Saturday, March 09, 2013

பரிவர்த்தனை...


உருக்கி இழுத்த கட்டி பட்டறையில் வைத்து தட்ட, எகிறி ஓடியது. உமியோட்டின் அருகில் இருந்த தண்ணீர் கிண்ணத்தில் சளப்பென்று விழுந்தது. உமியோட்டின் துருத்தியை சுத்திக் கொண்டிருந்த பட்டறைப்பையன், சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்து, சிரித்தபடியே எடுத்துக் கொடுத்தான்.

கட்டி தெறித்து ஓடும் போது கண்டு பிடித்துவிடலாம், சட்டத்தில் வைத்து கம்பி இழுக்கும் போது விழும் துண்டுகளைத் தான் தேட வேண்டியிருக்கும்.  பொதுவாகவே பட்டறைக்கு கீழே கனமான நார்மிதி தான் போடுவது வழக்கம், தட்டும் போது சத்தமும் கேட்காது, விழுந்தாலும் தெறித்து ஓடாது. பிரட்டி தட்டும் போது தூசுடன் விழும் சன்னமோ, கட்டியோ தனியாய் தெரியும். தவறிவிட வாய்ப்பில்லை, ஒரு இனுக்குத் தங்கமும் தேடும் போது அதன் அசல் மதிப்பை விட கூடிவிடுவது போலத் தோன்றும். 

கட்டியை எடுத்துத் துடைத்து, முனையைக் கொஞ்சம் கூராய் தட்டி, சட்டத்தை எடுத்து இருகால் விரல்களுக்கு நடுவே பிடித்து, ஒரு பக்கத் துளை வழியாய் கட்டியை நுழைத்து, குறடால் பிடித்து இழுத்தான். தங்கம் நெகிழ்ந்து கொஞ்சம் நீண்டு, குறடில் நிற்காமல் காலுக்குக் கீழேயே விழுந்தது. அடுத்து அடுத்து துளைகளில் நுழைத்து,  கம்பி நீண்டு சுருண்டு மினுங்கியது. தரையில் புரளும் சத்தம், ஒரு மாதிரி குறுகுறுப்பாய் இருந்தது.  கம்பி இழுத்துக் கொண்டிருக்கும் போதே, கடைப்பையன் வந்து அவனை மறித்தார் போல எதிரில் நின்றான். 

“எலே கூரு கெட்ட மூதி, முன்னாடி வந்து நிக்க, சோலி பாத்துகிட்டிருக்குது தெரியல? தள்ளுலே வெளிச்சத்த மறிக்காமே! என்று கைக்குத் தோதாய் கிடந்த புருசுக் கட்டைய எடுத்து ஆடுசதையில் அடித்தான்.

அடி உரைப்பாய் விழ, காலை உதறியவன் இழுத்துக் கொண்டிருந்த கம்பியை மிதித்து விட்டான்.

“எலே போறியா இல்லை இன்னும் ரெண்டு வப்பு வைக்கவா? எப்பப்பாத்தாலும் இடுக்குள்ளேயே வந்து நிப்பியாடா?”

‘முதலாளியம்மா கூப்பிடுறாங்க!

“என்னவாம்டா, உப்பிலி ஏதாவது வந்து கலாட்டா பண்ணுதானா கடையில?”

இல்லண்ணே, ஏதோ கிராக்கி வந்திருக்கு, போன வாரம் வாங்கிட்டுப் போன நெக்லஸில ஏதோ பிரச்னையாம், அதாஞ்சொல்ல வந்தேன்! மென்டல் சங்கர்தான் அந்தம்மா ஒங்கள கூப்பிட அனுப்பிச்சாக வந்தான், ஆளையே காணோம், அதான் என்னைப் போய் பாக்கச் சொன்னாக!’

“ஏலே, அந்தம்மாக்கு தெரியாதா அவென் ஒரு கொங்காராட்டுப் பயன்னு!, கசைக்கு இழுத்துட்டு இருக்கேன், முடிச்சுட்டு வாரேன்னு சொல்லு!”

