Tuesday, August 30, 2011

மொழி சிதைவுற்ற பாடல்...


உயிரற்றது போலிருந்தது அவன் கண்கள்
அல்லது இறந்தவனின் கண்களை போல இருந்தது
பேச்சு மொழியில் பரிச்சயமற்றவன் 
சொற்ப வார்த்தைகள் சிதைவுற பேசுபவன் போலிருந்தான்
கிடைக்காத வார்த்தைகளுக்காக சிரமப்படாமல்
கையில் இருந்த கம்பால் தன்னைச் சுற்றி
தட்டிக் கொண்டிருந்தான்
பிச்சைக்காக உட்கார்ந்தவன் மாதிரியும் தெரியவில்லை
அவன் அமர்ந்திருந்த இடத்தில் அத்தனை
நடமாட்டமும் இல்லை இரப்போரும் குறைவு தான்
எந்தவித இறைஞ்சுதலும் இல்லை அவனிடம்
அரிதாய் கிடைத்தவற்றை மறுக்கவுமில்லை

இறந்திருந்த கண்களின் வழி
பினங்கள் ஊர்ந்து நகர்வதைப் பார்க்கிறான்
கையில் இருந்த கம்பால் திரும்பவும் தரையைத் தட்டுகிறான்
தட்டிய படியே தனது தேர்ந்த குரலில் உரத்து
எங்குமே கேட்டிராத ஒப்பாரியைப் பாடுகிறான்
அதிரும் காற்றில் கம்பிகள் அறுகத் தொடங்குகிறது
பினங்கள் ஊர்வது தொடர்ந்து கொண்டே இருந்தது
ஒப்பாரியை நிறுத்தியதும்
காற்றின் அதிர்வு அவனை நடுங்க வைக்கிறது
திரும்பவும் பாட ஆரம்பிக்கிறான்
இப்போது மொழி சிதைவுற்ற பாடலை கையில்
எடுத்துக் கொண்டு தரையை ஓங்கித் தட்டுகிறான்

Saturday, August 06, 2011

கூழாங்கல்...


நீரில்லா குவளையில்
நிரம்பிக்கிடக்குது தாகம்...
*** 
தூக்கில் தொங்கியதன் காரணங்களை
அவன் கடைசியாய் படித்த புத்தகத்தில்
தேடிக்கொண்டிருக்கிறது மேசைக்காத்தாடி...
*** 
தவிப்புகளின் மத்தியில்
சுழலும் புத்தியில் சிக்குகிறது
யாரோ தவற விட்ட ஒற்றைக் கொலுசு...
***

துளையிடப்பட்ட குழல்
நெய்த நெசவில் பழுதில்லை
போர்த்திக் கொண்டதில் உறங்கிப்போனேன்...
 ***
மணல் வீடு கட்டியவளின்
விரல் அடையாளங்கள் அழிக்கும்
அலையை என்ன செய்வது?
***
உதிர்ந்த இறகின்
தனிமையை அறியாதிருக்கும்
உதிர்த்த பறவை...
***
சருகுகள் அடைத்திருந்த வாய்க்காலில்
முளைத்திருக்கிறது
தளிர் இதழ்ப்பூ ஒன்று...
***
உறங்காத இரவுகளின்
மத்தியில் உருளும் பகடைகளில்
ஒற்றைப்படை விருத்தம்...
***
சலனமற்ற குளம் ஒன்று
கல்லெறிந்ததில்
கலங்குகிறது என் உள்...
***
தனித்த இரவுகளின் வாசனை
எண்ணெய் விளக்கின்
கருகிய திரியில் பிறக்கிறது...
***
மழை ஒரே சாயலில் பெய்கிறது
நனைபவர்கள் தான் வெவ்வேறு...
***
மழையில் நனைந்த
சிறுகதைத் தொகுப்பின்
பக்கங்களை பிரிக்கமுடியாமல்
கதைகள் எல்லாம் ஒரே கதையானது...
 ***
கல் பட்டு
சிதறிய இலைகளுடன்
சில பறவைகளும்...
 ***
படித்துறையின் வெம்மையில்
பிளந்து கிடக்கும் தெப்பம்
தெய்வங்களின் கருத்த உதடுகள்...
 ***
இரவுப்பூச்சிகளின்
சத்தத்தில் சலசலத்துக் கொண்டிருக்கிறது
கால் நணைக்கமுடியாத குளம் ஒன்று...
***

Tuesday, August 02, 2011

இருத்தல் சமன்பாடு...பலுவனம்மாவும்
கோட்டைமுனியும்
செய்வது எல்லாம்
பெரிய காரியங்கள் இல்லை
காத்து கருப்பு அண்டாமல்
பார்த்துக் கொள்வதும்
காய்ச்சல் கண்டால்
பிணி தீர்ப்பதும் தவிர
வேறு ஒன்றும் தெரியாது
சந்தான சம்பத்து என்று
பாலிக்க, வரங்கள் நல்க
பெருந்தெய்வங்கள்
தேவையாயிருக்கு
ஒரு புட்டி சாராயமும்
சுருட்டும், ஒரு கோழியோ
கிடாயோ கொடுத்து தீராது
பெருந்தெய்வங்களின் பசி
பசியோடு அலையும்
பெருந்தெய்வங்கள் விழுங்க
எண்ணிக்கையில் குறையுது
சிறுதெய்வங்கள்