Wednesday, March 31, 2010

விசும்பும் கவிதை...

வளர்ப்பு மிருகத்தின்
ஓலமாய் இருந்தது
தனித்து விடப்பட்ட
இரவின் அமைதி

பிரிவுக்கான பொழுதுகளின்
துர்கனவுகளில்
விசும்பி அழுகிறது
ஆளற்ற வீடுகள்

அகண்டு விரித்து
தன் முந்தியை
உதறி  படுக்கிறது
பிரயாணங்களால்
களைத்த தெரு

வாசிக்காத 
புத்தகங்களின்  
பெருமூச்சில்
உலர்கிறது  
கன்னிமை

உண்மை 
பிரிக்கமுடியாது  
உறங்கி கழுவிலேற்றும்   
கனவுகளின்
மென்படுக்கை

எதுவும் செய்யாது
சும்மா கிடக்குது  
இந்த கவிதை 

Sunday, March 28, 2010

கூத்தன்...

கையில் இருந்து
கசிகின்ற ரத்தத்தில்
பெருகி நிறைகிறது
காம்போதி!
உயிர்க்கூடு நொறுங்கும்
பேரோலம்

அழுத்தும்  கனத்தில்
தெறித்த சுவரங்கள்
கழுத்து நாகமாய் இறுக்க
மூச்சு திணறி 
முகிழ்ச்சி உதறி
கரம் பற்றி எழுந்தவன் 
இழுத்தான்
பிழைத்தான் பெருபிழை

அறுந்த இழைகளில்
வாசிக்காத விரக இசை
வினைபபயன்

சொல்வதைச் 
சொல்லாமல் சொல்லி
தோற்றத்தில் உணர்த்தி
சொல்லாமல் விட
ஏதுமில்லை அம்பலத்தில்

பகுத்தறியா வாசனை
பிடரி மயிர்
பிறவிக் கடல்
கிறங்கி விழுந்தான்
பற்றற்ற பற்றில்
மறுபடியும்

கல்யானைக்கு
கரும்பையும்
பிரியாவிடைக்கு 
இடமும்(பாகம்)
கொடுத்து

முகமற்று கிடக்கும்
அர்த்தநாரி
மறுபடி செத்துபோனான்
திரிபுரம் எரித்து!

Saturday, March 27, 2010

இசை பட...

அந்த ஒற்றை வயலின்
உடுத்தி களைத்த
மெல்லிய பருத்தி புடவையில்
சுற்றப்பட்டிருந்தது
ஒரு குழந்தையை போல

அனைத்தலின் வெம்மையும்
முத்தத்தின் ஈரமும்
வாசிக்காமல் உறங்கி கொண்டிருந்தது
அந்த வயலினில்

புராதனம் கெட்டித்து
போன போவில் மயிர்கள்
ஒட்டிப்போய் இழைகளின்
தன்னிச்சையை அறுத்தன

அந்தோனியாவின்
நூற்றாண்டு தொன்மையில்
பாக்கின் இசை பூசிய
வர்ணபூச்சு இன்னும் கலையாமல்
உறைந்த மீன்தொட்டியாய்

உடைந்த நாடிப்பலகை மாத்திரமே
அதன் சிதிலம்
என்று சொன்னவனிடம்
கல்யாணத்திற்கு பிறகு இவர்
வாசிக்க விடுவதில்லை
என்ற என் மாமியாரின் நடுங்கும்
விரல்களின் முனைகள் கருகி இருந்தன

Friday, March 26, 2010

அகத்திணையின் புறம்...

பூக்கார கனிக்கு
அது என்னமோ
ராமகிருஷ்ணன் அண்ணனை
அதிகம் பிடிக்கும்

பேசும்போது கைய பிடிச்சுக்கிட்டு
பொது கிணற்றில்
நின்று கொண்டிருப்பவனை
பார்க்கையில் வித்யாசமாய் இருக்கும்

பூ விற்க வரும்போது
யக்கா! என்னும் அவன் குரலில் இருக்கும்
மெலிதான கொலுசொலி போன்ற சிரிப்பு
அவனை வேறுபடுத்திக்காட்டும்

சட்டையும் பூப்போட்ட லுங்கியும்
தான் அவனின் பிரத்யேக உடை
மேலே ஒரு துண்டு குறுக்கால
கட்டி இடுப்பில் செருகி இருப்பான்

கோடாலி கொண்டையும்
நடை தினுசும்
அவன் உடற்மொழிகள்

அகல்யா அக்காவிடம் ஒருமுறை
உன்ன மாதிரி மாரு வளர
என்னக்கா செய்யணும் என்று
கேட்டவனை விளக்க மாத்தால
அடித்த கதை எல்லோருக்கும் தெரியும்

இப்போது அவனிடம் யாரும்
பூ வாங்குவதில்லை

அதன் பின் அவனை
ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த போது
தாவணியும் ரவிக்கையும்
அணிந்து கீழே லுங்கியுமாய் இருந்தான்

நாகர்கோவில் மும்பை விரைவு வண்டியில்
ஏறியவனின் தீராக்கனவில்
ராமகிருஷ்ணனும் இருக்கலாம்

Tuesday, March 23, 2010

கோயிற்பொழுது...

