Thursday, May 26, 2011

பெருமழைக்காடு...

“அதெல்லாம் ஒத்துவராது புள்ள! அத்துவிட்டுப்புடலாம், நாலு பேரக்கூட்டி செய்யமுடியாதுன்னு நினைச்சேன்னா, இவ வீட்டோடவே இருந்துட்டு போகட்டும்!” என்ற அப்பாவின் குரலில் இருந்த கோபமும், ஆதங்கமும் சுசீலாவுக்கு நன்றாகவே தெரிந்தது. வேண்டாம் இந்த உறவு என்பதில் அவளுக்கும் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை இருந்தாலும், குணங்கெட்டவனின் செயல்கள் அதன் பின் என்னவாக இருக்கும் என்பதை யாராலும் சொல்லமுடியாது.  சுசீலாவின் யூகங்களும் ஒரு வரையறைக்குட்பட்டது, அவன் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் யாரும் எதிர்பாராதது போலவே இருக்கும் எப்போதும்.   

சுசீலாவின் அம்மா ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள், சொளகில் போட்டிருந்த அரிசியை அளைந்தபடியே. அவள் எப்போதாவது தான் பேசுவாள். பெரும்பாலான சமயங்களில் ஒன்றும் பேசுவதில்லை, அவர் சொல்வதை  கேட்பதோடு சரி, அவள் வீட்டு விஷயமாய் இருந்தால் மட்டும், கொஞ்சம் அலுத்துக் கொள்வதும், புலம்பிக் கொள்வதும் உண்டு. அவர் தான் எதுக்கெடுத்தாலும், அம்மாவிடம் யோசனை கேட்பது போல பாவனை பண்ணுவார். ஏதும் சொல்லத்தோன்றினாலும், அவள் சொல்லமாட்டாள். சுசீலாவுக்கு இங்கு வரவே யோசனையாய் இருந்தது இந்த முறை, ஆனாலும் வேற போக்கிடம் தெரியாமல் அப்பாவின் நிழலில் தான் ஒதுங்க வேண்டியிருக்கிறது. 

”நா அங்க போகப்போறது இல்லப்பா, பழைய மாதிரி ஒத்தாசைக்கு உங்க கூடவே இருந்துக்குறேன் அல்லது ஏதோ வேலைக்குப் போறேன்பா!” என்றாள் தீர்மானமாக. 

தனக்கு முன் பிறந்த அக்காள்களுக்கு திருமணம் முடிந்து சென்றதும், அப்பாவும் நிறைய தளர்ந்து விட்டார் என்று தோன்றும் அவளுக்கு.  ஆண் பிள்ளை இருந்தால், உதவியாய் இருந்திருக்கும் என்று கடைசி வரை முயன்றவர், ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றதும் நிமிர்ந்து விட்டார்.  சுசீலா தொடங்கி, கிரேசியும், மரிய தங்கமும் அவருக்கு உதவியாய் இருந்தபோது, இவளும் படிப்பை நிறுத்தி அப்பாவின் பட்டறையில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.  கடினமான வேலை தான் என்றாலும், வீட்டிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற அவள் உடலில் உரம் ஏறியது போல இருந்தது.

முத்தையா ஆசாரி, கார் ஹாரன் பார்ட்ஸ் எல்லாம் செய்து கடைகளுக்குப் போடும் சின்ன பட்டறை வைத்திருக்கிறார்.  ஹாரன் காயில், ஹாரன் பிளேட் என்று செய்வதுடன், மொத்தமாய் சில்லறை ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கி ஊர் ஊராய் சென்று விற்று வருகிறார். அவர் உடன் லைனுக்கு போகமுடியாவிட்டாலும், லேத்தில் ஹாரன் கோர் ராடு செய்வதுடன்,  டயாப்ரம் பிளேட்டும் செய்யவும் கற்றுக் கொண்டாள்.  அவளுடைய அப்பா, அவளின் ஆர்வத்தை பார்த்து எல்லாம் கற்றுக் கொடுத்தார். சுசீலா லேத்தில் கடைவதுடன், பட்டறையின் நிர்வாகத்தையும் பார்த்துக் கொண்டாள்.  தங்கைகள் இருவரும் காப்பர் வயரில், ஹாரன் காயில் சுத்துவதுடன், அதை பேக் செய்து, வெவ்வேறு பெயர்களில் லேபிள் வைப்பதோடு சரி.  பொதுவாய் டயாப்ரம் பிளேட்டில் வேறுபாடு எதுவும் தெரியாது. கோர் ராடின் நீளமும், காயிலின் திக்னெஸ்ஸில் மட்டுமே வித்யாசம் இருக்கும்.

சுசீலாவின் அம்மாவும் சிலசமயம் ஹாரன் காயில் சுத்துவதுண்டு. சாத்தூரில் இருந்த போது பேனா கம்பெனியில் வேலை பார்த்தது மாதிரி தான் இதுவும் அவளுக்கு. 

சுசீலாவுக்குத் திருமண வயது வந்த பிறகும், திருமணம் செய்து வைக்க அவளுடைய அப்பாவுக்கு யோசனையாய் இருந்தது.  சுசீலா இருப்பதால், அவரால் நிம்மதியாய் லைனுக்கு போய் வந்து வியாபாரத்தை கவனித்துக் கொள்வது எளிதாய் இருந்தது.  சுசீலாவின் இரண்டு தங்கைகளும், சிறுபிள்ளைகளாகவே வளர்ந்தார்கள்.  பள்ளிக்குப் போவதும், மாலைவேளைகளில் சுசீலாவுக்கோ, அப்பாவுக்கோ உதவுவதோடு சரி. 

சுசீலாவுக்கு லேத்தில் வேலை செய்வது அதிகம் பிடித்தது. அரை இஞ்ச் ராடை லேத்தில் கடைய கடைய, பூப்புவாய் இரும்பு இழைகளை உதிர்க்கும் அந்த மெஷின் மீது அத்தனை காதல் அவளுக்கு.  கண்ணில் தெறிக்காமல் இருக்க ஒரு கண்ணாடியும், கைகளில் உறையும் போட்டுக் கொண்டு அவளைப் பார்க்க அவளுக்கே அத்தனை ஆசையாய் இருக்கும். ஆண்கள் மட்டுமே இருக்கும் இந்த லேத் வேலையில் தான் இருப்பது அவளுக்கு பெருமையாகவும் இருக்கும்.  அப்பாவும் அதைச் சொல்லி சொல்லி பூரித்துப் போவார்.

ஸ்பிண்டிலில் ராடை இணைத்தபிறகு, டெயில் ஸ்டாக்கை அட்ஜஸ்ட் செய்யவேண்டும். டூல் ஹோல்டர்கள் இரண்டு மாதிரியான டூல் பிட்டை மாற்றி மாற்றி மெதுவாக நகர்த்தி தொடவைக்க, இழை இழையா சுருளும் ராடு. கடைசல் முடிந்ததும், அறுப்பதற்கு வேறு ஒரு டூல் பிட்டை உபயோகிப்பது இவளது வழக்கம்.  நினைத்தபடி நகர்த்த உதவும் கேரேஜ் ஹாண்ட்வீல், முன்னும் பின்னும் நகர, அவள் ஒரு சிற்பம் செதுக்குவது போன்ற நேர்த்தியுடனும், ஒன்றுதலுடனும் செய்வாள்.  அவள் லேத்தை கையாளும் விதத்தில் இருக்கும் லாவகத்தை பார்க்கும் போது அவளுடைய அப்பாவுக்கு பெருமையாய் இருக்கும். ராடு சூடேற சூடேற, மக்கில் வைத்திருக்கும் தண்ணீரை மெல்ல விடுவாள். எண்ட் பிட் ராடுகளை, தனக்கு பிடித்த மாதிரி, சிறு பொம்மைகள் செய்து அடுக்குவது அவளுக்கு ரொம்பவும் பிடித்த விஷயம்.  கருத்த இரும்பு ராடு, இழைய இழைய உள்ளே இருக்கும் வெள்ளுடம்பைக் காட்டும் போது அவளுக்கு ஏனோ ஒரு சந்தோஷம் தொற்றிக் கொள்ளும்.

