Tuesday, January 25, 2011

இறந்த பகல்..


வெளிச்சக்குடுவையில் பொத்தல் விழ
பாதரச ஒழுக்காய் வழிந்து
தீர்ந்து கொண்டிருந்தது பகல்
மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு வர்ணங்களை
கரைத்துக் கொண்டிருந்தது
ஒரு ஓவியனைப் போல
பார்வைகள் ஊடுருவமுடியாமல்
மெல்லிய கருந்திரைச்சீலைகளை
அடுக்கடுக்காய் தொங்கவிட்டுக்கொண்டிருந்தது
சாபங்களின் கறை நெருக்கும் இரவு
பிடுங்கப்பட்ட கண்களில் இருந்து வழியும்
குருதி கருப்பு வர்ணத்தில்
ஒரு மசியென மேலும் படர்ந்தது
தற்கொலைக்கு முயன்றவனின்
உத்தரம் வெறித்த விழிகளென
இருளை துளையிடும்
விளக்குகள் கழிவிரக்கத்தில்
கசிந்து கொண்டிருந்தன.
பகலின் குரல்வளை
இறுக்கி நெரிக்கப்பட்டு
காற்றுக்குழாயின் விதைப்பைகள்
நசுங்கிய கணத்தில்
முழுதும் இறந்து விழுந்தது பகல்

Friday, January 21, 2011

மஞ்சள் வெயில்...


கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது வெளுத்திருப்பது போல தோன்றியது ஜெயந்திக்கு. கண்ணுக்குக் கீழே கருவளையம் இப்போது இன்னும் தெளிவாகத் தெரிந்தது.  அம்மா பார்த்தால், சோகை பிடிச்சுப் போயி கிடக்கு உடம்பு, பாக்கா திண்ணாதன்னு  சொன்னா கேக்கிறியா,  நல்லது சொன்னா கேட்டுக்கிட யாரு இருக்கா இந்த வீட்ல? எப்படியோ போ! என்பாள்.  அம்மாவிற்கு அவள் அம்மா சொன்னது, தன் குழந்தைகளுக்கும் சொல்கிறாள்.  எதுனால செய்யக்கூடாது? ஏன் செய்யணும்னு? கேட்டா பெரியவங்க சொல்லுவாங்க! அவ்வளவு தான் தெரியும் அம்மாவிற்கு. நல்லவேளை அம்மா, மாமியாராய் இல்லை என்று கலைந்திருந்த முன்முடியைத் திருத்திக் கொண்டு முன்பக்க வாசலுக்கு வந்தாள். தண்ணீர் தொட்டி அருகே இருந்த வாளியை எடுத்து, அரைவாசி நிரப்பிக் கொண்டு, தொட்டியின் ஓரத்தில் சாத்தி வைத்திருந்த தென்னமாரையும், நிலையின் உள்கூட்டில் வைத்திருந்த கோலப்பொடி டப்பாவையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.

முழுதாய் விடிந்திருக்கவில்லை.  தெருவிளக்கின் வெளிச்சத்தோடு கிடந்த குப்பைகளை பெருக்கினாள்.   ஓரத்தில் குப்பையை குவித்து, முறத்தால் அள்ளி, கோமதி வீட்டு மாட்டுக் கொட்டாயை ஒட்டியிருந்த சாக்கடையில் தட்டி, அங்கிருந்தே நல்ல பசுஞ்சாணியை முறத்தில் அள்ளிக்கொண்டாள்.  இதமான சூட்டோடு விளுவிளுவென்று இருந்தது சினைப்பசு போட்ட சாணம். வாளியில் இருந்த தண்ணியில் கரைத்தவள், ரொம்ப கொழகொழவென்று இருப்பதைக் கண்டு தண்ணித்தொட்டியில் இருந்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டாள். புடவையை ஒருபக்கமாய் சொருகிக் கொண்டு, கரைத்த சாணித்தண்ணீரை பரவலாக தெளித்தாள்.  தெருவிளக்கின் வெளிச்சத்தில், பச்சை மினுக்குவது போல இருந்தது.  அப்படியே வாளியை வைத்து விட்டு, முன் வாசல் பட்டியக்கல்லில் நீர் தெளித்து கழுவி விட்டாள். 

வாசலில் தெளித்த சாணத்தண்ணீர் ஒணர ஒரு அஞ்சு நிமிஷம் பிடிக்கும், அதற்குள் பூசணிப்பூவு பறிச்சிட்டு வந்துடலாம் என்று நினைத்தவள்.  மாட்டாஸ்பத்திரி வரைக்கும் போகணுமா என்று யோசித்தாள், பாட்டு டீச்சர் வீட்டு வாசல்ல கிடந்த பூவரசம்பூவை எடுத்துக் கொண்டாள்.  சாணிப்பிள்ளையாரில் எந்தப்பூவும் அழகுதான் என்று தோன்றியது ஜெயந்திக்கு.

உலர்ந்திருந்த வாசலில் சாணியின் பச்சை அழகான கண்ணாடி வளையலில் உடைந்த முனையில் மாதிரி அழுத்தமாய் இருந்தது வர்ணச்சேர்க்கை. கோலப்பொடி டப்பாவை எடுத்துக் கொண்டு, என்ன கோலம் போடுவது? என்று யோசித்தாள், யோசித்து போட்டால் எதுவும் வெளங்காது, யோசித்து செய்யிற காரியம் போல. இப்படித்தான் பொங்கலன்று யோசித்துப் போட்ட பதினைந்து புள்ளி பொங்கப்பானை கோலம் சரியாக வராமல், கடைசியில் கலர்ப் பொடிகளை தூவி குறைகளை மறைக்க வேண்டியதாயிற்று. அதுவும் கலர் பொடிகளை கோலத்தில் உபயோகிக்க அவளுக்கு அறவே பிடிக்காது.  பச்சைத்தரையில் வெளீரென்று மிதக்கும் வெள்ளிக்கம்பிகள் உருகி ஓடுவது போலவும், இவள் உடலைச் சுற்றி பிண்ணுவது போலவும் இருக்காது, வண்ணக்கோலங்கள். ஒரு அசட்டுத்தனம் வந்துவிடும் கோலத்திற்கு.  யோசிக்காமல் மனசுக்கு தோன்றுவதை அப்பைக்கப்போ செய்வது தான் சிறப்பாய் அமைகிறது எப்போதும்.

அழுத்தமான கோடுகளில் வெள்ளைத் தாமரையில் சம்பந்தமில்லாத பிண்ணிக் கொண்டிருக்கும் இலைகளும், வளைவுகளும் புதிய அழகைக் கொடுத்தது போல இருந்தது.  புள்ளிகளோ, நியமங்களோ எதுவும் இல்லை, அது தானாய் முளைத்து படர்ந்தது போல கிடந்தது பச்சைத்தரையில். நிமிர்ந்து மேலிருந்து பார்த்தவள், ம்..ம்.. நல்லாயிருக்கு என்று தனக்குத் தானே சொல்லிவிட்டு வீட்டினுள்ளே நுழைந்தாள்.  மாமா முன்னறையில் மெலிதான குறட்டையில், விசில் சத்தமும் கலந்தது போல மூச்சு விட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். காலை மடக்கி சுருங்கியது போல படுத்திருப்பதைப் பார்த்தவுடன், பேனின் வேகத்தைக் குறைத்தாள். இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்து எல்லா வேலையையும் முடிச்சுட்டு, எங்கேயோ கிளம்புவது போல தயாராகி, பட்டாசாலில் வந்து ஈஸிசேரில் படுத்துக் கொள்வார். 

வாசலில் பால்காரர் வந்துவிட்டது தெரிந்தது. அவர் சைக்கிள் சத்தமும், அதில் கட்டியிருக்கு பால் குவளைகள் ஏற்படுத்தும் சத்தமும் பால்காரர் சந்து முனையில் திரும்பும்போதே சொல்லிவிடும்.  தெருவில் இருந்து இவர்கள் வீடு இருக்கும் சந்தில் நுழைய ஒரு படி ஏற வேண்டும்.  அந்த நேரத்தில் அவளுக்கு அடுப்படியில் இருந்து பாத்திரம் எடுத்து வாசலுக்கு வர சரியாய் இருக்கும்.  அத்தை இருக்கும் போது, அத்தை தான் பால் வாங்குவது, காய்கறி வாங்குவது எல்லாம்.  அத்தை இறந்த பிறகு, ஜெயந்திக்கு பெரிய மனுஷித்தனம் வந்துவிட்டது போலத் தோன்றும். மாமாவும் ஜெயந்தியிடம் கேட்டு தான் எந்த காரியமும் செய்வார். அவருக்கு டீப்போடணும், டீயைக் கொதிக்க விடக்கூடாது அவருக்கு. டம்ப்ளரில் டீத்தூளையைக் கொட்டி தேவையான சக்கரை போட்டு, காய்ச்சுன பால ஊத்திடணும்.  லேசா ஒரு ஆத்து... அது போதும். டீத்தூள் பாலில் கலந்தும் கலக்காமலும் இருப்பது போல இருந்தா தான் பிடிக்கும்.

மாமாவுக்கு ஜெயந்தி மேல அத்தனை பிரியம், அக்கறை.  அத்தையும் அப்படித்தான், இவளை மகளைப் போல தான் பார்த்துக் கொண்டாள். அத்தை இருக்கும் போது வேலைக்கு ஒருத்தி இருந்தாள். அவள் வாசல் பெருக்கி, பாத்திரம் கழுவி, துணி துவைத்து, வீட்டைப் பெருக்கி மற்ற மேல் வேலைகள் எல்லாம் செய்து விடுவாள். அத்தை போன பிறகு அவளை வேலையை விட்டு நிக்கச் சொல்லிவிட்டாள் ஜெயந்தி. வேலை அதிமில்லை, எதுக்காக ஆளு! நானே பாத்துக்குறேன் மாமா! என்றபோது வேணாம்மா அவ பாட்டுக்கு வந்து மேல் வேலைய பாத்துக்கட்டும், நீ வேணா சமையல் மட்டும் பண்ணிடு! என்று சொல்லிப்பார்த்தார்.  ஜெயந்தி கேட்பதாய் இல்லை.  இல்லை மாமா! நானே பார்த்துக்குறேன் என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.

ஜெயந்தியின் மாமாவுக்கு சும்மா இருக்க முடியாது. அதிகாலை எழுந்தவுடன், கழுவப்போட்டிருக்குற பாத்திரத்த எல்லாம் எடுத்துப் போட்டு, சத்தமில்லாம வெளக்கி வச்சுருவாரு. சிலசமயம் இவ துணியவும் சேர்த்து துவைச்சுப் போட்டுருவாரு.  ஒரு வேளை போட்டு, இன்னொரு நாளைக்கும் போட்டுக்கலாம்னு, கொடியிலே போட்டிருக்குற புடவை, உள்பாவாடைன்னு ஒண்ணுவிடாம துவைச்சுப்போட்டிருவார்.  இவளுக்கு முதலில் சங்கடமாக இருந்தது அப்புறம் அதுவே பழகிப்போச்சு.  எவ்வளவு சொன்னாலும் அவரால கேட்கமுடியாது என்று தோன்றவே சொல்வதை விட்டுவிட்டாள் ஜெயந்தி.  இன்னைக்கு என்ன ஆறு மணியாச்சு, இன்னும் எழுந்திரிக்கக் காணோமே என்று யோசித்துக் கொண்டே மாமா, மாமா என்று உசுப்ப முற்பட்டாள். 

எச்சில் வழிந்து தலைகாணியை நணைத்திருக்க, அயர்ந்து தூங்கியிருக்கிறார். உசுப்ப கஷ்டமாக இருந்தது, என்னைக்கும் இப்படி தூங்குறவர் இல்லை என்று நினைத்தவள்.  ஆசுபத்திரிக்குப் போகணுமே என்று நினைத்துக் கொண்டு மேலும் அசக்க, என்னம்மா! என்று பதறிய படி எழுந்தார். நல்லா தூங்கிட்டேம்ல! உடம்பெல்லாம் ஒரே அலுப்பு. கொஞ்சமா ராமகிருஷ்ணன் கொடுத்த மிலிடெரி ரம்ம சாப்பிட்டு அசந்து தூங்கிட்டேன் போல! ரவைக்கு சுத்தமா தூக்கமில்ல...தாயீ! என்று எழுந்து கொல்லைப்பக்கம் போனார். அவருக்கு சர்க்கரை இருப்பது தெரியும், ஆனாலும் இது போல எப்போதாவது ஒரு நாள், குடித்துவிடுவார்.  அரவமில்லாம நடுராத்திரில குடிச்சிருப்பாரு போல, ஜெயந்தியின் மேல பயம் என்றில்லை.  அவ வேணாம்னு சொன்னா அப்புறம் மறுக்க முடியாது.  அதனால இது போல சொல்லாம கொள்ளாம ரெண்டு அவுன்ஸ் உள்ள தள்ளிடறது அவரு வழக்கம். அதுவும் ஜெயந்திய நினைச்சாலே அவருக்கு மனசுக்கு கஷ்டம் வந்துடும், இன்னும் குடிக்க சொல்லும்.

எல்லா வேலையும் முடிச்சிட்டு, அடுப்படி பக்கம் எட்டிப் பார்த்து விட்டு, ஜெயந்தி! டீப்போட்டு வைக்கிறியாம்மா? சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடறேன் என்று பட்டாசாலைத்தாண்டி, முன் வாசல் வந்தார், கிழக்கப்பார்த்த வீடு. சூரிய நமஸ்காரம்னா என்ன பண்ணனும்னு தெரியாது, சும்மா சுரியன ஒரு தடவப் பாத்துட்டு, ஏதோ தெரிந்த தெய்வங்களின் பெயரையெல்லாம் சொல்லி கும்பிட்டு வருவார்.  வந்தவுடன், முன்னறைக்குப் போயி, துணிய மாத்திக்கிட்டு, நல்லா மாப்பிள்ளை மாதிரி வந்து ஈஸிச்சேரில் படுத்துக் கொண்டார்.  என்ன நினைத்தாரோ தீடீரென்று எழுந்து, ஜெயந்தியும், சரவணனும் சேந்தாப்புல இருக்கிற போட்டோ லேசாய் சாய்ந்திருப்பதாய் நினைத்துக் கொண்டு, வயர் கூடைய இழுத்துப் போட்டு, சரி செய்தார்.  அப்படியே போட்டோவில் இருக்கும் தூசியை கையில் இருந்த துண்டில் துடைத்தார்.  ஜெயந்தி, பளீரென்று இருப்பது போலத் தெரிய, அதையே பார்த்துக் கொண்டு நின்றார். 

டீ கொண்டு வந்த ஜெயந்தியிடம், அங்கனயே வைம்மா, நான் வந்து குடிக்கிறேன்!  ஆறிப்போயிடும் மாமா குடிச்சிட்டு மத்த வேலையப்பாருங்க! ஆசுபத்திரியிலே நமக்கு பதினொரு மணிக்கு நேரம் கொடுத்திருக்காங்க! இப்போ போனாத்தான் சரியா இருக்கும் மாமா என்றாள்.  மறுபேச்சில்லாமல் இறங்கி, அவள் கையில் இருந்த டீயை வாங்கிக் கொண்டார்.  குடித்தவர், வெந்நீர் போட்டிருக்கையாம்மா என்றவர், நான் வேணுன்னா அடுப்புல ஏத்திட்டு வரவா என்று அவள் முகத்தைப் பார்த்தார். போங்க மாமா, வேலைய பார்த்துட்டு! நான் பாத்துக்குறேன்! என்றவள் குடித்து முடித்திருந்த டம்ப்ளரை வாங்கிக் கொண்டு அடுக்களைக்கு போனாள். இட்லிக் கொப்பரையில் கைப்பிடியில் சிறிது தண்ணீர் தெளித்து மூடியை திறந்தாள்.  லோட்டாவில் இருந்த தண்ணீரை நுனிவிரலில் தொட்டு, இட்லி வெந்து விட்டதா என்று பார்த்தவள், திருப்தியாய் இருக்க எடுத்து குண்டாச்சட்டியில் போட்டு ஈரத்துணியை மேலே மூடினாள்.

