Wednesday, June 22, 2011

வால் நட்சத்திரம்...


பிரதான சாலையில் இருந்து அந்த தெருவுக்குள் நுழையும் போதே, பிரதான சாலையின் எந்த பாதிப்புமற்றிருந்தது அந்த தெரு.  மார்கழி மாதத்தின் பிரத்யேக அடையாளங்களாய் தெருவை அடைத்த கோலங்களும், சானிப் பிள்ளையாரும் பூசனிப்பூக்களும் நிரம்பி இருந்தது, சாயங்காலம் ஆகியிருந்தும், கோலங்கள் அப்படியே இருந்தது போல பட்டது.  இந்தத் தெருவுக்கு கிருஷ்ணவேணி வந்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும்.  சென்னையில் பணியில் சேர்வதற்கு முன்னால், கௌசல்யாவிடம் சொல்லிவிட்டு போவதற்காய் வந்திருந்தாள். அதுவும் ஒரு மார்கழி மாதம் தான். மனசுக்கு நெருக்கமான சினேகிதி, தன் ஊரை விட்டு, தன்னை விட்டுப் போவது கௌசல்யாவிற்கு வருத்தமாய் இருந்ததை வேணியால் உணரமுடிந்தது. இறுக்கமாய் கைகளைப் பற்றிக் கொண்டவள், அழுதபடி வார்த்தையின்றி பேசியவை அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. 

இன்று வேணி, தான் வருவதாய், கௌசல்யாவிடம் சொல்லவில்லை. தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு இருந்தவள், தடக்கென்று நிறுத்தியது போலிருந்தது. இன்று போய் நேரே நின்றவுடன் ஆச்சரியத்தில் அவளுக்கு பேச்சே வராது, பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நிற்பாள் என்று தோன்றிய போது, வேணிக்கு சின்னதாய் சிரிப்பு வந்தது.  எந்த கோலத்தையும் மிதித்துவிடாமல், புடவையை ஒரு கையால் லேசாக தூக்கியபடி கவனமாய் வாசல்படிகளையும், கோலங்களையும் கடந்தாள்.

கௌசல்யா பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு வேணியைப் போல விருதுநகருக்கு போய் படிக்க முடியவில்லை என்றாலும், கௌசல்யாவின் இடத்தை வேறு யாராலும், எந்த புது சினேகிதியாலும் நிரப்பமுடியாமலே இருந்தது.  ஒவ்வொரு விடுமுறையின் போதும், ஊருக்கு வந்து விடும் நாட்களை கணக்கில் வைத்துக் கொண்டு, காத்திருப்பாள் வேணிக்காககௌசல்யாவின் வசீகரமான சிரிப்பும், மையிட்ட கண்களும், வார்த்தைகளின் தேவைகளை குறைக்கும்.  அதிகம் பேசும் சினேகிதிகளிடமும், அதிகம் நெருக்கம் காண்பிக்கும் அவர்களின் தொடுதல்களிலும், அந்தரங்க பகிர்வுகளிலும் இல்லாத ஒரு தினுசான நெருக்கமும், வாசமும் அதிகம் பேசாத கௌசல்யாவிடமும், அவளின் உறவிலும் இருந்தது, வேணிக்கே ஆச்சரியமான விஷயம். கௌசல்யா போல வேணிக்கு அத்தனை சிக்கனமாய் வார்த்தைகளை உபயோகிக்க தெரிவதில்லை.

