Friday, July 30, 2010

விதூஷகம்...

நான்கு விதூஷகர்கள்
என்னை சுற்றி நின்று
கொண்டிருந்தார்கள்
கூத்துக்கான பிரயத்தனங்கள்
செய்து கொண்டு இருந்தார்கள்
என்னைப்பார்த்து
கைகொட்டி சிரிக்கவில்லை
பழிப்புகள் காட்டவில்லை
வெறுமனே நின்று கொண்டிருந்தார்கள்
என் முகத்தின் லட்சனங்கள்
பற்றி அவர்களுக்கு கவலையில்லை
இல்லாத எந்த உறுப்புகள்
பற்றியும் ஏதும் அவர்கள்
கண்டுகொண்டதாக தெரியவில்லை
கிழிந்த என் உடைகளுக்கும்
அவர்களின் உடைகளுக்கும்
பெரிதாய் வித்யாசங்கள் இல்லை
வர்னங்கள் தவிர
குறுகிய என் பாதங்களை
அவர்கள் ஆர்வமாய் பார்த்தார்கள்
அவர்களின் கால் விரல்களுக்கிடையே
தூரங்கள் இருப்பது போல
எனக்கு இல்லாதது
ஆச்சரியமாய் இருந்திருக்க வேண்டும்

இப்போது
மேடையைச் சுற்றி ஓடினார்கள்
ஆடினார்கள் பாடினார்கள்
கையில் வைத்திருந்த
வாத்தியங்களையும் இசைத்தார்கள்
வெறும் சத்தங்களாய் இருந்தது
எனக்கு அது
இசையின் குறிப்புகள்
எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை
அவர்களின் ஊடாய்
தெரிந்த பார்வையாளர்கள்
நிறையவும் ரசித்தார்கள்
வாத்தியங்களின் ஒலிகள்
அழும் பறவையைப்போலவும்
வேட்டையாடப்படும் மிருகத்தின்
ஓலம் போலவும்
இருந்தது போல்பட்டது எனக்கு
ஆனால் மேடையில்
விழுந்த பூக்களும், பணமும்
அவர்களின் கூத்தில்
ஏதோ பிரமாண்டம்
இருப்பதாய் காட்டியது
கூத்து முடிந்து விட்டதாய்ச்
சென்றவர்கள்
பேசி கலைந்தார்கள்
நான் ஆடிக்கொண்டிருக்கிறேன்
லேசான சன்னமான காற்றின் மூலம்
வாத்தியங்களில்
விடிவது போல இசைக்கிறேன்
பார்வையாளர்கள் மத்தியில்
யாரும் இல்லை இப்போது
அவர்களின் தேய்ந்த பேச்சரவம் தவிர

Wednesday, July 28, 2010

மரணத்தின் நுழைவாயில்கள்...

செவிலிகளின்
பராமரிப்பில் விட்ட
அம்மாவின் உடல்நிலையில்
சீரிய முன்னேற்றம் இருப்பதாக
அவளே சொல்கிறாள்
இந்த இடம் அவளுக்கும் எங்களுக்கும்
வசதியாய் இருக்கிறது
சுற்றி மரங்களும் பசுமை போர்த்த
புல்வெளிகளும் பறவைகளின்
கீச்சொலியும்
அவளின் முனகல்களை
பொட்டலம் கட்டி வைத்திருக்கிறது
படுக்கை தின்ற உடம்பில்
வழியும் சீழை
தினம் ஒரு முறை சுத்தம்
செய்கிறார்கள்
வீட்டில் இருந்த போது
செய்த தொந்தரவுகள்
ஏதும் இருப்பதாக சொல்லவில்லை
யாரும்
வாரம் ஒரு முறை
துவாலை குளியலில்
மணத்து கிடக்கிறாள் அம்மா
மனைவிக்கும் இப்போது
போதுமான நேரம் இருக்கிறது
பெண்ணுக்கு வீட்டுப்பாடம்
சொல்லிக்கொடுக்கவும்
கதைகள் சொல்லி உறங்க வைக்கவும்
காலை ஒருமுறையும் மாலை ஒருமுறையும்
போய் பார்த்துவிட்டு வருவது
கொஞ்சம் சிரமமாய் இருந்தாலும்
பரவாயில்லை என்று தோன்றுகிறது
அம்மாவுக்கு இப்போது
சாவைப்பற்றிய பயம் இல்லை
வந்து பார்க்கும் உறவினர்களிடம்
அவசியம் உங்க மக கல்யாணத்திற்குள்
சரியாகி விடுவேன் என்று
நம்பிக்கையை சிரிக்கிறாள்
வழியும் கோழையுடன்
இப்போதே பதிவு
செய்து விட்டேன்
ஈமச்சடங்குகள் செய்யும்
நிறுவனத்துடன்
இறந்ததும் சொந்த ஊருக்கே
 கொண்டு செல்ல வேண்டும்
உறவினர்கள் இங்கே வருவது
உசிதம் இல்லை
அம்மாவின் நம்பிக்கைக்கும்
என் நம்பிக்கைக்கும்
இடையில்
தேதி குறிக்கப்படாத மரணம்
ஒரு பெண்டுலமாய் அசைகிறது