‘கிராக்கி வெயிட்டு பண்ணிட்டு இருக்குது, நீங்க இல்லாமப் போனா அந்தம்மா வைய்யும்! வாங்கண்ணே!’ என்று கையைப் பிடித்து இழுத்தான்

“உப்பிலி தான் வந்து போனவாரம் மாதிரி கிராக்கிகிட்ட ஏதும் தகராறு பண்ணிட்டானோன்னு நெனச்சேன்! என்று திரவத்தியிடம் சொல்லிக் கொண்டே, ‘இந்தா இதப்பாரு!’ என்று குண்டின் மட்டத்தை ராவிக் கொண்டிருந்தவனை அழைத்து கம்பியை இழுக்கச் சொல்லிவிட்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கடைப்பையனையும் இழுத்துக் கொண்டு கடைக்கு இறங்கினான். 

கடையின் மாடியில் தான் பட்டறை, விழுகிற குப்பையெல்லாம் கடையில் தான் எடுத்துக் கொள்வார்கள்.  மெழுகில் உருட்டித் தேற்றுவது போக, குப்பை அலசினால், வருஷத்துக்கு 400 லிருந்து 500 கிராம் தங்கம் வரை தேறும்.  ஆனாலும் அதை கைவைக்க முடியாது.  கடையில் இருந்து ஒரு நாள் திடீரென்று ஆள் அனுப்பி விடுவார்கள்.  மிதிகளில் இருக்கும் குப்பை முழுதும், கொட்டி அதை ஒதுக்கி ஒரு மூலையில் வைத்திருக்க வேண்டும்.  வந்தவுடன், சேட் வீட்டுக்குப் போயி அவனுடன் சேர்ந்து உருக்கி, மூசு போட்டு கட்டியாய் ரெடி செய்து கொடுக்க வேண்டும்.  அதிலிருந்து சிலசமயம் அவன் பங்குக்கு வேலை வரும் அதில் மிச்சம் பிடிப்பதே வருமானம்.  சிலசமயம் சொந்தமாய் கடை போட்டால் இந்த பிரச்னை இருக்காதென்று தோன்றும். ஆனால் வேலை தொடர்ந்து வராது, குப்பையில் சேருவதை கணக்குப் பார்த்தால்,  நிரந்தர வருமானம் போய்விடும்.

செருப்பை கடையின் இடது ஓரத்தில் விட்டுவிட்டு, கடையின் கல்லாவின் முன்பாக வந்து நின்றான்.  முதலாளியம்மா மூக்குக்  கண்ணாடியை மேலே ஏற்றி விட்டு, இவனைப் பார்த்தார்.

‘என்னலே இவ்ளோ நேரம், ஆள் மேல ஆள் அனுப்பனுமா உனக்கு!’ என்று குரலை உயர்த்தினார். கடையில் கிராக்கி இருக்கும் போது இது போல உயர்த்திப் பேசுவதும் மற்ற நேரங்களில் சாதாரனமாய் பேசுவதும் சகஜம் தான். அது அவனுக்கும் தெரியும், அவனும் பவ்யமாக நின்று கொண்டிருந்தான்.

‘இவுஹ தான், கசை நெக்லஸில் கல் வச்ச இடம் சரியில்லையாம், அவுஹ கேட்டது மாதிரியில்லையாம், இவுஹ வீட்டுக்கார்ரு வந்து வாங்கிட்டு போயிருக்காரு போல, அவருக்கு வெவரம் தெரியாதாம், என்னான்னு பாரு! நான் வீட்டுக்கு பொயிட்டு, ராதாவை அனுப்பி வைக்கேன்!’ அவர்களின் பக்கமாய் பார்த்து, ‘இவரு சரி பண்ணிக் கொடுத்துருவாரு! ஒன்னும் பிரச்னையில்ல!’