இரவெல்லாம்
பேசிக் களைக்கும்
பெருமுலை சிற்பங்கள்
வந்தவர்கள்
கை வைக்க கசிந்த பழங்கதைகள்

விரகத்தின் தவிப்பில்
விம்மி புடைக்கும்
பருத்த முலைக்காரிகளின்
பெருமூச்சில்
கருகி தொங்கும் வவ்வால்கள்

புணர்ந்து பெருகிய
நாகதெய்வங்களின்  
அடங்காத பசி அடங்க  
மண்டி செழித்த புதர்களில்
எலி பிடிக்க இறங்கி வரும்

துவாரபாலகர்கள்
பூதகணங்கள் ஏங்கும்
ஏவுவார் இன்றி
காவல் தொழில் மறக்கும்
களவுக்கு துணை போகும்

மூலவரும் உற்சவர்
ஆவார் சாக்குப்பொதியில்
தியானித்து,
பிரிந்த நாயகிகளின்
கனவில் புரண்டு 
நித்திரை இழப்பார்

ஏலம் விடும் மணிச்சத்தம்
பூஜை மணியென மயங்கி
அருள் பாலிப்பார்
சகலருக்கும்

Sunday, March 21, 2010

அப்பா...

மெலிந்த தேகமென
கிடக்கிறது
அப்பாவின்
குற்றால ஈரிழைத்துண்டு

இப்போது யாரும்
உபயோகிப்பது இல்லை

பூத்துவாலைகள்
ஒத்தி ஒத்தி எடுக்கும்
நீர்த்துளிகள் மரித்து
தோல் ஈரமின்றி வரளும்

ஈரம் விட்டுச் செல்லும்
குற்றால துண்டு
அப்பாவை போல கிடக்கிறது
கரித்துணியாகும்
கொடுங்கனவுகளில்

Friday, March 19, 2010

வாழ்தலறம்...

யாருமற்ற ஒரு
பெருவெளியில்
மிதந்து செல்கிறது
ஒரு ஒற்றை இறகு

கூட்டமாய் பறக்கும் பறவைகள்
தங்கள் சிறகுகளை சரிபார்த்து
தனதில்லை என விட்டு செல்கிறது
அந்த மெல்லிய இறகை

காற்றில் ஏறியும் இறங்கியும்
தயங்கி தயங்கி
மரக்கிளையில் சிக்குகிறது
அந்த இறகு

தன் அலகில் கவ்விய அந்த
பெயரறியா இறகை
குஞ்சுகளின் படுக்கையில்
மெத்தென இட்டது
அம்மா பறவை

அந்த இறகும்
இங்கு இருந்து தான்
தொலைந்திருப்போம்
என்று நம்ப தொடங்கியது
இப்போது

Thursday, March 18, 2010

அவள்...

மஞ்சள் வெயில்
முகத்தில் படிய
பொன் இழைகளை
தூக்கி முடியும்
அவளின் பிஞ்சு விரல்களில்
மைதா மாவின் பசை இன்னும்
மிச்சமிருக்கிறது

காய்ந்த தீப்பெட்டிகளின்
உள் பெட்டிகள்
சாக்கில் இருந்து கொட்ட எழும்
சத்தம்
கனன்று எரியும்
அடுப்பில் கொதிக்கும் உலையின்
தாளகதியை ஒத்திருக்கும்
அவளுக்கு

எண்ணிக்கையில் எப்போதும்
குறையும் பெட்டிகளின்
கணக்கு அவளுக்கு
புரிவதே இல்லை
வாரசம்பளத்தின் சில்லறையில்
அடங்காத பசி
வாய் பிளந்து காத்திருக்கும்

சோளக்களியும்
கருப்பட்டி தண்ணியும்
சோறும்
கருவாட்டு குழம்புமாய்
மாறி மணக்கும்
ஞாயிறு மட்டும்

கருவாட்டின் மனம்
கைவிட்டு அகலாது
பசை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கும்
வாரம் முழுதும்

