Friday, November 02, 2012

பகடை...


“ நேத்து என் அப்பாட்ட இருந்து ஃபோன் வந்ததுப்பா? உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆஃபிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன்! உன்னை நேரம் கிடைக்கும் போது பேசச்சொன்னார்! ”


‘ நேத்தே சொல்லியிருக்கலாம்ல, சாயங்காலமே வந்துட்டேனே? ’


 “ சுத்தமா  மறந்து போச்சு, திரும்பவும்  கூப்பிட்டாரு, நாந்தான் எடுக்கலை, உன்னை பேசச்சொல்லத்தான் இருக்கும், அதான் விட்டுட்டேன்! ”

 ‘ என்ன விஷயம்னு கேட்டியா? ஏதாவது அவசரமா இல்லாம இத்தனை வாட்டி கூப்ட மாட்டாரே?! ’

 “ அவருக்கு பொண்ணுகிட்ட சொல்ல முடியலை  போல, மருமகங்கிட்ட தான் சொல்லனும்  போல, அப்படி என்ன சீமையில  இல்லாத ரகசியம் பேசப்போறாரோ? ”

 ‘ சும்மா சொல்லாத, உன்ட்ட சொல்லியிருப்பாரு, நீ என்ட்ட சொல்லமுடியாம, அவர்ட்டயே  கேக்க சொல்லுற! தெரியாதா எனக்கு? நீயும் உங்கப்பாவும் போடுற நாடகம்? ’

 “ அறிவுகெட்ட தனமா பேசாதீங்க, ஒங்ககிட்ட எதை மறைச்சிருக்கேன்? உங்களப்போல பத்து வருஷத்துக்கு குடும்பமா சேர்ந்து ஒரு பொய்யை மறைச்சிட்டு, மாட்டிக்கிட்ட பெறகு ரொம்ப யோக்கியன் மாதிரி நடிக்கிற புத்தியெல்லாம், எங்க வீட்ல யாருக்குமில்லை! ”

 ‘ எதுக்கு  எல்லாத்தியும் இழுக்குற இப்போ? அதைப்பத்தி எதுவும்  பேச வேணாம்னு முடிவு பண்ணம்-ந்தானே? அப்புறமெதுக்கு இப்ப அதப்பத்தின பேச்சு? ’

 “ அதென்ன ஒங்கபேச்சுன்னா ஒரு நியாயம், என் பேச்சுன்னா ஒரு நியாயம்? ”

 ‘ அப்ப, உங்கப்பா ஏதோ சொல்லியிருக்காரு, சரியா? அதுக்கு ஏன் எதையெதையோ இழுக்கணும்? நேரடியா சொல்லிட்டு போயிரலாம்ல? ’

 “ ஒங்க குத்தமெல்லாம் ஒன்னுந்தெரியாது  ஒங்க வீட்டுக்கு, ஒருத்தி  வாழ்க்கைய இப்படி பாழாக்கிட்டானே! ஒரு பொண்ணோட வாழ்க்கை சீரழிஞ்சு  கெடக்கேன்னு, அந்த பொம்பிளைக்கு தெரியலை, சும்மா ஒண்ணுமில்லாததுக்கு வந்து ஏறுராரு இப்போ! நீ பேசுறதுன்னா பேசு இல்லேன்னா  விட்டுடு, எந்தலைய உருட்டாதீங்க ரெண்டு பேரும்! ”

  " எங்கம்மாவ  எதுக்கு இங்க கொண்டு வர்ற, கல்யாணம் பண்ணவ கிட்ட அதைச்  சொன்னா, பையனோட வாழ்க்கை கெட்டுப்போகுமேன்னு அவங்க நினைச்சிருக்கலாம்ல? ’

 “ஆமா  உங்கம்மா செஞ்சுட்டா, ஒந்தொம்பிங்க செஞ்சா அது குத்தமில்ல, நான் எங்க அப்பா என்ன பேசினாருன்னு சொல்லலேன்னா குத்தமாயிடும், எந்த ஊரு நியாயமோ இதெல்லாம்! எனக்கு ஒரு போக்கிருந்தா, போடான்னு போயிக்கிட்டே இருந்திருப்பேன், வக்கத்து போயி தானே உங்கள தொன்னாந்துகிட்டு இருக்கேன்!”

 ‘ எத்தனை தடவை இதையே பேசுவ நீ, மிச்சம்  இருக்கிற கொஞ்ச நஞ்ச ப்ரியத்தையும்  கெடுத்துக்கிட்டு சீப்படனுமா வாழ்க்கை முழுக்க? ’

 “ நாஞ்சொன்னேன்ல, ஒன்னப்பாக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு எல்லாம்  சொன்னேன்ல, அப்பக்கூட நீ ஒண்ணும் சொல்லலையே, அப்படின்னா, அப்படியே சாவுற வரைக்கும் மறைச்சிடலாம்னு தானே நினைச்சிருக்கே? எம்புட்டு நெஞ்சுத்தைரியம் இருந்திருக்கனும் ஒனக்கு? அப்படியே குடும்பமா சேந்து மறச்சிட்டீங்கள்ல? ”

 ‘ எத்தனை தடவடீ சொல்றது? ஏன் சொல்லலைன்னு? நீ சொன்னா என்னை ஏத்துக்க மாட்டியோன்னு தான் சொல்லைன்னு  ’


“அப்போ  ஒங்குடும்பத்துக்கு எங்க போச்சு புத்தி? என்னைப் பத்தி  எல்லாம் விசாரிச்சாள்ல, அந்த பொம்பள, உங்கம்மா? அதே நான் பண்ணியிருந்தா, அப்பவே உன் வண்டவாளமெல்லாம் தெரிஞ்சிருக்கும்ல? செஞ்சிருக்கணும்டா விட்டுட்டேன் , எந்தலையில நானே மண்ண வாரி போட்டுக்கிட்டேன்! என் ஃப்ரண்ட் ஒருத்தன் சொன்னான் , நீ காசுக்காகத் தான் என்னை கல்யாணம் பண்றேன்னு , என்னத்த கண்டேனோ ஒன்ட்ட , கண்ணை மறச்சிருச்சு!”

 ‘ காசுக்காக  கல்யாணம் பண்ணலேன்னு ஒனக்குத் தெரியாதா? தெரிஞ்சிருந்தும் நடிக்காத! ’

 “ நான் நடிக்கிறேனா, நெஞ்சுல கைவச்சு  சொல்லு, நான் நடிக்கிறேனுன்னு ! நீ பேசுனதுலயும், நீ நடந்துக்குறதுலயும் ரொம்ப நல்லவனாட்டம் இருக்கானேன்னு  நினைச்சேம் பாரு எம்புத்திய செருப்பால அடிக்கணும் ! மொதத்தடவ கூட்டிட்டுப் போனியே ஒன்  வீட்டுக்கு அப்பவே என்னமோ தோணுச்சு, அந்த பொம்பளயோட  பார்வையும், நடத்தையும்! எதுடா  சாக்குன்னு தானே இருந்திருக்கா இத்தனை நாள்வரை!  சந்தர்ப்பம் கிடைச்சதும் என்னமா திட்டம் போடுறீங்கடா நீங்கள்லாம்.  கிரிமினலுங்கடா எல்லாம், செத்துப் போயிடலாம் ஒங்கூட இருக்குறதுக்கு, எனக்கொரு சாவு வரமாட்டேங்குது! ”

 ‘ இதையே சொல்லாத, சொத்துக்கு ஆசப்பட்டு நடிக்கிறவென், பத்து வருஷமா நடிப்பானா ப்ரியம் இருக்கிற மாதிரி? ’

 “ அதான்  வெளுத்துப் போச்சுல்ல, ஒஞ்சாயம்! பத்து வருஷம் ப்ரியமா இருந்தானாம், போவேன் போய் போஸ்டர் அடிச்சு  ஒட்டு ஊரெல்லாம்! ஊருல உலகத்துல இல்லாதத இவ ஒருத்தந்தான் செய்றா மாதிரி ”

 ‘ இங்க பாரு, சொத்து மயிரு எல்லாம் எனக்கே வேணும்னு நினைச்சேன்னா, வீட்டை முழுக்க உம்பேருக்கு மாத்துவனா? வாடகையெல்லாம் உனக்கே வந்து சேருற மாதிரி செய்வனா? கொஞ்சமாவது யோசிச்சு பாரு! ’

 “ ஆமா, எங்கப்பன்கிட்ட இருந்தே  காசு வாங்கி, வீட்டைக் கட்டி, அத எனக்கே குடுத்துட்டாராம்ல? ரொம்ப நியாயமாத்தான் பேசுற! இன்னும் வீட்டுக்கு வாங்குன  கடனையும் அடைக்கல, வீடு தாராராம்... வச்சுக்கோ வீட்டை நீயே, பத்து  வருஷத்தை திருப்பிக் குடுக்கமுடியுமா? பேசுறான் பேசமாட்டாம? ”

 ‘ நானா கேட்டேன் ஒங்கப்பாகிட்ட, அவராக் கொடுத்தாரு, அதுவும் நீ தான் கொடுக்குறப்பவே வாங்கிக்கண்ணு  கம்பெல் பண்ண! ஒன் பேச்சக்கேட்டு  தானே வாங்குனேன், அதுவும், அவரு கொடுத்த காசமட்டும் வச்சு, இந்த வீட்டக் கட்டிருக்க முடியுமா? எடத்தை மட்டும்  வாங்கிட்டு சும்மா போட்டிருக்க  வேண்டியது தான், அதுலயும் பாதி லோன் போட்டு வாங்கியிருக்கு! ’

 “ ஆமா  நாந்தான் சொன்னேன், ஒனக்கெங்க  போச்சு அறிவு? எழுதற பெரிய  எழுத்தாளர் புடுங்கின்னு பீத்திக்கிற? எனக்கு எதும்  வேணாம்னு சொல்லியிருக்கனும், அம்புட்டு ரோஷக்காரன்னா! ஊர்ல, எவனுக்கோ, எவளுக்கோ பிரச்னையாம், அதுக்கு வடிக்கிறாராம்  கண்ணீரு, இங்க ரத்தம் வழியுது  அது கண்ணுக்கு தெரியல, பொசகெட்ட பய! இந்தாபாரு! கைய்யகிய்யத் தூக்குனா அம்புட்டு தான் பாத்துக்க! மருந்தக் குடிச்சுட்டு, நீயும் ஒங்குடும்பமும் தான் காரணம்னு எல்லாத்தியும் எழுதி வச்சுட்டு செத்துப் போயிடுவேன், அப்புறம் சீரழிஞ்சு போயிடுவீங்க ”

 ‘ நாங்கள்லாம்  ஜெயிலுக்கு போயிட்டா, உனக்கு நிம்மதி வந்துடுமா? ’

 “ நிம்மதி  வராது, அதத்தான் குழி தோண்டி பொதைச்சுட்டியே? ஆத்திரம் தீரும்ல, நான் படுற வேதனை  ஒங்களுக்கெல்லாம் அப்பனாச்சும் புரியும்ல? ”


" என்னைய, என்ன வேணும்னாலும் செய் ஒம்மனம்  போல, என் குடும்பத்த உள்ள இழுக்காத, நான் பண்ண அலும்புக்கெல்லாம், நான் அனுபவிக்கிறென், அவங்க என்ன பண்ணுவாங்க! ’


“ எது  எப்படி போனா என்ன? உனக்கு நீயும் ஒங்குடும்பமும் நல்லாயிருக்கணும், எப்படியோ போய்த் தொலைங்க, நாஞ்சாவுறேன்! ரெஸ்டில்ல எடுத்து எங்க வச்சிருக்க? குடு ஒரேடியா போயிடுறேன்! இந்த கருமத்தை பேசவேண்டியதில்ல, ஒன் மொகரக்கட்டையிலையும் முழிக்க வேணாம்ல, கர்சீப்ப எடுத்துக் கொடுத்துட்டு நீ வெளியே போ, நான் கதவ மூடணும்! எங்கப்பங்கிட்டயும் பேசிடு, இல்லேன்னா என் உயிர வாங்கித்தொலப்பாரு! ”

****


“ ஹலோ  மாமா!  எப்படி இருக்கீங்க? ”

 ‘ நல்லாயிருக்கேன், ஜெயச்சந்திரன்! நீ எப்படி இருக்க? ஒங்கூட பேசணும்னு நினைச்சேன், ஒன் நம்பர எங்கேயோ விட்டுட்டேன், ஒன்னோட பழைய நம்பர் தான் இருந்தது! ’

 “ டெய்ஸி சொன்னா மாமா, நேத்து வீட்டுக்கு வரவே லேட்டாயிடுச்சு, அதான்  கூப்பிடமுடியலை, டைம் டிஃபரண்ஸ் வேற இருக்கா, லேட்டாயிருக்கும் படுத்திருப்பீங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்! அத்த எப்படி இருக்காங்க? ”

 ‘ அதுக்குத்  தான் கூப்பிட்டேன், எங்க ரெண்டு பேருக்கும் வயசாகிக் கிட்டே போகுது, ஒடம்புக்கு வேற அடிக்கடி முடியறதில்ல, முந்தா நாள் கூட காண்ஸ்டிபேஷன் சிவியராகி, பாத்ரூம்லேயே மயங்கி விழுந்துட்டேன், ஜெயா! அப்புறம் அத்தையும், சார்லியுந்தான் தூக்கி படுக்க வச்சாங்க?’ வீட்டுக்கு எப்பவும் வர டாக்டர் வந்து பார்த்துட்டு, ரொம்ப பயமுறுத்திட்டாரு!’

 “என்ன மாமா சொன்னாரு? ”

 ‘ என்ன சொல்வாரு, அவரு வருமானத்தேவைக்கு தக்கன ஏதாவது சொல்லிட்டுப் போவாரு, ஆஸ்பத்திரிக்கு வாங்க  ஒரு ஸ்கேன் எடுக்கலாம் அது, இதுன்னு சொல்றாரு! அப்புறம் லக்ஸ்டிவ் மாத்திரைகளை  கொஞ்சம் எழுதி கொடுத்திருக்காரு! உனக்கு தான் தெரியுமே, பத்து  பர்கோலக்ஸ் போடனும் கொஞ்சம்  போக! அதுலயும் இப்ப கான்ஸ்டிபேஷன்  பயத்துனால, சரியாவும் சாப்பிடுறது  இல்லை, கைகாலுல ஒவ்வொரு  மொலியும் வலிக்குது, வண்டி  ஓட்ட முடியலை, சார்லிக்கு லைசன்ஸ்  வாங்குனதால, வண்டி ஓட்ட வேண்டியதில்ல, அவென் பார்த்துப்பான். ஆனாலும் சில சமயம் வீட்டு வேலையும் பார்த்துட்டு அவனால் பார்க்க முடியறதில்லை, அவனால் முடியலேன்னா , கருப்பசாமிய கூப்புட்டுக்குறது வண்டி ஓட்ட! ’

 “ மாமா, எனக்கு புரியுது மாமா, நான் சொல்றத கேப்பீங்கன்னா நான் சொல்றேன்! ”

 ‘ சொல்லு, சொன்னாதானே தெரியும்? ’

 “ முதல்ல சிட்டிக்கிட்ட ஏதாவது வீடு வாடகைக்கு  எடுத்துட்டு  வந்துடுங்க, ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஏதாவது ஒண்ணுன்னா ஓடமுடியுமா?, அப்புறம் தோட்டம், தொரவுன்னு இருக்கிற எல்லாத்தியும் ஏறக்கட்டிடுங்க, இல்லேன்னா யாருக்காவது குத்தகைக்குக் கொடுத்துடுங்க! வேலை குறைஞ்சு ஓய்வா இருந்தாலே, சரியாயிடுவீங்க! அப்புறம்  ரெகுலரா வெளக்கெண்ணெய் குடிச்சுப் பாருங்க! ”

 ‘ எனக்கு இந்த வீட்ட விட்டு வரமுடியாது, சிட்டில எங்க பார்த்தாலும், டிராஃபிக், வண்டிகள்னு ஒரே  இரைச்சல். அதும்போக தூசி வேற. இங்க மாதிரி வராது, இதுவே  வண்டி போக்குவரத்து அதிகமா இருக்குன்னு இன்னும் தள்ளிப்போகலாமான்னு இருக்கேன். அப்புறம் யாரும் நம்மள மாதிரி பாத்துக்க மாட்டாங்க, எல்லாம் வீணாப் போயிடும்!! ’

 “உங்க உடம்புக்கு ஒண்ணுன்னு பேசுறப்போ, மத்ததெல்லாம் எப்படி மாமா, முக்கியமாப்படும் எனக்கு? அதான் சொன்னேன்!”


