Wednesday, April 27, 2011

மருதாணி சித்திரங்கள் - 3


மாதவி ரகுவோட வழக்கமான ஹிரோயின்கள்லேர்ந்து மாறுபட்டவள்ங்கறது எனக்கு கொஞ்சம் குதூகலத்தை கொடுத்தது.  'உன்ன மாதிரி ஒரு குழந்தை வேணும்'னு, சொல்றது, இவனுக்காக கோயில்ல பாட்டு பாடறதுஇந்த வேலை எல்லாம் மாதவி செய்ய மாட்டான்னு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது.
மாதவி என்னோட கல்லூரித்தோழி. இளங்கலை இருவரும் ஒரே வகுப்பு. அப்போ எனக்கு ரகுவைத் தெரியாது. அதனால் மாதவிக்கு, ரகு சமீபத்திய அறிமுகம். சனிக்கிழமை காலைகளில் ரகு வந்த கொஞ்ச நேரத்திற்குள் மாதவி வருவதும் வழக்கமானது.
வழக்கம் போல அவன் தான் முதலில் வந்தான். எப்போதும் போல ஏதாவது எழுதி எடுத்து வந்திருப்பான், உடனே கொடுக்க மாட்டான். மாதவி வரும்வரை காத்திருந்து, அப்புறம் என் கையில் படிக்கக் கொடுப்பான்.  இன்றைக்கும் அதுமாதிரி ஏதாவது இருக்கலாம். நினைத்ததில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல், அவள் வந்து சேர்ந்தவுடன், அப்போது தான் ஞாபகம் வந்தது போல, ஜோல்னாப்பையில் இருந்து ஒரு காகிதத்தை, அரிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல சர்வஜாக்கிரதையாய் எடுத்தான். நினைத்தபடியே என் கையில் கொடுத்தான். ஏதோ எண்ண சிதறலுடன் படித்ததால், ரகு எழுதிக் கொண்டு வந்திருந்தது மனதில் பதியாமல் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து படிக்கத் திருப்பினேன்.
போ வித்யா, ஒரு தடவையில புரியலேன்னா வேஸ்ட் திரும்பவும் படிக்க ஆரம்பித்தால், அதோட சார்ம் போயிடும், என்று என்னிடம் இருந்து பிடுங்கி மாதவியிடம் பேப்பரை கொடுத்தான்.  அவள் மெல்ல விரிந்த புன்னகையுடன் வாங்கி படித்துவிட்டு, “ம்ம்... பெருமாள் கோயில் யானையப்பத்தி எழுதியிருக்கீங்க, என்றவுடன், “அசத்திட்டீங்க மாதவி, என்றான் வெற்றி சிரிப்புடன்.
ரகுவின் பேச்சில் சாதாரணமாகவே ஒரு லயம் தெறிக்கும்.  பெரும்பாலோர் ஒரே மாதிரி மோனோடோனில் பேசுவது போலில்லாமல், நிறைய ஸ்ருதி மாறுபாடு இருக்கும், இவன் பேச்சில்.  லெட்டர் கிடைச்சுதா வித்யா? வில் வித்யா கொஞ்சம் ஏற்றத்தில் முடியும். இப்பொழுது ராகத்துடன் ஒரு குழைவும் இருந்தது. ரகுவிடம் ஒன்றும் மாதவி வரும் வழி மேல் விழி வைக்கும் ஒரு பதற்றமோ தென்படாது சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் மாதவி வந்த பின் அவளிடம் பேசும்போது நிச்சயம் எனக்கு வித்யாசம் தெரியும். ஒரு உறுத்தாத, ரசிக்கக்கூடிய வித்யாசம்.
சில சாயங்கால வேளை திண்ணையில் மங்கும் வெளிச்சத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது என் பாட்டி, ‘ஏற்கனவே கண்ணாடி, என்று முணுமுணுத்தவாறே விளக்கை போட்டவுடன் பக்கங்கள் பளிச்சென்றாகுமே அது மாதிரி இருந்தது எனக்கு.  ரகு மற்ற பெண்களுடன் பேசுவதை பற்றியெல்லாம் விலாவாரியாக சொல்லியிருக்கிறான் தான். ஆனால் மாதவியிடம் பேசும்போது, ஏதோ சிரத்தையாக வேறு எதிலுமே முக்கியத்துவம் இல்லாமல் பேசுவதை  நேரடியாக பார்த்தபோது அதன் முழு வீச்சும் பளிச்சென்று புரிந்தது.
இ.பா. புதுமைப்பித்தன் என்று பேச விழையும் என்னை, மழை, செம்பருத்திப்பூ என்று இழுத்துவிடுவார்கள் இருவரும். தாமரை இலை அணுகுமுறை அவர்களிடம் செல்லுபடி ஆகாது.  சனிக்கிழமை தவிர அவர்கள் அதிகம் தனியே சந்தித்த மாதிரி தெரியவில்லை.  நிச்சயம் ரகு முயற்சி செய்திருப்பான் என்று எனக்குத் தோன்றியது.  ஒருமுறை இருவரும் ஒரு வாரம் நான் இல்லாமல் சந்தித்ததை அவள் இருவரியிலும், அவன் அவள் அணிந்திருந்த புடவை நிறத்திலிருந்து, பஸ் ஏறியவுடன் அவனுக்கு மட்டுமாய் கையசைத்தது வரை ரெண்டு பக்கங்களும் எழுதியிருந்தான். மாதவியை எனக்குத் தெரியும் என்பதால், அவள் எழுதாமல் விட்டதில் கனம் அதிகமாக இருந்தது. 
மாதவியின் மெண்மையான மனம், அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி, கவித்துவமான சிந்தனை, யோசித்து பேசும் தண்மை இதெல்லாம் அவள் எழுதுவதிலும், மெல்ல பேசுவதிலும் ரகுவிற்கு புரிந்திருக்கும். அதனால் பெரிதாக ஏதாவது தாக்கமோ, விளைவோ வருமா என்று சந்தேகம் தான், ஆனாலும் எனக்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தது.
மாதவியிடம் அவன் கரிசனத்துடன், “வெயில்ல நிக்காதீங்க, என்று சொல்வதை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அவளை பஸ் ஏத்திவிட்டு திரும்பும்போது, “ரொம்ப முயற்சி பன்ற போல? என்றேன் புன்னகையுடன்.
ம்ம்? என்று புருவத்தை சுருக்கினான்.
"மத்தவங்க மாதிரி அவளையும் உன்கிட்ட பைத்தியமா ஆக்குறதுக்கு, என்றேன். மாதவி அப்படில்லாம் சுலமாக மடங்கிட மாட்டா,” என்று முடித்தேன்.
அவனுடைய பதில் சிரிப்பில் கொஞ்சம் அதையும் தான் பார்க்கலாமே என்ற தொனி இருந்தது.  ரகு, ரசிக்கக்கூடிய ரோக்.
ரகு மாதவியை விழுந்து விழுந்து சிலாகிப்பதும், அவளைப் பற்றி என்னிடம் பேசுவதும் தொடர்ந்தது.
"அவளுக்கு நெத்தில ரவுண்ட் பொட்ட விட திலகம் மாதிரி வச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன். அதுலேந்து கவனிச்சியா வித்யா? இப்போல்லாம் திலகம் தான்."
நீ ஒண்ணு கவனிச்சயா?, இன்னும் நாங்க மரியாதையா பண்மைல தான் பேசிக்கறோம். 
அவங்க வீட்டு வேப்ப மரத்த வெட்டினதப்பத்தி, அவ எழுதின கவிதை படிச்சேன் வித்யா, அபாரம்!”.
ரகுவின் தொடர் குறிப்புகளை விட அவனை பற்றிய என் மெலிதான கிண்டல்களை அவள் சிரித்து மழுப்பியது இன்னுமே சுவாரசியம்.
வேலை விஷயமாக டெல்லி போக வேண்டி வந்ததில் ஒரு மூன்று வாரம், விட்டுப்போய் அவள் வீட்டுக்குச் சென்றபோது அவளுடைய ஐந்து வயது, அக்க மகள் தான், சித்திக்கு கல்யாணம், என்று போட்டுடைத்தாள்.  மாதவி வருவதற்குள், மணமகனைப் பற்றி அவள் அம்மா என்னிடம் எல்லாமே சொல்லிவிட்டதால், அவள் வந்த பின்னர் எனக்கு மேலே கேட்க ஒன்றும் இல்லை போல தோன்றியது.  நல்ல வேலை, சம்பளம், நல்ல குடும்பம் இதைத் தவிர வேற எதுவும் ரெலவண்டா என்ன?
ரகுவைப் பற்றி அவளுக்கு பேச ஒன்றும் இருக்காது என்று எனக்கு தெரிந்து தான் இருந்தது. நானும் அபத்தமாக எதுவும் கேட்கவில்லை, அவளும் சொல்லவில்லை.
ஏதோ கோவிலுக்கு போகவேண்டிருந்ததால் அடுத்த சனிக்கிழமை மாதவி வரவில்லை.
அவளுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளைய போய் பார்த்தேன் வித்யா,” என்றான் ரகு வந்ததும் வராததுமாய்.
எப்படி? என்றேன் ஆச்சரியத்துடன்.
ஒரு பொது நண்பன் மூலமா, மாதவியைத் தெரியும்னு காமிச்சுக்காம பேசினேன்,” என்றான்.  அதற்கு இவன் எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கையில் கொஞ்சம் அவன் அக்கறை இதமாகவே இருந்தது. இது தான் ரகு என்றும் தோன்றியது. ஆனால் அவன் குரலில் சுரத்தில்லாதது, அதைவிட பாதித்தது.
சற்று நேர அமைதிக்குப் பிறகு, “என்னைவிட அஞ்சு பங்கு சம்பளம் வாங்குறான், அதை அஞ்சு நிமிசத்துக்கு ஒருதரம் சொல்லிக்கறான்.  மனுஷங்கள பண பலத்தை வச்சு எடை போடறவன்னு நல்லாவே தெரிஞ்சது.  இலக்கிய பேசுறவன்லாம், மூளை வளர்ச்சி கொறைஞ்சவன் மாதிரி நினைப்பான் போல,” என்று அவன் மேலும், மேலும் சொல்ல எனக்கு மனசு பாரமானது. 
"மாதவியோட மென்மையான மனச கொஞ்சமாவது புரிஞ்சுப்பானான்னு ரொம்பவே கஷ்டமா இருக்கு வித்யா, என்று அவன் முடிப்பதற்குள்,
மண்ணாங்கட்டி! என்ற என் குத்தல் சிரிப்புக்கு புருவம் சுருக்கி பேச்சை நிறுத்தினான்.
"கஷ்டமாவது, கிஷ்டமாவது, நடந்த நாடகங்கள்’, மரப்பசு’, அப்படின்னு ஜோல்னா பையில புஸ்தகம் எடுத்திட்டு வரது, ‘இருட்டிடுச்சே, உன் வீட்டு வரைக்கும் கொண்டு வந்து விடறேன்னு வந்துட்டு திரும்பி மழைல நனைஞ்சுட்டே போறது, ‘நீ சிரிக்கும்போது தெரியுதே அந்த வரிசை தப்பின ஒரு பல்லு, அதான் உனக்கு அழகுன்னு சொல்லறது... அப்றம், அப்றம்... அவ புருஷன் அவள புரிஞ்சுப்பானோ? என்னவோ?ன்னு பெருமூச்சு விட்டுட்டு அடுத்த பொண்ண புரிஞ்சிக்க நீயும் கிளம்பிடவேண்டியது, நானும் சனிக்கிழமை ஆனா ஹிந்து பேப்பர மடிச்சு வச்சிட்டு, பில்டர் காப்பியோட அந்த அடுத்த கதை கேட்க வேண்டியது  We are all self centered bastards!, என்றேன்.
மெலிதான ஏளனத்துடனான இடக்குப் பேச்சு தான் பேச விழைந்தேன், ஆனால் உண்மையில் சுயவெறுப்பு என் குரலில் கொஞ்சம் தோணித்தோ?
சற்று நேர அமைதிக்கு பிறகு, “உண்மைதான் வித்யா, என்ற கரகரத்த குரலுக்கு திரும்பிய பொழுது தென்பட்டது, ரகுவின், என் நண்பன் ரகுவின் கண்களில், என் கண்களில் கூட இல்லாத மெலிதான் நீர்த்திரை.
ஞாயிறு இரவு பெங்களூர் டிரெய்னில் அரிதாய் கிடைத்த லோயர் பெர்த்தில் படுத்தவாறே, நட்சத்திரங்களை வெறிக்கையில், எளிதாக ரகுவும், மாதவியும் காதலித்திருக்க கூடாதோ? என்று நினைத்துக் கொண்டேன்.

