Thursday, December 23, 2010

விவாகரத்து...

பிரிவாணையின் நிரந்தரம் பற்றிய
கேள்விகள் பாதரசக்குறிகள்
இழுவிய மையின் துளி கலைத்த சித்திரமென 
பரவும் தாள்களில் காற்புள்ளிகள் இல்லை
அச்சடிக்கபட்டிருக்கும் எழுத்துக்கள்
உறவைப் பற்றிய கதைகளை கிசுகிசுக்கவில்லை
கனத்த வெற்றிடங்கள் வளர்ந்து அழுத்த
விரித்த கால்கள் பழுதென நிற்க ஒடியும்
மௌனங்கள் சல்லடையாய் துளைக்கும்
பெருமூச்சில் பற்றி எரியும் ஏகாந்தவெளி
படர்ந்து கருகும் சுள்ளிகள் முளைத்த மரக்காடு
வசந்தத்தின் அறுந்த குரல்வளைகளில்
பிளிறி அலறும் வேதனைப் பெருவோலம்
அசையாத இறுகிய உதடுகளில் உலர்ந்த ஈரம்
குறுநகையில் ரணமாய்க் கிழிக்கும் உடைந்த
கண்ணாடிச்சில்லுகள்
இழுத்துப் பற்றிய சிறுவிரல்களின்
தயங்கி விலக்கிக்கொள்ளும் கணங்களின்
பொருந்தா முனுமுனுப்பில் பிசுபிசுத்த வியர்வை
கண்ணீராய் பெருகி நணைக்க
பற்றிக்கொள்ள கொம்பின்றி அடித்துச் செல்லும்

Tuesday, December 21, 2010

கொன்றவை போம் என்று...

வாசலில் திரும்பவும் அந்த சத்தம் கேட்டது, கிர்ரக் கிர்ரக் என்ற மெலிதான சுரண்டல் சத்தம். கூடவே குழைவான மியாவ் சத்தம்.  இன்றோடு இது நாலாவது நாள், இந்தப் பூனைக்குட்டி வந்து கதவை பிராண்டுவது.  வழக்கமாய் பூனைகள், மனிதர்களுடன் சிநேகமாய் இருப்பதில்லை, வீடு மட்டும் தான் அதற்கு சிநேகம். ஆனால் இந்த பூனைக்குட்டி வித்யாசமாய் நாய்க்குட்டி போல பழகுகிறது.  மூணு நாளா காலைல இதே நேரத்துக்கு வந்து கதவைப் பிராண்டுகிறது இது போல... ஒரு நாள் வைத்த பால், இவன் மனைவியின் மடி, சோபா என்று மாறி மாறி தூங்கியது, சொகுசு கண்டு விட்டது போல. உரசி உரசிச் செல்லும் அது விதவிதமான சத்தங்கள் செய்யும் பல்குரல் வித்தகன் போல.  பூனைகள் ஆயிரம் விதமான சத்தமிடும், நிறைய கள்ளத்தனங்கள் பழகும் என்பது எவ்வளவு உண்மை என்று இவனுக்குத் தோன்றும். விதவிதமாய் சம்பாஷிக்கும் பாஷைகள் இவன் மனைவிக்குத் தான் புரியும், இப்போ பசிக்குது, தூக்கம் வருது, கக்கா பண்ணப்போகுது மாதிரி. உள்ளே நுழைந்த பூனைக்குட்டி மியாவ் என்று கத்திக் கொண்டே அவளிருக்கும் படுக்கையறைக்குள் ஓடி அவளைத்தேடியது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, சர்ச் போயிட்டு, அப்படியே மதிய உணவும் முடித்து விட்டு வரும்போது தான் இந்த பூனைக்குட்டியைப் பார்த்தது. சப்பைமுகமும் நீலக்கண்களும், புசுபுசு வாலும், பழுப்பு நிறக்கோடுகளுடன் வெள்ளை நிற கீழுடலும் பார்க்க அத்தனை கவர்ச்சியாய், பூனைக்குட்டி பிடிக்காதவர்களுக்குக்கூட பிடித்து விடும் ஒரு மென்பொம்மை போல இருந்தது. முதல் மாடி ஏறிவந்த பிறகு லேண்டிங் ஏரியாவில் ஒடுங்கி நின்று கொண்டிருந்த பூனையைப் பார்த்தபோது இவனுடைய மனைவி அதை பிடித்து தரவேண்டும் என்று அடம் பிடித்து விட்டாள், திடீரென்று அது ஒரு மாரீசனாய் மாறி விடுவது மாதிரி நினைத்துக் கொண்டே சிரித்தான். என்ன என்று கேட்டவளிடம் ஒன்றுமில்லை என்று சிரித்து அதை பிடிக்கத் தயங்கிய படியே குனிந்தான். பிறகு மெதுவாய் அதனிடம் பேசிக்கொண்டே நெருங்கி பிடிக்க முயன்ற போது மூலையில் மாட்டிக் கொண்ட பூனைக்குட்டி அடி வயிற்றில் இருந்து காற்றுடன் கத்தி மிரட்டியது. மேலும் நெருங்கி அதைப் பிடித்த போது இவன் கையில் நகங்களை வெளிக்கொணர்ந்து கீறியது, ஒரு மாதிரி அபயக்குரலில் கத்தியது போலும், சத்தம் வித்யாசமாய் இருந்தது.

படிகளைத் தாண்டி இரண்டாவது தளத்தில் இருக்கும் வீட்டை அடைந்த போது வாசலிலேயே இவனுக்காகவா இல்லை பூனைக்குட்டிக்காகவா என்று தெரியாமல் காத்திருந்தாள்.  பூனைக்குட்டியை ஒரு கொஞ்சலுடன் வாங்கிக் கொண்டு, அதன் தலையில் இருக்கும் ரோமங்கள் கீழிருந்து மேலாக தடவி விட கிறங்கியது பூனைக்குட்டி!  ஏங்க இதுக்க் என்ன பேரு வைக்கலாம்? என்ன பேரு வச்சா என்ன? அது என்ன நாய்க்குட்டியா கூப்பிட்டவுடனே வர்றத்துக்கு?ஏதோ சொல்லிக் கூப்பிடு, உனக்கு பூனைக்குட்டின்னு சொல்ல கஷ்டமா இருந்தா என்று அதில் ஏதும் விருப்பமில்லாமல் உள்ளே நுழைந்து கொண்டான்.  இதுக்கு பேரு கிஷ்மோ என்று தூக்கிக்கொண்டே வந்தாள், கிஷ்மோ இவனைப் பார்த்து மேலும் கிஷ்ஷியது... பயத்தில். அந்த கிஷ்மோ தான் இன்று வந்து கதவைப்பிராண்டுவது. திறந்த போது காலின் வழியே கத்திக்கொண்டே உள்ளே நுழைந்து அவளிடம் ஓடியது.  பராஸா நின்றிருந்தான், காரின் சாவியை வாங்கிக் கொண்டு கீழே இறங்கினான், துடைத்து காரை கண்ணாடி போல வைத்திருப்பான், இவன் கீழே இறங்குவதற்குள்

இவனும் அலுவலகத்திற்கு ஆயத்தமாகி, மனைவியிடம் சொல்லிவிட்டு, படிகளில் இறங்கிய போது எதிரே வந்தார், கன்ஷ்யாம். ஜாம்போ... ஹவ் ஆர் யூ? ஃபைன் தாங்க் யூ அங்கிள்? என்ற பதில் உபசரணையுடன் அங்கிருந்து நகர்ந்தான். பெரிய கன்ஸ்டிரக்‌ஷன் கம்பெனி வைத்திருக்கிறார் இங்கே. உடன் பிறந்தவர்கள், உறவினர்களுடன் ஒரு ராஜாங்கமே நடத்தி வருகிறார். பெரிய கூட்டுக்குடும்பம் அவருடையது. அதிகாலையில் இவனும், இவன் மனைவியும் வாக்கிங் வரும்போது எதிரில் களைத்து வேர்த்து தொப்பை குலுங்க தன் மனைவியுடன் வருபவர், இந்த ஒருமாதமாகத்தான் உபரிப் புன்னகையில் தொட்டு ஆரம்பமான சினேஹம். நல்ல மனிதர்கள். இந்த காலனியில்  இருக்கும் இந்தியர்களில் இவனையும் இவன் மனைவியையும் தவிர மற்ற எல்லோரும் குஜராத்திகள் தான். பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் கிசுமுவுக்கு மொம்பாஸாவுக்குமிடையே ரயில்வே லைன் போட வந்தவர்கள். அப்படியே தங்கிப் போனார்கள்.  பெரும்பாண்மையான தொழிலதிபர்கள், இந்தியர்கள் அதிலும் குறிப்பாய் குஜராத்திகள். முஸ்லீம் குஜராத்திகளும் இருக்கிறார்கள் இங்கே, அவர்கள் கச்சில் இருந்து வந்தவர்கள்,  நூறு வருஷத்துக்கு மேலாக இருப்பவர்கள், தங்களை இந்தியர்கள் என்று சொல்லமாட்டார்கள், ஏசியன்ஸ் என்று தான் சொல்வார்கள்.  

இவன் இந்தியாவில் இருந்த போது அதிகாலையில் எழுந்தவுடன், இவன் மனைவியுடன் வாக்கிங் போயிட்டு வருவது வழக்கம். கென்யா வந்த புதிதில் வாக்கிங் போறது எவ்வளவு பாதுகாப்பான விஷயம் என்று தெரியாததால், நிறைய நாட்களாய் வாக்கிங் போகாமல் வீட்டிலேயே இருந்து விடுவார்கள். கொஞ்சம் ஊர் பழகியதும், அலுவலகத்தில் இருப்பவர்களின் தைர்யத்திலும், இந்த காலனிக்குள் வாக்கிங் போவது ஆரம்பமானது. காலை வாக்கிங் ஆரம்பித்தவுடன் மனசுக்குள் கொஞ்சம் நம்பிக்கையும், இலகுதண்மையும், அவனுக்குள் வந்தது.  வாக்கிங்க் போவதன் மூலம் எதிரில் கடக்கும், சக வாக்கர்களில் தான் புதிது புதிதாய் இது போன்ற நட்பும், உறவும் கிடைத்தது இவனுக்கும் இவன் மனைவிக்கும். இவன் மனைவி வெகு இயல்பாக அவர்களுடன் ஒட்டிக்கொண்டாள். இந்த குஜராத்தி இல்லத்தரசிகளிடம் பாலிவுட், சீரியல், சமையல் என்று ஹிந்தியில் பேசியவுடன், எல்லோரும் கொண்டாடும் நபராகி விட்டாள், இவன் மனைவி. அது இவனுக்கு கொஞ்சம் வசதியாய் இருந்தது.

முதலில் கென்யா வருவதாக முடிவு செய்தவுடன் நிறைய நலம் விரும்பிகள் அங்கேயா போறீங்க? அங்க பாதுகாப்பே கிடையாதே! என்று பயமுறுத்தினார்கள்.  ஆனாலும் வேறு பல காரணங்களால் இங்கு வர இவன் முடிவெடுத்தான். இவன் மனைவிக்கும் விசா கொடுப்பதாய் கம்பெனி சொன்னவுடன், இதர வசதிகள் பற்றி பேசியவுடன் இவன் மனைவி போய்ட்லாங்க டாலர்ல சம்பாதிக்கலாம்... நானும் டீச்சர் வேலைக்கு டிரை பண்ணுறேன், அங்க ஈசியா வேலை கெடக்கும், இண்டியன்ஸ்னா  அங்க ரொம்ப மரியாதையா நடத்துவாங்களாம் என்று அவளுக்கு இன்டர்னெட்டில் கிடைத்த விஷயங்களை கொண்டு அடுக்க அது இவனுக்கு கிளம்ப போதுமான காரணமாய் இருந்தது.  இவன் இருப்பது மொம்பாஸாவில், நைரோபியை விட மொம்பாஸா பாதுகாப்பானது. மொம்பாஸாவில் குற்ற எண்ணிக்கை குறைவு, அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடைபெறுவது உண்டு, மற்றபடி அமைதியான ஊர் இது.  

இரண்டு மாதங்களுக்கு முன் நைரோபியில் வந்து இறங்கிய போதுதான் இவனுக்குத் தெரிந்தது, இந்தியாவின் வளர்ச்சியும், வசதிகளும்.  இம்மிகிரேஷனுக்காய் நின்ற போது இம்மிகிரேஷன் அதிகாரிகளின் ஏளனப்பேச்சும், பிற பணியாளர்களின் புன்னகையற்ற விருந்தோம்பலும், இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, இவன் மனைவியும் ஏர்போர்ட்டை பார்த்து மிரண்டு போனாள்.  தெனாப்பிரிக்காவிற்கு பிறகு அதிகமான சர்வதேச விமானங்கள் வந்து போகும் ஒரு ஏர்போர்ட்டின் நிலைமை இப்படி இருப்பது முகத்தில் அறைந்தது. 

போயும் போயும் உங்களுக்குன்னு கிடைக்குது பாருங்க ஊரு... இருக்க இருக்க வாழ்க்கையில முன்னேறுவாங்கன்னு கேட்டிருக்கோம்... இங்க என்னடான்னா... பின்னாடி தள்ளுது... இருபது வருஷம்... உங்க கூடவே அலையணும்னு ஏந்தலையெழுத்து என்று தடாலென்று அவளுக்கு விருப்பமே இல்லாமல் இவன் இழுத்து வந்தது போல புலம்பினாள். இவனுக்கும் ஏன்டா இங்கே வந்தோமென்று, உடனே கிளம்பிப் போயிடலாமா என்றும் தோன்றியது. ஆனால் இத்தனை சம்பளம், இவ்வளவு வசதி இந்தியாவில் கிடைக்காது.  காரும், வீடும், வேலையாட்கள், வரிபிடித்தம் இல்லா சம்பளம், அடர் பசுமை நிறைந்த பாதைகள் அங்கு இல்லை. அங்கு வாங்குவது போல மூணு மடங்கு. சத்தமில்லாமல், என்ஆர்ஐ அக்கவுண்டில் சேரும் பணம், இரண்டு வருஷங்களோ இன்னும் அதிகமாகவோ இருக்கும் பட்சத்தில் நிறைய சேக்க முடியும்.  அது அங்கு வாய்ப்பில்லை.  இவளுக்கு வசதியும் வேண்டும், புலம்பவும் வேண்டும் என்ற வகையறியாத குழப்பம்.

மொம்பாஸா இறங்கியபிறகு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது, முழுக்க முழுக்க இந்தியா போலிருக்கும் ஒரு ஊர்.  மனிதர்களை இடம்மாற்றினால், எந்தவொரு வித்யாசமும் இருக்காது. இந்தியாவின் எந்த ஒரு கடற்கரை கிராமத்தையும் ஒப்பிடலாம் இதனுடன்.  அதிலும் மொம்பாஸா, இந்திய பெருங்கடல் சூழந்த ஒரு தீவு, அழகிய தீவுகோவா, கொல்லம் அல்லது கேரளாவின் ஒரு கடற்கரை சிறுநகரத்துடன், அழகாய் பொருந்தும், தென்னை மரங்களும், பச்சை படர்ந்த வெளிகளும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் கடற்த்துகள்களும். வரவேற்றவன் சேரப்போகும் கம்பெனியில் நிர்வாக அலுவலன்.  துருத்திய பற்களும், மினுக்கும் கருப்பும், பிதுங்கிய விழிகளும் அவனுடன் எப்படி பேசுவது என்று யோசித்த போது, மவுனத்தை உடைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான்.  கரிபூனி மொம்பாஸா... வெல்கம் டூ மொம்பாஸா என்றவன் அழகான முகமனுடன் காலம் தப்பிய ஆங்கிலத்தில் பேச உற்சாகமானாள் இவன் மனைவி.