Wednesday, March 17, 2010

கம்பிகளில் உறங்கும் மரணம்

அதிர்வுகளில்
ஒரு செய்தியை கடத்தி செல்கிறது
கம்பிகள்

கம்பிகளில் அமர்ந்திருந்த
கரிச்சான் குருவி ஒன்று
கொஞ்சம் தத்தி அமர்கிறது

குருவியின் தவ்வலையும்
செய்தியாய் மாற்றி கொண்டு
விரைகிறது அதிர்வுகளில்

செய்திகளின் கணம் தாங்காமல்
தொய்ந்து கடத்துகிறது
கம்பிகள்

கடத்தப்படும் செய்திகளில்
என்ன இருக்கும்
என்று கம்பிகளுக்கு கவலையில்லை

அதிர்வுகளின் அளவுகளில்
மட்டுமே கவனம் செலுத்தி
கடத்துகிறது
கம்பிகள், தேர்ந்த
செய்தி சொல்லிகளாய்
ஆவதில்லை எப்போதும்

தன் மீது அமர்ந்து பறக்கும்
கரிச்சான் குருவியின்
தவ்வலை அது முந்தி தரலாம்

உங்களுடைய
மரணச்செய்தியை அது
பின்னுக்கு தள்ளி
உங்களுக்கு அதை
சாவகாசமாய் சொல்லலாம்...

Monday, March 08, 2010

ப்ரியமனுஷிகள்...

உறவுகள் தடாரென்று துளிர்க்கிறது... நேற்று பார்க்கும் போது இந்த மலர் இல்லை, இந்த துளிர் இல்லை இன்னும் எத்தனையோ இல்லைகள்... நாளை மற்றொரு நாளே என்று எப்படி சொல்ல முடியும்...? எல்லாமே புதுசாய் மாறும் போது... தார் ரோட்டில் படம் போடுபவன் மனதுக்குள் வியாபித்திருக்கும் வர்ண கலவைகளில் படர்ந்து பரவும் ஓவியம் அது, எப்படியோ இழைத்து, வளித்து, பொடித்து, அசக்கி கொண்டு தந்து விடுகிறான் ஓவியத்தை அதன் தன்மை மாறாது ... ஒவ்வொரு சமய இடைவெளியிலும் புதியதாய் ஒன்று உருவெடுத்திருக்கும், அவன் வரைவதில். எல்லோர் கைகளிலும் இருக்கிறது காலம் விட்டு சென்ற வர்ணப் பொடிகள் மெனக்கேட்டோ அல்லது அதுவாகவோ வழிந்து விழும், விழுந்த இடத்தை இயன்ற அளவு மாற்றி வேறு வர்ணத்தை கொடுத்திருக்கும், அது போல தான் எனக்கு காலத்தை மீறி உறவுகள் புதுபுது வர்ணங்களில் இந்திர தனுசாய்.

இந்த அன்பும், பிரியமும், நட்பும் உள்ள எல்லா உறவுகளும் இப்படித் தான் போல. ஒரு யீஸ்ட் போல தன்னை பிளந்து பிளந்து புதிய உறவை பரிமளிக்கிறது. வலைப்பக்கங்களின் அன்பில் விளைந்த ஒரு நட்பு காமராஜ்... காமராஜின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட, மாதவராஜ் உள்ளே புக... பின்னூட்டங்களில் வளர்ந்தது ஒரு நட்பு. காமராஜின் பின்னூட்டத்தில் என் பின்னூட்டத்தை படித்து ராகவன் எங்கே இருந்தீர்கள் இத்தனை நாள் உங்கள் கைய பிடிச்சிக்க தோணுதுன்னு சொன்ன ஒரு மனுஷனை அடையாளபடுத்தியது கருவேலநிழல். பின்னூட்டங்கள் பின்னிய வலையில் மாட்டிக்கொண்டோம் பரஸ்பரம், பின்னூட்டங்கள் நிர்மாணித்த கம்பிகள் வழி குரல் தொடர்பும் தொடர்ந்து, உறவுகளின் மற்றொரு பரிணாமம் இயல்பாய் வளர்ந்தது. பிள்ளைக்கலி ன்னு ஒரு கவிதை எழுதப்போக, . மஹா நம்ம மகள் ராகவன்னு சொன்ன போது... இது ஒருவிதமான தேறுதலுக்கான வார்த்தைகள் என்று மட்டுமே நினைத்தேன். அது இல்லை என்பது இப்போதைய நிதர்சனம்.

