அன்பு நிறை எல்லோருக்கும்...
இந்த வருஷம் இன்னும் முடிய சில பொன் தருணங்கள் மிச்சமிருக்கிறது... நிறைய கொடுத்து விட்டு செல்கிறது... உன்னத உறவுகள், பகிர்வுகள் என்று இந்த வருஷம் முழுக்க முழுக்க நல்லதனங்களில் நிறைந்திருந்தது... இருக்கிறது.
எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததும் ஒரு மிக பெரிய சந்தோசம்... வீடை கட்டி இரண்டு வருடங்களாக பூட்டி வைத்து வாழ கொடுத்து வைக்க முடியாமல் மனசுக்குள் புழுங்கி போன நாட்களை இன்று நினைக்க... கண் நிறைகிறது... வீடென்று எதனை சொல்வீர்னு மாலன் சொல்றது மாதிரி என் பெங்களூர் வீடு எங்கள் முதல் கனவு வீடாய், ஆசையையும் இழக்க விரும்பா தருணங்களையும் போட்டு கட்டியது... என் மனைவியின் அழகுணர்ச்சியை, உபயோக மதிப்பை சேர்த்து பிசைந்து வனைந்த சிற்பமாய் நிற்கிறது இப்போது... இன்னும் பர்னிஷிங் பண்ணவில்லை... ஆனாலும் வாழ்க்கை அதன் உயர் தரங்களுடன் எங்களிடையே பரிமளிக்கிறது நாங்கள் முதன் முதலாய் சந்தித்த நிமிடத்தின் மொத்த தொகுப்பாய்...
புரைக்கேற்றிய மனிதர்கள் என்று பாரா போல எனக்கு எழுத வரவில்லை... ஆனால் இந்த வருஷம் அதன் கடைசி துளிவரை எனக்கு மிக நல்ல நண்பர்களை சேகரித்து கொடுத்து உள்ளது... காமராஜ் வழியாக உள் புகுந்து மாதுவை தொட்டு, பாரா, நவாஸ், நேசமித்திரன், இன்று அம்பிகா என்று வளர்ந்து கொண்டிருக்கிறது இடைவெளிகளை, தூரங்களை இட்டு நிரப்பிக் கொண்டே ஒரு உறவுப்பாலம். என்னை மேலும் பாதித்து இன்னும் தொடர்பே இல்லாமல் இருக்கும் சில பெயர்களில்... இராகவன், அமிர்தவர்ஷிணி, கும்க்கி என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. வரபோகிற வருஷம் இதை எனக்கு நிச்சயமாக்கி தரும் என்று நிறைய நம்புகிறேன்...
காமராஜின் சாமக்கோடங்கியின் நடை என்னை பாதித்த அளவு யாரும் இன்று வரை என்னை பாதிக்க வில்லை... என்னை எழுத தூண்டியர்களில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் காமராஜ், மாது மற்றும் பாரா என்கின்ற இந்த முப்பரிமாணம் முதன்மையாய் இருக்கும், இருக்கிறது. எல்லோருக்கும் மிக பெரிய அன்பும் நன்றியும்.
நிறைய நல்ல விஷயங்கள், எதிர்பார்ப்புகள், வேண்டுதல்கள், கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் சிறு சிறு முயற்சிகளில்
பிரியத்தின் வழி எல்லோருக்கும் என் புது வருஷ வாழ்த்துக்கள்...
அன்பும், ஆயிரம் நன்றிகளுடனும்,
ராகவன்