Saturday, October 31, 2009

பிள்ளைக்கலி....

காத்திருந்த வராண்டாவில்
ஆஸ்பத்திரி வாசம்
என் இருக்கைக்கு அருகே
அமர்ந்திருக்கும் ஒரு
நிறைசூலியாய் நகராமல்

குழந்தைப்பேறு வேண்டி
அரசமரமும் ஆஸ்பத்திரியும்
சுற்றியவர்கள்
அடிவயிற்றைத் தொட்டுக்
கொள்வார்கள்
எதிரில் தொங்கும்
படங்களின் குழந்தைகளை,
சிசுக்களை மானசீகமாய்
சுமந்து, பெற்று…

உடன் வந்த
உறவுகள் மற்றும் ஏனையோர்
தங்கள் பேற்றுக்கான
பிரத்யேகக்கதைகள் பேசி
விரோதம் வளர்ப்பர்
நுழைவாயில் விநாயகரைத்
தொழுது
பூக்களும், திருநீறும் கொடுத்து
அக்கறையாய்
அரிதாரம் பூசுவர் சிலர்

ஏனைய வார்டுகளுக்கு
குழந்தையுடன் வந்தவர்
பெருமூச்சுடன் பரிதாபமாய்
பார்த்து தத்தமது
குழந்தைகளை
கொஞ்ச, கண்டிக்க
என்று வேடிக்கைக் காட்டுவர்

புத்தகத்திலும், மடிக்கனினியிலும்
புதைந்து போய்
பெயர் அழைக்க,
புழுதியுடன் வெளிவருவர்
அவரவர் தாழியிலிருந்து.
ஆஃபிஸ் பெர்மிஷன்
விடுப்பாய் போக
சலித்துக்கொண்டு
மேலதிகாரியை திட்டுவதாய்
பொய் பேசித் திரிவார்கள்
கணவர்கள்

மாமியாரும், கணவரும்
தனியாகப் பேச
பேதலித்து மறுமணம்
பற்றியதாய் இருக்குமோ
என்று உள்ளே அழுவார்கள்
சார்நிலை மனைவிகள்

கலியாணம் ஆகி
எத்தனை வருஷம் ஆச்சும்மா
என்று அன்பாய்
நெருப்பிடுவாள் சிதையில்
மருமகளை டாக்டர் அறையில்
விட்டுத் திரும்பிய
யாரோ மாமியார்க்காரி

செயற்கை முறையில்
கருத்தரிக்க, முட்டைகள் கடன் வாங்க,
என் சிசுவை பிறர் சுமக்க
எதுவும் ஏதுவில்லை

கருப்பை வளர்ந்து
பெரிதானது
கை ஏந்தும், கண் விரியும்,
தெரு நெடுகித் திரியும், எச்சில்
கழுவும், ஏவல் பனியும்,
குழந்தைகள் தூக்கி சுமக்க…..

Friday, October 30, 2009

பசி

அலுமினியத் தட்டில்
சத்தமெழுப்பி அழும்
சங்கீதத்தில்
ஒற்றை சுவரங்கள்
உயிர் உருக்கி எழும்பும்

இட்ட விதை
தளிராய் பிளக்க
நடுநிசித்
தட்டும் கைகளில்
மகரந்தம் சேர்க்கும்
உலர்ந்த பூ பூப்பெய்தும்

செத்த உடலைத் தின்னும்
செந்நரிக் கூட்டங்களின்
பற்களில் விஞ்சும்
சதைத்துனுக்கை பிட்டு
சாதத்தில் குழைக்கும் அம்மை

அடங்காப்பசிக்கு
அம்மையைத் தின்று
அழும் குழந்தைகள்
அப்பனைக் கழித்து
அம்மையை எதுக்களிக்கும்

Thursday, October 29, 2009

பின்னூட்டக் கவிதை

பா.ரா.வின் ஒரு கவிதைக்கு பின்னூட்டமாய் எழுதியது. பா.ரா. அறிவுறுத்தியதற்கு இணங்க அதை இங்கே பதிவு செய்கிறேன்.  இது ஒரு நெகிழ்வு தானே ஒழிய கவிதை என அறுதியிட முடியாது.  அன்புக்கு நன்றி பா.ரா.

மகளின் பிறந்த நாளுக்காய்
பரிசாய்
இரண்டு மரக்கன்றுகளை
கொடுக்கிறேன்

பாலிதீன் பைகளில்
கன்றாய் அடங்கியிருக்கும்
ஒரு வீர்ய விருட்சம்
குறியீடாய் நிமிர்கிறது

எதற்கு
இதக்குடுத்த!
இத நா எங்க
நட்டு வளப்பேன்

கேள்வியில்
ஒடுங்குகிறது
பரிதாபமாய்
அதன் வேர்கள்

வாசலைக்காட்டுகிறேன்
சாலையின் ஓரத்தில் நடு
நீர் வார், காபந்து செய்

வருங்காலத்திற்காய்
நிழற்குடை
கனிதரா மரங்களும்
உயிர் தரும்
உன் அப்பாவைப் போல!

கைபிடித்து அழும்
மகளை புரியுதா எனக்கு?

Wednesday, October 28, 2009

ரகசியப்புத்தகங்கள்...

உன் ஞாபகங்களை

புத்தகமாய் தொகுக்கிறேன்
நல்ல கனமான காலிக்கோ
அட்டையுடன்
கவர்ச்சி இல்லாத ஒரு
பொருளாய்ச் செய்கிறேன்

யார் கவனத்தையும்
ஈர்த்து விடாதபடிக்கு
அதன் வசீகரத்தைக் குறைத்து
அதை ஒளித்து வைக்கிறேன்
அவ்வப்போது
ரகசியமாய் புரட்டுகிறேன்

இது போன்ற கவர்ச்சியற்ற
ஒரு கனமான புத்தகத்தை
அவளும் புரட்டிக் கொண்டிருக்கிறாள்
என்னை விநோதமாய் பார்த்து
புத்தகத்தை மறைக்கிறாள்!

எனக்கு பயம் பிடித்துக்கொண்டது
விரைந்து சென்று அலமாரியைக் குடைகிறேன்
என் புத்தகம் பத்திரமாய் இருக்கிறது
பிரதி எடுத்திருக்க வாய்ப்புண்டு
என்பதை நிராகரிக்கிறேன்

எல்லோரும் புத்தகம் போட
ஏதுவிருக்கும் உலகு.

Monday, October 26, 2009

குரல் குடித்தனம்

என்னங்க எப்படி இருக்கீங்க!

குரலில் அன்பும் பிரியமும்
அம்மாவைக் கொண்டிருந்தாள்!

