Thursday, April 29, 2010

ஒரு அந்தியும், நானும் இரண்டு புறாக்களும்

ஒரு அந்தி,
இரண்டு புறாக்கள்.
ஒன்றை மற்றொன்று
துரத்தி மாடியின்
கைப்பிடி சுவரில் நகர்ந்து கொண்டே
கூழாங்கற்களை உருட்டுகிறது குரலில்

பெட்டை தன் பின் கொசுவ
இறகுகளை விரித்து கொண்டே
முன் செல்கிறது
பின்னால் செல்வது
ஆண் புறாவாய் இருக்கக் கூடும்

ஒரு வினோத சப்தம் எழுப்பி
தண்ணீர் தொட்டியின் அடியில் செல்கிறது
பறக்க எத்தனிக்கவில்லை
முகிழ்ச்சியும் நிகழ்ந்தபாடில்லை
விழிகளை உருட்டி உருட்டி
சுற்றுமுற்றும் பார்க்கிறது

பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கலவியோ கவிதையோ
வாய்க்க பெறுவது என்னவென்று தெரியாமல்

Wednesday, April 28, 2010

திணைமயக்கம் - 2

நான் எழுதிய திணைமயக்கத்திற்கான பதிலாய் அல்லது ஒரு பதிலியாய் வந்தது எனலாம், இந்த மறுசீரமைப்பு கதை. எழுதியவர் யாரோ ஒரு அனானி, நான் பின்னூட்டம் எழுதுவது போல மிகப்பெரிதாக, நான் கதை என்று எழுதியதற்கு இப்படி ஒரு கதை எழுதியது என்னை வியப்பில் ஆழ்த்தியது, இது நான் எழுதியதை விட இன்னும் அழகாக, கமலாவையும், ஸ்ரீனிவாசராகவனையும் மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது என்று தோன்றுகிறது, எந்தவித ஜோடனைகளும் இல்லாமல், நேரடியாக கதை சொல்லும் முறை எனக்கு இன்று வரை வாய்க்கவில்லை... எழுதியவர் பெயரை குறிப்பிடாததால், நான் யார் இதை எழுதியது என்று சொல்ல முடியவில்லை. ஒரு அனானியை எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை... அவரின் இந்த கதையை நான் என் பதிவில் போடுவது அவர்களுக்கும் உடன்பாடே என்று நம்புகிறேன்.


- ராகவன்

நான் முதல் முறை கமலாவை பார்த்தபொழுது எனக்கு அவளை பிடிக்கவில்லை. சுரேஷ் வீட்டில் அவனோடு பேசிகொண்டிருந்தாள். "அவர் அசோகமித்திரன் இல்லை சோகமித்திரன் " என்று அவன் அடித்த ஜோக்கிற்கு கண்ணில் நீர் வர அவள் சிரித்தது கொஞ்சம் அபத்தமாக இருந்தது. பின்னர் சுஜாதா, கணையாழி பற்றி பேசுகையில், கொஞ்சம் புத்தகம் படிப்பவள் என்று புரிந்தது கூட என் அபிப்ராயத்தை அவ்வளவாக மாற்றவில்லை.

அவள் சென்றபின், இதோ பாருடா கல்கில கமலா எழுதின கதை என்று சுரேஷ் புத்தகத்தை நீட்டவும், ஒரு விதமாக என்ன எழுதி கிழித்திருக்கபோகிறாள் என்று தான் படித்தேன். . ராமேஸ்வரத்தை சொந்த ஊராய் கொண்டவன்... அமெரிக்காவில் பல வருடம் படித்து முடித்து வேலை பார்த்து விட்டு வந்தவன் ராமேஸ்வரம் மாறி விட்டதை பார்த்து மனம் கனத்து அமெரிக்க திரும்புவதாய் இருக்கும்... அந்த முடிவு பற்றி இன்டர்நெட் இல்லாத அந்த காலத்தில் வரிந்து கட்டி என்னால் பின்னூட்டம் எழுத முடியாதபோதும், ஒரு முழு தாள் நிறைய தோன்றியதையெல்லாம் எழுதத்தான் செய்தேன்.

அவள் வீட்டு மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டு அவள் வருவதற்காக காத்திருக்கும் போதெல்லாம் எப்பொழுது முதல் முறையாக கமலாவை பிடித்தது என்று யோசித்திருக்கிறேன் . தியாகராஜரையே பாடும் எங்கள் காலனியின் ராமர் கோவில் ஊஞ்சலில் அவள் புரந்தரதாசரின் ஒரு கிருதியை பாடிவிட்டு, என்னை பார்த்தவுடன் சிரித்தவாறே "தணல் மேல் நெய் மாதிரியான உருக்கம் இல்ல ?" என்று இயல்பாக மெழுகை உவமையாய் சொல்லாமல் நெருப்பாக பற்றி கொள்ளும் மணமான நெய்யை சொல்லி கேட்டபொழுதோ? இல்லை, சுரேஷ் வீட்டில் அடுத்த முறை சந்தித்தபோது இந்த தென்னங்கீத்துக்கு ஊடால தெரியற வானம் எவ்வளவு அழகு என்று அவள் சொன்னவுடன், சுரேஷ் முழு நிலா என்று என்னவோ சொல்ல வந்தபோது, முழு நிலா திகட்டும், எனக்கு தென்னங்கீத்தினூடே தெரியற பிறை நிலாதான் வேணும் என்று நான் சொன்னதும் ஒரு விதமான பிரமிப்பு கலந்த ரசனையோடு என்னை பார்த்தபொழுதோ தெரியவில்லை.

காலை மாலை என்று எப்போதெல்லாமோ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அவள் வீட்டிற்க்கு போவேன். ஸ்ரீனிவாச ராகவன் என்று நீட்டி முழக்கி தான் என்னை கூப்பிடுவாள் . எவ்வளவு அழகான உன் பெயரை சுருக்குவது பெரிய குற்றம் என்பாள்.

கமலாவின் பல பரிமாணங்கள் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது.

பக்கத்துக்கு வீட்டில் சொர்ணக்கா என்று அவள் அழைக்கும் காதில் பாம்படம் போட்டிருக்கும் ஒரு அறுவது வயதான பெண்மணியிடம் பார்ப்பன பாஷையே தென்படாமல் சுவாரஸ்யமாக பேசிகொன்டிருப்பாள்.

காலையில் ஒரு நாள் சைக்கிளில் நான் அந்த தெருவில் போகும்பொழுது, தரையில் விழுந்திருந்த பூக்களை அவள் பொறுக்கி கொண்டிருப்பதை பார்த்து நிறுத்தி "என்ன பண்ற" என்றேன் ஆச்சரியத்துடன்.

"கிள்ளி பறிக்கவேண்டாம், அழுத்தமா நார் போட்டு கட்ட வேண்டாம், ஊசில குத்த வேண்டாம் பவளமல்லி மட்டும் தான் நான் மாலை கட்டறதுக்கு எடுப்பேன்" என்ற போது நிச்சயம் அவள் என் தோழி தான் என்று தோன்றியது.

 "மதுரைல இன்னிக்கு நான் புதுசா ஒரு கோவில் பத்தி கண்டு பிடிச்சேன், அதாவது அந்த கோவில் கண்ணகி மாதிரி ஒரு பெண் தெய்வம் சம்பந்தப்பட்ட கோவில், அந்த பெண் எப்படி தெய்வமானாள் அப்படிங்கறத அக்கு வேறா ஆணி வேறா அலசி அதுல ஒரு தீசிஸ் எழுதபோறேன் " என்றாள் ஒருநாள் .

"உன்னை பத்தி ஸ்ரீனிவாச ராகவனும் சில பெண்களும்னு கதை எழுதபோறேன்" என்றாள் மற்றொருநாள் .

"நீ சரியான ஒரு காதலன் தான் இல்ல?" என்று நான் ஒரு பக்கத்து வீட்டு பெண்மணியை பற்றி சொன்னபோதும் , அவளின் இன்னொரு தோழி இடம் நான் சற்றே வழிந்தபோதும் கலாட்டா செய்தாள் .

"இந்த orion belt இருக்கு பாரு இது என்னோட நட்சத்திர கூட்டம் . ஒரு திண்ணை, அதிர்ஷ்ட வசமா எதிர்ல காலி மனை எல்லாத்தையும் விட equator க்கு பக்கத்தில இருக்கற ஊரு , வருஷம் பூரா என்னால இந்த நட்சதிரங்கள பாக்க முடியுது தெரியுமா"ன்னு அவள் கேட்டதிலேந்து இப்பொழுது கூட அந்த மூன்று நட்சத்திரங்களையும் ஒரு கோடாக பார்த்தால் அவளைத்தான் நினைத்துகொள்கிறேன்.

ஒரு மழை நாள் பிற்பகல் , சாரலை ரசித்தவாறே திடீரென "எனக்கு வரன் வந்திருக்காம், யூ.எஸ், ல இருக்கானாம் சாப்ட் வேர்ல இருக்கானாம், ஜாதகம் எல்லாம் பொருந்தி போறதாம்" என்று நாளைக்கு நம்ப சினிமா போகலாம் என்பது போல சொன்னாள் . அமெரிக்க போவது கொல்லைபுறம போவது போன்று இல்லாத அந்த எண்பதுக்களில் எனக்கு அது மெலிதான அதிர்ச்சியை கொடுத்தது . "அமேரிக்காவா?" என்றேன் .

அவள் கண்கள் என்னை முதல் முதலாக பேசும்போது சந்திக்காதது அவளுக்கு அதில் இருக்கும் குழப்பத்தை தெரிவித்தது .

"உனக்கு பிடிக்கலன்னா வற்புறுத்துவாங்களா என்ன?" என்றேன் .

