Monday, May 17, 2010

பூதம் வளரும் கிணறு...

புத்தகங்களின் மசியில்
ஒட்டியிருக்கும் கைரேகை
மிச்சங்களின்
மொத்தத்தையும் காட்ட
முற்படுகிறது,
கடைசியாய் நிறுத்திய
முற்றுப்புள்ளி...
ஒரு பரிதாப நிலைக்கண்ணாடி போல

எழுத்துக்களின் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
விசும்பல் ஒலியும் 
துளி கண்ணீரும்
எதிரொலித்து
உருண்டதில் பக்கங்கள் எங்கும்
உப்புக்கடல் பெருகும் 

புத்தகங்கள் விடும்
ஏக்க பெருமூச்சில்
சினையாகும்
இடையே ஒளித்து வைத்த
மயிற்பீலிகள் 
இரண்டாய் பிளந்து
பிரசவிக்கும்
தலை பெருத்த சிசு

அகண்டு திறந்து கிடக்கும்
விரைவு வண்டியில்
அடிபட்ட பசு மாதிரி
கிழிந்த வயிற்று
புத்தகங்களில்,
இரையும் பறவை
இதயத்தில்
உறங்கும் ரகசிய முடிவு 

இரவல் படிந்த
எச்சில் முனை புத்தகங்கள்
உடையும் கண்ணாடி பேழை
கசிந்து வெளியேறும்
கைகட்டி 
கதை சொல்லும்
பூதத்தை கட்டிக்கொண்டு
உறங்கிப்போவேன்
கம்மக்கூட்டில் மணக்கும்
புத்தக வாசனையுடன்

Saturday, May 15, 2010

ஆறாம் விரல்...

நிக்கோலை
எனது வலிமையான
பேக் ஹேன்ட் வீச்சில்
வீழ்த்துகிறேன்
அந்த ஜெர்மன் வீரன்
என் பந்தை எடுக்க
தலைகீழாய் விழுந்து
ஒரு ட்ராப் போடுகிறான்
முன்னால் ஓடி வந்து
அனாயாசமாய்
வாளியில் பின் தள்ளுகிறேன்
தடுமாறுகிறான்
நீண்ட நேரம் அவனை
அங்கும் இங்கும் ஓடி
மூச்சு வாங்க வைத்து விட்டேன்
இரண்டாவது நேர் செட்டில்
தோற்கிறான் பரிதாபமாய்
விளையாடினது போதும்
வா சாப்பிட என்ற அம்மையின்
குரலுக்கு
ப்ளே ஸ்டேஷனை
ஆப் செய்துவிட்டு
சாப்பாட்டு மேசையில்
என் சக்கர நாற்காலியை
பொருத்துகிறேன்

Thursday, May 13, 2010

உறவிலி யாக்கை...

மொழி இடரும் போது
அங்க அசைவுகளில்
சொல்லி முடிக்கிறேன்
உனக்கான ஒலிகுறிப்புகளை
மேலும் கிழுமாய்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
செவ்வக காகிதத்தில்
நமக்கான இசை செறிவுகள்
கலைத்த செப்புகளை போல
கிடக்கிறது
வார்த்தைகள் உறங்கும்
பேழைக்குள் துளை ஏற்பட்டு
ஒழுகி வடிகிறது
அர்த்தங்கள் தொலைத்த
விசும்பல்கள்
எழுதாப்பக்கங்களின் வெறுமையில்
சுடுமணலின் தகிப்பு
ஏதோ உணர்த்த முற்படுகிறது
புரியாமல் தூரவைத்து
வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்
சடசடவென்று பற்றி
எரிகிறது காகிதம்
இருமுனைகளில் ஒதுங்கும்
உனக்கும் எனக்கும்
எரிந்து கொண்டு இருக்கிற நமக்கும்
வேறுபாடு என்று
எதுவும் இருக்கவில்லை

Wednesday, May 12, 2010

மாற்று...