மாமாவுக்கு உளுத்தம்பருப்புச் சட்னி அல்லது கத்திரிக்கா சட்னிதான் பிடிக்கும், வெறும் தேங்காப் பொட்டுக்கடலை போட்டு செய்யிற சட்னியே பிடிக்காது.  தொலி உளுந்தம்பருப்பு, தக்காளி, மிளகாய் வத்தல், பெருங்காயம், கொஞ்சம் புளி, நாலஞ்சு இனுக்கு கறிவேப்பிலை என்று போட்டு, லேசா நல்லெண்ணெய் விட்டு வதக்கி, ஆறியவுடன், தேங்காய்ச்சில்ல எடுத்து அம்மில உப்ப வச்சு நகட்ட தயாரான சட்னியைத் தாளித்து இறக்கினாள். மணம் தூக்கலாய் இருந்தது. மாமா நல்லா சாப்பிடுவார் என்று நினைத்துக் கொண்டாள்.  அடுப்படியை ஒதுங்க வைத்துவிட்டு, துணியை எடுத்துக் கொண்டு குளிக்கப்போனாள்.  அரைமணியில் ரெடியானவள் மாமாவை சாப்பிட அழைத்தாள். வந்தவர் ஜெயந்திம்மா, எவ்வளவு காசு எடுத்துக்கணும் இன்னைக்கு.  ஏதாவது டெஸ்ட் பண்ணவேண்டியிருக்குமா!

இல்லை மாமா, டெஸ்ட் எல்லாம் அன்னைக்கே பண்ணியாச்சு, அவரும் போன மாசம் சவுதில இருந்து வந்தப்போ, அவரு செய்ய வேண்டியத எல்லாம் செய்துட்டு போயிட்டாரு.  என்னைய இன்னைக்குத் தான் வரச்சொன்னாங்க மாமா! நான் ஒரு நாளு அட்மிட் ஆகணும்னு நினைக்கிறேன் அடுத்த வாரத்துல! அப்போ என்னோட அம்மாவ வரச்சொல்லிடுதேன் என்றாள்.  ஏந்தாயீ நானே பாத்துக்கிடுதேன், ஒங்க அப்பாவுக்கு சொகமில்லேன்னு தான கூடவே இருக்க வேண்டியதாயிருக்கு! நான் பாத்துக்கிடுதேன் கண்ணுக்கு கண்ணா! என்று சிரித்தார். இப்படி ஒரு மாமனார் அமைய அவள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது.  அவரு போனே பண்ணலை இன்னும், இந்த நேரத்துக்கு ஆசுபத்திரிக்கு போறோம்னு தெரியும். பேசக்கூடிய நேரம் தான் ஆனாலும் போன் வரலை அவரிடமிருந்து.  கடந்தமுறையும் ஐவிஎப் பண்ணுற நாள் கூட போன் பண்ணலை. முதல் தடவை பண்ணும் போது மட்டும் போன் வந்தது, இது மூன்றாவது தடவை அலுத்துவிட்டது போல அவருக்கு, வருஷத்துக்கு ஒரு முறை இது போல ஒரு சடங்கு.  பரிந்துரைக்கப்பட்ட உறவு.

இந்த மருத்துவ விவகாரங்கள் அவருக்கு அவ்வளவா புரியலைன்னு தெரியுது ஜெயந்திக்கு. ஆனாலும், அசராத அன்பும், உதவியும் எல்லாவிதத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  அவன் ஊரிலேயே இல்லியே! எப்படி குழந்தை சாத்தியம் என்று கேட்பவருக்கு எப்படி புரியவைப்பது. இவளுக்கு மாத்திரை சாப்பிட்டா தான் பீரியட்ஸ் வருவதை. அவரின் விந்தணுக்களை சோதனைக்குழாயில சேமித்து உறைய வைத்திருக்கிறார்கள்.  இவளுடைய கருமுட்டை வளர்ந்து உடைவதற்கு அஞ்சு ஆறு நாள் ஊசி போடுவார்கள் என்று. கருமுட்டையின் வளர்ச்சியை பொறுத்து மருந்தோட டோஸ் கூடும். அதன் பின் இவளுக்குள் செலுத்தப்படும் விந்தணுவின் ஒரு துளி தான் இவரை தாத்தா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கப்போகிறது என்பதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தவளை, ஜெயந்தி என்று அழைத்த குரலுக்கு பின்னால் போனாள், டாக்டரை சந்தித்தாள்.  

உங்க வீட்டுக்காரர் வந்திருக்காரா? என்ற டாக்டரிடம் இல்லை டாக்டர்! அவரு சவுதில இருக்குறது உங்களுக்கு தெரியுமே டாக்டர்! என்றாள். இல்லை லீவ எக்ஸ்டெண்ட் பண்ணியிருக்கலாம் இந்தமுறையாவது என்ற டாக்டரின் மேல் அவளுக்கு கோபம்கோபமாய் வந்தது.

அங்கு இருந்த ஒரு திரையில் டாக்டர் மூன்று முட்டைகளை காட்டினார், இந்த மூணு தான், 20 மில்லிமீட்டர் வளர்ந்திருக்கு, இன்னும் ரெண்டு நாளு தொடர்ந்து ஊசி போட்டா, சிறுசுசிறுசா இருக்கிறதும் வளரலாம். பார்க்கலாம், இந்த முறையும் முடியலேன்னா, டோனர் எக் போயிடலாம், உங்க கருப்பை நல்லா இருக்கிறதால அதுக்கு சாத்தியம் இருக்கு.  உங்க வீட்டுக்காரரு இந்த நேரத்துல கூட இருந்தா நல்லது ஜெயந்தி, மனசும் சந்தோஷமா, நம்பிக்கையா, தைரியமா இருக்க வேண்டும் இப்போ! என்றவளிடம் என்ன பண்றது டாக்டர், அவரோட வேலை அப்படி!  அங்க போயி சம்பாதிச்சாத்தான் இதுக்குக் கூட செலவு செய்ய முடியும்! என்றவள், வரேன் டாக்டர் என்று கிளம்பினாள்.

வெளியே வந்து, ஆசுபத்திரிக்கு வந்திருந்த கர்ப்பஸ்திரிகளையும், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருந்த மாமாவை அழைக்க, வேகமாய் எழுந்து வந்தார். என்னம்மா சொன்னாங்க டாக்டர்... நாலு நாளைக்கு வரணும் மாமா... வந்து ஊசி போட்டுக்கணுமாம் என்றவள் அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.  பஸ்ஸில் வீட்டிற்கு திரும்பும் போது, வெளியே வெறித்துக் கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயந்தியின் மாமா. என்ன நினைத்தாரோ, அவள் காது பக்கமாய் குனிந்து, ஜெயந்தி! கட்டாயம் குழந்தை வேணுமாடா? என்றார். ஒன்றுமே சொல்லாமல், அவர் கையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள்.


படம்: அர்விந்த் நடராஜன்... நன்றிகள்.

Thursday, January 20, 2011

ஒரு கவிதை...


இவர்களைக் கண்டதும்
எனக்கு ஆவேசமாய் வருகிறது
நாங்கள் உபயோகிக்கும் அல்லது
எங்களுக்குத் தேவையான
எல்லாவற்றையும் இவர்கள் தான்
கடைவிரிக்கிறார்கள்
இவர்கள் சொன்னது தான் விலை
என்கிறார்கள்
நாங்கள் குடியிருந்த இடமும்
நாங்கள் பயிரிட்ட வெளிகளிலும்
இப்போது இவர்கள் துணி உலர்த்துகிறார்கள்
இவர்கள் கைவைத்த இடங்களில்
எங்களவர்களின் இடமுலைகளும் இருந்தது
யோனிகளில் மண்கொட்டி
அற்ப பயிர் வளர்த்தார்கள்
இதில் மேலுயர்ந்த குரலுக்கு
விலங்குகள் என்று வில்லை ஒட்டினார்கள்
சந்தர்ப்பம் கிடைத்தபோது நாங்கள்
நசுக்கிய குரல்வளைகளில் இருந்து
கொட்டிய ரத்தத்தில் எங்கள் கால்கள்
நணைந்திருந்தது 

Friday, January 14, 2011

நமச்சாரத்தில் துலங்கும் பொன்...

குற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது.  மேலுக்கு நல்லா சோப்பு போட்டு குளிச்சாலும், திருப்தி வர்றதில்லை.  கைக்கு எட்டாத முதுகைத் தொட்டு அழுக்கு தேய்க்க ஆளு இருந்தாதான் தோதுப்படுது.  மகராசி போயிட்டா சீக்கிரமே! என்று தனக்குள்ளெ புலம்பிக் கொண்டார் முத்தையா ஆசாரி என்கிற சவரிமுத்து. சுசீலா இறந்ததுக்கப்புறம், முதுகு பிசுக்கு போகவே இல்லை.  என்ன தான் சுவத்துல தேய்ச்சாலும், காயமாகுதேக்கண்டி,  பிசுக்கு விடறதா இல்லை.  இரண்டு வேளை குளிச்சாகணும், முத்தையா ஆசாரிக்கு. அதுவும் வெயிலோ, மழையோ கிணத்துக்கு வந்து குளிச்சாத்தான் அவருக்கு குளிச்சா மாதிரி.  

சுசீலா இருக்கும்போது அவளே வந்து கிணத்துல தண்ணி சேந்தி வச்சுடுவா, கயித்துல இவருக்கு குத்தால துண்டு, சோப்பு டப்பா, பீர்க்கங்கூடு எல்லாம் தயாரா இருக்கும். அய்யா துரகணக்கா வந்து குளிச்சாப் போதும்.  முதுகுக்கு கிட்ட வரும்போதே, ஏடீன்னு ஒரு சத்தம். இந்தா வந்துடுதேன்னு பதில் வர்றதுக்கு முன்னாடி முதுகுல சுசீலாவோட கையிருக்கும். ம்...ன்னு அவரே ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். இடுப்பில கட்டின ஈரத்துண்டுக்குமேல வேஷ்டிய கட்டிட்டு, கால அகட்டி ஒரு மாதிரியா கட்டியிருந்த துண்ட உருவி எடுத்தார். கொடியிலே உதறி காயப்போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

முத்தையா ஆசாரி குடியிருப்பது, பதினோரு வீடு இருக்கிற ஒரு காம்பவுண்டு. பெரும்பாலும் எல்லாரும் தெலுங்கு பேசும் நாய்க்கமாருங்க தான். இவரு ஒருத்தரும், எதிர் வீட்டுல இருக்கிற நல்லையாவும் தான் வேற ஆளுக்க! முத்தையா ஆசாரியின் மனைவி ரெண்டு வருஷம் முன்னாடி தான் செத்துப் போச்சு. கருப்பையில புத்துநோய் வந்து படாத பாடுபட்டு போயி சேந்துருச்சு, பெரியாஸ்பத்திரியிலேயே.  சுசீலாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப ஜாஸ்தி, வாரமானா சர்ச்சுக்குப் போயாகணும். டவுன் ஹால் ரோடில இருக்கிற ரோசரி சர்ச் தான் சுசீலா எப்பவும் போறது.  முத்தையா ஆசாரிக்கு இதுல அவ்வளவு நம்பிக்கையில்லை. எல்லாம் பொண்ணப் பெத்தவருக்கு எதுமேல தான் நம்பிக்கை வரும்.  ஒரு பய பிறந்திருந்தாலும், அணுசரனையா இருந்திருக்கும், குடிசை போட கத்துக் கொடுத்து அப்படியே  நகட்டி நகட்டி தொழில கத்துக் கொடுத்துட்டு இந்த வயசுக்கு வேலை செய்யுற அவஸ்தையில்லாமல் இருந்திருக்கலாம்.  என்ன புலம்பி என்ன பண்ண, விதி! என்று புழுங்குவார் மனசுக்குள்ளேயே! 

தெற்கு ஆவணி மூல வீதி முனையிலே இருக்கிற ரெண்டு மாடி கட்டிடம், தான் அப்பாவு செட்டியார் நகைக்கடை. அந்தக் கடைல கிடைக்கிற ஆர்டர் தான் செய்துகிட்டு இருந்தார் முத்தையா ஆசாரி.  அப்பாவு செட்டியார் கடைக்குண்ணு தனியா பெரிய பட்டறையே இருக்கு இப்போ.  ஒரு பத்து பேருக்கு மேல வேலை பாக்குறதுக்கு.  பெரியவரு கடைய பார்த்துக்கிட்டு இருந்தப்போ, இவரப் போல கிராக்கி வேலை பாக்குற அஞ்சு ஆறு பேத்த வச்சுக்கிட்டு வேலையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். வேலை குறையாம இருக்கும், முத்தையா ஆசாரியும் நல்லா செழிம்பா இருந்தாரு. யாரு கண்ணு பட்டதோ, இப்போ பெரியவரு பையன் வந்து பொறுப்பு எடுத்தவுடன் நிலைமையே தலைகீழா மாறிப்போச்சு, கடை மாடியிலேயே பட்டறைப் போட்டு, பத்து ஆள வச்சு வேலை வாங்கலாம்ப்பா! நம்ம கண்ணு முன்னாடி வேலை நடந்தாத்தான் நமக்கு நல்லது! என்று சொல்ல, அவனோட அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.

வேலை பாக்கையிலே விழுகிற குப்பையெல்லாம் அவங்க எடுத்துக்குறதால, குப்பை அலசும்போது கிடைக்கிற எட்டு பத்து கிராமும் ஆசாரிகளுக்கு கிடைக்காம போயிடும்.  அதுபோக மெழுகுல உருட்டுற சன்னமும், பொடியும் தான் மிச்சமே. ஒரே லாபம், பங்குனி, மார்கழி மாசம் தவிர மத்த எல்லா நாள்லயும் வேலை இருக்கும். தொடர்ச்சியா சுனக்கம் இல்லாம வருமானம் வந்துக்கிட்டு இருக்கும். இங்கேயே வந்துடு முத்தையா நீயும்? என்று பெரிய முதலாளி சொன்னபோது, சரிதான் அண்ணாச்சி, கொஞ்சம் யோசிச்சு சொல்லுதேன் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார். அது எப்படி முடியும்? கடைக்கு மேலேயே வேலை பாக்குறதுக்கு, ஒரு சுதந்தரம் இருக்காது ஒரு மண்ணும் இருக்காது.  குப்பைல விழறது எல்லாம் அவனுக்கு கொடுக்கனுமனா, அது ஒரு அடிமை வாழ்க்கை மாதிரி ஆகிப்போயிடுமேன்னு அவருக்கு பயம்.  அதனால பதிலே சொல்லாமல் நழுவிட்டார்.

தனியா எப்பவும் போல வீட்டு பட்டறையிலேயே மெனக்கெட்டா கிராக்கி வேலை நிறைய கிடைக்கும்.  அது போதும் நமக்கு என்ற நம்பிக்கையில் வந்தவர், நினைத்த மாதிரி போதுமான அளவு வேலை வராததால்,  பெரியவ கல்யாணம் சின்னப் பிள்ளைக படிப்புச் செலவு, துணிமணி அது இதுன்னு சம்பாதிக்கிற காசெல்லாம், தூர் இல்லாத வாளில தண்ணி  நிறைக்கிற மாதிரில்லா இருக்கு என்று மலைப்பாய்த் தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.  பெரியவளுக்கு கல்யாணம் பண்ணியாச்சு ஒரு ஆளு குறையுதுன்னு நினச்சா, மாப்பிள்ளைக்கு சீரு மயிருண்ணு செய்றதுக்குள்ள தாவூ தீந்து போச்சு முத்தையா ஆசாரிக்கு. போனவ வாழ்க்கையும் பெரிசா மணத்துப் போயிடல. தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு இருக்கிற நிலைமையிலே என்ன பெருசா மானம் வேண்டிகிடக்கு நமக்கெல்லாம், திரும்பவும் அப்பாவுச் செட்டியார் கடைக்கே போயி ஏன் கேக்ககூடாதுன்னு என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.