"மாட்டாங்க! என் முடிவுக்கு மதிப்பு கொடுப்பாங்க! என்றாள் "

"sanfrancisco equator க்கு பக்கத்திலையா இருக்கு? " என்றேன் யோசனையாக .

"இங்கே இருக்கும் வெள்ளை கலர் பாண்டியன் பஸ் , அவிங்க இவிங்க தமிழ் , கஞ்சி போட்ட பருத்தி புடவை , ரோட்டோர இட்லி என்று மாயும் கமலாவிற்கு அமெரிக்க வரன் " என்றேன் - குரலில் தாக்கமும் ஆதங்கமும் தெரிந்ததோ? .

நேர் பார்வையில் புன்னகை தெரித்தது.

"திணை மயக்கம் எனக்கா உனக்கா ?" என்றாள் கமலா

Tuesday, April 27, 2010

பறவையின் நோக்கு...

மேலிருந்து கீழ்நோக்கி
தேடும் பறவைகளின்
கண்களில் நீர்நிலைகளோ
அடர் மரங்களோ அல்லது
ஓடும், ஊரும் இரையோ தட்டுப்படலாம்
அல்லது
வற்றிய ஊற்றுகளோ,
மழிக்கப்பட்ட காடுகளோ,
கரையில் இறந்து ஒதுங்கும்
மீன்களோ, வாய்பிளந்து இறந்து கிடக்கும்
கால்நடைகளோ தென்படலாம்
அல்லது
பசிக்காத வயிற்றில் செரிமானம் ஆகாமல்
இறைந்து கிடக்கும் உணவு தானியங்களோ
அழுகி கிடக்கும் உடல்களோ
ஒரு சேர காணக்கிடைக்கலாம்
அந்த கொலை பறவைகளும்
கழிவகற்றும் பறவைகளும்
இன்ன பிற பறவைகளும்
எதற்காகவோ தரை இறங்குகின்றன
மீண்டும் எழும்பி பறக்கின்றன
தத்தமது கவிதாதர்மங்களின் விதி எழுதி
முற்றுப்புள்ளிகள் வைக்காது...

கொட்டுக்கலமிசை...

வட்டறுத்து வலம் திருத்தி
சுட்டகலும் பிணி
கொன்று திங்கும்
எஞ்சியதாய் தின்று செழிக்கும்
செந்நாய்கள்
உலரும் கணங்களின் 
அரக்கப் பிடியுள் கொழுத்த இரவும் 
அண்டி ஒடுங்கிய
பினைக்காமன்
எரித்த மூன்றாம்
வாசல் திறந்தவனின் உட்புக
மந்தி கரையேறும்
செந்தீந்தழல் படுகை
கடந்து கரைந்த அகவிழி
திறந்த
புல்லான், புலையன், புண்கண் புரையோடி
நல்லார் பொல்லார் பொசுக்க
நமக்கென மீறும் பொடி
அப்பிய உடலெங்கும்
அதிர்ந்து இசைக்கும்
துந்துபியின் இலக்கத்தில் சொருகியது
செருவில் விடுத்த அம்பு

கொண்டான், புரண்டான், அழுதான்,
புழுதியில் தோய்ந்த
கெட்டித்த குருதி
வழிய பிட்டுத்திண்ணும்
சண்டியும்
கழற்றி எறிய
பிரதிஷ்டை அருள்
வளர்க்கும் கொம்பு, அப்பன்

Sunday, April 25, 2010

திணைமயக்கம்…

தம்புராவின் சீரான சுருதி கதவின் இடுக்குகளின் வழி நுழைந்து குரலுடன் இயைந்து பயணித்து கொண்டு இருந்தது, அவள் வீட்டு வாசலை அடையும் போது. அழைப்பு மணியை அழுத்த தயக்கமாய் இருந்தது, வீட்டின் முகப்பு திண்ணையில் அமர்ந்து கொண்டேன், தண்ணீரில் செய்தது போல தண்ணென்று இருந்தது திண்ணை. காற்றின் தங்கு பைகளில் நிறைந்து வழியும் குரல் மெல்ல அறையெங்கும் நிறைந்து வெளியே வந்திருக்க வேண்டும், வீட்டினுள் நுழைந்தால் மனசெங்கும் அப்பி கொள்ளும் என்று தோன்றியது ஒரு சுகந்த பரிமள வாசமாய். குரலை யாராவது வாசனையோடு ஒப்பிடுவார்களா என்று தெரியவில்லை, ஆனால் இது தான் தோன்றியது எனக்கு.

சாஹித்யத்தின் கட்டுகளை கேட்கும் போது, சித்தரஞ்சனி என்று தோன்றியது ஊன்றி கவனிக்கையில் பழைய பாடலான காதல் கனிரசமே, பி.யூ. சின்னப்பா அல்லது தியாகராஜ பாகவதராய் இருக்கலாம். அப்பாவை கேட்டால் சொல்வார்... அதன் தொடர்ச்சியாய் வரும் சாரசம் வசீகர கண்கள் சீர் தரும், என்று கிட்டப்பாவும், பாகவதரும், சின்னப்பாவும் துக்கடாக்களாய் விழுவார்கள். அப்பாவின் இசை ஆர்வம் அலாதியானது... திடீரென்று சமரசம் உலாவும் இடமே... என்று சீர்காழியை தொடுவது அப்பாவுக்கு மட்டுமே சாத்தியம்.

இப்போது தெரிகிறது முழு சாஹித்யமும், நாததணு மனுஷம்... சங்கரம்... தியாகராஜ கிருதி... மோதக ராணிக மோக்தம சாம... வேதசாரம் எனும் போது அதன் வளைவுகளும், பிர்க்காகளும் என்னை சுற்றி ஒரு ஜலதாரைகளை பிரவகிக்க செய்தது போல இருந்தது. முழு கிருதியும் முடித்த பிறகு, அழைப்பு மணியை அழுத்தலாம் என்று தோன்றியது. கமலாவை எனக்கு ஒரு காமன் பிரண்ட் மூலமாக தான் தெரியும். சுரேஷ் என்ற அகத்தியன் தான் எனக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தான். அவளின் கல்கியில் வந்த சிறுகதையை பற்றி சொல்லி அவளை சந்திக்கலாம் என்று சொன்னவுடன், அடடா ஒரு எழுத்தாளர சந்திக்க போகிறோம்... அதுவும் பெண் எழுத்தாளர் என்று ஆர்வமாய் தலையாட்டினேன்.

அவள் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றான், இதே போல தான் அன்று திண்ணையில் என்னை உட்கார வைத்து விட்டு உள்ளே சென்றான்... அழிக்கம்பிகளில் உரிந்த பெயிண்டை எடுப்பதா இல்லை அப்படியே விட்டு விடுவதா என்று யோசித்து கொண்டு இருந்தேன்... ஹல்லோ என்று வந்தால் கமலா... வெண் பணியில் கருப்பு பூக்களும், கொடிகளும் சுற்றிய ஒரு சல்வாரின் துப்பட்டா முனையை தூக்கி போட்டுக் கொண்டு தலையை சாய்த்து, நான் கமலா நீங்க... நான் சொல்வதற்கு முன் அறிமுக சம்பிரதாயமாய் சுரேஷ், ஸ்ரீனிவாச ராகவன் என்றான். நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன், உள்ள வாங்க என்று மாடிக்குச்செல்லும் படிக்கட்டில் என்னை உட்கார வைத்தாள். சுரேஷ் எதிரில் ஒரு மோடாவை போட்டு உட்கார்ந்து கொண்டான்... அவள் சுவரில் சாய்ந்தபடி நின்றவள், சுவிட்ச் பாக்ஸ் இடிப்பது போல இருந்ததால், தனக்கும் ஒரு மோடாவை எடுத்து வந்து அமர்ந்து கொண்டாள்.

சரிந்த மூக்கு, நெற்றி பொட்டுக்கும் மூக்கிற்கும் ஒரு சின்ன குழிவு வந்து மேடேறிய மூக்கு. சிறிது சரிந்த மாதிரி கண்ணாடி அணிந்திருந்தாள். மஞ்சள் கலந்த வெளுப்பு முகத்தில் அப்போது ஒரு சில மச்சம் போன்ற புள்ளிகள் இருந்த மாதிரி இருந்தது. பெரிய கண்கள், கண்ணாடியை மீறி தெரிந்தது... சற்று பெரிய முகம்... குளிர குளிர ஐஸ் க்ரீம் சாப்பிட்டதன் பின்னாடி வரும் குரலில் மெல்லிய உலோக தீற்றல் இருக்கிற மாதிரி இருந்தது... என்ன பண்ற என்ற அவளின் சம்பிரதாய விசாரிப்புகள் அத்தனை லயிக்கவில்லை எனக்கு... சுரேஷ் சுஜாதா, சுந்தர ராமசாமி என்று பேசிக்கொண்டிருந்தான்... கணையாழியின் கடைசிப்பக்கங்கள் பேச்சில் வழிந்தது... சுரேஷ் சுஜாதாவின் தீவிர ரசிகன்... கணேஷ் வசந்த் ஜோக்ஸ், சுஜாதாவை விட அவனுக்கு அதிகம் தெரியும். வாஷிங்டன் சலவைக்காரி ஜோக்கும் அவனுக்கு தெரிந்தால் அது ஆச்சரியமில்லை...