Tuesday, July 27, 2010

இரவுக்காட்சி...

இறந்த பறவையின்
மூடிய
விழிகளுள்
கருகிய வெளிச்சமென
கிடக்கும்
அந்த தெரு

ஒற்றை தந்தியினை
மீட்டிக்கொண்டே
உறங்கி கொண்டிருந்த
இரவின் மீது
ஊர்ந்த நாயின்
மௌன நிழல்
மதில்களை கடந்து
வளரும்

நீல சந்திரனாய்
கடந்து போகும்
வாகனத்தின்
சத்தம்
கூரிய கத்தியாய்
நாயின் மௌன நிழலில்
சொருகும்

உராய்ந்த பாதங்களின்
சூடு குறைய
நடைபாதை
புரண்டு படுத்திருக்கும்
பிளவு காட்டி
இரவை விழுங்க
காத்திருக்கும்
அகண்ட வாய் பிசாசென

துடிப்புகள் அடங்கிய
கடிகாரங்களாய்
நிற்கும் மரங்களின்
பறவைநாவுகள்
பேச்சு மொழி
மறந்திருக்கும்

திசை அறியாத
காந்த முள்ளின்
துடிப்பில்
பொடித்து நொறுங்கும்
இலக்கை காட்டும்
வரை பலகைகள்

நிசப்த ஓலங்களின்
ரகசிய ஒலிக்குறிப்புகள்
அடங்கிய
பேழையில்
அடுத்த நாளுக்கான
நட்சத்திரங்கள்
ஏதுமின்றி
ஒரு துண்டு
வானமும் என்னுடன்
நீலம் பாரித்து
கிடக்கும்

Saturday, July 24, 2010

கோழிக்கறி குழம்பும் பிளஸ் ஒன்னும்...

பாராவின் பிளஸ் ஒன்னுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இது. 

என் அப்பாவுக்கு குடிப்பழக்கம் கிடையாது... எப்போதாவது என்னோட பெரியப்பா மிலிடரி சரக்கு கிடைச்சிருக்கு வெங்கிடசாமி, உங்க வீட்டுல கோழி அடிக்க சொல்லுங்க... சுள்ளுன்னு ஏத்திக்கிட்டு நல்லா தின்னுட்டு குப்புற படுத்து தூங்கலாம் என்பார்... அய்யய்யோ வேணாம் சாமி என்பார் அப்பா... பித்த உடம்புங்க எனக்கு ஒத்துக்காது... அட பரவாயில்லைங்க... குடிக்கலாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு தினமுமா குடிக்க போறோம்... ஒரு XXX ரம் பாட்டில் நம்ம மிலிடரி பெருமாள் கொண்டு வந்திருக்கார் , குதிரைக்கு ஊத்தறது சும்மா உடம்பெல்லாம் உலுக்கு எடுத்த மாதிரி சுகமா தூங்கலாம் என்று வற்புறுத்துவார்... அப்பா சந்தையில போய் நல்ல விடககோழியா பிடிச்சிட்டு வருவார்... குடிக்கிறாரோ இல்லையோ அப்பா நல்லா சாப்பிடுவார்...


புழக்கடையில உட்கார்ந்து என் அம்மாவும் பெரியம்மாவும், கோழியின் கால்களை பிடித்துக் கொண்டு அறுத்து, அதன் துடிப்பு அடங்கும் வரை காத்திருந்து, கோழியின் மயிறு பிடுங்குவார்கள்... மொத்தமா மழிக்கப்பட்ட கோழி தன் அடையாளங்களை இழந்து பரிதாபமாய் கிடக்கும்...லேசாய் துடிக்கும் இரப்பை பகுதியும் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கும். உரித்த கோழியின் மேல் அரைத்த மஞ்சளை தடவி, பொறுக்கி எடுத்த காய்ஞ்ச சுள்ளிகளை எரித்து வாட்டுவார்கள்... கோழியின் உடம்பில் சிறு சிறு வெடிப்பு ஏற்பட்டு எண்ணெய் மாதிரி வழியும்... ஒரு விதமான மகோன்னதமான வாசம்அடிக்கும்...