நல்லாயிருக்கேன்!
நீயும் குழந்தைகளும்?
ராசாவுக்கு வாக்கப்பட்டேன்
பெத்ததும் அவருக்குத் தானே!
சேமம் தான்! உற்சாகக்குரலில்
சப்பர ஊர்வலமாய் பெருகினாள்

எப்போ வர்றீக!
உரத்த குரலில் பேசினாள்,
சித்திரமாய் வந்து போகிறாள்
இருபக்கமும் மகவிரண்டை
கைபற்றி!
என் பதில் ஒரு ஒற்றைத் தந்தி
நாதமென அதிர்வுகளை அனுப்பியது போலும்!
சிறு விசும்பல் சத்தம்,
குழந்தைகள்
தூங்கியிருக்க வேண்டும்,
பிரிவின் கண்ணீரில் குழந்தைகளை
நனைத்ததில்லை ஒருபோதும்

புவனாவுக்கு மாப்ள
வந்திருக்கு!
கோன வாத்தியார் சொல்லியனுப்பினாரு!
என்ஜீனியர் பையனாம்
நகை நட்டு வேனாம்னுட்டாக!
நம்ம போடறத போட்டா போதும்னு
சொல்றாக!
ஒத்தபிள்ளயாம்!
மாமனாரு மாத்திரம் தான்...
ஜாதகமும் பொருந்தியிருக்காம்
லெட்டர் மேல லெட்டர் போட்டு
நீங்க எப்ப வருவீகன்னு கேக்கிறாக!
என்ன சொல்லனும்!

நானே போய் ஒரு நட
பார்த்துட்டு வரவா?
போட்டாவ வாங்கிட்டு
வந்தா உங்களுக்கு அனுப்பலாம்
புவனாவுக்கும் பிடிக்குதான்னு கேட்டுக்கலாம்
உங்க தம்பி வீட்டுல
யாருக்கும் நேரமில்லைபோல
எப்ப கேட்டாலும் வேலையா இருக்கிறாப்ல!
ஊருக்குத் திரும்பி வருகையில்
உறவுகள் மொய்க்க
கடைவிரிக்கும் பொருட்களில் நானும் இருப்பேன்
அவர்கள் முன் குத்தவைத்து கொள்வாரில்லாமல்

நீங்க வர்றதானா
கொஞ்சம் விசாரிக்கலாம் குடும்பம்
எப்படின்னு, என் கூறுக்கு
நான் என்னத்த தெரிஞ்சுக்கப் போறேன்!
காசெல்லாம் இருக்கு!
முடிஞ்சா சீக்கிரமா வாங்க!
ஆறேழு மாசம்னா ஜாஸ்திதான்
அவுகள கேட்டு பாக்குதேன்!

சின்னவனா? நல்லா படிக்கான்!
லெட்டர் எங்க போடுதான்
உள்ள பள்ளியோட வேலையவே
பாக்க மாட்டேங்கான்
லெட்டர் எங்க போடப்போறான்
புவனாவ எழுதச் சொல்லுதேன்
வச்சுடுதேன், அம்புட்டுதான்

உடம்ப பாத்துக்கிடுங்க!
வெயில்ல ரொம்ப சுத்தாதீக!
தூரதேசம் மனைவியைத்
அம்மையாக்கி விடுகிறது, குரலில்
முலை முளைத்து பால் கசிந்தது

சன்முகம் அண்ணாச்சிய
விசாரிச்சதா சொல்லுங்க!
அவருக்கு பேத்திதானுங்க
இப்ப பொறந்தது, போய் பார்த்தாரா?
ஒரு வருஷமாச்சா?
அவுக வீட்ல எம்புட்டு
விசனப்பட்டு இருப்பாக!
சரி நீங்க சீக்கரமா வந்து சேருங்க!
புவனாவுக்கு கலியாணம் முடிஞ்சிட்டா
கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்

குரல்வழி பெருவாழ்வு
எப்போது தொலையும் இந்த எரிபடுகை!

Sunday, October 25, 2009

கால(ன்) மயக்கம்

உயிர்ச்சன்னலின்
அருகில் ஒட்டிக்கொண்டிருக்கும்
மரணப்பல்லி
தனது இருப்பை
அவ்வப்போது சத்தமிட்டு
கட்டியம் சொல்லும்

இடைவெளி சந்தில்
வழியும்
வெளிச்ச ரேகைகள்
உடலெங்கும்  வலைபின்னி
உயிர்நிலையை
சிலந்தியில் நிறுத்தும்

பல்லி நெருங்க
தூரம்
நடுங்கி கொண்டே
சுருங்கும்
வாய் பிளந்த
பல்லி,
சிலந்தியை
விழுங்க எத்தனிக்கும்

அறுந்து
துடிப்படங்கும் வால்
பல்லி மீதம்
இருக்கும் சிலந்தியின் கடைவாயில்.

Saturday, October 24, 2009

ஒரு க(வி)தை!

ரகசியத் தோழி
குடுத்த துண்டுச்சீட்டைக் காட்டி
என்னையும்
உடன் அழைக்கிறாய்!

எதற்கும்
இருக்கட்டுமென்று
ஒன்றுக்கு கூடுதலாகவே
ஆணுறைகளை வாங்கி கொண்டாய்

தொலை தூரப் பயணத்
தேவைகளை
நீயே பார்த்து கொண்டாய்
உன் கனவுகளின்
ஆடைகளை களைந்து
எனக்கு முயங்க கொடுத்தாய்

தோழி வீட்டை
அடைந்து
தடதடக்கும்
கதவின் தாழ் நீக்கி
அவளைத் தொடுகிறாய்!

இரண்டாய் பிளக்கிறாள்
இரு வேறு நிறங்களில்
நீலம் எனக்கென்றாய்
வெளிர் மஞ்சள்
நீ எடுத்துக்கொண்டாய்!

நைச்சிய நிறங்கள்
பூசி சுடலைமாடன் ஆனேன்!

Wednesday, October 21, 2009

குறும்பா..

பிரிவுகளைச் சொல்ல
ஒரு மயிற்பீலி போதும்

உறவுகளைச் சொல்ல
குத்தீட்டிகள்
தேவைப்படுகிறது

என்னில் வழியும்
குருதியில் ஜனிக்கிறது
ஒரு ஒற்றைக்  கவிதை

பாடுபொருளாய் நீ!

