Wednesday, April 07, 2010

மாயக்கம்பளம்...

எப்போதும் வடக்கை
காட்டும் காந்த முள்ளை
கையில் எடுத்துக் கொண்டு
ஆரம்பமானது என் பயணம்
திசையறியாமல் பயணிக்க
விருப்பமில்லை எப்போதும்

போதுமான ஆயத்தங்கள்
செய்து கொண்டேன்
தேவையான
உணவு, உடுப்பு மற்றும்
வழித்துணைக்கு
மிச்சமிருந்த 
காழ்ப்பையும், வெறுப்புமிழும்
வார்த்தைகளையும்
இட்டு நிரப்பிக் கொண்டேன்

போகும் வழியின்
அடையாளத்திற்கு
வார்த்தைகளை அங்கங்கே
விட்டுச் சென்றேன்
இன்னும் சில வார்த்தைகளும்
சேர்ந்து கொண்டன
வார்த்தைகளை விட விட
பெருகி கொண்டே வந்தது

பயணம் நெடுந்தூரமாகி விடும்
என்ற பயம்
அசுர புற்றாய் வளர தொடங்கியது
சிக்கி கொண்ட கால்களை
பிடுங்கி கொண்டு, திரும்பி விடலாமா
என்று யோசித்தேன்
கனக்கும் வார்த்தைகளையும்
காழ்ப்பையும் என்ன செய்வது
செலவிட ஏதுவில்லை 
வெளி நீண்டு கொண்டே
இருந்தது

நின்று விட்டேன் ஓரிடத்தில்
இப்போது
நின்ற இடம் நகரத் தொடங்கியது
நான் பின்னோக்கி ஓடுகிறேன்

15 comments:

பத்மா said...

பின்னோக்கி ஓடும் நேரம் காழ்ப்பும் வெறுப்புமிழும் வார்த்தைகளும் உதிருமா ?
சில சமயம் பின்னோக்கி போதல் வரம்

கவிதை படிக்கும் போது ஒரு பயம் மனதில் பரவுவதை தவிர்க்கமுடியவில்லை ராகவன் .

போகும் வழியின்
அடையாளத்திற்கு
வார்த்தைகளை அங்கங்கே
விட்டுச் சென்றேன்
இன்னும் சில வார்த்தைகளும்
சேர்ந்து கொண்டன
வார்த்தைகளை விட விட
பெருகி கொண்டே வந்தது

இது உண்மை .இது இல்லாதிருந்தால் எத்தனை அழகு வாழ்க்கை

நிதர்சனம் ராகவன்

மணிஜி said...

ராகவன்...அன்று சொன்னதுதான்.இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...

மாதவராஜ் said...

எதையும் விட்டு, விலக முடியாது ராகவன். வாழ்ந்த காலங்கள் கூடவே வந்து கொண்டுதான் இருக்கும். வெறுப்புடன், அன்பையும் சேர்த்து எடுத்துக்கொண்டால், பயணம் அர்த்தமுள்ளதாகிவிடுகிறது. நிற்கவும் செய்யாது. கவிதை இப்படி நகர்வதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

க.பாலாசி said...

//போகும் வழியின்
அடையாளத்திற்கு
வார்த்தைகளை அங்கங்கே
விட்டுச் சென்றேன்
இன்னும் சில வார்த்தைகளும்
சேர்ந்து கொண்டன
வார்த்தைகளை விட விட
பெருகி கொண்டே வந்தது//

//நின்று விட்டேன் ஓரிடத்தில்
இப்போது
நின்ற இடம் நகரத் தொடங்கியது
நான் பின்னோக்கி ஓடுகிறேன்//

சும்மா அருமையென்று சொல்லிவிட்டுப்போக மனமில்லை... சேர்த்துப்பின்னிய வார்த்தைகளை சேமித்துக்கொள்ளவே எண்ணுகிறேன்.... நன்று....

ரிஷபன் said...

வார்த்தைகளை விட விட
பெருகி கொண்டே வந்தது

ஆம்.. அதுதான் மனசின் இயக்கம்.. அமைதி காட்டுவது போல நடித்து பூதாகாரமாய் நிற்கும்..

ராகவன் said...

அன்பு நண்பர்கள்,

அனைவருக்கும் என் நன்றிகள். யாரும் வராத ஒரு அடர் குகைக்குள் தனித்து விடப்பட்ட நான் சுவரில் கிறுக்கிய கோடுகள் புதிய அர்த்தங்களை தருவதாய் எழுதியிருப்பது என் தனிமை சுவர்களில் அப்பிய அழுக்கை அழுந்த துடைக்கிறது. குகைக்குள் நுழைய ஒரு மாதிரியான அசட்டு தைர்யம் வேண்டும், அல்லது பிரதாபங்களில் ஈடுபாடு வேண்டும், இரண்டும் இருக்கிறது இங்கு வந்தவர்களுக்கு, வந்தவர்கள் சும்மா போகாமல் கீழே குறிப்புகளில் எழுதிப்போவது ஒளிர்கிறது குகை இருட்டில், ஸ்கிரிப்ட் ஆன் த வால் மாதிரி ஆகிவிடுகிறது எனக்குள்.