அவனிடத்தில் நிறைய கூகிள் கேள்விகள் கேட்க, பதில் தெரியாத நேரங்களில் சிரித்து வைத்தான்.  கொண்டு வந்திருந்த பழைய ஒலம்பஸ் காமிராவில் முடிந்த அளவு படங்களை எடுத்துத் தள்ளினாள்.  இதை எங்கே கழுவ வேண்டும் என்ற கவலை அவளுக்கு இல்லை.  வந்திருந்தவனின் பெயர் ஜெஃப்ரி.. ஆனால் அவனை அறிமுகப்படுத்தும் போது சொன்னது ஜோஃப்ரி என்று. இவனையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு கம்பெனிக்குப் போவதாகவும், அங்கிருந்து டிரைவரை மாற்றி விடுவதாகவும் கூற, இவனுக்கு எரிச்சலாய் வந்தது. பிரயாணக்களைப்பும், அலுப்பும், கசங்கிய உடைகளும் இப்படியே கம்பெனி வரை செல்வது உசிதமில்லை என்று சொல்லியபோதும், எங்கள் ஆங்கிலம், அவனுக்கு புரியாததாலோ என்னவோ ஏதும் சொல்லாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான்

ஏர்போர்ட்டில் இருந்து செங்காம்வே, கம்பெனி இருக்கும் இடம் போவதற்கு ஜோம்போவில் இருக்கும் சேரிகளை கடந்து தான் செல்லவேண்டும்.  அரதப்பழசான சாலைகளில் துருத்திக் கொண்டிருக்கும் கற்களும், குழிகளும் ஒரு ஒட்டகச்சவாரியாய் எலும்புகளை குலுக்கி இடம்மாற்றியது போல் இருந்தது, இரண்டு பேருக்கும்.  இருபுறங்களிலும் சிதைந்த, ஏதோ மரத்தினால் செய்த கூடுகளின் மீது மண் ஒழுக்கி எழுப்பிய வீடுகள், சரிந்த கூரைகளில் உள்ளும் புறமும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்.  இடையிடையே இருக்கும் கடைகள், அதனுள்ளே இருக்கும் கல்லாவை சுற்றி எழுப்பப்பட்ட இரும்புக்கிராதிகளினால் ஆன தடுப்பு... எல்லா தொழில் இடங்களும் கட்டமிடப்பட்ட இரும்புகிரில் அல்லது கிராதிக்கம்பிகளினால் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும் போது இவர்களுக்கு மேலும் கலக்கமாய் இருந்தது.  இவன் ஜெஃப்ரியிடம் கேட்டபோது, திருட்டு அதிகமாய் இருக்குமிடம் இந்த சேரிகளில் அதனால் தான் என்றான் ஆனால் ஊன்றி கவனிக்க எல்லாக்கடைகளிலும், அலுவலகங்களிலும் இது போன்ற கூண்டுகளில் தான் வாழ்கிறார்கள் என்று புரிந்தது. மேலும் அது பற்றிய விவரங்கள் ஏதும் சொல்லாமல் கம்பெனியை அடைந்தான் ஜெஃப்ரி.

பார்க்கவேண்டியவர்களை பார்த்துவிட்டு, குலுக்க வேண்டியவர்களிடம் கை குலுக்கிவிட்டு, மனைவியையும் டைரக்டர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, பராஸா என்ற டிரைவர் வந்து இவர்கள் தங்குமிடமான நியாளி ஏரியாவிற்கு அழைத்துச் சென்றான்.  நியாளி ஏரியாவிற்கு செல்லும் வழி, இவர்களின் பயத்தை ஒருவழியாகப் போக்கியது, அழகான சாலைகள், ஒழுங்கான போக்குவரத்து.  சினிமா காம்ப்ளெக்ஸ், இந்திய ஹோட்டல், பல்பொருள் அங்காடி என்று கோவைக்கு சமீபமாய் இருந்தது வசதிகளில்.  வழியெங்கும் எலக்‌ஷனுக்கான வேலைகள நடந்து கொண்டிருப்பதைக் காட்டும் போஸ்டர்கள், ஒலிபெருக்கி விளம்பரங்கள் கடக்கும் வாகனங்கள், மொம்பாஸாவின் மற்றோரு முகத்தைக் காட்டியது. பராஸாவை முதல் அறிமுகத்திலேயே இவர்கள் இருவருக்கும் பிடித்துவிட்டது.  வார்த்தைக்கு வார்த்தை பாஸ்... யெஸ் பாஸ் என்பவன் வினோதமாய்ப்பட்டது.

இரண்டு மாதத்தில் அதிகம் பழகிவிட்டான் பராஸா.  குடும்பத்தில் ஒருவனாய், இவர்களுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் வருவது, மதியம் உணவருந்துவது என்று அதிகம் விரும்பும் டிரைவர் ஆனான்.  இவனால் வரமுடியாத சில நேரங்களில் இவனின் மனைவியை கடைகளுக்கு அழைத்துச் செல்வது, பார்லருக்கு அழைத்துச் செல்வது, உணவு வாங்கிவருவது என்று ஒரு நல்ல வேலையாளாய் இருந்தான்.  பராஸாவுக்கு கம்பெனியில் இருந்து கொடுக்கும் சம்பளம் போக, இவன் மனசுக்கு ஏத்தமாதிரி பணம் கொடுப்பது ஒரு வழக்கமாகி விட்டது. எவ்வளவு கொடுத்தாலும் சந்தோஷமாய் வாங்கிக் கொள்வான், கொடுக்காவிட்டாலும் சரி. காலையில் அலுவலகத்திற்கு அழைக்க வருபவனுக்கு காலை உணவு, இவன் மனைவி கையில் தான் இருக்கும். 

எலக்‌ஷன் மும்முரங்கள் எங்கும் தீவிரமாய் நடந்து கொண்டிருந்தது அப்போது. எலக்‌ஷன் டிசம்பர் இருபத்திஏழாம் தேதி என்று முடிவானது, ரிசல்ட் வர எப்படியும் நான்கு நாட்களாவது ஆகும் என்றும் சொல்லப்பட்டது.  இரண்டே இரண்டு கட்சிகள் தான், இரண்டுமே இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தன.  அதனால், வழக்கமாய் இருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை விட, தேர்தல் ஏற்பாடுகள் தான் நாடெங்கும் பிரதானமாய்த் தெரிந்தது.  இந்த ஏற்பாடுகள் தீவிரமாக ஆக, பராஸா வேலைக்கு வருவது குறைந்து போனது.  கம்பெனி கிறிஸ்துமஸ், நீயு இயருக்கு பத்து தினங்களுக்கு மேல் லீவு விட்டுவிட்டது ஒரு காரணமாய் இருந்தாலும், இவனுக்கு இன்னும் கென்யன் டிரைவிங் லைசன்ஸ் வாங்காததால், விடுமுறைக்காலங்களிலும் கூட பராஸா வருவதாய் ஒப்புக் கொண்டிருந்தான்.  ஆனால் கடந்த இரண்டு நாட்களாய் அவன் வரவில்லை. கிறிஸ்துமஸ் ஷாப்பிங் ஏதும் செய்ய முடியாமல் சிரமமாய் இருந்தது. இவன் மனைவிக்கு ப்ராஸா வேலைக்கு பெரிய குறையாய் இருந்தது. கிறிஸ்துமஸ் டெக்கரேஷன், கேக் செய்யத்தேவையான சாமான்கள் ஏதும் வாங்கமுடியவில்லை.

கென்யாவில் 1992 வருஷன் நடந்த எலக்‌ஷனின் போது ஒரு ரிசல்ட் வந்தபிறகு நிறைய கலவரங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்தியாவிலும் பீகார் போன்ற மாநிலங்களில் இது போல கலவரம் நடப்பதால் இவனுக்கு ஒரு பெரிய விஷயமாகப்படவில்லை.  கிறிஸ்துமஸ் வந்தது, முடிந்தவரை நெருங்கிய நண்பர்களை மாத்திரம் அழைத்து விமரிசையாய் இல்லாமல் எளிமையாக கொண்டாடினார்கள்.  கிறிஸ்துமல் மாதிரியே இல்லை என்ற இவன் மனைவியிடம் அடுத்த வருஷம் நல்லாக் கொண்டாடலாம் என்று சமாதானம் செய்தான். 

எலக்‌ஷனும் ஒருவழியாக முடிந்தது, ஒன்றிரண்டு பூத் கேப்சரிங்க் மாத்திரமே, நைரோபியில் உள்ள சேரிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசி சில குடிசைகள் எரிந்தது தவிர வேற விரோத செய்திகள் இல்லை.   டிசம்பர் முப்பத்தியொன்றாம் தேதி ரிசல்ட் அறிவிக்கும் முன்னரே, ஒரு கட்சியின் தலைவர் தான் தான் ப்ரெசிடெண்ட் என்று அறிவித்து, பதவிப்பிரமாணம் எடுக்க வெடித்தது கலவரம்.  எதிர் கட்சித்தலைவர், இது பொய்யான நிலவரம், தேர்தலில் முறைகேடுகள். தில்லுமுல்லுகள் நடந்துள்ளது எனவே தங்கள் கட்சியே வென்றது என்று பிரசங்கம் செய்ய, அவரின் சொந்த ஊரில் வெடித்த கலவரத்தில் பதவியேற்ற பிரசிடெண்ட் இனத்தை நோக்கி நகர்ந்தது கலவரம். அந்த இனத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசியல் கலவரமாய் ஆரம்பித்த விஷயம் இனக்கலவரமாய் மாறிக் கொண்டிருந்தது. அழுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட இனங்களின் வெறுப்பிலும், துவேஷத்திலும் பிரளய நெருப்பு எரிந்தது எங்கும். பிரிட்டீஷ் ஆட்சியின் போது அந்த குறிப்பிட்ட இனம் ஆதிக்கத்தில் இருந்தது, அதனால் பிற இனத்தவர்கள் இடம்பெயர்க்கப்பட்டு அதில் தங்கள் பூர்வகுடியை இழந்தார்கள், விளைநிலங்களை இழந்தார்கள் என்ற எல்லா காழ்ப்பும், கோபங்களும் புரையோடிப்போன புண்கள். ரிப்ட் வேலி, நகுரா, நவிஷா பகுதிகளில் தீயென பரவியது கலவரம், உயிரோடு எரிக்கப்பட்டார்கள். கடைகள் சூறையாடப்பட்டனர், மொம்பாஸாவில் முஸ்லீம்கள் ஊர்வலம் போனார்கள், பெரிய பல்பொருள் அங்காடிகள் தகர்க்கப்பட்டன, கடலோர சிறு கிராமங்களில் இருந்த கட்சியைச் சேர்ந்த சேராத இளம் வயதினர்கள் தெருவில் கத்தியோடு திரிந்தார்கள். டயர்கள் கொளுத்தி குடிசை வீடுகளில் எறிந்தனர். 3500 பொதுமக்கள் இறந்தனர், 6 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.  தெருவெங்கும் ரத்தமும், எரிந்த பிணங்களின் நாற்றமும் குமட்டிய சேரிகளில் ஓலங்கள் தீர்ந்த பாடில்லை. 

யாரும் வெளியே போகவில்லை, போதுமான உணவில்லை.  வேலைக்கு வரும் இசுலாமியப்பெண்ணும் பத்து நாளாக வரவில்லை. பூனைக்குட்டியையும் காணோம். இவனுடைய அலுவலகத்தை காலவரையின்றி மூடிவிட்டார்கள். வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தகவல் சொல்லப்பட்டது. சரக்கு கொடவுன் எரிக்கப்பட்டது.  தொலைக்காட்சியில் விட்டுவிட்டு வரும் செய்திகளில் வீடியோக்களில் ரிப்ட் வேலியில் உள்ள சேரிகள் தீவைத்து கொளுத்தப்படுவது காட்டப்பட்டது... பிபிசி ரிப்போர்டரிடம் தொலைக்காட்சி காமிராவின் முன்னால் கத்தி வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாய் பேசினான் ஒருவன். அவன் சிகப்புத் துணியை முகத்தை மறைத்துக்கட்டியிருந்தான். அவனுடைய பேச்சில் ஆக்ரோஷத்துடன் தெறித்த வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட இனத்தை/கட்சியைச் சேர்ந்தவர்களை தயங்காமல் கொல்வேன் என்று சொல்ல, அது சப்டைட்டிலில் ஓடியது.  அவன் கண்கள் பராஸாவைப் போல இருப்பதாக இவன் மனைவி சொன்ன போது தான் கவனித்தான் இவன்.

(இதை ஒரு நாவல் அளவு விரிக்கலாம்... நேரமிருந்தால் விரிக்கிறேன்...)Monday, December 20, 2010

கொட்டுக்கலமிசை...

வட்டறுத்து வலம் திருத்தி
சுட்டகலும் பிணி
கொன்று திங்கும்
எஞ்சியதாய் தின்று செழிக்கும்
செந்நாய்கள்
உலரும் கணங்களின் 
அரக்கப் பிடியுள் கொழுத்த இரவும் 
அண்டி ஒடுங்கிய
பினைக்காமன்
எரித்த மூன்றாம்
வாசல் திறந்தவனின் உட்புக
மந்தி கரையேறும்
செந்தீந்தழல் படுகை
கடந்து கரைந்த அகவிழி
திறந்த
புல்லான், புலையன், புண்கண் புரையோடி
நல்லார் பொல்லார் பொசுக்க
நமக்கென மீறும் பொடி
அப்பிய உடலெங்கும்
அதிர்ந்து இசைக்கும்
துந்துபியின் இலக்கத்தில் சொருகியது
செருவில் விடுத்த அம்பு

கொண்டான், புரண்டான், அழுதான்,
புழுதியில் தோய்ந்த
கெட்டித்த குருதி
வழிய பிட்டுத்திண்ணும்
சண்டியும்
கழற்றி எறிய
பிரதிஷ்டை அருள்
வளர்க்கும் கொம்பு, அப்பன்

Thursday, December 16, 2010

சாலமிகுத்துப் பெயின்...

தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தாள், ராமதிலகம். மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இது ஒரு பேரவஸ்தை எனத் தோன்றும் எல்லோருக்கும். உறக்கம் வராது தொண்டைக்குள் குறுகுறுவென்று இருமல் வந்து கொண்டே இருக்கும், அதிலும் தலைக்கு ஒரு சொம்பு ஊத்திட்டா போச்சு, அன்னைக்கு பூரா நெஞ்சு கனத்துப் போயி எளப்பு எடுக்க ஆரம்பிச்சுடும்.  கொஞ்ச நாளாவே சுடு தண்ணீ தான் குடிக்கிறது, பச்சத்தண்ணீ பல்லுல படாமத் தான் இருக்கு, ஆனாலும் விடமாட்டிங்கு இந்த சளியும், எளப்பு சனியனும்.  இவ கூட வேல பாக்குறவளுக எல்லாம், குளுந்த தண்ணீ குடிக்குறப்போ, பாக்க பாக்க இவளுக்கும் குடிக்க ஆசையா இருக்கும், ஆனாலும் முடியாது. வெய்யக்காலம்னாக்கூட அவளுக்கு சுடுதண்ணீ தான். தாகம் தீந்தாமாதிரியே இருக்காது.  அதுவும் விக்கல் வந்துட்டா தாங்க முடியாது, சூடு பண்ணிவச்ச தண்ணியவும் தாராளமாக் குடிக்க முடியாது. தீந்து போயிட்டா, டார்மெட்ரிக்கு போகணும், அந்த எழவுக்கு இங்கனயே இருந்துட்டு, மூச்சப்பிடிச்சு நிப்பாட்டிடறது தான் வசதி. தூக்கம் வரல, காத்தும் இல்லாம எல்லாம், நின்னு சிலையாப்போனது போல இருக்கு மரமெல்லாம். எந்துரிச்சு உலாத்தவும் முடியாது, வார்டனக்கா ஏன் வந்த எதுக்கு வந்தன்னு உசுர வாங்கிடும்.


சுமதி எந்திரிச்சு பாத்தா! என்ன புள்ள தூங்கலையா? இருமலா இருக்கு சுமதி என்ன பண்றதுன்னு தெரியலை, படுத்தா இன்னும் கஷ்டமா இருக்கு! என்றாள்.  வாசுகி ஒரு இருமல் மருந்து வச்சிருக்கா, அத எடுத்துக் குடி! காலைல சொல்லிக்கிடலாம்! வேணாம்த்தா, அவ காலைல எந்திரிச்சு பேய்மாரி கத்துவா... என்றாள். 

முதலுதவி பெட்டி வச்சிருப்பாங்க கம்பெனில, அதுல ஒண்ணும் இருக்காது, துடைச்சு வச்சா மாதிரி. ஏதாவது இருந்தாலும், மருந்து மாத்திரை இருக்காது... டெட்டால், பஞ்சு, சல்லடைத்துணியும், ஒரு ஆயின்மெண்டும் இருக்கும், அம்புட்டுதான். உடம்புக்கு சொகமில்லாதப்போ, நர்ஸக்காவத் தான் பாக்கணும், ஆனா அதுவும், காலைல தான் வரும், ராத்திரி டார்மெட்ரில தங்கியிருக்கிறவுகளுக்காக ஒரு நைட் டூட்டி நர்ஸ் போடணும்னு சொல்லி இதோட ஒரு வருஷம் ஆகிப்போச்சு, இன்னும் எதுவும் நடக்கக் காணோம்.  இங்க டைம் ஆபீஸ்ல இருக்கிற ராஜேஷு அண்ணன்கிட்ட சொல்லி மேனேஜர்கிட்ட ஒரு லெட்டரும் கொடுத்தாச்சு, ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியலை. கம்பெனியும் முன்ன மாதிரி இல்லை, முன்னெல்லாம், நிறைய ஆர்டர் இருக்கும், நிறைய நேரம் வேலை பார்க்க, நிறைய ஓ.டி. காசும் தாராளமா கிடைக்கும், இப்போ ஆர்டர் குறைஞ்சு போயி, தனியாக் கிடைக்கிற காசு எதுவும் கிடைக்கிறதில்லை. சம்பளமே தள்ளி தள்ளிப் போகுது இப்பெல்லாம்.