நான் அவள் எழுதிய சிறுகதை பற்றி பேசினேன்... ராமேஸ்வரத்தை சொந்த ஊராய் கொண்டவன்... படித்து முடித்து வேலை பார்த்து விட்டு வந்தவன் ராமேஸ்வரம் மாறி விட்டதை பார்த்து மனம் கனத்து திரும்புவதாய் இருக்கும்... அவள் எப்படி இருந்தது என்று கெட்ட போது... நான் எழுதி அனுப்புகிறேன் என்று சொன்னேன், அவளும் சரியென்று தன் முகவரியை கொடுத்தாள். சுரேஷ் இன்னும் கொஞ்சம் காலேஜ், ரகோத், சத்யா என்று பேசி விட்டு அசோகமித்திரன் படிச்சேன், தண்ணீர் னு ஒரு நாவல், ஒரே சோகம் அவர் சோகமித்திரன் தான் அசோகமித்திரன் என்று சொன்ன போது கண்ணில் நீர் வர சிரித்தாள்... மூன்று பேருக்கும் காப்பி அவள் அம்மாவின் கைகளில் இருந்தது... வாசம் அவளின் அம்மாவிற்கு முன்பாகவே வந்து குசலம் விசாரித்தது...

அவள் அம்மாவின் குரலில் சஷ்டி விரதததன்று அடிக்கும் சின்ன மணியின் சுனாதம் போல கணீரென்று, இனிமையாகவும், கம்பீரமாகவும் இருந்தது... காப்பி முடித்த பிறகு, கொஞ்சம் பேச்சை வளர்த்து இன்னொரு காப்பிக்கு எங்கும் போது வெளியே கிளம்பினோம்... தொடர்ந்து பேசுங்க... எழுதுங்க... என்று சொன்னவள் உடனே மாற்றி பேசு... எழுது என்றாள். அங்கு பிடித்து வளர்ந்த நட்பு இலக்கியம், சினிமா, கர்நாடக இசை என்று தொடர்ந்து வளர்ந்து பெருகியது... வாரம் தவறாமல் அவளை வந்து சந்திக்கும் எனக்கு இந்த வாரம் வித்யா லோலம் விதளித காலம்னு... புலர்ந்திருக்கு... அவளின் அம்மா வெளியே வந்தார்கள், கையை முந்தானையில் துடைத்துக் கொண்டே, அது என்னமோ எல்லோரும் இப்படி தான் வருகிறார்கள் கையில் இருக்கும் வேலையை இப்பத்தான் முடிச்சு துடைச்சுட்டு வர்றேங்கிற மாதிரி, அல்லது வேலையா இருந்தேன் வந்துட்டியாங்கிற மாதிரி, மேலும் தொடரும் சம்பாஷனைகளில் இருந்து, இது இரண்டாவது இல்லை முதலில் சொன்னதா என்பது தெரியவரும்.

ஸ்ரீனிவாசராகவன், இப்பதான் வந்தியா, இல்லை ரொம்ப நாழியாச்சா வந்து என்றவுடன், இல்ல மாமி இப்போதான் என்றேன். அவர்கள் வீட்டில் எல்லோரும் என்னை முழுப்பெயர் சொல்லிதான் அழைப்பது வழக்கம். கமலாவிற்கு என் பெயரை முழுக்க சொல்வது தான் பிடிக்கும், அதுவே அவள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சொல்லி, அதுவே ஒரு பழக்கமாகிவிட்டது. உள்ள வா, வந்துடுவா...இப்போ... என்றபடி ராதிகா!! என்று அழைத்துக் கொண்டே உள்ளே செல்வாள். ராதிகா கமலாவின் மற்றொரு பெயர். உள் நுழைந்து வழக்கமாய் நான் அமரும் மாடி படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன், மாமி ஒரு புத்தகம் கொடுத்துவிட்டு போனாள், கல்கி என்று ஞாபகம். புரட்டிய பக்கங்களில் ஏதும் சுவாரசியமாய் இருப்பதாக தெரியவில்லை, இரவு சூரியனோ ஏதோ ஒரு சிறுகதை, கண் தெரியாதவனைப் பற்றியது, கொஞ்சம் பச்சைக்கனவின் சாயல் இருந்தது போல தோன்றியது. பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதே வந்து நின்றாள் கமலா... ஒரு வெள்ளைப்புடவையும் அரக்குக் கலர் ரவிக்கையும் அணிந்திருந்தாள், வந்தவள் ராமர் கோயிலுக்கு போகலாமா.? என்றாள்

இருவரும் ராமர் கோயிலுக்கு சென்றோம், வழியில் அவள் ஒன்றும் பேசவில்லை, எப்போதும் பேசிக்கொண்டே வருபவளின் பேசாதனம் என்னை என்னவோ செய்தது. நானே ஆரம்பித்தேன்...

சித்தரஞ்சனி நல்லாயிருந்தது... உன் குரல் மாதிரியே இல்லை கமலா! உன் குரல்ல எப்போதும் இருக்க ஹஸ்கி ட்ரேஸஸ் இந்த குரலில் இல்லை என்றேன்.

அப்படியா! நான் பாடலை இன்னைக்கு, இன்ஃபேக்ட் எனக்கு இந்த பாட்டு பாடமே சொல்லிக்கலை, இது என் சின்ன அத்தை பாடியது, மாயவரத்துல இருந்து வந்திருக்கா...

எனக்கு வரன் வந்திருக்காம், யூ.எஸ், ல இருக்கானாம் சாப்ட் வேர்ல இருக்கானாம், ஜாதகம் எல்லாம் பொருந்தி போறதாம். இதுபோல ஒரு வரன் கிடைக்காதுன்னு எல்லோரும் சொல்றா! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை...

போட்டோ பார்த்தியா...

பார்த்துட்டேன் நன்னாதான் இருக்கான், கொஞ்சம் முன் மண்டைல முடி இல்லை, ஆனா அதுவும் அவனுக்கு பொருத்தமாத்தான் இருக்கு...

அப்புறம் என்ன அப்படியும் உனக்கு பிடிக்கலேன்னா வற்புறுத்துவாங்களா என்ன?

பிடிக்கலேன்னு சொல்லலை, ஆனா இப்போ தேவையான்னு தான் தோன்றது!

வற்புறுத்த மாட்டா, ஆனா ரொம்ப எதிர்பார்க்கிறா என்ன பண்ணட்டும்... இப்போ எனக்கு யுனைடெட் இண்டியால வேல கிடைச்சுருக்கு, பெங்களூர் போகனும்னு சொன்னா யாருக்கும் என்னை அங்க அனுப்ப இஷ்டம் இல்லை. எனக்கு பி.ஜி. முடிச்சது கல்யாணம் முடிக்கத்தான்னு நினைக்கும்போதெ ஜீரனிக்கமுடியலை. அவனுக்கு நான் வேலை பன்றது பிடிக்குமோ பிடிக்காதோ... நான் கண்ணாடி போட்டுருக்கத பாத்துட்டு காண்டாக்ட் போட சொல்றான் போல, அதிலயும் எனக்கு இஷ்டம் இல்லை. கண்ணாடில நான் பார்க்க நன்னாதானே இருக்கேன்...என்றவள் என் பதிலை எதிர்பார்க்காமல், சில சமயம் சம்மதிச்சுடலாம்னு தோன்றது, சில சமயம் வேண்டான்னு தோன்றது ஸ்ரீனிவாசராகவன். அவள் என்னிடம் பேசும்போது பிராமண பாஷையை முற்றிலும் விலக்க நினைப்பாள், சில சமயம் அவளையும் அறியாமல் வந்துவிடும்.

இங்க இருக்கிற வெள்ளைக்கலர் பாண்டியன் பஸ், அவிங்க இவிங்க, திருவிழா கலாட்டா, நட்பு எல்லாத்தையும் விட்டுட்டு போகனும்...

என்ன பன்றதுன்னு தெரியலை, ஆனாலும் இது பிரச்னையான்னு தெரியலை. நான் தான் முடிவெடுக்கனும், என்றவள் ராமர் சன்னதியை அடைந்ததும் மெதுவாய் செருமி பாடத்தொடங்கினாள்

“நிதி சாலசுகமா... ராமுனி சன்னிதி சேவ சுகமா... என்று கல்யாணியில் ஊற்றெடுத்தது, அவள் தெளிவடைவது போல தெரிந்தது எனக்கு.

Saturday, April 24, 2010

தசமம்...

சினிமா என்கிற மிகப்பெரிய ஊடகத்தின் எதிரே பரத்தியிருக்கும் ஒரு சிறு மணல் துகளின் அணுவின் அணுவாய் இருக்கும் நான் பத்து படங்கள் என்று எப்படி குறுக்க முடியும் என் ரசனைத் தெரிவுகளை என்று தெரியவில்லை... இது ஒரு 100 படங்கள் என்று இருக்கலாம் என்று தோன்றுகிறது... பட்டியலிட வசதியாய் இருக்கும்... தமிழ் படங்கள் மாத்திரமே என்பதிலும் எனக்கு கொஞ்சம் வருத்தமே... 

