Monday, November 29, 2010

கோடையின் ஆற்றுப்படுகை...

எலே! கிடைக்கு ரெண்டு சாத்துங்கலே புளிய மிளாற எடுத்துக்குட்டு... என்று உள்ளே உக்காந்திருந்த அமராவையும், அம்மாவையும் பார்த்துச் சொன்னார் அப்பா. இருக்கிற சோலிக்கழுதய விட்டுப்போட்டு...ஊரு சுத்திக்கிட்டுத் திரியற... மடத்தாயோளி! ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகியிருந்தா ஆருலே பதில் சொல்லுதது... அரைக்காசு புத்தியாவது இருக்காலே... என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்தப்பக்கம் பொயிருப்ப... அதுலயும் சோடி போட்டுக்கிட்டு... சோடி... தீப்பெட்டி ஆபீஸ்க்காரரு மகனோட... அதல்லாம் ஒரு பிள்ளையா, அவென் செம்பட்டத் தலையும் ஆளும், அதப்பாத்தாலே தெரிய வாணாம்... வீட்டுக்கு அடங்காத பிள்ளை அதுன்னு... அவென் ஒனக்கு சேக்காளியாடே... பல்லக்கடிச்சுட்டு அவென் தலை மயித்த பிடிச்சு ஆட்டுதாரு அப்பா... சின்னக்கடை வீதிலருந்து வாரேன்... மைனர் கணக்கா முக்குல நின்னுட்டு பீடி பிடிக்கான்...தறுதலப்பய...அவென், அவனோட சுத்தறான் இவன்...காலிப்பய... பன்னியோட சேர்ந்தா பீதான் திம்ப... அடங்காத பய... மேலுக்கும் கீழுக்குமாய் நின்றார் உத்தரம் தாண்டி.

வஞ்சு கொண்டே அவனை அடித்தும் கொண்டிருந்தார், மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க கையில் பிடித்திருந்த புளியங்குச்சில விடாம...சளைக்காம வாங்கிக் கொண்டிருந்தான்... ராமரு. பாதி அடி சுவத்திலயும் தரையிலயும் விழுந்தாலும் அவெங் கத்துற கத்துல எதுத்த வீடு பக்கத்து வீடுல தீப்பெட்டி ஒட்டிக்கிட்டிருக்கிற பிள்ளைகெல்லாம் வந்து நின்னு வேடிக்கை பாத்துக்கிட்டிருக்க, அது ராமருக்கு மேலும் அவமானமாகி மேலும் சத்தமாய் அழுதான்... ஒரு கையால் டவுசரை பிடித்துக் கொண்டே, மூக்கிலிருந்து ஒழுகிக்கொண்டிருந்த சளியை இடது புறங்கையால் இழுவிக் கொண்டே... பட்டாசால் போட்டிருந்த மரபீரோவுக்கும் சுவற்றுக்கும் அணைவில் ஒடுங்கினான்...இந்தளவுக்கு ஏன் அடிக்கணும் இவனை என்று அமராவுக்கு புரியவில்லை.

தடுக்கப் போனா தனக்கும் உதை விழும் என்பது நிச்சயம்... ஆனா ராமர இவ்வளவு அடிச்சதில்ல அவரு... வேற எங்கியோ இருக்க கோவத்தை இங்க காட்டுறா மாதிரி தான் இருக்கு... ஆனாலும் கேக்க பயமாய் இருக்கு... அமராவிடம் அன்பாய் தான் இருப்பார், கோவத்தில என்ன பண்ணுவார்னு யாருக்குத் தெரியும். அம்மாவுக்கு பொங்கி பொங்கி வந்தது, அடுப்பங்கரைக்கும், பட்டாசாலுக்கு வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தாள், கையில் பருப்புக் கடையும் மத்தும் இருந்தது... பருப்பு மத்த கோபமாய் ஆட்டிக்கொண்டே, இந்தா போதும் இவன கொன்னு குழில தள்ளுனது... என்று அப்பாவின் கையில் இருந்த புளியமிளாற இன்னொரு கையால் ஆவேசமாய் பிடுங்கிக்கொண்டே வஞ்சாள் அம்மா... அம்மாவுக்கு... ராமரின் மேல் அத்தனை பிரியம்... ரெண்டும் பொண்ணா போயிட்டதாலே... கடைசிக் கொழுந்தா வந்த பய எல்லாத்திலயும் உசத்தி அம்மாவுக்கு.

இந்த மனுஷனுக்கு கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கா... என் ஈரக்குலைய உருவிப்போட்டிருக்கலாம், ஒத்த ஆம்பிள புள்ளை தவமா தவமிருந்து பெத்துட்டு... போட்டு வதைக்காரு... இவ்வளவு அடி வாங்குதானே...என்ன பண்ணான் இந்த பயன்னு தெரியுமா... ஒரு மண்ணும் இல்லை... கொலைக்குத்தம் பண்ணாப்ல... ஆம்பிளப்பிள்ளை இது கூட செய்யாதா, யாருமே  செய்யாததையா செஞ்சுபுட்டான். இந்தாளு சின்ன வயசுல பண்ணாத அலும்பா, ஆடாத ஆட்டமா... இவுக ஆத்தா எம்புட்டு பட்டிருக்கும்... இவன் பண்ணதப்போயி குத்தம்ண்ட்டு என்னமோ தேவையில்லாம திங்கு திங்குன்னு குதிக்காரு... பேசாம பிள்ளைகளக் கூட்டிட்டு ஆத்தா இருக்கு, அண்ணங்காரன் இருக்கான்னு எங்கேயாவது போயி நிம்மதியா இருந்து தொலையலாம்னா, அதுக்கும் நாதியத்து தானே... இங்கேயே கெடந்து அல்லாடுறோம்... அம்மா இப்படி பேசினாலும் அப்பாவை விட்டு எங்கேயும் போகாது... என்று அமராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும்.



தீவாளி முடிஞ்சும் விடாத அடமழையா கார்த்திக பொறந்தும் பெய்ஞ்ச மழல... பத்து வருஷத்து பிற்பாடு இப்பத்தான் திருமுக்குளத்துக்கு தண்ணி வந்திருக்கு... பெரிய குளம் கம்மாயும் நெறஞ்சு போச்சு போல... அதப்பாக்க கூட்டாளிக்கள்லாம் கூப்பிட்ட உடனே பயலுக்கு ஆசை வந்து தொத்தியிருக்கான். அவென் நேரம் கூட வந்த சின்னத்தாயி பய... அதான் அந்த சின்னவன்... அவனும் கூட பொயிருக்கான்... எல்லாம் சேந்து தான் விளாடிட்டு இருந்திருக்காஹ... அந்த பயலுக்கு நீச்ச தெரியாததால்.. இவங்க டின்ல சைக்கிள் டியுப்ப கட்டி நான் கத்து தாரேன் நீ கத்து தாரேன்னு அவனுக்கு கத்து குடுக்க, கூட இருந்த யாரோ ஒரு பய உள்ள தள்ளி விட்டுட்டானாட்டமா இருக்கு... டியுப் கழண்டு போயி... பய தடவி தடவி உள்ள போயிட்டிருக்கான்... விளாட்டு மும்முரத்துல இந்த பயலுக யாரும் பாக்கல... நம்ம சோலமல நாயினா பொண்ணு பெரியவ தான் பாத்து, மயித்தப் பிடிச்சு தூக்கியாந்திருக்கா... இத இந்த மனுஷன்கிட்ட யாரோ சொல்லிட்டாக அது தான் சாமி வந்து ஆடுறாரு... என்று பக்கத்து வீட்டிலிருந்து வேடிக்க பாக்க வந்தா டெய்லர் அக்காவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.

அப்பா ஒருவழியா தம்பிய அடிக்கிறத நிப்பாட்டி அமராவும், பவுனும் ஒக்காந்திருக்கிற முன் நடைப்பக்கம் பார்த்தார். ஏலே பவுனு இங்க வா... போய் ஒரு சொம்புல தண்ணியக் கொண்டா...இந்த பயல கத்தி கத்தி என் தொண்டத்தண்ணி தான் வத்திப்போச்சு... எவ்வளவு அடிச்சாலும் இவன் உருப்படப்போறதில்ல... எல்லாத்தியும் ஒக்காந்து புள்ளய சிங்காரிச்சு சீரழிக்க இருக்காளே ஒங்க ஆத்தா... போதும் விளங்கிடுவான்... என்று அங்கிருந்த மரத்தூணில் சாய்ந்து கொண்டு... எத்தனை கொட்டான்டி போட்ருக்கீக என்று தண்ணிச்சொம்பு கொண்டு வந்தவளிடம் கேட்டார்.... பன்னெண்டு முடிஞ்சுப் போச்சுப்பா என்றாள் பவுனும். அமராவும், பவுனும் வயதுக்கு வந்தவுடன் பள்ளிக்கூடம் போக வேணாம்னுட்டார் அப்பா. அதிலும் அமரா ஏழாவது படிக்கையில வயசுக்கு வந்தா, சின்னவ இன்னும் சீக்கிரமா... ஆறாவது படிக்கையிலேயே வயசுக்கு வந்துட்டா... தலைல தண்ணிய ஊத்தி... போதுந்தாயிகளா நீங்க பள்ளிக்கூடம் போனது என்று வீட்டிலே இருக்க வைத்து விட்டார்.

சின்னவ பவுனுக்கு படிக்காமல் போனது சந்தோஷம் தான். அமராவதிக்கு தான் படிக்க கொள்ள ஆசை... ஒரு புஸ்தகம் விட மாட்டா... ராமகிருஷ்ண அண்ணன்ட்ட சொல்லி லெனின் வாசகப்பேரவையில இருந்து எல்லாம் புஸ்தகங்களையும் கொண்டு வரச்சொல்லி படிச்சுடுவா... சின்னவ பவுனுக்கு சினிமா நடிகர், நடிகைகளைப்பத்தின கதையும், கிசுகிசுவும் மட்டும் போதும்... ரெண்டு பிள்ளகளும், வீட்ல ஒக்காந்து தீப்பெட்டி ஒட்டுறது தான்... பக்கத்து வீட்ல இருந்து வார பிள்ளகளும், வரிசையா பலகைய போட்டுக்கிட்டு... சினிமாக்கதை, ஊர்ப்பொரனின்னு பேசிட்டே ஒட்டுவது, வாரமானா போய் தீப்பெட்டி ஆபீஸில போய் மொத்தத்தையும் போட்டு காசு வாங்குறது தான் பொழுது போக்கு வருமானம், எல்லாம். அப்பாவுக்கு வருமானம் குறைவா இருக்கும்போது... அமராவும், பவுனும் தீப்பெட்டி ஒட்டிய காசில் தான் சாப்பாடும், மத்தசெலவும்... பவுனுக்குத் தான் வருத்தம்... சினிமாவுக்கு அம்மாவிடம் காசு வாங்குவது அந்த வாரம் கெட்டுப்போகும்... மேத்தீனிக்கு காசு இருக்காது... அமராவுக்கு அதைப்பற்றிய வருத்தம் ஏதுமில்லை.

வாரத்துக்கொருமுறை கணபதி டாக்கீஸ் அல்லது ஜெயகிருஷ்ணால போடற ஏதோ ஒரு படத்தைப் பார்க்க போயிடுவா... அம்மாவுக்கு தெரியாமல் அடைக்கும் பெட்டிக்கணக்காய் தனியாய் பிரித்து விடுவாள், அதுதான் அவளுக்கு மேத்தீனியும், சிலசமயம் அவளோட சேக்காளி பங்காரம்மாவுக்கு சினிமா டிக்கெட்டுக்கும். அமராவதிக்கு சினிமா போக விருப்பமில்லை என்பதால்... புஸ்தகமும், சாந்தி அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்தால் மட்டுமே போதும் எப்போதும்... சாந்தி அக்காவுக்கு முப்பத்திரண்டு வயசாச்சு... இன்னும் கல்யாணம் ஆகலை... எல்லாக்கதையும் பேசும் சினிமா பத்தி, அரசியல் பத்தி, நாவல் பத்தின்னு... அக்காவுக்கு ராமகிருஷ்ணன் அண்ணன்னா ரொம்ப பிடிக்கும்... எப்பப் பார்த்தாலும், அண்ணனப்பத்தி தான் கேக்கும்... அண்ணன் குடுக்கிற புஸ்தகமெல்லாம் படிச்சு... அதப்பத்தி நிறைய பேசும்... சாந்தி அக்கா படிச்சு முடிச்ச புஸ்தகத்திற்க்குன்னு ஒரு அடையாளம் இருக்கும்... ஏதாவது ஒரு பக்கத்தில் பென்சிலில் சின்ன சின்ன இலைமாதிரி போட்டு... பூவரைந்திருக்கும்... ராமகிருஷ்ணன் அண்ணனுக்கு அது பிடிக்காது... சத்தம் போடும்...வாசகப்பேரவையில வைவதாய்ச் சொல்லும், அக்காவிடம் சொன்னா... எங்கிட்ட சொல்லச்சொல்லு அமரா... எங்கிட்ட பேச பயம் என்று லேசாக்கண்ணடிக்கும் அக்கா, அது பார்க்க நல்லாயிருக்கும்.

அப்பா, அமரா என்று கூப்பிட யோசனை அறுபட்டு என்னப்பா என்றவளை, மகராசி கொஞ்சம் தலைய பிடிச்சு விடு தாயீ!... மண்டையடி தாங்க முடியலை... என்று தலையப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்... அமராவுக்கு அப்பாவ பாக்கவும் கஷ்டமா இருந்துச்சு... தம்பி இப்ப அழுது ஓய்ஞ்சு அடுப்பங்கரையிலேயே ஒக்காந்து பருப்பு சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தொட்டுக்க அப்பா வாங்கி வந்த வெங்காய பக்கோடாவும் இருந்தது... அப்பாவுக்கு தங்கவேலை பார்க்க சுத்தமாத் தெரியாது, தாத்தாகிட்ட குண்டிய அமுக்கிகிட்டு ஒழுங்கா இருந்திருந்தா வேலை கத்திட்டிருக்கலாம்... அதவிட்டுட்டு வயசுல எல்லாம் ஊர்ல அடிக்கிற வெயிலெல்லாம் இந்தாளு மேல காய ஊரச்சுத்திட்டு, இப்ப நம்ம பொழப்பே ஒக்குட மாட்டாமக் கிடக்கு என்று அம்மா புலம்புவாள். ஏதோ என் புள்ளக இருக்கங்கண்டி இந்த மனுஷன் கொண்டு வந்து கொடுக்குறது பத்தாமப் போனாக்கூட அவளுக காசுல மிச்சம் வச்சு பொங்கி போடறதாலே அய்யா பொழப்பு மணத்து போயி கிடக்கு... என்பாள் அம்மா.