இன்றைக்கு, கௌசல்யாவின் வீட்டு வாசலில் இருந்த கோலத்தில் அத்தனை நுணுக்கங்கள் இல்லாதது மாதிரி தெரிந்தது வேணிக்கு.  கௌஸல்யா போடும் கோலங்களில் எப்போதும் சில விவரங்கள் இருக்கும். புள்ளியில்லாது கோலமிடுவது தான் கௌசல்யாவிற்கு எப்போதும் பிடிக்கும்.  சித்திரங்களில் வருவது போல ஒரு கதையோ அல்லது காட்சிப்பொருளோ அவளின் கோலத்தில் கட்டாயம் இருக்கும். பூக்களும், இலைகளும் இருக்கும் கோலத்தின் இடையே பறவைகளும், யானை, மான் போன்ற உயிரினங்களும் இருக்கும். இன்றைய கோலத்தில் அது மாதிரி எதுவும் இல்லை. வழக்கத்திற்கு மாறாய் இன்றைய கோலத்தில் புள்ளிவைத்து கட்டம் கட்டமாய் புள்ளிகளை இணைத்த கோலமாய் இருந்தது. அழகாய் இருந்தது, செய் நேர்த்தி இருந்தது ஆனால் கற்பனை வீச்சு இல்லாதிருந்தது மாதிரிப்பட்டது.

ஐந்து வாசப்படியுள்ள வீடு அது. சிறு சிறு படிகளின் இருபக்கம் கைப்பிடிச்சுவர்கள் வளைந்து ஒரு சுருள் போல இருக்கும். அதன் தலை மீது தாமரை மொக்கு போல ஒரு குமிழ். சிறுவயதில் இருவரும் அதில் உட்கார்ந்து கொண்டு சறுக்குவது வேணிக்கு ஞாபகம் வந்தது. இப்போது உட்கார்ந்தால் இருவருக்கும் கால்கள் தரையில் தட்டும். கௌசல்யா, வேணியை விட இன்னும் உயரம், அவளின் அப்பா மாதிரி. வீட்டின் முகப்பு சுவரில் இரண்டு பக்கமும் மாடக்குழி போல அமைப்பு இருக்கும். ஒருபக்கம் மட்டும் கொஞ்சம் சரிவாய் கட்டி விட்டதால், அதில் விளக்கு எதுவும் வைப்பதில்லை, வைத்தாலும் நிற்பதில்லை. கார்த்திகை மாதம் மட்டும், இரண்டு மெழுகு விளக்கை ஏற்றி வைப்பார்கள். இப்போது அதில் ஒரு பக்கம் கோபால் பல்பொடியும், இன்னொரு பக்கம் ஒரு உடைந்த கோலிக்குண்டும் இருந்தது.

கதவில் தொங்கிய கனத்த வளையத்தை தூக்கி கதவில் சத்தம் வரத் தட்டினாள். வீட்டின் முகப்பில் எந்தவித மாற்றங்களும் இல்லை.  நிலைவாசலில் பதித்திருக்கும் ஒற்றைச் அங்கு, லேசாய் பொத்தலாகி இருந்தது. இரண்டு பக்க நிலையிலும், மஞ்சள் கலரில் பெயிண்ட் பட்டை போட்டு, சிகப்புக் கலரில் பொட்டு வைத்திருந்தது, அதுவும் பெயிண்ட் போலத் தான் இருந்தது. முன்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மஞ்சளும் குங்குமமும் பட்டையாய் தீற்றி, குங்குமமிடுவார்கள். பெயிண்ட் ஒரு வேலையைக் குறைக்கிறது என்று நினைத்துக் கொண்டே நின்றவள். சத்தம் வராதது கண்டு, கதவைத் தட்டினாள். கதவு எண் எழுதியிருக்கும் கருப்புவட்டத்தின் பக்கத்தில் கொஞ்சம் தொப்பலாய் சத்தம் வரும் என்று ஞாபகம் வர அந்த இடத்தில் திரும்பவும் தட்டினாள்.