சினிமாவை இதில் தொழில்நுட்ப ரீதியாய் அணுகவில்லை... எனக்கு இருக்கும் சொற்ப தொழில்நுட்ப அறிவை வைத்து கொண்டு சிறந்த, முழுமையான சினிமாவை என்னால் இந்த பட்டியலில் சொல்ல முடியுமா என்பது கேள்விக்கு உரியதே... இந்த பட்டியலில் என்னை கவர்ந்த, என்னை பாதித்த சினிமாக்களின் ஒரு சிறு துளியை மாத்திரமே பிரதியிட முடிகிறது... வரிசை எப்போதும் தரவரிசையை நிர்ணயப்படுத்தவில்லை இங்கே... ஞாபகத்தின் அடுக்குகளில் பற்றியிழுக்கும் போது ஒரு கிளி எடுக்கும் ஜோசிய சீட்டுகளை போல தான் வருகிறது

உதிரிப்பூக்கள்







நூல்வேலி









அழியாத கோலங்கள்
 





இரும்புத்திரை










மறுபக்கம்












சுப்ரமணியபுரம்









பசங்க









மகாநதி




ஜானி


ஏழாவது மனிதன்


என் பட்டியலில் இது ஒரு புள்ளியே, இன்னும் வைக்க வேண்டிய புள்ளிகளும், அதன் மேல் போட வேண்டிய கோலங்களும் நிறைய... இந்த பட்டியலில் உள்ள படங்களை பற்றி தனித்தனியாக நான் பேச வேண்டும்...  ஒவ்வொரு படத்திலும் சொல்ல நிறைய இருக்கிறது... எனக்கு பாலச்சந்தர் பிடிக்காது இருந்தாலும்... நூல்வேலி பிடித்ததற்கான காரணங்கள், இந்த படத்தில் வரும் இன்னொசென்ட் சரிதாவும்... சரத்பாபுவும் தான்...
பாலமுரளிகிருஷ்ணாவின்  "மௌனத்தில் விளையாடும்" பாடல் நான் இன்றும் உருகி கேட்கும் அபூர்வமான பாடல்களில் ஒன்று...
அழியாத கோலங்கள் ஷோபா, சாந்தி கிருஷ்ணா, கமலஹாசன், வைத்யநாதனின் இசை (ஏழாவது மனிதன்), சேதுமாதவன், இந்திரா பார்த்தசாரதி வசனங்கள் (ராதாவின் அபாரமான நடிப்பு), மகேந்திரனின் வசனங்கள், பாலுமஹெந்த்ராவின் நினைவூட்டல், அசோக் குமார்,  சமகால சினிமாவின் பிரதிநிதிகளாய் இருக்கும், பசங்க, சுப்ரமணியபுரம் படங்களின் யதார்த்தம், காட்சி அமைப்பு, கதை சொல்லும் யுக்தி என்று அநேக காரங்கள் உண்டு...

இரும்புதிரை படத்தில் வைஜயந்தியும், சிவாஜியும் பேசிக்கொள்ளும் தருணங்கள், அந்த பார்வை பரிமாற்றங்கள், கிணற்றடியை கிணற்றங்கரை ஆக்கும் மென் தருணங்கள்... என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்றே சொல்வது... வைஜயந்திக்கும் சிவாஜிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ரொமான்ஸ்... அத்தனை அழகு வைஜயந்தி...
எனக்கு சில நேரங்களில் சில மனிதர்களும், அவள் அப்படித்தானும் கூட ரொம்ப பிடித்த படங்கள்... பார்க்கலாம்... இது ஒரு தொடராக  கூட மாற வாய்ப்பு இருக்கிறது...
பத்மா என்னை அழைத்ததற்கு நன்றிகள் பல...

ராகவன்



Friday, April 23, 2010

அதை ஏன் கேக்குற...

நெடுகப்பந்தல் இட்டு

நெய்யூற்றி பொங்கல் வைத்து
குலவையும், குங்குமமும்
அப்பி கிடக்கும்
கோயில் திண்ணையில்
சுருண்டு உறங்கும்
நாய்க்கு பண்டிகை நாளெல்லாம்
பகல் தூக்கம் ஓடிவிடும்


அயர்ந்து உறங்கும்
நாயின் வாயில் வடியும்
எச்சிலில் மிஞ்சிய
எலும்பின் மஞ்சைகளை தேடும்
காக்கைகள்
முற்பகலின் நிழல்களாய் திரியும்
மற்ற நாட்களில்

பால் மாரு குலுங்க
பகட்டு புட்டம் ஆட்டி
வால் ஒடுக்கி ஒதுங்கி போகும்
கருப்பு கண்ணழகியை
கனவில் புணரும் நாய்
கால் உதைத்து முனகும்
பெருங்கனவின்
அழைப்பு மணி விடாது கேட்கும்

பின்னங்கால்கள் தரையில்
இழுக்க வயிற்றுப்பகுதியின்
அரிப்பை தேய்த்து
இடம்பெயர்க்கும் நாய்
மோப்பக்குழையும் நாளில்
குறி மறந்து தூங்கும்

சீமை நாயென்று
சேரவிடாத எஜமானரின்
வீம்பில்
விரைகள் குலுங்க ஓடும்
பொழுதுகளின் பற்களில்
சிக்கி நசுங்கும் நாய்களின்
கிரியைகளில்
நாரத்தங்காய் காய்த்து தொங்கும் 

Wednesday, April 21, 2010

திறக்கப்படாத முத்தங்கள்...

முத்தங்களின் கதவுகள்
எப்போதும் மூடியே இருக்கிறது
ஒற்றி எடுத்த வெம்மை தடங்களின்
அடையாளங்களை பின்பற்றி போகையில்
உடன் வராத வார்த்தைகள்
வழிதெரியாமல் திண்டாடுகிறது
திறக்காத முத்தத்தின் கதவுகளின்
உள்ளே உனன்று கொதிக்கும் வார்த்தைகள்
வயோதிகம் வளர்த்து
கோல் ஊன்றி வெளி வருகிறது தட்டு தடுமாறி
மூடிய கண்கள் உள்ளே ஊழிக்கூத்தில் சிலசமயம்
முத்தங்கள் சிதறி விழுகின்றது பரல்களாய்
கனவுகளின் திறப்பில்
இரைந்த கிடந்த முத்தங்களை
சிப்பிகளென பொறுக்கி வைத்து
குலுங்கி சிரிக்கிறது ஒரு மாயகாரியின்
தடித்த உதடுகள்
ஒலியின் பாழ்வெளியில்
கரைந்து அரூவமாகும் முத்தத்தின்
சாயலில் சங்கு புஷ்பங்கள் மலர்கின்றது

Tuesday, April 20, 2010

பவர் கட்...

கீழிருந்து
மேலாக இறங்குகிறது
இருட்டு
யாரும் உடன் இல்லை
தனிமையாய் உணரவில்லை

உடன் அழைத்து வந்த
வினோத குரல் கலவையின்
கெட்டித்தன்மை
ஆகிருதியை போல திடமாய் இருந்தது
அழைத்து வந்து அருகிருததி கொண்டேன்
ஆசுவாசமாய் இருந்தது

மரங்களின் இலைகளில் இசைத்த
ஒற்றை பானாழ் சுவரம் பிசகி
ஜதி தப்பி அடவிட்டது
சிதறிய மணிகள் சில்வண்டு
இரைச்சலென

பனையிலையில் வேய்ந்த கூரை
குடுகுடுப்பையாய்  குறி சொல்லியது
காற்றை நிரப்பிய குடுவையாய்
காதோரத்தில் ஓங்காரம்

பின்னி பழகிய கால்களின்
தடத்தில்  பிசுபிசுக்குகிறது
மையிருட்டு
ஒரு கூழாங்கல்லாய் புரட்டி விடுகிறது

தட்டு தடுமாறி
தலைகுப்புற விழுந்தேன்
படுக்கையை உதறிப்போட
நிலவும் இன்னும் சில
நட்சத்திரங்களும் உதிர்ந்தன

இரவு விழித்திருந்தது காவலாய்...
உறங்கி போனேன்!!

Monday, April 19, 2010

அவளும் மற்ற பிறவும்...

காற்றின் சப்தவெளியில்
படர்ந்து கிளைத்த
ஒற்றை கொடியில்
பச்சை வெளுத்திருந்தது
முழுக்க உறிஞ்சிய சூல் இழந்த
மேகத்தை போல

இரவுகளை முனுமுனுக்கும்
நாற்கர சாலையின் கோடியில்
யாருமற்று இருந்த மைல்கல் ஒன்று
தன் மேல் சுமந்த தூரத்தை சபித்த படி
நிலம் இழந்த சம்சாரியாய்
நகரவொட்டாமல் கிடக்கிறது

விரையும் வாகனங்களின் வெளிச்சம்
தழுவி விலகும் சோகத்தில்
பசலை பூத்துக்கிடந்த
மரங்களின் இலைகள்
திருவிழா கரகாட்டக்காரியின்
மினுக்கும்  புட்டாக்களை ஒத்திருந்தது
இரவுகளில் மட்டும்

சாபத்தில் உடலெங்கும் கண்கள் பூத்த
இந்திரனாய் வானம்
உற்று நோக்கி கொண்டிருக்கிறது
தொடைகள் விரித்து கிடக்கும்
புணர்பூமியின் வேசைத்தனத்தை
ஒப்பிட்டு கொள்கிறது

சாலையோர செடிகளில், புற்களில்
பச்சை பரத்தி ஊரும்
பாம்புகளின் வாசனை
மூளையின் மடிப்புகளுக்குள்ளிருந்து
கசிந்து வழியும்

இன்னும் பெயரிடப்படாத
சாலையின் பயணங்களில்
கடந்து போக முடியா தூரத்தை
அதக்கி கொண்டு
விழுங்க முடியாமல் சுரக்கிறது
சுடுநீர் வாய்க்கால் ஒன்று

Thursday, April 15, 2010

பெரியகடை வீதி...