ஒரு நாள் பாரா பேசும் போது, மகாகிட்ட உங்க நம்பரும், மெயில் ஐடியும் கொடுத்திருக்கேன் பேசுவா என்றார். நானும் அப்போதைக்கு அதை கேட்டு அப்புறம் மறந்து விட்டேன். ஒரு வேலைப்பளு அழுத்தும் நாளில் அழைத்தாள் மகா, என்னால் சரியாக பேசமுடியவில்லை அதிலும் அவள் அப்பா என்று அழைத்த போது அபத்தமாக என்னை சித்தப்பா என்று கூப்பிடு எனக்கு அப்பா வயசு வரலை என்று சொல்லி விட்டேன், அது அவளை பாதித்தது என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்... அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. எனக்கு தயக்கமாக இருந்தது... ராஜாராமை வைத்த இடத்தில் நாம் எங்கு இருக்க போகிறோம் என்று தோன்றியது... பிறகு ஒரு நாள் நானே அவளிடம் பேசினேன்... அங்கு தொடங்கியது ஒரு அழகான நட்பு கத்திரிப்பூ மாதிரி... உலகத்தின் அத்தனை விஷயங்களும் பேசினோம்... வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா என்று உருகுவாள்... நானும் தகப்பனாய் மாறி நிறைய விஷயங்கள் சொல்லி கொடுக்கிறேன் அவளுக்கு, அவளும் எனக்கு சொல்லி கொடுக்கிறாள்.

கடகடவென்று வளர்ந்தேன் எனக்குள், அவளுக்குள் எங்கள் உறவுக்குள்... அதற்குள் அவர்கள் வீட்டு ஆட்களிடம் அறிமுகமானேன்... முகம் தெரியாமலே எல்லோரும் எனக்கு உறவாய் போனார்கள்... அவள் சென்னையில் இருந்து அவளுடைய பெரிய தாத்தா இறந்ததற்காக போயிருந்தாள், ஜோதில்பட்டிக்கு... பாரா ஒரு முறை புரைக்கேறிய மனிதர்களில் என்னைப் பற்றி எழுதும் போது காந்தி பெரியமாவுடன் ஒப்பிட்டிருப்பார்... அதை மகா காந்தி பெரியமாவிடம் சொல்ல, கணவனை இழந்து ரெண்டு நாட்களே ஆன காந்தி பெரியம்மா என்னிடம் பேசினார்... மகா போனில் அழைத்து கொடுக்க... பேசினார் காந்தி பெரியம்மா...

ஒரு மூன்று நிமிடங்கள் மாத்திரமே... பேசிய வார்த்தைகளை ஓர் சின்ன துண்டு காகிதத்தில் எழுதி விடலாம்... ஆனால் அதில் பெருகிய அன்பு, பிரியம் எதிலும் அடங்காது... குரலில் என்னுடன் பேசும் சந்தோசம், கருணை, பிரார்த்தனை, வாழ்த்து எல்லாம் இருந்தது... எனக்கு பேச்சே வரவில்லை... சந்தோசம்மா என்பதைத தவிர...
கணவர் இறந்ததை சொல்லிவிட்டு, எனக்கு எல்லாம் கிடைத்தது, திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தேன், எனக்கு வாழ்க்கையில எல்லா சம்பத்துக்களும் கிடைச்சது... என்ற பிரகடனம் எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது அவர்களால் ஒரு சில நிமிடங்களில்... பாரா என்னை ஏன் காந்தி பெரியம்மாவிடம் ஒப்பிட்டார் என்று தெரியவில்லை... அவர்கள் அன்பின் வழி எனக்கு தெரியாத பாதை, தூரத்தில் இருந்து போகலாமா, வேண்டாமா என்று யோசிக்கும் நிலை என்னுடையது... வாழ்க்கையை வாழ்ந்தவளின் வாக்கு எனக்கு வரப்பிரசாதம். பாராவுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி!

குலம் தரும் செல்வந்தந்திடும்... நிலம் தரம் செயும், நீள் விசும்பு அருளும் உங்களுக்கு பாரா...

தெரிஞ்சோ தெரியாமலோ, நூறு முறை பதிவு செய்தாயிற்று ஒரே விஷயத்தை... நூறு முறையும் படித்து என்னை வலுவாக்கிய என் நண்பர்கள் அனைவருக்கும் வந்தனங்கள்...  குறிப்பாய் என் பிரிய காமராஜ், என் ஆசான் மாதவராஜ் மற்றும் என் சகோ பாராவிற்கும் என் அன்பும், பிரியத்தின் பெயர் சொல்லும் மனோரஞ்சித பூக்களும்...

Sunday, March 07, 2010

பெயர்கள்...