செட்டியார் இப்போல்லாம் கடைக்கு அவ்வளவா வருவதில்லை என்று உங்கரம் பால்ராஜ் சொன்னது ஞாபகம் வந்தது. அது தான் அவருக்கு கொஞ்சம் சங்கட்டமா இருந்தது. என்ன ஒரே கஷ்டம், செட்டியார் மகனைப் பாத்து பேசவேண்டியதிருக்கும், அவனுக்கு மனுஷங்களோட தராதரமே தெரியாத பொடிப்பய! சரி விதி விட்ட வழி.. போயித்தான் பார்ப்போம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

பெரிய மக சுட்டு வச்சிருந்த இட்லில ரெண்ட எடுத்து பிச்சுப் போட்டுக்கிட்டு, சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிட்டார்.  சட்டைப்பைய தடவி பாத்தவரு, ஒண்ணுமில்லை போலயே என்பது போல உதட்டை பிதுக்கினார்.  இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லாவிடம் காசு இருந்தது, ஆனா அவரிடம் கொடுக்க ஒரே யோசனையா இருந்தது. பிள்ளைகளோட சேர்ந்து சினிமாவுக்கு போவதற்காய் சேர்த்த காசு.  தீக்குச்சி அடுக்குவதில் பெருசா காசு கிடைக்கலேன்னாலும், இது போல சினிமாவுக்குப் போக, பவுடர் வாங்க என்று ஒப்பேத்தலாம். இன்னைக்கு விட்டா அடுத்த வாரம்தான் கையில காசு பாக்க முடியும் என்று யோசித்தவள்.  என்ன நினைத்தாலோ பழைய ரெமி பவுடர் டப்பாவில் வைத்திருந்த, பத்து ரூவாய எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள்.

இந்தாங்க, இது தான் கடைசி! சின்னவளுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வாங்குறதுக்கு வச்சிருந்தது! தேவையானா மட்டும் செலவு பண்ணுங்க! என்று ஸ்டெல்லா சொன்னதுக்குக் காரணமே சின்ன மக விஷயத்தில அவருக்கு எப்போதும் கூடுதல் கவனம் உண்டு, அதனால செலவு செய்யமாட்டாரு அவசியமில்லாம என்பதால் தான். இவருக்கு அதன் காரணம் தெரிந்தாலும், சரிம்மா! என்று ஓட்டுச்சாப்பில் எரவானத்துல சொருகியிருந்த செருப்பை கையில் எடுத்து  பூபூ வென ஊதினார்.  தூசி நகர்ந்த பாடாய் இல்லை.  ஸ்டெல்லா, பழைய வேஷ்டி கிழிசல்  இருந்தா குடும்மா, செருப்பு ஒரே தூசியா இருக்கு என்றார், அப்படிச் சொன்னவருக்கு எல்லாம் வேஷ்டியிலும் கிழிசல் இருப்பது ஞாபகத்துக்கு வர, பதட்டமாய் இருந்தது, கொடியில தொங்குறத எடுத்துட்டு வந்துடுவாளோன்னு. வேஷ்டியில் இட்லித்துணிக்காய் கிழித்ததில், மிஞ்சியதை கொண்டு வந்து தந்தாள்.  அப்பா! இந்தாங்க... இனிமே கிழிக்க, உங்க வேஷ்டி தான்! என்று மிரட்டினாள்.

முத்தையா ஆசாரி செருப்பைத் துடைத்துவிட்டு, எரவானத்திலேயே மீண்டும் சொருகினார் துணியை. அப்பத்தான் செருப்ப எடுக்கும்போதே தொடைக்க ஞாபகம் வரும் என்று நினைத்துக் கொண்டே, வரேம்மா! முருகன் வந்து சீட்டுக்காசு கேட்டா அப்பா, சாயங்காலந்தான் வருவாருன்னு சொல்லிடு என்று வெயிலைப் பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டே கிளம்பினார். எல்லா வீடுகளையும் கடந்து, தெருவாசலில் காலை வைத்தவர், திரும்பி மகள் வாசலிலே இருக்கிறாளா? என்று பார்த்தார். ஸ்டெல்லா அங்கிருந்தபடியே கையை ஆட்டினாள். முத்தையா ஆசாரி கையை ஆட்டாது, தலையை பலமாய் ஆட்டிவிட்டு நடக்கத்தொடங்கினார்.

சுசீலா இறந்த மறுவருஷம் கொஞ்ச நஞ்சம் சேர்த்த காசெல்லாம் போட்டு இவளுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சாரு. எபினேசரோட மகன், எலிமெண்டிரி ஸ்கூல் வாத்தியாரா இருக்கான் சாயல்புரத்துல. நல்ல பயன்னு பாதிரி சொல்ல, அவனுக்குக் கட்டி வச்சாரு.  அஞ்சு பவுன் நகையும், அஞ்சாயிரம் ரொக்கமும் போட்டு சிறப்பா நடத்தி வச்சாரு முத்தையா ஆசாரி.  மூணு மாசத்துலயே அவங்கூட இருக்கமாட்டேன்னு வந்துட்டா, என்னமோ மனசுக்கு பிடிக்கல கேக்காதப்பா என்று அழுதவளை மேலும் ஏதும் கேக்க தோணலை அவருக்கு.  புருஷங்காரன் வந்தான், மய்க்கா நாளே, அவளோட துணிமணியெல்லாம் கொடுத்துட்டு, இந்த மாதிரி ஓடுகாலி எல்லாம் எங்க வீட்டுக்கு ஆகாது! என்று சொல்லிட்டுப் போயிட்டான்.  வேதனையா இருந்தது அவருக்கு, ஒருவேளை சுசீலா இருந்து பண்ணி வச்சிருந்தா, நல்லாயிருந்திருக்குமோ? நம்ம தான் சரியா புத்திமதி சொல்லாம விட்டுட்டமோ என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.

எம்.கே.புரம் ரயில்வே கிராஸ் தாண்டினப்புறம் இடது பக்கம் மாடுகளுக்கு லாடம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மாடு மல்லாக்க படுத்துக்குகொண்டு கிஸ்புஸ்ஸென்று வாயில் கொஞ்சம் நுரை தள்ளிக் கொண்டு கீழ் நோக்கி வெறித்துப் பாத்துக் கொண்டிருந்தது.  பாவம் எத்தனை தான் தாங்குமது என்று நினைத்துக் கொண்டார்.  வண்டியில் பருத்திப்பால் பார்த்த போது, இவருக்கு பருத்திப் பால் குடிச்சு எத்தனை நாளாச்சு, குடிக்கணும்னு ஆசை வந்தது, நடக்கும்போதே கால்கள் அந்தப்பக்கமாய் இழுப்பதாய்த் தோன்றியது. அப்படி என்ன கேக்குது நாக்கு? இழுத்து வச்சு அறுக்காம? என்று தன்னையே கடிந்து கொண்டு அப்பாவு செட்டியார் கடையை நோக்கி நடந்தார். கான்சாமேட்டுத்தெருவை தாண்டும் போது, முக்கில இருந்த சின்ன மாதாக்கோயிலைப் பார்த்து நெற்றியில் சிலுவைப் போட்டுக் கொண்டு கடையின் முகப்புக்கு வந்தார்.

தயங்கி கொஞ்சம் நின்றவர், மளமளவென ஆறுபடி ஏறி, கடந்தவுடன் செருப்பை இடது பக்கம் விட்டார். காலை அழுத்தி தேங்காய் நார் மிதியில் துடைத்துவிட்டு கதவின் ஓரத்தில், கல்லாவில் இருக்கும் முதலாளியின் மகன் பார்ப்பது போல நின்று கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்தவரை அவன் கண்டுகொள்ளவில்லை.  ஏதோ மும்முரமா மேசையில கவுந்துகிட்டு முக்கிய ஜோலி பாக்குறா மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டிருக்கான்! நமக்குத் தெரியாத இவன் பவுசியெல்லாம் என்று நினைத்துக் கொண்டே முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு நின்றார்.  கடையில் அவ்வளவு வியாபாரம் இல்லை அன்று.  வந்த ஒண்ணு ரெண்டு கிராக்கியும் வெள்ளிச் சாமான் விக்கிற பகுதியில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வந்திருந்த கிராக்கிகள், உசிலம்பட்டி, தேனி பக்கம் மாதிரி தெரிந்தது. தெலுங்கு பேசுவது போல இருந்தது. நாயக்கமாருகளா இருக்கும், கருகமணியும், குண்டும் போட்டிருந்தார்கள்.

கடையில் வேலை பார்ப்பவர்களில் தெரிந்தவர்கள் அங்கங்கு இருந்தபடியே முத்தையா ஆசாரியைப் பார்த்து பரிச்சய சிரிப்பு சிரித்தார்கள்.  இன்னும் எவ்வளவு நேரம் ஆக்குவானோ என்று தோன்றியது. பசி வேறு வயத்தக்கிள்ளியது, ரெண்டு இட்லி சாப்பிட்டு வந்தது பத்தலை போல.  கொஞ்சம் நீச்சத்தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கலாம், வெயிலுக்கு இதமா இருந்திருக்கும்.  சாப்பிட்ட ரெண்டு இட்லியும் நிறைய நடந்ததால் சீக்கிரம் ஜீரனம் ஆயிடுச்சு போல. வேலை ஏதாவது கொடுத்தான்னா, போகும்போது ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம், அப்படியே பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிகிடலாம். புதுக்கடைகளில் வேலை கேக்கலாம்தான், ஆனா தெரிந்த ஆள் இல்லாம நம்பி வேலை தரமாட்டார்கள். குறைஞ்சது நூறு கிராம் தங்கமாவது, ஓடமாட்டேங்கிற உத்திரவாதத்துக்கு கொடுக்கணும்.  வேலை கொடுக்குறதும், நூறு கிராமுக்கு மேல போகாம பாத்துக்குவானுங்க கடைக்காரனுங்க.  நம்மளால அதெல்லாம் தோதுப்படாது என்பது அவருக்கு தெரியும்.  அதனால தான் இங்க வந்து காய்ஞ்சு கிடக்குறது எல்லாம் என்று தன் இயலாமையை நொந்து கொண்டார்.

பால்ஸ் வேலை இவரு நல்லா பார்ப்பாருன்னு முதலாளி மகனுக்குத் தெரியும். அதனால எப்பவாவது வர்ற ஆரம், பால் நெக்லஸ் மட்டும் இவருக்கு கொடுத்தா நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இருக்கும்! ஏதாவது கொடுப்பான்! அவன் அப்பாக்கு எத்தனை வருஷமா வேலை பார்த்திருக்காரு! அதுக்காகவாவது கொடுக்கமாட்டானா என்ன? என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.  நிமிர்ந்து பார்த்தவன், அவரைத்தாண்டி பின்னால் நின்று கொண்டிருந்த கடைப்பையனை அழைத்து, டேய்! போய் மாடர்ன் ரெஸ்டாரண்டில இருந்து ரோஸ்மில்க் வாங்கிட்டு வா! நிறைய ஐஸ் போட்டு! ரெண்டா வாங்கிக்கோ! என்றான்.  இவரை அப்போது தான் பார்ப்பது போல, என்ன முத்தையா ஆசாரி? எப்ப வந்தீரு? அதுவும் கொள்ளத்தூரம்? பேச்சில் எகத்தாளம் தெறித்தது, இவருக்கே தெரிந்தது.  ஏலேய்! பால்ராஜூ, என்னவாம் முத்தையா ஆசாரிக்கு இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு? பால்ராஜு, இவரைப் பார்த்து விட்டு, பார்வையை கீழே இறக்கினான்.

சொல்லுமய்யா எதுக்கு வந்தீரு? சோலி கிடக்கு எனக்கு! என்றான். அவமானமாய் இருந்தது, இவருக்கு. ஒன்றும் சொல்லாமல், சுற்றுமுற்றும் பார்த்தார். கடையில இருக்குற ஆட்கள் எல்லாம், இவரையே பார்த்தார்கள், கிராக்கிகள் கூட திரும்பி பார்த்ததாய்ப் பட்டது.  இல்ல தம்பி, அப்பாவ பாக்கலாம்னு வந்தேன், சொந்தமா கம்பிமெஷின் போட்டிருக்கேன். அதான் அப்பாக்கிட்ட சொல்லிட்டு,  நம்ம பயககிட்டயும் சொல்லிட்டுப்போலாம்னு வந்தேன்.  நம்மகடைக்குன்னா கூலியக் கொஞ்சம் குறைச்சுக்கிடலாம்னு அப்பாக்கிட்ட சொல்லிடுங்க தம்பி! நான் இன்னொரு நாளு வந்து அப்பாவ பாக்குறேன்! என்று செருப்பை மாட்டிக் கொண்டு ஏதோ சாதித்தது போல படியிறங்கினார் முத்தையா ஆசாரி.

Tuesday, January 11, 2011

வழி மயக்கம்...

மழை இன்னும் விடவில்லை போல,  நேற்றிலிருந்து விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது மழை விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது மாதிரி இருந்தது. ஆனால் சிலசமயம் இந்த சத்தத்தை மட்டும் வைத்து மழைவிழுகிறது என்று தீர்மாணமாய் சொல்ல முடியாது.  வீட்டின் முகப்பில் இருக்கும் மருதமரத்தின் கிளைகள் விரிந்து ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு மேலே படர்ந்திருக்கும் குடை மாதிரி.  அதன் இலைகளில் நின்று விழும் மழைத்தண்ணீரின் சத்தம் ஏமாத்திவிடும் மழை பெய்கிறது என்பது போல.  பத்மாவதி அம்மாவிற்கு எழுந்திருக்க முடியவில்லை, இடுப்பு வலியும், கெண்டைக்கால் சதைப்பிடிப்பும், படுக்கையோடு வஜ்ரம் போல ஒட்டியது உடம்பை. ஆனாலும் பிடுங்கிக் கொண்டு எழுந்ததுபோல எழுந்த பத்மாவதி அம்மா, மழை இன்னும் பெய்கிறதா என்பதை தெரிந்து கொள்ள, பாயில் நின்று கொண்டே ஜன்னலில் மூடியிருந்த சாக்குப் படுதாவை விலக்கிப் பார்த்தாள். தெருவிளக்கின் வெளிச்சத்தின் அடியில் மழை நின்று விட்டது தெரிந்தது.  அதிசயமா தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது அன்று.

தெருவிளக்கின் வெளிச்சம் ஜன்னலில் இருந்து வழிந்து மழை ஈரமாய் பரவியது. வெளிச்சம் தொட சிணுங்கிக் கொண்டே, தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திவிட்டு புரண்டு படுத்துக் கொண்டாள் சுமதி. போர்த்தியிருந்த போர்வைக்கு வெளியே கசிந்து இருந்த அவளின் முடிக்கற்றைகளில், தெருவிளக்கின் வெளிச்சம் பட்டு மினுக்கிக் கொண்டிருந்தது.  பத்மாவதி அம்மா, காலால் படுக்கையை ஓரந்தள்ளி விட்டு, தரையில் கால் வைக்க மண் தரை குளிர்ந்து கிடந்தது. சுமதியைத் தாண்டி அடுப்பங்கரைக்குப் போனவள்... அடுப்பின் மேலுள்ள சுவரில் இருந்து வழிந்த மழைத்தண்ணீர் அடுப்பெங்கும் இறங்கி, சுமதியின் படுக்கையின் ஓரத்தையும் நணைந்திருந்தது கண்டதும், ஈரமானது கூட தெரியாம தூங்குது பாரு இது என்று நினைத்துக் கொண்டாள். கூரை ஒழுகுவதை வீட்டுக்காரரிடம் சொல்லியும், ஒண்ணும் பிரயோசனமிருக்காது. இஷ்டமில்லேன்னா வீட்டக்காலி பண்ணும்மா! இதுக்கு மேல இத ரிப்பேரெல்லாம் பண்ணமுடியாது! ஒரேடியா இடிச்சுட்டு வேற கட்னாத்தான் உண்டு என்று சொல்லிவிட்ட பிறகு அதைக் கேட்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது பத்மாவதி அம்மாவிற்கு. 