அப்பாவிற்கு ஒரே மாதிரி எல்லா நேரத்திலும் காசு வருவதில்லை. நகை வேலை தெரியாததால பழைய தங்கத்த வாங்கி அத மூசு போட்டு... கடையிலேயே அல்லது பட்டறையிலேயே கைமாத்தி விடுற வேலை பாக்காரு... புரோக்கர் மாதிரி... எப்பப் பார்த்தாலும், நல்லா வெள்ள வேஷ்டி கட்டிக்கிட்டு கழுத்துல ஒரு கர்சீப் போட்டுக்கிட்டு... ஒரு மஞ்சப்பையில் சுத்தின மாதிரி ஒரு சின்ன நோட் இதுல தான் எல்லா வரவு செலவையும் கணக்கு வச்சுப்பாரு... இன்னைக்கு அப்பாவுக்கு பணம் தரவேண்டிய கிராக்கி யாராவது கொடுக்காம போயிருக்கலாம் அல்லது எந்த கிராக்கியுமே கிடைக்காம போயிருக்கலாம் என்று தோன்றியது அமராவுக்கு. இந்த மாதிரி கோபம் வரும்போதெல்லாம் அப்பா இப்படி தான் சம்பந்தமில்லாம கோபப்படுறது, அமராவைத் தவிர... என்னவென்று அப்பாவிடம் கேட்கவும் பயம், தலையை லேசாத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள்... அம்மா தேங்காய் எண்ணெய லேசா சூடுபண்ணி அதுல ரெண்டு சூடத்தை போட்டு கொண்டு வந்தா... இந்தாடீ உங்கப்பனுக்கு இதப்போட்டு தேயீ என்று அடுப்பங்கரைக்குள் போயிவிட்டாள். தலைய அமுக்கும் அமராவின் கைகளை பிடித்த போது அப்பாவுக்கு அழுகை வந்தது, தேம்பி தேம்பி அழத் தொடங்கினார், ராமரு அங்கே இருந்து அப்பாவிடம்... நான் இனிமே எங்கேயும் போகமாட்டேன்பா... என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

Friday, November 26, 2010

ரௌத்ரம் ரௌத்ராத்மகம்...

ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின் நட்பில் கட்டிய திரைச்சீலைகள் இன்னும் தோரணமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசுக்குள். சில உறவுகளில் இருக்கும் இந்த பிசுக்கு எப்போதும் போவதில்லை... நல்லா கழுவி, புதிது போல சுன்னாம்பு அடித்து வைத்திருந்தாலும், யாராவது மெதுவாய் சாய அல்லது கை வைக்க பொல பொலவென தோலுதிர்த்து, உள்ளே இருக்கும் பிசுக்கை காட்டிக் கொடுத்துவிடுகிறது.


அவளுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது, கணவன் அரசு ஆஸ்பத்திரியில் கெமிஸ்டாக வேலைப்பார்த்ததாக அம்மா சொன்ன ஞாபகம் வந்தது, அவன் ஜெயந்தியின் மீது சந்தேகப்பட்டு தற்கொலை செய்து கொண்டது மிக சமீபத்தில் தான் நிகழ்ந்தது, அனேகமாய் ஒரு வருடத்திற்குள். பொட்டாசியம் சயனைடு பியரில் கலந்து குடிக்க, சுலபமாய் இறந்து போய் விட்டான். ஜெயந்தியின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததாகவும், அவனை மதிப்பதே இல்லை, மினுக்கிகிட்டு அலையுறா, அதான் இவ ஆட்டத்தையெல்லாம் பாக்க முடியாமா போய் சேர்ந்துட்டான், அதோடு நிற்காமல் ஜெயந்தி தான் அவனை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறாள் என்று புகாராய் சொல்லப்பட்டது. ஜெயந்தியை போலீஸ் அலைக்கழித்து விட்டது சிறிது நாட்கள் விசாரணை செய்யவேண்டும் என்று. ஜெயராம் நாயுடு தான் எப்படியோ தனக்கு தெரிஞ்ச சப்-இன்ஸ்பெக்டர வச்சு பிரச்னைய சுமூகமா முடிச்சாரு. திருமணமான பின்னான சிநேகிதிகளின் துக்கங்களை வேடிக்கை பார்ப்பதும், கேள்விப்பட்டு இரண்டு துளி கண்னீர் அல்லது உதடு குவித்து எழுப்பும் சத்தம் மட்டும் தான் மிஞ்சுகிறது.

வாசுவின் பெரியம்மாவும், தன்னுடைய பெரிய அத்தையுமான செல்லத்தாயி அம்மாவை பாத்துக்க தான் வந்திருக்கா ஜெயந்தி. சமீபத்தில் தான் அக்குளிலும், தோள் பகுதியிலும் சிறு சிறு கட்டிகள் இருக்க... எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்ததில் மார்பக புற்று நோய் என்று தெரிந்ததில் உடைந்து போனது மனசு. பெரியம்மாவிற்கு இடது மார்பகத்தையும், பின் வலதையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க, எதுக்கு இந்த கருமம்னே எனக்கு தெரியல குமாரி இன்ன வரை, புள்ளையவா பெத்தேன்... இதுனால பிரயோசனம் ஏதும் உண்டா...காரணமே இல்லாம நான் எதுக்கு பொண்ணா பிறக்கனும் குமாரி... என்னத்துக்குன்னே தெரியாத, அறுத்து போட்டாச்சு வாழ்க்கையவே... என்று கண்ணீர் விடும் செல்லத்தாயி பெரியம்மாவின் துக்கங்கள் அம்மாவின் மூலமாக தான் வாசுவுக்கு தெரிய வரும்.

செல்லத்தாயி பெரியம்மாவுக்கு கூடமாட இருந்து வேலை பாக்கத்தான் ஜெயந்தி வந்திருந்தா. ஆனா பெரியம்மாவிடம் பேசுவதே இல்லை போலும் அவள். பெரியம்மாவுக்கு பேச்சுத் துனைக்கு யாருமில்லை, வாசுவின் அப்பாவும் சொந்த வீடு கட்டி போய் விட்டதால்... இருந்த ஒரு சினேகமும் போனது பெரியம்மாவுக்கு... வீட்டு வேலையெல்லாம் சளைக்காம செய்தாலும், ஜெயந்திக்கு பழைய படி கலகலப் பேச்சு இல்லை. அவளின் குழந்தைகளை பாட்டி வீட்டில விட்டுட்டு இங்க அவளின் அண்ணன் தாமு கொண்டு வந்து விட்ருக்கான். ஏதும் பேசமாட்டேங்கா.. ஏதோ பித்துப்பிடிச்சா மாதிரி இருக்காடா இப்பெல்லாம், சுட்சு போட்டா மாதிரி... பம்பரமா வேல பாக்குறா, அதுல ஒரு சொனக்கம் இல்ல... பதவிசா எல்லா வேலையும் பாக்குறதில ஒரு குறை இல்லை... எல்லாத்துக்கும் கணக்கு வச்சிருக்கா... இட்லிய பூப்போல அவிக்கா, அளவா அரிசி போடுதா... சோறு வடிக்கா... இருக்கிற காய்கறில ஏதோ வதக்கலோ, பொரியலோ பண்ணி போட்டுடுதா... உனக்கு பிடிக்கிற நெய் கத்திரிக்காய் கூட அதே பக்குவத்தில வச்சுடறா, சமைக்கிறதுல, வீட ஒதுக்குறதில, பத்து தேய்க்கிறதுலன்னு ஒரு சோடை சொல்ல ஆவாது... ஆனா பாரு... சாயந்திரத்துக்கு மேல ஏதோ விளக்க ஏத்திட்டு ஒரே திக்கப் பாத்து ஒக்காந்துக்கறாளாம்.... யாரு கூடயும் நடயில வந்து பேசுறது கிடையாதாம், பெரியம்மாவிடம் சுத்தமா பேசுவதே இல்லையாம்டா...

உனக்கு ஞாபகம் இருக்கா? எப்படி இருப்பா? பளிச்சுன்னு, நம்ம மாடக்குழில கார்த்திகைக்கு பிடிக்கிற விளக்கு மாதிரி... எல்லாம் போச்சு... ஒரு சோபையே இல்லையாம் இப்போ... அவ புருஷன் போன கொஞ்ச நாள்ல எல்லாம் ரூமுக்குள்ள போயி கதவ மூடிக்கிட்டு, கொஞ்ச நேரஞ்செண்டு நல்லா சிங்காரிச்சுட்டு வருவாளாம்... என்னன்னு யாராவது கேட்டா, அவரு தான் ரெடியா இருக்க சொன்னாருன்னு சொல்வாளாம்... ஏதோ காத்து கருப்பு புகுந்திருச்சுன்னு நினச்சு அவள படாத பாடு படுத்திட்டாக, அவுக வீட்ல. இப்போ தான் மூனு மாசமா தேவலாம்னு சொல்லிட்டுருக்காங்க என்ற அம்மாவின் கதைகள் ஏதோ விட்டுவிட்டு கேட்டது போல இருந்தது வாசுவுக்கு... அவள் பள்ளிக்கு கிளம்பும் போது... ரெட்டை சடை போட்டுக் கொண்டு, முழுப்பாவாடை சட்டை தான் போடுவா அப்பமே... பெரிய மனுஷி... என்று சடை பிண்ண வருபவளை நொக்குவாள் தலையில் வாசுவின் அம்மா... வாசு சாப்பிடும்போதே அவளும் தட்டைத் தூக்கிட்டு வந்துடுவா, அத்த கொஞ்ச மொளகா சட்னி கொடுங்க அத்தைன்னு...

ஜெயந்தி எப்போதும் அவளின் அம்மா அப்பா வீட்டிற்கு போவதே இல்லை, இரண்டு அத்தை வீட்டிலும் தான் வளர்ந்தாள், திருவிழா சமயங்களில் மாத்திரம் எல்லோரும் போலே வாசுவின் குடும்பத்தோடு எதிர்சேவை, அல்லது பூப்பல்லாக்கு பார்க்க வருவதோடு சரி, அவளை யாரும் அங்கு எதிர்பார்ப்பது இல்லை... வாசுவின் வீட்டோடு தான் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பாள். ஜெயந்திக்கு வாசு அவளைத் தவிர, முத்தையா ஆசாரியின் மகள்களுடன் பேசினால், கா விட்டுடுவாள், அதை பழமாய் மாற்ற, அவளுக்கு கமர்கட்டும், தங்கராசு அண்ணே கடையில இருக்கும் பல்லிமிட்டாயும் வாங்கித் தரவேண்டும்... அப்பாவிடம் ஜெயந்திக்குன்னு காசு கேட்டா கொடுத்துடுவாரு... அப்பாவிற்கு ஜெயந்திமேல அவ்வளவு பாசம்...எப்பப் பார்த்தாலும், மடியில் ஒக்காந்து, மாமா ஒரு அந்த புறாக்கதை சொல்லுங்க மாமா என்று மூஞ்ச சுருக்கி, கண்ண இடுக்கி கேட்கும்போது அப்பா எந்த வேலையிருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு சொன்ன கதையவே சொல்லிட்டு இருப்பார்... அவனுக்கு அம்மாவின் சம்பாஷனைகளை தாண்டி ஜெயந்தியுடனான நாட்கள் சித்திரங்களாய் வந்து கொண்டிருந்தது.

வாசுவுக்கும், ஜெயந்திக்கும் வீட்டில் வந்து விழும் பாலமித்ரா, அம்புலிமாமா படிக்க போட்டியே நடக்கும்... சித்திரக்கதை தொடங்கி, வீரப்பிரதாபன் கதைகளையும் தாண்டி குமுதம், விகடன் படிக்கிற காலம் வரை தொடரும் சண்டைகள். அதன் பிறகு படிப்பினூடே நிறைய படிக்க ஆரம்பித்தாள், தொடர்கதைகள், நாவல்கள் என்று அவளின் விடுமுறை காலங்களில் புத்தகத்துடன் ஒதுங்கிவிடுவாள் புத்தகப்புழு ஜெயந்தி. நிறைய படித்தாள், அது பற்றி வாசுவிடம் நிறைய பேசியிருக்கிறாள்... கீரமுண்ட... சொல்லும் போது கவனமாக் கேளு என்று வாசுவைத் திட்டுவாள் சிலசமயம். அவள் தான் இங்கு வந்திருக்கிறாள், பெரியம்மாவின் வீட்டுக்கு... பெரியம்மாவையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் இன்று போகலாம் என்று வாசுவுக்கு தோன்றியது.

மாலை அலுவலகம் முடிந்து வந்த போது, வாசுவுடன் தானும் வருவதாக அம்மா சொல்ல, கைகால் முகம் கழுவி விட்டு, கொஞ்சம் பழங்களும், மாதவய்யர் கடைல மசால் கடலையையும் வாங்கி கொண்டு வாசுவும் அம்மாவும் ஆட்டோவில், பெரியம்மா வீட்டிற்கு சென்றார்கள்... முன் படியில் ஒரு மூன்று புள்ளிக் கோலம் அழிந்தும் அழியாமலும் இருந்தது, முன் வாசல் பல்பு துடைக்காமல், பிசுக்கேறி வெளிச்சத்தை வாசலில் மட்டும் தெளித்திருந்தது. அழைப்பு மணி அடித்த பிறகும் அரவம் இல்லாதது போல் தோன்றியதால்... கதவைத் தட்டவும், யாரோ வருவது கேட்டது... மிதமான நடைச் சத்தம், பெரியம்மாவாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த வாசு, ஜெயந்தி திறக்க அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவளும் முன் வாசல் பல்பு மாதிரி பிசுக்கேறி மங்கலாய் சிரித்தாள். வா வாசு என்றவள்... அத்த! குமாரி அத்தயும் வாசுவும் வந்திருக்காங்க என்றவள். முன் தளர்ந்த முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டு இரு வந்திடறேன் என்று உள்ளே பின்கட்டுக்கு விரைந்தாள். பெரியப்பா முன்னால் இருந்த அறையில் இருந்தார், ஒரு ஈஸிச் சேரில் உட்கார்ந்து இருந்தார், வாசுவின் சத்தம் கேட்டு வாடா... வடுவா... இப்பதான் வரத்தோனுச்சா... என்று வாசுவிடம் பேசிவிட்டு உள்ளே புகுந்து கொண்டார், அவர் வாசுவின் அம்மாவிடம் எப்போதும் பேச மாட்டார், பேசுகின்ற சந்தர்ப்பம் வந்தாலும் பசங்களிடம் பேசுவது போல பேசுவார், அது என்ன கணக்கோ என்று நினைத்துக் கொள்வான் வாசு.