ஒரு பக்கம் பூண்டு உரித்துக் கொண்டும், சிறு வெங்காயம் உரித்து கொண்டும் நாங்களும் எங்கள் கிழவியும் கதை பேசிக் கொண்டிருப்போம், கிழவி எங்க பெரியப்பாவை திட்டி கொண்டிருப்பாள், உங்கப்பனையும் கெடுக்கறாரு இந்த பேங்க்காரரு... அவருக்கு தான் உடம்புக்கு ஆகாதுல்ல... சொல்லாகூடாதா என்பாள்... அந்த மனுஷன் கேட்கிற ஜாதியா என்ன... எனக்குன்னு பிடிச்சு கட்டி வச்சியே... குமாரி புருஷன மாதிரியே இருந்துட்டா எந்த பிரச்சினை இல்லை என்பாள் என் பெரியம்மா... என் அம்மாவுக்கு பெருமை தாங்காது... என்க்க உன் வீட்டுக்காரரு பாங்க்ல வேலை பார்க்காறு, கை நிறைய சம்பாதிக்கிறாரு... உனக்கென்னா. என்பாள் அம்மா...



காய்ந்த மிளகாய் வத்தலையும், மல்லியையும் லேசா எண்ணெய் போடாம வறுத்து... மை போல அரைச்சு... தனியா எடுத்து வச்சுடுவா பின்னி... தேங்காய் அரைக்க, நான் தான் தேங்காய் உரிச்சு... நாரெல்லாம் பக்குவமா பிரிச்சு தரனும்... தேங்காய் உடைக்க ஆரம்பிப்பேன்... சத்தம் கேட்டாலே வந்துடுவாங்க... தம்பியும், ஜெயந்தியும்... தேங்காத்தண்ணி குடிக்க... உடைச்ச தேங்காயில சில்லு போட்டு, பின்னிக்கு குடுக்க அலுத்து கொண்டே அரிவாள் பின்னி... அவள் அம்மி குலவிய உருட்டுற அழகே தனிதான், அதிலும் அரைச்ச தேங்காய வழிக்கும் போது அவளோட லாவகம் வேற யாருக்கும் வராது...

இதுக்குள்ள சிவத்தம்மா, கோழி அறுக்கன்னு இருக்கிற அருவாமனைய எடுத்துட்டு கோழியின் எழும்ப நொறுக்காம துண்டு பொதுவா... கொஞ்சம் பெருசாவே போடுதே... கோழி ரொம்ப இளசா இருக்கு... எலும்பு நொறுங்கினா... குடிச்சிட்டு கண்ணு மண்ணு தெரியாம சாப்பிடும் உங்க அய்யா தொண்டையில மாட்டிக்க போகுது என்பாள் கிழவி...சரித்தா..என்பாள்..



அடுக்களையில வச்சு அறுக்காம அங்கனகுழிக்கிட்ட வச்சு தான் அறுக்கணும்... கவிச்சு அடுக்களைக்குள்ள அறுக்கப்பிடாதாம்...

உரிச்ச வெள்ளைபூடை கொஞ்சம் நசபுசன்னு நகட்டிக்கா, கொஞ்சம் இஞ்சியைவும் தட்டிக்க தாயி... என்பாள் சின்ன மகளிடம் அவ்வளவு பிரியம், எனக்கும் திலகம் பின்னிய ரொம்ப பிடிக்கும், அவ்வளவு அழகா இருப்பா பின்னி.

மையா அறைச்சுபுடாதா... குழம்பு கெட்டி படாதமாதிரி ஆயிடும் என்பாள் கிழவி... கிழவியின் பக்குவம் அம்மா பெரியம்மாவின் கைகளில் மணக்கும்... எல்லா சமையலிலும்... நல்லெண்ணெய் விட்டு அரிந்து வைத்திருக்கும் சிறுவெங்காயத்தை போட்டு வதக்குவாள் அம்மா... நல்லெண்ணையும், வெங்காயத்தின் மனமும் கிறங்க வைக்கும் யாரையும்... இதுக்கிடையே மணிப்பய வந்து ஆச்சான்னு பெரியப்பா கேட்க சொன்னாரு என்பான்... கோழி அறுத்து வச்சிருக்கு பச்சைய திங்குறாரான்னு கேளு உங்கபெரியாப்பாவ...