Tuesday, April 19, 2011

கண்ணாடித்தேர்...

மகளுக்குக் கல்யாணம் என்று சரோஜா டெய்லர் வந்து பத்திரிக்கைக் கொடுத்தபோது, கல்யாணத்திற்கு போகவேண்டாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவன் மனைவி கல்யாணத்திற்கு போயே ஆகவேண்டும் என்று அடம் பிடித்ததில் ஒப்புக் கொள்ள வேண்டியாதாயிற்று.  வீடு வந்து பத்திரிக்கை வைத்தவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு எப்படிப் போகாமல் இருப்பது? என்று கேட்கிறாள் இவன் மனைவி. ஆண்டாள் கோவிலில் கல்யாணம், வடக்குரத வீதி பப்புச்செட்டி கல்யாணமண்டபத்தில் சாப்பாடு என்று சொல்லியிருந்தார்கள். மாப்பிள்ளை அழைப்பும் வைத்திருந்தார்கள், அதுக்கே போயிட்டு வந்துட்டா போதும். விடியக்காலைல முகூர்த்தம். இதுக்குன்னு மெனக்கெட்டு போகணும்னு நினைச்சா மண்டையடி, பையனை ஸ்கூல்ல விடமுடியாது, காலைல பண்ற வேலையெல்லாம் ஒரு அவசரத்திலேயே செய்ய வேண்டி வரும், ஒழுங்கா விடிஞ்ச மாதிரியே இருக்காது, என்று நினைத்துக் கொண்டான்.