Friday, October 16, 2009

அம்மா என்னும் வேம்பு

பாட்டி வீட்டில்
இருந்து படிக்க
மல்லாங்கிணறுக்கு
அனுப்பப்பட்டேன்

மதுரையில் இருந்து
பிரிந்த தோழிகளையும்,
தோழர்களையும்
கண்ணீருக்குள் நிறுத்தி

எல்லாத்துக்கும்
காரணம் என்று
பெரியப்பாவை
கெட்ட வார்த்தைகளில்
திட்டினேன்

அக்காவின்
கூழாங்கற்களையும்
சோழிகளையும்
வாய்க்காலில் எறிந்தேன்
அவள்
ஜியாமெட்ரி நோட்டில்
கண்டபடி
கிறுக்கி வைத்தேன்

போலீஸ்கார அப்பாவின்
சாக்ஸ்களை கிழித்து
பிராஸோவில்
மண்ணைக்கொட்டினேன்
ஷூ பாலீஸை
தண்ணித் தொட்டிக்குள் போட்டேன்

அம்மாவிடம்
போய் அழுதேன்
அம்மா
ஒரு வேப்பங்கன்றைக்
கொடுத்தாள்
பாட்டி வீட்டில் எங்கு
நட்டு வளர்க்க வேண்டும்
என்று சொன்னாள்

வேப்பமரம்
கிளை பரப்பி வளர்ந்தது
என்னுள்
கசப்புகளை மீறி…

Thursday, October 15, 2009

மீட்சி...

உறுப்புகள்
சுருங்கத் தொடங்குகிறது

உரோமங்கள்
உள்புகுகின்றன

தோல் வெளுத்து
மிருதுவாகிறது

எலும்புகள்
குறுகி இளக்கமாகிறது

உடலில் இருந்து
பிசுபிசுப்பாய் திரவம் சுரக்கிறது

தொப்பூளில் இருந்து
கொடி வளர்கிறது

உடலைச்சுற்றி
சவ்வு பரவி மூடுகிறது

இருள் சுவர்களில்
நீர் நிறைந்து
மிதக்கிறது நான்

உந்தித் தள்ளி
வெளி வர உரம் வளர்க்கிறேன்.

Monday, October 12, 2009

நுன்மாண் நுழைபுலம்... (இரண்டாம் பதிவு(ப்பு))

கார்லின்ஸ் அப்பல்லோ, பெயர் போலவே ஒரு வித்யாசமான நண்பன். அவனுடைய பெயர் பற்றிய நிறைய கேள்விகள் இருந்தாலும், பெயர்க்காரணம் பற்றி கூட ஒரு விரிவான கலந்துரையாடல் எங்களிடையே இருந்ததில்லை. அவனுடைய பெயர் எனக்கு நீல் ஆர்ம்ஸ்டராங், நெப்போலியன் போனபார்ட், மார்ட்டின் லூதர் கிங் போன்ற சரித்திர புருஷர்களையும், சாதனையாளர்களையும் ஞாபகப்படுத்தும். அவனிடம் இதைப்பற்றி சொல்லும்போது மிகச் சிறிதாய் சிரிப்பான். சீராய் கீழிறங்கும் மூக்கு, சற்றே துருத்திய பல் வரிசை, வெளியே வந்து எப்போதும் விழலாம் என்பது போன்ற பெரிய பளபளக்கும் கண்கள், ஒடிசலான உடம்பு, இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி பின்னுக்குத் தள்ளி நெஞ்சை முன் தள்ளி ஒரே தாள கதியில் ஹவாய் செருப்பில் நடக்கும் ஒரு எங்கும் சந்திக்கக் கூடிய மிகச் சாதாரணமான தோற்றத்தில் அசாதாரணமான நண்பன். மிக ஏழ்மையான வீடு அவனுடையது, விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்ல தேர்ந்த படிப்பாளி. எங்கள் பள்ளியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில், தூரம் வந்த பெண்ணைப்போல் ஒதுங்கிய ஒரு சிறிய கிராமத்தில், அவன் வீட்டைப் போல ஒரு இருபது முப்பது வீடுகள் மட்டுமே இருக்கும் ஊர் தான் ஆலம்பட்டி.


தெருவில் இருந்து பார்த்தாலே வீடு மொத்தமும் தெரிவது போல் ஒரு வீடு. ஒரு பெரிய வேப்பமரத்தின் நிழலில், ஒரு வேப்பங்கன்றாய் குளிர்ந்து நின்றிருக்கும் அவன் வீடு. எதிரில் ஒரு புளிய மரம், சம்பந்தகாரர்களின் செய்முறையாய் தன் பங்கிற்கு நீண்டு தண்ணீர் பந்தலாய் நிழல் விரித்திருந்தது. அவனுடைய பெயர் அவனின் வீடு பற்றி வேறு விதமான ஒரு நினைப்பைக் கொடுத்திருந்தது, அந்த நினைப்பை அப்படியே புரட்டிபோட்டது போல இருந்தது அவன் வீடும், அவனுடைய அப்பாவும் அம்மாவும். கார்லின்ஸ் என்று அவனை அழைக்க அந்த இடத்திற்கே அந்த பெயர் அந்நியமாகப்பட்டது போல் இருந்தது. அவனுடைய அப்பா, கார்லின்ஸ் இரண்டு பேரும் அந்த சிறு வீட்டினுள் இருந்து வந்தார்கள். கார்லின்ஸ் எங்களைக் கண்டதும் பெரிதாக சிரித்தான், அவன் சிரிக்கும் போது அவனுடைய உதட்டை வைத்து பற்களை மூட முயல்வது அழகாக இருக்கும். அவன் அப்பா அவனின் சில பென்சில் திருத்தங்களுடன் இருந்தார். அவனின் உடன் பிறந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியாது எனக்கு. அவசியமாகப்பட்டதும் இல்லை. அவன் வீடு இருந்த அந்தத் தெருவில் (வ.உ.சி தெரு என்று ஞாபகம்) இடது பக்கத்தில் முதல் வீடு அவனுடையது… வழியெங்கும் விரவி இருக்கும் நெருஞ்சி முட்செடிகளும், தொட்டாச்சினுங்கிகளும், பெயர் தெரியாத வெள்ளை, மஞ்சள் பூக்கள் தரையில் படர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், யாருக்காகப்பூக்கிறோம் என்ற எந்தவித கேள்விகளும் இல்லாமல் இயல்பாய் அவனை அடையாளம் காட்டுவது போல் இருந்தது. அவனை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்றது, அது தான் முதல் முறை. அவன் வீட்டிற்குள் போகாமல் வெளியே நின்று ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, அவன் அம்மா உள்ளே அழைத்தபோதும், வெளியிலேயே நின்று எதிரில் புளியமரம் விரித்திருந்த குளிர் நிழலில் கதைகள் பேசி சுவாரசியக் குறைபாடுகள் ஏதுமின்றி சினிமா, கவிதை என்று தின்று செரிக்க முடியாமல் திரும்பினோம். ஒரு தேர்ந்த, முதிர்ந்த நட்பு எங்களுக்குள் ஒரு மெல்லிய சூல் மேகமாய் நின்று பொழிந்துவிட்டுச் சென்றது. பேசியவற்றில் விஷயங்கள் குறைவாக இருந்தாலும், உணர்வுகள் பகிர்ந்து கொண்டது, கைபிடித்துக் கொண்டது அவனுடைய வெம்மையைக் காட்டியது. நான் யாரிடமாவது அல்லது யார் மீதாவது ஒரு அதிகாலை சூரியன் போல் இதமாய் இருந்திருக்கிறேனா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்லத் தோன்றும்.