வந்திருந்தவர்கள் இசுலாமியர்கள்.  ஒரு வயதான பெண்ணும், நடுத்தரவயதுப் பெண்ணும், ஒரு சிறுமியும் இருந்தார்கள்.  நூர்சாஹிப்புரத்தில் இருந்து வருவதாகவும், அந்த சிறுமிக்கு நேர் மூத்தவளுக்கு கல்யாணம் என்றும் தெரிந்து கொண்டான்.  ஆளுக்கு ஒரு கிளாஸில் நன்னாரி சர்பத்தைக் குடித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த சிறுமி நன்னாரி கிளாஸில் வெளியே முத்து முத்தாய் பூத்திருக்கும் நீரை தொட்டு தொட்டு வழித்துக் கொண்டிருந்தாள்.  நன்னாரி சர்பத்தும், தங்கக் கலரில் இருந்ததா அல்லது நகைக்கடையில் தங்கம் போல தெரிகிறதா என்று அவனுக்கு யோசனை வந்தது.

வந்ததில் வயதான பெண்மணி, தன் கையில் இருந்த ரோஸ் கலர் பொட்டலத்தைப் பிரித்தாள். பொன் கர்ப்ப சர்ப்பமாய் சுருண்டிருந்தது நெக்லஸ்.  அவர்கள் கையில் இருந்த பொட்டலத்தை அப்படியே வாங்கி, கசை நெக்லஸை கையில் எடுத்து பார்த்தான்.  மினுக்கி மினுக்கி வளைந்தது.  கசையில் பின்னி, பின்னி சின்ன சின்னப்பூக்களாய் கண்ணி வைத்துக் கோர்த்து செய்தது. கஷ்டமான, நுனுக்கமான வேலை, ஆனால் வேலை முடிந்து பார்க்கும் போது மனசுக்கு நிறைவாய் இருந்தது. அவர்கள் சொல்வது மாதிரி கல்லை இடம் மாற்றி வைக்கமுடியாது, கல்லை நகர்த்தி மேலேற்றினால், நகர்த்திய இடத்தில் இட்டு நிரப்ப திரும்பவும் கசை வைத்து மேவ வேண்டும். சன்னம் வைத்து ஊதுவது அதன் அழகைக் கெடுத்து விடும்.  அவர்கள் சொல்வது போல அது கூடுதல் அழகைத் தரும் தான் என்றாலும், அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்.  இந்த வேலையை வாங்கும் போது, இவனில்லை, நமோ  நாராயணா தான் இருந்தான். அவன் சொல்லியதும் படத்தை வரைந்து, அவனிடம் காண்பித்து, அவன் சரியென்ற பிறகே செய்து முடித்தான். உருப்படி முடிந்ததும் வாங்கிக் கொண்டு சென்றவரும், அதைப் பார்த்துவிட்டு திருப்தியாய் சென்றதும், இது பற்றிய ஞாபகமே இல்லை. 

கற்களை இடம் பெயர்த்துவது, வேலை முடிந்ததும் திருப்தியாய் இருக்காது.  ஆனாலும் இவர்களை திருப்தி படுத்த ஏதாவது செய்ய வேண்டும்.  திருமணத்திற்கு வாங்கும் நகையில் திருப்தி இல்லையென்றால் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்.  அவர்களை கடையிலேயே வைத்து பேசி சமாளிப்பது முடியாத காரியம், அவர்களை பட்டறைக்கு அழைத்தால், சின்ன திருத்தம் செய்து காண்பித்து சமாளித்து விடலாம் என்று தோன்றியது.

