Saturday, October 30, 2010

ஒரு க(வி)தை !?...

சிறியவளின் கால்புண்ணில்
வழியும் சீழை மொய்த்துக் கொண்டிருந்த
ஈக்களை விரட்டியும் போகவில்லை
கொசுக்களும் விடாமல்
கடித்துக் கொண்டே இருந்தது
பெரியவளுக்கு பேதியானது
இன்னும் சரியாகாமக்கிடக்கு
சிலுவைக்காரங்க கொடுத்த மருந்தேதும் பலனில்லை
குழந்தைகளை தூங்கவைக்க
இவள் விழித்துக் கொண்டே இருந்தாள்
நாளை படுப்பதற்கு
மலம் மிதக்கும்
கழிவறை தாண்டியிருக்கும்
வாதாம் மரத்தின் அருகே
ஒற்றைச்சுவர் தோதாய் இருக்கும்
விடிஞ்சதும் போய் பார்க்கனும் என்று
தாமரையும், செல்வியும்
இந்த முகாம்லயே இருந்தா நல்லாயிருந்திருக்கும்
பலதையும் நினைத்து முந்தானையில் வீசிக்கொண்டே
இருந்தவள் தூங்கிப்போனாள்
பனியில் விரைத்த செத்த சவம் போன்ற ஒன்று
காலை நோண்டியது குறியை பிடித்துக்கொண்டே
எழுந்தவளை இழுத்துக்கொண்டு
வாதாம் மரத்தின் அருகே
இருந்த ஒரு ஜீப் பின்னாடி வைத்து...
இனி வாதாம் மரத்தின் அருகே
படுக்க இயலாது
குழந்தைகளிடம் வந்து விழுந்த போது
இன்னும் உறங்கிகொண்டிருந்தார்கள்
பெரிதாய் அழத்தோன்றியது

Friday, October 29, 2010

அம்மாவின் வீடு...

வீட்டை விற்பதற்காக
வந்திருக்கிறேன்
அம்மாவின் வீடு
அம்மாவின் பழம்புடவைகள்
போல எந்தவித
வெம்மையான நினைவுகளும்
இல்லாத வீடு
வாசலின் முன்னால் வைத்த
செம்பருத்தி பூத்திருந்த
வாசலைக் கடந்து உள்ளே நுழைய
சிறு சாமந்திப்பூக்களும்
அதை ஒட்டிய தென்னைமரமும்
பெரிதாய் கலக்கவில்லை
கொல்லையில் வைத்த
வெள்ளை அரளியும்,
அடுக்கு மல்லிச்செடிகளும்
இன்னும் மீனாம்மாவின்
பராமரிப்பில் முன்போலவே
மாதாமாதம் அனுப்பிவைக்கும்
பணத்தில் அவளுக்குப் போக
வீட்டையும் பார்த்துக் கொண்டாள்
விக்கப்போறியாடா?
அண்ணன் சொல்லுச்சு என்றாள்
அவருக்கு வேலையென்று
வரமுடியாதென்றவுடன்
அண்ணனின் தொந்தரவில்
இங்கிருக்கிறேன் இப்போது
கையெழுத்துப்போட அண்ணனும்
வருவான்
சாயங்காலம் வந்திருந்தான்
ஏன்டி ஆத்துக்கு வரலை என்றான்
ஒன்றும் சொல்லவில்லை
அவன் மனைவியும்
சம்பிரதாயமாய் சிரித்தாள்
வாங்குபவர்கள் வந்திருந்தார்கள்
மீனாம்மா எல்லோருக்கும் காப்பி
கொடுத்தாள், அவளின் பேத்தி
மீனாம்மாவின் முழங்கால்களை கட்டிக் கொண்டு
கூடக்கூட வந்தாள்
பத்திரம் கைமாறியது பணமும்
ஒரு மாதத்தில காலி பண்ணிடுவாங்க
என்றான் அண்ணன்
மீனாம்மா வீட்டையும் என்னையும்
பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்
அவளுக்கும் பேத்திக்கும் அப்போது
வித்யாசம் இருக்கவில்லை

Thursday, October 28, 2010

ஊர்ல திருவிழாப்பே...!!!

எல்லாத்துக்கும் ஒரு சீசன் வர்ற மாதிரி பாட்டு கச்செரிகளுக்கும் ஒரு சீசன் வந்து விடும் எங்க ஊரில்.  பங்குனி மாச பொங்கலென்று களை கட்டும் தெருவுக்கு தெரு குழாய் கட்டி குலவை போடும் அம்மன் கொண்டாடிகளே அதிகம் இருக்கும் ஊரு எங்க ஊரு.  ஆராய்ச்சிபட்டி, தைக்கப்பட்டி, இடையபொட்டல் என்று ஊரே ஜிங்கு ஜிங்குன்னு குதிச்சு வண்ணம் மாறும் நாட்கள் அவை.  அநேகமாய் திருவிழாக்களின் போது பரீட்சை எழுதுற பயலுக எல்லாம் பரிட்சையை  பார்க்கிறதா பாட்டு கச்சேரி கேட்குறதானு ஒரே மண்டையடில காய்வானுங்க... பாட்டு கச்சேரி எப்போதும் மூணாம் நாலு அல்லது கடைசி நாளு தான் நடக்கும், முதல் நாள்ல வள்ளி திருமணத்துல ஆரம்பிச்சு... ராமசாமி பண்டாரத்தின் கூத்துடன் முடியும்.  இடையிலேயே ஆத்துக்குள்ள  திரையக் கட்டி சினிமா போடுவானுங்க...  முதநாள் ஏதாவது பக்தி படம்னு ஆரம்பிச்சு அதுக்கு பெறகால சமூக படங்கள்னு  தொடரும்.   