இன்று நல்ல நாளாய் இருக்கவேண்டும்
நீண்ட நாள் நிலுவையில் இருந்த
தீர்வைப்பணம் வழங்கப்பட்டது
பாக்கி வைத்திருந்தவர்களுக்கு
அரைப்பங்காவது கொடுக்க முடிந்தது
இருளோ என்றிருந்த வீட்டிற்கு
மறுபடி மின் இணைப்பு கிடைத்தது
கேபிள் இல்லாம கஷ்டமா இருந்தது
தொடர் நாயகிகளின் சோகபிம்பங்களில்
தேறுதல் அடைய முடிந்தது
அவளுக்கு ஒரு புடைவையும்
ரவிக்கையும் உள்பாவாடையும்
வாங்க முடிந்தது
கல்யாணம் செய்துகொள்ளப்போகும்
தம்பியின் செலவுக்கு கொஞ்சம்
எடுத்து வைக்க ஆனது 
பயணச்செலவுக்கு
மிஞ்சியதை எடுத்து கொள்ள முடிந்தது
அப்பா! ஒரு செயின் வாங்கி கொடுப்பா!
தாலி செயின் மட்டும் போட கஷ்டமா இருக்கு
என்றவளின் மினுக்கட்டான்களில்
உருகியதை மீண்டும்
வாரி கூட்ட முடிவதில்லை ஒருபோதும்

Tuesday, May 11, 2010

அச்சிறும்...

அடைத்து சாத்திய கதவுகளின்
இடுக்குகளில் கசிந்து உட்புகும்
மழை நீர்
விளக்கு வெளிச்சத்தை ஏந்தி பிடிக்கிறது
மேலே மிதக்கும் துடைக்காத
தரைத்தூசியை
சரிகையாய் சுற்றிக்கொண்டு
மினுக்கி நடக்கிறது
பட்டுப்பாவாடை அணிந்த சிறுமி மாதிரி
இறந்துகிடக்கும் எறும்புகளை
நட்சத்திரங்களாய் அணிந்து கொண்டு
மேலும் நடக்கிறது
மேட்டில் ஏறமுடியாமல் ஒரு இடத்தில்
குவிக்கிறது கொண்டு வந்தவைகளை
தேக்கியபடியே
அவசரமாய் செய்த கப்பல்
மிதக்கிறது என்னையும் என் மகளையும்
சுமந்து கொண்டு தூரதேசத்திற்கு

Sunday, May 09, 2010

இறைமை...

என் ப்ரிய சிநேகிதி எழுதிய ’டெம்பிள் எகய்ன்’ என்ற அவளின் அனுபவத்தின் தமிழாக்கம் இது, அவள் எழுதிய ஆங்கில வடிவத்தின் வீச்சுக்கு இது ஈடுகொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை... அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்... படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... என் இஷ்டத்திற்கு நிறைய மாற்றியிருக்கிறேன், இது மொழிமாற்றம் இல்லை என்பது அவளுக்கும் உடண்பாடு என்று தான் நினைக்கிறேன்...

“கடந்தமுறை மதுரை சென்றிருந்த போது என் நண்பர்களையும், பந்துக்களையும் பார்த்த பிறகு இந்த முறை தவறாமல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியது அதுவும், மேலை நாகரீகம் அரித்து தின்றபிறகு எஞ்சிய உயிர்கூட்டை ஆசுவாசபடுத்த இது போன்ற ஒரு ரொமாண்டிக் இன்டர்லுட் தேவையாய் இருப்பதை உணர முடிந்தது, மதுரையில் கால் வைத்ததும், நிறைய பேருக்கு ஒரு அதிர்வு ஏற்பட்டிருக்கும் இப்போது. மதுரை வந்து வீட்டில் இறங்கியதும் அம்மாவின் கையில் கிடைக்கும் அந்த காப்பியின் மனம் இந்த உலகத்தின் கவலைகள் எல்லாவற்றையும் துரத்தி விட்டு வந்து மூளையை நிரப்புவது போலிருக்கும். காப்பி என்பது மனமுமா அல்லது மனம் மட்டுமா என்று தெரியவில்லை.