கையில் வைத்து அவன் பார்த்துக் கொண்டிருப்பதை, யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள், வயதான பெண்மணியும், நடுத்தர வயதுப் பெண்ணும். அந்த சிறுமி இன்னும் நன்னாரி சர்பத்தைக் குடிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவனுக்கும் நாக்கு வறட்சியாய் இருந்தது, பட்டறைக்கு போனதும், பட்டறைப்பையனிடம் சொல்லி, ஒரு சர்பத் வாங்கிக் குடிக்க வேண்டும். வெயிலுக்கு இதமாய் இருக்கும். வருகிற வரும்படியில் டீக்குடிக்கவும், மேத்தீனி திங்கவுமே சரியாய்ப் போகும்.  அதுவும் வேலை இல்லாத நாட்களில் தான் வண்டிக்கடைகளில் செய்வது எல்லாமே வாசனையாய்ப்படும்.

“பாயம்மா வாங்க, என்னோட பட்டறைக்கு போயிடலாம்.  கையோட முடிச்சு கொடுத்துடறேன்!” ஆனா திரும்ப மெருகு போட முடியாது, சும்மா நாய்த் தோல வச்சு வெறும் ஷைனிங்க் மட்டும் தான்.  வித்யாசம்ஒன்னும் தெரியாது, சரீங்களா? என்றான். அந்த வயதான பெண்மணி உடனே சரியென்றாள், நடுத்தர வயது பெண் கடையிலேயே இருப்பதாக சொல்லிவிட்டாள்.  சிறுமியை உடன் அழைத்துக் கொண்டு வயதான பெண்மணி, பிரார்த்தனையாய் ஏதோ முனகிக் கொண்டே அவனுடன் படியேறினாள். சிறுமி தன் கையில் சர்பத் கிளாஸ் விடாமல் வைத்துக் கொண்டிருந்தாள்.  வந்தவர்களை பாயை இழுத்து உட்கார வைத்துவிட்டு, பட்டறைப்பையனிடம் முனைக்குறடையும், பொடி சாமனத்தையும் தரச் சொன்னான். மொட்டை திரவத்தி இன்னும் கசைக்கு இழுத்துக் கொண்டிருந்தான் பொன் சுருள் சுற்றி சுற்றி சிறுமியின் அகண்ட கண்களில் மினுங்கியது.

வயதான பெண்மணியை பாயில் அமர வைத்து விட்டு, ரோஸ் பொட்டலத்தை திரும்பவும் பிரித்துப் பார்த்தான்அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள், அவனை சிறிது சந்தேகத்துடன் கேட்டாள் 

என்னய்யா செய்திட முடியுமா?”

முடியாததுன்னு என்ன இருக்கு பாயம்மா? செஞ்சுபுடலாம், பொண்ணு கல்யாணம்னு சொல்லிட்டீங்க? எல்லாமே பொங்கி நிறையும் கவலைய விடுங்க!

அவளுக்கு அதைக்கேட்டதும் இடது கடையோரம் சிரித்தாள் கொஞ்சம் நம்பிக்கையுடன்.

திரும்பவும் அதை ஆராய்ந்த போது 200 மில்லி தங்கம் தேவைப்படும் என்று தோன்றியது. இப்ப இருக்கிற விலையில்  500 ரூபாய் ஆகிவிடும்அதைக் கேட்பது எப்படி என்று தெரியவில்லைஇதை கடையில் கேட்க முடியாது, கேட்டால் நீ தானே செய்தாய், இது உன் பற்று என்றிடுவாள். கிராக்கியிடம் காசு வாங்கிக் கொள்வதும் வாங்காமல் விடுவதும் அது நம் சாமர்த்தியம்ஆனால், இவளைப் பார்த்தால், காசு கேட்க மனமில்லை அவனுக்கு, அதுவும் பெண் திருமணம் என்றதும், ஏனோ அவனுக்கு பணம் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.