சண்டையிட்டு
தனிப்பட்டறை ஆரம்பித்தவனின்
கனவுகளில் கடிச்ச
புழுக்களாய் நெளியும்

சருகு விளையாட்டில்
இழந்த பணத்தின்
பசிக்கான வாய் பிளந்து
உயிர் விடும்
துக்கம் ஒழுகலில் கரையும்

கொலுசின் மணியை
பற்ற வைக்க வரும்
பட்டறைதாட்டியின்
சரிந்த ஒற்றை முலை
நைலக்ஸ் புடவையை
ஊடுருவி பார்க்கும்
கண்களில் எச்சில் வடியும்

சங்கர் ரெடிமேட்டில்
உள்ளாடை எடுக்க வந்த
தாட்டிகளின்
அளவு கேட்டு கள்ளமாய் சிரிக்கும்
வெங்கடேஷின் கோரப்பாய் படுக்கை
நனையும் மைதுன பொழுதுகள்
பேசி சிரிக்கும் முற்பகல்

நெய்க்கடலை பருப்பும்
ஒசித் தேநீரும்
இறைத்த நட்பில்
கிறங்கி ஓடிப்போகும் மாலையும்

உறைமெழுகின் ராத்துமான
சன்னத்தை திரட்டி
உருக்க வெற்றாய்
காற்றை பிதுக்கும்
வேலையில்லா பொழுதுகள்

இரவில் பூட்டை
ஆட்டி பார்த்து மூடி
வீடு திரும்புகையில்
பழையதுக்கு காராசேவு
வாங்கிட்டு வாப்பா
என்ற மகனின் ஏக்கத்தில்
கனத்து களைக்கும்
லௌகீகம்

(கடிச்ச - கடன்; சருகு - சீட்டு விளையாட்டு; தாட்டி - இளம்பெண்கள்; பட்டறத்தாட்டி - விலைமகள்; ஒழுகல் - குடி)

Wednesday, April 14, 2010

கண்டதை சொல்கிறேன்...

அன்பு நிறை எல்லோருக்கும்...

அடிக்கடி கரண்ட் போய்விடுகிறது இப்போது... குறைந்தது ஐந்து மணிநேரம்... பெங்களூரும் முன் போல இல்லை... வியர்க்கிறது... 37 டிகிரி வெயில் மிக இயல்பானதாக விடுகிறது... தினமும் தினசரிகளில் பொசுங்கும் வெப்பமானிகள் தவறாமல் தொடுகிறது மேற்சொன்ன டெம்பரேச்சரை.  மின் காத்தாடிகளில் சிக்கி கொள்ளும் வெப்பம் சுழன்று சுழன்று அறையும் காற்றில் ஈரப்பதம் இருப்பதே இல்லை.  வறண்டு போகிறது மூளையும் உடம்பும்... தொய்வாய் விழுகிறது தண்ணீரை இழந்த காற்று ஒரு காலரா நோயாளியை போல.  

உடலெங்கும் பூத்து கொப்பளிக்கும் அமிலங்களில் கருகி போகிறது வறட்சியற்ற வார்த்தைகள்... பூங்கா நகரம் என்று அழைக்கப்பட்ட பெங்களூருவில் பூக்களில் அரும்பி இருப்பது பனித்துளிகளாய் சத்தியமாய் இருக்காது... வியர்வை துளிகளாய் இருக்க வேண்டும்... ஏழு மணிவரை வெளிச்சம் இருக்கிறது... சீக்கிரமே விடிகிறது... பெங்களூரு வழக்கத்தின் முரணாய் அதிகாலையிலேயே விழித்து விடுகிறது... எல்லோரும் குளித்து விட்டு தங்கள் அலுவலை கவனிக்கிறார்கள்.   

மின்சாரம் பழுதுபட்ட நேரங்களில் தெருக்களில் கூடுபவர்களின் கதைகளில் வீட்டை விட்டு வெளியே வராதவர்கள் தப்பாமல் இடம் பெறுவார்கள்.   உளவியல் ரீதியாக மனிதன் என்ற சமூக விலங்கு நாக்கை தொங்க போட்டு அலைகிறது சிக்குபவர்களை  குதறி கிழிக்க... திண்ணையில் இருந்து இடம்பெயர்ந்து ரோட்டுக்கும் பிறகு படுக்கை அரை கணினியில் புறம் பேசி அலைகிறது.  எல்லா வருடங்களும் போனா வருடம் இது போல வெயில், மழை இன்ன பிற இல்லைகளை தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  வீட்டை பெருசா கட்டியாச்சு, ஒரு இன்வேர்ட்டர் போட்டா, குறைந்த பட்சம் இரண்டு அறைகளில் மின் காத்தாடியை குச்சி வச்சு சுத்துவது முடியும்... காற்றே வராது எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்து கிராஸ் வெண்டிலேஷனுக்கு வசதியா இருக்கும்னு கட்டும் போதே சொன்னேன் என்பவளுக்கு... முப்பதுக்கு இருபது வீட்டில் இதுக்கு மேல முடியாதுன்னு சொல்ல முயற்சித்தால் அவளுக்கு புரியாது... பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பதோடு சரி... வழியும் வியர்வைகளில் கரையும் இது போன்ற கேள்விகள்.

மூடிய மேகங்கள் ( ஒரு காட்சி பொருளாய் போகிறது) கண்டால் மொட்டை மாடிக்கு சென்று மழை வேண்டுமே என்று ஒரு கடும் பிரார்த்தனை ஒரு கேவலாய் வருகிறது.  இந்த முறை சன் ந்யுசில் சொன்ன தகவல் மனதுக்கு வேதனையை இருந்தது... மதுரையில் அழகர் ஆத்தில இறங்க தண்ணீர் இல்லை என்ன செய்வது என்று அரசு கைய பிசைந்து கொண்டு நிற்கிறது என்றும், அதனால் போர்வெல் போட்டும், லாரி தண்ணீர் கொண்டு வந்தும் ஆத்தில அழகரை இறங்க வைப்பது என்று முடிவானது... அழகருக்கு இதில் உடன்பாடா என்று தெரியவில்லை...

பக்தர்கள் கூட்டத்தின் தண்ணீர் தேவைகளுக்காக நிறைய சின்டெக்ஸ் டாங்குகளில் தண்ணீர் கொண்டு வந்து வைக்க போவதாகவும் சொல்லப்பட்டது... அங்கங்கே தூர்வாருவதாய் தோண்டிஎடுத்த மணல் வியாபாரம் ஆவதை தடுக்க முடியவில்லை யாராலும்.  சொம்பு தண்ணீரில் என்னால் குளிக்க முடியும் போது, அழகர் என் போர்வெல் தண்ணீரில் குளிக்க கூடாது... நியாயம் தானே... கள்ளழகர் வெண்பட்டில் வருவாரா... பச்சை பட்டில் வருவாரா இந்த வருஷம் தெரியவில்லை... அழகர் ஆற்றில் இறங்குவது ஒரு புறம் இருந்தாலும்... இதற்காக செலவழிக்க படும் தண்ணீர் மதுரை மக்களுக்கு ஒரு வாரத்திற்கு மேலான குடிநீரை கொட்டி கவிழ்க்கும் ஒரு விரயம் தான் இப்போதுள்ள நிலைமையில்... ஆற்றில் அழகர் இறங்கும் போதும் மழை பெய்யும் என்பது ஐதீகம், ஆனால் எனக்கு தெரிந்து இப்போதெல்லாம் அழகர் ஆற்றில் இறங்கும் போது, மழை வாசனை கூட அடிப்பதில்லை...

ஆற்றில் ஓடுவது தண்ணீர் என்பது மாறி ஆற்றில் நிற்பது தண்ணீரென ஆகி இப்போது ஆற்றில் இல்லாதது தண்ணீர் என்றாகி விட்டது... கரை புரண்டோடும் தென்னக நதிகள் கனவாகி விட்டது எல்லோருக்கும்...                              

ஏ. கே.ராமனுஜம் எழுதிய வைகை பற்றிய கவிதை ஞாபகம் வருகிறது...

People everywhere talked
of the inches rising,
of the precise number of cobbled steps
run over by the water, rising
on the bathing places,

இது ராமானுஜத்தின் வேறு ஒரு பார்வையை பற்றி பேசினாலும்... இந்த கவிதை எனக்கு மீனாக்ஷி கல்லூரி பாலத்தை ஒட்டி ஓடும் வையையை ஞாபக மினுக்கில் தேய்த்து சுடர்கிறது.  ஏழாயிரம் சதுர கிலோமீட்டரில் பரவி இருக்கும் இந்த ஆறு... ஆற்று படுகையாய் போனதற்கு என்ன காரணம்...

அம்மா மண்டபத்தில் அகண்டு ஓடும் காவிரி இப்போது மணலை மட்டுமே விரித்து சூம்பி போனா வறட்டு முளைகளாய் போனது வேதனையான விஷயம்... கை பிசைந்து நிற்கிறோம் ஒன்றும் செய்ய ஒட்டாது கையாலாகாத தனம், செயலற்று கிடப்பவனின் உடலை கொத்தி திண்ணும் வல்லூறுகளாய். ஆறுகள் வற்றி போனதற்கு பொய்த்து போனா பருவமழையே காரணம் என்றால் பருவமழை பொய்த்து போனதற்கு என்னென்ன காரணங்கள் வைத்திருக்கிறோம் நாம், deforestation மரம் இல்லை மழை இல்லை... ஆற்றை ஒட்டி நடக்கும் திருவிழாக்களும், ஆற்றுப் பாசானங்களும் திரும்ப வருமா என்றால் எப்போது, இன்னும் இரண்டாயிரம் மூன்றாயிரம் வருஷங்களுக்கு பிறகு... இது ஒரு சுழற்சி... அவசியம் திரும்பவும் சுபிட்சமாகும்...