அவளுடைய அம்மாவின் வழி தூரத்து சொந்தத்தில் இருந்து வந்த பையன், சொந்தமா லேத் வச்சிருக்கிறதாக தகவல் வந்தது.  அவளுடைய அம்மாவுக்கு அந்த சம்பந்தம் ரொம்பவும் பிடித்தது. அவளுடைய ஊர்க்காரர்கள் என்பதால், கூடுதல் சிரத்தையுடன், சுசீலாவுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று தீவிரமாய் முயற்சி செய்தாள்.  சுசீலாவுக்கு ஏனோ அவள் அம்மா வழி சொந்தக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை.  உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் அம்மாவுடன் பேசுவதில்லை. அம்மாவின் அப்பா வழி வந்த நிலத்தையும், வீட்டையும் பிரித்துக் கொண்டவர்கள், அம்மாவின் அம்மா நகைகளைக்கூட கொடுக்கவில்லை என்று அம்மா சண்டை போட்டு வந்துவிட்டாள். ஆனாலும் அம்மா, அண்ணன் தம்பிகளை ஒரு போதும் விட்டுக்கொடுப்பதில்லை.

”பொச கெட்ட பயலுக” கூடப்பிறந்தவளுக்கு, அவ அம்மா ஞாபகமா ஒரு குண்டு தங்கம் கொடுத்துட்டா குறைஞ்சா பொயிடுவாய்ங்க! சரி! அவிங்க தான் அப்படி இருக்காய்ங்கன்னா, இவளுக்கு அவிங்க கொடுத்து தான் நிறையப்போற மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுட்டு உட்கார்ந்திருக்கா” என்று அதட்டி விட்டு போய்விட்டார். 

இது பெரிய மாமா சம்பந்தம் செய்த வழி சொந்தம் என்பதால், அவளுடைய அப்பாவுக்கு அத்தனை விருப்பமில்லை.  அதுவும் சுசீலாவை எங்கோ உசிலம்பட்டியில் கொடுப்பது அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.  உள்ளூர் மாப்பிள்ளையா இருந்தா தான் அவரால் அடிக்கடி பார்த்துக் கொள்ளமுடியும் அல்லது வீட்டோட மாப்பிள்ளையாய் இருந்தா நல்லது என்று தோன்றியிருக்க வேண்டும் அவருக்கு. அதனால் அவன் மூஞ்சே சரியில்லையே! என்று போட்டோ பார்த்தவுடன் உதட்டை பிதுக்கி மறுத்துவிட்டார்.

அதே வேகத்தில் பார்த்தவன் தான், சுசீலாவின் புருஷன் டேவிட் சுந்தரம், ஊரு அலங்காநல்லூர் பக்கத்துல மரியம்மாள்குளம்.  ஐ.டி.ஐ-ல டர்னர் வேலைக்கு படிச்சிட்டு, கட்சி, அரசியல் என்று சுற்றிக் கொண்டிருந்தவன்.  அவனுக்கு சுசீலாவை திருமணம் செய்வதை விட, மதுரையில் ஜாகைய மாத்துறோம் என்பது தான் கூடுதல் கவர்ச்சியா இருந்தது.  டவுன்ஹால் ரோட்டு லாட்ஜ்களில் தான் அவர்களின் அரசியல் பரிவர்த்தனைகள் ஆரம்பிக்கும். திரும்ப அலங்காநல்லூர் வரை போயிட்டு, ஊருக்கு நடக்கணும், அதுவுமில்லாம, அடுத்த நாளு வரணுமென்றால் சிரமப்பட வேண்டியிருக்கும். பொண்ணும் பார்க்க லட்சனமா இருந்ததால், சுந்தரம் சந்தோஷமா தலையாட்டிட்டான்.

முத்தையா ஆசாரிக்கு, அவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க சம்மதித்ததில் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. டர்னர் வேற படிச்சிருக்கான், கூடமாட உதவியா இருப்பான்.  முன்னுக்கு வந்துடலாம் என்று கணக்கு போட்டார்.  அப்பாவுக்கு பிடித்ததாலும், சுந்தரம் நிஜமாகவே சுந்தரமாய் இருந்ததாலும், திருமணத்திற்கு சம்மதித்தாள் சுசீலா.  டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் ரோசரி சர்ச்சில் தான் கல்யாணம், எல்லாம் முடிந்து அம்சவல்லி பிரியாணி வீட்ல என்று அமர்க்களமாய் நடந்தது.  சுசீலாவின் பெரிய அக்கா ஸ்டெல்லாவிற்கு கூட கொஞ்சம் வருத்தம், தன் புருஷன் இத்தனை லட்சனமா இல்லாம, இருட்டுல பிடிச்சவன தலைல கட்டிட்டாரே அப்பா என்று.  ரெண்டாவது பெண்ணால், கழுகுமலையில் இருந்து வரமுடியவில்லை, நாலு வருஷத்துக்கப்புறம் இப்ப தான் முழுகாம இருக்கிறாள் என்று அவள் மாமியார் விடவில்லை என்று சுசீலாவுக்கு போன் பண்ணி தகவல் அணுப்பியிருந்தாள். சுந்தரத்துக்கு நல்ல வேளை, அம்மா இல்லை! என்று நினைத்துக் கொண்டாள்

ஒரு மாதம் கழிந்தது, அதுவரை அப்பாவுடன் பட்டறைக்குப் போவது அரசியல் நியாயம் பேசுவது, மேல் வளையாமல் ஏதாவது செய்வது என்று பொழுதை ஓட்டினான் சுந்தரம்.  சுசீலாவின் அப்பாவிற்கு புது மாப்பிள்ளை தானே என்று பேசாமல் விட்டு விட்டார். கையில் இருந்த காசு கரைந்ததும், க்ரோமியம் பிளேட்டிங் முடிந்த சரக்கை எடுத்துக் கொண்டு லைனுக்கு கிளம்பினார்.  கும்பகோனம், மாயவரம் அப்புறம் தஞ்சாவூர் திருச்சி இந்த முறை.

“மாப்பிள்ளை! நான் லைனுக்குப் போறேன், கழுகுமலைக்கும் போறேன்! வர நாலஞ்சு நாளாவது ஆகும்! சுசீலாவ பார்த்துக்கோங்க மாப்பிள்ள!  அப்படியே பட்டறைக்கும் சுசீலா கூட போங்க, போயிட்டு ஹாரன் கோர் ராடு ஆர்டர் ஒண்ணு இருக்கு, அழகப்பா மோட்டார்ஸுக்கும், இந்தியன் மோட்டார்ஸுக்கும் நான் வர்றதுக்குள்ள அணுப்பிடணும்.” ”சுசீலாவுக்கு தெரியும் மாப்பிள்ளை, ஒரு தடவ சொன்னா, நீங்க பிக்கப் பண்ணிக்கிடலாம்”  ரொம்ப அவசரம், ரொம்ப முக்கியமும் கூட, நான் லைனுக்கு போலேன்னா, வரும்படி வராது” என்று தயங்கி தயங்கி அவனிடம் சொன்னார். 

“மாமா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க! தைரியமா போயிட்டு வாங்க மாமா, நான் இருக்கேன்! என்று அவன் பேசியது, சுசீலாவின் அப்பாவுக்கு ஆறுதலாய் இருந்தது. ரெண்டு நாளில் அவனுக்கு அரசியல் அரிப்பு ஏற்பட, டவுன்ஹால் லட்சுமி லாட்ஜில் வட்டம் இருப்பதாக தகவல் வர, மொய் பணத்தில் கொஞ்சம் கேட்டு வாங்கிப்போனவன்  ரெண்டு நாளாய்க் காணவில்லை.  சுசீலாவே திரும்பவும் லேத்தில் நின்று வேலையை முடிக்கவேண்டியதாய் இருந்தது.  என்னக்கா! நீயே வந்துட்ட வேலைக்கு? என்று கேட்ட முருகனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்து வைத்தாள். 

ரெண்டே நாளில் ஆர்டர் வேலை அத்தனையும் முடித்துவிட்டாள், முருகனை டிவிஎஸ் 50 யை கொடுத்து வடக்கு வெளி வீதியில் இருக்கும் அழகப்பா மோட்டார்ஸுக்கும், இந்தியன் மோட்டார்ஸுக்கும் போட்டுவிட்டு, காசு வாங்கிவர அணுப்பினாள்.  எப்படித்தான் மோப்பம் பிடித்தானோ? காசு வீட்டுக்கு வந்ததும், அவனும் வந்தான். 