மேஜை டிராயரில் இருந்த துண்டுக் கம்பியை பட்டறைப்பையனிடம் கொடுத்து, ஜவை பிடித்து வரச் சொன்னான்கல்லை  இடம் மாற்றி நிறுத்துவதற்கு ஜவை அவசியம் தேவைப்படும். ஏற்கனவே இருப்பதை பிரித்தால், அது சரியாய் வராது.   பட்டறைப்பையன் ஜவைக்கு போனதும், கல்லை பொடி சாமனத்தில் பிடித்து இழுத்துப் பார்த்தான், உடனே வரவில்லை. லேசாய் அசக்கி இழுத்ததும்வந்துவிட்டது. நெக்லஸில் இருந்த ஜவையை வெட்டி தான் எடுத்தான்அதை மேஜை மிது வைத்தான். சன்னத்திற்கு உதவும்மீதி பொடியை மெழுகு எடுத்து உருட்டி அதை திரும்பவும் டிராயரில் போட்டான்.   முதலில் நினைத்தது போல சுளுவாய் வேலை முடியாது என்று தோன்றியதுசல்ஃபரில் கொதிக்க வைத்தால் மட்டும் போதாது, மெருகும் போடவேண்டும். நல்லவேளை, இதில் பட்டை வெட்டு இல்லை, இருந்தால், மெருகு போட்டாலும் நிறம் வருமே ஒழிய மினுக்கு வராது. அவர்கள் நாளை வருவதாய் ஒப்புக் கொண்டால், கொஞ்சம் நிதானமாய் வேலை பார்க்கலாம்ஆனால் அவள் முகத்தைப் பார்த்து அவனுக்கு சாக்கு சொல்ல மனம் வரவில்லை.

இழுத்த ஜவையை பட்டறைப் பையன் கொண்டு வந்ததும், நூலாஸ்கருது வைத்து இழுத்த ஜவையை வட்டமாக்கினான். மெலிதாய் சன்னம் வைத்து ஊதினான். டிம்மி அச்சில் வைத்து குழியக்கருது கொண்டு லேசாய் கல் வைக்கத் தோதாய் அதை குழிவு செய்தான். கல் நீக்கி பள்ளமான இடத்தில் கசைக்கம்பிகள் செய்து கூடு போல செய்து அதை மூடினான்இப்போது அந்த இடம் அழகாய்த் தெரிந்ததுபுதிதாய் செய்த ஜவையை அவள் கல் மாற்றி வைக்க சொன்ன இடத்தில் வைத்து, அந்தம்மாவிடம் காட்டினான், அவள் திருப்தியாய் தலையாட்டினாள்

அவளுடன் வந்த சிறுமி இப்போது பட்டறைப்பையனிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்.    யாரோ மேலே படியேறி வருவது போல இருந்தது, அந்த நடுத்தர வயதுப் பெண் கடையில் தனியாய் உட்கார முடியாமல் வந்து விட்டாள் போலும்.   வந்தவள் வயதான பெண்மணியிடம் ஒட்டி உட்கார்ந்து கொண்டாள்

மொட்டை திரவத்தி கம்பி வேலையை முடித்து விட்டான், அடுத்து பின்னி, குடிசை போடுவதையும் அவனே கவனித்துக் கொள்வான் என்பதால், கல் இடமாற்றி வைப்பதிலேயே முழுக்கவனம் செலுத்தினான்.    ஜவையை வைத்து ஊதி, மேலே கல்லை நிப்பாட்டினான், எளிதில் பிடித்துக் கொண்டது.   திரும்பவும் கல்லை எடுத்துவிட்டு, சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த பட்டறைப்பையனை அழைத்து  நெக்லஸை சல்ஃபரில் கொதிக்க வைக்கச் சொன்னான்சல்ஃபரில் கொதித்ததும், ஊதும் போது ஏற்பட்ட கருப்பும், நிறமாற்றமும் போய்விடும், பளிச்சென்று பொன்னின் நிறம் காட்டிவிடும்மேலும் மெருகு போடும் போது புது நகையாகிவிடும் அழகாகி விடும்சல்ஃபரில் கொதித்து முடித்ததும், அவர்களிடம் காட்டி அவர்களுக்கு பிடித்துவிட, மெருகு போட அனுப்பினான்பசிப்பது போலிருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது இந்த வேலை முடிக்கஏதாவது சாப்பிட்டால்  நல்லாயிருக்கும் என்று தோன்றியது, ஆனால் கிராக்கி இருக்கும் போது ஏதும் சாப்பிடுவது நாகரீகமாய் இருக்காதுஅவர்களுக்கும் சேர்த்து ஏதாவது வாங்கி வரச்சொல்லலாம்

ஏதாவது சாப்பீடுறீகளா பாயம்மா?”