நடுவுல வச்ச ப்ரொஜெக்டர், பிலிம் ரோலும் பார்க்கவே சுவாரஸ்யமா இருக்கும், பொட்டலுக்கு பின்னாடி போய் இடதை வலதாய் பார்க்க ஒரு கோஷ்டியே பின்னாடி இருக்கும்...  கொட்டி வைச்ச  மணலும் குளுகுளுன்னு காத்தும்... இன்னைக்கு வரை எங்கேயும் கிடைக்கலை அது போல... இதை எல்லாமா விட்டுப்புட்டோம்னு நினைக்க கஷ்டமா இருக்கு இன்னைக்கு.  கோயில் கமிட்டி, விழா கமிட்டின்னு ஊர்ல இருக்குற  இளந்தாரி பயலுகள எல்லாம் இழுத்து போட்டு ஏதாவது ஒரு பொறுப்ப கொடுத்துடுவாய்ங்க  இந்த கோயில் நிர்வாக கமிட்டி இருக்கிற பெருசுங்க... ஒரு கண்டிஷனோட... வள்ளி திருமணம் கட்டாயம் வேணும்டா.. விட்டுடாதீங்க... நரை மயிர் மீசையை நீவிக்கொண்டே... போனமுறை ரோஸ் கலர் மேலாக்கும் அரக்கு குட்டைப்பாவாடை கட்டி ஆடியவள மறக்காதுங்க நம்ம ஊரு பெருசுங்க... இளந்தாரி பயபுள்ளைகளுக்கு கச்சேரி, சினிமா இது போதும்,  நாலு பேரு அல்லது அதுக்கு மேல சேந்துக்கிட்டு ஒரு நோட்ட கைல எடுத்துக்கிட்டு வசூலுக்கு கிளம்பிடுவாய்ங்க ... இது போல நாலைஞ்சு குரூப் இருக்கும்  மொத்தமா... நிறைய வசூல் பண்ற குரூப் சொல்ற ஆர்கெஷ்டிரா தான் அவர்கள் சொல்லும் சினிமா தான், அவிங்க வச்சதுதான் சட்டமா இருக்கும், அதனாலேயே குருப்புகளுக்குள்ள பெரிய போட்டியே இருக்கும், சொந்த காச கொண்டு வந்து வசூல ஏத்துறது, வீட்டுல இருந்து லவட்டி கொண்டு வந்து கொடுக்குறதுன்னு...  அவிங்கவிங்க குருப் தான் பெரிசா ஆடனும்னு இல்லாத திருகல்தனம் எல்லாம் செய்வாய்ங்க!

பெரும்பாலும் மதுரைல இருந்து வர்ற ஏதாவது ஒரு ஆர்கெஷ்டிரா தான் கச்சேரி நடத்துறது... சினிமாவுக்கு நம்ம கணபதி டாக்கிஸ்  ஆப்பரேட்டர் அண்ணாச்சிய கூட்டிட்டு வந்தா அவரே பாத்துக்கிடுவாறு எல்லா சோலியவும்.  மதுரைல அப்போ பாப்புலரா இருந்தவர்கள் சுந்தர் ஜெகன், ஜீவன், அங்கிங்கு, புளு பேர்ட்ஸ் தான், இதில யார உள்ள கொண்டு வர்றதுன்னு முடிவு பண்ணவே ஒரு பெரிய போராட்டம் நடக்கும்...  கடைசியில் பெரும்பாலும் பட்ஜெட்னாலையும், எஸ். பி.பாலு மாதிரி பாடும் சுரேசிற்காகவும் ஜீவன் தான் முடிவாகும்.   காமாட்சி அம்மன் கோயில் முன்னாடி இருக்கும் ஆத்துப்பொட்டலில் வள்ளி திருமனத்திற்காக போட்ட  மேடையிலேயே பாட்டு கச்சேரியும் நடக்க ஆரம்பமாயிடும்... ஒரு புளு கலர் மெட்டடோர் வேனில் காலை பதினோரு மணிக்கே வந்து விடும் வாத்தியங்களும், மேடை அலங்காரங்களும், ஒடிசலா ஒரு ஆள் வந்து மேடைய கொஞ்சம் அழகு படுத்தி அவர்களின் ஆர்கேஷ்டிரா பேனரை கட்டுவான்...

விழாக்கமிட்டியை சேர்ந்தவர்கள், தீப்பெட்டி ஆபீஸ் பக்கத்துல இருக்கிற மண்டபத்துல, பாட்டு கோஷ்டிக்கு இடம் செய்து கொடுப்பார்கள்.  வாத்தியங்களை அங்கே அடுக்கி... வேடிக்கை பார்க்க வர்ற குஞ்சானி பசங்கள எல்லாம், வாத்தியங்களை தொடைக்கவென்றே அழைத்து வந்த பையன்  விரட்டி கொண்டு இருப்பான்.  மெயின் பாடகிகளும், நாலு ஆண் பாடகர்களும் ஆறு மணிக்கு தான் வருவாய்ங்க.   அதில் ஒரு பொண்ணு   மஞ்சள் சட்டை சிகப்பு தாவணியில் தாட்டி சூப்பரா இருக்குடா, பெரிய பாடகியாய் இருக்கும் போலருக்கு என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.   தெருல இருக்கிற வயசு பிள்ளைக எல்லாம் தீப்பெட்டி ஒட்டி முடிஞ்சா பின்னாடி அல்லது பள்ளியோடம் விட்டு வந்த பின்னாடி செட்டியார் வீட்டு மொட்ட மாடியில போய்  நின்னு பாக்க... இப்பவே செட்டியார் வீட்டம்மாவ காக்க பிடிக்க ஆரம்பிப்பாளுக...  சந்தா அன்னைக்கு சீக்கிரமே எடுத்து வச்சுட்டு, செட்டியார் அண்ணாச்சியும் மேல வந்துடுவார் கச்சேரி ஆரம்பிக்கும் சமயத்தில, வெத்து மாருல ஒரு குத்தால துண்ட மாத்திரம் போத்திக்கிடுவாறு... கடை பசங்களிடம் ஏலே கூதல் அடிக்கில்லா என்று யாரும் கேட்காமலே பதில் சொல்லி மூடிக்கிடுவாரு...  யார்லா அந்த பிள்ள, எங்கிருந்து வாரா... நான் பாத்ததில்லா... இம்புட்டு நாளா... என்று சும்மா நிமிண்டிக்கிட்டே இருப்பார் செட்டியார் அண்ணாச்சி...