ஆறாம் வகுப்பில் இருந்து அவனும் நானும் ஒன்றாக படித்திருந்தாலும் எங்களிடையே ஒரு நெருக்கம் வந்தது.. பத்தாவது படிக்கும் போதுதான். நான் மதுரை டவுனில் இருந்து ஒரு ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகமலையில் அமைந்துள்ள ஜெயராஜ் நாடர் மேல் நிலை பள்ளியில் படித்துக் கழித்தேன் என்னுடைய பள்ளி வாழ்க்கை முழுதும்... எப்போதும் ஒரு சப்ஜெக்ட் இரண்டு சப்ஜெக்ட் பெயில் ஆகும் எனக்கு, நல்ல ரேங்க் வாங்கும் கார்லின்ஸ் மிக தூரமாய் போனதில் ஆச்சரியம் இல்லை.. எங்களுக்கு ஒரு மிக பெரிய பாலமாய் இருந்தது... எஸ் கே பிரபு தான் என்று நினைக்கிறேன்... ஏதேச்சையாக ஒரு வைரமுத்துவின் பாடலில் ஏற்பட்ட சந்தேகம்.. கார்லின்ஸ்ஐ என் பக்கம் திருப்பியது...இளமை வயலில் அமுத மழை விழ...யார் எழுதியது என்ற கேள்வி எனக்கு திசை திருப்பப்பட்டது... நான் அந்தப்பாடலின் முழு ஜாதகத்தையும் சொல்ல, கார்லின்ஸ் என்னுடன் நெருக்கமானான் அல்லது நான் அவனை நெருக்கமாய் உணர ஆரம்பித்தேன்.. எனக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட் பேச, என்னை பிரதானப்படுத்த கிடைத்த அந்த வாய்ப்பை நான் நழுவ விடவில்லை.... கொஞ்சம் கொஞ்சமாக...வைரமுத்து, பாலகுமாரன், மு.மேத்தா, அப்துல் ரஹ்மான், வாலி, கண்ணதாசன் என்று சினிமா பாடல்களில் கவிதை என்ற கடை விரித்து புது உலகம் அறிமுகம் செய்தேன் அவனுக்கு... என்னுடைய அம்மாவிடம் இருந்து வந்த சினிமா அறிவும், சிலோன் ரேடியோவும் எனக்கு புது அங்கீகாரங்களை தேடி கொடுக்கும் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. மிக நெருக்கமாய் உணர ஆரம்பித்த ஒரு வருட காலத்தில் அவனுடைய அந்த எளிமையான, இயல்பான ஒரு சிநேகம்.. எனக்கு மழை நேரம் கிடைத்த தாழ்வாரமாய் அமைந்தது.

கார்லின்ஸ் ஒரு மஹாகலைஞன், அவன் கைப்படும் பொருட்கள் எல்லாம் கலையாய் மாறும், அவன் புத்தகங்களில், நோட்டில், ப்ராக்டிகல் வரைபடங்களில் அவனுடைய முத்திரை, அவனுடைய பெயர் எழுதி இருக்கும் விதமே அவனை ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாய் காட்டும்... மிக சிறந்த பிரபலம் இல்லாத ஓவியன்...என் பள்ளியில் நடக்கும் ஓவியப்போட்டிகளில், கையெழுத்துப்போட்டிகளில் பரிசு பெற முழுத்தகுதி கொண்டிருந்தும் அதைப்பற்றி அவன் எப்போதும் கண்டுகொண்டதில்லை. நல்ல ஒரு கவிஞன்...அவனின் சந்தகவிதைகள் எல்லா அடிப்படை இலக்கன விதிகளுக்கும் உட்பட்டு ஒரு சீசாவுக்குள் உறங்கும் மாயப்பிசாசாய் உருமாறும் ரகசியம் இன்று வரை எனக்கு வாய்க்கவே இல்லை. நான் அவனை ஏன் பெரிதாக உற்சாகப்படுத்தவில்லை என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் பாரதியின் மேலான ஈர்ப்பு ஒரே வகையானது. அவருடைய பக்தி, காதல், அன்பு என்று மாறி மாறி பயணிக்கும் பாடல்கள் எங்களுக்கு மிகப்பிடித்தமானவை. அவருக்குள்ளே இருக்கும் ஒரு முரன் எங்களை பாரதியின் பால் மேலும் கொண்டு சென்றது. இருவருமே பாரதியின் பாதிப்பில் கவிதை எழுத ஆரம்பித்தோம். எத்தனையோ முயன்றும் அவனின் கற்பனைத்திறன் எனக்கு வாய்த்தே இல்லை. அதுவும் அவனுடைய கையெழுத்து அதை இன்னும் அழகாக்கும். கண்ணம்மா என் காதலி போல அவன் எழுதிய கண்மணி என் காதலி என்ற காதல் வழியும் பாடல்கள் படிக்கிற எல்லோரையும் காதலுறச்செய்யும். அவனுக்கு அந்த வயதில், பதினாறு வயதில் காதல் இருந்திருக்க வேண்டும், அதை அவனிடம் கேட்டு அவனை கேலி செய்யக்கூட தோன்றாது யாருக்கும். ஒரு புனல் நீராய் சுனை நீராய் சுத்தமாய், தித்திப்பாய் இருந்திருக்கிறான். யாரையும் நோகாமல் தன் கருத்துக்களை வைக்கும் ஒரு உன்னத ரசிகன், விமர்சகன், நிறைய பேர் ராஜமார்த்தாண்டன் இறந்தபோது அவருடைய விமர்சிக்கும் பண்பை மிக சிலாக்கியமாய் சொல்லியிருந்தார்கள், அதைப்படிக்கும் போது எனக்கு கார்லின்ஸ் என்ற நண்பனின் உன்னத குணங்களில் ஒரு வியப்பு தான் மிஞ்சியது. மிக சிறந்த மனிதன்... ரொம்பவும் நல்லவன்... ஒரு கிறித்துவன் நல்லவனாய் இருப்பது விசேஷம் இல்லை... ஏசுவாக இருப்பது மிக அரிது... அவன் ஏசுவாய் தெரிந்தான் எனக்கு… அல்லது அவன் ஏசுவின் தண்மையைக் கொண்டிருந்தான். எத்தனையோ விதமான மனக்குறளிகளை தன்னுடைய நல்லதனத்தினால் சொஸ்தபடுத்தி இருக்கிறான். என்னை விட எல்லா விதத்திலும் சிறந்த அவனை பார்த்து எனக்கு கிஞ்சித்தும் பொறாமை ஏற்பட்டதில்லை... அவனுடைய நல்லதனம் என் பொறாமை, பொச்சரிப்பு எல்லாவற்றையும் பொசுக்கி விட்டது போல.....