கரூர்ல, எல்லா கம்பெனியவும் கடைண்டு தான் சொல்லுவாங்க, அது என்ன கணக்கோ, இவளும் புதுசா உசிலம்பட்டில இருந்து வந்தப்போ, கடை, கடைன்னு சொல்லக்கண்டு, ஏதோ பெரிய துணிக்கடையாட்டம் இருக்கும்னு தான் நினைச்சா, ஆனா வந்து பாத்தப்போதான் தெரிஞ்சது, இது எத்தாம்பெரிய கம்பெனியிண்டு. இந்த கடைல இரண்டாயிரத்துக்கு மேல ஆளுக்க வேலை செய்யிறாங்க, இதுல பொம்பிளய்ங்க தான் ஜாஸ்தி, கிட்டத்தட்ட ஆயிரத்து   ஐந்நூறுக்கும் மேல இருக்கும், இதுல பாதிக்கு மேல வெளியூர்ல இருந்து வாரவுக தான். இவளப்போல உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, சின்னாளம்பட்டி, பேரையூரு, பெரியகுளம், கோட்டயம், இடுக்கி  பக்கத்தில இருந்து தான் கொள்ளப்பேரு, இவ ஊர்க்காரிக மட்டுமே அம்பது பேருக்கும் மேல இருக்கும்.

இவ உசிலம்பட்டில இதுக்கு முன்னாடி பிஸ்கட் கம்பெனில தான் வேலை பாத்தா, அங்க பேக்கிங் டிபார்ட்மெண்டில் தான் இவளுக்கு வேலை.  பாக்டரிக்குள்ள நுழைஞ்சாலே ஜம்முன்னு வாசமடிக்கும், மணக்க மணக்க வேலை செய்யலாம், போனவுடனே, டிரஸ்ஸ மாத்திடணும், அவுக கொடுக்குற டிரஸ் தான் போடணும், தலைக்கு குல்லா, கையில கிளவுஸ்ஸு, மூஞ்சில முகமுடி எல்லாம். கண்ணாடில பாத்தா யாரோ மாதிரி இருக்கும்.  ஆனா இங்க மாதிரி அங்க நிறைய சம்பளம் கிடையாது, இங்கு டார்மெட்ரி எல்லாத்துக்கும் வசதி, சாப்பாடு போக வீட்டுக்கு ஐந்நூறு ரூவா அனுப்பமுடியும்.

கூடப்படிச்சவள்ல ரெண்டு பேரு, கரூர்ல இந்த கம்பெனி பத்தி சொன்னவுடனே, அப்பா, ஆத்தா, நமக்கு நல்ல காலம் புறந்துடுச்சு ஆத்தா, நீ போயி சம்பாதிச்சுதான் தாயி... உந்தம்பி, தங்கச்சிய படிக்கவைக்கணும்னு சொல்லியதும், அவளுக்கு ஒரு கிரீடம் ஏறியது போல இருந்தது. அம்மாவுக்கு திலகத்தை அனுப்பவே பிடிக்கலை, இவளுக்கு சிநேகிதக்காரிகளோட போறோம்னு ஆசை வந்து, அம்மாவ நச்சரிச்சு, ஒரு வழியா சமாளிச்சு இங்க வந்துட்டா. இவ சம்பாதிச்சா வீட்டுக்கு உதவியா இருக்கும், அப்பாவால இப்போ எந்த பிரயோசனமும் இல்லை.

அப்பாவுக்கு வேலையில்லை இப்போ, கிடைக்கிற வேலையவும் ஒழுங்கா பாக்குறது இல்லை. முன்னாடி தேனில சாயப்பட்டறைல தான் வேலைப் பாத்தாரு, அவருக்கு உடம்புக்கு முடியாம, டிபி வந்து ஒல்லியாப் போயிட்டாரு, அவருக்கு ஒடம்புல தெம்பே இல்லாமப் போச்சு, தொசுக்கு தொசுக்குன்னு எங்க போனாலும் ஒக்காந்துருவாரு... இதுல அப்பாவுக்கு குடிப்பழக்கமும் இருக்கு, அம்மா காட்டு வேலைக்கு கூப்பிட்டாலும் போக மாட்டாரு. இந்த வேலைக்குப் போனா மூணு வருஷத்துல கை மேல முப்பத்தைஞ்சாயிரம் கொடுப்பாங்கன்னும், மாசாமாசம், தொள்ளாயிரம் ரூவா சம்பளமுன்னும் சொன்னவுடனே, திலகத்தை மூட்டை கட்டி அனுப்புறதிலேயே குறியா இருந்தாரு அவ அப்பா. போட்டும்டி, அவ கல்யாண செலவுக்கு ஆகும், ஒரு வேளை கஞ்சி குடிக்கலாம் உருப்படியா என்று அப்பா அவளை விருமாண்டி மாமாகூட அனுப்பி வைச்சிட்டாரு. வந்த புதுசுல சாப்பாடு பிடிக்காம, தம்பி, தங்கச்சி, அம்மாவ விட்டு வந்தது கஷ்டமா இருந்ததால, அழுகையா வரும், அப்புறம் பழகிப் போச்சு, இராமதிலகத்துக்கு.

இங்க ஒரு ரூம்ல பத்து பிள்ளைக,எல்லாருக்கும் பாயி தலைகாணி ஒரு பேனு. காத்து நல்லாத்தான் வரும், ஜன்னல் ரெண்டையும் திறந்து வச்சா, மத்தவளுக பூச்சி வருதுன்னு பயப்படுவாளுக. மூணு வேளை சாப்பாடுக்கு, நானூத்தி சொச்சம் பிடிச்சது போக ஓ.டி. பார்த்த காசு எல்லாம் சேர்த்து     எழுநூறு ரூவா வரும், அதில் இவ இருநூறு ரூவா எடுத்துக்கிட்டு, மீதிய மணியார்டர் அனுப்பிடுவா.  பிள்ளைகளுக்கு தேவையான சோப், சீப்பு, பவுடர், பொட்டு, எண்ணெய்ன்னு தேவையான எல்லாப்பொருளையும் வார்டனக்கா வாங்கி வந்துரும், அதுக்கு ஒரு கமிஷன் வச்சு இங்க இருக்கிற எல்லாப்பிள்ளைகளுக்கும் வித்திரும், இதுல ஆபீஸ்ல இருக்கிற ஒரு ஆளுக்கும் கூட்டு. கேரளால இருக்கிற பிள்ளைக கேர்பிரீயும் வாங்குவாளுக, ஆனா நம்ம ஊரு பிள்ளைக வெறுக் கட்பீஸத் தான் வச்சுக்கிடுறதே.  வாரத்துல ஒரு நாளு படம், மாசத்துல ஒரு நாளு டவுனுக்குன்னு ஒரு அட்டவண இருக்கு, அதுபடி தான் எல்லாம்.  துணி தொவைக்கிறது தான் பெரிய வேலையே, காயப்போட எடம் இருக்காது பாதி நேரம், அதுவும் ஓடி எல்லாம் இருந்துட்டு எப்படா வந்து படுப்போம்னு இருக்கும், ரவைக்கு கொள்ள நாளு சாப்பிடுறதே இல்லை. மிஞ்சிப்போன சாப்பாட எல்லாம், மய்க்கா நாளு காண்டின்கார பொம்பள தண்ணி ஊத்தி வச்சு, மத்யான சாப்பாட்டு தயிர்சாதமா ஆக்கிடும்.  கறி சாப்பாடு போடுற அன்னைக்கு மாத்திரம் சாப்பாடு மிஞ்சாது.

ராமதிலகம் வேலை பாக்குற கம்பெனி தான் இந்த ஊரிலேயே பெரிசு, இது கரூருக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இருக்கு. தலகாணி உற, திரைத்துணியெல்லாம் தச்சு, வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யிற கம்பெனி.  முதலாளி சிந்திக்காரருன்னு சொல்வாங்க, அது எங்கேயோ வடக்க இருக்கு போல. இங்கன வேலைக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகிப்போச்சு, தீபாவளிக்கு மாத்திரம் தான் ஊருக்கு போகமுடியும். பொங்கல் இல்லேன்னா தீவாளி, இவளுக்கு தீவாளிக்கு போவது தான் சரின்னு பட்டுது, இவ ஊர்க்காரிக கூட தீவாளிக்கு தான் போவாளுக. சில பிள்ளைக பங்குனிப் பொங்கலுக்கும், தைப்பொங்க்லுக்கும் ஊருக்கு போறது தான் வாடிக்கை.  பொங்கலன்னிக்கு, புதுசா உடுத்தத் தேவையில்லை, பட்டாசு கிடையாது, பலகாரம் கிடையாது, பொங்கல் மட்டும் தான். வீட்ல மாடு கண்ணு இருந்தா அதுக்காகவாவது பொங்கலுக்கு போகத்தோனும், இவ வீட்ல எதுவும் இல்லாததால தீவாளி தான் பெரிய பண்டியலு இவளுக்கு.

போன தடவை தீவாளிக்கு போனப்ப, ராமதிலகத்தின் அம்மாவிற்கு பிள்ளைய பாக்க பாக்க அழுகயா வந்துடுச்சு, தோலு வெளுத்தமாதிரி சோகைபிடிச்சாப்ல இருக்கு, உடம்பும் வத்துனாப்புல இருக்கேன்னு கவலை வந்துடுச்சி... இந்த மனுஷன் எம்பிள்ளைய இப்படி வதைக்கிறானேன்னு புலம்பி தீத்துடுச்சி... ராமதிலகம், அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, கொஞ்சம் கலராயிருக்கேன், உடம்ப குறைச்சிருக்கேன், இங்க இருக்கிறப்ப திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குறன்னு நீ தானே சொல்வ! அதான் இப்ப வேலைப்பாக்குறதால வத்துனாப்புல தெரியுது... அதுவும் இத்தனை நாளு நீ என்ன பாக்கல... அதான் என்று சமாளித்தாள் ராமதிலகம். ஆனா வாஸ்தவமாப் பாத்தா இந்த இருமல் சளியெல்லாம் இங்கன வந்து தான் வந்துச்சு, அது பெறகால தான் ஒடம்பு வத்துனது எல்லாம், இதச்சொன்னா அம்மா இன்னும் அழுவுமென்று சொல்லாமல் விட்டுவிட்டாள். 

தீவாளிக்கு கம்பெனிக்காரங்க கொடுத்த ஸ்வீட் பாக்கெட்டும், அப்புறம் டார்மெட்ரிக்குள்ளயே போட்ட சீட்டுல வந்த பணத்துல பட்டாசு பொட்டலமும் வாங்கியதை தம்பி தங்கைகளுக்கு கொடுத்ததும் சந்தோஷப்பட்டார்கள். போனஸ் கொடுத்த காசுல அம்மாவுக்கு சேலையும், அப்பாவுக்கு வேட்டி சட்டையும், இவளுக்கு ஒரு பாவாடை தாவணியும் வாங்கிக் கொண்டாள், பாண்டிக்கு பிடிச்ச கலரு. தம்பி தங்கச்சிக்கு அம்மா ஏற்கனவே வாங்கி வச்சிருந்தது இவளுக்கு வசதியாப் போயிட்டது, கொஞ்சம் காச அம்மாட்ட கொடுத்ததும், ரொம்பவும் சந்தோஷப்பட்டாள் அம்மா, ராமதிலகத்துக்கு பெரிய மனுசி ஆயிட்டது போல தோன்றியது அப்போது தான்.

பாண்டி கட்டிங்குல கட்டரா வேலை பாக்குறான், உயரமா, உயரமா இருப்பான். பாக்குறத்துக்கு கொஞ்சம் கடலோரக்கவிதைகள் ராஜா மாதிரி...லேசா வளஞ்ச முதுகு, கழுத்துல ஒரு கயிறு, அதுல திருச்செந்தூர் முருகன் டாலர் போட்டிருப்பான். முன்னால மட்டும் சுருள் முடி பாக்கவே அழகா இருக்கும். இவ கட்டிங்கிலருந்து கட் பீஸெல்லாம் எடுத்துட்டுப் போயி, லைனுக்கு கொடுக்குற பீடிங் ஹெல்பர் வேலை பாக்குறதால, பீஸ் எடுக்க போகும்போது அவன பார்ப்பா.   அப்போ, லே போட்டு அடுக்கி வச்சிருக்கிற துணியில கட்டிங் மெஷினகொண்டு, மேல வச்சிருக்கிற பேட்டர்னுக்கு தகுந்த மாதிரி வளைச்சு வளைச்சு வெட்டும்போது, பாக்கவே அழகா இருக்கும். வெய்யக்காலத்துல சட்டைய கழட்டிட்டு, வெறும் முண்டா பணியனோடு இருக்கும் பாண்டி, இவளை குனிஞ்ச மாதிரி சைடா பாக்குறது, இவளுக்கு ஒரு மாதிரி குறுகுறுன்னு இருக்கும்.

என்ன அண்ணே! என்னயவே முறைச்சு பார்க்குறீங்க! என்று கட் பீஸு பண்டில (bundle) லேசா உரசிட்டு கடந்து போவா...  ஏ புள்ள! அண்ணே கிண்ணேன்ன அம்புட்டுத்தான்... பேரச்சொல்லிக் கூப்பிடு இல்லாட்டி, போங்க வாங்கன்னு கூப்பிடு... எனக்கு இருக்கிற தங்காச்சிங்க போதும் என்று இவளை நாக்கு துருத்தி விரட்டுவான். இவளுக்கு சிரிப்பா வரும், ஒருமுறை அவனை கடந்து போகும் போது பாண்டி மச்சான், என்று கிசுகிசுப்பாய் சொல்ல, பாண்டிக்கு கொள்ள சந்தோசம். அவள் கடக்கும்போது பாவாடையோடு இடது புறங்கைய தொடையில உரச, படக்கென்று விலகினாள்.

எல்லாரும் இருக்கும்போதும் அவளுக்கு, பாண்டியை சீண்டத் தோன்றும், கட்டிங் ஹெல்பரா இருக்கிற பாப்பாத்தி அக்காவுக்கும், ஸ்டிக்கர் அடிக்கிற அம்பிலிக்கும், இவங்களோட சாவகாசம் தெரிந்த பிறகு, இவள் வரும்போதெல்லாம் கிண்டல் பண்ணுவார்கள். மற்றவர்களிடம் பாண்டியைப் பற்றி பேசுகையில் பாச்சா... என்று குறிப்பிடுவாள். யாராவது கேட்டா, அது ஒல்லியா பாச்சா மாதிரி இருக்குல்ல அதனால தான் என்று சமாளிப்பாள். ஆனா அவளுக்கும் பாண்டிக்கும் மட்டும் தான் தெரியும், பாச்சான்னா... பாண்டி மச்சானின் சுருக்கம் என்பது.

ராத்திரி மூச்சூடும் தூங்காம விடியக்காலம்பற அவளுக்கு தூக்கம் அசத்து, உறங்கிப் போனாள், சுமதி வந்து உசுப்ப எழுந்தவள், ஏழு மணி ஆனது தெரிந்தவுடன், அவசர அவசரமாய் கிளம்ப ஆயத்தமானாள்.  இப்போ போனா, பாத்ரூமெல்லாம் கூட்டம் இருக்கும், இன்னிக்கு ஒருநா குளிக்காம போயிடலாம், சாயங்காலம் வந்தவுடனே குளிச்சிக்கலாம், உடம்புக்கும் கொஞ்ச குதுகுதுன்னு வந்ததால, முகத்தை மட்டும் கழுவிட்டு, சுமதியிடம் இருந்து கொஞ்சம் பாண்ட்ஸ் பவுடர் வாங்கி தடவிட்டு, சாப்பாடு தட்டெடுத்துட்டு, காண்டீனுக்கு விரைந்தாள்.  அம்பிலியும், ஷாலுவும் முன்னால் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களை பார்த்து சிரித்து விட்டு, லேட்டாயிடுச்சுல்ல.. என்றாள். எதுக்கு, பாச்சாவ பாக்கவா என்றாள் அம்பிலி கண் சிமிட்டியபடி, ஆருடி அது பாச்சா என்ற ஷாலுவின் கேள்விக்கு சொல்லவா, சொல்லவா என்று மிரட்டினாள் அம்பிலி.  என்ன சொல்லப்போற... ஒண்ணுமில்ல, இவ சும்மா... பகடி பண்ணுறா என்றாள் ராமதிலகம், ஆனாலும் மனசுக்குள் சொல்ல வேண்டும் என்று ஆசையா இருந்தது.  எல்லோருக்கும், இவள் பாண்டியோட ஆளு என்ற பேச்சு, ஜாடைமாடையா கேட்டா நல்லாயிருக்கும் தான்னு தோன்றியது. குறிப்பா இவ ரூம்ல இருக்கிற வாசுகிக்கு தெரியணும், பெரிய பந்தாவிட்டுட்டு இருப்பா எப்பப் பாத்தாலும், அவ மூஞ்சியும், மொகரையும். எவளாவது அவகிட்ட வருவானா என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

வரிசை நகர தன்முறை வந்ததும், தட்டை நீட்ட, ரவா கிச்சடியும், தேங்காசட்னியும் விழுந்தது.  ஒரு கரண்டிக்கு மேல இதத் திங்க முடியாது, நாக்கெல்லாம் வறச்சியா இருக்கும் மத்யானம் சாப்பாடு முடிக்கிறவரை, என்று நிறுத்தினாள். சாப்டுட்டு கம்பெனிக்குள்ள நுழையவும் மணி அடிக்கவும் சரியா இருந்தது.  நேத்துக் கொடுத்த பீஸுகளின் கணக்கை பீடிங் சிலிப் பார்த்து எழுதிவிட்டு, பண்டில் இல்லாத லைனுக்கு பீஸு கொடுக்க கிளம்பியவளை நிறுத்தி, இன்னையில இருந்து நீ டிரிம்மிங் மட்டும் பாரு, பீடிங்குக்கு வேற ஆளப்போட்டாச்சு, டிரிம்மிங்குல ஆள் குறைவா இருக்காம் என்று அவளுடைய லைன் சூப்பர்வைசர் சொல்ல, இவளுக்கு மனசுக்கு கஷ்டமா இருந்தது, டிரிம்மிங்,செக்கிங்கும் பேக்கிங்கும் வேற ஒரு ஷெட்டுல இருக்கு, அதனால் பாச்சாவ அடிக்கடி பார்க்கமுடியாது என்பதை நினைக்கும்போதே அவளுக்கு அழுகை வர மாதிரி இருந்தது.  வேற ஒன்னும் செய்யமுடியாதா, வேற யாராவது அனுப்புங்கண்ணே என்று இவள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவளோட சூப்பர்வைசர்.