”நிலக்கோட்டையில பொதுக்கூட்டம், வட்டமே வரச்சொல்லிட்டாரு, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ கூட இருந்தாப்ல, சுந்தரம், சுந்தரம்னு, எல்லா வேலைக்கும் நான் தான் பாத்துக்கோ” என்று அவன் பெருமை பொங்க பேசிய போது சுசீலாவுக்கு எரிச்சலாய் இருந்தது.  இனிமே இவன் கூட தான் என்று நினைத்தபோது பயமும் வந்தது.  வெள்ளிக்கிழமை அப்பா வந்தபோது இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவருக்கு விஷயம் தெரிந்து போனது.  பட்டறையில் இருக்கும் முருகன் சொல்லிவிட, அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தவன், செருப்பை தாறுமாறாக விட்டான், நிலையைப் பிடித்துக் கொண்டே.  குடித்திருந்தான் போல. முத்தையா ஆசாரி, இதையெல்லாம கவனித்துவிட்டு, “என்ன மாப்பிள்ளை! ரெண்டு நாளா கண்ல படலியாமே, எங்க போயிருந்தீங்க! என்றார் முத்தையா ஆசாரி.

“ஆமா மாமா, நிலக்கோட்டையில ஒரு பொதுக்கூட்டம், கட்சி வேலை செய்ய எம்.எல்.ஏவே கூப்பிட்டு விட்டாரு, போய்த்தானே ஆகணும்! நாளைக்கு ஒரு வட்டம், மாவட்டம்னு ஆயிட்டா உங்களுக்கு தானே மாமா பெருமை” என்று இளித்தவாறே பேசினான்.

சுசீலாவின் அப்பாவுக்கு தான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டது போலத் தோன்றியது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டே “அரசியலெல்லாம் வேணாம் மாப்ள! அது பொழப்பு இல்லை மாப்ள, கட்சிக்கு நாயா உழைக்கிறீங்க! நமக்கு ஒண்ணு தேவைன்னா யாரு வந்து நிக்கப் போறா, சொல்லுங்க!” என்றார்

சுசீலாவையும் அவளுடைய அம்மாவையும் பார்த்தவன், இரண்டு பெண்கள் முன்னால், தன்னை அவமானபடுத்திவிட்டார், அதுவும் நாய் என்று சொல்லிவிட்டது அவனுக்கு ஆத்திரத்தை தூண்டியது. 

“இந்த மயித்துக்குத் தான், வீட்டோட மாப்ளை எல்லாம், நமக்கு தோதுப்படாதுன்னு, எங்கப்பன்கிட்ட அன்னைக்கே சொன்னேன், கேட்டானா அந்தாளு! பதுமையா இருக்கா,  நல்ல குடும்பம், இது போல சம்பந்தம் கிடைக்காதுன்னு, ஏதோ சீமையில இல்லாத அதிசயத்த கண்டமாதிரி இவளைக்கட்டி வச்சான் எங்கப்பன்! என்று குரலை ஏற்றி இறக்கிக் கத்த, யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் மாறி மாறி முழித்துக் கொண்டிருந்தார்கள்.  சுசீலா, அப்பாவையே பார்த்தாள், அவர் தலையில கை வைத்தபடி உட்கார்ந்து விட்டார்.

சுசீலாவின் அப்பா அடங்கியது மாதிரி தெரிந்தவுடன், இன்னும் எகிறினான். “ம்மாள! எனக்கென்ன தலையெழுத்தா இங்க கிடந்து சாக?   போனாபோகுதுண்ணு வந்து கூட இருக்கலாம்னு பாத்தா, சும்பைன்னு நினைச்சீங்களா?” என்று திரும்பி சுசீலாவை நோக்கி,  நீ எங்கூட வர்றியா? இல்ல! உங்க அப்பன் கூடயே கிடந்து லோல்படுறியா? என்று முடிவாய் கேட்பது போல கேட்டான்.

நிறுத்தி நிறுத்தி ஆரம்பித்தான். இந்த வீட்ல ஈனமானமுள்ள ஒரு பய இருப்பானாடி! நினைச்சுட்டு திரிறீங்க என்னமோ மணத்துப்போய் கிடக்குற மாதிரி?

புலுக்க வேல செய்ய நாந்தான் கிடச்சனா உங்கப்பனுக்கு?” என்று கையைத் தூக்கி ஒரு மாதிரி காட்டினான். கடந்த ஒரு மாதத்தில் இருந்த குழைவும், பேச்சும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல பேசினான்.  இது தான் இவனுடைய நிஜம் என்று நினைத்தபோது சுசீலாவுக்கு வேதனையாய் இருந்தது. ஒரு மாதம் என்பது அவ்வளவு அலுப்பு தரும் காலமா? என்று நினைத்தபோது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அப்பாவை பார்க்க சகிக்கவில்லை சுசீலாவுக்கு, அவர் கையெடுத்துக் கும்பிட்டபடியே போயிட்டு வா! என்றார். இதற்கு மேல் இவனை நிறுத்துவது சரியில்லை, மரியாதையில்லை என்று பட்டிருக்கவேண்டும் அவருக்கு என்று தோன்றியது.  காலையில் போகலாம் என்று முடிவானதும், அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள். 

ராத்திரி முழுதும் அறையில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.  விடிகாலையிலேயே, வேண்டியதை எடுத்துக் கொண்டு அவனுடன் கிளம்பினாள்.  தங்கைகளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“எங்க ஊர்க்காரப்பயலையே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம், தெரியாத பிசாசு கையில் பொண்ண பிடிச்சு கொடுத்துட்டு கஷ்டப்பட வேண்டிருக்கு! சாதிசனத்துல கொடுத்தா, ஏதாவது பிரச்னைன்னா, எங்க அண்ணந்தம்பிங்க வந்து என்னான்னு கேட்க மாட்டாய்ங்க?!” என்று சந்தடி சாக்கில் புலம்பினாள். சுசீலாவின் அப்பா, முறைக்க அடங்கினாள். 

இப்போது இவள் வந்திருப்பது, கடந்த ஒரு வருஷத்தில் இது எத்தனாவது முறையோ? என்று தோன்றியது, முத்தையா ஆசாரிக்கு.  ஒவ்வொருமுறை வரும்போதும், கையில் இருப்பதை கொடுத்து அணுப்பி விடுவார், மாதத்திற்கு ஒருமுறை லைனுக்குப் போயிட்டு வந்ததும், ஒரு பங்கு அவளுக்கு என்று ஒதுக்கி வைத்து விடுகிறார் இப்போதெல்லாம்.   வரும்போதெல்லாம், ஏதாவது ஒரு கதை இருக்கும், இவளோ அல்லது மாமனாரோ அடி வாங்கியிருப்பார்கள். காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எதுவோ கேட்கப்போக, அருவாமனையோடு சேர்த்துத் தள்ள, வலது கையில் ரவிக்கைக்கு கீழே வெட்டுப் பட்ட கையோடு வந்தாள். முத்தையா ஆசாரிக்கு பார்க்க, பார்க்க கொதித்துக் கொண்டு வந்தது.  “பரத்தேவடியா மகனை, கண்டதுண்டமா வெட்டினாலும் எனக்கு ஆத்திரம் அடங்காதுடி” என்று ஆவேசம் வந்தது போல கத்தியிருக்கிறார் அப்போது.

அதன்பிறகு அவருக்கு, லைனுக்குப் போகவே பயமாக இருந்தது, அவரு வீட்ல இல்லாத நேரம், வந்து கலாட்டா பண்ணி, ஏதாவது செஞ்சுடுவான்னோன்னு, முருகனை அணுப்ப ஆரம்பித்தார்.

இந்தமுறை சுசீலா போகமாட்டேன் என்று சொன்னது, அவருக்கு நிம்மதியாய் இருந்தது.  எப்படியாவது இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.  இனிமே ஜென்மத்துக்கு, சுசீலாவ அணுப்புற தப்ப மட்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து விட்டார். 