பொதுஜனம், மாடியில்லாத மக்களும் மேடைக்கு முன்னால் கொட்டி வைத்த மணலில் உட்கார்ந்து வாய் தொறந்து ஒட்கார்ந்திருப்பார்கள், வாத்தியங்களை அடுக்கவும், அதை ஒழுங்கு படுத்தவும் நேரம் ஆகி கொண்டிருப்பதால், கொட்டாவி, கெட்டாவி எல்லாம் கலந்து சோம்பல் முறித்து மணலில் அசர ஆரம்பிப்பார்கள்.   ஹலோ மைக் டெஸ்டிங்... 1 2 3 ... என்றதும் கூட்டம் முழுக்க நிமிர்ந்து உட்காரும்... வசூல் சாதனை செய்து நிற்கும் இளந்தாரிக்கும்பல் அந்தாநிக்கே செட்டியார் வீட்டு மேல இருக்கிற புள்ளைகள பார்த்து பேசி, சிரித்து, சைகை காட்டி கொண்டு நூல் விட்டு கொண்டு இருப்பார்கள்... எல்லோரையும் உலுக்கும் மைக் டெஸ்டிங் ஒன் டு த்ரீ...  பாடகர் வெள்ளை சட்டை பேண்டில் வந்து தொண்டையை செருமும் போதே... சின்ன பயலுவளுக்குள்ள ஒரு சின்ன போட்டி வந்துடும்... முதப்பாட்டு எப்பவுமே விநாயகர் பாட்டு தான்... அதில என்ன பாட்டு என்று... ஒருத்தன் விநாயகனே வெவ்வினையை... பாட்டு தான் முதல்ல என்பான், இன்னொருத்தன் இல்லைட மாப்பிள என்ன பந்தயம்... இவன் பாடபோறது ஒரு மணிக்கொரு மணி அந்த பட்டு தான், இடையில மூனாவதா ஒருத்தன் இல்லபா... கணபதியே வருவாய் தான் என்றான்.   அவரும் ஆரம்பித்தார்... ஹலோ ஹலோ செக் செக்... என்று எதிரொலித்து... வேழ முகம் கொண்டு என்று ஆரம்பித்தார்... பயலுக செத்துட்டாய்ங்க.

மூணு நாலு பாட்டு முடிஞ்சதும் பாலு குரலில் பாடும் சுரேஷ் வந்தார் வந்தவுடன் பாடிய பாட்டு, தோரணையான அறிமுகத்துடன்  சங்கீத மேகம் என்று இளையராஜாவின் மேடைக்காகவே மெட்டு போட்ட பாடலை பாடினான்.  கூட்டம் மெய்மறந்து கேட்டு கொண்டிருந்தது... பாண்டிப்பய இதுக்கெடையில ஒரு துண்டு சீட்ட எழுதி ஒரு சின்ன பயல்ட்ட கொடுத்து பாட சொன்ன பாடல், இளையராஜாவின் இசையில் மற்றுமொரு உன்னதமான இரு குரலிசையில் வழியும் காதல் பாடல்... நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது...  இளையராஜாவும் வைரமுத்துவும் தமிழ் சினிமா இசையையே புரட்டி போட்ட காலம் அது... சிங்கசங்கமம் அது... சேலை பூக்களில் தேனை திருடிய பொன்வண்டு... என்ற பாலுவின் மிதப்பான குரலும், ஜானகியின் குழைவும் அம்மா...  அலையோசையின் சத்தமே இல்லாமல் இசை உற்பவித்து கரையை மீட்டும் அலை விரல்கள்...

Wednesday, October 27, 2010

இரண்டு கவிதைகள்...

கலெய்டாஸ்கோப்

வனாந்தரங்களில் அலையும்
நட்சத்திரங்கள் பூத்த
தேவதையாய் இருக்கிறாள் அவள்
பூக்கள் நிறைந்த தோட்டங்களின் மத்தியில்
தோழிகளாய் விர்ருக்கும் சிறிய பறவைகளுடன்
சம்பாஷிக்கிறாள்
கண் விரித்து கதை கேட்கும் பறவைகள்
அவை பறக்கும் பிற தேசங்களில் அவள் கதைகளை
பிறருக்கு சொல்கின்றன
தடாகத்தில் நீர் அருந்த வரும் விலங்குகளுடன்
விளையாடவும் செய்கிறாள்
ஒரு நாள் வசீகரமாய் இருந்த ஒளி உமிழும் குகைக்குள்
அம்மாவின் எச்சரிக்கையை மறந்து
செல்கிறாள்
கொடிகளும் இலைகளும் இருந்த
சுவரில் பதிந்திருந்த நாதங்கியை தொடுகிறாள்
ஓசையுடன் நகர்ந்தது பெருங்கதவு ஒன்று
திடீரென்று கூட்டமாய் விருட்டென்று
பறந்து வெளியேறியது கண்ணாடித் தும்பிகளும்
வண்ணத்துப்பூச்சிகளும்.