சுமதி அம்மாவை முழுதும் மறந்து விட்டாள், பத்மாவதி அம்மா தான் உலகம் இப்போது அவளுக்கு. சுமதியை எழுப்பி பத்மாவதி அம்மா படுத்திருந்த இடத்தில் படுக்கச் சொல்லிவிட்டு, கீழே விரித்திருந்த படுக்கையை எடுத்து ஓரமாகப் போட்டாள்.  விசேஷமான படுக்கை, கீழ்ப் புறம், பிளாஸ்டிக் தார்பாலினும், மேலே கோனிப்பையும் வைத்து, உள்ளே பழைய துணிகளை போட்டுத் தைத்த படுக்கை. பிளாஸ்டிக் தார்பாலின் இருக்கும் சைடு கீழே போய்விடும், ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க. மேலே கோனிப்பை இருப்பதால் கொஞ்சம் கனகனன்னு இருக்கும்.  பழைய துணிகள் மெத்து கொடுக்கும், இது சுமதியா யோசிச்சு ரெடி பண்ணிய படுக்கை.  பத்மாவதி அம்மாவிற்கும் இதே போல தான் படுக்கை. சொகுசாத்தான் இருக்கு புள்ள! ராசாத்தி! ஒன் சாமர்த்தியம் ஆருக்கும் வராதுடி! என்று நெட்டி முறித்தாள். சுமதி ஒம்பதாவது தான் படிக்கிறாள் நீச்சத்தொட்டி மாநகராட்சிப் பள்ளியில், பத்மாவதி அம்மாவின் மகளோட மகள் தான் சுமதி. சுமதி, பத்மாவதி அம்மாவிடம் வந்து ஏழு வருஷம் ஆகிவிட்டது.

பத்மாவதி அம்மாவின் மருமகன் கோவிந்தசாமி, சைக்கிள்ல தெற்குவெளி வீதி கிரைம் பிராஞ்ச் பக்கத்துல திரும்பும் போது பாண்டியன் பஸ், ஓரமாக இடித்து, பிளாட்பாரத்தின் பின் மண்டை மோதி, காதுகளில் இருந்தும், பின் மண்டையில் இருந்து ரத்தம் பெருகியோட, பெரியாஸ்பத்திரி கொண்டு போவதற்கு முன்னால் இறந்து போனான். யானைக்கல்ல கமிஷன் மண்டி வச்சிருக்கிற ரெட்டியார்ட்ட வேலை பார்த்து வந்தான். அவன் போனவுடனே மதுரவல்லியும், சுமதியும், அவர்களின் சோலை அழகுபுரத்து வீட்டை விட்டுவிட்டு, பத்மாவதி அம்மா இருக்கும், புலிப்பாண்டியன் கோயில் தெருவுக்கு வந்து விட்டார்கள்.  கொஞ்ச நாள் நல்லா தான் இருந்தா மதுரவல்லி, தானுண்டு தன் வேலையுண்டு என்று. அக்கம்பக்கம் பேச்சு கிடையாது.  சுமதிக்கு வந்து கொஞ்ச நாள்லயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை சூடு தாங்காமயோ என்னமோ அம்ம போட்டுவிட்டது.  மூணு தண்ணி ஊத்திய பிறகு, ஸ்கூலுக்குக் கொண்டு போய் விடப்போன மதுரவல்லி, ரொம்ப நேரமாகியும் திரும்பவே இல்லை. பத்மாவதி அம்மாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல், பழனிச்சாமியிடம் போய் பார்த்துவிட்டு வரச்சொன்னாள்.

அடுப்பில் அரிசியப் போட்டு விட்டு எரிகின்ற விறகையே பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மாவதி அம்மா.  விறகின் எரியாத முனையில் இருந்து எண்ணெய் கசிந்து கொண்டு வருவது போல நுரையாய் வந்து கொண்டிருந்ததது.  என்னாச்சு இவளுக்கு, கோவிந்தசாமி இறந்ததுல இருந்தே இப்படித் தான் இருக்கா, கோயில் வெளிபிரகாரத்துல கோலம் போட வாடின்னு சொல்ல, வேண்டாம்னு சொல்லிப்புட்டா! சொந்தபந்தம்னு யாரு வீட்டுக்கு வந்தாலும் பேசுறது கூட கெடையாது, பேசாட்டிப் பரவாயில்ல, சிரிக்கலாம்ல? அதுவும் கெடையாது.  என்ன பண்ணப்போறோமோன்னு பத்மாவதி அம்மாவுக்கு கவலையா இருந்தது. பத்மாவதி அம்மாவுக்கு, அவளுடைய கணவன் இறந்த பிறகு கூடலழகர் பெருமாள் கோயில் வெளிப்பிரகாரத்துல கோலம் போடுறத ஒரு வேலையா செய்து கொண்டிருக்கிறாள்.

எழுபது வயதில் பாதம் வைத்து திருச்சூர்ணமிட்டு, குனிந்து நிமிர்ந்து சுருங்கி, நரம்புகள் ஓடும் கைகளில் பிரமாண்ட கோலங்கள், பிரகாரம் முழுக்க அடைக்கப்போடும்போது வேதனை ஏதுமில்லை. பத்மாவதி அம்மாள் சின்ன வயதில் மார்கழி மாதம் போட்ட கோலங்களின் நீட்சி தான் இந்த பிரகாரங்களிலும் தொடர்கிறது போல என்று நினைத்துக் கொள்வாள். அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு முன்பாகவே குளித்து கோயிலுக்கு வந்துவிடுவாள்.  ஆண்டாள் சன்னதி பின்னால் இருக்கும் மாட்டுத்தொழுவத்தில் வைத்திருக்கும், சுண்ணாம்புப் பவுடரும், செம்மண்ணும் எடுத்து கரைத்து, முதல் கோலம் ஆண்டாள் சன்னதியில் தான் இருக்கும். அதற்கு பிறகு, பெருமாள் சன்னதி, மதுரவல்லித்தாயார் அதற்குப் பிறகு தான் வெளிப்பிரகாரம்.   ராஜம்மாவுக்கு, நிர்வாக ஆபீஸ் பெருக்குவதும் சிறு தெய்வங்களின் சன்னதிகளில் கோலம் போடுவதும் தான் வேலை.  ராஜம்மா கோயில் அலுவலகச் சிப்பந்தி, மாசமானா நானூறு ரூபாய் சம்பளம்.  பத்மாவதி அம்மாவுக்கு அதுல பாதி தான் கிடைக்கும்.

ஆத்தா! என்று பழனிச்சாமியின் குரல் கேட்டது வாசலில்.  வந்துவிட்டான், போல என்று கதவைத் திறந்து வெளியே வந்தவள்.  என்னய்யா பாத்தியா மதுரத்தை? பார்த்தேன் ஆத்தா, ஆனா அது வராது! ஏன்யா? என்று குரலுடைந்து கேட்டாள் பத்மாவதி அம்மா. அது என்னவோ கோட்டி பிடிச்ச மாதிரி இருக்கு ஆத்தா, கூப்பிட்டா வரலை, மேல கிடந்த சீலையவும் காணோம்! நண்ம தருவார் கோயிலுக்கு முன்னாடி தான் இருக்கு. வரமாட்டேங்கி! நீ வந்து கூப்பிடு ஆத்தா, உன் மூஞ்சப் பாத்தா ஒருவேளை வரலாம்! போகும்போது சொல்லாத்தா! என்று பழனிச்சாமி திரும்பி விட.  பத்மாவதிக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. இதுக்கு வைத்தியம் பாக்கணும்னா எங்க போறது? யாரக்கேக்குறது ஒண்ணும் புரியாமல் அவளுக்கு அழுகையாய் வந்தது.

பழனிச்சாமி போயி அவ பொஞ்சாதிட்ட சொல்லிட்டிருப்பான், அவ போயி ஊரெல்லாம் தமுக்கடிக்கப்போறா! அவம்பொஞ்சாதிய பத்மாவதி அம்மாவுக்கு கண்டாலே ஆகாது... பெரிய சிலுப்பட்டை! இவனுக்கு வந்து வாச்சிருக்காளே! போய் ஒரு நடை பாத்துட்டு வந்துடலாமா என்று தோன்ற, பழனிச்சாமிய கூப்பிட தயங்கி தான் பழனிச்சாமி வீட்டுக்குப் போனாள். பத்மாவதி அம்மா இருக்கிற வீட்டுக்கு பின்புறம் தான் அவன் வீடு,  போய் பாக்கையிலே வெளிய தான் ஒக்காந்திருந்தான், அவனும் அவன் பொஞ்சாதியும்.  இன்னம் கடைக்குப் போகலையா பழனி? போகணும்த்தா, இவ கஞ்சி குடுக்குறேம்னா அதான்.  சரி குடிச்சிட்டு வா, நானும் ஒரு சோலியா டவுனுக்குப் போகணும், ஒங்கூடயே வாரேன்! என்று திரும்பவும் வீட்டிற்கு நடந்தாள். 

அந்த சின்ன சந்துக்குள்  பத்து வீடுகள் இருக்கும், இதில் எல்லா வீடும் தெற்கப்பாத்து இருக்கு, பத்மாவதி அம்மா வீடு மட்டும் வடக்கப்பாத்து இருக்கும். எல்லா வீடும் ஒரு வரிசையில் இருக்க, பின்னாடி கிணற்றுப்பக்கம், மரத்தின் நிழலில் இருக்கும் வீடு அவளுடையது. மிகக்குறைந்த வாடகைங்கிறதால, ஆஸ்பெஸ்டாஸ் கூரை, மண்தரை, கதவில்லாத ஒற்றை ஜன்னல் எல்லாம் பெரிய குறையாத் தெரியலை பத்மாவதி அம்மாவுக்கு. அவளுடைய கணவர் இறந்த பிறகு, இந்த வீட்டுக்கு குடி வந்து விட்டாள் பத்மாவதி அம்மாள். சுமதிக்கு தான் இந்த வீடே பிடிக்கலை, மதுரவல்லி அதைப்பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் இருந்தாள்.

சுமதி வருவதற்குள் அவங்க அம்மாவை இங்க கொண்டு வந்துரணும், இதுமாதிரி ஒரு பிரச்னை அம்மாவுக்கு இருப்பது சுமதிக்கு தெரியவே கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள் பத்மாவதி அம்மா. சுமதி வீட்டுக்கு வர எப்படியும் நாலு மணி ஆயிடும், இன்னும் மூணு மணி நேரம் இருக்கு, அதுக்குள்ள மதுரவல்லிய பாத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா நல்லது என்று நினைத்தவள், அய்யய்யோ, சோறு வடிச்சோம்! ஊத்திக்கிட ஒண்ணும் செய்யாம வந்துட்டமேன்னு... ஒரு புளிச்சாறு வைச்சு துவையல் அரைச்சிடலாம்... பழனிச்சாமி வாரதுக்குள்ள,  சுமதி வந்தவுடனே பசிக்குதுண்ணு சொல்வா என்று நினைத்துக் கொண்டு, அதற்கான வேலைகளை கவனித்தாள்.

பழனி வந்துவிட்டது தெரிந்தது வாசலில் ஆள் வந்ததும், திடீரென்று வீட்டிக்குள்ளே இருட்டாயிடும்.  துவையலை அம்மில இருந்து வழிச்சு, கிண்ணத்துல போட்டு அடுப்பங்கரைக்கு மேல வச்சுட்டு, லேசா கனன்று கொண்டிருந்த கங்குகளுக்கு மத்தியில் புளிச்சாறை வைத்துவிட்டு வந்தாள். சுமதி வரும்போது சூடா இருந்தா நல்லாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டே, கதவை இழுத்து சாத்தி, அமுக்கு பூட்டை பூட்டி விட்டு, சாவி இருக்கா முந்தானையில் என்று தடவ கையில் அகப்பட்ட சாவியை எடுத்து இடுப்புக் கொசுவத்தில் சொருகிக்கொண்டு, ரிக்‌ஷால போயிடலாமாய்யா? நான் காசு வச்சிருக்கேன் என்று பழனிச்சாமியிடம் சொல்ல, அவனும் சரியென்றான். ரிக்‌ஷாவில் போகும்போதே எல்லாதெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள். ஈஸ்வரா, ஏழுமலையானே, குளிர்மாமலை வேங்கடவா, பெருமாளே, முருகா என்று மனசுக்குள் தொழுது கொண்டே வந்தாள் வழியெங்கும், அவளையறியாமல் வாய் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

மீனாட்சி டாக்கீஸ் வழியா போய், தெக்கு வெளி வீதிய பிடிச்சு, அப்படியே  நண்மை தருவார் கோயிலுக்குப் போயிடுப்பா... கோயில் வாசலை அடைந்த போது, ஜிகர்தண்டா கடைக்கு முன்னால் கடைக்கு வந்த கூட்டம் இருந்தது. பழனிச்சாமிய ஒரு பக்கம் பார்க்கச் சொன்னவள், மதுரவல்லி எங்காவது தென்படுகிறாளா என்று கோயிலுக்குள் புகுந்து பார்க்க ஆரம்பித்தாள், பத்மாவதி அம்மாள்.  பழனிச்சாமி இவளை நோக்கி வேகமாய் வருவது தெரிய, என்ன பழனி! தட்டுப்பட்டாளா? என்றவளை இழுத்துக்கொண்டு ஜிகர்தண்டா கடையை ஒட்டி இருக்கும், சின்ன சந்திற்குள் புகுந்தவன், அவளை உள்ளே விட்டு வெளியே வந்துவிட்டான்.  போட்டிருந்த துணியெல்லாம் சுருட்டி தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துக் கிடந்தாள் மதுரவல்லி.

அவசர அவசரமாக அவள் கையில் சுருட்டி வைத்திருந்த சீலையை எடுத்து அவளுக்கு போர்த்திக் கொண்டே ஓவென்று அழுதாள் பத்மாவதி அம்மா. யார் யாரோ சந்தின் முனையில் இருந்து எட்டி பார்ப்பது தெரிந்தது. எல்லாரையும் மறைத்துக் கொண்டு நின்றான் பழனிச்சாமி. ரிக்‌ஷாக்காரனிடம் கடைக்கு அருகே வரச்சொல்லி, இவர்களோடு வரமறுத்த மதுரவல்லியை, இழுத்துக் கொண்டு ரிக்‌ஷாவில் ஏறினர்.  வீட்டிற்கு போகும்வரை வெளியே குதித்துவிட முயன்று கொண்டே இருந்தாள். அய்யோ, இவளை எப்படி சமாளிக்கப் போறோம், சுமதி பயந்து போயிட மாட்டாளா? அவளுக்கு மனசுல பாதிப்பு வந்திடாதா? என்று பல கேள்விகள் வந்தது பத்மாவதி அம்மாவிற்கு. வழியெங்கும் தாரைதாரையாய் அழுது கொண்டே வந்தாள்.  பழனிச்சாமிக்கு எப்படி இவளைத்தேற்றுவது என்று தெரியாமல், ஒன்றும் பேசாமல் ரோட்டை வெறித்து பார்த்துக் கொண்டே வந்தான்.