சிம்மக்கல் வரை போயிட்டு, கால் டன் 12கேஜ் தகடு வாங்கிவர கிளம்பினார்.  டயாப்ரம் செய்ய வந்த ஆர்டரை வர்ற திங்கக்கிழமைக்குள்ள முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். பொழப்பையும் பார்க்கணுமே! என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். வாசலை விட்டு இறங்கும் போது தான் கவனித்தார், எதிரில் இருந்த கடையில் நின்ற சுந்தரம், இவரை நோக்கி வந்தான். ஒவ்வொரு முறையும், சுசீலா வந்த அடுத்த நாள் அல்லது அந்த வாரத்தில் வந்து சண்டை போட்டு கூட்டிக் கொண்டு போவான், சுசீலாவை. எதுக்குத்தான் கூட்டிட்டுப் போறானோ? திரும்பவும் பத்து நாள்ல ஏதாவது பிரச்னையோட வந்து நிற்பாள். இதே பொழப்பா போச்சு! ஆனா இந்த முறை அவன் என்ன கூப்பாடு போட்டாலும் அணுப்பக்கூடாது.

எதுக்கு வந்த இங்க? எல்லாத்தியும் அத்துவிட்டாச்சு! போயி ஒன் வட்டத்தைப் போயி உருவு! என்று அவன் தோளைப் பிடித்து தள்ளினார். வாசலில் சத்தம் கேட்டு வந்த, சுசீலாவும், அவளுடைய அம்மாவும் பேசாது நிற்க, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு, சுசீலாவை, “ ஏய் சொல்லு புள்ள! உங்க அப்பாக்கிட்ட!” என்றான். சுசீலா படக்கென்று திரும்பி உள்ளே போயிவிட்டாள்.

சுசீலாவின் அம்மா, அவனை உள்ளே வந்து பேசச்சொன்னாள். முத்தையா ஆசாரி, கையில் வைத்திருந்த சாவியை, மனைவியை நோக்கி எறிந்தார். ”போடி, வேலையப்பாத்துக்கிட்டு, வந்திட்டா சமரசம் பண்ண!” சுசீலாவின் அம்மாவும், வீட்டுக்குள்ளே புகுந்து கொண்டாள்.

நீ போறியா இல்லை, போலீசுல சொல்லவா? என்று விரலைக் காட்டி மிரட்டியபடியே, அவன் இடது தோளை பிடித்துத் தள்ளினார்.  தடுமாறி கீழே விழுந்தவன், இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, முத்தையா ஆசாரியை மாறி, மாறி குத்தினான்.


Thursday, May 19, 2011

அற்றது பற்றெனின்...


வீட்டை வந்து அடைந்த போது இருட்டிவிட்டது.  கதவைத் திறந்து வீட்டினுள் நுழைய எதுவோ குறுக்கே ஓடுவது போல இருந்தது. அனேகமாய் எலியாய் இருக்கும்.  உடன் வாழ்வது ஏன் இன்னும் பழகாமல் இருக்கு என்று தோன்றும் அவருக்கு. கதவின் பின்னால் இருந்த ஸ்விட்சை போட்டவர், வெளிச்சத்தில் கண்களை சுருக்கி, வைத்தது வைத்த மாதிரி இருக்கா என்று பார்வையிட்டார். எல்லாம் அப்படியப்படியே இருந்தது.  எதை தேடி ஓடியிருக்கும் இந்த எலி என்று யோசித்துக் கொண்டே சட்டையைக் கழட்டினார், அங்கிருந்த ஆணியில் மாட்டிவிட்டு, வேட்டியைத் திரும்பவும் உதறிக் கட்டிக் கொண்டார்.  வெற்று உடம்பில் குளுகுளுன்னு காத்தடித்ததில், நெஞ்சில் இருந்த மயிரெல்லாம் சிலிர்த்தது மாதிரி இருந்தது அவருக்கு.

அங்கணக்குழி அருகே இருந்த பிளாஸ்டிக் வாளியையும்,  அலுமினிய போனியையும் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குப் போய் குளிக்கக் கிளம்பினார்.  ஈரிழைத்துண்டை எடுத்து விரித்தவர், அதில் இருந்த கிழிசலைப் பார்த்த போது அவருக்கு சிரிப்பு வந்தது. இதை தைக்க அவருக்கு நேரம் வாய்க்கலை என்பது போல வீட்டின் மூலையில் இருந்த தையல் மெஷினைப் பார்த்தார். வேலை முடிந்து வீடு திரும்பியதும் போய் குளிக்கணும் சந்திரனுக்கு. அப்பத் தான் அவருக்கு கசகசப்பு போனது போல இருக்கும். தூக்கமும் வெரசா வரும். ஜன்னல் திண்டில் இருந்த தேய்ந்த சந்திரிகா சோப்பையும், பார் சோப்பையும் எடுத்துக் கொண்டு கிணற்று மேட்டுக்கு வந்து சேர்ந்தார். பிளாஸ்டிக் வாளி நிறைய நீரை இறைத்து நிரப்பி விட்டு, குளிக்க ஆரம்பித்தார்.  முதல் போனி தலையில் ஊற்றியவுடன் இருக்கிற சுகம் அவரை கண்ணை செருகி கிறங்க வச்சது போல இருந்தது. அணுபவித்துக் கொண்டே குளித்தார். இடையில் நிறுத்தி திரும்பவும் நீரிறைக்க ஆரம்பித்தார். வாளி நிறைந்ததும், போனியை எடுத்து, நீரைக் கோரி வைத்துக் கொண்டவர், உட்கார்ந்து சோப்பு போட ஆரம்பித்தார்.

கிணற்றடியில் பெரிதாய் வெளிச்சம் இருக்காது. ஒரே ஒரு குண்டு பல்பு தான் எரியும், கக்கூஸை ஒட்டி அதனால் வெளிச்சம் அதிகம் கிடையாது. அதனாலயே அவர், கொஞ்சம் இருட்டின பின்னாடி தான் வருவார். நல்லாத் தேய்ச்சு குளிக்கலாம் என்ற நினைப்பில். சோப்பைத் தேய்த்துக் கொண்டே வந்தவர், பொசுக்கென்று கம்மங்கூட்டில் சோப்பு காணாமல் போனது போல சிறுசாப் போனது. உடம்புக்கு சந்திரிகா சோப் போட்டுக்கிட்டவர் காலுக்குப் போட சோப்பு காங்கலையேன்னு யோசித்தார் சிறிது நேரம். துணிய அலசக் கொண்டு வந்த பார் சோப்பை கையில் எடுத்துட்டு சுத்துமுத்தும் பார்த்தார். யாரும் பார்க்கலைன்னு தெரிஞ்சதும், பார் சோப்பையே காலுக்கும் தேய்க்க ஆரம்பித்தார்.  பார் சோப்பு கரையாததைப் பார்த்தவுடன், இந்த மாதிரி ஏன் குளிக்கிற சோப்ப செய்ய மாட்டேங்கா எவனும்? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.


குளித்து முடித்து, துணிகளை அலசியபின்னால் நன்றாக உதறியவர், அதன் சாரலில் மெய்மறந்தார்.  கிணற்று மேட்டில் இருக்கும் கொடியிலேயே காயப்போட்டுவிட்டு, வாளியையும், போனியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். கிணற்றடியில் இருந்து வீட்டிற்கு நுழைவதற்குள் ஒட்டிய மண்ணை வாசலில் நின்ற படியே தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். அது ஒரு சின்ன அறை, ஓட்டுசாப்பு இறக்கிய வீடு. அடுப்படி, படுக்கையறை, சாப்பாட்டு அறை என்று எல்லாமிருக்கும் அறை அது.  இவரோட சொத்து என்பது ஒரு ராமா தையல் மெஷின், ஒரு டிரங்கு பெட்டி, கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் அப்புறம் ஒரு ஷோ கேஸ். ஷோ கேஸ், பிளைவுட் பலகையில் சி.எம். டெய்லர்ஸ் என்று எழுதியிருக்க, முன்னாடி கண்ணாடி வைத்த பெரிய சைஸ் டேபிள் அது.  துணியை வெட்டுவதற்கும், மார்க்கிங் பண்ணுவதற்கும் வசதியான டேபிள். 