கோழி இன்னும் கூப்பிட்டு அடங்கலை அதுக்குள்ளா கொண்டான்ன எங்க போறது, பொறுக்க சொல்லு... என்றவுடன்... டவுசரை ஒரு கையில பிடிச்சிக்கிட்டே ஓடுவான்... மணிப்பய... அவனுக்கு அடுப்படி வேலையே பிடிக்காது...

வெங்காயம் வதங்கியதும் அரைச்ச மசாலாவையும், தட்டி வைத்துள்ள வெள்ளைப்பூடையும், இஞ்சியையும் ஒன்னா போட்டு, கொஞ்சம் தட்டி வச்ச மிளகையும், சீரகத்தையும் போட்டு கொதிக்க வைப்பாள் அம்மா... ஒரே ஒரு நாட்டு தக்காளி மாத்திரம் சேத்துக்குவாள் அம்மா... பெரியம்மாவுக்கு... மூக்கு விடைச்சிக்கிட்டு... குமாரி நல்லா வாசனையாத்தான் இருக்கு... சிவத்தம்மா ஆத்தா... கோழி வயத்துக்குள்ள ஆரஞ்சு கலருல.. முட்டை மாதிரி இருக்கே அத என்னத்த பண்றது என்பாள்... அடி கூறு கெட்டவளே அது தாண்டி ரெண்டு நாளைக்கப்புறமா வரபோற முட்டை... இது தெரியாத உனக்கு... எனக்கு அந்த முட்டை ரொம்ப பிடிக்கும்... அவ்வா அது எனக்கு வெந்தவுடனே குடு அவ்வா... இவ்வளவு வேலை செய்யிற எங்களுக்கு... உனக்கில்லாமையா... வாங்கிக்கோ... அவங்களுக்கு... கறிய அனுப்பிட்டு உனக்கு.. இதை கொடுத்துடறேன்... யாருக்கும் சொல்லக்கூடாது என்பாள் கிழவி...



நல்லெண்ணையில் அறுத்த கோழி துண்டுகளை போட்டு கொஞ்சம் தனியா வதக்கி கொள்வாள் அம்மா, அப்பா தான் வாசனையா இருக்குமாம்... வதக்கின கோழி துண்டுகளை இப்போ கொதிக்கிற குழம்புல போட்டு மொத்தமா கூட்டி வைப்பா... கல்லு உப்பை போட்டு கரைத்து உப்பு பார்க்க நான் தான் எப்போதும்... இவனுக்கு தான் நாக்கு நீளம் சரியாய் சொல்லிபுடுவான்... இங்க வாடா ராசா இதுல உப்பு இருக்கா பாரு என்று கரண்டியில் எடுத்த குழம்பை உள்ளங்கையில் ஊதி ஊதி ஊத்துவாள், நக்கி பார்த்து சரியாயிருக்கு அவ்வா என்றவுடன்... ஆத்தா இவனுக்கு ஒரு வட்டையில கொழம்பு கொதிக்கையில கொஞ்சம் எடுத்து நல்லெண்ணெய் ஊத்தி கொடு சூப்பு மாதிரி குடிக்கட்டும்... நெஞ்சு சளிக்கு நல்லது... ராத்திரி எல்லாம் கர்புர்ருன்னுஇருமுறான்...



வட்டியில் வரும் குழம்பில் மிதக்கும் நல்லெண்ணெய் துளிகளில் என் முகம் தெரியா குடிப்பேன் சந்தோசமாய்... கொதித்த கோழிகுழம்பு திரும்பவும் ஆட்களை இழுத்து வரும் என்ன ஆயிடுச்சா... என்று பெரியப்பாவே வருவார்... இந்தாங்க என்று பெரிய துண்டங்களாய் பார்த்து எடுத்து கொடுப்பாள் பெரியம்மா... வாங்கி கொண்டு வெங்கிடசாமி... வாங்க... கிளாசுல ஊத்துங்க... என்பார் பெரியப்பா..