ஒட்டகச்சவாரி

உலோகப்பறவையின்

நிழலில் மிரண்டு நகரும்
கோழிக்குஞ்சு மேகங்களின்
கீழே உறங்காத
விழிகளில் நீலம் பாரித்து
கிடந்த பெருங்கடல்
துண்டாக்கிய நிலசதுப்புகளில்
தொடங்கிய பயணத்தின்
இறுதியில்
காற்றுக்குடுவைகள்
மோதி உடையுபோது
மணலென உதிரும்
நம்பிக்கையில்
கருத்தமசி எண்ணெய்
பூசிய கரன்சி
மையிட்ட வெத்திலையாய்
காட்டும்
கடன்காரர்களின்
முகங்களின் நடுவே
மனைவியும் குழந்தைகளும்
மங்கலாய்...

Tuesday, October 26, 2010

புண்ணாகவராளி...

இமைகள் திறக்க மறுக்கும் காலையில், மெலிதான உறக்கத்தில் அசங்கும் குழந்தையின் கையாய் தொட்டது அந்த பாடல்.   சின்ன ஸ்வர வரிசையில் ஆரம்பித்த அந்த பாடலின் முனைகளில் கட்டியிருந்த மயிலிறகுகள் வீசிய கவரியில் குளிர்ந்த காற்று விலக்கியது நித்'திரையை'!.  மகுடி படத்தில் வரும் அந்த பாடலில் கேட்கும் குரல்களின் வசீகரம்,  சுகமான மலைச்சாரலில் நகரும் பேருந்தின் ஜன்னல் பயணமாய் மெட்டின் மிதமான வேகம், குளிர் நேர வெந்நீர் குளியலாய் இறங்கியது மனசை வழுக்கி கொண்டு.   வாழ்வதிற்க்கான அர்த்தங்கள் எத்தனையோ இருக்கிறது அதில் ஒரு மகோன்னதமான ஒரு விஷயம், இசையறிதல் அல்லது இளையாராஜா அறிதல்.   

திருவிழாக்காலங்களில், கல்யாணத்தில், சீமந்தம், காதுகுத்தில் என்று எல்லா விசேஷ காலங்களுக்கும், எழுபதின் இறுதியில் கேட்கும் ஒரு பாடல், கேட்டேளா அங்கே அத... என்று சிவக்குமாரின் வசனத்துடன் ஆரம்பாகும் பாடல் சுழலும் தட்டில் வெள்ளி விளிம்பென வந்து முகம் காட்டும் கண்ணன் ஒரு கைக்குழந்தை மாதிரி முத்துக்கள் எத்தனையோ... அத்தனையும் சொல்ல முடியாது ஆயுள் பரியந்தம், அதனால் இங்கு தொடப்போகும் பாடல்கள் இளையராஜாவின் தேர்வாகவும் இருந்த சில பாடல்களும் இருக்கும்.  ஒரு முறை குமுதமோ அல்லது குங்குமமோ... இளையராஜாவிற்கு பிடித்த பத்து பாடல்களை பட்டியலிட சொன்னார்கள், அதில் அவருக்கு பிடித்த பத்து பாடல்களை சொல்லியிருந்தார், எனக்கு அந்த பத்தும் ஞாபகம் இல்லை இப்போது, இதை அவரே இது இப்போதைக்கு ஞாபகம் இருப்பது என்றும்... நாளை கேட்டால் வேறு சொல்லலாம் என்றும் கூறினார் அது எனக்கும் பொருந்தும் இந்த தொடருக்கும் பொருந்தும். 

மறுபடியும், நாம் பாடலின் தொழில்நுட்பம் குறித்தோ, அல்லது இந்த பாடல் அமைந்த ராகம், சிக்கலான ஸ்வரக்கட்டுமானம் குறித்தோ பேசப்போவதில்லை, ஒரு சாமான்யனின் இசை ரசனை அல்லது இசையை அறிந்து கொள்ள முயல்பவனின்
முனைப்பு மட்டுமே இங்கு பிரதானம்.   பெயரறியா பறவைகளின் பாடல்கள் நனைக்கும் போது அதை பகுத்தறியாது அந்த நொடி நேர மயக்கம் பற்றி மட்டுமே இதில் இருக்கும்.   கபகரிசா... என்று ஆரம்பமாகும் அந்த பாடலின் வார்த்தை பிரயோகங்களோ அல்லது அதன் பொருட்செறிவோ அத்தனை சிறப்பில்லை என்றாலும்,  பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகியின் குரல்களில் இருக்கும் ஒரு சிறந்த இருகுரலிசை பாடல்களில் முக்கியமானது.  இதன் விசேஷமே... இளையராஜாவின் மெட்டும், அதில் இருக்கும் சின்ன சந்தங்களும், குழலிசையும், வீணை ஒழுகி நிரப்பும் இண்டர்லுட், பின்புல இசை, இரண்டு பாடகர்களின் குரலும் இந்த பாடலை ஒரு தரத்திற்கு மேலே நிறுத்தி விடுகிறது.  இந்த பாடலின் அழகே, சிறப்பே அதன் எளிமையும்,  பாடல் முழுக்க பயணிக்கும் கர்னாடக இசைபாணியும் தான்.  மலையமாருதம், ரீதி கௌளை என்று பலவாறு ராகம் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் பேசிக்கொள்ளட்டும்.  நமக்கென்ன  இந்த பாடல் கேட்டு ரசிக்கும் புத்தி போதும், ஒரு ஆழமான பசும் பள்ளத்தாக்கு, அல்லது ஹோன்னு கொட்டுற அருவி பார்க்கும் போது, ஆன்னு ஒரு உணர்வு வருமே அது போதும் நமக்கு.  அந்த நொடி வாழ்க்கை போதும் எதையும் கொண்டாட...