முன்னாடி சின்னதா ஒரு கடை வச்சிருந்தார், ராமையா வீதியில். சி.எம். டெய்லர்ஸ்னு. அப்போ மதுரையில பேமஸா இருந்த ஜி.எம். டெய்லர்ஸ் மாதிரி இவரோடது சி.எம். டெய்லர்ஸ். அதே மாதிரி நாமளும் பெரிசா வரணும்ங்கிற ஆசையில் ஆரம்பிச்சது.  கடை இப்பவும் அங்கேயே தான் இருக்கு, பேரு தான் மாறிப்போய் விட்டது.

சந்திரனுக்கு சி அப்புறம் மரகதத்துக்கு எம். கடை ஆரம்பிக்க முதலு இல்லாத போது, கழுத்தில் போட்டிருந்த செயினை மரகதம் தான் கழட்டிக் கொடுத்தாள். கடை ஆரம்பிக்கும் போது மூணு மெஷினு இருந்தது அவரிடம். ரெண்டு தையல் மெஷினும் ஒரு ஓவர்லாக் மெஷினும்.  பெரும்பாலும் ஏதாவது ஒரு மெஷினுக்குத்தான் வேலை இருக்கும் எப்போதும். முருகனும் அவரும் ஒண்ணா இருந்த காலம் அது. இவரு கட்டிங்க்ல புலி, சும்மா வளைச்சு வளைச்சு கட் பண்ணுவார். அவ்வளவு நேர்த்தியா அவரு வெட்டுறதால, முருகனுக்கு அடிச்சு போடுறதில பிரச்னையே இருந்ததில்லை.  அதுவும், ஒரு ஆளை பார்த்த மாத்திரத்தில அளவு சொல்லிடுவாரு. சந்திரனோட ராசியோ என்னவோ, நிறைய லேடீஸ் பிளவுஸ் தான் வந்தது. லேடீஸ் பிளவுஸ் தச்சா பெரிசா மிச்சம் பிடிக்கமுடியாது. விழற பிட்டுல எதுவும் செய்யமுடியாது, தலையாணிக்குள்ள பஞ்சு மாதிரி சேர்ந்தா, அடைக்கத்தான் லாயக்கு.

சி.எம். டெய்லர்ஸ் பேரப்பாத்துட்டு கொள்ளப்பேருக்கு, சந்திரன், முருகன் தான் சி.எம். நினைச்சிக்கிறது உண்டு.  இவரு வம்பாடுபட்டு முதலப்போட்டு, கடையத் தொறக்க, இந்தப் பயலுக்கு பேரு.  இவரு தான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா தைக்கச் சொல்லிக் கொடுத்தாரு. ஒழுங்கா பெடல மிதிக்க வராது.  மரகதந்தான் போனாப் போகுது கத்துக் கொடுங்க மாமான்னு! சொன்ன வார்த்தைக்காக அவனுக்கு கத்துக் கொடுத்தாரு. அவன் என்னடான்னா, கொஞ்சம் தலையெடுத்தவுடனே, முதலாளி கணக்கா திரிய ஆரம்பிச்சுட்டான்.
 
கோன வாத்தியார் மகனுக்கு பேண்ட் தைக்கணும்னு எங்கேயோ இருந்து ஒரு நீலக்கலர் டெரிக்காட்டன் துணி கொண்டு வந்தார். பய நல்லா வெடவெடன்னு உயரமா இருப்பான், ஒரு மீட்டர் வேணும்னு சொல்ல, அவரு எம்பது பாயிண்ட கொண்டு வந்துட்டு ’தை தை’ ந்னு குதிச்சாரு! முடியாதுன்னு அணுப்பங்குள்ளேயும், முருகன் முந்திக் கிட்டு கொடுங்க அண்ணாச்சி! தச்சுப்புடலாம்னு! வாங்கிகிட்டான்.  கோன வாத்தியாருக்கு வெவரம் புரியாம, என்னப்பா டெய்லரே தைக்கிறேண்ட்டாரு! துணி வெட்டற உனக்கு எப்படிப்பா தெரியும்? அப்படின்னாரு. போயா நீயுமாச்சு! உன் வேலையுமாச்சு, அந்த துணிய அந்தாளுட்டேயே கொடுத்து போகச் சொல்லியாச்சு. அடுத்த நாளு பாத்தா, முருகன் அத தைச்சுட்டு இருக்கான்.

ஆருடே வெட்டினா? என்ற சந்திரனின் அதட்டலுக்கு,
”என்ன பெரிய கம்பசூத்திரம், தெரியாதா எங்களுக்கு? இம்புட்டு நாளா பாத்துட்டு இருக்கோம், கண்ணு பாத்தா கை செய்யுது?” ன்னு எதிர்கேள்வி கேக்குறான். போடா உன் சங்காத்தமே வேணாம்னு அவனை வெளியே போகச் சொல்லிட்டார்.  போனவன், மூணு மாசா கூலியே தரலை, மெசினத்தூக்குறேன்னு, தூக்கிட்டான்.  அப்பதான் தெரிஞ்சது, அவன் சரியானா காவாலிப்பயலா இருப்பான் போலன்னு… போய்த் தொலையறான்னு விட்டுட்டார்.  தையலு மெஷினும், ஓவர்லாக்கு மெஷினும் போதும் நமக்கு சனியன் விட்டதுன்னு இருக்கலாம்னு இருந்துட்டார்.

’ஊக்கு அடிக்க அக்காட்ட கொடுத்த பிளவுஸை எல்லாம் வாங்கிட்டு வந்துடுறா’ என்று காஜா பையனிடம் சொல்ல, போனவன் சும்மா வந்தான். என்னடா? பிளவுஸ் என்னாச்சு?
”அக்கா நீங்க சாப்பிட வாரயிலே தாரேன்னு சொல்லிச்சு!” என்று போய் மூலையில் உட்கார்ந்து கொண்டான். திருதிருன்னு முழிச்சிட்டு, ஸ்கேலை ஓங்கினார் அவனை நோக்கி, ஏண்டா கிராக்கி வந்திருக்குன்னு சொல்லியிருக்க வேண்டியது தானேடா? முழிக்கிற ஆடு களவாண்டவன் கணக்கா? என்ற போது அப்படியே சுவரோடு பம்மினான்.

அவருக்கு வயிறு பசிப்பது போலிருந்தது, ஒண்ணுக்கும் முட்டிக்கிட்டு வந்தது. டவுசர் பைக்குள் தடவிப்பார்த்ததில், ரெண்டு மூணு பீடி சிக்கியது. இது போதும் இன்னைக்கு பொழுதுக்கு, ரவிக்கைக்கு ஊக்கு வச்சிருந்தால், போய் கோமதியக்காக்கிட்ட கொடுத்துட்டு காசு வாங்கிவரலாம். ”என்ன தான் செய்வாளோ? ரவிக்கைக்கு ஊக்கு கூட வைக்காம? எப்பப்பார்த்தாலும், கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு, பவுடர் அடிக்கிறதும், மையிழுவறதுமா இருப்பா? இப்படி சிங்காரிச்சிட்டு எங்கயோ சீமைக்குப் போறமாதிரி! கேட்டுட்டா அம்புட்டுத்தான், குரல்வளை அந்து போகிறமாதிரி கத்துவா! என்று மரகதத்தைப் பற்றி நினைத்தவர், தலையை ஒரு மாதிரி உதறிவிட்டு. காஜா பையன் பக்கம் திரும்பினார்.


சாப்பாடு கொண்டு வந்திருக்கியாடே? என்று இவர் கேட்டவுடன், ஷோ கேஸ் கீழ்ப்பகுதியில் வைத்திருந்த தூக்குப்போனியைக் காட்ட, அவருக்கு உடனே கண்ணு மண்ணு தெரியாம கோபம் வந்துவிட்டது. ’எத்தனை கஷ்டப்பட்டு, முத்தையாவ உருவு உருவுன்னு உருவி, இந்த ஷோ கேஸை செஞ்சிருக்கோம்?’ ’இந்த பயலுக்கு அதோட அருமை தெரியாம, அதுல போயி தூக்குப்போனிய வச்சிருக்கானே?’ என்று கையில் இருந்த அடிக்குச்சியால், அவனை படீரென்று அடித்தார். அடித்ததோடு நிற்காமல், அவனை கையை அவனை நோக்கி நீட்டிக் கொண்டு வையவும் ஆரம்பித்துவிட்டார்.