பிரிய தோழி பத்மா,
அன்பு நண்பர் தண்டோரா,
அன்பு க.பாலாசி
அன்பு ஆசான் மாதவராஜ், (பேர கெடுத்துடுவான் போலேயெ...)
அன்பு ரிஷபன்,
உங்களுக்கு என் அன்பும் நன்றிகளும்...
ஒரு மாற்றாய் கவிதை எழுதுவதை தள்ளி வைத்து விட்டு, வேற ஏதாவது செய்யலாமான்னு தோணுது... இத ஏற்கனவே சில பேரிடம் சொல்லிஇருக்கேன், இப்போது தீவிரமா முயற்சி செய்கிறேன்... ஓவியம் பழகுகிறேன்... கித்தானுக்குள் அடங்க மறுக்கும் வர்ணங்களை, இழுத்து வந்து நிரப்புகிறேன். பார்ப்பவர்கள் குழம்பி போக சர்ரியலிஷத்தின் நிழலில் உறங்கும் நாய் என்று பெயரிடுகிறேன்... வந்தவர்கள் மோவாய் தாங்கி வியக்கிறார்கள். குறுந்தாடி மயிரை சொரிந்து கொண்டே, மூக்கு கண்ணாடியை நெற்றிக்கண்ணில் மாட்டுகிறார்கள். அகக்கண் விழித்துக கொள்கிறது. நிறைய விலை கொடுத்து வாங்கி போகிறார்கள் நிழல் மட்டும் மிச்சமிருக்கிறது எடுத்து செல்ல ஆளில்லாமல்.

அன்புடன்
ராகவன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இது..இது...இது தான் ஜோர்!!!

அம்பிகா said...

அன்பு ராகவன்,
கருத்துக்கு விருந்தளித்த கவிதைகள் போல், இனி கண்களுக்கு விருந்தாய் ஓவியங்களை எதிர்பார்க்கிறோம்.

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் வாழ்க்கையில் நம்முடன் நிழலாய்...
எதையும் விட்டு விலகிச் செல்வதென்பது முடியாத காரியம் ராகவன்...

நாம் நின்றாலும் நகர்த்தல் என்பது தொடர்தான்..

நல்ல ஆழமான் வாழ்வியல் சிந்தனை நிறைந்த கவிதை.

cheena (சீனா) said...

அன்பின் ராகவன்

கவிதை அருமை - சிந்தனை அருமை - திசையறியாமல் பயணிக்க விரும்பாதது நன்று. வழித்துணைக்கு காழ்ப்பையும் வெறுப்புமிழும் சொற்களையும் நிரப்ப நிர்ப்பந்தம் - சொற்கள் செல்லச் செல்ல வருவது அதிகம் ஆகிறது - ஆம் அது அன்பில்லாத சொற்களாய் இருப்பதால்! அன்பு ஒன்று தான் பல்கிப் பெருக வேண்டும்.

துவங்கிய பயணம் நிற்காது - தொடரத்தான் செய்யும் - நாம் தான் விலக வேண்டும்.

கவிஞனின் சிந்தனையும் வாசகனின் சிந்தனையும் ஒரே திசையில் பயணிக்குமா ?

நல்ல்ல கவிதை - நல்வாழ்த்துகள்

ஆமா மதுரையா - ஊர்ப்பக்கம் எப்ப வரீங்க - நாங்களும் மதுரை தான்

நட்புடன் சீனா

நேசமித்ரன் said...

ஆமாம் ராகவன் நானும் அப்படித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறேன் கொஞ்ச நாள் கவிதை எழுதுவதை விட்டு விடலாம் என்ற நிலைக்கு...

சும்மா இரேன் எதுவும் செய்யாம என்கிறது மனசு

அறுபடும் நொடிக்காக காத்திருக்கிறேன்

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ராகவன்!

ஓவியமும்-என்று இருக்கட்டுமே ராகவன்.

// நேசமித்ரன் said...

ஆமாம் ராகவன் நானும் அப்படித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறேன் கொஞ்ச நாள் கவிதை எழுதுவதை விட்டு விடலாம் என்ற நிலைக்கு...

சும்மா இரேன் எதுவும் செய்யாம என்கிறது மனசு

அறுபடும் நொடிக்காக காத்திருக்கிறேன்//

யோவ்...என்னங்கையா பயமுறுத்துகிறீர்கள்...

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,

எப்போதும் தனித்தனியாக எழுத வேண்டும், ஒவ்வொருவருக்கும் என்ற ஆசை உண்டு, ஆனால் வேலை அதிகம் இருப்பதால் என்னால் தனித்தனியாக எழுத முடியவில்லை.

அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல...

அன்புடன்
ராகவன்

ரோகிணிசிவா said...

//உறங்கும் நாய் என்று பெயரிடுகிறேன்... வந்தவர்கள் மோவாய் தாங்கி வியக்கிறார்கள். குறுந்தாடி மயிரை சொரிந்து கொண்டே, மூக்கு கண்ணாடியை நெற்றிக்கண்ணில் மாட்டுகிறார்கள். அகக்கண் விழித்துக கொள்கிறது. நிறைய விலை கொடுத்து வாங்கி போகிறார்கள் நிழல் மட்டும் மிச்சமிருக்கிறது எடுத்து செல்ல ஆளில்லாமல். //
varthaikalum nilalgalum
mattum nirkindrana-superb

Kumky said...

அற்புதம்...

கடைசி பத்தியிலிருந்து ஆரம்பிக்கிறது எனக்கான புரிதல்...தலை கீழாக...