நீலக்குயிலே உன்னோடு தான் என்று தொடங்கும் அந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று விட தோன்றுகிறது.  இதன் மேல் உள்ள ஈர்ப்பிற்கு முழு காரணமும் இளையராஜவாக தான் இருக்க முடியும்.  குரலிசை தேர்வும், மெட்டும், வாத்தியக்கலவையும் உன்னதமாய் இருப்பதற்கு நானன்றி யார் வருவார்னு வந்து நிற்பது ராஜா தான்.   ராசையா என்ற இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்றே ஒரே காரணத்திற்க்காக இது போன்ற இசை பற்றிய அறிவோ அல்லது அதை ஆராயும் மனமோ இல்லாமல் எடுத்த எத்தனை படங்கள் இளையராஜா தவிர ஒன்றுமே இல்லாமல் குப்பையாய் இருந்திருக்கிறது.... இதற்கு திரை உலகின் மிகப்பெரிய இயக்குனர்கள் எல்லாம் விதிவிலக்கில்லை...  அதிலும் கர்நாடக சங்கதிகளில், ஸ்வரங்களில் மெய்மறந்தவர்கள், மயக்கத்திலே எடுத்த படங்கள் எத்தனை, இசை பாடும் தென்றல், காதல் ஓவியம், கோயில் புறா, கவிக்குயில், மகுடி, இதயக்கோவில் இதில் ஒரு பாடலும் குறைவாய் இருந்ததில்லை.   இளையராஜாவின் எத்தனையோ பாடல்கள் இருக்கையில் இந்த பாடல் ஏன் என்ற கேள்வி வந்தால் அதற்க்கு என்னிடம் பதில் இல்லை, இதில் வரும் பாடல்கள் என் ரசனை தேர்வின்படி முதல், இரண்டாம் என்ற கட்டுக்குள் இல்லை, அதே போல் எந்த வித தரவரிசையையும் குறிக்கவில்லை.   சலசலவென்று ஓடும் சுனை பெருக்க நதியில் எந்த துளி தித்திக்கிறது என்று எனக்கெப்படி தெரியும். 

மிகச்சிறந்த பெண் குரலிசை பாடல்கள் இளையராஜாவின் இசையில் இருந்து வந்தவை தான் என்று சத்தியம் செய்யமுடியும் யாராலும்...  பழைய சுசீலாவின் பாடல்கள், ஜிக்கி, ஜமுனா ராணி, லீலா, ராஜேஸ்வரி என்று பெரிய பாடகர்கள் இருந்தும் மிகச்சிறந்த பாடல்கள் எழுபதுகளின் ஆரம்பத்திலும், எண்பதுகளின் முன் பாதியிலும் தான் இருந்தது என்று உறுதியாக சொல்ல முடியும்... ஜானகி, உமா ரமணன், சுசீலா, சசிரேகா, ஜென்சி என்று வித்தை காட்டிய மாயக்காரன் இளையராஜா.    தூரத்தில் நான் கண்ட உன் முகம், படத்தில் இடம்பெறாத இந்த பாடல் படமாக்க வேண்டிய சிக்கலினால் கூட கை விடப்பட்டிருக்கலாம்.   மகேந்திரன் போல இன்னுமொருவர் வேண்டும் பாடலை படமாகும் விதம் பற்றி பேச...  கன்னடத்தில் மிக பிரபலமான ஓர் டூயட்,  எந்த மொழியில் புகுந்தாலும் செறிவான இசையாகவே இருக்கும்... விழியிலே மன விழியின் மௌன மொழி பேசும்....

Saturday, October 23, 2010

இசையில் தொடங்குதம்மா....

லம்போதர லகுமிகரா...ன்னு இசை ஆர்வம் நுழையவில்லை எனக்குள். என்னுடைய இசை ஆர்வத்தின் முதல்படி அம்மா அப்புறம் அப்பா என்று தைரியமாக சொல்லலாம்.   திருப்புகழும், கந்தர் அனுபூதியும், சஷ்டியும் தான் முதலில் ராகம் போட்டு பாட கற்றுக் கொண்டேன் அம்மாவின் தயவில்.  அம்மா ஒரு தீவிர முருக பக்தை, அப்பா ஒரு பழுத்த வைணவர், ஆனால் அப்பாவிற்கு பிரபந்தங்கள் பாராயணமாய் தெரிந்தாலும்,  ராகம் போட்டு பாடத்தெரியாது.  அதனாலேயே எனக்கு முதலில் முருகனிடம் தான் மிகுந்த பக்தி... முருகன் அருணகிரி நாக்கில் வேலால் எழுதியது போல எனக்கும் எழுத வேண்டும் என்று நாக்கை நீட்டி கொண்டே திரிந்திருக்கிறேன் அனேக காலங்களில்.   என் மூளைக்குள் படிந்த இசை அடுக்குகளில் செருகி இருந்ததெல்லாம் சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் டி.எம்.எஸ். தான்.  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... என்ற பாட்டை கேட்டதில் இருந்து எனக்கு முருகன் சிரிப்பது போலவே இருக்கும்... கொண்டையா ராஜூவின் கைவண்ணத்தில் சிரிக்கும் முருகனின் புராதனம் கலந்த அழகு ஒரு பச்சைய வாசனையை பரப்பும் பூஜை அறை எங்கும்.  

துதிப்போர்க்கு வல்விணை போம் என்று காத்திருந்த நாட்களில், பக்த பிரகலாதா பார்க்க நேர்ந்தது, ரோஜாரமணியின் தத்ரூப பரவச உச்சாடனங்களில் இருந்து எனக்கு நலம் தரும் சொல் நாராயணா என்று கண்டு கொண்டேன்...  தூனிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று எனக்கும் ஜெயந்திக்கும் வாக்குவாதமே வந்திருக்கிறது.  ஜெயாத்தை இறந்தபோது இதே போல எங்களுக்குள் சண்டை வந்து பந்தலுக்கு முட்டுக் கொடுத்த கட்டிய மூங்கிலில் இருப்பாரா என்று கேட்க நானும் வெளியே வா நாராயணா என்று கண்ணை மூடி ஆட்டிய ஆட்டில் மூங்கில் நகர்ந்து பந்தல் சரிந்து துக்கம் விசாரித்துவிட்டு வாயில் துண்டின் முனையை வைத்திருந்தவர்கள் தலையில் விழுந்தது முழு கொட்டகையும். 