முதல் நாள் சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்பு தான் அவனுக்குத் தோதுப்படும் என்று தோன்றியது. அதுக்கு கூட போகணும்னு அவசியம் இல்லை, ஆனா இவன் மனைவியோடு கொஞ்ச நாளா, சரோஜா டெய்லர் ரொம்ப ஒட்டுதலா ஆயிட்டதால, அவளுக்காக போக வேண்டியதாய் இருக்கிறது. சரோஜா டெய்லரிட்ட ரவிக்கை தைச்சா தான் ரவிக்கை போட்ட மாதிரி இருக்குங்க! இதுக்கு முன்னாடி தச்சவங்ககிட்ட எல்லாம் ஏதாவது பிரச்னை இருந்துட்டே இருந்துச்சு, இங்க பாருங்க, எப்படி கச்சுன்னு இருக்குண்ணு! என்று கையின் உள்ளே விரலை விட்டுக்காட்டினாள். எத்தனையோ பேரிடம் கொடுத்தும் திருப்தி இல்லாமல், சரோஜா திருப்தியாய் அமைந்தது தான் காரணம் அவர்கள் சிநேகம் வலுப்பெற்றதற்கு. இதற்காக ரெண்டு தெரு தள்ளி, சரோஜாவிடம் வந்து தைக்க கொடுக்கிறாள்.

சரோஜாவின் வசீகரமான முகமும், எதையுமே சுவாரசியமாய் ஒரு ஏற்ற இறக்கத்துடன் பேசுகிற விதமும், புருவக்குறிகளும் இவன் மனைவிக்கு சரோஜாவை அதிகம் பிடித்து விடவும், அவள் தைத்ததில் குறை இருந்தாலும் அதை பெரிதாய் கண்டுகொள்ளாதபடிக்கும் செய்திருக்கிறது. இது தான் சரோஜாவின் சாமர்த்தியம். ஸ்கூல் விட்டதும் பையனையும் கூட்டிட்டு மனைவியை வரச்சொல்லிட்டா, ஒட்டுக்க பப்புச்செட்டி கல்யாணமண்டபத்துக்கு போயிட்டு வந்துடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.  

பப்புச்செட்டி கல்யாணமண்டபத்தில் எப்படித் தான் ஒரு விசேஷம் வைக்கிறார்களோ என்று தோன்றும் இவனுக்கு.  மண்டபத்துக்குள்ளே தண்ணி வசதியே கிடையாது. கிணறோ, போர் தண்ணியோ கிடையாது. எந்த விசேஷம் வச்சாலும், தள்ளுவண்டில தண்ணி எடுத்து நடையா நடக்கணும். இல்லேன்னா ஒரு லாரித் தண்ணி அடிக்கணும், சுமாரா அறுநூறு ரூபா வரை ஆகும். தண்ணித் தொட்டி கடைசிலே இருக்கிறதால, கூட நூறு ரூபா கேட்பான் என்று தோன்றியது. சரோஜா டெய்லருக்கென்று சில சாமர்த்தியங்கள் உண்டு, அதில் இது மாதிரியான பொறுப்பெல்லாம் பார்த்துக் கொள்ள அவளுக்கென்று யாராவது இருப்பார்கள் என்று தோன்றியது.   தண்ணீர் ஒரு பெரிய பிரச்னை என்றாலும், மண்டபம் பெரிய மண்டபம், நிறைய ஜன்னல் வச்சு, காத்தோட்டமா, செட்டிமாருங்க வீடு மாதிரியே இருக்கும்.  எல்லா முகூர்த்தத்துக்கும் தவறாம ஏதாவது கல்யாணமோ, சடங்கோ, இதர விசேஷங்களோ  நடந்து கொண்டு தானிருந்தது. சரோஜா டெய்லர் அங்கு கல்யாணம் வைத்திருப்பதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்.

சரோஜா, பத்திரிக்கை வைக்க வரும்போது, அவளுடைய மகளும் வந்திருந்தாள். பதினெட்டு அல்லது பதினேழு வயசு தான் இருக்கும். ஒல்லியாய், அவளுடைய அம்மா போல முகத்துடனும் சிரிப்புடனும் இருந்தாள்.  கண்களில் ஒருவிதமான மருட்சியுடன் சிரித்தாள்.  இந்தப் பெண்ணை பார்த்த ஞாபகம் இருக்கிறது, ஒருவேளை அவள் அம்மாவின் சிறுவயது தோற்றத்தை வைத்துக் குழப்பிக் கொள்கிறோமோ என்று தோன்றியது. இல்லை, இந்தப் பெண்ணை மவுத்தன் (மவுத்தனின் பெயர் முருகன் தான், கருப்பா இருப்பதால, கருவாயன், ப்ளாக்மவுத் ஆகி, மவுத்தனாகி விட்டான்) கடையில் வைத்து நீலத் தாவணி, வெள்ளை ரவிக்கை காண்வெண்ட் பள்ளியின் யூனிபாரத்தில் பார்த்திருக்கிறான். கையில் கண்ணாடி வளையல்களும் இரண்டு தங்கவளையல்களுமாய், மஞ்சள் கலர், ஜரிகை லேஸ் வச்சத் தாவணியும், அரக்குக் கலரில் பாவாடையும் அணிந்து இப்போது கொஞ்சம் வேறு மாதிரி இருந்தாள்.  அண்ணே! பாபுவையும் அக்காவையும் கூட்டிட்டு வந்திருங்கண்ணே! என்று சம்பிரதாயமாய் கும்பிட்டு அழைத்தாள்.  சரோஜா இவனைப் பார்த்து வந்துரணும்.. என்று அழுத்தமாயும், இழுத்தமாதிரியும் சொல்லிவிட்டு, இவன் மனைவியிடமும் சொல்லிக்கொண்டு படியிறங்கினாள். 

சரோஜாவிடம் பெரிதாய் மாற்றங்கள் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் நரையும், இடுப்புக் குழைவும் தவிர அப்படியே இருந்தது மாதிரி தெரிந்தது.  படியிறங்கி அவர்கள் வாசல் வருவதற்குள் பால்கனிக்குப் போனான். கீழே இறங்கிய சரோஜா, அண்ணாந்து இவனைப் பார்த்து வந்துடணும் என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி ஆட்டினாள். சரோஜாவை கவனித்துக் கொண்டிருந்தவனை, தொட்டு திருப்பினாள் அவன் மனைவி. என்னங்க செய்யலாம், போய் மொய் கவர்ல வச்சிட்டு வந்துடலாமா இல்லை ஏதாவது பாத்திரம் பண்டம் வாங்கி வைக்கலாமா? என்றாள்.  ஏதாவது செய்யலாம். உனக்கு ஏதாவது குறிப்பா செய்யணும்னு தோணினா உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டான்.