இரவு ஏழு மணிக்கு டார்மெட்ரிக்கு திரும்பியவள், சுமதியிடம் சொல்லி சொல்லி அழுதாள்.  பகவதி அம்மனையும், பாண்டி சாமியையும் தீவிரமாக வேண்டினாள். மூணு ரோடு முனுசாமிக்கு கெடா வெட்டுவதாகவும் வேண்டியவள் சாப்பிடாமல் உறங்கிப் போனாள், எட்டு மணியிருக்கும் போது பேக் பண்ண ஆள் கம்மியாயிருக்கு, அதனால டார்மெட்ரில இருக்கிற பிள்ளைகள எல்லாம் வேலைக்கு கூப்பிடுறாரு, மேனேஜரு என்று தகவல், வர எல்லா பிள்ளைகளுக்கும் எரிச்சலுடன், கோபமும் வந்தது எல்லோருக்கும்.

இதே பொழப்பா போச்சு, இவனுங்களுக்கு, எப்பப் பார்த்தாலும் வந்து படுக்குறதுக்குள்ள திரும்பக்கூப்பிடுறது! மனுஷங்களா இல்லா மாடுங்களா நம்மெல்லாம், ஒரு நாளைக்கு இருவது மணி நேரமா, அதுவும் ஒரு நாளு கிழமை கிடையாது, ஓய்வு ஒழிச்சல் கிடையாது என்ன நாறப்பொழப்பு இது... பேசாம ஊருப்பக்கம் போயி காட்டு வேலப்பார்க்கலாம், வீட்டு மனுஷங்களோடவாவது இருக்கலாம், என்று புலம்பித் தள்ளினாள், டார்மெட்ரில இருக்கும் மரகதமணியக்கா.  மரகதமணியக்கா ரொம்ப பக்தியான ஆளு, வேலையில்லாத நேரமெல்லாம், பூசையும், கோயிலுமாத்தான் இருக்கும்.  மரகதமணியக்காவுக்கு குழந்தையெல்லாம் கிடையாது, புருஷனும் வேற கல்யாணம் பண்னிக்கிட்டானாம்,  டார்மெட்ரில தான் இருக்கும் எப்போதும், லீவுக்கு மட்டும், நத்தத்தில இருக்க அவங்க அம்மா வீட்டுக்குப் போயிடும்.  எல்லார் மேலயும் ரொம்ப பிரியமா, கரிசனையா இருக்கும் மரகதமணியக்கா. ஏழுமணிக்கு டார்மெட்ரிக்கு திரும்ப வந்ததே நூறு பேருதான், அத்தனைபேரையும் வரச்சொன்னா என்ன அர்த்தம்னே தெரியலை.

எல்லோரும் இரவு சாப்பாடை முடித்துக் கொண்டு எட்டரை மணிக்கே திரும்பவும் கம்பெனி  நோக்கி போக ஆரம்பித்தார்கள். டார்மெட்ரியும், கம்பெனியும் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும், ஒரு பத்து நிமிஷம் நடக்க வேண்டும். வேலை மும்முரமாக நடக்க ஆரம்பித்தது, கம்பெனி முழுதும் விளக்குகள் எரிய பகல் போல இருந்தது. பன்னிரெண்டு மணி இருக்கும் போது புரடக்‌ஷன் புளோரில் இருந்து ஏதோ சத்தம் வந்தது.  மரகதமணியக்காவுக்கு சாமி வந்துவிட்டது... அக்கா குதித்துக் கொண்டே வெளியே வர, வேடிக்கை பார்க்க எல்லோரும் வெளியே வர ஆரம்பித்தார்கள்... வேலை நின்று போனது முழுதுமாக... மரகதமணியக்காவைத் தொடர்ந்து இன்னும் சில பேருக்கு சாமி வர... என்ன வேண்டும் என்று ஒவ்வொரு சூப்பர்வைசரும், புரடக்‌ஷன் மேனேஜரும் கேட்க, போன பங்குனிக்கு கெடா வெட்டுனயா... ரத்தபலி வேணும்டா என்று கேட்க... கம்பெனிக்கு வெளியே திருவிழா ஆனது.  குடம்குடமாய் தண்ணீர், திருநீறு, மஞ்சள் குங்குமம், அல்லோல கல்லோலமானது.  இப்போது நூறு பேருக்குமேல் சாமியாட ஆரம்பிக்க... கட்டுப்படுத்த முடியாமல், சூப்பர்வைசர்களும், மேனேஜரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.  அப்போது ராமதிலகமும் ஆடத்தொடங்கியிருந்தாள். 

Tuesday, December 14, 2010

உள்ளத்தனையது...

காலையில் வெயில் வருவதற்கு முன்பே எழுந்துவிடுவது தான் பெருமாள்சாமிக்கு பழக்கம்.  ராமேஸ்வரம் பாசஞ்சர் சுப்பிரமணியபுரம் ரயில்வே லைனை கடக்கும் போது போடும் சத்தத்தில் எழுந்துவிடுவார் எப்படியும்.  முன்னெல்லாம் சத்தம் பெருசா இருக்கும், டிரெயின் பக்கத்துலயே ஓடுற மாதிரி கேட்கும். இப்போ வீடு பெருகிப் போயி சத்தம் சன்னமாப் போச்சு. அவருக்கு சில சமயம் சத்தத்தில எந்திரிக்கிறோமா இல்ல பழக்கத்துல எந்திரிக்கிறோமா என்று வகைப்படுத்தத் தெரியாது.  பழக்கம் ஒரு நோய்னு சொல்வாரு, அவங்க நாயினா... நல்லதோ கெட்டதோ எந்த ஒரு பழக்கமுமே நோய் தாண்டா என்பார். ஏன்னு விளங்காது அப்போ, ஆனா இப்போ தெரியுது.  நேரஞ்செண்டு படுக்கிற நாளு மட்டும் காலைல லேட்டா எந்திரிக்கலாமுன்னா முடியாது. சரியா தூக்கமில்லாததால பகல்ல அப்படியே தள்ளும். அதுவும் அவரு பாக்குற வேலைக்கு தூங்கி வழிஞ்சா எவ்வளவு ஆபத்து.

பெருமாள்சாமி மதுரை கார்ப்பரேஷன் மின் வாரியத்துல வயர்மேனா வேலை பாக்காரு. மதுரை கார்ப்பரேஷன் ஆகுறதுக்கு முன்னாடி முனிசிபாலிடியா இருந்தபோது மின்வாரியம் சம்பந்தப்பட்ட வேலைகள், தனியாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது, அது முனிசிபாலிடியின் பார்வையின் கீழே இயங்கி வந்தது.  அந்த மின் ஊழியர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கும் தொடர்பில்லாமல் ஒரு தனி அரசு இயந்திரமாய் பழுதில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தது. மதுரை கார்ப்பரேஷன் ஆனபிறகும், சில ஏரியாக்கள் தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணையாமல், மாநகராட்சியின் கீழேயே இருந்து வந்தது. அதில் தான் பெருமாள்சாமி வயர்மேனா வேலை செய்து வருகிறார். இவருக்குக் கீழே உதவியாளர்களும், எண்ணமார்களும் இருப்பார்கள், எண்ணமார்கள் பெரும்பாலும், குழி தோண்டுவதற்கும் கேபிள் இழுப்பதற்கும் அல்லது வேறு ஏதாவது கடின வேலைகளுக்கும் பயண்படுத்தப்படுவார்கள். இவர்கள் போஸ்ட் மரத்தில் ஏறி எந்த மின் பழுதுகளையும் சரிசெய்யக்கூடாது. உதவியாளர்கள் ஏறலாம், மின் பழுதை சரிசெய்யலாம், அவர்களின் வயர்மேன் சொல்வது படி.

பெருமாள்சாமியும் எண்ணமாராய் தான் வேலைக்கு சேர்ந்தார், எண்ணமார்ங்க எல்லாம், கார்ப்பரேஷன் ஊழியர்கள் கிடையாது, தினக்கூலியாய் சேர்க்கப்படும் இவர்களுக்கு, காப்பீடு மற்றும் இதர சலுகைகள் கிடையாது. தினக்கூலி மாத்திரமே, அதுவும் அந்த வயர்மேன் தயவிருந்தா தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.  பெருமாள்சாமியிடம், இரண்டு உதவியாளர்களும், இரண்டு எண்ணமார்களும் இருந்தார்கள், ரொம்ப காலமாக.  எண்ணமார்களை பெர்மனெண்ட் செய்ய கார்ப்பரேஷனுக்கு எழுதிக்கொண்டிருக்கிறார், இன்னும் பதில் வரக்காணோம்.  இதுவே இவருக்கு மேல இருக்கிற லைன் இன்ஸ்பெக்டர் எழுதியிருந்தா ஆகியிருக்கும், இவரு சொல்லி தான் பாக்குறாரு, அந்த ஆளு இன்னம் ஒண்ணும் செய்யக்காணோம்.  பெருமாள்சாமிக்கு கோபமே வராது எப்போதும். தனக்குக் கீழே இருக்கும் உதவியாளர்கள் ராஜேந்திரனையும், கருணாகரனையும், எண்ணமார்கள் சுப்பிரமணி மற்றும் மாரிமுத்துவையும் தன் உடன்பிறந்தவர்கள் போல பாத்துக் கொள்வார்.  என்ன வருமானம் வந்தாலும் சமமாக பிரித்துக் கொடுப்பார். அதனாலேயே அவர்கள் யாரும் அவரை விட்டு எங்கும் போகப் பிரியப்படுவதில்லை.

பெருமாள்சாமி எழுந்து குளித்து வேலைக்கு கிளம்ப தயாரானார். எட்டு மணிக்கு வீட்டை விடுவார். ஜவஹர் தெருவில் இருக்கும் அவர் வீட்டிலிருந்து கிளம்பினால், ஜான்சிக்குப் போக எப்படியும் அரைமணி ஆகிவிடும். இங்கிருந்து சுப்பிரமணியபுரம் வழியா போயிட்டு வழியில் கந்தன் ஆஸ்பத்திரி பக்கத்துல இருக்கிற பிள்ளையாருக்கு முதக் கும்பிடு, அப்புறம் அங்காள பரமேஸ்வரி, ரயில்வே லைனைத் தாண்டி கிரைம் பிராஞ்சிலிருந்து, போலீஸ் லைன் வழியா பெருமாள் கோயில்ல ஒரு நிறுத்தம். பெருமாள், அப்படியே அயக்கீரிவர்னு போயி எல்லாரையும் துணைக்கழைத்துக் கொண்டு தான் ஜான்சிக்கு போய் சேருவார்.

பச்சைக்கலர் ராலே சைக்கிள் காரியரில் அவருடைய பைக்கட்டை வைத்திருப்பார், அதில் தான் வேலைக்குத் தேவையான சகல உபகரணங்களும் இருக்கும், கட்டிங் பிளேய்ர், திருப்புளி, ஸ்குரு டிரைவர், ஒரு டெஸ்ட் லாம்ப், சிறிது பெரிதுமாய் ஸ்பானர்கள், கனெக்டர்கள், துண்டு வயர்கள், குத்தூசி, ஒரு சுத்தியல், உதிரி உதிரியா நட்டு, போல்ட் என்று எல்லாமே இருக்கும். ஏதாவது சின்ன ஆணி தேவைப்படும்போது, முழுப்பையையும் தரையில கவுத்தி ஒண்ணொன்னா துழாவி தான் எடுப்பார், அதில தேவையில்லாத சாமானும் இருக்கும், இருந்தாலும் எடுத்துப் போட்டுக்குவார், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று எப்போதும் சொல்வார். பெருமாள்சாமி, பிறரிடம் எந்த சாமானும் ஓசி வாங்க மாட்டார், தன் பைக்கட்டிலேயே அத்தனை சாமானும் வைத்திருப்பார். இவர் வைத்திருக்கும் சாமான்கள் போல இவருடன் வேலை செய்பவர்கள் யாரும் வைத்திருக்க மாட்டார்கள், எல்லாமே டப்பாரியா பிராண்ட், நல்ல நயமான சாமான்கள் என்பார், கூடவே ஒரு ஜோடி கிளவுஸையும் மடித்து வைத்திருப்பார் பொத்துனாப்புல.


ஜான்சி தான், அவருடைய பூத் இருக்கும் இடத்திற்கு பேரு. ஜான்சி பூங்கா பக்கத்துல இருக்கிற தான் அந்த ஃப்யூஸ் ஆஃப் கால்ஸ் ஆபீஸ் அது, ஒரு பால் பூத் மாதிரி தான் இருக்கும்.  இந்த பக்கம் நியூசினிமா தியேட்டர், முன்னாடி கே.ஏ.எஸ். சேகரின் லாட்டரிக் கடை, இடது பக்கம் ஒரு பிள்ளையார் கோயில், அரசமரம் இது தான் ஜான்சி ஆபீஸ். ஒரு மேசை, ஒரு பழைய கருப்பு போன், டயலில் போட்டிருக்கும் பூட்டு, ஒரு ரெஜிஸ்டர், கால்ஸ் எழுதுவதற்கு. அங்கிருந்து வருகிற கால்ஸை பொறுத்து தான் புறப்பாடே. பெரும்பாலான சமயங்களில் மேஜரா ஏதும் இருக்காது, ஏதாவது மைனர் பால்ட் தான் இருக்கும்.  இந்த ஏரியா வந்தபிறகு வரும்படி ஜாஸ்தி, மதுரையிலேயே எல்லாப் பொருள்களும் கிடைக்கிற ஏரியா இது தான்.  ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகைக்கடை, எலெக்டிரிகல் சாமான் ஹோட்டல் என்று பணம் ரொம்ப பொழங்குற ஏரியாங்கிறதால பெருமாள்சாமிக்கு இங்க வந்த பிறகு பணத்தட்டுப்பாடு ஏதுமில்லை.  செல்லூர் பிரிவுல இருக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டாரு.  பிள்ளங்க பீஸு கூட கட்ட முடியல, அதுக்குப்பேரே பனிஸ்மெண்ட் ஏரியா.  ஒண்ணு ரெண்டு தறிக்கம்பெனி தவிர வேற எதுவும் கிடையாது, அங்க இருந்த ரெண்டு வருஷமும் கஷ்டம் தான்.


பெருமாள்சாமிக்கு ரெண்டும் ஆம்பிளப்புள்ளைங்க, இவரு படிக்காததால படற கஷ்டம், பிள்ளங்க படக்கூடாதுன்னு, ரெண்டு பேரையும் நர்சரி ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அவனுங்களும் நல்லா படிக்கிறாய்ங்க ஒரு குறைவில்லாம! பிள்ளைங்க என்ன கேட்டாலும், சுணங்காம வாங்கித் தரமுடியுது, அதற்குக் காரணமே, இந்த ஏரியா தான். இங்க மாசமானா வர சம்பளத்த விட மேல்வரும்படி இன்னும் அதிகமா இருக்கும். அதுவும் விசேஷ காலத்துல ஏதாவது மின்சாரக்கோளாறு ஏற்பட்டா வியாபாரம் கெடக்கூடாதுன்னு எவ்வளவு காசு வேண்ணாலும் கொடுப்பானுங்க கடைக்காரனுங்க. கூட இருக்கிற பயக எல்லாம் நைனா... எதையாவது பிடுங்கிவிடலாம் நைனா, இருக்கிறவங்க கொடுக்கட்டும் நைனா என்பார்கள், ஆனால் இவர் ஒரு போதும் ஒத்துக்க மாட்டார், தேவையேற்பட்டா கூப்பிடறாங்க, நாமளும் போய் சரி செய்துட்டு காசு வாங்குறந்தானே... அப்புறமென்ன? அப்படியெல்லாம் சேர்த்தா காசு ஒட்டாது, மணி! என்பார்.  இது போல தனியாக பணம் வாங்குவதே அரசாங்க உத்தரவுகளின் படி தவறு தான் என்றாலும், இது போல வாங்குறது குத்தமா படுறது இல்லை யாருக்கும்.  பெரிய வேலையாயிருந்தா இவர்களுக்கு கிடைக்கிற பணத்தில் லைன் இன்ஸ்பெக்டரிலிருந்து அடிஷனல் இஞ்சினியர் வரை பங்கு போகும.