பெரியம்மா வரவில்லை வெளியே... வாசுவும், அம்மாவும் பட்டாசாலில் இருந்து உள்ளறைக்கு போய் பெரியம்மாவ, அங்கு கட்டிலில் படுத்துக் கிடந்தாள் பெரியம்மா... முன் பல் துருத்தி, முடி கொட்டி பழைய அழகைத் தொலைத்து, வாயை ஒருவாறு இழுத்து சிரித்தாள் வாடா... அழுதிருப்பாள் போல... தலையனையின் ஓரம் நனைந்திருந்தது. உடல்நலம் விசாரித்து, என்னக்கா அழுத மாதிரி தெரியுது? அழுவுறத்துக்கா காரணம் இல்லை... உனக்குத் தெரியும்ல குமாரி, இந்த மனுஷனோட வீம்பு... சப்பாத்தியும் மீன் குழம்பும், வேனும் ராத்திரிக்குன்னு கேட்டார்... எனக்கு அடுப்புக்கிட்ட போனாலே தள்ளுது... ஜெயந்தி தான் நல்லா சமைக்கிறாளேன்னு அவ பண்ணட்டும்னு சொன்னா... நீதான் பண்ணனும், அவளுக்கு அதெல்லாம் தெரியாதுன்னு சொல்றாரு... திரும்ப என்னால முடியலங்கன்னு சொல்லுதேன்... வெலமெடுத்துப் போய் கிட்ட வந்து முடிய பிடிச்சு சுவத்துல நங்குன்னு முட்டுதாரு... ஏற்கனவே பாரு முடியெல்லாம் போயிட்டு, இதுல இவரு வேற புடுங்குதாரு... அம்மாவின் கைகளை எடுத்து, தடவிப்பாரு குமாரி எப்படி வீங்கியிருக்கு... வின்னு வின்னுன்னு பிடுங்குது வலி உசுரு... அப்படியே பின்னால கிணத்துல போய் விழுந்துடலாமான்னு தோனுது... என்னமோ இருக்கேன்... இழுத்து பறிச்சுக்கிட்டு, ஜெயந்தி அப்படியே பாத்துக்கிட்டே நிக்கா... ஒரு ஆறுதல் வார்த்த பேசக்கூட நாதியில்ல குமாரி எனக்கு என்ற பெரியம்மா அழ... வாசு அங்கிருந்து நகர்ந்தான்.

பின்கட்டில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த ஜெயந்தியிடம், நீ ஏதாவது அத்தகிட்ட ஆறுதலா பேசக்கூடாதா... இல்ல மாமாகிட்ட ஏதும் சொல்ல்க்கூடாதா... என்ற போது வாசுவை தலை சாய்த்து பார்த்தாள்... கஷ்டமாத்தான் இருக்கு... மனசுக்குள்ள என்னடா மனுஷ ஜென்மம்னு தோனத்தான் செய்யுது... நீ வந்திருக்கியே, போய் கேக்க வேண்டியது தானே ஒன்னோட பெரியப்பாட்ட... உனக்கே தெரியும் அந்தாள்ட்ட பேச முடியாது, நானோ, இன்னிக்கு நீயோ பேசிட்டுப் போயிடலாம், ஆனா எல்லாத்துக்கு அந்த பொம்பிளைய போட்டு பாடா படுத்துவாரு... நேத்து ராத்திரி... மோர் புளிச்சுடுச்சுன்னு தலைல ஊத்துனாரு அத்த மேல...என்று வாசுவுடன் பழைய மாதிரி பேசினாள். வேனும்னா பெரியத்த கிட்ட சொல்லு என்ட்ட இன்னும் கொஞ்சம் பொட்டாசியம் சயனைடு இருக்குன்னு...

Thursday, November 25, 2010

பிட் நோட்டீஸ்...

போர் இல்லை
குருதி கலந்த ஆறு
இங்கு ஓட இல்லை
ஷெல் என்பது யாருக்கும் தெரியாது
கற்பழிப்பு, வன்புணர்ச்சி
பெரிதாய் இல்லை
யாரும் பிய்த்து எறியவில்லை
பூமாலையை
புத்தகத்தில் அரிப்பவனுக்கு
காகிதத்தில் சொரிபவன்
எழுதும் தாள்களில்
பிணங்களின் நாற்றம்

*****
 
பூனையா அல்லது
காந்தாரியா
குறியீடு எது?

*****
 
உதிரும் நாளின்
கணக்கு வைத்திருக்கும்
உலர்ந்த மணித்துளி

*****
 
விரல்களின் நுனி
வடக்கு நோக்கும்
பயணம் பல திசைகளில்

*****
 
கொய்த கைகளில்
வைத்திருக்க முடியவில்லை
விரல்களற்ற காற்று...

*****
 
மூடிய திரைக்குள்
காட்சிபெட்டகங்கள்
திறந்து பார்க்க  ஒன்றுமில்லை

****

உதட்டில் வைத்து
எச்சரிக்க ஓராயிரம் விரல்கள்
கேட்பாரில்லை
மரங்கள்

*****

பரண்களில் வரங்களும்
கொலை ஆயுதங்களும்
எலிப்பொறிக்கம்பியில்
செருகப்பட்ட கடவுள்

*****
உரசிச்செல்லும் மேகங்களின்
வழி உறிஞ்சத்தெரியாமல்
வேர் விட்டு நீர் தேடும்
மரங்கள்

*****
 
துண்டு பீடியின்
நாறிய முனை பற்றத்
தயங்கி விரையும் விரல்கள்

*****

Friday, November 19, 2010

பூங்கதவின் மணிக்குமிழ்...

கதிர மரங்களை குடைந்து செதுக்கிய ஒற்றை ஸ்தனக்காரியின் பெருமூச்சுகள் அடர்ந்து பெருகும் துளையிடப்பட்ட மூங்கில் காடுகளை கடக்கும் ஒலி புகா இலைகள் வேய ஆரம்பித்து, கிழக்கின் மடியில் கிடந்த சந்தியின் குருதியில் தோய்ந்த ஜனனத்தின் ஓசையை என்திசையும் எதிரொலிக்க அடுக்கடுக்காய் தேய்ந்து வளர்ந்து என்திசை சமுத்திர வெளிகளில் ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓலத்தில், ஆழாழியின் தாலாட்டில் பொதிந்து இருக்கும் பதினைந்தாம் இலக்கமிடப்பட்ட இரத்னப்பேழை திறந்தபோது தெறித்து ஓடிய பரல்களின் சிரிப்பில்,சினுங்கலில், ஒப்பாரியில் பழங்கள்ளாய் ஊறும் தோல் போர்த்த சப்தங்கள் மயக்கத்தின் உள்ளங்கைக்குள் இருக்கிறது இன்னும் பிரிந்து பிரிந்து ஊர்ந்து கொண்டிருக்கும் ரேகைகளாய் வளைந்து நெளிந்து மயிலிறகு ஜன்யங்கள் பல. மாயாமாளவகௌளை... அரிச்சுவடி...வித்யாப்யாஸம்... கண் திறந்து பார்த்த போது உச்சிமோந்து, முடிகோதி, விரல் பிரித்து நீவி, மனசு தடவி, அணைத்துக் கொண்ட உடம்பெங்கும் பால் ஊறும் எட்டுமுலைக்காரி...


சுடுநீர் பொசுக்கிய தடங்களை பீலிகள் அணிந்த விரல்களால் துடைக்கும், பெருமுலைக்காரியின் நாபியின் துளையில் தொடுத்திருக்கும் ஒற்றை நரம்பு தீண்ட தீண்ட வர்ணம் மாறி திறக்கும் சப்த மண்டலங்களின் கதவுகள், மணி பூண்ட குமிழ்கள் திருக திருக, முறுக்கேறிய பிருடைகளின் விடைப்பில் பற்றி எரியும் தீ நாக்குகள் சுழன்று சுழன்று எரிக்கும் கற்பூரமாய் நாறும் கமலக்கண்ணனின் வாயமுதம் தோற்கும் சுகந்தங்களின் பேருருவாய் எழுந்த நீர்விழ்ச்சியென நீரெழுச்சியென இரண்டு தோற்றம் தரும் இந்த பாடல்... மாயாமாளவகௌளையில் கொஞ்சம் பிருந்தாவன சாரங்காவின் தீற்றல்கள் தெரியும் காந்தார மயக்கம். மறுபடியும் ஒரு பழகிய வனவிலங்காய் வால் குழைத்து உருமாறும் சாதகபட்சியென, இளையராஜா விரல்கள் மேவிட... அடைத்த காற்று ஊதி கம்பிகளை அதிர வைத்து நிரப்பும் காற்றுப்பைகளில் இருந்து சிதறும் கொலுசு மணிகளின் சினுங்கலென குளிர் நீர்த்தாரைகளின் ஊற்றுக்கண்கள் விழித்து கிடக்கும் பொய்கையில் மிதக்கும் தெப்பம், நிழல்களில் வரும் இந்த பாடல், புதிதான குரல்... இசைவழி வந்தவன் பொறுக்கிக் கொண்டு வந்து தேர்ந்த சுவரமுத்துக்களை கோர்த்து பழகிய பயிற்சி.

தீபன் சக்ரவர்த்தி, உமாரமணன் இருவரின் குரலும் ஒரு மஹோன்னதமான ஒலிக்கலவை... செம்புல பெயல் நீர்... போல இரண்டும் இனைந்து, கலவியில் ஆடும் கூத்து  சர்ப்பங்கள் நிமிர்ந்து உயர்வது போல ரம்மியமாய், ஆச்சரியமாய் இருந்திருக்கிறது ஒவ்வொரு முறை கேட்கும்போதும்... பாடலில் ஆரம்பத்திலிருந்து உள்ளே நுழையும் போது அர்த்த மண்டபத்தின் இருட்டுக்குள் அழைத்து செல்லும், வழிநடத்தும் ஸ்வரங்களில் வேய்ந்த பந்தல் அது. பாரம்பரிய இசையின் அங்க லட்சனங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு சீரிய அப்பழுக்கற்ற ஒலி ஓவியங்கள்... ரவி வர்மாவின் ஓவியங்களில் இருக்கும் தைலங்களின் புராதனம் கலந்தது போல தூரிகைகளால் அல்லாது திமிறு, மத்தகம், தந்திகள், நரம்புகள் கொண்டு  வரையப்பட்ட அரூப ஓவியங்கள்... இசையும் இசைப்பவனும் வேறு வேறு என்று சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்... இசையும், இசைப்பவனும், கேட்பவனும் கூட ஒன்றாகி விடும் ஒரு மூக்கூடல் இது... இண்டர்லூடாய் வரும் இசை வயலினில் ஆரம்பித்து, புல்லாங்குழல் வந்து, நாதசுவரத்தில் தொடரும் ஒற்றைச் சங்கிலியில் கோர்த்த மழை நீர், சுனை நீர், இளனீர், பதனீர் போல அடுக்கடுக்காய் சுவை சேர்க்கும் இந்த பாடல், இளையராஜாவின் மிகமுக்கிய பாடல்.

இந்த பாடலின் தனித்தன்மைகள் அனேகம், குரல்கள், ஒலிக்கலவை, வரிசைக்கிரமம், கட்டுமானம் என்று இது இளையராஜாவின் ஏனைய பாடல்களில் இருந்து தனித்து நிற்கிறது. இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிக முக்கியமான இடத்துக்கு உயர்ந்தார். அபத்தமாக இருக்கும் பாடல்களின் காட்சி அமைப்பு இந்த பாடலை எந்த விதத்திலும் களங்கப்படுத்த முடியாமல் ஒரு ஜுவாலாமுகியாய் இருந்திருக்கிறது பெரும்பாலான நேரங்களில். இளையராஜாவை மிகவும் ரசிப்பவர்கள், வியப்பவர்கள், துதிபாடுபவர்கள் இந்தப் பாடலை குறிப்பிடாமல் இருப்பதில்லை தங்கள் சம்பாஷனைகளில்.

கதிர, ஒதிய, மூங்கில், ஆச்ச மரங்கள் அடர்ந்த தோப்பில் வெயில் வராது, எப்போதும் குளிர், அடர்ந்த மரங்களின் செழிப்பில் சொருகியிருக்கும் பெயரறியா பறவைகளின் கீச்சொலிகள் என ஒரு வனராஜனாய் எனக்குத் தெரியும் இளையராஜாவின் இந்த பாடல்.



அந்த பாடலின் லிங்க்:http://www.youtube.com/watch?v=mab2DPwCu9Y

Wednesday, November 17, 2010

குறுமணல்...

முயங்காத இரவுகளின்
தனிமையில்
அம்மை கொப்பளங்களாய்
முளைத்த நட்சத்திரங்கள்

****

பரனில் இருந்து இறக்கிய
அப்பாவின் மரப்பெட்டியில்
பழைய புகைப்படம் ஒன்றில்
சிரிக்கும் அம்மா அல்லாத யாரோ

****

அடுக்களையில் ஒழுகும் நீர்
பிடிக்க வைத்த பாத்திரத்தில்
ஒரு பருக்கையை
இழுத்துக்கொண்டிருக்கும் எறும்புகள்

****

தடித்த உதடுகளில்
பொருந்தி எரிகிற சிகரெட்
குறுநகையில் செருகியிருக்கும் வன்மம்


****

கொலைபுரிந்தவனின்
உறக்கத்தில் செருகியது
இறைஞ்சும் விழிகள்


****

கைவிடப்பட்ட வீட்டின்
சிமெண்ட் தரையில்
பதிந்திருந்த காலடித்தடம்

****

ஆற்று மணலை அள்ளும்
உலோகக் கைகளில் சிக்கும்
நவமக்கள் தாழிகள்

****

Tuesday, November 16, 2010

நோக்கு...