அநேக நண்பர்களையும், கணக்கற்ற உறவினர்களையும் நிறைத்து வழி நெடுக விசாரிக்கும் குசலங்களும் என் கூச்சமான பதில்களும் எனக்கே சுவாரஸ்யமாய் இருந்தது. அதிலும் ஒருவர் நீ மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு இன்னுமா கிளம்பலை என்ற கேட்டதன் பிறகு, இன்று விசேஷ தினம் என்று அறிந்தேன், அதனால் அங்கு சென்றே ஆக வேண்டும் என்ற ஆவலாதி இன்னும் அதிகமானது. தினசரி காலண்டரில் தினம் மிதக்கும் தெப்பம், உற்சவங்கள், திருக்கல்யாணம், விசாகப்பெருவிழா என்று நிறைந்து வழிகிற வைகாசி மாசத்தின் ஒரு விசேஷ தினத்தில் மீனாக்ஷி கோவிலுக்கு செல்ல நினைத்தது என் தவறென்றே நினைக்கிறேன், இப்படி ஒரு கூட்டம் இருக்கும் என்று தெரிந்திருந்தால் இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்து வருவதை பற்றி யோசித்திருப்பேன்.

கோயிலுக்குள் நுழைகிறோம், பிரதான நுழைவாயிலை கடந்து உள்ளே நகரும் போது ஒரு விதமான அதிர்வு சந்தோஷமாய் உடல் நிரப்புகிறது. மிதந்து செல்லும்படியான ஒரு ஜனசமுத்ரம் அதன் ஆர்ப்பரிப்புகளுடன், தனக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களையும், வகைப்படுத்தமுடியா சம்பாஷனைகளையும் காற்றில் பரப்பியிருக்க அவர்களையும் கடந்து நகர்கிறேன். அதிசயத்தக்க சிற்பங்கள் அந்த கூட்டத்தின் ஒரு பகுதி உறைந்து நின்றது போல தத்ரூபமாக இருந்ததை காட்டியதும், அதில் கல்யானைக்கு கரும்பு குடுத்த சிற்பத்தினை பார்த்தது, குழந்தைகள் உற்சாக வியப்பில் அந்த பொழுதின் சந்தோஷமுனைக்கு தள்ளி சென்றனர்.

பொற்றாமரைக் குளத்தில் எப்போதும் நடக்கும் திருமணங்கள், இப்போது காணக்கிடைக்கவில்லை, குளத்தங்கரை படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் நிறைய விடலை காதலர்களையும் காணவில்லை. விசேஷ தினத்தை முன்னிட்டு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் அனாவசியக் கேள்விகளை தவிர்க்க தங்கள் சந்திப்பை தள்ளி வைத்திருக்கலாம். மதுரையை சுற்றி இருக்கும் கிராமத்தில் இருந்து திருமணம் செய்து கொள்வதற்காக வரும் இளம் மணமக்கள், பொய் வயதுச்சான்றிதழ் கொடுத்து இன்னும் மிச்சம் வைத்திருக்கும் குழந்தமையுடன் அவசரமாய் தாலி கட்டிக் கொள்வார்கள், அது போன்ற திருமணங்களும் இன்று எதுவும் நடந்த மாதிரி இல்லை. குளத்தின் எதிர் சுவரில் எழுதியிருக்கும் திருக்குறள்களை மணப்பாடம் செய்து போட்டி போடும் நானும் ஜெயந்தியும் அந்த குளத்தங்கரை சுற்று சுவரில் ஆடியது நினைவில் வந்து போனது. எல்லாவற்றையும் இழந்தது போலவும் இருந்தது, இழக்காதது போலவும் இருந்தது. இருந்தும் ரொம்பவும் சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டே திரும்பி வரிசையில் நின்றேன், என் மனைவியையும், குழந்தைகளையும் வினாயகர் சன்னதி முன்னால் நிற்க வைத்து விட்டு என் முறைக்கு காத்திருந்தேன்.

பிரகாரத்தின் உள்நுழைய சீட்டுகளை வாங்கி கொண்டு வந்தபோது தான் கவனித்தேன், சன்னதிக்குள்ளே திரண்டு இருக்கும் தலைகள் ஆடி வெள்ளத்தில் மிதந்து வரும் காய்ந்த தேங்காய்களாய் பட்டது, ஒரே சீராய் மிதந்து கொண்டே நகர்ந்தது. நல்ல நாள் பார்த்தேன் மீனாட்சி அம்மனை பார்ப்பதற்கு.