“தாயோளி! கூறுபாடு இருக்கா? எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், ஷோ கேஸ்ல எதுவும் வைக்கக்கூடாதுண்டு! ஒரு தடவை சொன்னா தெரியாது மடசாம்பிராணி!” என் உசிர வாங்கண்டே உங்க அப்பன், ஆத்தா பெத்து போட்ருப்பாய்ங்க போல்ருக்கு. அவன் கத்தியபடியே அவருக்குத் தெரியாமல், வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் பதிலுக்குத் திட்டிக்கொண்டே அங்கிருந்து எடுத்து ஓவர்லாக் மெஷினடியில் வைத்தான்.
   
இவரு தான் காஜா எடுக்க ஆளில்லன்னு படிச்சிட்டு இருந்த பயலை, அவங்கப்பன் கிட்ட நைச்சியமா பேசி, கையில கொஞ்சம் காசக்கொடுத்து இங்க கொண்டு வந்து வச்சிருக்கார். அது அவனுக்குந்தெரியும், இருந்தாலும், கூலி கொடுக்குறவன் இதெல்லாம் கேட்க மாட்டானா? என்று தனக்குத்தானே  சமாதானம் சொல்லிக் கொண்டார். அவன் பதிலுக்கு ஏதும் சொல்லிவிடுவதற்குள், கடையப்பாத்துக்கோ, வீடுவரைக்கும் போயிட்டு வர்றேன்! என்று வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டார். பிள்ளையார் கோயிலை ஒட்டி விட்டிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு அழுத்து அழுத்தினார்.

எம்.கே.புரம் தாண்டும் போது, சிங் கடைல கடனுக்குக் கொஞ்சம் காராச்சேவு வாங்கிக்கொண்டார்.  பொட்டலத்தை எடுத்து டவுசர் பைக்குள் போட்டுக் கொண்டு, கொஞ்சம் வேகமாக அழுத்தினார் பெடலை.  இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா போறதால, வெஞ்சனம் செய்ய லேட்டாகலாம் என்று தான், அவர் காராச்சேவு வாங்கிக்கொண்டதற்கு காரணமே!  வெறும் ரசஞ்சாதம் இருந்தாக்கூட போதும், காராச்சேவ வச்சு சமாளிச்சிக்கலாம். போகும்போதெ கோமதி அக்காவின் ஞாபகம் வந்தது, என்ன ஒரு எடுப்பான உடம்பு? அதுவும் அவர் தைச்சுக் கொடுத்த ரவிக்கையப் போட்டபடி வந்து நின்னா, சும்மா கின்னுன்னுல்ல இருக்கும்? என்று நினைத்த போதே அவருக்கு ஒரே கிளுகிளுப்பாய் இருந்தது. மரகதத்துட்ட சொல்லி, ஊக்குத் தைக்கச்சொல்லி கையோட எடுத்துட்டுப் போய், கோமதியக்காளையும் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடணும் என்று கள்ளமாய் சிரித்துக் கொண்டார். பார்த்து பார்த்து என்னத்தக் கண்டோம்? என்று தனக்குள்ளே ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டார்.

வீட்டுக்கு வந்தவர், வீட்டின் முன்புறத்திலேயே சைக்கிளை விட்டுவிட்டு முன் நடைக்கதவைத் திறந்த போது, முருகனின் சத்தம் கேட்டது.  ஏதோ அவன் சொல்ல, அவள் சிரிப்பது அவருக்கு விரசமாய் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க நினைத்தவர், என்னவோ நினைத்துக் கொண்டு ஓசைப்படாமல், திரும்பவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்குத் திரும்பினார். டேய்! சாப்பிட்டியா? என்றார். அவன் உதடு பிதுக்கியதும், இந்தா! என்று காராச்சேவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தார். ’அண்ணன் எவ்வளவு நல்லவரு!” இவரப் போயி கெட்டவார்த்தையிலே திட்டிட்டமேன்னு அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அவன் காராச்சேவு பொட்டலத்தை விரித்து சாப்பிட, அவர் கடைவாசலில் உட்கார்ந்து பீடி பிடிக்க ஆரம்பித்தார்.

 


Friday, May 06, 2011

மழைவில்...