இன்று பத்திரிக்கை பார்த்ததும், அன்று நடந்தது எல்லாம் திரும்பவும் மனசுக்குள் ஓடியது.  கடைக்குக் கிளம்ப வேண்டும், பையனை ஸ்கூல்ல விட்டுட்டு வந்ததன் பிறகு தான் கடைக்கு கிளம்ப வேண்டிய ஆயத்தங்களை ஆரம்பிப்பது அவனுடைய வழக்கமாகி விட்டிருந்தது. ஏதேதோ நினைப்புகள் வர, கூடைச்சேரின் மேல் கிடந்த ஆனந்தவிகடனை எடுத்துக் கொண்டு கக்கூஸுக்குப் போனான்.

உட்கார்ந்திருக்கும் போது சரோஜா பற்றிய நினைப்பு வந்தது.  அவன் அப்போ படித்துக் கொண்டிருந்தான்,  ஹிந்து ஹைஸ்கூலில். அவன் வீடும் சரோஜா வீடும் அடுத்தடுத்த தெருவில் இருந்தது.  அப்போது தான் சரோஜா கல்யாணமாகி வந்திருந்தாள், அழகாபுரிதான் அவ ஊர். பார்க்க அத்தனை அழகா, அழகாபுரி ராணி மாதிரி அப்படி ஒரு தினுஷான, சொகுசான அழகு.  அவ நடக்குறதும், பார்த்து சிரிக்கிறதும் யாரையும் ஒரு மிதப்புல நிறுத்தும்.  அவ பேசிட்டா போதும், ஒரு பயல கையில பிடிக்கமுடியாது. இந்த கொன்னவாப்பயலுக்கு இப்படி ஒரு பொண்ணா? என்று வயிறெரியும் நிறைய சம்சாரிப்பயகளுக்கு.  சரோஜா வீட்டு பின் சுவர் தான், இவன் வீட்டு பின் சுவரும். சுவரை ஒட்டி இருக்கிற பாத்ரூமில் அவ குளிக்கும் போது, அடிக்கிற மணம், சோப்பா, மஞ்சளா, இல்ல பூசுப்பொடியா என்று தெரியாமல் அவனை அப்படியே மல்லாத்திரும். 

சரோஜா கல்யாணமாகி வரும்போது, இவனை விட ஒரு வயசு ரெண்டு வயசு பெரியவ மாதிரி தான் இருந்தது. வயசுக்கு மீறின வளர்ச்சியினால கூட அப்படித்தெரிந்திருக்கலாம்.  சரோஜா புருஷனுக்கு கைக்கொள்ளாத அழகு அவ-ன்னு தோன்றும் இவனுக்கு.  அவ மகளும் பார்க்க அப்படியே தான் இருக்கா, ஆனா உடம்பு, சரோஜா கணக்கா ஒரு தெறிப்பு இல்லை.  என்னங்க உள்ளேயே தூங்கிட்டீங்களா? என்று அவன் மனைவி கதவு தட்டுவது கேட்டது.  இந்தா வாரேன்! அவ்வளவுதான்! என்று வெளியே வந்தான். புஸ்தகத்தை எடுத்துட்டு போனா நேரம் போறதே தெரியாதே! அந்த மணத்துல ஒக்காந்து படிக்காட்டி தான் என்னவாம்? என்று சலித்துக் கொண்டாள்.

வெளியே வந்தவனை, முறைத்தவளை கவனிக்காதது போல வெளியே வந்து கொடியில் கிடந்த துண்டை எடுத்துக் கொண்டு குளிப்பதற்கு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.  சரோஜாவை அதிகம் கவனிக்க வைத்தது, அவனுடன் படித்த ராமராஜ் பயதான்.  பங்காளி! என்னா மாதிரி இருக்கா பாரு பங்காளி! இடுப்பையும், பையையும் பார்த்தியாடே? இவளுக்கு தொசுக்கு மாதிரி ஒரு புருஷன். என்று அலுத்துக் கொள்வான்.  சரோஜாவின் பாத்ரூம் சுவரு தான் இவன் வீட்டு கொல்லைச்சுவரு என்பதை அவனிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அதற்கும் ஏதாவது உபாயங்கள் சொல்றேன் பேர்வழி!ன்னு வந்து உட்கார்ந்து கொள்வான் ஞாயிற்றுக்கிழமைகளில்.

சரோஜா வீட்டு பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்கும்போதெல்லாம், காய்ச்சல் வரும்போல இருக்கும் இவனுக்கு. எத்தனை சலனங்களைத் தந்திருக்கும் அந்தப் பொழுதுகள் என்று தோன்றியது அவனுக்கு. ஒருமுறை தண்ணீத் தொட்டியில் முருங்கை இலைகளும் பூக்களும் விழுகிறது என்று கிடுகு போட, சுவற்றில் ஏறிய போது குளித்துவிட்டு துணி மாற்றிக் கொண்டிருந்த சரோஜாவை தற்செயலாகப் பார்த்துவிட, அவளும் பதட்டமில்லாமல், ஏற்றிக்கட்டிய பாவாடையின் மீது கதவில் இருந்த துணியை எடுத்துப் போர்த்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்ததும், இன்னும் கண்ணுக்குள்ளேயே இருந்தது.

வெளியே அங்கே இங்கே பார்த்த நேரங்களின் அவள் கொடுத்த சமிக்ஞைகள், அவள் வீட்டில் யாருமில்லாத தருணத்தில், வீட்டுச்சுவர் தாண்ட வைத்தது. அதற்கு பிறகு, எப்போது படித்தாலும் பட்டாசாலில் உட்கார்ந்து படிப்பது தான் வழக்கம் என்றிருந்தவன், கொல்லையில் உட்கார்ந்து படிப்பது என்று வழக்கமாகிவிட்டது.  அம்மாவுக்கு, புள்ள எந்நேரமும் புஸ்தகமும் கையுமா இருக்கானே! பெரிய கலெக்டராத்தேன் வரப்போறான் எம்மவன்! என்று மணத்துக் கொள்ள ஏதுவாய் இருந்தது. அக்காவின் திருமணத்தின் போது வீட்டை விற்றுவிட்டு தைக்காபட்டி தெருவுக்கு போனபிறகு எல்லாம் மறந்து போனது. கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, அப்பாவின் கடையைப் பார்த்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. அப்பப்போ, சரோஜாவை பஜாரில் பார்ப்பதோடு சரி, எப்போதும் சைக்கிளில் ஏதோ அவசரசோலி இருப்பது போல பறப்பாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தான். ஸ்வாமி படங்களின் முன்னால் நின்று கும்பிட்டு விட்டு, திருநீரைக் குழைத்து நெற்றியிலும், கையிலும் பூசிக் கொண்டான். அப்பாவிடம் இருந்து வந்த பழக்கம்.  கும்பிட்டானதும், பால்கனிக்கு வந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டுத் திரும்பும் போது, செல்வராஜ் வீட்டிற்குள் இருந்து சரோஜாவும், அவள் மகளும் வெளியே வந்தனர். சரோஜா மேலே பார்ப்பது போல இருக்க, சடக்கென்று தலையை உள்ளிழுத்துக் கொண்டான்.

