Wednesday, January 25, 2012

ஊஞ்சல் விழுது . . .

வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போல இருந்ததும் சட்டென்று முழிப்பு வந்தது அவனுக்கு.  கட்டிலைவிட்டு தடக்கென்று எழுந்ததில் தலையணை அடியில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. கைலியைத் தேடினான், போர்வையுடன் சுருண்டு கிடந்தது. எடுத்து தலை வழியாக உள்ளே நுழைத்து, சாத்தியிருந்த கதவைத் திறந்தான்.   

நல்லதண்ணீர் குழாய் அருகில் தண்ணீருக்காய் சண்டையும் வாக்குவாதங்களும் பரஸ்பர வசை பிரயோகங்களும் நடந்து கொண்டிருந்தது.  புடவையையும், பாவாடையும் ஒருசேர முழங்காலுக்கு தூக்கிச் சொருகி சண்டை போட்டுக் கொண்டு இருந்தவர்கள், அவனைப் பார்த்ததும், சத்தத்தைக் குறைத்துக் கொண்டு, ஏதேதோ முனுமுனுத்தபடியே அமைதி ஆனார்கள்.  அதில் ஒருத்தி, புடவையை கீழே இறக்கிவிட்டு காலிக்குடத்தை எடுத்துக் கொண்டு, பக்கத்துக் காம்பவுண்டுக்குள் நுழைந்து விட்டாள்.  இன்னொருத்தி, குடத்தை சரியாக வைத்து, ஒன்றுமே நடக்கவில்லை என்பது மாதிரி அடிபம்பை மும்முரமாய் அடிக்கத் தொடங்கினாள். விஸ்விஸென்று சத்தம் போட்டபடியே. அங்கே கூடியிருந்தவர்கள் கொஞ்சம் தைரியமாக வேறு எங்கோ பார்ப்பது போல பாவனை செய்தபடி இருந்தார்கள். ஏதோ கெட்டவார்த்தையை முனங்கியபடி வீட்டினுள் நுழைந்தான்.

சத்தத்தில் எழுந்ததாலா அல்லது நேற்று அடித்த சரக்கினாலா என்று தெரியாத வகைக்கு, அவனுக்கு தலையை வலித்தது.  நெற்றியைப் பிளந்து வலியை யாரோ உள்ளே சொருகியது போல இருந்தது. எப்போதும் காய்ச்சுமிடத்தில் இருந்து வாங்குவது தான் வழக்கம். எங்கு கிடைக்கும் என்று வழியெல்லாம் சொல்லி முன் வீட்டில் குடியிருக்கும் ஒரு சௌராஷ்ட்ரா பையனை தான் அனுப்பினான். அங்கிருந்து வாங்கி வந்ததாகத் தான் அவனும் சொன்னான். குடித்து முடித்ததும், அப்போதே அவனுக்கு வாந்தி வருவது போலிருந்தது. புரோட்டாவைத் தின்றதில் இன்னும் தள்ளிக் கொண்டு வந்தது.  காம்பவுண்டின் முன்னால் இருந்த வாராங்காலில் தான் முழுதும் வாயில் எடுத்தான். அந்த இடம் இப்போது கழுவி விடப்பட்டிருந்தது. ருபீனா தான் செய்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டான். 

கட்டிலில் கிடந்த படுக்கையை அப்படியே ஒரு ஓரமாய் தள்ளிவிட்டு, கீழே விழுந்திருந்த கத்தியை எடுத்து, அதை லேசாய் விரலால் பதம் பார்ப்பது போல தடவினான்.  ஒன்றரை அடிக்கு மேலாய் இருக்கும் அந்தக் கத்தி, மரப்பிடியில், இரும்பு பூண் போடப்பட்டிருந்தது. பிடிக்கத் தோதாய் இருந்தது. கையில் எடுத்தவன்,  முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு, அதனை காற்றில் விஸ்க் விஸ்க்கென்று வீசிப் பார்த்தான். பிறகு தானாய் சிரித்துக் கொண்டு, இல்லாத எதிரியைத் நெட்டி கீழே தள்ளி, நாக்கைத் துருத்தி வைதான். திரும்பவும் அதை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு, ஜட்டியை மட்டும் போட்டுக் கொண்டு, கைலியை அப்படியே தரையில் விட்டான். அடுப்படியில் வைத்திருந்த டம்பிள்ஸையும், கர்லாக்கட்டையையும் எடுத்து கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய முயன்றான், முடியவில்லை. கதவு திறந்தே இருந்தது. அவனுக்கு தலைவலி விடுவதாய் இல்லை, கொஞ்சம் சூடாய் காஃபி குடித்தால் தேவலாம் என்று தோன்றியது. அப்படியே ஜட்டியோடு வெளியே வந்து முன் வீட்டு கதவைத் தட்டினான். சத்தமே இல்லை.

ரேடியோவில் ஏதோ பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.  கதவை இப்போது ஓங்கித் தட்டினான். கடைசி வீட்டில் இருந்து ஒரு ஆள் இரும்பு வாளியைத் தூக்கிக் கொண்டு கிணற்று பக்கம் போனவர், இவன் ஜட்டியோடு நிற்பதை பார்த்தார். முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டு கவனிப்பதை பார்த்தவன், 

“ம்மாளக்க! இங்க என்ன பார்வை, போடா! ஜோலிப் பு... யை பார்த்துட்டு!” என்று கையை மடக்கி ஓங்க, அவர் விழுந்தடித்து கிணற்றடிக்கு ஓடினார்.  கதவு திறக்கும் சத்தம் கேட்டது. 

‘என்ன?’ என்று கதவைத் திறந்தவள் கேட்டாள்

“ஒரு கடுங்காப்பி தர்றியா, தலைவலி உயிர் போகுது? நேத்து இந்த பவ்வுப்பய வாங்கி வந்த சரக்கு சரியில்ல போல”

‘அதுக்கு இப்படியே வரணுமா, கைலிய மாட்டிட்டு வரவேண்டியது தான? மானம் போகுது உன்னால!’

“உள்ள போடீக்...கண்டார....!, பெரிய மானத்தைக் கண்டவ, ஊருக்குத் தெரியாதா ஒம்பவுசி? போ... போயி காப்பியக் கொண்டா!” என்று கீழ்க்குரலில் சிரித்துக் கொண்டே சொன்னான்.

‘சரி போ, நான் கொண்டு வரேன்!’ என்று அவன் நகரவும், அடுப்படிக்குள் நுழைந்தாள்.

பால் பாத்திரத்தில், தண்ணீரை ஊற்றி கொதிக்குக் காத்திருந்தாள். அடுப்படியில் காற்றோட்டமே இல்லை. புகைக்கூண்டு வழியா வர வெளிச்சத்தத் தவிர வேற வெளிச்சம் இல்லை. பத்துவீடுகள் இருக்கிற காம்பவுண்ட் இது.  ‘ப’ னா போல இருக்கும் வீடுகளில் இரண்டு பக்கமும், நான்கு வீடுகள், முன் வாசல்பக்கம் இரண்டு வீடுகள்.  மொத்தம் பத்து.  இரண்டு பக்க வரிசையையும் இணைக்கும் கிணற்றடி, நாலு கக்கூஸ்கள் மற்றும் இரண்டு பாத்ரூம்கள், இரண்டு கிணறுகள்.  இரண்டு கிணற்றிலும் தண்ணீர் இருந்தது. கீழே இறங்கியிருந்தாலும், ஊறிக் கொண்டேயிருக்கிறது. குடிக்கத் தண்ணீர், வெளியே நல்லதண்ணீர் குழாய் இருக்கிறது. 

காம்பவுண்டின் முதல் வீடு அவளுடையது.  அதற்கு இரண்டு வாசல், முன் பக்கம் தெருப்பக்கமாய் ஒரு வாசலும், காம்பவுண்ட் வரிசையில் ஒன்றும் என. தெருவைப் பார்த்த கதவு எப்போதும் மூடியே கிடக்கும். புழக்கம் எல்லாம், காம்பவுண்ட் உள்ளே இருக்கும் மற்றொரு வாசலில் தான். அவள் இந்த காம்பவுண்டிற்கு வந்து இரண்டு வருஷம் ஆகிவிட்டிருந்தது. அவளுக்கு திருமணம் முடிந்த கையோடு இங்கே கொண்டு வந்து குடி வைத்தார், அவளுடைய அப்பா.  மதுரை தான் எல்லாவற்றிற்கும் வசதி, அதிலும், ருபீனாக்கு பழக்கம் உள்ள ஊர் என்று அவர் தான் பிடிவாதமாய் இங்கு குடிவைத்தார்.