வீட்டிற்குள் வந்து இறங்கியவுடன், பழனி சந்தோஷம்யா, ரொம்ப உதவியா இருந்துச்சு நீ கூட இருந்தது, யார்ட்டயும் இதப்பத்தி பேசாதய்யா! என்றாள்.  நான் யார்ட்டயும் சொல்லல ஆத்தா! நீ பேசாம குனசீலத்துக்கு கொண்டு போய்டறியா... அங்க இதுக்கெல்லாம் வழி இருக்கு, இல்லேன்னா நாகூரு, என்ன செய்யப்போறேன்னு சொல்லு ஆத்தா, அதுக்குத் தக்கன ஏதாவது செய்யமுடியுதான்னு பாக்குதேன் என்றவன், ஏதாவது தேவைன்னா கூப்பிடு ஆத்தா, எந்நேரமா இருந்தாலும் பரவாயில்ல! கதவத் தட்டு, நான் வீட்டுக்குப் போறேன்! பழனிச்சாமி சென்றதும், பத்மாவதி அம்மாவுக்கு குழப்பமாய் இருந்தது, சுமதி வந்தா, அவ வேற ஆயிரம் கேள்வி கேப்பா, என்னன்னு சொல்லி சமாளிப்பேன். பெரியாஸ்பத்திரில கூட இது மாதிரி புத்திக் கோளாறு ஆனவங்கள வச்சு பார்க்குறாங்கன்னு யாரோ சொல்லியிருக்காங்க, ஆனா இந்த வயசுல நம்மால அல்லாடமுடியுமா தனியா? தனியார் ஆஸ்பத்திரில காட்டவும் வசதியில்ல... இந்த வேதனை எனக்கு தாங்குமாய்யா என்று பெருமாளின் படத்துக்கு முன்னால் நின்று பலதையும் நினைத்துக் கொண்டு அழுதாள். 

குனசீலம் கொண்டு போனா வழியிருக்குன்னு சொன்னானே, பழனிச்சாமி, அங்க போனா என்ன என்று யோசித்தவள். அது தான் சரி என்று முடிவு செய்தாள். பழனிச்சாமியை அழைக்க, வெளியே வந்த பழனிச்சாமியின் மனைவி, வாங்கம்மா! அவரு எல்லாம் சொன்னாரு, ரொம்ப வேதனையா இருந்துச்சு.  உள்ள வாங்க! என்று மறுபடி அழைக்க... பழனி!!?? என்று இழுத்தாள்.. இருக்காரு!  மாமா! என்ற குரலின் இறுதியில் நின்று கொண்டிருந்த பழனிச்சாமி, என்னாத்தா செய்யணும்? ஒண்ணுமில்ல!  நான் அவளைக்கூட்டிக்கிட்டு குனசீலம் வரை போயிட்டு வர்றேன், என்ன வழியிருக்குன்னு பாக்குறேன், இன்னைக்கு ரவைக்குள்ள வரலையிண்டா, சுமதிய உங்க வீட்ல படுக்க வச்சுக்கிடுங்க! அம்புட்டு தான் பழனி! எனக்கு யோசிச்சு மாளலை, நினைக்க நினைக்க மனசுல கல்லப்போட்டா மாதிரி அழுத்துது என்றாள் பத்மாவதி அம்மா.  பழனிச்சாமியின் மனைவி, அதுக்கென்ன அம்மா, நான் பாத்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க, வேணும்னா இவரையும் கூட்டிக்கிட்டுப் போங்க! என்றாள்.  இல்லைல்ல... நான் மட்டும் போயிட்டு வந்துடுறேன்... அவருக்கு எதுக்கு வீனா அலைச்சல்... சுமதிய மட்டும் பாத்துக்கிட்டா போதும் என்ற வீட்டின் சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டு, வீட்டை நோக்கிப் போனாள், பழனிச்சாமியும் உடன் வந்தான்.

மதுரவல்லியை ஒருவழியாக புடவை கட்டவைத்து, பின்பக்கம் ஊக்குகளை மாட்டிவிட்டு, அவள் கழட்டமுடியாதபடி செய்தாள் பத்மாவதி அம்மா.  பழனிச்சாமி ஆட்டோ ரிக்‌ஷா பிடித்து வரப்போனான், தனியா போறதாயிருந்தா, நடந்தே போயிடலாம், இந்தாதான் இருக்கு, ஆனா இவள வேற கூட்டிட்டுப் போகணுமே, ஆட்டோ ரிக்‌ஷாலயே போயிடலாம். அங்க இங்க தடவி வச்சிருந்த காசெல்லாம கையில எடுத்துக்கிட்டு, மதுரவல்லியை வலுக்கட்டாயமாக ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற்றி பஸ் ஸ்டாப்புக்கு விரைந்தாள். மெஜுரா காலேஜ் பஸ்ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டு, மாட்டுத்தாவணிக்கு பஸ் பிடித்தாள் பத்மாவதி அம்மா. சுமதியை நினைத்து கவலையா இருந்தது பத்மாவதி அம்மாவிற்கு. மதுரவல்லிக்கு முன்னமே இந்த பிரச்னை இருந்திருக்கு போல, அதனால ஒரு சொரத்தே இல்லாமல், எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டே இருந்திருக்கா! சொல்ற வேலையெல்லாம் செய்றதால, பத்மாவதி அம்மாவுக்கு, இவ்வளவு சீரியஸா ஆகும்னு தெரியாமப் போச்சு. தன் மேல் சாய்ந்து கொண்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவள், ஏனோ அமைதியாய் வந்தாள்.  மாட்டுத்தாவணியில் இறங்கியதும் அவளை இழுத்துக் கொண்டு திருச்சி பஸ்ஸில் ஏறினாள். 

மதுரவல்லி வழியெங்கும் தொந்தரவில்லாமல் தூங்கிக் கொண்டே வந்தாள்.  பஸ்ஸில் இருந்த சிலர், மதுரவல்லி உடுத்திருப்பதை வினோதமாய் பார்த்தது போல இருந்தது பத்மாவதி அம்மாவுக்கு. பத்மாவதி அம்மா தன்னை சகஜமாய் காட்டிக் கொள்ள அவர்களை எல்லாம் பார்த்து சிரித்து வைத்தாள். திருச்சி வந்து சேர எட்டு மணி ஆகிவிட்டது. இன்னும் உறங்கி கொண்டிருந்தவளை எழுப்பி,  இறக்கி முகத்தை கழுவி விட்டு, கிருஷ்ணா பவனில் ஒரு தோசை வாங்கிக் கொடுத்தாள்.   நல்லா சாப்பிட்டாள் மதுரவல்லி. சாப்பிட்டு முடித்ததும், வாயைக் கழுவி விட்டு, ஒரு பழக்கடையின் முன்னால் இருந்த சிமெண்ட் பெஞ்சின் முன்னால் உட்காரவைத்து விட்டு, இங்கேயே இரும்மா நான் வந்துடறேன் என்ற பத்மாவதி அம்மா, சற்றுத் தள்ளியிருந்த இன்னொரு பெஞ்சில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். என்னவோ நினைத்துக் கொண்டு விடுவிடுவென்று நடந்து காலியாயிருந்த மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பத்மாவதி அம்மாள். 

Thursday, January 06, 2011

சுனை நீர்...

அங்கணக்குழிக்குள்ள கிடந்த சாமானெல்லாம் ஒருவழியா தேய்ச்சுட்டு நிமிரும் போது அப்படியே குறுக்கு பிடிச்சுக்கிறா மாதிரி இருந்தது, தாள மாட்டாம வலி.  இந்தப் பலக வேற ஒரு பக்கம் ஆணி புடுங்கிட்டு, ஒருசாய்ச்சு உக்காந்து பாத்திரம் தேய்ச்சதில ஒரு பக்கம் பின்னாடியெல்லாம் கடுத்துப் போச்சு, தேய்ச்ச பாத்திரத்த எல்லாம் கவுத்திப் போட்டுட்டு, மெதுவாக நிமிர்ந்த பூஞ்சோலைக்கு நாளைக்கு காலைல நல்ல தண்ணிக்கு எழும்பணுமேன்னு இப்பவே அச்சலாத்தியா இருந்தது.  என்ன ஒரு நாறப் பொழப்பு இது?  மதுரையில பொறந்து இங்க வந்தா வாக்கப்படணும், எல்லாம் எந்தலையெழுத்து? பூஞ்சோலை புருஷனுக்கு மதுரையா இருந்தாலும், பொழப்பு இங்க தான். இங்க வந்து தான் மெஷின் கட்டிங் பட்டறை வச்சிருக்காரு, மதுரையிலேயே இருந்தா, போட்டி அதிகமாம், சல்லி சேக்க முடியாதாம். எல்லாத்துக்கும் காரணம் இருக்கு இந்த உலகத்தில.

பூஞ்சோலைக்கு இந்த வருஷம் தான் கல்யாணமாச்சு, அவ இந்த ஊருக்கு வந்ததில இருந்து இதே தண்ணிப் பிரச்னை தான். மதுரையிலே என்னமோ வெய்யக்காலத்துல தான் வரும் தண்ணீப்பிரச்னை. மதுரைல இருக்கிற தண்ணீ பிரச்னையே வேறமாதிரி, சமைஞ்சு வீட்டுக்குள்ளேயே கிடக்கிறவளுக்கு, தண்ணீ வரநாளுக்க தான் திருவிழா.  நாலுமணிக்கே கீழ் வீட்டு மாமா, மாதுவையும், கோபாலையும் எழுப்பி விட்டுடுவாரு. எல்லோரும் சேந்தே தண்ணீக்கு போய் வரிச போட்டு காத்திட்டிருப்பது ஒரு மாதிரி நல்லாயிருக்கும். இங்க அந்த மாதிரி எந்தவிதமான சந்தோசமும் இல்லை. இங்க வெளியூரில் இருந்து வாக்கப்பட்டு வந்த யாருக்கும் இது ஒரு பெரிய குறையாவே இருக்கு. இந்த ஊருக்கே இது ஒரு சாபம் மாதிரி, எப்பவுமே தண்ணிக்கு லோல்பட்டுத்தான் ஆகணும்  என்று நினைத்துக் கொண்டே மெதுவா பட்டாசாலுக்கு வந்து, நிலைக்கண்ணாடியில முடிய ஒதுக்கிட்டு, ஸ்டிக்கர் பொட்ட திருத்தினாள்.

வயிறு ரொம்ப பெருசா ஆயிடுச்சு, வெளிச்சம் பட்டா வயித்துக்குள்ளே அசையறது தெரியுது.  கை வைத்து அசைவை கவனிக்க அவளுக்கு சந்தோஷமாயும் இருந்தது, அழுகையும் வந்தது. அவருக்கு இதிலெல்லாம் கவனம் இல்லை. வேலை முடிஞ்சிட்டு வீட்டுக்கு வர பத்து, பதினோரு மணி ஆயிடும். முக்கால்வாசி நேரம் வீட்ல சாப்பிடுறது இல்லை, சரக்கடிச்சிட்டு வர்ற வழியிலேயே புரோட்டா திண்ணுட்டு வந்து படுத்துடறது, பெரிசா எதிலும் ஈடுபாடு கிடையாது. இவ உண்டான விஷயம் கூட அவருக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துடலைன்னு இவளுக்கு தோணியது. ரெண்டு மாசம் தள்ளிப்போன பின்னாடி தான் டாக்டர் கிட்டவே போனா பூஞ்சோலை. டாக்டர் சரோஜா பாத்துட்டு எத்தனை நாளாச்சு பீரியட்ஸ் வந்து என்ற போது ரெண்டு வாரம் ஆச்சுன்னு பொய் சொல்லிட்டா, அவங்க ஏன் முன்னாடியே வரலைண்ணு சத்தம் போடுவாங்களோன்னு பயம்.  ஆனாலும் அவங்களுக்கு ஏதோ சந்தேகம் இருந்தா மாதிரி தான் இருந்தது, ஒண்ணும் கேட்டுக்கிடலை.

பாவாடைய இறுக்கிக் கட்டமுடியலை, பாவாடையே கட்டாம, பேசாம நல்ல பருத்திச்சேலை மட்டுமெ கட்டிக்கிட்டா சுகமா இருக்கும். அதும் பழம்புடவைன்னா வயித்த யாரோ பிரியமானவங்க பிடிச்சுக்குற மாதிரி இருக்கும்னு தோன்றியது அவளுக்கு.  கண்ணாடிய விட்டு நகன்று, நேற்று வாங்கி வந்த வாழைப்பூவ எடுத்து சொளகுல போட்டுக்கிட்டு முன்நடை திண்டில் வந்து உட்கார்ந்தாள்.  பட்டாசால், முன் நடையவிட உயரமா இருக்கிறதால, காலக் கொஞ்சம் அகலமா விரிச்சு உட்கார வசதியா இருக்கும். முன் நடையிலேயே சிமெண்ட் தொட்டில தண்ணீ இருக்கிறதால, வெறுங்கால வைக்கும்போது குளுகுளுன்னு இருக்கும். வாழப்பூவை ஆய்ந்து, ஒவ்வொரு பூவிலேயும் இருக்கிற நரம்ப பிடுங்கிக் கொண்டிருந்த போது அவளுக்கு மாதுவின் ஞாபகம் வந்தது. இன்னைக்கு காமாட்சிஅம்மன் கோயில் பொங்கலுனால மாது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும்னு பிரபா அண்ணே சொல்லிட்டுப் போச்சு. மாது பொங்கலுக்கா வருது, இவளுக்காகத்தான் வருதுங்கிறது பிரபா அண்ணனுக்குத் தெரியாது.

மாது மதுரையில் இவர்கள் குடியிருந்த வீட்டு மாமாவோட முதப்பையன்.  கருப்பா, உயரமா, களையா இருக்கும். அவங்க வீடு இவங்க வீட்டு காம்பவுண்டிலேயே இருந்தது. இவளுக்கு கல்யாணம் ஆகும்போது அது காலேஜுல ரெண்டாவது வருஷம் பி.காம் படிச்சுட்டு இருந்தது, மதுரை வெள்ளைச்சாமி நாடார் காலேஜுல.  நல்லாப் படிக்கும், இவளுக்குக்கூட பத்தாவது படிக்கும்போது கணக்கெல்லாம் சொல்லித்தரும். அது சொல்லிக்குடுக்குறது புரியலேண்ணா கோபம் பயங்கரமா வரும், மண்டையிலே குட்டும். ஆனாலும் இவ மேல தனிப்பிரியம் அதுக்கு.  அதுக்கு வாழப்பூவுக்குள்ள இருக்கிற மொக்குன்னா ரொம்ப பிடிக்கும்.  அதுக்காகவே இவளின் அம்மாவும், மாதுவின் அம்மாவும் வாழப்பூ ஆயும்போதெல்லாம் மாதுவைத் தேடுவாங்க.  மாதுவை எல்லாருக்கும் பிடிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர்ல கூட நிறைய பிரண்ட்ஸ் அதுக்கு. அது எல்லார்கிட்டயும் பிரியமாப் பேசும், அதோட குரலே ஒருமாதிரி கேட்க சுகமா இருக்கும். மாதுவுக்கு ஜேசுதாஸ் பாட்டுன்னா உயிரு, கொஞ்சம் கொஞ்சம் ஏசுதாஸ் மாதிரியே பாடும் கூட.  வருஷம் 16 பாத்துட்டு அதே மாதிரி பாடிக்கிட்டு இருக்கும், கண்மணியே ராதையெனும்...னு.

வாழப்பூவை ஆய்ந்து முடித்து, வாழப்பூ மொக்கை தனியாக எடுத்து மாடத்தில் வைக்க எழுந்த போது, ஒரு மாதிரி கண்ணைக்கட்ட சுவற்றைப் பிடித்துக் கொண்டாள். மெதுவாய் தொட்டிப்பக்கம் நகர்ந்து, சில்லென்ற தண்னீரை முகத்தில அடித்துக் கொண்டு, கொஞ்ச சுதாரித்தவள், வாழப்பூ பொறியல் பண்ணுவதை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, கட்டிலிலே சாய்ந்தாள்.  அப்போதான் ஃபேனைப் போடாம படுத்துட்டமேன்னு தோன்றியது, எழுந்திரிக்க சோம்பல் பட்டு அப்படியே படுத்தவள், உறங்கியும் விட்டாள்.  யாரோ கதவைத் தட்ட எழுந்தவள் மணி ரெண்டானது தெரிந்ததும், ஒண்ணுமே செய்யலையே இன்னும், அவரு சாப்பிட வந்துடுவாரே என்று நினைத்துக்கொண்டே வாசலில் யாரென்று பார்க்க கதவைத் திறந்தவள், பக்கத்து விட்டு ஈஸ்வரி இருப்பதை பார்த்துவிட்டு,
என்னடி! பள்ளிக்கூடம் போகலையே வீட்ல இருக்க? இன்னைக்கு காமாச்சியம்மன் கோயில் பொங்கல்னு மத்தியானமே லீவு விட்டுட்டாங்க! என்றவள், அக்கா! செம்மண் உருண்டை இருக்காக்கா, வாசல்லா பெரிசா தேர்க் கோலம் போடச் சொல்லுச்சு அம்மா!
தாரேன், அப்படியே என் வீட்டு முன்னாடியும் போட்டுடறியா? தேர்க்கோலம் வேண்டாம், மயில் கோலம் போட்டுடு! எனக்கு மயில்கோலம் தெரியாதே! என்றவளிடம், ஒரு கோலப்புத்தகத்தையும், பாத்ரூம் பக்கத்துல இருந்த இரண்டு செம்மண் உருண்டைகளையும் கொடுத்தவள், ஏடி! வெயில் தாழப் போடுடி..இப்பப் போட்டா, சின்னப்புள்ளைக விளையாடுறேன்னு அழிச்சுப்புடுவாங்க என்று வீட்டுக்குள்ளே திரும்பினாள்.