பொழுது விழுந்து கொண்டிருந்தது. இன்னும் என்ன இந்த சாரதியக் காணோம்? என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு விளக்கை எடுத்து மாடக்குழிக்குள் வைத்தாள். வெளிச்சம் வாசப்படியைத் தாண்டவில்லை.  இன்றைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது என்று தோன்றியது மதுரவல்லிக்கு.  மார்கழி மாதம் என்றாலே சரக்கென்று பொழுது விழுந்து விடுவது இயல்பு தான் என்றாலும், அவளுக்கு அப்படித் தோன்றியதற்கு காரணம், சாரதி இன்னும் வீட்டுக்கு வராதது தான்.  வாசலில் இருந்து திரும்பவும் வீட்டுக்குள் பார்த்தவள், விளக்கை ஏற்றுவதற்கு உள்ளே திரும்பினாள்.  உத்தரக்கட்டைக் கொண்டியில் தொங்கிய லாந்தர் விளக்கை எடுத்து கீழே வைத்தாள். சீமத்தண்ணி இருக்குதா என்று ஆட்டிப்பார்த்தவள், திருப்திகரமாய் சத்தம் வர, திரியை ஏற்றிவிட்டு தீப்பெட்டியைத் தேடினாள். நிலைக்கதவுப்படியில் இருப்பதை துழாவி எடுத்துக் கொண்டு, பழைய சீலைத்துணியையும், கோலப்பொடியையும் எடுத்துக் கொண்டு கண்ணாடிக்கூட்டை எடுத்து துடைக்க உட்கார்ந்தாள்.
இங்கு குடிவந்ததில் இருந்து அடிக்கடி ஏற்படுகிற அவஸ்தை இது. கரண்ட் பெரும்பாலான  நேரங்களில் இருப்பது இல்லை.  கரண்ட் சப்ளை வருவதற்கு முன்னாலேயே குடிவந்துவிட்டார்கள். ஆறுமாதத்துக்குப் பிறகு தான் கரண்டே வந்தது, அதுவும் இது போல அடிக்கடி ஏதாவது பிரச்னைன்னு கரண்டு இருக்காது. அதனால், பெரிய லாந்தர் விளக்கும், சின்ன சின்ன சிம்னி விளக்குகளும் வாங்கி வைத்திருந்தாள்.  கண்ணாடி ஊடாய் தெரியும் மஞ்சள் ஒளியில் இருக்கிற அழகு, மெழுகுவர்த்தியில் இருப்பது இல்லை.  அதுவும் வெரசா தீர்ந்துவிடுவதால், காசுக்கு பிடிச்ச கேடா என்று சீமத்தண்ணியை நம்புவது தான் சரி என்று அவளுக்கு தோன்றிவிட்டது. இப்போது கரண்ட் அடிக்கடி போவதால், இதனுடைய உபயோகம் பெரிதாய் தோன்றுகிறது.
வீடுகள் நெருக்கமாய் இல்லாததால, இது போன்ற பிரச்னைகளுக்கு யாரும் கண்டு கொள்வதில்லை. கரண்டு ஆட்களும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  ஆனாலும் மதுரவல்லிக்கு எப்படா கரண்டு போகும்னு இருக்கும், இது போல விளக்குகள் ஏற்றவும், பளபளவென்று மஞ்சள் ஒளியில் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொள்ளவும் ரொம்பவும் பிடிக்கும்.  சுற்றிலும் காலி இடங்களும், கொஞ்சம் தள்ளி வயலும் தோப்புகளும் இருப்பதால், காற்றுக்கு பஞ்சம் இல்லை.
சீலைத்துணியில் கொஞ்சம் மாவு போன்ற கோலப்பொடியை எடுத்து லாந்தர் விளக்கின் கண்ணாடிக்கூட்டின் மீது ஒத்தியது போல அப்பினாள். எல்லா இடங்களிலும் பரவலாகப் பட்டதும், ஒருமுறை கண்ணாடிக்கூட்டை கவுத்தி, பெரிய குருணை மாதிரி இருந்த பொடியைத் தள்ளிவிட்டு, துடைத்தாள். கொஞ்ச நேரத்தில் கண்ணாடிக்கூட்டை திருப்பி திருப்பி பார்த்தவள் திருப்தியானவுடன், லாந்தர் விளக்கில் மாட்டினாள். ஒருசாய்ச்சு அதைப் பற்ற வைத்து, திரியை இன்னும் கொஞ்சம் தூண்டினாள். விளக்கு வெளிச்சம், வீடெங்கும் பரவியது. 
முன்னால் இருந்த தண்ணீர்த் தொட்டியில் கிடந்த தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவிவிட்டு, நிலைக்கண்ணாடி முன் இருந்த பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள்.  நார்ப்பெட்டியில் ஈரத்துணி போட்டு மூடிவைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டாள். லூஸ் பின்னலில் இறங்கியபடி கோர்த்த மல்லிகைச்சரம் தோளில் பட அவளுக்கு கிசுகிசுப்பாய் இருந்தது.  இப்போது நிலைக்கண்ணாடியில் தன் முக வசீகரத்தைப் பார்த்துக் கொண்டே சிரித்தாள். அவளுக்கு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. லாந்தர் விளக்கில் இருந்த வெளிச்சம் இவளின் ஒருபக்க முகத்தை தெளிவாகவும், மறுபக்க முகத்தை இருட்டாகவும் காட்டியது. பின் பக்க ரவிக்கையை இழுத்துவிட்டுக் கொண்டு முன் பக்கம் நிமிர்வாய் காட்டிக் கொண்டாள். புடவைத் தலைப்பை ஒரு முறை எடுத்துக் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு திரும்பவும் போட்டுக் கொண்டாள்.  நாற்பது வயதில் தான் இன்னும் அழகாய், உருக்குலையாமல் இருப்பதாய்த் தோன்றியது அவளுக்கு.
சாரதியை இன்னும் காணாமல் மனசுக்குள் என்னவோ செய்தது போல இருந்தது. சீக்கிரம் வாரேன்னு தானே சொன்னாரு? என்று நினைத்துக் கொண்டே, அடுக்கப்பானைக்குள் இருந்த கருப்பட்டியை எடுத்து, காகிதத்தில் வைத்தபடியே, ஊதாங்குழலால் தட்டி பொடித்துக்கொண்டாள். அவரு வர்ற நேரத்துக்கு, கருப்பட்டி காப்பி கொடுத்தா சந்தோஷப்படுவாரு என்று நினைத்துக் கொண்டாள்.  வெளியே வாசல் வரை போய்விட்டு வந்தவள், சாரதி வராமல் போகவே தலையை தொங்கப்போட்டபடி காலில் முன் நடையில் கிடந்த மணலை அளைந்த படியே வந்தாள்.  வந்தவள் வாசலில் உட்கார்ந்து கொண்டு, கையில் கிடைத்த கற்களை வைத்துக்கொண்டு சொட்டாங்கல் ஆடுவது போல வீசி மேலேயெறிந்து பிடித்துக் கொண்டு இருந்தாள். 
மதுரவல்லியின் அம்மாவீட்டில் பல்லாங்குழி, தாயம், சொட்டாங்கல்லுன்னு விளையாட நிறைய வயசுப்புள்ளைக பக்கத்துல இருந்தார்கள்.  அங்க பொழுது போறதே தெரியாது, அதுவும் சமைஞ்சதுக்கப்புறம், இது தான் பொழுதன்னிக்கும் பாக்குற ஒரே சோலி.  அம்மாவுக்குக் கூட எப்போதும் கூடமாட ஒத்தாசையா இருக்கிறதில்லை. சன்ன வசவா வாங்கியிருப்போம் அவளும், அவள் தங்கையும்? என்று அதனை நினைக்கும் போதே தன்னையறியாம சிரிப்பு வந்தது அவளுக்கு. இங்க அந்த மாதிரி அக்கம்பக்கத்துல வீடே இல்லாத ஒரு எடத்தில வீட்டைக் கட்டி ஒத்தையில கிடந்து அல்லாடவேண்டியிருக்கு! அவரு காலையில போனா வர்றதுக்கு பதினொரு மணி பன்னெண்டு மணியாயிடுது. ஒரு வார்த்தை பேச ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்கணும். யாரும் பெரிசா சினேகிதமா பேசுறதில்லே, ரெண்டு மூணு தடவை போயி பேசினா பின்னாடி கூட. அதனால அப்படியே பேச்சில்லாமயே போயிடுச்சு. இவரு, என்னத்தக் கண்டாரோ? இங்க வந்து எடத்தை வாங்கி வீட்டைக்கட்டி பேய் பிசாசுகளோட வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கு! என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டாள்.
போனதரம் அம்மா வந்திருந்த போது தங்கச்சி பத்தி சொல்லிட்டு அழுதிடுச்சு.  அதுக்கு ஒரு கல்யாணம் கார்த்தின்னு பண்ணமுடியாம இழுத்துட்டு கிடக்கே! முப்பது வயசுக்கு மேலயா ஒரு பொண்ணை வீட்ல வச்சிருப்பாங்கன்னு எல்லாரும் கேக்கறாங்கன்னு பொலம்பிட்டு போச்சு. தங்கச்சி கல்யாணம் ஆகாம இருந்தாக்கூட நல்லது தான். தன்னைப் போல இப்படி லோல்பட வேண்டாம் என்று நினைத்துக்கொண்டாள்.. ஆனாலும் சிலசமயம், தங்கச்சிய நினைக்கும் போது மதுரவல்லிக்கும் ரொம்ப வருத்தமா தான் இருக்கும், அவளால ஏதும் செய்யமுடியாம இருக்கேன்னு? போனமுறை நாசரேத்ல இருந்து ஒருத்தன் வந்தான். தூத்துக்குடி கப்பல் கம்பெனியில ஏதோ கிளார்க் உத்யோகம்னு! அம்மாவுக்கு அவ்வளவா பிடிக்கலை, பெரிய மாமா தான் நல்ல குடும்பம், நல்ல உத்யோகம் அப்படின்னு வற்புறுத்தினார். எல்லாம் சரியாகி, தட்டு மாத்திக்கிற முன்னாடி தான் தெரிஞ்சது, பய பெரிய குடிகாரன்னு.  மதுரவல்லியின் அப்பா குடிச்சு, குடிச்சு குடும்பத்த சீரழிச்சது போதும்னு, அம்மா பிடிவாதமா வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.  அதுல இருந்து பெரிய மாமா பேசுறது கூட சுத்தமா நிண்ணு போச்சு! அதுக்கப்புறம் ஒரு பயலும் வரக்காணோம், இவளாவது ஏதாவது பயலை இழுத்துட்டு ஓடுறாளான்னா அதுவும் இல்லை. 