அவளுடைய கணவன், குவைத்தில் வேலை பார்க்கிறான். சாதிக் அலி குவைத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்ப்பதால், கை நிறைய சம்பளம், குடும்பப் பொறுப்புள்ள ஆள் என்று அவனை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்து அவன் குவைத்திற்கு சென்றபிறகு அவனுடைய அம்மாவும் உடன் இருந்தாள் சிறிது காலத்திற்கு. அவளுக்கு ஏனோ மதுரை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அது அவள் புலம்புவதில் இருந்து ருபீனாக்கு தெரிந்தே இருந்தது. கொஞ்ச நாட்களிலேயே அவளுக்கு மாமியாருடன் சில விஷயங்களில் சண்டை, சச்சரவுகள் வர, அவள் புளியங்குடிக்கே போய் விட்டாள்.  திருமணத்தின் போது ஒரு மாத லீவில் வந்தவன், அடுத்து வர ரெண்டு வருஷம் ஆகும் என்பதால் தான், அவனுடைய அம்மாவையும் அவளுக்குத் துணையாக விட்டுச் சென்றான். ஆனால் அவளுடைய மாமியார், எந்த ஒத்தாசையும் செய்வதில்லை. ருபீனாக்கு, சமைப்பதில், வீட்டு வேலை பார்ப்பதில் சிரமம் இல்லாதிருந்தாலும், வெளியே கடைக்குப் போய்வர சிரமமாய் இருக்கும். ஆனால் அவளுடைய மாமியார் அதை கண்டு கொண்டதே இல்லை. இதை நினைக்கும் போதெல்லாம், தன் சித்தப்பா மகனை வேண்டாமென்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வரும். அவனை திருமணம் செய்திருந்தால், இத்தனை வசதியாய் இருந்திருக்க முடியாது என்று தன்னையே தேற்றிக் கொள்வாள். 

குவைத்தில்  இருந்து மாதாமாதம் வரும்  பணமும், வீட்டிலேயே கூடை பின்னுவதில்  வரும் பணமும், அவள் ஒருத்திக்கு  தாராளமாய் இருந்தது. போஸ்டாபீசிலும் கொஞ்சம் பணம் சேர்க்க முடிந்தது.  

ருபீனாவின் அம்மா, அவளுடைய சின்ன வயதிலேயே இறந்து விட்டதால், அவளுடைய அப்பா தான் அவளை வளர்த்தது எல்லாம். ஒரே பெண் அவள். அவர் டிவிஎஸ்சில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார், ஓய்வு பெற்ற பிறகும் சும்மா இருக்க முடியாமல் விராலிமலையில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் கிளார்க்காக வேலை பார்த்து அங்கேயே தங்கிவிட்டார்.  எப்போதாவது வருவதோடு சரி.  

தண்ணீர் கொதித்து வர, காப்பிப் பொடியை போட்டாள். பொங்கி வர, ஸ்டவ்வை இறக்கினாள். பால் பாத்திரத்தை கீழே இறக்கி, ஜீனியைப் போட்டு கொஞ்சமாய் ஆற்றி ஒரு தட்டை எடுத்து மூடி வைத்தாள். இட்லிக்கு அரைத்து, கரைத்து வைத்திருந்த மாவு அப்படியே பொங்கி தட்டு மாவுக்கு மேலே நின்றது. அதை எடுத்து, கரண்டியால் மாவை அடிப்பது போல கிண்ட, இறங்கியது. தட்டைக் கழுவி திரும்பவும் மூடி வைத்தாள்.  காப்பி கொஞ்சமாய் தெளிய ஆரம்பித்தது.  காப்பி மண்டி இருந்தால், அதற்கும் கத்துவான் என்று தோன்ற, ஊதி ஊதி, மேலாக ஊற்றினாள்.  காப்பியை ருசித்துப் பார்த்தாள், ஜீனி சரியாய் இருந்தது.

காஃபியை எடுத்துக் கொண்டு, அவன் வீட்டிற்கு வந்தாள். திறந்திருந்த கதவு வழியே பார்த்தாள். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இந்த நேரத்தில் எப்போதும் எதாவது உடற்பயிற்சி செய்பவன், இப்படி உட்கார்ந்திருப்பது புதிதாய் இருந்தது அவளுக்கு.

***

அவர்கள் குடிவந்த போது, விஜி அங்கு வந்திருக்கவில்லை. ஆறேழு மாதத்திற்கு பிறகு தான் அவன் குடிவந்தான். விஜி ஆறடிக்கு மேல். பலகை மாதிரி முதுகு. தலை நிறைய முடி.  முதுகில் நிறைய காயங்களோட தழும்புகள் இருக்கும், வலது மார்பிலும் ஒன்று. வீட்டில் இருக்கும் போது எப்போதும் சட்டை போடுவது இல்லை. இரண்டு மார்புகளின் மத்தியில் கொஞ்சம் முடி. சின்ன கண்கள், பெரிய நெற்றி, விடைத்த  நீளமான மூக்கு, ரெண்டு பக்கம் வடிந்த மீசை. கருப்பேறிப் போன உதடுகள். அத்தனை அழுத்தமான கீழுதடு. அதன் கீழ் பிளவாய்த் தாடை.  கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு.  அத்தனை சிவப்பில்லை அவன், ஆனால் மாநிறத்தைவிட கொஞ்சம் வெளுப்பு. நல்ல பேண்ட் சட்டை போட்டிருக்கும் போது, அவன் பழைய நடிகர் சுமன் மாதிரி இருப்பான். 

அவனை அவள் முதன் முதலாய்ப் பார்த்தபோது கீரீம் கலர் சஃபாரியில் இருந்தான். சுப்பக்கா வீட்டில் இருக்கும் போது தான் பார்த்தாள். இவர்கள் இருக்கும் காம்பவுண்டின் எதிர் காம்பவுண்ட் தான் சுப்பக்காவின் காம்பவுண்ட். சுப்பக்காவுக்கும் புளியங்குடி தான் சொந்த ஊர். ரூபினாவின் கணவன் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி தான் அவர்கள் வீடும். அங்கும் இது போல பத்து குடித்தனங்கள் இருந்தது.  சுப்பக்காவின் பேரில் தான் அந்த காம்பவுண்ட் இருந்தது.  அவர்கள் வீட்டில் மட்டும் தான் அப்போது டிவி இருந்ததால், செவ்வாய்க்கிழமை போடும் நாடகத்திற்காய் அங்கே போவது வழக்கம்.  சுப்பக்காவின் மகள் கலாவிற்கும், ருபீனாக்கும் ஒரே வயசு. அவள் திருமணம் ஆகிப்போனாலும் கூட, சுப்பக்காவின் வீட்டில் உள்ள அனைவருக்கும் ருபீனாவை பிடிக்கும். அதனால் அவள் எந்த நேரத்திலும், அங்கு வந்து போகத் தடையில்லை. அன்றைக்கு போயிருந்த போது, சுப்பக்கா வீட்டில் நிறைய கூட்டம் இருந்தது. வாசல் தாண்டியும் காம்பவுண்டில் இருக்கும் சின்னப்பிள்ளைகள் நின்று எக்கி எக்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  டிவியில் ஏதோ, படம் போடுகிறார்கள் போல என்று நினைத்தவள், பிள்ளைகளை விலக்கி உள்ளே நுழைந்த போது தான் அவனைப் பார்த்தாள்.  வயர் பின்னிய சோஃபாவில் உட்கார்ந்திருந்தான் ஒரு பக்கமாய் சாய்ந்து ஒரு தோரணையாய்.  பறக்கும் யானைக்காது காலர்கள் வைத்த  அந்த க்ரீம்கலர் சஃபாரி அவனுக்குப் பொருத்தமாய் இருந்தது. 

உள்ளே நுழைந்தவளை ஒரு கணம் பார்த்துவிட்டு, திரும்பவும் சுப்பக்கா பக்கம் திரும்பினான். 

சுப்பக்கா, இவளைப் பார்த்து, ‘ஏ ருபீனா, விஜித்தம்பி, உன் காம்பவுண்டுக்கு தான் வரப்போறாப்ல, உன் வீட்டுக்கு அடுத்த வீடு, நம்ம வீட்ல தான் கேட்டாப்ல, இங்க எதுவும் காலியில்லையேண்ணு, உங்க வீட்டு ஓனர்ட்ட  நான் தான் சொல்லி, சலீம் இருந்த வீடு காலி தானேண்ணு தரச்சொன்னேன், விஜித்தம்பியும் போய் பேசியிருக்கு, ஒத்துக்கிட்டாராம்!’

விஜி என்கிற ஆறடிக்கு மேல் வளர்ந்த தம்பி அவளைப் பார்த்து லேசாய் சிரித்தான்.  அவள் பதிலுக்கு சிரிக்கும் போது உதடு இழுத்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதன் பிறகு ஒரு மழை நாளில் பைக் ஓட்டி சர்க்கஸ் வேலைகள் செய்தது, வாசத்திண்ணையில் உட்கார்ந்து போவோர், வருவோரிடம் வம்பிழுப்பது, அவர்கள் இவனுக்கு பயப்படுவது எல்லாம் பார்க்க, பார்க்க அவளுக்கு புரிந்தது, அவன் அந்த ஏரியா ரவுடி என்பது.  சில வருஷங்களுக்கு முன்னால் அதே தெருவில் இருக்கும் தங்கராஜண்ணன் காம்பவுண்டில் குடியிருந்தபோது, அவன் எம்.கெ.புரத்தில் அழகர் என்ற சகரவுடியை கொன்றதற்காய் ஜெயிலுக்குப் போய்விட, வீட்டை அவர் வேறு ஒரு ஆளுக்கு வாடகை கொடுத்து விட்டார். அதனால் வேறு வீடு பார்க்க வேண்டிய கட்டாயம் வர, அவள் இருக்கும் காம்பவுண்டில் வீடு எடுத்திருக்கிறான் என்று பின்னாளில் சுப்பக்கா சொல்லித் தெரிந்தது. 