வகுப்பின் இடைவேளை சமயங்களில் எங்களுக்குள் ஒரு விளையாட்டு நடக்கும், பார்வையாளர்களாக அண்ணாதுரை, குரு இருப்பது வழக்கம், வகுப்பில் இருக்கும் கரும்பலகையில் நான் அல்லது அவன் எதாவது ஒரு சினிமா பாடலின் நடுவில் இருந்து ஒரு வரியை எழுதுவோம் அதை மற்றவர் கண்டு பிடிக்க வேண்டும்... என் கையெழுத்து திருந்தியதற்கு இந்த ஒரு விளையாட்டு ஒரு காரணம். ஒருமுறை எழுதியதில் அழிக்காமல் விட்டுச்சென்ற ஒரு வைரமுத்துவின் ஒரு பாடல் வரி….சேலைப்பூக்களில் தேனைத் திருடுது பொன்வண்டு… எங்களுக்கு ஆங்கிலம் எடுக்கும் ரெங்கசாமி என்ற வாத்தியார் பார்த்து எங்களை கடிந்தது அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. நான் நிறைய படிக்க, எழுத உதவிய ஒரு கிரியாஉக்கியாக இருந்திருக்கிறான். என்னுடைய இன்றைக்கும் இருக்கும் எழுத்து ஆர்வம், வாசிப்பு மேம்பட்டதிற்கு ஒரு மிகப்பெரிய காரணகர்த்தா அவன்…. அநேதமாக எல்லா பிரபல பாடல்களும் எனக்கு பரிச்சயமாய் இருந்தாலும் அவனின் தேர்வுகள் நிறைய வித்யாசமாய் இருக்கும்... ஆட்டோ ராஜா என்ற படத்தில் இருந்து வரும் ஒரு பாடல்... மலரே என்னென்ன கோலம்... கடலில் அலைகள் பொங்கும்... ஒரு ராகம் பாடலோடு.... சித்திரை செவ்வானம்... ராஜாமகள், மஞ்சள் நிலாவுக்கு, ஜெய்சந்தரனின் தீவிர ரசிகனனான கார்லின்ஸ் என்னை அவன் பால் ஈர்த்ததற்கு ஒரு மிக முக்கிய காரணம் அவனுடைய மேலான ரசனை என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் (பரவை என்று ஞாபகம்) ஒரு இடிபட்ட அல்லது இடிக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் கரும்பலகை இருக்கும் சுவர் மாத்திரம் தனித்து நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து அழிக்காமல் விட்ட கையெழுத்தில் பாரதியின் கவிதை எனக்கு மீண்டும் கார்லின்ஸை ஞாபகப்படுத்தியது. இது போன்ற பள்ளியில் என்னைப்போல் கார்லின்ஸ் போல் சினிமா பாடல்களை கவிதை அந்தஸ்திற்கு உயர்த்திய குழந்தைகள் இருந்திருக்கலாம். அந்த குழந்தைகள் இப்போது வேறு ஏற்பாடாக வேறு ஒரு பள்ளிக்கோ அல்லது இந்த பள்ளியே வேறு ஒரு இடத்திற்கு பெயர்ந்திருக்கலாம். அங்கும் கார்லின்ஸ் போன்ற நண்பர்கள், என் போன்றவர்களுக்கு அமைந்திருக்கலாம், அவர்களும் கதை பேசி, கதை சொல்லி, உணர்வு பகிர்ந்து, உணர்வெழுதி வாழ்ந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம்.

அவன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி எஞ்சினியரிங் படிக்கச் சென்றதாக வந்த கடைசித் தகவல் போதுமானதாக இல்லை அவனை அடையாளம் காண… நல்ல கவிமனமும் கொண்ட அவன் இப்போது எப்படி இருப்பான், அவனுள் இருக்கும் அந்த மண்பாண்டக் கலைஞன் இன்னும் உயிரோடு இருப்பானா? அவனின் மரபடையாளங்கள் இன்னும் யாரிடமாவது மிச்சம் இருக்குமா…?. வாழ்க்கை தனது ஓட்டத்தில் இவனை இடறிச்சென்றிருக்குமா அல்லது புதிய சப்பாத்துகளை கொடுத்திருக்குமா? தொடர்பற்ற வெளியில் சமூக வலைகள் பின்னிக்கிடக்கிறது எங்கும், உறவு தேடி அலைகிறோம் காற்றில். ஒரு கட்டியக்காரணாய் அலைகிறேன் அவனைப்பற்றிய நினைவுகளுடன், சிலிக்கன் பெருவெளியில் தொலந்து போனவர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லாதிருக்கட்டும்… இந்தமுறை மதுரை செல்லும்போது அவனைப்போய் பார்க்க வேண்டும் என்று பிரபுவிடம் சொல்லி வைத்திருந்தேன். எனக்காக அவனும் கடையை கடைப்பையனை பார்க்க சொல்லிவிட்டு என்னுடன் கிளம்பினான்.

ஒரு ஞாயிறு முன்பகலில் கார்லின்ஸை சந்திக்கும், அவன் இருந்த ஊரைப் பார்க்கும் அந்த விசேஷ தருனத்திற்காக ஆலம்பட்டி நோக்கி விரைந்தோம்….. நம்பிக்கையுடன்.

(என் பதிவுலகை இப்போது வாசிப்பவர்கள் நான் இதை ஆரம்பித்த போது எழுதியதை படித்திருக்க மாட்டார்கள் என்பதால், இதை மறுமுறை பதிகிறேன்.. ஏற்கனவே படித்தவர்கள் மன்னிக்கவும்)

Saturday, October 10, 2009

மரமாகு பெயர்

ஒரு தவிட்டுக்குருவி
சுள்ளிகளை குச்சிகளை
வாயில் கவ்வியபடி
கூடு கட்ட இடம்
தேடி கொண்டிருந்தது

தார்சாலின்
இடுக்கில் ஒரு இடம்
காண்பிக்கிறேன்
பரணுக்கு மேலே
ஒரு இடத்தையும்

அந்த இடங்கள்
அதற்கு
பிடித்தமானதாய் இல்லை
போலும்

எங்கு வேண்டுமோ
கட்டிக்கொள் என்றேன்

என் தோளில் அமர்ந்து
தலையில் குச்சிகளை சொருகி
கூடு கட்ட எத்தனித்தது
நான் மரமாகி போனேன்m