பெயரில்லாமல்

முகப்பு இல்லாத சந்து ஒன்று
யாரும் தராது
தானேத் தேடி புசிக்கும்
நாய் போல
மெலிந்து கிடந்தது
யாரும் அடையாளப்படுத்தாமல்
தெரிந்து கொள்ளமுடியாது
நீண்டு நெளிந்து செல்லும்
அதன் தன்மையில்
எங்கிருந்தோ
ஆரம்பித்து
எங்கோ
கொண்டு செல்லும்
நோக்கம் இருந்தது
அல்லது
பெருவழியில் கலக்கும் அது
பயணங்களை நீட்டுவிக்கும்
குணத்தை கொண்டிருந்தது
மிதித்து கடந்த பாதங்கள்
உடைக்க உடைக்க
குமிழ்கள் திறந்து
பெருகி வழியும் சீழில்
எல்லோரும் கழித்துச்
சென்ற புண்களின் வீச்சம்

மோஹனப்புன்னகை ஊர்வலமே...

அகண்ட தெருக்களில் உருளும் தேர்ச்சக்கரங்களின் மசி அப்பிய கடையாணிகளென தாங்கி நிற்கும் சப்தகதிகள் பதுமைகள் மேல் நின்று கொண்டிருக்கும் மண்டபத்தேர் தாண்டி நீண்டு கொண்டிருக்கும் ஒற்றைத் தந்தியின் ஸ்ருதி வளர்த்த வடம் பற்றி இழுக்க நகராமல் நின்ற தேர்சக்கரங்களின் மரக்கால்களில் துளிர்விட்ட இலைகளில் இருந்து உதிர்ந்த ஒற்றை சருகு அடியில் இருந்து அகற்ற நகர்ந்த கதையை பாடியவர்களின் பக்தியில் இல்லாத கடவுள், முயங்கி களைத்த நிமிடங்களின் ஆசுவாசத்திற்கு அழைக்கும் பாட்டில் மட்டும் உறைவானோ அல்லது முக்கண்ணனின் சிரம், கரம் பற்றிக் கொள்ள தன்னுள் சேர்த்துக் கொண்டவனை தன்னை ரட்சிக்க அழைத்தவனை ஆரத்தழுவி தேற்றுவானோ என்ற சந்தேகங்களின் ஈக்கள் மொய்க்கின்ற பறிக்கப்பட்ட தடாக மலர்களின் விழியில் இருந்து சொட்டுவது தண்டுகள் உறிஞ்சி வைத்து துப்பும் நீரா அல்லது தேனா என்று தெளிவதன் முன்னம் சிந்தை குளிர்ந்த கடவுள் இரங்கி அளித்த வரங்களில், சொல்ப குறைவுடன் முழுமை தந்த சுநாதங்களின் மாத்திரை அளவில் ஏறி இறங்கும் பயணங்களின் இறுதியில் அடைவது வைகுந்தனின் பாதகமலங்கள் தானோ.


கடவுளை மெய்பிக்க வந்த உண்மைகளில் பக்தியும், காதலும், காமமும் தெளிதாயின. அலங்கார கட்டுக்களில் இருந்து சற்றே விலகி, மோன நிலைச்சமன்கள் இட்டு நிரப்பிய கோப்பையில் வழியும் இசை சார்ந்த அளபெடைகளின் மேலே நகர்ந்தும் ஊர்ந்தும் செல்லும் சர்ப்பமென வளர்ந்து மின்னும் பளபளப்பில் கிறங்கி அதனுள் வழுக்கிச்செல்லும் 72 அடுக்கு மாளிகைகளுக்குள் எந்த அறையில் ஒளிந்து இருக்கும் பெயரறியா சப்தங்களும், மோனங்களும்? ஏறவும் இறங்கவும் ஆறு படிகளை கொண்ட பாதையில், தத்திச் செல்லவும், தாண்டிச் செல்லவும், ஓடிச்செல்லவும், எல்லாம் வகையிருக்கும் அதன் கைப்பிடிக்கட்டைகளின் 18 எண்ணம், தொட்டு தடவி உணர்ந்த விழியற்றவனின் தொடுபுணர்தலில் இருந்து ஜனித்த குழந்தை பேரழகியென குழிவயிறும், குவி ஸ்தனங்களும், கோபுர முலைகளுமாய் நெற்றித்தடத்தில் கீற்று நிலாவுமாய் சிறு நகை, பெருவிழி, துளை நாசியென தொன்மங்களின் படிம நிலைகள் கடந்து அதே சுகந்தத்தில் இழுவும் மயிற்பீலியின் வர்ணங்கள் இட்டு நிரப்பிய கிண்ணங்களில் நிறைந்து, வழிந்து, தெறிக்கும் சுத்த சப்தங்கள் முனகிச் செல்லும் பாட்டில் ஸ ரி க ப த ஸ வும் ஸ த ப க ரி ஸ வும் சீண்டிச் செல்லும் கம்பிகளில் விழுந்த காதல், இளையராஜாவின் கையில் பட்டு இப்படியானது. “ஒரு ராகம் பாடலோடு காதில்”

ஆனந்தராகம் படத்தில் அமைந்த இந்த இருகுரலிசையில் இருக்கும் குரல்கள், பிரபஞ்சம் பதுக்கி வைத்த பேரழகிகளின் மேல் கொண்ட காமமும், காதலும் இன்னும் மிச்சமிருக்கிற ஆத்ம மோகத்தில் இருந்து மீட்கப்பட்ட நரம்புகளினால் கட்டப்பட்ட வாத்தியங்களில் தோன்றிய மென்பரவல்கள் இந்த இசை. ஏசுதாஸின் குரலும், ஜானகியின் குரலும் ஓலைக்கொட்டானில் பொத்திவைத்த சில்லுக்கருப்பட்டியில், கொஞ்சம் தினைமாவும், கொம்புத் தேனும் கலந்தது போன்ற வழுக்கும், மயக்கும் மெட்டு. காதலும், மெல்லிய பாலாடை காமமும் மிதந்து பறக்கும் இறகென மனசுக்குள் வந்து அமரும் இடங்கள் அனேகம். மோஹனம் பக்தி, காதல் என்ற இரண்டும் சமநிலையில் நிறுத்த பிரகடனிக்கப்பட்ட முதல் தண்டோரா இந்த மோகனம். எல்லோரும் சுலபமாய் கையாண்ட ஒரு ராகம், எல்லோரையும் மயக்கிய ராகம்... கேவிஎம், எம்எஸ்வி என்று தேய்த்து தேய்த்து பார்க்க பூதங்களை அல்லாது தேவதைகளை பிரசவித்த விளக்கு இந்த மோகனம், அதனால் தானோ என்னவோ மோஹனத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் காதலும், பக்தியும், காமமும் சங்கமிக்கும் திரிவேணியாய் இருக்கிறது எப்போதும்.

இளையராஜாவின் மிக இனிமையான பாடல்கள், அதன் ஸ்வரகட்டுமானங்களில் உள்ள நவீன கையாள்தலிலும், ஆர்க்கிடெக்சரிலும் தான் இருக்கிறது. பாடத் தெரிந்தவர்கள் அல்லது ஆசைப்படுபவர்கள்... ஒரு ராகம் பாடலைப் பாடி பார்க்கலாம்... அதன் சங்கிலித் தொடர் போல ஆரம்பிக்கும் பல்லவி நம்மை புதுவிதமான இசை அனுபவத்தைத் தரும். மெய்யாகவே சொல்கிறேன்... இந்த பாடலில் சிவக்குமாரின் சின்ன அசட்டுத்தனமும்... ராதாவின் அலட்சிய அழகும்... மீண்டும் மீண்டும் கேட்க, பார்க்கத் தூண்டிய பாடல்... பாலாவிற்கு மிகவும் பிடித்த இந்த பாடலை என்னை திரும்ப திரும்ப பாடச் சொல்லி மெருகேற்றுவாள் என் ரசனையை. ” நனுபாலிம்ப நடசி வொச்சிதீவோ” என்று ராமனை அழைத்த தியாகராஜரின் கதியில் இருந்து சற்றும் குறைவில்லாத ரசனையும், காதலும், மென்காமமும் நிறைந்த இந்த பாடல் மோஹனப் பந்தல் விரிக்கும் குளிர் நிழல்.

Saturday, November 13, 2010

திருப்பதி ஆசாரியின் குடை...

குடையை விரிக்கவே இல்லை திருப்பதி ஆசாரி... கொளுத்தும் வெய்யிலில் குடையை கையில் பிடித்துக் கொண்டே நடந்து வந்தார். வெய்யிலோ மழையோ குடையை விரிக்கவே மாட்டார், வெயில் இருக்கும் போது பெரும்பாலும் சுனக்கமில்லாமல் நடந்து விடுவார் எவ்வளவு தூரமா இருந்தாலும், மழை வந்தால் மட்டும் ஏதாவது ஒரு தார்சாலா பாத்தோ இல்ல ஓட்டு சாப்பு இருக்கிற இடத்திலோ ஒதுங்கி கொள்வார். பிறகு எதற்கு குடையை வைத்திருக்கிறார் என்பது பரம ரகசியம் இன்று வரை... அவருடைய மனைவி பையம்மாவுக்கே தெரியாத ரகசியம் என்றால் அதில் எந்தவித ஜோடனைகளும் இல்லை.


இன்னைக்கென்னாச்சு நாலு மணி ஆவப்போவுது இன்னும் வெயில் இந்த போடு போடுதே என்றவருக்கு கொஞ்சம் தலை கிறுகிறுன்னு வர மாதிரி இருந்தவுடன், எங்கேயாவது கொஞ்ச நேரம் ஒதுங்கலாம்னு தோனிடுச்சு அவருக்கு. காலைல இருந்து பல்லுல ஒன்னும் படாதது தான் வெயில உக்கிரமா காட்டுதோ என்னவோ என்று நினைத்துக் கொண்டார். யோசித்துகொண்டே ராகவேந்திர விலாஸ் ஹோட்டல் தார்சாலில் ஒதுங்கினார்... இந்த ஹோட்டல்கார அய்யர் நம்ம ஊருக்காரரு...ஹிந்து ஸ்கூல்ல தான் படிச்சாரு, இவரு சி.எம்.எஸ் ஸ்கூல்ல படிக்கையில... சி.எம்.எஸ். மைதானத்துல ஹாக்கியெல்லாம் சேர்ந்து விளயாடி இருக்காரு... பழக்கம் தான்... ஆனா கையில அரை ரூவாத் துட்டு இருந்தா ஒதுங்கலாம்... அய்யரும் நல்லா உள்ளங்கை அகலத்துக்கு வெங்காய் பஜ்ஜி வச்சு கட்டி சட்னி வப்பாரு... நமக்குன்னா நல்லா கவனிக்க சொல்லி, அதிகப்படியா ஒன்னும் கொடுப்பாரு...

தொடைச்சு எடுத்தா தாமரை போட்ட 20 பைசாவும், ஒரு செல்லாத்துட்டு ஓட்ட காலனாவும் தான் இருக்கு... இதுக்கு ஒரு காப்பி குடிக்கலாம்... காப்பிக்காக போயி உட்காந்தா பஜ்ஜி கிடைக்காது... இங்க வந்து ஒதுங்கினதே அய்யர் நம்மள பாத்து கூப்பிட மாட்டாரான்னு பாக்கத் தானோ என்று நினைத்தவரு சேச்சே வெயில்லுன்னு தானே ஒதுங்குனோம் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டார்... பார்த்தா கஷ்டத்தையும் சொல்லி ஒத்த ரூபா கேக்கலாமான்னு மனசுக்குள் தோன, பிறகு அவரே வேண்டாமென்று பலமாய் தலையை ஆட்டிக்கொண்டார். என்ன பன்றதுன்னு ஒரே கலக்கமா இருந்துச்சு அவருக்கு. வீட்டுக்கு போனா வீட்டுக்காரி வேற கேப்பா என்னாச்சுங்க, ஏதாச்சும் கிராக்கி கிடச்சுதா... இல்லடி என்று அவளிடம் சடவா சொல்லத்தான் வரும் எப்பப்பார்த்தாலும். பொண்டாட்டிட்ட பிரியமா பேசியே ரொம்ப நாளாச்சு... அவளுக்கும் அதப்பத்தி பெரிய கவலை இல்லை... வீட்ல ஒல பொங்குனா சரி, ஒரு வேளையோ ரெண்டு வேளையோ சாப்பிட்டா சரி, அதான் பிரியம் என்று நினைத்துக் கொள்வார்

திருப்பதி ஆசாரி சின்ன வயசுல இருந்தே இந்த தொழில் தான் பன்றாரு... அவ்ங்க அப்பாவும் இதே தான்... இவருக்கு தெரிஞ்சே இது மூனாவது தலைமுறை... அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அவருக்கு புள்ளகுட்டி எதுவும் இல்லை... அதும் ஒரு பெரிய கவலை திருப்பதி ஆசாரிக்கு. எட்டாவது வயசுல தன்னோட அப்பாகூட உமியப்போட்டு உமியோடு ஏத்தவும்... சன்னத்தெல்லாம் போட்டு உறுக்கவும் ஆரம்பிச்சு, அப்படியே படிப்படியா... இலைத்தோடு, மூக்குத்தி செய்ய கத்துக்கிட்டாச்சு... அதுக்கு மேல வளையலோ அல்லது சங்கிலி செய்யவோ கத்துட்டிருக்கலாம்...வரும்படி கொஞ்சம் தேவலாமா இருக்கும்... நல்லா சேதாரம் எடுக்கலாம், கடைக்கு போடுறதாலே கூலி கிடைக்காது, ஆனாலும் கடிச்ச இல்லாம போகும். அதுக்கு நமக்கு கொடுத்து வைக்காம போச்சு. ஏதோ கிரகம் சரியில்லாம அதெல்லாம் கத்துக்காமயே விட்டாச்சு என்று அவரையே தேற்றிக் கொள்வார்...