வேக வேகமா பாசிப்பருப்பை கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்தி வேகப்போட்டுட்டு, பருப்பு வேகறதுக்குள்ள அரிசி களைஞ்சு உலையும் ஏத்திவிட்டு வந்தவள், அதிகம் வேர்த்து ரவிக்கையோரமெல்லாம் தொப்பலாய் நனைந்து விட அதை மாற்றும் போது தான் கவனித்தாள். வழக்கத்திற்கு அதிகமாய் மாரு இப்போ பஞ்சுபோல இருப்பதை, மாருல பால் வர்றதுக்கு முன்னால இதுபோல ஆகுமோ, யாரைக்கேக்கலாம் என்று நினைத்தவள், சரி டாக்டர்கிட்டயே செக்கப்புக்கு போகும்போது கேட்டுக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.  நிறைய மாற்றங்களுடன், உடல் அவஸ்தையும் வேதனையும், உதவிக்கு ஆளில்லாத தனிமையும் அவளுக்கு மேலும் சிரமமாய் இருந்தது. தனியாய் இருக்கும் போதெல்லாம், பழைய நினைப்புகள் மட்டும் தான் அவளுக்குத் துணைஎன்று தோன்றியது.

அவரு சாப்பாட்டுக்கு வர நேரமாச்சு, அவரு வருவதற்குள் சமைக்கணும் வரும்போதே வெண்ணித்தண்ணியை கால்ல ஊத்திட்டு தான் வருவாரு என்று நினைத்துக் கொண்டே பருப்பையும் சோறையும் வைத்தவள், வாழப்பூ வைச்சா நேரமாகும்ணு, மிச்சம் இருக்கிற ரெண்டு உருளைக்கிழங்கப் பொடிப்பொடியா நறுக்கி எண்ணெயில் வதக்கினாள், உப்பு, மஞ்சள் கொஞ்சம் மிளகாய்த்தூளும் போட்டு. மத்யானச் சாப்பாடு ஒண்ணு தான் அவரு உருப்படியா சாப்பிடற சாப்பாடு. சாப்பாட்டுக்கு வரும்போது பெரிசா பேசறதில்லே. இது வேணும், இது வேண்டாம்னு சொல்றது கிடையாது. எத செஞ்சு போட்டாலும், ஒண்ணுமே சொல்லாம சாப்பிட்டுட்டு போயிடுவாரு.  ஏதாவது வாங்க வேண்டியது இருந்தா, பட்டறப்பையன அணுப்பி வைக்கப் பேசுவதோடு சரி, மற்றபடி அவங்க் வீட்ல இருந்து யாராவது வந்தா நல்லா பேசுவாரு, அவங்க போனவுடனே திரும்பவும் அதே மாதிரி. பூஞ்சோலையின் அப்பா, அம்மா வருவதில்லை பெரும்பாலும். கல்யாணமாகி உண்டாகியிருக்கிற தகவல் சொல்லும்போது அம்மாவும், மாதுவின் அம்மாவும் வந்தது அவ்வளவுதான்.

காமாட்சியம்மன் கோயில் பொங்கல் அத்தனை விசேஷமானது என்பது ஒருமுறை கல்யாணம் ஆவதற்கு முன்னால் பிரபா அண்ணனின் வீட்டிற்கு வந்த போது தான் தெரிந்தது.  ஏறக்குறைய இரு நூறு, முன்னூறு வீட்டார்களும் சேர்ந்து வரிசையா பொங்கப்பானை வச்சு பொங்கல் வைப்பது. ஒரே புகையா இருக்கும், பனை ஓலைகளுக்கும், கருவ மரங்களுக்கும் தான் கிராக்கி அன்னைக்கு. யாரு வீட்டு பொங்கப்பானை முதல்ல பொங்குதோ அவங்க வீட்டுக்கு தான் பூஜையில முன்னுரிமை. இவ வந்திருந்தபோது பிரபா அண்ணன் வீட்டு பொங்கப்பானை தான் முதல்ல பொங்கியது.  பொங்கல் பானை வைக்க அடுப்புக்கல்லே தினுசுதினுசா இருந்தது.  சிலபேரு குத்துப்போனி அச்சுல செஞ்சிருப்பாங்க சில பேரு, எண்ணெய் டின் அச்சுல கொஞ்சம் வசதியான ஆட்கள்லாம், இரும்பு உருக்குல ரெடிமேடா செஞ்ச அடுப்புக்கல்லா வச்சிருப்பாங்க. 

பிரபா அண்ணன் வீட்ல இருப்பது குத்துப்போனி அச்சு, செம்மண்ணை குழைச்சு, அச்சுல போட்டு காய வச்சு, அதுல நல்லா செம்மன் பூசி மொழுகி, அதற்கு மேல சுண்ணாம்பை ஒழுகவிட்டு சுத்தி கோடுகளப்போட்டு, சுட்டு செய்றதே ஒரு பெரிய வேலை, பொங்கலுக்கு முன்னால. பிரபா அண்ணன் வீட்டுது குத்துப்போனி அச்சு, மத்த அடுப்புக்கல்ல விட சின்னதா இருக்குங்கிறதால, பொங்கப்பானை சீக்கிரம் பொங்கிடுச்சுப் போல.  எல்லாம் பூஞ்சோலை வந்த யோகம் தான்னு பேசிக்கிட்டது, இவளுக்கு கொஞ்சம் பெருமையாவே இருந்துச்சு, மாது அந்த வருஷம் பொங்கலுக்கு வரலை ஏதோ பரீச்சை இருக்குண்ணு சொல்லிட்டது.  இந்த வருஷம் மாது வரும்போது இவளுக்கு பொங்கல் வைக்க ஆசையா இருந்தது, ஆனா பூஞ்சோலையோட மாமியார் தான் அதெல்லாம் வேண்டாம்னு இந்த நேரத்துல, அடுத்த வருஷம் குழந்தையோட வந்து பொங்க வைக்குதேன்னு வேண்டிக்கோ! என்று சொல்லிவிட்டார்கள். இவரு அவங்க அம்மா சொன்னா மறுபேச்சு பேசமாட்டார். 

மாதுவுக்கு வீடு தெரியுமான்னு தெரியலை, பிரபா அண்ணனை கூட கூட்டிட்டு வரும்னு தோன்றியது இவளுக்கு. பிரபா அண்ணன் இருந்தா நல்லா பேசமுடியாது. அது மட்டுந்தான் பேசிக்கிட்டு இருக்கும். பிரபா அண்ணனையும் பார்த்து நாளாச்சுதான் என்றாலும், இப்ப வேண்டாமென்று மனசுக்குள் காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டாள்.  அவரு வந்துட்டாரு போல, கதவு சத்தம் போட்டது, அப்ப தான் தெரிஞ்சது, ஈஸ்வரி போகும்போது சரியா கதவ சாத்தாம போயிட்டா போல என்று. அவரு தான் வந்துட்டாரு! வந்தவர் நேரா பாத்ரூமுக்கு போயிட்டாரு. தண்ணி விழற சத்தம் கேட்டது, முன் நடையிலேயே கழுவலாம், சிமெண்டு தொட்டி தண்னிய எடுத்து, ஆனா எப்பவும் உள்ள போயி தான் கழுவுவாரு.  எதுவும் சொல்லமுடியாது, கோபத்தில மூஞ்சிய பாக்கமுடியாது, பேசாம இருக்கிறது தான் உத்தமம் என்று நினைத்து கொண்டாள். 

கைகால் முகம் கழுவிட்டு வெளியே வந்தவன்,  பச்சைத்துண்ட எங்க காணோம்? மேலையும் கீழையும் பார்த்துட்டு, இங்க தான் போட்டுட்டுப் போனேன்? என்றான். இல்லேங்க! கஞ்சி போட்டா மாதிரி மொடமொடன்னு இருந்துச்சுன்னு துவைச்சுப் போட்டேன், இருங்க எடுத்துட்டு வரேன்!  மடித்த துணிகளுக்கு மத்தியில் இருந்த துண்டு, இப்போ மெத்தென இருந்தது. எடுத்து வந்து கையில் கொடுக்க, இந்த கொடியிலே போடு எடுத்துக்குறேன் என்றவன், திரும்பவும் சிமெண்டு தொட்டியில் இருந்து ஒரு சொம்புத் தண்னிய எடுத்து காலில் ஊத்திக் கொண்டான். பாத்ரூமிற்குள் இருந்து வந்தவுடன், காலில் ஏதோ அழுக்கு ஒட்டிக் கொண்டது போல. துண்ட கையில வாங்கமாட்டாரு, துண்டுன்னு இல்லை எதையுமே, தண்னியோ, காப்பியோ அல்லது பலகாரத்தட்டோ கீழே வச்சாப் போதும் கையில வாங்கமாட்டாரு, அது என்னவிதமான பழக்கமோ எங்கேயிருந்து கத்துக்கிட்டாரோ, எதுலயுமே ஒட்டில்லாம இருக்க என்று தோன்றியது அவளுக்கு. துண்ட எடுத்து துடைச்சிட்டு, சாப்பாட்டுக்கு உட்காந்த பத்து நிமிஷத்துல சாப்பிட்டு முடித்தான்.  


உடனே கிளம்பியவனிடம், பட்டறப்பையன அணுப்புறீங்களா? கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியிருக்கு! எத்தனை மணிக்கு, ஒரு நாலு மணிக்கு அணுப்புனா போதுமா? என்று பதிலை எதிர்பாராமல் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் பூஞ்சோலையின் கணவன்.  அவன் சென்றவுடன், அவளும் ஒரு தட்டில் சோறைப்போட்டுக் கொண்டு நேத்து வாங்கிய வெங்காய பக்கோடாவையும் எடுத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவள், மாது வர்றதுக்குள்ள வாழப்பூ வடைக்கு ஆட்டி வச்சுடணும் என்று கடலைப்பருப்பை எடுத்து ஊறப்போட்டாள். ஃபேனை போட்டுவிட்டு கட்டிலில் தலகாணியை நிமிர்த்தி வைத்து சாய்ந்த மாதிரி உட்கார்ந்து கொண்டாள், மடித்து வைத்த துணிகள் நீட்டிய காலில் பட்டதும், ஒதுக்கி வைத்தவள், துணிகளுக்கு அடியே இருந்த குமுதம் கண்ணில் பட எடுத்து படிக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்திலேயே ஒண்ணுக்கு வருவது போல இருந்தது, அதுவும் முட்டிக் கொண்டு. இந்த மாதிரி நேரத்துல உடம்புல சர்க்கரை கூட கூடிப்போயிடுமாம், அதுனால கூட யூரின் அடிக்கடி வரலாம். அதுவும் முனுக்கென்று பாத்ரூம் போவதற்குள் வந்துவிடுவது போல எப்போதும். இன்னும் என்னவெல்லாம் இருக்கோ, இவளை பெத்து எடுக்குறதுக்குள்ள! என்று நினைத்துக் கொண்டாள்.

மாது இருந்தா ஏதாவது கதையில் வர்ற நாயகியோ அல்லது ஒரு கதாபாத்திரத்தையோ பற்றி சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி சொல்லும். மாதுவுக்கு கதைப்புத்தகம்னா உயிரு ஒரு புத்தகம் விடாது, குமுதம், விகடன், சுபமங்களா அப்புறம் இன்னும் என்னென்னவோ புத்தகங்கள் பேரு படிக்கமுடிஞ்சாலும், அர்த்தம் புரியாது.  மாதுவுக்கு பாலகுமாரன்னா அவ்வளோ பிடிக்கும், இவளையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தும். ஆனா இவளுக்கு கொஞ்சம் படிக்குறதுக்குள்ளயே அலுப்பாயிடும், தூக்கி வச்சுடுவா. மாதுவால தான் இந்த குமுதம், விகடன் படிக்கிற பழக்கம் வந்ததே. அவளுக்கு பிறக்கப்போகிற பெண்ணை எல்லா புத்தகங்களையும் படிக்கச் சொல்லணும், மாது மாதிரி நிறைய்ய படிக்கணும், படிக்க வைக்கணும். மாது இந்த ஊருக்கு வந்தாலும் லைப்ரரியிலும், ஆண்டாள் கோயிலிலும் தான் கிடக்கும்.  பென்னிங்டன் லைப்ரரி அதுக்கு ரொம்ப பிடிக்கும்.  ரொம்ப கஷ்டப்பட்டு, சந்திரன் வக்கீல் சிபாரிசு எல்லாம் பிடிச்சு மெம்பர் ஆச்சு அதில்.  இவளோட கல்யாணத்தின் போது பார்த்தது, ஆறேழு மாசத்துல எப்படியிருக்கும் என்று நினைப்பு வந்தது. நினைக்கும்போதே அது கட்டியிருக்கிற வேஷ்டியும், நெத்தியில சின்ன கீற்றுப் போல சந்தனமும் தான் ஞாபகம் வந்தது. 

மாது வரும்போது நிலைல இடிச்சுக்கக்கூடாது, மறக்காம தலை குனிஞ்சு வரச்சொல்லணும்.  இந்தத் தெரு பூரா இது போல குட்ட நில வாசலுதான். அந்தக் காலத்து வீடுகள் எல்லாமே. வாசல்ல இருந்து கொல்லப்புறம் வரை ஒரே அடுக்கடுக்கா இருக்கும், அய்யமாருங்க வீடு மாதிரி. இது மாதிரி வீடெல்லாம் மாதுவுக்கு பிடிக்கும், துளசி தீர்த்தம், பெருமாளு, ஆண்டாள் கோயில் யானை, பூசு மஞ்சள், ஆண்டாள் கோயில் வெங்கட்டய்யர் கடை அல்வா என்று யோசிக்கும் போதெ அவளுக்கு பட்டறைப்பையன வரச்சொன்னது ஞாபகம் வந்தது. பாலும் வாங்கச்சொல்லணும், சுடச்சுட அல்வாவும். மாதுவுக்கு ஏனோ பால்கோவா பிடிக்காது, அல்வான்னு பொண்டாட்டியவே வித்துடுவான்னு மாதுவோட அம்மா சொல்லி நிறையமுறை கேட்டிருக்கிறாள். 