இதையெல்லாம் கேள்விப்பட்ட போது தான் அவளுக்கு தெரிந்தது, எதற்காக சுப்பக்கா வீட்டில் அத்தனை ஜனங்கள் கூடியிருந்தார்கள் அவனை வேடிக்கை பார்க்க என்று. அதன் பிறகு சுப்பக்கா அவன் வீர, தீர சாகசங்களைச் சொல்ல அவளுக்கு கொஞ்சம் பயம் வரத் தொடங்கியது.  ஆனால் அவன் மூலமாய் எந்த தொந்தரவும் வந்ததில்லை, காம்பவுண்டில் இருந்தவர்களுக்கு.  எப்போதாவது நிறைய குடித்து விட்டு, யாரையோ கெட்ட வார்த்தைகளில் சரமாரியாகத் திட்டுவதோடு சரி.  

திடீரென்று ஒரு நாள் ஒரு அல்சேஷன் நாயைக் கொண்டு வந்தான். அது அவன் சொல்படியெல்லாம் கேட்டது, மதிய சாப்பாட்டிற்கு பிறகு அதனைக் கொஞ்சிக் கொண்டு இருப்பது தான் அவன் வேலை. தெருவில் நின்று கொண்டு, ஒரு பந்தை வைத்துக் கொண்டு அவனும் அந்த நாயும் மாற்றி மாற்றிக் கொஞ்சி விளையாடுவது அத்தனை அழகாய் இருக்கும்.  இந்த தெருவுக்கே அது நாள் வரை தெரிந்திருந்தது ஒரு நாய் தான், அது சுப்பக்கா காம்பவுண்டில் இருக்கும் சவுராஸ்ட்ரா வீட்டில் இருக்கும் மோதி என்ற நாய். அதுக்கு ஒரு கண்ணில் பூ விழுந்து ரொம்பவும் பலகீனமாய், பயந்து போய் இருக்கும். அவர்கள் வீட்டிலே அதற்கு சாப்பாடு போடுவார்களோ இல்லையோ, தெருவில் இருக்கும் எல்லார் வீட்டிற்கும், மதிய உணவுக்கு சென்று விடும். இந்த அல்சேஷன் வந்த பிறகு, அதுவும் போச்சு, மோதி வெளியே வருவதே இல்லை. அவனுடைய நாயை தப்பித்தவறிப் பார்த்தாலே, அது பம்மிக் கொண்டு வாலைக் குழைக்கும். அல்சேஷன் அதைக் கண்டுகொள்வதே இல்லை. 

அத்தனை வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், இது போன்ற பெரிய நாயை வைத்திருப்பது எத்தனை சிரமம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், அதை யாரும் காட்டிக் கொண்டதில்லை. அதுவும் அதை வெளியே கட்டிப் போட்டிருக்கும் போது கிணற்றைத் தாண்டி மறுபக்கமாய் சுற்றி செல்பவர்கள், தங்களுக்குள் புலம்பிக் கொள்வதோடு சரி, அதைப் பற்றி பேசவோ, அந்த நாயைக் கொஞ்சவோ யாருக்கும் தைர்யம் இல்லை.  அவன் வீட்டைத்தாண்டும் போது, நாய்க்கு பயந்ததினாலோ அல்லது அவனுக்கு பயந்ததினாலோ எதிர் சுவற்றை ஒட்டியபடியே நடப்பதினால், சுவற்றின் காரை முழுவதுமாக உதிர்ந்து குறிப்பிட்ட உயரத்தில், பள்ளமாய்ப் போனது. 

எல்லோரும் பயப்படும், எல்லோரையும் பயமுறுத்தும் விஜி ஒரு நாள் அழுதது தான், ருபீனாக்கு ஆச்சரியமான விஷயமாய் இருந்தது.  அத்தனை கேவி கேவி அழுதான் அன்று முழுதும், எங்குமே போகாமல், வீட்டினுள்ளேயே, யாரையோ திட்டிக் கொண்டு அவன் அழுது புலம்புவது அனேகமாய் எல்லோருக்கும் கேட்டிருக்கும். என்ன காரணம் என்று தெரியவில்லை.  ருபீனாக்கு ரொம்பவும் வேதனையாய் இருந்தது அவன் அழுதது. அவளுடைய மாமியாரும், விஜி குடிவந்து ஒரு மாதத்திலேயே மகள் வீட்டுக்கு சென்று விட்டாள். அவள் இருந்தாலாவது போய் பார்த்துவிட்டு வரச்சொல்லலாம், என்ன ஆச்சு என்று கேட்கச் சொல்லலாம். 

கொஞ்சம் நேரம் யோசித்தவள், வீட்டை விட்டு இறங்கி, அவன் வீட்டுக்கு சென்று சாத்தியிருந்த கதவை லேசாய் திறந்து, நாய் இருக்கிறதா என்று பார்த்தவள், நாய் இல்லை என்றதும், நன்றாகத் திறந்தாள். ருபீனாயைப் பார்த்ததும், வேகமாய் எழுந்து வாசலுக்கு வந்து, “போடீ!” என்று கத்திவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டான்.  திரும்பவும் வீட்டிற்கு போனவளை எதிர் காம்பவுண்ட் வாசலில் நின்றவர், ‘உனக்கு ஏம்மா தலையெழுத்து!’ என்று சொல்லி உள்ளே வீட்டிற்குள் போகச்சொல்லி ஜாடை காட்டினார். அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது வீட்டினுள் நுழைந்து கொண்டாள். 

அன்று மாலையே ருபீனாயின் வீட்டுக்கு வந்தான். அவள் அப்போது கூடைச்சேரில் உட்கார்ந்து ஆனந்தவிகடனில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள், பிரபஞ்சனின் ‘காதலெனும் ஏணியிலே’. இவனைப் பார்த்ததும், புத்தகத்தை கட்டிலில் போட்டு விட்டு எழுந்து நின்றாள்.  என்ன செய்யப்போகிறானோ என்று பயம் வந்தது அவளுக்கு.

“காஃபி  கிடைக்குமா, தொண்டையெல்லாம் காஞ்சு போய்கிடக்கு, அதான்!”  என்று நிதானமாய் மூக்கை உறிஞ்சிக்கொண்டே பேசினான்.

‘உட்காருங்க தரேன்’ என்றவள், அடுப்படியில் நுழைந்து, சட்டியில் பால் இருக்கிறதா என்று பார்த்தாள். மதியம் சாப்பாடு முடித்ததும், காஃபிக்கு கலந்தது ஞாபகம் வந்தது.

‘கொஞ்சம்  இருக்கீங்களா? கோமதியக்காகிட்ட  பால் வாங்கிட்டு வந்துடறேன்’

“கடுங்காப்பியே  கொடுங்க, பால் வேண்டாம்!”  என்று சொல்லிக் கொண்டே கட்டிலில்  உட்கார்ந்து, அவள் கட்டிலில்  போட்டிருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.

அவன் அங்கே  இருக்கும் போது, அடுப்படியில் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அடுப்படியில் காஃபி போடுவது, அவளுக்கு சங்கடமாக இருந்தது. அவனிடம், வீட்டில் போய் இருக்கச் சொல்வது எப்படி என்று தெரியாமல், காஃபி கலந்தாள்.  அங்கே இங்கே சிந்தி, ஒரு வழியாய் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.

காஃபியை கையில் வாங்க புத்தகத்தில் இருந்து நிமிர்ந்தவனின் கண்களில் கண்ணீர் இருந்தது மாதிரி இருந்தது.  'அய்யோ  அழறானோ?' என்று யோசித்தவாறே  நின்றாள்.

“என்னோட டைகரைக் கொன்னுட்டாய்ங்கங்க, எவனோ சோத்துல வெஷம் வச்சிருக்கான், கறிச்சோறுங்கிறதால, தெரியாம சாப்ட்டிருச்சு போல.  விடியக்காலைல பார்த்தா, பேப்பர் மேல கொஞ்சம் சாப்பாடு மிச்சம் இருக்கு, ரோஸ் கலர்ல, அதுக்கு பக்கத்துல டைகர் நாக்கு தள்ளி செத்துப் போயிக்கெடக்கு! தூக்கிப் பார்த்தா ஒண்ணுமே இல்லை. எந்த தேவிடியா மகென் வெஷம் வச்சான்னு தெரிஞ்சதுன்னா, அவனை பொலி போட்டுருவேன்.  எவ்வளவு ஆசைஆசையா வளர்த்தேன் தெரியுங்களா, எங்க அண்ணன் வீட்ல இருந்தத நான் தான், துணைக்கு வச்சுக்கலாம்னு கொண்டு வந்தேன், அங்கேயே விட்டிருக்கலாம், அநியாயமா இங்க வந்து செத்து போயிடுச்சு” என்று திரும்பவும் அழுதான்.