மெதுவாக அம்மாவின் பிரத்யேக ஆத்மசிநேஹிதியான மர்பி ரேடியோ மூலம் இலங்கையின் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாவனம் ஒலிபரப்பிய பாடல்கள் தான் என் இசை ஊற்றுக்கண்ணை திறந்தது.  ஜிக்கி, பி.லீலா, பி.சுசீலா, மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சீர்காழி,  ஏ.எம்.ராஜா, கண்டசாலா, ஜெயராமன், ஸ்ரீநிவாஸ், டி.எம்.எஸ் என்று திரை இசை கானகந்தர்வர்கள் புகட்டிய புட்டிப்பால் குடித்து செழித்து வளர்ந்தது இசை ஆர்வம்.   கனவு கண்ட காதல், எனை ஆளும் மேரி மாதா, நீயே கதி ஈஸ்வரி, தன்னை தானே நம்பாதது, மதன மனோகர சுந்தர, சிவசங்கரி, சுந்தரி சௌந்தரி, என்று தணியும், வாராய், நானன்றி யார் வருவார்  என்று பழைய பாடல்களின் மதுரமான குரலிலும்,  மென்மையான இசையிலும் கிறங்கி கிடந்த நாட்களின் இறுதியில் நுழைந்த இளையராஜா, என் இசை ஆர்வத்தை இரட்டிப்பாக்கினார்.

வாடை வாட்டுது, உனக்கென தானே இன்னேரமா என்று புதிதாய் தொனித்த கிராமத்து குரலில் தொடங்கி சங்கத்தில் பாடாத கவிதை மற்றும் சிறு பொன்மணி என்று தொடர்ந்த இசை ராஜாங்கத்தில்  வழங்கிய பொற்கிழிகள் எத்தனை.  பின்னணி இசையும், பாடல்களில் வழியும் இசையும், புதிதாய் கேட்கும் வாத்திய இசையும் திரை இசைக்கு மிகவும் புதிதாய் இருந்தது.  எந்த ஒரு சராசரி ரசிகனும் ஏனையோர் பாடல்களுக்கும், இளையராஜாவின் பாடல்களுக்கும் இசை வித்தியாசங்களை அறிந்து ரசிக்க வைத்த பெருமை அவரையே சாரும்.  ஜெயச்சந்திரன், ஜானகி, தீபன் சக்கரவர்த்தி, சாய்பாபா, கலைவாணன், கிருஷ்ண சந்தர், ஜென்சி, சைலஜா, உமாரமணன், மலேசிய வாசுதேவன் என்ற பாடகர்களை பிரபல்யபடுத்தியதுடன், புது குரல்களையும் அறிமுகபடுத்தினார்.   இது என்னை போன்ற இசை அறிவற்ற ஒரு சாமான்யனுக்கும் இசை பற்றிய அறிவை, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்தது. குடும்பத்தில் கொஞ்சம் இசை துளிகள் இருந்தாலும் அதை ஒன்று கூட்டி மேலும் வளர்த்தது இளையராஜாவும் இன்ன பிற விஷயங்களும் தான்...

எனக்கு பிடித்த இளையராஜாவின் பாடல்களை ஒவ்வொன்றாக பேசவேண்டும்...

Friday, October 22, 2010

மனைவிக்கு நண்பர்...

கென்யா வந்தபிறகு படிப்பும் எழுத்தும் குறைஞ்சு போச்சு. எழுத்து ரொம்ப நாளா குறைஞ்சு போச்சுதான், இதுனால பெரிய இழப்பு யாருக்கும் இல்லே தான் என்றாலும் படிப்பு குறைஞ்சது வருத்தம்.  குடும்பத்துடன் தொலைதூரம் போய் வேலை பார்ப்பதில் உள்ள சங்கடங்களில் இதுவும் ஒன்று, மனைவிக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் படிக்க முடியாது, கொடுத்தது போக மேலும் படிக்கவென்று ஒதுக்க நேரமே இருக்காது.  இன்னொரு பிரச்சினை  வீடு அவளுக்கு பிடித்த மாதிரி வீடு இன்னும் அமையவில்லை.  என்ன வீடு கொடுக்குறாங்க உன் கம்பனியில், ஹாலிலேயே டைனிங் ரூம் அதுவும் வாசல்ல நுழைஞ்சதும், சாப்பிடும்போது வந்தா எல்லாம் பரப்பி கிடக்கும், நல்லாவா இருக்கும்.  ஆனா என்ன பண்றது கென்யால எல்லா வீடும் இது போல பெருசா, சாப்பாட்டு அறை முன் ஹாலிலேயே இருக்கிறது, ஒன்னும் புரியலை. 

இப்படியாக என் பொழுதுகளில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் (மணித்துளிகளில்) படிக்க கிடைத்த வண்ணநிலவனின் "மனைவிக்கு நண்பர்" சிறுகதை, நிறைய முறை படித்திருந்தாலும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் பாதிக்கிறது. 