வந்ததும் வராததுமா அங்க போயி நிற்கணுமா? என்று அம்மா சொல்லியபோது அவளுக்கு அது உறைக்கவில்லை. எப்போதும் அம்மா அப்படித்தான் சொல்வாள். படிக்கிற காலத்தில் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதும், பையை வீட்டில் விட்டதும், வெளியே வந்து உடனே நூலகவாசலைக் கடந்து கௌசல்யா இருக்கும் தெருவுக்குள் நுழைந்து விடுவாள்.  சில சமயம் அவள் வருவது தெரிந்து, கௌசல்யாவே வேணியின் வீட்டிற்கு வந்து காத்திருப்பாள். அப்போது இந்த நூலகசாலை, பிரதான சாலையாய் மாறியிருக்கவில்லை.  இந்த தார் ரோட்டின் மினுமினுப்பும், தகிப்பும் அப்போது இல்லை. அது மரநிழல் சாலையாய் இருந்தது, சருகுகளை காலில் அளைந்தபடியே இருவரும் கைகோர்த்து நடக்கிற குளிர்விரிப்பாய் இருந்தது.  இப்போது நிறைய மாறிவிட்டது, மரங்கள் வெட்டப்பட்டு அல்லது பிடுங்கப்பட்டு, தார் ரோடு போடப்பட்டிருக்கிறது.  ஆனால் கௌசல்யா இருக்கிற தெருவும், கௌசல்யாவும் தோற்றத்தில் அப்படியே இருப்பார்கள் என்று தோன்றியது.

கதவு திறப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தது, நாதங்கி நீக்கும் சத்தமும், துளைக்குள் சாவியேறும் சத்தமும் கேட்டது.  ஏன் காலையிலேயே பூட்டி விட்டார்கள் என்று தோன்றியது வேணிக்கு. கதவின் பின்புறத்தில், தூர்ந்தபோன கதவுப்பலகையின் பொத்தல்களை மறைக்க, தகடு அடித்திருந்தார்கள் போல, அது கதவு திறக்கையில் ஒரு மாதிரி சத்தமிட்டது.  கதவைத்திறந்தது கௌசல்யா தான்! அதே மாதிரி தான் இருந்தாள், எந்த மாற்றங்களும் இல்லை. அதே புன்னகை, அதே மாதிரி மையிட்ட கண்கள் என்று எந்த மாற்றங்களும் இல்லாமல் இருந்தாள். படக்கென்று கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே வர இழுத்தாள். உள்ளே நுழைந்தவுடன், கதவை சாத்தி திரும்பவும் பூட்டிக் கொண்டாள்.

ஏய்! எப்படி வந்த? உற்சாகத்தில் எந்த குறைவுமின்றி, வேணியின் சிறு சிறு குழப்பங்களுக்கு எந்த அவசியமுமின்றி பேசினாள். பாவாடைத் தாவணியில் இருந்தாள், வீட்டின் உட்கட்டுக்கு போக இருக்கும் உசந்த படிக்கட்டில் உட்காரவைத்து விட்டு, “அடுப்பில கொஞ்சம் வேலை கிடக்கு! வந்திடுதேன்!” என்று உள்ளே நுழைந்தாள். சின்ன பட்டாசால் மாதிரி இருக்கும் உட்கட்டுக்கு முன்னால் இருக்கும் பகுதி, அதை நடை என்றும் சொல்லமுடியாது, பட்டாசால் என்றும் சொல்லமுடியாது.  அங்கு விரிக்கப்பட்டிருந்த சாக்கின் மீது பரத்தியிருந்தது, ஒட்டிய தீப்பெட்டியின் உள்பெட்டிகள். மூலையில் சாத்திவைத்திருந்த தீப்பெட்டி ஒட்டும் பலகைகளும், காய்ச்சிய பசை ஊற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் தட்டுகளும் இருந்தது. இன்று ஏன் யாரும் வேலைக்கு வரவில்லை என்று நினைத்துக் கொண்டாள் வேணி. 

கௌசல்யாவின் அப்பா தீப்பெட்டி ஆபிசில் வேலை பார்ப்பதால், மொத்தமாய் கட்டுகள் வாங்கி, தன் வீட்டில் பிற பெண் பிள்ளைகளை வேலைக்கு வைத்து கொஞ்சம் சில்லறை சேர்ப்பதுண்டு. இன்று வேலை குறைவாய் இருக்க வேண்டும் அல்லது விடுமுறையாய் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

மயில்கழுத்தின் நிறத்தில் பாவாடையும், பச்சைக்கலர் தாவணியும் அணிந்திருந்தாள் கௌசல்யா. சலங்கை மணி குறைந்த கொலுசின் சத்தத்துடன், கையில் காப்பி டபராவும் கொண்டு வந்தாள். 

