Saturday, February 27, 2010

கன்னிமைப் பொழுதுகள்...

நகர இருட்டில்
தொலைந்து போன
ஒடுங்கிய சந்து போல
ஏக்கங்களை ஒளித்து
வைத்திருக்கிறது
பலுவனம்மாவின் கோயில்

பங்குனி மாச பகலில்
மட்டுமே வரும் அங்காளி
பங்காளிகளுக்காய்
காத்திருப்பாள்
ஒரு முதிர் கன்னியாய்

பலிக்கு ஏங்கும் பீடத்தில்
காய்ந்த ரத்தத்துளிகள்
பலுவனம்மாவின்
பயத்துக்கு
துணையாய்
குத்தவைத்துக் கிடக்கும்

கழித்த
கோழி இறகுகளும்
ஆட்டின் கொம்பும்,
குளம்பும்
அவளின் படையல்
ஞாபகங்களில்
பந்தி வைக்கும்

காய்ந்த பனைமரங்களின்
உறுமி மேளத்தின் 
திருவிழாக்கனவில்
மீண்டு திரும்பும்
அவளின் யவ்வனம்

அடிக்காத மணி
அந்தரத்தில்
ஒற்றை நாதக்கனவுகளில்
உறங்கி கழிக்கும்

மூணு வேளை அலங்காரம்
அபிஷேகம், ஆராதனைகள்
எல்லாம்
சந்தன காப்பு
வெடிச்சு விரிசல் விடும்
கன்னிச்சூடு தாங்காமல்

36 comments:

மதுரை சரவணன் said...

உங்கள் கவிதை பங்காளி சாமிகும்பிடலை நினைவு படுத்துகிற்து.வாழ்த்துக்கள்.

பத்மா said...

என்ன ஒரு வெப்பம் வார்த்தைகளில்

மாதவராஜ் said...

காய்ந்த சருகுகள் அலைக்கழியும் நிலப்பரப்பில் தன்னந்தனியாய், காலகாலமாய் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் இப்படியான அம்மன்கள். தொலைதூரத்துக் கிராமத்து மண்ணிலிருந்து வெக்கை அடிக்கிறது. பேருந்தின் பயணத்தில், ஊர் பேர் தெரியாத ஊரின் வெளியே அவளை நாமெல்லாரும் பார்த்தாலும், ராகவனிடம் மட்டும் ரகசியம் பேசுகிறாள் போலும்!

விநாயக முருகன் said...

வார்த்தைகளில் வெக்கை வீசுகிறது.

தேவன் மாயம் said...

கிராம தெவதையை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்!!

அம்பிகா said...

உங்கள் வர்ணனை ஆங்காங்கே இருக்கும், பலுவனம்மா போல உக்கிரமான கிராம தெய்வங்கள் அனைத்தையுமே நினைவுப் படுத்துகிறது.
\\அவளை நாமெல்லாரும் பார்த்தாலும், ராகவனிடம் மட்டும் ரகசியம் பேசுகிறாள் போலும்!\\
அப்படித்தான் தோன்றுகிறது.

Balakumar Vijayaraman said...

சிலிர்க்க வைக்கிறது.

ரிஷபன் said...

அடிக்காத மணி
அந்தரத்தில்
ஒற்றை நாதக்கனவுகளில்
உறங்கி கழிக்கும்
என்னால் இந்த வரி தந்த அதிர்வைத் தாங்க முடியவில்லை..

ராகவன் said...

அன்பு சரவணன்,

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல...
தொடர்ந்து வந்து வாசித்து உங்கள் அன்பை சொல்வதால், எனக்கு உற்சாகமாய் இருக்கிறது...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பத்மா,

வார்த்தைகளில் வெப்பம் உணர்வது எல்லோருக்கும் முடியாது பத்மா... உங்கள் வாழ்த்துக்கும், தொடர்வருகைக்கும் வந்தனங்கள் பல.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

என்ன சொல்றது மாதவராஜ்!! உங்கள் பார்வையில் படாத தொடாத விஷயங்கள் ஏதாவது இருக்கா என்ன??

ராகவனிடம் பேசிய கிராமதேவதைகள் உங்களுக்குள் வாழ்ந்தவர்கள் மாதவராஜ்!!

ஆயிரம் நன்றிகள்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு விநாயகமுருகன்,

வெயில் காலத்தில் பதனீர் சாப்பிட்டிருக்கிறீர்களா? பனை மட்டையில் நுங்கு நோண்டி நோண்டி போட்டு தின்னும் போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பரவும் குளிர்வில் தனியாத சூடும் தனியும், அதனால் வெக்கையில் கருகி உட்கார்ந்திருப்பவளை குளிர்பதனீர் குளிப்பாட்டுவார்கள், துடைத்து வழித்த பின் தான் அலங்காரங்கள் எல்லாம். தகதகன்னு மின்னும் அவளின் முகத்தில் மூக்குத்தியாய் சந்தோஷம்.