காஃபியை கையில் வைத்துக் கொண்டு என்னவோ, பேசிக் கொண்டிருந்தான், அவளுக்கு அது எதுவும் காதில் விழவில்லை.  இப்படி சின்னப்புள்ள மாதிரி அழறானேன்னு தோன்றியதும், அவளுக்கு ரொம்பவும் விசனமாய் போய்விட்டது.  

‘அழுகாதீங்கண்ணு சொல்றதத்தவிர எனக்கு வேற  ஒண்ணும் சொல்லத் தெரியலைங்க!’  என்று கொஞ்சமாய் தைர்யம்  வந்து கூடைச்சேரில் உட்கார்ந்தாள்.  

அவன் காஃபியைக்  குடித்துவிட்டு, டம்ப்ளரை நீட்டினான், வாங்கிக் கொண்டாள்.

“வெளிய  போக மனசுக்கு கஷ்டமா இருக்கு, ராத்திரி உங்க வீட்ல ஏதாவது செஞ்சு தர்றீங்களா? காசு கொடுத்துறேன்?”

‘காசு வேணாங்க, எனக்கு என்ன சமைக்குறனோ அதயே ஒங்களுக்கு சேத்து செய்யிறேன்’ என்றாள். அன்று அவன் சமையலை விரும்பி சாப்பிட்டதில் இருந்து, எது விசேஷமாய் செய்தாலும், அவனுக்கு சேர்த்து செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.

***

காஃபியைக் கொடுத்தாள் கட்டிலின் முனையில் வைக்கச் சொன்னான்.  வைக்கும் போது அவளை அப்படியே இழுத்து பக்கத்தில் உட்காரச் சொன்னான்.  

உட்கார்ந்தாள். அப்படியே காதோரமாய் பிடரியில் முடியை விலக்கி முத்தமிட்டான்.

அவளுக்கு கூச்சமாயும் சுகமாயும் இருந்தது. அடுத்து அப்படியே கழுத்தைக் கடிப்பான், அப்புறம் தோள்வழியாக கைகளை கொண்டு சென்று, இரண்டு மார்புகளுக்கு நடுவே கை வைத்தபடியே அணைத்து இழுப்பான், என்று அவன் பக்கமாய் லேசாய் சாய்ந்தாள். அவன் காஃபியை கையில் எடுத்திருந்தான், அவள் சாய, லேசாய் சிந்தியது காஃபி தரையில், அப்படியே தொடையில் இணுங்கிவிட்டான். அவளுக்கு கண்ணில் நீர்முட்டிக் கொண்டு வந்தது. இன்னும் ஜட்டியோடே இருந்தான், பதிலுக்கு அவளுக்கும் அவன் தொடையில் கிள்ள வேண்டும் என்று தோன்றியது.  ஆனால் செய்யவில்லை, தொடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். பருத்த தொடை இல்லை,  இறுகியிருக்கும் தொடை. ஆனால் அவள் நினைத்தபடி அவன் ஏதும் செய்யவில்லை.

அவன் காஃபியை குடித்து முடித்ததும், அதை வாங்கிக் கொண்டு எழுந்திருக்க முற்பட்டாள்.

“இருடி போவ!  கொஞ்சம் தலையப்பிடிச்சு விடு” என்று அப்படியே கட்டிலில் சாய்ந்தான். 

கீழே தரையில் கிடந்த கைலியை எடுத்து அவன் இடுப்புக்கு கீழே போர்த்தியது போல போட்டாள்.  கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது இவனுக்கு என்று நினைத்துக் கொண்டாள். எழுந்து மரஅலமாரியைத் திறந்து தைலத்தை எடுத்தாள். வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. கீழ்த்தட்டில் அவனுடைய உடைகளும், சில படங்களும் இருந்தது, துணிகளுக்கு அடியில் ஏதோ குழாய் முனை போல் நீட்டிக் கொண்டிருக்க, துணியைத் தூக்கிப் பார்க்க அது ஒரு கைத்துப்பாக்கி. அதை உருவி, கையில் எடுக்க, கனமாய் இருந்தது. ஏதோ படபடவென்று வர, எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.

அவனருகே வந்து அவன் தலையில் தைலத்தை தடவினாள்.  இரண்டு பொட்டிலும் லேசாக விரல்களால், அழுத்தி சுற்றுவது போல் செய்ய அவனுக்கு கிறக்கமாய் இருந்திருக்க வேண்டும். கண்களை மூடிக்கிடந்தான். அவனை பார்ப்பது போல உட்கார்ந்திருந்தவள், அவன் நெற்றியின் மத்தியிலும் தடவினாள். இடது கையால், அவன் தலைமுடியைக் கோதுவது போல செய்தாள்.  

“காலையில என்ன பலகாரம்?”

‘இட்லி’

“ரெண்டு தோசை ஊத்திக்குடு, தோசை சாப்பிடணும் இன்னிக்கு! அப்படியே முட்டை வாங்கிட்டு வந்து மேலே ஊத்து, முட்டை தோசையா சாப்பிடுறேன், அப்புறம் ஒரு கடுங்காப்பி”

'சரி! முட்ட இல்லை, போய் வாங்கணும்!'

“நீ போகாத அந்த முன்வீட்டுப் பயலைக் கூப்பிடு, நான் சொல்றேன்!” 

அலமாரியில் பார்த்த துப்பாக்கி பற்றி அவளுக்குக் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

'துப்பாக்கியப் பாத்தேன்!'

“என்ன? அதான் அப்பப்போ பாக்குறியே, இன்னைக்கு என்ன புதுசா?” என்று படுத்தவாறே குனிந்து பார்த்து சிரித்தான்.

'சீ! நான் சொன்னது அலமாரில இருக்குறத!

'“தைலத்தை எடுக்கப்போனா, அத மட்டும் செய்ய வேண்டியது தானே? கண்டதையும் எதுக்கு நோண்ட்ற?” என்று கத்தினான்.

'அத எனக்கு எடுத்துக்காட்டேன்! எப்படி இருக்குண்ணு பார்க்குறேன்!'
திரும்பவும் கையைக் கீழே கொண்டு போனவன், அவள் தலையில் அடித்தபடி எழுந்திருக்க அவளது கையைப் பற்றி இழுத்தான்.  கருப்பு கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தவளின் கை, அப்படியே சிவந்தது.  

“இந்தக் கலருக்கு தாம்புள்ள, விழுந்துட்டேன்!, சரி மெதுவா எடுத்துட்டு வா, லோடாயிருக்கு” 

ஒரு சிரிப்புடன் அலமாரியை திறந்து துப்பாக்கியை எடுத்தாள்.  அதனின் கனம் அவளுக்கு ஒருவிதமான சந்தோஷத்தைக் கொடுத்தது, அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.  பத்திரமாக அவன் கையில் கொடுத்தாள்.

கையில்  வாங்கியவன், சிலிண்டரை திறந்து அதில் இருந்த தோட்டாக்களில்  ஒன்றை உருவினான்.  அவள் கையில் கொடுத்தான், அவளுக்கு அதைப் பார்க்கும் போது ஏனோ  சிரிப்பு வந்தது.

பித்தளை உடம்பின் முனையில், ஏதோ வெள்ளை உலோகத்தில் ஒரு மொட்டு போன்ற  முனையைத் தொட்டுப் பார்த்தாள்.  அதன் பின்னால், ஆணியை அறைந்திருந்தது  போல ஒரு கருப்பு வட்டம் இருந்தது. இது எப்படி ஒரு  ஆளைக் கொல்லுது என்று அவளுக்கு அதைப் பார்த்த போது விளங்கவில்லை.

எல்லாத்தோட்டாக்களையும்  அதிலிருந்து உருவி, கீழே வைத்துவிட்டு, சிலிண்டரை  சுற்றிக் காட்டினான்.  டிரிக்கரை இழுக்கையில், மேலே இருக்கும் சுத்தி தோட்டாவில் இருக்கும் பின்னை தொட்டு, நெருப்பை உண்டு பண்ண, நெருப்பு தோட்டாவின் உள்ளே இருக்கும், எரிமருந்தை பற்றவைத்து, உள்ளே வெப்பக் காற்று அழுத்தமாகி தோட்டாவை பாரல் வழியாய் சுழன்ற படியே துப்பும். பாரல், தோட்டாவை சுழலவும், நேராய் போவதற்கும் உதவுகிறது, என்று துப்பாக்கி செயல்படுவதைப் பற்றி சொல்லிக் கொண்டே போனான்.  

“இது டபுள்  ஆக்சன் ரிவால்வர், ஒரு தோட்டா வெளியே போனதும், இந்த சிலிண்டர் லேசாய் சுற்றி, அடுத்தது பொசிஷனுக்கு வந்துடும், இது சும்மா ஆசையா தெரிஞ்சுக்கிட்டது” என்று கண்களை விரித்து ஒரு குழந்தையைப் போல ஆர்வமாய் சொல்வது அவளுக்கு வியப்பாய் இருந்தது. 