காலை உணவை முடித்துக் கொண்டு கடைக்கு கிளம்புகையில் இவன் மனைவி சகுனம் பார்த்து அணுப்புவது தான் வழக்கம்.  வெளியே வந்து மஞ்சப்பையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு படியிறங்கினான். இவன் மனைவியும் உடன் வந்தவள், வெளியே நின்று கொண்டு, இவன் போகும் திசையைப் பார்த்தாள்.  வாங்க வாங்க என்று அவசரமாய் அழைத்தாள், நிறைகுடங்களை சுமந்து கொண்டு கௌசல்யாவும், கோவிந்தம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள்.  நல்ல சகுனந்தான் என்று கிளம்பியவன், தெருமுக்கில் நின்று அவன் மனைவிக்கு, கையசைத்து விட்டு பஜாருக்கு நடக்கத் தொடங்கினான்.

மனசு முழுக்க சரோஜா தான் இருந்தாள், வேறு கவனமே இல்லை. எதிரில் வந்த கொட்டாப்புளி ஆசாரி கூட, என்ன அண்ணாச்சி! சுகமாயிருக்கீயளா? என்று பேச வந்தபோது, ஒரு அவசர சோலியா போயிக்கிட்டு இருக்கேன்! கடைக்கு வாங்க, பொறவு பேசிக்கிடலாம்! என்று அவரைத் தவிர்த்து நடந்தான். பின்னால் சைக்கிளில் வந்த ஒரு பெண், இவனுக்கு முன்னால் வந்து குதித்தது மாதிரி இறங்கினாள்.  அது சரோஜா என்று தெளிவதற்கு கொஞ்ச நேரமானது.  என்ன சரோஜா! என்றான்.

ரவி! கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன், கொஞ்சம் பொடவைக்கும், மாப்பிள்ளைக்கு துணி எடுக்குறதுக்கும் காசு குறையுது ரவி! எனக்கு யார்கிட்டயும் கேட்க சங்கடமா இருக்கு.  என் புருஷங்காரனப் பத்தி தான் உனக்குத் தெரியுமே! உன்ன விட்டா எனக்கு யாரும் ஞாபகம் வரலை! ஒரு பத்து ரூவா இருந்தா கொடேன். முடியறப்போ திருப்பி தந்திடுதேன், என்று பேசிக் கொண்டே கையைப் பிடித்துக் கொண்டாள். நீ கடைக்கு போயிட்டிருக்கக் கூடாதே!ன்னு வேகமா வந்தேன் என்று இறைத்தாள். இவன் சுத்திமுத்தி பார்த்துவிட்டு சங்கடமாய் கையை உருவினான்.  நாளைக்குத் தரட்டுமா? என்றான்.  வீட்டுக்கு வந்திடாதே, நானே தோது பாத்து கொடுத்து விடுறேன் உன் வீட்டுக்கு! என்று யாரும் பார்த்து விடுவதற்குள் வேகவேகமாய் நடந்தான்.

கடைக்குப் போக மனசில்லாமல், பணத்தை எப்படி புரட்டுவது, மனைவியிடம் எப்படி மறைப்பது என்று யோசித்துக் கொண்டே ராமராஜோட பட்டறைக்குப் போனான்.  ராமராஜ் கடையில இல்லை, டேப் ரிகார்டர், எம்.ஜி.ஆர் பாட்டை, நம்பியார் குரலில் பாடிக்கொண்டிருந்தது.  பட்டறைப்பையன், வாங்கண்ணே, டீ வாங்கியாரவா? என்று கேட்டு பதிலுக்கு காத்திருக்காமல், ரெண்டு டீயும் ஒரு ரெண்டு சிகரெட்டும் வாங்கி வந்தான். ஒரு டீயை அவனே குடித்துவிட்டு, சிகரெட்டை அவன் முதலாளிக்காக விட்டு வைத்தான்.  சிகரெட்டை பத்தவைத்துக் கொண்டே ஒரு கிளாஸில் டீயை உறிஞ்சும் போது, ராமராஜ் உள்ளே நுழைந்தான் குனிந்த படியே. குட்ட வாசக்கதவு அது.

வந்தவன், வாடா பங்காளி! இப்ப தான் வந்தியா?, ஏலே போய் இந்தப் பொட்டலத்தை உள்ள வச்சுட்டு, எனக்கு ஒரு டீ வாங்கியா! என்று அவனை விரட்டினான். பங்காளி, சரோஜா ஞாபகமிருக்கா? என்று கிசுகிசுப்பாய், அடிக்குரலில் கேட்டான். எந்த சரோஜா? என்று தெரியாதது போல கேட்டான் ரவி. அதாம்லே! ஒங்க பழைய வீட்டுக்கு பின்னால இருந்துச்சுல்ல, சரோஜா டெய்லர், அதுதான். அதுக்குள்ளாற மறந்திட்டியா? வயசாயிடுச்சுலே உனக்கு? என்று கெக்கெக்கே என்று சிரித்தான்.  இங்கு வந்திருக்கக்கூடாதோ? என்று தோன்றியது.

அந்த சரோஜாவோட பொண்ணுக்கு கல்யாணமாம்லே, வந்து பத்திரிக்கை வச்சுச்சு. பாவம்லே அது புருஷங்காரன் ஒன்னத்துக்கு ஒதவலையாம். இதுவே எல்லாத்தையும் பார்த்துக்கணும்னா எம்புட்டு கஷ்டம்? கையப் பிடிச்சுக்கிட்டு, காசு கொஞ்சம் பத்தலை ராமருன்னு! கரகரன்னு அழுதுடுச்சு பங்காளி! எனக்கு வெசனமாப் போச்சு. மனசே கேக்கலை, அதான் போய், குப்பைய அலசுனதுல வந்த பத்து கிராம் தங்கத்த, சிலுவானக்கடையில வித்துட்டு வர்றேன்! அவளுக்கு கொடுக்குறத்துக்காக! அவளுக்கு கடன் பட்டுருக்கேன் பங்காளி! என்று இளித்தான்.



Saturday, April 16, 2011

மருதாணி சித்திரங்கள் - 2



எப்பவும் மெகாவாட் கணக்கில் இருக்கும் ரகுவின் பளீர் புன்னகை, இன்று சைக்கிளை நிறுத்திவிட்டு வந்த போது கிலோவாட் கணக்கில் தான் இருந்தது.  கொஞ்சம் சீக்கிரமே கூட வந்திருக்கிறான், வழக்கத்தை விட.  என்னிடம் ஏதோ முக்கியமான செய்தி சொல்ல துடிப்பவன் போல.

காய்கறிக்கார அம்மா போகும் வரையில் வேறு வழியில்லாமல் தான் பெருமாள் கோயில் யானையை பற்றி சொன்னாற்போல இருந்தது.  பாட்டி காய்கறியை உள்ளே எடுத்துப் போனதும், “மாலினி என்னைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொல்றா வித்யா! என்றான் 

 மாலினி யார்? ரகு உன் நெற்றில விழற முடிக்கற்றைக்காக உயிரையே கொடுக்கலாம்னு சொன்ன மாடி வீட்டுப் பெண்ணா இல்லை, இவன் பாக்க ஓடி வந்து கால dislocate பண்ணிக்கிட்ட பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் அண்ணன் மகளான்னு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.  அந்த இருவரில் யாராக இருந்தாலும் ரகு அடுத்து சொல்லப்போகும் வார்த்தைகள் ஒன்றே தான் என்று எனக்குத் தோன்றியது. அவனும் எப்படி solve பண்றதுன்னு யோசிச்சுட்டிருக்கேன் வித்யா என்றான்.