கூட்டம் எனக்கு புதிது இல்லை என்றாலும் இது ஒரு சினிமா கூட்டம், விளையாட்டு மைதானக்கூட்டம், தீம்பார்க் கூட்டம் போலில்லை. இது கொஞ்சம் வித்யாசமாய் ஒரு மயக்கத்தில் திரியும் மந்தையை போல இருந்தது, நான் மே என்று சொல்லி பார்த்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது, வலது தோளில் அமர்ந்து இருந்தவள் கேட்டாள், என்ன அப்பா நீயா சிரிக்கிற? உங்க அப்பா எப்பவும் அப்படித்தானே புதுசா கேக்குற? என்ற என் மனைவியின் கேலிக்கு மஹாவும் சிரித்தாள், ஒரு கைய வாயில் பொத்தியபடியே! ஸ்வர்னா! எங்க என்றபோது அப்பா என்று சிரித்தவளை தூக்கி இடது தோளில் ஏற்றிக்கொண்டேன். அம்மன் சன்னதியில் வழியும் கூட்டத்தினைப்பார்த்ததும் கொஞ்சம் பயமாக இருந்தது. குழந்தைகளுக்கு சிரமம்... என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர்கள் இருவரும் மேல்தளத்தில் இருந்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டே சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

முதுகில் தன் முழங்கையால் இடித்தவர்கள், அழுந்த தேய்த்து உரசி என் சட்டையில் குங்கும மஞ்சளை இழுவியவர்களின் கதம்ப குரல் எங்களை ஒரே நாரில் பினைத்து இறுக்கியது. ஒரு வழியாக பிறன்போக்கு போகாமல் அதில் இருந்து விலகி, சிறப்பு தரிசனத்திற்காக (சிறப்பு தரிசனமா? அல்லது சிறப்பு வழி தரிசனமா?) நின்றவர்களின் வால் முனையில் என்னையும் பொருத்திக் கொண்டேன். அந்த புரோகிதர் கையில் கொஞ்சம் காசு வைத்து அழுத்தினால், இன்னும் மீனாட்சியை அருகே பார்க்கலாம் என்ற என் உடன் வந்த மாமாவின் கூற்றில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், அதை பிடிவாதமாக மறுத்து சிறப்பு வழி தரிசன வரிசையில் நகர்ந்தேன், குழந்தைகளையும் கீழே இறக்கி விட்டு உடன் வரச் சொன்னேன். இருதொடைகளையும் பற்றிக் கொண்டு என்னை நடக்க விடாமல் அசக்கி அசக்கி உடன் வந்தார்கள். உக்கிரமான அந்த வெப்பதினத்துடன், நெருக்கமும், இத்தனை பேர்களின் உடற்சூடும், காற்றோட்டமில்லா பிரகாரங்களும் சுழன்று கொண்டு இருக்கும் மின் விசிறியின் காற்றை விரயம் செய்து அமிலம் தடவியது போல இருந்தது. விசேஷ தினங்களின் சம்பிரதாய் உடை ஒரு அவஸ்தை, நெகிழும் உடுக்கை விரையும் கைக்கு வழியில்லாமல் தட்டுத் தடுமாறி சென்று பிடித்துக் கொண்டது, குழந்தைகள் பிடித்து தொங்கி கொண்டு வருவதில் நெகிழ்ந்திருக்கலாம் என்று தோன்றியது, அவர்களை கொஞ்சம் அகற்றி குங்குமம் துப்பிய யாழியின் அருகே நிற்க சொல்லிவிட்டு கையில் இருந்த விசிறியை கொடுத்து அனுப்பினேன், மாமாவும் நான் போய் கூட இருக்கேன் என்று அவர்களுடனே இருந்துவிட்டார்.