காலையிலே வந்து சேர்ந்தவுடனே, அண்ணே ராணிமஹால்ல போன் பண்ணியிருந்தாய்ங்க, ஏதோ மாடியில புதுசா கட்டியிருந்த ரெண்டாவது மாடி, அதான்னே அந்த ரெடிமெட் டிரஸ்லாம் போட்டிருக்காய்ங்க இல்லை அங்க ஏதோ புகைஞ்சிருச்சாம். காலையிலேயே பவர் இல்லை, கடையில ஆளுங்க ஜாஸ்தி வந்துட்டா கரண்ட் இல்லாம கஷ்டம் சீக்கிரம் வாங்கன்னு, நாமக்காரரே போன் பண்ணாரு, போயிட்டு வந்துடலாமா, என்று கருணாகரன் சொல்ல, மத்த ரெண்டு பயலும் வந்திரட்டும். ராஜேந்திரன் இன்னைக்கு லீவு, அதனால் கூடமாட ரெண்டு பேரு இருந்தாத்தான் சுளுவா முடிக்க முடியும்னு சொன்னார்.  திரும்பவும் மணி அடித்தது, இப்போது ராணிமஹாலின் முதலாளியே கூப்பிட்டார், வாங்கண்ணே, தீவாளிக்கு கவனிச்சிக்கலாம் என்று அழைக்க, நல்ல காசு கிடைக்கும் என்று எல்லோரும் உசுப்பி விட... சரி, போயிடலாம்...ஆனா மாரிமுத்து வரட்டும்... நாலு பேரு இல்லேன்னா சிரமம்... என்றார் பெருமாள்சாமி, வாஸ்தவம் தான் என்று கருணாகரனும் ஆமோதிக்க, அங்கேயே காத்திருந்தனர். 

மெயின் டிரான்ஸ்பார்மர் இருக்கும் இடத்தில் ராஜேந்திரனை நிற்க வைத்து விட்டு, தேவைப்படும் போது ஆன் ஆஃப் செய்ய சைகை செய்யவேண்டும்.  அதற்கு மாரிமுத்துவை எஸ் ஆர் எஸ் தங்கமாளிகை கடை மொட்டை மாடியில் நிற்க வைத்தால் நன்றாகத் தெரியும்... ஒரு டானா வடிவத்தில் இருக்கும் தெருவில் முனையில் இருக்கும் கடை  எஸ் ஆர் எஸ் தங்கமாளிகை, ஒரு தெருவில் டிரான்ஸ்பார்மரும், மற்ற தெருவில் இந்த ஜவுளிக்கடையும் இருப்பதால், இவன் நகைக்கடை மாடியில் நின்றால் இரண்டு இடங்களும் தெரியும். பெருமாள்சாமிக்கு தான் வேலை தெரியுன் என்பதால் அவர் கருணாகரனுடன் இருந்து என்ன ஏது என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மாரிமுத்து வந்து சேர்ந்தான்.  பேசியபடியே கருணாகரனும், பெருமாள்சாமியும் ராணி மஹால் கடைக்குள் நுழைந்து என்ன பிரச்னை என்று பார்க்க, ப்யூஸ் போயிருப்பது தெரிந்தது.  மாரிமுத்து எஸ் ஆர் எஸ் தங்கமாளிகை மாடிக்குச் செல்ல, ராஜேந்திரனும் டிரான்ஸ்பார்மரை ஆஃப் செய்ய மேலேறி பாதி தூரத்தில் நின்று கொண்டான், மாரிமுத்துவின் சைகைக்காக. 

பெருமாள்சாமி ப்யூஸ் போட கரண்டு வந்து உடனே திரும்பவும் போய் விட்டது.  வயர் பொசுங்குற வாசமும் வர, இவர்கள் அவசர அவசரமாக கட்டிய ரெடிமேட் பிரிவில், ஏதோ மேஜர் கோளாறு இருப்பது போல் பட்டது பெருமாள்சாமிக்கு. எங்கேயோ இருக்கிற ஓப்பனிங்கில் இருந்து தண்ணீர் வயருக்குள்ளே போய் ஷார்ட் சர்க்யூட் ஆகிறது எப்படி கண்டுபிடிப்பது என்ற யோசனையுடன்... மூன்று ஃபேஸ் லைனில் ஒவ்வொரு ப்யூஸாக டெஸ்ட் லேம்ப் வைத்து எது பிரச்னை என்று கண்டுபிடித்தார்.  பிறகு வெளியே வந்து மாரிமுத்துவுக்கு சைகை செய்து ஆஃப் செய்யச் சொல்ல, அது ராஜேந்திரனுக்கும் போய், டிரான்ஸ்பார்மர் ஆஃப் செய்யப்பட்டது.  நாமக்காரர் கூடவே நின்று கொண்டு என்ன ஆச்சு பெருமாள்சாமி? வெரசா முடிச்சா, உங்களுக்கு புன்ய்மாப் போவும்! என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். இருங்க அண்ணாச்சி! அவசரப்பட்டா சோலி ஆவாது... கரண்டுல வேலப் பாக்குறப்ப சுதாரணமா இல்லேன்னா... அம்புட்டு தான்... என்று பதில் சொல்லி விட்டு வேலையை கவனிக்க திரும்பினார் பெருமாள்சாமி. 

கருணா! இப்ப ஃபால்டா இருக்க லைன மட்டும் கட் பண்ணிட்டு, மத்தத போட்டு விட்டுடலாம், ரெண்டாவது லைன்ல இருந்து ஒரு டெம்பரரி கனெக்‌ஷன் குடுத்துடலாம்... இந்த தீவாளி அலப்பரயெல்லாம் முடிஞ்ச பின்னாடி மொத்தமா பிரிச்சு சரி பண்ணிடலாம், இது தான் இப்ப இருக்கிற கன்சீல்ட் வயரிங்குல இருக்கிற பிரச்னையே... ஃபால்ட் கண்டுபிடிக்கிறதுக்குள்ள தாவூ தீந்துடும்... சரிங்கண்ணே! அதுவே பண்ணிடலாம் என்றார் கருணாகரன்.

நாமக்காரரிடமும் அதைப்பற்றி சொல்ல, சரி இப்பைக்குள்ள பிரச்னைய சரி பண்ணா போதும், அதும்போல முழுசா சரி பண்ண நிறைய காசாகும், பாத்துக்கலாம். பெரியவர்ட்டயும் ஒரு வார்த்த பேசிப்போட்டு செய்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டார் நாமக்காரரும்.  சரிங்க பெருமாள்சாமி, உங்களுக்கு எது சரின்னு படுதோ அதையே பண்ணிப்புடலாம் என்று அங்கிருந்து நகர்ந்தார். என்ன செய்யவேண்டும் என்று கருணாகரனுக்கு யோசனை சொல்லி விட்டு, வெளியே வந்தவர், தங்கமாளிகையில் இருக்கும் மாரிமுத்துவைப் பார்த்து இன்னும் பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும் என்று தகவலுக்காக மணியைக்காட்ட, பீடி வளித்துக் கொண்டிருந்த மாரிமுத்து சரியாக கவனிக்காமல், ஆன் செய்ய சொல்கிறார் என்று நினைத்து, மொட்டைமாடியின் முனைக்கு நகர்ந்து, ராஜேந்திரனுக்கு ஆன் பண்ணுமாறு சைகை செய்ய... கடைக்குள்ள பெரிய சத்தம் கேட்க உள்ளே ஓடிய பெருமாள்சாமி, கையில் பிடித்திருந்த வயருடன் துடித்துக் கொண்டிருந்த கருணாகரனைப் பார்த்து, பதறிப்போய் அங்கே கிடைத்த உடைந்த ஏணியின் ஒரு முனையை எடுத்து ஓங்கி, கருணாவின் கையோடு அடிக்க அங்கிருந்து கீழே விழுந்தார் கருணாகரன்.

இடது பக்கத்தில் பெரிய காயங்களுடன், கைவழி புகுந்து கால் வழி வெளியேறியது கொலைபழுது மின்சாரம். காது முனை அத்தனையும் கருகி சுயநினைவு இழந்தவரை, உடனே தூக்கிக் கொண்டு பெரிய ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டில் சேர்த்து விட்டு கையைப் பிசைந்து கொண்டு நின்றார் பெருமாள்சாமி.  மாரிமுத்துவை உடன் இருக்க சொல்லிவிட்டு, ராஜேந்திரனை அழைத்து கருணாகரனின் வீட்டில் தகவல் சொல்ல அனுப்பினார்.  ஆஸ்பத்திரி, அனேக அவஸ்தைகளையும், அழுகைகளையும், துக்கங்களையும் பார்த்துக் கொண்டு ஒரு கனமான சாட்சியாய் நின்று கொண்டிருந்தது.  மனசு முழுக்க வேதனை, பிழைத்து விட வேண்டும் என்று கை கூப்பி கண்ணீர் விட்டு பிரார்த்தித்தார், கருணாகரனின் மனைவியும், பெரிய பொண்ணு சாந்தியும் கண் முன்னே வந்து வந்து போனார்கள். என்ன பதில்சொல்வது இவர்களுக்கு, இது மாதிரி கருணாகரனுக்கு ஏற்கனவே ஆனபோது, பூனைக்கண்ணு பாலகிருஷ்ணனிடம் இருந்தார், அப்போது சின்ன அடி தான், இது பெரிதாய் இருக்கிறது, காது முழுதும் அரித்து கருகிப்போயிருந்தது, உள்ளங்கை வழி புகுந்த மின்சாரம், இடது கை முழுதையும், நிறம் மாற்றி இருந்தது, பெருமாள்சாமி கட்டையைக் கொண்டு அடித்ததில், கை விரல்களில் கட்டையில் இருந்த ஆணி இழுத்து சதை கிழிந்திருந்தது, ரத்தம் உறைந்து கருப்பாய் இருந்தது.

குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அசைவில்லாமல் கிடந்த கருணாகரனைப் பார்த்துக் கொண்டே நின்றார். சுவாசம் சீராய் இருந்ததால் டாக்டர்கள் உயிருக்கு ஒன்றும் பாதகமில்லை என்றவுடன் ஆசுவாசமாய் இருந்தது.  கருணாகரனுக்கு இனிமேல் வேலைக்கு முடியலேன்னாக்கூட, நம்ம அந்த குடும்பத்தைப் பார்த்துக்கணும் என்று நினைத்துக் கொண்டார்.  ஒரு இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு கருணாகரனின் மனைவியும், சின்ன பையனும் வந்தார்கள், அவன் பெயர் சரியா ஞாபகமில்லை, ஏதோ முருகனின் பெயர் என்று மட்டும் தான் ஞாபகம்.  கருணாகரனின் மனைவி, அண்ணே! இப்படி ஆயிடுச்சே அண்ணே! உங்க கூட இவரு வந்தபிறகு தானே உருப்படியா சாப்பிடுறோம், உடுத்துறோம்... இப்போ தாண்ணே! அவரு ஒழுங்கா இருக்காரு, இந்த நேரத்துல இப்படி ஆயிட்டதே! அவருக்கு ஒண்ணும் ஆகாதில்ல என்று அழுது அரற்றியவளிடம், கலக்கத்துடன் உயிருக்கு ஒரு ஆபத்துமில்லே, கவலைப்படாதேம்மா என்று ஒப்புக்குத் தேற்றிவிட்டு, கையில் இருந்த காசெல்லாம் அவளிடம் கொடுத்துவிட்டு, அவர்களை விட்டு வெளியே வந்தார்.

தகவல் அறிந்த ஏ.இ. பரமானந்தம், ஆஸ்பத்திரிக்கே கருணாகரனைப் பார்க்க வந்துவிட்டார், பெருமாள்சாமி, அப்போது தான் வந்த ராஜேந்திரனிடமும், மாரிமுத்துவிடமும், டாக்டர்கள் சொன்ன தகவலைச் சொல்லிவிட்டு, உள்ளே போகாமல் வாசலில்  நின்று கொண்டு இருந்த அவரை முறைத்துவிட்டு உள்ளே போனார் பரமானந்தம். கருணாகரனைப் பார்த்துவிட்டு, அவர் மனைவியிடம் பேசிவிட்டு வெளியே வந்தவர், உடனே பெருமாள்சாமியை தற்காலிக பணி நீக்கம் செய்யப்போவதாகவும், காலையில் அலுவலகத்தில் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, ஜீப்பில் ஏறிச் சென்று விட்டார், மாரிமுத்துவும், ராஜேந்திரனும் என்ன அண்ணே இப்படி சொல்லிட்டுப் போறான் அந்த ஆளு? நீங்க சொல்ல வேண்டியது தானே அண்ணே... நீங்க இல்லேன்னா, கருணாகரன் போயிச் சேர்ந்திருப்பாருன்னு! ஒரு மண்ணும் விசாரிக்காம, எடுத்தோம் கவுத்தோம்னு, என்னத்த படிச்சாய்ங்களோ? என்று பொருமினான் ராஜேந்திரன்.

மாரிமுத்து செயலற்று நின்று கொண்டிருந்தான்.  பெருமாள்சாமிக்கு, தற்காலிக பணி நீக்கம், விசாரணை அது இதுன்னு மூணு மாசம் போயிடும் தோராயமா, மூணு மாசமும் சம்பளம் வராது, மேப்படி வருமானமும் கிடையாது.   வீட்ட எப்படி கவனிக்கிறது, கருணாகரன் சரியாகுற வரை அவங்குடும்பத்துக்கு என்ன பண்றது என்ற கவலையில் பெருமாள்சாமிக்கு மூக்கெல்லாம் சூடாகி, முட்டிக் கொண்டு அழுகை தான் வந்தது, அவருக்கு மனைவியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அப்போது. 

சிறிது நேரத்தில் கருணாகரனின் மனைவி வெளியே வந்து அண்ணே, அவரு முழிச்சுக்கிட்டாருண்ணே! என்றவுடன், ஒரு நிம்மதியுடன், கருணாகரனைப் பார்க்க உள்ளே நுழைந்தார்.  கருணாகரன் ஓரளவு தெளிச்சியாகி இருப்பதாய் பட்டது, காதுப்பகுதியில் நன்கு மருந்திட்டு கட்டியிருந்தது, இடது கை முழுக்க, ஏதோ ஆயில் போல ஒன்றை தடவியிருந்தார்கள், இன்னும் குளுகோஸ் பாட்டில் ஏறிக் கொண்டிருந்தது, அருகே படுக்கை நோக்கிக் குனிந்தவரை, பார்த்து சிரிக்க முயன்ற கருணாகரன், இடதுகையை மெதுவாக அசைத்து, குளுகோஸ் ஏறிக் கொண்டிருக்கும் கையருகே கொண்டு போய் கும்பிடுவது போல செய்து மறுபடி சிரிக்க முயற்சித்தான்.  

Wednesday, December 08, 2010

பிறவாமை...

காந்தமுள்ளின்
துடிப்புகளில் இருந்து
உதிரும் திசைகள்
சேமித்து வைத்திருக்கும்
நீட்சியில்
நேற்று இறந்த
காலத்தினை முனுமுனுத்தபடி
உதிர்த்த மணற்கடிகாரத்தின்
துகள்களில் தொன்மங்களின்
பிசுக்கு நிறைந்த
அகண்ட வெளிகளில்
சுழித்துக் கொண்டு ஓடும்
பால்வெளிப் படுகையில்
புதைத்து வைத்திருந்த
மூதாதையரின் உடற்சூடு
எண்ணெய்க் கொப்புளங்களாய்
குமிழியிடும் முட்டைகளில்
இருந்து மீண்டு வரும்
தலைபிரட்டைகள்
முட்டி துளையிடமுடியா
கதவுகள் அடர்ந்திருக்கும்
கோட்டைகளுக்குள்
உறங்கும் பெருக்கல்
குறியீடும் கவன் வில்லும்
பெருமூச்சுகளில்
எரிந்த பஸ்பத்தின் மீது
குதிக்கும், புரண்டாடும்
நேரத்தில் குறிகள் தளர
யோனிகள் சுருங்க
வெடித்துச் சிதறும்
அண்டங்கள் சிருஷ்டி
இழக்க ஸ்தம்பிக்கும்

Monday, December 06, 2010

திராவகத்தில் கரையும் பொன்...