இப்போது யாரும் ஓசோன் ஓட்டை பற்றி பேசுவதில்லை... கரியமில சுவடுகள் பற்றி பேசுகிறோம்... கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்கிறோம்... குளோபல் வார்மிங் என்கிறோம்... மீதேன், கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைட், ஓசோன் என்ற பாதுகாப்பு வளையங்களின் அடர்த்தி அதிகமாகி பூமியின் வெப்பம் அதிகமாகி கொண்டே போகிறது... முப்பத்தி மூணு டிகிரி இருக்க வேண்டியது ஐம்பது டிகிரிவரை எகிறப்போவது பூமியை வாழ்தலுக்கு முடியாத இடமாய் மாற்றி விடும் ஆபாயம் இருக்கிறது... ஆனாலும் புலிகளை போல அல்லாது கரப்பான்களாய் மாற தயாராய் இருக்கிறோம்

அழியாதிருத்தல், நீட்டித்து இருத்தல் என்பது நமக்குள் மாற்றங்களை கூட ஏற்படுத்தலாம் தான்... ஆனால் அத்தனையும் குறைவான சாத்தியகூறுகள் உள்ள விஷயங்கள்.  யாரும் அறுதியிட்டு கூற முடியாது  இது தான் என்று... ஆனால் படுக்கையில் அழுகி கொண்டு இருக்கும் ஒரு வயோதிக பெரியவராய் கவனிப்பாரற்று கிடக்கிறது... பூமியும் இன்ன பிறவும்...

மேலும் விபரங்கள் உங்கள் கடிதம் கண்டு...

அன்புடன்
ராகவன்

Monday, April 12, 2010

பழங்கடவுளர்களின் பரிபாடல்...

கடந்த காலத்தின் அதிர்வுகளில் நகரும் ஒரு ஸ்திர சிற்பமென ஆகிறது இது போன்ற அசை போடுதல்கள்.  வாயெல்லாம் நுரை தள்ளி உண்டு மயங்கும் ஒரு மலைபாம்பென புரண்டு முறுக்கும் நினைவுகள் செரிக்காமல் துப்புகின்றது மாணிக்க கற்களையும் சில சமயம் கழிவையும்.  பிட்டு திங்கும் பக்குவம் இல்லாமல் எல்லாவற்றையும் விழுங்கும் பழம்பசி மனசு, சும்மாவும் கிடக்கிறது உயிரற்ற சவத்தை ஒத்து.   சேகரித்து வைத்திருந்த தினவு பொடிபொடியாகும். நிகழ்தகவினை தகர்த்து ஒரு மாற்றும் குறையாமல், திரும்ப தர முயற்ச்சிக்கும் அற்ப சந்தோசங்களின் பிரதிகளாய் இருக்கும் பட்ச்சத்தில் இது ஒரு சமரில்லா வெளியாய் பரந்து விரியும்.   விரல்களில் முளைத்திருக்கும் இந்த அகவிழிகள் திரும்ப திரும்ப காட்சிக்கு பரத்தும்  ஓவியங்களில் இருந்து வழிந்த மசியின் வர்ண கலவையில் பிரிக்க முடியாத வர்ணங்கள் புரியாத சில கேள்விகளை தக்க வைத்து கொண்டிருக்கும் எப்போதும்.  

தீபாவின் தொடர் அழைப்புக்கு நான் என்ன எழுதுவது என்று தெரியவில்லை... அதன் புலம் என்ன என்பது எனக்கு புரியவில்லை.  ஆனாலும் அதில் கடவுளும்... உளன் அலது இலன் மற்றும் என் நம்பிக்கை, குழப்பங்கள், அனுபவங்கள் என்கிற விஷயம் தான் அதன் அடிநாதம் என்று நான் அர்த்தம் செய்து கொண்டு இந்த தொடர் பதிவுக்கு எழுத ஆரம்பிக்கிறேன்...

ஒரு வைணவ நம்பிக்கை உள்ள அப்பாவுக்கு நான் மகனாக பிறந்தேன், ஆண்டாளின் நட்சத்ரத்தில், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்று வைணவ உஞ்சவிருத்தி தினத்தில் பிறந்ததாலும்   அப்பாவுக்கும் , தாத்தாவுக்குமான நம்பிக்கையில் ஏழு வருஷம் ஏழு மாசம் கழிச்சு பிறந்த நான் பெருமாளாய் தோன்றியதாக சொல்லும் போது யாருக்கும் பெரிதாக கேள்வியில்லை.  நிறம் வேறு பெருமாளின் நிறம், கருப்பு... கேக்க வேணுமா... வைணவ சம்பிரதாயத்தில் துளசி, விஷ்ணு, ஜடாரி, புளியோதரை மற்றும் சனிக்கிழமை தவறாது பெருமாள் கோவில் விண்ணை முட்டும் விஸ்வரூப தரிசனமென வளர்ந்தேன்... எனக்கு இன்னும் கூடலழகர் பெருமாள் கோயிலின் ஒவ்வொரு தூனும் மனனம்...  சப்த்திக்க சுவரங்களை தேக்கி வைத்திருக்கும் தூண்களில் எல்லாம் விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் கேட்கும் பஜகோவிந்தங்கள்  எனக்கு...

என் சொந்த ஊரும் ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதால் வடபத்ரசயனர் எனக்குள்ளே புகுந்து கால் நீட்டி படுத்திருந்தார் நீண்ட காலங்களுக்கு... நாராயண என்னும் நாமம் குலம் தரும் செல்வம் தரும் என்றெல்லாம் யோசித்தது இல்லை... மகாபாரதமும், கிருஷ்ண லீலைகளும் எனக்குள்ளே என்னை கண்ணனாகவே நினைத்து கொள்ள வைத்தது.  கிருஷ்ணனுக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது... வெண்ணையில் இருந்து கோபியர் வரை... பக்த பிரஹலாத பார்த்த பாதிப்பில் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று எல்லோருக்கும் பெரிய வியாக்யானங்கள் கொடுத்து கொண்டிருப்பேன்.  என்னை சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் வாய் பிளந்து கதை கேட்க... அப்பவே நல்லா கதை விடுவேனென்று அம்மா சொல்ல கேட்டிருக்கேன்... தொட்டில் பழக்கம்... ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் உள்ள பெருமாள் கோயில் நிழல் மண்டபங்களில் நான் ஒரு பிரசங்கியை போல கதை சொல்லி இருக்கிறேன் ... இது மத சார்புடைய விஷயமா அல்லது கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயமா என்றால்  இல்லை என்றே தோன்றுகிறது...  நம்மை எப்போதும் வியப்பாய் பார்க்க வேண்டும் என்ற ஒரு அன்கீஹாரத் தேடலின் தொடர்ச்சி தான் வாழ்க்கை முழுதும் வருகிறது என்று நினைக்கிறேன்.

அம்மா ஒரு தீவிரமான முருக பக்தி... சோம வார நோன்புகளும், சஷ்டி விரதமும், கிருத்திகை விரதங்களும் அம்மாவை எனக்கு முருகக்கடவுள் மேல் ஆர்வம் மேலிட செய்தது.  அதுவும் புராண படங்களில் அதிகபிரசன்கியாய் பேசும் முருக கடவுள் (அநேக படங்களில் ஸ்ரீதேவியின் வசீகரமே...) ஒரு ஈர்ப்பை இருந்ததுண்டு. திருப்புகழும், கந்தர் சஷ்டி கவசமும், கந்தர் அனுபூதியும், கந்த குரு கவசமும் பாரயனமானது பக்தி என்று சொல்லிவிட முடியாது... என் இசை ஆர்வம் வளர்ந்ததுக்கு அம்மாவின் இது போன்ற பாடல்கள் தான் காரணம் என்று தைரியமாய் கூறலாம்... நாத விந்து கலாதியும், உல்லாச நிராகுலவும், தண்டையணி வேண்டியும்... என்னை காலில் தண்டைகள் அணிந்து குதிக்க வைத்ததும் உண்டு... இப்படி ஒரு பின்னணியில் இருந்து வந்தவன் நான்.  மேலும் என்னுடைய இருபத்தி ஐந்து வயது வரை... நான் தேடி தேடி அலைந்திருக்கிறேன் கோயில்களை... திருச்சியில் ஆரம்பித்து, முக்கா காலுக்கு ஒரு வேஷ்டியும், ஜோல்னா பையுமாய் நானே கடவுளாய் எது என் இடம் என்று அலைந்ததுண்டு...

இடையில் சத்தியநாதன் வந்தான் என் பள்ளித் தோழனாய் இருந்தவன்... மறுபடியும் மீண்டு வந்தான் ஒரு சைவ சித்தாந்தவாதியாய்... திருநீறு, சுடலை பொடி பூசி, கல்லின் புடையமர்ந்து, தக்ஷின மூர்த்தியாய், குருவுக்கு குருவாய் வந்தான் சிவதாண்டவமாடி... இம்மையில் நன்மை தருவார் கோயிலும், சொமாச்கந்தரும், லின்கோத்பவரும் பற்றி கதை சொல்லி வில்வ மரமென குளிர்ந்து நின்றான் அருட்ப்ரகாசி... காதல், உருகுதல், கண்ணனின் வாயமுதம் என்று மீரா, வள்ளி, தெயவானைகளில் லயித்திருந்த காலத்தில் சிவபுராணம், பத்திரகிரியார், சிவவாக்கியர் என்று சித்தர் பாடல்களில் இருந்த தத்துவக்கொக்கிகளை எனக்கும் மாட்டி விட்டு நட்ட கல்லும் பேசுமோ என்கிற கேள்வியில் நிறுத்திவிட்டு போய்விட்டான்.  பாண்டியனுக்காக கால் மாற்றி ஆடியவன், ஒற்றை காலில் நின்று கொண்டு அடம் பிடித்தான் சில நாட்கள் என்னுள் ஊன்றி கொண்டு...

