Thursday, July 28, 2011

முழுதும் நனைந்திருக்கிறது என் வீடு...


முழுதும் நனைந்திருக்கிறது
என் வீடு
சுவர், ஜன்னல், ஜன்னல் கம்பிகள்
கூரையும், வாசக்காலும், தின்னையும்
மழையினை உறிஞ்சு
வைத்துக் கொள்ளும் இரவு முழுவதும்
உடல் படுகிற இடங்களில் எல்லாம்
சிலிர்ப்பாய் மழையின் மிச்சத்தை
இடம்மாற்றும் நனைந்த வீடு
உங்கள் வீடுகளில் கூரைகள் நீண்டு
வறண்ட நாவுச்சுவர்கள்
மழையை சுவைக்காமலே
போயிருக்கலாம்
ஜன்னல் கம்பிகள் முற்றிலும்
மழை நீர் கோர்க்காத
வெற்றுச்சரமாய் இருக்கலாம்
வாசல் நுகராத மழை
வெளியிலேயே தேங்கி
வடிந்தும் போகலாம்
மழை பற்றிய அறிவை
கூரைகள் மட்டுமே
கதைகதையாய் கூற
வெறும் செவிகள் மட்டுமே
திறந்து வைத்திருக்கும் ஏனையவை
மழைச்சத்தம் மழையாகுமா
மழைக்கதை மழையாகுமா
நீங்கள் வீடுகளுக்குள்ளும்
தளராக்கூரைகளுக்குள்ளும் ஒடுங்க
மழை ஈரம் படாமலே
உலர்ந்து கிடக்கலாம்
சுவர்கள் போலவோ, ஜன்னல்கள் போலவோ
ஜன்னல் கம்பி, வாசக்கால்கள் போலவோ.
என் நனைந்த வீடு முளைவிட
உச்சானியில் அமர்ந்து கொண்டே
மழை ஈரத்தில் படாமல்
எதுவும் துளிர்ப்பது எப்படி?
என்று உங்களை வியந்து கொண்டிருக்கிறேன் நான்

Monday, July 25, 2011

கல்யாளி...


பரிசு பொட்டலம்
என்று தான் தோன்றுகிறது
அடர் நீல வானத்தை
மடித்துக் கட்டியது போல்
நட்சத்திரங்கள் உதிர்ந்து
கொண்டே இருந்தது

மூடியிருந்த பொட்டலத்தின்
நட்சத்திர முனைகளின்
கூர் கிழிக்கும் பயம்
பிரிப்பதை ஒத்தி வைத்தது

மயில்கண்சுடரென மினுக்கி
போர்த்திய அழகு
மர்ம முடிச்சாய் இறுகுகிறது

பொட்டலத்தின் உள்ளீடு
எதிர்பார்ப்பின் அவயங்களை
தின்று வளருது கல்யாளியென
பேசாத வார்த்தைகள்
மூடத்துவங்குகிறது என்னை
கூர் அலகால் துழாவி கொத்தி
எடுக்கிறது மந்திரச்சொல்லை
சினேகத்தின் பீலிப்பறவை 
மந்திரச்சொல்லை
தவறவிட உடைந்து
 நறுமணம் பரவுகிறது

நறுமணத்தின் தைலங்களில்
வரைந்த அரூவ சித்திரங்களுக்கு
பெயரிடுகிறேன் அது இதுவென்று

கனவுகளின் படுக்கை உதற
விழுந்த முகங்களை
அரூவங்களுடன் பொருத்த
முனைகிறேன்

பொருந்தா முனைகளை
சிதைக்கவும், முறிக்கவும்
தொடங்கியபோது
என் விரல்கள் உதிரத்தொடங்கியிருந்தது...