“இந்தாடி காப்பி குடி!, கருப்பட்டி காப்பி உனக்கு பிடிக்குமே!” என்று மணக்க மணக்க நீட்டினாள்.

தம்ளரை மட்டும் எடுக்க கை நீட்டியவளை, “டபராவப்பிடி பொசுக்கிடப் போவுது! என்று எச்சரித்தபடியே சிரித்தாள். வசீகரமான சிரிப்பு அது. வேணியின் பணியிடம் பற்றியும், அங்கு வேலை பார்க்கும் நபர்கள் பற்றியும் அதிகம் கேள்விகள் கேட்டாள். அவளே தன் யூகங்களையும், ஆண் சினேகிதர்களைப் பற்றிய அணுமானங்களையும் முன் வைத்தாள். வேணி சிரித்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். வீட்டில் யாருமில்லாதது அப்போது தான் உரைத்தது வேணிக்கு.

”என்ன யாரையுங்காணோம் வீட்ல? எங்கயாவது ஊருக்கு எதுக்கும் போயிட்டாய்ங்களா?” உந்தம்பியக்கூட காணம்?” என்று உட்கட்டில் எட்டிப் பார்த்தாள் வேணி.

”இப்போதான் எல்லாங்கிளம்பி காரியாபட்டி வர போயிருக்காய்ங்க!” காரணம் என்னண்டு தெரியுமா? என்று சொல்லியபடியே வேணி கட்டியிருந்த புடவையைத் தொட்டுப் பார்த்தாள்.

“என்ன, உனக்கு கல்யாண விஷயமா பேசப்போயிருப்பாய்ங்க!, இது கூட கண்டுபிடிக்க முடியாதா என்னால?” என்று அவளை இழுத்து தன்னருகே உட்கார வைத்துக் கொண்டாள். 
”போட்டா ஏதும் பாத்தியா, காமிச்சாய்ங்களா? இல்ல, உங்கப்பா நாஞ்சொல்ற மாப்பிள்ளையத்தேன் மறுபேச்சு ஏதும் கேக்காமக் கட்டணும்னு சொல்லிட்டாரா?” சென்னையில், பணியிடத்தில், பேசும் தமிழில் ஒரு நாசுக்கு இருந்தாலும், ஊருக்கு வரும்போது, அதுவும், கௌசல்யாவைப் பார்க்கும் போது பழைய பேச்சு வந்துவிடுகிறது என்று நினைத்துக் கொண்டாள் வேணி.

போட்டோ பற்றிய கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை கௌசல்யா. பேசாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். “உன்னைய மாதிரி படிச்சுட்டு, வேலைக்குப் போயிருந்தா, போங்கடா மயிருகளான்னுட்டு போயிட்டே இருக்கலாம்! ஆனா படிக்காம போயிட்டேனே! தேவையானது என்னன்னு தெரிஞ்சாலும், அதைக் கேக்குறதுக்கும், செய்றதுக்கும் தயக்கமாவே இருக்கு!” என்று கௌசல்யா பேசும்போது ஒரு உறுதியும், மெல்லிய கோபமும் இருந்தது போல இருந்தது வேணிக்கு. அவள் பேசும்போது அவள் கண்கள் நிலைகுத்தி ஒரே இடத்தை வெறித்தபடி இருந்ததை காணமுடிந்தது.