அதற்க்கு பின்னான சில புத்தகங்களின் அறிமுகம், எவல்யூஷன் பற்றிய பட்டறிவு, கடவுள் என்கிற ஒன்றை தூக்கி ஓரமாய் வைத்தது... இது எல்லாமே பெண்களை கவருவதற்கு என்று தான் இருந்திருக்கிறது எனக்கு... நாங்கள் சிறுவயதில் குடியிருந்த காம்பௌண்டில் எங்க வீட்டில் மட்டும் தான் ஆன் பிள்ளைகள்... வைகுண்ட எகாதஷி  அன்று... பரம பதம் ஏகினால் வைகுண்டம் தான் என்ற நம்பிக்கைகளின் விளைவு தான் வீசி விழுந்த விருத்தங்கள். குழைத்து குழைத்து பூசிய ஸ்ரிசூர்ணமும், நாமமும் என் அடையாளங்கள் அப்போது. இப்போது என் நாமங்களும் அடையாளங்களும் வேறு என்பது எல்லோருக்கும் தெரியும்.
இன்றளவும் கோயிலுக்கு செல்கிறேன், சர்ச்சுக்கு செல்கிறேன் கிடைக்கிற அனுபவங்களை எடுத்து வைத்து கொள்கிறேன்...

நான் அப்போது MSW இரண்டாம் ஆண்டு படித்து வந்தேன்... இரண்டாம் வருஷத்தில் எங்களுக்கு 'பப்ளிக் ஸ்பீகிங்' என்று ஒரு பாடம் உண்டு... எப்படி கூச்சமில்லாமல் பேசுவது சபை நடுவில்? நமக்கு தான் கூச்சமே கிடையாதே... அது வேற விஷயம்... அப்போ பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக எங்களுக்கு ஒரு OBT (out bound training) புரோக்ராம் நடந்தது... நகரத்தை விட்டு தள்ளி இருந்த ஒரு கடற்கரையில்... அப்போது எல்லோரும் ஒவ்வொரு தலைப்பில் இருபது நிமிஷம் பேச வேண்டும்... இருபது நிமிஷம் பேச என் முறை வந்த போது, நானும் பேசினேன்...
கடவுள் யார் அது... இருக்கிறாரா இல்லையா... என்னுடைய சில கேள்விகள் - இது தான் என்னுடைய நீண்ட தலைப்பு... பேச ஆரம்பித்தேன்... நிறைய பேர் கவனித்தார்கள் நிறைய பேர் எதிர் வாதம் இட்டார்கள்... ஒருவர் மட்டும் என்னை உத்து கவனித்திருக்கிறார்... என் பேச்சில் மயங்கி, என் கேள்விகளில் கிறங்கி நானும் உங்கள போல தான் என்ற அறிமுகத்துடன் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசும் அவரை பார்த்தவுடன் எனக்கு பிடித்து விட்டது... இதற்க்கு இடையில் கல்கி பகவான், தினகரன், சிவசங்கர பாபா, ஷிர்டி என்று எல்லா சாமியார்களும் அல்லது கடவுநிலை மனிதர்களைப் பற்றியும் யாரோ பேசினார்கள்... கல்கி போட்டோவை துடைக்க துடைக்க குங்குமம் கொட்டிக் கொண்டே இருந்ததாக கூறினார்... பாபாக்களின் இது போன்ற புரட்டு காரியங்களும், ஊமைகள் பேசினார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள் என்று சுவிசேஷ அழைப்புகளும், கடற்கரை கூட்டங்களும் என் பேச்சில் இருந்ததை ஒருவர் காரசாரமாக கண்டித்தார்... ஒரு பாடத்தின் பகுதியான இந்த பயிற்ச்சியில் எனக்கு ஒன்று புரிந்து போனது... குருடர்கள் முறைத்து பார்த்தார்கள், ஊமைகள் வசை பாடினார்கள்,  முடவர்கள் எழுந்து வந்து அடிக்க வந்தார்கள் .. என் பேச்சை கேட்டு.  நான் கடவுளானேன்... ஒளிவட்டம் சுற்றியது எனக்கு...

என் பேச்சை சிலாஹித்த SANDRA , கொஞ்ச நாட்களில் என் ஏமாற்று வேலையில் மயங்கி என்னை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாள்...  ஒரு வழியாக...  ஒளிவட்டம் கழற்றி வைத்தேன்...
அவளுடைய  அப்பா என்னை பார்க்க வேண்டும் என்று கூறினாராம், அப்போது அவர் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் கண்ட்ரி ஹெட், எனக்கு அவரை பார்க்க கொடுத்த நேரம் சரியாக காலை ஒன்பது மணி, நான் ஒரு ஐந்து நிமிஷம் முன்னாடியே சென்று விட்டேன்... ஐந்து நிமிடம் காத்திருக்க சொல்லி ஒன்பது மணிக்கு தான் பார்த்தார்.   நிறைய பேசினார்... அவருடைய குடும்பத்தை பற்றி, உறவினர் வட்டத்தை பற்றி... நானும் என் பின் புலம் பற்றி பேசினேன்... நான் சார்ந்து இருக்கும் மதத்தை பற்றி, என் பெற்றோர்களின் ஒப்புதல் பற்றி எல்லாவற்றையும் பேசி விட்டார்... என்னை அவருக்கு ஏனோ பிடித்து விட்டது... அங்கிருந்து ஒரு காரில் என்னை அவர்களின் வீட்டுக்கு, நல்ல சீருடையில் இருந்த டிரைவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார். மில்ஸ் அண்ட் பூன் கதைகளில் வருவது மாதிரி நான் ஒரு ஏழை வீட்டு பையன், அவர்களோ பெரிய இடம்... அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த போது என்னை சிறிதாய் உணர்ந்தேன்... என் மாமியாருக்கு என்னை பார்த்தவுடன், என் பேச்சை கேட்டவுடன் பிடித்திருக்க வேண்டும்... முகம் மலர பேசினார், அவர்கள் வீட்டில் தான் சாப்பிட்டேன்... 

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வரவேற்பு ஒலிகள் குரைத்தல்களும், மியாவ்க்களுமாய் இருந்தன... இன்னும் பெயரிட முடியா உயிரினங்கள் ( ஒரு எறும்பு தின்னி உட்பட...) என்று ஒரு விலங்கியல் பூங்கா போல இருந்தது.  மாடிபடியோரம் ஒரு சங்கிலி எதன் கழுத்திலும் கட்டாமல் சும்மா கிடந்தது... அதன் வார்ப்பட்டை என் கழுத்துக்கு சரியாய் இருப்பது போல தோன்றியது... கொஞ்சம் பயம் வந்தது... உதறலை மறைக்க உங்க வீட்டுல எத்தனை நாய் இருக்கு என்றேன்... இப்போ பன்னிரண்டு தான் இருக்கு...(என்னைய சேர்த்த பதிமூனோன்னு...!!)
என் மாமியாரும், மாமனாரும் அன்பானவர்கள்... அவர்கள் பெண்ணை எனக்கு கொடுப்பதற்கான முடிவு அன்று மாலையே எடுக்கப்பட்டது, நான் பாம்பே மெயிலில் ஏறும் போது சொன்னாள் என் மனைவி... அவங்க ஒகே சொல்லிட்டாங்க... .  என்றாள்...

இதுவா இருந்தா என்ன அதுவா இருந்தா என்ன என்றேன்...இது தான் என் மதம் மற்றும் கடவுள் சார்ந்த பார்வை...  கடவுள் பற்றிய போதனைகளில், கதைகளில் வளர்ந்தவன் என்பதை தவிர கடவுளுக்கும் எனக்கும் ஸ்நான சம்பந்தம் கூட கிடையாது, நிறைய இடங்களில் கடவுள் பற்றிய பேச்சு எழும்போது, உங்களுக்கு நம்பிக்கை இருக்கா என்பார்கள்... தெரியலை என்பேன்... இது தான் பதில்னு எப்படி சொல்றதுன்னு தெரியலை எப்போதும்...எந்த ஒரு விஷயத்தையும் முழுதாய் தெரிந்தவன் அதைப்பற்றி பேச மாட்டான்... அவன் கேட்கும் போது பார்த்துக் கொள்ளலாம்...

ஒரு ரயில் மட்டுமே நிற்கும் அந்த ஸ்டேஷனில் எங்களைத் தவிர யாரும் இல்லை... காரோட்டியும் பக்கத்தில் இல்லை...அவள் என்ன கையை பிடித்து லேசாக அனைத்து தாங்க யூ என்றாள்...  மழை பெய்ய ஆரம்பித்தது... பூவரசம் பூக்கள் ஒலிபெருக்கிகளாய்... எங்கள் உறவைப்பாடியது...
கல்யாணம்... நாதஸ்வரத்தின் ஓசையில் வெட்டிங் பெல்களின் சத்தம் விடாமல் கேட்டது... அப்பாவிற்கு என் மனைவியை பார்த்தவுடன் பிடித்தது... நிறைய நெருங்கி விட்டார்... என் அம்மாவின் அரற்றல்கள் யாருக்கும் கேட்கவில்லை... இரு பழங்கடவுளர்களும் கூட  அலுப்பில் தூங்க போய் விட்டனர்...

Sunday, April 11, 2010

நரைத்த இரவுகள்...