கொஞ்சம் கொஞ்சமாக பின் வாசலில் இருந்து வெளிச்சம் நுழைய ஆரம்பித்தது.  நாலு மணியாயிட்டிருக்கும், பட்டறப்பையன் வர்ற நேரமாயிடுச்சு, கதவைத் திறந்து வைக்கலாம் என்று கதவைத் திறந்தவள், வாசலில் ஈஸ்வரி போட்ட மயில்கோலமும் செம்மண் பூசிய வாசப்படியும் பார்த்ததும், இன்றைக்குத் தான் திருவிழா என்பதை உறுதி செய்தது போல இருந்தது அவளுக்கு. கோலத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் நிழலாட, நிமிர்ந்தபோது பட்டறைப்பையன் சைக்கிளை கோலத்தின் ஓரத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு.. அக்கா கோலம் நீங்களா போட்டீங்க? சூப்பரா இருக்குக்கா? என்றபோது ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டாள்.  அக்கா கடைக்குப் போகணும்னு அண்ணே சொன்னாருக்கா, என்ன வாங்கணுக்கா? என்று வார்த்தைக்கு வார்த்தை அக்கா. கேசவன் பால் பண்ணையில போயி ஒரு லிட்டர் பால் வாங்கிக்கோ, ஆண்டாள் கோயில் வெங்கட்டய்யர் கடையில் அல்வாவும் ஓமப்பொடியும் வாங்கிட்டு வந்துடு...என்று அவன் கையில் நூறு ரூபாயைக் கொடுத்தாள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், அக்கா சீவல் வாங்கியாறவாக்கா நல்லாயிருக்கும் என்றான். அவனுக்கு சீவல் பிடிக்கும் போல என்று நினைத்துக் கொண்டு சரியென்றாள்.

அவன் தெருமுக்குக்கு போகும்வரை பாத்துக் கொண்டு திரும்ப நினைத்தவள், ராசக்கா மகனிடம் விசாரித்துக் கொண்டு நின்ற மாதுவைப் பார்த்தாள்.  எந்தவித மாற்றங்களும் இல்லை, அதே மாதிரி மடித்துக் கட்டிய வேஷ்டி, ஒரு பெரிய சட்டை அப்புறம் ஒரு ஜோல்னாப்பை புதுசா! பிரபா அண்ணன் உடனில்லாதது அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.  கையாட்டி கூப்பிட நினைத்து, கூப்பிடாமல் வேடிக்கை பார்த்தாள் என்ன செய்யிறான்னு பார்க்க. ராசக்கா மகன் கையைக்காட்ட திரும்பிய மாது, இவளைக்கண்டதும் மேலும் எதுவும் விசாரிக்காமல், ஏதொ சொல்லிவிட்டு வீடு நோக்கி வரத்தொடங்கினான். அங்கிருந்தே மாது சிரிப்பது அவளுக்குத் தெரிந்தது, சரக்கென்று உள்ளே நுழைந்து, பட்டாசாலில் கண்ணாடியை நோக்கிப்போனாள்.  உள்ளே கீச்சு கீச்சென்ற கத்திய படியே கண்ணாடி சட்டத்தில் அமர்ந்திருந்த குருவி ஒன்று விர்ரென்று பின்கதவு வழி பறந்தது.  முகம் பார்க்க பரவாயில்லை, கண்ணின் கீழே லேசாய் இழுவிய மையை சரி செய்தவள், முந்தானையை திரும்பவும் இழுத்து சரியாய் சொருகிக்கொண்டாள். 

வாசலில் கதவை தட்டியவன், செருப்பை சிமெண்ட் தொட்டியின் எதிர்புறம் தண்ணி கொட்டாத இடத்தில் விட்டான். நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் பளீரென்று மிதந்து சிரித்தது மாதிரி பட்டது அவளுக்கு.  படபடப்பு கூடியது போல இருந்தது.  எப்படி இருக்க! என்றவள், அவன் உட்கார கூடைச்சேரை அவனுக்கு எடுத்துப் போட்டாள்.  பரவாயில்ல இங்கேயே உட்கார்ந்துக்கிடலாம்... என்று ஜோல்னாப் பையைக் கீழேயே விட்டு, பட்டாசாலின் முகப்பில் உட்கார்ந்து கொண்டான். கோலம் யாரு போட்டா, உனக்கு கோலம் போடவே வராதே... என்று சிரித்தவன், பையில் வைத்திருந்த வெள்ளரிப்பிஞ்சுகளையும், கிருஷ்ணன்கோயில் மலைக்கொய்யாக்களையும் அவளிடம் கொடுத்தான். இதுக்குத்தான் பை போல, ஒன்றிரண்டு புத்தகங்களும் இருப்பது போலத் தெரிந்தது. கையில் வாங்கியவள், அவனுக்கே அருகிலேயே உட்கார்ந்து கொண்டு, அவன் கொடுத்ததை அருகில் வைத்துக் கொண்டாள். பேச பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை, அவன் தான் பேசிக்கொண்டே இருந்தான். பஸ்ஸில் வந்தது பற்றி, வீட்டில் நடந்த விஷயங்கள் பற்றி, அவன் காலேஜ் நண்பர்கள் பற்றி என்று.   நிலாயதாக்‌ஷி, நெட்டிபொம்மைகள் என்று பாலகுமாரனின் சிறுகதை பற்றியும் பேசினான். ஒன்றும் பதில் பேசாது கேட்டுக்கொண்டே இருந்தாள், அவனைப் பார்த்துக் கொண்டே.

உம்பொண்ணு என்ன சொல்றா? என்று அவள் உப்பிய வயிரைப்பார்த்தான். ஏனோ எழுந்து போய் முன் கதவை சாத்திவிட்டு திரும்பவும் அமர்ந்து கொண்டாள்.  பட்டறப்பையன் பால் வாங்க போயிருக்கான், வந்ததும் காப்பி போட்டுத்தாரேன்... கொஞ்ச நேரம் இருப்பதானே? என்றவள் வாழப்பூ மொக்கு அருகிலேயே கிடக்க எடுத்துத் துடைத்துக் கொடுத்தாள். உனக்கு ரொம்ப பிடிக்குமே இது! அல்வாவும் வாங்க சொல்லியிருக்கேன்! வேற எதாவது வேணுமா? பூஞ்சோலை கேட்க, எனக்கு உன் வயிறை தான் தொட்டுப் பார்க்கணும் என்ற போது, ஒன்றுமே பேசாது மெதுவாய் அவன் பக்கம் நகர்ந்து, புடவையைத் தளர்த்தி அவன் கையை எடுத்து வயிறின் மீது வைத்தாள். தடக்கென்று எதுவோ தொட, ஓவ்! என்று கையை படக்கென்று எடுத்தவன், சிரித்தான்.  பூஞ்சோலை அழத்தொடங்கியிருந்தாள். 

Tuesday, January 04, 2011

உரைகல் மினுக்கு...


தெருவுக்குள் நுழையும்போதே தெரு அடைசலாய் இருப்பது போல பட்டது ராமருக்கு.  தங்கையா கடையை தாண்டி, சீனு வீட்டை கடக்கும் போதேதெரிந்து விட்டது  கும்பல் சேரத் தொடங்கிவிட்டது என்று.   தெருவின்  அடுத்த கோடிக்கு விரைந்து கொண்டிருந்தார்கள் அடையாளம் தெரியாதவர்கள். அதை தெரு என்று சொல்ல முடியாது... ஒரு சந்து தான் ஆனாலும் அதற்குள்ளே ஐம்பதுஅறுபது வீடுகள் இருக்கும். ராமரின் முதலாளி வீடும் இந்த தெருவில் தான் இருக்கிறது.  இந்த தெருவிலேயே கடைசி  வீடு, அவர் வீடு.  அவர் வீட்டின் கொல்லைப்புற சுவரைத் தாண்டினால் பாஞ்சாலி கோயிலில் விழலாம். மிகச்சரியாக திருவிழாச் சமயங்களில் பூக்குழி இறங்கும் நவ்வா மரத்திற்கும் ஒரு புளிய மரத்திற்கும் இடையே உள்ள பொட்டலில் குதிக்கமுடியும்.  இன்று தெருவின் இருபக்கமும் சாக்கில் பரப்பி ஒட்டி உலர வைத்திருக்கும் தீப்பெட்டிகளின் உள்பெட்டிகளை காணவில்லை.  தெருவின் முகமே மாறியிருந்தது மாதிரி தோன்றியது ராமருக்கு. ஒரு பக்கம் தென்னங்கிடுகு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது இன்னொரு பக்கம் மூங்கில் கம்புகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த தெரு முழுக்க சிமின்ட் சிலாப் போடப்பட்டிருக்கும்அதில் குழி பறித்து மூங்கில் நடமுடியாததால், ஒரு பக்கம் வாய்க்காலுக்குள் மூங்கில்களை நிறுத்தியும் , இன்னொரு பக்கம் டின்னில் ஆத்து மணல் கொட்டியும் நிறுத்தியும் வைக்க பட்டிருந்தது.  அப்போது தான் புத்தாசெல்வராஜ் அண்ணன், தள்ளு வண்டியில இருந்து சேரெல்லாம்  இறக்கி கொண்டிருந்தது.   தண்ணீர் டிரம் ஏற்கனவே நிரப்பி கோவில்பட்டியான் வீட்டின் முகப்புத்திண்ணையில் வைக்கப்பட்டிருந்தது. முதலாளி அண்ணனின் வீட்டின் முன்னால் அதற்குள் கிடுகு வேய்ந்திருந்தார்கள், வெளிச்சத்தை அடைத்த கிடுகுப்பந்தலில் ஒரு தற்காலிக சல்லாத்துணி இருட்டு போர்த்தியிருந்தது.  பக்கத்து வீடுகளில் இருந்து வாங்கிய பெஞ்சுகளும், கொஞ்சம் மரச்சேர்களும் வீட்டின் முன்னால் கிடந்ததில், அங்கொன்றும் இங்கொன்றுமாக  ஆட்கள்  உட்கார்ந்திருந்தார்கள்.   வீட்டை நெருங்க நெருங்க, அழுகைச்சத்தம் பலமாய் கேட்க ஆரம்பித்தது.  இதே தெருவில் குடியிருப்பவர்களும், அருகிலேயே இருக்கும் உறவுக்காரர்க்களுமாய் நிறைந்திருந்தது முதலாளியின் வீடு. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இன்று பூராவும் வந்து கொண்டே இருப்பார்கள். 

காலையில் கொட்டாப்புளி அண்ணந்தான் வீட்டிற்கு வந்து தகவல் சொன்னது இவனுக்கு.   முதலாளி அண்ணனின் அம்மா தவறிப்போனது பற்றி.  முதலாளி அண்ணனின் அம்மா இவனுக்கு தெரிந்து ஒரு ஆறு மாச காலமா படுத்த படுக்கையாத்தான் இருக்கு.   சாப்பாடும்பீயும், மூத்திரமும் அதே படுக்கையில் தான், இவன் ஏதாவது வேலை விஷயமா முதலாளி வீட்டுக்கு வரும்போதெல்லாம், முன் நடையில ஒரு கயித்து கட்டிலில் சாக்கும், அதற்கு மேலே பழைய சீலைத்துணியும், ஒரு போர்வையும் விரித்து அதன் மேல்  தான் படுத்திருக்கும் அல்லது கிடத்தப்பட்டிருக்கும் ஆண்டாளம்மா. வீட்டுக்குள்ள நுழையும் போதே ஒரு மாதிரி கெவுலு வாடை அடிக்கும், மூத்திரமும், மீந்த சாப்பாடும் கலந்து படுக்கையிலயெ கிடந்து புன்னாப்போன உடம்போட நாத்தமும். இவனுக்கு கொமட்டிட்டு வரும் ஆனாலும் அதை வெளியே காட்டிக்காமல் அடக்கிக் கொள்வான். எப்படித்தான் இப்படி வச்சிருக்காங்களோன்னு தோணும் இவனுக்கு.

இவன் முன்நடை நாகத்தகடுக் கதவத் திறந்து உள்ள   நுழையும்போதே தலைய மட்டும் தூக்கிட்டு, ஆருலே அது! சின்னத்தாயி மவன்தானே... ஏலே! கொஞ்சம் காராசேவு மட்டும் வாங்கிட்டு வாலே, காசு என் மவன் வந்ததும் தரச்சொல்லுதேன்... உனக்கு புண்ணியமா போட்டும்... வாய் என்னமோ நம நமன்னு கிடக்கு என்பாள் இன்னொரு நாள், ஏலே ராசுசுப்புத்தாயி இந்நேரத்துக்கு காரவடை போட்டிருப்பா... ஜூடா... நான் கேட்டேன்னு போயி வாங்கியா ராசு!  என்பாள்.  அக்காவக்கேளு ஆத்தா! அவுக சொன்னா வாங்கியாரேன்! என்றவுடன் சத்தமே இடாமல் திரும்பி கொள்வாள் ஆண்டாளம்மா. இவன் கிட்டப் போகாம தூரமாவே நின்று கொண்டு, உள்ளுக்கு குரல் கொடுப்பான்   பாலாமணியக்கா!, ராமரு வந்திருக்கேன்!  அக்கா வருவாள் எப்போதும், கையில் இருக்கும் வேலையின் மிச்சத்தோட... கரண்டியோ... சொளகோ... அல்லது குண்டாஞ்சட்டியோ இருக்கும் எப்போதும் கையில். வந்தவளிடம், ஆண்டாளம்மா கேட்டதைச் சொன்னால், 

அத்தே! காராவடையா கேட்டீஹ? இல்லையே.. இவஞ்சொன்னானா?  ஏலேய்... நான் என்ன காராவடையா கேட்டேன்... என்று ராமர் பக்கம் தலையத் திருப்பி கேட்டுவிட்டு... இல்லே தாயீ! இவன்கிட்ட நேத்து சுப்புத்தாயி வந்துட்டுப் போனாளா என்னைப் பாக்க, அதப்பத்தி தான் சொல்லிட்டிருந்தேன்...வட கேட்டனாம்ல வட...பொய்க்காரப்பய என்று அப்படியே மாற்றி விடுவாள் ஆண்டாளம்மா. பாலாமணியக்காவுக்கு இதெல்லாம் தெரியும், நீ வாடா உள்ள என்று வந்த வேலையைப்பற்றி கேட்பாள்

ஆண்டாளம்மாவோட  படுக்கை பட்டாசால் ஜன்னலை ஒட்டி கிடக்கும், அந்த ஜன்னல் திண்டுல என்னென்னமோ குப்பி குப்பியா மருந்து இருக்கும். ஆனா, அதை ஆண்டாளம்மா சாப்ட்டு இவன் என்னைக்கும் பாத்ததில்ல.  மாசத்துக்கு ஒரு தரம், கிருஷ்ணன் கோவில்ல இருந்து ஒரு ஹோமியோபதி வைத்தியர் வருவாரு, வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு. அவரு தான் மாத்தி மாத்தி மருந்தா கொடுத்துட்டு வர்றாரு... வந்துட்டு போற பஸ் காசு, அப்புறம் ஒரு பத்து ரூவா அது தான் வைத்திய செலவு.

மதுரை கொண்டு போனா சரியாக்கிபுடலாம் என்று முதலாளியோட பிரண்டு சொல்ல, அதெல்லாம் தோது படாது பங்காளி! ஆராவது கூட இருந்து பாத்துக்கிடனும்லா? நம்ம சோலிக்கு அதெல்லாம் லாயக்கு படுமாகூட பிறந்த எவனும் இதைப்பத்தி யோசிக்கிறதில்லே! என்ன மட்டுந்தான் பெத்தா மாதிரி அவனுங்களுக்கு நினப்பு! அவனுங்க போக்கே ஒண்ணும் பிடிபடலை பங்காளி!  நானும், என் பொண்டாட்டியும் பாத்துக்கிட போயி, இது மணத்து போயி கிடக்கு... இல்லேன்னா நாறிடாது நாட்டாமை குடும்பமானம்? என்று சொல்ல கேட்டிருக்கான் ராமர்.