முதலின் முதலாய்
சிலேட்டு குச்சியில்
எழுதிய அவளின் பெயர்
ஜெயந்தி என்று இருந்தது

அடுத்து பென்சிலில்
சுவரில் கிறுக்கிய பெயர்
சுசீலா என்றானது

பேனாவில்
சுரண்டி பதித்தது
ரேவதியா சுமதியா
குழப்பமாய்

கன்யாகுமரி
கல்விச சுற்றுலா போனபோது
சங்கில் பொறித்த
பெயர் ஜென்னி

கல்லூரியில், அலுவலில்
பெயர்கள் மாறிக்கொண்டே
வந்தது

கணினியின் கடவுச்சொல்லில்
ரகசியமாய் சிரிக்கும்
அவளின் பெயர்

காலம் தீண்டி
நுரைத்து பொங்கிய முதுமையிலும்
கனவுகளும் தேவதைகளும்
ரகசியமாய் கிசுகிசுப்பது
என் பெயராய்...

Saturday, March 06, 2010

யார் காவல் ????!!!

என் வாசலிலே
எப்போதும் கிடக்கும்
அந்த செவலை நாய்க்கு
உணவு வைக்கபோனேன்

குட் வாட்ச் டாக் சார்!
என்றார் எதிர் வீட்டுக்காரர்
எப்படி சொல்றீங்க
என்ற என் கேள்விக்கு

ஒருநாள் நைட்
திருடன் ஒருத்தன் ஏறிக்குதிச்சு
உங்க வீட்டுக்குள்ள போறான்
இது அவனை விடவே இல்லை
அப்ப நீங்க
சென்னைக்கு போயிருந்தீங்க,
நான் என் வீட்டு ஜன்னலில்
இருந்து பாத்துக்கிட்டே இருந்தேன்
என்றார்
கடைசில திருடன் திரும்பி
ஓடிட்டான்

இனிமே இவருக்கும் சோறு
வைக்கணும் போல...

Friday, March 05, 2010

சகுனப்பெயர்ச்சி...

நிறைகுடம்
எதிர்ல வருது
சரியான நேரம் கிளம்புடா...
வடக்க போற
இன்னைக்கு சூலம்
பால குடிச்சிட்டு போ...

வெள்ளிக்கிழமை
திருஷ்டி கழிக்கணும்
குடும்ப மொத்தத்துக்கும்
தவறாமல்
நரிபடம், கழுத படம்
தாத்தாவின் படத்திற்கு
அருகே சிரிக்கும்

எம்புள்ள கலெக்ட்டர் தான்!
மணியடிக்குது பாரு
காரியபலிதம்
லேசா தூறினா
வெளியே கிளம்பக்கூடாது
சுககேடு 
ஒத்த பிராமணன் வர்றான்
திரும்பி வந்துடு

ராகுகாலம், எமகண்டம்,
அமிர்த யோகம், குளிகை,
ரோகம்,
பஞ்சாங்கம், கௌரி பஞ்சாங்கம்
என்ற சுப அசுப பொழுதுகளில்
நிரம்புகிறது
அப்பாவின் கடிகாரமும்
நாட்காட்டியும்
சகுனங்களில் துவங்குகிறது
எங்கள் பகல்கள்
முடிகிறது
எங்கள் இரவுகள்
கிழக்க தலைவச்சு படு
துன்னூறப் பூசிக்க
காத்து கருப்பு அண்டாது...

பினம் வருது எதித்தாப்ல
கிளம்புங்க நல்ல சகுனம்
தெருமுனையில்
ஒரு திருமணக் கும்பல்
என் அப்பா என்று
தெரியாமலே...

Thursday, March 04, 2010

அடுக்களையில் மிதக்கும் கம்மா...

அப்பத்தா வைக்கும்
கம்மா கெழுத்தி மீன்
மண் சட்டி குழம்பில்
கம்மாய் வாசனை
மிச்சமிருக்கும்

மணக்க மணக்க
உறிஞ்சி குடித்தவர்கள்
ஆத்தா, அப்பத்தா, அம்மா, அய்த்தை
வைத்தது போல வருமா
என்று மூளையின்
அடுக்குகளுக்குள்
தேங்கிப் போன
குழம்பை
பாதாள கரண்டி
போட்டுத் தேடுவார்கள்

அப்பத்தா இப்போதெல்லாம்
கம்மா மீன் குழம்பு
வைப்பதில்லை

கம்மாயில் பெருகுகிறது
பெருந்திணை குடியிருப்புகள்
என்று தெரியாமல்
கம்மா மீனே
கிடைக்கிறதில்லை என்பாள்