Wednesday, June 30, 2010

ஜோதிர்கமய!!

விளக்குச் சுடரில்
கருகிய வெளிச்சம்
கீழே வட்டமாய் 

திரியின் கரிநாக்கில்
எரிந்து சாம்பலாகும்
இருள்

விளக்கு கண்
சுடர் பாவை
இருள்
மஞ்சள் கண்ணாடி

திரை இருட்டு
விளக்கு விலக்கும்
ஆனந்த சுடர் நடனம்

பேசா சுடர் மௌனத்தில்
பொரியும்
விட்டில்

விளக்கின் சுடர்
ஊதிய காற்றில்
பருத்து பெருக்கும்
நிழல்கள்

விளக்கு நிலை
வெளிச்சம் ஊர்சுற்றி
கட்டிய கயிறு இழுக்கும்
தூரம் கடக்காது

உறிஞ்சி குழல்
உற்சாக பானம்
மிதப்பில் கடக்கிறது
வெளிச்சம்

Monday, June 28, 2010

பெயரெச்சம்...

தாமு நாயுடுவுக்கு
யாரையும் இட்ட பெயரில்
அழைப்பதில் விருப்பம் இல்லை
ஜெயா, பொம்மி!
சுப்பு, கூழு ஆனாள்!
ஜமுனா நானாமுஜா ஆனது
யாருக்கும் பழைய பெயர்
ஞாபகம் இல்லை
கொப்பரைச்சட்டி செத்து போயிட்டார்
என்றதும் பிடிபடாமல்
யாரது என்று கேட்டதும்
நம்ம தாமு நாயுடு என்றான்!   

எல்லா பெயரையும் அவருடன்
எரித்தார்கள்
அவர் பெயர் மட்டும்
வேகாமல் கிடந்தது

 

Tuesday, June 15, 2010

ஆல் போல் தழைத்து...

இறுக்கி கட்டிய
கூந்தலின் அடங்கா
பிரிகளென வழியும்
விழுதுகள்

கதிர்கள் நுழைந்து
தரையில் விழுந்து விடாது
அடர்ந்திருக்கும்
பச்சை கண்ணாடி இலைகள்

விரிந்த பாதங்கள்
கொண்ட வயசாளியின்
தெறித்த நரம்புகள் ஓடும்
உரமான கால்களாய்
நிலம் ஊன்றி தண்டு

உறவுக்கும் உதவிக்கும்
கரங்களாய்
நீண்ட கிளைகளில்
முடிச்சுகளென
உயிர்கருமுட்டைகள்

காலம் கடந்து
இழுக்காமல் விட்டுவிட்ட
தேரென நின்றிருந்தது
அந்த ஆலமரம்

பறவைகளின் கூட்டிசையின்
குரல்வளை அறுத்து 
பச்சையத்தில் குருதி
கலந்து நவீன ஓவியங்கள்
ஆலமரம் கலையரங்கம் ஆனது
கலைகள் செழித்து வளர்ந்தன

Saturday, June 12, 2010

யானை என்பது யாதெனின்!

பறவைகள்
இல்லாத
வெளிர் வானமென
வெறிச்சென்று இருந்த
தெரு வழி
கடக்கிறது
கருகிய ஞாயிறென
ஒரு யானை

கதவுகள் இறுகி
சாத்திய வீடுகளில்
புழுங்கி கிடக்கும்
நிசப்த சுவர்களை
மோதி சிதறுகிறது
மணியோசை

மெதுவாய் நகரும்
வயிறு பெருத்த
பிற்பகலின்
மீது இறங்கும்
பசித்த வன்மம்
நறநறக்கும் மணற்துகள்கள்

யாசிப்பின்
வெப்பம் தணியாது
கனத்து அசையும்
கையில்
விற்பனைக்கு
ஒளிந்திருக்கும் சுபகணங்கள்

அயர்ந்து உறங்கும்
பகற்கனவுகளின் நுனியில்
அங்குசம் பாய்ச்சும்
பாகனின் உடற்மொழி
சிதைந்து நசிவுறும்
வன காதலிகளின்
வர்ணப்பூச்சு

விடிய காத்திருக்கும்
முட்படுக்கையில்
குன்றாய் சமையும்
கோயில் யானைக்கு
குறை ஒன்றும் இல்லை
கோவிந்தா!
 

 

Friday, June 04, 2010

திருகிக்களை...

கடந்து வந்த
பாதையின்
இருள் பொதின்மையில்
கிடத்தி வைத்திருந்த
நானில்
இடறி விழுந்தேன்

நெருக்கி கட்டிய
பிணக்குகளின்
துர்வாடையில்
நிரம்புகிறது
பிள்ளைகளற்ற
தாம்பத்யம்

குருதியின் துளிகளில்
எழுந்த புற்றில்
சர்ப்பங்கள் நிறைந்து
பெருகும்
நீலம் படரும்
நான் எங்கும்

உலர்ந்த சருகு
வலது முலை
உதிர்த்த இடத்தில்
பீய்ச்சுகிறது
இதுவரை சுரக்காத
எதுவோ...