ராமர் முதலாளி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும், இவனுக்காகவே காத்து இருந்தார் போலஏலேய்! என்னலே இவ்வளோ நேரம் வாரதுக்கு? வெரசா வந்து கூடமாட ஒத்தாசையா இருக்க வேண்டாமா இல்லேண்ணே, இப்பத்தான் கொட்டாப்புளி அண்ணே வந்து சொன்னாரு! உடனே கிளம்பி வாரேன்!  நான் போயி சேரெல்லாம் அடுக்கி வைக்கவா அண்ணே? என்றவனிடம் வேற ஒரு சோலி மயிரும் நீ பண்ண வேண்டாம்!  நாஞ்சொல்றத மட்டும் செய்துட்டு வா! முதல்ல போயி, கடைய திறந்து வரவு சீட்டு எல்லாம் எடுத்துக்கிட்டு, பெரிய அய்யா கிட்ட நேத்து திருப்பி கொடுத்த  நகையெல்லாம் போயி வரவு வச்சுக்கிடு... அவர்ட்டயும், சின்ன அய்யாகிட்டயும் அம்மா இறந்த  தகவல் சொல்லிப்புடு,  

இன்னைக்கே எடுத்துடுவோம்னும்... என்னஅப்படியே, சின்னக்கடை பஜார் போயி, கொஞ்சம் மரிக்கொழுந்து செண்டும், பொரியும், ரெண்டு பெரிய மாலையும் வாங்கிட்டு, வேற ஏதாவது வாங்கணுமான்னு,  பெரிய மாமா தெரியும்ல? அவருகிட்ட கேட்டுக்கிடு, அப்படியே அதையும் வாங்கிட்டு வந்துரு... துட்ட  முருகன்கிட்ட வாங்கிக்கிடு...   நேத்து வாங்கிட்டு வந்த கடைப்பணம் சேஃப்ல இருக்குன்னு சொல்லி வாங்கிக்கோ! கொட்டாப்புளிய பாத்தியாலே... அவன இன்னும் காணோம்... சதகளவானிப்பய...! அவனப்பாத்தா உடனே இங்கே அணுப்பு... வெரசா கிளம்பு... என்று முடுக்கினார் முதலாளி.

எப்பவும் வாங்குகிற வாத்துமானம் தான் இது.  வாத்துமானம் எவ்வளவுன்னாலும் வாங்கிக்கிடலாம், ஆனா அடி வாங்குறது தான் தாங்க முடியாது சில சமயம்.  வேலை சரியா செய்யலே, இல்லே ஏதாவது தப்பாயிப் போச்சுன்னா அவ்வளவுதான், கையில் இருக்கிய சுத்தியல், கம்பிச்சட்டம், மட்டக்கோபுரம்னு பறக்கும்.  சில சமயம் அடிபடாம விலகிட்டாலும், பல தடவை சரியா மேல விழுந்துடும். ராமருக்கு ஏன்டா வேலைக்கு வந்தோம்னு இருக்கும்? ஆனாலும் வாரத்துக்கு கிடைக்கிற தொன்னூறு ரூபா சம்பளமும், அப்பப்போ வாங்கித்தர்ற பரோட்டாவும் தான் இவனை இதையெல்லாம் சகிச்சுக்க வைக்குது.  வேற பட்டறைக்குப் போனா இங்க போல வேல கத்துக்க முடியாது. இவன் முதலாளி நல்லா வேலை வாங்குனாலும், நிறைய கத்துக் கொடுப்பாரு.  முதலாளிட்ட வேலை பாத்த திருப்பதியெல்லாம் தனியாப் பட்டற வச்சு, நிறைய சம்பாதிக்கிறது இவனுக்கேத் தெரியும். அதனால், வலியும், வேதனையும் கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.  அடிய விட வசவும், வாத்துமானமும் இவனுக்கு பெரிசில்லை என்று தோன்றியது.  

வாங்க வேண்டிய வசவ எல்லாம் வாங்கிக்கொண்டு முருகனைத் தேடினான் அந்த கூட்டத்தில், முருகன் அண்ணன் அவங்க அத்தை பக்காத்தால ஒக்காந்து அழுது கொண்டிருந்தது, மூக்கச் சீந்திக்கிட்டு.  ஆண்டாளம்மா, உடம்புக்கு முடியாம படுத்துக்கிடந்தப்போ, எழுந்திருக்கவே முடியாது அதுனால.  இப்போ, எப்படியோ ஆண்டாளம்மாளை நிமிர்த்தி மடக்கி, ஒரு பழைய நாற்காலியில் உட்கார வைத்திருந்தார்கள். 

தெறித்து வந்து விடும் நரம்புகளும், வெளுத்துப் போன நகக்கண்களும் இருந்த சூம்பிப் போன கைகளை நாற்காலியின் கைகளில் சேர்த்துக் கட்டியிருந்தார்கள். சுவத்தில் இரண்டு பக்கமும் ஆணியடித்து நாடியோடு சேர்த்து வெள்ளைத்துணியில் கட்டியிருந்தார்கள். மூஞ்சி முழுக்க மஞ்சப்பூசி பெரிய பொட்டா வச்சு, அதுல எட்டணா ஒட்டவைத்திருந்தார்கள்.  முருகன் அண்ணே மூஞ்சி அழுது அழுது வீங்கியிருந்தது.  முருகன் அண்ணனுக்கும், முதலாளிக்கும் ரெண்டு வயசுதான் வித்யாசம், ஆனா அப்படித் தெரியவே தெரியாது.  முதலாளி பெரிய மனுஷன் மாதிரி ஜம்முன்னு இருப்பாரு, முருகன் அண்ணே சின்ன பையனப் போல இருப்பாரு. 

சுற்றி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தவர்களை, தள்ளச்சொல்லி முருகனின் அருகே போயி தோளைத்தொட்டு, முருகன் அண்ணே! முருகன் அண்ணே என்று உலுப்ப, என்ன என்பது போல திரும்பி பார்த்தார் முருகன் அண்ணன்.  ராமர், இங்க வாங்க என்று கிசுகிசுப்பா சைகையிலேயும் சொல்ல, வாயில் வைத்திருந்த துண்டை தோளில் போட்டுக் கொண்டு முருகன் அண்ணன் வெளியே வந்தார்.

அண்ணே! முதலாளி கொஞ்சம் சாமானெல்லாம் வாங்கியாரச் சொன்னாரு... காசு குடுக்கீயலா!
காசு எங்கிட்ட எங்கலே இருக்கு... 
சேஃப்ல இருக்குண்ணு சொன்னாரு, முதலாளி! 
சரி வாரேன்! என்று குட்டி மச்சில் தடவித் தடவி சாவிய எடுத்து, சாமி ரூம்கிட்ட இருந்த சேஃப்பை திறக்க சாவியை செருகி வலது பக்கம் திருப்பி, சின்ன குறி போல இருந்த குமிழை மூன்று ஏதேதோ எண்கள் இருக்கும் இடத்தில் திருப்பினார். கனமான கதவை, கை மாதிரி இருந்த கைப்பிடியைப் பிடித்து இழுத்து திறந்தார்.  ஒரு ஐம்பது  ரூபா கட்டெடுத்து, ரப்பர் பேண்டை பிரிச்சு, ரெண்டாயிரம் ரூபா எண்ணிக் இவனிடம் கொடுத்தார் முருகன் அண்ணன்.  மிச்சத்தை திரும்பவும் எடுத்து எண்ணிவிட்டு உள்ளே வைத்தார். இவன் அப்பப்போ பாக்கிறானா என்றும் பார்த்துக் கொண்டார்.

திரும்பவும் இவனை அணுப்பிவிட்டு, அழுவதற்கு போய் அவங்க அத்தைப் பக்கத்துல உட்கார்ந்து கொண்டார்.  எல்லோரையும் தாண்டி கிளம்பி வெளியே வந்தவன், வெளிச்சுவரில் சாத்தி வைத்திருந்த டிவிஎஸ் 50 ஐ எடுத்துக் கொண்டு உருட்டிய படியே கூட்டத்தை கடந்தான். பந்தல் முழுதும் போட்டிருந்தார்கள் இப்போது. செகண்டி அடித்துக் கொண்டு சங்கு ஊதுற ஆள் வந்திருந்தான். தெரு முனைக்கு வந்ததும், வேஷ்டிய மடிச்சு கட்டிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து பஜாருக்கு விரட்டினான்.  முதலில் பெரிய அய்யாவிடம் போய் நேத்து வாங்குன நகைக்கு வரவு வச்சுக்கணும். அப்புறம், சின்ன அய்யாவிடமும் தகவல் சொல்லிவிடவேண்டும்.   அதுக்கப்புறம் நேரா சின்னக்கடைபஜாரு தான்.  பெரிய அய்யாவ பாக்கப்போகும் போது சங்கர் ரெடிமேட்டுக்கும் போயி, வனஜாவ பாத்துட்டு வரணும், தண்ணி குடிக்கிறத சாக்கா வச்சுக்கிட்டு என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் ராமர்.

வனஜாவ பாத்து ரொம்ப நாளான மாதிரி இருந்தது அவனுக்கு.  இவங்க பட்டறை பெரியகடை பஜார் கொட்டகைக்குள் இருந்த போது, எதிரில் இருந்த கடை, சங்கர் ரெடிமேட் ஸ்டோர்.  முதல்ல தாட்டி சூப்பரா இருக்காலே... ஒன்னயவே பாத்துக்கிட்டு இருக்கா, என்று முருகன் அண்ணே ஏத்திவிட, பத்திக் கொண்டது.  நாய்க்கமாரு பொண்ணு அது, அவுக அப்பா ஆட்டோ ஓட்டுதாரு.  லெட்டர் கொடுத்து, மடவார்வளாகம் தெப்பத்தில சந்திப்பெல்லாம் ஆயி ஒரு வழியா ராமருக்கு செட்டாயிட்டது.  பட்டறைய கோதாவிலாசம் பிரஸ் கிட்ட மாற்றின பின்னால, அவள அடிக்கடி பாக்க முடியலங்கிறது பெரிய வருத்தம் ராமருக்கு. இன்னைக்கு எப்படியாவது அவளப்பாத்திடணும், அங்க செட்டியார் அண்ணாச்சி இருந்தா போச்சு, அவ கூட ஒரு வார்த்த பேச முடியாது, என்னலே இங்கிட்டு லாத்துற...இங்க உனக்கு என்னலே சோலிம்பாரு, அவரு இருக்கக் கூடாது என்று ராமர் மனசுக்குள் வேண்டிக் கொண்டான்.

பையில் இருக்கும் சிட்டையை கையில் எடுத்துக் கொண்டு, முதலில் பெரிய அய்யாவின் கடைக்குப் போனான். நிறைய கிராக்கிகள் வந்திருந்தார்கள் கடை நிறைய, இன்னைக்கு முகூர்த்த நாளு போல, பெரிய அய்யா ரொம்ப பிஸியா இருந்தாரு, சின்ன அய்யாவ காணல, அவரு எப்பவும் இருக்கிற எடத்துல! என்ன பண்ணலாம்? பேசாம சாந்தி ரெடிமேட்டுக்கு போயிடலாமா முதல்ல? என்று யோசித்துக்கொண்டே திரும்பும்போது சுப்பையா அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார், பக்கவாட்ல உரசிக் கொண்டே!

என்னலே! உங்க முதலாளி அம்மா இறந்து போயிட்டாகலாமில்ல? எப்பலே ஆச்சு, ரெண்டு நாளு முன்னாடி வீட்டுக்கு போயிருந்தேன் அப்பக்கூட, ஆரு சுப்பையாவா?ன்னு கேட்டுச்சேப்பா, அவுக அம்மா? என்றார்.

ஆண்டாளம்மாவுக்கு ராமரையே அடையாளம் தெரியாது, ஒவ்வொரு தடவையும் புதுப்பேரு சொல்லும், இவரப் பாத்து சுப்பய்யான்னுச்சாம்... நம்மகிட்டயே சரடு விடுதாரு.... என்று நினைத்துக் கொண்டு.... அப்படியா அண்ணே! வாரேன், பெரிய அய்யாவ பாத்து சிட்டைய முடிக்கணும், சோலி கிடக்கு! என்று நகர்ந்தான்.  பெரிய அய்யா பார்த்துவிட்டார்... பார்த்தவுடனே கூப்பிடமாட்டாரு... கவுரவம் என்னாகிறது... கொஞ்ச நேரம் கிடையாக் கிடக்கணும்... அவரு பார்வையில படுறாமாதிரி!

என்றா வெண்ட்ரூ! என்ன விஷயம்... வரவு வைக்கணும் பெரிய்யா!.. கொண்டா சிட்டைய! என்று கையில் இருந்த சிட்டைய வாங்கிக் கொண்டு இறங்கிக் கொண்டிருக்கும் தங்கபிரேம் கண்ணாடியை ஏற்றிக் கொண்டே... சிட்டையில் வரவு வைத்தார்... முதலாளி அம்மாவ எப்ப எடுக்கிறாங்க என்ற தகவலை சொல்லிவிட்டு பறந்தான்... பெரியகடை சங்கர் ரெடிமேட்டுக்கு... வனஜா...  கொட்டகைக்குள்ள நுழையும் போதே சிவாஜி சேட் பார்த்துவிட்டான்... ஏ பாபு! உங்க முத்லாளி... மூசு போட கொஞ்சம் தங்கம் கொடுத்தாரு... வேலயாயிடுச்சி... போயி கொடுத்துடறியா? என்று தமிழை கடைவாயில் போட்டு மென்று துப்பினான்...அவனுக்கு எல்லாருமே பாபு தான் அது என்ன கணக்கோ? சரிங்க சேட்! என்று  நியூஸ் பேப்பர் சுத்திய ஒரு பொட்டலத்தைக் கொடுக்க, அதனுடைய கனத்தில் வாங்கிய கை இறங்கியது போல இருந்தது எப்படியும் ஒன்றரைக்கிலோ இருக்கும்...என்று தோன்றியது. கையில் வாங்கியதை எடவார்ப்பையில் வைத்து கட்டிக்கொண்டு, வனஜாவைப் பார்க்க சங்கர் ரெடிமேட்டுக்கு விரைந்தான்.

கொட்டகைக்குள் நுழைந்தவுடன் பாவா லண்டன் ஷாப்பு கடையத்தாண்டியதும் இடது பக்கம் தெரியும், சங்கர் ரெடிமெட் ஸ்டோர்... கிருஷ்ணமூர்த்தி செட்டியாரின் தாத்தன் வழிச் சொத்தின் பங்கு கடை, அடுத்த கடை அவங்க அண்ணன் சேதுராமன் செட்டியார் நகைக்கடை என்று அடுத்தடுத்து இருக்கும்.  வெயிலில் இருந்து கொட்டகைக்குள் நுழைந்ததும் இருந்த கொட்டகை இருட்டில் ஒன்னும் தெரியவில்லை கொஞ்சம் முன்னுக்குப் போனதும் ஒவ்வொண்ணா புலப்பட, சங்கர் ரெடிமேட் ஸ்டோர் வாசலில் வனஜா நிற்பது தெரிந்தது.  பக்கத்தில் போய், அவளைப் பார்த்து ஜாடையாய் என்ன என்று கேட்டான் ராமர். இவனைப்பார்த்ததும் வனஜா மேலும் அழுதாள். கடையின் முன்வாசலைத் தாண்டி இவனை நோக்கி வந்து, செட்டியார் அண்ணாச்சி இவளைத்திட்டி, வேலைய விட்டு நிப்பாட்டிட்டதாகவும் சொல்ல, இவனுக்கு ஆத்திரமா வந்தது.  ராமர், எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை ராமர், எங்கயாவது போயி சாகலாமான்னு வருது! கடையில் ரெண்டு பிராத்துணிய காணலையாம்... நாந்தான் எடுத்தேன்னு கலைவாணி சொல்லிட்டான்னு நினைக்கிறேன்... ஆனா நான் சத்தியமா எடுக்கலை ராமர்... எங்க வீட்டுக்குப் போனா எங்க நைனா என்னையே கொன்னே புடுவாரு... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை என்று மேலும் அழுதாள்.

வனஜாவின் கையப்பிடித்துக் கொண்டு என்னோட வா... இந்த வேலை மயிரு போச்சுன்னா பரவாயில்லை... என்று இழுத்துக் கொண்டு விரைந்தான் ராமர், வனஜாவும் பதில் ஏதும் சொல்லத் தோன்றாமல் உடன் சென்றாள்.  அவனை யாரோ வனஜாவுடன் மதுரை பஸ்ஸில் ஏறியதைப் பார்த்ததாக, ராமரின் முதலாளி அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், மறுநாள் காலை பாலூத்த கிளம்பும்போது.