Wednesday, November 30, 2011

பிம்பக்கரைசல்...


இதோ இந்த பேருந்தில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்
உங்களை கடந்து போகும்
பழைய புத்தகங்கள் விற்கும் சிறுவனும்
நாக்கில் அலகு குத்தி அம்மனின் படத்தை 
கழுத்தில் மாட்டிக்கொண்டு உங்களிடம் சில்லரைக்காய் 
கை நீட்டும் சிறுமியும்,
இஞ்சி மரப்ப, வேர்க்கடலை விற்கும் பெரியவரின் முகமும் 
பூக்கூடையுடன், உங்களுக்கு அருகில் இருக்கும் பெண்மணிக்காய்
பூ வாங்க இறைஞ்சும் குரலும் உங்களை சலனிக்கவில்லை 
இசையையும் குரலையும் பிரிக்காது
வந்து விழும் பாடலுக்கும் நீங்க செவி சாய்க்கவில்லை 
எங்கோ வெறித்தபடி இருக்கிறீர்கள்
இந்த பயணத்துக்கான காரணம் ஏதோ இருப்பது போல இருக்கிறது
உங்களைத் தாண்டி உள்ளங்கை நீட்டும் 
பார்வையற்றவரின் குரலில்
உங்கள் அருகில் இருக்கும் பெண்மணி 
திரும்பி, உங்கள் பையை துளாவி சில்லறையை எடுத்துப் போடுகிறார்
அவரைப் பார்த்து முறைக்கிறீர்கள்
அவர் வெடுக்கென திரும்பி கொள்கிறார்
திரும்பவும் எங்கோ வெறிக்கும் உங்கள் கண்ணில் நான் விழுகிறேன் 
வெட்கமாய் போய் விடுகிறது உங்களுக்கு
உங்கள் அருகில் இருக்கும் பெண்மணியை 
ஏதோ காரணம் சொல்லி இருக்கை மாற்றச்சொல்லி 
ஜன்னலுக்குள் புதைகிறீர்கள் இப்போது.
பேருந்து கிளம்புகிறது பயணம் ஆரம்பித்துவிட்டதாய் 
உற்சாகம் வருகிறது உங்களுக்கு சேருமிடம் பற்றிய சித்திரங்களை
ஜன்னல் திரையில் வரைய முயல்கிறீர்கள் 
நான் உங்கள் முன்னால் ஜன்னல் கம்பியில் சாய்ந்து உறங்குபவரை அல்லது உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணியை பார்க்க தொடங்குகிறேன் 
எச்சில் வழிய உறங்கப்போகும் உங்களை நான் இனி கவனிக்கப்போவதில்லை என்று நிம்மதியடைகிறீர்கள்