அப்பா அநியாயத்திற்கு கூச்சபடுவார்... எனக்கு இந்த அளவெல்லாம் தெரியாதுங்க... நீங்களே ஊத்துங்க என்றவுடன் நான் ஊத்தவாப்பா என்ற என்னை முறைத்து போடா பெரியவங்க மருந்து சாப்பிடும் போது நீங்கெல்லாம் வரக்கூடாது...

இது மருந்தில்ல எனக்கு தெரியும்... இது குடிச்சா நீங்க நிறைய பேசுவீங்க... வேட்டி விலகுனது கூட தெரியாம தூங்குவீங்கன்னு... பெரியம்மா சொன்னாங்க... என்றால் போடா கீரை இது மருந்து தாண்டா... என்று கதவை மூடி கொள்வார்கள்... அப்புறம் கொஞ்சம் சத்தம் கேட்கும்... சிரிப்பார்கள்... யாரையோ திட்டினார் பெரியப்பா கெட்ட வார்த்தையில... அதன் பிறகு... அப்பா வேப்பை மரத்த பிடிச்சிக்கிட்டு வாந்தி எடுத்தார்... என்ன குமாரி உங்க வீட்டுக்காரரு மூடியில தான் ஊத்தி கொடுத்தேன்... அதுக்கே பிரட்டுதுன்னு போய் வாந்தி எடுத்துக்கிட்டு இருக்காரே... என்பார்...

அப்பா கண்கள் கலங்கி, சிவந்து போய் வருவார் எனக்கு சோத்தப்போடு சாப்பிட்டுட்டு தூங்குறேன்... என்றவர் சாப்பிட்டுவிட்டு அசந்து தூங்கி விடுவார்... சாயந்தரம் வரக்காப்பிக்கு தலைய பிடிச்சிக்கிட்டு அடுப்படிக்கு வரவரு... இனிமே இவர் என்ன சொன்னாலும் குடிக்க கூடாது என்பார்... அப்பா சாகும் வரை ரம் என்றாலோ அல்லது எந்த லாகிரி வஸ்துவின் பெயர் சொன்னாலும் ஒங்கரிப்பார்...

நமக்கு எல்லாகாரண காரியங்களுக்கும் போதுவான நியாயங்கள் இருக்கிறது... நியாயங்கள் தீரும் வரை குடிக்கலாம், வாந்தியும் எடுக்கலாம்... உமாவின் (அல்லது உமா மாதிரியானவர்களின்) புறக்கணிப்பை நினைத்து புலம்பலாம்... என் போன்றவர்கள் எப்பவுமே நிதானத்தில் இருப்பதில்லை என்பதால் தனியாக செலவழித்துகுடிப்பதில்லை...

Friday, July 23, 2010

மரப்பாச்சி...

மரங்களைப் பற்றி

உங்களுக்கு
தெரிந்திருக்க கூடும்
அல்லது
தெரியாதிருக்க கூடும்

உதிர்காலங்களில்
குப்பை சேர்த்த காரணத்திற்காய்
நீங்களோ அல்லது
அவற்றை பெருக்கச் செய்த
வேலைக்காரியோ
சபித்திருக்க்கூடும்

சன்னலுக்குள் நுழையும்
அல்லது
மேலே ஒளி ஒலி கடத்தும்
கம்பிகளுக்கு இடைஞ்சலாய்
இருந்திருக்கும் நேரங்களில்
கரங்களை இழவறுத்த கதைகள்
பற்றி நீங்கள் பேசியிருக்க்கூடும்

பறவைகளின் எச்சங்களும்
சப்தங்களும் உங்கள்
பளிங்கு விழுங்கிய தரைகளை
அசுத்தம் செய்த்தற்கோ
அல்லது
புலர்காலையில் உங்கள்
உறக்கத்தை கெடுத்ததற்கோ
கல்லெறிந்து
காயப்படுத்தி இருக்கக்கூடும்

உங்கள் கட்டிடங்களின்
பக்கவாட்டு சுவர்களையோ
சுற்றுச்சுவர்களையோ
அதன் வேர்கள் ஊடுருவி
அசைத்திருக்கலாம் என்ற
காரணத்தினால்
மரம் வெட்ட வேண்டி
அழைத்த ஆட்கள்
கூலி அதிகம்
கேட்ட்தற்காய் அலுத்து
கொண்டிருக்க கூடும்

எதுவாய் இருந்தாலும்
இப்போது
இங்கு மரம் இல்லாதிருப்பது
உங்களுக்கு எப்படியோ
எனக்கு நீங்கள்
குறியற்று இருப்பதென
தோன்றுகிறது

கொடுக்கில் புணரும் மிருகம்...