‘ அது  ஒன்னப்பொருத்தவர சரிதான்  ஆனா, என்னால இத விட்டுட்டு வரமுடியாது! அதுக்கு தான் ஒன்கூட பேசணும்னு நெனச்சேன்! நீயும், டெய்சியும் இங்கேயே வந்துடுங்க! எனக்கு பென்ஷன்ல வர வருமானமும், பாங்க்ல கிடைக்கிற வட்டி மட்டுமே போதும், புதுசா வாங்கின காரும் இருக்கு, நீயே யூஸ் பண்ணிக்கோ! நீ வீடு கட்டுறதுக்காக வாங்கின காசையும் தரவேண்டாம்.  இங்க வந்து, என்னோட இன்வெஸ்ட்மெண்ட்ஸ், அப்புறம் நிலத்தையெல்லாத்தையும், மத்த வரவு செலவையும் பாத்துக்கோ! நீ இங்க வந்து பொறுப்பெடுத்துக்கிட்டா இன்னும் கொஞ்ச நாளு உயிரோட இருப்பேன்! என்ன சொல்ற? ”

“ எதுக்கு  மாமா அப்படியெல்லாம் பேசணும், நான் இங்க இருந்து வேலைய  விட்டு வரதப்பத்தி பிரச்னையில்லை, ஆனா அங்க வந்து வேலை பாக்காம  இருக்க முடியாது மாமா! அதுவும் சிட்டிய விட்டு அத்தன தூரத்துல இருந்தா வேலைக்குப் போயி வரது கஷ்டம் மாமா ”

 ‘ சரி, டெய்ஸி இப்போ எப்படி இருக்குறா? உன் கூட சரியா பேசுறாளா? ஒம்மேல கோவம் குறைஞ்சிருக்கா? நாளாக ஆக சரியாயிடுவா தானே? ’


“ நான் எவ்வளவோ சொல்லிட்டேன் மாமா, நான் அவளை விட்டுப் போகப்போறதில்லே, கடைசி வரைக்கும் அவ தான் எனக்கு எல்லாம்னும் சொல்லிப் பாத்துட்டேன்! கொஞ்சம் கூட  நம்ப மாட்டேங்கிறா? என்ன செய்றதுன்னு  தெரியலை! எல்லாத்திலையும்  நம்பிக்கை போயிடுச்சுன்னு அடிக்கடி சொல்றா! ”


‘ சரியாயிடுவா  போகப்போக, நீ கொஞ்சம் அனுசரனையாவே  இரு எப்பவும்! அத்தைகிட்ட பேசுறியா? ’

 “ இல்ல, மாமா கேட்டதா சொல்லிடுங்க, எனக்கு வெளிய போகனும், இன்னொரு  நாள் பேசுறேன் மாமா! ”

*****

  “ என்னங்க  சொல்றான்! ”


‘ உங்கிட்ட இன்னொரு நாள் பேசுறானாம்! ’

 “ பேசமாட்டான்ல, பயம் அவனுக்கு, நாக்கப்புடுங்கிக்கிற மாதிரி கேட்டுடுவேன்ல! எடுபட்ட  பய, என் பொண்ணோட வாழ்க்கைய  சீரழிச்சுப்புட்டான்ல! ”

 ‘ நீயும் ஏண்டி உன் மக மாதிரியே பேசுற! எப்பவோ நடந்த விஷயத்தை இன்னமும் தூக்கிட்டு அலையுறா, நீ என்னவோ அதையே பிடிச்சுட்டு தொங்குற! ’


“ப்ரியப்பட்டு கட்டிக்கிட்டவன், உண்மையா  இருக்க வேண்டாம் ? கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தா என்ன? மறைக்கணும்னு தோணியிருக்குல்லா, அது தான வெசனப்படுத்துது! மறந்து போகிற மாதிரி காரியமா அது, அதுவும் சாட்சியா வளந்து நிக்குதே, அதை என்ன பண்றது? அவனுக்கு நீங்க வக்காலத்து! ஒங்களையும் நோண்டினா தான் தெரியும், என்ன கத இருக்குன்னு பின்னாடி! ”

 ‘ அதையே  ஏண்டி திரும்ப திரும்ப  சொல்றீங்க, அம்மாவும், மகளும்!  கல்யாணமானதில இருந்து எந்நேரமும் அவ கூடயே தான் இருக்கான்.  அங்கயும் தொடர்பே இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரியும்! இத்தன சம்பாதிக்கும் போதும், டெய்ஸிக்குத் தவிர வேற எதுவும், யாருக்கும் செய்யல, அப்புறம் எப்படி திடீர்னு, அங்க ஓடிப்பொயிருவான்னு  நினைக்கிறது எல்லாம்? ’

 “ நீங்க  என்ன சத்தியம் வாங்கியிருக்கீங்களா  அவெங்கிட்ட?  நம்ம ரெண்டு பேரு காலத்துக்கு பின்னாடி, எல்லாத்தியும் சுருட்டிட்டு, டெய்சிய விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவீங்க? இல்லேன்னா அவங்க ரெண்டு பேரும் அதுக்கப்புறம் பிரிஞ்சா சொத்தெல்லாம் பாதிப்பாதியா பிரிச்சா? இது எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு தானே? ”

 ‘ எனக்கு நம்பிக்கை இருக்கு, அவன்  அந்த மாதிரி செய்யமாட்டான், அப்படி செய்றவன், அவன் பேரில  இருக்கிறத, அவ பேருக்கு மாத்துவானா? அவன் பேரிலே தனியா பாங்க் அக்கவுண்ட் கூட கிடையாது தெரியுமா உனக்கு? எல்லாமே  ஜாயிண்ட் அக்கவுண்ட் தான்! அவனுக்கே தேவையின்னா, அவகிட்ட  தான் போயி நிக்கனும்! ’

 “ பெரிசா வாரிச் சுருட்ட தான் ஏதோ திட்டம் வச்சிருக்கா மாதிரி தெரியுது! இதுல அவங்கிட்ட எல்லாத்தியும் கொடுத்திடலாம்னு நீங்க சொல்றது எனக்கு என்னமோ பயமா இருக்கு! ”

 ‘ ஒண்ணு  தெரிஞ்சிக்கோ! அவன் இருக்கிற வேலைய விட்டு இங்க வந்தான்னா  தான் எல்லா பொறுப்பையும் கொடுக்கப்போறேன்! ஆனாலும்  எல்லாமே டெய்ஸி பேர்ல தான் இருக்கப்போகுது! ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இங்க வந்து  இருந்து, பொறுப்பெல்லாம் எடுத்துக்கிட்டான்னா போதும், வெளிய போய் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லைன்னு புரிஞ்சிடும், அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் அவன் டெய்ஸியை தான் சார்ந்திருக்கணும்! இது தான், அவனை டெய்ஸியோடவே இருத்தி வைக்கும்! என்ன சொல்ற! ’

“ அப்படியென்ன  மயித்துக்கு டெய்ஸி அவங்கூட  இருந்தே ஆகணும்? ”

Saturday, October 06, 2012

பிணை ....


கதவை  யாரோ பிறாண்டுவது கேட்டது.  எழுந்திரிக்கமுடியவில்லை, இரவு சரியாகத் தூங்காதது  உடலை அழுத்தியது டாரதிக்கு.  அப்போது தான் ஞாபகம் வந்தது, அதிகாலை தூக்கத்திலேயே சார்லியை வெளியே விட்டது.  சார்லி தனது காலைக்கடன்களை முடித்துவிட்டான் போல.  இத்தனை வயதில் தனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று டாரதிக்கு வெறுப்பாய் இருந்தது. கர்த்தர் தன்னை ஏன் இத்தனை சிரமப்படுத்துகிறார் இத்தனை பிரார்த்தித்தும், உபவாச ஜெபங்கள் இருந்தும் என்று நினைத்து கொள்வாள்.

டாரதிக்கு  மே மாதம் வந்தால், எழுபது வயது. வயதானதோடு, உடல் பருமன் வேறு. அதனால் அவளால், முன்போல எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. உடலில் அத்தனை எலும்பும், மூட்டு இணைப்பும் அத்தனை வலிக்கும், யாரோ அருவ டிரில்லரைக் கொண்டு துளையிடுவது போல.  இத்தனை உடல் சிரமத்திலும், நாய்களையும், பூனைகளையும் வைத்துக் கொண்டு சமாளிப்பதற்கு முடிவதில்லை.  நாய்களாவது பரவாயில்லை எண்ணிக்கையில் குறைவு. பூனைகள் எப்போதுமே கர்ப்பமாய் இருப்பது போலவும், குட்டிகள் இட்டுக் கொண்டே இருப்பது போலவும் தோன்றும் அவளுக்கு. எங்கு பார்த்தாலும், பெருத்த வயிற்றுடன் பூனைகள் அல்லது பூனைக்குட்டிகள்.  சோபாவிற்கு பின்னால், ஷோகேஸின் மீது, டிவிக்கு பின்னால், பாத்ரூமில், கட்டிலடியில் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பூனைகள், நாய்களுக்கும் பெரிதாய் பயப்படுவது இல்லை, ஜெர்ரி ஒருவனைத்தவிர. அனேகமாய் இப்போது ஒரு நாற்பது பூனைகளாவது இருக்கும்.  எல்லாவற்றையும் விஷம் வைத்து கொன்றுவிடலாமா என்று கூட சிலசமயம் தோன்றும் அவளுக்கு.

இப்போது கதவை பிறாண்டுவதுடன், அவன் குரைப்பதும் கேட்டது.  குரைப்பது கேட்டால், அவருடைய  அறையில் இருந்து கத்துவார்.  ஏதோ  நாய்களால் நிற்க முடியாது என்பது போல. மனிதர்களின் அவஸ்தை தெரியாது, மிருகங்களை கொண்டாடுபவர். சார்லியை, உடனே கதவைத் திறந்து உள்ளே விடவும் முடியாது. அவனை உள்ளே விடுவதற்குள் அவளது படுக்கையறையில் இருக்கும் ஜெர்ரியை ஹாலில் விடவேண்டும்.  அவனை ஹாலில் விடுவதற்கு முன், அங்கு இருக்கும் சீசரை அவருடைய பெட்ரூமில் போட்டு அடைக்க வேண்டும். நினைக்கும் போது அச்சலாத்தியாய் வந்தது. இந்த மூன்றுக்கும் ஒருத்தருக்கொருத்தர் ஆகாது, முன் உதடுகளை தூக்கிக் கொண்டு பற்களைக் காட்டி உறுமுவதை பார்க்கையில், ஆத்திரம் ஆத்திரமாய் வரும்.  அப்படி தப்பித்தவறி அவர்களை வெளியே, உள்ளே விடுவதில் சிறு தவறு ஏற்பட்டாலும் போதும், அவர்கள் போடும் சண்டையில் எவனாவது எவனிடமாவது கடி வாங்கி ரத்தம் வழிய கொஞ்சம் அயர்வார்கள். அதிலும் சீசர் மாட்டிக் கொண்டால், தொலைந்தான். அவனை யாருக்கும் பிடிக்காது, இத்தனைக்கும் அத்தனை சாது, லாப்ரடார் வகை அவன். சொகுசாய் மாஸ்டரின் அறையிலேயே பெரும்பாலும் இருப்பதாலும், அவரின் ப்ரியத்துக்கு ஆளானவன் என்பதாலும், ஒருவன் அவனுடன் சண்டையிட்டால் போதும், சண்டைக்கே போகாத டிட்டூ, டினா, ப்ளாக்கி எல்லோரும் அவனை புரட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

கட்டிலின் முனையைப் பிடித்தபடி எழுந்து, சைட் டேபிளில் இருந்த எல்ட்ராக்சின்  இரண்டை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டாள். கையில் சுவறோரம் சாய்த்து வைத்திருந்த ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு, தனது அறையில் தற்காலிகமாய் வந்திருக்கும் ஜெர்ரியின் புட்டத்தில் வைத்து குத்தினாள். அவன் உர்றென்று உறுமிக் கொண்டே கதவை  நோக்கி நடந்தான்.   இதே பொழப்பாப் போச்சுடா உங்களுக்கு என்று நினைத்துக் கொண்டவன் மாதிரி, நிதானமாய் சோம்பல் முறித்து கதவருகே வந்து நின்றான்.  அவனை விடும் முன், கதவை லேசாய் திறந்த போது, அங்கே சீசர், கிஷ்மோ என்ற பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தடக்கென்று கதவை மூடி, ஜெர்ரியை உள்பக்கமாய் தள்ளிவிட்டு, கதவைத்திறந்து தான் மட்டும் வெளியே வந்து, சீசரின் காலரை பிடித்து அதிக சிரமத்துடன் குனிந்தபடியே அவனை இழுத்து, அவருடைய அறையில் விட்டாள்.  இடுப்பு பிடித்துக் கொண்டது போல இருந்தது, நிதானமாய் நிமிர்ந்து சுவரைப் பிடித்து,  ‘பெத்தன்னா!’ என்று அழைத்தாள். சத்தம் ஏதும் பதிலுக்கு வராமல் போகவே, திரும்பவும் படுக்கையறைக்கு வந்து ஜெர்ரியை ஹாலில் விட்டு, படுக்கையறை கதவைச் சாத்தினாள்.  வெளியே கத்தி, குதித்துக் கொண்டிருந்த சார்லியை உள்ளே விட்டாள். வந்தவன் நேராய், தண்ணீர் இருந்த கப்பை அடைந்து, சளப் சளப்பென்று தண்ணீர் குடித்து மூச்சு வாங்கினான். டாரதியை தண்ணீர் போதும் என்பது போல பார்த்தான்.