மளுக்கென்று ஒரு கொப்பு மட்டும் உடைந்து தொங்கியது, முன்னால் கட்டியிருந்த ஒரு வாழைமரத்தில்.. குலையின் கனம் தாங்காமலா அல்லது கட்டிய தோது சரியில்லையா என்று தெரியவில்லை... மறுபக்கம் நின்று கொண்டிருந்த மரமும் இழுத்துக் கொண்டிருந்தது இணைத்துக் கட்டிய கயிற்றால்.  சாவஞ்செத்த பயலுக... என்ன கூறுல வேல செய்வானுகளோ... ஒரு வாழமரம் கட்ட துப்பில்லே என்ற படியே, ஏலேய் ஆருலே அது வாழ மரத்த முன்னுக்க வாசல்ல கட்டினது, சோலைமலை ஆசாரியின் குரலுக்கு பதில் வரக்காணோம்... பட்டாசால் தாண்டி பின்கட்டு அடுப்பங்கரையில் இருக்கும் சுப்புத்தாயிக்கோ அல்லது பாண்டிக்கோ கேட்டமாதிரி தெரியவில்லை, முத்தத்தில் இருந்து அவர் குரல் அங்கே கேட்டிருக்குமா என்பதும் சந்தேகமே... திரும்பவும் முன் திண்ணையில் இருந்து இறங்கி, ஏலே பாண்டி! என்ற அவரின் குரல் கேட்டவுடன் என்ன! என்று அதட்டும் குரலில் வந்தான் பாண்டி.

பாண்டி இரண்டாவது மகன் சோலைமலை ஆசாரிக்கு... வக்கீலுக்கு படித்துக்  கொண்டிருக்கிறான்... சோலைமலை ஆசாரிக்கு மொத்தம் ஏழு குழந்தைகள், தங்கச்சிகளும், பிற தம்பிகளும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மூத்தவன் சேகருக்குத் தான், தைக்காப்பட்டித் தெரு பரதன் ஆசாரியின் மகளை பேசி முடிவாயிருக்கு, அவர்களுக்கு சேகர் பட்டணத்தில வேல பாக்கான்... கவர்மெண்ட் உத்யோகம் என்ற வகையில் பிடித்துப் போனது... சின்ன முத்துராஜூ... சோலமலை ஆசாரியிடம் இதுபற்றிப் பேசியவுடன்... சரிடாப்பே... போய் பேசிக் கேட்டுப்பாரு, அவுக வசதியா இருக்காஹ... நம்ம தரத்துக்கு இறங்கி வருவாகலான்னு தெரியாது... கேட்டுப்பாரு அவுகளுக்கு சரின்னு பட்டா மேக்கொண்டு பேசலாம் என்று சோலமலை ஆசாரி சொன்னார்... ஆனா அவுக தான் இதப்பத்தி... நம்ம தாயில்பட்டி கோயில் விசேஷத்துக்குப் போனப்ப பேசினாக பாவா என்று சின்ன முத்துராஜூ சொல்ல ... சரிதான் நேரம் கூடி வருது போல  நமக்கு... முடிச்சுப்புடலாம் என்றுசொல்லி விட்டார்.  இந்தத் தகவலை உடனே மதுரைல இருக்கிற பாண்டிப்பயலுக்கும், மூத்த மச்சினனுக்கு தகவல் சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள்... நல்ல முகூர்த்த நாள்... ஞாயித்துக்கிழமையா வேற இருக்கு... அன்னைக்கே சாயங்காலமே தட்டு மாத்திக்கலாம்னு முடிவானது...

ஆமத்தூர்ல இருக்கிறவுகளும், தாயில்பட்டி, மதுரயிலே இருக்கிற நெருங்கின சொந்தக்காரவுக எல்லாம் இன்னைக்கு மத்யானத்துக்ககே கிளம்பி வாரதா சொல்லியிருக்காக... காரக்குடிக்காரிக்கு டிரங்கால் போட்டு சொல்லியாச்சு... அவ நாளைக்குத் தான் வர முடியும் சொல்லிப்போட்டா... எல்லா சின்னப்பயலுகளா இருக்கிறாங்க... பாண்டிப் பயதான் கொஞ்சம் தெளிவு, அவெங்கூட இருந்தா வேலை சுளுவா முடியும்னு, அதனால அவன முத நாளே வரச்சொல்லிட்டார்... என்ன? என்று வந்தவனிடம், ஆருலே இது கட்டுனா... பாரு ஒரு பக்கம் குலை ஒடிஞ்சு தொங்குது... தூக்கி கட்டுலே... போய் பாத்துட்டு வந்த பாண்டி... மரம் கட்டுனது ஒன்னும் குறையில்லை,  சரியாத்தேன் கட்டியிருந்துச்சு... இந்த சீனிச்சாமி வீட்டு ஆட்டுக்கெடா தான் வாழை இலை  முனிய பிடிச்சு இழுத்திட்டிருக்கு அதான் ஒடிஞ்சிருச்சு, நான் அவன்கிட்ட சொல்லி, ஆட்டக் கட்ட சொல்லுதேன்... என்று குலையை  இழுத்து இரண்டு வாழமரங்களும் ஒன்னா இருக்கிறா மாதிரி கட்டி ஒரு வழியா நிப்பாட்டினான்... போதும்லே... உங்க அண்ணனுக்கு இந்நேரம் கார்டு போயிருக்குமா என்றார்.

கடுதாசி எல்லாம் போய்ச் சேர நாளாகும், நம்ம டெலிபோன் ராமகிருஷ்ணகிட்ட சொல்லி ஒரு டிரங்கால் போட்டு சொல்ல சொல்லாம்ல... இல்லாத நொறநாட்டியமெல்லாம் சொல்லுவ உனக்கு இதுக்கெல்லாம் கூறு கிடையாது.... அவனுக்கு இந்த பொண்ணு பிடிக்கலேன்னா என்ன பண்ணுவே... என்று பாண்டி சொல்லிவிட்டு எங்கோ வெளியே சென்று விட்டான். அவருக்குக் கொஞ்சம் கலக்கமாய் இருந்தது...அவன் அப்படி சொல்ல மாட்டான், ஆனாலும் தகவல் முன்னாடியே சொல்லியிருக்கலாமோன்னு தோனியது. சேகர், இப்போதான் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி பாஸாகி செக்ரடேரியட் வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது... வயசு என்னவோ 24 தான்... இந்த மார்கழி வந்தா இருபத்தஞ்சு... சோலைமலை ஆசாரியும், சுப்புத்தாயும் சொல்ற வார்த்தையை  ஒரு நா மீறிப்பேசினது கிடையாது... மத்த பிள்ளைகளப்போல கிடையாது அவன்... படிப்புண்டு, லைப்ரரி உண்டுன்னு இருக்கிறவன்... டிரங்கால் போட்டு அவன் ஆபீஸிற்கு பேசி இருக்கலாம், ஏதோ ஒரு நம்பிக்கையில் அதை சொல்லாமல் விட்டுவிட்டார்... சோலைமலை ஆசாரி...

சேகரின் மேலுள்ள அவரின் நம்பிக்கை அசைக்க முடியாதது. வீட்டில் குடும்பக்கஷ்டம் தெரிஞ்ச ஒரே பய... கஷ்டபட்டு இருக்கான், சின்ன வயசுல. ராமகிருஷ்ணன் மிஷன் மூலமா தான் பி.காம்., படிச்சான்...வக்கீல் குமாஸ்தா வேலைல மாசம் கொண்டு வர 150 ரூபாயில் என்ன செய்துற முடியும், 10 பேர் இருக்கிற வீட்டில், ரெண்டு வேளை கஞ்சி குடிக்கிறதே பெரும்பாடு, இப்போ இவன் சம்பளத்தில இருந்து வர... நூத்தம்பது ரூபாயும் தான் பெரிய உதவி இவருக்கு. வாங்குற 240 ரூபாய் சம்பளத்தில், தங்குறது, சாப்பாடு எல்லாம் 90 ரூபாயில பாத்துக்குறான், பட்டணத்தில் அதுவே முழி பிதுங்கும் தான். ஒன்னத்தையும் மறச்சதில்ல இதுவரை... ஒளிவு மறைவு இல்லாத பய... பாண்டி அப்படி கிடையாது... வினயமான பய... படிச்சிட்டு இருக்கும்போதே பாங்க் பரீச்சை எல்லாம் எழுதியிருக்கான்... இப்போ வக்கீலுக்கு படிக்கவைக்கச் சொல்லி, வக்கீல் சந்திரன் சொன்னதால... மதுரை லா காலேஜில் படிச்சிட்டு இருக்கான்... ரொம்ப விவரமான பய... மூத்தது மோள இளையது காளன்னு சொலவடை மாதிரியே... பாண்டி விவரந்தேன் என்று நினைத்து கொண்டார்.

என்ன நினைச்சாரோ, சரி போய் ஒரு தந்தியாவது அனுப்பிட்டு வரலாம்... டிரங்கால் போட மனசு வரலை அவருக்கு.. டெலிபோன் ராமகிருஷ்ணனிடம் போய் எத்தனை வாட்டி தான் கேக்குறது... அவரும் பாவா... சரியா பதினொரு மணிக்கு வாங்க பாவா.. இல்லேன்னா எவனாவது எஞ்ஜீனியர்ட்ட போய் சொல்லிடுவானுங்க... அப்புறம் அந்த ஆளு வேற வேலைக்கு மாத்திடுவாரு... உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணான்னு ஆயிடும் என்பான்... அவன் சொல்றதும் சரிதேன்... யாரு இத்தனை செய்வா... என்று தந்தி ஆபீஸ் போயி ஒரு தந்தி கொடுத்துட்டு வரலாம்... இப்போ போய்க்கொடுத்தா... ரவைக்குள்ள போயிடும், உடனே கிளம்பினா... அடுத்த நாள் மத்தியானம் சாப்பாடுக்கு வந்துடுவான்... என்று சட்டைய மாட்டிக்கிட்டு, ஒரு மடிச்ச துண்ட தோள்ல போட்டுகிட்டு, ஒரு குடையும் எடுத்துக்கிட்டு... லப்பர் செருப்பப் போட்டுகிட்டு கிளம்பினார்... செருப்ப கால்ல கோர்க்கும் போது குதிகால் பக்கம் தேஞ்சு போயி, கீழ் பாகம் துணி மாதிரி இருந்தது, சேகர் வரும்போது சொன்னா பெரிய கடை பஜாரில் வாங்கிகொடுத்துடுவான்... அங்க அவன் கூட படிச்ச நாய்க்கமாரு பய கடை வச்சிருக்கான்... கொஞ்சம் வில மலிவா வாங்கிடலாம்.

வெளியே வந்தவர் வெயிலுக்கு, குடைய விரித்துக் கொண்டார், சுப்புத்தாயியிடம் ஏட்டி, நான் பஸ் ஸ்டாண்ட் வர போயிட்டு வந்திருதேன்... என்று இங்கிருந்தே குரல் கொடுத்தார்... சுப்புத்தாயிக்கு கேட்டுச்சோ கேக்கலியோ அதபற்றி கவலைப்பட்டதாக தெரியலை... ஆனாலும் அவருக்கு மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பிய திருப்தி வந்தது.  பாண்டி எங்க போயி தொலைஞ்சானோ... ஆளைக்காணலே... ரஞ்சிதம் வீட்டுக்கு போயிருப்பான்... அங்க தீப்பெட்டி ஒட்டுற பிள்ளைக கூட போயி கதையடிச்சுட்டு இருப்பான்... இவ பொட்டச் சிறுக்கிகள்ட்ட வச்சிருக்க சாவகாசமே இவருக்கு பயமாய் இருக்கும்... சேகரு அந்த மாதிரி எல்லாம் கிடையாது.... அவன் உண்டு சோலி உண்டுன்னு இருப்பான். விலாசம் எடுத்துக்குட்டமா... என்று சட்டைப்பையில் துழாவினார், சீட்டு இருப்பதைக் கண்டு திருப்தியாய் மேலும் நகர்ந்தார்.

தாசில்தார் வீட்டத்தாண்டும்போது ராமலட்சுமி வொதுனை, ஏமி தம்பு... தட்டு மார்ஸேதி நேண்டா.....என்றாள். லேது ஒதுன...  ரேப்பு பொத்துமாலன்னு... சொல்லிட்டு வேகமாக நடையைக் கட்டினார், இன்னும் ஒவ்வொரு கதவும் திறந்து விசாரிக்க ஆரம்பித்து விடும்... அதற்குள் தெருவை தாண்டி விட வேண்டும்.  இங்கு இருக்கும் இரண்டு பெரிய தெருக்கள் முழுதும் தெலுங்குக்காரர்களே நிறைந்திருப்பார்கள்... ஒன்னு தெலுங்கு பேசும் ஆசாரிமாரு,  இன்னொன்னு நாய்க்கமார்கள்.  அதனால தெருவுக்குள்ள நுழைஞ்சாலே தெலுங்கு விசாரிப்புகளும், சம்பாஷனைகளும் தான் எப்போதும். எல்லா விசேஷத் துக்கங்களிலும் தப்பாமல் கலந்து கொள்வார்கள், அழைத்தால் தான் போக வேண்டும் என்று நினைப்பதில்லை... தகவல் தெரிந்தாலே ஆஜராகி விடுவார்கள்... இது இங்கு இருக்கிற ஒரு பழக்கம்... அதே போல வேலையிருந்தாலும் இழுத்துப் போட்டு மாற்றி மாற்றி செய்வார்கள்.  புதிதாய் திருமணமாகி இந்த தெருக்களுக்குள் குடுவருபவர்கள் கூட சில தினங்களில் இந்த பழக்கத்தில் ஒன்றிவிடுவார்கள்.

ஆத்துக்குள்ள இருக்கும் காமாட்சியம்மன் கோயிலில் நின்று... ஆத்தா.. காமாச்சி தாயி... எல்லாம் நல்லபடியா முடியனுமான்னு வேண்டிக்கொண்டு... திருனாமலை இருக்கிற தெசையில இரு கும்பிடப்போட்டுட்டு, செருப்பை மீண்டும் போட்டுக் கொண்டார்... எதிரில், தைக்காபட்டித் தெருவில் இருந்து தண்ணீர் எடுத்து வந்த ராஜம்மாவையும், கௌசல்யாவையும் பார்த்த போது அவருக்கு திருப்தியாய் இருந்தது... நல்ல சகுனந்தேன்... வீட்ல இருந்து கிளம்பும்போது சகுனம் பார்த்தமா... யாரோ வந்தாங்க யாரு ஞாபகம் இல்லையே... சகுனம் பாக்காம வந்துட்டமே... ஏதோ யோசனையிலேயோ வந்துட்டமேன்னு வருத்தமா இருந்தது அவருக்கு... ஆனாலும் நிறைகுடத்த இங்க பார்க்கையிலே...அது அவருக்கு ஒரு குறையா இல்லாமப் போச்சு... பஸ் ஸ்டாண்டை தாண்டி சின்னக்கடை வீதி வழியாப் போயிடலாம்னு தோனுச்சு அவருக்கு, கொஞ்சம் சுத்துவழின்னாலும், அது தான் நல்லது... செருப்பு இருக்கிற லட்சனத்தில, மாதாக்கோயில் வழியாப் போனா... கல்லு கல்லாக்கெடக்கும், குத்தி வழியெல்லாம் அவஸ்தைப்படனும், அதுலயும் காலாணியில பட்டா போச்சு உசுரு போயிடும், தலைப் பிய்ச்சு எறிஞ்சுடறா மாதிரி ஒரு வலி... இதுக்கு ஒரு வைத்தியம் பண்ணமுடியலயே...என்று காலாணி இருக்கும் குதிகாலை சற்று தூக்கிய மாதிரியே நடக்க ஆரம்பித்தார்.

தந்தி ஆபீஸ் போயி என்னான்னு தந்தி கொடுக்கிறது... என்று யோசித்துக் கொண்டே இருந்தவர், சட்டைப்பையில் வைத்திருந்த காசுக்குத் தக்கன கொடுக்கலாம், நிச்சயதார்த்தத்திற்கு என்னன்னு சொல்றது... கௌண்டரில் இருந்தவர்ட்ட கேட்டுக்கலாம் என்று முடிவுக்கு வந்தார். கௌண்டரில் இருப்பவரிடம் கேட்டபோது... ஸ்டார்ட் இம்மீடியட்லின்னு மாத்திரம் கொடுங்காணும்... என்ற போது சரியென... விலாசத்தை அவரிடம் கொடுக்கும் முன்னே ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார்... டோர் நம்பர் 26, செல்லப்பிள்ளையார் கோயில் தெரு, ஜாம் பஜார், திருவல்லிக்கேணி, சென்னை... ஒரு ரூவா முப்பது பைசா! என்று வாங்கிக் கொண்டார்...  இவர் திருவல்லிக்கேணி வீட்டுக்குப் போனதில்லை... இந்த விலாசத்து இவன் மாறி ஒரு வருஷம் இருக்கும், சென்னை போன புதுசுல... கொசப்பேட்டைல கந்தசாமி கோயில் தெருவில் இருக்கும் சக்கரசாமி வீட்ல தான் இருந்தான்... அப்புறம், கெல்லீஸ்ல கூட்டாளிகளோட இருந்தான்... இந்த ஒரு வருஷமா இங்க திருவல்லிக்கேணில தனியா இருக்கான்... ரொம்ப நாளா போகணும்னு நினைத்து கொண்டு இருந்தார் ஆனால் போகமுடியலை.. ஒருமுறை போய் பார்த்தசாரதி கோயிலையும்  பாத்துட்டு வரணும், என்று நினைக்கும் போதே... ஏடுகொண்டலவாட ஸ்ரீனிவாசா என்று அவரை அறியாமல் வாய் விட்டு கும்பிட்டார். இவன் நிச்சயதார்த்தம் முடியட்டும், அவென் கூடவே சுப்புத்தாயையும் கூட்டிட்டு போயிட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டார்.