Thursday, October 08, 2009

இரண்டு கவிதைகள்

கவிதை (1)

( நவீன விருட்சம் வலை இதழில் பிரசுரமாகியுள்ளது, கவிதை (1), நவீன விருட்சத்திற்கு நன்றிகள் பல...)
அலுவலகம்
செல்லும் வழியில்
அடிபட்டு
இறந்திருந்தது ஒரு செவலை நாய்

விரையும் வாகனங்களின்
குழப்பத்தில் சிக்கி
இறக்க நேரிட்டிருக்கலாம்

நாலைந்து நாட்களில்
தேய்ந்து கரைந்தது
இறந்த நாயின் உடல்

காக்கைகள் கொத்தி தின்ன
ஏதுவில்லை
வாகனங்கள்
நெடுகித் தொலையும்
பெருவழிச்சாலையில்

எப்போதும்
பிறரின் மரணங்கள்
ஒட்டியிருக்கிறது
நமது பயணத்தடங்களில்.

கவிதை (2)

உனக்கு பிடிப்பது
எனக்கு பிடிப்பதில்லை
எனக்கு பிடிப்பது
உனக்கும் அப்படியே
நமக்கு பிடித்திருந்தால்
மற்றவர்களுக்கு
பிடிப்பதில்லை எப்போதும்
எல்லோருக்கும்
பிடித்தது என்று
எதுவும் இல்லை

ஆனாலும்
நகர்கிறது
பிடிப்புடன் வாழ்க்கை

Tuesday, October 06, 2009

காமராஜுக்கு சில கடிதங்கள் (பின்னூட்டங்கள்)

மண்மாதிரிகள் என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்


அன்பு காமராஜ்,

மனிதர்களுக்கு ஐம்பூதங்களையும் அடக்கி ஆள ஆசை. வான், நீர், நெருப்பு, காற்று, மண் என்று தனது ராஜ்ஜியங்களை விரிவு படுத்த பிரயாசைப்படும் ஒரு விபரீத கோட்பாடு எல்லாரிடத்திலும், நான் உட்பட இருக்கிறது. ஆள ஆசைப்படும் எதைப்பற்றியும் அறிவு இல்லை நமக்கு.

எத்தனை அறைகூவல்கள் கிரீன் எர்த், மதர் எர்த்,க்ளோபல் வார்மிங், ஓசோன், மாசில்லா காற்று, மாசற்ற நீர், வருங்காலத்திற்கு மிச்சம் இருக்கட்டும் நீ அனுபவித்தது, அனுபவிப்பது என்று சமண்பாடில்லாத இரைச்சல்கள்.

மலைகளின் முலைகளில் வடிகிறது விஷப்பேரருவி, வருங்காலம் நுழைய மறுக்கும் பூமியின் யோனி பெருங்கதவுகள், மரங்களின் நுரையீரல்கள் திரட்டும் கரியமிலப் பைகள், விந்தின்றி தொங்குகிறது மேகத்தின் விரைப்பைகள், வன்புணர்ச்சியில் லயிக்கிறது ஒரு எழும்பாத, நித்ய மரண இசை எல்லோர் எழவிலும். உன், என் உடல் கருகுகிறது நெருப்பில்லாமல், புகைதானே என்ற அலட்சியம் எல்லோரிடத்திலும்.

மண் மாத்திரம் இல்லை காமராஜ், எல்லா பூதங்களையும் சீசாவில் அடைக்கும் செப்படி வித்தைக்காரர்களாய் உலவ ஆசைப்படுகிறோம்.
உனக்கு ரேடியோ ஒக்குடத் தெரியுமா? தெரியும், ரேடியோ புதுசா செய்யத்தெரியுமா? தெரியாது, இதன் நீட்சிதான் நாம் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நிற்பது எல்லாம்.

அறியாமையின் குழந்தைகள் தான் நாம் இன்னும், மாற்றங்கள் பற்றி பேசுவோரின் மார்தட்டல்கள் தொப்பு, தொப்பென்று வெறும் காற்றுக் குடுவையில் அறைகிறது, போர் பிரகடனங்கள் என வேஷம் கட்டிக்கொண்டு.

 அழகு வேலைப்பாடுள்ள கல்லறைகளுக்குள்ளே தானே நீங்களும், நானும். கல்லறைக்குள் இருந்து கொண்டே கல்லறையை பார்க்கிறோம் நாம். நரகலில் வாழும் நமக்கு பீ வாசம் தனியாக தெரிகிறதா என்ன? அகண்ட காவிரி அகத்திய கமண்டலத்தில் நிறுத்தியதைப்போல ஒரு மூட்டை மண்ணில் நமது தேசம், தூக்கிக் கொண்டு அலைகிறார் பிரகதீசுவரன், தோள் கொடுக்க ஆட்கள் உண்டு நம்மிடையே.

என்னை எங்கெங்கோ கொண்டு சென்று விட்டது உங்களின் இந்த பதிவு. கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டதற்கு வருந்துகிறேன், உள்ள இருக்கிறது வெளியே.

அன்புடன்

ராகவன்.

ரசனை வித்தியாசமானது, அறிவு விசாலமானது என்ற பதிவின் பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

அகமிளிரும் அழகு மிகுந்த ரசனைக்குண்டானது. எனக்கு சுசீலா என்றொரு தோழி இருந்தாள். சிவந்த நீள் முகத்தில் பருக்கள் அடர்ந்து, முன் துருத்திய பற்களும், சமணில்லா உடம்புடனும், யாருக்கும் ஈர்ப்பில்லாமலே அழகாய் இருந்தாள், கொஞ்சம் மெனக்கெட்டால், அவளை சில பென்சில் திருத்தங்களுடன் புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் ஓரளவு அழகாய் காட்ட முடியும், ஆனால் அவள் அதுபோன்ற எந்தவித பிரயத்தனங்களும் நான் பழகிய நாட்கள் வரை செய்ததில்லை.

என் தங்கை (உடன் பிறவா) ஐஏஎஸ் கோச்சிங் படிப்பதற்காக, மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி வளாகத்தில் தங்கி பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு இருந்த போது, அவளின் அறைத்தோழியாக சுசீலா எனக்கு அறிமுகமானாள், என் தங்கை அவளை அறிமுகம் செய்யும்போதே, உன் போன்ற ரசனைகள் உள்ள பெண் என்ற போது எனக்கு அவளுடன் பேசுவதற்கான ஈடுபாடு எந்தவித முஸ்தீபுகளும் இல்லாமல் ஏற்பட்டது. பேச, பேச கடல் போல விரிந்த அவளுடைய நாலேட்ஜ் பேஸ் என்னை வியக்க வைத்தது. ராம கிருஷ்னர், விவேகானந்தர், பிங்பாங்க் தியரி, குவாண்டம் தியரி, ராமானுஜர், ஜேகே என்ற என்னுடைய எல்லா வாசல்களையும் திறந்துவிட்டாள் அவள்.