ஜன்னல்  கதவருகே சில பூனைகள்  நின்று கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டன.  விடிந்து விட்டது எல்லோருக்கும்  என்று நினைத்துக் கொண்டே, ஜன்னல் அருகே இருந்த தட்டுகளில் பூனைகளுக்கான உணவை கொட்டினாள். அதன் பிறகு, வெளியே வந்து  பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து  அதற்கான தட்டில் ஊற்றினாள். சில பூனைகள் எவ்வளவு  பழகினாலும், அவள் அங்கே இருக்கும்  வரை வருவதில்லை.  அதற்கான  உணவுகளை வைத்து விட்டு, அங்கிருந்து  நகர்ந்து விட வேண்டும். மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது, சர்க்கரை படுத்துகிறது. பாத்ரூமின் கதவைத் திறந்த போது, பூனைப்பீயின் வாடை முகத்தில் அடித்தது. ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது, குச்சியைக் கொண்டு ஏதோ பூனையின் மீது எறிந்தாள்.  பீ போனது அந்த பூனையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிந்தாலும், பூனையைப் பார்த்தவுடன் குச்சியை தூக்கி எறியத் தான் தோன்றியது. அடுத்து பாத்ரூமிற்குள் எங்கு பீ போயிருக்கிறது என்று தேட வேண்டும்.  பூனைகள் வெளியே சென்று பீ போய்விட்டு மண்ணைப் போட்டு மூடுவது தான் வழக்கம். இவைகள் எல்லாம் வழக்கத்திற்கு விரோதமாய், கிரானைட் தரையை கீறி அங்கேயே பீ போய் விட்டு, மூட திடத்தரையை தோண்ட முற்படும்.

இங்கிருக்கும் பூனைகள் எல்லாம் வித்யாசமானவை.  கண்ட இடத்தில் பீ போய்விடுகிறதுகள் சனியன்கள்! என்று வாய்விட்டு புலம்பியபடியே தேடினாள். பாத்ரூம் முழுக்க நாற்றமெடுப்பதில், தீவிரமாய் நுகர்ந்து இடத்தை அறியமுடியவில்லை.  நாய் நுகர்வுத்திறன் இருந்தால் எளிதாய் கண்டுபிடித்துவிடலாம் என்று தோன்றும் டாரதிக்கு. திரும்பவும், வலியுடனே குனிந்து தேடத் துவங்கினாள்.

வாஷ்  பேசினில், பாத் டப்பில், சில  சமயம் அழுக்குக் கூடைக்குள் என்று. அதை கண்டு பிடித்து, பெத்தன்னாவை பத்துமுறை அழைத்த பின்னால், ஒரு முறை வந்து சுத்தம் செய்து விட்டுப் போவான். இந்த பீ நாத்தமும், பூனையின் மூத்தர நாத்தமும், குமட்டிக் கொண்டு வரும்.  எப்போதும் தின்று கொண்டும், பேண்டு கொண்டும் இருக்க பழகி விட்டது இந்த பூனைகள்.  நாய்களும் அப்படியே, நாய்களுக்கு ஓரளவுக்கு டாய்லெட் டிரெயினிங்க் இருப்பதால் பரவாயில்லை. இல்லை அவை தின்னுமளவுக்கு பேள ஆரம்பித்தால், ரோட்டில் படுக்க வேண்டியது தான். நல்லவேளை, நாய்களுக்கெல்லாம் கருத்தடை ஆப்பரஷேசன் (ந்யுட்டரிங்க், ஸ்டெரிலைஷேசன்) செய்துவிட்டார், ப்ளு கிராஸின் மூலமாய். இது மிருகவதையில்லையோ என்று சிலசமயம் டாரதிக்குத் தோன்றும்.


கடந்தமுறை கூஃபி இறந்து போனது ஒபிசிட்டியினால்  தான் என்று டாக்டர் ஜேகே சொன்னது இவர் காதில் விழுந்தாலும் அதை புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. அவருக்கு தெரிந்த ஒரே காரணம் அவை கத்தினால், பசிக்குது என்று தான் நினைத்துக் கொள்வார். பூனையின் குரல் குழைவு கூட புரிந்து கொள்ள மறுக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை டாரதிக்கு. இந்த வயதுக்கு மேல் அவரை மாற்றவா முடியும்.  பூனைகள் பெருக வீட்டிற்கு வந்து போகும் உறவுகளின் எண்ணிக்கை சிறுத்துப் போனது.

எப்போதாவது  மகள் வந்து விட்டால், இந்த கஷ்டத்தில் தான் இருக்க வேண்டும்.  அவளும் வருவது குறைந்து விட்டது.

அதுவும் கடந்த முறை மகள் வந்திருந்த போது, பூனை, நாய்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதம் கூட அவருடைய அப்பா கொடுக்கவில்லை. அவள் இருந்த அறையில் நாயை விடவில்லை என்பதால், டாரதியைத் திட்டி கோபப்பட்டிருக்கிறார். இதை டாரதி, தன் மகளிடம் சொல்ல, அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள், ஹோட்டலில் தங்குவதற்கு. அதுவும் அப்போது சார்லி எதையோ வெளியே போய் தின்று விட்டு, வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததில், அவளுக்கும் குமட்டிக் கொண்டே இருந்திருக்கும். அந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு அந்த ஏஸி அறையிலேயே இருக்க முடியாது யாராலும். அதனால் நாயை வெளியே விடவேண்டியாதாயிருந்திருக்கும். அதை அவளுடைய அப்பா பொறுக்கமுடியாமல் டாரதியிடம் சண்டையிட்டதாய் கேள்விப்பட்டதும் புறப்பட்டவள் தான் அதன் பின் நாலைந்து வருடங்களாய் ஒரு தகவலில்லை.  அதைப்பற்றி நினைக்க டாரதிக்கு நேரமும் இருந்ததில்லை, அவளுடைய கணவரும் மகளைப் பற்றி பேசி ஞாபகம் இல்லை.

அவர்கள் கல்கத்தாவில் இருந்த போது, டாரதியின் மகளுக்கும் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஸ்வீட் ஷாப் தாஸின் இளையமகன் அபினவ்விற்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஓடிசென்று திருமணம் செய்து கொண்டார்கள். அவன் ஒரு நாடகக்காரன், மேல் நோக்கிய கண்களும், தூக்கிய புருவமும் அவனை வயதானவனாய்க் காட்டும். வீட்டில் அவன் ஒருத்தன் தான் சோம்பேறி, மற்றவர்கள் ஸ்வீட் ஷாப்பில் வேலை செய்து, விற்பனையை கவனித்துக் கொள்ள, அவன் மட்டும் எதுவுமே செய்யாது புத்தகங்கள், நாடகம் என்று எப்போதும் சுற்றிக் கொண்டு இருப்பது மாதிரி இருக்கும். அவன் மேல் இவளுக்கு எப்படி ஆசை வந்தது என்று டாரதிக்கு ஆச்சரியமாய் இருக்கும். டாரதியின் கணவருக்கு அது சுத்தமாய் பிடிக்கவில்லை. அதன்பிறகு நான்கு வருடத்தில் அவனுடன் வாழமுடியாது என்று திரும்பி வந்துவிட்டாள். திருமணத்திற்கு பிறகு மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார் டாரதியின் கணவர். இரண்டு வருடங்களுக்கு முன்னால், அவள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கழிவறையில் விஷம் குடித்து இறந்து கிடந்ததாய் தகவல் வந்த போதும் அவர் பெரிதாய் கலங்கியதாய் டாரதிக்கு ஞாபகம் இல்லை.  டாரதிக்குத் தான் ரொம்பவும் வேதனையாய் இருந்தது. டாரதிக்கு, ஏனோ வீட்டில் வளர்த்த கீரிப்பிள்ளை (லாரா) ஒன்று மோட்டார் பம்ப்பில் மாட்டிக் கொண்டு இறந்த போனது ஞாபகம் வந்தது.

வீட்டில்  யாரும் அவரை மீறி பேசமுடியாது. இதுவரை அவரை யாரும் எதிர்த்து பேசியதே இல்லை டாரதிக்கு நினைவிருக்கும் வரை.  அவர் உடன் பிறந்தவர்கள் கூட அவரிடம் எதிர்த்துப் பேசுவதோ, மறுத்துப் பேசுவதோ கண்டதில்லை. அவருடைய அண்ணனும், அக்காவும் கூட.  ஜான் பிரகாசம், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில், தலைமைப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பணியில் இருந்த போது கொடுத்த பெரிய டவுன்ஷிப் இடத்தில், அவரே ஒரு பங்களாவைக் கட்டிக் கொண்டார்.  பெரிய புல்வெளிகளையும் தோட்டங்களையும் தாண்டி, ஒரு பெரிய அடர் பசுமரம் போலத் தோன்றும் வீடு.  அதனுள்ளே நிறைய மிருகங்களை வளர்த்து வந்தார்.

பூனை, நாய், கீரிப்பிள்ளை, எறும்புதின்னி, மான்கள், குரங்குகள், ஸ்வான் எனப்படும் வெண்ணிற வாத்துக்கள்  என்று என்னென்னவோ.  அந்தப் பகுதியில் இருக்கும் மக்களும், உடன் வேலை செய்பவர்களும், இவரிடம்  காரியம் ஆவதற்காகவும், அவர் ப்ரியத்தை சம்பாதிக்கவும், கண்ணில் படுகிற மிருகங்களை எல்லாம் கொண்டு வந்து, பரிதாபமாய் ஒரு கதை சொல்வார்கள்.  மிருகங்களுக்காய் உடனே மனம் இரங்கி, வாங்கி வைத்துக் கொள்வார்.  எறும்பு தின்னிக்கு என்ன கொடுப்பது என்று தெரியாமல், பாலும், முட்டையும் கொடுத்து அது கொஞ்ச நாளில் இறந்தும் போனது.  அந்தக் கதையை ரொம்பவும் பரிதாபத்துடனும், கவலையுடனும், வருவோர் போவோரிடமெல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பார். மான் இது போன்ற வீடுகளில் வளர்க்கக்கூடாது என்பதற்காக அப்போது ஆந்திராவில் வனத்துறை அமைச்சராய் இருந்தவரை நேரில் கண்டு, அவருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சிறப்பு அனுமதி பெற்றிருந்தார்.

மோண்டுக்கும், மோனிக்கும் மாரி பிஸ்கட்  கொடுத்தியா என்று அவைகளுக்கு பழக்கமில்லாத உணவு வகைகளைக் கொடுத்து அவற்றை கவனித்து வந்தார். அல்லது அதற்கான  ஆட்களை வைத்திருந்தார்.  ஓய்வு பெற்ற பிறகு தான் டாரதிக்கான பிரச்னைகள் ஆரம்பமானது. அவர் பணியில் இருந்த போது இருந்த வீட்டின் மினியேச்சர் வீட்டை சென்னை நகர்த்தின் புறநகர் பகுதியில் வாங்கிக் கட்டினார்.  நிறைய நிழற்மரக்கன்றுகளையும், பழமரக்கன்றுகளையும் வீட்டைச் சுத்தி நட்டார். அதில் சில்வர் ஓக் என்ற மரங்கள் மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியவை, அவற்றையும் இங்கே நட்டு வளர்க்க முயன்றார். ஓரளவு வளர்ந்த பிறகு வேர் சரியாய்ப் பிடிக்காமல், தண்டின் கனம் தாங்காது சாய்ந்துவிடும். ஆனாலும் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். அப்புறம் ஒரு ஐந்து வருடங்களுக்கு பிறகு அதை நிறுத்தி விட்டார்.

ஓய்வு பெற்ற பிறகு அவருடைய பண்ணை வீட்டுக்கு குடி வந்த போது, அவர் பணியில் இருந்தது மாதிரியே நிறைய வேலையாட்கள் இருந்தார்கள்.  தனியாய் அவர்களுக்கென்று அவுட் ஹவுஸ் இருந்தது.  மான்களைக் கொண்டு வர அரசாங்கம் அனுமதி தரவில்லை. வெறும் குரங்குகளும், நாய்களும், கீரிப்பிள்ளைகளும், வாத்துக்கள் மட்டுமே அவரால் இங்கு கொண்டு வர முடிந்த்து.  வாத்துக்கள் நீந்துவதற்கும், விளையாடுவதற்கும் குளம் போல ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.  அவற்றை நாய்களும், பூனைகளும் போய் கடித்து விடாத படி, வேலியெல்லாம் கட்டி வைத்திருந்தார்.  ஆனாலும் வாத்துக்கள் குஞ்சுகள் பொரித்து கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விட்டன.  பூனைகளாய் இருக்கலாம், இல்லாவிட்டால் பெத்தன்னாவாய் இருக்கலாம், யார் வாய்க்குள் போனது என்று ஆராயவில்லை.  அதன் பிறகு வாத்துக்களை தனக்குத்தெரிந்த இன்னொரு பண்ணை வீட்டாரிடம் கொடுத்து விட்டார்.  இது போல ஒவ்வொன்றாய் குறைய, அதற்கான பிரத்யேக வேலையாட்களும் குறைய ஆரம்பித்துவிட்டார்கள். டாரதிக்கு எல்லாமே சலிப்பாய் இருந்தது, இதை வேண்டாமென்று அவரிடம் சொல்ல முடிவதில்லை ஒருபோதும்.  எப்போதாவது, வரும் மகளும் வீட்டிற்கு வராமல் இருப்பதே இந்த பிராணிகளாலும் அதனுடனேயே இருக்கும் துர்நாற்றத்தினாலும் தான் என்று சொல்ல முடிவதில்லை.

எல்லாவற்றிலும்  பெரிய அலுப்பான விஷயம் இந்த நாய்களைக் குளிப்பாட்டுவது  தான், அதுவும் உன்னிகளுக்கென்று டிக் ஷாம்பூவும், கோட் மெத்தென  இருப்பதற்கு மற்ற ஷாம்பூவும் இட்டு அவைகளை குளிக்க ஊற்றி, உணர்த்துவதற்குள், ஒரு ஜென்மம்  தீர்ந்துவிடுவது போல இருக்கும். நல்லவேளை பூனைகள் குளிப்பதில்லை, அதன் எண்ணிக்கைக்கு அதையும்  குளிக்க ஊற்ற வேண்டியிருந்தால், அவள் எப்போதோ கர்த்தரிடம் போய்ச் சேர்ந்திருக்கவேண்டியது தான் என்று நினைத்துக் கொள்வாள். அதன்பிறகு, குளித்து முடித்ததும், அவைகளுக்கு டிக் பவுடர் போட்டு, கோம்ப் செய்ய வேண்டும். இது போக வாரத்திற்கு ஒருமுறை அவைகளுக்கு நகம் வெட்டுவதும், உண்ணி களைவதும் கூடுதல் வேலைகள். நாய்களை குளிப்பாட்டுவதை டாரதியின் கணவர் தான் செய்து கொண்டிருந்தார். அப்புறம் அவராக எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, தன் அறையோடு தங்கிவிட்டார்.  டாரதிக்கு தான் படுக்கை அறைக்கும், கொள்ளைக்கும், கிணற்றடிக்கும் அலைவதே முழு நேரவேலையாகி விட்டது .

இத்தனை  உடல் அலுப்பு இருந்தாலும், நேரம் போய்விடுகிறது இவைகள் இருப்பதால், படுத்ததும் உடலை அழுத்தும் உறக்கம் வந்து  விடுகிறது.  முழங்கால்  வலியும், இடுப்பு வலியும்  இருந்தாலும் ஒரு மாதிரி டாரதிக்கு பழகிவிட்டது.

