கொள்வது சிரமமாய் இருந்தது. இருந்த கறவை மாடுகள் எல்லாம் விற்றாயிற்று, தன் கணவருடனேயே, சிலம்பமும் போய்விட்டது.  பெரியவனின் வருமானம் போதவில்லை. சின்னவனுக்கு இன்னும் வேலை ஏதும் அமையாததால், சுபத்ராவின் தேவைகளை பூர்த்தி செய்ய, பெரியவனை எதிர்பார்க்க வேண்டியதாயிருந்தது.

இவற்றையெல்லாம் பொன்னுத்தாயிடம் சொல்லி, மதுரையில் விடுவதே சரி என்று தோன்றியது. அவள் மதுரையில் இருந்தால், கோனேரிக்கு சிரமம் குறையும். ஆனால் அதை பொன்னுத்தாய் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாள் என்று தெரியவில்லை. இந்த முறை அதை தீர்மானமாய் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தான் மதுரைக்கு தனியாக வந்திருந்தாள். சுபத்ராவுக்கு, மதுரைக்கல்லூரி ஒன்றில் இடம் வாங்கிக் கொடுப்பது பற்றியும் கோனேரியிடம் பேசினாள். பொன்னுத்தாயிக்கு இந்த ஏற்பாட்டில் இஷ்டமில்லை.

‘இருப்பனா, சாவனாண்ணு தெரியாம, பத்து வருஷத்துக்கு மேல இழுத்துக்கிட்டு இருக்கேன்! ரெண்டையும் ஒண்ணு மாத்தி ஒண்ணா அறுத்துப் போட்டாச்சு!, இதுல அவளைக் கொண்டாந்து இங்க விட்டாக்க, நான் லோல்படறதப் பாத்து அவளும் கஷ்டப்படணுமா?’

‘எனக்கு பீ,முத்திரம் அள்ளவா  நீ பெத்துப்போட்ட? இல்ல, அதுக்குத்தான் எனக்குச் செய்யணும்னு என்ன தலையெழுத்து? கொஞ்சமாவது கூரோட பேசு’ என்று மூச்சு இரைக்க இரைக்க விடாமல் பேசினாள்.  பொன்னுத்தாயிக்கு உள்ளூர சுபத்ராவை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று  ஆசை இருந்தாலும் அதைக்காட்டிக் கொள்ளவில்லை. 

முதல் நாள் மாறி மாறி விவாதிக்கவே சரியாய் இருந்தது. பொன்னுத்தாயி  ஒத்துக்கொள்ளாது போகவே, மேலும் ஒரு நாள் தங்கி, அவளை எப்படியும் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். அடுத்த நாளில் என்ன பேசினாளோ, பொன்னுத்தாயி சம்மதித்து விட்டாள்.  கோனேரிக்கே ஆச்சரியமாய் இருந்தது, அப்படி என்ன சொல்லியிருப்பாள் என்று. 

யசோதைக்கு பொன்னுத்தாயி, சுபத்ராவை வைத்துக் கொள்ள சம்மதித்த பிறகு தான் நிம்மதியாய் இருந்தது.  பொன்னுத்தாயிக்கு பிடித்தது எல்லாம் செய்து கொடுத்தாள்.  ஆனால் பொன்னுத்தாய் ஏனோ பெயருக்கு சிரிப்பது போலத் தோன்றியது கோனேரிக்கு, ஆனாலும் உடல்நிலை காரணமாய் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டார். யசோதையிடமும் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, பேசியிருந்தால், என்ன சொல்லி பொன்னுத்தாயை சம்மதிக்க வைத்தாள் என்று தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குள் துரதிர்ஷடவசமாக இறந்தும் போனாள். 

பொன்னுத்தாய் யசோதை இறந்த போதும் அழவே இல்லை. பிரமை பிடித்தவள் போல ஒரே திசையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  அழுதால் மனப்பாரம் குறைந்திருக்கலாம், இத்தனை இறுகிப் போயிருக்கமாட்டாள் என்று யோசனையாகவே இருந்தது பல நாட்களாய்.  இப்போது இது போல பொன்னுத்தாய், தனக்குத்தானே பேசவும் தொடங்கிவிட்டாள். பதிமூணாம் நாள் காரியத்தின் போதும் அவள் வரவில்லை. கோனேரி மட்டுமே போய் விட்டு வந்தார்.

சுபத்ராவை இங்கே கொண்டு வந்தால், இவளின் நிலைமை மாறலாம் என்ற நினைப்பில், அவளருகே போய் அவள் தோளைத் தொட்டு அசக்கினார்.  உட்கார்ந்திருந்தபடியே திரும்பியவள், ஒன்றுமே பேசாமல் இவரைப் பார்த்தாள்.

“சுபத்ராவை கூட்டிட்டு வந்துடலாம்னு இருக்கேன் இன்னைக்கு! நீ என்ன சொல்ற?” என்றார் கோனேரி.

‘உங்க பொண்ணை கூட்டிட்டு வர என்னை ஏன் கேக்குறீங்க?’ என்றவள் அங்கிருந்து எழுந்து போனாள்.