“சரி எடுத்த எடத்திலேயே வச்சுடு!” என்று  தோட்டாவை திரும்பவும் லோட் செய்து அவள் கையில் கொடுத்தான்.

ருபீனாக்கு அது அத்தனை கவர்ச்சியாய் இருப்பது போலத்தோன்றியது.  எடுத்து அவனுடைய துணிகளுக்கு அடியில் வைத்தாள்.

‘நான் தோசை ஊத்திக் கொண்டு வரேன், நீ குளிச்சுட்டு வந்துடு’ என்று  அங்கிருந்து நகர்ந்தாள்.

முன்வீட்டில்  இருக்கும் பையனை அழைத்து  அவன் கூப்பிடுவதாய் சொல்லிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தாள்.  கொஞ்சம் சின்ன வெங்காயத்தை உரித்து, தக்காளி, உளுத்தம்பருப்பை எடுத்து, காய்ந்த மிளகாயையும் சேர்த்து லேசாய் எண்ணெய் விட்டு வதக்கினாள். கொஞ்சம் பெருங்காயம் கலந்து அம்மியில் நகட்டி, மிளகாய் சட்னியை தயார் செய்தாள்.

சாதிக்கிற்கு  தோசையும், மிளகாய்ச் சட்னியும்  ரொம்பவும் பிடிக்கும் என்று  நினைவுக்கு வந்தது. கல்யாணத்திற்கு ஜூபிடரில் எடுத்த போட்டோ தொங்கிக் கொண்டிருந்த சுவரை  ஏனோ பார்க்கத் தோன்றியது.  சாதிக்கின் நினைவு வரும்போதெல்லாம், இந்த போட்டோவைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வது  போல இருந்தது அவளுக்கு.

விஜியை  அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சாதிக்கை நினைக்கும் போது பாவமாய் இருந்தாலும், அவன் மேல் தனக்கு காதலோ, ப்ரியமோ வர சாத்தியங்களே இல்லை என்று நம்பத்தொடங்கியிருந்தாள்.

Thursday, January 12, 2012

காற்றில் திறக்கும் கதவுகள்...


அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப் பார்த்த போது.   நாளை வருவேன் என்று அவளிடம் சொல்லியிருந்தாலும், இந்த பனிகுத்தும் அதிகாலையில் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது. ராத்திரி முழுதும் இல்லையோ என்று நினைத்தபோது ஏனோ வயிற்றை சங்கடப்படுத்தியது போலிருந்தது.    

லாப்டாப் பேக்கில் இருந்த சாவியைத் துளாவி எடுத்து, கேட்டைத் திறந்தான். இரண்டு நாட்கள் பேப்பர் அப்படியே காரின் கதவுக்கு அருகில் எடுக்காமல் கிடந்தது. நேற்று அவளிடம் பேசிய போது ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றியது.  பேப்பரை எடுத்துக் கொண்டு, கதவுக்கு அருகே வந்து, வராண்டா ஸ்விட்சை தட்டினான். வெளிச்சம் பரவ, சாவியை நுழைத்து கதவைத் திறந்தான்.  வாசல் நிலையை ஒட்டி கொஞ்சம் தண்ணீர் தேங்கி காய்ந்திருந்தது  போல இருந்தது. 


‘திவ்யா!’  என்று குரல் கொடுத்தான்.  பூட்டிய கதவுகளுக்குள் அவள் இல்லை என்று புத்திக்கு எட்டியிருந்தபோதும், தன்னையே அறியாமல் அழைக்கத்தோன்றியது, ஏதாவது அறையைத் திறந்து கொண்டு வந்துவிடுவாள் என்று.  கதவை உட்புறமாக பூட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான்.  டிராவல் பேக்கையும், லாப்டாப் பேக்கையும் அப்படியே லிவ்விங் ரூமில் இருந்த சோஃபாவில் போட்டுவிட்டு, டீப்பாயில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று அங்கு கிடந்த புத்தகங்களை ஒதுக்கிப் பார்த்தான். அப்படி எதுவும் இல்லை.  உள்ளறைக்குச் சென்று, வார்ட்ரோப்பில் இருந்த லுங்கியை எடுத்து துணியை மாற்றிக் கொண்டு, முகம், கை, கால் கழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கம் சென்றான்.  

ஒரு க்ரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்ட ட்யூப்ளே வீடு அது.  லிவ்விங் ரூமில் இருந்து மாடிக்குச் செல்லும் ஹெலிகல் ஸ்டேர்கேஸ், வளைந்த படிக்கட்டுகள்.  படிகளுக்கு நேர் மேலே சீலிங்கில் ஸ்கை லைட் அமைப்புடன் இருப்பதால், வீட்டிற்குள் எப்போதும் வெளிச்சம் இருக்கும் பகல் நேரங்களில்.  மாடியில் ஏறியதும், ரூஃப் கார்டனுடன் கூடிய டெரஸ். மாஸ்டர் பெட் ரூமின் ஃப்ரெஞ்ச் வின்டோஸை திறந்தாலும், ரூஃப் கார்டனுக்குள் இறங்கலாம். பார்த்து பார்த்து கட்டிய வீடு, திவ்யாவின் கனவுகளில் ஒரு கான்செப்சுவல் வீடு அது.  அழகையும், பயன்பாட்டையும் இணைத்துக் கட்டப்பட்ட வீடு.   

வீட்டின் உள்ளே ஒவ்வொரு அறையிலும், நிஷ் எனப்படும் உட்குடைவுடன் கூடிய அமைப்புகளில் வேறு வர்ணத்துடன் கூடிய விளக்குகள்.  திவ்யாவின் ரசனைக்கு உதாரணங்கள்.  சமையலறை இத்தாலிய முறைப்படி மாடுலர் டிசைனில் கட்டப்பட்ட திறந்த சமையலறை. லிவ்விங் ரூமில் இருந்து பார்க்கும்போது சமையலறை அழகாய்த் தெரியும்.  அடுக்கப்பட்ட கண்ணாடிக் குவளைகளும், பீங்கான் சாமான்களும் ஒரு நட்சத்திர ஓட்டலின் பார் போன்று தெரியும்.  சற்றே உயர்ந்த மேடை ப்ரேக் பாஸ்ட் கவுன்டருடன் இரண்டு உயர்ந்த ஸ்டூல்களும் அதை உறுதிப்படுத்தும்.   

சமையலறையை அடைந்து, பிரிட்ஜை பார்த்த போது பால், தோசை மாவு, முட்டைகள், பழங்கள் என்று தேவையான எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.  கவரைக் கிழித்து, பாலை சட்டியில் ஊற்றி, காஃபி தயார் செய்தான், காஃபி மேக்கரில் கொஞ்சம் இருந்த டிகாக்க்ஷனும் கலந்த காஃபி.  எடுத்துக் கொண்டு பேப்பரை எடுத்து லிவ்விங் ரூமில் உட்கார்ந்து கொண்டான். பேப்பரை விரிக்கும் போதே, அவள் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது.  செல்ஃபோனை எடுத்து அவள் நம்பரை டயல் செய்தான். 

டயல் டோனில் வைத்திருந்த பாட்டு கேட்டது, ஃபில் காலின்ஸின் ஒன் மோர் நைட் பாடல்.  ரெண்டு வரி பாடி திரும்பவும் ஆரம்பிக்கும் போது எடுத்தாள்.   

“யே! எப்போ வந்த? நாளைக்கு தானே வர்றேன்னு சொன்ன?  

‘ஐ தாட் ஆஃப் கிவ்விங் யூ எ சர்ப்ரைஸ், பட் இட் டர்ண்ட் டு பி மை சர்ப்ரைஸ்!’ 

“சாரி பேபி,  நேத்து ராத்திரியே தினேஷ் வீட்டுக்கு வந்துட்டேன், இங்க ப்ரேக் பாஸ்ட் முடிச்சிட்டு அங்க வந்துடறேன், ஓகேயா கோபம் இல்லையே?!” 

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தினேஷ் வீட்டிற்கு நேற்று போகும்போதே ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது.  

“நேத்து உன்ட்ட பேசிட்டு வச்சதும், அவன் கூப்பிட்டான்! அதான் உன்ட்ட சொல்ல முடியல, ஜஸ்ட் டூ அவர்ஸ் பொறுத்துக்கோ வந்துடறேன்!” 

‘சரி!’  என்று செல்ஃபோனை கட் செய்தான். நேற்று ராத்திரி தான் போயிருக்கிறாள் என்றால், ஏன் ரெண்டு நாள் பேப்பர் எடுக்காமல் இருக்கு என்று அவனுக்கு குழப்பமாய் இருந்தது.  பொய் சொல்றாளோ? என்று தோன்றியது. ‘ப்ச்’ என்று தனக்குத்தானே சொல்லிவிட்டு, திரும்பவும் பேப்பர் படிக்க முயன்றான்.  பேப்பரில் மனசு லயிக்கவில்லை, ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான்.  காஃபி டேபிளில் இருந்த காஃபி ஆறிப்போய் ஆடைகட்டி இருந்தது.  