வரிசை மிகமெதுவாய் நகர்ந்தது, ஒரு நிறைசூலியாய் பெருமூச்சுடன், மூலஸ்தானத்தின் உட்புக திறக்கப்படும் சிறு கதவை மிகத் திறமையாய் கையாண்டு பக்தர்கள் கொத்து கொத்தாய் நுழைய அனுமதித்தார்கள். இரைச்சல், ஒரு வகையில்லாத பெரும் ஓசை, பேரரவம் கேட்டிலையோ, ஆயிரம் வார்த்தைகள் எழுத்துக்கள் மாற்றி மாற்றி கோர்த்த ஒரு ஒழுங்கற்ற அல்லது ஒசை நயமற்ற இரைச்சல், இருள் கருஞ்சுவர்களை முட்டி திரும்ப வந்து காதுகளை நிரப்புகிறது, வியர்வை பெருக்கும் வெப்பமும், தூண்டாமல் விட்ட விளக்காய் குண்டு பல்புகளும் வெளிச்சத்தை வடித்துக் கொண்டு இருந்ததும் இந்த அனுபவத்தை பெரிது படுத்துகிறது விளக்கொளி நிழலைப் போல. குழந்தைகள் சிரமப்பட தொடங்கியது போல இருந்தது, உடலில் உள்ள நீரெல்லாம் முழுக்க வடிந்து வெளியே வந்து விட்டது போல இருந்தது, பசி வேறு, பொறுமை ஆவியாகி கொண்டே இருந்தது. சிறப்பு தரிசன டிக்கெட் வாங்காதவர்களின் விதி இன்னும் வலியது என்று தோன்றியது. சிறப்பு வரிசைக்கு கொஞ்சம் தள்ளி, தர்ம தரிசனத்திற்காக நின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது, மீனாட்சி அம்மனின் முகவடிவின் பிறைநுதல் பார்ப்பதற்குள் முன்னும் பின்னும் தள்ளப்பட்ட கூட்டத்தை பார்க்கையில் கல்யாண ஊஞ்சல் ஞாபகம் வந்தது.

நாங்கள் சிறப்பு வழியின் முழங்கால் கதவை தாண்டி மூலஸ்தானத்தின் உள்ளே நுழைகையில், எனக்கு இங்கே வந்ததன் காரணம் என்ன என்ற கேள்வி வந்தது, நான் எதிர்பார்த்த ஆழ்நிலை அமைதியும், மோனமும் இது தானா? என்ன ஒரு அடிமுட்டாள்தனம், காரணம் தெரிந்து சிரிக்கிற மனைவியின் வியர்வை நனைத்த ரவிக்கையுடன் அனைத்துக் கொண்டேன், பக்கவாட்டில்.

இன்னொரு கதை காத்திருந்தது மூலஸ்தானத்தை அனுகும்போது, யாரோ ஒரு புன்யவான் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் அம்மன் சன்னதிக்கு முன்னால் கொஞ்சம் நேரம் உட்காரலாம் என்று சொன்னவுடன், அங்கிருந்த கூட்டத்தை பார்த்ததும் எப்படி உட்காருவது என்ற யோசனை வந்தது. அங்கிருந்த குருக்கள்களும் இன்னும் சில தன்னார்வலர்களும் ஜனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

சில நல்லவர்கள் அம்மனின் தரிசனம் போதாமல் அல்லது திருப்தி அடையாமல் அங்கேயே வேர் விட்டிருந்தார்கள், அவர்களிடம் கெஞ்சி நகரச் சொன்னபோதும் அங்கேயே நின்று கொண்டு, தர்ம தரிசனத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கும், எக்கி எக்கி பார்த்துக் கொண்டிருக்கும் பரிதாப பக்தர்களை மறைத்து கொண்டிருந்தார்கள். குருக்கள் எங்களின் கவனத்தை அவர் பால் திருப்ப, உரத்த குரலில் உயிரில்லாமல் உச்சாடனங்களையும் தெளித்துக் கொண்டிருந்தார், ஒரு பெண் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருந்தவர்களை திட்டிக்கொண்டே இருந்தார், முகமற்ற கூட்டம் ஆயிரம் கைகளையும் முகங்களையும் கொண்டு பார்க்கும் போது ஜகத்ரட்சகியே உதவிக்கு கதறுவது போல இருந்தது எனக்கு. மூச்சு முட்டியது, குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது, அங்கிருந்து ஓடலாம் என்று தோன்றியது. கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் அம்மனை விரைவு பார்வை பார்த்து விட்டு, ஆசுவாச மூச்சு வாங்க வெளியே ஓடினேன், அவளும், குழந்தைகளும் பின் தொடர்ந்து வெளியே விழுந்தனர், ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை யாரும். யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்பது எனக்குத் தெரிந்தாலும், முகம் தெரியாத யாரோ ஒருவர் மேல் கோபம் வந்தது, கோபத்தை காட்ட முடியாமல் அழுகை வருவது போல் இருந்தது.