பையம்மாவ போய் முதத் தடவயா மல்லிப்புதூர்ல போய் பொண்ணு பாக்கும்போதே பிடிச்சுப்போச்சு... ஒரு மாதிரி சுங்கடி சேலையும், வெள்ளைல ரவுக்க துணியும் கட்டியிருந்தா, அவ போட்டிருந்த ஒத்தக்கல் மூக்குத்திய பார்த்தவுடனே... ரொம்ப பிடிச்சுப்போயி எந்த ஊரு ஆசாரி செஞ்சிருப்பான் என்று அவராகவே யோசித்துக் கொண்டிருக்கும்போது பிடித்து விட்டதென சொல்லிவிட்டார். கருப்பு தான் ஆனா ஒரு மினுக்கு இருக்கும் தோள்ல... ராஜம்மாக்கு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கும், நல்ல தண்ணி கினத்துமேட்டுல நின்னு பார்த்தது, சிரித்தது எல்லாம் ஒரு நெருஞ்சிமுள்ளாட்டம் அப்பும், ஆனா பையம்மாவின் மினுக்கு அவரை நெருஞ்சி முள்ள தூக்கிபோட்டுட்டு, அவள கட்டிக்கிடுதேன்னு சொல்லி ஒன்னும் ஏமாத்திப்புடலையே என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார்

அவளோட சித்தப்பா வீட்ல தான் போயி பார்த்தது... வாசக்காலு உயரம் கம்மி தான், உயரமா, சிகப்பா இருக்காரு மாப்பிள்ள, உசத்தி கட்டுமய்யா வாசக்காலன்னு ஏதோ பெருசு கூட கிண்டலடித்துக் கொண்டிருந்தது... உள்ள நுழைச்சதுமே ஒரே இருட்டா இருந்துச்சு... ஒரு சாக்கு நடுல தொங்கிக்கிட்டிருந்தது, அதத் தாண்டி சின்னதா ஒரு சன்னல், இந்த சாக்கு படுதா பின்னால தான் சில கால்களும் கொஞ்சம் குரல்களும் இருந்துச்சு... பாயவிரிச்சு உட்காந்தவுடனே திருப்பதி ஒக்காந்து விட, திருப்பதியோட அம்மா பொம்பிளக இருக்கிற இடத்துக்கு போயி ஒக்காந்துக்கிச்சு, அப்பா ராமசாமி ஆச்சாரி, பொன்னையா ஆச்சாரி, பெரிய முத்துராஜூ என்று பெருந்தலைகளும் அவர்களுடன் பெண்டு பிள்ளகளும் இருக்க... கொடுக்காப்புளி அய்யர் ஜாதகம் பாத்து , முகூர்த்த நேரத்தயும் குறிச்சுப்புட்டார்... திருப்பதியா இருந்தவரு திருப்பதி ஆசாரி ஆயிட்டார், கல்யாணத்திற்கு பெறவு. அதுக்கு பின்னால, ராஜம்மாவுக்கு சாத்தூர்ல பேனா நிப்பு கம்பெனில வேல பாக்குற பயல கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாக...

ஏன் திடீர்னு இதெல்லாம ஞாபகம் வந்ததுன்னு அவரால யோசிக்கமுடியல... சரி கிளம்பிடலாம்னு அங்கே இருந்து ரெண்டு அடி எடுத்து வைக்கிறதுக்குள்ளாற என்ன ஓய்! உள்ள வராமயே போறீரு! என்ற மணி அய்யரின் குரல் அவரை நிறுத்தியது... இல்லங்கானும்... இப்படியே வந்தேன் சந்தை வரைக்கும் போயிட்டு வந்தது, ஒரே கிறக்கமா இருந்தது, அதான் கொஞ்சம் ஒதுங்கிட்டு திரும்ப நடக்கலாமேன்னு என்றார். உள்ள வர வேண்டியது தானே... வாருமய்யா... ஏதாவது சாப்பிடுதீரா... எலே... அய்யாவுக்கு குளுந்த தண்ணி கொண்டு வாலே... மண் பானத் தண்ணி குடிமையா... சாந்தியா இருக்கும் என்றார். திருப்பதி ஆசாரி அவரு ஏதாவது சாப்பிட சொல்ல மாட்டாரா என்று ஏக்கமாய் இருந்தது. அதை எப்படி கேட்பது என்று சங்கடமாவும் இருந்தது. குடைய எதுக்குய்யா மடக்கியே வச்சிருக்கீரு... விரிக்கலாமுல்ல... விரிச்சா குடையோட பவுசி தெரிஞ்சுபோயிடும்னு அவருக்கு சொல்லவா முடியும்... இத பத்து வருஷத்துக்கு மேல இப்படியே வச்சிருக்காரு, அவருக்கே திறக்க பயம்...

வீட்டுக்குப் போனதும் குதிரவல்லி அரிசி வாங்கிட்டு வந்தீங்களா என்பாள், அரை ஆழாக்கு வாங்கிட்டு போனா பொங்கிப்போட்டு ரசமும் வச்சு பருப்பு தொகையல எப்படியாவது வச்சுடுவா... இரண்டு வேளைக்கு இழுத்துக்கலாம்... கடைல போய் திரும்ப கடன் சொல்லமுடியாது, தங்கையா நாடார் இனிமே கடன் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. இன்னைக்கு அறுந்த தோட்ட ஊத வந்த பய... சல்லிக்காசு கொடுக்காம, வாரண்ணேனு போயிட்டான்... செக்குல வேலை பாக்குற பய... ஒரு ருவாய்க்கு எண்ணெ வாங்குனா... கொஞ்சம் கூட கொடுப்பான், நம்ம போனா... அதனால அந்த பயக்கிட்டயும் கேட்க முடியல... ஊதி முடிச்சது வாங்கிட்டு அந்தானிக்க போயிட்டான்.

என்னத்த பன்றதுன்னு ஒன்னும் புரியலை அவருக்கு... சாயங்காலம் கருக்குவேல் அவம் பொஞ்ஜாதியும் வந்தா... ஏதோ தோடு செய்யக் கொடுக்குறதா சொன்னாங்க... கொஞ்சம் முன்பணமா வாங்கிகிட்டா இந்த வாரத்த சமாளிக்கலாம்... ஆனா அதுவும் நிச்சயம் கிடையாது... இவ சமைக்க அது இதுன்னு எட்டனாவாவது வேண்டியதிருக்கும்... இருவது பைசாத்துட்டு எவந்தருவான், குதிரவல்லியரிசி... கிட்னாசாரி சொன்னபடி பாத்தா போன மாசத்தோடு ஏழரை சனி போயிடுச்சு... பொங்கு சனி அது இதுன்னு சொன்னா... ஒன்னத்தையும் காணோம்... கிட்னாசாரி பொழக்க தெரிஞ்ச பய... நம்ம வேலைக்கு வராம... ஜோசியம் பார்த்துக்கிட்டு... கிரகத்த எல்லாம் மத்தவுங்களுக்கு தள்ளி விட்டுட்டு... சொகுசா இருக்கான்...ம் என்று அவரே அறியாமல் ஒரு பெருமூச்சு வேறு வந்தது... தாவாக்கட்டைய தூக்கிப் பிடிச்சு யோசிச்சுட்டு இருந்தவரு முன்னாடி மணி அய்யரு சொல்ல, ரெண்டு இட்லியும் சட்னி சாம்பாருடன், வடையும் வந்து வச்சிட்டு போனா ஒரு பய...
பாக்க சீனிச்சாமி மகென் மாதிரி இருந்தான்... என்ன ஓய் தண்ணிய தரோம்னுட்டு... இட்லிய வைக்கீரு... சாப்பிடுமையா... உம்ம தெரியாத எனக்கு... சாப்பிடும்... காசு வரும்போது குடுங்கானும் என்றார்...

திரும்பவும் குதிரவல்லி அரிசி வந்து ஒக்காந்து விட்டது அவரு மண்டைக்குள்ள... இப்போ அவ என்னத்த திம்பா... என்ற யோசனை வந்தது... ஒரு வடைய மட்டும் தின்னுட்டு... மணி அய்யர் கல்லாவ பாத்துட்டு இருக்கிற போது யாரு பாக்காய்ங்களானு பாத்துட்டு... குடய லேசா அகட்டிட்டு உள்ள இட்லிய பொட்டலமா கட்டி குடைக்குள்ள போட்டுக்கிட்டார்... வடைய மட்டும் தின்னுட்டு கொடுத்த காப்பிய குடிச்சுட்டு... பெரிய ஏப்பமா விட்டுட்டு... சந்தோஷம்யா... காசு வந்தவொடனே குடுத்துப்புடுறேன் என்றார். மெதுவா குடுமையா...ஒன்ன யாரு இப்போ துட்டக் கொடுன்னு புடுங்கா... என்றவரிடம் சொல்லிக்கொண்டு, கொஞ்சம் கூடுதல் சொரத்துடன் வீட்டுக்கு வேகமா நடந்தார்.

Thursday, November 11, 2010

சிம்மேந்திர மத்யமம்... ஒரு குறியீடு...

இது போல தான் எப்போதும் நேர்கிறது...ஒரு மிகப்பெரிய கவலையில் இருப்பவனுக்கு வரும் ஒரு விதமான சந்தோஷம் அந்த கவலையை தள்ளி வைக்கவும் முடியாது அல்லது சந்தோஷத்தை கொண்டாடவும் முடியாது போய் விடுகிறது... ஷெனாயில் வழிந்து உருக்கும் இசை, அப்படியே டோலக்குடன் சேர்ந்து தடக்கென்று மங்கல இசையாய் மாற ஏற்படும் சில ஸ்வர வரிசை மாற்றங்களுக்குள் சிக்கிக்கொள்ளும், அவஸ்தை படும் காற்று, மூச்சு திணறிப்போகும். அன்றும் அது போல தான் நேர்ந்தது, எனக்கு மறக்கமுடியாத ஒரு உயிர் சந்திப்பு என் அப்பா இறந்த அன்று நேர்ந்தது. நான் தொட இரண்டாய் பிளந்த மயிற்பீலி.

பெங்களூரில் காலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது ஷோபியிடம் இருந்து தகவல் வந்தது. அன்று அவளுக்கு கார் வேண்டியதிருந்ததால், ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன், முதலில் அவள் சொன்னது காதில் சரியாய் விழவில்லை. ஒல்ட் மெட்றாஸ் ரோடில் இருந்து இந்திரா நகர் என்பது அடி சாலையில் திரும்பியவுடன் இருக்கும் ரெடீமர் சர்ச் வாசலில் நிறுத்தி, என்னவென்று திரும்பவும் கேட்டபோது, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்றும், வடமலையான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாகவும் சொன்னாள். ரவியின் நண்பன் ராம் போன் செய்ததையும், இன்னும் அரை மணியில் திரும்பவும் நிலை சொல்வதாகவும் சொல்லியிருக்கிறான். எனக்கு ஏதோ நெஞ்சு அடைக்குறமாதிரி இருந்தது... அதே ஆட்டோவை கட் பண்ணாமல் திரும்பி விட்டேன். நான் என்.ஜி.எப். வந்து சேர்வதற்குள்ளாகவே திரும்பவும் ஷோபி அழைத்தவுடன் மனசுக்குள் தெரிந்து விட்டது. அவளும் அதே மாதிரி அழுது கொண்டே சொன்னாள், அப்பா இறந்து விட்டதை... எனக்கு அழ வரலை... உடனே மதுரைக்கு எப்படி போவது என்று மட்டுமே மனசு கணக்கு போட்டது...

அலுவலகத்தில் தகவல் சொல்லிவிட்டு... உடனே தெரிந்த ஒரு டிராவல் ஏஜெண்ட் மூலமாக மதுரைக்கு விமான டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்தேன்... நான் வீடு செல்வதற்குள் டிக்கெட் இமெயிலில் வந்து விட்டது. பாரமவுண்ட் ஏர்வேஸ்... மதியம் பன்னிரெண்டு இருபதுக்கு போய் சேரும் என்றவுடன்... ஏதும் யோசிக்கவில்லை... இருவரின் துணிகளை அடுக்கிக் கொண்டே, ஷோபியின் அப்பா, அம்மாவிடம் தகவல் சொல்லிவிட்டு புறப்பட்டோம். நான் அழவில்லை அப்போதும், பெங்களூரு ஏர்போர்ட் அப்போ, பழைய ஏர்போர்ட்... தேவனஹல்லி இல்லை... அதனால் பத்து நிமிசத்திற்குள் ஆட்டோ பிடித்து ஏர்போர்ட்டில் இறங்கினோம்... செக் இன் பேக்கேஜ் குடுக்க கவுண்டரில் நின்ற போது என் பின்னால் வந்தவர், அவர் பெட்டியை தூக்கி டிராலியில் (டாக்ஸியில்) வைக்கச் சொன்னார், முழுதும் தும்பை வெள்ளையில் வேஷ்டி கட்டியிருந்தார், வெள்ளை சட்டை, கையில் மோதிரம், கோல்ட் வாச்சில், சற்றே ஏறிய முன் நெற்றி வியர்வையில் கொஞ்சம் கவலையுடனும் இருந்தார். அவர் சென்ற பிறகு நானும், ஷோபியும் செக் இன் கவுண்டருக்கு சென்றோம்... ஷோபிக்கு அந்த பெரியவர் என் அப்பா போல் இருப்பதாக பட்டிருக்க வேண்டும், என்னை பார்த்தாள், முன் கையை தோளோடு சாய்ந்து பிடித்துக் கொண்டு சட்டையை லேசாக நனைத்தாள், எனக்கு அழுகை வந்துவிட்டது... வழிய வழிய பெருகிக் கொண்டே இருந்தது கண்ணீர்.

செக் இன் கவுண்டரில் இருந்த, மோனிகா...(பெயர் பட்டையில் இருந்து) என்னை ஒரு முறை ஏறிட்டு பார்த்து, குழப்பமாய், AISLE OR WINDOW SIR?? என்றாள் நான் AISLE என்றேன், அவள் அவசர வழிக்கு அருகே தான் இடம் இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தாள், அது போயிங் விமானம் என்று ஞாபகம். இரண்டு இருக்கை ஒரு புறமும், மூன்று இருக்கை ஒரு புறமும் இருக்கும் மிகப்பெரிதும் இல்லாது ஏடிஆர் போல மிக சிறிதும் இல்லாத விமானம். பணிப்பெண்களில் ஒரு தமிழ்பெண் என்னை ஆச்சரியப்படுத்தினாள். வசு என்கிற வசுமதி சுப்ரமணியம், தேனியை சேர்ந்தவள்... மதுரையைச் சேர்ந்த தியாகராஜனின் விமான போக்குவரத்து, இந்த தேனிக்காரப் பெண்ணுக்கு விமான பணிப்பெண் உத்யோகம் கொடுத்திருப்பது சந்தோஷமாய் இருந்தது... மாநிறமாய் இருந்தவள், அத்தனை அழகாய் ஆங்கிலம் பேசினாள். ஷோபிக்கும் இந்த பெண் அழகாய்த் தெரிந்தாள். இந்த பெண்ணைப் பற்றிய விபரம் கூட அவள் ஷோபியிடம் சொன்னது தான்... கொஞ்சம் வரியோடிய சிவந்த கண்களில் புன்னகைக்கவும் முடிந்தது இப்போது.