நீ இன்னும் வேலைக்கு போகலையே? அதனால குழப்பாம, அவங்க வேற ஜாதியா, உங்க அம்மா அப்பா ஒத்துக்கலையா போன்ற கேள்வியெல்லாம், ரகு விஷயத்தில் கொஞ்சம் அபத்தம் என்பதால், 'அடப்பாவி solve பண்றயா?  இப்படி unromantic-ஆ பேசற?' என்றேன் கொஞ்சம் சிரிப்புடன் தான். 

ரொம்பவே romantic-  தான் சொன்னா  மாடிப்படி வளைவுல கட்டிப் பிடிச்சு உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், இல்லேன்னா செத்து போப்போறேன்னு அழுதா வித்யா!. அவங்க வீட்டுல வேற மாப்பிள்ளை நிச்சயம் பண்ணிருக்காங்க, நல்ல வேலைல இருக்கான், நல்ல சம்பளமாம்!.
இவ இப்படி சொல்றா, என்றான் புருவத்தை சுருக்கியவாறே!

உன்னை விட better மாப்பிள்ளைங்கிறயா? என்றேன் கண் சிமிட்டலுடன்.
அதெப்படி? ஒருத்தனுக்கு வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லைங்கிறது ஒரு பிரச்னையா என்ன? ஒரு பொண்ணோட மனசப்புரிஞ்சுக்கு வேலைல இருக்கணுமா என்ன? என்றான் வரிசைப்பல் சிரிப்புடன்.

அவன் நெற்றியில் இருந்த குங்குமக்கீற்றும், கொஞ்சம் மஞ்சளும் கோயிலில் இருந்து நேராக இங்கு வந்தது போலத் தெரிந்தது. பெருமாள் கிட்ட என்ன வேண்டிக்கிட்ட, எப்படியாவது தப்பிக்க வச்சிருப்பான்னா? என்றேன் கொஞ்சம் சர்க்காஸ்டிக்கா! பையில் வைத்திருந்த துளசியை கிள்ளிக் கொண்டிருந்தவன், என்னை தடக்கென்று ஏறிட்டுப் பார்த்தான்

சே சே அவளுக்கு நல்ல புருஷனா கிடைக்கனும்னு வேண்டிக்கிட்டேன்  என்றான்.  உண்மைதான் அப்படித்தான் வேண்டிக்கொண்டிருப்பான். பாவனைகளிலேயே நிஜமாகிப் போனவன். சற்று நேரம் வேற ஏதேதோ பேசினாலும், அவன் கவனம் கொஞ்சம் சிதறியது நன்றாகவே தெரிந்தது. 

உன்னோட அழகு, அறிவு, படிப்பு எல்லாம் சேர்ந்து, உன்ன மாதிரி யோசிக்கிற, பேசுற, புரிஞ்சுக்குற ஒரு குழந்தை வேணும் ரகுன்னு சொல்றா! என்றான் நடுவே. அவனே நிறுத்தாமல், “எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தியா வித்யா? கையப்பிடிச்சுக்கிட்டு ஒரு பொண்ணு, ரகு எனக்குச் சின்னதா வேணும்னு சொல்லும் போது!, எனக்கு அப்படியே கண்ணெல்லாம் கலங்கிடுச்சு தெரியுமா? அவளோட சோகமும், வருத்தமும், ஆசையும் எனக்கு புரியறது தான் பிரச்னையே! அது இங்க நிறைய பேர்ட்ட இல்லாதது தான் பிரச்னையே!

ரொம்ப சீக்கிரமா எல்லாம் நடந்த மாதிரி இருக்கு வித்யா!, அவளுக்கு என்னால ஒண்ணும் செய்யமுடியலை.

என்னை விட better ஆன  ஒரு பையன்னு வச்சுக்கோயேன், எனக்கு இத்தனை வருத்தம் இருக்காது! அது இல்லாமப் போனது தான் என் குழப்பத்துக்குக் காரணமே! மத்த பேச்சு வார்த்தை விஷயங்கள்லாம் ஒத்து வந்திட்டதா வேற அம்மா சொன்னாங்க என்றான் சற்று நேரம் கழித்து.

நல்ல தெளிச்சியா, குளிர்ச்சியா இருப்பா வித்யா! சொல்லியிருக்கேன்ல? என்றும் சொன்னான்.

இதில் எதிலுமே, அவளை திருமணம் செய்து கொண்டால் தான் என்ன என்கிற மாதிரி, ஏதாவது சாயல் தட்டுமோ தப்பித்தவறி? என்று காத்திருந்தேன்.  நான் எதிர்பார்த்தபடியே அப்படி ஏதும் தட்டுப்படவில்லை. 

மதியம் சாப்பாட்டு நேரம் ஆனதும் கிளம்பும் போது, க் இல்லாத இரும்பு குதிரைகளோட இந்த latest victim கதை என்ன ஆச்சுன்னு கடிதம் போடு என்று நான் சொன்னது எனக்கே கொஞ்சம் கல் நெஞ்சமான பேச்சாகப் பட்டது. இல்லை ரகுவினால் இந்த பெண்ணுக்கு சங்கடம் வராது என்ற நம்பிக்கையோ என்னவோ?

 செவ்வாய்க்கிழமை வந்த கடிதத்தில் அவள் ஓடிப்போன செய்தி இருந்தது.  பின்னர் வீட்டுக்கு கண்டு பிடித்து கூட்டி வந்தபோது அவள் அப்பா அவளை அடித்த அடியும். உன்ன அடிக்கமுடியாத கையாலாகாததனம் அவள அடிக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னது அந்த அடி. நெஞ்செல்லாம் ரத்தம் வழிந்தது என்று எழுதியிருந்ததை பார்க்கையில் பாவமாய் இருந்தது.

வியாழக்கிழமை கடிதம் மொட்டை மாடியில், தென்னங்கீத்தினூடே தெரிந்த பிறை நிலா இரவில், அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்ததாகவும், எல்லாம் சரியாகிவிடும் என்றும் முடித்திருந்தான்.

ஒரு மாதம் கழித்து, ஒரு சனிக்கிழமை கையில் ஒரு போட்டோவுடன் வந்தான் போட்டோவில் இருந்த அந்த மணமகள் எனக்கென்னமோ சுமாராகத்தான் தெரிந்தாள். ஆனால் அவன் பக்கம் திரும்பி இவன் கையை பிடித்திருந்தது எனக்கு என்று மறக்காது என்று தோன்றியது.

தி.ஜாவோட மலர்மஞ்சம் பற்றி பேசிக்கொண்டிருந்தவனிடம், ‘அப்பாடா கல்யாணம் முடிஞ்சதுன்னு இருக்கோ என்றேன் கிண்டலாக.