இந்தியாவில் இருந்து கிளம்பும்போது விமானத்தில் கொண்டு போககூடிய சாமான்களின் எடை   குறிப்பிட்ட அளவு தான் இருக்க வேண்டும், எனக்கு விதிக்கப்பட்டது இருபத்தி மூணு கிலோ... இருவருக்குமாய் நாப்பத்தி ஆறு... கொஞ்சம் துணியும் சாமான்களும் எடுத்து வைத்தவுடன் நாப்பத்தி ஆறு கிலோ தாண்டி விட்டது. எடுத்து வர நினைத்த புத்தகங்கள் எதுவும் எடுத்து வர முடியவில்லை...  ஆக கையில் கொண்டு வரமுடிந்தது... ஒரு வண்ணநிலவன் (உள்ளும் புறமும் ) ஒரு வண்ணதாசன் (சமவெளி) ஒரு நாஞ்சில் நாடன் ( தெய்வங்களும் மனிதர்களும் ஓநாய்களும் ) மற்றும் ஒரு கோணங்கி (இருள்வ மௌத்திகம்).  எல்லாமே ஏற்கனவே படித்த புத்தகங்கள் தான் என்றாலும் திரும்ப திரும்ப படிக்க முடியும் அலுக்காமல்... (கோணங்கியின் எழுத்தை புரிந்து கொள்வதற்கு திரும்ப திரும்ப படிக்கணும்-ஒரு மாயக்கம்பளப்பயணம் அது) 

எல்லோரும் சொல்வது போல வண்ணநிலவனின் இந்த மனைவிக்கு நண்பர் படிக்கிற எல்லோருக்கும் தோன்றுவது, இந்த மனுஷன் எப்படிட இப்படி எழுதுறார்னு...  வண்ணதாசன் மற்றும் கலாப்ரியாவுக்கு மட்டுமல்ல எழுதுகிற எல்லோருக்கும் உண்டான ஆசை அது, வண்ணநிலவன் போல ஒரு வரியாவது எழுதிட்டா... எழுதுறத நிறுத்திடலாம்னு ஒரு ஆயுள் திருப்தி வந்துவிடும்.

ஒரு பலசரக்கு கடைக்காரன், அவன் மனைவி மற்றும் இருவருக்கும் தெரிந்த ஒரு லேவாதேவி நண்பர் ரங்கராஜு.  இவர்களை சுத்தி நடக்கும் கதை.  இன்னும் சில பாத்திரங்களாய் அந்த கடையும் ஒரு சேரா அமைந்த வீடும், பச்சை ராலே சைக்கிளும், சரோஜாவும்.   வண்ணநிலவனின் எழுத்துதிறம் தன் மனைவியை பற்றி விவரிக்கும் இடமும், மூன்று காதபாதிரங்களுக்குள்ளும் மாறி மாறி நடக்கும் சிறு சிறு சம்பாசனைகளும், அவர்களின் உடற்மொழி பற்றிய விவரிப்புகளும், ஒருவரை பற்றி மற்றவரின் எண்ணவோட்டங்களும்,  மூன்று கதாபாத்திரங்களுக்குள்ளும்   நடக்கிற போராட்டமான, குழப்பமான நிலையை இதை விட அழகாய் யாராலும்           சொல்ல  முடியாது.  

ஒரு தேர்ந்த சினிமா இயக்குனரால் இதை படமெடுக்க முடியுமா, இந்த கடையுடன் கூடிய வீடு, அதன் உள்கட்டுமான அமைப்பு,  அது அமைந்த தெரு, மூன்று கதாப்பாதிரங்களின் எண்ணவோட்டங்கள், அதை சுற்றி நடக்கும் உடற்மொழி ஆக்கங்கள், பொருத்தமான மனிதர்கள் என்று எல்லாம் பொருந்தி வரவேண்டும்.  இதற்கு திரைக்கதை எழுத முயன்று முடியாமல் முதல் பக்கத்திலேயே நிற்கிறது.   முதல் பக்கத்திலேயே முழுக்கதையையும் கொண்டு வரமுடிவது திரையில் முடியாது என்றே தோன்றுகிறது.  தாகூரின் கதைகளை, ரே முயன்றது போல மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் முயலவேண்டும் என்பது என் ஆசை. வண்ணநிலவனின் குறுநாவல்களையும், நாவல்களையும் ரசிப்பவர்களுக்கு ஒரு மிக அடர்த்தியான சிறுகதை அதன் வடிவம் இந்த மனைவிக்கு நண்பர் சிறுகதையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.   மெலிதான பிறன்மனை மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் கதைகள் மிகக்குறைவு.

Thursday, October 21, 2010

மக(ஹா) கல்யாணம்!

அசைவற்று நிழல்
பரப்பி கொண்டிருந்த மரத்தின்
கைகளில் காக்கை பொன்னாய்
மின்னிகொண்டிருந்த இலைகளில்
வழுக்கி கொண்டிருந்த 
சூரியனின் இளங்கதிர்களில்
நீ கட்டி ஆடிய ஊஞ்சல்
பிரிபிரியாய் முறுக்கேறியது
இருவர் ஆட தோதாய்

பெயரற்று கிடந்த
வெள்ளைப்பூக்களின் வாசனையை
அணிந்திருந்த காற்று
புத்தாடை அணிந்த சிறுமியின்
வனப்புடன் உயர பிடித்து
மிதந்து கொண்டிருந்தது
நீ விளையாடி களைத்த
தெருக்களில்
அடைத்து கட்டிய பந்தல்

கண்ணாமூச்சி ஆடி
மறைந்து எழுந்து
உள்புகுந்து வெளியேறும்
தோழிகளுடன் நீ விட்டுசென்ற
சிரிப்பொலி
பதிந்திருக்கும்
நிலை  நின்ற தேரை
மறைத்து நிறுத்திய
பிளெக்ஸ் பேனரில்
நீ சிரிக்கும் திருமண வாழ்த்து

கிச்சு கிச்சு தாம்பாளம்
ஆடிய உன் விரல் ரேகைகள்
படிந்த ஆற்று மணலை
கொட்டி நிறுத்திய
முகூர்த்த கால்

உறவின் வெம்மையில் வேய்ந்த
மயிலிறகு பந்தலின்  முனையில்
அமர்ந்திருக்கிறது
ஒரு காகம்
மணமகளை வரவேற்கும்
ஒலிபெருக்கியின்
பாடலை பொருட்படுத்தாது,
தொடர்ந்து கரைந்து கொண்டே
இருக்கிறது
யாரின் வரவையோ சொல்லிக்கொண்டு

Tuesday, October 19, 2010

கருப்புத்துளை...