விமானம் கிளம்பும் நேரம் வரை அடர்ந்த மவுனம் எங்களுடன் அமர்ந்திருந்தது... விமானம் கிளம்பும்போது ஷோபி திரும்பவும் கைகளை பிடித்துக் கொண்டாள். இம்முறை அவளுக்கு டேக் ஆப்பின் போதும், லேண்டிங் போதும் ஏற்படும் ஏர் சிக்னெஸ்ஸினால், அருகிலேயே சிக் பேக் வைத்துக் கொள்ள வேண்டும். கிளம்பியது... இறங்கியது... கொஞ்சம் ஷோபிக்கு உடல் அவஸ்தை இருந்தது... மதுரை இறங்கியவுடன் சரியாகி விட்டாள். பன்னிரெண்டு நாற்பதுக்கு தான் வெளியே வரமுடிந்தது... அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக் கொண்டு பதினைந்து நிமிஷத்தில் போய் சேர்ந்து விட்டோம் வீட்டிற்கு... சேகர் முன்னால் வந்து பெட்டியை வாங்கி கொண்டு மீனா வீட்டில் போய் வைத்து விட்டு வந்தான்... முன்னால் போட்டிருந்த பந்தலில் தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களிடம், பெரியவன் வந்துட்டான், இவன் தான் பெங்களூரில் இருப்பது என்று பேசிக் கொண்டது காதில் விழுந்தது. பிளாஸ்டிக் சேர் நிறைய அடுக்கியிருந்தது நடையில்... இன்னும் நிறைய பேர்கள் வர வேண்டும் போல... எதிரில் சேதுவும், ரவியும் வந்து எதிர் கொண்டார்கள் என்னை... என்னடா இப்பதான் வர்றியா என்று ஏதோ கேட்டு வைத்தார்கள்... இப்ப டிரைன் இருந்ததா... என்றவரிடம் யாரோ... பிளைட்ல வந்திருக்கான் என்றார்கள்.

மேலே ஷோபியுடன் படியேறி இரண்டாவது மாடியை அடைந்தேன்... நிறைய செருப்புகள் தாறுமாறாய் கிடந்தன ஒழுங்கில்லாமல்... முன் வாசலையும் அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். நிறைய பேர் வாயில் துண்டை வைத்துக் கொண்டு நாங்கள் வருவதை கவனித்துக் கொண்டிருந்தார்கள்... நடையில் உக்காந்திருந்தவர்கள் விலகி இடம் கொடுக்க.... வழியெங்கும் பரவி கிடந்த அழுகையும், ஒப்பாரி பாடல்களும் என்னை ஏதோ செய்தது... ஷோபியை தனம் வந்து அழைத்துக் கொண்டு சென்றாள். நிறைய பேர் காலையில் இருந்து அழுது களைத்திருக்க வேண்டும். கண்களில் கொஞ்சம் தேங்கிய கண்ணீருடன், எங்களை பார்த்தவுடன் மேலும் அழ மெனக்கெட்டார்கள்... அம்மா, ரவி அம்மாவின் அருகே வேணி அக்கா, பாரதி சின்னம்மா, பெத்தம்மா என்று அப்பாவை சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். அப்பா இன்னும் சிரித்த மாதிரி தான் இருந்தார்... எனக்கு அழுகை வந்தது... அம்மா என்னை கட்டிக் கொண்டு அழுதாள்... ரவியும் அண்ணா என்று விசும்பினான்... அப்பாவ பாத்தியாடா, நம்மள விட்டுட்டு போயிட்டார் பாத்தியா என்றாள்  அம்மா. ஷோபி அம்மாவின் கைகளை  இறுக்கமாக பிடித்துக் கொண்டு முதுகை தடவிக் கொடுத்தாள். சந்திரன்  சித்தப்பாவும், வாசு  சித்தப்பாவும் என்னை வெளியே அழைத்தனர்...

யார்யாருக்கு தகவல் சொல்ல வேண்டுமோ, எல்லாருக்கும் சொல்லியாச்சு, என் தாய் மாமனுங்க யாரும் வரலை எனவும்... இப்போ தாய் மாமன் உரிமைக்கு எவனக் கூப்பிடறது என்றும் என்னை கேட்டார்கள். நான் என் தம்பிகளுடன் பேசி விட்டு முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி, சென்னையில் இருப்பவர்கள் எப்போ வர்றாங்க் என்று தெரிந்து கொண்டு, அப்பாவை இன்றைக்கே தகனம் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன். கொண்டு வந்திருந்த பணத்தை பாஸ்கரிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொல்லி, வந்திருப்பவர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கவும், காப்பித் தண்ணிக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, புழக்கடையை திறந்து பாத்ரூம் செல்வதற்குச் சென்ற போது தான் பாவனாவை பார்த்தேன். பார்த்தவுடன் அடையாளம் தெரிந்தது... அனேகமாய் பதினான்கு வருடம் கழித்துப் பார்க்கிறேன்... தர்ஷனாவும் உடன் இருந்தாள்.  சரோஜா  அத்தையும் இருந்தது அங்கே. என்னைப் பார்த்தவள் ஒன்றும் பேசவில்லை, மிக மெல்லியதாய் சிரித்தாள். நான் அவள் அருகில் உட்கார்ந்து என்ன படிக்கிற? என்ற போது பிளஸ் ஒன் என்றால்.... நிர்மலா கான்வெண்டில்... என்ற போது மலைப்பாய் இருந்தது. அவளை, தர்ஷனாவை ஷோபிக்கு எங்கள் வீட்டு மாடியில் இருந்தவர்களின் பேத்திகள் என்று அறிமுகப்படுத்தி வைத்தேன். பாவனாவின் கண்களில் தெரிந்த கேள்விகள் என்னை அங்கே நிற்கவொட்டாமல் நகர்த்தின.

அப்பாவிற்கு ஆகவேண்டிய காரியங்கள் கவனிக்க ஆரம்பித்தேன், சேகருடன் சேர்ந்து, ரவி இன்னும் அம்மாவுக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தான்... வந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தபோதும் அப்பா கண்ணாடிப்பெட்டிக்குள் குளிரில் சிரித்துக் கொண்டு இருந்தார் மாற்றமே இல்லாமல். ஒற்றை ரோஜாமாலை மட்டும் அவர் அணிந்திருக்க மற்ற மாலைகள் பூக்கள் கண்ணாடிப்பெட்டிக்கு வெளியே இருந்தன... அப்போ என் அம்மாவின் தம்பி, சின்ன தாய்மாமன் உள்ளே வந்தார், அம்மாவுக்கு தம்பியைக் கண்டவுடன், ஞானம் பாத்தியாடா உங்க மாமா நம்மள எல்லாம் விட்டுட்டு போயிட்டாரு என்று தம்பியின் அரவணைப்பு அல்லது ஆறுதலுக்காக எதிர் நோக்கினாள், ஆனால் ஞானம் மாமா, அப்பா இறப்பதற்கு முந்தைய நாட்களின் சச்சரவுகளின் பொறிகளில் எரிந்து கொண்டிருந்தார் போலும், அம்மாவை கண்டுகொள்ளவில்லை... இது அம்மாவை மேலும் அழவைத்தது... வேணி அக்கா உடன் இருந்தாலும்... ஞானமாமாவின் வீம்பு அம்மாவ மேலும் அறுத்திருக்க வேண்டும். நானும், சேகரும் அம்மாவுக்கும் அதற்கும் தேறுதல் சொல்லி நகர்ந்தோம்...

எங்களுடன் ஏதேதோ காரணங்களுக்காக பேசாமல் இருந்தவர்களும், மற்றவர்களின் பொல்லாப்புக்கு பயந்து போய் வந்திருந்தார்கள், இறுகிய முகத்துடன்... அவர்கள் துக்கத்தினால் அப்படி இருக்கிறார்களா இல்லை சண்டைக்காரர்களின் வீட்டுக்கு வந்ததால் அப்படி இருக்கிறார்களா என்று வகைப்படுத்த முடியவில்லை. சென்னை இருந்து என் அப்பாவின் அக்கா மகன்களும் வந்து விட்டார்கள்... தாய்மாமன் உறவுக்கு ஞான மாமாவை விட்டுவிட்டு... என் அத்தை மகன்களை தாய் மாமன் என்று எங்களுக்குள் முடிவு செய்து நிறுத்தினோம்... அம்மாவுக்கும், சித்திகளுக்கும் இன்றைக்கும் இது ஒரு குறையாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை... ஞானமாமா எங்க போய்ட்டாருன்னே தெரிய்லை...ஒரு வழியா எல்லாம் முடிந்து, அப்பாவை வழி அனுப்பி வைக்கும்போது பொங்கியது... அப்பாவுடனான சந்தோஷமான நாட்களை எண்ணிக்கொண்டே மயானத்திற்கு போக வந்த அமரர் ஊர்தியில் அமர்ந்து எல்லோரும் சென்று கொண்டிருந்தோம்... அப்பா எனக்கு அருகில் ஒன்றும் சொல்லாமல் படுத்திருந்தார்... அப்பா இப்படித் தான் எல்லா நேரத்தையும்  சிரித்துக் கொண்டே எதிர்கொள்வார், அவர் மரணத்தையும் அப்படித் தான் எதிர் கொண்டார் என்று நினைக்கிறேன்.

மயானத்தில் வீட்டிற்கு வந்த போது யாரும் இல்லை, ஒரு காமாச்சி விளக்கு ஏற்றப்பட்டிருந்தது, அப்பாவின் பழைய போட்டோவில் மாலை போடப்பட்டிருந்தது, பொட்டும் வைத்திருந்தார்கள்... இது அப்பா மதுரை வந்து திருமணமாவதற்கு முன் ஜுபிடர் ஸ்டூடியோவில் எடுத்தது... திருமணம் ஆன பின் அதே ஸ்டூடியோவில் அம்மாவுடன் நிலாவை பார்ப்பது போன்ற படம் எங்கள் வீட்டிற்கு வருவோர் எல்லாரும் குறிப்பிட்டு பேசும் படம்... அதில் அம்மாவின் கழுத்தில் இருக்கும் நெக்லஸ் வரைந்தது தான் என்பது பலருக்குத் தெரியாது. கருப்பு வெள்ளைப்படத்தின் மிகப்பெரிய பலம் அது. அம்மா இன்னும் அழுது கொண்டிருந்தாள், ஒன்றும் சாப்பிடலை என்றதும் எனக்கும் சேகருக்கும் கோபம் தான் வந்தது... வம்பா சாப்பிட வைத்தோம்... அம்மாவின் தலை முடி ஈரத்தில் இன்னும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. யாரோ குமாரி! தலைய ஈரமா விடாத தொடைச்சுக்கோ என்று அப்பாவின் குற்றாலத் துண்டை கொடுத்தார்கள். தலையை துவட்டும் போதும் அழுதாள் அம்மா.

மறுநாள் பாவ்னாவும், அவள் அம்மாவும் வந்திருந்தார்கள்.  பாவ்னா இப்போது ஆகாசநீலத்தில், உறுத்தாத பூக்களை ஸல்வாராய் அணிந்திருந்தாள். கழுத்தை சாய்த்து என்னைப் பார்த்தாள்.  அவள் அம்மா என்னை எப்போ வந்த... என்னால நேத்து  நீ வர வரைக்கும் இருக்க முடியல என்றாள், அவள் என்னை பார்க்க விரும்பாததால் அல்லது பார்க்க வேண்டியிருக்குமே என்ற தவிப்பில் போயிருக்க வேண்டும். ஷோபி இரவு முழுக்க விழித்ததில் மீனா வீட்டில் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.  கொஞ்சமாய் பேசிக்கொண்டிருந்தாள் பாவ்னாவின் அம்மா, பாவ்னா என் அருகில் வந்து அழுத்தமாய் கைகளை பிடித்துக் கொண்டாள்.

எங்கள் ரெண்டு பேரையும் மாறி, மாறி பார்த்த பாவ்னாவின் அம்மா கொஞ்சம் அழுதாள், அப்புறம் பாவ்னாவை என்னிடம் விட்டுவிட்டு கிளம்புறேன் என்றவளிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை. பாவ்னா ஒரு குளிர் தடாகத்தின் ஒற்றைத் தாமரையாய் தெரிந்தாள் எனக்கு. பாவ்னாவிற்கு என் அப்பாவின் குணங்களும், அவள் அம்மாவின் முகமுமாய் இருந்தது. என் கால் விரல்களையும், கூர் நாசியையும் பார்த்துக் கொண்டே இருந்தவள் தன் கால் விரல்களையும், நாசியையும் பார்க்கத் தொடங்கினாள்

எங்கோ ஏசுதாஸின் குரலில் கேட்ட “சிம்மேந்திர மத்யமம்”  பாவ்னாவை பார்த்து நீ பவுர்ணமி என்று சொல்லிக் கொண்டிருந்தது மாதிரி பட்டது எனக்கு.

Tuesday, November 09, 2010

ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ்ஸ்டாண்ட்....

அனல் பூக்கள் பிடுங்கப்பட்ட
இரவின் விளிம்பில் கிடந்தது அந்த வீதி
முழுதாய் எடுத்துவைத்தும்
எடுத்து வைக்காமலும் கிடக்கும் தேனீர் கடை
பெஞ்சுகளில், நாளை சம்பாஷிக்கப்படும்
வார்த்தைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது
பரோட்டாக்கடை வாசலின் முகப்பில் காத்திருந்த
பூனையை ஏய்த்து உறங்கிய எலிகளின்
கனவுகளில் முன்கையில் நீண்ட நகங்களுடன்
பிராண்டும் வறட்டொலி
முடிதிருத்தகம் கழித்த முடிகளின் உதிரியில்
எழுதப்பட்டிருக்கும் மரபணுவில்
மிஞ்சியிருக்கும் தொன்மையின் அடையாளங்கள்
நீர்த்து போய் கிடக்கும்
நிறுத்தத்தில் உறங்குபவரின் உறக்கத்தின் மீது
ஏறி இறங்கும் பேருந்தின் சத்தம்
ஜன்னலோர இருக்கைகளில் உறங்காமல்
விழித்திருப்பவரின் விழிகள்
கொண்டு வந்த கனவுகளின்
எண்ணெய் இடாத பற்சக்கரம்
பொடித்து நிற்கிறது
கழிவறையில் முயக்க முனகல்களின் வீச்சம்
கடன் சொல்லிப்போறவனை
ஜன்மம் வரை துரத்தும்
எல்லாம் உறுத்து நோக்கி கொண்டிருக்கும்
குற்றவிழிகளுடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ்ஸ்டாண்ட்

Monday, November 08, 2010

மனுஷிகள்...