சுவர்களின் பக்கவாட்டைப்
பிடித்துக் கொண்டும்
இரண்டு படிகளை கடக்கிறேன்
வாசலில் கிடந்த
பால் பாக்கெட்டை
நடுங்கும் விரல்களில் எடுக்கிறேன்
பாக்கெட்டின் குளிர்ச்சியை
உணர முடியவில்லை
ரத்தம் சுண்டி ஸ்மரனை இன்றி
ஒரு இடுக்கியைப் போல
எடுக்கிறது விரல்கள்
அயர்ந்து உறங்குபவளின்
மூப்பு அறையெங்கும்
எடுக்காத நூலாம்படையாய்
கயிறு கட்டிய மூக்கு கண்ணாடி
மருந்து புட்டிகள், மஃப்ளர்
இடது பக்கம் அவளுக்கானது
வலது பக்கம் எனக்கானது
சுவரெங்கும் பிடித்து நகரும்
கைகளின் உராய்வில்
உதிர்ந்து தொங்கும் காரை
கண்ணாடி, பீங்கான் தவிர்த்து
வருஷங்கள் ஆகி விட்டது
பாலில் நிறைய தண்ணீர் விட்டு
செய்த தேனீரும்
இதமான சூட்டில் வெண்ணீரும் செய்து
அவளை எழுப்பினேன்
எழுந்தவள் முட்டி வலிக்குதுப்பா
என்றாள் ஹாட்பேக் குடுங்களேன்
என்றவளிடம்
அலையடிக்கும் தேனீர் குவளையை
நீட்டினேன், சப்திக்க வாங்கியவளின்
தேனீரின் மிச்சம்
கண்ணத்தில் பச்சை படர்த்தி
குளிர் நிழலை விரித்தது

குழந்தைகள் பெருகி வளர்கிறது
மரநிழலில்

Saturday, April 10, 2010

கடவுளின் நாற்காலி...

கடவுளின் நாற்காலிக்கு
போட்டி வந்தது
நடத்தியது என்னமோ
சாத்தான் 

கடவுள் மறுப்பேதும்
சொல்லாமல் பேசாமல் இருந்தார்

நிறைய பேர் வந்திருந்தனர்
போட்டியிட
வரிசை கோடியில்
நானும் பூர்த்தி செய்த
விண்ணப்பத்தை வைத்துக் கொண்டு
நின்று கொண்டிருந்தேன்

விண்ணப்பத்தை வாங்கி பரிசீலித்து
போட்டியில் அனுமதிக்க செய்வது
சாத்தானின் ஆட்களின் வேலை

சில ஷரத்துகள்
கடவுளுக்கு ஒவ்வாததாய்
இருந்திருக்க வேண்டும்
தன் ஆட்சேபங்களை
முன்வைத்தார், சாத்தான்
கேட்பதாய் இல்லை

வந்திருந்த கூட்டத்தை
பார்த்ததும் கடவுளுக்கு கொஞ்சம்
வேர்த்து தான் போயிருந்தது

சாத்தானை தனியாக
சந்தித்தார் கடவுள்
ஏதோ உடன்படிக்கை
ஏற்பட்டிருக்க வேண்டும்

சாத்தான் தேர்தலை
ரத்து செய்வதாய் அறிவித்தது

கடவுளுக்கு தன் கடைவாய் பற்களையும்
முட்டி துருத்திய கொம்புகளையும்
தன் வாலையும்  கழற்றி கொடுத்தது

சாத்தானின் தலைக்கு மேல்
சுழன்றது  ஒளிவட்டம்

Wednesday, April 07, 2010

மாயக்கம்பளம்...

எப்போதும் வடக்கை
காட்டும் காந்த முள்ளை
கையில் எடுத்துக் கொண்டு
ஆரம்பமானது என் பயணம்
திசையறியாமல் பயணிக்க
விருப்பமில்லை எப்போதும்

போதுமான ஆயத்தங்கள்
செய்து கொண்டேன்
தேவையான
உணவு, உடுப்பு மற்றும்
வழித்துணைக்கு
மிச்சமிருந்த 
காழ்ப்பையும், வெறுப்புமிழும்
வார்த்தைகளையும்
இட்டு நிரப்பிக் கொண்டேன்

போகும் வழியின்
அடையாளத்திற்கு
வார்த்தைகளை அங்கங்கே
விட்டுச் சென்றேன்
இன்னும் சில வார்த்தைகளும்
சேர்ந்து கொண்டன
வார்த்தைகளை விட விட
பெருகி கொண்டே வந்தது

பயணம் நெடுந்தூரமாகி விடும்
என்ற பயம்
அசுர புற்றாய் வளர தொடங்கியது
சிக்கி கொண்ட கால்களை
பிடுங்கி கொண்டு, திரும்பி விடலாமா
என்று யோசித்தேன்
கனக்கும் வார்த்தைகளையும்
காழ்ப்பையும் என்ன செய்வது
செலவிட ஏதுவில்லை 
வெளி நீண்டு கொண்டே
இருந்தது

நின்று விட்டேன் ஓரிடத்தில்
இப்போது
நின்ற இடம் நகரத் தொடங்கியது
நான் பின்னோக்கி ஓடுகிறேன்

Monday, April 05, 2010

இரவில் ஒளிரும் மரம்...

புதிதாய் உருவான
வணிக வளாகத்திற்க்காய்
வேருடன் பிடுங்கிய மரங்களும்
தரை மட்டத்திற்கு
அறுக்கப்பட்ட மரங்களுக்குமான
துக்கங்கள் வேறுவேறு

பிடுங்கிய மரங்கள்
வேறு எங்காவது நடப்படலாம்
அறுக்கப்பட்ட மரங்கள்
துளிர்க்கலாம்
வாழ்வதற்கான சாத்தியகூறுகள்
இரண்டுக்கும் உண்டு

வேருடன் பிடுங்கிய மரத்திற்கு
பதிலாய் உடலெங்கும்
நட்ச்சத்திரங்கள் முளைத்த
மின்மரத்தை நட்டார்கள்
சிமிண்டில் வேர்செய்து

மரம் போலவே இருக்கு
கூடுதல் ஈர்ப்பு,
புளகாங்கிதம் அடைந்தனர்
நட்டவர்கள்
வணிக வளாகத்தின் வாடிக்கையாளர்கள்
வாய் பிளந்து பார்த்தார்கள்

பிராண வாயு
அதன் இயக்கத்தில் இல்லை
சூர்ய ஒளியை இலைஎங்கும்
மினுக்கி காட்ட தெரியாமல் 
இரவில் ஒளிர்கிறது

விம்மி புடைத்து அழும்
அறுத்த மரத்தின் வேர்கள்
கருகி முடங்கும்
துளிர்க்க துணிவின்றி

பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை
இரவின் ஷார்ட் சர்க்யூட்டில்
பொசுங்கி போச்சு

Saturday, April 03, 2010

மரணத்தின் களிநடனம்...

மறக்க முடியாத
தினங்களின் பசையில்
ஒட்டி உயிர் விடும்
பால்யம்

யயாதியாய் புணர்ந்த
கதைகளை
பக்கத்திற்கு பக்கம்
புரட்ட தினவெடுக்கும்
தோள்வலி

மென் அம்புகள்
துளைத்த பெருநாழியில்
உதிரும் மணித்துளிகள்
பெரிதாகி
துளைக்குள் புக மறுக்கும்

யவ்வனம் பால் கட்டி
நிற்கும் முலைச்சுவட்டில்
வறண்ட இதழ்கள்
வானம் பார்த்து கிடக்கும்

பிறிதொரு முறை
உதறிய படுக்கையில்
கெட்டித்து சிந்தும்
நரை மயிர்கள்
தூர்ந்த வடத்தை ஒக்கும்

கொடிய வாள்களின் வீச்சில்
முதலில்
உள்ளங்கை ரேகையென
கோடுகள் எழுதிய உடம்பில்
தொட, நகர
ஏய்ப்பு காட்டும் மரணம்

Friday, April 02, 2010

மழை விட்ட ஞாயிறு...

நான் கிறக்கத்தில் இருந்த பதின் நாட்களின் இருபட்டிகளிலும் பாஸ்பரஸ் தடவி மனசெங்கும் பற்றி எரிந்த காலங்களில் பூத்த ஜுவாலாமுகிகள் என்னுடைய இந்த கவிதைகள்...  இதை பதிய அநேக ரிசர்வேஷன் இருந்தது... அதை மீறி என்னை பதியச் சொன்னவன் ரவி, என் பால்யத்தின் தெருக்களில் புழுதி அப்பி கிடந்தவர்களில் முக்கியமானவன், அவன் காதலை சொல்ல பின்குரலாய் இருந்த கவிதையில் இதுவும் ஒன்று... 
ஒரே ஊரில் இருக்கும் உறவுக்காரப்பென்னை மயக்க தேவையான கவிதைக்கணங்கள் அடர்த்தியாய் இருந்த நாட்களில் உருகி உருகி எழுதிய எல்லோருக்கும் பொதுவான காதலை, காதலிகளை தலை தடவி கூந்தல் கோதி சரித்த மசி, இன்னும் அப்பி கிடக்கிறது கைகள் எங்கும்.   அப்பிய மசியில் வைத்த கைநாட்டு கவிதை ஒன்று கீழே:

கொடிகம்பியில் ஜனித்த
மழையின் மிச்சங்கள்
ஒரு ஸ்படிக மாலையின்
நீள் வசமாய் இருந்தது

கிணற்றடியும், துவைகல்லும்
கழுவி விட்டது போல்
ஒன்றுகொன்று முகம்
பார்த்துக் கொண்டிருந்தது

லேசாய் தளுக்கு காட்டி
சிரித்த செடிகளின் 
கண்களில் தேங்கி நிற்கிறது 
சிந்தாத துளிகள் 

புதியதாய் முளைத்திருந்த
கனகாம்பரத்தின் நிறம்
வாசனையாய் பரவி இருந்தது

முன் தின மழையை
உடலெங்கும் போர்த்தி
குளிர் காயும்
மண்ணில்
அவள் கால் வைக்க
தேங்கிய தண்ணீர்
ஆவியாகி மறுபடி ஜனிக்கும்
பருவ கால மழையாய்

கருப்பு காளான் பிடித்து
வாயில் பிரஷ்ஷுடன்
நீலத்தாவணி, வெள்ளை 
ரவிக்கையில் சோம்பல் முறித்தவள்
மழை ஞாயிறை மேலும்
குளிர்வித்தாள்