எல்லாம் கடந்து ஒரு பெருந்தூனை விரல்களில் வருடி அருகில் நடக்கும் போது, ஏதோ நடக்கக்கூடாத ஒன்று, இனம் புரியாத மனம் அழுத்தும் கவலை நிறைத்தது போல இருந்தது. சடாரென்று மழையில் குளிர்ந்த மண் மாதிரி, என்னைச் சுற்றி ஒரு குளிர் காற்று ஒரு மென்மையான அக்கறையுடன் என்னை போர்த்தியது. அப்போது தான் அவரை கவனித்தேன், வயது எழுபதுக்கு மேல் இருக்கும், வழி வழியாய் வந்த ஒரு சேவையாய் செய்து வருகிறார். என்பு தோல் போர்த்த உடம்பு என்பது கண்கூடு, துருத்தி வெளியே தெரியும் எலும்புகள், வெற்று மார்புடன் அவர் பெரிய விசிறியை வைத்து, தனது எஞ்சி இருக்கும் சக்தியெல்லாம் திரட்டி கோயிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு வீசிக் கொண்டிருந்தார். அவரை விட எடை அதிகமாக இருக்க வேண்டும் அந்த அடர் மயிற்பீலிகளினால் ஆன பிரமாண்ட விசிறி, பீலிபெய் சாகாடும் அச்சிறும்... என்று ஏனோ ஞாபகம் வந்தது. மயிற்பீலிகளின் கண்களில் வழியும் கருணை போல நிலவின் குளிர்வை தேக்கி வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் காற்றில் சேர்த்து கொண்டிருந்தது அந்த ராட்சத விசிறியும். வெப்பம் பொருட்டாய் இல்லை, வழியும் வியர்வையும். அவரை, அவர் செய்யும் சேவையை பொருட்படுத்தாமல் கடந்து செல்லும் பக்த கோடிகள் இவை எதுவும் பற்றிய பிரக்ஞை ஏதும் இன்றி ஒருமித்த குவித்தவமாய் அவரின் கருமம். ஒருவிதமான மோன அழுகையுடன், அவரின் தொன்மம் படிந்த முரட்டு கரங்களில், கொஞ்சம் பணத்தை வைத்தேன். ஒரு புன்னகையோ, வார்த்தையோ ஏதுமின்றி இயங்கிய அவரின் கரங்களின் வழி விசிறி வழி வீசிய அந்த குளிர் காற்று சில வினாடிகள் என்னை தொடட்டும், என் உலர்ந்த மனசுக்குள் ஒரு மழையாய் வீழட்டும், நான் எதிர்பார்த்த அந்த ஆழ்நிலை அமைதி மற்றும் அருளும் நிரம்பி வழிந்தது மூலஸ்தானத்திற்கு வெளியே... ”

Friday, May 07, 2010

சவக்காற்று...

காற்றின் குரல்வளை
நெரிக்கப்பட்ட போது
பிளீரிட்ட தொனியில்
பூக்கள் நெருக்கி
வெடித்து திராவகம் துப்பியது
மேகங்கள் 
உலர்ந்து உதிரதொடங்கியது
இலைகள் அடர்ந்த
மரங்களின் உதடுகள்
தைக்கப்பட்டது
கூடடைந்த பறவைகளின்
கூட்டிசை உறைந்து
வனசிற்பமாய் போனது
நதி நீரின் அலை வளையங்கள்
பதுக்கபட்டது அடியாழத்தில்
புதைத்து வைக்கப்பட்ட
ரகசிய குமிழ்களில்
மூச்சுக்காற்று நிரப்பிவைக்கப்பட்டுள்ளது
காகிதங்களின் சிறகுகள்
முறிக்கப்பட்டது
கவிதை பறக்காமல் கிடந்தது
பேப்பர் வெயிட் போல கனத்து

Thursday, May 06, 2010

கல்யாணி...