நிறைய மாற்றங்கள் இருந்தது அவளிடம். மேலே பார்த்துக் கொண்டு நிலா, நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பது போல இருப்பவள், இப்போது திடமாய், திட்டமாய் பேசுவது போல பட்டது வேணிக்கு. இந்தக் கல்யாணத்தில் அவளுக்கு துளியும் விருப்பமில்லாதது போல தெரிந்தது. அப்படி அவள் விருப்பு, வெறுப்புகளை இவளிடம் பெரிதாக பேசிக் கொண்டதும் இல்லை. ஆனால் எப்போதும் குறைவாக பேசுபவள், இப்போது நிறைய பேசுவது போலபட்டது.

அவளே தொடர்ந்து, “ உனக்கு ஞாபகம் இருக்கு, தனபால்னு? முன்னாடி லைப்ரரிக்கு, எதுத்தாப்ல சைக்கிள்கடை வச்சிருந்தார்ல! என்று வேணியின் ஆமோதிப்புக்கோ அல்லது நினைவுபடுத்துதலுக்கோ கொஞ்சம் நேரம் கொடுத்து இடைவெளிவிட்டவள், அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.

வேணிக்கு, தனபாலை ஞாபகம் இருந்தது, மாட்டாஸ்பத்திரி பக்கத்துல தான் அவன் வீடும் இருந்தது. ஆனால் சைக்கிள் கடை வைத்திருந்தது போல ஞாபகம் இல்லை. முகத்தையும் அவளால் சரியாக ஞாபகத்துக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனாலும், கௌசல்யா அவனைப் பற்றி பேசவேண்டிய காரணம் என்ன என்பது அவளுக்கு அரைகுறையாய் புரிவது போல இருந்தது.  வேணி லைப்ரரி மாடியில் இருந்த தையல் கிளாஸுக்குப் போனது, இவளுக்கு, கைக்குட்டைகளும், நைட்டிகளும் தைத்துக் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வந்தது.  அவள் தையல் கிளாஸ் போனதும், தனபாலை பார்க்கத்தானோ? அவனைத் தான் நேசிக்கிறாளோ? அதனால் தான் படிக்கவில்லை, தன்னை போல வேலை பார்க்கமுடியவில்லை என்ற கழிவிரக்கம் வருகிறதோ என்று தோன்றியது அவளுக்கு.

”என்னடி அவனை லவ் பண்றியா? என்கிட்ட இதுவரைக்கும் இதப்பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லை” என்று அவள் தொடையில் அழுத்தமாய்க் கிள்ளினாள்.
”தனபாலையா?  நானா? எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு! அந்தாளுக்கு அவங்க அத்தை மகளுக்கும் கல்யாணமாகிடுச்சு, சீக்கு வந்த கோழி கணக்கா இருப்பா! அந்தாளக் கண்டாலே எனக்குப் பாவமாத்தான் இருக்கும், அதச் சொல்லவந்தா! நீ வேற ஏதோ கற்பனை பண்ற!” என்று கௌசல்யா அடியோடு மறுக்க, வேணிக்கு சங்கடமாகிவிட்டது, என்ன அபத்தமாய் யோசிக்கிறோம்! என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

“அப்புறம் எதுக்குடி, சைக்கிள் கடை தனபாலுன்னு இழுத்த, சம்பந்தமில்லாம?” என்று உண்மை அறியும் ஆவலுடன் கேட்டாள் வேணி.

”இல்ல! அந்த தனபாலு இப்போ, விருதுநகர்ல சொந்தமா பலசரக்குக் கடை வச்சிருக்காப்லயாம்! நல்ல வரும்படியாம்! நேத்து இங்க வந்த சேலைக்கார மாரியப்பன் அண்ணேந்தான் சொல்லுச்சு! இங்க வர்றதே இல்லையாம்” என்று ஒரு செய்தி சொல்வது போல கூறினாள்.

வேணி அவளின் கண்களை பார்க்க, தடக்கென்று எழுந்தாள் கௌசல்யா, “இரு! கடலை அவிக்கப் போடறன், வெல்லமும் இருக்கு, கொஞ்சம் திண்ணுட்டுப் போ!” என்று சமையக்கட்டுக்குள் நுழைந்தாள்.