அன்பும், நன்றியும்.
ராகவன்

ராகவன் said...

அன்பு தேவன் மாயம்,

அன்பும் நன்றிகளும் தேவன் மாயம்... அழகான பெயர் உங்களுடையது...

தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்.

அன்புடன்
ராகவன்

Jerry Eshananda said...

கன்னிமை பொழுதுகள் கடைசி வரிகளின் சூடு தாங்காமல் வெடித்து சிதறுகிறது.

Jerry Eshananda said...

rocky u rock.

ராகவன் said...

அன்பு அம்பிகா,

உங்கள் கருத்துக்கும், அன்புக்கும் நன்றிகள் பல அம்பிகா!!

அன்பும்
ராகவன்

ராகவன் said...

அன்பு பாலகுமார்,

வருகைக்கு நன்றிகள் பல!!

தொடர்ந்து வரவும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

நன்றிகள் பல...

உங்கள் அன்பும்,வாழ்த்தும் என்னை மேலும் ஊக்கமடையச் செய்கிறது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ஜெரி,

உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பல... முடிகிற போது பேசுங்கள்...

மதுரை வரும்போது உங்களை சந்திக்க் முயல்கிறேன்

அன்புடன்
ராகவன்

பாலா said...

அடடா அருமைங்க ராகவன்
இனிதொடர்ந்து வருகிறேன் நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல

ராகவன் said...

அன்பு பாலா,

ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது உங்களின் வருகை...

நிறைய மிஸ் பன்னிட்டேன்னு சொல்றதே தித்திப்பா இருக்கிறது பாலா...

அன்பும் நன்றியும்
ராகவன்

Thenammai Lakshmanan said...

//மூணு வேளை அலங்காரம்
அபிஷேகம், ஆராதனைகள்
எல்லாம்
சந்தன காப்பு
வெடிச்சு விரிசல் விடும்
கன்னிச்சூடு தாங்காமல்//

அருமை ராகவன்

ராகவன் said...

அன்பு தேனம்மை,

ஆயிரம் நன்றிகள், உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும்.

அன்புடன்
ராகவன்

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான கவிவரிகள்

பா.ராஜாராம் said...

மாதவராஜ் said...


//காய்ந்த சருகுகள் அலைக்கழியும் நிலப்பரப்பில் தன்னந்தனியாய், காலகாலமாய் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் இப்படியான அம்மன்கள். தொலைதூரத்துக் கிராமத்து மண்ணிலிருந்து வெக்கை அடிக்கிறது. பேருந்தின் பயணத்தில், ஊர் பேர் தெரியாத ஊரின் வெளியே அவளை நாமெல்லாரும் பார்த்தாலும், ராகவனிடம் மட்டும் ரகசியம் பேசுகிறாள் போலும்!//

என்ன பேச வந்தேனோ அதை பேசி இருக்கிறீர்கள் மாது

மாது பேசி இருக்கிறார் இருக்கிறார் ராகவன்.

போதும்.

vidivelli said...

பிரமாதமுங்க........
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.
supper.........

உயிரோடை said...

பலுவனம்மாவே இற‌ங்கி வ‌ந்து பாடின‌து போல‌ இருக்கு...

ராகவன் said...

அன்பு நினைவுகளுடன் நிகே,

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் அன்பும், நன்றியும்

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பாரா,

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு!!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு விடிவெள்ளி,

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல!!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு லாவண்யா,

அன்புக்கும், வாழ்த்துக்கும் ஆயிரம் நன்றிகள்.

அன்புடன்
ராகவன்

Anonymous said...

suseelavin colusu

MANIKANDAN said...

Hearing Susuilas Kolusu sound.

reg,
mani.

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள் ராகவன்.

Raji said...

வருடம் முழுதும் கொண்டாடப்படும் பெரிய தெய்வங்கள் போல இல்லாமல் குட்டி (காவல்) தெய்வங்கள் வருடத்திற்கு ஒரு முறை வரும் பங்காளிகளுக்கு காத்திருப்பதை ரொம்ப அருமையாய் ராகவனுக்கே உரிய சின்ன கோவத்தோட சொன்னா மாதிரி இருக்கு....நல்ல கவிதை....

அன்பேசிவம் said...

அன்பு ராகவன்,
இந்த வடிவம் உங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருப்பதுபோல எனக்கு படுகிறது. வெப்பம், சூடு, உஷ்ணம், வெக்கை, தகிப்பு, ச்சே எடத்துக்கு ஏத்தமாதிரி பிரயோகிக்கும் பொழுது ஒரே அர்த்தம் தொணிக்கும் வார்த்தைகள்தான் எத்தனை பிரமாதப்படுகிறது, அழகு.

கன்னிச்சூடு இதன் எதிர்பதம் எப்படியிருக்குமேன யோசித்துக்கொண்டிருக்கிறேன்....