தலதீபாவளிக்கு
மாப்பிள்ளைக்கு ஒரு பவுன் சங்கிலியாவது
போட வேணாம்?! என்றாள் சுந்தரிபெரிம்மா
பிசையும் கையை பிடித்துக்கொண்டாள்
இப்போ காத்துளையெல்லாம்
புண்ணாப்போச்சு என்று
வேப்பங்குச்சி சொருகி கொள்கிறாள் பெரிம்மா!!

***
ரெண்டு நாளா கஞ்சியே
குடிக்கலையாம்ல இந்த பய
என்று பதறிய அப்பத்தா
பழய சோத்த பிழிஞ்சுவச்சு
பச்ச வெங்காயம் கொடுத்தவ
இந்தா வாரேன்னு போயி
கொண்டு வந்த பனஒலைக்குள்
நுங்கும் இருந்துச்சு

***

ஏடி என்னடி பன்னுதே
சின்னவனுக்கு காயுதாமே உடம்பு
ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகலியா
கசாயம் வச்சுக் கொடுத்தியா
புரியாமல் முழித்தவளை விட்டு
குழந்தையை தூக்கிகொண்டு
இருக்கிற ஒன்றிரண்டு
பாத்திரங்களில் தேடினாள்
ஒத்தவிளக்கு முனீஸ்வரன் கோயில்
போயி துன்னூறு கொண்டு வா
உடம்பெல்லாம் பூசிவிட்டா
காலைல எல்லாம் சரியாப்போவும்

***

Saturday, November 06, 2010

அப்பா என்பது குணம்...

அன்று வெளிச்சம் குறைவாய் இருந்தது, காலையில் மணி எத்தனை என்று பார்த்த போது தான் உரைத்தது, எட்டரை மணி... தூங்கி எழுந்து காபி குடித்து விட்டு மறுபடியும் தூங்கியது ஞாபகம் வந்தது, யாரும் உசுப்பவும் இல்லை... பாஸ்கர் காலையிலேயே எங்கெயோ போயிட்டான் போல, காணவில்லை... நேற்று இரவு வந்தவுடன் நிறைய கதைகளை பேசிவிட்டு தூங்க ஆரம்பித்த போது மணி பன்னிரெண்டு தாண்டியிருக்கும்.

அப்பா, அம்மா, நாங்க ரெண்டு பேரும், ஹரியும் ஒரே ஹால் ல தான் படுப்பதே. அப்பா இப்போ இருந்தா, டேய் படுக்க வேண்டியது தானே, கண்ணு முழிச்சு ஒடம்ப கெடுத்துக்காதீங்கடா, எனக்கெல்லாம்  பசினாலே தூக்கமே வராம கெடந்திருக்கேன், உங்களுக்கு என்னடா நிம்மதியா சாமிய கும்பிட்டு படுத்து தூங்க முடியாம கெடக்குறீங்க நான் பட்ட  கஷ்டம்லாம் உங்களுக்கு கிடையாது, அதெல்லாம் யாம் பாடவும் கூடாது,   அதை எல்லாம்  சொல்லி முடியாது, ஆனா ஒன்னுடா அறியேன்னு மதுரைக்கு வந்தேன்... ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும்  இப்போ நல்லா இருக்கேன்,  கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு வந்து குடும்பத்தோட இந்த மீனாச்சி என்னயும் ஒரு வழிக்கு கொண்டு வந்து, வயித்துக்கு ஒரு குறையில்லன்னு வச்சிருக்கா... என்ன நினைப்பாரோ என்னவோ, எங்க பக்கம் திரும்பி , யார் உதவியும் இல்லாம நானே என் கைய ஊனி கர்ணம் பாஞ்சேன்!  இது அப்பா அடிக்கடி தொடர்பில்லாமல் சொல்லிக்கிட்டே இருக்கும்  வார்த்தைகள் ...பேசிக் கொண்டே இருக்கும்போதே  உறங்கியும் விடுவார், குறட்டை சத்தம் வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.  இப்போ அப்பா இல்லாததால, அம்மாவுக்கு நாங்கள் பேசிக்கொண்டிருந்தது பெரிய பிரச்னையாய் இல்லை...ரொம்ப நாள்  கழிச்சு பார்க்கிற பயலுக பேசிட்டு இருக்கட்டும் என்று பேசாம இருண்டு விடுவாள்,  ரொம்ப சின்னவயதில் நாங்க ரெண்டு சண்டை போட்டு கட்டி உருள்வதையும் இப்போ ஒட்டிக்கிட்டு இருக்கிறதையும்  அப்பப்போ சொல்லி சிரிப்பாள்...  ஹரி  நேற்று பெரியப்பா வீட்டிலேயே படுத்துவிட்டான் போல இருக்கு ஆளக்காணோம்.


பாஸ்கர் எங்கள் வீட்டை விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போய் பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு அடுத்து பிறந்தவன், நான் படித்துக் கொண்டிருக்கும்போது அவன் சம்பாதிக்க தொடங்கி விட்டான். இது எப்படி ஆரம்பித்தது, அவனுக்கு படிப்பை நிறுத்திவிட வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று இன்றுவரை புரியவில்லை. குட்டியின் திருமணம் வரை மதுரையில் படித்துக் கொண்டிருந்தவன், ஒரு வாரமாக பள்ளிக்கூடம் போகாமல் இருந்து விட்டு, அதன் பிறகு படிக்கப்போகலை, நான் பட்டறைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டான். என் அப்பாவின் அக்கா மகன்கள் சேது ரவி இருவரும், தங்கவேலை செய்யும் பட்டறை வைத்திருந்தார்கள், என் அப்பா வழி தாத்தாவும், என் அம்மா வழி தாத்தாவும் இதே தொழில் தான் செய்து வந்தார்கள். என் அத்தை மகன்கள் வரும்போதும் போகும்போதும் தடபுடலாய் செலவு செய்வது, ஹோட்டலிலேயே சாப்பிடுவது, கைசெயின், மோதிரம் என்று வலம் வருவது பாஸ்கரை அசைத்திருக்கலாம், திடீரென்று ஒரு நாள் என் அத்தை மகன் சேது வந்திருக்கும்போது நான் படிக்கலை, பட்டறைக்கு போறேன், எனக்கு படிப்பு வரலை என்று எதேதோ சொல்லிவிட்டான்.


அப்பாவுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை, அப்போது அவன் அரைப்பரீச்சையில் வாங்கிய பத்து மார்க் அவரை இந்த முடிவு எடுக்க உதவியிருக்கலாம். ஆனால் நான் ரெண்டு மார்க் வாங்கியிருக்கேன், அப்போது அதைப்பற்றி அவர் யோசிக்கவில்லை. ஏதோ கிரகம் நானும் சரின்னு சொல்லிட்டேன், இப்போ நினச்சா கஷ்டமாத்தான் இருக்கு... அப்போ வரும்படி வேற கம்மி, ஒரு ஆளு குறையறது, கொஞ்சம் பணமும் வரும்னு புத்தி பேதலிச்சு போச்சு என்று அடிக்கடி கண்ணீர் விட்டு புலம்புவார் அப்பா, கேட்கும் போது சங்கடமா இருக்கும். இப்போ மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரையில் இருந்து எழுபத்தி மூன்றாம் கிலோமீட்டரில் இருக்கு, ஜெயவிலாஸ்ல ஏறுனா ஒன்னே கால் மணி நேரத்துல போய் விட்டுடுவான், இதுக்குபோய் என்னங்காணும் புலம்புறீர்னு என்று என் அப்பாவை தேற்றுவார், என் அத்தையின் கணவர், வக்கீல் குமாஸ்தாவா இருந்தவர், வக்கீல் மாதிரி சட்டம் பேசுவார் எல்லா நேரத்திலும், சமூக நாட்டாமை அவர் அப்போ. நீங்க முத மூனு பிள்ளைகள படிக்க வச்சு ஒரு வழியா அரசாங்க உத்தியோகம் பார்க்குறாய்ங்க, கடைசி ரெண்டு பிள்ளக தானே தங்க வேலைக்கு போகுதுக... பெரியவன் படிச்சுட்டு இருக்கான், இன்னும் தலை எடுக்கல இவனை படிக்க வைக்காம வேலைக்கு அனுப்புறோமே என்ற அப்பாவின் வார்த்தையை முடிக்க விடமாட்டார் மாமா. எந்த புள்ள உதவியா இருந்தா என்ன வோய்... கவலப்படாதீரும்...அவன் நல்லா வருவான் பாரும் என்ற தேறுதல் அவரை தேற்றவே இல்லை, கடைசிவரை.


ஏதாவது முக்கியமான வேலைக்கு மதுரைக்கோ அல்லது கோவைக்கோ தான் வரவேண்டும், மெஷின் கட்டிங் அல்லது பட்டற சாமான் வாங்குறது அல்லது கசை இழுக்கறதுன்னாலே இங்க வந்துடுவான் அவன் ஒரு நாள், ரெண்டு நாள் இருந்து வேலைய முடிச்சுட்டு தான் போவான். பாஸ் பய வந்தாலே, அம்மாவுக்கு தாங்காது... என் புள்ள அவக வீட்ல என்ன சாப்பிடுதோ, என்ன ருசிமசியா செய்றாகளோ இல்லையோ, என்று தலைக்கறி எடுக்கவும், குடல் கொழம்பு வைக்கவும் கிடந்து அலையும்... அப்பாவும் ஆமா, கழுதய என்ன சமைக்கிறா, என் அக்காவோட மருமகக்காரி உப்பில்ல சப்பில்ல... ஒரு நாள் போயி சாப்டுட்டு அப்படியே கண்ணு கலங்கி போச்சு புள்ள எனக்கு, அய்யோ இவன இப்படி கொண்டு வந்து விட்டுட்டமேன்னு... இரு நான் சிலிப்புக்கொடலு வாங்கியாரேன், அப்படி மஞ்ச, சீரகம் போட்டு பிரட்டுனாப்புல கொடு என்பார் அப்பா... அப்படியே எலும்பும் வாங்கிட்டு வாங்க... சூப்பு வச்சும் கொடுத்துடலாம்... என்பாள் அவள் பங்குக்கு.


அப்பா ஸ்ரீவில்லிபுத்தூர்ல பொறந்து, பெருமாளுக்கு, ஆண்டாளுக்கு சேவுகம் செஞ்சு பெரிய பழுத்த வைணவர் மாதிரி ஆச்சாரமா இருப்பார்... அதனால எங்க வீட்ல எப்பவுமே சனிக்கிழமை ஆட்டுக்கறியோ, கோழியோ எடுப்பதில்லை... அதிலும் முதப்புள்ள நான் சனிக்கிழமை பிறந்ததாலே, இந்த பழக்கம் ரொம்ப நாளா இருந்துச்சு... ஆனா இப்போ புள்ளக மேல இருக்கிற பிரியத்தால, அது கிடக்கு, இவ வாரதே ஒரு நாளோ ரெண்டு நாளோ... இதெல்லாம் பாக்கமுடியுமா... புள்ளகளுக்கு மேலயா சாமி என்பார்... பெருமாளே!ன்னு கண்ணத்திலயும் போட்டுக்குவார். அப்பாவிற்கு பெரிதாய் எந்த கொள்கையும் கிடையாது... மனுஷனுக்கு மிஞ்சி எதுவுமே கிடையாது... ஒரு பொருள் தொலைஞ்சு போச்சா, உடைஞ்சு போச்சா, கொடுத்த காச யாரும் திருப்பித் தரலையா... அவருக்கு கஷ்டமே இல்லை... அம்மா தொந்தரவு செஞ்சாலும் அவரு, எப்படி கேக்கிறது இதப்போய்... அவனுக்கு முடியறபோது கொடுக்குறான் இல்லாட்டி போகுது போ... பழக்கத்துக்குத் தானே கொடுத்தோம் என்பார். அவரு ஏதோ தப்பு செஞ்சுட்ட மாதிரியே மருகுவாரு எப்போதும், அதனாலேயே கூடுதல் கவனிப்பும், பிரியமும் அவம்மேல... பாஸ்கர சேதுபதி என்றும் துரை என்றும் கூப்பிடுவார் எப்போதும்...


இப்போ பாஸ்கர் வந்திருக்கான், ஜெயவிலாஸ் பஸ் பிடித்து வருவதில்லை, கார் எடுத்துக்கொண்டு வருகிறான்... கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் நல்லா வசதியா இருக்கான்... வீட்டுக்கு வரும்போதெல்லாம் வரும் அப்பாவின் நினைவு... எல்லா பேச்சிலும் அப்பா இருப்பார்... அவரின் சில கோமாளித்தனங்களையும் சொல்லி சொல்லி சிரிப்போம்... அப்பாவுக்கு ஒரு பழக்கம்... பேசும்போது அவருடைய உடல்மொழி பிரமாதமா இருக்கும்... உறவுகளில அவருக்கு... சிவாஜி தோத்தாருடா உங்கப்பாகிட்ட என்று சொல்பவர் இன்னும் இருக்கிறார்கள். கைய ஆட்டிக்கிட்டு, கண்ண உருட்டிக்கிட்டு பேசும்போது, அவ்வளவு சொல்வார், உடலிலும், பேச்சிலும் இதெல்லாம் மனசில் இருந்து வரும்... குரலை உயர்த்தி எங்கிருந்தாலும் கைய ஆட்டி, கண்ண சிமிட்டி நடிப்பு பாவணை பண்ணுவார் அவர். எழுந்தவுடன் பல் தேய்த்து குளித்து பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று நினைத்த போது, பாஸ்கர் திரும்பி வந்தான், கையில் துளசியுடன், குங்குமம், மஞ்சளுடன், நீ தூங்கிகிட்டிருந்தயா, அதான் கோயிலுக்கு போயிட்டு அப்படியே குணவிலாஸ் வெங்காய பஜ்ஜியும் வாங்கிட்டு வந்தேன், உனக்கு பிடிக்கும்னு... என்றவன் என் தம்பியாய் இல்லாமல் அப்பாவாய் தெரிந்தான். என்ன பார்க்கிற என்று சொல்லிவிட்டு பல்ல விளக்கிட்டு சாப்பிடு என்றான்... விரித்த பொட்டலத்தில், வாழை இலை சுற்றிய பஜ்ஜியின் வாசம் மனசெங்கும் பரவியது.

Thursday, November 04, 2010

சிவரஞ்சனி என்பது ராகம் மட்டுமல்ல...