ஒன்னும் வேணாந்தம்பி! நீங்க சாப்பிடுறதா இருந்தா சாப்பிட்டுக்கிடுங்க? நாங்க ஊருக்கு போயே சாப்பிட்டுக்குறோம்!”

டேய்! போய் எல்லாத்துக்கும் நெய்க்கடலை பருப்பும் டீயும் வாங்கியா!”

அதெல்லாம் எதுக்குத்தம்பி வேணாம்நாங்க எவ்வளவு கொடுக்கணும்?”

சும்மா சாப்பிடுங்க! ஒன்னும் வேணாம் பாயம்மா? எல்லாத்திலயும் காசப்பத்தியே யோசிக்க முடியுமா? மனுஷரும் வேணுந்தானே...? நீங்க  போயி ஊர்ல சொல்லி நமக்கு நாலு கிராக்கி வந்தா சந்தோஷம் தானே! நாஞ்சொல்றது சரிதானே பாயம்மா?

கூடுதல் காசு ஒண்ணும் செலவாகலை என்பது பெரியம்மாவிற்கு சந்தோஷமாய் இருந்திருக்க வேண்டும். 

ஜீனத்து!  கையில நிக்காஹ் பத்திரிக்கை வச்சிருக்க? ஒண்ணு கொடேன், தம்பிக்கு கொடுக்கணும்! என்று அவளிடம் இருந்து பத்திரிக்கையை வாங்கி, “ இந்தாங்கப்பு! குடும்பத்தோட வந்திடுங்க, பெண்டு மக்களெல்லாம் கூட்டிட்டு, பிரியாணி சாப்பிடுவீக தானே?! என்று பத்திரிக்கையை அவனிடம் நீட்டினாள்.

வாங்கிக் கொண்டவன், பட்டறை மேஜை மீது இருந்து சுவாமி படத்திற்கு கீழாய் யதார்த்தமாய் வைத்தான்.  அதைக் கவனித்த பெரியம்மாவிற்கு ரொம்பவும் நெகிழ்ச்சியாய் இருந்தது.

மெருகுக்கு கொடுத்து விட்டிருந்தது இன்னும் வரவில்லை. அதற்கு முன், டீ சொல்லியது வந்துவிட்டது. நெய்க் கடலை பொட்டலங்களும். வழக்கமாய் டீயோடு சிகரெட்டும் வாங்கி வந்து அவர்களுக்கு முன்னால் நீட்டினான். அவனை முறைத்தபடி, வாங்கி வைத்தவன், அந்த பாயம்மா பார்க்கிறாளா என்று பார்த்துக் கொண்டான்.

மாடிப்படிக்கருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பயந்தது பின்னால் வந்து நடுத்தரவயது பெண்மணியின்  பின்னால் ஒட்டிக் கொண்ட்து.

அதைக் கவனித்தவன், என்னம்மா? என்ன ஆச்சு? என்று எழுந்திருக்கும் போதே, உப்பிலி  நுழைந்தான். 

உப்பிலி என்று மிகத்தெரிந்தவர்களால் மட்டுமே அடையாளம் காணப்படக்கூடியபடி இருந்தான். முழுக்க செம்பட்டை படர்ந்த ஒழுங்கில்லாத்தாடியும், சடைபிடித்த  முடியும், பீடி நாற்றமும், மேல்சட்டை இல்லாத காவி நிறத்தில் ஒரு அரை வேஷ்டியும் கட்டியிருந்தான் அல்லது சுற்றியிருந்தான். பார்த்தவுடன் சிறிய பெண் பயந்ததின் அர்த்தமாய் நின்றான். இன்றைக்கு கொஞ்சம் நல்லபடியாய்த் தெரிந்தான், திருமுக்குளத்தில் குளித்துவிட்டு வந்திருப்பான் போல.  மூன்று நாளைக்கு ஒரு தரம் குளித்துவிடுகிறான்.  காமராஜபுரத்தில் திரியும் பைத்தியக்காரனைப் போல பாண்டையாய் இல்லை.