ஆடையை எடுத்துப் போட்டு, அவனில் ஒரு இருபது செகண்ட்ஸுக்கு, கப்பில்  ஒரு ஸ்பூனை போட்டு வைத்தான்.  இருபது செகண்டில் சூடாகிவிடும்.  மெடி லேடர் மேல் இருந்த அவனில் தூசி படிந்து இருந்தது.   வேலைக்காரி தினமும் வந்தால், இதைத் துடைத்திருப்பாளே!? அவ வரலையா, இவள் வீட்டில் இல்லையா? யோசனையுடன், காஃபியை எடுத்து குடித்தான். சர்க்கரை போடாதது ஞாபகம் வந்தது. சர்க்கரை டப்பாவில் இருந்த சர்க்கரையை எடுத்து ஒரு ஸ்பூன் போட்டான். கலக்கியபடியே டிவிக்கு வந்தவன்.  சேனலை மாற்றினான்,  நியூஸ் சேனலில் நிறுத்தியவனுக்கு, எதிர்கட்சியினர் லோக்பாலுக்கு எதிராய் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை பார்த்த போது எரிச்சல் வந்தது.  திரும்பவும் மாற்றி, ஏசியாநெட்டில் நிறுத்தினான். ஐடியா ஸ்டார் சிங்கர் ஓடிக் கொண்டு இருந்தது.  ஏசுதாஸின் பொய்க்குரலில் ஒருவன், “மதுரம் ஜீவாம்ருத பிந்து” பாடிக் கொண்டிருந்தான்.  பாடி முடித்ததும், ஆளுக்காள் நொட்டை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  

திவ்யா இருக்கும் போது ஆங்கில சேனல்களை தாண்டி நகராது. இது போன்ற  செமி கிளாசிகல் மெலடிகளை தேடமுடியாது. அவளின் தேர்வு மேற்கத்திய இசை மட்டுமே பெரும்பாலும்.  

திரும்பவும் ப்ரேக். டிவியை அப்படியே விட்டுவிட்டு டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டான். அங்கிருந்த சின்ன புத்தக செல்ஃபில் இருந்து நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு எடுத்தான்.  படித்த புத்தகம் தான் என்றாலும், பேய்க் கொட்டு படிக்க சுவாரசியமாய் இருக்கும் முதல் இரண்டு பக்கங்கள் என்று புரட்டினான். ஒரு பக்கத்திலேயே அசுவாரசியம் வந்து எடுத்து வைத்தான்.  

வெளியே வந்தான், வந்தவன் டிவியில் “மஞ்சள் பிரசாதவும்” என்று  சித்ராவின் பாடலை ஒரு கெச்சலான பெண் பாடிக் கொண்டிருந்தாள்.  அவளைப் பார்த்த போது சௌம்யாவைப் போல இருந்தது. சௌம்யாவுக்கு சுத்தமாய் பாட வராது, அவளின் இசை ரசனை அலாதியானது. அந்தப் பெண்ணின் எதுவோ அவளிடம், அவனுக்கு சௌம்யாவை ஞாபகப்படுத்தியது.  உதடுகள், கண்கள் அல்லது நெற்றி, எதுவோ ஒன்று, யோசனையில் அவளைப் பார்ப்பது தடைபடும்போது என்ன ஆராய்ச்சி என்று நிறுத்திக் கொண்டான்.  வெகுவாக பாராட்டினார்கள். இசையமைப்பாளர் ஜெயசந்திரன், இன்னும் ஃபெதர்லி டச் இருக்கணும் இந்தப்பாட்டுக்கு என்று பாடிக்காண்பித்தார். அந்தப் பெண் நெஞ்சில் கைவைத்து ஏற்றுக் கொண்டாள். அவள் சிரிப்பு தான் சௌம்யாவை ஞாபகப்படுத்தியது என்று முடிவு செய்து கொண்டான். 

திவ்யா வர இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலாகவோ ஆகலாம். பல்  தேய்த்து விட்டு சாப்பிட்டு விடலாம் அப்புறம் குளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். உள் பனியனை கழட்டிய போது வியர்வை படிந்ததை பார்த்ததும், குளித்து விட்டே சாப்பிடலாம் என்று தோன்றியது.  அலமாரியில் வைத்திருந்த , ஈரிழைத்துண்டு கிடைக்கவில்லை, டர்க்கி டவலை எடுத்துக் கொண்டு, குளிக்கப் போனான்.  டர்க்கி டவல் அப்படியே ஈரத்தை முழுதுமாய் உறிஞ்சி விடுகிறது. ஈரிழைத் துவர்த்து போல ஈரத்தை விடுவது இல்லை அது.   

ஃப்ரெட்டிக்கு ஒரு பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனத்தில் வேலை ஒரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக.  கை நிறைய சம்பளம், வருடத்திற்கு இரண்டு போனஸ்.  மாதத்திற்கு இரண்டு மூன்று முறை வெளியூர்களுக்கு பயணம் செய்வதால் கிடைக்கும் பெர்டயம் மாத செலவுக்குப் போதும்.  சென்னையில் இருந்து பெங்களூர் வந்து ஐந்து வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. வந்த ஒரு வருஷத்திற்குள், பெங்களூரிலேயே இடம் வாங்கி வீடும் கட்டியாயிற்று.  இவன் அலுவலகப்பணி காரணமாய் வெளியூர்களுக்கு சென்று கொண்டிருந்ததால், திவ்யா தான் கட்டிடப்பணிகளை முழுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதில் ஆர்வம் இருந்ததுடன் அதைப்பற்றிய போதுமான அறிவும் இருந்தது, எல்லாவற்றிற்கும் வசதியாய் இருந்தது.  இவனுக்கு இன்று வரை ஸ்டிரக்சரல் எஞ்சினியர் கொடுக்கும் டிராயிங்குகள் புரிவதே இல்லை.  அவள் அதை எளிதில் புரிந்து கொள்வதுடன், நுணுக்கமான கேள்விகள் கேட்டு தெளிவு பெறுவதிலும் கருத்தாய் இருந்தாள். அப்பா, அண்ணன்கள் எல்லாம் எஞ்சினியர்களாய் இருந்ததால் வந்ததாய் இருக்கலாம் அவளின் ஆர்வமும், அதன் வழியே அறிவும். 

குளித்து முடித்தவுடன், பசி எடுத்தது. தோசை மாவை வெளியே எடுத்து  வைத்தான்.  ஃபெதர் டச் ஹாப்பில், ஒரு பொத்தானின் பட்டையை அழுத்த அடுப்பு பற்றிக் கொண்டது.  தோசைக்கல்லை எடுத்து ஹாப்பில் வைத்து, சிம்னியை ஆன் செய்தான்.   மாவில் உப்பிட்டு கரைத்து தோசை வார்க்கத் தொடங்கினான்.  தோசை வார்த்து, அம்மா கடந்தமுறை வந்தபோது கொடுத்த எள்ளுப்பொடியை எடுத்து குழித்து, நல்லெண்ணெய் விட்டுக் கொண்டான்.  கட்டியிருந்த துண்டுடன், சோஃபாவில் உட்கார்ந்து கொண்டான்.   

திவ்யா இருந்தால் இப்படி உட்கார விடமாட்டாள். ஈரத்தோடு உட்கார்ந்தால், சோஃபாவின் பேப்ரிக் ஈரமாகி முடை நாற்றம் அடிக்கும் என்பாள். அதனால் அவள் இல்லாத போது தான் இது போல காரியங்கள் செய்யமுடியும்.  நிறைய  எண்ணெய் ஊற்றி தோசை செய்வது, ஸ்வீட் சாப்பிடுவது, டாய்லெட்டில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது என்று எல்லாம்.  ஆனால் இன்று சிகரெட் பிடிக்கமுடியாது, அவள் எந்நேரமும் வந்துவிடுவாள்.  தோசைக்கும், எள்ளுப்பொடிக்கும் தோசை கொண்டா, கொண்டா என்று உள்ளே போனது.  சாப்பிட்டு ஆனதும், அவளுக்கு திரும்பவும் ஃபோன் செய்யலாமா என்று  நினைத்தவன், வரும்போது வரட்டும் என்று விட்டுவிட்டான். 

ஏசியாநெட்டில் ஏதோ ஒரு பழைய நடிகை தன் டைரி பக்கங்களில் இருக்கும்  எழுத்தாக சில பேசிக் கொண்டிருந்தாள்.  புனே ஃபிலிம் இன்ஸ்டிடியுட்டில்  படித்தவள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.  ஃப்ரெட்டிக்கு அவளை எந்த படத்திலும் பார்த்த மாதிரியில்லை. எதாவது பழைய படங்களில் அம்மா, அண்ணி, அக்கா என்று நடித்திருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. டிவியில் மனம் ஒட்டவில்லை . சௌம்யாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. சௌம்யாவுக்குப் பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.  உடனே செல்ஃபோனில் அழைக்க முயற்சித்தான்.  ரிங் போய்க் கொண்டேயிருந்தது. அவள் எடுக்கவில்லை.   