வீடு வந்த சேர்ந்த போது பெரிய மச்சினனும் அவன் குடும்பமும் வந்திருந்தார்கள். பெரிய மச்சினன, சுப்புத்தாயின் தம்பி மதுரை கார்ப்பரேஷன்ல வேலை பாக்கான்... ஸ்ரீவில்லிபுத்தூர்ல தான் படிச்சு வளந்தது எல்லாம்... மதுரைல வேலை கெடைக்கவும், அங்க போயிட்டான்... அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு ஆம்பிள பிள்ளைங்க... அவனோட மனைவி ரொம்ப நல்ல மாதிரி... சோலைமலை ஆசாரியின் பிள்ளங்களுக்கெல்லாம், குமாரின்னா உசுரு... அக்கா அக்கான்னு உயிர விடுவானுங்க... குமாரிக்கும் அவ கூட பொறந்தவங்களா விட இவிங்க தான் தம்பி மாதிரி... சோலைமலை ஆசாரிக்கும் குமாரி தான் பெரிய பொண்ணு மாதிரி... அவ என்ன சொன்னாலும் கேப்பார் சோலைமலை ஆசாரி.

ரெண்ட நைனா... எண்டல எந்து போத்திரி...  பெத்தவாடுகு... உடே ரா..ன்னி தந்தி மொத்திடு வொச்சேனு... மீரு நிச்சயம் உந்தினி செப்பலேதா... வாடு வெர போய்யேடு என்ற குமாரியின் வார்த்தையில் நியாயம் இருப்பதாய்ப் பட்டது... சரி டிரங்கால் போட்டு பேசினா சொல்லிக்கிடலாம்ல இல்லாட்டி வர மாட்டான் வேலை இருக்குன்னு ஒக்காந்துடுவான்னு அவரையே சமாதானம் சொல்லிக் கொண்டார் சோலைமலை ஆசாரி. பெரிய மச்சினன் வந்த அலுப்பில தூங்கிட்டா போல அவனக்காணோம்... அவம் பிள்ளைக ரெண்டும் கொல்லைல விளையாடிட்டு இருக்கிறது இங்கிருந்தே அவருக்கு தெரிந்தது...  ஏமி பெட்டிடுத வண்ட்டம்... நேண்டு...  பப்பு பெட்டி, வங்காயப்புலுசும் சேசிடுத ஒதுன.... அப்பளம் சேயனா... என்ற குமாரி, மதுரையில் இருந்து கொண்டு வந்த அப்பளப்பூவை எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தாள்.... கத்திரிக்கா புளிக்குழம்புக்கும், அப்பளப்பூவுக்கும் அவ்வளவு ருசியா இருக்கும், நினைக்கும்போதே சோலைமலை ஆசாரிக்கு எச்சி ஊறியது... வயசாக வயசாக நாக்கு எளசாகிட்டே போற மாதிரி இருக்கு, இவருக்கு, தானே சிரித்துக் கொண்டார்.

சந்தோசமா இருந்தார், அவருக்கு பட்டணம் பொடி போடவேண்டும் என்று தோன்றியது.  பெரிய மச்சினனுக்கு பொடி போடும் பழக்கம் உண்டு, அவன் வரும்போது மட்டும் கொஞ்சம் மட்டையில் இருந்து போடுவது இவருக்கு ஏனோ பிடிக்கும்.  குமாரியிடம் சொல்லி, அவனிடமிருந்து பொடி மட்டையை வாங்கி வரச் சொன்னார். வந்தவுடன் ஆவலாய் நார் பிரித்து, இரண்டு பக்கமும் அமுக்க மணி பர்ஸ் போல வாயைத் திறக்கும், ஒரு சிட்டிகை அள்ளி, கிர்ரென்று மூக்கில் வைத்து இழுக்கையில் மண்டைக்குள் ஏறி ஜிவ்வென்று இருந்தது... தெனந்தெனம் போட்டா இந்த சுகம் வராது... என்னைக்கோ ஒரு நா இழுக்கையில தான் இது போல ஒரு அலாதியான சுகம் கெடைக்கும். மட்டையை திருப்பி கொடுத்துவிட்டு, திண்ணையில் கொஞ்சம் மல்லாந்தார்... அப்படியே உறங்கிப் போனார்... சாப்பிடும்போது எழுந்து, வந்தவர்களுடன் விபரங்களைச் சொல்லி, பல கதைகளைப் பேசி அன்றைய பொழுது ஓடியது சோலைமலை ஆசாரிக்கும், மற்றவர்களுக்கும்.

மறுநாள் காலை டெலிபோன் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வந்திருந்தான், சேகர் பேசியதாகவும், உடனே புறப்பட்டு வருவதாகவும்... தந்திக்கான காரணம் தெரியாததால் ரொம்பவும் பயந்து விட்டதாகவும் சொல்லியிருக்கான், அதனால் நேரில வந்து பார்த்து விட்டுப்போகலாம் என்று வந்திருந்தான் ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் இடமாவது சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது, சே என்ன இது புத்தியே வேலை பாக்க மாட்டேங்கு என்று தன்னை தானே நொந்து கொண்டார்... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்... பெரியவன் என்றும் இன்னும் 3 மணி நேரம் தான் இருக்கு.... அவங்க வீட்டுக்கு போறத்துக்கு... குமாரியிடம் தட்டு, மற்றும் இதர பொறுப்புகளையும் கொடுத்துவிட்டார்.  குமாரி எல்லாவற்றையும் சீராய் ஒழுங்கு பண்ணி தேவையான ஆட்களை தேவையான இடத்தில் நிறுத்தி பண்ண வேண்டிய காரியங்களை சரியாய் முடித்துவிடுவாள் அந்த கவலை விட்டது அவருக்கு.  சாப்பாடுக்கு என்ன வேணும்னு  பரதன் வீட்ல சொல்லிட்டு வந்துட்டாரு காலையிலேயே.  குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிடமும் ஆலோசித்தார்... 3 பவுன் நகையும், ஆயிரம் ரூபா ரொக்கமும் கேட்பதாக முடிவானது... நிச்சயதார்த்த பத்திரிக்கை எழுத வெண்டர் அய்யரிடம் தகவல் சொல்லி, அவரும் லிகிதம் எழுதிக் கொடுத்துவிட்டார்... வேற ஏதாவது பாக்கி இருக்கா என்று யோசித்து விட்டு, சொல்றவுங்களுக்கெல்லாம் சொல்லியாச்சா என்று தான் முன்னமே எழுதி வச்சிருந்த சிட்டையை எடுத்துப் பார்த்துக் கொண்டார்.  குண்டலப்பட்டி பொன்னம்மாவிடம் மட்டும் சொல்ல விட்டுப்போச்சு... சுப்புத்தாயை அழைத்து, குமாரியுடன் போய் தகவல் சொல்லி வர அனுப்பினார்...

சேகர் வந்துவிட்டான்... வந்தவனுக்கு முகத்துல ஒரு தெளிவே இல்லை... பஸ்ல வந்ததா இருக்கலாம் என்று தோன்றியது சோலைமலை ஆசாரிக்கு... போயி குளிச்சுட்டு, சாப்பிட்டுட்டு வா, களைப்பெல்லாம் போயிடும் என்றார். வந்தவன், நேரா குட்டி மச்சுல பைய வச்சுட்டு, அவன் அம்மாவிடமும், குமாரியிடமும் கல்யாணம் இப்போ வேண்டாம்... நிச்சயதார்த்தம் வேண்ணா முடிச்சுக்கலாம்... நான் கொஞ்சம் ஸ்திரமானவுடனே பண்ணிக்கிறேனே என்று சொல்ல... சோலைமலை ஆசாரிக்கு மூக்குக்கு மேல கோபம் வந்தது, நானே வம்பாடு பட்டு இந்த சம்பந்தத்தை விட்டுடக்கூடாதுன்னு எல்லா சாமியவும் கும்பிட்டுட்டு கிடக்கேன், இந்த சம்பந்தம் முடிஞ்சா நமக்கு கவுரதியா இருக்கும், ரெண்டு பொட்டக்கழுதகளையும் கரையேத்தலாம் மனப்பால குடிச்சிக்கிட்டு இருக்கேன்... இவனுக்கு.... என்று இழுத்து.... சம்பாதிக்கிற திமிரு!  என்று முடித்தார்... மற்றவர்களும் எடுத்துச்சொல்லி கட்டாயப்படுத்த... கல்யாணத்தை ஆறுமாதம் கழிச்சு வைகாசி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானது... பொண்ணு வீட்டுக்கும் இவர் வீட்டுக்கும் ஒரு பர்லாங் தூரம் தான் இருக்கும்... தட்டுக்களை எடுத்துக் கொண்டு புடை சூழ முன்னால் தெருவே பாக்க கிளம்பினார்... சேகரும் ஏற்றி சீவிய எண்ணெய் வைத்தத் தலையும், வெள்ளைச் சட்டை, பேண்ட்டில் அழகாய் இருப்பதாய்ப் பட்டது... பட்டணவாசம் அவனை அப்படியே மாத்திடுச்சு என்று பாக்காத மாதிரி பாத்துக்கொண்டு சிரித்துக் கொண்டார் சோலைமலை ஆசாரி.

எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, பொண்ணு கருப்பா இருந்தாலும், லட்சணமாக இருந்தாள். வாய் சற்று கோணலாக இருந்தாலும், அதுவே ஒரு அழகாய் இருந்தது சிரிக்கும்போது... நிச்சயதார்த்தம் முடிந்து கிளம்பி விட்டான் சேகர், பெரிய மச்சினன் குடும்பத்துடன் மதுரை போயி அங்கிருந்து பஸ் பிடிப்பதாக சொல்லி விட்டான்.  சோலைமலை ஆசாரிக்கு கல்யாணமே முடிஞ்சிட்டா மாத்ரி ஒரு பெரிய கவலை தீர்ந்ததாகப் பட்டது, இனிமே ரெண்டு பொண்ணுங்கள கரையேத்தறதப்பத்தி நினைக்கலாம் டெலிபோன் ராமகிருஷ்ணன் அடுத்த நாள் காலையிலே வீட்டிற்கு வந்திருந்தான்.... வா ராமகிருஷ்ணா! என்ன சமாச்சாரம்... நிச்சயத்துக்கு வராம போயிட்டியே நீ... நல்ல்ல... சாப்பாடு என்று அவர் பேசுவற்கு முன் சோலைமலை ஆசாரியே பேசிக்கொண்டிருந்தார்... லேது பாவா... நான் சொல்ல வந்தது...இன்னொரு விஷயம், சேகரு ஊருக்கு போய்ச் சேர்ந்துட்டானாம், அவங்க ஆபீஸில வேலைபாக்குற செல்வின்ற பொண்ணு சொல்லுச்சு... அவங்க ரெண்டு பேருக்கும் வடபழனில கல்யாணம் ஆகி நாலு மாசமாச்சாம் என்றார்.

(நிறைய எழுத்துப்பிழைகள் இருப்பதை நண்பர்கள் சுட்டுகிறார்கள்... இதிலும் இருக்கும்... தயவு செய்து பொறுக்கவும்... முயல்கிறேன்... சரி செய்து விடுவேன்.. வெயிலானுக்கும், மணிஜீக்கும் என் அன்பும் நன்றியும்)

Saturday, December 04, 2010

பின்னல் இழைகள்…


சரியாக ராயபுரத்திற்குள் நுழையும்போது கரண்ட் கட்டானது. ஹோவென்று கத்தும் குழந்தைகளை கடக்கும்போது தோன்றியது... நாம் எப்போது கடந்தோம் இந்த பருவத்தை...எங்கு தவறவிட்டோம் இந்த உற்சாகத்தை... கரண்ட் வந்தாலும் போனாலும் இந்த சிறுவர்களின் உற்சாகத்தில் ஒரு துளியாவது போதும்... இந்த கரண்ட் இல்லாத புழுக்கத்திலும் நிம்மதியாய் உறங்கமுடியும் என்று தோன்றியது ரமேஷுக்கு. பழனிச்சாமி அண்ணன் கடையில் ஒரு மெழுகுவர்த்தியும், ஒரு கோல்ட் பிளேக் கிங்க்ஸ் பாக்கெட்டும் வாங்கி கொண்டான், விகடனும் ஒரு கோல்ட் பிளேக் கிங்க்ஸும் இருந்தால் கக்கூஸிலேயே கொஞ்சம் பொழுதை ஓட்டலாம், ஆனால் சில சமயம் எல்லாம் தயார் நிலையில் இருக்கும் போது தீப்பெட்டி கிடைக்காமல் அவதியாய் இருக்கும். என்ன நினைத்தானோ, திரும்பவும் கடைக்குச் சென்று ஒரு தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டான்.

மணி பத்தரை இருக்கும், இத்தனை இரவிலும் முழித்துக் கொண்டிருக்கிறது இந்த ஊர்... அதன் உற்சாகமும்... திருப்பூர், தூங்கா நகரம், நம்ம ஊரு பக்கம் மதுரை தான் தூங்கா நகரம்னு சொல்வாய்ங்க!. இங்கு அனேக வீடுகளில் பின்னலாடைத் தொழில் சம்பந்தமான ஏதோ ஒன்றை நம்பி தான் பொழப்பு ஓடிக்கொண்டிருக்கும். ராயபுரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் இருக்கிறது கம்பெனியில் அவனுக்கு ஒதுக்கிய கெஸ்ட் ஹவுஸ்... தேனியில் இருக்கும் அவன் வீட்டை விட வசதியான அறைகள்... உட்காந்து போற மாதிரி கக்கூஸ்... போதுமான அளவு லைட், பேன், கட்டில் மெத்தைன்னு எல்லாம் வசதியாத்தான் இருக்கு... இதுக்கு முன்னாடி ஒரு ஜெனரேட்டரும் இருந்தது, அடிக்கடி கரண்ட் போவதால், டீசல் ஊத்தி கட்டுப்படியாகவில்லை என்று கம்பெனி நிறுத்தி விட்டது. இவனுடன் இந்த வீட்டில் இன்னும் இரண்டு பேர் தங்குகிறார்கள் தனகோபால் திருநெல்வேலி, பெருமாள்புரம்... இன்னொருத்தன் மலையாளி.. பாலகாட்டான்... பேரு வினய்... இவனை விட அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் இருவரும்... ஒருத்தன் கட்டிங் இன்சார்ஜ், இன்னொருத்தன் மெர்ச்சண்டைசர்... இவனுக்கு ரெண்டு மூணு வருஷம் சீனியராத்தான் இருப்பாங்க... இவன் வந்தே ஜூனோட அஞ்சு வருஷம் ஆகப்போகுது...

தேனி பாலிடெக்னிக்லயே டிப்ளமோ படிச்சுட்டு, அப்புறம் ஏஇபிசி மூலமா... ஆயத்த ஆடை தரக்கட்டுப்பாடு பட்டயப்படிப்பு முடிச்சதுக்கப்புறமா... இந்த கம்பெனில டிரெய்னியா சேர்ந்து க்யூசி ஆயாச்சு... இப்போ ரெண்டு வருஷமா க்யூசிதான். இந்த கம்பெனி பத்தி இவனோட சித்தப்பா தான் சொன்னாரு... அவரு இந்த கம்பெனிலதேனி, கம்பம், பெரியகுளம் சைடுல இருந்து சின்ன வயசுப்பிள்ளகள இது போல கம்பெனில சேத்து விடுவார்... இங்கே இருக்கிற திருமணத்திட்டம், சுமங்கலித்திட்டம், அணுக்கமா பேசி நிறைய பிள்ளகளா அங்க இருந்து கொண்டு வந்திருக்காரு... ஒரு பிள்ளைக்கு இவ்வளவு காசுன்னு நல்ல கமிஷன்... பிள்ளகட்ட இருந்தும் ஒரு மாச காசு வாங்கிகிடுவாரு... தேனில ரெண்டு வீடும், தோப்பும் வாங்கிட்டாரு... அவரு தான் இந்த கார்மெண்ட் டெக்னாலஜி மாதிரி ஏதாவது படிடீ... திருப்பூர்ல நமக்கு தெரிஞ்ச கம்பெனிலாம் இருக்கு, சேத்து விட்டுடுறேன்னு சொன்னார்... அதே மாதிரி... இப்ப இந்த கம்பெனில இருக்கேன்...