‘பங்காளி! பீடிக்கு காசு கொடு பங்காளி!’ என்றவன் காத்திருக்காமல் பட்டறைக்கு அருகே அவர்கள் பயந்து ஒதுங்க, மேஜை மீது இருந்த டீக்கிளாஸை எடுத்து மடக்கென்று குடித்தான்.  குடித்துவிட்டு சிரித்தான்.  டீக்கிளாஸை வைத்த கையை பட்டென்று தட்டினான். 

“எத்தனை தரம் சொல்லிருக்கேன், கேளு! நீயா எடுக்காதன்னு! இந்தா! “நெய்க்கடலை பொட்டலத்தை அவனுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு, மேஜை டிராயரை திறந்து சில்லறைகளாய் மூன்று ரூபாய் கொடுத்தான்.  வாங்கிக் கொண்டு வேகமாய் அவர்களை தாண்டுவது போல ஓடினான். 

‘யாருய்யா இந்தப்பையன்? தெரிஞ்சவுகளா? சொந்தமா?’ என்று பெரியம்மாள் கேட்டாள்.

“சித்தப்பாரு பையன், ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த பட்டறை வச்சோம், முதல்ல அவனுக்கு மட்டுந்தான் லைசன்ஸ் இருந்தது.  கூட்டு சேர்ந்து நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது. வேலையில அத்தனை சுதாரனம் கெடையாது, ஆனாலும் நம்ம பயலாச்சேன்னு கூடவே வச்சிட்டு இருந்தேன். யாரு கண்ணு பட்டதோ, கடைக்கு குப்பை அலசிக் கொடுக்க வேண்டிய 700 கிராம் தங்கத்தை எங்கேயே தொலைச்சிப்புட்டான். விடுவாஹளா கடையில, இவந்தான் எடுத்துப்புட்டான்னு சொல்லி இவனை எல்லார் முன்னாடியும் வச்சு கேட்டு மானத்தை வாங்கி, போலீஸ் கேஸாகி ஒரு மாதிரி சங்கட்டமாகி போயிடுச்சு! கொஞ்சம் நஞ்சமா இருந்தா கொடுத்திடலாம், 700 கிராமுக்கு நான் எங்க போறது.  வேற வழியில்லாம முதலாளியம்மா கையில கால்ல விழுந்து கேஸு ஏதும் கொடுக்காம பார்த்துக்கிட்டேன், கொஞ்சகொஞ்சமா நானே கொடுத்து முடிச்சிட்டேன் இப்போ!” என்றான்.

பெரிய அம்மாள் கதையைக் கேட்டு, “அடக்கஷ்டகாலமே, உங்க நல்ல மனசுக்கு அல்லா ஒரு குறையும் வைக்க மாட்டாந் தம்பீ!”

“திரவத்தி! மெருகு போடப்போன பயல போய் பார்த்துட்டு வா, போனா போன எடம் வந்தா வந்து எடம், எங்கயாவது பராக்கு பார்த்துட்டு நின்னா, பொட்தியில ரெண்டு போட்டுட்டு இழுத்துட்டு வா!, இந்தா வந்துடுவான்!”

‘பரவாயில்ல தம்பி வரட்டும்!’

மொட்டை திரவத்திக்கு மட்டும் தெரியும் எழுநூறு கிராம் தங்கமும், உப்பிலியின் வீடும், உப்பிலியின் மனைவியும் யாரின் குடையின் கீழ் என்பது.