துக்கங்களின் குவிமையத்தில்
இருந்து விலகாமல் இருக்கிறது
லௌகீகம்
குவிந்த வெளிச்சத்தில்
பொசுங்கி கருகுகிறது
நீ பட்டியலிடும்
தேவைகள் நிரப்பிய காகிதம்
விலகாமல் ஓடிக்கொண்டிருக்கும்
புவி ஈர்ப்பின் கதியில்
சுழன்று கொண்டிருக்கும்
இசைத்தட்டு திரும்ப திரும்ப
முள் கீறி கீறி பாடுகிறது
ஒற்றை வரியிலான துயரப்பாடல்,
குருதிகளால் ஆனது
காற்புள்ளிகளும், முற்றுப்புள்ளிகளும்.
***
மூடியிருக்கும் கதவுகளை கண்டால்
பயம்பிடித்துக் கொள்கிறது
நான்கு பக்கமும் இறுக்கும்
சுவர்களை
இரண்டு கால்களையும்
இரண்டு கைகளையும்
கொண்டு நிறுத்துகிறேன்
உத்தரம் இறங்குகிறது
தலையைக் கொண்டு தாங்குகிறேன்
 கீழே நழுவும் பூமியை
என்ன செய்வது என்று தெரியாமல்
பிடி தளர்த்துகிறேன்
ஒரு பள்ளத்தாக்கு என்னை
விழுங்குகிறது
வெளி விழுந்து துடிக்கிறது
என் வால் மாத்திரம்
***

Wednesday, July 14, 2010

புறநகர் வீடு...

இரவுகளின் இசையை
பழகிக்கொண்டிருக்கிறது
தெருவென மாறிக்கொண்டிருக்கும்
ஒற்றைவழிப்பாதை

வயல்களில்
வர்த்தகப்பயிர் என
முளைக்கத் தொடங்கியிருந்தது
அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள்
குடிகாரனின் பாதச்சுவடுகள் என

பகலின் தனிமையில்
இரவுக்கான அடர்த்தி மசி
அப்பபட்டிருந்தன
புதிதாய்
குடிவந்தவர்களின் கண்களில்

இரைச்சலில் இருந்து
வந்தவர்களின் செவிகளில்
கேளா ஓசைகள்
காத்துக்கருப்புகளாய்
ஓலமிட்டு பயமுறுத்தின

எஞ்சிய கருவ மரங்களும்
பிளவு பட்ட பூமியும்
நீர்மை
மரணக்குழிக்குள்
இருப்பதை சொல்கின்றன

புதிதாய் வர்ணமடித்த
சுவர்களின் வெம்மையில்
கடன் வாங்கி கட்டிய
சொந்த வீடு பெருமை
ஆவியாகும்

Monday, July 12, 2010

காலத்திரிபு...

பெருந்திணைக்காமனின்
பொக்கை விழுந்த
சிரிப்பின் இடையூடே 
தடித்த நாவின்
அடியில் கிடக்கிறது
அகங்கார வளைவுகளுடன்
முலை திறந்த
குமருகளின்  காலம்

களியில்  ஊர்ந்து
ஆடியவனின் உன்மத்தத்தில்
கொதித்து அடங்கிய இரவு
இவனுடன் முயங்கி கிடந்த
நாட்கள்
காவி ஏறின பற்கள் 

விரகத்தில் சிவந்து
தாமரைகளை கொப்பளிக்கும்
தடாகம் வளித்து
நீந்தியவனின் கனவில்
முனகி புரண்டு படுத்த
பசலை படர்ந்த கொடிகள்
துவழும் கொம்பின்றி 

கச்சை கழற
கண் கிறங்கி கிடந்தவள் மேல்
உடுப்பென  கிடந்தவனின்
தினவு பொத்தல் விழுந்த
படகாய் கரை கிடக்கும்
இப்போது

இயக்கம் அற்ற கலமென
நினைவு தெப்பத்தில்
தக்கைகளாய் மிதக்கும்
பெருங்காமன்
கதைகளில் நிகழ்கிறது
கலவிக்கான காரியபலிதம்  