அவளின் பெரிய விழிகளும், சற்றே மேடேறிய நெற்றியும், அந்த நெற்றியில் வைப்பர் போல இரண்டு பக்கமும் துடைக்க யத்தனிக்கும் முடியும், அவள் அணிந்திருந்த கருப்பு ரவிக்கை, தாவனியும், முன் நெற்றியில் புருவத்தின் மத்தியை மெலிதாய் தாண்டிய ஸ்டிக்கர் பொட்டும், கழுத்தை ஒட்டி அணிந்திருந்த கருப்பும், சிவப்பும் கலந்த மணிகள் கோர்த்த பாசியின் மத்தியில் தொங்கும் மனசு. தடதடவென்று எல்லாம் மாறி மனசுக்குள் சிம்மாசனம் போட்டு என்னை ஒரு ராஜகுமாரனாய் இருத்தும் வெளி.  

ஏழு மணிக்கு மேல் நான் ஏறிக் கடக்க நினைந்து கிடக்கும் மொட்டை மாடி படிகள் அவளின் வீட்டின் பின் கதவை திறந்து வந்தால் நுழையும் வெளிச்சத்தில் முட்டும். மொட்டை மாடி படிக்கூடுக்கும், அவளின் வீட்டு பின் கதவு சுவரின் இடையே தெரியும் கீத்து நிலா, தண்ணீர் பிடித்து வைத்திருந்த தொட்டி, பக்கெட் என்று எல்லா நிர் நிலையிலும் நிலவையும் அவளையும் பிரதிபலிக்கும். பின் வாசலில் நின்று கொண்டு என்ன என்பது போல பார்ப்பவளின் பார்வையில் கொதிக்கும் நிலா, பக்கெட்டில் வைத்திருந்த தண்ணீர் எல்லாம் சேர்ந்து, காய்ச்சல் கண்டவன் போல, சோர்வாய் இருக்கும். சிரித்து விட்டு உள்ளே செல்வாள், கதவை திறந்து வைத்திருந்தால், யாருமில்லை உள்ளே வா என்ற அர்த்ததின் படி நானும் நிலவும் நுழைகையில், மெத்தென உள்ளங்கை பிடித்து இழுப்பவளின் ஆசையில், காமத்தில், காதலில் அல்லது நேசத்தில் பிறக்கும் இதுவரை உணராத்தொரு சங்கீதம் மாதிரி இருக்கும் இளையராஜாவின் அந்தப் பாடல். அந்த பதின் பருவத்தில் அவளின் சினேகமும், இளையராஜாவின் பாடல்களும் ஒரே கிறக்கம் எனக்கு.

மிக நெருக்கமாய் அந்த பாடல், காதுக்குள் வந்து புசுபுசுவென்று வெம்மையாய் மூச்சு விடும் ஒரு பிரிய சங்கீதம்... பிடரி மயிர் விலக்கி, முளைத்தும் முளைக்காமலும் இருந்த மயிர் அரும்புகளில் படிந்து விட்டிருந்த அன்றைக்கான மஞ்சளும், கிறக்கமான பவுடரும், வியர்வையும் கலந்த ஒரு வாசனையை உணரும் எல்லாமும் தாங்கி நிற்கும் நெருக்கம் அந்த பாடலை கேட்கும்போது ஏற்படுகிறது. இசையும் பாடலும் ஒரு இடைவெளி இல்லாது பின்னுதல் போலே ஒன்றோடொன்று பினைந்திருந்தது. முதலாய் இந்த பாடல் எங்கு கேட்டேனென்று இப்போதும் ஞாபகம் இல்லை, யார் அறிமுகத்தில் வந்திருக்கும் என்று யோசித்தால் அனேகமாய் ராஜேஷாய் இருக்கலாம் என்று வந்து நின்றது. படமாக்கப்பட்ட விதமும், நடிகர்களின் இயல்பான, கவித்துவமான நடிப்பும், பாடல்களின் வரிகளும் நம்மை விடாது துரத்தி ஊழ்வினையாய் வதைக்கிறது.

மிகப்பெரிதாய் பேசப்பட்ட கமல்ஹாசனின் படத்தில் அமைந்த பாடல் இது. படம் கமலஹாசனின் முதல் தயாரிப்பு... இசை இழை இழையாய் சேர்த்து நெய்து பிலிமில் கலந்த ஒலி பிரிக்கமுடியாததாய் இருக்கிறது, படம் முழுக்க ராஜாவின் ராஜபாட்டையில் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவின் புதிய அத்யாயங்களை அவசரமாக எழுதத் தோன்றியது. வைரமுத்துவின் பொன் மாலை பொழுது என்ற நிழல்கள் படத்தில் வரும் பாடலை கேட்டு வானம் எனக்கொரு போதிமரம் என்ற வரியில் லயித்த கமல் விரும்பி கேட்ட கவிஞன் புழுதியில் அனல் பறக்கும் தெருக்களில் இருந்து வந்த வைரமுத்துவின் முதல் வரியே கமல் என்னும் கலைஞனை, கவிஞனை கட்டிப்போடுகிறது. அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற பாடல் சிலிர்க்க வைக்கிறது எல்லோரையும்... இளையராஜா, கமல், பாரதி என்று எல்லோரும் பாராட்ட புதிதாய் மீசை வளர்க்க ஆரம்பித்த கவிஞனுக்கு பெருமிதம்.

என்னை கிறங்க வைத்த பாடல் அந்தி மழை இல்லை, இன்னும் ஒரு விசேஷமான பாடல்... கொலைகார கண்களின் மாதவி, கமலுக்கு பார்வையில்லாததால், தன் பங்குக்கும் கண்கள் வேண்டும் என்று நீள்விழி அழகி மாதவியை தெரிவு செய்தார்கள் என்று நினைக்கிறேன். மாதவி இதைவிட அழகாய் வேறு எந்த படத்திலும் காண்பிக்கப்படவில்லை என்றால் நீங்கள் நம்ப வேண்டும். ஏக் துஜே கேலியே விலும் கூட இத்தனை அழகில்லை அவள். ஓவியம் பழகும் பார்வைத் திறன் இல்லாத கமலிடம் தன்னை தொட்டுணர்ந்து வரைய பழக்கும் பாடல்... அழகில் அழகு தேவதை... என்று தேவகந்தர்வனின் குரலில் மயக்கும் பாடல் கேட்கும் சுகம் அலாதியானது.

குருடர்கள் யானையை பார்த்து சொன்ன கதை எத்தனை மூடத்தனமானது, எவ்வளவு சுவாரசியங்கள் உணரும் விரல்கள், நகக்கண்கள் கூட விழித்துக் கொள்ளும் அதிசயம் நிகழும். தலையில் இருந்து தொடத்தொடங்கியவன் முதலில் தொடுவது கூந்தல், இங்க சறுக்க ஆரம்பித்த வைரமுத்து என்ற கவிஞன் கடைசி வரை சறுக்குகிறான், பாடல் வரிகளில் குறையே இல்லை என்றாலும், பாடல் கண் தெரியாத ஒருவன் தொட்டுணரும் போது வண்ணம் எப்படி தெரியும்...மின்னுவது எப்படி தெரியும்... ஆனால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றினால் மிகச்சிறந்த கவிதையாகும் இந்த திரைப்பாடல். இதில் மிகக்குறிப்பான விஷயம் பிண்ணனியில் வரும், புல்லாங்குழலும், வயலினும் உபயோகிப்படும் இடங்கள், நம்மை கிறங்க செய்துவிடுவது உறுதி. படமாக்கப்பட்ட விதத்தில் கமல் எங்கோ போய் விடுவார்... இந்த படம் சிங்கிதம் சீனிவாசராவினால் இயக்கபட்டது... படத்தின் அவுட்லைனை சொல்லி, திரைக்கதை எழுதி அல்லது எழுத துனையிருந்து முடித்த படத்தின் பெருமையை நாம் எப்படி சிங்கிதம் அவர்களுக்கு தாரைவார்க்க முடியும்... கமலின் பங்கு அதில் நிறைந்தே இருக்கும்...

சிவரஞ்சனியின் சாயலில் இருக்கும் இந்த பாடல், இளையராஜாவின் முற்போக்கினாலோ அல்லது யேசுதாஸின் புரிதலாலோ... கொஞ்சம் வேறு ராகத்தின் சாயலும் இருக்கும் இந்த பாடல்... யேசுதாஸின் குரலில் நம்மை பித்து பிடிக்க வைத்துவிடும், எத்தனை முறை ஒரே நாளில் கேட்க வைத்திருக்கிறது. இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே-வில் வரும் அந்த குழைவு, காத்திரம் இளையராஜா, யேசுதாஸினால் மட்டுமே முடிந்த ஒன்று. ஒரு முறை நான் நாக்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, போர்க் லிப்ட் ஓட்டும் முருகன், இரவில் ஒரு நாள் நல்ல சுதியில் பாடிய இந்த பாடல் என்னை என்னவோ செய்தது. இத்தனைக்கும் அவன் சரியான சுதியில் பாடவில்லை, தாளக்கட்டும் சரியில்லை, ஆனால் அவன் கனத்த குரலில் உடைந்து உடைந்து வந்த சிவரஞ்சனி ராகம் அல்லது இந்த பாடல் ரம்மியமாய் இருந்தது. ஒரு அங்கம் கைகள் அறியாதது என்று பக்கத்துல இருந்து பலசரக்கு கடைக்காரனின் மனைவியைப் பார்த்து சிரித்தவனின் சேட்டையையும் மீறி இனிமையாய் இருந்தது. சிவரஞ்சனியில் அமைந்த எல்லாப்பாடல்களும் சுகமானவையா என்றால் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த பாடல் எந்தவித ஒப்பீடும் இல்லாத ஒரு பாடல் என்றால் அது சும்மா இல்லை.

கொலுசும் அவளும்...

சினுங்கும் பாதம்

 கழன்ற கொலுசு அறியவில்லை

இவள் பாதம் படும் இடங்களில்
தண்ணீர் நிரப்பியிருக்கும்
கிண்ணங்களென தெறித்த இசை
திரண்டு 72 மேளகர்த்தா ராகங்களையும்
நிரவியது

வழியெங்கும் விழுந்து கிடந்த
ஸ்வரங்களின் முனைகள்
மேலும் நகாசித்து
மின்ன ஆரம்பித்தன

படுக்கையறையில் இருந்து
கிளம்பிய இசை தவழ்ந்து
ஊர்ந்து பட்டாசால் வரை
நீண்டது

அவள் குளித்த போது
குளியலறையில் இருந்து
பெருக்கெடுத்து ஒடியது இசை
மனசெங்கும் வெள்ளக்காடு...
****

தவறிய ஒற்றைமணி
வாசிக்காத இசை
கொலுசில் மிச்சமிருக்கும்
****

புதுக்கொலுசு மாயகம்பளம்
பறந்து திரிவாள்
மனவெளியெங்கும்
****

பூக்களில் நெய்த மணிகள்
அணிந்தவள்
சிரிப்பில் இருந்து பொறுக்கிய
பரல்கள் கோர்த்து இசைத்தது கொலுசு
****

Wednesday, November 03, 2010

புதைந்த நகரத்தின் பின்மாலை...

இறந்த நகரத்தின்
கோபுரங்கள் வெளியே
துருத்திக்கொண்டு இருந்தன
விரைத்த உடல்களைப் போல
அடுக்கப்பட்டிருக்கும்
சிதிலங்களின் மேல்
நிராசைகளின் துர்வாடை
கசிந்து கொண்டிருந்தன
அகழிகளும், அரண்களும்
பாதுகாத்த வாழ்விடங்கள்
புதைகுழிகளாயின
பெயரற்று பறக்கும் வட்டமிடும்
பறவைகளின்
அந்தகார ஓலம்
ஊழியின் முன்பான
பேரிடியில் பொருந்தின
செவிகிழிக்கும் பேரமைதியில்
அறுந்த ஞாயிறு
குருதிக்கொப்பளிக்க கிடந்தது
பின்மாலையின் அடியில்

Tuesday, November 02, 2010

அம்மாவின் சீலைகள்...

மாமா தீவாளிக்கு
சீலை எடுத்து தரமாட்டீயலா 
அக்காவுக்கு மட்டும் தானா?
சீலையா இல்ல மாமனா?
என்றவரை தாண்டி
தங்கையை முறைக்கும்
அம்மாவின் காதல்
***
சீலையா  அடுக்கி
வச்சிருக்கிறேனாம் பீரோல...
கூடப்பொறந்தவனுக்கே பொறுக்கல!
அவன்கெடக்கான்
தீவாளிக்கு ரெண்டு சீலையா
வாங்கிக்கோ என்பார் அப்பா 
***
நேர்ச்சைக்கு
அம்மனுக்கு சார்த்த
எடுத்த பச்சைச்சீலையில்  
அழகாய் தெரிந்தாள் அம்மா!
***
அம்மாவின்
பழஞ்சீலைகள்  
தேன்சிட்டுக்களின் உதிர்ந்த
இறகுகளில் நெய்யப்பட்டவை
விரல்கள் முளைத்து 
கிறங்க  தலைகோதும் 
மழை நேர தேநீராய் 
மூளை தொடும் நினைவுகளில்
கை சூம்பி உறங்கும் நான்  
 ***

Monday, November 01, 2010

இரண்டு கவிதைகள்...

எதிரில் வந்தவருக்கு

என் சாயல் தான் இருந்தது
கையில் என்னுடைய
முகவரியைத்தான் வைத்துக்கொண்டு
வருவோர் போவோரிடம்
எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்
வாங்கி பார்த்தவர்கள்
எல்லாம் பழக்கமான இடமாகத்
தான் தெரிகிறது நபரும்
ஆனாலும் சரியாக சொல்ல
முடியவில்லை என்று
சென்றுவிட்டார்கள்
இப்போது அவர் என்னை நோக்கி
வருகிறார்
நான் ஒரு கிண்டலுடன்
நான் தான்யா அது
என்று சொல்ல தயாரானேன்
வந்தவர் விலகி
வேறு பக்கம் சென்றுவிட்டார்
******
அப்பா வந்ததும்

சொல்லிவிடவேண்டும்
உமிக்கார லட்சுமியக்கா மகன் குமார்
என்னை அடிச்சதை
தொடையே சிவந்து போறமாதிரி
கிள்ளினதை
அம்மாவிடம் சொன்னபோது
நீ என்ன பன்னின
ஒன்னும் பன்னாமலே
அவென் அடிச்சானா என்று
என்னையே குத்தம் சொல்லும்
அப்பாட்ட சொன்னாதான் சரி
அப்பா வர தாமதமாக
உறங்கியவனை எழுப்பி
லாலாக்கடை அல்வாவும்
பாலும் குடித்து தூங்க வைக்க
கனவில் அல்வா தின்ற
கதையை
உமிக்கார லட்சுமியக்கா மகன்
குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்
மறுநாள் காலை