தினமும் காலையில் கேழ்வரகு கஞ்சியில்  கொஞ்சம் பாலை ஊற்றி உப்பு  போட்டு குடித்துவிட்டு உட்கார்ந்து  விடுவாள். பெத்தன்னா சமையலைப் பார்த்துக் கொள்வான். அதனால் அடுப்படிக்கு போக வேண்டியிருக்காது டாரதிக்கு.  பதினோரு மணிவரை நாய்கள், பூனைகளின் பராமரிப்பு வேலைகளைப் பார்த்துவிட்டு, அன்றன்றைக்கான அப்பத்தை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவாள்.  நாய்களுக்கு வைத்த உணவு அப்படியே இருக்கும். பூனைகள்  மட்டுமே அடிக்கடி வந்து  தட்டை காலி செய்து விட்டுப் போகும். சார்லி, ஜெர்ரி, சீசர் எல்லோரும் அங்கங்கே திரிந்து கொண்டே இருந்தாலும், உணவை உண்ணுவது போல இருந்தாலும், உணவு என்னவோ காலி ஆவதே இல்லை.  டாரதிக்கு பல நேரங்களில் அது ஆச்சரியமாய் இருக்கும்.  பாலை டாரதியே பலமுறை எடுத்து கீழே கொட்டியிருக்கிறாள். நாய்களுக்கு வைத்ததை ஏனோ பூனைகள் குடிப்பதில்லை.  எப்போதாவது  நாய்களுக்கென்று வைத்திருக்கும், கோழியின் ஈரல்களை, ருசி பார்ப்பதோடு சரி.

பெத்தன்னா கதவைத்தட்டுவது போல இருந்தது. டாரதி அன்றன்றைக்கான அப்பத்தை அப்படியே ஒரு புக் மார்க் வைத்து கட்டிலிலேயே வைத்து விட்டு, கையிலே கட்டில் முனையில் சாத்தி வைத்திருந்த குச்சியை எடுத்துக் கொண்டாள்.  சீசரோ, ஜெர்ரியோ வாசலில் இருந்தால், உள்ளே வர முயலலாம், அதன் பிறகு சார்லியுடன் சண்டையிடுவதை தடுக்க முடியாது.  கதவைத் திறக்கும் போதே சார்லி, சங்கிலியுடன் இழுத்துக் கொண்டு, குரைத்தான்.  குச்சியை ஓங்கி ஒரு சத்தமிட்டாள், அடங்கிவிட்டான். அவளுக்கு, குச்சியில்லையென்றால், யாரும் சொல்வதை கேட்கமாட்டார்கள், குச்சி அவர்களுக்கு புரிகிற மொழி என்று நினைத்துக் கொண்டே லேசாய் சிரித்தாள். பெத்தன்னா மறுபடி கதவைத் தட்டினான்.  மதியம் சாப்பாடு நேரமே ஆகவில்லை, அதற்குள்ளே என்ன அவசரம் அவனுக்கு என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்

பெத்தன்னா அழுது கொண்டிருந்தான்.  அவளுக்கு கேள்வியாய் இருந்தது, மறுபடி ஏதாவது பூனையை, ஜெர்ரி கடித்து விட்டானோ என்று  தோன்றியது.  வாசலில் பெத்தன்னாவின்  பின்னால், சீசர் நின்று கொண்டிருந்தான். அவசர அவசரமாய் ஒருச்சாய்த்தபடி  வெளியே வந்து கதவைச் சாத்தினாள்.  பெத்தன்னா அழுது கொண்டே இருந்தான்.

‘என்னடா அளுதுட்டு இருக்க?’

“அய்யா  போயிட்டாரும்மா?”

‘என்னடா உளர்ற? காலையில நல்லாதானே  இருந்தாரு? சீசருக்கு காது வலின்னு சொல்லிட்டு எங்கிட்ட வந்தாரு, நான் வெளிய வந்து  மருந்து ஊத்தினேனே? நீயும் தானே இருந்த, அவன் தலைய அமுக்கிக்கிட்டு?’

“அய்யா  என்னைக்கும்மா வந்தாரு  வெளியிலே, ரெண்டு வருஷமாச்சு! சின்னம்மா இறந்ததில இருந்து  படுத்த படுக்கையாத்தான இருக்காரும்மா!, ஆனா, இல்லாத நாய்களை இருக்கிறதா நினைக்கிறீங்க”  என்று மேலும் அழுதான்.

டாரதி அவனை வினோதமாய் பார்த்தாள்.

Monday, June 18, 2012

இரண்டு கவிதைகள்...


தேர்முட்டி:

விலகாத இருளென 
அடர் கருப்பில் நின்றிருந்தது
அந்த மாயாவதத்தேர் 
புராதனத்தின் புகை மண்டி
அழுந்துயர் பிசுக்கென ஒட்டிக்கிடந்தது
உடைந்திருந்த அச்சு
உலோகவார்ப் பட்டைகள் கழன்ற
மரச்சக்கரங்களும் 
எப்போதோ உருண்ட வீதிகளின்
மணற்துகள்களை
உதிர்த்து கொண்டிருந்தது
மேற்கே வானத்தின் சிகப்பு
தேரின் மீது தெறித்திருந்தது
எச்சத்தில் விழுந்த
அரசவிதை ஒன்று முதல் தட்டில்
இளஞ்சிவப்பு பசுந்தளிர்களை
துளிர்ந்திருந்தது
அந்த தேர்முட்டியை கடக்கையில்
பேரரவம் கேட்டது எனக்கு!



****
பழுதான பாலம்:


பழுதான பாலம் என்று
தான் தோன்றுகிறது
அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா
என்று தெரியவில்லை
கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில்
எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார்
விரைந்து கடந்தால் இருவரை
தாங்குமா என்று சந்தேகம் வந்த்து
கொஞ்சம் காத்திருந்தேன்
ஏதோ பேசிக் கொண்டே வந்த
இரண்டு பேர்கள் கடக்க
ஆரம்பித்தார்கள்
நானும் சேர்ந்து கொண்டால்
பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம்
அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம்
மறுபடி காத்திருந்தேன்
அவர்கள் என்னை வேடிக்கையாய்
பார்த்து கடந்து சென்றார்கள்
இப்போது பாலத்தில் யாருமில்லை
தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது
திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து
வேற்று வழி இருக்கா என்று
விசாரிக்க ஆரம்பித்தேன்.

Friday, March 16, 2012

நீர்த்தாரைகள்...

அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது.  செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார்.  சுப்பிரமணியின் அப்பாவையும், சுப்பிரமணியையும் பார்த்தவர், வாங்க, வாங்க! என்றார்.  குமாரின் அப்பா டிரைவர் வேலை தானே பார்த்தார். செருப்புக்கடையும் வச்சிருக்காரே என்று தோன்றியது குமாருக்கு. 

‘நம்ம பயலுக்கு செருப்பு வாங்க வந்தேன், நல்ல விலை அதிகமா அழகான செருப்பா எடுத்துக் கொடுங்க! போட்டு நடக்கும் போது பய, ராசா மாதிரி இருக்கணும்!’

“எடுத்துடுவோம்! இப்போ தான் பர்மால இருந்து வந்திருக்கு இந்த செருப்பு! பாருங்க! சும்மா மெத்து மெத்துண்ணு இருக்கும்!”


சிவப்புக்கலரில், பூக்கள் படம் போட்டிருந்த செருப்பை, ஒரு டப்பாவில் இருந்து பிரித்து போட்டார்.  நைலான் வார் வைத்து செருப்பு பளபளவென்று இருந்தது.  சுப்பிரமணிக்கு பொறுக்கமுடியவில்லை.  வேகவேகமாய், காலை கீழே போட்டிருந்த செருப்புக்குள் நுழைத்தான். அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.


“அப்பா! இதையே வாங்கிக்கலாம்பா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!” என்றான்


‘இதே வாங்கிக்கலாம், ஆனா வளர்ற பய, கொஞ்சம் பெருசா எடுத்துப் போடுங்க!’ என்றார்


“செஞ்சுடுவோம்!” என்று அவர் எடுத்து வந்த செருப்பு, அவன் அப்பா போடுவது போல பெரிதாக இருந்தது. 


அப்போது குமார் ஒரு கதவைத் திறந்து கொண்டு கடைக்குள் இருந்து வெளியே வந்தான்.  அவன் காலிலும் அதே போல பெரிய செருப்பு இருந்தது. சுப்பிரமணி இப்போது வேகமாய் அவனுக்குக் கொடுத்த பெரிய செருப்பை எடுத்துக் கொண்டு,  நெஞ்சோடு அனைத்துக் கொண்டான்.  அதன் பின்னால், மோதிர வாரை பிடித்தபடி ஒரு கம்பி கட்டியிருந்தது.  செருப்புக்கு அவனுடைய அப்பா காசு கொடுக்கும் போது, கடைக்குள் இருந்து ரயில் ஒன்று ‘கூ’வென சத்தமிட்டுக் கொண்டே வந்தது. அதைக் சுப்பிரமணியின் அம்மா தான் ஓட்டி வந்தாள். இடுப்பில் தம்பிப்பாப்பா இருப்பதைப் பார்த்தான்.

திடீரென்று முழிப்பு வந்துவிட்டது. சுப்பிரமணியபுரம் ரயில்வே கிராஸில் ரயில் ‘கூ’வெனக் கத்திக் கொண்டே ஓடுவது கேட்டது. எழுந்ததுமே, செருப்பு இருக்கிறதா என்று நார்க்கட்டிலில் இருந்து இறங்கித் தேடினான். செருப்பைக் காணோம். அப்பா, சேந்தியில வைத்திருப்பாரோ என்று யோசித்தவன்,  நார்க்கட்டிலில் படுத்திருந்த அப்பாவை எழுப்பினான்.

“அப்பா! அப்பா!” என்று உசுப்பத் தொடங்கியதும், முனகிக் கொண்டே எழுந்தார் சுப்பிரமணியின் அப்பா.

‘என்னய்யா, இந்த நேரத்துல உசுப்புற? அப்பாவுக்கு அசதியா இருக்குய்யா!’ 

“அப்பா நேத்து நீ வாங்கிக் கொடுத்த செருப்பக் காணோம்பா!”

‘நேத்து எங்கய்யா வாங்குனோம், இன்னைக்குத் தானே கூட்டிப்போறேன்னு சொன்னேன்? கெனாக்கண்டியா?’ திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான் சுப்பிரமணி.

‘படுத்துத் தூங்குயா, இன்னைக்கு வாங்கிடலாம், சரியா?’

“சே!” என்று அலுத்துக் கொண்டே திரும்பவும் அப்பாவுக்கு அருகில் படுத்துக் கொண்டு, அவரின் மார்பில் ஒட்டிக் கொண்டான். அப்பாவின் மேல் இருந்த வாசனை அவனுக்கு ரொம்பப் பிடித்தது.

அப்பா சொன்னால், சொன்னதை செய்து விடுவார்.  அம்மா தான் பொய்க்கோளி, எப்பவுமே சொல்வதை செய்ய மாட்டாள். கேட்கும்போதெல்லாம் அப்பாவைத்தான் குறை சொல்வாள். அதனால் சுப்பிரமணிக்கு அம்மாவை இப்போதெல்லாம் பிடிப்பதே இல்லை. அவன் தூங்குவதும் இனி அப்பாவுடன் என்றாகிவிட்டது.    முதல் நாள் காலையில் எழுந்தவுடன், அவனை அவர் தான் குளிப்பாட்டினார்.  குளிக்கும் போதே அவன், அப்பாவுடன் கொஞ்சி, கொஞ்சி பேசிக் கொண்டிருந்தான்.

“அப்பா!, எஞ்செருப்பு அந்து போச்சுப்பா? நேத்து மாணிக்கண்ணே கடைக்கிட்ட வரும்போது சகதில மாட்டிக்கிச்சு, இளுத்து பாத்தேனா, அந்துக்கிச்சு!”

‘வேற செருப்பு வாங்கிடலாம், தீபாவளி வருதுல்ல, அப்போ, அப்பா ஒன்னைய டவுன் ஹால் ரோடுக்கு கூட்டிட்டுப் போயி, புதுச்செருப்பு வாங்கித்தரேன் போதுமா!’

“நேத்து பள்ளியோடம் விட்டு வர்றயிலே, அந்து போச்சுப்பா, அம்மா ஏன்டா செருப்பு பிச்சன்னு அடிச்சுச்சுப்பா!” என்று லேசாய் விசும்பினான்.

‘அவ கிடக்கா மடக்கழுத! நீ அழுவாத, நான் வாங்கித்தாரேன் எந்துரைக்கு!’

“எனக்கு அம்மாவ பிடிக்கவே இல்லப்பா! எனக்கு ஒன்னைய தான் ரொம்ப பிடிக்கும்!”

‘அப்படி சொல்லக்கூடாது தங்கம், நம்மம்மா பாவம்ல, அவளுக்கு யாரிருக்கா?’

“அம்மாவுக்குத் தான் தம்பிபாப்பா இருக்குல!”

‘நீயுந்தான் பாப்பா அம்மாவுக்கு! ரெண்டு குட்டிங்களுமே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்பவும் வேணும்ல, இனிமே அப்படி சொல்லக்கூடாது சுப்புக்குட்டி!’ என்று சொல்லும் போதே, அவனுடைய அப்பா சோப்பை வயிற்றில் தேய்க்க, வளைந்து நெளிந்து சிரித்தான்.

“நான் குட்டி இல்லப்பா, நான் பெருசு, தம்பி பாப்பா தான் குட்டி! உனக்கு ஒண்ணுமே தெரில!”

குனிந்து அவனுடைய பாதத்தில் சோப்பு போட்டுக் கொண்டிருந்தவரை, தாடையைப் பிடித்து, நிமிர்த்தி,

“அப்பா, என்னயப் பாரேன்!” என்றான்.

‘என்னய்யா?’

“குமாரு அவங்கப்பா, அவனுக்கு போன மாசம் புது சூ வாங்கி தந்திருக்காருப்பா, இவ்வளோ பெருசு!” என்று கையை விரித்துக் காட்டினான்.  கையில் இருந்த சோப்பு நுரையில் ஒட்டிக் கொண்டு இரண்டு கைகளுக்கும் இடையில் பாலம் கட்டியது சோப்பு நுரை. அதைப்பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. குமாரின் சூ வை விட்டு, இப்போது அவனுடைய அப்பாவை சோப்புக்குமிழைப் பார்க்கச் சொன்னான். நிமிர்ந்து பார்த்தார்.

‘பாரு, சோப்பு முட்டைக்குள்ள கலர்கலரா தெரியுது பாரு, ஒம்மூஞ்சி கூட தெரியுது பாரு!’

“எங்க, எங்க?” அவன் பார்ப்பதற்குள்ளாகவே அது உடைந்தது. லேசாய் காலை உதைத்து அழ ஆரம்பித்தான்.  காலை உதைத்ததில், கினத்துமேட்டில் இருந்த தண்ணீர் சலப் சலப் என்று தெறித்தது.

‘ஆடாதய்யா, பாரு அப்பா மேலெல்லாம் தண்ணீ தெறிக்குது!, கண்ணை மூடு, மூஞ்சிக்கு சோப்பு போடலாம்’

அவன் கண்ணை மூடிக்கொள்ள, அரக்கி சோப்பை அவன் முகத்தில் தேய்த்தார்.  தேய்த்துக் கொண்டே, மூக்கில் விரலை வைத்து, சீந்தச் சொன்னார்.

‘ம்ஹூ சொல்லு!’ அவர் அவன் மூக்கை சீந்தும் போது, க்கே என்று கத்தினான்.

‘அவ்ள தான் அவ்ள தான், மூக்கச் சீந்தலேன்னா, அசிங்கமா வடவடன்னு இருக்கும்ல! உம்மூஞ்சக் கழுவி அம்மா ரசம் வச்சுடுவா, உடம்ப எப்பவும் சுத்தமா வச்சுக்க வேணாமா!’