மதுரவல்லிக்கு அப்போது சன்முகத்தை பற்றிய ஞாபகம் வந்தது. சன்முகம், மதுரவல்லியின் அம்மா வீட்டுக்கு எதிரே விறகுக்கடை வச்சிருந்தான்.  எப்போதும், இவங்க வீட்டப் பார்த்தபடியே இருப்பான்.  ஓயாம தண்ணீ வந்து வாங்கிக் குடிப்பான், வயிறா வண்ணாந்தாழியா என்பாள். அவனோட பார்வையும், பேச்சும் ஒரு தினுசா இருக்கும், இவளிடம் மட்டும்.  கொஞ்சம் சரத்பாபு மாதிரி இருப்பது மாதிரித் தோன்றும் இவளுக்கு. இவ போனா தூள் விறக ஒரு தூக்குக்கு மேல சும்மா கொடுப்பான்.  இந்த  சாரதியும் பார்க்கிறத்துக்கு, சன்முகம் மாதிரி தான் இருக்கும். அது நிறமும்., சுருள்முடியும் பார்க்க அத்தனை அழகா இருக்கும்.  முதல் முறையா கரெண்ட் கனெக்‌ஷன் குடுக்குறத்துக்கு வந்தபோது, மதுரவல்லியின் வீட்டுக்காரர் இல்லை.  சாரதி வந்து விசாரித்து கனெக்‌ஷன் கொடுக்க வந்திருப்பதாய்ச் சொன்ன போது, அவளுக்கு பேசவே முடியாமல், ஒரு மாதிரி மலைச்சு போயி நின்னது ஞாபகம் வந்தது.  சட்டையக் கழட்டிட்டு வெறும் முண்டா பனியனோட நின்னு, வேலையப்பார்த்து, விளக்கு எரிந்தவுடன் இவளுக்கு அவன் மேல என்னன்னு சொல்லமுடியாத ஒரு பிரியம் வந்துவிட்டது. கரண்டு வேலை பார்ப்பவர்கள் மேலேயே ஒரு புது பிரியம் வந்துவிட்டது அவளுக்கு.
வட்டையில் மிஞ்சியிருந்த பாலை எடுத்து சூடு பண்ணினாள்.  காபி பொடி டப்பாவை எடுத்து பார்த்தபோது, தூரில் இருந்து கொஞ்சம் தூள் போதுமா என்று யோசனை வந்தது அவளுக்கு.  சரி சமாளிச்சுக்கலாம் என்று தோன்றியது.  சைக்கிள் மணி ரெண்டு முறை அடிப்பது கேட்டது. சாரதியாய்த் தான் இருக்கும். இது போல சைக்கிள் மணி ரெண்டு முறை அடித்தால், அவன் வருகிறான் என்பது இவர்களின் சங்கேத மொழி.  மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துவிட்டு, சீப்பை எடுத்து முன்பக்க முடியை மட்டும் எடுத்து வாரி காதோடு சேர்த்து சொருகிவிட்டாள். ஒரு அவசரத்துடன், பரக் பரக்கென்று முன் நடையைத் தாண்டி வெளி வாசலுக்கு வந்தாள். அவன் தான் வந்து கொண்டிருந்தான்.  தலையைச் சாய்த்தவாறு ஏதோப்பாட்டை முனகிக் கொண்டே வந்து சைக்கிளை உள்ளே தூக்கிக் கொண்டு முன் நடையில் நிறுத்திவிட்டு, இவளைப் பார்த்து வலுக்கட்டாயமாய் சிரித்தது போல சிரித்தான். மதுரவல்லி அவனைப் பார்த்து அழகு காட்டினாள்.
மதில் சுவரை சுற்றி வைத்திருந்த அரளிச்செடியும், பவளமல்லியும் முன் நடையில் நடப்பதை வெளியே காட்டாது மறைத்துவிடும். அதுவும் இருட்டிய பிறகு அது சாத்தியமே இல்லை.  அவனிடம் அவள் கரண்ட் போனது பற்றி பேசவே இல்லை, அவனும் அவளிடம் அது பற்றி கேட்கவே இல்லை. இவன் வேறு ஏதோ காரணத்திற்காய் வந்தது போல இருந்தது அவளுக்கு. அவன் வாசல்படியில் உட்கார, ரொம்பவும் இயல்பாக அவளும் உட்கார்ந்து கொண்டாள்.
என்ன மைனர்? ரொம்ப நாளா ஆளக் காங்கலையே? அசலூருக்கு ஏதும் போயிட்டீகளா? என்று அவனை கிண்டல் செய்வது போல அவன் பேசுவது மாதிரி பேசினாள்.
அவன் அவள் கையை எடுத்து அவன் தொடையில் வைத்துக் கொண்டே, அவளின் கை மோதிரத்தை முன்னும் பின்னும் தள்ளியபடி இருந்தான் ஏதும் சொல்லாமல். அப்படியே டரவுசரின் வெளியே தெரிந்த ரோமத்தொடையில் இனுங்கியவளின் கையை மெதுவாக ஒதுக்கினான். அவனின் செயல் அவளுக்கு வினோதமாய் இருந்தது. என்னய்யா பதிலக் காணோம்? ஊர்க்கதையெல்லாம் சொல்லுவீகளே வரும்போதெல்லாம், இப்ப என்னய்யா ஆச்சு? மூஞ்சியும் சரியாயில்லையே! துரைக்கு என்ன பிரச்னை என்று அவன் தாவாக்கட்டையை பிடித்து கொஞ்சுவது போலக் கேட்டாள்.
தலைய வலிக்கி, கொஞ்சம் காப்பித்தண்ணி தாரியா? என்றான் அவள் முகத்தைப் பார்க்காமல்.  என்னவென்று விளங்கிக் கொள்ளாமல், உள்ளே  நுழைந்து அடுப்பைப் பற்ற வைத்தாள். வட்டையில் இருந்த பாலில் கொஞ்சம் தண்ணிய ஊத்தி, கொதித்தவுடன் பொடித்த கருப்பட்டியும், காப்பி பவுடரை ஒன்றாகப் போட்டு, பொங்க பொங்க, மத்தின் காம்பில் கிண்டிய படியே இறக்கினாள். பின்னால் அரவம் கேட்டுத் திரும்ப, கலங்கிய கண்களுடன் நிற்பவனைப் பார்த்ததும் அவளுக்கு திடுக்கென்று இருந்தது.  இறக்கிய காப்பியை அப்படியே அடுப்புத் திண்டில் வைத்துவிட்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
வார்த்தையே வராமல் என்ன ஆச்சுன்னு சொல்லேன்? என்றாள்.  ஒன்றும் சொல்லாமல் அவன் அழ, இத்தனை நாள் முரட்டு ஆளாய் பார்த்த ஒருத்தன் இப்படி கலங்குவதைப் பார்த்தபோது அவளுக்கு ரொம்பவும் வேதனையாய் இருந்தது.  முப்பது, முப்பத்தஞ்சு வயசுப் ஆளுக்குள்ள இது போல ஒரு அழுமுஞ்சி இருப்பான்னு அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அடுப்புத்திண்டில் வைத்திருந்த காப்பியை கொண்டு வந்து கொடுத்து, சூடு ஆறுரதுக்குள்ள சாப்பிடு! என்று அவன் கையில் திணித்தாள். அவன் இன்னும் ஒன்றும் சொல்லாமல், வாசலைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.
அவனாய்ச் சொல்லட்டும், ரொம்ப நோண்டினா அழுதுடுவான், அவன் அழும்போது அத்தனை வசீகரமாய் இல்லாதது போல அவளுக்குப்பட்டது.  லாந்தர் விளக்கைத் தூண்டுவது போல, அதன் அருகே நின்று கொண்டே, ஆடும் சுடரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன்பிறகு கண்ணாடி மீது விரலை வைத்து சூட்டவுடன், கையை வெடுக்கென்று எடுத்தாள். அதில் அவனின் கவனம் சிதறியது போல இருந்தது.
அவளிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு, என்னை கோவில்பட்டிக்கே மாத்திட்டாங்க வல்லி! எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனா போயித்தான் ஆகணும், அம்மாவும், இங்கேயே வந்துடுறா! காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கிடுடான்னு அழுவுது! என்றான். இவளுக்கு, அதுவுமா? என்று தோன்றியது.  
சரி அதுக்கு என்ன? போக வேண்டியது தான? என்று அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் தலைகுனிந்தபடியே இருந்தான்.
திரும்பவும் அவளே பேச்சை ஆரம்பித்தாள்.  நான் ஒண்ணு சொன்னா செய்றியா? என்ன என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.  கோவில்பட்டிக்குத் தான போற, என்னோட தங்கச்சி அருப்புக்கோட்டையில தான் இருக்கா! அவளை கல்யாணம் பண்ணிக்கிடேன்! அவளும் கல்யாணம் ஆகாம இருக்கா? நீயும் எப்படியும் கல்யாணம் பண்ணிக்கிட போற! அவளையே ஏன் பண்ணிக்கிட கூடாது? என்றவள் அவன் என்ன சொல்வான் என்று காத்திருந்தாள்.
நான் மாத்தலாகிப் போறத்துக்கு இன்னும் ஒருமாசம் இருக்குல்லா? எடையில ஒருதரம் வாரேன்! வந்து பேசிக்கிடலாம்! என்று தெளிவாய் பதில் சொல்லிக் கொண்டே விடைபெற்றான்.  காப்பி ஆடைகட்டியபடி அப்படியே இருந்தது குடிக்காமல்.