கடவுளின்
பெருரகசியங்கள்
பொதிந்திருக்கும்
பேழை
என் கையில்
கிடைத்தது
மழுங்கிய
நம்பிக்கைமுனைகளை
கொண்ட சாவிகளுக்கு
நெகிழ மறுக்கும்
துருவேறிய பூட்டுகளால்
கனத்து கிடந்தது
அந்த பேழை
அதன் வேலைப்பாடுகளின்
செரிவில்
வரங்களில் செழித்தவர்களின்
கண்செருகி கிடந்த
முயக்கங்களும் தினவுகளும்
சித்திரங்களாகவும்
பொம்மைகளாகவும் 
காணப்பட்டன
இதன் உள்ளறைகளில்
விகசிக்கும்
ரகசியங்களை
பற்றி எதுவும்
தெரியவில்லை இன்றுவரை

நானும்  கடவுள் போலவே
என்ன செய்வது என்று தெரியாமல்
வெறுமனே வைத்திருக்கிறேன்

Saturday, October 02, 2010

வேய்ந்த இருள்...

மரணத்தின் நகக்குறிகள்

அழுந்த பதிந்திருக்கும்
கதவுகள் உடையதும்
நீர்க்குமிழ்த்திரைகளினால்
ஆனதுமானது
எனது வீடு

கதவின் வழி வருவதைவிட
சுவர்களின் வழி வருவது
எளிது தான் என்றாலும்
யாரும் முயன்றதில்லை
இதுவரை
எப்போதும் கதவுகள்
மாத்திரமே தட்டவோ அல்லது
தகர்க்கவோ படுகிறது

கதவின் மீதும்,
அழைப்பு மணியின் மீதும்
பதிந்திருக்கும் வருகைக்கான
சிதைந்த காலடித்தடங்களில்
என் முகவரி இல்லை
எனக்கான குறிப்புகள்
எதையும் விட்டுச் செல்லவும் இல்லை

சுவர்களின் வழி
தெரியும் உலகத்தில்
திரிபவர்கள் எனக்கு உறவுதான்
என்றாலும் எனக்கு
அவர்களை அழைத்துப்பேச
அளாவளாவத் தோன்றியதே இல்லை
என் மூதாதையர்களின்
சாயலற்று இருந்தார்கள் என்பதைத் தவிர
வேறு காரணங்களும் இருந்திருக்க வேண்டும்

Friday, October 01, 2010

நிலாத்துண்டம்...

நீண்ட நாட்களுக்கு
பிறகு அழைப்பு வந்தது
அந்த தொலைகாட்சியில் இருந்து
பழைய நினைவுகளை பற்றி பேச...
மேக்கப் போட்டு விட 
லட்சுமியம்மா இல்லை
இப்பவும் சில பல வருஷங்களை
மறைத்து விடுவாள் எப்படியும்
ஆந்திராவில் ஒரு கிராமத்தில்
இறந்தவளை பார்க்க
முடியவில்லை
நானூறாவது வேண்டியதிருந்திருக்கும்
மகனிடம் கேட்டா கத்துவான்னு அப்படியே
விட்டுட்டேன்
ரெமி பவுடர் மட்டும் இருந்தது
கொஞ்சம் மையும் இட்டுகொண்டேன்
பொட்டு வைப்பதா வேண்டாமா என்று
யோசனையாய் இருந்தது
அதையும்  விட்டுவிட்டேன்
அரக்கு கலர் சேலையும் வெள்ளை ரவிக்கையும்
பொருத்தமில்லை தான்
உருப்படியா இருந்தது அதுதான்
ஸ்டுடியோவில இருந்து காரு வந்தது
உசரமான படியா இருந்ததால ஏறமுடியலை
சின்ன ஸ்டூல் வைச்சு தான் ஏறமுடிஞ்சது
காஷ்மீர் ஷூட்டிங் போனப்போ
குதிரை ஏறமுடியாம விழுந்தது ஞாபகம் வந்தது
படாரென்று குதிரையில் இருந்து குதித்து
தூக்கிய நடிகரின் கை இடுப்பை வளைத்து
மெத்தென மார்பில் பட்டதாக நினைவு
ஸ்டுடியோ சென்றவுடன்
ஒரு பொண்ணு வந்து மேக்கப்பை சீராக்கினாள்
ஒரு ஓரமாக உட்கார வைத்தார்கள்
அரங்கத்தை பார்த்த போது
அப்போதைய நடிகர்களின்
மடியில், கைகளில்,
மரத்தின் பின்னால்,
நிலாவை பார்த்தபடி என்று
சுற்றி நான் சிரிக்கும் படங்கள் இருந்தது
அரங்கில் அழைத்தார்கள் நான் ரசித்த
பாடல்களை பற்றிய நிகழ்ச்சியாம் அது
அவர்களே ஒரு பட்டியல் கொடுத்தார்கள்
அப்போதைய பெரிய கதாநாயகர்களின்
பாடல்கள், பெரிய இசைஅமைப்பாளர்கள்
கவிஞர்கள் எழுதிய பாடல்கள் என்று
அதைப்பற்றி பேசவேண்டிய
வசனங்களும் இருந்தது அதில்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
அதில் இல்லை
இரண்டு மணி நேரம் ஆனது
எல்லாம் முடிய
ஆயிரம் ரூபா கொடுத்தார்கள்
லட்சுமி அம்மா மாதிரி இருந்த
அந்த மேக்கப் பொண்ணுக்கு
500 ரூபா கொடுத்துட்டு
வீட்டுக்கு கிளம்பிட்டேன்
அடுத்த புதன்கிழமை ஏழரை மணிக்கு
வரும் என்றார்கள்
சீரியல் பார்க்கும் மருமகளிடம்
எப்படி சொல்வது என்று தெரியாமல்
யோசித்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினேன்