Tuesday, June 15, 2010

ஆல் போல் தழைத்து...

இறுக்கி கட்டிய
கூந்தலின் அடங்கா
பிரிகளென வழியும்
விழுதுகள்

கதிர்கள் நுழைந்து
தரையில் விழுந்து விடாது
அடர்ந்திருக்கும்
பச்சை கண்ணாடி இலைகள்

விரிந்த பாதங்கள்
கொண்ட வயசாளியின்
தெறித்த நரம்புகள் ஓடும்
உரமான கால்களாய்
நிலம் ஊன்றி தண்டு

உறவுக்கும் உதவிக்கும்
கரங்களாய்
நீண்ட கிளைகளில்
முடிச்சுகளென
உயிர்கருமுட்டைகள்

காலம் கடந்து
இழுக்காமல் விட்டுவிட்ட
தேரென நின்றிருந்தது
அந்த ஆலமரம்

பறவைகளின் கூட்டிசையின்
குரல்வளை அறுத்து 
பச்சையத்தில் குருதி
கலந்து நவீன ஓவியங்கள்
ஆலமரம் கலையரங்கம் ஆனது
கலைகள் செழித்து வளர்ந்தன

14 comments:

மாதவராஜ் said...

ராகவன்!

ரொம்ப நாளாச்சு. எப்படியிருக்கீங்க. கவிதை நல்லா வந்திருக்கு.
//காலம் கடந்து
இழுக்காமல் விட்டுவிட்ட
தேரென நின்றிருந்தது
அந்த ஆலமரம்//
ரசித்தேன்.

அன்புடன் நான் said...

கவிதை வலி ( நான் புரிந்துக்கொண்டவரை)
பாராட்டுக்கள்.

அன்புடன் அருணா said...

/கதிர்கள் நுழைந்து
தரையில் விழுந்து விடாது
அடர்ந்திருக்கும்
பச்சை கண்ணாடி இலைகள்/
இது பிடிச்சுருக்கு!

உயிரோடை said...

ரொம்ப‌ அருமையாக‌ இருக்குங்க‌ ராக‌வ‌ன்.

//கூந்தலின் அடங்கா
பிரிகளென வழியும் //

காட்சி விரியுது

காமராஜ் said...

எதுவளர்ந்தாலென்ன ஒரு மரத்தின் இழப்பை எதுகொண்டும் சரிக்கட்ட முடியாது.

கபிலன் அருணாசலம் said...

ராகவன், ஆலமரம் மிகவும் நன்றாக வுள்ளது. இன்னும் சிறுது ஆலமரத்தை பற்றி கூடுதலாக எழுதி இருக்கலாம் எங்களுக்கும் மெல்ல ஏதாவது தீனி கிடைத்து இருக்கும். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

//காலம் கடந்து
இழுக்காமல் விட்டுவிட்ட
தேரென நின்றிருந்தது
அந்த ஆலமரம்//
ஆலமரத்தை இனி பார்த்தால் இப்படித்தான் தோன்றும்..

Riyas said...

GOOD POEMS... WISHES

vasan said...

நட‌க்கும் ம‌ர‌மென அழைக்க‌ப்ப‌ட்ட‌
ஆல‌ம‌ர‌ம் இனியென்றும்,
இழுக்க‌படாத‌ தேரென‌வே இய‌ம்ப‌ப்படும்.

பா.ராஜாராம் said...

//காலம் கடந்து
இழுக்காமல் விட்டுவிட்ட
தேரென நின்றிருந்தது
அந்த ஆலமரம்//

இந்த வரிகளிலேயே கிடக்கிறேன் ராகவன்.

ரொம்ப நல்லாருக்கு!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப அருமையாக இருக்கு! நன்றாக
வளர்ந்த ஒரு மரத்தின் இழப்பின் சோகம் தாங்கவொண்ணாதது!!

ஹ ர ணி said...

ராகவன்...

ஒரு மனசைக் காயப்படுத்தாத நல்ல கவிதை படித்த திருப்தி. வெகு எளிமையான உவமைகளோடு...நல்ல சரளம்...
வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.

தனி காட்டு ராஜா said...

Good one..

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கவிதை!

-ப்ரியமுடன்
சேரல்