எனக்கு அதிகபட்சமாக 68 பக்கங்களில் கடிதம் எழுதியிருக்கிறாள், வரிக்கு வரி சீனு, சீனு என்று. ஒரு முறை என்னை பார்க்க வீட்டிற்கு வந்தாள், வழக்கத்திற்கு விரோதமாய் ஒரு சரசரக்கும் பனாரஸ், ஆரஞ்சு கலர் புடவையில் தகதகவென்று ஒரு பெரிய சுடர் போல, சுடருக்கு முகமுண்டா,இல்லை அவளின் புறத்தோற்றத்தை பொசுக்கிய ஒரு பெரிய ஜுவாலாமுகியாய் அகப்பிரகாசத்துடன், சீனு என்று உள் நுழைந்தாள். என் அம்மாவுக்கு அவளின் புறத்தோற்றம் ஒரு முகசுழிப்பைத் தந்தது, என்னடா இப்படி இருக்கா, என்று கேட்டாள். அம்மாவை அடக்கி உள் அனுப்பினேன், அவள் என்னுடன் பேசாமலே, விஷயப் பகிர்வு இல்லாமல் இருந்திருந்தால் எனக்கும் அவளுடைய புறத்தோற்றம் கவலை கொள்ளச் செய்திருக்கும். என்னுடன் வெளியே போக வேண்டும் என்றாள், நான் அவளை அழைத்துக் கொண்டு கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சென்றேன், இரண்டு பேரின் பெயருக்கும் அர்ச்சனை செய்தாள், மணிக்கணக்காய் பேசினாள், நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன், என்னை நோக்கி நீயும் பெருமாள் மாதிரி என்ன சொன்னாலும் இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பாய், அதனால் தான் எனக்கு கடவுள் என்கிற கேட்பாளரை ரொம்ப பிடிக்கும், he is a good listener, like you. என்ற அவளின் சின்ன சின்ன சித்தாந்தங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

உடன் நடக்க ஆசைப்பட்டு இங்கே இருந்து பழங்கா நத்தத்திற்கு நடக்கலாமா, உன் கைய பிடிச்சுக்கவா? என்று என்னை கேட்கும்போதே கையை பிடித்துக் கொண்டாள். அங்கே இருந்து திரும்பவும் பேசிக்கொண்டே நடந்தாள் என்னை வழி நடத்தி. சீனு கொஞ்சம் பூ வாங்கித் தரயா? எனக்கு கனகாம்பரம் ரொம்ப பிடிக்கும், தோற்றப்பொலிவோ, வாசனையோ இல்லாமல் எளிமையாய் பூ என்கின்ற அடையாளத்துடன் மட்டும் என்று ஞாபக அடுக்குகளில் மலர்களை செருகிக் கொண்டே நடந்தாள். அவள் காதலிக்கும் எதிர்வீட்டு மரக்கடைக்காரன் மகனைப்பற்றி முதல் முறையாக பேச ஆரம்பித்தாள், தன் ஒரு பக்கக் காதலை இன்னும் அவனிடம் சொல்லவில்லை என்றும், அவன் பார்க்க கருப்பா அழகா இருப்பவன் என்றும் கூறினாள், அவன் பார்க்காத போது இவள் அவனைப்பார்க்கும் தருனங்களை அவள் விவரித்தது எந்தவித வரையறைக்குள்ளும் அடங்காமல், காற்றில் பறக்கும் முன் நெற்றி மயிராய் வாளிப்பாய் இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளிடம் இருந்து கடிதம் வந்தது. அவளுடைய கணவன் மெடிக்கல் ரெப் வேலை செய்வதாகவும், அபினயா என்று ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அது அவரைப்போலவே அழகாய் இருக்கிறது என்றும் கூறினாள். அவளின் மிகப்பெரிய அழகு அவள் மற்றவரை நேசிக்கும் விதம், எந்தவித நிஷ்களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் நகர்கிறது அவளின் காதற் பெருவாழ்வு.

you kindled me...

அன்புடன்

ராகவன்


புதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும், ஒரு பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

உங்களின் கோபம் அழகாய் இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் எனக்கு இல்லை. எழுத்தில் இவ்வளவு தீவிரமாக இயங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கோபத்திற்கான காரணங்கள்...
புதுவிசையின் இலக்கிய முகம் பற்றிய கேள்விகள்,
உங்களின் குறுக்கீட்டை கண்டு கொள்ளாமல் போனது
உங்கள் பதிவைப் பற்றிய சிலாகிப்பு இல்லாதது
பிரபலமானவர்களின் ஒளியில் மற்ற படைப்பாளிகள் மங்கிப் போவது
பேச்சு சுகம், கேட்பாளர்கள் இல்லாதது

மேற்கூறிய எல்லாமே உங்கள் கோபத்திற்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

எனக்குப் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் ஒன்று நிச்சயம், உங்கள் கோபம் அழகாய் இருக்கிறது.

அன்புடன்,

ராகவன்

கமல் ஒரு காமன் மேன் இல்லை பதிவின் பின்னூட்டம்.

அன்பு காமராஜ்,
உன்னைப் போல் ஒருவனை எல்லோரும் பேசுகிறார்கள் பதிவுலகில், அவரவர் வசதிக்கேற்ப தங்கள் மறுதலிப்புகளை, ஒவ்வாமையை தங்களால் இயன்றவரை பதிவிட நினைக்கிறார்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு, உங்கள் கருத்தை முன் வைக்கிறீர்கள். கமலின் தவிர்க்கமுடியாத ஒரு குணக்கேடுகளில் ஒன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளமுயல்வது, என் அடையாளங்கள் தெரியாவிட்டால் என்னை படைப்பாளி என்று யார் சொல்வார்கள் என்கிற தன்முனைப்பு. ஒரு சிறந்த நடிகன், தன்னை பல்கலை வித்தகனாய், எல்லாவற்றிலும் தன் முத்திரைகளை இட்டு நிரப்பும் ஒரு இடைநிரவியாய் காண முற்படும்போது நிகழும் அவஸ்தைகளில் ஒன்று, ஒரு தேர்ந்த நடிகன் தொலந்து போவது. காமன் மேன் இல்லாமல் போனது கமலின் ஸ்டார் அந்தஸ்து காரணம் என்று நினைக்கிறேன், எந்த படத்தில் நீங்கள் கமலைப் பார்க்காமல், கதாபாத்திரத்தை பார்த்தீர்கள் சமீபமாய். நாம் கமலுக்கு கொடுத்திருக்கும் ஒரு தண்டனை இது, ஒரு நசுரூதின் ஷா, ஓம்புரி போல பொது ஜனமாய் வருவது கமலால் முடியாது, நாமும் ஏற்றுக்கொள்வோமா என்பது தெரியாது.