“ம்! அப்பா எனக்கு ஐஞ்சு, ஆறு நாளு லீவுப்பா!” என்று மூன்று விரல்களைக் காட்டியவன், பலமாய் தலையசைச்சு, இன்னும் ஒரு விரலை விடுவித்தான்.

‘அட்ரா சக்கே ன்னானா! ஆறு நாளு லீவா, நானும் ஒன் பள்ளியோடத்துக்கே படிக்க வந்துடவா?

“ப்போப்பா...! எங்க பள்ளியோடத்துல சின்ன பையனுங்க தான் படிக்கிறாய்ங்க! ஒன்ன மாதிரி மீசை வச்சிருந்தா அங்க சேக்க மாட்டாங்க!” வாயில் வழிகிற தண்ணீரும், எச்சிலும் கலந்து தெறித்தபடி பேசினான்.

அவன் பள்ளிக்கூடத்தில், தீபாவளிக்கு இப்போதே லீவு விட்டு விட்டார்கள்.  இது போல காம்பவுண்டில் இருக்கும் எல்லாக்குழந்தைகளுக்கு லீவு ஆரம்பித்து விடும்.    தீபாவளி முடிந்து பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கும் வரை காம்பவுண்ட்டே ஏக களேபரத்துடன் இருக்கும். எல்லாக்குழந்தைகளும் மொட்டைமாடிக்கு போய் விளையாடுவார்கள்.  அவர்கள் அங்கே குதிப்பது, வீட்டுக்காரக் கிழவிக்கு தலையில் குதிப்பது போலிருக்கும்.  ஒரு கம்பை எடுத்துக் கொண்டு, மாடிக்குச் சென்று குழந்தைகளை விரட்டிப் பிடிக்க முயல்வதும் அவர்கள் அவளை ஏய்ப்பதும் விடுமுறைக் காலங்களில் வாடிக்கையான ஒரு விஷயம். குழந்தைகளின் தகப்பன்கள் வரும்வரைக் காத்திருந்து, அவர்களின் குழந்தைகள் செய்த சேட்டைகளையெல்லாம் பட்டியல் போடுவாள். கூடவே, அவரவர்களின் சம்சாரங்களும் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்துக் கெடுப்பதாய் ஒரு புகாரும் இருக்கும்.

சுப்பிரமணியின் அப்பாவுக்குத் தெரியும். அம்மாதான் சுப்புவைக் கண்டித்து வளர்ப்பதும், இவர் உருவி உருவி செல்லம் கொடுப்பதும்.  பேறுகாலத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும், உதவிக்கு ஆளில்லாமல் அல்லாடும் தன் மனைவியை பார்க்கையில் அவருக்கு வருத்தமாய் இருக்கும்.  குழந்தையை கவனிப்பதிலும் தான் பெரிதாய் அவளுக்கு உதவமுடியவில்லை என்பதை நினைக்கும் போது, மனைவியின் மீது பிரியம் அதிகமாகிவிடும். 

சுப்பிரமணிக்கு இப்போது ஆறு வயதாகிறது.  பக்கத்தில் இருக்கும் சகாயமாதா ஆரம்பப் பள்ளியில் படிக்கிறான். காம்பவுண்டில் இருக்கும் அனேக குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பதால், பள்ளி சென்று விடுவதிலோ, அழைத்து வருவதிலோ, சுப்பிரமணியின் அப்பா, அம்மாவிற்கு சிரமம் இருப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில் இருக்கும், அமுதா தான் எல்லோரையும் பள்ளிக்கு போகவர பார்த்துக் கொள்கிறாள். அவளால் முடியாத பட்சத்தில், அடுத்த கிளாஸில் இருக்கும் ராணி பொறுப்பை எடுத்துக் கொள்வாள்.  இது போன்ற காம்பவுண்ட்களில் ஒரு பெரிய வசதி இது.  அமுதா எப்படியாவது டீச்சராகிவிட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவள். மற்ற குழந்தைகளை மேய்ப்பதிலும், அவர்களை பார்த்துக்கொள்வதிலும் அவளுடைய டீச்சராகும் முனைப்பு நன்றாகவே தெரியும்.  அவள் காட்டூரணியில் இருந்து அத்தை வீட்டுக்கு படிக்க என்று வந்த போது, சுப்பிரமணி அவளிடம் அப்படியே ஒட்டிக் கொண்டான். அவளுக்கு சுப்பிரமணியை பிடித்துவிட்டது.  அக்கா, அக்கா என்று அவள் பின்னாடியே திரிவான்.

புதுச்செருப்பு கிடைக்கப்போகிறது என்று நினைத்த போதே அவனுக்கு அத்தனை சந்தோஷமாய் இருந்தது.  இதை அமுதா அக்காவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அப்பா, மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிட்டு, மாலையில் திரும்ப வேலைக்குப் போகும்போது, அவனையும் அழைத்துச் செல்வதாய் சொல்லி இருக்கிறார். அப்போது தான் செருப்பு வாங்கித்தருவார். அவனுக்கு செருப்பு வாங்கும் சந்தோஷத்துடன், இன்னொரு சந்தோஷமும் சேர்ந்து கொண்டது.  அப்பாவுடன் சாயங்காலம் அவர் வேலை செய்யும் இடத்துக்கு செல்லும் போது, மாரிமுத்து அண்ணன் இருந்தால், அவனுக்கு ரோஸ்மில்க் இல்லாட்டி ஜிகர்தண்டா வாங்கித்தருவார். சுப்பிரமணிக்கு ஜிகர்தண்டாவை விட ரோஸ்மில்க் தான் பிடிக்கும். இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று அவனுக்கு துடித்தது.

அப்பா வேலைக்குப் போனபிறகு, காம்பவுண்டில் இருந்த எல்லாக் குழந்தைகளிடமும், அவனுடைய அப்பா அவனுக்கு புது செருப்பு வாங்கிக் கொடுக்கப்போவதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்.  அவர்களும், தங்களுக்கு தீபாவளிக்கு வரப்போகும், ஜிமிக்கி, ஸ்டிக்கர் பொட்டு, பட்டுப்பாவாடை என்று தத்தமது கனவுகளை விரித்துக் கொண்டிருந்தார்கள்.  குமாருக்கு மட்டும் அவன், சுப்பிரமணியைப் பார்த்த போது பொறாமையாய் இருந்தது.  அவனுடைய ‘சூ’ இப்போ கொஞ்சம் பழசாகிவிட்டது என்று அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அமுதா அவன் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்

சுப்பிரமணியின் அம்மா, அமுதாவிடம் பிரியமாய் இருப்பாள், சுப்பிரமணி பார்ப்பதற்கு அவனுடைய அம்மாவைப்போலவே இருப்பான். ஏதாவது பலகாரம் செய்தால், அமுதாவுக்கு தவறாமல் கொடுப்பாள். பதிலாய் அவளும், சுப்பிரமணியின் அம்மாவுக்கு சிறு சிறு உதவிகள் செய்வாள்.

புதிதாய் வாங்கப்போகும் பொருட்களைப் பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, அடுத்து தீபாவளிக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆளுக்காள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  சுப்பிரமணிக்கு தீபாவளிக் கதை என்றால், ரொம்ப பிடிக்கும்.

தீபாவளிக்கு முதல் நாள் எல்லோரும் மொட்டை மாடிக்கு வந்துவிடுவார்கள். வந்து வானத்தில் வரும் ராக்கெட்டுகளை எண்ண வேண்டும். அது தான் அவர்களுக்கு விளையாட்டு, யார் அதிகம் எண்ணுகிறார்களோ, அவர்களுக்கு தோற்றவர்கள், 5 சீனிவெடிகள் தரவேண்டும்.  போன தீபாவளியின் போது, சுசீலா தான் ஜெயித்தாள்.  இந்த வருஷம், சுப்பிரமணி தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.  அதுவும் புதுச் செருப்பு போட்டால், உயரமாகிவிடலாம், அப்போ வானத்தில் நிறைய ராக்கெட்டுகளை பார்க்க முடியும் என்று தோன்றியது. 

‘சுப்பு, உங்கம்மா கூப்பிடுற மாதிரி இருக்கு! கீழ போய் பார்த்துட்டு வா!’ என்றாள் அமுதா.

“போக்கா, நாம்ப்போல எனக்குக் கேக்கல!”

‘இங்க பாரு! கேக்குதா?’ என்று சத்தம் வந்த திசையைப் பார்த்து அவனைத் திருப்பினாள் அமுதா.  அங்கிருந்து எழுந்து, மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவரில் எக்கி  குனிந்து கீழே பார்த்தாள்.

‘அத்தை, சுப்பு இங்க தான் இருக்கான்!’ என்றாள்

“அக்கா நாம்போலை, ஒங்கூட தான் இருப்பேன்,  நான் போய்ட்டா, என்ன விட்டுட்டு நீங்கெல்லாம் கத பேசுவீங்க!”

‘இல்லை, நாங்க யாரும் பேசமாட்டோம், நீ வந்த பெறகே பேசலாம்!’ என்றாள்

சுப்பிரமணியின் அம்மாவின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. அமுதா அவனையும் அழைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் சாயந்திரம் விளையாடலாம் என்று சொல்லிவிட்டு, கீழே இறங்கினாள்.  சுப்பிரமணி அவள் பாவாடையைப் பிடித்தபடியே  உடன் இறங்கினான். கீழே வந்ததும் இருவரும் பார்த்தபோது, அடுப்படியில் தம்பிப்பாப்பாவை வைத்துக் கொண்டே, அடுப்பில் விறகைத் தள்ளிக் கொண்டிருந்தாள் சுப்பிரமணியின் அம்மா.

‘ஏன்டா தொண்டத்தண்ணி வத்றாப்ல, கத்திக்கிட்டு கிடக்கென், உனக்கு காது கேக்கலயா? லீவு விட்டதுமாச்சு, என் உசுர வாங்குறதுமாச்சு!’ என்றாள்.

‘இல்லத்தை, மச்சுல தான் இருந்தோம், அதான் கேக்கலை!’ என்று அவனுக்கு ஆதரவாய்ப் பேசினாள் அமுதா.

“அவனுக்கு நீ வக்காலத்தா, சரி போய் ரெண்டு தேங்காச்சில்லு வாங்கியாந்துரு!” என்று அவனிடம் சில்லறையைக் கொடுத்தாள்.

“‘நாம்போ மாட்டேன், ஓயாமக்கடைக்குப் போகச்சொல்லிட்டே இருக்க!”

‘சொன்ன பேச்சக்கேக்கலேன்னா, சாப்பாடும் கிடைக்காது ஒரு மயிருங்கிடைக்காது, அப்பாவ செருப்பு வாங்கித் தர வேணாம்னு சொல்லிடுவேன்!’

‘அத்தை, நாம்போயி வாங்கியாரேன்!’ என்றாள் அமுதா

“நீ ஏம்போவணும், உனக்கா வடிச்சுக் கொட்டுறேன், அவம்போட்டும், நீ போனா, உங்க கெழவி பிடிச்சு என்னக்கத்தும், சமஞ்ச குமரியக் கடைக்கு அனுப்புறவ!’ ன்னு

‘இந்தாப் பிடி!’ என்று அவன் கையில் காசைத் தினித்துவிட்டு, அழுகிற தம்பிப்பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே போனாள். ‘அழுவாத ராசா, இந்தாப்பாலைக்குடி!’ என்று அவன் அம்மா சொல்வது அவனுக்குக் கேட்டது. நிமிர்ந்து, அமுதாவைப் பார்த்து முழித்தான்.  கண்கள் கலங்கியிருந்தது அவனுக்கு.

‘வா, வா நம்ம ரெண்டு பேரும் பொயிட்டு வந்துடலாம், அம்மாட்ட சொல்லாத!’ என்று கீழ்க்குரலில் சொல்லி அவனை இழுத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.

தேங்காய்ச்சில்லைக் கொண்டு வந்து அம்மாவிடம் நீட்டினான். அமுதாக்காவின் பெரியத்தை ஏதோ வேலை கொடுக்க, அவள் அங்கே போய் விட்டாள். 

‘அங்கன வை, எம் மூஞ்சி முன்னாடி வந்து நீட்டுற, நாந்தான் தம்பிப்பாப்பாவை தூங்க வச்சுட்டு இருக்கேன்ல, தெரியல உனக்கு? வச்சுட்டு எங்கியும் போயிராத, சட்னி அரச்சுடுறேன், தோச சாப்ட்ட பெறகு போ வெள்ளாட!’ என்று தொட்டிலை பிரித்து, தம்பிப்பாப்பாவை பார்த்து, ‘தூங்குடா செல்லம், அம்மாவுக்கு வேலை இருக்குல்ல? இங்க வா வந்து தம்பியப்பாரு எப்படி சிரிக்கிறாம்பாரு!’ என்று சுப்பிரமணியை அழைத்தாள்.

லேசாய் வந்து எட்டிப் பார்த்தான். அவனுக்கு தம்பிப்பாப்பா அழகாய் சிரிப்பது பிடித்திருந்தது. அவன் கன்னத்தை கிள்ள வேண்டும் போல இருந்தது. தொட்டிலுக்குள்ளே கையை விட்டு, அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள, அவன் அழத்தொடங்கிவிட்டான்.

‘அழ வச்சிட்டியே பாப்பாவ? இப்படித்தான் கொஞ்சுவாங்களா, போய் அங்க ஒக்காரு வரேன்!, என்று அவனிடம் சொல்லிவிட்டு ‘யாருடா செல்லம், அண்ணெ ஒரு மடசாம்பிரானி, கிள்ளிட்டானா, அவனை அடிச்சிடலாம்! அழுவாத!’ என்றபடியே சுப்பிரமணியைப்  பார்த்து முறைத்தாள்.

தம்பிப்பாப்பாவை கொஞ்சும் போது அம்மா எவ்வளவு அழகாக இருக்கிறாள்.  தம்பிப்பாப்பா வருவதற்கு முன்னால், தன்னைக் கொஞ்சும் போதும் அழகாகத்தான் இருப்பாள். அப்போதெல்லாம், அவன் அம்மாவை விட்டு பிரிவதே இல்லை.  அம்மா தான் எப்போதும் சாப்பாடு ஊட்டி விடுவாள். கதை சொல்வாள். சாமிப்பாட்டு சொல்லித்தருவாள்.  ஆனால் இப்போதெல்லாம், எல்லாமே தம்பிப்பாப்பாவுக்குத்தான். தம்பிப்பாப்பாவுக்கு, கதையும் புரியாது, பாட்டும் தெரியாது ஆனாலும், அவனுக்குத் தான் அம்மா பாட்டுப்பாடி கதையெல்லாம் சொல்கிறாள். தலை குனிந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.

குனிந்தபடியே தூங்கி விழுந்தவனை எடுத்து, படுக்கையில் கிடத்தினாள் அவனுடைய அம்மா.  தேங்காய்ச்சில்லை எடுத்துக் கொண்டு, பொரிகடலையும், பச்சமிளகாய், கொஞ்சம் புளி, கறிவேப்பிலை, கட்டிப்பெருங்காயம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, அம்மி இருந்த நடையில் வைத்து அரைக்கத் தொடங்கினாள். அவளுக்கு உடம்பெல்லாம் வேதனை எடுத்தது.  அம்மிக்கல்லை இழுத்து அரைக்கும் போது, மூச்சு வாங்கியது.

சட்னியை தாளித்து, இறகு போல இரண்டு தோசைகளை வார்த்து தட்டில் வைத்துவிட்டு, அவனை எழுப்பினாள். 