பெண் பார்க்க வந்தார்கள்
என் உடலுக்கு பொருந்தாத ஒரு பட்டு புடவை
கொஞ்சம் லூசான ரவிக்கையும்
அணிய வேண்டியதாய் இருந்தது
தையற்காரன் சரியான நேரத்தில்
ரவிக்கையை கொடுக்கவில்லை
ஓரளவு பொருந்தி போகிற ரவிக்கையை
போட்டபோது மெலிந்திருப்பது தெரிந்தது
நெருக்கி கட்டிய மல்லிகைப்பூ
பின்னிய சடையில் பாதிவரை தொங்கியது
பட்டாசாலில் சத்தமாய் இருந்தது
சம்பந்தமில்லாமல் சிரித்தார்கள்
என்னை பார்க்க வந்திருந்தவனை
அதற்குள் உறவுமுறை வைத்து சீண்டினார்கள்
யாரோ ஒருவரின் குரல்
என்னை அழைத்து வர சில பேரை அனுப்பியது
நிலைக்கண்ணாடி திருத்தாததை
வந்திருந்தவர்கள் திருத்தினார்கள்
முன் கற்றை முடி ஒதுக்கி,
புடவை முந்தானையை நீவி
பின் பக்கம் சீராக்கினார்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின்
தோள்களை பிடித்த படி
பட்டாசாலுக்கு போய் சேர்ந்தேன்
நமஸ்கரிக்க சொன்னவுடன் செய்தேன்
பார்த்துக்க தாயீ! பையன..!
நிமிர்ந்து பார்த்தேன் என்ன சொல்வது
என்று தெரியவில்லை
உள்ளே வந்து விட்டேன்
கேட்டவர்களிடம் சம்மதம் என்றேன்
அவன் எடைக்கு கொடுக்க
முடியாக் குறைவில்
கட்டைகால்களில்
வேர் பிடிக்க ஆரம்பித்தது
மறுபடியும் ஜன்னலுக்குள் ஒடுங்கினேன்

Wednesday, May 05, 2010

கிடந்தாய் வாழி...

உலர்ந்த நதிகளின்
மணற்படுகைகள்
இரண்டு கரைக்கும் நீண்டு கிடக்கும்
காற்று எழுதிய வரிகளின்
அர்த்தம் புரியாமல் முதுகை
சுழித்து கொண்டு கிடக்கிறது நதிவழி

கடந்து போகும் வண்டிகள்
சக்கரங்களில் பிளந்து கொஞ்சம்
தனுப்பு காட்டும் ஈர நினைவில்
மிச்சமிருக்கும் சுழித்தோடிய துளிகள் 

கால் உதறி நடக்கும் குழந்தைகளின்
பாதம் பொசுங்காதிருக்க
தாரைகளாய் கசியும்
ஈரத்தில் பால் பிசுக்கு

மினுக்கும் மணல்துகள்களில்
தொன்மங்கள் சுமந்து தெரியும்
மூதாதையரின் பிண்ட பருக்கைகள்
கொத்தி தின்ன வரும் காகங்கள்
இடம் வலமென குழம்பி கரையும்

வரை செழிக்கும் மீன்களின்
ஞாபக பொதியின்
கணம் தாங்காமல் தாழ்ந்து பறக்கும்
கொக்குகளும் நாரைகளும்
மணற்சூட்டில் வண்ணம் மாற்றி
இருள் நிரப்பும்

கரையோர மரங்களின்
வேர்க்கால்கள் அமிலத்தரையில்
கால்பதியாமல் உடல் கிடத்தும்
நதியில் விழுந்த நான்
முழுகி கொண்டே இருக்கிறேன்...