Saturday, July 10, 2010

அவள்

டிராஃபிக் சிக்னலில்
நின்ற போது
அருகிலும், முன்பாகவும்
நின்றிருந்த வாகனங்களின்
கண்ணாடியை இறக்க சொல்லி
காசு கேட்டு கொண்டிருந்தாள்
ஒரு திருநங்கை
உதடு பிதுக்கியவர்களையும்
இல்லை என்று கை விரித்தவர்களையும்
விடுவதாயில்லை அவள்
விரும்பி கொடுத்தவர்களும்
விரும்பாமல் கொடுத்தவர்களின்
நாணயங்களில் வித்யாசம்
இருக்கவில்லை அவளுக்கு
எல்லோரையும் தொட்டு
திருஷ்டி கழித்தாள்
விலகி முந்தானையையும்
இடுப்பையும் பார்த்தவர்களின்
எச்சில் விழுங்குதலும் கடந்து
என் வாகனத்தை அடையும்முன்னே
பச்சை விளக்கு எரிய
நிம்மதியாய்
வாகனத்தை நகர்த்தினேன்

Friday, July 09, 2010

பால்வெளி...

மலைகள் நெய்யும்
வெள்ளைத்துணி
தறியோட்டச் சத்தமும்
நெய்பவனின் வயிறும்

ஒற்றை சூலி
உடைந்து வழிகிறது
பனிக்குடம்
மிதக்கிறது உயிர்கள்
ஜகத்ரட்சகி

நரைத்த மயிர்
அடங்கா திமிர்
கிழட்டு வேசியின்
காமவெளி

சுவாசப்பை
சுருங்கி விரியும்
நுரையீரல்களில்
பிதுக்கும்
பிராண வாயு

சமுத்ரவெளியில்  
பொறுக்கியது
வலமா இடமா
காற்றை நிரப்பி
சத்தமிடும் வெண்சங்கு

தட் தட்டுன்னு குளிச்சா
குணமாகும் கேட்டு
ஹோவென்று
சிரிக்கும் பைத்தியம்

குவளைத் தேநீர்
குடிக்க காத்திருக்கிறேன்
விளிம்பு தெரியாமல்

Saturday, July 03, 2010

கழுத்துப்புண்...

கழுத்து புண்ணின்
வழி உயிர் உறிஞ்சும்
ஈக்களை விரட்ட
திராணியில்லாமல் வீசும்
குஞ்சலம் முளைத்த வால்

அசைந்து கடக்கும்
பள்ளங்களில் அழுத்தும்
நுகத்தடி பிதுக்கிய
சீழ் வழிந்து தரை விழும்
மண் எரிந்து கரியாகும்

கழுத்து மணிப்பட்டை
சாவுப்பட்டைஎன இறுக்கும்
ஆடும் மணிச்சத்தம்
சிதறிச்சொருகும்  
காதுக்குள் சயனைடு ஊசிகள்

மருந்தென தடவும்
களிம்பும் வழுக்கும்
நுகத்தடி
நகராது கிடக்கும் வண்டி
கடக்கவேண்டிய தூரம்
எட்டாப்புள்ளியாகும்

சொடுக்கும் சவுக்கின்
நுனி 
அரவங்கள் என  தீண்டும்
உடலெங்கும் விடமேறி
நுரை தள்ளும்

களைத்த கால்கள்
உறைந்து நிற்கும்
வருத்தி துளைக்கும் 
தார்க்குச்சியின் முனையில்
பொலபொலவென உதிரும்
கையில் பிடித்த குறுமணல்

Friday, July 02, 2010

நிறப்பிரிகை...

வண்ணத்துப்பூச்சி வேண்டும்
என்று தொலைபேசியில்
கேட்டவளுக்கு
எப்படியாவது பரிசளித்து
விடவேண்டும்
அதுவும் அவள்
ரொம்ப நாட்கள் வச்சிக்கிற மாதிரி
இருக்கணும் என்று
சுவரில் ஒட்டுவது போலுள்ள
தத்ரூபமான வண்ணத்துப்பூச்சிகளை
வாங்கி அனுப்பினேன்
அழகிய பரிசுப்பொட்டலத்தில்
கடல் கடந்து
கையில் கிடைத்ததும்
ஏம்ப்பா மூடி வச்ச?
மூச்சு விட முடியாம
வண்ணத்துபூச்சி எல்லாம்
செத்து போச்சுப்பா... 
என்றாள்
வண்ணத்துப்பூச்சிகளின் உலகம்
அறிமுகம் ஆனது எனக்கு...