எழுந்தவுடன், “சாயங்காலம் ஆயிடுச்சா?” என்றான்

‘ஆயிடுச்சு, எந்திரி சாப்பிடு முதல்ல, இன்னும் சாயங்காலம வரலை, காலையில தான்’ என்றாள்.

அவனுக்கு அப்பா எப்போது வந்து தன்னை செருப்பு வாங்கக்  கூட்டிக் கொண்டு செல்வார் என்று தோன்றியது.  அம்மா கொடுத்த தோசை ருசியாய் இருந்தது.  இன்னுமொரு தோசை கேட்டு, அன்றைக்கு மூன்று தோசை சாப்பிட்டான்.

அப்பா வரும்வரை என்ன செய்வது என்று தெரியவில்லை.  பைக்கட்டில் வைத்திருந்த தீப்பெட்டிப் படங்களை எடுத்தான்.  அதை வைத்துக் கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தான். குமாரிடம் கப்பல் படம் போட்ட தீப்பெட்டிப் படங்கள் நிறைய இருந்தது.  இவனிடம் இருப்பதெல்லாம், மிருகங்களும், ரயிலும், பூக்களும் தான். மாணிக்கம் அண்ணனின் கடையில் தான் கப்பல் படம் போட்ட தீப்பெட்டிப்படங்கள் இருப்பதை பார்த்திருக்கிறான்.  அப்பா வந்ததும், காசு கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.  அம்மாவிடம் தீப்பெட்டிப்படம் என்றால் காசு கொடுக்க மாட்டாள்.  பால்கோவா வாங்க வேண்டும் என்றால் தான் தருவாள்.  பால்கோவா பொட்டலத்தில் சில சமயம் நாலனா காசு வைத்திருப்பார்கள். அது கிடைத்தால், தீப்பெட்டிப்படம் வாங்கிவிடலாம் என்று தோன்றியது.

“அம்மா!”

‘என்னடா?’

“அம்மா, எனக்கு பத்துக்காசு குடும்மா!” என்றான்.

அவன் விரித்து வைத்திருந்த தீப்பெட்டிப்படங்களை பார்த்தவள், ‘எதுக்குடா, தீப்பெட்டிப்படம் வாங்கவா?’ என்றாள்

“இல்லம்மா, பால்கோவா வாங்க!”

'எங்கிட்ட காசு எதுவும் இல்லை, உங்கப்பா வந்தப்புறம் வாங்கிக்க!’ என்று அடுப்படிக்குள் புகுந்து விட்டாள்.

வேறு வழியேதும் தென்படாமல், காம்பவுண்ட் நடைக்கு வந்து, மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டான்.  யாரையும் காணோம் நடையில்.  எழுந்து, ஜெயாத்தை வீட்டில் வந்து பார்த்தான்.  அமுதாக்கா வாழைப்பூவை ஆய்ந்து கொண்டிருந்தாள், அவளுடைய பாட்டியுடன் உட்கார்ந்து. 

அவனை நிமிர்ந்து பார்த்து, ‘வாடா, வாழப்பூ மொக்கு, சாப்புடுறியா?’ என்றாள்.

“ம்ம்” என்று பலமாய் தலையாட்டினான்.

‘பேசாமல் ஒக்காரு, தரேன்!’ என்றாள்.

வாழைப்பூவை மடல் மடலாய் பிரித்து, உள்ளே இருக்கும் பூவின் நரம்பை பிய்த்து தனியே வைத்துக் கொண்டிருந்தாள்.  அவளுடைய பாட்டியும், அவளுடன் சேர்ந்து சொளகில் வைத்து ஆய்ந்து கொண்டிருந்தாள்.  வாயில், இடித்த வெற்றிலையை மென்றுகொண்டே,

‘என்னடா செய்யுறா ஒன் ஆத்தாக்காரி?’

“அது ஆத்தாக்காரி இல்லை, எங்கம்மா!”

‘அது தான்டா! வெங்கலத்தி எனக்குத் தெரியாதா? அவ தான் என்ன செய்யுதா?’

“ம், சோறாக்குறாங்க! ஒங்களப்போல வெத்தில பாக்கு போட்டுக்கிட்டு, தாயம் வெளாடிட்டே இருப்பாங்களா எப்பப்பார்த்தாலும்?” என்றான்.  அமுதா அவன் கோபத்தையும், பதிலையும் பார்த்துவிட்டு நமுட்டாய் சிரித்தாள்.

‘இம்புட்டுக்காண்டு இருந்துக்கிட்டு, என்ன பேச்சு பேசுது பாரேன்?’ என்று அமுதாவிடம் சொல்வது போல சொன்னாள், அமுதாவின் பாட்டி.

“அக்கா நாம்போறேன்! என்று எழுந்து கொள்வது போல செய்ய, அமுதா அவன் டவுசரைப் பிடித்து இழுத்து உட்கார வைக்க முயன்றாள். அன்னாக்கயிற்றில் இருந்து பிடுங்கிக் கொண்டு, டவுசர் கீழாய் இறங்க, வேகமாய் இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டான்.

அமுதாவின் பாட்டி சிரித்தாள்.  அமுதாவிற்கும் சிரிப்பு வந்தது. 

‘இருடா, உனக்குத்தானே வேகவேகமா உரிக்கென்’ என்றாள். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.  வாழைப்பூ உள்ளே இருக்கும் மொக்கு அவனுக்கு பிடிக்கும் என்று அமுதாவுக்கு தெரியும், அதனால் அவன் அங்கிருந்து போகமாட்டான் என்று தெரிந்தாலும், அவனை சமாதானம் செய்வது போல கொஞ்சினாள்.

காம்பவுண்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஏதோ சைக்கிள் வருவது போலத் தெரிந்ததும், வெளியே வந்தான்.  அவன் அப்பா தான் வந்து கொண்டிருந்தார், வாழைப்பூ மொக்கை மறந்து அங்கிருந்து, அமுதா கூப்பிடக் கூப்பிட, ஓடினான். அப்பாவின் சைக்கிளைப் பின்னிருந்து ஆர்வமாய்த் தள்ளினான். 

அப்பாவின் சைக்கிளின் கேரியரில் வைத்திருந்த பொட்டலம், அவனுக்கு என்னவென்று அறிய ஆர்வமேற்படுத்தியது.  சைக்கிளை நிறுத்திவிட்டு, அவனைத் தூக்கிக் கொண்டு, சைக்கிள் கேரியரில் இருந்த பொட்டலத்தை எடுத்துக் கொண்டார். வீட்டுக்குள் நுழைந்ததும், தம்பி தூங்குவதைப் பார்த்து சுப்பிரமணியத்திடம், வாயில் விரல் வைத்து சப்தமெழுப்பாதே என்று பாவனை செய்தார். அம்மா அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

‘குமாரி இங்க வா? வந்து சுப்புக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு!’ என்று பொட்டலத்தை அவன் கையில் கொடுத்தார்.

பொட்டலம், நீயூஸ் பேப்பரில் கட்டப்பட்டிருந்தது.  கையில் வாங்கியதும் கனமாய் இருந்தது. 

“என்னதுப்பா?”

‘பிரிச்சுப்பாரேன்!’

அவசர அவசரமாய் பிரித்தான். உள்ளே பளபளவென்ற கருப்பு வாரில் செய்த செருப்பு. அவனுக்கு உடனே கண்கள் விரிந்து பிரகாசமானது. 

“யாருக்குப்பா?”

‘என்னோட ராசாக்குட்டிக்குத் தான்!’

“தம்பிப்பாப்பாக்கு இல்லை, எனக்கு மட்டும் தான்!” என்று அவனுடைய அம்மாவைப்  பார்த்தபடியே, செருப்பை நெஞ்சோடு அனைத்துக் கொண்டான்.  அவனுக்கு மாரிமுத்து அண்ணனும், ரோஸ்மில்க ஞாபகம் வந்ததும், முகம் லேசாய் வாடியது.

“போப்பா, நீ வேலைக்குப் போகும் போது என்னையும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீலப்பா!”

‘ஆமா சொன்னேன்! ஆனா இந்த செருப்பப் பாத்தேனா, நம்ம ராசாவுக்கு பொருத்தமா இருந்துச்சா? அப்புறமா ஒன்ன வந்து கூட்டிட்டுப் போகும்போது வித்துப் போயிட்டா என்ன பண்றது, அதான் வாங்கியாந்துட்டேன்!’

“நீ வேலைக்கு வரும்போது வந்தா, மாரிமுத்து அண்ணன் எனக்கு ரோஸ்மில்க் வாங்கிக் கொடுக்கும்ல?”

‘இப்போ என்ன அதுக்கு, சாயந்தரம் நான் வேலைக்குப் போகும்போது கூடவே வா, புதுச்செருப்பு போட்டுக்கிட்டு!’ என்று சொல்லவே ஓரளவு சமாதானம் ஆகி, செருப்பை மாட்டிக் கொண்டு அமுதாவிடம் காட்ட ஓடினான்.

இத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியின் அம்மா,

‘அவனக் கூட்டிட்டு போயே வாங்கி வந்துருக்கலாம்ல? எத்தனை ஆசயா எல்லார்ட்டயும் சொல்லிட்டே இருந்தான்’ என்றாள்.

‘கூட்டிட்டு போய் வாங்கலாம் தான், ஆசயாத்தான் இருக்கு, ஆனா பாலத்துக்கு கீழே செருப்பு தைக்கிறவர்ட்ட வாங்கின செருப்பை, அவனக்கூட்டிட்டு போய் வாங்கினா நல்லாவா இருக்கும்? இன்னைக்குப்பாத்து வரும்படி எதுவுமில்ல, இருந்ததே இருபது ரூவா தான், அதுலயும் நீ தம்பிக்கு சளிமருந்து வாங்கணும்னு சொல்லிட்டியா, வேற வழி தெரியலை.  ஆனா இதுவும் லேசுபட்ட செருப்பா நினைக்காத,  தோல்ச் செருப்பு தான், அடியிலப் பாத்தின்னா, டயரை அறுத்து வச்சு தைச்சுருக்கான், தேயவே தேயாது! நல்லா உழைக்கும்’ என்றார்.

அதற்குள் அமுதாவிடம் செருப்பைக் காட்டி விட்டு, பஸ் ஓட்டுவது போல ஆர்ன் அடித்துக் கொண்டே வந்து நின்றான்.  புதுச்செருப்பு பெருமிதம் தெரிந்தது அவன் முகத்தில்.











Friday, March 02, 2012

வாக்கேயம்...



பொழுது  விடிந்தது யாம் செய்த தவத்தால், என்றபடியே கண் திறந்தார்  கிட்ணாசாரி.  உள்ளங்கைகளை  பரபரவென்று தேய்த்து விட்டுப் பார்த்தார். வித்யாரேகை ஆட்காட்டி விரலில் ஏறி ஓடுவதைப் பார்த்தார். ஆயுள்ரேகையின் தீர்க்கமும், வித்யாரேகையின் அழுத்தமும் பார்த்து தனக்குத்தானே பெருமிதமாய் சிரித்துக் கொண்டார்.  கைரேகை ஜோசியம் அவருக்கு தெரியாது என்றாலும், இது போன்ற சில ரேகைகளை யாரோ சக பண்டிதர்கள் சொன்னதைக் கேட்டு அது தான் தன் ஆயுளையும் வித்தையையும் தீர்மானிக்கிறது என்பதை பழுதில்லாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்.

எது நடந்தாலும் அது தெய்வசங்கல்பத்திலும், கிரக நிலைகளினாலும், தனது வாய் சாமர்த்தியத்திலும் தான் என்று தீவிரமாக நம்புபவர் அவர். ஜோசியம் பார்க்கிறேன் என்று மஞ்சப்பையில் வாக்கேய பஞ்சாங்கத்தையும், திருக்கணித பஞ்சாங்கத்தையும் தூக்கிக்  கொண்டு, பிழைக்கிறவருக்கு அந்த நம்பிக்கை கூட இருப்பதாக நம்பாவிட்டால் எப்படி? பல்லி விழும் பலனையும், மச்ச சாஸ்திரங்களையும் பெயரளவில் தெரிந்து கொண்டு, கொஞ்சம் மௌனத்தினாலும், விரல் கணக்குகளாலும், மோட்டு வளையைப் பார்ப்பதினாலும், தாடையைச் சொறிவதினாலும் அவரை நம்பி வரும் கூட்டங்கள் ஏமாந்துவிடத்தான் செய்கிறது.  முன்வினை, பின்வினை, பக்க, துக்க வினைகள், முன் ஜென்ம, பின் ஜென்ம, கர்ம, யோக, சித்த, பித்த, திதி, சுக்ல, கிருஷ்ணபட்சம் என்று பெயரளவில் சரடு விடும் போது வாய் பிளந்து கேட்பவர்களின் வாயினுள் மட்டுமல்லாது, புத்தியிலும் புகுந்து புறப்பட்டுவர கை தேர்ந்தவர் இல்லை, சரியாய் சொன்னால், வாய் தேர்ந்தவர்.

கிட்ணாசாரியின்  முழுப்பெயர் அல்லது நாமகரணப்பெயர்  கிருஷ்ணமூர்த்தி என்பதாகும். கிருஷ்ணமூர்த்தி, கிஸ்ணா என்றாகி, திருமணமாகி நாலைந்து உருப்படிகளுக்கு  தகப்பனாய் ஆனதும், கிட்ணாசாரி என்றாகிவிட்டார். இந்தப்பெயர் எப்போது மாற்றப்பட்டது, யார் மூலம் மாற்றப்பட்டது என்ற விபரங்கள் அறிந்தவராயில்லை அவர். கிட்ணாசாரி ஆன பிறகு அவரின் வாக்கு பலிதம் கண்டு, ஜோசியம் பார்க்க ஜாதக்கட்டுகளை, கட்டங்களை கொடுத்து அவர் வாய் மூகூர்த்தத்திற்காய் காத்திருப்பவர்கள், அனேகம் பேர். அதனால் அவரின் காலட்சேபத்தை  கனஜோராய் நடத்தமுடிகிறது. கிட்ணாசாரியின் ஜென்மபூமி தாயில்பட்டி, வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். கல்யாணம் கட்டிக் கொண்டது வத்றாப். பிழைப்பென்று ஒதுங்கியது மதுரை கோவாப்டெக்ஸ். ஒரு எழுபது கிலோமீட்டர் சுற்றளவில் தன் வாழ்க்கை சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதுவும் எண்ணெய்க்கு குறைவில்லாமல், எந்த சத்தமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை.

இரண்டு  பெண்களுக்கு திருமணம் முடித்து வைத்த பின்னர், பணியில்  இருந்து விருப்பஓய்வு பெற்றுக்கொண்டார்.  இன்னும் பணியில் இருந்தால், இரண்டு வருடங்கள் இருக்கலாம், ஆனால், ஜாதகத்தில் இருந்த அவரின் ஈடுபாடு, வேலையை முழுக்குப் போட வைத்துவிட்டது. தன் பெரிய மகனை கோவாப்டெக்ஸ் நூல் குடோனில், வேலைக்கு சேர்த்து விட்டார். ஆரம்பத்தில் அவனை தற்காலப் பணியில் தான் சேர்க்க முடிந்தது. இரண்டே வருடத்தில், தனது வாக்கு சாதுரியத்தாலும், நீக்கு, போக்கினாலும்,  பியூசி மட்டுமே முடித்திருந்த அவனை நிரந்தரப்பணியில் சேர்த்துவிட்டார். அப்போதிருந்த கொள்முதல் மேலாளரின் செவ்வாய் தோஷப்பெண்ணுக்கு சரியான ஒரு வரனை பிடித்துக் கொடுத்ததில், தன் அவயத்தில் எல்லாம் குளிர்ந்து, ‘இந்தாப் பிடி!’ என்று அவரும் வரத்தைக் கொடுத்துவிட்டார். இப்போது அவனுக்கு கல்யாணமாகி குடித்தனம் என்றாகி, வம்சவிருட்சத்துக்கு தண்ணீர் வார்த்துக் கொண்டு இருக்கிறான்.