‘கால் யூ ஆஃப்டெர் அ ஒய்ல்’ என்று குறுஞ்செய்தி வந்தது.  திவ்யா இன்றைக்கு ஏன் தினேஷ் வீட்டுக்குப் போயிருப்பாள்.  திவ்யாவுக்கு தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டது, ஃப்ரெட்டிக்கு தெரியும் என்றாலும், நேற்று இரவு போக வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றியது. பொதுவாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவள் தினேஷைப் பார்க்கப் போவதில்லை. அப்படித்தான் அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருந்தது.  சனி ஞாயிறுகளில் இருவரும் ஒன்றாய் தான் இருக்க வேண்டும் என்று.  ஆனால் இந்தமுறை, இவன் ஞாயிற்றுக்கிழமை வருவேன் என்று சொல்லியதால்,  நேற்று அங்கே சென்றிருக்க வேண்டும். 

சௌம்யா ஏன் ஃபோனை எடுக்கவில்லை. அவளுக்குத் தெரியும், ஃப்ரெட்டி இன்று வருவது. சௌம்யாவுக்கும் திவ்யாவுக்கும் ஒருவரையொருவர் பழக்கமில்லை.  அதே போல தினேஷை, ஃப்ரெட்டிக்கும் யாரென்று தெரியாது.   தினேஷின் பெயரே நிஜமா, கற்பனையா என்று தெரியாது, ஆனால் அவன் யாரென்று அறிகிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. அதற்கான லீட்ஸ் எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை.  நிறையமுறை திவ்யாவிடம்  பேசும்போது, தினேஷைப் பற்றி அல்லது தினேஷ் என்பவனைப் பற்றி தெரிந்து கொள்ள அவன் நிகழ்த்தும் சம்பாஷணைகளை அவள் புரிந்து கொண்டு, அதிலிருந்து நழுவி விடுவாள். இது போன்ற அவஸ்தைகள் அவளுக்குக் கிடையாது. 

சௌம்யா யாரென்று அவள் திரும்பவும் கேட்டதேயில்லை. இவனே வலிய சென்று, சௌம்யா பற்றி திவ்யாவிடம் சொல்ல, அவள் அதை கண்டு கொண்டதேயில்லை.  அவனுக்கு இருக்கும் அவஸ்தைகள் அவளுக்கு இல்லாதது, அவனுக்கு எரிச்சலாய் இருக்கும், பொறாமையாயும் இருக்கும். திவ்யா கைவிட்டு போய்விடுவாளோ என்று ஏனோ தோன்றும். ஆனால் அவள், இவனுடன் இருக்கும் போது பழகுவதில் எந்த குறைபாடும் வைத்ததில்லை.   

சுயலாபத்தின் காரணமாய் இது போன்ற ஏற்பாடு செய்தது தேவையில்லையோ என்று தோன்றும். ரொம்பவும் புத்திசாலித்தனமாய் காய் நகர்த்துவது போல  நினைத்து, அதை மனதளவில் சமாளிக்க முடியாமல் தடுமாறுவது போல அவனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. அப்படி நினைக்கும் போதெல்லாம் சௌம்யாவின் முகம் ஞாபகத்தில் வந்து, அதில் ஏதோ நியாயம் இருப்பது போன்ற தோற்றத்தை தரும்.  

சௌம்யா, ஃப்ரெட்டியுடன் வேலை பார்க்கிறாள்.  அவள் ஜுவல்லரி அண்ட் ஸ்பெஷலாட்டி பிரிவில் சீனியர் மெர்ச்சண்டைசராய் பணி புரிகிறாள்.  ப்ரெட்டியின் நண்பனும் அதே பிரிவில் அக்ஸஸரியில் சீனியர் மெர்ச்சண்டைசர். அவனை சிகரெட் ப்ரேக்கிற்கு அழைக்க கீழ்தளத்துக்குப் போகும் போது, சௌம்யாவை பார்த்து பேசியிருக்கிறான். உடன் வேலை செய்பவன் என்ற ரீதியில் ஆரம்பித்த பழக்கம், இலக்கியம், இசை என்ற ஒத்த ரசனையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது அவர்களின் நட்பு.  திவ்யாவின் மேலோ அல்லது சௌம்யாவின் கணவன் மீதோ எந்தவித குறைகளும் இருவருக்கும் கிடையாது அல்லது அதைப்பற்றி பேசியது கிடையாது. ஒரு உறவில் இருக்கும் போது, வேற்று நபரால் ஈர்க்கப்படுவது எப்படி என்று பேச்சு வந்த போது,  ஆதரவான, எதிரான கருத்துக்களை பரிமாறிக் கொண்டபோது, அவர்களுக்கு அது ஒரு இயல்பான விஷயமாகவேபட்டது.   

ஒருமுறை மும்பைக்கு ஃப்ரெட்டி செல்லவேண்டியதிருந்த போது, சௌம்யாவிற்கும் மும்பையில் ஒரு ஜுவல்லரி பாக்டரி செல்லவேண்டியிருந்தது. ஜூஹூ பீச்சில் இருக்கும், சன் அண்ட் சாண்டில் தான் இருவருக்கும் கம்பெனியில் ரூம் புக் செய்திருந்தார்கள்.  அங்கே இருவரின் நெருக்கமும் இன்னும் அதிகமானது. தனித்தனி அறை என்றாலும், இரவு இருவரும் ஒன்றாகவே உறங்கினார்கள். அதன் பின் பெங்களூர் திரும்பிய பிறகும் இது தொடர்ந்தது.  ஃப்ரெட்டி இதை ஏனோ திவ்யாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. சரியான சந்தர்ப்பம் வரும்போது அதைப்பற்றி பேசிவிடவேண்டும் என்று பலமாய்த் தோன்றியது.  

அதை சௌம்யாவிடம் சொன்னபோது, அவள் அதை ஏற்கவில்லை.  திவ்யாவிடம் சொல்லாமல் இருப்பது அவனுக்கு ஏனோ குற்ற உணர்வைத் தந்தது. கொஞ்சம் சொல்வதில் பயமும் தயக்கமும் இருந்தாலும் சொல்லிவிடுவதென முடிவு செய்தான். 
அதை சௌம்யாவிடமும் சொல்லி அவளையும் கன்வின்ஸ் செய்துவிட்டான். 

திவ்யாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று  தெரியவில்லை.  யாஹூவின் கேள்வி பதிலில் ஒரு பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் பற்றிய பதிவை படிக்க நேர்ந்தது அவனுக்கு.  ஓபன் மாரேஜஸ் பற்றிய அந்த பதிவைப் படித்ததும், அவனுக்கு இதை வைத்து ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது.  ஆனால் அது ம்யூச்சுவல் என்று நினைத்தபோது கொஞ்சம் யோசனையாய் இருந்தது. அந்த ஆர்டிகளை அவன், திவ்யாவுக்கு அணுப்பினான், ஆபிஸில் இருந்தபடியே.  திவ்யா ரெகுலராய் மெயில் செக் செய்பவள், அவள் ரியாக்சனை பார்த்துவிட்டு அதற்கேற்றவாறு முடிவு செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.    

அன்று மெயில் அனுப்பிய பின், அவன் மாலை வீட்டுக்குச் செல்லும் வரை எந்த பதிலும் இல்லை.  ஒருவேளை வீட்டிற்குப் போன பிறகு பேசுவாளோ என்று  தோன்றியது.  காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி செலுத்தினான், இந்திரா நகர் 100 அடி ரோட்டில் இருந்து சிக்ஸ்த் மெயின் வழியாக 80 அடி ரோட்டிற்குள் நுழைவதற்கு முன்னால் ஃபோன் அடித்தது. ஓரமாய் நிறுத்தி எடுத்த போது, திவ்யா அழைத்திருப்பது தெரிந்தது. மிஸ்ட் கால் தான் கொடுப்பாள் எப்போதும் இந்த நேரத்தில் அழைப்பது என்றால், அவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது பேசுவது உசிதமாகாது என்று.    

‘யா திவ்யா, யூ ஹவ் கால்ட் மீ?’ 

“ஃப்ரெட்டி! கன் யூ பை டுனா சாண்ட்விச் ஃபார் மீ, அம் ஃபீலிங் ஹங்க்ரி!” 

‘நான் இப்போதான் 'பாரிஸ்தா' கிராஸ் பண்ணேன், யூ ஷுட் ஹவ் டோல்ட் லிட்டில் எர்லி!’ 

“ப்ளீஸ் பா, அம் டையிங் அவுட் ஆஃப் ஹங்கர், ஒய் டோண்ட் யூ ட்ரை 'ஜஸ்ட் பேக்'?” 