இல்லை வித்யா, கவலையா இருக்கு. அவனப் பாத்தா இவளோட மெண்மையான உணர்ச்சிகள புரிஞ்சுப்பானான்னு தெரியவே இல்ல என்று கண்ணில் லேசான கலக்கத்தோட அவன் சொன்ன பதிலை, அவனை ஓரளவுக்கு புரிந்த நான் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

மெலிதாக தலையசைத்துப் புன்னகைத்தேன் பதிலுக்கு.


Friday, April 08, 2011

மருதாணி சித்திரங்கள் - 1


அம்மா கொடுத்த காப்பியை முடித்துவிட்டு, காலை பேப்பரில் புகுந்து கொண்டேன்.  பேப்பரில் ஒன்றும் பெரிதாக இருப்பதாகப்படவில்லை. பேப்பரை மடித்துவிட்டு, கண் மீண்டும் ஒருமுறை நிலைக்கு மேலே மாட்டியிருக்கும் கடிகாரத்திற்கும், வாசலுக்கும் சென்று மீண்டது. என்ன இவனை இன்னும் காணலையே? என்று நினைத்துபடியே, மடித்த பேப்பரில் கண்களை வெறுமனே ஓட்டிக் கொண்டு இருந்தேன். சலனத்தின் மழைத்துளி மாதிரி சைக்கிள் மணிச்சத்தம் விழுந்தது. அவனாகத்தான் இருக்கும் என்று வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். அவன் தான்.  வாசலில் போட்டிருந்த கோலத்தை தவிர்த்து, சைக்கிளை சர்ரென்று கொண்டு வந்து பிரேக் போட்டு நிறுத்தி, ஒரு கால் ஊன்றி சிரித்தான்.

ரகுவுக்கு அவனுடைய இந்த புன்னகை, வசீகரமான முகம் ரெண்டும் பெரிய வரம் அல்லது வேறு ஒரு பார்வையில் ஆயுதம் என்று நினைத்துக் கொண்டேன்.  என் சனிக்கிழமை காலை இவனுக்கென்று ஒதுக்குவதற்கு இவன் புன்னகை ஒரு காரணமாக இருக்கத்தான் வேண்டும் என்று தோன்றியது. நான் பெங்களூர் போவதற்கு முன்னால் நினைத்த பொழுதெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பில் வந்து  நிற்பான். வேலை கிடைத்து  நான் பெங்களூர் சென்றவுடன் வாரம் தவறாமல் சனிக்கிழமை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு போய்விட்டு நேராய் இங்கு வருவது வழக்கமாகி விட்டது. 

கையில் வழக்கம் போல இரண்டு புத்தகங்கள். வரும்போதெ,     ‘நான் போட்ட லட்டர் கிடைச்சுதா உனக்கு? என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான். வாரம் ஒருமுறை தவறாமல் சந்தித்த போதிலும், கடிதம் எழுதுவதில் குறைவில்லை எங்களுக்குள். பேசிக்கொள்ள அத்தனை இருந்தது, விஜய் தான் கிண்டல் செய்வான் அப்படி என்னதான் பேசிக்குவீங்க? என்று. புத்தகங்கள், சினிமா என்று பேசிக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி ஒரு உறவு முறை சார்ந்த சம்பாஷனைகளும் எங்களுக்கிடையே இருந்தது

எந்த லட்டரைப்பற்றி குறிப்பிடுகிறான் என்று தெரியாதது போல, எந்த லட்டர்? என்றேன், பேசத் தயாராக உட்கார்ந்து கொண்டே. முன்னறை மாடிப்படியில் இயல்பாக உட்கார்ந்து கொண்டான். அவனுடைய வழக்கமான இடம் அது. இந்த மாடிப்படி எங்க போகுது என்று ஒருமுறை கேட்டிருக்கான்? அதற்கு சிரித்திருக்கேன். மேலே அறைகள் ஏதும் இல்லாத மொட்டை மாடி.  மாடிப்படியின் முடிவில் கவிந்திருக்கும் மரத்தின் கிளைகள், அங்கு ஏதோ பூட்டிய அறை இருப்பது போலத் தோற்றம் தரும். என்னை கேள்வியாய் பார்த்தவன், திரும்பவும் தொடர்ந்தான். “நெறைய எழுதியிருந்தேன் வித்யா! சே! நீ படிச்சிருப்பேன்னு நினைச்சேன் என்றான் லேசான வருத்தத்துடன். அதை படித்ததை சொல்லியிருந்தால் அவனுடைய கண்களில் ஒரு மினுக்கென்ற வெளிச்சம் தெரிந்திருக்கும்.

அவன் வருத்தத்தை ரசித்தவாறே, படிச்சேன், படிச்சேன்! மீனா மாமி பத்தி வரிஞ்சு கட்டி எழுதியிருந்தயே?என்றேன் கண் சிமிட்டலுடன்.  அவன் அதில் தொங்கிக் கொண்டிருந்த கிண்டலை கவனிக்கவில்லை அல்லது கவனிக்காத மாதிரி நடிக்கிறான் என்று தோன்றியது.

கிடைச்சுடுச்சா? என்றான் ஒரு திருப்தியுடனும், பளீர் புன்னகையுடனும். “பக்கத்து வீட்ல இருக்காங்க வித்யா! தெளிவான நிஷ்களங்கமில்லா முகம், பெரிய கண்கள், லேசா இந்த பூசினா மாதிரின்னு சொல்வாங்களே அந்த மாதிரி இருப்பாங்கஎன்று ஆரம்பித்தான். யாரையாவது பற்றி சொல்லும்போது, அவனுடைய எழுத்தார்வம், எழுத்து என்பதை விட, அவனுடைய கவித்துவமான உணர்வு வெளிப்பாடு, ஒரு ஸ்ப்ரவுட் மாதிரி வெளியே வரும் தளுக்கலாய். அவனுடைய வர்ணனைகள் கண் முன்னே அவன் சொல்ல வருகிற பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்திவிடும்.  எனக்கு மீனா மாமியை நன்றாகவே தெரியும் என்பது போல் இருந்தது.

ஒரு நடுத்தரவயது திருமணமான பெண், குழந்தைகளை ஸ்கூலிற்கு அணுப்பிவிட்டு, கணவனை வேலைக்கு அணுப்பிவிட்டு அலுப்புடன், வேலையின் மிச்சங்களை முந்தானையில் துடைத்தபடியே பின்காலை வேளையில் வீட்டு வாசலில் வந்து நிற்பது போன்ற ஒரு பெண் உருவம் என் கண் முன்னே நின்றது.  

அவங்களுக்கு கர்னாடிக் மியூசிக்னா ரொம்ப பிடிக்குமாம் வித்யா! நல்ல கேள்வி ஞானம், நல்லாவே பாடறாங்க. ஸ்ரீமந்நாராயணா, பௌளில பாடுனப்போ அப்படியே அசந்து போயி உட்கார்ந்துட்டேன் தெரியுமா? கமலப்ரியா கமலேசனா” ன்னு பாடும் போது நெக்குருகிப் போச்சு. அவங்களோட புருஷனப் பாத்திருக்கேன் நான், ரொம்ப சுமாரா இருப்பான்.  சுமார் அப்படிங்கிறத விட, அவங்களோட மென்னுணர்வுகள மதிக்கிற மாதிரியே இருக்காது அவன் பார்வையும், அவங்கட்ட பேசுற விதமும், என்றான் அவன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு. 