இரண்டாமவன் வக்கீலுக்கு படித்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு கிட்ணாசாரியைப் போலவே ஜோதிடக்கிறுக்கு பிடித்து கட்டம் கட்டமாய் போட்டுத் தள்ளுகிறான். எஞ்சீனியர் படிக்க வேண்டியவன் வக்கீலுக்கு படித்துக் கொண்டு இருக்கிறான் என்று தோன்றும் சில சமயம். அவன், தன் தகப்பனாரின் பாண்டித்யத்தின் மேலுள்ள அபரிமிதமான பக்தியில் ஜோதிடம் பற்றி தான் வாசித்ததைக் கேட்க, அதற்கு பதில் ஏதும் சொல்லத் தெரியாமல், “உன் பதிலை நீ தேடு!” என்று சாமர்த்தியமாய், ரொம்பவும் தத்வாசாரமாய் சொல்லி தப்பித்துக் கொள்வார்.  அவன் தானாய்த் தேடி தெரிந்து கொண்டதை, அவரிடம் வந்து சொல்லும் போது, வாயில் வெற்றிலையை அதக்கிக் கொண்டே எச்சில் வழிய ஏதோ சொல்லி, எல்லாந்தெரியும் ஏகாம்பரமாய் தன்னைக் காட்டிக் கொள்வார்.  இருவரும் ஞாயிறு மயக்க மதியத்தில், திண்ணையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரின், ராசி, நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டும், சித்திரகுப்தனின் பேரேடு போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு, கட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருவரும் பேசுவதும், சிரிப்பதும், அவர்கள் ஏதோ ஆடுபுலி ஆட்டம் விளையாடுவது போல இருக்கும்.  வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு, அவர்களின் ஜோதிடக்கிறுக்கைப் பார்க்கும் போது எரிச்சலாய் வரும்.    

‘என்னத்த  அந்தானிக்க கணக்கப்போட்டு  கீழிக்கீக ரெண்டு பேரும்! நீங்க ஜாதகம் பாத்து வச்ச பெரியவ கல்யாணந்தான் நட்டுக்கிட்டு நிக்கே படுக்க மாட்டாம!’ என்று சொல்லும் ராமதிலகத்துக்கு தன் கணவனின் ஜோசியத்திறமையின் மீது நம்பிக்கை இல்லை. அவர் வெறும் வாய்ச்சவடால் என்ற விஷயம் அவளுக்குத் தெரிந்ததே. அதிலும் பெரியவள் சங்கரகோமதியின் கணவன் இன்னொருத்தியை வைத்திருப்பது தெரிந்ததும், அவரின் மீது கொஞ்ச நஞ்சமாய் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கையும் சுத்தமாய் உதிர்ந்து போய்விட்டது.  இரண்டாமவனும் அவருடன் சேர்ந்து இந்த கோட்டித்தனம் செய்வது மிளகாயை அப்பியது போல இருக்கும் அவளுக்கு. காந்தல் அடங்கும் வரை எதையாவது கத்திவிட்டுப் போய் விடுவாள் எப்போதும்.

ராமதிலகம் சுதாரித்துக் கொண்டது இரண்டாம் மகளின் திருமணத்தின் போது தான் தெரிந்தது. ரொம்பவும் புத்திசாலித்தனமாய் இரண்டாவது பெண்ணின் திருமணப் பொருத்தத்தை, வெண்டர் ஐயரை வைத்து தான் பார்த்தாள். அவள் இப்போது சென்னையில் சுகவாசம் செய்கிறாள். வெண்டர் ஐயருக்கு இருக்கும் தீர்க்கதரிசனம் யாருக்கும் வராது.  அவரின் அழுக்கு வேட்டியும், எப்போதுமே மழிக்காத கோரைத்தாடியும் அவருக்கு வருமானத்தடை தான் என்றாலும், அவருக்கு அது பற்றிய அக்கறை இருந்தது இல்லை.  கொடுத்ததை வாங்கிக் கொள்வார், தானாக கொடுக்கவில்லை என்றாலும் கேட்கமாட்டார். கிட்ணாசாரி அப்படியில்லை, புதிதாய் வருபவர்கள் தட்டில் வெற்றிலை பாக்கு, பழங்களுடன் தட்சிணையையும், ஜாதகத்தையும் ஒன்றாக வைத்தால் தான் எடுப்பார். வரிசையில் காத்திருக்கும் அப்பாவிகளைத் தாண்டி ராமதிலகம் வெண்டர் ஐயரிடம் போவதை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை என்றாலும், அவருக்கு கேட்கத் துணிச்சலில்லை. வீசுன கையும் வெறுங்கையுமா இல்லாம, அவர் தேவைக்கு வீட்டில்  பிடுங்காததால், ராமதிலகமும், அவரின் ஜோசியப்புரட்டுகளை கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறாள்.

கிட்ணாசாரி  மாதிரி ஒருத்தர் உடுத்தமுடியாது. இருப்பது இரண்டு உருப்படிகளே என்றாலும் அப்பழுக்கில்லாத வெள்ளை ஜிப்பா, பொன்மினுக்கி பொத்தான்கள் வைத்து, அகலக்கரை வேட்டி கட்டி, தோளில் சுருக்கமில்லா, கோவாப்டெக்ஸ் வெள்ளைத்துண்டு, இஸ்திரி செய்தது போல மடித்து அதை போட்டிருக்கும் அழகும், காதில் மின்னும் வெள்ளைக்கல் பதித்த கடுக்கனும் (அவரின் அம்மா இறந்த போது அவளின் சேகரமாய் இருந்தது), நெற்றியில் ஒற்றையாய் இழுத்த திருச்சூர்ணமும் அவரை ‘ஜோதிட சாம்ராட்’ அல்லது ‘ஜோதிட திலகம்’ என்று யாராவது சொன்னால், கேட்கிற யாரையும் சந்தேகமில்லாமல் நம்பவைக்கும்.  அதிலும் அவர் தேர்ந்தெடுத்து பேசும் வார்த்தைகள், அவரின் குரல் ஜாலம், உடல் மொழி. அவர் பரிகாரமாய் எதைச் சொன்னாலும் கேட்பவர்கள் செய்துவிடுவார்கள்.   மங்கு சனி பொங்கு சனி ஆகும், ராகுவும் கேதுவும் பகை மறந்து நட்பு கிரகங்கள் ஆகிவிடுவார்கள்

இரண்டு  விஷயங்களில் கிட்ணாசாரிக்கு சமரசமே இல்லை. ஒன்று உடை மற்றொன்று உணவு.  வகை, வக்கணையாய் சப்புக் கொட்டி சாப்பிடுவதில் அவருக்கு இணை அவர் தான்.  வித விதமாய் உடுத்துவதிலும், விதவிதமாய் உண்பதிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் சொல்லி மாளாது.  அவருக்கு ரெண்டு நாக்கு என்று ராமதிலகம் சொல்வதுண்டு, ஒன்று பேச்சு சாதுர்யத்துக்கும், இன்னொன்று விதவிதமாய் தின்பதற்கும்.

ராமதிலகம் முன் போல சமைப்பதில்லை என்று அவருக்கு எப்போதும் தோன்றும். ஒருநாளும் அவள் சமையலில் குறை சொல்லாமல் சாப்பிடமாட்டார். அம்மா சமையலில் வளர்ந்திருக்கும் சுவை மொட்டுகள் மூலம் சொல்வார், அத்தனை சமையல் குறிப்புகளையும். ஜாதகம் பார்க்கிற இடங்களில், யார் சாப்பிடச் சொன்னாலும் சாப்பிட்டு விடுவார். அவரின் அம்மாவின் கையை யாராவது வைத்திருக்கிறார்களா என்று முகர்ந்து முகர்ந்தே நீளமாக மாறிவிட்டது அவருடைய மூக்கும். ஜாதகம் பார்க்கிற இடங்களில் சாப்பிடுவதற்கு அவர் கூச்சப்படுவதே இல்லை, அதற்கு அவர் சொல்லும் காரணம் விசேஷமானது.' வயிறு நிறைஞ்சா தான்,  மனசு நிறையும். மனசு நிறைஞ்சா ஜாதகக்காரர்களின் பலனில் பிடிதம் ஏதும் இருக்காது' என்று சொல்வார்.  கேட்கிறவர்கள் நம்புகிற மாதிரி சொல்வார், ராமதிலகம் மட்டும் எப்போதும் போல இதற்கு விலக்கு.

கிட்ணாசாரியின்  மீது நிறைய பேருக்கு சொல்லமுடியாத பொறாமையும், பொச்சரிப்பும். அவரின் நண்பர்கள், உடன் பணி  புரிந்தவர்கள் அவரை சந்திக்கும்  போதெல்லாம் அதை ஏதாவது ஒரு வகையில்  காட்டி விடுவார்கள்.

‘ஒமக்கு என்ன ஓய்!  ரெண்டு பொண்ணுங்களையும்  கட்டி கொடுத்திட்டீரு, பெரிய  பய வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான், இதுல நீரு வேற சல்லிசல்லியா சேக்குறீரு சைடுல, ஒம்ம யோகத்துல யாரும் ஓய் இருக்கா?’  என்று அவருடன் பணி புரிந்து ஒய்வில் இருப்பவர்கள் கொஞ்சம் வயிற்றெரிச்சலுடன் சொல்லும் போது, தன் நிலைமையைப் பற்றி சொல்லவே மாட்டார். மாற்றாய் அது போன்ற வார்த்தைகளைக் கேட்கும் போது அவருக்கே பெருமையாய் இருக்கும்.

‘எல்லாத்துக்கு  ஒரு சுழி வேணும் ஓய்!’ என்பார், அது என்ன சுழி என்று யாரும் கேட்டதில்லை, அவரும் அதைப் பற்றிய விளக்கம் கொடுத்ததில்லை. சொல்லப்போனால், அவர் சுழி என்று சொல்வது, நாக்கில் சுழித்த சுழியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார்.

இன்று காலையிலேயே வனஜா வீட்டிற்கு போய்விட வேண்டும் என்று  நினைத்துக் கொண்டார்.  வனஜா, கிட்ணாசாரியின் தூரத்து  உறவு.  சங்கத்தில் ஒரு மீட்டிங்கிற்கு போனபோது தான் வனஜாவையும் சுப்புடுவையும் சந்தித்தார்.  அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி ஏழு வருஷங்கள் ஆகியும் குழந்தை இல்லை.  யாரோ ஒரு புண்ணியவான், கிட்ணாசாரியின் பராக்கிரமங்களையும், ஜோதிட வித்வத்தையும் பற்றி சொல்லி இருக்க, சங்கத்தில் பார்த்த வனஜா, ‘நைனா!’ என்று பக்கத்தில் வந்து கிட்ணாசாரியின் கையைப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கணவனையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

மோவாயில்  ஆட்காட்டி விரலை வைத்துக் கொண்டு, ஏதோ யோசிப்பது  போல பாவனை செய்தவர்.  சுப்புடுவைப் பார்த்தார், கண்களை சுருக்கி திரும்பவும்  யோசித்தார்.  குருவும், சுக்கிரனும்  ஒரே வீட்டில் இருக்கும்  ஜாதகத்தை பார்த்தது போல  லேசாய் துள்ளி, இரு கைகளை  தட்டுவது போல செய்தார்.

“சின்னசாமி கொடுகா நுவ்வு?” என்றார்.

‘அவ்வு  நைனா, நா  நானனு தெலுசா?’

“தெரியாமப்  போகுமா, உங்க அய்யா தானே, நம்ம சமூகத்திலேயே முத எம்.எல்.சி.? அது தெரியாமப்போகுமா?”

சுப்புடுவுக்கு  ரொம்பவும் பெருமையாய் இருந்திருக்க வேண்டும், வனஜாவை, ‘பாத்தியா புள்ள?’ என்று கேட்பது  போல பார்த்தான்.

அறிமுகப்படலம் சுவாரசியமாகிவிட, மேலும் சுப்புடுவின் சொந்தக்காரர்களை எல்லாம்  நினைவு படுத்தி பேசிக் கொண்டு இருந்தார்.  சுப்புடுவுக்கு முக்கால்வாசிப் பேர்களை  தெரியவில்லை, ஆனாலும் மையமாய்  சிரித்தபடி தலையாட்டிக்  கொண்டிருந்தான்.

வனஜா, அவரின் பேச்சை ஈவு இரக்கமில்லாமல் வெட்டினாள்.  கொஞ்சம் அசுவாரசியப்பட்டவர், “என்னம்மா?” என்றார் கொஞ்சம் சடவா.

‘லேது நைனா, மீரு மா இண்ட்டிக்கு ராவலா? மன, இத்துரு ஜாதகானி சூசி, புத்ரபாக்கியம் எப்புடுன்னு செப்பவ்லா! வொஸ்தேரா? பெண்ட்லி அவ்வி ஏடு ஏண்டு அவ்விட, இக்கனு ஒக புழு பூச்சி லேது கடுபுல’ என்று துக்கமாய் முகத்தை வைத்துக் கேட்டாள்.  வனஜாவின் முகத்தை பார்த்ததும், கிட்ணாசாரியின் முகமும் வாடி விட்டது. தன் வாக்கு பலிதத்தால் அப்படியே “ததாஸ்து” என்று சொல்ல, அவர்கள் கையில் குழந்தை வந்துவிடுவது போல நினைத்து சிலிர்த்துக் கொண்டார்.

“மீரு இல்லு எக்கட உடுத?’ என்று கேட்டதும், வனஜா விலாசம் சொல்ல குறித்துக் கொண்டார். சில அடையாளங்களைக் கேட்டு தெரிந்து கொண்டார். “கோடாங்கி ராமசாமி தெலுசா?” என்றார்.

‘வாளு இண்ட்டிகி பக்கல இல்லு  தா மனதி!’ என்றாள்.

மற்றொரு நாள் வீட்டை விசாரித்து போய் அதிகாலையில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்ட, தூக்க கலக்கத்துடன், பால்காரன் என்று நினைத்துக் கொண்டு ஒரு ஏனத்தை எடுத்தபடி கதவைத் திறந்தான் சுப்புடு .

தூக்கக் கலக்கத்தில், இவர் பக்கமாய் ஏனத்தை நீட்டினான் யாரென்று முகத்தைப் பார்க்காமலே.  என்னடா இது பால் ஊத்தக்காணோமே என்று நிமிர்ந்து பார்த்த சுப்புடுவுக்கு, வந்திருப்பவர் யாரென்று தெரியவில்லை.  வந்தவர் சிரிக்க, அவனும்  சிரித்தான்.

“நான் தான் கிருஷ்ணசாமி!” என்றார்.

பொட்டென அடித்த குரலில் பல்பு எரிய, “மாமா, ரண்ட ரண்ட!” என்றான் சுப்புடு கதவை முழுதும் திறக்காமலே.