‘ஓகே!’  என்று ஃபோனை கட் செய்தான்.  அங்கிருந்து 80 அடி ரோட்டிற்கு வந்து சிஎம் ஹெச் ரோட்டில் திரும்பி, 100 அடி ரோட்டிற்கு வந்து ஜஸ்ட் பேக் போகிற  சந்தில் நுழைந்தான். ஏர்டெல்லை தாண்டி, ஜஸ்ட் பேக் முன்னால் பார்க் செய்து விட்டு, அவளுக்கான டூனா சாண்ட்விச் வாங்கிக் கொண்டான்.  அவள் அந்த மெயிலை பற்றி ஒன்றுமே கேட்காதது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பார்த்திருக்க வேண்டும் என்று தான் தோன்றியது.  தன்னை ஆழம் பார்க்கிறாளோ என்றும் தோன்றியது .  

கேட் சும்மா சாத்தியிருந்தது, அதைத் தள்ளி அகலத் திறந்து வைத்து, காரை உள்ளே நுழைத்தான். வாசலுக்கு வந்து லாப்டாப் பேக்கில் இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்தான்.  ஹாலில் இல்லை, டிவியும் ஆஃப் ஆகியிருந்தது. 

‘திவ்யா!’  என்று குரல் கொடுத்தபடியே லாப்டாப் பேக்கை, சோஃபாவில்  வைத்து விட்டு, அப்படியே உட்கார்ந்தான்.  கையில் இருந்த கவரை டீப்பாயில் வைத்து விட்டு, தலையைச் சாய்த்து உத்திரத்தில் எரியும் லைட்டைப் பார்த்தான். அதற்குள் மேலே படுக்கையறையில் இருந்தவள் படிகளின் கிரில் கம்பிகளின் வழியாய் பார்த்து, மேலே கொண்டு வருமாறு சைகை செய்தாள்.  சமையலறையில் இருந்து ஒரு தட்டையும், ஒரு தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு மேலே ஏறினான்.   

மோவ் கலரில் ஒரு நைட் டிரஸ்ஸில் இருந்தாள். குட்டையாய் கத்தரித்து, லூஸாய் விட்ட முடியை, இழுத்து ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டாள்.  கம்ப்யூட்டர் ஆனில் இருந்தது.  யாஹூ மெயில் பாக்ஸும் ஒப்பனாகி தான் இருந்தது.  கையில் இருந்த சாண்ட்விச் கவரை வாங்கிக் கொண்டு, கம்ப்யூட்டர் பக்கமாய் திரும்பியிருந்த அவனின் தலையைத் திருப்பினாள். 

“பீப்பிங்க் ஜோ! டோண்ட் பீப் இன் டு மை சிஸ்டம்!” என்றபடியே கவரில் இருந்த சாண்ட்விச்சை, தட்டில் வைத்து சாப்பிடத் தொடங்கினாள். அதனுடன் இருந்த பொட்டெட்டோ வேஃபர்ஸை அவன் பக்கம் தள்ளினாள். மயோனைஸ் வலது உதட்டோரம் வழிய ஆர்வமாய் தின்றாள். 

சாப்பிடும் வரை காத்திருந்தான்.  அவள் ஒன்றும் சொல்வதாயில்லை. தானே கேட்டால், தவறாக நினைத்துவிடுவாளோ என்று அவனுக்குத் தோன்றியது. சைட் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவன். அவளையே பார்த்தான். அவள் என்ன என்பது போல, ஸாண்ட்விச்சை வாயில் மென்று கொண்டே கேட்டாள். லெட்டுசின் பச்சை கொஞ்சம் கொஞ்சமாய் அவள் வாயினுள் சென்றது. 

‘டிட் யூ சீ த மெயில்,  ஐ செண்ட் யூ?’ 

“விச் மெயில் பேபி? த ஒன் அபவுட் ஒபன் மாரேஜஸ்? நம்ம ஊருல இதெல்லாம்  நடக்குமா?” 

‘அதுல இருந்தது, பெங்களூர்ல நடந்த கதை தானே திவ்யா? படிச்சப்போ கொஞ்சம்  ஷாக்கிங்காவும், க்யூரியஸாவும் இருந்தது’ 

“சோ, வாட் ஆர் யூ அப் டூ? காட் சம்படி டு எக்ஸ்ப்ரிமெண்ட் இட்” என்ற அவளின் விளையாட்டான கேள்வி, அவனுக்கு சாதகமாய் இருப்பது போல பட்டது. 

‘இன்ஃபாக்ட் ஒரு ஸ்டடில சொல்லியிருக்காங்க, இது போல கப்பிள்ஸ்களிடம், டிவோர்ஸ் ரேட் ரொம்ப குறைஞ்சிருக்காம்!’

“ஓய், யூ வாண்ட் டு டெஸ்டிஃபை ஆர் வாட்?”   இந்த சம்பாஷனைகளில் சௌம்யாவை நுழைப்பதற்கான சாத்தியங்களே இல்லாமல் இருந்தது அவனுக்கு.

ஸாண்ட்விச்சை  முடித்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்து கை, வாய் கழுவி விட்டு, கம்ப்யூட்டரில் போய் அமர்ந்து கொண்டாள். 

ஃப்ரெட்டியைத் திரும்பி பார்த்து அருகே அழைத்தாள்.  கூகுளில் தேடி எடுத்து வைத்திருந்த ஓபன் மாரேஜஸ் பற்றிய பல ஆர்டிகள்ஸைக் காட்டினாள். அதன் சாதக, பாதகங்களை காட்டினாள்.   

“இது எல்லாமே, வெஸ்டர்ன் கண்ட்ரீஸ்ல தான் இருக்கு, அதுவும் ரொம்பவும்  ரேர், அந்த ஊரிலேயே இதை கலாச்சார சீரழிவு, இன்ஸ்டிடியுசனல் ரேப் அப்படிண்ணு சொல்றவங்க இருக்காங்க!”  

“அங்க இருக்கிற ஆட்களுக்கே இதுல வர மனத்தடை, மனச்சிக்கல் புரியாம, நிறைய பிரச்னைகள் வருது, நம்ம நாட்ல இதெல்லாம் முடியுமா? ம்யூச்சுவல்  ட்ரஸ்ட் வேணும் நிறைய, அதுவும் மென் காண்ட் ஹாண்டில் இட்’னு தோணுது” 

“வாட் டு யூ திங்க்?” 

‘இட் இஸ் பாஸிபிள் திவ்யா, த கப்பிள் ஹஸ் டு டிஸ்கஸ் வெரி ஒப்பன்லி அண்ட் ட்ராண்ஸ்பெரண்ட்லி.  அப்புறம் அவுட் ஆஃப் மாரேஜ் ரிலேசன்ஷிப் ஷுட் நாட் பீ அன் எமோஷனல் ஒன்’ 

“அது எப்படி சாத்தியம் ஃப்ரெட்டி, ஹவிங்க் செக்ஸ் வித் சம்படி வித் அவுட் அன் எமோஷனல் அட்டாச்மெண்ட்!” 

‘ஓகே! அப்படியே வச்சுப்போம், பட் யூ ஷுட் டிஸ்கஸ் எவரிதிங்க் வித் மீ அண்ட் லெட் மீ நோ யுவர் வேர் அபவுட்ஸ்’ 

“ஹே ஹோல்ட் ஆன், ஆர் வி டிஸ்கஸிங்க் எபவுட் அ கான்செப்ட் ஆர் அபவுட் அவர் பெர்சனல் வென்ச்சர், த்ர்ட் பேர்ஸன்ல இருந்த எப்படிப்பா ஃபர்ஸ்ட் பெர்ஸனுக்கு வந்துச்சு?” 

‘ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன் திவ்யா, ஐ’ம் செக்சுவலி அட்ராக்ட்ட் டு சம் ஒன்’ 

கம்ப்யூட்டரில் கண்களை வைத்திருந்தவள், தடக்கென்று திரும்பி அவனை ஆழமாய் ஊடுருவது போல பார்த்தாள்.  கண்கள் கலங்கியது போல இருந்தது அவளைப் பார்க்கையில். ஃப்ரெட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  இதை மேலும் நகர்த்துவது சாத்தியமா என்று யோசனை வந்தது.  அவளே ஆரம்பித்தாள். 

“யார் அந்த பொண்ணு ஃப்ரெட்டி, எனக்குத் தெரியுமா? நான் பார்த்திருக்கேனா?, எத்தனை நாளா போயிட்டிருக்கு?” 

‘யார்னு கேக்காத திவ்யா, இட் மெ நாட் பி அ குட் ஐடியா டு நோ த பர்ஸன், பட் என்னோட வேலை செய்யிறவ அவ்வளவு தான் சொல்ல முடியும், ப்ளீஸ்’ 

திவ்யா யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.  கம்ப்யூட்டரை விட்டு நகன்று, பெட் ரூமில் இருக்கும் ஃப்ரெஞ்ச் விண்டோவை திறந்து ரூஃப் கார்டனுக்குள் இறங்கினாள்.  அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தவள், தொலைவில் எதையோ வெறிக்கத் தொடங்கினாள்.  ஊஞ்சல் ஆடாமல் நின்று கொண்டிருந்தது. 

ஏதோ தீர்மானத்திற்கு வந்தது போல ஊஞ்சலில் இருந்து இறங்கி இவனை நோக்கி வந்தாள்.