இப்போ இத எங்க கொண்டு போற? என்றேன் அவனுடைய கண்களில் மாறும் பாவங்களை ரசித்துக் கொண்டே.  இதே போல, நடுத்தர வயதுள்ள... இல்லை, பெண்களுடனான இவனுடைய சினேகம் எத்தனை.  கர்னாடிக் ம்யூசிக், பாலகுமாரன், பாலசந்தர் என்று இவன் அடிக்கும் ஜல்லி பற்றி நினைத்துக் கொண்ட போது எனக்கு சிரிப்பாய் வந்தது.

எங்க கொண்டு போறது? ரொம்ப ஆத்தாமையா இருக்கு.  இது போல ஒரு பெண்ணோட உள்ளுணர்வுகள புரிஞ்சுக்கிறத்துக்கு என்னை மாதிரி ஆட்களும் இருக்காங்கங்கறது அவங்களுக்கு தெரிய வேண்டாமாதேவைப்படும் போது ஒரு சினேகிதனா இருப்பேன்னு அவங்க புரிஞ்சுக்க வேண்டாமா? பெண்களை மனசாவும், சகமனுஷியாகவும் நேசிக்கிறவங்களும் இருக்காங்கங்கறது அவங்களுக்கு தெரிய வேண்டாமா? அவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்க வேண்டாமா? என்று அவன் அடுக்கிய கேள்விகளில் இருந்த தீவிரம், எனக்கு இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிண்ட்ரோம் என்று பெயரிடத்தோன்றியது. 

என்ன நினைத்தானோ, திரும்பவும் தொடர்ந்தான்.  நான் நேத்து சாயங்காலம் காபி ராகத்துல ஆலாபனை பன்றத, கேட்டதும் எவ்வளவு ரசிச்சாங்க தெரியுமா? என்றான்.  கண்ணமூடி கேக்கும் போது ஏசுதாஸ் மாதிரி இருந்ததா சொன்னாங்க! எனக்கு அப்படியே மூளையில் இனித்தது அப்படின்னு தி.ஜா.வின் பாயசம் குடிச்சா மாதிரி சொல்வான்.

சிரிப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.  அதிலிருந்து அப்போதைக்கு பேச்சு பாலகுமாரனின் புத்தகங்களுக்கும், சமீபத்தில் வந்திருந்த ஆசை படத்திற்கும் தாவி விட்டாலும், நடுநடுவே மீனா மாமி தென்பட்டாள்.

நான் அவங்களுக்கு பிடிச்ச எம்எல்வி கேசட்ட டவுன்ஹால் ரோடு போய் கீஷ்டு கானத்துல வாங்கிட்டு வந்தேன் வித்யா! அவங்களுக்கு தாங்கமுடியாத சந்தோஷம் தெரியுமா? இந்த சந்தோஷத்துக்காக என்னமும் செய்யலாம் வித்யா என்றான். அவன் கண்களை பார்த்தேன் அதில் ஒரு குழந்தையின் சந்தோஷம் தெரிந்தது.  இந்த கண்கள், இவன் பேசுகிற வார்த்தைகளுக்கு எத்தனை ஒத்துழைக்கிறது என்று தோன்றியது. 

நேத்து புது சாரி கட்டிட்டு வந்து என்கிட்ட எப்படி இருக்குண்ணு கேட்டாங்க சும்மா சொல்லக்கூடாது வித்யா, அவங்க நிறத்துக்கு அரக்கு பார்டர் வச்ச மாம்பழக் கலர் புடவை அவ்வளவு எடுப்பா, அழகா இருந்தது என்றான்.

அவங்க புருஷனுக்கு அவங்க என் கூட பேசறது பிடிக்கல, ஒரு மாதிரி நீ என்ன பண்ற, வேலைக்கு போலையான்னு கேட்டான்? என்றான். எனக்கு பொசுபொசுன்னு வந்துச்சு... அப்படியே அறையலாம்போல என்றான். ஏதோ முன்யோசனையாய் இருந்தவன்,  வழக்கத்தை விட சீக்கிரமாகவே கிளம்பி போய்விட்டான், கடிதம் எழுதுகிறேன் என்று. எனக்கு கொஞ்சம் கவலையா இருந்தது.

மறுநாள் டிரெயின் பிடித்து பெங்களூர் வந்த என்னை, பின் தொடர்ந்த புதன்கிழமை கடிதத்தில் கூட மீனா மாமி இடம் பிடித்திருந்தாள்.  கோவிலில் பாடும்போது ...கான நீலா.. ஏல நீ தயராது பாடினப்போ அவங்க, நிச்சயமா சொல்றேன், வித்யா! என்ன ஒரு கணம் பாத்தாங்க, அந்த கூட்டத்தில கூட. ரொம்பவே சந்தோஷமா இருந்தது. சிரிப்பு வந்தது...அவனுக்கு. அவளோ பாதிச்சிருக்கேனா? என்றான். 

அடுத்த ஒன்றிரண்டு சனிக்கிழமை, பெரிதாக அந்த உறவில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், தவறாமல் மீனா மாமி அவனிடம் நடந்து கொள்வதை பற்றி ஏதாவது இருக்கத்தான் இருந்தது.

ஒரு முறை, அவங்க என்னை பார்க்குறதுல இருக்கிற சந்தோஷம் ஜாஸ்தியாவே இருக்குல்ல எனக்கு?  நான் கொஞ்சம் அவங்களை எக்ஸ்பிளாய்ட் பண்றனோ? என்றான்.

ரகுவை எனக்கு இதனால் தான் பிடித்தது. இப்படி ஆச்சரியமான, யோக்கியமான பேச்சு சுலபமாக வரும்.

இந்த கேள்விய வேற யார்கிட்டயாவது கேப்பியா? என்றேன் ஒரு க்யுரியாசிட்டியில்.

தெரியல வித்யா! என்றான்

எல்லா கதைக்கும் முடிவு போல, இரண்டு மாதத்தில் மீனா மாமி வீட்டுக்காரருக்கு டிரான்ஸ்பர் ஆகி, அவர்கள் வீடு காலி பண்ணுவதால், ஒரு சனிக்கிழமை என்னை பார்க்க வரவில்லை.

என் கையில் முகம் புதைத்து அழுதாள், என்னை புரிஞ்ச ஒரு நண்பனையும் இழக்கிறேன்என்று வெள்ளிக்கிழமை நாளை பார்க்க வரமுடியாது என்று எழுதியிருந்த கடிதத்தில் முடித்திருந்தான். அவளுக்கு பிடித்த சில கேசட்டும், சில புத்தகங்களும் வாங்குவதற்கும், அவளுக்கு உதவி பண்ணுவதற்கும், நாளை பொழுது போய்விடும். என்ற வரிகளை படிக்கையில் எனக்கு அவன் சொன்ன வார்த்தை  நினைவிற்கு வந்தது. யார், யாரை... என்பதில் தான் எனக்கு குழப்பம் மிஞ்சியது.