என்னடா  இது? கதவைத் திறக்காமலே வா வா என்கிறானே? எது வழியாக உள்ளே நுழைவது என்பது போல  அவன் காலுக்கும், கதவின் நிலைக்கும் இடையே இருந்த இடைவெளியைப்  பார்த்தார்.

அப்போதும் சுப்புடு கண்டுகொண்டதாக  தெரியவில்லை. உள்ளே திரும்பி, ‘வனஜா, வனஜா’ என்று குரல் கொடுத்தான்.  வீட்டிற்குள்ளே மறுபடி நுழைந்தவன், கொஞ்சம் நேரமாகியும் வரவில்லை.

அசந்தர்ப்பத்தில்  வந்து விட்டோமோ, ஆனால்  மணி ஆறரை ஆகிவிட்டதே! ராமதிலகம், ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து முடித்து காஃபி தந்துவிடுவாளே, மற்ற வீடுகளில் அது பழக்கமில்லையோ! ராமதிலகத்தைப் போல வனஜாவும் அதிகாலையிலேயே  எழுந்து விடுவாள் என்று தனக்குத் தோன்றியது ஏன் என்று நினைத்த போது அவருக்கு எதுவும் விளங்கவில்லை.  இவ்வளவு விடிகாலையிலேயே வந்ததைப் பற்றிக் கேட்டால், என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கத்தொடங்கினார்.

வாசலில் நின்று கொண்டிருந்தார், கதவு திறந்த பாடாய் இல்லை, திரும்ப  போய்விடலாம் என்றால், அதுவும்  முடியாது.  வீட்டில் இன்னைக்கு  ஏதும் பலகாரம் இல்லை, பழைய சாதமும், நார்த்தங்காய்  ஊறுகாய் தான்.  நேற்று இரவு, அழகம்மாள் வீட்டில் சாப்பிட்டு விட்டதால், மிஞ்சிய சாதம் தான் காலை ஆகாரமாய் பழைய சாத உருவில் விழும்.  அது கூழ் வடாமாய் உருமாறும் வரை, இது போல அன்னலட்சுமிகளின் கதவை தான் தட்ட வேண்டும். இப்போது பால்காரன் வந்து பக்கத்தில் நின்றான், இவரைப் பார்த்து சிரித்தான்.

வந்தவுடன், கதவைத் தட்டினான். கதவு உடனே திறந்தது. வனஜா தான் அரக்க பரக்க முகம் கழுவி, அழுந்த துடைத்ததில், முன் முடிகள் நெற்றிய இழுவியபடி படிந்திருந்தது. வந்தவள், பால்காரனையும் அவரையும் மாறி மாறி ஒரு கணம் பார்த்துவிட்டு, உள்ளே போய் அதே ஏனத்தை எடுத்து வந்தாள். பால்காரனிடம் அதை நீட்டிய படியே, இவரைப் பார்த்து சிரித்தாள்.

“உள்ள வாங்க நைனா?” என்று கொஞ்சமாய்  விலகியபடி பால் நிரம்பிய ஏனத்தை கையில் வாங்கிக் கொண்டு, அவரை உள்ளே அழைத்தாள்.

உள்ளே நுழைந்தவர், சுருட்டித் தள்ளிய பாயும் தலையணையும் ஓரமாய் கிடந்ததைப் பார்த்தார். ஒரே  அறை அல்லது ஹால் அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். டிவி இருப்பதால் அதை ஹால் என்றோ அல்லது படுக்கையும், பீரோவும் இருப்பதால் அறை  என்றோ வகைப்படுத்திக் கொள்ளலாம்.

அங்கு பெஞ்சு மாதிரி இருந்த ஒரு  பெட்டியில், உட்காரச் சொல்லிவிட்டு, காப்பி கலந்து வருவதாக சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு இடது பக்கமாய் இருந்த திரையை விலக்கி அடுப்படிக்குள்  நுழைந்தாள்.  சுப்புடுவைத் தேடினார், காணவில்லை, தக்கணூண்டு வீட்டுக்குள் எப்படி காணாமல் போனான் என்று வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

சின்ன வீடு தான், அவருடைய வீட்டை விட சின்னது தான்.  ஒரு  பீரோ, ரெண்டு டிரங்க் பெட்டிகள், கொஞ்சம் மூட்டையாய் பழைய துணிகள்.  சமையல் கட்டு  சுவருக்கும், ஹாலின் சுவரும்  சந்திக்குமிட்த்தில், ஒரு  சுவரோடு ஒட்டிய அலமாரி. சமையல் கட்டின் எதிர்புறசுவரில், சில சாமிப்படங்கள், சாமிப்பட காலண்டர்கள்.  அப்புறம் இரண்டு பெரியவர்களின் படங்கள், பொட்டிட்டு அதன் மேல் இரண்டு விடி பல்புகள். ஒரு தையல் மெஷின், அதன் மீது சில தலையணைகளும், இரண்டு ஜமுக்காளங்களும் மடித்து வைக்கப்பட்டிருந்தது.  ரொம்பவும் சின்ன வீடு, வாசல் இருக்கும் சுவர் பக்கம் டீவியும் அதன் இணைப்பு சுவரை ஒட்டிய இடத்தில், போட்டிருந்த பெட்டியில் தான் கிட்ணாசாரி உட்கார்ந்திருந்தார்.  வீட்டில் அத்தனை சாமான்கள் இல்லை.  காலையில் டிஃபனோ அல்லது பழையதோ? என்று தோன்றியது அவருக்கு.  அப்போது சமையலறையின் திரையை விலக்கிக் கொண்டு, ஒரு லுங்கி, பனியனும், தோளில் ஒரு துண்டுடனும் வந்தான் சுப்புடு . அடுப்படிக்குப் பக்கவாட்டில் அல்லது பின்னால் பாத்ரூம் வகையறா இருக்க வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. அவனைத் தொடர்ந்து அவன் பின்னாடியே காஃபியின் மணம் வந்தது.  காஃபி குடிக்க தயாராகிக் கொண்டார்.

‘இன்னைக்கு  நீங்க வரேன்னு சொன்னது  ஞாபகம் இல்லை மாமா’ என்றான்.

“சங்கத்துல  பாத்து பேசும்போதே நினைச்சேன், முத தடவ ஜாதகம் பாக்குறேன், நல்ல நேரமா இருக்கணும்னு! இன்னைக்கு வெசாலக்கிழமயா, நல்ல நேரம் ஆறரைல இருந்து  அதான், சீக்கிரமாவே கிளம்பிட்டேன், எந்த ஜாதகக்காரனுக்கும்  முழுப்பலன் கிடைக்க, நல்ல நேரத்துல ஆரம்பிக்கிறது தான் முறை, மாப்பிளை!” என்று சற்று  உரிமையுடனும், சிநேகமாவும்  அவன் கை பிடித்துப் பேசினார் கிட்ணாசாரி.

‘உங்களப்பாத்ததே, எங்களுக்கு பெரிய சந்தோஷம் மாமா, கஷ்டமெல்லாம் பாதி தீந்துட்ட  மாதிரி இருக்கு இப்பவே!’  என்று அவரே எதிர்பாராத அளவு உணர்ச்சிகரமாய்ப் பேசினான்.

காஃபியுடன்  வனஜாவும் வந்தாள்.  முகத்தைக் கழுவி துடைத்திருந்தாள் இப்போது.

“வனஜா! ஜாதகத்தை நீயே எடுத்துக்  கொடு, ஆனா அதுக்கு முன்னாடி குளிச்சிடும்மா!” என்றார்.

‘சரி  நைனா!’ என்று அவசர அவசரமாக, பீரோவைத் திறந்து துணிகளை  எடுத்துக் கொண்டு குளிக்கக்  கிளம்பினாள்.

‘நானும் குளிக்கணுமா மாமா?’ என்று  கேட்டான் சுப்புடு

“நீ குளிக்கலேன்னா  பரவாயில்லை மாப்பிள, மக குளிச்சிட்டா நல்லது, கர்ப்பம் தாங்குறவ அவ தானே? நான் எது சொன்னாலும் அதுல ஒரு காரணகாரியம் இருக்கும்  மாப்பிள” என்றார். கிட்ணாசாரி இதைச் சொல்லிவிட்டு, சுப்புடுவைப் பார்த்து, உதடுகளை இறுக்கிக்  கொண்டு, புருவத்தை உயர்த்தி, கவனமாய் சிரித்தார். அவன் தொடையிடுக்கில் கைகளை வைத்துக் கொண்டு, ரொம்பவும் பவ்யமாய் தலையாட்டினான். தன் மனைவியாய் அப்போதே கர்ப்பவதியாய் பார்த்த திருப்தி வந்துவிட்டது போலத்தோன்றியது அவருக்கு.

வனஜா  குளித்துவிட்டு, நேராய் சாமிப்படங்கள் இருக்கும் இடத்திற்கு போய் கண்ணை மூடி பிரார்த்தித்து விட்டு, அங்கு வைத்திருந்த ஜாதகங்களை எடுத்துக் கொடுத்தாள் கிட்ணாசாரியிடம்.

வாங்கும்  போதே, மனமுருக பிரார்த்தித்து விட்டு வாங்கிக் கொண்டார் கிட்ணாசாரி.  அவளை சாமிப்படங்களுக்கு  முன்னால் வைத்திருந்த திருநீர்த்தட்டை  எடுத்து வரச் சொன்னார். அதை  கைகளில் வாங்கிக் கொண்டவர், எழுந்து நின்று கிழக்குப்  பக்கமாய் அவர்களை நிற்கச்  சொல்லி திரு நீற்றை தன் தலையில்  சிறிது போட்டுக் கொண்டு, நெற்றியிலும் பூசிக் கொண்டு, அவர்களுக்கும்  பூசி விட்டார். இருவரும் அவர் காலில் தடாரென்று விழுந்து ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டனர்.

முதலில் வனஜாவின் ஜென்மஜாதகத்தைப்  பார்த்துவிட்டு, ருதுவான  தேதியைக் கேட்டார். அதை வைத்து திருக்கணித பஞ்சாங்கத்தில் திதியையும், நட்சத்திரத்தையும்  தன் கையில் இருந்த புத்தகத்தில் குறித்துக் கொண்டார்.  இருவரும் அவர் செய்யும் காரியத்தை  பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவர்  ஜாதகத்தையும் ஆராய்ந்து, கணக்குகளைக்கிறுக்கி, தனக்குள்ளே பேசிக் கொண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்து, தொண்டையைச் செருமி பேசத்  தொடங்கினார்.

“ஜாதகத்தை மேம்போக்கா பார்த்தா, புத்ரபாக்கியம் இல்லாத மாதிரி தெரியலை, ஆனா ருதுவான ஜாதகத்தை பார்க்கும் போது புத்ர சம்பத்துக்கு தடை இருப்பது போல இருக்கு, மாப்பிளையின் ஜாதப்படி பித்ரு தோஷம் இருந்தாலும் இது போல காலதாமதமாகவும் வாய்ப்பு இருக்கு, உங்க அப்பாவின் திவசங்கள் சரியா பண்றீங்களா மாப்பிளை? என்றார்.

சுப்புடு  அதற்கு பதில் சொல்லாமல், வனஜாவைப் பார்த்தார்.

‘எங்க நைனா? அவரு மாசத்துல பாதி நாளு லைனுக்குப் போயிடுவாரு! மீதி இருக்கிற நாள்ல அமாவாசையோ, திதியோ அவரு எங்க கணக்கு வைக்கிறாரு!  நானும் சொல்லிட்டு தான் இருக்கேன், வேற வேலையப் பாருங்க உள்ளூர்லயே இருக்கது போலன்னு, நம்ம சொல்றத எங்க காதுல வாங்காரு!’ என்றாள்.

“இல்லம்மா அவனோட ஜாதகம் அப்பிடி, அவன  ஒரு இடத்துல தங்க விடாது!”  என்று அவனுக்கு சப்பைக்கட்டினார்.  பணம் பெயர்வது அவனிடம் இருந்து  தான், என்பதால் அவனை பகைத்துக்  கொள்வதில் அவருக்கு இணக்கமில்லை.

‘பித்ரு தோஷம்னா என்ன நைனா?’

“பித்ரு தோஷம்னா, பிறந்த ஜாதகத்தில  நிக்குற ராகு கேது செய்யிற  வேல! இது ரெண்டும் ஒரு குறிப்பிட்ட  எடத்துல இருக்கும் போது இந்த மாதிரி ஜாதகக்காரனை பொறக்க வைக்குது, லக்ணத்துக்கு 1, 5, 7, 9 ம் இடத்தில ராகு கேது இருந்தா ஒரு ஜாதகக்காரன்  பித்ரு தோஷம் உள்ள ஆளா  ஆயிடுறான்! இதனால் எல்லாமே  தாமதமாகும்.  அது வேலையா இருக்கலாம், இல்லை குழந்தையா இருக்கலாம்”

‘இத எப்படி நைனா சரி செய்றது?’

“தொடர்ந்து  பித்ருக்களுக்கு காரியம்  செய்யணும், ராகு, கேதுவுக்கு பூஜைகள் செய்யணும்!" மோவாயில் விரலை வைத்துக் கொண்டு யோசித்தவர், “திருநாகேஸ்வரம் போயிட்டு வரமுடியுமா? தலையையும் வாலையும் ஒண்ணா பார்த்து கும்பிட்டுட்டு வாங்க, அப்புறம் மாப்பிள  உள்ளூர்லயே வேலை எடுத்துக்கணும், இதெல்லாம் போக எனக்கு தெரிஞ்ச  சித்தவைத்தியர் ஒருத்தர் இருக்கார், மதுரை அழகப்பன் நகர்ல, அவரையும் போய் பார்க்கணும்! அவரு இதுலயெல்லாம் கில்லாடி, தெய்வத்தால் ஆகாதெனினும்னு சும்மாவா சொன்னாங்க? அதனால எல்லாத்தியும் முயற்சி பண்ணலாம்” என்று முடித்தார்.

அவர்  சொல்லி முடிக்கவும் எங்கேயோ  மணியடித்தது போல இருந்தது. “பார்த்தீங்களா கோவில் மணியே  அடிச்சுடுச்சு, இனிமே எல்லாம்  நல்லபடியா நடக்கும்!” என்றார்.

பக்கத்தில்  கோவிலே இல்லாத போது கோவில் மணி அடித்தது எப்படி? என்று  அவர்கள் இருவரும் கேட்கவில்லை.

முடித்துவிட்டு  கிளம்புவது போல பாவனை செய்தவரை, இருவரும் பலகாரம் சாப்பிட்டுவிட்டு போக வேண்டும் என்ற வற்புறுத்தலால் சம்மதிப்பது போல பாசாங்குடன் சாப்பிட்டு முடித்தார்.  சுப்புடுவும், அவர் கையில் பணத்தை திணிக்க, வேண்டாமென்று வாயால் மறுத்துக் கொண்டே கையை நீட்டி வாங்கிக் கொண்டார்.

சுப்புடு  உள்ளூரில் வேலை எடுத்த காரணமோ, ராகு, கேதுவின் அருளோ, பித்ருக்களின்  ஆசியோ அல்லது சித்த வைத்தியனின்  சாமர்த்தியமோ, அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து  விட்டது.  இருவருக்கும், குலதெய்வம் ஆகிவிட்டார், கிட்ணாசாரி. கடாவெட்டி  பொங்கல் வைக்காத குறையாய் கொண்டாடினார்கள். போதாதா கிட்ணாசாரிக்கு?!