நூல் மில், சாயப்பட்டறை, எம்ப்ராய்டரி, பிரிண்டிங் எல்லாம் சொந்தமா இருக்கிறா மாதிரி பெரிய கம்பெனி இது... அஞ்சு கம்பெனி இருக்கு மொத்தமா.  இது ராஜஸ்தான்காரன் கம்பெனி... அவன் வர்றதே இல்லை.... இங்க... சில ஒர்க்கிங் பார்டனரா ரெண்டு மூனு உள்ளூர் கவுண்டர்கள வச்சு ஓட்டிக்கிட்டு இருக்காரு... அவிங்க சார்பா, மேற்பார்வை பார்க்க, கோள் சொல்ல, உளவு பார்க்கன்னு ஒரு வடக்கத்திக்காரன் முக்கியமான செக்‌ஷன்ல எல்லாம் இருப்பான்... பான் போட்டு துப்பிட்டு, தம்பக் போட்டு அதக்கிட்டு... அவனுங்க தமிழ் பேசுறத பார்க்கும் போது நல்லா கம்பிய காய வச்சு நாக்குல இழுக்கணுமுன்னு தோணும் என்ன பண்றது... நமக்கு மேல இருக்குறாய்ங்க பேசாம பொத்திட்டு அவிங்க முன்னாடி கொஞ்சம் கூழக்கும்பிடு போட்டு பொழப்பு ஓட்ட வேண்டியது தான்... இங்க வந்ததுக்கு பேசாம தேனிலயே... ரேணுகா மில்லுல வேலைக்கு சேந்திருக்கலாம்... ஆனா இவ்வளவு சம்பளம் கிடைக்காது... செலவு போக வீட்டுக்கு மூணு ரூவா அனுப்பமுடியுது... உன்னால தாம்ல ராசு வீட்ல மூணு வேளை நல்லா திங்கிறோம், உடுக்கிறோம் என்ற அம்மாவின் வார்த்தைகள், ரமேஷை வேறு ஒன்றையும் சிந்திக்க வைக்காது.

இன்னைக்கு வீட்டுக்கு சீக்கிரம் வந்து துணிமணியெல்லாம் தொவைக்கணும்னு நினைச்சு முடியாமப் போச்சு, போன ஞாயித்துக்கிழம தொவைக்கணும்னு நினைச்சதுலயும் மண் விழுந்து ஷிப்மெண்ட்...அது இதுன்னு வரச் சொல்லிட்டாய்ங்க... இன்னைக்கு... வாயேஜ் இருக்குன்னு, ஜம்ப் ஸ்டிச், ஷேட் வேரியேஷன்னு செக் பண்ற பீசுல எல்லாம் எல்லாக் குறையும் இருக்கிறா மாதிரி கதை பண்ணி சாவடிச்சிட்டான் இந்த பையர் க்யூசி நாய்... ரீசெக்கிங் வேற போட்டுட்டான்... ஒவ்வொரு ஷிப்மெண்டு போறத்துக்கும், அவன  உருவுனா தான் காரியம் ஆகுது... சொன்ன தேதில ஷிப்மெண்ட் அனுப்பலேன்னா... ஏர்ல தான் அனுப்பணும்... கடுக்கன் போட்ட முதலாளி அங்கிருந்து குதிப்பான், இங்க இருக்கிறவன் எல்லாம் நம்மளப் பிடிச்சு ஏறுவானுங்க... என்ன பொழப்புடே இது...  என்ன பண்றது பங்காளி அப்படித்தான், ஊர விட்டு வந்திருக்கோம்... இத்தனை ஓவாய் நம்ம ஊருல எவன் குடுப்பான் என்பான் கூட இருக்கும் தனகோபால்... இந்த பையர் க்யூசி பய கூட மதுரை திருமங்கலம் தாண்டி கல்லுப்பட்டி தான் சொந்தவூர்... ஆனா துரை தமிழே பேசமாட்டான்... இங்கிலீசு தான்... ரமேஷுக்கு அப்படியே பொசுபொசுன்னு வரும்... வேற வழியில்லாம, சிரிச்சுக்கிட்டே சமாளிப்பான். இன்னைக்கு அவங்கூட போய்த் தான் படையப்பால புரோட்டாவும், ஒரு வறுவலும் சாப்பிட்டான்... அவனுக்கும் சேத்து இவன் தான் காசு கொடுத்தான்... அவன் முன்னாடி சிகரெட் பிடிக்கறதில்லை... இல்லேன்னா அதுவும் நம்ம தான் வாங்கணும் வீட்டுக்கு போயி பாத்துக்கலாம்னு விட்டுட்டான்.

வீட்டுக்கு வந்தா கரண்ட் இல்லை, தனகோபாலும், வினய்யும்... ஒரு ஆர்சி... வாங்கி வச்சுட்டு, மசால்கடலை, மிக்சர்னு மொட்டமாடில உக்காந்து தண்ணியடிச்சுட்டு இருப்பாய்ங்க போல! மாடிக்கு போற கதவு திறந்து இருந்தது... வாரத்துல நாலு முறையாவது வழக்கம் மாறாம இதே லாகிரி வஸ்துகள் தான் அவிங்களுக்கு... ஏதோ பேசுவானுங்க சிரிப்பானுங்க, அதும் ஹிந்தில... ஒரு எழவும் புரியாது நமக்கு... பாதி நேரம் நம்மளப் பார்த்து சிரிக்கிறா மாதிரி இருக்கும்... மாடிக்கு போகலாம் என்று முன் கதவை சாத்திவிட்டு... தன் அறைக்கு சென்று லுங்கியை மாற்றிக் கொண்டான்.  கையில் சிகரெட் பாக்கெட்டும் தீப்பெட்டி எடுக்க நினைத்தவன், மேலேயிருந்து சிகரெட் வாடை வருவது கண்டு தீப்பெட்டி மேலேயே இருக்கக்கூடுமென்று, ஒரு கையில் லுங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டு மேலே ஏறினான். வினய், தனகோபாலுடன் இன்று இன்னுமொருவர் இருந்தார். வாடா... இப்பதான் வருதா... என்றான் வினய்.  பாஸ்! இது தான் நம்ம ரூம் மேட், பிரண்ட் அப்புறம் கலீக் ரமேஷ் என்று குளறிக் கொண்டே பேசினான்

அவன் அறிமுகப்படுத்தியவரை ஏற்கனவே எங்கோ பார்த்தது போல இருந்தது, ஒல்லியாய் இருந்தார். ஒரு வெள்ளை சட்டை முன் பட்டன்கள் திறந்திருந்தது... நெஞ்சு மத்தியில் மட்டும் மயிர் இருந்ததாய் பட்டது... ஏதோ ஒரு டார்க் கலரில் பேண்ட் அணிந்திருந்தார்... ஏற்றி வாரிய முடியும், சரியாய் கத்தரித்த மீசையும், மேடேறி சரிந்த மூக்கும், அதன் மேல் கண்ணாடியும், உள் குவிந்த இடுங்கிய கண்களும் அவரை கொஞ்சம் கொக்கரக்கோ படத்தின் கதா நாயகன் போல காட்டியது, நிலா மட்டுமே இருந்த குறைந்த வெளிச்சத்தில் இவ்வளவு தான் தெரிந்தது.  இடது கையை ஊன்றி எழுந்து ரமேஷுடன் கை குலுக்க நினைத்தவர், முடியாமல் உட்கார்ந்த மாதிரியே... சாரி பாஸ் என்று கை குடுத்தார்... ரொம்ப சூடா இருந்தது அவரின் கை... உள்ளங்கை மெத்தென சதைப்பற்றாய் இருந்தது.  சுண்டு விரலில் இருந்த ஈரம் இவன் கையில் விட்டவர், பாஸ் சாப்பிடுங்க பாஸ்! என்று... இன்றைக்கு வழக்கத்திற்கு மாறாய்... மான்சன் ஹவுஸும், ஒல்ட் காஸ்க்கும், வறுத்த முந்திரிகளும் இருந்தது, மசாலாக்கடலையுடன்... புதிதாய் இருந்த பாஸின் கைங்கர்யம் என்று ரமேஷுக்கு தெளிவாய் தெரிந்தது.

தனகோபால் தான் அவரை அறிமுகப்படுத்த எத்தனித்தான்... பங்காளி இவர் பேரு முரளிடா... சொந்தமா ஒரு கம்பெனி வச்சிருக்காரு... சின்னது தான்... மிடில் ஈஸ்டுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் எக்ஸ்போர்ட் பன்றாரு... யூ எஸ் டொமஸ்டிக் ஆர்டரும் சின்ன லெவல்ல பன்றாரு... இப்போ இவருக்கு டைரக்ட் ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறாரு... அதான் நம்ம வினய்க்கு கொஞ்சம் பேர யூ எஸ் பையிங் ஆபிஸ்ல தெரியும்ல அதான் யாரோ சொல்லி பாக்க வந்தாரு... அப்படியே சரக்கு அடிப்பீங்களான்னு கேட்டு அவரே வாங்கிட்டு வந்துட்டாரு... ரமேஷுக்கு புரிந்து போயிற்று... இன்னைக்கு முரளி மாட்டிக்கிட்டாரு போல என்று நினைத்துக் கொண்டு, எனக்கு ஏதும் வேணாம் நான் ஏற்கனவே சரவணன் கூட போயி படையப்பால சாப்பிட்டுட்டு...தள்ளுவண்டில பழம் வாங்கி சாப்பிட்டுட்டு தான் வர்றேன், இனி என்னால ஏதும் முடியாது ஒரு சிகரெட் மட்டும் போதும், என்று அங்கு விரித்திருந்த பாயில் படுத்துக் கொண்டே சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான்... கொசு அதிகம் இருப்பதாய்ப் பட்டது... ஆனாலும் கரெண்ட் வர்ற வரை வீட்டுக்குள்ள போக முடியாது என்று வானத்தையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். சப்தரிஷி மண்டலம்...

நிறைய நேரம் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டதும், சிரித்துக் கொண்டிருந்ததும் கேட்டது, இடையிடையே ரம்யாகிருஷ்ணன், சினேகா என்றும் சரவணா ஸ்டோர்ஸ் என்றும் ஏதோ சொல்லக்கேட்டது... ரமேஷிற்கு... யாரோ காலால் நெட்டித்தள்ளுவது தெரிந்தது... கட்டியிருந்த லுங்கிய இழுத்து போர்த்தியிருந்தது விலகிக் கிடந்தது... டேய்! எழுந்திருடா... என்று உதைக்க பதறிக்கொண்டு எழுந்தவன்... கீழே நழுவிய லுங்கியை இழுத்துபிடித்துக் கொண்டு நின்றான்... யார் நீங்க என்ன வேணும் என்று கேட்டான், வந்தவர்... லைட் கலர் சர்ட்டும், காக்கி கலர் பேண்டும் அணிந்திருந்தார்... நன்கு வளர்ந்த புருவமும் அவரின் மீசை போலவே முறுக்கிக் கொண்டு நின்றது... சுத்தி பார்த்த போது இறைந்து கிடந்த முந்திரி பருப்பும், மசால்க்கடலையும் ஏதோ  நடந்ததன் அறிகுறி மாதிரி தெரிந்தது... பாட்டில்களும், உடைந்த மண்சட்டியில் நசுக்கிய எரிந்த புழுக்களாய் சிகரெட் துண்டுகளும் பாயில் கொட்டிக் கிடந்தது.  வாடா ஸ்டேஷனுக்கு என்று லுங்கியோடு இழுத்தார் வந்திருந்தவர்... முழுதும் நரைந்திருந்தவர், இன்னும் பணியில் இருக்கும் ஆச்சரியத்தை காட்டாது, என்னாச்சு சார், எங்க வரணும் என்ற போது, பேண்ட் இருக்கா... போட்டுட்டு வா சொல்றேன் என்றார்.

ரமேஷுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது குளிரிலா, அல்லது பயத்திலா என்று தெரியவில்லை...கீழே இறங்கி பேண்ட்டை போட்டுக் கொண்டு அவருடன் கிளம்பினான்... ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கிய போது பயம் பிடித்துக் கொண்டது... குடிச்சுட்டு ஏதும் கலாட்டா பண்ணிட்டாங்களா... அல்லது சாப்பிடபோற போது ஏதாவது தகராறா என்னவென்று தெரியவில்லை... அந்த முரளிய எங்க பாத்திருக்கோம் என்று மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது ரமேஷுக்கு... ஸ்டேஷனின் முன்னால் இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார்... ரமேஷ் உட்கார்ந்து கொண்டான்... ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது... தனபாலும், வினய் மட்டுமே இருந்தார்கள்... யார்யாரோ வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்... ஒரு லுங்கி கட்டிய ஆள்... அய்யா... நாயில்லீங்க அய்யா அது... ஏலே உட்காருலே...பேசிக்கிட்டே இருந்த லத்தில அடிக்கிற அடியில கொட்டய தொண்டைக்கு ஏத்திப்புடுவேன் ஏத்தி... சூத்தப் பொத்திக்கிட்டு ஒக்காருலே...தெரியாமத்தான் வந்திருக்கமா சோலிக்கு... போய் சொன்ன எடத்தில ஒக்காருலே...

ரமேஷுக்கு தாங்கமுடியல... மூத்திரம் வேற முட்டிக்கிட்டு நிக்குறா மாதிரியிருக்கு... இவிங்க என்னத்த்துக்கு இங்க ஒக்காந்திருக்காய்ங்க... கூட இருந்த ஆளையும் காங்கலே... கொல கில பண்ணிட்டாய்ங்களோ ஏதாவது தகராறு ஆயி... மணி எத்தனை இருக்கும்... ஜன்னலில் எட்டிப் பார்க்க, அதிகாலை மூணு நாப்பது... நம்ம இதுல மாட்டிக்கிட்டா... என்ன பண்றது... அய்யோ நம்ம ஆத்தாவையும், தங்கச்சியையும் யாரு பாத்துப்பா... நாம தான் குடிக்கவே இல்லையே... இவங்க வர்றதுக்கு முன்னாலேயே தூங்கிப்பிட்டோம்னு சொல்லிப்பாக்கலாம் என்று ஏதேதோ தோன்றுகிறது ரமேஷுக்கு... உள்ளே மூணு பட்டை பெரிய ஏட்டு... அவர்களிடம் ஏதோ பேசுவது போல கேட்டது... என்ன என்று தெரியவில்லை... இங்க பாத்து தான் கைய ஆட்டி ஆட்டி பேசுறாரு... பயத்துல அடிவயிறு இன்னும் முட்டியது... அந்த ஏட்டு வெளியே வந்தார்... ஏலேய்.. நீதான் இவனுங்க கூட்டாளியா... ஆமா இல்லை என்று மாத்தி மாத்தி தலையாட்டினான் ரமேஷு... ஒழுங்காச் சொல்லுலே... இல்ல ஒன்னையும் தூக்கி உள்ள வைக்கவா என்று மிரட்ட... ரொம்பவும் பயந்து போனான் ரமேஷ். அழுகை வரமாதிரி ஆகிவிட்டது அவனுக்கு.

எச்சிக்கூட்டி முழுங்கி, ஆமா என்று தலையும் ஆட்டினான்... கையில காசு எவ்வள வச்சிருக்க... தடவி தடவி பார்க்க பேண்ட் பாக்கெட்டில் மிஞ்சிய ஒரு நானூறு சில்லறை இருந்தது... நானூறு என்று சொன்ன ரமேஷிடம்... ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து இவனுங்கள் கூட்டிட்டு போ... என்றார். கையில அவ்வளவு இல்லைன்னு சொல்ல, யாரையாவது வந்து கொடுக்க சொல்லு... இதுவரைக்கும் என்ன செஞ்சாங்கன்னு சொல்லல... திடீரென்று என்ன நினைத்தாரோ... கொண்டா இருக்கிறத... வந்து ஒரு கையெழுத்துப்போட்டு கொடுத்துட்டு கூட்டிட்டு போ... என்றார். ஏதும் தீவிரமாய் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பிக்கை வந்தது ரமேஷுக்கு, இங்கிருந்து போனாப்போதும் என்று எங்க காட்டினாரோ அங்க கையெழுத்துப் போட்டுட்டு வெளியே வந்துவிட்டான்.

ரெண்டு பேரும் துணிய ஒழுங்கா மாட்டிட்டு, தலைய கோதிவிட்டுட்டு வெளியே வந்தானுங்க... வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது தெரிந்தது அன்றைக்கு மஹாவீர் ஜெயந்தி என்று! அன்று முழுதும் மதுவிலக்காம்.  இவனுங்களுக்கு சரக்கு தீர்ந்தவுடன்... ஏதோ ஹைவே தாபால போய் இன்னும் சரக்கு வாங்கி அடிச்சிருக்காங்க... ரெய்டு வந்து பிடிச்சுட்டு போயிட்டாங்க... அந்த ஆளு எங்க என்று கேட்ட ரமேஷிடம்... அந்த ஆள் ஐநூறு கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டான்...பங்காளி! சரக்கு வாங்கி கொடுத்தவன் ஜாமீனும் கொடுப்பானா.. என்று சிரித்தான் தனகோபால்... எங்களுக்கு ஜாமீன் கொடுக்கத்தான் ஒன்னைய கூப்பிட்டு வரச்சொல்லி அட்ரஸும், சாவியும் கொடுத்து அனுப்பினோம் என்ற போது, இந்த போலீஸ்காரரு ரொம்ப நல்லவரு...அதான்... வீட்டுக்கு வந்து ஒன்ன கூப்பிட்டு வந்திருக்காரு...என்று சிரித்துக் கொண்டே சொல்லியவனை ரமேஷ் முறைத்துக் கொண்டிருந்தான்.