துரோக்கால், குருதிப்புனல் ஆனபோது ஒரிஜினல விட நல்லா இருந்தது என்று கோவிந்த் நிஹ்லானியே சொன்னார் என்று கமல் ஏதோ பேட்டியில் சொன்னார், ஆனால் துரோக்காலில் ஓம்புரியின் நடிப்பு ஒப்பிடமுடியாததாய் இருக்கும்.

தமிழில் உள்ள இரண்டு பெரிய ஸ்டார்களில் ஒருவர் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடும்போது, கமலால் தன் கவசகுண்டலங்களை கழட்டி வைக்க முடியாமல் போய் விடுகிறது. கதை புதிது, களம் புதிது, இசை, தொழில் நுட்பம் எல்லாம் புதிது, மொந்தை பழைய கள்ளாய் கமல் என்ன செய்வது எல்லாக் கோனங்களிலும் கமல் தெரிகிறார். நதாசா புகைபிடிப்பது போல காட்டுவதால் என்ன கெட்டு விட்டது, நீங்கள் புகைபிடிக்கும் பெண்களைப் பார்த்தது இல்லையா, இது எனக்கு தெரிந்து ஒரு கலாச்சார அதிர்ச்சிக்காக சேர்த்த மாதிரி தெரியவில்லை, அது ஒரு கதாபாத்திரம் அது மாத்திரமே, எதையும் எதாவது என்று நினைத்து எப்போதும் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் எல்லோருமே.

காமராஜ் எனக்கு இந்த படத்தை நீங்கள் முழுமையாக அனுகவில்லை என்றே தோன்றுகிறது ஒரு அரைகுறையான முயற்சி என்று படுகிறது.

என் கருத்து என் கருத்து மாத்திரமே, நான் யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த இதை எழுதவில்லை.

அன்புடன்

ராகவன்

சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும் – ஒரு பின்னூட்டம்

அன்புள்ள காமராஜ்,

நலமா, நீங்கள் தந்தித்தெரு ராகவனா என்ற உங்கள் கேள்விக்குப் பிறகு உங்களை காணோம், உங்களின் பதிவுகளிலும். மீண்டும் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். மீண்டு வந்ததற்கு வந்தனங்கள் பல. உங்களின் இதற்கு முந்திய இரு பதிவுகளில் எனக்கு ஏனோ நீங்கள் இல்லாதது போல இருந்தது. சம்பாரி மேளத்தின் சத்தத்தை மீறி உங்கள் குரல் கேட்கிறது.

”பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு” ரொம்ப நிஜமான வார்த்தைகள்.

திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வருவதற்குள் சில இடங்களில் கதை நொண்டி அடிப்பதாகத் தோன்றுகிறது.

”ஓவியர்களின் .... கேட்கலாம்” இந்த வரிகள் எனக்கு ஏதோ தொடர்பில்லாமல் ஒரு கன்னி (Link) தொலைந்தது போல் தோன்றுகிறது.

”பிரியமானவர்களின் பரிகசிப்பும் கேலியும்கூட மனிதர்களின் சந்தோசங்களை ஆழ வேர்விடச் செய்கிறது". நெகிழ்வான, செரிவான வார்த்தைகள், பிரியமுள்ளவர்கள் எது செய்தாலும் அழகாய் இருக்கிறது, வசைமொழிந்தாலும் வாழ்த்துகள் தான்.

உங்கள் எழுத்து நடை உங்களின் மிகப்பெரிய பலம் காமராஜ், அதுவும் அதன் ஒய்யாரம், அழகர் கோயில் மலைக்கோயிலில் இருந்து விறகு சுமந்து இறங்கும் பெண்ணின் ஒரே தாளகதி நடை.

வாழ்த்துக்கள்... நம்ம பக்கமும் வந்து ஏதாவது சொல்லிட்டு போறது!!

அன்புடன்ராகவன்

Saturday, October 03, 2009

அப்பன் தாலாட்டு

கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு
பொன்னுமணி உறங்கு - உங்கப்பன்
பொழ்சாய வருவாக
வின்னுமணி முளைக்க - உங்கப்பன்
வீதியில் வருவாக
கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு

வண்டி மணியோசை - உங்கப்பன்
வாராக வெள்ளைத்துர
காளையார் கோயில் ரதம் - உங்கப்பன்
கண்ணு படும் நடையும்
தாயப் போல் பாட்டுபாடி - உங்கப்பனை
தாலாட்டி தூங்க வைப்பேன்
உன்ன போல் ஒரு புள்ள - உங்கப்பன்
ஊருக்கு மகராசன்

ஊஞ்சலில் ஒக்காத்தி - உங்கப்பன்
ஊருக்கத சொல்லுவான்
ஊவுன்னு கொட்டாட்டி - உங்கப்பன்
உச்சந்தலை தட்டுவான்
மெல்ல விடியுதங்கே - உங்கப்பன்
மேலாக்க தேடி தந்தான்
அள்ளி சொருகிடுவேன் - உங்கப்பன்
ஆயுச சேர்த்து இங்கே

ராசாவே கண்ணுறங்கு - உங்கப்பன்
ராவுல வந்துடுவான்
ராத்திரி முழிக்கொனும் - உன்னைப்போல்
ராசாவே பெக்கோனும்
தேனே நீ கண்ணுறங்கு - தெவிட்டா
தெள்ளமுதே உறங்கு
மானே நீ கண்ணுறங்கு  - மாடத்து
மதி போல நீயுறங்கு

ஆராரோ ஆரிராரோ  - ஆராரோ
ஆரிரி ராரிராரோ
ஆரிரி ராரிராரோ - ஆராரோ
ஆராரி ஆரிராரோ

(இருபது வருஷத்துக்கு முன்னாடி எழுதிய ஒரு பாடல், எனக்கு அப்போ பதினெட்டு வயசு இருக்கலாம், தீர்த்தக்கரையினிலே படத்தில் பஞ்சாயத்து சீனில் வரும் ஒரு பாடலின் மெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, எழுதிய ஒரு தாலாட்டு பாட்டு. தனது காதற்கணவனைப் பற்றிய ரகசியப் பெருமை செரி நிலைகளை, விபரம் புரியாத குழந்தையிடம், பாடி குதூகலிக்கும் ஒரு காதற்தாய்!! அய்யோ கொல்றானே!)

மன்னிக்கவும் ஒரு தயக்கத்துடன் தான் பதிவிடுகிறேன்...