கடலையை அடுப்பில் ஏற்றிவிட்டு, திரும்பவும் வந்து வேணியுடன் அமர்ந்து கொண்டாள். 

வேணியின் கைகளை பிடித்துக் கொண்டு, தன் ஆசைகளை, கனவுகளை, கணக்குகளைப் பற்றி நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள்.  அவித்த கடலையை ஒரு சொளகிலும், வெல்லத்தை ஒரு தட்டிலும் கொண்டு வந்து வைத்தாள். அவித்த கடலையின் மணம் இருவருக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது மாதிரி இருந்தது. மழை பெய்தால், நன்றாக இருக்குமென்று வேணிக்குத் தோன்றியது.

கொஞ்சம் நேரம் பேசியிருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினாள் வேணி. வாசலில் நின்று கொண்டு வேணி போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள், அவள் தெருமுக்கு திரும்பியதும் உள்ளே நுழைந்தாள். முகத்தைக் கழுவிக் கொண்டு, நிலைக்கண்ணாடியில் தன்னை நின்றபடியே கவனித்து, திருத்திக் கொண்டாள். பாவாடைத்தாவணியைக் களைந்து புடவையை அணிந்து கொண்டாள்.

பீரோவின் மீது வைத்திருந்த பேக்கில் சில புடவைகளையும் துணிமணிகளையும், மூணு பவுன் செயினை மட்டும் எடுத்து அடுக்கி வைத்தாள்.



பிறந்த நாள் வாழ்த்து...


அழுந்திப் பிடித்த மோதிர வளையம்
விட்டுச்செல்லும் தடயத்துனூடாய்
பயனிக்கிறது நமக்கான காதல் பெருவாழ்வு
வருடங்கள் கீறிவிட்டுப் போன காலத்தில்
பிரதிபலிக்கிறது தெளிவான நம்முகங்கள்
கழுவிக் களையமுடியாத குணத்தைலத்தை
உடலெங்கும் பூசித்திரியும் பித்து
விரிக்கும் வர்ணங்கள் பரத்தும் களிச்சித்திரம்
நம் வெளியெங்கும் வழிந்து சிரிக்கும்
மாயக்கம்பளத்தின்  நுழைவாயிலில்
அரூவமாகும் நமது உடல்கள் கசிந்து கலக்கும்
உயிர் மட்டும் மிச்சமாகும் அடரிரவுகளில்
வார்த்தைகள் எரித்து குளிர்காய்வோம் நாம்
பார்வை தொடுமிடங்களில் குளிர்பூக்களும்
விரல்கள் தொடுமிடங்களில் அனல் பூக்களும்
பூக்கும் விசித்திரவனத்தில்
கால்கள் பாவாமல் சிலநேரம்
தரை ஊன்றி சிலநேரம் உலவுகிறோம்
வெளிச்ச ஜன்னலில் கருந்துளைக்காகம்
கரைய விடிந்த பொழுதில்
உனக்கான வாழ்த்தை எப்படி எழுதுவது
என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

நான் என் மனைவியின் பிறந்த நாளுக்கு எழுதிய கவிதையை, என் ப்ரிய தோழி அம்பை மொழிபெயர்த்தது, நீங்கள் கீழே காண்பது...

Our love moves through the impressions
Left by the tight wedding ring
Our faces reflect the indelible marks left by time
Mad we are
Smearing ourselves with the oil of our qualities that cannot be washed off
That madness spreading colours, joyful pictures
Spilling all over our space joyfully stretching into a magic carpet
Our bodies become formless when we touch it
In those deep nights
A liquid mingling
With only our life intact
We warm ourselves in the fire of words
Where the eyes touch, cool flowers
Where fingers touch, fire flowers
A strange garden we walk in
With flying feet at times
And at times with feet firm on the ground
The day dawned with the black raven calling from the window full of light
And I wonder how to word my greetings for you on this day.